சுவாமி விவேகானந்தரும் ஆல்பர்ட் ஐன்ஸ்டைனும்

[இன்று, ஜூலை-4ம் தேதி சுவாமி விவேகானந்தரின் சமாதி தினம்.]

vivekananda5சுவாமி விவேகானந்தர் (1863-1902) பாரதத் துறவி. சுவாமி விவேகானந்தர் வாழ்ந்த காலகட்டத்தில் பாரத தேசம் பிரிட்டிஷாரிடம் அடிமைப்பட்டிருந்தது. அதற்கு முன்னரும் அன்னிய ஆட்சியாளரிடம் அடிமைப்பட்டிருந்தது. பிரிட்டிஷ் அரசாட்சி பாரதத்தின் மீது கடுமையான பொருளாதாரச் சுரண்டலை ஏற்படுத்தியிருந்தது. பாரதத்தின் சமுதாய வாழ்க்கை தேக்க நிலை அடைந்திருந்தது. அத்துடன் அன்னிய ஆக்கிரமிப்பாளர்கள் பாரதத்தின் பண்பாட்டு, ஆன்மிகப் பாரம்பரியங்கள் மீது கடுமையான தாக்குதலை மேற்கொண்டிருந்தனர். பாரதம் ஒரு இருண்ட பிரதேசமாகவும், பாரத சமுதாயம் பண்பாடற்ற சமுதாயமாகவும், ஐரோப்பியரைக் காட்டிலும் இழிந்த சமுதாயமாகவும் உலகத்துக்கும், பாரத மக்களுக்குமே காட்டப்பட்டன.

ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் (1879-1955) அறிவியலாளர். பிறப்பால் யூதர். அவர் வாழ்ந்த ஜெர்மனியில் யூத வெறுப்பு சுவாசித்த காற்றோடு கலந்திருந்தது. ஐன்ஸ்டைன் அமெரிக்காவுக்கு அகதியாக வர நேரிட்டது. இயற்பியலின் முக்கிய புரட்சியின் மைய நாயகனாக ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் விளங்கினாலும் அவரது அறிவியலும் அவரது தத்துவ சிந்தனையும் அவருக்கு பெரும் எதிர்ப்பை உருவாக்கின. ஜெர்மனியில் யூதர் என்பதால் ஐன்ஸ்டைன் வெறுக்கப்பட்டார் என்றால் அவர் தஞ்சம் புகுந்த அமெரிக்காவிலும் அவரது தத்துவ-சமுதாய சிந்தனைகளுக்காக மதவாதிகளால் அவர் எதிர்க்கப்பட்டார்; தாக்கப்பட்டார்.

einsteinஆக இரு மனிதர்கள். காலத்தால் சற்று முற்பட்டவராக விவேகானந்தர். பிற்பட்டவராக ஐன்ஸ்டைன். ஒருவர் ஆன்மிகத் துறவி, இந்து சாது. மற்றொருவர் பிறப்பால் யூதர், அறிவியலாளர். முழுக்க முழுக்க வேறுபட்ட பண்பாட்டு சமுதாயச் சூழ்நிலைகள். ஆனால் அதிசயிக்கத்தக்க வகையில், மானுடம் குறித்த முக்கியமான விஷயங்களில் இருவரது பார்வையும் ஒன்றுபட்டதுதான். ஆனால் இதை மற்றொரு விதத்திலும் பார்க்கலாம். இயற்பியலில் ஒரு மகத்தான புரட்சியின் மையத்தில் ஆல்பர்ட் ஐன்ஸ்டைனும், ஆன்மிகத்தில் ஒரு பெரும் புரட்சியின் மையத்தில் சுவாமி விவேகானந்தரும் இருந்தனர். இருவருமே நிறுவனங்களுக்கு வெளியில் உண்மைகளைக் கண்டடைந்தனர். அதே நேரத்தில் இருவரது சமுதாயத்தைச் சார்ந்த மக்களும் கொடுமைகளுக்கும் பொய் பிரச்சாரங்களுக்கும் ஆட்படுத்தப்பட்டனர்.

தாம் வாழ்ந்த சமுதாயங்களின் குறை நிறைகளை அவர்கள் வெளிப்படையாகக் கூறினர். பாரதத்தின் சாதியக் கொடுமைகளை, சமுதாய தேக்க நிலைகளை சுவாமி விவேகானந்தர் சாடினார். அதே நேரத்தில் பாரதத்தின் பாரம்பரியத்திலிருந்தே அதன் எதிர்காலத்தை சிறப்பானதாக்க வழிகாட்டுதலைப் பெற்றார். ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் யூத மறைஞான மரபுகளை நவீன சமுதாயத்தில் மீட்டெடுத்தார். மேற்கின் ஆயுதக் கலாச்சாரத்தையும், ஆப்பிரிக்க ஆசிய நாடுகளின் மீது அது செலுத்தும் பேராதிக்க மனோபாவத்தையும் அவர் எதிர்த்தார். எனவே இருவரது கருத்துகளும் ஒன்றுபட்ட தன்மை கொண்டதில் அதிசயமில்லை என்றும் சொல்லலாம்.

இறை தரிசனங்கள்

ஐன்ஸ்டைனின் கடவுள் கோட்பாடு “ஆளுமை கொண்ட கடவுள்” (Personal God) என்பதை நிராகரித்தது. அச்சத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட கடவுள் – அந்தக் கடவுளின் தீர்ப்புக்கள், பரிசுகள், தண்டனைகள் – இவற்றின் அடிப்படையில் எழுந்த ஒழுக்கவிதிகள் ஆகியவற்றை ஐன்ஸ்டைன் நிராகரித்தார். அவரது மரணத்துக்கு ஒரு ஆண்டுக்கு முன்னால் நடத்தப்பட்ட பேட்டியில் அவரது கடவுள் நம்பிக்கை குறித்துக் கேட்கப்பட்டபோது அவர்கூறினார்:

கடவுளைப் பொறுத்தவரையில், நான் மதச்சபையின் (Church) அதிகாரத்தின் அடிப்படையில் அமைந்த எந்த நம்பிக்கையையும் ஏற்றுக்கொள்ள முடியாது. எனக்கு நினைவு தெரிந்த காலத்திலிருந்து பொதுஜனங்களுக்கு கோட்பாட்டு நம்பிக்கைகள் கொடுக்கப்படுவதை நான் விரும்பியதில்லை. இம்மை குறித்த அச்சம், மறுமை குறித்த அச்சம், கண்மூடித்தனமான நம்பிக்கை ஆகியவற்றை நான் ஏற்றுக்கொண்டதேயில்லை. ஆளுமைத்துவமுடைய இறைவன் இல்லை என நான் உங்களுக்கு நிரூபிக்க முடியாமல் இருக்கலாம். ஆனால் நான் (“கடவுள்” எனும் போது) அத்தகைய இறைவனைக் குறித்து பேசுவதாக இருந்தால், என்னைப் பொய்யன் என்றுதான் சொல்லவேண்டும். இறையியல் கற்பிக்கும், “நன்மைகளுக்கு பரிசும், தீமைகளுக்கு தண்டனையும் வழங்கும் இறைவன்” மீது எனக்கு நம்பிக்கை இல்லை. [1]

ஐன்ஸ்டைனின் ஆளுமைத்துவ கடவுள் கோட்பாட்டு மீதான எதிர்ப்பு சுவாமி விவேகானந்தரில் மேலும் விரிவாக்கம் பெறுகிறது:

நிர்குணக் கடவுள் வாழும் கடவுள் ஆவார். ஆளுமைத்துவமுடைய கடவுளுக்கும் நிர்குணக் கடவுளுக்குமான வேறுபாடு என்னவென்றால், ஆளுமைத்துவமுடைய கடவுள் ஒரு மனிதன் தான். ஆனால் நிர்குண க் கடவுள் மனிதர்கள், தேவதைகள், விலங்குகள் மற்றும் நம்மால் காணமுடியாதவையாகவும் இருக்கிறார். ஏனென்றால் நிர்குணக் கடவுள் அனைத்து ஆளுமைகளையும் உள்ளடக்கியவராக இருக்கிறார். பிரபஞ்சமனைத்துமாக இருக்கிறார். அதற்கும் மேலானதான முடிவிலியாகவும் இருக்கிறார். [2]

ஒழுக்கவிதிகளும் மதங்களும்

சுவாமி விவேகானந்தரைப் பொறுத்தவரை மானுட ஒழுக்கத்துக்கும் சமயத்துக்குமான தொடர்பு ஏற்புடையதல்ல. “சமுதாயச் சட்டதிட்டங்களை உருவாக்குவது மதத்தின் வேலை அல்ல” என்று அவர் கூறினார். [3]

ஐன்ஸ்டைன் ஒழுக்க விதிகள் மற்றும் சட்டங்கள் ஆகியவற்றை சமயத்துடன் தொடர்புபடுத்துவது மானுட வரலாற்றில் ஒரு தவிர்க்க இயலாத படிக்கல் என்றும், ஆனால் மானுடம் அதிலிருந்து முன்னகர்ந்து செல்லவேண்டும் என்றும் கருதினார். அவர் கூறினார் –

ஆளுமைத்தன்மை கொண்ட கடவுள் என்ற கருத்து மனிதத்தன்மையுடன் உருவாக்கப்பட்ட ஒன்று என்றே கருதுகிறேன். அதனை முக்கியத்துவம் கொடுத்து எடுத்துக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை…. ஒழுக்கம் மற்றும் மதிப்பீடுகள் முழுக்க முழுக்க மானுடம் மட்டுமே சார்ந்த பிரச்சனையாகவே கருதப்படவேண்டும். மானுடத்தின் முதன்மையான பிரச்சனையாகவும் கூட. [4]

அறிவியலும் சமயமும்

சுவாமி விவேகானந்தரைப் பொறுத்தவரையில், மதத்துக்கும் அறிவியலுக்குமான தொடர்பில் மதம் அறிவியல் எனும் நெருப்பில் புடம் போட்டு எடுக்கப்படவேண்டியது என கருதினார்.

”மற்றெந்த அறிவுப்புலங்களையும் போல அறிவின் கண்டடைதல்களால் மதம் தன் இருப்பை நியாயப்படுத்திக் கொள்ளவேண்டுமா கூடாதா? அறிவியலுக்கும் புற அறிதலுக்கும் நாம் பயன்படுத்தும் அதே வழி முறைகள் சமயம் என்னும் அறிவுத்துறைக்கும் பொருந்துமா? என் கருத்து அப்படித்தான் இருக்க வேண்டும் என்பதே. எவ்வளவு விரைவாக அறிவியல் கண்ணோட்டத்தில் மதம் மதிப்பிடப்படுகிறதோ அத்தனைக்கத்தனை அது நல்லது என்பதே என் எண்ணம். அத்தகைய சோதித்தலால் ஒரு மதம் அழிந்துவிடும் எனில் அது எப்போதுமே உபயோகமற்ற, மதிக்கப்படக்கூடாத மூடநம்பிக்கையாகத்தான் விளங்கியிருக்கிறது. அத்தகைய மதம் எவ்வளவு விரைவாக அழிய முடியுமோ அத்தனை விரைவாக அழிய வேண்டும். அத்தகைய மதம் அழிவதே மானுட குலத்துக்கு நடக்கக்கூடிய மிகச்சிறந்த விஷயமென நான் கருதுவேன். அத்தகைய விதத்தில் மதம் பரிசோதிக்கப்பட்டால் மதத்தின் அனைத்து தேவையற்ற மோசமான விஷயங்களும் அழிந்து சமயத்தின் சாராம்சமான கரு வெற்றிகரமாக அந்த பரிசோதனையிலிருந்து வெளிவரும் என்றே நான் கருதுகிறேன்.”[5]

வியக்கதக்க விதத்தில் இதே கருத்தை மென்மையாக ஐன்ஸ்டைன் தெரிவித்தார். ”அறிவியலுடன் மதத்துக்கான பிரச்சனை, மதம் குறியீட்டுத்தன்மையின்றி தொன்மங்களை அணுகுவதன் மூலம் அறிவியலுக்கான இடத்துக்குள் அத்துமீறி நுழைவதுதான்” என்று அறிவியலுக்கும் சமய நம்பிக்கைக்குமான மோதலைக் குறித்து ஐன்ஸ்டைன் கருதினார். எனவே உண்மையான சமயத் தன்மைக்கு உகந்ததல்லாத இந்த விஷயங்களை மதம் கைவிட வேண்டுமென அவர் கருதினார்:

”குறியீட்டுத்தன்மையைக் கைவிட்ட தொன்மங்களை கொண்ட மத சம்பிரதாயங்களினாலேயே மதம் அறிவியலுடனான மோதலுக்கு வருகிறது. எனவே உண்மையான சமயத்தினை நிலைநிறுத்த இத்தகைய மோதல்களை தவிர்க்க வேண்டும். ஏனென்றால் இத்தகைய மோதல்கள் எழுவதற்கான காரணங்கள் சமயத்தின் தேடலுக்கு அத்யாவசியமானவை அல்ல….பொய், துவேஷம், மோசடி மற்றும் படுகொலைகளை நியாயப்படுத்தும் ஒரு சமுதாயம் நீண்டகாலத்துக்கு ஜீவித்திருக்க முடியாது. [6]

சமுதாயத்தின் அடிப்படையாக சத்தியமே அமைய வேண்டும் என்பதை சுவாமி விவேகானந்தரும் சுட்டிக் காட்டுகிறார். அவரைப் பொறுத்தவரையில் சத்தியமே ஒரு சமுதாயத்தின் அடிப்படையாக அமையவேண்டும். அப்படி இல்லாத சமுதாயம், சத்தியத்தை சந்திக்கச் சக்தியற்ற சமுதாயம் வாழ நியாயங்கள் எதுவுமில்லை. அவர் சொல்கிறார்:

சத்தியம் எந்த சமுதாயத்துக்கும் தலை வணங்க முடியாது. அந்த சமுதாயம் மிகப் பழமையானதோ அல்லது மிக நவீனமானதோ சத்தியம் சமுதாயத்துக்கு தலை வணங்காது.சமுதாயமே சத்தியத்துக்கு தலை வணங்க வேண்டும். சமுதாயமே சத்தியத்துக்கு தன்னை தகவமைத்துக்கொள்ள வேண்டுமே அல்லாது சத்தியம் சமுதாயத்துக்கு ஏற்ப வளைக்கப்பட முடியாது.[7]

சத்தியம், சிவம், சுந்தரம்

இத்துடன் ஐன்ஸ்டைன் நிற்கவில்லை. அறிவியலிலிருந்து எவ்வாறு மானுடத்தின் ஆன்மிக சமய வேட்கை தன்னை ஆக்கப் பூர்வமாக மீள் அமைத்துக்கொள்ள முடியும் என்பதை குறித்தும் அவர் சிந்தித்தார்:

மானுட குலத்துக்கு நல்லொழுக்கம் வேண்டுமென விழையும் சமய ஆச்சாரியர்கள், இந்த ஆளுமைத்துவம் கொண்ட இறைவனை கை விட வேண்டும் – அதாவது எந்தக் கோட்பாடு அளவு கடந்த அச்சத்துக்கும் நம்பிக்கைக்கும் மூல ஊற்றாக அமைந்து சமயவாதிகளின் கையில் அளவு கடந்த அதிகாரத்தை கொடுத்ததோ அந்த இறைவன் எனும் கோட்பாட்டை கைவிட வேண்டும். அதற்கு பதிலாக சுபம் (Good), உண்மை (Truth) மற்றும் அழகு (Beautiful) எனும் தன்மைகளை வெளிக்கொணர செய்யப்படும் முயற்சிகளிலிருந்து சமயவாதிகள் இந்த பிரயத்தனத்தை பெற்றுக்கொள்ள வேண்டும்.[8]

சுவாமி விவேகானந்தரும் இதையே வலியுறுத்தினார். பிரபஞ்ச ஒழுங்கின் அடிப்படையாக சத்தியம் (Truth), சிவம் (Good), சுந்தரம் (Beauty) என்பதை அவர் கூறுகிறார். சத்தியம் சிவம் சுந்தரம் என்பதை ஒரு பேரண்டங்களெல்லாம் நிறைந்திருக்கும் பெண்மையாக தரிசிக்கும் விவேகானந்தர் அதனை உணருதல் என்பதன் அடிப்படையில் இருப்பது விடுதலை உணர்வே என்கிறார். அனைத்து பௌதீக விதிகளும் அவற்றை கண்டடையும் மானுட முயற்சிகளும் அந்த விடுதலை வேட்கையே என்கிறார் விவேகானந்தர். [9] ஐன்ஸ்டைனும் இந்த சத்திய வேட்கையையே அறிவியல் தேடலின் ஊற்றுக்கண்ணாக அறிகிறார். இதனையே அவர் பிரபஞ்ச சமய உணர்வு என கூறுகிறார். இப்பிரபஞ்சமளாவிய பேருணர்வின் முன்னர் மனிதனின் தனிப்பட்ட ஆசாபாசங்கள் எத்தனை சிறுமையாகிவிடுகின்றன. இப்பேருணர்வே அவனை விரிவடைய செய்கிறது. ஐன்ஸ்டைன் கூறுகிறார்:

ஸ்பினோசா
ஸ்பினோசா

தனிமனிதன் தன் ஆசாபாசங்களின் வெறுமையை, பொருளற்ற தன்மையை உணர்கிறான். புற இயற்கையிலும் அவன் அகப்புலத்திலும் இருக்கும் ஆழ்ந்த அழகையும் பெரும் ஒழுங்கையும் உணர்கிறான். அவனது தனிமனித வாழ்க்கையானது ஒரு கூண்டுச்சிறையாக அவனுக்குக் காட்சி அளிக்கிறது. அவன் முழுப் பிரபஞ்சத்தையும் ஒரு உன்னத ஒருமையாக உணரத் தலைப்படுகிறான். இதுவே பிரபஞ்ச சமய உணர்வு. …இவ்வுணர்வின் அழுத்தமான தன்மையை ஷோஃபனர் (Arthur Schopenhauer) மூலம் நாம் அறியும் புத்த சமயம் கொண்டிருக்கிறது. அனைத்துக் காலங்களிலும் சமய மேதைகளால் இது உணரப்பட்டிருக்கிறது. இதற்கு இறையியலோ மதச்சபையோ இறைவனது உருவகமோ தேவை இல்லை. …இதனை உணர்ந்தவர்கள் அவர்களது சமகாலத்தவர்களால் பலசமயங்களில் நாஸ்திகர்கள் என்றும் சில சமயங்களில் பேரருளாளர்கள் என்றும் அழைக்கப்பட்டிருக்கிறார்கள். இவ்விதமாக காணும் போது டெமாக்ரிட்டஸும், அஸிஸியின் பிரான்ஸிஸும் ஸ்பினோசாவும் ஒரே தன்மை கொண்டவர்கள்தாம்….அறிவியலுடையவும் கலையுடையவும் முக்கிய பணியே இப்பிரபஞ்ச சமய உணர்வைப் பேணி, அதன் வெளிப்பாடாக அமைந்து, அதனைப் பெறத்துடிப்போருக்கு அளிப்பது ஆகும். [10]

[டெமாக்ரிட்டஸ் (Democritus) கிறிஸ்தவத்துக்கு முந்தைய கிரேக்க ஞானி. அசிசியின் பிரான்ஸிஸ் (St. Francis of Assisi) ரோமன் கத்தோலிக்க துறவி, ஆனால் விலங்குகளுக்கு ஆன்மா உண்டு என கிறிஸ்தவ இறையியலுக்கு எதிராக சொல்லியவர். இது கத்தோலிக்கத்துக்கு எதிரான கத்தாரிய பேதகம் என்பதிலிருந்து பெறப்பட்டது என்றும் கத்தாரிய பேதகம் என்பது இந்திய சமய தாக்கத்தால் உருவானது எனவும் லின் வைட் எனும் வரலாற்றறிஞர் கூறுகிறார். ஸ்பினோஸா (Baruch Spinoza) யூத சமுதாயத்தில் பிறந்த தத்துவ மேதை, அத்வைத கோட்பாடு கொண்டவர்; எனவே சமுதாய விலக்கம் செய்யப்பட்டவர்.]

அறிவியல் தன்மையை சமயம் அடையவேண்டுமெனவும், சமய அனுபவமே அதன் அடிப்படையாக அமையவேண்டுமெனவும் சுவாமி விவேகானந்தரும் கருதுகிறார்:

சமயம் மட்டுமே நிச்சயமற்ற அறிவுப்புலமாக இருக்கிறது ஏனெனில் அது அனுபவத்தின் அறிவியலாகக் கருதப்படவில்லை. அவ்வாறு இருக்கக் கூடாது. எல்லாக் காலங்களிலும் அனுபவத்திலிருந்து சமயத்தைப் பெற்றவர்கள் இருந்து கொண்டேதான் இருக்கிறார்கள். இவர்கள் பேரனுபூதியாளர்கள் – மறைஞானிகள். இவர்கள் எந்த மதச்சூழலில் தோன்றியிருந்தாலும் இவர்கள் வெளிப்படுத்தும் சத்தியம் ஒன்றேயாகத்தான் இருக்கிறது. இதுவே உண்மையான அறிவியலின் மதம். எப்படி உலகின் எந்தப் பகுதியில் தோன்றிய கணிதவியலாளனும் ஒரு சத்தியத்தில் மாறுபடுவதில்லையோ அது போல இவர்களும் மாறுபடுவதில்லை. [11]

பிராணன் – பிரபஞ்ச சக்தி

சுவாமி விவேகானந்தர் பிராணனை பிரபஞ்ச சக்தியாகக் காண்கிறார். இங்கு ஐன்ஸ்டைனின் பல அறிவியல் தேற்றங்களைக் கவித்துவமாக விவேகானந்தர் முன்னறிவிப்பதாகவே கொள்ளலாம். பொருள் என்பது ஆகாசமே என்கிறார் விவேகானந்தர். ஆகாசத்தை பொருண்மைப் பிரபஞ்சமாக்குவது (material world) சக்தி என்கிறார்.

பிராணன் எங்கும் நிறைந்த வெளிப்படு சக்தியாக இருக்கிறது. …இந்தப் பிராணனிலிருந்தே நாம் ஆற்றல் என்று அழைக்கிற, நாம் சக்தி என்று அழைக்கிற அனைத்தும் வெளிப்படுகின்றன. புவியீர்ப்பாக, காந்த சக்தியாக வெளிப்படுவது அனைத்தும் பிராணனே. உடல் இயக்கங்களாக, எண்ண சக்தியாக, நாடி ஓட்டங்களாக வெளிப்படுவதெல்லாம் பிராணனே. எண்ணம் முதல் மிகச்சாதாரண சக்தியாக இருப்பவை அனைத்தும் பிராணனின் வெளிப்பாடுகளே.”[12]

ஆல்பர்ட் ஐன்ஸ்டைனுக்கும் இந்தச் சித்தாந்தத்தில் நம்பிக்கை இருந்தது:

“சக்தியே சிருஷ்டியின் அடிப்படை விசை என நான் கருதுகிறேன். என் நண்பர் பெர்குஸன் அதனை எலன் வைட்டால் (elan vital) என அழைக்கிறார். ஹிந்துக்கள் அதனை பிராணன் என்கிறார்கள்.” [13]

கிறிஸ்தவ ஆக்கிரமிப்புக்கு எதிராக

கிறிஸ்தவ மதபோதகர்களால் இந்துக்கள் மிகவும் மோசமாக சித்தரிக்கப்படுவதைக் கண்டு சுவாமி விவேகானந்தர் மிகவும் வேதனையடைந்தார். தங்கள் மதப்பிரச்சார வேலைகளுக்கு அமெரிக்காவில் பணம் திரட்ட எப்படியெல்லாம் இந்தியாவைக் குறித்தும், இந்துக்கள் குறித்தும் மிக மோசமான சித்தரிப்புக்களை கிறிஸ்தவ மதபோதகர்கள் பரப்பினார்கள் என்பதை நேரடியாகக் கண்டறிந்த விவேகானந்தர் மனம் வெதும்பிக் கூறினார்:

anti_hindu_propaganda_1
தன் குழந்தையை முதலையிடம் வீசும் இந்துப் பெண் (1800களின் பிரசாரப் படம்)

கிறிஸ்துவின் சிஷ்யர்களான இவர்களுக்கு இந்துக்கள் என்ன செய்துவிட்டார்கள்? ஒவ்வொரு கிறிஸ்தவக் குழந்தைக்கும் இந்துக்களை கொடியவர்கள் தீயவர்கள் உலகிலுள்ள பயங்கரமான பிசாசுகள் என்று அழைக்க கற்றுக் கொடுக்கிறார்களே. ஏன்? கிறிஸ்தவரல்லாத அனைவரையும், குறிப்பாக இந்துக்களை வெறுப்பதற்குக் கற்றுக் கொடுக்கிறார்கள். அமெரிக்காவில் ஞாயிற்றுக் கிழமை பாடத் திட்டங்களில் இப்படிக் கற்பிப்பது ஓர் அம்சமாகும். சத்தியத்துக்காக இல்லாமல் போனாலும் தமது சொந்தக் குழந்தைகளின் நீதி நெறி உணர்ச்சி பாழாகாமல் இருப்பதற்காகவாவது கிறிஸ்தவப் பாதிரிகள் இது போன்ற காரியங்களில் ஈடுபடக்கூடாது.

anti_hindu_propaganda_2
”இந்துக்கள் குழந்தைகளைக் கழுகுக்கு உண்ணத் தரும் கொடூரர்கள்”

அப்படிக் கற்பிக்கப்பட்ட குழந்தைகள் வளர்ந்து பெரியவர்கள் ஆகும் போது ஈவிரக்கமற்ற கொடிய மனம் படைத்த ஆண்களாகவோ, பெண்களாவோ ஆனால் அதில் என்ன ஆச்சரியம் இருக்க முடியும்? …. பாரத தேசம் முழுவதும் எழுந்து நின்று இந்து மகாசமுத்திரத்துக்கு அடியில் உள்ள எல்லா மண்ணையும் வாரியெடுத்து மேற்கத்திய நாடுகளின் மீது வீசினாலும் கூட நீங்கள் இன்று எங்கள் மீது வீசுகிற சேற்றின் அளவில் தினையளவு கூட பதிலுக்குப் பதில் செய்வதாக ஆகாது … இது போன்ற ஆக்கிரமிப்பான பொய்ப் பிரச்சாரங்களையெல்லாம் கிறிஸ்து ஏற்றுக் கொண்டிருக்க மாட்டார். … கிறிஸ்துவின் இலட்சியத்துடன் இன்றைக்கு மேற்கத்திய நாடுகள் அடைந்துள்ள அபரிமிதமான வளக்கொழிப்பை இணைக்க முடிந்தால் நல்லதுதான். உங்களால் முடியாது என்றால் இந்த போகங்களைக் கைவிட்டு அவரிடம் திரும்புவதே நல்லது.[14]

ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் தனது யூத இனத்துக்கு மேற்கத்திய கிறிஸ்தவ உலகம் செய்த கொடுமைகளையும் அது அடைந்த உச்சத்தையும் நேரில் பார்த்தவர். அனுபவித்தவர். அறுபது இலட்சம் யூதர்கள் கொலை செய்யப்படுகையில் கத்தோலிக்க சர்ச் நாசிகளுடன் கை குலுக்கியதை கண்டு அதிர்ந்தவர். எனவே கிறிஸ்தவத்தை அவர் மிகக்கடுமையாக விமர்சித்தார்.

சில நேரங்களில் ஏசு என்று ஒரு மனிதர் வாழாமலே இருந்திருந்தால் எத்தனை நன்றாக இருந்திருக்கும் என்று நான் நினைப்பதுண்டு. வேறெந்தப் பெயரும் வரலாற்றில் இந்த அளவுக்கு அதிகாரத்துக்காக துஷ்பிரயோகம் செய்யப்பட்டதில்லை. … மனித இனம் ஏசுவின் பெயரால் தனக்குத்தானே என்ன செய்து கொண்டிருக்கிறது என்பதைப் பாருங்கள். கிறிஸ்தவர்கள் என்ன செய்கிறார்கள், கடந்த இரண்டாயிரம் ஆண்டுகளாக கிறிஸ்தவர்கள் யூதர்களுக்கு என்ன செய்தார்கள் என்பதையும் பாருங்கள்.

யூதர்களைக் கொரூரர்களாக சித்தரிக்கும் சர்ச் ஓவியம்
யூதர்களைக் கொடூரர்களாக சித்தரிக்கும் சர்ச் ஓவியம்

நாஸி ஜெர்மனியில் யூதர்களுக்கு என்ன நடக்கும் என்பதைத் தெரிந்து கொள்ள நீங்கள் தீர்க்க தரிசியாக இருக்க வேண்டிய அவசியமில்லை. இரண்டாயிரம் ஆண்டுகளாக கிறிஸ்தவ சபை யூதர்களுக்கு எதிராகச் செய்து வந்துள்ள சொல்லக்கூட முடியாத கொடுங்குற்றங்களுக்கெல்லாம் வத்திக்கானின் ஆசிர்வாதம் இருந்தது என நான் சொல்லவில்லை. ஆனால் கிறிஸ்தவ சபை தனது நம்பிக்கையாளர்களின் கொடுஞ்செயல்களின் கொடுரத்தை அவர்கள் மனம் உணராத படி “நம்மிடம் உண்மையான தேவன் இருந்தார். யூதர்கள் அவரைச் சிலுவையில் அறைந்தார்கள்” என்னும் நம்பிக்கையால் இறுக வைத்திருந்தது. [15]

முடிவுரை: இவ்வாறாக இரு வேறு சமுதாயங்கள், இரு வேறு காலகட்டங்கள், இரு வேறு புலங்களில் இயங்கிய மகாத்மாக்கள் இருவரின் ஆன்மிகத்துடிப்பின் வெளிப்பாடு மானுடம், இறை அனுபவம், சமுதாய ஒழுக்கம், தமது சமுதாயத்தின் மீதான அன்னிய ஆக்கிரமிப்பு ஆகிய விஷயங்களில் ஒன்றாகவே இணைந்து இணை குரலாக வெளிப்பட்டது.

சுட்டிகள்:

[1] ஆல்பர்ட் ஐன்ஸ்டைன், 1954 இல் அளித்த பேட்டியில் கூறியது.
[2] சுவாமி விவேகானந்தர், செயல்முறை வேதாந்தம்- இரண்டாம் பேருரை இலண்டனில், நவம்பர்-12 1896 இல் ஆற்றியது.
[3] சுவாமி விவேகானந்தர், Complete Works Vol.4: p.358
[4] ஆல்பர்ட் ஐன்ஸ்டைன், 26-ஏப்ரல்-1947 தேதியிட்ட கடிதம்
[5] சுவாமி விவேகானந்தர், Complete Works Vol.1: p.367
[6] ஆல்பர்ட் ஐன்ஸ்டைன், Religion and Science: Irreconcilable? என்ற தலைப்பில் நியூயார்க்கில் ஆற்றிய உரை: ஜூன் 1948
[7] சுவாமி விவேகானந்தர், Royal Institute of Painters in Watercolors, இலண்டனில் அன்று ஆற்றிய உரை, ஜூன் 21, 1896
[8] ஆல்பர்ட் ஐன்ஸ்டைன், Science and Religion எனும் தலைப்பில் 1941 இல் நியூயார்க்கில் ஒரு கருத்தரங்கில் பேசியது, மூலத்தில் ஆங்கில வார்த்தைகளுக்கு ஐன்ஸ்டைனே பெரிய எழுத்துக்களாக -capitalization- மாற்றியிருந்தார்.
[9] சுவாமி விவேகானந்தர், Complete Works Vol:V pp.336-7

[10] ஆல்பர்ட் ஐன்ஸ்டைன், Religion and Science என்ற தலைப்பில் நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையில் 1930 இல் எழுதியது.

[11] சுவாமி விவேகானந்தர், Complete Works -Vol:VI p.81
[12] சுவாமி விவேகானந்தர், இராஜயோகம், பிராணன்: பக்.40
[13] ஆல்பர்ட் ஐன்ஸ்டைன், சமூகவியலாளர் வில்லியம் ஹெர்மான்ஸுடனான உரையாடல், ஆகஸ்ட் 1943, பக்.61
[14] சுவாமி விவேகானந்தர், Complete Works -Vol:VIII p.212
[15] ஆல்பர்ட் ஐன்ஸ்டைன், சமூகவியலாளர் வில்லியம் ஹெர்மான்ஸுடனான உரையாடல், ஆகஸ்ட் 1943. பக்.62-63

பயன்படுத்தப்பட்ட நூல்கள்:

  • சுவாமி விவேகானந்தர், The complete works of Swami Vivekananda, Advaita Ashrama, 1970
  • சுவாமி விவேகானந்தர், ராஜயோகம், ஸ்ரீ ராமகிருஷ்ண மடம், மைலாப்பூர், சென்னை 2005
  • ஆல்பர்ட் ஐன்ஸ்டைன், Ideas and Opinions, [Edited by Carl Seeling], Rupa 1998
  • மாக்ஸ் ஜாம்மர் (Max Jammer), Einstein and Religion: Physics and Theology, Princeton University Press, 2002
  • வில்லியம் ஹெர்மான்ஸ், ஆல்பர்ட் ஐன்ஸ்டைன்
  • Einstein and the Poet: In Search of the Cosmic Man, Branden Books, 1983

22 Replies to “சுவாமி விவேகானந்தரும் ஆல்பர்ட் ஐன்ஸ்டைனும்”

  1. மை காட். எவ்வளவு தரமான, அருமையான, தகவற் செறிவுமிக்கக் கட்டுரை.

    தமிழிலக்கிய உலகின் ஒரு முனையில் வெறும் வசவிலக்கியம். மற்றொரு முனையில் இப்படித் தரமான படைப்புகள். விசித்திரம்.

    இவற்றைப் போன்ற மிகத் தரமான கட்டுரைகளைத் தொடர்ந்து வெளியிடுவதன் மூலம் தமிழ்நாட்டில் உலக தரமான கட்டுரைகளை எழுதுபவர்கள் இருக்கிறார்கள் என்பதை இந்தத் தளம் நிறுவுகிறது. இத்தளத்தைப் படிப்பவர்கள் தமிழர்களின்மேல் மரியாதை கொள்ளுவர்.

    தமிழ் இணைய வெளியில், மற்ற தளங்களுக்கெல்லாம் தமிழ் இந்து தளம் ஒரு மாடலாக இருக்கிறது.

  2. // …. அவர் வாழ்ந்த ஜெர்மனியில் யூத வெறுப்பு சுவாசித்த காற்றோடு கலந்திருந்தது. …//

    ஜெர்மனியில் மட்டுமல்ல யூரோப்பா முழுவதிலும் யூதர்கள் மேல் வெறுப்போடுதான் இருந்தார்கள். இங்கிலாந்து போன்ற நாடுகளில் உணவு விடுதிகளில் யூதர்களுக்கு அனுமதி இல்லை.

  3. தமிழில் இதுபோன்ற அர்த்தம் செறிந்த, புதிய புதிய தகவல்கள் நிறைந்த நல்ல கட்டுரைகளைப் பார்ப்பது அரிதாகி விட்டது..

    அருமையான ஒப்பீடு.. கிறித்தவம் உலகில் உண்டாக்கிய நன்மைகளைவிட அழிவுகள் அதிகம்..அதை விஞ்ஞானி ஐன்ஸ்டைனும் உனர்ந்திருக்கிறார் என்பதை இந்தக் கட்டுரையின் மூலம் அறிந்து கொண்டேன்..

    தமிழ் இந்து தளத்திற்கும், கட்டுரை ஆசிரியருக்கும் மனம் நிறைந்த நன்றி.. தொடர்ந்து இப்படிப் பட்ட அறிவுபூர்வமான கட்டுரைகளை வெளியிடுங்கள்.

  4. அறிவு பூர்வமான சிந்தனைக்கு ஊட்டமளிக்கும் இத்தகைய கட்டுரைகளே
    இன்றைய தேவை . கட்டுரையின் தெளிவு வியக்க வைக்கிறது.

    தேவ்

  5. அருமையான தொகுப்பு அரவிந்தன். சுவாமிஜியின் புனித நினைவுக்கு ஏற்ற அஞ்சலி.

    // வேறெந்தப் பெயரும் வரலாற்றில் இந்த அளவுக்கு அதிகாரத்துக்காக துஷ்பிரயோகம் செய்யப்பட்டதில்லை //

    இந்த வாசகம் சீதாராம் கோயல் எழுதிய Jesus Christ: Artifice for Aggression என்ற நூலின் தலைப்பை அப்படியே ஒத்திருக்க்கிறது.. கவனித்தீர்களோ?
    (இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் படிக்க – https://hindusarise.com/artificeforaggression.pdf)

    “ஆல்பர்ட்” ஐன்ஸ்டின், “சார்லஸ்” டார்வின், “தாமஸ்” ஆல்வா எடிசன் என்று அறிவியலாளர்கள் பெயரை எல்லாம் சொல்லி விட்டு “இவங்க எல்லாம் ஏசுவைக் கும்பிட்டுத் தான் பெரிய விஞ்ஞானியா ஆனாங்க. விஞ்ஞானில எத்தனை இந்துப் பேர் இருக்கு சொல்லுங்க” என்று அப்பாவி இளைஞர்களையும், மாணவர்களையும் ஏமாற்றும் கிறிஸ்தவப் பிரசாரக் கூட்டத்தை ஒரு 7-8 வருடங்கள் முன் என் கண்ணாலேயே பார்த்திருக்கிறேன், அதுவும் சென்னை நகரத்தில். இன்னமும் இது ஓடிக் கொண்டிருந்தால் கூட ஆச்சரியப் படமாட்டேன்.

    ஏசு பற்றிய ஐன்ஸ்டீன் மேற்கோள் முக்கியமானது. அது பாடப் புத்தகங்களில் வரவேண்டும். பொதுத் தளத்தில் பரவலாகப் பேசப் படவேண்டும்.

  6. அரவிந்தன் என்றாலே ஆன்மிகம் சார்ந்த அறிவியல் கட்டுரைகள் என்ற வரிசையில் இன்னொரு முக்கியமான படைப்பு. நன்றி !
    இதை ஸ்ரீ ராமகிருஷ்ண விஜயத்திற்க்கும் அனுப்பலாமே ?
    ஜெய் சுவாமிஜி !

  7. கடவுள் மதம் பற்றி நல்ல ஒப்புமைச் சிந்தனைகளை எழுப்பும் ஒரு கட்டுரை இது.

    ஐன்ஸ்டைன் பிரபஞ்சப் படைப்பையும் நிகழ்ச்சிகளையும் பற்றிக் கூறும்போது, அவற்றை விளக்க வெறும் விஞ்ஞானம் மட்டும் போதாது. ஆன்மீகச் சிந்தனை, விஞ்ஞானத் தேடல் இரண்டும் சேர்ந்துதான் விளக்க முடியும் என்று சொல்கிறார்.

    விஞ்ஞானம் பல்வேறு கோட்பாடுகளின் மூலத்தை அனுமானக் கருத்தாக எடுத்துக் கொண்டுள்ளது. உதாரணம் பிரபஞ்ச உதயமான பெருவெடிப்பு நியதி. ஜியார்ஜ் காமாவின் பெருவெடிப்பு நியதியை ஜெயந்த் நர்லிகர் போன்ற வானியல் விஞ்ஞானிகள் ஒப்புக் கொள்ள வில்லை. பெருவெடிப்புக்கு முன்பு என்ன நடந்தது என்னும் கேள்வி இன்னும் கேள்வியாகத்தான் இருக்கிறது. ஜியார்ஜ் காமாவின் கோட்பாடு அதை விளக்காது.

    விஞ்ஞானம் முழுமை பெறாதது, முரண்பாடானது, தர்க்கத்துள் மாட்டிக் கொள்வது, மற்றும் மாறுவது. போதுமான விளக்கம் தராதது. உதாரணம் ஈர்ப்பு விசை. நியூட்டனின் ஈர்ப்பு விதி மாறியது. பிறகு ஐன்ஸ்டைன் காலவெளி வளைவானது. இப்போது அதுவும் மாறப் போகிறது.

    விஞ்ஞானத்தின் “காரண காரிய நியதி” (The Cause & Effect Theory) முடிவற்ற முடிவுகளில் விளைவுகளில் மாட்டிக் கொள்ளும். உதாரணம் : முட்டை முதலா கோழி முதலா போன்ற வாதங்கள். கடவுளைப் படைத்தது எது போன்ற வினாக்கள்.

    ஐன்ஸ்டைன் மதம், கடவுளைப் பற்றிக் கூறுவது இதுதான் : “நமது வலுவற்ற நெஞ்சம் உணரும்படி தாழ்மையுடன் மெய்ப்பாடு ஞானத்தைத் தெளிவு படுத்தும் ஓர் உன்னத தெய்வீகத்தை மதிப்பதுதான் என் மதம். அறிவினால் அளந்தறிய முடியாத பிரமாண்டமான பிரபஞ்சத்தை உருவாக்கிய மாபெரும் ஒர் ஒளிமயமான மூலசக்தி எங்கும் பரவி யிருப்பதை ஆழ்ந்துணரும் உறுதிதான் என் கடவுள் சிந்தனையை உருவாக்குகிறது.”

    சி, ஜெயபாரதன், கனடா

  8. அறிவினால் அளந்தறிய முடியாத பிரமாண்டமான பிரபஞ்சத்தை உருவாக்கிய மாபெரும் ஒர் ஒளிமயமான மூலசக்தி எங்கும் பரவி யிருப்பதை ஆழ்ந்துணரும் உறுதிதான் என் கடவுள் சிந்தனையை உருவாக்குகிறது.”
    – ஐன்ஸ்டைன்

    அண்டப்பகுதியின் உண்டைப் பிறக்கம்
    அளப்பரும் தன்மை வளப்பெரும் காட்சி
    ஒன்றனுக்கு ஒன்று நின்று எழில் பகரின்
    நூற்றொரு கோடியின் மேல்பட விரிந்தன
    இல்நுழை கதிரின் துன்அணுப் புரையச்
    சிறியவாக…
    – மாணிக்கவாசகர்

    வெளியிடை யொன்றே விரித்ததிற் பற்பல
    அளியுற வகுத்த அருட்பெருஞ் ஜோதி!
    உயிர்வகை யண்டம் உலப்பில எண்ணில
    அயர்வற வகுத்த அருட்பெருஞ் ஜோதி!
    – வள்ளலார்

    பெறுபகி ரண்டம் பேதித்த அண்டம்
    எறிகடல் ஏழின் மணல்அள வாகப்
    பொறியொளி பொன்னணி யென்ன விளங்கிச்
    செறியும் அண் டாசனத் தேவர் பிரானே.
    – திருமூலர்

    One paltry planet, a few thousand years–hardly worth the attention of a minor deity, much less the Creator of the universe.
    – Carl Sagan

  9. Great Article Aravindan. Your writings should come out in book form and should reach millions of ignorant Tamilians.

    Thanks
    Viswamitra

  10. I see from many blogs that lament that Hinduism is under siege both covertly & overtly .But there is hardly any plan neither suggested or discussed to overcome this threat. Also we continue to have our caste prejudices & display it at every opportunity. If we feel strongly that Hinduism is a great way to live ,then religious leaders & scholars should come out with a plan of action to create an inclusive society . There should be a council of religious leaders from all denominations to work towards this cause. They should evolve a system to involve every one by teaching them some simple ways about how to conduct & pray in temples & to celebrate festivals so that they get an identity which they presently donot have. Also well to do people should donate money for the poor people to be able to celebrate the important festivals in a simple way.

  11. இந்திய‌ர்‌களை‌ப் பொருத்த‌ வ‌ரையில் ஆன்மீக‌ம் என்ப‌தும் இய‌ற்பிய‌ல், வேதிய‌ல் , க‌ணித‌ம் போல‌ ஒரு அறிவிய‌ல் தான். ஆன்மீக‌ம் என்ப‌து உயி‌ர் அறிவிய‌ல்!

    க‌ணித‌ம் தெரியாத‌வ‌ன் க‌டைக்குப் போனால், 73 ரூபாய் ம‌திப்புள்ள‌ ஒரு பொருளை வாங்க‌ 100 ரூபாய் கொடுத்து விட்டு, க‌டைகார‌ர் பொருலுட‌ன் வெறும் இருப‌து ரூபாய் குடுத்தால், க‌ணித‌ம் தெரியாத‌வ‌ன் அதை வாங்கி கொண்டு வ‌ந்து விடுவான்‍ அவ‌னுக்கு க‌ண‌க்கு தெரியாத‌தால் ந‌ஷ்ட‌ம் 7 ரூபாய் தான். But If a person is weak in Spirtual science he faces the risk of losing the life!

    ம‌னித‌னின் உயிரைக் காப்பாற்றும் அறிவிய‌ல் ஆன்மீக‌ம். எல்லொரும் சாக‌ப் போவ‌து உறுதி. ஆனால் சாவுக்குப் பின் உயிரின் நிலை என்ன‌?எத‌த‌னை நாளைக்கு பிற‌ப்பு, இற‌ப்பு அல்ல‌து சொர்க்க‌ம், ந‌ர‌க‌ம்? ந‌ம் விதியை நாமெ தீர்மானிப்ப‌து எப்போது? இப்படிப் ப‌ட்ட‌ ஆராய்ச்சிதான் ஆன்மீக‌ம்.

    நியூட்ட‌னின் விதிக‌ளை வைத்து, ம‌ஞ்ச‌க் காமாலைக்கு ம‌ருந்து க‌ண்‌டு பிடிக்க‌ முடியுமா?

    ஒவ்வொரு அறிவிய‌லுக்கும் ஒரு உப‌யொக‌ம் உள்ள‌து. அந்த‌ அறிவிய‌ளீன் விதிக‌ள் அந்த‌ த‌ள‌ங்க‌லுக்குள் ம‌ட்டுமெ ப‌ய‌ன்ப‌டும்.

    ஐன்ஸ்டைனின் இய‌ற்பிய‌லில் மிக‌ச் சிற‌ந்த‌ அறிங்க‌ர். ஆனால் ஆன்மீக‌த்தில் அவ‌ர் க‌ருத்துக்க‌ள் ஜுஜூபியாக உள்ள‌ன‌‌.

    இதில் ஆஹா, ஓஹோ வேறு!

    ஐன்ஸ்டைநை நியூட்ட‌ன் அல்ல‌து ஆர்க்கிமிடிஸ் உட‌ன் ஒப்பிட்டு இருக்க‌லாம்

    க‌ட்டுரையாள‌ருக்கு சுவாமி விவேகானந்தர் மீது ஏதாவ‌து கோவ‌மா?

    Swami Vivekaananthars principles and findings are self sustainable, and does not need ratifaction from Physics , Chemistry or Botany!

    In fact Swami Vivekaanathars Knoweldge in Science is stunning Great.

    If any one ask what is Physics, what shall we say?

    We say that Physics is abaout Light. about Sound, about Motion, about Force, about HEAT, about Electricity….

    But swamy concluded Physics in one sentence. Not only Physics, Chemistry also.

    If any one can find the Source of Energy from which the energy of other sources is created , that is the apex and end point of Physics research!

    If any one can find the Basic thing from which ataoms of all molecules are created, that is the apex and end point of Chemistry research!

    If any one can find the Soul, from which all souls are created that is the apex and end point of spiritual, religious research!

  12. பிரபஞ்சத்தின் ரகசிய தத்துவத்தையும் அறிய ஐன்ஸ்டீனும், கடவுளின் ரகசிய தத்துவத்தையும் அறிய விவேகானந்தரும் முயற்சித்தனர். ஆக இருவரும் ஒன்றை தான் தேடினர்.

  13. // கிறிஸ்துவின் இலட்சியத்துடன் இன்றைக்கு மேற்கத்திய நாடுகள் அடைந்துள்ள அபரிமிதமான வளக்கொழிப்பை இணைக்க முடிந்தால் நல்லதுதான். உங்களால் முடியாது என்றால் இந்த போகங்களைக் கைவிட்டு அவரிடம் திரும்புவதே நல்லது. //

    விவேகானந்தரின் இந்த அற்புதமான கருத்துடன் அறிவியல் விஞ்ஞானி ஐன்ஸ்டீனை ஒப்பிட்டு பார்க்க மனம் வரவில்லை..!

    (edited and published)

  14. மிக நல்லது!
    சட‌மும் சக்திதான் என‌ விவேகானந்தர் கணித மேதை டெஸ்லாவிடம் நிறுவல் கேட்ட நிகழ்வுகளையும்
    இன்னும் நிறுவப்படாதிருக்கும் காரண காரிய விதி பற்றிய விவேகானந்தரின் கருத்துக்களையும் பகிரலாம்!

  15. மிக அருமையான கட்டுரை தெளிவான சிந்தனை நல்ல ஆய்வு மெய்ஞானியும் விஞ்ஞானியும் ஒரு புள்ளியை நோக்கியே நகர்வதை வெளிப்படை ஆக்கியது இக்கட்டுரை நன்றி.

  16. E=mc2 என்ற சமன்பாடு பொருளையும் ஆற்றலையும் இணைப்பதே ஆகும். அறிவியல் என்பது வளர்ந்து கொண்டே இருப்பது. ஆதலின் இன்றைய முரண் நேற்றைய உண்மையே. உண்மையில் அது முரண் அல்ல. அதன் வளர்ச்சியே

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *