“நவீனத்தை ஒதுக்கித் தள்ளிவிட்டு பழைமையோடு இயைந்த வாழ்க்கையை வாழ்வதுதான் ஆன்மிகம் என்று யாரும் சொல்லிவிடவில்லை. பயப்படவேண்டாம்”, தனக்கேயுரிய சிரிப்போடு பேச்சை ஆரம்பிக்கிறார் தயானந்த சரஸ்வதி சுவாமிகள். செல்பேசி இல்லாமல் உயிர்வாழ முடியாது என்று அவர் விளக்கத்தை தொடரும்போதே பின்வரிசையிலிருந்து செல்பேசி ஒலிக்கிறது. எங்கும் சிரிப்பொலி.
காமராஜர் ஹால் நிரம்பியிருக்கிறது. இருக்கை கிடைக்காமல் நடைபாதையோரமாய் ஒடுங்கி உட்கார வேண்டியிருந்தது. இருபதுகளில் ஆரம்பித்து எண்பதுகள் வரை வயது வித்தியாசமின்றி நிறைய பேர் வந்திருந்தார்கள். பத்மா சுப்ரமணியத்திடம் சொர்ணமால்யா ஏதோ சந்தேகம் கேட்டுக்கொண்டிருந்தார். கணவரோடு வந்திருந்து அவ்வபோது கண்மூடி தியானித்த அனுராதா ஸ்ரீராம், சகோதரர் சகிதம் வந்திருந்து கடைசிரை செல்போனை ஸ்பீக்கர் பக்கம் வைத்திருந்த லதா ரஜினிகாந்த் என விஐபிக்கள்
கூட்டம் முன்வரிசையில். ஒவ்வொரு ஜூன் மாதமும் நடப்பதுதான். ஒரு வார காலமாக மாலைவேளைகளில் நடைபெற்று வந்த சுவாமிஜியின் உபன்யாச கூட்டத்திற்கு குறைச்சலில்லை. Turning Adversity to One’s advantage – இதுதான் சுவாமிஜி பேசிய தலைப்பு.
கொஞ்சம் ஹாஸ்யம், கொஞ்சம் அரசியல் நிறைய ஆன்மிகம் என சுவாமிஜியின் பேச்சில் சுவராசியத்திற்குக் குறைவில்லை. அன்றாட வாழ்க்கைப் பிரச்னைகளில் ஆரம்பித்து உலகளாவிய பொருளாதாரப் பிரச்னை வரை பல இடங்களைத் தொட்டுச் செல்கிறது. கட்டுப்பாடுகளற்ற சுதந்திரமான வணிகம்தான் பொருளாதாரப் பிரச்னைக்கு காரணம் என்று கம்யூனிஸ்ட் தோழர்களைப் போல் பேச ஆரம்பிக்கிறார். அடிப்படைக் கட்டமைப்பில் உள்ள குளறுபடி, பொருளாதாரத்தைக் கட்டுப்படுத்தும் புதிய காரணிகள், டிமாண்ட் சப்ளை தியரி என்று விலாவாரியாக பொருளாதாரம் பேசிவிட்டு சட்டென்று அரசியலுக்குஹ்ட் தாவுகிறார்.” உலகப் பொருளாதார சீர்குலைவுக்கு சீனாதான் காரணம், இல்லையென்றால் சீனாவின் இரட்டை வேடத்தைப் புரிந்து கொள்ளாமல் ஏமாந்து நிற்கும் நாடுகள்தான் காரணமாக இருக்க முடியும்.”
”பிரச்னை எப்போதும், எங்கும் இருக்கத்தான் செய்கிறது. அதைப் பற்றிக் கவலைப்படாமல் ஆண்டவனின் பிரசாதமாக நினைத்துக்கொள்ளவேண்டும்” என்று அடுத்த கட்டத்திற்கு நகர்கிறார். ”விட்டுக்கொடுங்கள். காயப்படும்வரை அனைத்தையும் விட்டுக்கொடுங்கள். விட்டுக்கொடுப்பது என்பது வெயிட் லிப்ட் தூக்குவது போன்றது. வெறும் குவளையை வைத்துக்கொண்டு வெயிட் லிப்ட் தூக்கமுடியாது. தூக்க முடிந்த பொருட்களைத் தூக்குவது வெயிட் லிப்ட் அல்ல. கஷ்டப்பட்டுச் செய்தாக வேண்டும். அதற்கு எளிதில் தூக்க முடியாத, எடையுள்ள கல் வேண்டும். உங்களால் முடிந்த வரை சுமப்பதுதான் வாழ்க்கை. முடிந்தவரை விட்டுக்கொடுங்கள். முடிந்தவரை உங்களது நேரத்தைச் செலவிடுங்கள். முடிந்தவரை அடுத்தவர்களைப் பேசவிட்டு, கவனமாக கேட்டுக்கொள்ளுங்கள். நிறைய பேருக்குத் தாங்கள் பேசுவதைக் கேட்பதற்குக் காதுகள் தேவை. அவர்களை உற்சாகப்படுத்தி, பாராட்டி, கஷ்டம் வந்தால் அனுதாபம் தெரிவிக்க வேண்டும். அதையும் முடிந்தவரை செய்துவிடுங்கள்”.
பேச்சு இப்போது இந்தியா பக்கம் திரும்புகிறது – “இந்தியா இந்த உலகிற்கு செய்ய வேண்டியது இன்னும் நிறைய இருக்கிறது. இந்து மதத்திற்கும் பௌத்தத்திற்கும் பொதுவான விஷயங்கள் நிறைய உண்டு. குறிப்பாக அகிம்சை. இரு தரப்பும் அதை உறுதியாக நம்பினால் கிழக்காசியாவில் நிச்சயம் குண்டுகள் வெடிக்காது, மனிதர்கள் மரணிக்க வழி இருக்காது. அகிம்சைதான் கிழக்காசியாவிலிருக்கும் பொதுவான குணம். அதை மீட்டெடுப்பதன் மூலமாகத்தான் நிரந்திர அமைதியைக் கொண்டு வர முடியும். அதை இந்துமத தலைவர்களாலும், பௌத்த மத தலைவர்களாலும் மட்டுமே செய்ய முடியும். சமீபத்தில் கம்போடியாவில் நடந்த இரு மதத்தலைவர்களின் கூட்டுக்கூட்டம் அந்த நம்பிக்கையை வளர்த்திருக்கிறது. கிழக்காசியாவின் பிரச்னைகளை மட்டுமல்ல உலகளாவிய பிரச்னைகளையும் தீர்க்க இந்தியாவின் ஆன்மிகத்தன்மை பெரிய அளவில் கைகொடுக்கக்கூடும். இந்தியாவை முன்னிறுத்துபவர்கள் நாட்டின் முழு பரிமாணத்தையும் உணர்ந்தவர்களாக இருக்க வேண்டியது முக்கியம்”.
”இந்து மத சிறப்புகளை அடுத்த தலைமுறையினருக்கு எடுத்துச் செல்வதுதான் சவாலான பணி. இளைய தலைமுறையினர் வெளிப்படையானவர்கள். நம்மை விடத் திறமையானவர்கள். எதையும் கற்றுக்கொள்ளும் துடிப்புண்டு. ஒழுக்கமும், பொறுப்பும் இல்லாதது ஒன்றுதான் அவர்களது ஒரே குறை. மற்ற அனைத்திலும் மூத்த தலைமுறையைவிடப் பல மடங்கு முன்னேறியிருக்கிறார்கள். ஒழுக்கத்தை போதிக்க மதத்தினால் மட்டுமே முடியும். நமது கலாசாரம், பண்பாட்டை பற்றிய உயர்வான அபிப்பிராயம் அவர்களுக்கு ஏற்படுமாறு செய்துவிட்டாலே போதுமானது. மற்றவையெல்லாமே அவர்களைத் தேடி வந்துவிடும்.”
”இந்து மதத்தின் அருமை பெருமைகளை அரசே சொல்லித்தரலாம். ஏனோ வேண்டாமென்று நினைக்கிறார்கள். மதச்சார்பற்றதன்மை என்பதை இந்து மதத்துக்கு எதிரானதாக நினைத்துக்கொண்டுவிட்டார்கள்” – சுவாமிஜியின் பேச்சு அடுத்து அரசியலைத் தொட்டுத் தொடருகிறது.
மீடியாவில் உபன்யாசம் செய்வதோடு தயானந்த சரஸ்வதி சுவாமிகளின் வேலை முடிந்தவிடுவதில்லை. முழு நேர உபன்யாசகர் அல்ல. மற்றவர்களிடமிருந்து அவர் வித்தியாசப்படுவது இதில்தான். மொழி, இனம், ஈகோ என பல்வேறு விஷயங்களால் பிரிந்து கிடக்கும் இந்து மதத்தலைவர்களை ஓரணியில் கொண்டுவர முழு முயற்சி எடுத்து வருபவர்களுள் தயானந்த சரஸ்வதி சுவாமிகள் முக்கியமானவர். முயற்சிக்குப் பெரிய அளவில் வெற்றி கிடைக்காவிட்டாலும் அது சாத்தியம்தான் என்கிற செய்தியை வெளிக்காட்டியது.
எய்ம் ஃபார் சேவா (AIM for Seva – All India Movement for Seva) என்னும் தயானந்த சரஸ்வதி சுவாமிகளின் அமைப்பு கல்வி, மருத்துவம், சுற்றுச்சூழல் விஷயங்களில் குறிப்பிடத்தக்க பணிகளைச் செய்திருக்கிறது. கோவை ஆனைகட்டியில் 13 ஆதிவாசிகள் வசிக்கும் மலைக்கிராமங்களை தத்தெடுத்திருக்கிறது. மருத்துமனையில் ஆரம்பித்து சாலை வசதிகள் வரை அனைத்தும் செய்து தரப்பட்டிருக்கின்றன. ஏகப்பட்ட திட்டங்கள் இருந்தாலும் ஏகோபித்த ஆதரவு மொபைல் மெடிக்கல் வேன் திட்டத்திற்குத்தான். தமிழ்நாட்டிலும், உத்தராஞ்சல் மாநிலத்திலும் செயல்பாட்டிலிருக்கும் இந்தத் திட்டத்தின் படி ஆயிரக்கணக்கான மக்களைத் தேடி மருத்துவ வசதி வேனில் வருகிறதாம்.
சுவாமிஜிஇன் பேச்சு இன்றைய இளய தலைமுறையினருக்கு ஒரு தொலைநோக்கு பார்வை கொடுத்திருக்கிறது .மேலும் பாரதத்தின் வருங்காலம் இவர்களிடத்தில் எனவே நல்ல வழி காட்டுவது குருவின் கடமை. நிச்சயம் பாரதம் உலகின் குரு ஆகும் என்கின்ற அரவிந்தரின் எண்ணம் நிறைவேறும் .
// கொஞ்சம் ஹாஸ்யம், கொஞ்சம் அரசியல் நிறைய ஆன்மிகம் என சுவாமிஜியின் பேச்சில் சுவராசியத்திற்குக் குறைவில்லை. அன்றாட வாழ்க்கைப் பிரச்னைகளில் ஆரம்பித்து உலகளாவிய பொருளாதாரப் பிரச்னை வரை பல இடங்களைத் தொட்டுச் செல்கிறது //
இன்றைய இந்து மதப் பேச்சாளர்கள், உபன்யாசகர்கள், ஆன்மிகச் சொற்பொழிவாளர்கள் அனைவரும் பின்பற்ற வேண்டிய பாணி இது.
சும்மா கதை சொல்வது, ஜோக் அடிப்பது, நீட்டி முழக்குவது என்ற ரீதியிலேயே பேசும் “ஆன்மிக வாதிகள்” தான் அதிகமாக இருக்கிறார்கள். இதைத் தொலைக் காட்சியிலும் பார்க்கிறோம் – இவர்கள் கேளிக்கைக் காரர்கள் மட்டுமே. அதிலும் பலர் தங்கள் சப்ஜெக்டில் அரைகுறை பாண்டித்யம் உள்ளவர்கள் வேறு.
மாறாக தனிமனித வாழ்க்கை, சமூக வாழ்க்கை இவற்றில் இந்து ஆன்மிகம், கலாசாரம் எப்படிப் பங்காற்றுகிறது ஆகிய விஷயங்களையும், அதோடு உலக விவகாரங்களை “இந்து’ பார்வையில் அணுகுவது எப்படி என்பதையும் இந்த சொற்பொழிவார்கள் பேசவேண்டும்.
they should also educate and enlighten, apart from just entertaining.
இப்படி வரும்போது ஆக்கபூர்வமான அரசியல் பேசித் தான் ஆகவேண்டும் என்றால் அதைப் பேசுவதில் என்ன தவறு? ஸ்ரீகிருஷ்ணன் முதல், வியாசர் முதல் பாரதி வரை அரசியலில் மகா ஞானிகள், மாமுனிவர்கள் பங்களிப்பு செய்துள்ள கலாசாரம் நம்முடையது. அந்த வழியில் சுவாமிஜி பேசியிருக்கிறார் என்று தெரிகிறது.
அழகாகப் பதிவு செய்த ராம்கிக்கு நன்றி.