மஹாபாரத உரையாடல்கள் – 007 கர்ணன்

இந்த விவாதங்களின் நான்காவது தவணையில் பின்வரும் பகுதியைச் சொல்லி, இதைப்பற்றி விரிவாகப் பிறகு பேசுவதாகச் சொல்லியிருந்தேன். இப்போது நிலுவையில் நிற்கும் இந்தப் பகுதிக்கான விரிவு தொடர்கிறது.

008/9/12 Hari Krishnan

(இந்த ‘பொய்சொல்லி’ வித்தை கற்றுக்கொள்வது என்பது, எல்லோராலும் ஒன்றுபோல ‘லைட்டாக’ கையாளப்பட்டுள்ளது. வித்தை கற்றுக்கொள்ளவேண்டும் என்ற ஆர்வத்தால் ஏதோ ஒருபொய் சொல்லிவிட்டான் என்பதுபோலச் சித்திரிக்கப்படுகிறது. ஆனால், கர்ணன் சொன்ன பொய், அவனை அன்றாடம் என்னென்ன செய்ய, சொல்ல வைத்திருக்கும் என்பதனைத் தனியாகக் காணலாம். அவன் நிலையில் நம்மை வைத்துப் பார்த்துக் கொள்வோம். இதயசுத்தியுடன், ‘இப்படி நான் செய்வேனா’ என்று கேட்டுக்கொள்வோம்.

இந்த விஷயத்தை எடுத்துக் கொள்கிறேன். இது மிகச் சிறிய ஒன்றுதான் என்றாலும் இதன் பரிமாணங்களையும் பார்க்கவேண்டும் அல்லவா?

‘கர்ணன் என்னுடைய மகன்’ என்று குந்தி அறிவிப்பது, அவன் இறந்து வீழ்ந்த சமயத்தில், யுத்த களத்தில் நிகழ்வதாகத்தான் பொதுவாகச் சொல்லப்படுகிறது. இது வில்லி பாரதத்தில் செய்யப்பட்டுள்ள மாற்றம். ‘நீ என்னுடைய மகன்’ என்று கர்ணனுக்குக் குந்தி அறிவித்து, பாண்டவர்கள் பக்கம் வரவேண்டும் என்று கேட்டுக்கொள்ளும் சமயத்தில், கர்ணன், ‘தான் இன்னான் kunti-and-karnaஎன்பதைத் தன் மரணத்துக்குப் பின்னர் குந்தி அறிவிக்கவேண்டும்’ என்று அவளிடத்தில் வரம் பெற்றுக் கொள்வதாகவும், அந்த வரத்தின் அடிப்படையில் யுத்த களத்தில் வந்து குந்தி, கர்ணனுடைய பிறப்பைப் பற்றிய ரகசியத்தைச் சொல்வதாக வில்லி பாரதம் பேசுகிறது.

ஆனால், வியாசருடைய வடிவத்தில் இது இப்படி இல்லை. (வில்லி பாரதத்தில் குந்தியிடம் கேட்டது போன்ற வரத்தையும் கர்ணன் வியாச பாரதத்தில் பெறவில்லை.) போர் எல்லாம் நடந்த முடிந்தபிறகு, சௌப்பதிக பர்வத்தைத் தாண்டி, ஸ்திரி பர்வத்தில் காந்தாரி கண்ணனைச் சபித்து எல்லாம் நடந்த பிறகு போரில் இறந்தவர்களுக்கு தர்மன் ஈமக்கடன்களைக் கழிக்கிறான். அந்தச் சமயத்தில் குந்தி கர்ணனுக்கு நீர்க்கடன் கழிப்பது என்ற காரியம், தான் உண்மையை அறிவிக்காவிட்டால் நடைபெறாது என்பதை உணர்ந்து, தன்னுடைய மகனுக்கு நீர்க்கடன் கழிக்கக்கூட வழியில்லாமல் சூழ்நிலை தன்னை நிறுத்தியிருப்பதை நினைத்துக் கண்ணீர் விட்டு, ‘’கர்ணன் தன்னுடைய மகனே’ என்பதை அறிவித்து, அவனுக்கு நீர்க்கடன் கழிக்கச் சொல்லி தர்மபுத்திரனை வேண்டுகிறாள். அப்போதுதான் பாண்டவர்களுக்குக் கர்ணன் தங்களுடைய அண்ணன் என்பது தெரியவருகிறது.

இவையெல்லாம் முடிந்த பிறகு நிகழ்வது சாந்தி பர்வம். இந்தப் பர்வத்தின் தொடக்கத்தில் தர்மபுத்திரர் மிகவும் துயரத்துடன் அமர்ந்திருக்கிறார். ‘இதுவரையில் உலகம் யாரை சூதபுத்திரன் என்று சொல்லிக் கொண்டிருந்ததோ, அவன் உண்மையில் குந்தியின் மகன் அல்லனா, எங்களுக்கெல்லாம் மூத்தவன், எங்களுடைய அண்ணன் அல்லனா! இந்த உண்மை என் தாய்க்கும் தெரிந்திருந்தது; ஒருகட்டத்தில் என் தாய் கர்ணனைச் சந்தித்தாள் என்று கேள்விப்படுகிறேன். ஆகவே கர்ணனுக்கும் இந்த உண்மை தெரிந்திருந்தது அல்லவா! என் அண்ணனுடைய சாவுக்கு நான் காரணனாகி விட்டேன இல்லையா’ என்றெல்லாம் அங்கே வந்திருந்த நாரதரிடம் வருத்தப்படும் சமயத்தில், கர்ணன் பரசுராமரிடம் பயிற்சி பெற்றது எப்படி, கர்ணனுக்கு சாபம் இருந்ததாகச் சொல்லப்படுகிறதே, அது என்ன சாபம், ஏன் அவனுக்கு சாபம் கிடைத்தது என்றெல்லாம் தர்மன் கேட்கிறான். நாரதர் அவனுடைய ஐயங்களைத் தீர்த்து வைக்கிறார். பழைய சம்பவங்களைச் சொல்கிறார். இப்படியாகத்தான் இந்த ‘பிராமண, பரசுராம சாபங்கள்’ தெரியவருகின்றன.

இவை மட்டுமல்லாமல், கர்ணனுக்கும் துரியோதனனுக்கும் எப்படி நட்பு ஏற்பட்டது, எப்போது ஏற்பட்டது , துரோணரிடத்தில் பயின்று கொண்டிருந்த அவன் என்ன காரணத்தால் பரசுராமரை நாடிச் சென்றான் என்பனவற்றையும் நாரதர் சொல்கிறார். இதைக் கேளுங்கள்:

“…..a child was conceived by Kunti in her maidenhood, capable of provoking a general war. Endued with great energy, that child came to have the status of a Suta. He subsequently acquired the science of weapons from the preceptor (Drona), that foremost descendant of Angirasa’s race. Thinking of the might of Bhimasena, the quickness of Arjuna in the use of weapons, the intelligence of thyself, O king, the humility of the twins, the friendship, from earliest years, between Vasudeva and the wielder of Gandiva, and the affection of the people for you all, that young man burnt with envy. In early age he made friends with king Duryodhana, led by an accident and his own nature and the hate he bore towards you all…” (மஹாபாரதம், சாந்தி பர்வம்-12ம் அத்தியாயம், 2ம் சர்க்கம்)

மேற்கண்ட விவரிப்பிலிருந்து பின்வரும் அம்சங்கள் தெளிவுபடுகின்றன:

 • கர்ணனும் துரியோதனனும் மிகச் சிறிய வயதிலேயே சந்தித்தார்கள்; நட்பு பூண்டார்கள். அவர்கள் சந்தித்தது தற்செயலாக நிகழ்ந்த ஒன்று.
 • சூதபுத்திரனாக அறியப்பட்ட கர்ணன் துரோணரிடத்தில்தான் முதலில் பயின்றான்.
 • பீமன் பேரிலும் அர்ஜுனன் பேரிலும் கர்ணனுக்கு இளம்பருவத்திலிருந்தே விவரிக்க ஒண்ணாத, காரணம் இன்னது என்று சொல்ல இயலாத ஒரு வெறுப்பு இருந்தது. ‘அவனுடைய பொறாமை அவனை தகித்தது’ என்று நாரதர் குறிப்பிடுவதை கவனிக்கவும்.
 • பாண்டவர்கள்மேல் அவனுக்கு இருந்த இந்த இயல்பான வெறுப்பும் பொறாமையுமே அவனுக்கும் துரியோதனனுக்கும் நட்பு ஏற்படக் காரணிகளாக இருந்திருக்கின்றன.

பயிற்சிபெற்ற காலத்தில், அர்ஜுனன் தன்னைப் பார்க்கிலும் அதிகம் தேர்ச்சி பெற்றவனாகவும், பல திவ்ய அஸ்திரங்களை எய்யவும் திரும்பப் பெறுவதற்குமான பயிற்சிகளில் தேறியவனாகவும் இருந்தது கர்ணனால் பொறுத்துக்கொள்ள முடியாததாக இருந்தது. ஆகவே, துரோணரைத் தனிமையில் அணுகினான். அவரிடம் கர்ணன் கேட்டுக் கொண்டதை நாரதர் விவரிக்கிறார்:

Beholding that Dhananjaya was superior to every one in the science of weapons, Karna. one day approached Drona in private and said these words unto him, ‘I desire to be acquainted with the Brahma weapon, with all its mantras and the power of withdrawing it, for I desire to fight Arjuna. Without doubt, the affection thou bearest to every one of thy pupils is equal to what thou bearest to thy own son. I pray that all the masters of the science of weapons may, through thy grace, regard me as one accomplished in weapons!’ (மேற்படி அத்தியாயம், சர்க்கம்) வண்ணத்தை மாற்றிக் காட்டியிருக்கும் பகுதியின் வடமொழி வடிவம் இது:

10 brahmāstaṃ vettum icchāmi sa rahasyanivartanam
arjunena samo yuddhe bhaveyam iti me matiḥ
11 samaḥ putreṣu ca snehaḥ śiṣyeṣu ca tava dhruvam
tvatprasādān na māṃ brūyur akṛtāstraṃ vicakṣaṇāḥ (சாந்தி பர்வம், அத்தியாயம் 2. ஸ்லோக எண்கள் மேலே தரப்பட்டுள்ளன.)

‘நான் பிரமாஸ்திரப் பிரயோகத்தையும் அதைத் திரும்பப் பெற்றுக் கொள்ளும் வித்தையையும் கற்றுக்கொள்ள விரும்புகிறேன். உங்களுடைய மாணவர்கள் எல்லோருமே உங்களுடைய மகனுக்குச் சமமானவர்களாகத்தான் நீங்கள் கருதுகிறீர்கள். ஆகவே எனக்கும் பிரமாஸ்திர வித்தையைக் கற்றுக் கொடுங்கள். ஏனெனில், நான் அர்ஜுனனோடு போர்தொடுக்க விரும்புகிறேன்’.

ஒன்று கவனியுங்கள். இந்தத் தருணம் வரையில் அர்ஜுனுக்கும் கர்ணனுக்கும் நேரடியான பகைமை இருந்ததில்லை. அர்ஜுனன் கர்ணனைத் தன் போட்டியாளனாகக் கருதியதுமில்லை. ஆனால், கர்ணன் மட்டும் பாண்டவர்களுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டபடி இருந்தான்–துரியோதனனுடன் கூட்டு சேர்ந்துகொண்டு. இதைப் பற்றி ஆரம்பத்திலேயே குறிப்பிட்டிருக்கிறேன்.

இப்படி இருக்கையில், ஒரு முகாந்திரமும் இல்லாமல், ‘நான் அர்ஜுனனோடு போர் தொடுக்க விரும்புகிறேன். ஆகவே எனக்கு பிரமாஸ்திரப் பயிற்சி அளியுங்கள்’ என்று குருவிடம் ஒரு சீடன் போய்க் கேட்கிறான். ‘உங்களுடைய எல்லாச் சீடர்களும் உங்களுடைய மகனைப் போலத்தானே நீங்கள் கருதுகிறீர்கள், அன்பு செலுத்துகிறீர்கள்’ என்று சொல்லி, தனக்குப் பயிற்சி அளிக்க வேண்டுகின்ற கர்ணன், ஒன்றைக் கவனித்தானோ?

எப்போது கர்ணன் தன்னை துரோணருடைய பிள்ளைக்குச் சமமானவன் என்று சொந்தம் கொண்டாடுகின்றானோ, அப்போதே அவன் அர்ஜுனனுக்கும் அப்படிப்பட்ட ஒரு சொந்தம் இருப்பதை ஒப்புக்கொள்கிறான். வெளிப்படையாக அப்படிச் சொல்லாவிட்டாலும், that is the essence of what he claims. அப்படி இருக்கும்போது, தன்னுடைய ஒரு பிள்ளையோடு போர்தொடுக்கவேண்டும் என்ற ஒரே காரணத்துக்காக, மிக உயர்ந்த அஸ்திரப் பயிற்சி ஒன்றை இன்னொரு பிள்ளை தனக்கு அளிக்குமாறு கேட்டுக் கொள்வதை எந்த குருதான் பொறுத்துக் கொள்வார்?

‘எனக்கு அர்ஜுனனோடு சண்டை போடவேண்டும். ஆகவே பிரமாஸ்திரப் பயிற்சி எனக்கும் வேண்டும். நீங்கள் உங்களுடைய எல்லாச் சீடர்களையும் உங்களுடைய மகனாகவே கருதுகிறீர்கள். எனவே, எனக்கும் அர்ஜுனனுக்குக் கற்பித்ததைப் போலவே கற்பிக்க வேண்டும்‘. இப்படி ஒரு வேண்டுகோள் உங்கள் முன்னால் வைக்கப்பட்டால், இரண்டு சமமான நண்பர்களில் ஒருவர் உங்களிடம் அந்த மற்றொரு நண்பரை அழிக்கவோ, அல்லது பலப்பரீட்சை பார்க்கவோ உதவி கேட்டால் நீங்கள் அப்படியொரு உதவியைச் செய்வீர்களோ?

எனவே, இவனுக்கு பிரமாஸ்திரப் பயிற்சியை அளிப்பதில் துரோணருக்குச் சம்மதம் இருக்கவில்லை. மறுத்துவிட்டார். இப்படி, கர்ணனுக்கு துரோணர் பயிற்சி அளிக்க மறுத்தற்கான காரணத்தையும் நாரதர் குறிப்பிடுகிறார்:

12 droṇas tathoktaḥ karṇena sāpekṣaḥ phalgunaṃ prati
daurātmyaṃ cāpi karṇasya viditvā tam uvāca ha
(மேற்படி பர்வம், சர்க்கம்)

இதன் மொழிபெயர்ப்பு பின்வருமாறு:

Thus addressed by him, Drona, from partiality for Phalguna, as also from his knowledge of the wickedness of Karna, said,

அர்ஜுனனிடத்தில் இருந்த பட்சபாதத்தாலும், கர்ணனுடைய தீய சுபாவத்தை அவர் அறிந்திருந்ததாலும்’ அவர் அவனுக்குக் கற்பிப்பதில்லை என்று மனத்தில் தீர்மானம் செய்துகொண்டார்.

தன் பிள்ளையான அஸ்வத்தாமனுக்கே பிரம்மசிரஸாஸ்திரத்தை அவர் முற்றிலுமாக பயிற்றுவிக்கவில்லை; ஆனால், அர்ஜுனனுக்கு அந்த அஸ்திரத்தில் பயிற்சி முழுமையாக அளிக்கப்பட்டிருந்தது என்று இதற்கு முந்தைய தவணைகளில் பார்த்தோம். அப்படி இருக்கும்போது, பொறாமையின் காரணமாகவும், அர்ஜுனனோடு போரிட–முடிந்தால் அவனைக் கொல்லவும்–வேண்டும் என்ற ஒரே நோக்கத்துக்காக குருநாதரை அணுகினால், எந்த குருநாதர்தான் இப்படிப்பட்ட பொறாமைகளுக்கு இடம் கொடுப்பார்? துரோணர் மறுத்தார். ஆனால் மறுப்பதற்கான காரணத்தைச் சொல்லும்போது, ‘நீ பிரமாஸ்திரப் பயிற்சிக்கு உரிய மனமுதிர்ச்சியையும் பக்குவத்தையும் அடையாதவன் (வேறுமாதிரியாகச் சொன்னால், ‘உன் குணத்துக்கு இந்தப் பயிற்சி பொருந்தாது. இப்படிப்பட்ட அஸ்திரங்களைப் பெறுபவனுடைய மனோபாவம் தெளிந்ததாக இருக்கவேண்டும். உன்போன்று துர்நோக்கங்கள் கொண்டதாக இருக்கக்கூடாது’) என்று சொல்லி மறுக்காமல், நாகரிகம் கருதி, இவனைப் புண்படுத்தவேண்டாம் என்பதற்காக, காரணத்தை மாற்றிச் சொன்னார்:

‘None but a Brahmana, who has duly observed all vows, should be acquainted with the Brahma weapon, or a Kshatriya that has practised austere penances, and no other.’

‘அப்பனே! பிரமாஸ்திரப் பயிற்சி பெறவேண்டுமானால் ஒருவன் சிறந்த விரதங்களை மேற்கொண்ட பிராமணனாக இருக்கவேண்டும், அல்லது, நல்ல தவங்களை மேற்கொண்ட க்ஷதரியனாக இருக்கவேண்டும்’. இதைப் பார்க்கும்போதே, துரோணர் தன்னுடைய மறுப்பை மிக நாசூக்காக வெளிப்படுத்தியிருக்கிறார் என்பது புலனாகிறது.

இதற்குப் பிறகு, கர்ணன் துரோணரை வணங்கிவிட்டு, அவரிடமிருந்து விலகி, பரசுராமரை அணுகி, தான் ஒரு அந்தணன் என்று சொல்லிக் கொண்டு, அவரிடம் தனக்கு பிரமாஸ்திரப் பயிற்சி அளிக்கவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறான். அவரும் பயிற்சி அளிக்கிறார். பிறகுதான் ஒருநாள் அவர் கர்ணனுடைய மடியில் தலைவைத்துப் படுத்து உறங்கிக் கொண்டிருக்கும்போது ஒரு வண்டு கர்ணனுடைய தொடையைத் துளைத்தது; குருவின் உறக்கம் கலையாதிருக்கும் பொருட்டு கர்ணன் அந்த வலியைப் பொறுத்துக் கொண்டான்; கர்ணனுடைய தொடையிலிருந்து பெருக்கெடுத்த ரத்தம் பரசுராமருடைய முகத்தை நனைத்தது. அவர் விழித்தெழுந்து, ‘இவ்வளவு வலியை ஒரு பிராமணனால் தாங்க முடியாது. நீ யார்’ என்று கேட்பதாக வருகிறது.

இவை அனைத்தையுமே நாரதர் ஒரு flashback ஆக விவரிக்கிறார். நாரதருடைய இந்த விவரிப்பில் ஒரு மிக முக்கியமான அம்சம் தென்படுகிறது. கர்ணனுடைய தொடையை ‘வண்டு’ ரூபத்தில் வந்து குடைந்தவன் இந்திரன் என்றுதான் பல உபன்யாசகர்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன். கர்ணன் திரைப்படத்திலும் அப்படித்தான் சொல்லப்பட்டிருக்கிறது என்று நினைவு. That’s an obvious attempt at putting Arjuna at a disadvantage. அதாவது, இந்திரன் வந்து கர்ணனுடைய தொடையைக் குடைந்து, பரசுராமருக்கு ‘இவன் பிராமணன் அல்லன்’ என்ற உண்மையைத் தெரிவிக்க ஏற்பாடு செய்து, அவனுக்கு சாபமும் பெற்றுத் தந்தான். அர்ஜுனனுக்கு மறைமுகமாக உதவி செய்யவே இப்படி இந்திரன் செய்தான் என்பதுதான் வழக்கமாகச் சொல்லப்படுவது.

வியாசர் அப்படிச் சொல்லவில்லை. கடித்தது வண்டு இல்லை. எட்டுக் கால்களும் கூர்மையான பற்களும்; முள்ளம்பன்றியைப் போல் உடலெங்கும் குத்திட்டு நீட்டிக் கொண்டிருக்கும் முட்களுமான ஒரு சிறிய பூச்சி. கிருமி என்று வியாசர் சொல்கிறார். கிருமி என்பதற்கு நாம் இப்போது சொல்லிவரும் பொருள் வேறு. அந்தக் கிருமி இல்லை இது. பூச்சி என்று பொருள்படுகிறது. அலர்க்கம் என்ற பெயருடைய பூச்சி என்று கிஸாரி மோஹன் கங்கூலி மொழிபெயர்ப்பு சொல்கிறது. தன்ச என்ற பெயருடைய அரக்கன் ஒரு சாபத்தால் இப்படிப்பட்ட வடிவத்தில் அலைந்துகொண்டிருந்தான். சாபத்தின்படி அவன் மனிதர்களுடைய ரத்தம், சளி, சிறுநீர் ஆகியவற்றை உண்டு உயிர்வாழும்படியாக ஆனது என்பது மொழிபெயர்ப்பு. ஆனால் வடமொழி மூலத்தைப் பார்த்தால் அரக்கனுடைய பெயரில் ஏதோ தவறு இருக்கிறது என்று தோன்றுகிறது. ப்ரக் க்ர்த்சோ நாம மஹாசுரா: என்று ஸ்லோகம் சொல்கிறது. வல்லவர்கள் விளக்குவார்களாக. இது ஸ்லோகம்:

19 so ‘bravīd aham āsaṃ prāg gṛtso nāma mahāsuraḥ
purā devayuge tāta bhṛgos tulyavayā iva

பெயர் என்னவாக இருந்தாலும் அவன் இந்திரன் அல்லன்; ஏதோ ஓர் அசுரன். That absolves Arjuna of one repeated accusation of gaining an ‘aided advantage’ over Karna.

அதுபோகட்டும். பரசுராமருடைய சினப் பார்வையால் அந்தப் பூச்சி வடிவம் அழிகிறது. அசுரன் சாபவீடு பெறுகிறான். அதன் பிறகுதான் கர்ணனைப் பார்த்து, உண்மையைச் சொல், நீ பிராமணனாக இருக்க முடியாது, நீ யார் என்று பரசுராமர் கோபமாகக் கேட்கிறார்.

கர்ணன் சொல்லும் விளக்கம் இது:

‘O thou of Bhrigu’s race, know me for a Suta, a race that has sprung from the intermixture of Brahmanas with Kshatriyas. People call me Karna the son of Radha. O thou of Bhrigu’s race, be gratified with my poor self that has acted from the desire of obtaining weapons. There is no doubt in this that a reverend preceptor in the Vedas and other branches of knowledge is one’s father[1]. It was for this that I introduced myself to thee as a person of thy own race.’
[1] 26 tam uvāca tataḥ karṇaḥ śāpabhītaḥ prasādayan
brahmakṣatrāntare sūtaṃ jātaṃ māṃ viddhi bhārgava
27 rādheyaḥ karṇa iti māṃ pravadanti janā bhuvi
prasādaṃ kuru me brahmann astralubdhasya bhārgava
28 pitā gurur na saṃdeho veda vidyā pradaḥ prabhuḥ
ato bhārgava ity uktaṃ mayā gotraṃ tavāntike (Mbh. Book 12, Ch.3)

சம இடத்துக்கான வடமொழி ஸ்லோகங்களையும் தொகுத்து மேலே இட்டிருக்கிறேன். இவற்றிலிருந்து புலப்படுவதில் முக்கியமான அம்சம்: சூதன் என்பவன் கீழ் ஜாதிக்காரன் அல்லன். ப்ரஹ்மக்ஷத்ராந்தே சூதம் ஜாதம் என்று கர்ணன் சொல்வதை 26ம் ஸ்லோகத்தில் காணவும். பிராமண-க்ஷத்திரிய கலப்பால் பிறந்த சூதன் என்று கர்ணனே டிஃபைன் செய்கிறான். டெக்னிகலாக இது அவனுக்குப் பொருந்தாது என்ற போதிலும், அவனுடைய வளர்ப்புத் தந்தையான அதிரதனுக்கு அப்படியே நூறு சதம் பொருந்துகின்ற வரையறை. உண்மைதானே? Therefore, a Suta was not an under-privileged class, nor even a Sudra as is purported about, and people tend to believe. Suta was only a second-line Kshatriya. பிராமணக் கலப்பில் பிறந்த க்ஷத்ரியன். ஆகவே அவன் உயர்குடி க்ஷத்ரியன் அல்லன். ஒரு மாற்று குறைந்த க்ஷத்ரியன். அவ்வளவே அவ்வளவுதான்.

இங்கே இன்னொன்றையும் குறிப்பிட விரும்புகிறேன். கர்ணனுடைய வளர்ப்புத் தந்தை அதிரதன் என்று அறியப்பட்டாலும் அது அவனுடைய தொழிற் பெயரே அன்றி, இயற்பெயர் அன்று. அது ஒரு டெசிக்னேஷன் மாதிரியான பெயர். ‘மேனேஜர், முதலாளி’ என்றெல்லாம் அழைக்கப்படுவதுபோல், அதிரதன் என்ற பெயரால் அவன் அறியப்பட்டிருக்கிறான். அவனுடைய இயற்பெயர் விகர்த்தனன் என்பது. விகர்த்தனுடைய பிள்ளை என்பதால் கர்ணனுக்கு வைகர்த்தன: என்றும் ஒரு பெயர் உண்டு.

சரி. இப்போது கர்ணன் சொல்லிய பொய்க்கு வருவோம். கர்ணன் என்ன சொல்கிறான் என்றால், ‘ஒருவனுக்கு வித்தை கற்றுக் கொடுக்கும் குரு, அவனுடைய தந்தைக்குச் சமமானவர். எனவேதான் நான் உங்களுடைய கோத்திரத்தைச் சேர்ந்தவன் என்று சொல்லிக்கொண்டேன்’ (ஸ்லோகம் 28 – மேலே)

‘வித்தை கற்றுக் கொள்வதற்காக பொய் சொன்னேன். நீங்கள் என் குரு, ஆகையால் நீங்கள் என் தந்தையைப் போன்றவர். ஆகவே நான் உங்களுடைய கோத்திரம் என்று சொல்வதில் தவறில்லையே’ என்ற சமாதானத்தைக் கூட ஏற்றுக் கொள்ளலாம் போலிருக்கிறது. ஆனால், இந்தப் பொய்யை நடைமுறைப்படுத்த கர்ணன் என்னென்ன செய்ய வேண்டியிருந்திருக்கும்? மஹாபாரதம் இதைப் பற்றி எதுவும் பேசவில்லை. நாரதருடை விவரிப்பு இதைக் குறித்து எதையும் சொல்லவில்லை. ஆனால் இப்படிப் பொய் சொல்வதில் பல நடைமுறைச் சிக்கல்கள் உள்ளன. அவற்றில் ஒன்றே ஒன்றைச் சொல்கிறேன்.

‘நான் பிராமணன்’ என்று பரசுராமரிடம் சொல்லிவிட்டால் போதுமா? அடுத்ததாக அவரை நமஸ்கரிக்க வேண்டும் அல்லவா? அப்படி நமஸ்கரிக்கும்போது அபிவாதனம் சொல்ல வேண்டுமா இல்லையா? அபிவாதனம் என்பது நான்கைந்து அடிகளால் ஆன, ஒரு சிறிய மந்திரம். ‘இன்ன ரிஷியின் பரம்பரையில் (கோத்திரம்) இன்ன சூத்திரத்தில், இன்ன வேதத்தை ஓதுகின்றவனான, இன்ன பெயரை உடைய நான் உங்களை வணங்குகிறேன்’ என்று ஒவ்வொரு முறையும் இந்த மந்திரத்தைச் சொல்லித்தானே நமஸ்கரிக்க முடியும்?

க்ஷத்திரியர்களுக்கும் பூணூல் உண்டு, அபிவாதனம் உண்டு. என்றாலும் பிராமணர்களுக்குள்ளேயே, கோத்திரத்துக்கு கோத்திரம், சிலசமயங்களில் ஒரே கோத்திரம் என்றால்கூட, சூத்திரத்துக்கு சூத்திரம் அபிவாதனம் வேறுபடும். பாரத்வாஜ கோத்திரத்தில் ‘பார்ஹஸபத்ய, பாரத்வாஜ’ என்ற ஒரே ஒரு வர்ஷன்தான் இருக்கிறது என்று என்னிடம் உள்ள கையேடு சொல்கிறது.

எப்படியோ. கர்ணன் பரசுராமரை வணங்காமல் பயிற்சியைத் தொடங்கியிருக்க முடியாது. நமஸ்கரிக்கும்போது அபிவாதனம் சொல்லாமல் இருந்திருக்க முடியாது. பரசுராமருடைய கோத்திரத்தைச் சேர்ந்தவன் என்றால், அந்த கோத்திரத்துக்கும் சூத்திரத்துக்கும் உரிய அபிவாதன மந்திரத்தை அல்லவா சொல்லவேண்டும்? இதில் சின்ன குளறுபடி செய்தால்கூட, சொல்லுகின்ற பொய் கண்டுபிடிக்கப்பட்டுவிடும். அதுவும் சகலமும் அறிந்தவரான பரசுராமரிடத்தில் போய்ச் சொல்வது என்றால்!

It therefore leads me to conclude that Karna should have ‘prepared’ himself with the appropriate abivadana. சரி. இது ஒரு நாளில், ஒரு வேளையோடு முடிந்து தொலைக்கிற விஷயமா? ஒவ்வொரு நாளும் வித்தையைக் கற்கத் தொடங்கும்போதும், இடைவேளையில் பிரியும்போதும், மீண்டும் வரும்போதும், இறுதியில் பயிற்சி முடியும்போதும் குருவை நமஸ்கரிக்காமல் ஒருவன் பயிற்சியைப் பெற முடியுமா?

ஒரு நாளைக்கு குறைந்தது நான்கைந்து முறை பொய். அதுவும் மந்திரபூர்வமான பொய். நெருப்பின்மேல் பொய் சத்தியம் செய்யத் துணிந்தவனுக்குதான் இது சாத்தியம். உண்டா இல்லையா சொல்லுங்கள். நினைத்தாலே பதறுகிறது எனக்கு.

இது என்ன சாதாரணமான பொய்யா? இப்படி அன்றாடம் திரும்பத் திரும்ப பொய்சொல்லி ஒருவன் தன்னுடைய கோத்திரத்தையும் சூத்திரத்தையும் மாற்றிச் சொல்லிக் கொண்டான், அதிலும் குரு, க்ஷத்ரியர்களுக்கு எதிரானவர் என்று தெரிந்திருந்தே சொன்னான் என்றால், அந்த குருவுக்குக் கோபம் வந்ததில் என்ன தவறு? அவர் ஏன் சபிக்கக் கூடாது? அவருடைய சாபத்தையும் பாருங்கள்:

‘Since thou hast, from avarice of weapons, behaved here with falsehood, therefore, O wretch, this Brahma weapon shalt not dwell in thy remembrance. Since thou art not a Brahmana, truly this Brahma weapon shall not, up to the time of thy death, dwell in thee when thou shalt be engaged with a warrior equal to thyself! Go hence, this is no place for a person of such false behaviour as thou! On earth, no Kshatriya will be thy equal in battle.’

உனக்குச் சமமானவனோடு போரிடும்போது இந்த வித்தை உனக்கு நினைவில் தங்காது போகட்டும். என் எதிரில் நிற்காதே. போய்விடு. இந்த உலகத்தில், போரில் உனக்குச் சமமான க்ஷத்ரியன் எவனும் இருக்க மாட்டான்.

இந்தக் கடைசி வரி சாபமா, வரமா? ‘குருவை ஏமாற்றி வித்தை கற்றுக் கொண்ட நீ விளங்காமல் போ’ என்றோ, ‘கல்லாப் போ, மண்ணாப் போ, சாம்பலாப் போ’ என்றெல்லாமோ சபிக்காமல், ‘என் எதிரே ஒரு கணமும் நிற்காதே போய்விடு. ஏமாற்றிக் கற்ற வித்தை, உனக்குத் தேவைப்படும் நேரத்தில் பயன்படாமல் போகட்டும்’ என்றும் சொல்லி, ‘இந்த உலகில் யுத்தத்தில் உனக்கு நிகரான ஒரு க்ஷத்ரியனும் இருக்க மாட்டான்’ என்றும் பரசுராமர் சொல்கிறாரே, கர்ணன் செய்த தவறுக்கு இது அவர் அளித்த தண்டனையா? கோபத்துடன் கூடவே ஒரு வாஞ்சையும் தென்படுகிறதல்லவா? சாபத்துடன் ஓர் ஆசியுமல்லவா சேர்த்து வழங்கப்பட்டுள்ளது?

ஒருநாளைக்கு நான்கைந்து முறை மந்திரபூர்வமாகப் பொய் சொல்லி, அப்படிப்பட்ட பொய்யை குறைந்தது நான்கைந்து வருடங்களுக்குத் தொடர்ந்தது, இந்த ‘பொய் சொல்லி வித்தை கற்றதன்’ ஒரே ஒரு அம்சம்தான். பரசுராமருடன் குருகுல வாசம் செய்யும்போது, ஓர் அந்தணனுக்கு உண்டான அன்றாட மற்ற அனுஷ்டானங்களையும் மேற்கொண்டாக வேண்டுமா இல்லையா? இதையெல்லாம் செய்யாமலா கர்ணன், தான் ஒரு அந்தணன் என்று பரசுராமரிடம் போய்ச் சொல்லி வித்தை கற்றுக் கொள்ள முடியும்? இப்போது சொல்லுங்கள். கரணன் சொன்னது அப்பாவித்தனமான, மிகச் சாதாரணமான ஒரு பொய்யா? Was that an innocent lie? Was he not a wilful liar?

அடுத்ததாக, கர்ணன் ஒரு வள்ளல் என்று பேசப்படும் விஷயத்துக்கு வருவோம்.

22 Replies to “மஹாபாரத உரையாடல்கள் – 007 கர்ணன்”

 1. 10 brahmāstram vettum icchāmi sa rahasyanivartanam arjunena samo* yuddhe bhaveyam iti me mati:

  ”ப்ரஹ்மாஸ்த்ரம் வேத்துமிசாமி …..
  அர்ஜுநேந ஸமோ* யுத்தே பவேயமிதி மே மதி: !!”

  தான் போரில் அர்ஜுனனுக்கு நிகராக வேண்டும் என்றே கர்ணன் ஆசானிடம் தெரிவிக்கிறான்.
  புத்ரன் என்று அச்வத்தாமனையும், சிஷ்யன் என்று அர்ஜுனனையும் சுட்டினாலாவது அவர் பரிவோடு கற்பிப்பார் என்று கருதினான் போலும். எடுத்த எடுப்பில் (உள்ளத்தில் இருந்தாலும்) பகைமையை அப்படியே, அதுவும் அர்ஜுனனிடம் பாசம் கொண்ட குருதேவரிடம் கர்ணன் வெளியிட்டிருக்க இயலுமா? ஒரு பெரும் போரை நிகழ்த்தியாக வேண்டும் என்று மாணவப் பருவத்திலேயே ஒரு குழாம் முடிவு செய்து விட்டதா? கொஞ்சம் யோசிக்க வைக்கிறது இந்த இடம்.

  19 so ‘bravīd aham āsa prāggrtso* nāma mahāsura purā devayuge tāta bhagostulyavayā* iva

  ’Praagrthsa: – ப்ராக்ருத்ஸ:’ என்றும் , முன்பொரு காலத்தில் ப்ருகு முனிவருக்கு நிகராக இருந்தான் என்றும் தெரிகிறது. முழு வடிவம் கிடைத்தால் நல்லது.

  தேவ்

 2. //கடித்தது வண்டு இல்லை. எட்டுக் கால்களும் கூர்மையான பற்களும்;
  முள்ளம்பன்றியைப் போல் உடலெங்கும் குத்திட்டு நீட்டிக் கொண்டிருக்கும்
  முட்களுமான ஒரு சிறிய பூச்சி. கிருமி என்று வியாசர் சொல்கிறார்.
  கிருமி என்பதற்கு நாம் இப்போது சொல்லிவரும் பொருள் வேறு.
  அந்தக் கிருமி இல்லை இது. பூச்சி என்று பொருள்படுகிறது. //

  பூச்சி என்பது சரிதான். தமிழில் ‘புழு பூச்சி’ என்பது வடமொழியில்
  ‘க்ருமி கீடம்’ என்றாகும். க்ருமி என்றால் நுண்ணுயிர் என்று தற்போது
  பொருள் கொள்கிறோம்.

  தேவ்

 3. தேவராஜன்,

  \\ஒரு பெரும் போரை நிகழ்த்தியாக வேண்டும் என்று மாணவப் பருவத்திலேயே ஒரு குழாம் முடிவு செய்து விட்டதா? கொஞ்சம் யோசிக்க வைக்கிறது இந்த இடம்.\\

  மஹாபாரதப் போரின் வித்து இதற்கும் முன்னதாகவே இடப்பட்டு விட்டது. கர்ணன், துரோணரை அணுகி இந்தக் கோரிக்கையை வைப்பதன் மூலமாகப் போர் குருத்துவிடத் தொடங்கியிருக்கிறது. அவ்வளவுதான். யோசிப்பது என்ன! இதற்கான அடையாளங்கள் நிறையவே இருக்கின்றன. துரியோதன், சகுனி கூட்டமைப்பு. துச்சாதனன், ‘காரண காரியங்கைளப் பற்றிக் கருதாத, ‘அண்ணன் ஒருவனை அன்றியே புவி அத்தனைக்கும் தலைஆனவன்-என்ற எண்ணம் தனதிடைக் கொண்டவன், அண்ணன் ஏதுரை செய்யினும் மறுத்திடான்’ என்று பாரதி தீட்டிக் காட்டும் ஸ்கெட்ச்சில் அடங்குபவன். துரியோதனனுக்கு இயற்கையாகவே இருந்த பொறாமைத் தீக்குச் சகுனி சாமரம் வீசி வளர்த்துக் கொண்டிருந்தான்.

  எனவே, எந்தக் கணத்தில் குந்தி பாண்டவர்களை அழைத்துக்கொண்டு ஹஸ்தினாபுரத்துக்குள் நுழைந்தாளோ அப்போதே பாரதப் போரின் வித்து விழுந்துவிட்டது. என்னைக் கேட்டால், மச்சகந்தியை மணந்துகொள்ள சந்தனு நினைத்த சமயத்திலேயே அத்தனை சிக்கல்களுக்கும் முதல் முடிச்சு விழுந்தாயிற்று என்பேன்.

  கருத்துகளை வரவேற்கிறேன். எவ்வளவுக்கெவ்வளவு கருத்துகள் வருகின்றனவோ அவ்வளவுக்கவ்வளவுதானே மூழ்க முடியும், சிந்திப்பதற்கான இலக்கைத் தீர்மானித்துக்கொள்ள முடியும்.

  //’Praagrthsa: – ப்ராக்ருத்ஸ:’ என்றும் , முன்பொரு காலத்தில் ப்ருகு முனிவருக்கு நிகராக இருந்தான் என்றும் தெரிகிறது. முழு வடிவம் கிடைத்தால் நல்லது.//

  இதல்லவா நான் எதிர்பார்ப்பது! Beautiful! நன்றி தேவராசன். இந்தக் குறிப்பிட்ட ஸர்கத்தின் ஆங்கில மொழிபெயர்ப்பு இங்கே இருக்கிறது:

  https://www.sacred-texts.com/hin/m12/m12a003.htm

  இங்கேயே நீங்கள் சொல்வதற்கான ஆதாரமும் இருக்கிறது. அந்த அசுரன் தொடர்ந்து பேசும்போது, “In the Krita period, O sire, I was of the same age with Bhrigu.” என்று குறிப்பிடுகிறான். பரசுராமரும் பிருகுவின் வழியில் வந்தவர்தான். பிருகுவின் மனைவிக்கு இந்த அசுரன் கெடுதல் செய்திருக்கிறான். So, the above sloka contains a description of what the Asura says later. ஆனால், கிஸாரிமோகன் கங்கூலி இந்த அம்சத்தைத் தவறவிட்டுவிடடாரா, அல்லது வேறெதுமா என்பது புரியவில்லை. இந்த ஸ்லோகத்தின் மொழிபெயர்ப்பு (சம இடத்தில்) ‘Formerly I was a great Asura of the name of Dansa’ என்று தொடங்குகிறது. இது தன்ஸா, தான்ஸா, தான்ஸ, தான்ஸா என்ற உச்சரிப்புகளுள் எதில் அடங்கும் என்பதும் புரியவில்லை.

  இந்தப் பகுதியின் ஸமஸ்கிருத, ரோமனைஸ்ட் வடிவங்கள் இந்த இடத்தில் கிட்டும்:

  https://www.sacred-texts.com/hin/mbs/mbs12003.htm

  A special thanks, again Devarajan.

 4. தேவராஜன்,

  //”ப்ரஹ்மாஸ்த்ரம் வேத்துமிசாமி …..
  அர்ஜுநேந ஸமோ* யுத்தே பவேயமிதி மே மதி: !!”

  தான் போரில் அர்ஜுனனுக்கு நிகராக வேண்டும் என்றே கர்ணன் ஆசானிடம் தெரிவிக்கிறான்//

  ‘அர்ஜுநேந ஸமோ யுத்தே பவேயம்’ என்றால் அர்ஜுனனுக்குச் சமமாக யுத்தம் செய்ய விரும்புகிறேன்–என்ற பொருள்தானே தென்படுகிறது என்ற ஐயம் எனக்கும் இருந்தது; இருக்கிறது. எனவேதான், மூல ஸ்லோகத்தையும் இட்டேன். மொழிபெயர்ப்பில், ‘I desire to fight Arjuna‘ என்று இருக்கிறது. கிஸாரி மோஹன் கங்கூலி உறுதியாகத் தெரியாத இடங்களில் அடிக்குறிப்பாக, ‘இந்த இடத்தை இன்னின்னார் இப்படி இப்படி விளக்குகிறார்கள்’ என்று குறித்துவிட்டு, அப்படிப்பட்ட விளக்கங்களை ஏற்காவிட்டால் ‘ஏன் அப்படி ஏற்பதற்கில்லை’ என்று விளக்குவார். அல்லது, ‘எனக்கு இந்த இடத்தில் புரியவில்லை. என்றபோதிலும், இது (அதாவது, அவர் மொழிபெயர்த்திருக்கும் விதம்) பொருத்தமாகப் படுகிறது’ என்றாவது குறிப்பார்.

  இந்த இடத்தில் இரண்டையும் செய்யவில்லை. ஆகவே, அவருக்கு அவர் செய்திருக்கும் மொழிபெயர்ப்பு உறுதியானதாகத் தோன்றியிருக்கிறது. இவருடைய மொழிபெயர்ப்புக்கு என்ன அடிப்படை என்பது விளங்கவில்லை. எல்லா சாத்தியங்களையும் பார்த்த பின்னரே தீர்மானிக்க முடியும்.

  ஆயினும், இப்போதைக்கு இப்படி ஒரு மொழிபெயர்ப்பு பொருத்தமே என்று படுகிறது. கர்ணனுடைய குணசித்திர அமைப்பாக இதை எடுத்துக் கொள்வதா, அல்லது, since this is only a narration of a past event by Narada, இதை நாரதருடைய பார்வையுடன் கலந்த கர்ணனுடைய பேச்சின் சாரமாகக் கொள்வதா என்ற முடிவுக்கு இன்னமும் வரவில்லை. ஆயினும், இந்தக் குறிப்பிட்ட கட்டத்தின் விளக்க ஓட்டத்தை இது தடைசெய்யவில்லை என்று கருதுகிறேன்.

 5. அருமையான விளக்கம். தெளிந்த நீரோடை போல செல்கிறது கதையும் விளக்கங்களும்.. உரையாடலாக இருந்தாலும் சொல்லும் விஷயத்தில் தெளிவும், பல வியாக்கியானங்களை ஒன்றிணைத்து சொல்லும் விதமும் அருமை அய்யா. ஒவ்வொரு முறை படிக்கும்போதும் புதிய புதிய விஷயங்களை தெரிந்து கொள்ள முடிகிறது. படிக்க அருமையாய் இருந்தது. தொடர்ந்து படிப்பேன்..

  ஸ்ரீதர்

 6. அருமையான கருத்துகக்ள். விவரமான மொழிபெயர்ப்பு.

 7. Dear HKji,

  I was luckily saw this site and read all the parts ( 1 t0 6. I also would like to share my comments regarding Karna and his relationship with Duryodana. But, I am not fluent in English to continue. My system is not supporting to me to write (continue) in Tamil. What can I do. Anyway, I submit my comments to your goodselves in English itself. Please forgive me, if you find any grammatical or theoritical mistake.

  “I was told by my old teacher when I was young that Duryodana had a sapam from somebody which he had food from a vessel, the remaining food would be worm (at his childhood period). After the entry of Karna to play along with Duryodana, Karna was about to have Duryodana’s food. After this incident, the rest of the food ate by Duryodana not remain worm. From theat incident itself both they got friendship together. I do not know whether it is true or not and I do not have any reference regarding this.

  Now I am asking this question after a year long. What is your comments on this?

  Yours,
  L.Radhakrishnan, Dubai.

 8. Dear Mr. Hari Krishnan,

  I wish you a long lasting life which will further give these kind of useful, understandable articles that are going to fetch long lasting impact on the young India. I could aslso see that your article has been published @ Dec 20th 2008. After this series of ‘Mahabaratha Uraiadalagal’, there is no article is given related to mahabaratha in this domain. I wish you arite all through your life and spread the fame and glory of our Ithihasaas and puranaas… The work what you have done is an amazing one. I request you to continue your service for the society. Atleast the upcoming youngsters will know what Mahabaratha and Ramayana are all about….

  Thamks and Regards,

  Prasanna.

 9. அருமையான விளக்கங்கள். ஏழு பகுதிகளையும் மொத்தமாக படித்தேன். வியந்தேன். அருமையாகத் தொகுத்துக் கொடுத்து இருக்கிறீர்கள். எனக்கு இருந்த பல தவறான கருத்துகள் விலகிவிட்டன. மீண்டும் எப்போது தொடரும். கர்ணன் பற்றி தனியாக ஒரு கதையே தங்கள் எழுதலாம். KNOW AND LET KNOW என்ற அறிவுரையை நீங்கள் முறையாகச் செயல் படுத்துகிறீர்கள். பல்லாண்டு வாழ்க. இத்தொடரை மீண்டும் எதிர்பார்கிறேன். நன்றி.

 10. இத்தொடரை மீண்டும் எதிர்பார்கிறேன்.மீண்டும் எப்போது தொடரும் ?

 11. கெட்டவனால் பயன்படுத்தப்பட்ட ஒரு நல்லவன்…

 12. ஐயா,
  இது போன்ற ஆத்மா விசாரம் உதவும் அருமையான சங்கதிகளை தொடர்ந்து தேடி வெளியிட்டு வரவும்.
  மிக அருமையாக இருக்கிறது.
  நம் சமூகம் தழைத்து ஓங்கட்டும்.
  ஸ்ரீ பராசக்தி துணை.
  நன்றி.
  அன்புடன்,
  ஸ்ரீனிவாசன்.

 13. ஐயா,
  இது போன்ற சங்கதிகளை, ஒரு உபன்யாசத்தை தங்கள் எழதும்படி பிரார்த்திக்கிறேன் . அது என் போன்ற முடர்களையும் கடவுளே இல்லை என்றும் கயவர்களையும் நல்வழிபடுத்தும். அது புத்தகமாக வெளிஇட்டால் பெரும் பெரிய உபகாரமாக இருக்கும்
  . பல்லாண்டு வாழ்க
  என்றும் உங்களது அடிமை
  காசி

 14. Sir,
  I read your blog and i researched about Mahabharatha through internet, books and took opinion from various elder people. From what i have researched and learnt, I have different views from what you have presented in this blog.

  Barring Lord Krishna and Yudhistra, no one is a perfect character in MAHABHARATHA. Every character has its own merits and demerits, but Karna was vanquished mainly because the collective demerits of Kauravas weighed down his own merits. But you have tried to portray a really bad picture of Karna, which is indeed very sad. Arjuna’s character has far more demerits than Karna’s, yet he won battle because collective merits of Pandavas guided by Lord Krishna easily outweighed his demerits.

  As far as our Great Hindu religion is concerned, among Mahabaharatha characters are concerned, after Lord Krishna, only Karna is revered by Hindus of all sections. Most of Hindus celebrate Karna and love him very deeply. In fact one of tributaries of River Ganges is named after Karna. Respected elders like you should appreciate the good qualities of him and refrain from publishing personal views on Karna. I sincerely request you to do so for the sake of Hindu Unity.

 15. ஹரிகிருஷ்ணன் அவர்கள் இப்போது உபயோகப்படமாட்டார் என்று நினைக்கிறேன். தொடர் தொடராததால். எனினும்,… நான் தேவராஜரோடு முழுதும் உடன்படுகிறேன். என் மனதில் எழுந்த எண்ணங்களை அப்படியே பிரதிபலித்திருக்கிறார். மேலும் ஒரு குறிப்பு. ப்ரஹ்மக்ஷத்ராந்தே சூதம் ஜாதம் …ப்ரம்ஹக்ஷத்ராந்தரே ஸூதம் ஜாதம் என்று வரவேண்டும். அதன் பொருளோ ப்ராம்ஹணப் பெண்ணுக்கும், க்ஷத்திரிய ஆணுக்கும் பிறந்தவன் ஸூதன் என்பதாகக் கொள்ளப்பட வேண்டும்.
  திரு. வேதகிரி அவர்களின் கருத்து ஏற்றுக்கொள்ளப்பட முடியாதது. தவறாக மக்கள் நம்பி வருகிறார்கள் என்பதற்காக கர்ணனை உத்தமனாகக் காட்டமுடியாது. நல்ல குணங்கள் எல்லாரிடமும் இருக்கலாம். கெட்ட குணங்களும் இருக்கலாம். குணம்நாடி, குற்றம் நாடி அவற்றுள் மிகைநாடி மிக்கக் கொளலே சரி. கர்ணனிடம் குற்றம் மிகையாக இருப்பதைக் கொண்டு அவன் அந்த இழிவுக்குத் தகுதியானவனே. அர்ஜுனனைவிட கர்ணனை மக்கள் மேலாகக் கருதுவதில்லை. அப்படிக் கருதும் மக்கள் கர்ணன் குறித்த கட்டுக்கதைகளை நம்புபவர்கள் அவ்வளவே. அயோக்யர்களை யோக்யர்களாகக் காண்பித்து, யோக்யர்களை அயோக்யர்களாக்கும் கும்பல்களிடம் நாம் ஏமாந்துவிடாமல் இருப்பது அவசியம் என்ரு கருதுகிறேன். இராமனினும் வாலியைப் புகழ்தல், கண்ணனினும் கர்ண, துரியோதனாதிகளைப் புகழ்தல் போன்றவை வரவேற்கத் தக்கவை அல்ல. நல்லவர்களை இழிவுபடுத்துதலில் என்ன நன்மை? ஸமுதாயத்துக்கு என்ன நன்மை?

 16. தொடர் இங்கு நிற்பது நாம் செய்த கெடுவினை என்றே எண்ணுகிறேன்.

 17. பரஶுராமர் க்ஷத்திரியனுக்கு வித்தை சொல்லிக்கொடுக்காத விரதம் உடையவர் என்று அறிகிறோம். அவர் எப்படி பீஷ்மருக்குச் சொல்லிக்கொடுத்தார்? எப்படி பீஷ்மருக்குக் குருவானார்?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *