சிலரின் பெயரை உச்சரிக்கும்போதே மரியாதை இயல்பாக எழும். இப்படிப்பட்ட அபூர்வ தலைவர்களில் நானாஜி தேஷ்முக் தலைசிறந்தவராவார். அவரது அறிவுத்திறனும் அமைப்பை உருவாக்கி நடத்திச்செல்லும் ஆற்றலும் வியக்கவைப்பவை. பாரத அரசியலில் அவர் அழுத்தமான முத்திரை பதித்துள்ளார்.
1916ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 11ஆம் தேதி மகாரஷ்டிராவில் பர்பானி மாவட்டத்தில் உள்ள கடோலி எனும் கிராமத்தில் அவர் பிறந்தார்.
அவரது குடும்பம் மிகவும் ஏழ்மையானது. புத்தகங்களை வாங்கக்கூட போதிய பணம் இல்லாமல் அவர் சிரமப்பட்டார். ஆனால் கல்வி கற்கவேண்டும் என்ற தணியாத தாகம் அவரிடம் குடிகொண்டிருந்தது. அவர் பகுதி நேரமாக காய்கறிகளை விற்று தனது கல்விச் செலவை சமாளித்துக்கொண்டார்.
லோகமான்ய பாலகங்காதர திலகர், ‘சுதந்திரம் எனது பிறப்புரிமை, அதை அடந்தே தீருவேன்’ என்று வீரமுழக்கமிட்டார். அவரது தேசபக்தி நானாஜியை ஈர்த்தது.
சமூக நலப்பணியிலும் நானாஜி கவனம் செலுத்தினார்.
நானாஜியின் குடும்பத்தினர் ஆர்.எஸ்.எஸ் நிறுவனர் டாக்டர் ஹெட்கேவாரின் லட்சியப் பிடிப்பால் ஈர்க்கப்பட்டவர்கள் ஆவர். ஹெட்கேவார், நானாஜியின் குடும்பத்திற்கு அடிக்கடி சென்று அளவளாவுவது உண்டு. விளையும் பயிர் முளையிலே தெரியும் என்பதற்கிணங்க நானாஜியை ஹெட்கேவார் அடையாளம் கண்டு கொண்டார்.
நானாஜியின் இடைவிடாத உழைப்பால் மூன்று ஆண்டுகளிலேயே சங்கம் விரிந்து பரந்தது. கோரக்பூர் மற்றும் அதைச்சுற்றியுள்ள பகுதிகளில் 250 ஷாகாக்கள் செயல்படத் தொடங்கின. நானாஜி கல்விக்கு எப்போதுமே முக்கியத்துவம் அளிப்பது வழக்கம். 1950ஆம் ஆண்டு கோரக்பூரில், இந்தியாவிலேயே முதல் சரஸ்வதி சிசு மந்திரை அவர் நிறுவினார். கல்விமீது அவருக்கு உள்ள ஆழ்ந்த பற்றையே இது பிரதிபலிக்கிறது.
1947 ஆம் ஆண்டு ராஷ்ட்ர தர்மா, பாஞ்சஜன்யா ஆகிய இரண்டு சஞ்சிகைகளையும் சுதேசி என்ற செய்திப் பத்திரிகையையும் நடத்த ஆர்.எஸ்.எஸ் முடிவு செய்தது. அடல் பிஹாரி வாஜ்பாய் ஆசிரியர் பொறுப்பேற்றார். தீனதயாள்ஜி ‘மார்க் தர்ஷ்க்’ பொறுப்பேற்றார்.
நானாஜி தேஷ்முக் நிர்வாக இயக்குனர் பொறுப்பேற்றார். போதுமான பணம் இல்லாமல் குறிப்பிட்ட காலத்திற்குள் பத்திரிகைகளைக் கொண்டுவருவது மிகவும் கடினமான காரியமாகும். ஆனால் இம்மூவரும் அயராது உழைத்ததால் பத்திரிகைகளை உரிய நேரத்தில் கொண்டுவர முடிந்தது. இப்பத்திரிகைகளுக்கு படிப்படியாக ஆதரவு பெருகியது. மக்கள் மத்தியில் வரவேற்பு அதிகரித்தது. இவற்றுக்கு தனி அங்கீகாரமும் மதிப்பும் கிட்டின.
மஹாத்மா காந்தி சுட்டுக் கொல்லப்பட்டதை அடுத்து ஆர்.எஸ்.எஸ். தடை செய்யப்பட்டது. இதையடுத்து பத்திரிகை வெளியீடும் நின்று போனது. இந்த நேரத்தில் நானாஜி வித்தியாசமான கோணத்தில் சிந்தித்தார். பத்திரிகையை வெளிப்படையாகக் கொண்டுவராமல் மறைமுகமாகக் கொண்டுவந்து அதைப் பரப்புவது என்பதுதான் நானாஜியின் திட்டமாகும். அது நடைமுறைப்படுத்தப்பட்டது. ஆர்.எஸ்.எஸ். மீதான தடை விலக்கப்பட்டதை அடுத்து, அரசியல் கட்சி ஒன்றைத் தொடங்கவேண்டும் என்ற முடிவு எடுக்கப்பட்டது. இதன்படி பாரதீய ஜனசங்கம் தொடங்கப்பட்டது. உத்திரப்பிரதேச பாரதீய ஜன சங்கச் செயலாளர் பொறுப்பை ஏற்றுக்கொள்ளுமாறு நானாஜியை ஆர்.எஸ்.எஸ். சர்சங்கசாலக் ஸ்ரீ குருஜி கேட்டுக்கொண்டார். உத்திரப்பிரதேசத்தில் அவர் பிரச்சாரக்காக ஏற்கனவே பணியாற்றி அனுபவம் பெற்றிருந்தார்.
இந்த அனுபவம் பாரதீய ஜனசங்கத்தை கிராமங்களிலெல்லாம் வலுவாக வேரூன்ற வைக்கப் பெரிதும் உதவியது. 1957 இல் உத்திரப்பிரதேசத்தில் உள்ள எல்லா மாவட்டங்களிலும் பாரதீய ஜனசங்கத்திற்கு கிளைகள் அமைக்கப்பட்டுவிட்டன. இதற்கு நானாஜிதான் அடிப்படைக் காரணமாவார். அவர் மாநிலம் முழுவதும் சுற்றுபயணம் மேற்கொண்டு கட்சியை வளர்த்தார். உத்திரப்பிரதேசத்தில் பாரதீய ஜனசங்கம் படிப்படியாக வலுவடைந்தது. அரசியல் களத்தில் தவிர்க்க முடியாத சக்தியாக உருவெடுத்தது. 1967இல் சவுத்ரி சரண்சிங் தலைமையில் பல்வேறு கட்சிகள் ஒருங்கிணைந்து அமைச்சரவை அமைத்தன. ஐக்கிய சட்டசபை கூட்டமைப்பு என்ற இந்த அமைப்பில் பாரதீய ஜனசங்கமும் அங்கம் வகித்தது. சவுத்ரி சரண்சிங்குடனும் டாக்டர் ராம் மனோகர் லோகியாவுடனும் நானாஜிக்கு நல்லுறவு இருந்துவந்தது.
இதன் அடிப்படையில் புதிய மந்திரி சபை அமைப்பிலும் அதன் செயல்பாட்டிலும் நானாஜியால் முக்கிய பங்கு வகிக்கமுடிந்தது. முதன்முறையாக உத்திரப்பிரதேசத்தில் காங்கிரஸ் அல்லாத ஒரு கூட்டணி அரசை சரண்சிங் தலைமையில் அமைக்க ஆணிவேராக செயல்பட்டவர் நானாஜியே.
உத்திரப்பிரதேச அரசியலில் காங்கிரஸ் தலைவரான சந்திரபானு குப்தா மிகவும் வலிமையாக இருந்துவந்தார். அவரையே நானாஜி வீழ்த்திக் காட்டினார். ஒருமுறையல்ல, மூன்று முறை இவ்வாறு செய்துகாட்டினார். ஒரு முறை சந்திரபானு குப்தாவின் ஆதரவு பெற்ற வேட்பாளரை மாநிலங்களவைத் தேர்தலின் போது வியூகம் வகுத்து நானாஜி தோற்கடித்துக் காட்டினார். 1957ல் லக்னோ தொகுதியில் சந்திரபானு குப்தா போட்டியிட்டார். சோஷலிஸ்ட்டுகளுடன் நானாஜி கூட்டு வைத்துக்கொண்டார். பாபு திரிலோகி சிங்கிற்கு ஆதரவாக நானாஜி செயல்பட்டார். சந்திரபானு குப்தாவை திரிலோகி சிங் படுதோல்வி அடையச் செய்தார். உத்திரப்பிரதேசத்தில் மதுவா தொகுதியில் மறுபடியும் சந்திரபானு குப்தாவை தனது சாணக்கியத் தனத்தால் நானாஜி வீழ்த்தினார்.
தீனதயாள்ஜியின் வழிகாட்டல், நானாஜியின் அமைப்பு ரீதியான அரும்பணி, அடல் பிஹாரி வாஜ்பாயின் சொல்லாற்றல் மூன்றும் ஒருங்கிணைந்து இருந்ததால் பாரதீய ஜனசங்கம் அமோக வளர்ச்சி அடைந்தது. சொந்தக் கட்சிக்காரர்களுடன் மட்டுமல்லாமல் மாற்றுக் கட்சிக்காரர்களுடனும் நானாஜிக்கு நல்லுறவு இருந்து வந்துள்ளது. அரசியல் ரீதியாக சந்திரபானு குப்தாவை நானாஜி பலமுறை வீழ்த்தியுள்ளார். இருப்பினும் நானாஜியை குப்தா பெரிதும் மதித்துவந்தார். நானாஜியை ‘நானா பதன்விஸ்’ (நானா பதன்விஸ் 1857 முதல் சுதந்திரப் போரில் பங்கு பெற்ற மாவீரர்) என்றே குப்தா அன்புடன் அழைத்துவந்தார். டாக்டர் ராம் மனோகர் லோகியாவுடன் நானாஜிக்கு இருந்துவந்த உறவு மிகவும் விசேஷமானது. இதனால் இந்திய அரசியலில் குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்பட்டுள்ளது. ஒரு முறை பாரதீய ஜனசங்க நிர்வாகிகள் கூட்டத்திற்கு டாக்டர் லோகியாவை நானாஜி அழைத்தார். அதை ஏற்று லோகியாவும் அங்குவந்தார். அங்குதான் தீனதயாள்ஜியை லோகியா முதன்முறையாகச் சந்தித்தார். காங்கிரஸை வீழ்த்த பாரதீய ஜனசங்கத்தினரும் சோஷலிஸ்ட்டுகளும் ஒருங்கிணைய இங்குதான் வித்தூன்றப்பட்டது.
வினோபாஜியால் தொடங்கப்பட்ட பூதான இயக்கத்தில் நானாஜி முக்கியப் பங்கேற்றார். 2 மாதங்கள் வினோபாஜியுடனே அவர் கழித்தார். இந்த இயக்கம் வெற்றிபெற்று வருவதை நேரில் கண்டு அவர் உந்துசக்தி பெற்றார். ‘முழு புரட்சி’ நடத்த ஜெயப்பிரகாஷ் நாராயணன் விடுத்த அழைப்பு பாரதத்தில் தாக்கத்தை ஏற்படுத்தியது. ஜெயப்பிரகாஷ் நாராயணனுக்கு நானாஜி முழு ஆதரவு அளித்தார். ஜனதா கட்சியை உருவாக்கிய அரசியல் சிற்பிகளுள் நானாஜியும் ஒருவராவார். நெருக்கடி நிலை முடிவடைந்த பிறகு நடைபெற்றத் தேர்தலில் ஜனதா கட்சி அமோக வெற்றிபெற்றது. உத்திரப்பிரதேசத்தில் உள்ள பல்ராம் பூர் தொகுதியிலிருந்து மக்களவைக்கு நானாஜி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அப்போதைய பிரதமர் மொராஜி தேசாய் தனது அமைச்சரவையில் நானாஜிக்கு இடமளிக்க முன்வந்தார். ஆனால் தனக்கு அமைச்சர் பதவி வேண்டாம் என்று நானாஜி மறுத்துவிட்டார். நானாஜிக்கு அரசியல் என்பது ஒரு போதும் தொழிலாக இருந்ததில்லை. அவருக்கு அது ஒரு லட்சியமாகவே இருந்து வந்தது. ஜெயப்பிரகாஷ் நாராயணனின் முன்னிலையில் நானாஜி சுயமாகவே அரசியலிலிருந்து விருப்ப ஓய்வு பெற்றுக்கொண்டார். அதன்பிறகு அவர் தீவிர அரசியலில் ஈடுபடவே இல்லை. எடுத்த முடிவில் திடமாக இருக்கும் இயல்பு அவரது ரத்தத்திலேயே படிந்துள்ளது.
1969 ஆம் ஆண்டு நானாஜி தீனதயாள் ஆய்வு மையத்தை உருவாக்கினார். இப்போது அவர் இதிலேயே தனது முழு கவனத்தையும் செலுத்தி வருகிறார். தனது முழுநேரத்தையும் இதிலே செலவழித்து வருகிறார். இந்தியாவின் முதல் கிராமியப் பல்கலைக்கழகமான சித்திரகூட கிராமோதய விஸ்வ வித்யாலயாவை சித்ரகூடத்தில் அவர் நிறுவினார். அதன் முதலாவது வேந்தராக அவர் செயல்பட்டார். 1999 ல் அடல் பிஹாரி வாஜ்பாய் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு பதவியில் இருந்தபோது மாநிலங்களவைக்கு நானாஜி நியமிக்கப்பட்டார். அவரது தேசப் பணியை கௌரவித்து இந்தப் பதவி வழங்கப்பட்டது.
பண்டிட் தீனதயாள் உபாத்யாயா (1916-1968) தனது கருத்துகளை ஏகாத்ம மானவவாதம் எனத் தொகுத்துரைத்தார். இது ஒருங்கிணைந்த மனிதநேயத்தின் சாராம்சமாகும். இந்தத் தத்துவத்தைப் பரப்பும் நோக்கத்துடந்தான் தீனதயாள்ஜி ஆய்வு மையத்தை நானாஜி நிறுவினார். ஏகாத்ம மானவாதம் இந்த மண்ணின் வாசனை சார்ந்ததாகும். இயற்கைக்கும் மனிதனுக்கும் உள்ள தொடர்பு மனிதர்களுக்கிடையே உள்ள தொடர்பு, சுயசார்பின் அவசியம், பரிவார்ந்த கண்ணோட்டம் போன்றவையெல்லாம் இந்தத் தத்துவத்தில் பொதிந்துள்ளன.
1978ல் தீவிர அரசியலிலிருந்து ஓய்வு பெற்ற நானாஜி ஒருங்கிணைந்த மனிதநேயத்தின் அடிப்படையில் கிராமங்களை எவ்வாறு முன்னேற்றமடையச் செய்ய முடியும் என்பதற்கான முன்னுதாரணத்தைப் படைக்க விரும்பினார். உத்திரப்பிரதேசத்தில் உள்ள கோண்டா, மகாராஷ்டிராவில் உள்ள பீட் ஆகிய இடங்களில் முதல் கட்டமாக சோதனை முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இதன் அடிப்படையில் உரிய திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. சுகாதாரம், கல்வி, விவசாயம், கிராம மக்களுக்குப் போதுமான வருவாய் வாய்ப்பு, இயற்கை வளங்களைப் பாதுகாத்தல், சமூகரீதியான மனசாட்சி, நீடித்த வளர்ச்சி போன்ற அத்தனை அம்சங்களும் அடங்கிய மாதிரித் திட்டத்தை நானாஜி முன்வைத்தார். இவ்வாறு முழுமையான மாற்றத்தை ஏற்படுத்துவதன் மூலம் கிராமங்களில் முழுமையான மேம்பாட்டை உருவாக்க முடியும் என்பதை அவர் நிரூபித்துக் காட்டினார். மக்களின் ஈடுபாட்டுடனும் பங்கேற்புடனும்தான் இது சாத்தியம் என்பதை அவர் மெய்ப்பித்துக் காட்டினார்.
இந்தத் திட்டத்திற்கு ‘சித்திரகூடத் திட்டம்’ என்று பெயர் சூட்டப்பட்டது. இது சுயசார்புடைய முன்மாதிரித் திட்டமாகும். 2005 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 26 ஆம் தேதி குடியரசு தினத்தன்று இத்திட்டம் தொடங்கப்பட்டது. சித்திரகூடத்தைச் சுற்றியுள்ள உத்திரபிரதேசம் மற்றும் மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த 80 கிராமங்களில் இத்திட்டம் முதல் முறையாக தொடங்கப்பட்டது. 2005 ஆம் ஆண்டு முடிவடைவதற்குள் இந்தக் கிராமங்கள் அனைத்தும் சுயசார்புடையவையாக மாறிவிடவேண்டும் என்பதுதான் இலக்காகும். 2010ல் 500 கிராமங்களையாவது இதேபோல சுயசார்புடையவைகளாக மாற்றிவிட வேண்டும் என்பது வருங்கால இலக்காகும்.
சுயசார்பு
தனது கண்ணோட்டம் மற்றும் பணி சார்ந்த இலக்கு குறித்து நானாஜி தனது நண்பர்களுக்குக் கடிதம் எழுதியுள்ளார். கடிதத்தின் சாராம்சம் வருமாறு:
ஒருபுறம் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறையில் வியக்கவைக்கும் முன்னேற்றங்கள் ஏற்பட்டுக் கொண்டிருக்கின்றன. ஆனால் மக்களின் வாழ்க்கையில் ஏராளமான பிரச்சினைகளும் ஆபத்துகளும் வந்துகொண்டே இருக்கின்றன. அதிகார வெறி, பொதுநலத்தை ஓரங்கட்டிவிட்டது. எங்கு பார்த்தாலும் கோஷ்டிப் பூசல் காணப்படுகிறது. எந்தக் கட்சியும் இதற்கு விலக்கல்ல. இந்த பரஸ்பர அவநம்பிக்கை, தகராறு போன்றவற்றால் அரசியல் கட்சிகள் பலவீனமடைந்து கொண்டிருக்கின்றன. அறப்பண்பு முற்றிலுமாக செல்லரித்துப் போய்விட்டது. மனித விழுமியங்கள் நலிவடைந்து விட்டன. அரசுகள் ஸ்திரத்தன்மை இழந்துவிட்டன. எங்கு பார்த்தாலும் அநீதியும் அட்டூழியமும் அக்கிரமமும் நடந்துகொண்டிருப்பதைப் பார்க்கிறோம். இவற்றுக்கெல்லாம் என்ன பரிகாரம் என்பதைக் காண வேண்டும். நிர்வாகம் முடங்கிவிட்டது. எங்கு பார்த்தாலும் லஞ்சம் தலைவிரித்தாடுகிறது. பொதுமக்களின் அவதிகளுக்கு எல்லையே இல்லை. வறுமையும் வேலையில்லாத் திண்டாட்டமும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கின்றன. விலைவாசி உயர்ந்துகொண்டே இருக்கிறது. ஒருநாள் கழிவது ஒரு யுகம் கழிவதைப் போல் உள்ளது. சாதாரண மக்களால் வாழ்க்கையை நடத்தவே முடியவில்லை. ஆனால் இந்த இக்கட்டான சூழ்நிலையிலிருந்து மீள என்ன வழி என்பதில் யாரும் கவனம் செலுத்துவதாகத் தெரியவில்லை. இந்த மோசமான சூழ்நிலையிலிருந்து விடுபட நாம் வழிகண்டாக வேண்டும். நம்மிடம் உள்ள வளங்கள் ஒரு வரம்பிற்கு உட்பட்டவையே. இதைச் சிறந்த முறையில் பயன்படுத்தி நமது பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண வேண்டும். தீனதயாள்ஜி ஆய்வு மையத்தைச் சேர்ந்த நாம் ஆண்கள், பெண்கள் அனைவரும் சேர்ந்து எதிர்கால எழுச்சிக்கான செயல்களில் நம்மை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும்.
மத்தியப் பிரதேசத்திற்கும் உத்திரப் பிரதேசத்திற்கும் இடையில் உள்ள எல்லைப் பகுதியில் சித்திரகூடம் என்ற சிறிய நகரம் உள்ளது. வனவாசத்தின் போது ராமபிரான் வாழ்க்கையின் அடித்தளத்தில் சிக்குண்டு கிடந்த மக்களை உயர்த்துவதற்காக இங்குதான் பணியைத்தொடங்கினார். இத்தகைய தொன்மையான, முக்கியமான வரலாறு சார்ந்த உந்துசக்தி நிறைந்த பின்னணியுடன் சித்திரகூடத்தை நமது மையப்பணிக்களமாக அமைத்துக்கொண்டுள்ளோம்.
நாம் ஒதுக்கப்பட்டு ஓரங்கட்டப்பட்டு விளிம்பு நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்ட 500 சிறிய கிராமங்களைத் தேர்வு செய்துள்ளோம். இந்தக் கிராமங்களில் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் அனைவரின் பங்கேற்புடன்கூடிய, இயற்கையோடு இணக்கமான முறையில் எவ்வித பாரபட்சமும் அற்ற வகையில் அடிப்படை வசதிகளைச் செய்துதர இலக்கு நிர்ணயித்துள்ளோம். இது சுயமேம்பாடு என்ற அடித்தளத்தில் உருவாக்கப்படுவதாகும். சுய முயற்சிக்கு இங்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். கூட்டுறவுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். இதுவே நமது பலமாகும்.
குறுகிய காலத்தில் இந்தக் கூட்டுச் செயல்பாடு சிறந்த பலன்களை அளித்துள்ளது. ஏற்கனவே முன்மாதிரியான கிராமங்களை உருவாக்கியுள்ளோம். இவற்றின் எண்ணிக்கையை அதிகரிக்கவேண்டியது அவசியமாகும். நாடு முழுவதும் இயற்கையோடு இணக்கமாக உள்ள இத்தகைய வளர்ச்சி சார்ந்த கிராமங்களை உருவாக்குவோம். 500 கிராமங்களிலும் நிறைவேற்ற முற்பட்டுள்ள திட்டங்கள் தொகுக்கப்பட்டுள்ளன. இவற்றை அறியவும் நேரில் பார்க்கவும் விரும்பினால் நாங்கள் மகிழ்ச்சியடைவோம். அதற்கான ஏற்பாடுகளையும் செய்து தருவோம். இந்தத் திட்டம் அமோக வெற்றிபெற உங்களது மேலான ஆலோசனைகளை நல்குமாறு வேண்டுகிறோம்.
சித்திரகூட வளர்ச்சி முன்மாதிரித் திட்டத்தில் பல்வேறு அம்சங்களுக்கும் உரிய இடம் அளிக்கப்பட்டுள்ளது.
குருகுலம்
தீனதயாள்ஜி ஆய்வு மையம் புராதன காலத்தில் இருந்ததைப் போல குருகுலங்களை உருவாக்கியுள்ளது. இந்த குருகுலத்தில் எல்லாச் சமூகத்தைச் சேர்ந்தவர்களும் சேர்த்துக்கொள்ளப்படுகிறார்கள். ஒவ்வொரு குருகுலத்திலும் 20 மாணவர்கள் பயிலமுடியும். மொத்தம் 10 குருகுலங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. 6 குருகுலங்கள் மாணவர்களுக்கானவை. 4 குருகுலங்கள் மாணவிகளுக்கானவை. குருகுலத்தில் வசிக்கும் 20 பேரையும் ஓய்வுபெற்ற தம்பதியர் தங்கள் குழந்தைகளைப் போல் கண்ணும் கருத்துமாக கவனித்துக் கொள்கிறார்கள். இத்தம்பதியருக்கு உதவிசெய்ய ஒவ்வொரு குருகுலத்திலும் இரண்டு உதவியாளர்களும் உள்ளனர். ஒரு குருகுலத்தில் 20 வித்யார்த்திகள், ஒரு தம்பதியர், இரண்டு உதவியாளர்கள் என மொத்தம் 24 பேர்கள் உள்ளனர். ஒவ்வொரு குருகுலத்திற்கும் சொந்த நிலம் உள்ளது. இங்கு வித்யார்த்திகள் காய்கறிகளை சாகுபடி செய்துகொள்கிறார்கள். குருகுலத்தில் பசுவும் வளர்க்கப்படுகிறது. இதனால் இவர்களுக்கு சத்தும் சுவையும் மிக்க பசும்பால் கிடைக்கிறது. இது சமூக ஒற்றுமையையும் ஒருமைப்பாட்டையும் வலியுறுத்துகிறது. மாணவர்களுக்கு, படிப்புடன் தொழில் கல்வியும் கற்பிக்கப்படுகிறது. மூங்கில் கூடை முடைதல், பழங்கள் மற்றும் காய்கறிகள் பதப்படுத்துதல், ரொட்டி, பிஸ்கட் தயாரித்தல், ஆடை தயாரித்தல், ஸ்கிரீன் பிரிண்டிங் உள்ளிட்ட பல்வேறு தொழில்கள் பயிற்றுவிக்கப் படுகின்றன. ஒரு வித்யார்த்தி சுயசார்புடனும் சுய நம்பிக்கையுடனும் சுய பலத்துடனும் திகழ குருகுலம் வழிவகுத்துக் கொடுக்கிறது.
பள்ளிக்கூடம்
ராம்நாத் ஆஸ்ரம்சாலா, சித்திரகூடம்
தாழ்த்தப்பட்டவர்களுக்கு இட ஒதுக்கீடு, வனவாசிகளுக்கு இட ஒதுக்கீடு என்றெல்லாம் அளிக்கப்பட்ட போதிலும் கூட அவர்களிடையே பெரிய முன்னேற்றம் ஏற்பட்டு விடவில்லை. உண்மையிலேயே அவர்கள் முன்னேற தகுந்த வழிவகை செய்யவேண்டும். வனவாசி வித்யார்த்திகள் கல்வி பயில சித்திரகூட வனப்பகுதியில் பாடசாலை தொடங்கப்பட்டுள்ளது. அவர்கள் அங்கேயே தங்கிப் படிக்க வசதி செய்து தரப்பட்டுள்ளது. 100 மாணவர்களும் 100 மாணவிகளும் இங்கே படிக்கிறார்கள். 200 வித்யார்த்திகளுக்கும் தரமான கல்வியுடம் தரமான உணவும் வழங்கப்பட்டு வருகிறது. அறிவு வளர்ச்சிக்கு மட்டுமல்லாமல் உடற்பயிற்சிக்கும் தகுந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
கிருஷ்ணதேவி வனவாசி பாலிகா அவேசியா வித்யாலயா, மஞ்சிகாவ்
மேலே கூறப்பட்ட வித்யாசாலாவைப் போன்று மஞ்சிகாவிலும் வித்யாசாலா அமைக்கப்பட்டுள்ளது. இதில் 100 ஆதிவாசி மாணவிகள் பயின்று வருகிறார்கள். 5 ஆம் வகுப்புத் தேர்வில் இங்குள்ள அனைவரும் முதல் வகுப்பில் தேறியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பர்மாந்து ஆஸ்ரம் பதாதி வித்யாலயா
இது சித்திரகூடத்திலிருந்து 35 மைல் கி.மீ தொலைவில் உள்ள கனிவானில் வித்யார்த்திகளுக்காக ஆரம்பிக்கப்பட்டுள்ள உறைவிட வசதிகொண்ட கல்விக்கூடமாகும்.
சுரேந்திரபால் கிராமோதய வித்யாலயா, சித்திரகூடம்
இங்கு படிப்புடன் தொழில்கல்வியும் கற்பிக்கப்பட்டு வருகிறது. வித்யார்த்திகள் சுயசார்படையும் வரையில் கல்வி கற்பிக்கப்படுவதால் அவர்கள் நம்பிக்கையுடன் எதிர்காலத்தை எதிர்நோக்குகிறார்கள். இந்த வித்யாலயாவின் செயல்பாட்டைத் தொடர்ந்து இதேபோல மற்ற இடங்களிலும் வித்யாலயங்கள் அமைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சுரேந்திரபால் கிராமோதய வித்யாலயாவில் படித்த மாணவர் 2000-2001ல் உயர்நிலைப் பள்ளித் தேர்வில் ம.பி. மாநிலத்திலேயே 10 ஆவது இடத்தைப் பெற்றார்.
சுரேந்திரபால் கிராமோதய வித்யாலயாவில் படித்த மாணவர் 1996-1997ல் டெல்லியில் உள்ள சர்வதேச நட்புறவு மற்றும் கலாசார சமூகம் நடத்திய அகில இந்திய அளவிலான விநாடி-வினா அறிவுப்போட்டியில் 3ஆவது இடத்தைப் பிடித்தார்.
1998ல் மும்பையில் உள்ள டாடா ஆய்வு மையம் நடத்திய மாவட்ட அளவிலான வினாடி-வினா அறிவுப்போட்டியில் இந்தப் பள்ளிக்கூடத்தைச் சேர்ந்த மாணவ மாணவிகள் இளநிலையில் இரண்டாவது இடத்தையும் முதுநிலையில் முதல் இடத்தையும் பிடித்தனர்.
தமிழில்: விடவிவிரும்பி
நன்றி : விஜயபாரதம் (30-01-09 இதழ்)
நானாஜி ஆற்றிவருகின்ற அரிய செயல்களை நன்கு உணர்ந்துகொள்ள வேண்டுமானால் ஒருமுறை சித்ரகூடம் சென்று அவைகளைப் பார்த்து வரவேண்டும். நேர்மையும் தாய்நாட்டின் மீது தூய பக்தியும் தொண்டுள்ளமும் விளம்பரத்தை நாடாத குணமும் இருந்தால் எதையும் சாதிக்கலாம் என்பதற்கு ஸ்ரீ நானாஜி மிகச் சிறந்த உதாரணமாவார். அரசியலில் உச்சியில் இருந்தபோது அதை உதறித் தள்ளிவிட்டு மறைந்த மாமனிதர் பண்டிட் தீனதயாளின் கொள்ககைக்கு செயல்வடிவம் கொடுத்திட முனைந்து வெற்றிகண்டவர் ஸ்ரீ நானாஜி. அவரைப் பார்த்தாலே போதும் பண்டயகாலத்து ரிஷிகள் எப்படி இருந்திருப்பார்கள் என்பதை காணமுடியும். இவரது சாதனைக்குக் காரணம் அர் எஸ் எஸ் பின்னணியே ஆகும். இறைவன் அவருக்கு மேலும் நீண்ட ஆயுளைக் கொடுத்து நாடெங்கிலும் சித்ரகூடமாக மாற்றிட ஆசி அளித்திட வேண்டும். நானாஜியைப் பற்றி கட்டுரை வெளியிட்ட தமிழ் ஹிந்துவிற்கு நன்றி.
வித்யா நிதி
வாழ்க்கை வழிகாட்டிகளாக இருக்கும் இவரைப்போன்றவர்களை தமிழ்ஹிந்து தளம் மட்டுமே நினைவில் வைத்திருக்கும் என நினைக்கிறேன். நாட்டுக்கு உழைக்கும் நல்லவர்களை நமது தலைமுறைக்கு அறிமுகம் செய்யாமல் தேசப்பற்றுள்ள ஒரு தலமுறையை உருவாக்குதல் சாத்தியமில்லை.
இதுபோன்ற கட்டுரைகளை தொடர்ந்து வெளியிடுங்கள் எனக் கேட்டுக்கொள்கிறேன்.
நன்றி.
வெற்றிச்செல்வன்.
desmukj desathirku mukkiam
NANAJI DESHMUKH was a self-less leader who dedicated his entire life for the improvement of the poor rural masses in the very backward regions of MP and UP. He was a living example for ” Service above Self” and a role model for most of the politicians of today, who are in it only for their selfish end. He was the major architect of the struggle during the Emergency days, and when the First Non-Congress Govt under Sri. Morarji Desia took office , he refused to become a Minister , even after great pleading from the PM himself and from the rest of his colleagues; a rare breed indeed. His “CHITRAKOOT MODEL OF RURAL DEVELOPMENT’ should be followed in all the districts of India to bring prosperity to the rural masses, who are the backbone of India; this will be the only way we can pay homage to this self-less Swayamsevak. Will the Govt of India honour him ( or rather honour itself) by conferring the BHARAT RATNA on him, at least posthumously? !!!!!!!!!!!!!
மிக அற்புதமான மனிதர்….
https://www.scientificjudgment.com/