போகப் போகத் தெரியும் – 5

சரியும் விக்கெட்டுகளும் சாத்வீகப் பெரியாரும்
indrajit

ராட்சச மன்னனால் கட்டளையிடப்பட்ட இந்திரஜித்து தந்தையாரின் கட்டளையைச் சிரமேற்கொண்டு யாகத் தலத்தில் முறைப்படி அக்கினியில் ஹோமம் செய்தான்…

அக்கினி பகவான் வெளிவந்து வலமாய் வரும் ஜ்வாலையோடு சுத்தப் பொன்னை நிகர்த்தவராய் ஹவிஸை நேரிலேயே வாங்கிக்கொண்டார்.

– எண்பதாவது சர்க்கம், யுத்த காண்டம் / வால்மீகி ராமாயணம்.

இறைவன் அறம் வளர்த்த அண்ணலாக அவதாரம் செய்தான். அவனுக்கு எதிரே ராவணனின் படை. அது அநீதியின் முகாம். தங்களுக்கு வலு ஏற்றுவதற்காக அவர்கள் செய்தது யாகம்; அதுவும் வேத முறைப்படி. மதச் சடங்குகளும் சண்டித்தனமும் ஒருபுறம் இருக்க, மனிதப் பண்புகளும் விலங்குகளும் இறையருளும் இன்னொரு பக்கமுமாக நடந்துதான் ராமாயண யுத்தம். இதில் யாரை ஆதரிப்பது என்ற தெளிவு இல்லாமல் தொடர்ந்து சேம்சைடு கோல் போடுபவர்கள்தாம் திராவிடக் கழகத்தினர். ராவணன் தரப்பு யாகம் வளர்த்தது என்பதை இவர்கள் மறைத்துவிடுகிறார்கள்.

இத்தகைய குளறுபடிகளையும் இந்த இயக்கத்தின் தலைவரான ஈ.வே.ரா.வின் முரண்பாடுகளையும் இப்போது பார்க்கலாம்…

Ramasami Naickerகலைஞர் தொலைக்காட்சியில் ஒரு காலை நேரத்தில் பேசினார் சுப. வீரபாண்டியன். அவர் ஈ.வே.ரா குறித்த தகவல் ஒன்றைக் கூறினார். திராவிடர் கழகம் நடத்திய கூட்டமொன்றில் யாரோ ஒருவர் ஈ.வே.ராவைக் கேள்வி கேட்டாராம். அத்தனை கேள்விகளுக்கும் பொறுமையாகப் பதிலளித்த ஈ.வே.ரா, தன்னை ஆதரித்துக் கைதட்டியவர்களைக் கண்டித்தாராம். கைதட்டலால் கேள்வி கேட்டவரின் உணர்வுகள் பாதிக்கப்படும் என்றாராம் அவர்.

அதாவது, பிறரது உணர்வுகளுக்கு மிகவும் மதிப்புக் கொடுத்து நடந்து கொண்டார் ஈ.வே.ரா. என்பதுதான் இந்த நிகழ்விலிருந்து அறிய வேண்டிய நீதி. இது நடந்திருக்கலாம். பொதுவாழ்வில் கடைப்பிடிக்க வேண்டிய பண்பை அன்று அவர் காட்டியிருக்கலாம். ஆனால் அவருடைய எழுத்து மற்றும் பேச்சுகளின் தொகுப்பை பார்த்தால் இந்த நிகழ்ச்சி அபூர்வமாகத்தான் தெரிகிறது.

சரிந்து விழும் பகுத்தறிவு இயக்கங்களைத் தூக்கி நிறுத்தச் சமீப காலமாக இப்படிச் சில கருத்துக்கள் உருவாக்கப்படுகின்றன. கேள்வி கேட்பதையே குறிக்கோளாக வைத்திருந்த ஈ.வே.ரா.வை கேள்விக்கு அப்பாற்பட்டவராக்கும் திட்டம் இது. இதற்கான அவசியம் ஏற்பட்டுவிட்டது என்பதே இந்து எழுச்சிக்குக் கிடைத்த வெற்றியாகும்.

“நான்கு இளைஞர்களைச் சந்தித்தால் அதில் மூன்று பேர் சபரிமலைக்கு மாலை போட்டிருக்கிறார்கள், நான்காமவர் மேல்மருவத்தூர் யாத்திரை போகிறார். இனிமேல் இங்கே நாத்திகம் எடுபடாது” என்று வாக்குமூலம் கொடுத்திருக்கிறார் திராவிடத் துண்டை தோளில் போட்டிருக்கும் தெற்கத்திக்காரர்.

ஆள் இல்லை என்றவுடன் ஆலாபனை மாறுகிறது. விக்கெட்டுகள் சரிவதால் விளையாட்டில் வேகம் குறைகிறது. கலகப் பெரியார் சாத்வீகப் பெரியாராக உருமாற்றம் அடைகிறார். இதைக் கண்டு தமிழர்கள் ஏமாந்துவிடக் கூடாது என்பதே இந்தக் கட்டுரையின் நோக்கம். சாத்வீகத் தோற்றத்திற்கு சரியும் விக்கெட்டுகள்தான் காரணம் என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும்.

பகுத்தறிவு இயக்கத்திற்குத் தமிழகத்தில் வெகுஜன ஆதரவு எப்போதும் இருந்ததில்லை. ஆனால் இருப்பதுபோல ஒரு மாயை ஊடகங்களின் கடாட்சத்தால் உருவாக்கப்பட்டது. அந்த மாயையும் இப்போது மறைந்து வருகிறது. தனக்குக் கூட்டம் சேரவில்லை என்று ஈ.வே.ரா.வே சொல்லியிருக்கிறார்.

தலைமைக்குத் தெரிந்த விவரம் தொண்டர்களுக்குத் தெரிய ஐம்பது ஆண்டு காலம் ஆகியிருக்கிறது. ஈ.வே.ரா.வின் பேச்சைப் பதிவு செய்த கவிஞர் கருணானந்தம் எழுதுகிறார்:

பெரியார் சேலம் அன்னதானப்பட்டியில் 01.07.1963 அன்று திருவண்ணாமலை தேர்தல் பிரசாரம் பற்றிக் குறிப்பிட்டார். “நான் பத்தாயிரம் பேர் அடங்கிய பெரிய கூட்டத்தில் பேசிக் கொண்டிருந்தேன். யாரோ ஒருவன் அதோ எம்.ஜி.ஆர். என்று கூவிக் கொண்டே ஓடினான். கூட்டத்தில் 300 பேர் கூட மீதி இல்லை. அவ்வளவு பேரும் அவன் பின்னே ஓடினார்கள். பிறகு சினிமாக்காரன் வரவில்லை என்று திரும்ப வந்து உட்கார்ந்தார்கள். அவர்களை நன்றாக வெளுத்து வாங்கிவிட்டேன்” என்றார்.

– பக்கம் 387 / தந்தை பெரியார் / கவிஞர் கருணாநந்தம்

ஆய்வுப் பணிகளில் அக்கறை உள்ளவர்கள் சுப. வீரபாண்டியனின் பெரியாருக்கும் கவிஞர் கருணாநந்தத்தின் பெரியாருக்கும் உள்ள கால வேறுபாடுகளையும் கோளவேறுபாடுகளையும் சீர்தூக்கிப் பார்க்கலாம். மற்றபடி மனித நேயத்திற்கும் ஈ.வே.ரா.வின் கொள்கைகளுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. அவர் அடி என்றார், அடித்தார்கள், உடை என்றார் உடைத்தார்கள், கொளுத்து என்றார் கொளுத்தினார்கள். இந்த அராஜகச் செயல்கள் பெரும்பாலும் ஆளும் கட்சியின் ஆதரவோடு நடைபெற்றன என்பதுதான் உண்மை.

ஈ.வே.ரா. நம்பியது என்ன, அவரால் நடத்தப்பட்டது என்ன அவருடைய கொள்கை என்ன என்பதைப் பற்றி அறிய வரலாற்றின் சில பக்கங்களைப் பார்க்கலாம்.

மதுவிலக்கு தேசிய உணர்வு என்று காங்கிரஸ் கட்சியோடு கலந்திருந்த ஈ.வே.ராவுக்கு கருத்து வேற்றுமை ஏற்பட்டது 1925ல். அப்போது காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளராக இருந்தார் ஈ.வே.ரா. கட்சியின் ஆதரவோடு சேரன்மாதேவியில் குருகுலம் நடத்தி வந்தார் வ.வே.சு. அய்யர். இந்தப் பள்ளியில் உணவு வழங்கும் முறை குறித்து சர்ச்சை ஏற்பட்டது.

காங்கிரஸில் பொறுப்பில் இருந்த பிராமணர்கள் இந்த விஷயத்தில் சாதி அடிப்படையில் செயல்படுவதாகக் கூறி ஈ.வே.ரா, சாதி ஒழிய வேண்டும் என்ற தீர்மானத்தைக் கொண்டு வந்தார். இதைத் தொடர்ந்து காஞ்சிபுரம் மாநாட்டில் வகுப்புவாரி பிரதிநித்துவ தீர்மானத்தை முன்மொழிந்தார். அதற்கு ஆதரவு இல்லாததால் காங்கிரஸிலிருந்து வெளியேறினார்.

அவர் சுட்டிக்காட்டிய குறைகள் காங்கிரஸ் கட்சியில் இருந்திருக்கலாம் என்பதே நம்முடைய கருத்து. இதுபற்றியும் சேரன்மாதேவி விவகாரம் பற்றியும் இன்னொரு முறை பார்க்கலாம். இப்போதைக்கு இந்தத் தடத்திலேயே போகலாம்.

காங்கிரஸிலிருந்து வெளியேறிய ஈ.வே.ரா சமதர்மத்திற்குப் பாடுபடுவதே தன்னுடைய நோக்கம் என்றார். நீதிக்கட்சியோடு உறவு கண்டார்.

காங்கிரசுக்கு மாற்றாக ஈ.வே.ரா. தேர்ந்தெடுத்த நீதிக்கட்சியின் அரசியல் நிலப்பாடு பற்றி மார்க்சிய சிந்தனையாளர் அருணன் எழுதுகிறார்:

சொல்லளவில் மட்டுமல்ல செயலளவிலும் ஏகாதிபத்தியதாசனாகவே இயங்கி வந்தது நீதிக்கட்சி. அதுவும் எந்த அளவிற்கு என்றால் மிகக் கொடூரமான ரெளலட் சட்டத்தினை ஆதரிக்கும் அளவிற்கு. “சுட்டேன், சுட்டேன்; குண்டுகள் தீரும்வரை சுட்டேன்” எனக் கொக்கரித்தானே ஜெனரல் டயர் 1919 ஆம் ஆண்டு! அந்த ஜாலியன்வாலபாக் படுகொலையினை ஆதரித்து அறிக்கை விடும் அளவிற்கு! அதிலும் கட்சியின் சார்பில் அறிக்கை விட்டவர்கள் யார் தெரியுமா? இன்றைக்கும் “திராவிட இயக்கத்தின் தனிப்பெரும் தலைவர்கள்” என்று எவரை திராவிட இயக்கத்தவர்கள் புகழ்ந்துரைத்துக் கொண்டிருக்கிறார்களோ அந்த தியாகராசச் செட்டியாரும், டி.எம். நாயரும்தான்.

– பக்கம் 19 / திராவிட இயக்கம் – ஒரு மார்க்சீய ஆய்வு / அருணன்

நீதிக்கட்சியோடு உறவு கண்டதால் ஈ.வே.ராவின் கொள்கை நிறைவேறியதா? வைர மோதிரங்களையும், சரிகைத் தொப்பிகளையும் வயலில் இறக்கிவிட முடிந்ததா என்கிற கேள்விகளுக்கு விடை காண மீண்டும் அருணனைப் பார்ப்போம்:

1934 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் நடைபெற்ற நீதிக்கட்சியின் ஆண்டு மாநாட்டிற்கு பெரியார் தனது சமதர்ம கட்சியின் திட்டத்தை அனுப்பி வைத்து அதனை ஏற்றுக் கொள்ளும்படிக் கோரியிருந்தார். ஆனால் நாம் ஏற்கனவே சுட்டிக் காட்டியிருந்தது போல் ஆலை அரசர்களாலும், மிட்டா மிராசுகளாலும் நிறைந்திருந்த நீதிக் கட்சியின் தலைமையால் சமதர்மக் கட்சியின் புரட்சிகரமான திட்டத்தை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. ஆனால் இங்கே நடந்த விந்தை என்னவென்றால், பிராமணரல்லாதார் நலன் காத்தல் எனும் கோஷத்தோடு பாட்டாளி வர்க்கக் கோட்பாடுகளை முன்வைத்த பெரியார் நீதிக்கட்சியின் தலைமை ஏற்றுக் கொள்ளும் வகையில் அதனை வெட்டிச் சுருக்கி மாற்றியமைத்து விட்டார். “இது சமதர்மக் கொள்கையின் அடிப்படை அம்சத்தையே கை கழுவுவதாகும்” என்று சிங்காரவேலர் பெரியாரைக் கண்டித்திருக்கிறார். “சுயமரியாதை இயக்கம், அவமரியாதை இயக்கமாகிவிட்டது” என்றுகூட அவர் கூறியிருக்கிறார்.

பெரியாரின் இந்தத் தவறான பாதையைக் கண்டு வெறுப்புற்று இது “கோழைத்தனமான பின்வாங்கல்” என்று அவரைக் கண்டித்து ஜீவாவும், ராகவனும், நீலாவதியும், வல்லத்தரசும் பெரியாரிடமிருந்து விலகி “சுயமரியாதை சமதர்மக் கழகம்” என்று தனிக் கழகத்தினை அமைத்திருக்கிறார்கள்.

இப்படி திராவிட இயக்கத்தினை ஒரு பாட்டாளி வர்க்க அடிப்படையில் நடத்திச் செல்ல நடந்த ஒரு முயற்சி அகால மரணம் எய்திவிட்டது.

– பக்கம் 39,40 / திராவிட இயக்கம் – ஒரு மார்க்சீய ஆய்வு / அருணன்

மேலும் சில விவரங்களை அடுத்த முறை பார்க்கலாம். அதுவரை பொறுக்க முடியாத நண்பர்கள்

1) கண்ணில்பட்ட குடியரசு / முருக. இராசாங்கம் / குடந்தை செங்குயில் பதிப்பகம்
2) ஈ.வே.ராமசாமி நாயக்கரின் மறுபக்கம் / ம.வெங்கடேசன் / பாரதீய பார்வர்டு பிளாக்

ஆகிய புத்தகங்களைப் படித்துப் பயன் பெறலாம்.

மேற்கோள் மேடை:

உண்மைக்கும் அரசியல்வாதிகளுக்கும் குறிப்பாக தி.மு.க. வினருக்கும் உள்ள உறவு எப்பேர்ப்பட்டது என்பது நாடறிந்த விஷயம்.

– மன்னையாரின் நினைவுக்கு / குமுதம் தலையங்கம் / 24.01.1974

15 Replies to “போகப் போகத் தெரியும் – 5”

 1. அறியவேண்டிய ஆனால் அபூர்வமான பல பொருட்களை இங்கே தொகுத்து கருத்தினால் இந்த பெரியாரிசம் என்கிற விடத்திற்கு மருந்து கொடுத்துக்கொண்டிருக்கிறார் சுப்பு. வளரட்டும் அவர் பணி. பெரியாரிசத்தை சமதருமமாக சித்தரித்து அதை விமரிசித்தாலே ஏதோ பாவம் ஏற்பட்டுவிடும், தீட்டு வந்துவிடும், பெரியாரின் குணங்களை குறைசொன்னால் தோசம் என்கிற அளவில் பெரியாருக்குப் பின்னால் ஒரு ஒளிவட்டத்தை பிட் பண்ண முயலும் பகுத்தறிவுக்குஞ்சுகளின் சதியை தோலுரித்திருக்கிறார் சுப்பு அவர்கள்.

  நான் ஆவலோடு எதிர்பார்க்கும் தொடராகிவிட்டது போகப்போகத்தெரியும்.

  நன்றி

  ஜயராமன்

 2. இந்தத் தமிழகத்தில் நாத்திகம் என்பது வியாபாரம். நாத்தழும்பேற நாத்திகம் பேசியவர்கள் மஞ்ச‌ள் துண்டு போட்டுக்கோண்டு செட்டில் ஆகிவிட்டார்கள். விஜ‌ய் டிவியில் அடிக்க‌டி ‘நீயா நானா’வில் ‘ப‌குத்த‌றிவி’ன் பிரதிநிதியாகத் தோன்றும் சுப‌.வீர‌பாண்டிய‌ன் க‌ண்க‌ளில் இதெல்லாம் தெரியாது..கேட்ப‌தற்கு ஆட்க‌ள் இருந்தால் என்ன‌வெல்ல‌மோ பேச‌லாம் நம்மூரில்.

 3. இந்த கட்டுரை அவசியம். ஆனால் பெரியாரின் படத்தைத் தவிர்த்திருக்கலாம்.

  பிராயச்சித்தமாக அன்னாரைப் பற்றிய தவறான பிம்பத்தை உடைத்து எறியும் கட்டுரைகளைத் தொடர்ந்து வெளியிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

 4. திராவிட இயக்கஙகளை தோலுரித்து காட்டும் உங்கள் பணி தொடரட்டும் என்று ப்ரார்திக்கிறேன்.

 5. நான் பள்ளிக்குள் நுழைந்த காலத்தில் சுயமரியாதைக் கட்சி வெகுவாய் “பிரபலம்” அடைந்திருந்தது. கள்ளகுறிச்சியில் எனது மூன்றாம் வகுப்பு ஆரம்பம். பள்ளியில் சேர்ந்த ஓரிரு நாட்களில் சக மாணவர்கள் மிகவும் கிண்டலாக “டேய் அய்யரே!” என்றுதான் விளிப்பார்கள். எனக்கு மிகவும் கோபம் வரும் ஆனால் அடக்கிக் கொள்வேன். விவரம் தெரிய வந்த காலததில் இது பெரியாரின் தாக்கம் எனத் தெரியவந்தபோது சாதி ஒழிப்புக்கு இதுவா வழி என்று கேட்டால் மழுப்பலான பதில்தான் பெரியார் “பக்தர்”களிடமிருந்து கிடைத்தது. பிராமண எதிப்பும் நாத்திக‌மும் சிறந்த வியாபாரம் எனத் தெரியவும் சில காலம் ஆனது. சுப்புவின் கட்டுரை தொடரட்டும்

 6. பெரியார் உண்மையில் பெரிய்வர் அல்ல.

 7. உச்சி மீது வானிடிந்து வீழ்ந்து வந்த போதிலும் அச்சமில்லைஅச்சமில்லை என்பதே (பாரதியார்)

  ஒருமையுடன் நினது திருமலரடி நினைக்கின்ற
  உத்தமர்தம் உறவு வேண்டும்
  உள்ளொன்று வைத்துப் புறம்பொன்று பேசுவார்
  உறவு கலவாமை வேண்டும்
  பெருமைபெறும் நினது புகழ் பேசவேண்டும் பொய்மை
  பேசா திருக்க வேண்டும்
  பெருநெறி பிடித்தொழுக வேண்டும் மதமான பேய்
  பிடியா திருக்க வேண்டும்
  (இராமலிங்க அடிகளாரின் திருமுறையின் சில வரிகள்)

  நான் இப்பொழுது கூறப்போவதற்க்கு பல திசைகளிலிருந்து பல மறுப்புரைகளும் கண்டனங்களும் வருமென எதிர்ப்பார்க்கிறேன்.
  எனினும் மனதில் தோன்றியதை எழுதுகிறேன்.
  “மனிதனை மதி” என்று சொல்லுவதும் “இராமர் படத்திற்கு செருப்புமாலையிட்டு ஊர்வலம் வரச்செய்து வழியிலெல்லாம் “கட்சியினரை” (அதில் பலர் முன்னமேயே ‘சன்மானம்’ கொடுத்துத் தூண்டப் பட்டவராயிருக்கலாம்) தேய்ந்த, அறுந்த செருப்புகளால் எறிந்தடிக்கச் செய்வதும் ஒன்றேயாகுமா?
  நான் பணியிலிருந்து ஓய்வு பெரும் முன், என்னுடன் நெருங்கிப் பழகிய நண்பர் (அவர் பல வ்ருடங்களுக்கு முன் இறைவனடி எய்துவிட்டார்), பங்களூரில் நல்ல பெயருள்ள குடும்பத்தினர் ஈ. வே. ரா. அவர்களது மனைவி திருமதி மணியம்மையின் தங்கையை மணம் செய்து கொண்டவ்ர். அவர் என்னிடம் கீழ்க் கண்ட விவரங்களைச் சொல்வார். அவரது மனைவியிடம் திருமதி மணியம்மையார் கேட்டுக் கொள்வாராம். “என் கணவருக்கும் ஒன்றும் ஆகக் கூடாது என்று நீங்களெல்லோரும் தயவு செய்து வேண்டிக் கொண்டிருங்கள்” என்று.
  ஒரு முறை ‘பெரியார பேச முடியாமல் வாயில் ஒரு புண் உண்டானதாம். உடனே மிக மிக பயந்து திருமதி மணியம்மையார். என் நண்பனின் மனைவியிடம் ஓடி வந்து பணம் நிறைந்த (சில நகைகளும் இருக்கலாமென எனது நண்பர் ஊகித்ததாகச் சொன்னார்)
  ஒரு சிரு மூட்டையைக் கொடுத்து மனதாரத் திருமலையானை வேண்டிக்கொண்டு திருப்பதி உண்டியலில் சேர்த்து விடுமாறு மிக வருத்தத்துடன் இரங்கிக் கேண்டாராம்.
  இப்பொழுது என் நண்பர் இவ்வுலகிலில்லை (அவரது ஆத்மா சாந்தியடையுட்டுமெனக் கடவுளை வேண்டுகிறேன்). அதனால் மேற்கண்ட உண்மையை வெளிப் படுத்துகிறேன்.
  முருகா சரணம்

 8. இந்த சுப.வீரபாண்டியன் ஒரு முறை கலைஞர் டிவியில் வள்ளலார் பற்றி பேசும் போது கூறியது: “வள்ளலார் தம் இறுதிக்காலத்தில் நாத்திகராக மாறிவிட்டார். இதை அவருடனிருந்தவர்கள் விரும்பவில்லை. எனவே, வள்ளலார் எப்படி சோதியில் கலந்திருப்பார் என்று ஊகிக்க முடிகிறது”

  இந்த திராவிட அந்துலேக்களின் முகமூடியை கிழிக்கும் சுப்பு அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

 9. அருமையான பதிப்பு. கழகக் கண்மணிகாள், வாருங்கள், வந்து படியுங்கள்.

  பகுத்தறிவு முகமூடி கொஞ்சம் கொஞ்சமாகக் கிழிந்து வருவதைப் படியுங்கள்.

  ஜாதி இரண்டொழிய வேறில்லை என முழங்கிய முண்டாசுக் கவி
  பார்பனனாய்ப் பிறந்த்தாலேயே அவனையும் அமுக்கப் பார்த்திருப்பார்கள் இவர்கள். ஆனால் அவன் ஞாயிறாயிற்றே. கோணி மூட்டையை வைத்து ஞாயிறின் ஒளியை எவ்வாறு மறைக்க முடியும்? அது போல, இந்தக் கட்டுரை மின்னட்டும். மிக அருமை.

 10. மிக சிறப்பாக எழுதியுள்ளார் திரு சுப்பு. நம் மதத்தில் எழுச்சி வேண்டும். இவர்கள் தட்டிய பகுத்தறிவு பறை இன்றுவரை ஜாதியை ஒழித்த பாடில்லை ! மாறாக சந்திலே சிந்துபாடும் மதமாற்ற நரிகளின் வெறியாட்டத்தை ஊக்குவித்துவிட்டன.எங்கு நுழையலாம் எப்படி நுழையலாம் என்று எக்காலும் கழுகென காத்திருந்து, மக்களின் வறுமையையும், தனிமையையும்,எளிமையையும் பயன்படுத்தி ஊருக்கு ஊர் நம் தமிழ் கலாச்சாரத்தையும் மேன்மையான ஹிந்து தர்மத்தையும் பாழ் படுத்தும் இந்த மதமாற்ற எய்ட்ஸ் நோயை நம் விழிப்புணர்வு ஒன்றே கட்டுப்படுத்த முடியும். ஹரிஜனங்கள்தான் ஹிந்துமதத்தின் வேர்கள் என்பதை உணர்ந்து அவர்களை அரவணைத்து வாழும் நம் காஞ்சி பெரியவரின் பெயரை கெடுக்க எத்தனை சதி நடந்தது ? ஆன்மீக புரட்சி செய்யும் மேல்மருவத்தூர் அடிகளாரையும் இவர்கள் விட்டு வைக்கவில்லை. கூர்ந்து நோக்கினால் இவை அனைத்தின் பின்னணியும் சதிவேலையும் தெளிவாய் புலப்படும். இதற்க்கான ஒரே மருந்து நம் மக்களின் விழிப்புணர்வு.

 11. இன்றுதான் முதன் முதலாக இந்த வலை தளத்தைப் பார்த்தேன். திரு சுப்புவின் கட்டுரைகளை துக்ளக் இதழ்களில் படித்து அதிசயித்த்ருக்கிறேன். ஆகையால், இந்தக் கட்டுரைகளும் என்னை ஈர்த்திருக்கின்றன. எனக்கு இந்த தொடரை முதல் தழிளிருந்து வாசிக்க ஆசை. அதை எப்படி செய்வது என்று விளக்கம் கொடுத்தால் நன்றி உள்ளவன் ஆவேன்.

 12. பெரியாரின் பெயரை மறைக்க (அ) கலங்கபடுத்த யாராலும் முடியாது … ஏனெனில் அவர் மாயை அல்ல பகலவன் .

 13. பிரசாந்த்

  இதென்ன மரியாதை இல்லாம பெரியாரை (பகல்) அவன் கிவன்னு ஒருமைல பேசுறது.

  இன்னைக்கு பெரியார் கட்சி காரங்கதான் ஆசார கிராமமா எல்லாம் பண்றாங்க

  எல்லா தொண்டர்களும் சுத்தமான கருப்பு சட்டை போட்டு. கருப்பு மேல்துண்டு போட்டு கலையா வருவாங்க.

  ஒவ்வொரு மீட்டிங் தொடங்கும் போதும் சாந்தி மந்திரம் “கடவுள் இல்லை கடவுள் இல்லை கடவுள் இல்லவே இல்லை … ” சொல்லிட்டுதான் தொடங்குகிறார்கள். பிராமணர்களுக்கு நமஹா சொல்லாமல் மீட்டிங் நடக்கும். பார்பான் பார்பான் என்று பார்பான் புராணம் பாடி மகிழ்ந்து அப்பாப்பா.

  சிலையை எதிர்த்த பெரியாருக்கு ரோடெல்லாம் சிலைகள் அதற்கு மாலை மரியாதை செய்து அமர்கலப்படுகிறது. சீரங்க ரங்கநாதரை ஐயங்கார்கள் டரிச்க்கிரார்களோ இல்லையோ ஜம்முன்னு பெரியார் தரிசனம் பண்ணிக்கொண்டே இருக்கார்.

  ஆக பெரியார் இப்போ ரோட்டிலே தான் இருக்கார். பெரியார் சாலை, பெரியார் பாலம், பெரியார் திடல், பெரியார் சிலை.

 14. ” பெரியாரின் பெயரை மறைக்க (அ) களங்கபடுத்த யாராலும் முடியாது “-

  ஆம் உண்மை தான். களங்கப்படுத்துவதற்கு பிறருக்கு எதுவும் பாக்கி வைக்காமல் தன்னையும் தன் சமுதாயத்தையும் அவர் போதிய அளவு களங்கப்படுத்திவிட்டார்.

 15. we should give a fitting reply to the comments of wheel chair ponam, and teru naai vul vul of tharuthalai sorinaaigal.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *