பெண்கள் இன்றைய காலகட்டத்தில் போகப்பொருள்களாகவும், பொழுதுபோக்குச் சாதனமாகவும், விளம்பரங்களுக்குத் தேவைப்படும் மாதிரிகளாகவுமே நினைக்கப் படுகின்றனர். உண்மையான பெண்மை இன்று மதிக்கப்படுவதில்லை. பெரும்பாலும் பெண்களுக்கு அவமானங்களே நேரிடுகின்றன. ஆனால் இதற்கு அடிப்படைக் காரணம் என்னவென்று யோசித்தால் பெண்களே தான் இதற்குக் காரணம். நாகரீகம், என்றும், முன்னேற்றம் என்றும் பெண்கள் தங்களுக்குத் தாங்களே செய்து கொள்ளும் கேடுகளில் இவையும் ஒன்று. என்னவோ, முன் காலத்தில் தான் பெண்கள் அடிமைகளாய் இருந்த மாதிரியாகவும், இப்போது தான் விடுதலை கிடைத்து இருப்பதாகவும் பேசிக் கொண்டும், எழுதிக் கொண்டும், போராடிக் கொண்டும் இருக்கின்றோம். 33% இட ஒதுக்கீடும் கேட்டுப் போராடிக் கொண்டிருக்கின்றோம்.
வேத காலத்தை எடுத்துக் கொண்டால் அப்போது பெண்களுக்கு மரியாதையே கிடையாது எனச் சொல்லப் படுகின்றது. இதுவும் முற்றிலும் தவறு. வசிஷ்டருக்கு அருந்ததியாலும், அகத்தியருக்கு லோபாமுத்திரையாலும், யாக்ஞவல்கியருக்கு, மைத்திரேயியாலும் , அத்திரி மகரிஷிக்கு அனசூயையாலும் இன்னும் பல ரிஷி, முனிவர்களுக்கும் அவர்கள் மனைவிகளால் பெருமையே தவிர சிறுமை அடையவில்லை. அகத்தியரின் மனைவி லோபாமுத்திரை ஒரு அரசகுமாரியாகப் பிறந்தும் அகத்தியரை மணந்ததும், அவரின் தவங்களுக்கு உறுதுணையாக இருந்து வந்தாள்.
வசிஷ்டரின் மனைவியும் வசிஷ்டரின் தவத்துக்குத் துணையாக இருந்து வந்ததோடு அல்லாமல், இன்றளவும், திருமணங்களில் தம்பதிகளை அவர்கள் என்றும் ஒற்றுமையோடு இருக்க வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாக வசிஷ்டர், அருந்ததி நட்சத்திரங்களைத் திருமணத்தின் போது காட்டுவது வழக்கமாய் இருந்து வருகின்றது. மைத்திரேயியின் விவாதப் புலமை பற்றியும் எடுத்துச் சொல்லவேண்டியதே இல்லை! அனசூயையோ பேரிலேயே அசூயையை விடுத்தவள். அனசூயை என்றாலே அசூயை அற்றவள் என்றே பொருள். அவளின் தவ வலிமையால் கடும் வறட்சியிலும் கங்கையை வரவழைத்ததோடு அல்லாமல், காட்டில் அந்த ஆசிரமத்தைச் சேர்ந்த அனைவருக்கும் வளம் பெருகும்படிச் செய்தவள் அனசூயை!
அரசர்களை எடுத்துக் கொண்டாலும் பல மன்னர்களின் பத்தினிகள் சிறந்தே விளங்கி வந்திருக்கின்றார்கள். புத்திசாலித் தனத்திலும், வீரத்திலும், கணவனுக்கு உதவி செய்வதிலும் சிறந்தவர்களாகவே இருந்து வந்திருக்கின்றனர். சத்தியவானின் மனைவி சாவித்திரி, தன் விவேகத்தாலும், புத்தி சாதுர்யத்தாலும் யமனை வென்று கணவனை மீட்டு வந்ததோடு அல்லாமல், கணவனின் ராஜ்யத்தையும் மீட்டுத் தந்தாள். தசரதனின் மனைவியான கைகேயியோ, கணவன் போரில் ரதத்தின் கடையாணி கழன்று வீழ்ந்து துன்பப் பட்ட நேரத்தில், துர்வாசரின் சாபத்தால், இரும்பாய் மாறி விட்ட தன் சுட்டுவிரலைக் கடையாணியாய்க் கொடுத்து, தன் கணவனைக் காத்தவள்.
கிருஷ்ணனின் மனைவியான சத்யபாமாவும் கண்ணன் போருக்குச் சென்றபோது துணைக்கு ரதம் ஓட்டிச் சென்று கணவனுக்கு உறுதுணையாக இருந்தவள். இது தவிர, சந்தனுவின் மனைவியான கங்கை, மச்சகந்தி, திருதராஷ்டிரன் மனைவியான காந்தாரி, பாண்டுவின் மனைவியான குந்தி, பாண்டவர்களின் மனைவியான திரெளபதி என அனைத்துப் பெண்களுமே தைரியமும், வீரமும் நிரம்பப் பெற்றவர்களாகவும், பேச்சுச் சாதுரியம் நிரம்பியவர்களாகவும், தங்கள் திறமையாலும், விவேகத்தாலும் கணவர்களுக்கு உதவியவர்களாகவுமே இருந்து வந்திருக்கின்றனர்.
இன்னும் சரித்திர காலங்களிலும் பார்த்தோமானால், சேர, சோழ, பாண்டியர்களின் மனைவிகளில் இருந்து பார்த்தால் நிறையப் பெண்கள் தைரியமும், வீரம், சொல்லாற்றலும் நிரம்பியே இருந்து வந்திருக்கின்றனர். புலமையிலும் சிறந்து விளங்கிய பெண் புலவர்கள் உண்டு.
பாரத வரலாற்றில் பின்னர் வந்த காலகட்டங்களில் தான் பெண்களின் நிலை சீரழிவு ஏற்பட்டது. சில தரப்பினர் பெண்கள் படிக்கக் கூடாது என்றும் சொல்ல ஆரம்பித்தனர். பெண்கள் என்றால் இழிவான பிறவிகள் என்றும் வந்தது. வரும் பதிவுகளில் இது பற்றிய விவரங்களைப் பார்க்கலாம்.