ஜனவரி 1 – படித்திருவிழா

tiruttani_tankஅருள்மிகு திருத்தலங்களில், திருத்தணி முருகப் பெருமான் திருக்கோவில் படைவீடுகளில் ஐந்தாவது படைவீடாகப் போற்றப்படுகிறது. 400 அடி உயரம் கொண்ட மலைக்கோயில். மலைமேலே நான்கு பிரகாரங்கள்.

‘அருள்மிகு திருத்தணி முருகன் வழித்துணை வருவான்’ என்பது ஆன்றோர் வாக்கு! இதனை –

நினைவணங்கு பத்த ரனைவ ருந்தழைக்க
நெறியில் நின்ற வெற்றி – முனைவேலா
நிலைபெறும் திருத்தணியில் விளங்கு சித்ர
நெடிய குன்றில் நிற்கு முருகோனே

திருத்தணி திருப்புகழ்

என்ற வரிகள் மூலம் அறியலாம். வள்ளிப் பிராட்டியை மணம் புரிந்தபின் அமர்ந்த இடம் தணிகை மலை. திருத்தணிகை!

திருத்தணி – செங்கற்பட்டு மாவட்டத்தில் சென்னை ரெய்ச்சூர் ரயில் பாதையில், அரக்கோணத்திலிருந்து வடக்கே எட்டுமைல் (13 கி.மீ.) தொலைவில் அமைந்துள்ளது. சென்னையிலிருந்து தரை மார்கமாகவும் செல்லலாம். திருப்பதி சென்று ஏழுமலையானைத் தரிசித்துத் திரும்பும் அன்பர்கள், திருத்தணி முருகப் பெருமானையும் வழிபட வேண்டுமென்பது மரபுமுறை.

குன்றுதோறாடல் திருத்தலங்கள் அனைத்திலும், திருத்தணியே சிறந்தது என்பதை

‘வரையிடங்களிர் சிறந்ததித் தணிகைமால் வரையே’ என்று கந்தபுராணமும்
1. புவிமீதே ப்ரபலமுள் சுத்தத் தணிமலை
2. இமையவர் பணி திருத்தணி பொற்பதி
3. எத்திக்கு முற்ற புகழ் வெற்றித் திருத்தணி
4. திரைகடல் சூழும் புவிக் குயிராந் திருத்தணி
5. நினைப்பவர் புக்தியில் நேசமெத்த அளித்தருள் சற்குரு நீலமுற்ற திருத்தணி வெற்புறை பெருமானே

எனப் பல வகையில் திருப்புகழ் கூறுகிறது.

tiruttani mulavar”வேட்டுவ குலக்கொடியாகிய வள்ளியம்மையைத் தழுவிக் கொண்டதால் சிவந்துள்ள உமது மார்பு – பக்தர்களைக காத்தருள வேண்டுமென்ற ஆசையினாலும் சிவந்துள்ளது” என ஆதி சங்கரர், திருத்தணி பெருமையை ‘சுப்ரமண்ய புஜங்கம்’ பாடல் 11ல் மொழிகிறார். அருணகிரி நாதர் அருளிய திருப்புகழ் பாடல்களில் சுமார் 64 பாடல்களில் திருத்தணிகை போற்றப்படுகிறது. துன்பத்தை, கவலையை, தணிக்கும் மலை தணிகைமலை. அது வெகு தூரத்திலிருந்து கண்டாலும் யாரொருவர் திருத்தணியின் பெயரைக் கேட்டாலும், சொன்னாலும், நினைத்தாலும் இதன் திசையை நோக்கித் தொழுதாலும் அவர்கள் பல பிறவிகளில் செய்துள்ள வினைகளெல்லாம் நீங்குவதோடு, அவர்களுக்கு மட்டற்ற இன்பமும் கிட்டுமெனத் தணிகைப் புராணம் மொழிகிறது.

‘சேயிடை யிருந்து கேட்பினும், தொழினும் செப்பினும், சித்தம்வைத் திடினும்… வினையும் சவட்டி மீளாத வரம்பிலின் புறுத்துவ தென்றால் காயிலை வேலோன் தணிகையின் பெருமை கட்டுரைக் கடங்குவ தன்றே’ (தணிகை புராணம்)

திருப்புகழும் இதையே

‘தூரத் தொழுவார் வினை சிந்திடு தணியம்பதி’ எனப் புகழ்கிறது.

ஆங்கிலேயர் ஆட்சி நம்நாட்டில் நிலவிய காலத்தில் ஒவ்வோர் ஆண்டும் ஜனவரி மாதப் பிறப்பன்று அதிகாரிகளான துரைமார்களை காணிக்கையுடன் சென்று கண்டு புதுவருட வாழ்த்துக்களைக் கூறித் திரும்புவது நம் மக்களிடையே ஏற்பட்ட ஒரு பழக்கம்.

திருப்புகழைத் தவமாக மேற்கொண்ட, வள்ளிமலை ஸ்வாமிகள் சித்தத்தில் ஒரு ஞான உதயம்!

உலகத்திற்கே பெரிய அதிகாரியான, உமாஸ்கந்தனை இவ்விதம், சென்று கண்டு தொழுதால், வருட முழுவதும் எண்ணற்ற நலங்களை பெறலாமே, என அருள்கூட்டியது

‘திருப்புகழ் ஓதுங் கருத்தினர் சேரும்
திருத்தணி மேவும் பெருமானே’

என்ற அமுதவாக்கும் வள்ளிமலை ஸ்வாமிகள் நெஞ்சில் நிற்கிறது!

swami satchidanandaசுவாமிகள் சில அடியார்களுடன் 1917ம் ஆண்டு டிசம்பர் திங்கள் முதல் நாள் முற்பகல் வரை திருத்தணிப் பெருமானை கண்டுமகிழத் திருவுள்ளம் கொண்டு மலையேறும் திருப்புகழ் திருப்படித் திருவிழாவை துவக்கி வைத்தார்.

ஓர் ஆண்டுக் காலத்துக்கு 365 நாட்கள் உள்ளதுபோல ஆலயத்திற்குச் செல்ல மலைப்படிகள் 365 இருப்பதையும் காணமுடிகிறது.

அன்று தொடங்கி இன்றுவரை, திருத்தணிகை படித்திருவிழா ஆண்டுதோறும் தொடர்ந்து தொய்வின்றி, தூய்மையான முறையில், கோடிக்கணக்கான, அடியார்கள் சூழத் திருவிழா காண்கிறது! சென்னை மட்டுமல்ல, தமிழகம், மற்றும் முருகனடியார் வாழும் இடங்களிலிருந்தும் திருப்புகழ் மன்றங்கள் திருத்தணி படிவிழாவில் கலந்துகொண்டு பெரும்புகழ் சேர்க்கின்றது. தக்கார் கைபடின் சிறக்குமன்றோ! ஒவ்வொரு ஆண்டும், தென்னக ரயில்வேயும் டிசம்பர் 31ம் தேதி, சென்னை சென்ட்ரலிலிருந்து திருத்தணிக்கு, சிறப்பு ரயில் இயக்கிவருகிறது. கச்சியப்ப முனிவரின் சீடரான கந்தப்ப தேசிகருக்கு ஏற்பட்ட குன்ம நோய் தணிகையாற்றுபடை பாடியதால் நீங்கியது.

‘பலகாலுமுனைத் தொழுவோர்கள் மறவாமல் திருப்புகழ் கூறி படிமீது துதித்துடன் வாழ அருள்வோனே’ என அருணகிரிநாதரும் படிவிழாவுக்கு அருளாசி கூறுகிறார்.

(படி என்றால் உலகம் என்ரு ஒருபொருள், மலைப்படி என்றும் பொருள்)

valli-malai-peak“ஒருமுறை வள்ளிமலை ஸ்வாமிகள் திருப்புகழ் பாடல்களோடு வலம் வருகையில் இடையிடையே ‘வேலுக்கு அரோகரா, முருகனுக்கு அரோகரா’ என்று ஓசை எழுப்புதல் செய்து வந்தனர். பசி பொறுக்காத ஒரு அடியார் ‘இட்லி காப்பிக்கு அரோகரா’ என முழக்கமிட, என்ன ஆச்சர்யம், சற்று நேரத்தில், மலைப்பாதை வழியில் முதியவர் ஒருவர், எல்லோருக்கும் இட்டலி சிற்றுண்டி வழங்கி மகிழ்ந்த நிகழ்ச்சி மறக்க முடியாது என குறிப்பிட்டுள்ளார். தற்சமயம், படிவிழாவில் அன்னதான ஏற்பாடுகள் நிறைந்துள்ளன.

பல அருளாளர்கள் வாழ்வில் திருத்தணி முருகன் திருவிளையாடல்கள் செய்துள்ளது உண்மை!

சாதல் பிறத்தல் தவிர்த்தருளுஞ் சரணாம்புயனே – சத்தியனே
தணிகா சலமார் தலத்தமர்ந்த சைவமணியே சண்முகனே!

என வடலூர் வள்ளலார் ஸ்வாமிகள் போற்றித் துதிக்கிறார். பல திருவருட்பாக்களில், திருத்தணி முருகனின் அருளை வள்ளலார் வியந்து போற்றுகிறார்.

‘படியேரும் அன்பர்வினை பொடியாகும் என்று நிறைமொழி மாந்தர் பகருவது’

(திருத்தணிகை திருவிருத்தம்)

சங்கீத மும்மணிகளில் ஒருவரான முத்துஸ்வாமி தீட்சிதர் திருத்தணியில், முருகப் பெருமானை மெய்மறந்து தியானிக்கும்போது, ஆறுமுகனே, சிறுவன் வடிவத்தில் தோன்றி இவரது வாயில் கற்கண்டு போட்டதாகவும் அதுமுதல் அவருக்கு ஞானப் பிரவாகம் ஏற்பட்டு அற்புதத் கீர்த்தனைகளை இயற்றியதாகவும் அவருடைய பாடல்களில் ‘குரு குஹ’ என்கிற அடையாளம் இருப்பதாகவும் அமரர் திரு. கி.வா.ஜகன்னாதன் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.

பாம்பன் ஸ்வாமிகள், வள்ளலார் ஸ்வாமிகள், வாரியார் ஸ்வாமிகள் போன்ற பல ஞானிகள் திருத்தணி முருகன் பெருமையை விளக்கிப் பல செய்திகள் அருளி உள்ளார்கள். பித்துகுளி முருகதாஸ் சம்பல் பள்ளத்தாக்கில் திருடர்கள் பிடியில் சிக்கி தவித்தபோது முருகனின் திருப்புகழ் தன்னையும் தன் கூட்டத்தையும் காப்பாற்றியது மட்டுமன்றி திருடர்களும் அவருக்கு மரியாதை செய்து கொண்டு விட்டதாக மொழிந்துள்ளார்.

ஏறக்குறைய 90 ஆண்டுகளாக திருத்தணி படிவிழா நடைபெற்று வருகிறது. இன்னும் 10 ஆண்டுகளில் நூற்றாண்டு காணும்!

திருத்தணித் திருப்புகழில் பல அரிய சமுதாயச் சிந்தனைகளும், புராணச் செய்திகளும் பல சந்தங்களில் பாடப் பெற்றுள்ளன. தவிர பல உண்மைச் செய்திகள் உண்டு.
முக்கியமாக ஒரு செய்தி வள்ளிமலை ஸ்வாமிகள் மூலம் தெளிவாகிறது.

திருத்தணியில் நாத்திகவாதிகள் சிலர், படிவிழாவைக் கேலிசெய்து கலகம் செய்துள்ளனர். அடியார்கள் அப்போது ‘சினத்தவர் முடிக்கும்…’ என்ற திருத்தணித் திருப்புகழைப் பாடி அவர்கள் மயங்கி விழுந்ததாகவும் பிறகு அப்பாடலின் பிற்பகுதி 4 வரிகள் மூலம், அவர்களுக்குத் தெளிவு ஏற்பட்டுக் கலைந்தனர் என்றும் மொழிந்துள்ளார்.

ooo

புதுச்சேரி திருப்புகழ் மன்றம் வெளியிட்ட மலர் ஒன்றில் திரு. க.ப. அறவாணன் அவர்கள் திருப்புகழையும் திரு அருணகிரி நாதரையும் அவரது கோணத்தில் ஆய்வு செய்து உண்மைக்கு மாறான செய்திகளைப் பரப்பி உள்ளார். திருப்புகழை முழுவதுமாக அவர் பயிலவில்லை என்பது அக்கட்டுரையிலிருந்து புலனாகிறது.

வேதக் கருத்துக்களையும் வடமொழி சொற்களின் ஆற்றலையும் அருணகிரியார் விரும்பாததாக இவர் குறிப்பிட்டுள்ளார். இவர் அருணகிரிநாதரின் நோக்கத்திற்கு மாறாகப் புதிய நோக்கம் கற்பித்துள்ளதும் புரிகிறது.

இப்படிப்பட்ட எதிர்ப்பாளர்களுக்கும் திருத்தணிகை திருப்புகழில்

‘சினத்தவர் முடிக்கும் பழித்தவர் குடிக்கும்… நெருப்பென்று அறிவோம்’ என அருணகிரிநாதரே விடை கூறி உள்ளார்.

பல ஞானிகளும் அடியார்களும் அன்பர்களும் போற்றித் துதிக்கின்ற திருத்தணி முருகனின் திருப்புகழை புத்தாண்டு தினத்தில் மறவாமல் துதித்துப் பேரின்பம் பெருவோமாக!

வாழ்க புத்தாண்டு! வளர்க திருத்தணி படித்திருவிழா!

3 Replies to “ஜனவரி 1 – படித்திருவிழா”

  1. அழகென்ற சொல்லுக்கு முருகா.. உந்தன் அருளன்றி உலகிலே பொருளேது முருகா என சௌந்திரராஜன் அவர்கள் பாடிய பாடலும், திருத்தனிகை வாழும் முருகா உன்னைக் கானக்கான வருவேன்.. என்னைக் காத்து காத்து அருள்வாய் என்ற பாடலும் நினைவிற்கு வருகின்றன.. படித்துறை திருவிழா தொய்வின்றி தொடர அந்த திருத்தணிகையான் அருளட்டும்.. ஜெயக்குமார்

  2. அருள்மிகு முருகப்பெருமான் உறையும் திருத்தணிகை திருத்தலத்தைப்பற்றி எழுதியிருப்பது மகிழ்ச்சியைத் தருகிறது.

    ஜி.சந்தானம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *