ஒவ்வொரு கணமும் அதிசயமாய் – உயிர்
உதிருவ தேயொரு பரவசமாய்
ஒவ்வொரு நிகழ்வும் பாடமுமாய் – அதில்
ஒவ்வொரு நொடியும் படிப்பினையாய்
ஒவ்வொரு துளியும் வெள்ளத்தின்
உடைந்து விடாத பேரூற்றாய்
ஒவ்வொரு நாளும் கடக்கிறது – ஏதோ
உள்ளே ஒன்று நடக்கிறது
அதுவா யிருந்தால் குறையில்லை
ஆரா யுங்கால் அழகில்லை
மதுவைக் கவிழ்க்க நினைப்பானேன்?
மணிபோல் மலரை அசைப்பானேன்?
பதுமைக் கென்னது பண்பாடு? பசி
பந்தியி லன்றோ கண்கூடு!
எதிரே தெரிவது அதுதானோ?
எதிரும் புதிருமாய் நான்தானோ?
எங்கோ இருப்பதில் என்னகுறை? அது
எதிரே சிரிப்பதில் என்ன நிறை?
தங்கா தம்மா ஆகாயம்! அது
தாங்கும்; அதற்கெது ஆதாரம்?
பொங்கா திருக்கும் புதுமையிலே
புரிந்தும் தொடரும் புதிரினிலே
மங்காக் காதல் கொண்டோமே!
மரண மிலாமல் கரைவோமே!
சொல்லுள் துலங்கும் மெளனத்தில்
சொக்கிப் போய்நாம் நிற்பதனால்
அல்லை ஒளியின் கருவென்று
அதில்நின் றேநாம் கண்டதனால்
புல்லே மரமாய் மலைக்கின்றோம்
புவியே மலராய் நுகர்கின்றோம்
எல்லை பொய்யோ மெய்தானோ?
இன்னும் எதற்கு இவ்வாதம்?
வீதிக ளில்லா வெளியினிலே ஒரு
விதியும் தொடாத விளிம்பினிலே
சோதிக ளாகத் தழுவுகிறோம்
உயிரில் உயிராய்ப் பெய்கின்றோம்
நீதிகள் சற்றே நிற்கட்டும் நாம்
நீலத் திண்ணையில் மல்லாந்தோம்
மீதிக் கதையின் விவரங்கள் உன்
மின்னல் வரிகளில் தொடரட்டும்!
நல்ல கவிதை; தொடர்ந்து எழுதுங்கள்.
அடா அடா அடா, அருமை, மிக அருமை. மிகுந்த சொல்லாற்றலும் பொருள் நயமும் ஆழ்ந்த அனுபவத்தினூடே எழும் கவித்துவமும் மயக்குகின்றதே!!