இந்திய சுதந்திர தினத்தன்று எங்கள் குடும்பம் லால்குடியில் இருந்தது. எங்கள் தந்தையார் திரு ராமலிங்கம் அவர்கள் திருச்சி மாவட்ட கல்வி அதிகாரியாக இருந்தார். நான் பத்தாவது வகுப்பில் இருந்தேன். (அன்றைய ஐந்தாவது பார்ம்). ஆகஸ்ட் மாத ஆரம்பத்திலிருந்தே நாங்கள் இந்தத் திருநாளை மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்தோம். எங்கள் மாமா திரு. சிட்டி சுந்தர்ராஜன் அப்போது வானொலி ஆசிரியராக, திருச்சியில் பணிபுரிந்து கொண்டிருந்தார்.
திராவிடக் கழகம் அப்போது திருச்சி மாவட்டத்தில் கொடிகட்டிப் பறந்து கொண்டிருந்தது. சாதாரணமாக மேடைப் பேச்சாளர்கள் அடுக்கு மொழியில் பிராமணர்களை, வட இந்தியர்களை, ஹிந்தி மொழியை, மற்றும் இதிகாசங்களை இயன்ற வரை சாடிக்கொண்டிருந்த நேரம். எங்கள் வகுப்பாசிரியரும் தலைமை ஆசிரியரும் கூட திராவிடக் கழக அனுதாபிகள். அப்போது அக்கட்சி இன்னும் இரண்டாகப் பிரியவில்லை. ஆனாலும் அப்போதே உட்கட்சிப் பூசல்கள் இருந்தன. அவர்களுள் சுதந்திர தினத்தைக் கொண்டாடுவதா கூடாதா என்ற ஒரு அபிப்ராய பேதம் இருந்தது. அந்த நிலையில் மாணவர் சங்கத்துத் தேர்வுகள் நடக்க இருந்தன. நான் என்னையே ஒரு வேட்பாளனாக அறிவித்துக் கொண்டேன் எனக்கும் சில தோழர்கள் இருந்தனர். அப்போது திராவிடக் கழகத்தின் மூலம் ஒரு மாணவன் நிறுத்தப்பட்டான். அவனுக்கு எதிராக நான் போட்டியிட்ட போது அது ஒரு பிராமாணர், பிராமணல்லாதார் போட்டியாகவே ஆகிவிட்டது. ஆசிரியரும் தலைமை ஆசிரியரும் மறைமுகமாக அம்மாணவனுக்கு ஆதரவு அளித்தனர். முடிவு? சொல்ல வேண்டுமா? அப்பையனே தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது!
நான் விட வில்லை தொடர்ந்து “செந்நாப்போதார் செந்தமிழ்ச் சங்கம்” என்ற ஒரு சங்கத்தை அமைத்து அதற்கு ஆரம்ப விழாவிற்கு எங்கள் தலைமை ஆசிரியரையே அழைத்திருந்தேன். சில நாள்களில் எங்கள் சங்கம் நல்ல வரவேற்பைப் பெற்றது! தலைமை ஆசிரியரே எங்கள் சங்கத்திற்கு ஆதரவை அளிக்க ஆரம்பித்தார்.
ஆகஸ்டு இரண்டாவது வார ஆரம்பத்தில் நான் காலணா போஸ்டு கார்டுகள் இருபதோ முப்பதோ வாங்கி எல்லாவற்றிலும இடது மேல்மூலையில் சிறிய இந்திய கொடிச் சின்னத்தை ஒட்டி, கலர் மையில்
“ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே
ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோமென்று”
என்றெழுதி அதன் முடிவில் சி. சுப்பிரமணி பாரதியார் என்றும் குறிப்பிட்டு சொந்தக்காரர்கள், நண்பர்கள் எல்லோருக்கும் அனுப்பி வைத்தேன். எங்கள் ஆசிரியர்களுக்கும் அனுப்பி வைத்ததில் அவர்கள் பெருமை அடைந்தனர். முதல் நாளன்றே எங்கள் சங்கத்தின் சார்பில் ஒரு கூட்டம் கூட்டி, விழாவைக் கொண்டாடினோம். அன்றே எங்கள் தாயார் இனிப்புகள் செய்து நண்பர்களுக்கும் வழங்கத் தந்தார்.
சுதந்திர தினத்தன்று, மாலை திருச்சி சென்றிருந்தேன். அங்கு சிட்டி அவர்கள் குடியிருந்த, ஆனை கட்டி மைதானத்து வேதமாணிக்கம் ஸ்டோர்ஸில் சிட்டி தலைமையில் ஒரு சிறப்புக் கூட்டம். பல நண்பர்கள் வந்திருந்தனர்.
சுதந்திர தினத்தை ஒட்டி மணிமண்டபத்திலும் ஒரு கூட்டம் நடந்ததாக நினைவு; மதுரை மணி அய்யர் பாட்டுக் கச்சேரியுடன். அப்போது தலைசிறந்த எழுத்தாளர்களான ந. பிச்சமூர்த்தி, சாலிவாஹனன், திருலோக சீதாராம் போன்றவர்களை சிட்டி மாமாவுடன் சந்தித்துள்ளேன். அவர்களெல்லாம் சுதந்திரத்தைப் பற்றிப் பேசுகையில் மெய் சிலிர்க்கும்.
இரவில் திருச்சி ஜங்ஷனுக்கு எல்லோரும் சென்றோம். அங்கு மின்சார பல்புகளால் அலங்கரிக்கப்பட்ட கொடியுருவம் மின்னிக் கொண்டு திகழ்ந்தது இன்னும் பசுமையாக மனதில் உள்ளது. ‘சுதந்திர இந்தியாவில் மாணவர்கள் பணி’ என்ற தலைப்பில் எங்கள் சங்கத்தில் ஒரு கூட்டம் போட்டோம். அதற்கு நல்ல வரவேற்பு இருந்தது. ஊரில் பலகூட்டங்கள் நடந்தன. சின்ன அண்ணாமலை பேசியதுகூட நினைவில் உள்ளது.
தீவிர உற்சாகத்துடன் நாங்கள் எதிர் கொண்ட சுதந்திர இந்தியாவை இவ்வளவு சீக்கிரத்தில் அரசியல்வாதிகள் குப்பைமேடாக ஆக்கிவிடுவார்கள் என்று அப்போது எங்களுக்குத் தோன்றியதேயில்லை!
சுதந்திரதின நல்வாழ்த்துகள்
https://mynandavanam.blogspot.com/search/label/August%2015
Very SAD.
GOD BLESS.
” சுதந்திர இந்தியாவை இவ்வளவு சீக்கிரத்தில் அரசியல்வாதிகள் குப்பைமேடாக ஆக்கிவிடுவார்கள் என்று அப்போது எங்களுக்குத் தோன்றியதேயில்லை! ”
Srinivasan.
வணக்கம் ஐயா..!
________________________________
சென்னாப் போதர் செந்தமிழ் சங்கம்..?
______________________________
செந்நாப் புலவர் என்பது மலையாளம்..
தமிழில் அப்படி உச்சரிக்க வருமா..!?
தவிரவும்..
‘ப்’ என்கிற சந்தியுடன் வருவதால்
அதனை சென்னாப் போதர் என்பதுதானே சரி..?
போதார்/போதாதவர் (ஓதார்/ஓதுவார்)
என்று எழுதுவது கற்பிதம்..
அதே போல்..
செந்தமிழ் சங்கம் என்பது..
செந்தமிழ்ச் சங்கம் என்றாகி வருமா..?.
செந்தமிற் சங்கம் என்று எழுத முடியுமா..?
அருள் கூர்ந்து தமிழில் எண்ணிப் பார்க்க வேண்டும்.
நன்றிகள்..!
பூபதி செ. மாணிக்கம்