கம்பராமாயணம் – 19 (Kamba Ramayanam – 19)

03. நகரப் படலம் – Canto of the City. (16 – 20)

அந்தமா மதில்புறத்து, அகத்து எழுந்து அலர்ந்த, நீள்
கந்தநாறு பங்கயத்த கான(ம்)மான மாதரார்
முந்துவாள் முகங்களுக்கு உடைந்துபோன மொய்ம்பு எலாம்
வந்துபோர் மலைக்க, மாமதில் வளைந்தது ஒக்குமே. 16

சொற்பொருள்: கந்தநாறு – நறுமணம் கமழ்கின்ற. வாள் – ஒளி. மொய்ம்பு – வலிமை. மலைக்க – போரிட, போர் தொடுக்க

கோட்டையைச் சுற்றிலும் பரந்து கிடக்கும் அகழிக்குள் பூத்திருக்கும் நறுமணம் கமழும் தாமரைக் கூட்டங்களைப் பார்த்தால், கோசல நாட்டில் உள்ள பெண்களின் முக எழிலுக்கு ஈடாக மாட்டாமல் தோற்றுப்போய் ஓடிய தாமரைகள் எல்லாம் ஒன்றாகக் கூடி, தங்களுடைய சக்தியை எல்லாம் திரட்டிக் கொண்டு, ‘உங்கள் அழகுக்கு நாங்கள் ஈடாக மாட்டோமா இல்லையா என்பதைப் பார்த்துவிடுவோம்’ என்ற கருத்தோடு படையெடுத்து வந்து, அந்த மதிற்புறம் முற்றிலும் சூழ்ந்து நிற்கின்றனவோ என்று தோன்றச் செய்கின்றது.

நாட்டுக்கு வெளிப்புறத்தில் அகழி இருப்பதால், எல்லைக்கு வெளியே மலர்ந்த தாமரைகளை, மகளிருடைய அழகுக்கு ஆற்றாமlotus_pondல் தோற்றோடிப் போனவை என்று வர்ணித்தார். அவை பெருங்கூட்டமாக மதிலுக்கு வெளியே மலர்ந்திருப்பதால், ‘இவையெல்லாம் இந்த நாட்டை முற்றுகை இடத்தான் இப்படித் திரண்டிருக்கின்றன’ என்று கற்பித்தார். அப்படிப் போர்தொடுக்க ஒரு காரணம் வேண்டுமல்லவா? அதையும் பொருந்தக் கூறினார்.

Translation: Were these lotuses blossoming in their thousands in the moat around the fortification of the City, defeated in lustre, in comparison to the brilliance of the countenance of the women of Ayodhya (and therefore are to be found outside the City?) (And going by their sheer numbers, methinks) They are laying a siege around the bulwark, collecting all their strength together to vie with the beauty of those who defeated them?

Elucidation: The dyke around the wall is full of lotus blooms. So dense and thick is the growth and blossoming that they wear the appearance of a ‘lotus army’ laying a siege around the city walls. A poetic delight indeed.

சூழ்ந்தநாஞ்சில் சூழ்ந்தஆரை சுற்றும்முற்று பார்எலாம்
போழ்ந்தமா கிடங்கிடைக் கிடந்துபொங்கு இடங்கர்மா,
தாழ்ந்தவங்க வாரியில், தடுப்பஒணா மதத்தினால்,
ஆழ்ந்தயானை மீள்கிலாது அழுந்துகின்ற போலுமே. 17

சொற்பொருள்: சூழ்ந்த – சூழ்ச்சித் திறனால் உருவாக்கப்பட்ட. (சூழ்ச்சி என்றால், ஆழ்ந்த சிந்தித்து எடுக்கப்பட்ட முடிவு என்பது பொருள். ஊழிற் பெருவலி யாவுள? மற்றொன்று சூழினும் தான் முந்துறும்’ என்று வள்ளுவர் சொல்வதைப்போல்.) பார் எலாம் – பாறையை எல்லாம், நாஞ்சில் – மதிலின் ஓர் உறுப்பு. ஆரை – மதில். கிடங்கு – அகழி (இந்த இடத்தில்). இடங்கர் – முதலை. வங்க(ம்) – கப்பல்.

நன்கு ஆலோசித்துத் திட்டமிடப்பட்டு எழுப்பப்பட்டுள்ள (நகர) மதில் சுவரைச் சுற்றிலும் உள்ள பாறைகளை எல்லாம் பிளந்து, மிக ஆழமாக உருவாக்கப்பட்ட அகழிகளில் பொங்கி எழுவதும், மீள வீழ்வதுமாகத் திரியும் பெரிய முதலைகளைப் பார்த்தால், அடக்க முடியாத மதம்பிடித்த யானைகள் (தம்முடைய மதமயக்கத்தினால்) பெரிய கப்பல்கள் இயங்குகிcrocodile1ன்ற கடலி்ல் வீழ்ந்து, அதிலிருந்து மீளமுடியாமல், நீருக்கு மேலே எழுவதும் மீண்டும் மீண்டும் அழுந்துவதுமாகக் கிடப்பதைப்போல் இருக்கிறது.

Translation: The huge crocodiles in the deep ditch around the well thought-out and designed bulwark of the city, keep surfacing for a while and immersing deep again. This (scene) wears the appearance of massive elephants in uncontained rut, (having lost control over themselves) falling in the sea—full of ships—and then submerging and surfacing, struggling to get out of there.

Elucidation: The fortification is well designed; the ditch around is deep enough to provide asylum to crocodiles as large as elephants. And the crocodiles keep moving about, thus providing impregnable security to the city.

ஈரும் வாளின் வால் விதிர்த்து, எயிற்று இளம் பிறைக் குலம்
பேர மின்னி வாய் விரித்து, எரிந்த கண் பிறங்கு தீச்
சோர, ஒன்றை ஒன்று முன் தொடர்ந்து சீறு இடங்கர் மா,
போரில் வந்து சீறுகின்ற போர் அரக்கர் போலுமே. 18

சொற்பொருள்: ஈரும் – வகிரும்; விதிர்த்தல் – நடுங்குதல்; பக்கத்துக்குப் பக்கம் அசைதல். கிழிக்கும். எயிறு – பல். இடங்கர் – முதலை.

கூர்முனைகள் நிறைந்த தம்முடைய வால்களைப் பக்கத்துக்குப் பக்கம் வீசியபடியும்; வரிசையான பிறைச்சந்திரனைப் போன்ற வளைந்த பற்கள் வெளியே தோன்றுமாறு வாயைப் பிளந்தபடியும்; கோபமிகுதியால் கண்களில் தீப்பொறி பறப்பதுபோன்ற தோற்றத்தைக் கொண்டும், ஒன்றை ஒன்று தொடர்ந்தபடி (அந்த அகழியில்) சீறிக்கொண்டிருக்கும் முதலைகளின் கூட்டம், போர்க்களத்தில் வந்து ஆர்ப்பரித்துச் சீறும் அரக்கர்களின் கூட்டத்தை ஒத்து இருந்தது.

Translation: Numerous alligators swam in the ditch around the fortress, waving their saber-tipped saw-like tails sided-to-side for their swords; showing rows and rows of crescent like teeth, with their mouths menacingly opened wide, swarming about in the ditch resembled battlions of demons on the battlefield, swirling their swords about with their gory teeth exhibited threateningly.

Elucidation: The security offered by the natural inhabitants of the ditch around the fort, with their tails for swords and the threat offered by the mere sight of their mouths wide opened is described, underlining the well-secured high-protection of the fortress.

ஆளும் அன்னம் வெண் குடைக் குலங்களா, அருங் கராக்
கோள் எலாம் உலாவுகின்ற குன்றம் அன்ன யானையோ,
தாள் உலாவு பங்கயத் தரங்கமும் துரங்கமா,
வாளும், வேலும், மீனம் ஆக, மன்னர் சேனை மானுமே. 19

சொற்பொருள்: கரா – முதலை/ தரங்கம் – அலை. துரங்கம் – குதிரை

அந்த அகழியில் நீந்தும் அன்னங்களே (அரசனுடைய) வெண்கொற்றக் குடைகளாகவும்; முதலைகளே—கிரகங்களெல்லாம் சுற்றிவரும்படியான பெரிய—மலைகளை ஒத்த யானைப் படைகளாகவும்; வீசும் அலைகளில் அலைவுறும் தாள்களைக் (தண்டுகளைக்) கொண்ட தாமரைகளே குதிரைப் படைகளாகவும்; அங்கு நீந்தித் திரிகின்ற மீன்களே வாளாகவும், வேலாகவும் தோற்றமளித்து, அந்த அகழியே மன்னனுடைய தேர், யானை, குதிரை, காலாள் என்ற நால்வகைப் படையாகத் திகழ்ந்தது.

கண்களுக்கு மீனையும், வேலையும், வாளையும் உவமை சொல்லும் வழக்கத்தைச் சற்றே மாற்றி, மீன்களை வேலுக்கும் வாளுக்கும் உவமையாகப் பயன்படுத்தியிருக்கிறான் கவி. நகாசு வேலை.

Translation: Swans swimming in the ditch resembled the Regal White Canopy; alligators resembled huge hill-like elephants; lotuses floating on their long stems in the waves of the waters moved forth like arrays upon arrays of horses; and the fish swimming in the waters were the swords and lances. Thus, all the four divisions of the King’s army—Chariot, Elephant, Horse and Infantry—found their place right in the ditch around the bulwark.

Elucidation: It is common in literature of those days to liken human (especially women’s) eye to swords, the head of lance and also to fish. The poet works his way aboutt from the other side. He picks up the fish that is used as similie and mixes all the metaphors to create a rich imagery of the schools of fish moving about like infantry wielding swords and lances.

விளிம்பு சுற்றும் முற்றுவித்து வெள்ளி கட்டி, உள்ளுறப்
பளிங்கு பொன்தலத்து அகட்டு அடுத்துறப் படுத்தலின்,
‘தளிந்த கல்தலத்தொடு, அச் சலத்தினை, தனித்துறத்
தெளிந்து உணர்த்துகிற்றும்’ என்றல் தேவராலும் ஆவதே? 20

சொற்பொருள்: —

அந்த அகழியின் வெளி எல்லைகளை எல்லாம் வெள்ளியினாலே அமைத்து, கரைகளின் உட்புறத்தில் பொன்தகடுகளை வேய்ந்து, அடித்தளம் முழுவதையும் பளிங்குகளால் நிறைத்து இருந்த காரணத்தால், ‘இது தரை, இது தண்ணீர்’ என்று பிரித்துப் பார்த்து உணர தேவரால்கூட இயலாத ஒன்றாக இருந்தது.

சூரிய, சந்திர ஒளியால் நீரின் விளிம்புகள் வெள்ளிக் கோடுகளாக மின்னுவதையும், நீர்த்தடங்களின் உட்புறம் பொன்தகடுகளாகப் பளபளப்பதையும் குறிப்பிடுகிறான். அகழியின் அடித்தளம் பளிங்கு என்பதால், தரைக்கும் தண்ணீருக்கும் வேறுபாடு தோன்றவில்லை என்று வர்ணிக்கிறான்.

Translation: The outer edges lined with silver, inner bannks inlaid with gold and with a crystal underlay below the waters, it was impossible even for the celestials to diffrentiate the water from the land.

Elucidation: Sun or Moon lit waterbodies naturally shimmer in silver at the edges and glow in gold on the surface. Clear waters have the visual effect of crystal. And the Poet moves on with his mind magic to weave a rich imagery.

19 Replies to “கம்பராமாயணம் – 19 (Kamba Ramayanam – 19)”

 1. இயற்கையோடு இணைந்த வாழ்வு,
  இயற்கையை போற்றி பாதுகாத்தது இந்து சனாதன தர்மம்.
  நம் நாடு முழுவதும் வனமாக இருந்தது.
  நாத்திக பிரசாரத்தினாலும் தீண்டாமை கொள்கையினாலும்,வடமொழி எதிர்ப்பு பிரசாரத்தினாலும், மற்ற மத போதகர்களின் பொய் பிரச்சாரமும் சேர்ந்து கொண்டு இன்று வனங்களில் பெரும்பகுதி அழிக்கப்பட்டு விட்டன. தெய்வம் எனப் போற்றப்பட்ட நதிகள், நீர் நிலைகள், வாயு மண்டலம் நச்சு படுத்த்தபட்டுவிட்டன.
  சொர்க்கமென திகழ்ந்த இப்பூவுலகம் நரகமாகிவிட்டது.
  ஆன்மிகம் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டு, போலிகளின் ஆதிக்கமும், மூட நம்பிக்கைகளும் சேர்ந்து கொண்டு மக்களை குழப்பி கொண்டிருக்கின்றன.
  நம் முன்னோர்களின் பெருமையை எடுத்து சொல்பவர்கள் மிக குறைவு. அதைவிட அதை காது கொடுத்து கேட்பவர்கள் மிக மிக அரிது.
  தங்களின் விளக்கங்கள் அருமை.

 2. கம்ப சூத்திரத்துக்கு விளக்கம் கொடுக்கம் ஹரிகிக்கு நன்றி.

 3. பட்டாபிராமன், உங்களுடைய கருத்துக்கு நன்றி. எதிர்வினைகள்தான் அடுத்த தவணையைத் தொடரும் உற்சாகத்தை அளிக்கின்றன. மீண்டும் நன்றி.

  கார்கில் ஜே: கம்ப சித்திரம் வேறு. கம்ப சூத்திரம் வேறு. நான் இதுவரையில் கம்ப சித்திரத்தைதான் விளக்கிக் கொண்டிருக்கிறேன். கம்ப சூத்திரம் என்னும் அற்புதத்தை அது இடம்பெறும் கட்டங்களில் விளக்குகிறேன். என்ன ஒண்ணு. அதுக்கு ரொம்ப பொறுமையாகக் காத்திருக்க வேணும். ஒரு பாட்டில் ஒரு முடிச்சைப் போட்டு வைப்பான். கவனிக்கக் கூட மாட்டோம். ஒரு ஆறாயிரம் பாடல்கள் கழித்து, ஏதோ ஒருவகையில் இந்த (முதல்) பாடலில் போட்டுவைத்திருக்கும் முடிச்சை நினைவுறுத்தும் வகையில் எதையோ ஒன்றைக் கொண்டுகூட்டி, முதல் பாடலில் போட்ட முடிச்சை அவிழ்ப்பான். சில சமயங்களில் 30 பாடல்கள் தள்ளியும் வருவதுண்டு. ஓரிரு பாடல்கள் ஆறு, ஏழாயிரம் பாடல்கள் தள்ளியும் வரும். கம்ப சூத்திரத்தைப் பிடிப்பது என்பது மிகப் பெரிய அளவில் வேலை வாங்கும் விஷயம். பொறுமையும் விடாப்பிடியாகத் திரும்பத் திரும்பப் படிப்பதும் மட்டுமே அதைச் சாத்தியமாக்கும். என்னளவுல் சாத்தியமானவற்றைப் பகிர்ந்துகொள்கிறேன். தருணங்கள் வரட்டும். அதுவரையில் பொறுமையாக இருப்பதே எனக்குப் பெரிய ஊக்கம். நன்றி ஜே.

 4. சரிதான்.. சூத்திரம் வேறயா? கம்ப சித்திரமே சொன்னால்தான் விளஙுகுகிறது. 10,000 பாட்டும்

  இவ் வண்ணம் நிகழ்ந்த வண்ணம் இனி இந்த உலகுக்கெல்லாம்
  உய்வண்ணம் இன்றி மற்றோர் துயர் வண்ணம் உறுவதுண்டோ
  மை வண்ணத்து அரக்கி போரில் மழை வண்ணத்து அண்ணலே உன்
  கை வண்ணம் அங்கு கண்டேன் கால் வண்ணம் இங்கு கண்டேன்

  அப்டீங்கற மாதிரி ஈஸியாவா இருக்கு?

 5. கம்பன் என்றால் கம்பத்திலிருந்து வெளிப்பட்டு ஹிரண்யனிடமிருந்து (ஹிரண்யம் என்றால் தங்கம்-மனிதர்களை பொன்னாசையிலிருந்து பகவான் நாராயணன் விடுவித்ததாகக் கூட கொள்ளலாம்) பக்த பிரகலாதனை காப்பாற்றிய நரசிங்கப்பெருமானைக் குறிக்கும். ஒருவேளை நரசிங்கப் பெருமானே கம்ப நாட்டாழ்வாராக அவதாரம் செய்து ராமபிரானின் சரித்திரத்தை எழுதினானோ என்று நினைக்க தோன்றுகிறது.

 6. உண்மைதான் திரு பட்டாபிராமன். இந்தக் கவி ஆற்றலைப் பார்த்துத் திகைத்துப் போய்தான் ‘கம்பன் என்றொரு மானிடன் வாழ்ந்ததும்’ என்று பாரதி பாடினானோ என்றுகூடத் தோன்றுகிறது. ‘இவன் மனிதனா, இல்லை மனித ஆற்றலுக்கெல்லாம் மீறிய வேறேதேனும் சக்தியா’ என்ற திகைப்பு ஏற்பட்டு ‘இல்லை, இவன் ஒரு மானிடன்தான்; அப்படி இருப்பதே இவனுக்குப் பெருமை’ என்று பாரதி தீர்ப்பே எழுதியிருக்கிறான் என்று நினைக்கிறேன்.

  என்னுடைய தனிப்பட்ட அபிப்பிராயம். கம்பராமாயணம் என்னை ஈர்க்கும் அளவுக்குக் கம்பனைச் சுற்றியும் அவனுடைய பெயரையும் வாழ்வையும் சுற்றியும் படர்ந்துள்ள கற்பனைகள் என்னை ஈர்ப்பதில்லை. சரியாக ஆவணப்படுத்தப் படாவிட்டால், பாரதியைக்கூட இத்தகைய புனைந்துரைகள் வெகுவிரைவில் பற்றும் என்பதைச் சொல்லவே தேவையில்லை.

 7. நான் பள்ளீச்சிறுவனாக இருந்தபோது கல்கியில் திரு.டி.கே.சி.அவர்கள் கம்பன் தரும் காட்சி என்று எழுதி வந்தார்.அப்பபோது அதை அனுபவிக்க தெரியவில்லை. இப்போது திரு.ஹரிகி அவர்களின் கட்டுரையைப் படித்து கம்பனின் நா வண்மையையும் ஹரிகி அவர்களின் எழுத்தாற்றலையும் சேர்ந்து ரசிக்கும் பேறு பெற்றேன்
  E.V.S..கிரி

 8. திரு.ஹரிகிருஷ்ணன் அவர்களே,

  கம்பனின் பாடலைப் பதம் பிரித்து வெளியிட்டு இருக்கிறீர்கள். நன்று. பதம் பிரிக்காமல் மூலப்பாடலையும் இதனுடன் வெளியிட்டால் மிகவும் நன்றாக இருக்கும். ஏனென்றால் அப்பாடலைக் கம்பன் எழுதியபடி படிக்கும் போதுதான் சுவையாக இருக்கும். உரையாசிரிகள் பாடலைப் பதம் பிரித்து வெளியிடுவதற்குக் காரணம் பக்கங்களைக் குறைப்பதற்காகவே. அப்படி வெளியிடுவது பாடலின் பொருளறிய மட்டுமே உதவும்.

  ‘அகத்து எழுந்த’ என்பதை ‘அகத்தெழுந்த’ என்று படிக்கும் பொழுதுதான் இயல்பாக உள்ளதல்லவா…… சிந்தித்துப் பார்த்தால் புரியும் என்று நினைக்கிறேன்.

 9. திரு.ஹரிகிருஷ்ணன் அவர்களே,

  கம்பராமாயணத்திற்கு யாரெல்லாம் உரை எழுதியிருக்கிறார்கள்? எது சிறந்த உரையாகக் கருதப்படுகிறது? நல்ல உரை ஒன்றை வாங்கிப் படிக்க வேண்டும் என்ற ஆசை எனக்கு. தெரியப்படுத்தினால் மிகவும் மகிழ்ச்சி அடைவேன்.

  என்றும் அன்புடன்
  பா.மாரியப்பன்.

 10. திரு மாரியப்பன்,

  கம்பராமாயண உரை பலரால் செய்யப்பட்டுள்ளது. மிக எளிய, சாதாரணத் தமிழ்ப் பயிற்சி உள்ளவர்களுக்கு என்றால் வர்த்தமானன் வெளியிட்டுள்ள உரை மிகச் சிறந்தது. ஒரு பக்கம் பாடல், எதிர்ப்பக்கம் உரை என்று வெளியிடப்பட்டுள்ளது. ஆனால், பயிற்சி உள்ளவர்களுக்கு இது போதாது. சில உரைப் பிழைகளும் இப்படிப் பட்டவர்கள் கண்ணில் தென்படும்.

  தமிழ்ப் பயிற்சி உடையவர்களுக்கு என்றால் வைமுகோவின் உரையே பெரிதும் போற்றப்படும் ஒன்று. சென்னை உமா பதிப்பகம் அண்மையில் வெளியிட்டிருக்கிறது. விலாசம்:171 (புதிய எண் 18) பவளக்காரத் தெரு, மண்ணடி, சென்னை. தொலைபேசி எண்:2521 5363, 2525 0092. மொத்தம் ஏழு தொகுதிகளாக வந்திருக்கிறது. விலை ரூ.2500.

  இதைப் போலவே சிறந்த உரை என்றால் சென்னை உவேசா நூல் நிலையம் வெளியிட்டிருக்கும் உரை. மிகமிகப் பயனுள்ள உரை. ஒரு சொல்லை எடுத்தால், அந்தச் சொல் எங்கெங்கெல்லாம், யார்யாரால் எப்படியெப்படிப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது என்பன போன்ற concordance எல்லாம் கொண்ட உரை. நான் முதன்முதலில் நூலகத்தில் எடுத்துப் படித்த உரையும் இதுவே. இப்போது கிடைக்கிறதா என்பது தெரியவில்லை. கிடைத்தால் வாசகர்களுடைய பேறு அது.

 11. திரு மாரியப்பன், நீங்கள் சொன்னது:
  “கம்பனின் பாடலைப் பதம் பிரித்து வெளியிட்டு இருக்கிறீர்கள். நன்று. பதம் பிரிக்காமல் மூலப்பாடலையும் இதனுடன் வெளியிட்டால் மிகவும் நன்றாக இருக்கும்.”

  சிந்தித்துப் பார்த்தால் விளங்கும் என்றும் குறிப்பிட்டிருக்கிறீர்கள். இந்த விஷயத்தில் சிந்திக்க வேண்டியதே இல்லை. நானும் உங்கள் கட்சிக்காரன்தான். ஆனால், அப்படிச் செய்தால் இநதத் தலைமுறைக்குப் புரிவதில்லை. பாரதியின் பாஞ்சாலி சபதத்தையே சொல்சொல்லாகப் பிரி்த்து எழுதும்படி கேட்கிறார்கள். அப்படி பாஞ்சாலி சபதத்துக்கு உரை எழுதும்போது, இரண்டுவிதமாகவும் எழுதினேன்.

  ஆனால் கம்பனுக்கு அப்படிச் செய்வதில் சற்று சிரமம் உள்ளது. பத்தாயிரத்துச் சொச்சம் பாடல்களையும் இரண்டிரண்டு முறை தட்டெழுதி, அதன் பிறகு உரை எழுதி, அதன் பிறகு ஆங்கில மொழிபெயர்ப்பு செய்து என்று அதிக உழைப்பும் நேரமும் பிடிக்கும் காரியம். மூலத்தை யாராவது தட்டிக் கொடுத்தார்கள் என்றால் எனக்கு இரண்டுவிதமாகவும் எழுதவதில் ஆட்சேபணை இல்லை. நான் முதுகுத் தண்டில் பிரச்சினை ஏற்பட்டு, அதிக நேரம் அமரமுடியாத நிலையில் இருக்கிறேன். இப்போது செய்துகொண்டிருக்கும் விதத்திலாவது குறைந்தபட்சமாகச் செய்து, இந்தக் காரியத்தை முடித்துவிட வேண்டும் என்று ஆர்வம் நிறைந்தவனாக இருக்கிறேன். இப்படிச் செய்தாலே, முடிப்பதற்குக் குறைந்தது ஐந்தாறு ஆண்டுகள் ஆகும்.

  என் சிரமத்தைப் புரிந்துகொள்வீர்கள் என்று நம்புகிறேன். நன்றி.

 12. தங்களது சிரமம் எனக்குப் புரிகிறது. ஒரு எளிய வழி. ‘https://www.tamilvu.org’ என்ற இணைய முகவரியிலிருந்து பாடலை copy paste செய்து கொள்ளலாம். copy செய்தவை tab format. ‘https://www.suratha.com/reader.htm
  tab’ என்ற இணைய முகவரியில் paste செய்து unicode ஆக மாற்றிக் கொள்ளலாம். மூலப் பாடலை நீங்கள் தட்டச்சு செய்து கொள்ளலாம்.

 13. நன்றி…. திரு.ஹரிகிருஷ்ணன் அவர்களே,

  வைமுகோவின் உரையும் சென்னை உவேசா நூல் நிலையம் வெளியிட்டிருக்கும் உரையும்
  படிப்பதற்கு எளிமையானவையா? சில நேரங்களில் பாடலைக் கூட புரிந்து கொள்ளலாம். சில பேருடைய உரைகளைப் புரிந்து கொள்வது மிகவும் கடினம். அதனால்தான் கேட்கிறேன்.

 14. திரு மாரியப்பன்,

  \\வைமுகோவின் உரையும் சென்னை உவேசா நூல் நிலையம் வெளியிட்டிருக்கும் உரையும்
  படிப்பதற்கு எளிமையானவையா? \\

  எது எளிமை என்பதன் அளவுகோல் ஆளுக்காள் மாறுபடும். உங்களுக்கு எளிதானதாகத் தோன்றுவது எனக்குக் கடினமானதாகத் தோன்றலாம். ஆனாலும், வைமுகோ உரை என்னளவில் எளிதாகத்தான் இருக்கிறது. உவேசா நூல்நிலைய உரையும் அவ்வாறே. மிகமிக எளிய உரை என்றால் வர்த்தமானன் பதிப்பகத்தார் வெளியிட்டுள்ள உரையைப் படிக்கலாம் என்றும் சொல்லியிருக்கிறேன். உத்தரகாண்டத்தையும் (இரண்டு தொகுதிகள்) சேர்த்து மொத்த ராமாயணமும் ரூ.1200-1300க்குள் கிடைக்கும். ஒட்டக்கூத்தர் இயற்றிய உத்தரகாண்டத்தை வர்த்தமானன் பதிப்பகத்தார் மட்டுமே வெளியிட்டிருக்கிறார்கள்.

  ஆகவே, உங்களுடைய பயிற்சியின் அளவு தெரியாத நிலையிலும்; பலதரப்பட்ட வாசகர்களுக்கும் பயனுள்ள வகையிலும் வெவ்வேறு தரமுள்ள உரைகளைப் பற்றிச் சொன்னேன். அவரவருக்கு எது தேவை என்பது அவரவர் தீர்மானிக்கவேண்டிய ஒன்று. எளிய தமிழில் நல்ல உரையையும்; தமிழே தெரியாவிட்டாலும் கம்பனைப் புரிந்துகொள்வதற்கு ஏதுவாகவும்தான் நானும் உரை எழுதியும், மொழிபெயர்த்தும் கொண்டிருக்கிறேன். என்னுடைய உரையைக்கூட படிக்கலாம். மீண்டும் நன்றி.

 15. In the stanza 58 the face of the child is depicted as moon and hand of the mother is depicted as Lotus. When approaching the face to feed it the fingers of the hand joins. This poetic beauty may also be included in the narration please.

 16. கம்பனின் இராம காதை படிக்கப் படிக்க சுவை குன்றாதது. கம்பனின் கவி அமுதின் சுவையைச் சொல்வதா? இராம காவியத்தின் கதையோட்டத்தின் அழகைச் சொல்வதா? பால காண்டத்தில் சொன்ன ஒரு விஷயத்தை யுத்த காண்டத்தில் பிணைத்து விளக்கும் அழகைச் சொல்வதா? அடி முதல் முடி வரை அழகும் சுவையும் கொண்டது கம்ப ராமாயணம். கம்ப ராமாயணம் முழுவதையும் உரைநடையில் ஒரு Blog இல் நானும் கொடுத்திருக்கிறேன். விரும்பினால் படித்துப் பாருங்கள். உங்கள் கருத்துக்களைச் சொல்லுங்கள்.
  https://www.kambaramayanam-thanjaavooraan.blogspot.com

 17. தங்களின் கம்பராமாயண விளக்கவுரை மிக நன்றாக இருக்கிறது. மிக நீண்டகாலமாக இது குறித்து தெரியாமல் இருந்து நேரத்தை நான் வீணாக்கி இருக்கிறேன். தங்கள் பணியை நான் போற்றி வணங்குகிறேன். வளர்க தங்கள் பனி. ம.ச.அமர்நாத்

 18. ஐயா ஹரி கிருஷ்ணன், உங்கள் கம்பராமாயண உரை மிக எளிமையாக உள்ளது,நன்றி

 19. மிகும் அழகாக இருந்தது ., எனக்கு ரொம்ப பிட்கும் ராமாயணம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *