நான் பள்ளியில் படித்துக் கொண்டிருந்த காலம் அது. சிறுவயது நிகழ்வுகள். 1950களில் நடந்தவை.
பள்ளித் தேர்வுகள் முடிந்தபின் திருத்திய விடைத்தாள்கள் திருப்பித் தரப்படும். வீட்டுக்குக் கொண்டு போய் அப்பாவிடம் காட்டுவேன். நல்ல மதிப்பெண்கள்தான் பெற்றிருப்பேன். கணிதப் பாடத்தில் 98. “ஒன்ன விட ஒருவயசு சின்னவன் உன் தம்பி. ஒரு கிளாஸ் கீழே படிக்கிறான். அவன் மட்டும் கணக்குல எப்பவும் 100க்கு 100 வாங்கறானே, அவனுக்கு மட்டும் இந்த வீட்லே அப்படி என்னாடா ஸ்பெஷலாப் பண்ணறோம்? இல்லே ஸ்கூல்லே ஏதாவது அவனுக்கு மட்டும் ஸ்பெஷலாச் சொல்லித் தராங்களா? அவனால் வாங்க முடியுது, உன்னால முடியலை?” என்றார் அப்பா. வழக்கமான நிகழ்வுதான் இது. வழக்கம் போலவே பதில் சொல்ல இயலாமல் தலைகுனிந்து நிற்பேன், தம்பியின் மீது கோபமும் பொறாமையும் கொந்தளிக்க. சகோதரர்களை ஒப்பிடுவதன் விளைவு அது.
பள்ளி சம்பந்தப்பட்டது அது. அவ்வாறல்லாமலும், ஒப்பிடல்கள் பல சிறுவயதில் உண்டு.
“ஏண்டா, தெனமும் சாப்டப்புறம் எச்சத் தட்டைக் கொண்டு போயிக் கழுவி ஆணியில் மாட்டி வைன்னு சொல்றேன். ஒருநாள்கூட நீ பண்ண மாட்டேங்கறயே, உன் தங்கையைப் பாரு; ஒன்னவிட ரெண்டு வயசு சின்னவ அவ, எவ்வளவு சமத்தா தெனமும் அதை மறக்காம பண்றா” என்று என் அம்மா என் தங்கையுடன் என்னை ஒப்பிட்டு, ஒவ்வொரு வேளை சாப்பாடு முடிந்ததும் என்னைக் கடிந்து கொள்வாள்.
மீண்டும் உடன்பிறப்புக்களுக்கிடையே ஒப்பீடு.
கடைசிவரை கணக்கில் நான் நூத்துக்கு நூறு வாங்கினதும் இல்லை. சாப்பிட்ட தட்டைக் கழுவினதும் இல்லை.
உங்களில் பலரும் இதுபோன்ற ஒப்பீடுகளின் சுமையை உணர்ந்திருப்பீர்கள். வீடுகளில் சகோதர சகோதரிகளிடையே சாதாரணமாக நிகழும். மனித வாழ்வின் ஒரு நிலையான அம்சம் இந்தச் சகோதர ஒப்பிடல்.
இந்த உடன்பிறப்புகளை ஒப்பிடல் மனித வாழ்வின் தவிர்க்க முடியாத அம்சம் என்பதை ஒப்புக்கொண்டால், மனிதனாகவே வாழ்ந்த, மனிதனாகவே வடிக்கப்பட்ட, மனிதனாகவே காட்டப் பெற்ற கம்பனின் இராமனும் இதிலிருந்து தப்பியிருக்க முடியாது அல்லவா. ஆமாம் அவனும் தப்பவேயில்லை இதிலிருந்து. கம்பனைச் சற்று ஆய்ந்து படித்ததில் இதனை உண்மையென்று கண்டேன் நான்.
இராமனுடன் இவ்விதம் ஒப்பிடப்படும் சகோதரன் பரதன்தான். வேறு எந்தச் சகோதரனும் இராமனுடன் ஒப்பிடப் படுவதாகக் கம்ப இராமயணத்தில் நான் காணவில்லை.
இராமனையும் பரதனையும் ஒப்பிடுவது கம்பனில் நான் கண்ட அளவில் மூன்று இடங்களில் நிகழ்கிறது. எல்லா இடங்களிலும் இராமனை விட பரதனே சிறந்தவன் என்ற அளவிலேயே ஒப்பீடுகள் பேசுகின்றன. இராமன் முகத்திற் கெதிராகவே உன்னைவிட பரதன் மேலானவன் என்று சொல்வதையும் கம்பனில் காண்கிறோம். இராமன் இல்லாத சந்தர்ப்பங்களிலும் பரதன் இராமனைவிட மேலானவன் என்று சொல்வதையும் காண்கிறோம்.
இராமனை விட பரதன் சிறந்தவன் என்று இராமனின் முகத்திற்கெதிராகவே அவன் அன்னை கோசலையாலேயே சொல்லப்படுவது தான் முதல் நிகழ்வு. அந்த இடத்தில் பரதன் இல்லை. மற்ற இரண்டு நிகழ்வுகளும், இராமன் இல்லாத சந்தர்ப்பங்களில் , பரதன் முன்னால் சொல்லப் படுபவை.
இனி முதல் நிகழ்வைப் பார்ப்போம். “நின்னிலும் நல்லன்” என்று பரதனைப் புகழ்ந்து இராமனிடத்துச் சொல்கிறாள் கோசலை. உன்னை விட நல்லவன் என்று எதைக் குறித்துச் சொல்கிறாள் கோசலை. வீரம் குறித்தா? வினயம் குறித்தா? அறிவு குறித்தா? ஆண்மை குறித்தா? கல்வி கேள்விகளில் சிறந்தவன் என்பதாகவா? அப்படியெல்லாம் பகுதி பகுதியாகச் சொல்லாமல், ஒட்டுமொத்தமாக குணத்தில் சிறந்தவன் என்று ஒரே போடாகப் போடுகிறாள் கோசலை. எந்தவித முகாந்திரமும் இல்லாமல், விசேஷப் பின்னணி ஏதுமில்லாமல் கோசலை ஆத்மார்த்தமாகச் சொல்லும் வார்த்தைகள் இவை. பரதனின் குணம் இராமனின் குணம் இவற்றை ஒப்பிட்டே கோசலை இவ்விதம் சொல்கிறாள் இவ்வார்த்தைகள் சொல்வதற்குத் தகுதியானவள் கோசலையே. அவளை விட வேறொருவர் இருக்க முடியாது. பிறந்தது முதல் இருவரையும் நன்கு அறிந்தவள் அவள். அவளின் வார்த்தை “நிறை குணத்தவன்; நின்னிலும் நல்லன்” என்பதாகும்.
பாடல் வருமாறு:
முறைமை அன்று என்பது ஒன்று உண்டு, மும்மையின்
நிறை குணத்தவன்; நின்னினும் நல்லனால்;
குறைவு இலன்” எனக் கூறினள், நால்வர்க்கும்
மறு இல் அன்பினில் வேற்றுமை மாற்றினாள்.
கோசலை தன்னுடைய மகன்கள் நால்வர் மேலும் ஒரே மாதிரியான, வித்தியாசம் பார்க்காத அன்புடையவள். மகன்களிடையே வேற்றுமை பார்க்கும் பழக்கத்தைக் கைக்கொள்ளாதவள். வேற்றுமை பாராட்டுதல் என்னும் பழக்கத்தை மாற்றியவள் அவள். ‘வேற்றுமை மாற்றினாள்’ என்பது கம்பன் வரிகள். அவள் தன்னுடைய நான்கு மகன்களிடமும் செலுத்திய அந்த அன்பும் எப்பேர்ப்பட்ட அன்பு தெரியுமா? “மறு இல் அன்பு” – குற்றமற்ற அன்பு. அப்படிப் பட்டவளே சொல்லிவிடுகிறாள், ‘நின்னிலும் நல்லன்’ என்று.
“பரதனுக்குத்தான் அரசுரிமை; எனக்கு அன்று” என்பதாக இராமன் சொன்னவுடன் கோசலை சொல்லும் பதில் இது. “அரசுரிமை பரதனுக்கே” – என்பதில் மறுப்புத் தெரிவிக்க எந்த முகாந்திரமும் இல்லாதபோதும், வலுக்கட்டாயமாக மறுப்புத் தெரிவித்தே ஆக வேண்டும் எனின், அவனுக்குப் பட்டம் கட்டுவது முறைமைக்கு மாறானது என்பதாக மட்டும்தான். மூத்தவனுக்குப் பட்டம் என்பதுதான் முறைமை. ஆக மரபு, நடைமுறை என்ற கண்ணோட்டத்தில் மட்டுமே, பரதனுக்கு அரசுரிமை என்பது தவறானதாக தொனிக்கலாம். அதைத் தவிர்த்த்துப் பார்த்தால் அவனே ஆகச் சிறந்தவன். உன்னை விடச் சிறந்தவன், உன்னை விட நல்லவன், நிறைந்த குணமுடையவன், குறை இல்லாதவன் என்று சொல்கிறாள் கோசலை. ஆக அரசுரிமை பெறுவதற்கு இராமனுக்கு இருக்கும் ஒரே தகுதி, ஒருநாள் முன்னதாக ஜனித்ததுதான்- Seniority மாத்திரமே. இராமன் பிறந்த நட்சத்திரம் புனர்பூசம். பரதன் பிறந்த நட்சத்திரம் பூசம். சில நாழிகை வித்தியாசம்தான். ஏனைய அனைத்துத் தகுதிகளிலும் பரதனே மேம்பட்டவன் என்பதாகப் பொருள் கொள்ளும் வகையில் பாடல் அமைகிறது.
பரதன் இராமனை விட நல்லவன் என்று சொல்வதோடு மட்டும் நிறுத்திக் கொள்ள வில்லை கோசலை. எத்தனை மடங்கு நல்லவன் என்பதைக் கணக்கீடு செய்து ‘மும்மையின் நிறைகுணத்தவன்’ – உன்னைவிட மூன்று மடங்கு நல்லவன் என்று கூறிவிடுகிறாள். நான் ஏற்கனவே சொன்னபடி எந்த விதப் பின்புலமும் இல்லாமல், தானாவே அவள் வாயினின்றும் வரும் சொற்கள் இவை.
முதற்கட்டம் இது.
இராமன் : பரதன் = 1 : 3 என்பதாக ஒரு விகிதாச்சாரம் நிறுவப்படுகிறது. இரண்டாவது கட்டத்தில் இது 1 : 1000 என்பதாக அதிகரித்து விடுகிறது.
பரதனைப் பார்த்து,
“ஆயிரம் இராமர் நின் கேழ் ஆவரோ, தெரியின் அம்மா”
என்கிறான் குகன்.
‘கேழ்’ என்னும் சொல்லுக்கு உவமை; ஒப்பு என்று பொருள். (‘கேழ் இல் பரஞ்சோதி, கேழ் இல் பரங் கருணை, கேழ் இல் விழுப்பொருள்’ என்ற மாணிக்க வாசகரின் திருவெம்பாவை வரிகளை இங்கு நினைவுகூர்வது பொருத்தமாகும்.)
“ஒரு பரதனுக்கு ஈடாக ஆயிரம் இராமன் என்பதாகக் கணக்குச் சொன்னால் கூடப் போதுமோ போதாதோ தெரியவில்லையே அம்மா!” என்று தன்னுடைய விகிதாச்சாரத்துக்குத் திட்டவட்டமான விடை தெரியாமல், அந்த இயலாமை குறித்து அங்கலாய்க்கிறான் குகன்.
இந்நிகழ்வு வரும் கதையின் கட்டம் வருமாறு.
அண்ணனை எப்படியும் மீண்டும் அயோத்திக்கு அழைத்து வந்து அவனை அரசுரிமையை ஏற்றுக்கொள்ளச் செய்வேன் என்ற தீர்மானத்துடன் பரதன் வனம் வருகிறான். அயோத்தி நகர மக்கள் அனைவரும் உடன் வருகிறார்கள். பரிவாரங்களுடனும் , படைகளுடனும் சூழ ராஜ மரியாதையுடன் அண்ணனை வரவேற்று அயோத்திக்கு ஏளப் பண்ண வேண்டும் என்றெண்ணி எல்லோரையும் உடன் அழைத்துக் கொண்டு, காட்டிற்கு வருகிறான் பரதன். அவனைக் குகன் சந்திக்கிறான், பரதன் வந்த நோக்கம் என்னவென்று குகன் வினவ, அதற்கு பரதன் பதில் தருவதாக அமைந்த பாடல் வருமாறு:
தழுவின புளிஞர் வேந்தன் தாமரைச் செங்கணானை
“எழுவினும் உயர்ந்த தோளாய்! எய்தியது என்னை?” என்ன,
“முழுது உலகு அளித்த தந்தை முந்தையோர் முறையினின்றும்
வழுவினன்; அதனை நீக்க, மன்னனைக் கொணர்வான்” என்றான்.
(புளிஞர் – வேடர்; எழு – தூண், வலிமையான தூண்களைப் போன்று உயர்ந்த தோள்)
“அயோத்தியின் அரசுரிமை எவனுக்கு உரியதோ அந்த மன்னனைக் கூட்டிக் கொண்டு போவதற்காக வந்துள்ளேன்; முழுவதாக உலகம் முற்றிலும் ஆண்ட என்னுடைய தந்தை , அவனுடைய முன்னோர்களின் வழிமுறையிலிருந்து வழுவி விட்டான். அத் தவற்றினைச் சரி செய்ய வந்துள்ளேன்” என்று பதில் சொல்லுகிறான் பரதன்.
அதை கேட்ட குகனின் பதில்தான்
தாய் உரை கொண்டு தாதை உதவிய தரணி தன்னைத்
“தீவினை” என்ன நீத்து, சிந்தனை முகத்தில் தேக்கிப்
போயினை என்ற போழ்து, புகழினோய்! தன்மை கண்டால்
ஆயிரம் இராமர் நின் கேழ் ஆவரோ தெரியின் அம்மா!
ஒரு மகனுக்கு வேண்டியவற்றையெல்லாம் செய்து கொடுப்பவர்கள் பெற்றோர்கள் தாம். அவற்றையெல்லாம் தாயும் தந்தையும் இணைந்து, நடத்தி வைப்பார்கள். அன்னையும் பிதாவும் தான் முன்னறி தெய்வம். அவ்விதம் பெற்றோர்களால் தான் அரசுரிமை பெறுகிறான் பரதன். அதில் பிழையொன்றுமில்லை.
தசரதனும், பரதனுக்கு ஆட்சியைத் தர மறுக்கவில்லை. (இராமன் வனம் போக வேண்டும் என்பதைத்தான் மறுக்கிறான்.)
இவ்விதம் அயோத்தியா காண்டத்தின் துவக்கத்தில் இராமன் : பரதன் = 1 : 3 என்றிருந்த விகிதாச்சாரம், கதை மேலே நடக்கையில் அயோத்தியா காண்டத்தின் இறுதியிலேயே, 1 : 1000க்கும் மேல் என்கிற அளவிற்கு அதிகரித்து விடுகிறது. ஒரு காண்டத்துக்குளேயே இத்துணை வளர்ச்சி என்றால் இன்னும் நான்கு காண்டங்கள் போனால் அதன் வளர்ச்சி எவ்வளவு கூட வேண்டும். யுத்த காண்டத்தின் இறுதியில் அந்த விகிதாச்சாரம் 1 : பல கோடிகளுக்கும் மேல் என்பதாகப் பிரம்மாண்டம் கண்டுவிடுகிறது.
அவ்விதம் பல கோடிக்கும் மேல் என்பதாகக் குறிப்பிடப்படும் மூன்றாவது ஒப்பீட்டைச் செய்பவள் மீண்டும் கோசலைதான்.
பாடல் வருமாறு
எண்ணில் கோடி இராமர்கள் என்னினும்
அண்ணல் நின் அருளுக்கு அருகு ஆவரோ?
புண்ணியம் எனும் நின் உயிர் போயினால்,
மண்ணும் வானும் உயிர்களும் வாழுமோ?
இவை கோசலை பரதனைப் பார்த்துச் சொல்லும் வரிகள். பரதனுக்கு ஈடாக எத்தனை கோடி இராமர்கள் என்று கோசலையால் வரையறுத்துக் கூற இயலவில்லை. அதனால் “எண்ணில் கோடி” என்று சொல்லி விடுகிறாள். எண்ணிக்கையில் அடங்காத கோடி இராமர்கள் வந்தாலும் பரதனின் அருளுக்குச் சமமாவார்களோ என்றுகூடக் கோசலை சொல்ல வில்லை. பரதனின் அருளுக்கு அருகில் கூட எண்ணில் கோடி இராமர்கள் வர இயலாது என்பதாகக் கோசலையின் வாசகம் அமைந்து விடுகிறது. இவ்வார்த்தைகளைக் கோசலை சொல்லும் கட்டம் வருமாறு.
பதினான்கு ஆண்டுக் காலம் முடியப் போகிறது. இராமன் வனவாசம் முடிந்து அயோத்தி மீண்டு வரவேண்டிய காலக் கெடு முடியப் போகிறது. ஆனால் அவன் வரும் அறிகுறிகள் ஏதும் தென்படவில்லை. அவனிடமிருந்து எந்தத் தகவலும் இல்லை. அவனுக்கு தசரதன் இட்ட கட்டளை பதினான்கு ஆண்டுக் கால வனவாசம் தான். ஆனால் அந்த ஆணையைப் பரதன் கண்டுகொள்ளவே இல்லை.
இராமன் தனிப்பட்ட முறையில் பரதனுக்கு வாக்குக் கொடுத்துப் போயிருக்கிறான். தகப்பனார் தனக்கு இட்ட கட்டளை ஒருபுறமிருந்தாலும், தன்னுடைய வாக்கினை நிறைவேற்றிக் கொடுக்க வேண்டிய கட்டாயம் இராமனுக்கு உண்டு.
அயோத்தியின் அரசுரிமையை ஏற்றுக் கொள்வதற்குப் பரதன் ஒரு நிபந்தனை விதிக்கிறான் இராமனிடம். பதினான்கு ஆண்டுகள் கழிந்ததும், நீ மீண்டும் அயோத்தி வந்து அரசுரிமையை ஏற்றுக்கொள்ள வேண்டும். “கோ முறை புரிதல்” வேண்டும். அப்படி நீ செய்யத் தவறினால், நான் தீயில் விழுந்து உயிரைப் போக்கிக்கொள்வேன். உன் மேல் ஆணை என்று பரதன் சொல்கிறான். பாடல் வருமாறு:
ஆம் எனில் ஏழ்-இரண்டு ஆண்டில் ஐய! நீ
நாம நீர் நெடுநகர் நண்ணி, நானிலம்
கோமுறை புரிகிலை என்னின், கூர் எரி
சாம் இது சரதம்; நின் ஆணை சாற்றினேன்.
(நாம நீர் நெடு நகர் – பகைவர்களுக்கு அச்சம் தருகிற அகழி நீர் உடைய அயோத்தி நகர்; கோமுறை – அரசாட்சி ; கூர் – மிகுதி ; சாம் – நான் செத்துப் போவேன்; சரதம் – நிச்சயம்)
இதனை ஏற்று இராமன் “அன்னது ஆக” என்றும் ஒப்புக் கொள்கிறான்.
பதினான்கு ஆண்டுக் காலம் கழியப் போகிறது இன்னும் சில நாழிகைகளில் என்று பரதனுக்குச் சோதிடர்கள் வந்து நினைவூட்டிப் போகிறார்கள். அண்ணன் வந்த பாடில்லை. அவன் வருவதற்கான செய்தியோ, ஓலையோ வேறு சமிக்ஞைகளோ இல்லை. அதனால் உடனே பரதன் ஆட்சியைத் தம்பி சத்ருக்கினனிடம் ஒப்படைத்து விட்டு, அக்னி குண்டம் தயார் செய்ய ஆணை இடுகின்றான். தீக்குழி தயாராகிறது. அந்தத் தீயில் பாய்ந்து உயிர்விடும் நிமித்தமாக அதனை வலம் வருகின்றான் பரதன். இந்த நிகழ்வுகள் கோசலையின் காதை எட்ட, அவள் ஓடோடி வருகிறாள் அவ்விடத்திற்கு.
பரதனிடம் “நீ தீப்பாய வேண்டாம். நீ எப்பேர்ப்பட்டவன் தெரியுமா? எண்ணிக்கை இல்லாத கோடி இராமர்கள் வந்தாலும் உனக்கு ஈடாக மாட்டார்களே, புண்ணியத்தின் மறுபிறப்பல்லாவா நீ. அப்பேர்ப்பட்ட நீ உயிர் விட்டு விட்டால் இவ்வுலகமே அழிந்து விடும். இவ்வுலகம் மட்டுமில்லாமல் வானுலகும் அழிந்து விடுமே! அதனால் இம்முயற்சியைக் கை விடுவாயாக” என்று பரதனை கோசலை வேண்டிக்கொள்கிறாள். அக்கட்டத்தில் வரும் பாடல்தான் மேலே சொன்ன
எண்ணில் கோடி இராமர்கள் என்னினும்
அண்ணல் நின் அருளுக்கு அருகு ஆவரோ?
என்று கோசலை சொல்வதாக அமைந்த பாடல். கோடி இராமர்கள் என்று சொல்லியிருந்தாலே போதும், அதற்கு ஒருபடி மேல் சென்று விடுகின்றாள். எத்தனை கோடி என்று திட்டவட்டமாக ஒர் எண்ணிக்கை சொல்ல அவளால் இயலவில்லை. பலப்பல என்று சொன்னாலும் போதாது என்று தொனிக்கும் வகையில், எண் இல் கோடி, எண்ணவே முடியாத அளவு கோடிகள் என்று சொல்லிவிடுகின்றாள் கோசலை.
இவை தவிர, கம்பன் மற்றொரு கட்டத்திலும் சகோதர ஒப்பீடு நிகழ்த்துகின்றான். இம்முறை இந்நிகழ்வு இலக்குவன் பரதன் ஆகிய சகோதரர்களிடையே நடைபெறுகிறது. தன்னை பரதனுடன் ஒப்பிட்டுப் பேசுகிறான் இலக்குவன். எப்பேர்ப்பட்டவன் பரதன், எவ்வளவு சிறந்த வீரன் அவன் என்னைப் போல சோப்ளாங்கியா என்பதாக பரதனைப் புகழ்ந்து பேசுகிறான் இலக்குவன்.
மாயாசீதைப் படலத்தில் வரும் நிகழ்வு இது. மாயா சீதையை சிருஷ்டித்து, அவளை உண்மையான சீதை என்று அனுமனை நம்பச்செய்து, அனுமன் கண்முன்னாலேயே சீதையின் தலையை வாளால் வெட்டிவிடுகின்றான் இந்திரஜித். அத்தோடு நில்லாமல், உடனடியாக அயோத்தி சென்று அங்குள்ள எல்லோரைரயும் அழிக்கப் போகிறேன் எனச் சூளுரைத்து, தன்னுடைய புட்பக விமானத்தில் ஏறி வடதிசை நோக்கிச் சென்று விடுகிறான் அவன். இவற்றைல்லாம் கண்ட அனுமன் சீதை இறந்துவிட்டாள் என்றும், அயோத்தி உறைவோர்க்கெல்லாம் ஆபத்து என்பதையும் உணர்ந்து, உடனடியாக ஓடோடிச் சென்று இராமனிடமும் உடனிருப்பவர்களிடமும் நடந்தவற்றைச் சொல்கிறான். அனைவரும் ஆழ்ந்த சோகத்தில் உறைகிறார்கள்.
இந்திரஜித் அங்கு போய்ச் சேரும் முன்னர் தான் அயோத்திக்குப் போகவேண்டும், அங்கிருப்பவர்களைக் காப்பாற்ற வேண்டும் மிக விரைவாக அங்குப் போக என்ன வழி என்று இராமன், அனுமனிடமும் மற்றுள்ளோரிடமும் வினவுகிறான். இக்கட்டத்தில் இலக்குவன் இராமனுக்குத் தெம்பூட்டும் வகையில் அயோத்தியில் இருப்பவர்களுக்கு இந்திரஜித்தால் ஆபத்து ஒன்றும் நேர்ந்துவிடாது, பரதன் அவனை ஒரே நொடியில் வீழ்த்தி விடுவான், பரதன் எப்பேர்ப்பட்ட வீரன் தெரியுமா, அவன் இலக்குவன் போல இந்திரஜித்திடம் தோற்பவன் அல்லன் என்பதாகச் சொல்கிறான்.
அவ்விடத்து, இளவல், “ஐய! பரதனை அமரின் ஆர்க்க
எவ்விடற்கு உரியான் போன இந்திரசித்தே அன்று;
தெவ்விடத்து அமையின், மும்மை உலகமும் தீந்து அறாவோ?
வெவ்விடர்க் கடலின் வைகல். கேள்” என விளம்பலுற்றான்:
(தெவ்வு – பகை, போர்)
“தீக் கொண்ட வஞ்சன் வீச, திசைமுகன் பாசம் தீண்ட,
வீக்கொண்டு வீழ, யானோ பரதனும்? வெய்ய கூற்றைக்
கூய்க்கொண்டு, குத்துண்டு அன்னான் குலத்தொடு நிலத்தன் ஆதல்,
போய்க்கண்டு கோடி அன்றே? என்றனன், புழுங்குகின்றான்.
“போரில் வீழ்த்துவதாக அயோத்தியை நோக்கிப் போன இந்திரஜித் ஒரு பொருட்டல்ல பரதனுக்கு. இந்திரஜித்தை விட்டுத்தள்ளு. இந்த மூவுலகும் ஓரணியில் திரண்டு எதிர்த்தாலும், அவை தீய்ந்து போகும் அன்றோ பரதனுக்கு முன்னால்? நீ வீணாகக் கொடிய கவலைக் கடலில் மூழ்காதே.”
இவ்வாறு பரதனின் வீரத்தை முதற் பாடலில் புகழ்ந்து சொன்ன இலக்குவன், இரண்டாம் பாடலில் தன்னையும் பரதனையும் ஒப்பிட்டுப் பேசுகிறான். “என்னைப் போல வீரமற்றவன் அல்லன் பரதன். இந்திரஜித்திடம் தோற்றுப் போவதற்கு பரதன் என்ன இலக்குவனா?” என்று தானெ சொல்லிக் கொள்கிறான் இலக்குவன்.
ஒருமுறை நாகபாசத்தாலும் மற்றொருமுறை பிரம்மாஸ்த்திரத்தாலும் இலக்குவனை வீழ்த்தியவன் இந்திரஜித். ஆக “இருமுறை என்னை வீழ்த்த முடிந்தது இந்திரஜித்திற்கு. பரதன் என்னைவிட மிக்க திறமைசாலி. மாவீரன். இந்திரஜித்தின் பாச்சா பரதனிடம் பலிக்காது, அவன் என்ன கேவலம் இலக்குவனா” என்று பரதனைப் புகழ்ந்து அதே சமயம் தன்னை இகழ்ந்து பேசுகிறான் இலக்குவன்.
இந்தச் சகோதர ஒப்பீடும் பரதனை மிக்க உயரத்தில் ஏற்றி வைக்கிறது. பரதன் ஒரு அம்பு கூட விடவில்லை இராமாயணக் காப்பியம் முழுவதும். ஒருமுறை கூட வாளெடுத்துச் சுழற்றவில்லை. என்றாலும் அவன் வீரம் மிக உயர்வாகப் பேசப்படுகிறது. அதுவும் இலக்குவனால். எப்பேர்ப்பட்டவ் இலக்குவன்:
“இலக்குவ! உலகம் ஓர் ஏழும் ஏழும் நீ
“கலக்குவென்” என்பது கருதினால் அது
விலக்குவது அரிது; அது விளம்பல் வேண்டுமோ”
என்று இராமனால் புகழப்பட்ட வீரன் இலக்குவன். அவன் சொல்கிறான், இந்திரஜித்தின் பாணத்தால் வீழ்வதற்கு பரதன் என்ன இலக்குவனா என்று. எப்பேர்ப்பட்ட புகழாரம், எப்பேர்ப்பட்ட வீரனின் வாயால்!
Wow….Superb Write up.
Excellent-o-Excellent….
Pls write this kind of articles more frequently.
dili
கம்பராமாயனத்தில் ஒரு புதிய தரிசனம் போல கானக்கிடைக்கும் இதுபோல ஆழ்ந்து படித்தால் மட்டுமே கானப்படும் முத்துக்களை அழகாக கோர்த்துக்கொடுத்திருக்கிறீர்கள் வரதராஜன் அய்யா…அருமை.. இதுபோல பரதனுக்கு உயர்ந்த இடம் கிடைத்துள்ளது என்பது எனக்குப் புதிய தகவல்..நன்றி
அருமையான ஆய்வு. நன்றி
குன்றுபோல் உயர்ந்திருக்கும் பரதன் இராமன் முன் தன்னை எவ்வாறு தாழ்த்திக் கொள்கிறான் என்பதை வால்மீகி எப்படிச் சொல்கிறார் என்று பார்ப்போம்.
பட்டாபிஷேகம் நடக்கவிருக்கும் நாளன்று, இராச்சிய பாரத்தை இராமனிடம் சமர்ப்பித்துப் பின் வருமாறு சொல்கிறான்.
ஸ்ரீராமா! சத்ருக்களை அடக்குபவரே! குதிரையின் நடையைக் கழுதையும், ஹம்ஸத்தின் நடையைக் காகமும் எப்படி பின்பற்ற இயலாதோ அப்படியே நானும் உங்களது சீரிய நடையைப் பின்பற்ற இயலாதவன்.
கதிம்கர இவாச்வஸ்ய ஹம்ஸஸ்யேவ வாயஸ:
நான்வேது முத்ஸஹே ராம தவ மார்க்க அரிந்தமா (ப.ஸ-5)
எல்லோர்க்கும் நன்றாம் பணிதல்அவருள்ளும்
செல்வர்க்கே செல்வம் தகைத்து
என்ற நெறிக்கு இதைவிட வேறு காட்டு தேவையில்லை
சௌந்தர்
இன்று நம் நட்டு இளைஞர்களுக்கு கடவுள் நம்பிக்கையட்ற தேர்தலுக்கு தேர்தல் சுயநல கூட்டணி மாறும் போலி கம்யுனிச தலைவர் பரதனை பற்றி வேண்டுமானாலும் சில பேருக்கு தெரிந்திருக்க வாய்ப்புண்டு.
ராமாயணம் குறிப்பிடும் உத்தம பிறவியாம் பரதனை பற்றி யாருக்கு தெரியும்.?
ராமாயணம் என்றால் உடனே ராமர் கோயில்
ராமர் கோயில் என்றால் உடனே பி.ஜெ.பி.
பி.ஜெ.பி என்றால் உடனே டிசம்பர்.6
டிசம்பர் 6 என்றால் பாபர் மசூதி இடிப்பு.
ஒவ்வொரு ஆண்டும் வரலாறு காணாத பாதுகாப்பு
தேசிய திருவிழா போல்.
இந்த அநியாயத்தை யார்கேட்பது?
எப்படித்தான் நம் இதிஹாசங்களில் உள்ள நல்ல செய்திகளை இளைஞர்களிடம் கொண்டு செல்வது?
வயிற்றில் இருக்கும்போதே போகோ சானெல்
வயிற்றிலிருந்து வந்தவுடன் கார்ட்டூன் சானல்
கொஞ்சம் வளர்ந்தவுடன்,மானாட மயிலாட
அப்புறம் அவர்களிடம் யார்தான் நெருங்க முடியும்?
நினைத்தால் தலை சுற்றுகிறது.
இந்துக்களின் வோட்டுக்களை பெற்று ஆட்சிக்கு வந்துவிட்டு இந்துக்களை திருடன் என்கிறார்கள்
ராமர் கோயிலில் கட்சியை சேர்ந்தவர்களை அறங்காவலராக நியமித்துவிட்டு
ராமன் எந்த கல்லூரியில் படித்து பொறியாளர் பட்டம் பெற்றான் என்று கேட்கிறார்கள்?
கடவுள் இல்லை என்று ஒப்பாரி வைத்து ஆட்சிக்கு வந்த இந்த கூட்டம் ,கடவுள் இருக்கும் ஆலயங்களில் நிறைய காசு புழங்குவதை கண்டதும்,கோயில்களை அரசுடைமையாகுவதும்,அனாதிகாலம்தொட்டு செயல்பட்டுகொண்டிருக்கும்,வழிபாட்டு முறைகளில் தலையிடுவதும், அதில் மாற்றங்கலை செய்வதும் எந்தவிதத்தில் நியாயம்?
ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற திருமூலரின் வாக்கியத்தை மேற்க்கோள்
காட்டமட்டும் பயன்படுத்திக்கொண்டு, தேவனை கும்பிடும் மதத்திற்கும், கல்லெல்லாம் கடவுள் கிடையாது என்னும் இஸ்லாத்திற்கும் மட்டும் சலுகைகளை அள்ளிவிடுவதும் எந்த விதத்தில் நியாயம்? ,
இந்துக்கள் என்று சொல்லிக்கொண்டு ஜந்துக்கள் போல் செயல்பட்டுகொண்டிருந்தால் இதுவும் நடக்கும்,இன்னமும் நடக்கும்.