நான் கடவுள் பிதாமகன் வரிசையில் மற்றும் ஒரு ‘பாலா-ஃபார்முலா’ படம். ஆதாரமாக ஒரு விளிம்புநிலை கதாநாயகன் அதீதமான பலத்துடன் இருப்பான். அவன் இறுதியில் அநீதியைக் கண்டு பொங்கி எழுந்து தீயவர்களை அழிப்பான். படத்தில் தாங்க முடியாத சோகமும், மிக அழுத்தமான காட்சிகளும் நிரம்பிக் காண்போரைத் துயரக் கடலில் தள்ளும். விளிம்புநிலை மனிதன் கண்தெரியாத பாடகனாகவோ, மூளை வளர்ச்சியற்றவனாகவோ, சுடுகாட்டுக் காவல்காரனாகவோ இருக்கலாம். அடிப்படையில் அவன் மிகவும் பலசாலி. கடுமையான வன்முறைக் காட்சிகள் கட்டாயம் இருக்கும். அற்புதமான படப்பிடிப்பு, அருமையான இசை. மொத்தத்தில் காண்போரைக் கடும் மன அதிர்ச்சிக்கும், வேதனைக்கும், ஆழ்மனத் தாக்குதலுக்கும் உள்ளாக்குவதே பாலா ஃபார்முலா. இதன்படியே ‘நான் கடவுள்’ இருந்த போதிலும்கூட இந்தப் படம் பல்வேறு காரணங்களினால் அவசியம் பார்க்க வேண்டிய ஒரு முக்கியமான தமிழ்ப் படமாக அமைந்து விடுகிறது.
இதுவரை தமிழ் சினிமாக்களில் ஒரு சாமியார் கதாநாயகனாக வந்ததேயில்லை. வடுவூர் துரைசாமி ஐயங்காரின் ‘திகம்பர சாமியார்’ படத்தில் கூடப் பெயருக்குத்தான் நம்பியார் திகம்பர சாமியாரே தவிர அவர் உண்மையில் ஒரு துப்பறியும் சிங்கமே.
முதலில் கீழ்க்கண்ட இரு காரணங்களுக்காக என் பார்வையில் நான் கடவுள் படம் முக்கியத்துவம் பெறுகிறது.
ஒன்று, தமிழ் சினிமாவில் கதாநாயகி மாடு மேய்க்கும் பெண்ணாக இருந்தாலும் கூடச் செக்கச் செவேலென, தளதளவென்று, முடிந்தால் பஞ்சாப் தேசத்துக் கிளியாக இருப்பதும் தமிழ் சினிமாவின் முதல் இலக்கணங்களில் ஒன்று. தமிழுக்காகத் தன் மூச்சு, பேச்சு எல்லாவற்றையும் விட்டுவிடத் தயாராக இருக்கும் பாரதிராஜா, சீமான், சேரன் வகையறா அக்மார்க் திராவிடத் தமிழர்கள் கூட ஒரு கிராமப்புறத் தமிழ்ப் பெண் பாத்திரத்திற்குச் சுமாரான கரிய நிறமுடைய பெண்ணைக் கதாநாயகியாகப் போடத் துணிந்ததில்லை. அப்படிப்பட்ட தமிழ்த் திரைச்சூழலில், ஒன்றல்ல இரண்டல்ல நூற்றுக்கணக்கான குரூபிகளைப் படம் முழுவதும் க்ளோசப் காட்சிகளில் காண்பிக்க ஒரு தமிழ்ப் பட இயக்குனருக்கு அபாரத் துணிச்சல் வேண்டும். இவர்களை நான் காண்பித்தாக வேண்டும், அப்படித்தான் காண்பிப்பேன் என்று துணிந்த இந்த இயக்குனரை நான் பாராட்டுகிறேன். புற்று நோய் என்ற நோயின் பெயரைச் சொன்னாலே தனக்கும் அந்த நோய் வந்து விடும் என்று நினைக்கும் போலித்தனமான புதிய ‘பத்மஸ்ரீ’க்கள் இருக்கும் அதே சூழலில் இப்படியும் ஒரு இயக்குனர்.
இரண்டாவது, தமிழ் அறிவுச் சூழலிலும் சரி, திரையுலகிலும் சரி இந்துத் துறவிகளைக் கேவலமானவர்களாகவும் கேலிக்குரியவர்களாகவும் போலிகளாகவும், காமாந்தகர்களாகவும் காண்பிப்பது மரபாகவே இருந்து வருகிறது. அண்ணாதுரை ஆரம்பித்து வைத்த இந்த விஷமரபை இன்றைய விவேக்குகள்வரை தொடர்வது நின்றபாடில்லை. மிகவும் பிரபலமடைந்த ராகவேந்திரா போன்ற கடவுள் நிலையடைந்த பெருமான்களைக் காண்பிக்கும் சினிமாக்கள் மட்டுமே விதிவிலக்கு. பல்லாயிர வருடப் பாரம்பரியம் உடைய ரிஷிமரபைத் தொடரும் உண்மைத் துறவிகள் தமிழ் நாட்டுக்குள் நுழைந்து விட்டுப் பாதுகாப்பாக வெளியேறி விட முடியாது என்ற சூழல் திராவிட இயக்கக் கேன்சரால் அரிக்கப்பட்ட தமிழ் திரையுலகத்தால் உருவாக்கப் பட்டிருக்கிறது.
அதே நேரத்தில், கிறிஸ்துவப் பாதிரியார்கள் எப்பொழுதுமே தூயவர்களாகவும், கருணையும் அன்பும் ததும்புகிறவர்களாகவும் காண்பிக்கப் படுவதும் தமிழ்த் திரையுலகின் முக்கிய இலக்கணங்களில் ஒன்று. இந்து மதத் துறவிகளை நல்ல விதத்தில் தன் படங்களில் சித்தரிக்கத் துணிந்ததும், காசி நகரின் மேன்மையைத் துணிவாகப் பேசத் துணிந்ததும் மற்றொரு அசாத்திய துணிச்சலாகும். ‘பைத்ருக்கம்’ படத்தின் மூலம் இடதுசாரி சினிமாச் சூழலில் ஒரு புரட்சியை நிகழ்த்திய ஜெயராஜைப் போலவே திராவிட மூளைச்சலவை செய்யப்பட்ட தமிழ்த் திரையுலகில் துணிந்து துறவிகளை நல்ல முறையில் காண்பிக்கத் துணிந்த பாலா மற்றொரு மைல்கல்லைத் தொட்டிருக்கிறார்.
நான் கடவுள், பிச்சைக்காரர்களைக் கேலிப் பொருளாக்காமல், அவர்களது உலகை யதார்த்தமாகக் காண்பிக்கிறது. ‘டிராஃபிக் சிக்னல்’ படத்தில் வருவதுபோல அவர்கள் அனைவருமே ஏமாற்றுக்காரர்களாகவும் காண்பிப்பதில்லை. உண்மையான பிச்சைக்காரர்களையே கொண்டு, எந்தவித சமரசங்களும் செய்யாமல் காண்பிக்க முயன்றது இந்தப் படத்தின் வலு. படம் பார்த்தவர்களைப் பல நாட்கள் உறக்கம் இல்லாமல் செய்துவிடக் கூடிய வலுவான பாத்திரங்கள், காட்சி அமைப்புகள். உக்கிரமான ஒரு படம்; சந்தேகமேயில்லை. அத்தோடு நின்றிருந்தாலோ, அந்தப் பிச்சைக்காரர்களின் பிரச்சினைகளை மட்டுமே அலசியிருந்தாலோ இந்தப் படம் உலக அளவில் பேசப்படும் ஒரு படமாக ஆகியிருக்கும். இரண்டு விளிம்புநிலை மாந்தர்களைப் பற்றிப் பேசும் திரைக்கதை, அகோரி சன்யாசிகளைப் பற்றியும், பிச்சைக்காரர்களின் வாழ்வு பற்றியும் மிக ஆழமாகச் சிந்திக்க வைத்திருப்பது இந்தப் படத்தின் வெற்றி. அவர்கள் வாழ்க்கையிலும் சந்தோஷம், பாசம், அன்னியோன்யம் உண்டு என்ற உண்மையை, ஜெயமோகனின் ‘ஏழாம் உலகம்’ நாவலில் வருவதை, இந்தப் படம் பிரதிபலித்திருக்கிறது.
காசி நகரில் ருத்ரனின் அப்பாவும், தங்கையும் நகர் முழுவதும் ருத்ரனைத் தேடி அலைவது போல வைத்திருந்தால் காசியை இன்னும் மிக நெருக்கமாக, ஆன்மீகமாக மக்களிடம் கொண்டு சென்றிருக்கலாம். ஏனோ காசியில் ஆறு மாதம் கேம்ப் அடித்தும் ஹரிச்சந்திரா காட்டையும், அனுமன் காட்டையும், கங்கையையும் தாண்டிக் கேமரா போகவில்லை.
ருத்ரன் ஒரு சித்தர் பாடலைப் பாடுகிறார். தமிழ்ப் பாடல்களிடம் பரிச்சயம் காசியில் எவ்வாறு ஏற்பட்டிருக்கும் என்பதையும் லேசாகக் கோடி காட்டியிருக்கலாம். எல்லாம் துறந்துவிட்ட ருத்ரனின் மனதில் தன் பெற்றோர்களிடம் கோபமும் வன்மமும் கனன்று கொண்டிருப்பதாகக் காண்பிப்பதைத் தவிர்த்திருக்கலாம். “இத்தனை வருடமாகச் சாப்பிடாமலா இருந்த?” என்று ருத்ரன் தன் அம்மாவிடம் கேட்கும் கேள்வி அவரை ஓர் உயரமான பீடத்தில் இருந்து சாதாரண மனிதனாகக் கீழே இறக்கி விடுகிறது. ஆனால் ருத்ரனின் குரு ஒருவேளை இதுபோன்ற மிச்சம் மீதம் இருக்கும் கீழான உணர்வுகளையும் விட்டுவிடும் படித்தான் பணிக்கிறாரோ என்னவோ. அப்படிப் புரிந்து கொண்டால் ருத்ரனின் கோபம் அவரிடம் மிஞ்சியிருக்கும் குறைபாடாக, களையப்பட வேண்டியதாக, உணர்த்தப்படுகிறது எனக் கொள்ளலாம்.
கைகால்கள் இல்லாத ஒரு சித்தரைப் பிச்சைக்காரர்கள் வணங்கி வருகிறார்கள். (இவரைப் போலவே ஒரு நிஜ சித்தர் விழுப்புரத்தில் இருந்திருக்கிறார். கொல்லிமலை சாமியாரின் குரு. இப்போது உயிருடன் இல்லை). யாரையும் கண் திறந்து பார்க்காத, யாரிடமும் பேசாத அவர் ருத்ரன் ‘அஹம் ப்ரஹ்மாஸ்மி’ என்று தொடங்கி நீளமான சமஸ்கிருத ஸ்லோகம் ஒன்றைச் சொன்னதும் கண்திறந்து பார்க்கிறார். காலில் விழுந்து கதறி அழும் பெண்ணிடம் ‘ருத்ரனிடம் போ’ என்று வாய் திறந்து பேசுகிறார். ருத்ரன் போன்ற அகோரிகளுக்கு நல்லவர் யார், கெட்டவர் யார் என்று உணர்ந்து கொள்ளும் சக்தி இருப்பதாகக் காட்டப்படுகிறது. துஷ்டர்களை ருத்ரன் ஸ்லோகங்கள் சொல்லியபடி அழிக்கிறார்.
எல்லாம் துறந்த சாமியாருக்கு ஏன் குருவிடம் பந்தம் என்று ஒரு சிலர் அபத்தமான கேள்வி எழுப்பியிருக்கிறார்கள். எல்லாம் துறந்த ரிஷிகள் ஞானகுருவையும் கட்டாயமாகத் துறக்க வேண்டும் என்பதாக எந்த சாஸ்திரத்தில் இந்த மேதாவிகள் படித்தார்கள் என்பது தெரியவில்லை. அறியாமையில் பிறக்கும் அபத்தக் கேள்விகளைப் பகுத்தறிவாக அறியும் அபத்தம் தமிழ் நாட்டில்தான் உண்டு. ருத்ரன் குருவின் கட்டளையை மேற்கொள்வதிலும் மீண்டும் குருவிடம் தஞ்சமடைவதிலும் எவ்விதத் தவறும் இல்லை.
படத்தின் ஜீவன் உடல் ஊனமுற்ற, மனநிலை குன்றிய, குரூர முகம் கொண்ட அந்த ஜீவன்கள்தாம். ஒவ்வொருவரிடமும் தன் அன்பால் வேலை வாங்கியிருக்கிறார் பாலா. பிரமாதமான நடிப்பு. ஒவ்வொரு முகமும் வாழ்நாளில் மறக்க முடியாதபடி நிரந்தரமாகப் பதிந்து விடுகிறது. பிச்சை எடுத்துக் கஷ்டப்படும் அவர்களது வாழ்க்கையை மிக வித்தியாசமான கோணத்தில் காண்பிக்கிறார் பாலா. அடுத்த முறை இந்த ஜீவன்களை நாம் கோவில் வாசலிலோ, மலைப்படிகளிலோ, தெருவிலோ, பஸ்ஸ்டாண்டிலோ, ரெயிலிலோ பார்க்கும் பொழுது நம் பார்வை வேறாக இருக்கும். இந்தப் படத்தின் மிகச் சிறந்த சாதனை இதுதான்.
படத்தின் அடுத்த வலு ஜெயமோகனின் வசனங்கள். மிக உக்கிரமான ஒரு படத்தை லகுவாக்கிக் கொஞ்சம் சிரிக்கவும் வைப்பது அவரது வசனங்களே. வசனம் படத்துக்குப் பெரும்பலம். கருத்தாக்கத்திலும் ஜெயமோகனின் பங்கு பெருமளவு இருப்பது தெரிகிறது. உக்கிரத்துக்கு உக்கிரம், கேலிக்குக் கேலி. சில நையாண்டிகள் வெளியில் சத்தமாகக் கேட்டு விட்டால் ஏதும் பிரச்சினை வந்துவிடுமோ என்ற ஜாக்கிரதை உணர்வில் வசனங்களை இசை கொண்டு அமுக்கியிருக்கிறார்கள். பல வசனங்கள் வரும் காட்சிகள் வெட்டப் பட்டுள்ளன, ஊமைப்படுத்தப் பட்டுள்ளன.
கண்ணில்லாத பிச்சைக்காரி ருத்ரனிடம் கேட்கிறாள்: “எல்லாப் புகழும் இறைவனுக்கேன்னு சொல்ற அல்லா சாமி கூட என்னை மாதிரி கண் தெரியாத பிச்சைக்காரிய கஷ்டப்படுத்ததான் விரும்புதா? ஏசு சாமி என்னைக் கைவிட்டுடுச்சு… தெருவுக்குத் தெரு இருக்கற பிள்ளையார், காளியாத்தா, மாரியாத்தா ஒரு சாமி கூட என்னைக் காப்பத்தலியே? நீதான் சாமி என்னைக் காப்பாத்தணும்.” தன்னை ‘காலபைரவன்’ என்ற இந்துக்கடவுளின் அம்சம் என்று சொல்லிக்கொள்ளும் ருத்ரன் அவளைக் காக்கிறான். இதில் அல்லா சாமி என்ற இடம் வரும்பொழுது இசை பொங்கி வசனத்தை அமுக்குகிறது. இந்துக் கடவுள்களையோ, இந்துக்களில் குறிப்பிட்ட ஒரு சமூகத்தினரையோ குறித்து எவ்வளவு கேவலமாக வசனம் பேசினாலும் அதை அனுமதிக்கும் சென்சார் போர்டு, இந்த வசனங்களை கவனமாக அமுக்குவது அவர்களுக்கிருக்கும் மனச்சாய்வையே காட்டுகிறது. நல்ல தொடைநடுங்கி செக்யூலரிஸம்!
“இவரு பெரிய அம்பானி. அம்பானின்னா? அதெல்லாம் உனக்கு எங்க தெரியப் போகுது இந்த செல் ஃபோன் விக்கிறவரு.”
“நாங்களும் கொஞ்சம் பொழச்சிக்கிடுவோமில்ல, நாங்கள்ளாம் எப்ப முதலாளியாகி, எப்ப தொழிலதிபராகி எப்ப நடிகையை கல்யாணம் செய்யிறது?”
என்பது போலப் படம் முழுக்க ஜெயமோகனுக்கே உரிய நையாண்டி வசனங்கள். காசியைப் பற்றிச் சொல்லும் முதல் அறிமுகத்திலேயே ஜெ.மோ.வின் முத்திரை விழுந்து விடுகிறது.
“தர்மம் தலை காக்கும் என்று நம்பி நமக்குப் பிச்சை போடுகிறவர்களின் நம்பிக்கைக்கு உறுதுணையாக நாம் இருக்கிறோமே” என்று கண்ணில்லாத அம்சவல்லி சொல்வது அழுத்தமான வசனம். இந்தியா போன்ற வறுமை நிறைந்த நாட்டில், உடல் ஊனமுற்றோரும், மன நோயாளிகளும் ஆதரவற்றோரும் வேறு எந்த நாட்டையும்விட அதிக எண்ணிக்கையில் இருக்கும் நிலையில் எந்தவிதமான அரசாங்க உதவியும் அவர்களைக் காக்க முடியாது. சேவை நிறுவனங்களும் கூட எல்லோர் தேவைகளையும் பூர்த்தி செய்ய முடியாது. கோடிக்கணக்கான அநாதரவான மக்களுக்கு அன்றாடம் உணவு வழங்கி அவர்களையும் வாழ வைப்பது அந்த விளிம்புநிலை மனிதர்களிடமிருந்து உபகாரமாக மதமாற்றத்தையோ பிற உதவிகளையோ எதிர்பாராத தர்மத்தின்பாலான நம் நம்பிக்கைதானே? அதைப் படம் பார்ப்பவர்கள் மனதில் பதியவைப்பது அந்த ஜெயமோகனின் அழுத்தமான வசனம். அமெரிக்கா போல சோஷியல் செக்யூரிட்டி வழிமுறைகள் இல்லாத இந்தியாவில் அதற்கு மாற்றான பாதுகாப்பை வழங்குவது நம் பண்பாடும், நம்பிக்கைகளும், தர்மம் தலைகாக்கும் என்ற இந்து தர்மமும்தானே?
எரியும் பிணங்களும் கோவண சாமியார்களும், கஞ்சாவும் மட்டும்தான் காசியா? அகோரிகளை மையமாக்கியதாலோ என்னவோ அவற்றிற்கு மட்டும்தான் அழுத்தம் தரப்பட்டிருக்கிறது. காசி என்ற படிமம் பிரதியெடுக்கப்பட்ட விதத்தில் எனக்கு முழுமை தென்படவில்லை.
காசி முக்தி அளிப்பது. ஆனால் இயக்குனர் பாலாவைக் காசி ஏதோ ஓர் ஆழத்தில் பிணைத்திருக்கிறது. காசி என்ற பாத்திரம் குருட்டுக் கதாநாயகனானது ஒரு படத்தில் என்றால், அந்த நகர் குருட்டுக் கதாநாயகனை உருவாக்குகிறது இந்தப்படத்தில். ஆனால் இது வேறுவிதக் குருடு. லௌகீகத்தைப் பார்க்க மறுக்கும், பந்தங்களிலிருந்து விடுதலையாகத் துடிக்கும் குருடு. இந்தக் குருடு ஒரு லௌகீகக் குருடியைக் காப்பதில் விழித்துக்கொண்டு தன்னைக் கண்டு கொள்கிறது.
ஆர்தர் வில்சனின் கேமரா காட்சிகளுக்குத் தேவையான உணர்வுகளை ஊட்டுகிறது. பாதாளக் கோவிலின் லைட்டிங், கழைக் கூத்தாடியின் கீழிருந்து காண்பிக்கும் வானம், சுடுகாட்டு நெருப்பின் ஜுவாலைகள், நதியின் பாய்ச்சல், சண்டைக் காட்சிகளின் வேகம் என்று ஒவ்வொன்றையும் மெருகேற்றிக் காண்பிக்கிறார். தியேட்டரில் பார்த்தால் மட்டுமே ஒவ்வொரு ஃப்ரேமிலும் மிளிரும் அழகை ரசித்து அனுபவிக்க இயலும். போலீஸ் ஸ்டேஷன் காட்சிக்குக்கூட வித்தியாசமான கலரையும் லைட்டையும் பயன்படுத்தியிருக்கிறார். “இனி நான் நினைத்தால் கூட அதேபோல காட்சிகளை என்னால் எடுக்க முடியாது” என்கிறார் அவர். உண்மைதான்.
சென்சாரின் கடுமையான வெட்டுக்களினால் ஒருசில இடங்கள் தொடர்பு இல்லாமல் தொங்குகின்றன. சிறுபான்மையினர் மனது புண்படக் கூடாது என்பதற்காக மாதாகோவில் காட்சியை அரைகுறையாகக் காண்பித்தாற் போலத் தெரிகிறது. பல வசனங்களிலும் கை வைத்திருக்கிறார்கள். குறிப்பாக நாயரின் பிணத்தை அகோரி என்ன செய்தார் என்பது பார்வையாளர்களுக்குப் புரியாமலேயே போய் விடுகிறது. அந்த வசனம் விழுங்கப் பட்டதன் காரணமாக அந்தப் பாத்திரம் ஏற்படுத்தியிருக்க வேண்டிய அதிர்ச்சி ரசிகர்களிடம் எற்படாமலேயே போய்விடுகிறது. இதைப் போலவே அம்சவல்லி எப்படி கன்னிகாஸ்தீரிகளிடம் அடைக்கலமாகி மதம் மாற்றப்படுகிறார், எப்படி வெளிவருகிறார் என்பவையெல்லாம் வெட்டப்பட்டு படம் கோர்வையிழந்து விடுகிறது.
இறுதிக் காட்சியில் பிறப்பும், இறப்பும் துன்பம் என்று பிறப்பிறப்பில்லாத பெருவாழ்வு கேட்கும் ஞான நிலையை அடைந்து அம்சவல்லி விடுதலை கேட்கிறார். அந்த விடுதலையைத் தன் துறவு நியாயத்தின்படி அகோரி சாமியார் வழங்கி விடுகிறார் என்று புரிந்து கொள்வது சாதாரண ரசிகர்களுக்கு அத்தனை எளிதான காரியமில்லை. அதற்கான அதிகப்படியான வசனங்கள் சில அங்கே வைக்கப் பட்டிருக்க வேண்டும். ஆனால் அம்சவல்லி பேசும் குறைந்தபட்ச வசனங்கள் கூட ஒழுங்காகக் கேட்காமல் அமுக்கப்படுகின்றன. இயக்குனர் கடும் நிர்பந்தத்தில் அந்த வசனங்களை மூடி மறைத்திருக்கிறார் என்பது புரிகிறது. மதமாற்ற அரசியல் செய்யும் வந்தேறி மதங்களுக்கு ஒத்தூதும் அரசியல் கட்சிகளின் ஆதிக்கம் இந்தியாவில் இருக்கும்வரை உண்மைகளைப் பேசப் படைப்பாளிகளுக்குச் சுதந்திரம் இருக்காது என்பதை இந்தப் படம் மீண்டும் நிரூபிக்கிறது.
இளையராஜா பின்னணி இசையில் அழுத்தமாக இன்னொரு முறை தன் மேதைமையை நிரூபித்திருக்கிறார். ஏதோ சிம்ஃபனியைப் போலிருக்கும் ஒரு இசைக்கோர்வை சண்டைக் காட்சியில் பின்னணி இசையாக வருகிறது. ஒரு சண்டைக் காட்சிக்காக இத்தனை மெனக்கெடலா என்று தோன்றுகிறது. பாடல்கள் எல்லாம் ஏற்கனவே கேட்ட உணர்வை அளிக்கின்றன. பின்னணி இசை படத்துடன் பரிபூரணமாக இணைந்து விடுவதால் பிரித்து உணர முடிவதில்லை. இதைப் போன்ற ஒரு கருவுடைய குரு” என்ற ஒரு மலையாளப் படத்திற்கு (அந்தப் படத்தில் கதாநாயகன் மோகன்லால் ஒரு மாய உலகிற்கு ஒரு இந்துத் துறவியினால் எடுத்துச் செல்லப் படுவார், அந்த உலகில் இருக்கும் மனிதர்கள் எல்லோரும் பிறவியிலேயே குருடர்களாக இருப்பார்கள், இங்கு விடுதலை வேண்டி நிற்கும் பிச்சைக்காரர்கள் அங்கே குருடர்கள்) இளையராஜா அமைத்த பின்ணணி இசை இன்றும் பேசப்படுகிறது. அதுபோலவே இந்தப் படத்திற்கும் இளையராஜாவின் இசை ஒரு தூண்.
ஒரு சில குறைபாடுகளும் இல்லாமல் போகவில்லை.
ஆன்மீக விடுதலை ஜெமோவுக்கும், அவல விடுதலை பாலாவிற்கும் முதன்மையானதில், அவல விடுதலையை ஆன்மீக விடுதலையாகப் புரட்டிப்போட்டு அதன்மேல் ஏறி உட்கார்ந்து பாலா அலட்சியமாக பீடி குடிப்பதாக எனக்குள் ஒரு பிம்பம் விரிந்தது. ஜெமோ செகண்டரி ஸ்மோக் பிடிக்காது என்று அங்கிருந்து போயிருந்தார்.
பிச்சைக்கார மாஃபியாவின் தலைவன் போலீசையே தன் கைக்குள் வைத்திருக்கும், சகல வல்லமை உள்ள ரவுடி. அவனிடம் நிறைய அடியாட்கள் இருக்கிறார்கள். ஒரு சாதாரண சன்யாசியிடம் அவன் நாயடி வாங்குவது முற்றிலும் சினிமாத்தனம். இங்கும் இந்தப் படம் பிற யதார்த்தப் படங்களில் இருந்து விலகிச் சென்று படத்தின் நம்பகத்தன்மையைக் குறைக்கிறது. ருத்ரன் தன் ஆன்ம பலத்தால் எதிரிகளை பலமிழக்கச் செய்வதாகக் காட்டியிருந்தால் கொஞ்சம் அர்த்தம் இருந்திருக்கும். உதாரணமாக போலீசார் உத்ரனிடம் பயப்படுவது அவரது ஆன்ம பலத்திற்கும் அஞ்சியே என்பது போலக் காண்பித்திருக்கிறார். ருத்ரன் இருக்கும் பாழடைந்த மண்டபத்திற்குள் செல்லும் முன்னர் அந்தப் போலீஸ்காரர் தன் ஷூக்களைக் கழட்டி வெளியே விட்டுவிட்டுச் செல்வது அயோத்தியில் ராணுவத்தினரும் போலீசாரும் பவ்யத்துடன் தங்கள் காலணிகளைக் கழட்டி விட்டு ராமலாலாவை வணங்கக் கோவிலுக்குள்ளே செல்லும் காட்சியை நினைவு படுத்துவதைத் தவிர்க்க முடிவதில்லை.
மூன்று கொலைகளைப் பட்டப் பகலில் நூற்றுக்கணக்கானோர் முன்பாகச் செய்த பின்னரும் கூட போலீசார் கண்களில் படாமால் சாவகாசமாக ருத்ரனால் ரெயில் பிடித்துக் காசிக்குப் போய்த் தன் குருநாதரை அடைய முடிகிறது. இதுவும் ஒரு யதார்த்த ஓட்டையே.
பந்தங்களை அறுத்தெறிந்து விட்டு வரும்படி குரு ருத்ரனைச் சொல்லி அனுப்புகிறார். அதை எப்படி ருத்ரன் செய்தார் என்பது குறித்து எந்தவிதமான காட்சிகளும் இல்லை. அப்பா, அம்மாவிடம் கோபம் கொள்வதும், வீட்டிற்கு வர மறுத்து பழனி மலை முருகன் போலக் கோவணத்துடன் மலை மீது உட்கார்ந்து கொண்டு கஞ்சா அடிப்பதும் மட்டும்தான் பந்தங்களை அறுப்பதா என்ன? அதைக் காசியிலேயே செய்து தொலைத்திருக்கலாமே? அதற்கான உரிய காட்சிகளோ வசனங்களோ வைக்கப் படவில்லை என்பது மற்றும் ஒரு குறை.
இந்தச் சிறுசிறு குறைகளை மீறியும் இந்தப் படம் ஆழ்ந்த தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய ஒரு வலுவான படமாக அமைந்திருப்பது அந்த அகோரி சன்யாசிகளின் ஆசீர்வாதத்தினாலும் கூட. படத்தைப் பற்றிய ஒரு கலைஞர் டி.வி. நிகழ்ச்சியில் ஏராளமான சாமியார்கள் பாலாவுக்கு ஆசீர்வாதம் செய்வதைக் காண்பித்தார்கள். கருணாநிதியால் வழக்கமாகப் பண்டாரம், பரதேசி என்று விமர்சிக்கப்படும் இமயமலைச் சாமியார்கள் ஜடாமுடியுடன் தோன்றி பாலாவுக்கு ஆசீர்வாதம் செய்த காட்சிகள் காண்பிக்கப்பட்டன. அந்த அருள் பூரணமாக இந்தப் படத்தில் இறங்கியுள்ளது தெளிவு.
நான் கடவுள் படத்தை அவசியம் பாருங்கள்.
//ஆன்மீக விடுதலை ஜெமோவுக்கும், அவல விடுதலை பாலாவிற்கும் முதன்மையானதில், அவல விடுதலையை ஆன்மீக விடுதலையாகப் புரட்டிப்போட்டு அதன்மேல் ஏறி உட்கார்ந்து பாலா அலட்சியமாக பீடி குடிப்பதாக எனக்குள் ஒரு பிம்பம் விரிந்தது.//
Nice!
அருமையான ஆய்வு, சுவாமி ஓம்காரின் கட்டுரையும் பார்க்க வேண்டுகிறேன்
https://vediceye.blogspot.com/2009/02/blog-post_15.html
விளிம்பு நிலை மக்களைக் குறித்துப் படம் எடுக்கும் மற்றவர்களிடம் இருந்து பாலா வேறுபடுபவர். இவர் எடுக்கும் படங்களில் விளிம்பு நிலை மக்கள் மனிதர்களாகக் காட்டப்படுவர். மற்றவர் படங்களில் விளிம்பு நிலை மக்கள் மிருகங்கள், அல்லது மிருகங்களைவிடக் கேவலமானவர்கள்.
கிருத்துவ பாதிரிகளும் இஸ்லாமிய முல்லாக்களும் ஆளும்வர்க்கத்தைச் சேர்ந்து அகில உலகப் புனிதர்களாக மாறிவிட்டதால், ஹிந்து சாமியார்கள் விளிம்பு நிலை மனிதர்களாக வாழுகிறார்கள். விளிம்பு நிலை மனிதர்களாக இருப்பதால்தான் ஹிந்து சாமியார்களைப் பற்றி பாலா படம் எடுத்துள்ளார். அவர்காட்டும் விளிம்புநிலை மனிதர்கள், மனிதர்களாக இருப்பதால் இந்தப் படத்தில் காட்டப்படும் சாமியார்களும் நல்லவர்களாக இயல்பான நல்ல குணங்களுடன் உள்ளனர். பழகிப்போன பிரச்சாரங்களுக்கு மாறாக, ஹிந்து சாமியார்கள் நல்லவர்கள்தான் என்ற உண்மையைப் படம் வெளியிடுகிறது.
//ருத்ரன் ஒரு சித்தர் பாடலைப் பாடுகிறார். தமிழ்ப் பாடல்களிடம் பரிச்சயம் காசியில் எவ்வாறு ஏற்பட்டிருக்கும் என்பதையும் லேசாகக் கோடி காட்டியிருக்கலாம்.//
இந்த சீன் இடிக்கவில்லையே. ருத்ரன் வீட்டிற்குத் திரும்பி வந்தாலும், வீட்டில் வாழவில்லை. கோயிலின் இடிந்த மண்டபத்தில் பிச்சைக்காரர்களுடனும் சாமியார்களுடனும் வாழுகிறார். பிச்சை எடுப்பதற்காக சாமியார் வேஷம் போட்ட மனிதர்கள் யாரேனும் சித்தர் பாடல்களைப் பகிர்ந்து இருக்கலாம்.
//“இத்தனை வருடமாகச் சாப்பிடாமலா இருந்த?” என்று ருத்ரன் தன் அம்மாவிடம் கேட்கும் கேள்வி அவரை ஓர் உயரமான பீடத்தில் இருந்து சாதாரண மனிதனாகக் கீழே இறக்கி விடுகிறது.//
இல்லை. ருத்ரன் அவன் அம்மாவிடமும், நம்மிடமும் கேட்கும் கேள்வி இது. இத்தனை நாட்களாக சாப்பாட்டை மறக்கடிக்கச் செய்யாத தாய்ப்பாசம், திடீரென்று சாப்பாட்டையும் மறக்கச் செய்துவிட்டதா? அருகில் இருந்தால் பீறிட்டு எழும் இந்தத் தாய்ப்பாசம், மகன் தாயைவிட்டுப் பிரிந்து தூரத்திற்குச் சென்றுவிட்டதால் ஏன் தீவிரம் குறைந்து போனது? இந்தத் தாய் பாசம் நிஜம்தானா? அல்லது மனித மனத்தின் குழப்ப விளையாட்டா?
இந்தக் கேள்வியின் மூலம் தன் தாய் அவளுடைய உணர்வுகளை தானே ஆராய ஆரம்பிக்க ருத்ரன் உதவி செய்திருக்கிறார். ஹிந்து சாமியார்கள் செய்யும் இயல்பான பணிதான் இது. எனவே, ருத்ரன் சாதாரண மனிதராகச் சரியவில்லை. சாமியாராகப் பொருந்துகிறார்.
//ஆனால் ருத்ரனின் குரு ஒருவேளை இதுபோன்ற மிச்சம் மீதம் இருக்கும் கீழான உணர்வுகளையும் விட்டுவிடும் படித்தான் பணிக்கிறாரோ என்னவோ. அப்படிப் புரிந்து கொண்டால் ருத்ரனின் கோபம் அவரிடம் மிஞ்சியிருக்கும் குறைபாடாக, களையப்பட வேண்டியதாக, உணர்த்தப்படுகிறது எனக் கொள்ளலாம். //
ருத்ரன் கோபப்படவே இல்லை. அவரது இயல்பை நாம் கோபமாகப் புரிந்துகொள்கிறோம். வள்ளலாரைப் பார்த்து “மனுசன் வரான்” என்று சொன்ன சித்தர் ஒருவர் மற்றவர்களைப் பார்த்து “நாய் வருது” “பன்னி வருது” என்று ஆட்களுக்கு ஏற்றாற்போல அழைப்பாராம். இதனால் அவரை கோபக்காரர் என்று மக்கள் நினைத்தார்கள். ஆனால், இது கோபம் இல்லை. நேர்மையான கேள்விகள் கேட்கும் ஒருவரை மக்கள் கோபக்காரர் என்று நினைப்பது அவர்கள் நிலையில் இருந்து எழும் தவறான புரிதல்.
//ஆன்மீக விடுதலை ஜெமோவுக்கும், அவல விடுதலை பாலாவிற்கும் முதன்மையானதில், அவல விடுதலையை ஆன்மீக விடுதலையாகப் புரட்டிப்போட்டு அதன்மேல் ஏறி உட்கார்ந்து பாலா அலட்சியமாக பீடி குடிப்பதாக எனக்குள் ஒரு பிம்பம் விரிந்தது. ஜெமோ செகண்டரி ஸ்மோக் பிடிக்காது என்று அங்கிருந்து போயிருந்தார்.//
கலக்கலான விமரிசனம். 🙂 !
ஆனால், படம் பார்க்க வருபவர்கள் அவல விடுதலையைத் தேடி வருவதால், ஆன்மீக விடுதலையை அவர்களுக்கு இந்தப் படம் கொடுக்கவில்லை. அப்படிக் கொடுத்திருந்தால், ஜெயமோகன் ப்ரம்மத்தை ப்ரம்மத்தால் அடித்துக்கொண்டு தியேட்டருக்கு உள்ளேயே இருந்திருப்பார். மற்றவர்கள் அனைவரும் ப்ரம்மா அடிக்க தியேட்டருக்கு வெளியே போயிருப்பர்கள்.
(பின் குறிப்பு: ப்ரம்மா என்பது பிரேசில் நாட்டில் கிடைக்கும் பீர். ஹிந்துக்களைப் பற்றியோ, ஹிந்து மதம் பற்றியோ எதுவும் தெரியாத ஆனால் லத்தீன் அமெரிக்காவைப் பற்றி அனைத்தும் தெரிந்த சாரு நிவேதிதா அறியாத லத்தீன் அமெரிக்க மது பானம். விளிம்பு நிலைக்குத் தள்ளப்படும் ஹிந்துக்களைப் போல விளிம்பு நிலை பீர் என்று வைத்துக்கொள்ளுங்களேன். பீரின் பெயர் ராசி அப்படி.)
(முக்கியமான பின் குறிப்பு: இந்த பீர் மங்களூரில் கிடைக்காது.)
//பந்தங்களை அறுத்தெறிந்து விட்டு வரும்படி குரு ருத்ரனைச் சொல்லி அனுப்புகிறார். அதை எப்படி ருத்ரன் செய்தார் என்பது குறித்து எந்தவிதமான காட்சிகளும் இல்லை. அப்பா, அம்மாவிடம் கோபம் கொள்வதும், வீட்டிற்கு வர மறுத்து பழனி மலை முருகன் போலக் கோவணத்துடன் மலை மீது உட்கார்ந்து கொண்டு கஞ்சா அடிப்பதும் மட்டும்தான் பந்தங்களை அறுப்பதா என்ன? அதைக் காசியிலேயே செய்து தொலைத்திருக்கலாமே? //
ஜெயமோகனும், பாலாவும் இணையும் புள்ளி இது.
படத்தின் ஒரு காட்சியில்கூட ருத்ரன் எந்தப் பந்தத்திலும் சிக்கித் தவித்து பின் விடுபடவில்லை. அவர் விடுதலை பெறவில்லை. விடுதலை தருகிறார். தனது தாய்க்கு, கதையின் கதா நாயகிக்கு, வில்லன்களிடம் இருந்து விளிம்பு நிலை மனிதர்களுக்கு எனப் பலருக்கும் விடுதலை தருகிறார்.
எனவே குரு சொன்னபடி அவர் பந்தங்களை அறுத்தெரிகிறார். அதாவது அடுத்தவர்களுடைய பந்தங்களை.
அஹம் ப்ரஹ்மாஸ்மி என்றுணர்ந்து அகோரிகளாக மாறியவர்களுக்கு பந்தம் இருந்தால்தானே அறுத்தெரிய முடியும்?
பாலா சரியாகப் புரிந்துகொண்டிருக்கிறார் என்றே எண்ணுகிறேன்.
ஹிந்து மதச் சாமியார்கள் மனிதர்களின் பிரச்சினைக்காக எந்த சுயலாபமும் எதிர்பாராமல், நேர்மையாகப் பணி செய்பவர்கள். அவர்கள் சுயலாபம் தேடாமல், நேர்மையாகப் பணி செய்வதால்தான் விளிம்புநிலை மனிதர்களாக மாறி, பெரும்பான்மை மக்களின் ஏளனத்திற்கு உள்ளாகிறார்கள். அவர்கள் அது குறித்துக் கவலைப்படுவதில்லை. “டாவின்ஸி கோட்” போன்ற படத்திற்கு தடைவிதிக்கக்கோரி நடந்த அபத்த நாடகங்களை நடத்துவதில்லை.
இந்திய சுதந்திரப் போராட்டத்தின் மிகப் பெரும் எழுச்சிகளை சாமியார்கள்தான் நடத்தியுள்ளார்கள். விளிம்பு நிலை மக்களுக்கும், தலித்துகளுக்கும் வாழ்வில் ஏற்றத்தைத் தந்த பலர் ஹிந்து சாமியார்களாகவே இருக்கிறார்கள். ஏனெனில், எல்லாரிடமும் இருக்கும் இறையை புரிந்தவர்கள் அல்லது புரிந்துகொள்ள வாழ்பவர்கள் இவர்கள்.
அதனால்தான் தெருவிற்கு தெரு இருக்கிற சர்ச்சுகளிடம் இருந்தோ, மசூதிகளில் இருந்தோ, கோயில்களில் இருந்தோ கிடைக்காத உதவி, “நான் கடவுள்” என்று சொல்லுகிற உயிருள்ள மனிதனிடம் இருந்து விளிம்பு நிலை மனிதர்களுக்குக் கிடைப்பதாக இந்தப் படம் காட்டுகிறது.
ஒரு ஹீரோவிற்கும் ஹீரோயினுக்கும் நடுவில் இருக்கக்கூடியது காதல் மட்டுமே, அல்லது பார்வையாளர்கள் ஏற்றுக்கொள்ளாத ஒருவித ப்ளாட்டோனிக் லவ் மட்டுமே என்ற பிம்பத்தை முதன் முதலில் உடைத்தெரிந்த படம் இது. இப்படத்தின் மிக முக்கிய வெற்றிகளில் ஒன்று இப்படிப்பட்ட உறவு சாத்தியம்தான் என்பதைப் படம் பார்க்கிறவர்கள் கேள்வி கேட்காமல் ஒத்துக்கொள்வது. ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் நடுவில் பலவகையான உறவுகள் சாத்தியம் என்பதைப் படம் பார்ப்பவர்கள் புரிந்துகொண்டிருக்கிறார்கள். அந்த உறவுகளில் பல காமம் ஊடுருவாத இயற்கையான உறவுகள்.
வாழ்க்கை என்பது உறவுகள்தான். அவற்றை ஒரேவிதச் சாயம் கொண்டு பெயிண்ட் அடிக்கும் ஆபிரகாமிய மனப்பான்மையை சுக்கு நூறாக்கி எறிந்த ஹிந்துத்துவ படம் இது.
படத்தின் கதாநாயகரான ருத்ரன் துன்பப் படுபவர்களுக்கு விடுதலை அளிக்கிறார். வழக்கமான தமிழ்ப் படங்களில் இருந்து படம் பார்ப்பவர்களுக்கு பாலா விடுதலை அளிக்கிறார்.
இதுவரை இந்தியாவில் இப்படிப்பட்ட படம் வந்தது இல்லை. இனிமேலும் வராது.
சத்துள்ள மசாலா படம்.
அரபு எமிரேட்சில் (UAE) திரைப்படம் அனியாயமாக தடை செய்யப்பட்டுள்ளது.
பாலாஜி…
நல்ல விமர்சனம்..
பந்தத்தை அறுத்தல் பாசத்தை அறுத்தல் அல்ல. உண்மையில் பாசம் அளவற்று, எல்லையற்று எல்லா மனிதர்கள் மேலும், எல்லா மாக்கள் மீதும், பிரபஞ்சத்தின் மீதும் விரியும்போது, ஒரு குறிப்பிட்ட சிலரின் மேல், சிலதின் மேல் உள்ள பற்று அறுபடுகிறது. குரு பிரம்மா, குரு விஷ்ணு, குரு சாட்ஷாத் பரப்பிரமம் ஆகையினால் குருவை நோக்கிச் செல்வது பரப் பிரம்மத்தை நோக்கிச் செல்வதே. அற்றது பற்றெனின் உற்றது வீடு இல்லையா? அதனால் குருவான பரப்பிரமத்தை நோக்கிச் செல்ல பந்தத்தை அறுத்துவிட்டு வா என்பது மிகச்சரியானது.
விட்டால் சில பகுத்தறிவு எழுத்தாளர்கள் ‘இந்து மதத்தின் மேல் “பற்று” உள்ளதால் இந்துக்கள் இந்துக்களே இல்லை’ என்று கூட சொல்வார்கள்.
டெண்டுல்கரே எல்லா ரன்னையும் அடிக்கற மாதிரி இப்படி கிருஷ்ணபுத்ரனே எல்லாரோட கருத்தையும் எழுதிட்டா நாங்க என்ன பண்றது? :=)
கார்கில் ஜெய்
நல்ல விமர்சனம். ஆனால் முழுமையான விமர்சனம் என்று சொல்ல முடியாது. படத்தில் காட்டப்படும் பிச்சைக்காரர்கள் பேசும் வசனங்கள் சில தேவையற்றவை. எரிச்சலூட்டுபவை. செயற்கையானவை. அதுவும் அந்த போலீஸ் ஸ்டேஷன் காட்சி அபத்தத்தின் உச்சம். மூன்றாம் தர ஆடியன்ஸூக்காக வலிந்து புகுத்தப்பட்டிருக்கிறது அக்காட்சி. நடு நடுவே வரும் பழைய சினிமா பாடல்கள் பார்வையாளன் படத்தோடு ஒன்றுவதைத் தடுக்கின்றது. ஆன்மீகம், லௌகீகம் என இரண்டையும் போட்டுக் குழப்பிக் கொண்டு படம் எடுக்கப்பட்ட மாதிரி இருக்கிறது.
காசியை இன்னமும் அதிக நேரம் காட்சிப்படுத்தியிருக்கலாம். சாமியார்கள் பற்றி, அவர்களது அன்றாட வேலைகள், வாழ்க்கை முறைகள் பற்றி இன்னமும் சற்று விரிவாகக் காட்டியிருக்கலாம். அதுவும் காசியில் ருத்ரனின் சிறுவயது முதல் அவன் அங்கேயே வளர்ந்து பெரியவனாவது வரை சில சம்பவங்களை, அவனது வாழ்க்கை முறையை இன்னமும் சற்று அழுத்தமாகக் காட்டியிருந்தால் ’ருத்ரன்’ பாத்திரத்திற்கும் இன்னம் அழுத்தம் கூடியிருக்கும். ருத்ரனின் அப்பாவாக வருகிறவர் இப்படி ஒரு கையாலாகாத பாத்திரமாக இருப்பதை ஏற்க இயலவில்லை. பையனை ஊருக்குக் கூட்டிக் கொண்டு வந்து விட்டதுடன் அவர் கடமை முடிந்து விடுவது கொடுமை.
எல்லா விமர்சகர்களும் கண்டு கொள்ளாமல் விட்ட விஷயம் படத்தில் வரும் ஜட்ஜ் பற்றியது. அவர் பேசும் பிராமண பாஷை பற்றியது. ஜ்ட்ஜ்கள் எல்லோரும் இப்படித்தான் நீதிமன்றத்தில் நடந்து கொள்வார்களா என்ன… பாரபட்சமின்றி செயல்பட வேண்டிய நீதிபதி அகோரியை வணங்குவதும், அவருக்கு எந்தச் சிக்கல்களும் இல்லாமல், மிக மரியாதையாக நடந்து கொள்ள வேண்டும், பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும் கூறுவது ஏற்கத் தகுந்ததாக இல்லை. குறிப்பிட்ட சில இனத்தினர் இந்த மாதிரிதான் நடந்து கொள்வார்கள் என்று அவர்களை மறைமுகமாக பழித்துக் கூறுவதற்காக இப்படிப் படைத்தார்களா அல்லது அவர்கள் பெருமையை சொல்லாமல் சொல்கிறார்களா… புரியவில்லை. கேஸ் கட்டை இன்ஸ்பெக்டர் முகத்தில் விட்டெறிவதும், ஏதாவது ’உள் விஷயம்’ உள்ளதா என்று கேட்பதும் ஜட்ஜிற்கு பொருத்தமானதாக இல்லை. கடவுளைத் திட்டும் காட்சி வசனம் நன்றாக இருந்தாலும், விக்ரமாதித்தனின் ஓவர் ஆக்ஷன் அந்த வசனத்திற்கு பொருத்தமானதாக இல்லை. அந்த வசனத்தை அழாமலேயே சொல்லியிருந்தால் இன்னமும் எஃபெக்டிவ் ஆக இருந்திருக்கும்.
நிறைய சென்சாரில் கட் ஆகி இருக்குமோ என்று தோன்றுகிறது. மத ரீதியான காரணம் ஏதாவது இருக்கலாம். என்ன என்ன கட் செய்யப்பட்டன, அவை ஏன் கட் செய்யப்பட்டன என மக்களுக்கு விளக்க வேண்டியது கதாசிரியர் மற்றும் இயக்குநரின் கடமை.
மொத்தத்தில் தமிழில் இதுவரை வந்துள்ள படங்களில் இது ஒரு முக்கியமான படம். ஆனால் மிகச் சிறந்த படம் என்று சொல்ல முடியாது. இப்படி மன நலம் பாதிக்கப்பட்டவர்களை நடிக்க வைத்ததே பெரிய சாதனை. அதற்காக பாலாவைப் பாராட்ட வேண்டும். ஜெயமோகனின் கூர்மையான வசனங்கள் படத்திற்கு மேலும் பலம் சேர்க்கிறது. ஒளிப்பதிவு நன்று. இசை பிரமாதம் என்று சொல்ல முடியாவிட்டாலும் சிறப்பாக இருந்தது. இளையராஜா இல்லாமல் வேறு யாராவது இசை அமைத்திருந்தால் அவ்வளவு தான்.
நான் கடவுள் தமிழ் சினிமாவுக்கு புது வரவு. புதிய பாதை. நல்ல விமர்சனம்/அறிமுகம் தந்த தமிழ் ஹிந்து தளத்திற்கு பாராட்டுக்கள். விஸ்வாமித்திரருக்கு வந்தனம்.
ஒன்று, தமிழ் சினிமாவில் கதாநாயகி மாடு மேய்க்கும் பெண்ணாக இருந்தாலும் கூடச் செக்கச் செவலென, தளதளவென்று, முடிந்தால் பஞ்சாப் தேசத்துக் கிளியாக இருப்பதும் தமிழ் சினிமாவின் முதல் இலக்கணங்களில் ஒன்று. தமிழுக்காகத் தன் மூச்சு, பேச்சு எல்லாவற்றையும் விட்டுவிடத் தயாராக இருக்கும் பாரதிராஜா, சீமான், சேரன் வகையறா அக்மார்க் திராவிடத் தமிழர்கள் கூட ஒரு கிராமப்புறத் தமிழ்ப் பெண் பாத்திரத்திற்குச் சுமாரான கரிய நிறமுடைய பெண்ணைக் கதாநாயகியாகப் போடத் துணிந்ததில்லை. அப்படிப்பட்ட தமிழ்த் திரைச்சூழலில், ஒன்றல்ல இரண்டல்ல நூற்றுக்கணக்கான குரூபிகளைப் படம் முழுவதும் க்ளோசப் காட்சிகளில் காண்பிக்க ஒரு தமிழ்ப் பட இயக்குனருக்கு அபாரத் துணிச்சல் வேண்டும்.
உங்கள் பாலாவும் ஏன் ஒரு தமிழச்சியை போடாமல் வேறு ஓர் நாட்டு பெண்ணை நடிக்க வைத்தார்?
அநங்கன், கார்கில் ஜெய், கிருஷ்ண புத்திரன் அனைவருக்கும் நன்றி. கி பு அவர்களின் விளக்கம் பிரமாதம் நன்றி. அநங்கன் நானும் அதே ஜட்ஜ் பற்றி எழுதியிருந்தேன் நீளம் கருதி இதில் ஒரு சில பத்திகளை நீக்கி விட்டிருக்கிறேன். உங்கள் கருத்துடன் உடன் படுகிறேன்.
கடைசியில் ஏதோ கருப்பு, வெள்ளை சிவப்பில் பூச்சாண்டி படம் போட்டு எழுதியவருக்கு. பாலா பூஜா என்னும் சிங்களத்துப் பெண்ணை நடிக்க வைத்திருக்கிறார். அந்த பூஜாவை அவருக்கு அறிமுகப் படுத்தியவரே சிங்களர்களை வெட்டி கசாப்பு போட வேண்டும் வெறி பிடித்து அலையும் சைமன் அலையஸ் சீமான் தான். அந்த பூஜாவை நடிப்பிற்காக தன் படத்தில் பாலா பயன் படுத்திக் கொண்டிருக்கிறாரே அன்றி சைமனைப் போல சதைக்காகப் பயன் படுத்திக் கொள்ளவில்லை. மேலும் அந்த பூஜாவைக் கூட அழகாக ஒரு காட்சியில் கூட காட்டவில்லை என்பதையும் கவனிக்க வேண்டும். அதெல்லாம் சிந்திப்பவர்களுப் புரியும்., சும்மா பந்தாவுக்காக பல்லாயிரம் பேர்களைப் படுகொலை செய்த ஒரு கொலைகாரனை புரட்சிக்காரன் என்று எண்ணிக் கொண்டு அவன் படத்தை டி ஷர்ட்டிலும் லோகோவிலும் போட்டுக் கொண்டு அலையும் ஆட்களுக்கு புரிந்து கொள்வது கஷ்டம்தான்.
விஸ்வா
அருமையான விமர்சனம்.. படத்தின் ஒவ்வொரு காட்சியையும் உன்னிப்பாக கவனித்திருந்தால மட்டுமே இப்படி விரிவாயும் தற்குறிப்பேற்றியும் எழுத முடியும். நன்றாக எழுதி இருக்கிறீர்கள். வாழ்த்துக்கள் விஸ்வாமித்ரா…
விஸ்வாவோட அட்டகாசமான விமர்சனத்திற்க்கு கிருஷ்ணபுத்திரனுடைய விமர்சனம் கலக்கல்.இந்து மதத்தை இழிவுபடுத்துவதையே தொழிலாக கொண்ட பிழைப்புவாதிகள் பார்க்கவேண்டிய படம்,படிக்க வேண்டிய விமர்சனம்.
பழைய பாடல்களைப் பாடி பிச்சை எடுக்கும் பூஜாவிற்கு பாடுவதற்கும் கற்றுக் கொடுத்திருக்கலாம். அல்லது ஒரே பாடகியை வைத்து பாட வைதிருக்காலாம்.
பழைய ரிக்காடிங் பாடல்களையே பயன் படித்தி இருப்பது ஒன்ற வில்லை.
விமரிசனம் இது வரை வந்தவற்றுள்லேயே முற்றிலும் புதுமையானதாய் உள்ளது. படம் பார்க்கவேண்டும் என்ற ஆவலையும் தூண்டுகின்றது. பொதுவாய் பாலா படங்களையே நான் அவ்வளவாய் ரசிப்பதில்லை. ஆனல் இதன் இந்த விமரிசனம் மற்றவற்றில் இருந்து வேறுபட்டு அலசி இருப்பதால் பார்க்க முயல்கின்றேன்.
பாலா காசி நகரை ஒரு மரண நகரம் எனச் சித்திரித்திருப்பதாய் ஒரு விமரிசனத்தில் படித்தேன். என் எதிர்ப்பையும் அங்கே பதிந்தேன். உங்கள் விமரிசனத்தில் மாறுபட்டுள்ளது. ஒவ்வொருத்தர் பார்வை!!!!
அருமை நன்பா :) நல்ல பதிவு, நானும் ஒரு பதிவு போட்டு இருக்கிறேன்
I am surprised to see the shower of praises on this movie at TamilHindu. The movie’s clear message is ‘NO GOD. HE IS ALREADY DEAD’. ‘There is no god in the Seventh World’ was the crux of Jeyamohan’s Ezham Ulagam. There are lot of sufferings around us. Bala and Jeyamohan think it is the duty of the God to resolve.. or if it is not resolved then there is no God.. By publishing praises that too in our Tamil Hindu site.. I think both Bala and JM would be laughing at us.. Regards. Adithya
ஆதித்யாவுடைய கருத்து ஒரு பரிமாணத்தை மட்டும் பார்க்கிறது. சார்வாகர், ஜாபாலியிலிருந்து நாகார்ஜுனர் வரை கடவுள் மறுப்பு என்பது இந்து சமுதாயத்தில் நிலவி இருக்கிறது. இவர்களில் பலர் அரசவைகளில் ஆலோசகர்களாகக் கூட இருந்திருக்கிறார்கள். இந்து சமுதாயம் என்று சொல்லும்போது நான் பௌத்தர்களையும் சேர்த்துச் சொன்னேன். இந்து சமயம் வேறு, இந்து சமுதாயம் வேறு என்ற பொருளில் சொல்லப்பட்டது.
எனவே 21ஆம் நூற்றாண்டில் ஒரு அரை நாத்திகவாதத்தை ஏதோ இந்து ச்மயத்துக்கு எதிரானது என்று நினைத்து அதை வெறுக்கவோ, ஒதுக்கவோ தேவை இல்லை. இந்த தளத்தில் இந்து சமூகத்திடம் எழும் எல்லா சிந்தனைகளையும், கருத்துப் பரிமாற்றங்களையும் சர்ச்சிப்பது ஆரோக்கியமானதுதான். இந்து சமுதாயத்தின் நலனைக் கருதும் எல்லாரும் கடவுள் நம்பிக்கை கொண்டவராக இருக்கவும் தேவை இல்லை. இந்து சமுதாயமும் சரி இந்து சமயமும் சரி திறந்த அமைப்புகள், ஜனநாயக அமைப்புகள், பண்டை உலகில் இருந்து இன்று வரை பெருமளவும் சகிப்புத்தன்மை கொண்டவையாக இருக்க முயல்வன. எப்போதும் அவை வெற்றி பெற்றிருக்கவில்லை சகிப்பிலோ, தாராள் நிலைபாட்டிலோ, அல்லது திறந்த அரங்கை காத்து மக்களுக்கு அளிப்பதிலோ. எந்த ஜனநாயக அமைப்பும் தொடர்ந்த சோதனைகளையும், தர்ம சங்கட நிலைகளையும், அவ்வப்போதைய தோல்விகளையும் சந்திக்கவே நேரும். கார்ல் பாப்பர் சொன்னது போல ‘திறந்த சமூகங்களின் எதிரிகள்’ (enemies of open society) உலகில் நிறையவே உண்டு. நாமும் அந்த கோஷ்டியில் சேர வேண்டாமே?
மைத்ரேயா
“எனவே 21ஆம் நூற்றாண்டில் ஒரு அரை நாத்திகவாதத்தை ஏதோ இந்து ச்மயத்துக்கு எதிரானது என்று நினைத்து அதை வெறுக்கவோ, ஒதுக்கவோ தேவை இல்லை…”
திரு.மைத்ரேயா, நாம் அதை வெறுக்கவோ, ஒதுக்கவோ தேவை இல்லைதான்.. ஆனாலும் நம் வலைப்பதிவில் ஒரு முக்கிய இடம் கொடுத்து தலையில் தூக்கி வைத்து ஆட வேண்டாம் என்பது என் வேண்டுகோள்.. ஆதித்யா..
ஆதித்யா அவர்களுடன் விவாதம் செய்ய நான் முனையவில்லை. அவருடைய கருத்து எனக்குப் புரிகிறது. எதையும் தலையில் தூக்கி வைத்து ஆடுவது அவ்வளவு உபயோகமான செயல் இல்லை, கரக் ஆட்டக் குடத்தைப் பார்த்தால் புரியும் அது எத்தனைக்கு ஆடுபவரைக் கட்டுப்படுத்துகிறது, அது இல்லாவிடில் அதே நடனக்காரர் எவ்வளவு அனாயாசமாக ஆட முடியும் என்பது எல்லாம். ஆனால் சில சுயமாக விதித்துக் கொண்ட கட்டுப்பாடு, சுமை, சட்டகங்களுக்குள் தம் கலையை, சிந்தனையை, செயல்பாடுகளைச் செய்வது என்பதில் சிலருக்கு இன்பம் உண்டு. அதைப் பார்த்து ரசிப்பதில் அல்லது கேட்டு ரசிப்பதில் பலருக்கு மகிழ்ச்சி உண்டு. கர்நாடக சங்கீதத்தின் கணக்குகளைக் குறித்து இடை விடாமல் ஒரு ஜாஸ் இசை வல்லுநர் பேசியதை சமீபத்தில் கேட்கவும், படிக்கவும் நேர்ந்தது. அவர் கதிரி கோபால்நாத் உடைய இசையைத் தற்செயலாகக் கேட்க நேர்ந்து ஒரு பெரும் அறிவு விகசிப்புக்கு ஆட்பட்டதாகத் தெரிவித்தார். அதன் பிறகு கர்நாடக இசையைக் கற்று கதிரி அவர்களுடன் சேர்ந்து ஒரு ஜாஸ் இசைத் தட்டு வெளி இட்டிருக்கிறார். என் உறவினர்கள் சிலரும் இவரைப் போலவே கர்நாடக இசையின் கணக்குகளில் பெரும் மகிழ்ச்சி கொள்பவர்கள். ரம்யம் அல்லது சுகம் ஆகிய தேவைகள் அல்லது குணங்கள் இல்லாத ஆனால் சுத்தமான கணக்கு உள்ள கர்நாடக இசையை இவர்களால் ஆழ்ந்து அனுபவிக்க முடியும். என் குறை அறிவால் அந்த வகை இசையைக் கேட்க முடியும் அனுபவிக்க முடியாது.
அதே போல எனக்குப் பயிற்சி உள்ள சில துறைகளில் கடுமை கூடவும், ரசனைக்கோ, சாதாரண மனிதரின் பங்கெடுப்புக்கோ இடம் தராத, அந்த வகைப் பங்கெடுப்பைத் தன் படைப்பு நோக்கில் எடுத்துக் கொள்ளாத வகை முயற்சிகளில் என்னால் திளைக்க முடிகிறது. எனக்கு அங்கு கல்வியும், அறிவுத் திரட்டும் முக்கிய நோக்குகள். மகிழ்ச்சியை வேறு விதத்தில் என்னால் அங்கு பெற முடிகிறது.
நற்சினிமாவும் அது போன்ற ஒரு விஷயமே. நான் கடவுள் படத்தை நான் பார்க்கவில்லை, பார்க்க ஏதும் பெரும் உந்துதல் எனக்கு இல்லை. ஆனால் சராசரி மசாலா படங்களில் இல்லாத கருத்து வெளிப் பயணம் இதில் உள்ளதாக விஸ்வாமித்ரா சொல்கிறார். பலர் இதில் வேறு குணாம்சங்களைக் கண்டதாகத் தெரிகிறது. 76 இல் என நினைக்கிறேன். பாரதிராஜாவின் ’16 வயதினிலே’ படம் வந்த போது நண்பர்கள் வற்புறுத்தியதில் அதைப் போய்ப் பார்த்தேன். எனக்கு அது ரசிக்கவில்லை. வக்கிரமாகவும், திரள் கவர்ச்சிக்காக வலிந்து சுமத்தப்பட்ட மலிவான காட்சிகளுமாக அது இன்னொரு கோணல் படமாக எனக்குத் தெரிந்தது. ஆனால் அன்றைக்கு வெளிவந்த படங்களோடு ஒப்பிட்டால் ஓரளவு துர்நாற்றம் குறைந்த, மாற்று வகைப் படம் எனவும், இது தமிழ் சினிமாவில் வெறு ஒரு திசையில் மக்களையும் துறையையும் அழைத்துப் போகும் எனவும் எனக்குத் தெரிந்திருந்தது. அது அப்படியே நடந்தது. இன்றைய தமிழ் சினிமா ஒப்பீட்டில் எத்தனையோ வேகமாகவும், தொழில் நுட்பம் நிறைந்ததாகவும் உள்ளது. ஆனால் உள்ளீடு பெருமளவும் மலினமானதுதான். கருத்துகள் சர்ச்சிக்கப் பட சினிமா ஒரு தளமே அல்ல என்ற நிலை பெருமளவு நிலவுகிறது. அதை இந்தப் படமும் அது போன்றவையும் ஓரளவாவது மாற்றும் என்று விஸ்வாமித்ரா மற்றும் இதரர் சொல்கிறார் என்று எனக்குத் தோன்றுகிறது. சில நேரம் முளை விடுவதைக் கருக்காமல் பாராட்டுவது நல்லதாக அமையலாம. இது விஷக் காளானா, பயிரா, உதவும் பூண்டா, புல்லுரிவியா என்று நாம் இனம் காண்பது உதவும்.
கலை சூத்திரங்களில் அடக்கப் பட முடியாத நெகிழ்வும், பரிமாணத் தவ்வல்களும் கொண்டது. அதற்கான் சில கூறுகளாவது, துவக்கமாவது இதில் உண்டா? அதைப் பார்ப்பது உதவலாம்.
மைத்ரேயா
// காசி முக்தி அளிப்பது. ஆனால் இயக்குனர் பாலாவைக் காசி ஏதோ ஓர் ஆழத்தில் பிணைத்திருக்கிறது. காசி என்ற பாத்திரம் குருட்டுக் கதாநாயகனானது ஒரு படத்தில் என்றால், அந்த நகர் குருட்டுக் கதாநாயகனை உருவாக்குகிறது இந்தப்படத்தில். ஆனால் இது வேறுவிதக் குருடு. //
The film named “Kasi” ( Vikram as a blind man ) was not Bala’s. It was directed by Malayalam director Vinayan.
“கண்ணில்லாத பிச்சைக்காரி ருத்ரனிடம் கேட்கிறாள்: “எல்லாப் புகழும் இறைவனுக்கேன்னு சொல்ற அல்லா சாமி கூட என்னை மாதிரி கண் தெரியாத பிச்சைக்காரிய கஷ்டப்படுத்ததான் விரும்புதா? ஏசு சாமி என்னைக் கைவிட்டுடுச்சு… தெருவுக்குத் தெரு இருக்கற பிள்ளையார், காளியாத்தா, மாரியாத்தா ஒரு சாமி கூட என்னைக் காப்பத்தலியே?” இதுதான் பாலா, ஜெகன் மோகன். கடவுளின் பெயரைச் சொல்லிப் பிழைப்பு நடத்தும் எல்லா மதத்தினரும் வெட்கப் பட வேண்டும்.
‘அஹம் ப்ரஹ்மாஸ்மி’இது தான் கதையேன் முக்கியமான ஓன்று ….தென்னாடுடைய சிவனே போற்றி ….எல்லாம் பாலாவிற்கு பொய் சேரும் ..
படம் முழுசும் பாருங்க படம் கண்டிப்பா எல்லாருக்கும் பிடிக்கும். கீழே இருக்குற லிங்க் கிளிக் பண்ணுனா முழு படமும் பார்க்கலாம்…
https://www.nkmovies.com/2012/10/naan-kadavul-full-movie-watch-online.html