தாய்மொழியும் தாய்நாட்டின் மொழியும்

samskritamசம்ஸ்கிருதம் படிக்கவேண்டும் என்கிற ஆசை எனக்கு எழுந்த நேரத்தில், கடந்த புத்தகக் கண்காட்சியில் விஜயபாரதம் ஸ்டாலில் ‘பத்து நாளில் சம்ஸ்கிருதம் பேசும்’ ஒரு கோர்ஸைப் பற்றிய பிட் நோட்டிஸ் பார்த்தேன். பத்து நாளில் சம்ஸ்கிருதம் எப்படி பேசமுடியும் என்கிற எண்ணம் வந்தாலும், சேர்ந்துவிட்டேன்.

தி.நகர் சாரதா வித்யாலயாவில் நடந்த வகுப்புக்கு முதல்நாள் சென்றபோது என்னுடன் வந்த நண்பனிடம் ‘பத்து பேர் இருந்தா அதிகம்’ என்று சொல்லிக்கொண்டு போனேன். அங்கு இனிய அதிர்ச்சி காத்திருந்தது. இரண்டு வகுப்புகள். ஒவ்வொரு வகுப்பிலும் நாற்பது மாணவர்களுக்கும் மேல். நடக்க முடியாமல் தள்ளாடி நடந்துவந்த வயதான மனிதரிலிருந்து, தமிழே இன்னும் சரியாகப் பேசத் தெரியாத சிறுவர் வரை. ‘படத சம்ஸ்கிருதம்’ என்று பாடலோடு தொடங்கிய வகுப்பில், ஆசிரியர் எடுத்த எடுப்பில் ‘பவத: நாம கிம்?’ என்று தொடங்கினார். ஆசிரியர் என்றால், வயதாகி குடுமி போட்டுக்கொண்டு நாமத்தோடு வெற்றிலை குதப்பிக்கொண்டு வாயில் எச்சிலோடு பேசும் ஓர் உருவத்தை சட்டெனக் கலைத்தார் முரளி. கணினி மென்பொருள் வல்லுநரான முரளியின் வயது 24. குடுமி இல்லை. ஆனால் நீண்ட கூந்தலுடன், தமிழையோ ஆங்கிலத்தையோ உதவிக்கு அழைக்காமல், எடுத்த எடுப்பில் ‘பவத: நாம கிம்?’ என்றார்.

நாம் பேசிக்கொண்டிருக்கும் ஒரு மொழியின் உதவியின்றி, இன்னொரு புதிய மொழியை கற்றுவிடமுடியும் என்று நான் நம்பியிருக்கவில்லை. ஆனால் ஸம்ஸ்க்ருத பாரதியின் அடிப்படையே, சம்ஸ்கிருதத்தை அம்மொழியின் வாயிலாகவே கற்றுத் தருவதே அன்றி, வேறொரு மொழியின் வாயிலாக அதைக் கற்றுத் தருவது அன்று என்பதை அந்த முதல் நாளிலேயே புரிந்துகொண்டேன். நாம் நம் தாய்மொழியை வேறு எந்த ஒரு மொழியின் உதவியின்றித்தான் படித்திருக்கிறோம் என்று யோசித்துப் பார்த்தேன். அப்படி ஒரு ஒரு முயற்சி இது என்பது புரிந்தது. ஹிந்தி தெரியாமல் இருந்தால் நல்லது என்று ஏற்கெனவே முரளி சொல்லியிருந்தார். அதன் காரணமும் அங்கே விளங்கத் தொடங்கியது. பத்து நாட்களும் அங்கே பயன்படுத்தப்பட்ட பிற மொழி வார்த்தைகள் பத்தைத் தாண்டியிருந்தால் அதிசயம். பத்தாவது நாளில் எல்லோரும் சம்ஸ்கிருதத்தில் பேச முயற்சித்தார்கள்.

சம்ஸ்கிருதத்தில் பேசுவது என்றால், சம்ஸ்கிருத விற்பன்னராகப் பேசுவது அல்ல. இதன் அடிப்படையையும் மிகத் தெளிவாக திட்டமிட்டிருந்தது சம்ஸ்கிருத பாரதி. ஒரே விகுதியோடு முடியும் வார்த்தைகள் (கஜ:, வ்ருக்ஷ:, புத்ர:, ராம: என்பது போல) என்று எடுத்துக்கொண்டு, அவற்றோடு வேற்றுமை உருபுகள் சேரும்போது அவை எப்படி மாறுகின்றன என்பதை அடிப்படையாகக்கொண்டு (ராமன் +இன் = ராமனின், ராம: + அஸ்ய = ராமஸ்ய என்பதைப் போல) எளிமையாக நடத்தினார்கள். Present tense, Past tense, Future tense மட்டுமே சொல்லித்தந்தார்கள். இதை வைத்துக்கொண்டு கதை சொன்னார்கள். இதை அடிப்படையாக வைத்து எளிமையான வாக்கியங்கள் சொல்லச் சொன்னார்கள். இதை வைத்துக் கொண்டு எளிமையான பேச்சை நிகழ்த்தினார்கள். இதன் வழியே, சம்ஸ்கிருதம் கற்பது கடினமானதல்ல என்கிற எண்ணத்தை மெல்ல வளர்த்தெடுத்தார்கள்.

சிறுவர்களின் வேகம் பிரமிக்கத்தக்கதாய் இருந்தது. பதினைந்து வயது சிறுவனின் நினைவாற்றலை எட்டிப்பிடிப்பது எனக்கு சற்று சிரமமாகத்தான் இருந்தது. காரணம், நான் எந்த ஒரு சம்ஸ்கிருத வார்த்தையையும் அதோடு தொடர்புடைய பொருளின் வழியாகவே அடைய முயன்றேன். ஆனால் சிறுவர்களோ சம்ஸ்கிருத வார்த்தையை அவ்வார்த்தை மட்டுமானதாகவே கண்டடைந்தார்கள்.

சம்ஸ்கிருதம் படிப்பதைத் தவிர்த்து இவ்வகுப்புகள் பல நல்ல நினைவுளைக் கொண்டுவந்து சேர்த்தன. கிட்டத்தட்ட பதினோரு வருடங்களுக்குப் பிறகு ஒரு மாணவனாக வகுப்பில் அமர்வது என்பதே பெரும் மகிழ்ச்சியைத் தந்தது. நியூ ஹொரைசன் மீடியாவின் ப்ராடிஜி பதிப்பகத்தின் சார்பாக, பள்ளிகளில் சூடாகும் பூமி (Global warming) பற்றிய வினாடி வினா எழுத்துத் தேர்வு நடத்தியபோது பல பள்ளிகளுக்குச் செல்ல வேண்டியிருந்தது. வகுப்புகளில் மாணவர்கள் அமர்ந்திருப்பதையும், எவ்வித தன்முனைப்பும் இன்றி, ஆசிரியரே எல்லாமும் என்கிற எண்ணத்தோடு அவர்களோடு பேசியதையும் பெரும் ஏக்கத்தோடு பார்த்துக் கொண்டிருந்தேன். அதன் ஒரு பகுதி இந்த சம்ஸ்கிருத வகுப்பில்
அடித்துச்செல்லப்பட்டதாக உணர்ந்தேன்.

இவை போக, சக ‘மாணவ நண்பர்கள்’ தந்த அனுபவங்கள். என் பக்கத்து நண்பருக்கு வயது 60தான் இருக்கும். ‘வாக்கிங்க்குக்கு வாக்கிங்கும் ஆச்சு, சம்ஸ்கிருதமும் ஆச்சு பாருங்க’ என்றார். இன்னொருவர், ‘இப்படி தமிழும் சொல்லாம இங்லீஷும் சொல்லாம சொல்லித் தந்தா என்ன புரியறதுன்றீங்க? நான் சொல்லிட்டேன். நேரா சொல்லிட்டேன். கேப்பாங்களான்னு தெரியலை’ என்றார்.

பத்தாம் நாள் நிறைவு நாளில் இரண்டு சிறப்பு விருந்தினர்கள் கலந்துகொண்டு பேசினார்கள். அவர்கள் பேசியதில் எனக்கு பல கருத்துகள் உடன்பாடில்லாதவை. ஆனால் இதுபோன்ற வகுப்புகளில் இவற்றைத் தவிர்க்கமுடியாது என்று நினைத்துக் கொண்டேன். பல மாணவர்கள் சம்ஸ்கிருதத்தில் நகைச்சுவை கதைகள் சொன்னார்கள். அனுபவக் கதைகள் சொன்னார்கள். சிறிய நாடகங்கள் நடத்தினார்கள். எல்லாமே சிறந்தவை என்று சொல்லமுடியாது. ஆனால் ஒரு எல்கேஜி, யூகேஜி மாணவர்களாக அவர்களைக் கற்பனை செய்துகொண்டால், அவர்களின் நிகழ்ச்சிகள் அற்புதமானவை என்றே சொல்லவேண்டும். இதை ஏன் சொல்கிறேன் என்றால், அஹம் ஏகம் ஹாஸ்ய கதாம் உக்தவான்! (நான் ஒரு நகைச்சுவைக் கதை சொன்னேன்!)

சம்ஸ்கிருதத்தின் பெருமைகளையும், அது எவ்வாறு இந்தியாவோடு தொடர்பு கொண்டுள்ளது என்பதையும் ஒவ்வொரு ஆசிரியரும் ஒவ்வொரு நாளும் விளக்கிச் சொன்னார்கள். ஒவ்வொரு நாளும் ஒரு குட்டிக் கதை சம்ஸ்கிருதத்தில் சொன்னார்கள். இந்தக் கதைகளின் போது அங்கிருந்த அனைத்து மாணவர்களும் அடைந்த குதூகுலம் இப்போதும் நினைவிலிருக்கிறது. இதன் வழியே கொஞ்சம் யோசித்தால் எப்படி ரஜினி, ஜாக்கிசான் போன்றவர்கள் குழந்தைகளைப் போலவே பெரியவர்களையும் கவர்கிறார்கள் என்பதைக் கண்டடையலாம் என நினைத்துக்கொண்டேன்.

ஒரு பதினைந்து வயது மாணவன் இதுபோன்ற வகுப்பினால், இந்தியப் பற்றையும், புராணக் கதைகளின் பரிச்சயத்தையும் பெறமுடியும். பின்னாளில் இவற்றை அவன் கைவிட நேர்ந்தாலும், இதைத் தெரிந்துகொண்டு புறக்கணிப்பதற்கு பெரும் உதவியாக இருக்கும். புராணக் கதைகள் சொல்லப்பட்டபோது, பல கதைகளை என்றோ கேட்ட நினைப்பிலேயே கேட்டுக்கொண்டிருந்தேன். இனி இக்கதைகள் எல்லாம் எப்படி நம் அடுத்த தலைமுறைக்குச் செல்லும் என்கிற சோகம் எழுந்தது. கதை சொல்லும் நேரத்தை நம் தொலைக்காட்சிகள் எந்த அளவு திருடிக் கொண்டுவிட்டன என்பதும் புரிந்தது. நான் அலுவலகத்திலிருந்து வீட்டுக்கு வந்ததும், என் கணிசமான நேரத்தை என் மகனோடு செலவழிக்கவே விரும்புவேன். அதில் கதை சொல்லலும் அடங்கும். கதை என்றால் நானாக உருவாக்கிய கதைகள். புலியும் ஆடும் மாடும் மயிலும் குரங்கும் டைனசோரும் உலவும் கதைகள். இந்த சம்ஸ்கிருத வகுப்புகள் விளைவாக, இனி என் மகனுக்கு புராணக் கதைகளையும், மரியாதை ராமன், தெனாலி ராமன் கதைகளையும் கண்ணன் கதைகளையும் சொல்லலாம் என்றிருக்கிறேன். இவ்வகுப்பில் சொல்லப்பட்ட இரண்டு கண்ணன் கதைகளை என் மகனுக்குச் சொன்னபோது, அவன் அடைந்த குதூகலம் வார்த்தையில் சொல்லமுடியாதது. முதல்வேலையாக எனி இந்தியனில் சில புத்தகங்களை ஆர்டர் செய்தேன்.

சம்ஸ்கிருதம் சொல்லித்தந்த ஆசிரியர் ஒருவர் இப்படிச் சொன்னார். “உங்கள் தாய் மொழி என்ன? சம்ஸ்கிருதமா? இல்லை. தமிழ். உங்கள் தாய்மொழி? மலையாளம். உங்களது? துளு. ஒரு சம்ஸ்கிருதம் சொல்லித்தரும் ஆசிரியர் எப்படி சம்ஸ்கிருதத்தை தாய்மொழியல்ல என்று சொல்லமுடியும் என்று யோசிக்கிறீர்களா? இப்போது சொல்கிறேன். சம்ஸ்கிருதமும் உங்கள் தாய்மொழிதான். உங்கள் தாய் உங்களுக்குச் சொல்லித் தரும் தாய்மொழி தமிழாகவோ, மலையாளமாகவோ இருக்கட்டும். உங்கள் இன்னொரு தாய் பாரதத் தாய். அவளின் மொழி சம்ஸ்கிருதம்.” எந்த ஒரு மொழியையும் புறக்கணிக்காத இந்த அணுகுமுறையே நிச்சயத் தேவை. என் தாய்மொழி தமிழ். என் தாய்நாட்டின் மொழி சம்ஸ்கிருதம் என்று இருப்பதில்தான் என்ன தவறு இருந்துவிடமுடியும்?

ஸம்ஸ்க்ருத பாரதியின் தொலைபேசி எண்: 044-28272632. மின்னஞ்சல் முகவரி: samskritabharatichn@yahoo.com. இதைத் தொடர்புகொள்வதன் மூலம் அடுத்த சம்ஸ்கிருத வகுப்புகளைப் பற்றி நீங்கள் அறிந்துகொள்ளமுடியும்.

16 Replies to “தாய்மொழியும் தாய்நாட்டின் மொழியும்”

 1. தொலைபேசி எண்களுக்கு நன்றி. தொடர்பு கொண்டபோது, இந்த வகுப்பில் சேர சாதி மதம் இனம் பால் வயது போன்றவை தடை இல்லை என அறிந்தேன்.

  அடுத்த ஸம்ஸ்க்ருத பாரதி வகுப்பில் என் குடும்பத்தாரோடு சேரலாம் என்று எண்ணுகிறேன்.

  ஹரன்ப்ரசன்னாவின் கட்டுரைகள் போலவே வகுப்புகளும் ரசிக்கும்படி இருக்கும் என நம்பிக்கை.

 2. அருமையான பதிவு பிரசன்னா…சமஸ்கிருதம் நம் மரபின் மொழி. நம் அனைவரின் மொழி. அது ஒரு சாதிக்கோ ஒரு பிராந்தியத்துக்கோ சொந்தமுடையதல்ல. அதன் ஆகப்பெரிய கவிஞர்கள் ஆதிகவிகள் வனவாசிகள், இடையர்கள், மீனவர்கள், அரசர்கள், புரோகிதர்கள் என அனைவரும். மானுடத்தின் மிக உயர்ந்த விழுமியங்களை கொண்ட பொக்கிஷம் சமஸ்கிருதம். அதனை இத்தனை அருமையாக நமக்கு அறிமுகப்படுத்த ஒரு இயக்கம் உள்ளது என்பது அறிந்திட மகிழ்ச்சி. ஆத்மார்த்தமாக அனுபத்தை பகிர்ந்து கொண்டுள்ளீர்கள். நன்றிகள்.

 3. சில ஆண்டுகளுக்குமுன் சம்ஸ்கிருத பாரதி பாண்டிச்சேரியில் இத்தகைய பயிற்சி வகுப்புகளை நடத்தியபோது, சகிப்புத் தன்மையற்ற, வன்முறையே வாழ்முறையாகக் கொண்ட கம்யூனிஸ்டு மற்றும் பெரியார் கும்பல் ஒன்று அங்கே சென்று அவர்களை கண்மூடித்தனமாகத் தாக்கியது. மக்களாட்சி குறித்து வாய் கிழியப் பேசும் இவர்கள் ரஷ்யாவுக்கும் சீனாவுக்கும் வால் பிடிப்பவர்கள். சே குவேரா போன்ற கொலைகாரர்களை பனியனில் சுமந்து அலைவார்கள். ஆனால் உலகு புகழும் இலக்கியப் பாரம்பரியமிக்க இந்திய மொழியான சம்ஸ்கிருதத்தைத் தானும் படித்து அறிய மாட்டார்கள், பிறரையும் படிக்க விட மாட்டார்கள். அதுவே இந்தியாவை எப்போதும் மட்டம் தட்டியே பேசும் எழுத்துக்களையும் (அருந்ததி ராய் உட்பட), படத்தயாரிப்பாளர்களையும் தலையில் தூக்கி வைத்துக் கொண்டு குதிப்பார்கள். இவர்கள் திருந்தினால்தான் பாரதம் ஒளிரும்.

 4. அருமையான முயற்சி செய்கிறார்கள் சமஸ்கிருத பாரதியினர்.. இப்படித்தான் தக்ஷிண பாரத ஹிந்தி பிரசார சபா சத்தமே இல்லாமல் ஒரு தலைமுறையில் ஐம்பது சதவீத மக்களை இந்தி பேச வைத்தார்கள். அதுபோல இதுவும் நடைபெற்றாக வேண்டும். தமிழ் எனது மூச்சு. அதேசமயம் சமஸ்கிருதம் எனது சொத்து. இரண்டையும் தமிழர்கள் விடக்கூடாது எனபது எனது எண்ணம். அருமையாக தொகுத்தளித்து ராபர்ட் ராஜதுரை அவர்களுக்கு குடும்பத்தாரோடு போய் சமஸ்கிருதம் கற்றுக்கொள்ளத் தூண்டிய வகையில் உங்களது எழுத்து நடை மிகச் சிறப்பான முறையில் அமைந்துவிட்டது. வாழ்த்துக்கள் பிரசன்னா..

 5. சமஸ்கிருதம் போலவே பாரதியர்கள் அனைவருக்கும் சொந்தமானதும் சமஸ்கிருதத்தைவிடச் சற்று அதிகமான பாரம்பரியமும் கொண்ட மொழியான செந்தமிழையும், அதன் பக்தி இலக்கியங்களையும் தமிழ் அறியா பாரதியர்கள் அனைவரிடமும் அறிமுகப்படுத்தும் வகையில் தமிழ் பாரதி என்ற அமைப்பை ஏற்படுத்தி தமிழ் வகுப்புகளை நடத்துவது இந்து இயக்கங்களின் தலையாய கடமை. இதைத் திராவிட இயக்கங்களோ, தமிழ் தேசிய இயக்கங்களோ செய்ய விரும்பமாட்டார்கள் என்பது சொல்லித் தெரியவேண்டியதில்லை. எனவே, இதனையும் இந்து இயக்கங்களே பொறுப்பெடுத்துச் செய்யவேண்டும். இதைச் செய்தால் இந்து இயக்கங்கள் தமிழுக்கு எதிராவனவர்கள் என்ற பிரச்சாரம் வலுவிழந்துவிடும்.

 6. ஓரு விஷயத்தை எப்படி அற்புதமான வகையில் recommend செய்வது என்பதற்கு பிரசன்னாவின் இந்த தொகுப்பு ஒரு எடுத்துக்காட்டு.

  சமஸ்கிருதத்தை கற்க சென்றதிலும் சரி, அது பற்றி எழுதியதிலும் சரி, இது மிக நல்ல முயற்சி.

 7. நல்ல பதிவு பிரசன்னா நன்றிகள்

  ஒரு விஷயம் நமக்கு பரிச்சயப் படப் பட அதை எளிதில் கற்றுக்கொள்ள முடிகிறது. மேலும் தேவை என்று வரும்பொழுது உயிரினங்களால் எந்த விஷயத்தையும் கற்றுக்கொள்ள முடியும், இந்த அடிப்படையில்தான் சமஸ்கிருதம் தவிர ஒன்றுமே பேசாமல் அவர்கள் கற்றுக்கொடுக்கிறார்கள் என்று நினைக்கிறேன். அவர்களது முயற்சி வளர வாழ்த்துக்கள்.

  சமஸ்கிருதத்தில் ஆதி சங்கரர் பற்றிய திரைப்படம் ஒன்று வெளிவந்து பல தேசிய விருதுகளை வாங்கியிருக்கிறது. திரு.ஜீ.வி. ஐயரின் இயக்கத்தில் வெளிவந்த அந்தத் திரைப்படம் ஆதிசங்கரரை ஒரு மனிதராகச் சித்தரித்து உள்ளது. மிகச் சாமர்த்தியமாக இயக்குனர் வேதாந்தக் கருத்துக்களையும் அதில் வைத்துள்ளார், முடிந்தால் அனைவரும் அதை பார்க்கவும்.

  https://video.google.com/videoplay?docid=1047087149251803384

  அந்தத் திரைப்படத்தைப் பற்றிய அன்பர் ஒருவரின் பதிவை இங்கு கானலாம்

  https://brahmanisone.blogspot.com/2006/01/adi-shankaracharya-movie-by-gviyer.html

  தமிழ் இந்துவில் சில திரைப்படங்களை பற்றிய விளக்கம் வந்ததால் இவரின் திரைப்படங்களையும் பற்றிச் சொன்னால் நன்றாக இருக்கும் என்று எழுதுகிறேன். திரு ஜீ.வி. ஐயர் கன்னடத்திலும் நிறைய நல்ல படங்களை எடுத்துள்ளார் மத்வர், விவேகானந்தர், கீதா உபதேசம், பற்றியும் திரைப்படங்கள் எடுத்துள்ளார். அவரைப் பற்றி திரு.எஸ்.ராமகிருஷ்னரின் பதிவு

  https://www.sramakrishnan.com/deep_story.asp?id=202

  திரு ரெங்கதுரை சொன்னது போல செந்தமிழையும் கற்க வேண்டும் , நம்மில் பலருக்கு தேவாரப் பாடல்களிலும் திருவாய்மொழிகளிலும் உள்ள, பாதி வார்த்தைகளுக்கு அர்த்தம் தெரியாது இதுதான் இன்றைய வருந்ததற்க நிலைமை.

 8. We should use Grandha script for Sanskrit, since that was the script being used originally in south india for learning veds and doing sanskrit works, still today some rare parts of the sanskrit works are in Grantha script, only familiar things are in Devnagari script

  For Grandha script reference.
  https://en.wikipedia.org/wiki/Grantha_script

 9. Yes, Rishikesh.

  Many ancient Sanskrit works had been printed originally in Grantha lipi script only. It is high time they are revived.

  One good news that has been shared by Web Tamil enthusiasts like Na.Ganesan is that Unicode points have been allotted for Grantha. If we could get some keyboard layout for typing in Grantham, We can start a web site in full Sanskrit!

  Besides, Grantha script would have better acceptance from Tamils since the character of the scripts look similar.

  S.K

 10. Mr S k,

  it is happy news that Gantha has got unicode, i think we can search for some Virtual keyboard, i came across a Virtual keyboard which supports Devnagari, i think we can customize it I will search and give you that URL, in the mean time i will try customizing it for Granhta libi.

 11. Once when Dr.Nagaswamy , an authority on indian culture, former director of archaelogical survey of india, chennai, was informed about the activities of Samskrita Bharati, he instantly enquired whether such classes are conducted in sub urban, rural areas where ordinary people, who do not have access to all the facilities of people residing in the city enjoy. It is only too well known that they are the targets of the proselytizing agencies. The T.Nagar class about which Mr.Prasanna has beautifully described is one among 10 such classes conducted through out the city during the same period with a total attendence of above 500. The places where the classes were held include peripheral areas such as Tirunintravur, Avadi and so on. Blog of chennai Samskrita Bharati: samskritabharatichn.wordpress.com

 12. //Once when Dr.Nagaswamy , an authority on indian culture, former director of archaelogical survey of india, – Jayaraman//

  இந்தக் கட்டுரையின் மையக் கருத்திலிருந்து விலகிச்செல்லும் விதத்தில் விவாதத்தைத் திசைதிருப்புவது என் நோக்கமல்ல. என்றாலும், திரு. ஜெயராமன் குறிப்பிட்டுள்ளவற்றில் காணப்படும் சில தகவல் பிழைகளைச் சுட்டிக்காட்டுவது அவசியமாகிறது.

  முனைவர் இரா. நாகசாமி இந்தியத் தொல்பொருள் துறையில் (ASI) பணிபுரிந்தவரல்லர். தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையில் இயக்குனராகப் பணியாற்றியவரே. இவர் கருணாநிதியின் பெரிய ஜால்ராவாக விளங்கியவர். கருணாநிதியின்மீது இவர் இயற்றிய மெய்க்கீர்த்திகள் பிரபலமானவை. மேற்குறித்த காரணங்களுக்காகவும், துறையில் நடந்த சில முறைகேடுகளுக்காகவும், எம்.ஜி.ஆர். ஆட்சிக்காலத்தில் தற்காலிகமாகப் பணிநீக்கம் செய்யப்பட்டு, பின்னர் காஞ்சி பெரியவர் மற்றும் ஆர்.எம்.வீரப்பனின் ஆதரவு காரணமாக மீண்டும் பணிநியமனம் பெற்றவர்.

  மேலும், கருணாநிதி தமிழ்ப் புத்தாண்டின் தொடக்கமாக தை மாதத்தை அறிவித்ததைப் பாராட்டி நடத்தப்பட்ட விழாவில் அதற்காக அவரை வானளாவப் புகழ்ந்து பேசியவர் நாகசாமி. சமீபத்தில் இவர் எழுதி வெளியிட்டுள்ள நூல், ஸ்ரீ ராமானுஜரின் மீது காழ்ப்புணர்வையும் அவதூறுகளையும் வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது. இந்தியப் பண்பாடு குறித்த ஓர் authorityயாக இவரைச் சொல்வது மிகவும் துரதிஷ்டவசமானது.

 13. பல ஆண்டுகளுக்கு முன்பு நான் ஒரு புத்தகம் படிக்க நேரிட்டது, பெயர் சரியாக நினைவில்லை, சோழ மன்னன் ராஜராஜன் மற்றும் தஞ்சை பெரிய கோவிலை கட்டியவர்கள்ளின் மறு பிறவி பற்றிய விபரம் அதில் காணப்பட்டது, அதன் சாரம் இப்படி இருந்தது, ” தஞ்சை பெரிய கோவிலை கட்டிய தலைமை ஸ்தபதி இப்போது மீண்டும் பிறவி எடுத்துள்ளார், அவர் ஒரு புகழ் பெற்ற புதைபொருள் ஆய்வாளர் என்றும், அரவின் நாமம் கொண்டவர்” என்ற குறிப்பும் காணப்பட்டது, அதே புத்தகத்தில் வேறு பக்கங்களில் சோழ சாம்ராஜ்யம் பற்றிய ஆய்வுகளில் புதை பொருள் ஆய்வாளர் நாகசாமி மிகுந்த ஆர்வம் காட்டியதாகவும் குறிப்பு காணப்பட்டது

 14. //உங்கள் இன்னொரு தாய் பாரதத் தாய். அவளின் மொழி சம்ஸ்கிருதம்.” எந்த ஒரு மொழியையும் புறக்கணிக்காத இந்த அணுகுமுறையே நிச்சயத் தேவை. என் தாய்மொழி தமிழ். என் தாய்நாட்டின் மொழி சம்ஸ்கிருதம் என்று இருப்பதில்தான் என்ன தவறு இருந்துவிடமுடியும்?//

  என்ன கொடுமை இது?

  தாய் பேசும் மொழி தாய் மொழி. என் தாய் தமிழ் பேசுகிறார்கள் என்பது நிறுவக் கூடிய உண்மை. பாரதத் தாய் சமசுகிருதம் தான் பேசுகிறாள் என்று எப்படி நிறுவ விரும்புகிறீர்கள்?

  சமசுகிருதம் உள்ளிட்ட எந்த மொழியையும் கற்றுக்கொள்வது தனிநபர் விருப்பம். ஆனால், அதற்கு ஏன் “பாரதத் தாயின் மொழி” என்ற விளம்பர வாசகங்கள் எல்லாம்?

 15. //One good news that has been shared by Web Tamil enthusiasts like Na.Ganesan is that Unicode points have been allotted for Grantha. If we could get some keyboard layout for typing in Grantham, We can start a web site in full Sanskrit//

  Very Glad to see so many Enthusiasts in Grantha 🙂

  https://tinyurl.com/cz4ufr

  Visit the Grantha Portal @ Noolaham. (And do comment if any improvement have to be done 🙂 . It will be very helpful )

  I have given detailed Grantha Fonts related Info there.

  Do note that only code points have been allocated, a detailed proposal for Code Point usage has yet to be done.

  A detailed thread related to Grantha Encoding can be found in the Samskrita Bharathi Yahoo Group.

  https://tech.groups.yahoo.com/group/samskritabharatichennai/message/233

  (Membership needed to view the group messages)

 16. அன்புடையீர்

  தாங்கள் கொடுத்த மின் அஞ்சல் முகவரியில் நான் அவர்களைத் தொடர்புகொள்ள இயலவில்லை .
  கோவிந்தசாமி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *