வைதிக சைவம்- வேற்றுமையில் ஒற்றுமை
சிவவழிபாடு நம் பாரதத் திருநாட்டின் தொன்மையானதும் பரவலானதுமாகும். இந்திய நாட்டில் உள்ள பலவகை மொழி, பண்பாடு, கலாச்சாரங்கள் முதலிய வேற்றுமைகளைக் கடந்து மக்களால் சிவன் வழிபடப் பெறுகிறார். இதற்கு இமயம் முதல் குமரிவரை பரவியுள்ள சிவன் திருக்கோவில்களே சான்றாம். திருக்கயிலையின் ஏகநாதனே வடக்கே நேபாளத்தில் பசுபதிநாதனாகவும், தெற்கே இராமேசுரத்தில் இராமநாதனாகவும், மேற்கே குஜராத்தில் சோமநாதனாகவும், கிழக்கே கொல்கொத்தாவில் நகுலேசுவரனாகவும், கலிங்கத்தில் இலிங்கேசுவரனாகவும், நடுவில் காசி விசுவநாதனாகவும் கோவில் கொண்டுள்ளார்.
சிவனை வழிபடும் சிவநெறியாகிய சைவம் தென்னாட்டில் வரலாற்றுக்காலத்திற்கு முன்பிருந்தே நிலவிய தொன்மைச் சமயமாகும். இதனைச் சைவம் என்ற பெயரால் கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் தோன்றிய மணிமேகலை ஆசிரியர் குறிப்பதால் அறியலாம்.
சிவமே முழுமுதற்பொருள் எனக்கொள்ளும் மெய்யியல், அறவியல், ஒழுக்கக் கோட்பாடுகளுடன் கூடிய சைவசித்தாந்தநெறியொடு புராணக்கதைகளுடன் தொடர்புடைய சிவவழிபாட்டுநெறிகள், பலவகையில் வேறுபடும்.
சிவனை, சைவசித்தாந்தநெறி, உலகத்துக்கு “நிமித்தகாரணனாக’க் கூறும். பானையை உருவாக்க மண் முதற்காரணம். முதற்காரணம் காரியத்தை விட்டுப் பிரியாமல் இருக்கும். மண், சட்டியைவிட்டுப் பிரிவதில்லை. குயவன் நிமித்தகாரணம் அல்லது கருத்தாகாரணம். தண்டசக்கரம் துணைக்காரணம். சிவம் நிமித்தகாரணனாக, சிவசத்தியைத் துணைக்காரணமாகக் கொண்டு, மாயையாகிய முதற்காரணத்திலிருந்து பிரபஞ்சத்தைத் தோற்றுவித்தது எனச் சித்தாந்த சைவநெறி கூறும். எப்படி மண்ணிலிருந்து சட்டி உருவாகியதோ அப்படியே மாயை என்ற முதற்காரணத்திலிருந்து உடல் உடலிலுள்ள கருவிகள் உலகம் உலகபோக விடயங்கள் இறைவனால் படைக்கப்பட்டன. சட்டியைவிட்டு மண்ணைத் தனியாகப் பிரிக்க முடியாதவாறு போல மாயையாகிய முதற்காரணத்தை விட்டுப் பிரபஞ்சத்தைத் தனியாகப் பிரிக்க முடியாது.
சிவத்தை முதற்காரணமாகவும் துணைக்காரணமாகவும் கொள்ளும் கொள்கைகளும் உண்டு. சிவனை வழிபடுவோருக்குள் சமய ஆசாரம், ஒழுக்கம், உணவு சிவத்தின் வியாபகம், உலகு கடந்தநிலை, மெய்யறிதல், முத்திநிலை ஆகியன பற்றிய கருத்து வேறுபாடுகளும் உண்டு.
கொள்கை வேறுபாடுகளைப் போலச் சிவனடியார்களின் திருவேடத்திலும் வேறுபாடுகள் உண்டு.
தம்முடைய திருவாரூர்த் திருப்பதிகத்தில் அப்பர் பெருமான், திருவாரூர்த் திருவீதிகள் எண்வகைக் கணத்தாரால் பொலிவு பெற்றதாகப் பாடியருளினார். எண்வகையாவார்: (1) அருளிப்பாடியர். (2) உரிமையிற்றொழுவார் (3) உருத்திர பல்கணத்தார். (4) விரிசடை விரதிகள் (5) அந்தணர் (6) சைவர் (7) பாசுபதர் (8) காபாலிகள். இவர்கள் அனைவரும் கொள்கையாலும் திருவேடத்தாலும் தம்முள் மாறுபட்டவர். ஆயினும் சிவத்தை வழிபடும் நெறியில் ஒற்றுமையுடையவர்.
1. அருளிப்பாடியர் என்பவர் கட்டளைகளை நிறைவேற்றுபவர்கள். 2.உரிமையில் தொழுவார் – ஆதிசைவர்களாகிய சிவாச்சாரியர்கள். முப்போதும் திருமேனி தீண்டி வழிபடும் உரிமையுடையோர். 3. உருத்திர பல்கணத்தார்- சைவத்தினுள் பலவகை அகப்புறச்சமயத்தவர்கள். விரிசடை விரதிகள் – மாவிரதிகள் என்னும் பிரிவினர். இவர்களை மற்றொரு திருப்பதிகத்தில் அப்பர் பெருமான், “வித்தகக்கோல வெண்டலைமாலை விரதிகள்” என்றர். தம் அடையாளமாகத் தலைமாலை, எலும்புமாலை முதலியன அணிதலால் ‘வித்தகக் கோல விரதிகள்’ என்றார். இறைவர், மானக்கஞ்சாற நாயனாருக்கு அருள்புரியவந்த திருக்கோலம் ‘மாவிரதிகள்’ திருக்கோலம். இவர்கள் எலும்புமாலையோடு, நீண்டதலமுடியைத் திரித்துப் பூணூலாக அணிவர்.(மானக்கஞ்சாற நாயனார் புராணம்21 -23,”மைவந்த நிறக்கேச வடப்பூணு நூலும்’”) 5. அந்தணர் – முனிவர்,வேதப்பிராமணர், ஆதிசைவர் முதலியோர். 6. சைவர்- சைவவாதி எனப்படுவோர், 7. பாசுபதர்- பாசுபதவிரதிகள், சைவத்தின் அகப்புறச் சமயத்தின் ஒருசாரார். 8. காபாலியர் – பச்சைக்கொடி ஒன்று கைக்கொண்டு நாள்தோறும் மனைதோறும் தலையோட்டில் பிச்சையேற்றுண்பவர்.
வேதவழக்கினை மேற்கொண்டொழுகிய வேதியரும் சிவனை வழிபடுதலால் சைவர் எனப்படுவர். மாவிரதிகள்,பாசுபதர், காபாலியர் முதலியோர் வேதநெறியினர் அல்லர். இவர்களுடைய சமய ஒழுக்கமும் ஆசாரமும் எத்தகையதாயினும் சிவனை வழிபடுவோர் ஆனதால் இவர்களும் சைவர்களே எனத் திருமுறைகள் ஏற்றுக் கொண்டுள்ளன.
திருஞானசம்பந்தர், “காதலாற் சைவர் பாசுபதர்களும் வணங்கும் சண்பைநகர்” என்கிறார்.(சண்பை நகர் – சீகாழி) சிவனுக்குச் சைவன் என்பதொரு பெயர் உண்டு. காபாலிகள் சைவக் கோலம் பூண்டு தலையோட்டில் பலியேற்றுண்டு கோயில்களை இடமாகக் கொண்டு ஒழுகுவர். மத்தவிலாசத்தில் வரும் காபாலி திருக்கச்சியேகம்பத்தை இடமாகக் கொண்டவன். திருமயிலாப்பூரிலுள்ள திருக்கோயில் கபாலீச்சரம் எனப்படும். கபாலிகள் அங்கு வாழ்ந்ததால் அப்பெயர் பெற்றிருக்கக் கூடும். அங்கு ‘உருத்திர பல்கணத்தார்க்கு உணவு அட்டிடும்’ மாகேசுர பூசையைத் திருஞானசம்பந்தர் சிறப்பித்துப் பாடியுள்ளார். மாவிரதிகள், “தீக்கைபெற்று எலும்பு மாலையணிதல் முதலிய சரியை மேற்கொண்டொழுகுபவர்” இவர்கள் இருவரிடத்தும் சைவக்கோலம் சிறந்து விளங்குதல் பற்றித் திருஞான சம்பந்தர் சைவர் என்னும் சொல்லால் குறிப்பிட்டார்.
திருஞானசம்பந்தர் திருக்காளத்தி வழிபடச் சென்றபோது, அங்கு,
“பம்புசடைத் திருமுனிவர் கபாலக் கையர்
பலவேடச் சைவர்குல வேடர் மற்றும்
உம்பர்தவம் புரிவாரப் பதியில் உள்ளோர்
உடன்விரும்பி எதிர்கொள்ள உழைச்சென்று உற்றார்”
என்று தெய்வச்சேக்கிழார் கூறுகின்றார். நெருங்கிய சடாமுடி தரித்த தவமுனிவர்களும் கபாலத்தைக் கையில் ஏந்திய கபாலியரும் இன்னும் பலவிதமான சிவக்கோலம் பூண்ட சைவர்களும் வேடர்கூட்டமும் பிள்ளையாரைத் திருக்காளத்தியில் வரவேற்றனராம் .
வைதிக சைவத்தினராகிய திருஞானசம்பந்தருடைய திருமணத்திற்கு வந்த கூட்டத்தினரை இன்னார் இன்னார் எனக் கூறிவந்த சேக்கிழார் பெருமான்,
“அறுவகை விளங்கும் சைவத்து அளவிலா விரதம் சாரும்
நெறிவழி நின்ற வேடம் நீடிய தவத்தி னுள்ளோர்
— — — குழாம் குழாம் ஆகி ஏக” என்றார்.
அறுவகையாக விளங்கும் சைவத்தினராவார்: சைவம், பாசுபதம், மாவிரதம், காளாமுகம், வாமம், வைரவம். வைதிகப் புறத்தரான இவர்களும் உரிமையுடன் வைதிகத் தலைவரின் திருமணத்தில் திரள் திரளாகக் கலந்து கொண்டனரென்றால், திருஞானசம்பந்தர் இவர்களைத் தழுவிக்கொண்ட சிறப்பையும் இவர்கள் அவரைத் தலைவராகக் கொண்ட சிறப்பையும் உணர்தல் வேண்டும்.
திருத்தொண்டர் புராணம் இவர்களுடைய திருவேடப் பொலிவை நன்கு எடுத்துக் காட்டுகின்றது. சேக்கிழார் சிவபெருமானுடைய மாவிரதக் கோலத்தை மானக்கஞ்சாற நாயனார் புராணத்திலும், கபால பயிரவக்கோலத்தைச் சிறுத்தொண்டநாயனார் புராணத்திலும் சேக்கிழார் விரித்தோதினார். அத்துடன் இச்சமயநெறி வடநாட்டில் உள்ளது எனவும் விதந்தோதினார். இவர்கள் குழுக்களாக, இல்லறத்தாரை விட்டு விலகித் தனியாக வாழ்பவர்கள் என்பதும் பெரியபுராணத்திலிருந்து தெரிகின்றது.
திருமுறைகளில் சிவத்தை வருணிக்கும் பல தொடர்கள் இந்த அவைதிக சைவநெறியாளர்களின் தோற்றத்தைப் புலப்படுத்துவனவாக உள்ளன. “காடுடைய சுடலைப் பொடிபூசி”.; ”ஏன்ற அந்தணன் தலையினை அறுத்து நிறைக்க மால் உதி ரத்தினை ஏற்றுத், தோன்று தோள்மிசைக் களேபரந் தன்னைச் சுமந்த மாவிர தத்தகங் காளன்”( தோள்மேல் எலும்புக் கூட்டினைச் சுமக்கின்ற பெரிய விரதத்தையுடைய கங்காள வேடத்தை உடையவன். களேபரம், கங்காளம் – எலும்புக்கூடு), “நரைவிரவிய மயிர்தன்னொடு பஞ்சவ்வடி மார்பன்” (நரைபொருந்திய மயிரால் இயன்ற பஞ்சவடியை அணிந்த மார்பை உடையவன். பஞ்சவடி – மயிரினால் ஆன பூணூல்)
மயிரையும் எலும்பையும் அறியாமல் தீண்டிவிட்டாலே தீட்டாகிவிடும், தீட்டினை நீக்க உடனே நீராட வேண்டும் என்பது வைதிகநெறி. ஆனால் பரமேசுவரனே தீண்டத்தகாத சாம்பலையும், மயிரையும் எலும்பினையும் அணிந்துள்ளான் என்று திருமுறைகள் துதிக்கின்றன.
வைதிகமதம் தன்னுள் நாட்டார் வழிபாடுகளையும் பாமரவழிபாட்டையும் பழங்குடியினர் வழிபாட்டினையும் உள்வாங்கித் தன்னுள் அடக்கிக் கொள்ளும் ஆற்றல் வாய்ந்தது. இவ்வாறு வைதிகமதத்தில் கலந்துவிட்டவர்கள் தங்களுடன் தாங்கள் இதுவரை வழிபட்டுவந்த வழிபாட்டுச் சின்னங்களையும் வைதிக வழிபாட்டுக்குக் கொண்டுவந்துவிடுவர். அவை புராணக் கதைகளாலும் வேறு மரபுகளாலும் வைதிகத் தன்மை பெற்றுவிடும். மாரியம்மன் மாகாளி முதலியசத்திவழிபாடு, ஐயப்ப சாத்த வழிபாடு, முனியப்பன் கருப்பராயன் வழிபாடு, ஊர்த்தெய்வ வழிபாடு, மூத்தோர் முதலியன ஒருதெய்வ வைதிக வழிபாடாக மாற்றம் எய்திவிடும்.
சிலப்பதிகாரத்தில் மாசாத்தன் ஒருசிறுதெய்வம். கந்தபுராணம், மாசாத்தப்படலத்தில் சாத்தனைச் சிவனின் மகனாகப் படைத்து வைதிக தெய்வமாக உயர்த்துவிட்டது. அதற்கு வழிகோலியது, “சாத்தனை மகனாக் கொண்டாய்” என்னும் அப்பர்பெருமான் வாக்கு.
மாரியம்மன் என்று பாமரமக்கள் வழிபடும் பரசுராமனின் தாய் இரேணுகா தேவி , ‘ஏதமில் உயிர்த்தொகை எவற்றி னுக்கும்நீ, தாதைதாய் இமவரைத் தைய லகுமால்” என்று சிவபெருமான் அருள் செய்து, வைதிகக் கடவுளின் நிலைக்கு உயர்த்தியருளினான். பரசுராமரால் உயிரெழுப்பப்பட்ட இரேணுகை கணவனை யிழந்தமையால் வருந்தி, பரசுராமர் சொல்லால் காஞ்சியை அடைந்து ஒரு இலிங்கம் தாபித்துப் பூசித்து, சிவனருளால், தான் உலகத்தில் சில தாழ்ந்த மக்களால் வழிபடும் தெய்வமாக இருந்து, அவர்கள் வேண்டியவற்றைக் கொடுக்கவும், தான் பூசித்த இலிங்கத்தில் அம்மையப்பர் எழுந்தருளியிருந்து யாவர்க்கும் போகமும் வீடும் அருளும் வரங்களைப் பெற்றும் வைதிகக் கடவுளானாள். இது காஞ்சிப்புராணத்தில் இரேணுகேச்சரப் படலத்தில் உள்ள செய்தி.
திருஞானசம்பந்தர் காலத்தில் சமணர்களும் பவுத்தர்களும் திருநீறணிந்து சைவர்கள் ஆயினர். அவர்களோடு அவர்கள் வழிபட்ட தீர்த்தங்கரர் வடிவங்களும் தியானபுத்த வடிவங்களும் சைவத்துக்கு வந்துவிட்டன. திருமுறைகளில் பிச்சாடனக் கோலம் பல இடங்களில் சுவையாகப் பாடப்பட்டுள்ளது. தேவாரத்தில்தான் முதன்முதல் பிச்சாடனக் கோலம் பாடப்பட்டுள்ளது. இது திகம்பரசமணர்கள் சைவசமயத்தைத் தழுவியதன் பயன்போலும். கிராமங்களில் முனியப்பன் என்றும் தன்னாசியப்பன் என்றும் வழிபடப்படும் உருவங்கள் பவுத்தர்கள் வைதிக மதத்தைத் தழுவியதால் வழிபாடு போலும்.
பழைமையான சிவன் கோவில்களூக்குச் சென்று பார்த்தோமானால், பிரகாரங்கள் தோறும் சிறுசிறு கோவில்கள் இருக்கும். சூரியன் ,சந்திரன், துர்க்கை, காளி, பைரவர், விநாயகர், சுப்பிரமணியர், நவக்கிரகங்கள் முதலிய வெவ்வேறு தெய்வங்களின் சிறு கோஷ்டங்கள் பிரகாரங்களில் அமைந்திருக்கும். பெரிய கோவில்களில் வழிபடும்போது பிரகாரத்தில் உள்ள கோட்டங்களில் வழிபட்ட பின்னரே மூலத்தானத்திற்குச் சென்று வழிபட வேண்டும் என்றொரு முறை உள்ளது. இது பலதெய்வ வழிபாடு அன்று. இது மூலத்தானத்தில் உள்ள பரம்பொருளின் பெருமையை உணர்த்துவது.
இசுலாமிய மதத்தைச் சார்ந்த என் நண்பர் ஒருவர் உங்கள் கோவில்களில் என்ன இத்தனை உட்கோவில்களும், தெய்வங்களும்? எனக் கேலியாக வினவினார். அதற்கு நான் நேரிடையாகப் பதில் சொல்லவில்லை. குடிசையில் வாழ்பவனைக் குடிசைக் கதவைத் திறந்தவுடன் பார்த்துவிட முடியும். எங்கள் சுவாமி மகாராஜன், தியாகராஜன், பிரபஞ்சத்திற்கு ஏக சக்கிரவர்த்தி. அவனுடைய பரிபாலனத்துக்கேற்ற பரிவாரங்களும் மிகுதி. கூப்பிட்ட குரலுக்கு வந்து பணி கேட்க எங்கள் பெருமானுடைய திருமாளிகையில் அவர்கள் காத்துக் கொண்டிருப்பார்கள். பெருமானுடைய ஊழியர்களின் அனுமதி பெற்றுப் பெருமானை தரிசிப்பதுதான் முறை.நாம் நினைத்தவுடன் அவரைச் சென்று கண்டுவிட முடியாது. நவாபுகளின் அரண்மனைகள் ஏன் இவ்வளவு பெரியனவாக உள்ளன? நவாபுக்கு ஒரு அறை போதுமே அல்லவா? எனக் கேட்டேன். அவர் சற்று நேரம் யோசித்து விட்டு ஒன்றும் பேசவில்லை.
சிறுதெய்வ வழிபாட்டினரை பண்பாட்டுயர்வு நிலைக்கு வைதிகம் இவ்வாறு அழைத்துச் செல்லுகின்றது. இது வைதிக நெறியின் பண்பு. நாட்டார் வழிபாட்டு நெறிகளைப் பழித்து அழித்து ஒழிக்காமல் அவற்றைத் தழுவி ஏற்றுக் கொண்டு ஒருபெருந்தெய்வ வழிபாட்டினை அறிமுகப்படுத்தும் வைதிகநெறியின் ஆற்றலை உணர்ந்து போற்ற வேண்டும்.
கி.பி. 6, 7 ஆம் நூற்றாண்டுகளில் வைதிகப் புறத்ததான பவுத்த, சமண மதங்களின் கடுந்தாக்கத்தை எதிர்கொள்ள சிவபரம்பொருளை முழுமுதலாகக் கொண்டு வழிபடும் பல்வேறு சிவவழிபாட்டுநெறிகளையும் ஒன்று திரட்டி அவற்றுள் வேற்றுமையில் ஒற்றுமை காணும் இன்றியமையாமை இருந்தது. வழிபாட்டுநெறிமுறைகள், கொள்கை வேறுபாடுகள், சிவசின்னம் முதலியவற்றில் தோற்ற வேறுபாடுகள் ஆகியவற்றுக்கு அப்பால் அனைத்து நெறிகளுக்கும் பொதுவாக இருந்த சிவபத்தி ஒன்றே வேறுபட்ட சிவவழிபாட்டு நெறிகள் பலவற்றையும் வலுவுடன் ஒருங்கு பிணைத்தது. “எவரேனுந் தாமாக விலாடத்திட்ட திருநீறுஞ் சாதனமுங் கண்டால் உள்கி உகந்தடிமைத் திறம்பேணி” எனும் அப்பர் பெருமான் வாக்கு, இவ்வாறு வழிபாட்டுப் பேதங்களைக் கடந்து அணைத்துக் கொள்ளும் போக்கினுக்குச் சான்று பகர்கின்றது. தலைமகனாகி வந்த தமிழ்ஞானசம்பந்தப் பிள்ளையார், திருத்தொண்டின் நெறிவாழ வந்த திருநாவுக்கரசு நாயனார் ஆகியோரின் அருந்தொண்டால் சைவம் நிலைகொண்டபின், தமிழகம் சிவத்தை வழிபடும் அனைத்து நெறியாளர்களுக்கும் புகலிடமாக மாறியது. திருவாரூர் சிவராஜதானி ஆயிற்று. அதனை அப்பர் பெருமானின் திருவாரூர்த் திருப்பதிகங்கள் எடுத்துக் காட்டுகின்றன.
வைதிக சைவம் – ஒற்றுமையில் வேற்றுமை
தென்னாட்டுக்குரிய சைவநெறி பாரம்பரிய சிந்தனை வளர்ச்சியில் தோன்றியது; தமிழ் இலக்கண இலக்கிய மொழிப்பண்பின் வலிமையுடையது. வேறுபட்ட சிவவழிபாட்டு நெறிகள் பலவும் தமிழகத்தில் மையம் கொண்டமையால் எது உண்மைச் சைவநெறி என்பதில் குழப்பம் ஏற்பட்டது. அறிஞர்கள் சிலர் வேதப் புறமான காபாலிகம், காளாமுகம், பாசுபதம், மாவிரதம் ஆகிய நெறிகளே சைவம் எனக் கருதத் தலைப்பட்டனர். சடைமுடி தரித்தலும், சாம்பல் மெய் பூசுதலும் அக்கமணி அணிதலுமே சைவம் எனச்சிலர் கருதினர். சிலர் புலாலுண்ணாமை மட்டுமே சைவம் என்றனர். மற்றும் சிலர் சைவம் எந்தத் தத்துவ அடைப்படையுமில்லாத பெளராணிக மதம் எனக் குறுகிய பொருளில் புரிந்து கொண்டனர்.
சங்கரருடைய பிரம்மசூத்திர பாடியத்தில்தான் வடமொழி தத்துவ நூல்களில் முதன்முதலில் சைவத்தைப் பற்றிய குறிப்பு வருகின்றதென்றும் (பிரம்மசூத்திரம் II.2.37), அதில் சைவர்கள் ‘ஈசுவர காரணர்கள்’ எனக் குறிக்கப்படுகின்றார்களென்றும் கூறப்படுகின்றது.
இராமாநுஜர் , தம்முடைய பாடியத்தில் காபாலிகம், காளாமுகம் முதலிய வேதப்புறச்சமயங்களே சைவம் என்று கூறுகின்றது.
சங்கரரின் வரலாறு எழுதிய ஆனந்தகிரி என்பவர் சைவர்களின் பல பிரிவுகளையும் அவர்களின் ஆடை முதலிய புறத்தோற்றங்களின் வேறுபாடுகளையும் குறிப்பிடுவதோடு, காபாலிகர்களில் பிராமணக் காபாலிகர்கள், பிராமணரல்லாத காபாலிகள் என இரண்டு வகை உண்டு என்றும் கூறுகிறார்.
அதர்வண வேதம் உருத்திரனை வழிபடும் ‘விராட்டியர்’ எனப்படும் ஒருவகையினரைக் குறிப்பிடுகின்றது என்றும் அவர்களே சைவர்கள் என்றும் அவர்கள் சாதிப் பிரிவினைகளை அனுசரிக்காதவர்கள் என்றும் கூறப்படுகின்றது.
இராமானுஜர், சைவர் என்போர் மயானத்தில் வசிப்பவர்கள் என்றும் மசான சாம்பலை மெய் முழுவதும் பூசிக் கொள்பவர்கள் என்றும் மண்டையோட்டில் பிச்சை ஏற்று உண்ணும் மாவிரதத்தை உடையோராதலின் ‘மாவிரதிகள்’ எனப்படுவர் என்றும் கூறுகிறார்.
வடமொழிப் பாடியங்களைப் பெரிதும் நம்பிய ஒருசார்புடை மேனாட்டறிஞர்கள் சிலர் சைவத்தைப் பண்பாடற்ற பழங்குடியினரின் வழிபாட்டு நெறி என்றும் ஆண்குறி வழிபாட்டு நெறி என்றும் காட்டத் தொடங்கினர். ஃபிரேசர் என்னும் அறிஞர் தம்முடைய ‘சமயங்கள் மற்றும் அறவியல் கலைக்களஞ்சிய’த்தில் தென்னாட்டில் சில புகழ்பெற்ற பழமையான சிவன்கோவில்களில் இரத்தப் பலியும் கட்குடிக்களியாட்டமும் ஆண்டுதோறும் அனுமதிக்கப் பெற்றன என்றும், அது பழங்குடியினரின் கோவில்களைப் பிராமணர்கள் பற்றிக் கொண்டபோது பிராமணருக்கும் பழங்குடியினருக்கும் இடையே ஏற்பட்ட உடன்படிக்கையின்படி நிகழ்வது என்றும் பிராமணருக்கு உள்நாட்டுத் தலைவர்களின் பாதுகாப்பு இருந்தது என்றும், அதற்கு நன்றியாகப் பிராமணர்கள் அந்தத் தலைவர்களுக்குச் சத்திரியத் தகுதியும் போலிச்சத்திரிய வம்சாவளியும் அளித்தனர் என்றும் எழுதினார். ஃபிரேசர், மேலும் , பிராமணர் அல்லாதவர்களும் சாதியில் விலக்கப் பெற்றவர்களும் சிவனை வழிபட்டார்களென்றும் சிவனுக்கு நரபலியிட்டார்களென்றும் அத்தகைய வழிபாடு ஸ்ரீசைலத்தில் ( திருமுறைகளில் போற்றப்படும் திருப்பருப்பதம்) நடைபெற்றது என்றும் தெரிவிக்கின்றார். ஷ்ரீசைலம் காபாலிகசைவர்களின் தலைமையிடமாகக் கூறப்பட்டது.
புகழ்பெற்ற சிவபத்தர்களாகிய ஹரதத்தர், நீலகண்ட சிவாச்சாரியார், அப்பைய தீட்சிதர் முதலியோர் சமஸ்கிருத மூலங்களின் அடைப்படையில், குறிப்பாகப் பிரம்மசூத்திர விளக்கத்தின் வழி ஒருவகைச் சைவ சித்தாந்தத்தைப் படைத்தனர். இந்தச் சைவம் ஏகான்மவாதச் சாயை உடையதாகவே இருந்தது.
ஹரதத்தர் கி.பி. 879ல் வாழ்ந்தார். அவர் ஹரிஹரதாரதம்மியம், சதுர்வேத தாற்பர்ய சங்கிரகம் முதலிய நூல்களைச் சிவபரமாகச் செய்தார். இவை மாதவச் சிவஞான முனிவர்களால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுத் தம்முடைய சிவஞான மாபாடியத்தில் மேற்கோளாகவும் காட்டப்படுகின்றன.
ஷ்ரீகண்டர் எனப்படும் நீலகண்ட சிவாச்சாரியார் கி.பி. 11 ஆம் நூற்றண்டில் வாழ்ந்தவர். இவர் சிவபரமாக பிரம்ம சூத்திரத்திற்குப் பாடியம் வரைந்தார். அது நீலகண்டபாடியம் என வழங்கப்படுவதாயிற்று. சங்கரர் இராமானுஜர் நிம்பர்கர் முதலியோருடைய கொள்கைகளை நீலகண்டர் தம்முடைய பாடியத்தில் கடுமையாகக் கண்டிக்கின்றார். சங்கரருடைய ஏகான்மவாத மாயாவாதக் கொள்கைகளால் அறிவு மயங்கிய மக்களை உண்மைச் சிவபத்தியின் மூலம் அறிவு தெளிவிக்கச் சிவனே நீலகண்டரை மண்ணுலகுக்கு அனுப்பியதாகவும் இவருடைய பாடியமே சுருதிகளுக்கு உண்மையான வியாக்கியானம் அளிக்கின்றதென்றும் கூறப்பட்டது. சுருதிகளின் அடிப்படையில் இவருடைய சித்தாந்தம் அமைந்ததால் இது ஸ்ரெளத சைவ சித்தாந்தம் எனப்பட்டது. இதற்கு சிவாத்துவித சைவம் என்றும் ஒரு பெயர் உண்டு.
ஏனோ நீலகண்டபாடியம் ஏனைய பாடியங்களான சங்கரபாடியம், இராமானுஜ பாடியம், மத்துவ பாடியம் போலப் பிரபலமடையவில்லை. சிவஞானபோதத்துக்குத் தமிழில் மாபாடியம் இயற்றியருளிய மாதவச் சிவஞானமுனிவர் நீலகண்டபாடியத்தின் சிலகருத்துக்களைத் தழுவிக்கொள்ளுகின்றார்.
மெய்கண்டதேவநாயனார் நீலகண்டருக்குச் சற்றுப்பின் பிறந்தவர். இவர் திருக்கயிலாய பரம்பரை புறச்சந்தானத்தின் முதல் ஆசாரியர். இவர் தம்முடைய சிவஞானபோதத்தில் சைவசித்தாந்தத்தை நிறுவினார். மெய்கண்டார் தம்முடைய கொள்கைகளை நிறுவும்போதே வேதத்திற்குப் புறமான உலகாயதம், நால்வகைப் பவுத்தம், சமணம், சாங்கியம் நையாயிகம் மீமாம்சை முதலியனவற்றையும் வேதமதங்களான மாயாவாதம் , ஏகான்மவாதம், பாஞ்சராத்திரம் முதலியனவற்றையும் பிரம்மசூத்திர வியாக்கியானங்களால் விளைந்த தத்துவக் குழப்பங்களையும் களைந்தார். பாடியக்காரர்களின் பேத, அபேத, பேதாபேத கொள்கைகளுக்குத் தெளிவான விளக்கத்தை அளித்தார். அத்துவிதம் என்பதற்கு உண்மையான பொருள் இன்னதென்று உறுதிப்பட நிறுவினார். இந்திய தத்துவஞானத்திற்கு மெய்கண்டார் செய்த பேருதவி இது என்று போற்றப்படுகின்றது.
சம்பிரதாயமாகச் சிவஞானபோதத்தை மெய்கண்டார் இரெளரவ ஆகமத்திலிருந்து மொழிபெயர்த்தார் என்று கூறப்பட்டாலும் உண்மை காணலுறுவாருக்கு அது மெய்கண்டாரின் மூலப்படைப்பே எனத் தெரியவரும். மெய்கண்டாரின் சிவஞானபோதத்திற்கு வேதாகமங்கள் பிரமாணம் எனக் கூறப்பட்டாலும், உயிர் உலகு இறை பற்றித் தமிழ் மக்களின் சிந்தனை முதிர்ச்சி, தமிழ்மொழி இலக்கண அமைப்பு, திருமுறைகள் முதலியன மூலங்களாக அமைந்தன. தமிழ் மூலங்களே சிவஞானபோதத்திற்கு அடைப்படையாக அமைந்ததால், இது நிறுவிய சைவசித்தாந்தம் , தென்னாட்டுச் சைவசித்தாந்தம் எனப்படுவதாயிற்று.
தென்னாட்டுச் சைவசித்தாந்தத்தின் மூலநூல்கள் தமிழிலேயே இருப்பதாலும் இந்நூல்கள் வடமொழியிலோ ஆங்கிலத்திலோ மொழிபெயர்க்கப்படாததாலும், இச்சைவசித்தாந்தம் தமிழகத்திற்கு வெளியே அதிகம் அறியப்படாததாக உள்ளது.
தமிழ்மொழி அறிந்த மேனாட்டறிஞர்கள் சிலர் தமிழ் மூலநூல்களின் வழியே இச்சித்தாந்தத்தை அறிந்து , சைவசித்தாந்தம் தமிழ்ச்சிந்தனையின் அற்புதமான படைப்பு என்றனர்.(Choisest product of Tamil intellect)
டாக்டர்.ஜி.யூ போப்பு, ஹொய்சிங்டன், ஸ்கோமெரஸ் , டாக்டர் கார்டன் மேத்யூஸ் போன்ற மேனாட்டு அறிஞர்களும் திரு ஜே.எம்.நல்லுசாமிபிள்ளை, டாக்டர் வி.ஏ.தேவசேனாபதி, டாக்டர் கே சிவராமன், திரு நல்.முருகேசமுதலியார் முதலிய சான்றோர்கள் மேனாட்டு அறிஞர்கள் மற்றும் இந்தியத் தத்துவ அறிஞர்களின் கவனத்தைத் தென்னாட்டுச் சைவசித்தாந்ததின் மீது ஈர்த்தனர்.
மெய்கண்டாரின் சைவ சித்தாந்தத்தை மேனாட்டிற்கும் ஆங்கிலம் கற்றவர்களுக்கும் அறிமுகம் செய்யும் பணியில் மேனாட்டு அறிஞர்களின் தொண்டு எத்துணைச் சிறப்புடையதாக இருந்தாலும், பல குறைகளையும் கொண்டிருந்தது. அவர்கள் ஐரோப்பியர்களாகவும் கிறித்துவர்களாகவும் இருந்தமையால் சைவசம்பிரதாயத்துக்குள் நுழைய இயலாதவர்களாகவும் அவற்றை அறியாதவர்களாகவும் இருந்தனர். அதனால் அவர்கள் எழுதிய நூல்களில் பிழைகளும் இருந்தன.
எடுத்துக்காட்டாக, ஜி.யூ.போப் தம்முடைய திருவாசக மொழிபெயர்ப்பு நூலின் முன்னுரையில், ‘சத்தி நிபாதம்’ என்பதை, ‘சத்தியின் நிறுத்தம்’(cessation of energy) என மொழிபெயர்த்தார். இது எத்தகைய பிழை என சித்தாந்தம் அறிந்தோர் அறிவர்.
இந்திய தத்துவ அறிஞர்களும் மெய்கண்டாரின் சைவ சித்தாந்தத்தை அறிவதற்குப் போதுமான கவனம் செலுத்தவில்லை.
டாக்டர் சுரேந்திரநாத் தாஸ்குப்தா அவர்கள் இந்தியத் தத்துவ வரலாறு பற்றி ஐந்து தொகுதிகள், ஆயிரக்கணக்கான பக்கங்களில் வெளியிட்டுள்ளார். அதில், மெய்கண்டாரைப் பற்றியும் உமாபதிசிவத்தைக் குறித்தும் ஈரொரு பக்கங்களே காணப்படுகின்றன. உமாபதிசிவத்தின் பவுஷ்கராகம பாடியத்தைப் பற்றிய குறிப்பே இல்லை. வடமொழிப் பவுஷ்கர ஆகமத்தைப் பற்றிக் கூறும் இடத்தில் கூட உமாபதிசிவத்தைக் குறிப்பிட்டவில்லை. மாதவச் சிவஞானசுவாமிகளைப் பற்றியோ, சிவஞான மாபாடியத்தைப் பற்றியோ ஒரு குறிப்பும் கூட இல்லை. சிவஞான மாபாடியத்தைப் படிக்காமல் மெய்கண்டாரின் சைவ சித்தாந்தந்தைப் பற்றி ஒருவர் எப்படிப் பேச முடியும்?
தாஸ்குப்தாவின் புத்தகம் உலகம் முழுவதும் இந்தியத் தத்துவஞான வரலாற்றுக்குரிய பாடப் புத்தகமாகப் படிக்கப்படுகிறது. அவர் போப், ஸ்கொமெரஸ் ஆகியோரின் மொழிபெயர்ப்புகளிலிருந்து சைவத்தைக் குறித்துத் தம் கருத்துக்களைத் திரட்டித் தந்துள்ளார். தாஸ்குப்தாவின் இந்த நூல் தென்னகசைவத்தைப் பொறுத்த அளவில் பல குறைகளை உடையதாக எனக்குத் தெரிகின்றது. இவர், போப் தம் மனம்போன போக்கில் பெரிதும் மிகைப்படுத்திச் சைவத்தைப் புகழ்ந்து விட்டார் என்றும் சைவம் ஏகான்மவாதம் சாங்கியம் நியாயம் ஆகியவற்றின் கலப்பு என்றும் போப் சைவத்தைப் பற்றிக் கூறிய மதிப்பீடுகள் மறுத்தற்குரியன என்றும் திருவாசகம் முதலியன வெறும் போற்றிப் பாடல்களே என்றும் மெய்ப்பொருட்குரிய கருத்துக்கள் புதியனவாக இந்தப் பத்தி நூல்களில் இல்லை என்றும் கருத்துத் தெரிவித்துள்ளார். இவருடைய கருத்துப்படி, சைவசமய ஆசாரியர்கள், சந்தான ஆசாரியர்கள், தமிழிலுள்ள அவர்களுடைய நூல்கள் அனைத்தும் பொருட்படுத்தத் தக்கன அல்ல. அதற்கு இவர் கூறும் காரணம் விந்தையானது. 14ஆம் நூற்றாண்டில் உமாபதிசிவத்திற்குச் சம காலத்தவரான, மாதவரின் ‘சர்வ தரிசன சங்கிரகம்’ போஜ அரசனின் ‘தத்துவப் பிரகாசம்’ எனும் நூல்களில் தமிழ்ச் சைவ மெய்கண்ட நூல்கள் கூறப்படவில்லையாம்.
12ஆம் நூற்றாண்டில் மெய்கண்டதேவரின் திருவவதாரம் இந்திய தத்துவ ஞான வரலாற்றில் ஒரு புதிய திருப்பத்தை ஏற்படுத்தியது. ஆனால், அதனைத் தத்துவ வரலாற்றாசிரியர்கள் கண்டு அதற்குரிய இடத்தை அளிக்கத் தவறினர்.
சங்கரர், இராமானுஜர், மத்துவர், நீலகண்டர் முதலியோர் ‘பிரஸ்தானத் திரயம்’ எனப்படும் பிரமசூத்திரம், உபநிடதம், பகவத்கீதை ஆகிய மூன்று நூல்களை ஆதாரமாகக் கொண்டு தங்கள் கொள்கையை நிறுவினர். அவர்களைப் போல அல்லாமல், மெய்கண்டார், சம்பிரயமாக சைவசித்தாந்ததிற்கு வேதாகமங்கள் பிரமாணம் எனக் கூறப்பெற்றாலும், திருமுறைகள், தமிழிலக்கணம், பாரம்பரியத் தமிழ்ச்சிந்தனை ஆகியவற்றைப் பிரமாணமாகக் கொண்டு முதல் நூலாகச் சிவஞானபோதத்தை அருளிச் செய்தார். இந்நூல் மெய்கண்டாரின் சொந்தப் படைப்பே அன்றி மொழிபெயர்ப்பு அன்று.
பிரஸ்தானத் திரயத்தின் அடிப்படையில் நிறுவப்பட்ட அத்துவிதம், துவிதம், விசிட்டாத்துவிதம் என்பன ஏற்கெனவே வழக்கில் உள்ளமையால் வேதோபநிடதங்களிலும் பிற பாடியங்களிலும் உள்ள கலைச்சொற்களைத் தம்முடைய நூலில் ஆண்டு, தம்முடைய கோட்பாட்டினை இந்தியத் தத்துவ உலகில் விவாதிக்கத் தக்க களத்தை உருவாக்கினார். 1.திதி. 2.அந்தம். 3.ஆதி. 4.மாயா. 5.இயந்திரம். 6.தநு. 7.ஆன்மா. 8.அந்தக்கரணம்.9.சகசம். 10.அவத்தை. 11.காந்தம். 12.பசாசம் 13.சிவசத்து.14. சூனியம். 15. சத்து. 16.அசத்து. 17. குரு. 18. அரன். 19.பாசம் 20.பதி. 21.ஞானம். 22. ஏகன் முதலியன அத்தகைய சொற்கள்.
பிற அத்துவிதங்களினின்றும் வேறுபடுத்திக் காட்டும்வகையில் மெய்கண்டாரின் கோட்பாடு ‘ சுத்தாத்துவித வைதிக சைவசித்தாந்தம்’ என அழைக்கப்படலாயிற்று. வேதத்தில் முதல்வனுக்கும் உயிருக்கும் உள்ள உறவினை விளக்கும் ‘அத்துவிதம்’ என்னும் பதத்திற்கு மெய்கண்டாரே உண்மையான பொருளை விளக்கியருளினார்.
தாயுமானவ சுவாமிகள், மெய்கண்டாரே சுத்தமான அத்துவிதத்தைக் கண்டு கூறினார், பிறரெல்லாம் கூறிய அத்துவிதம் மலசம்பந்தமான அத்துவிதம் என்னும் பொருளில்.
“பொய்கண்டார் காணாப் புனிதமாம் அத்துவிதம்
மெய்கண்ட நாதனடி மேவுநா ளெந்நாளோ”
எனப் போற்றினார்.
‘அத்துவிதம்’ என்னும் வடசொல்லுக்கு நிகராகத் திருமுறைகள் ‘உடனாதல்’ என்னும் பதத்தைப் பயன்படுத்தின. மலத்தால் கட்டுண்ட ‘பெத்தநிலை’யாயினும், மலத்தினின்றும் விடுபட்ட ‘முத்திநிலை’யாயினும் எந்த நிலையிலும் ஆன்மா முதல்வனை விட்டு நீங்குவதில்ல. முதல்வன் எந்நிலையிலும் ஆன்மாவின் ’உடனாகவே’ இருக்கிறான். பெத்தநிலயில் உடனாதலைப் ‘பெத்தாத்துவிதம்’ என்றும் , முத்திநிலையில் உடனாதலைச் ‘சுத்தாத்துவிதம்’ என்றும் சைவசித்தாந்த நூல்கள் கூறும்.
உயிரின் இயல்பினை மணிவாசகர் ‘இரண்டுமிலித் தனியன்’ என்று கூறுவார். “இருதிறன் அறிவுளது இரண்டலா ஆன்மா” என்னும், சிவஞானபோதம். ஆன்மாவின் இவ்வியல்பினைச் ‘சார்ந்ததன் வண்ணமாதல்’ என்றும் கூறுவர். கேவலநிலையில் மலத்தைச் சார்ந்து மலத்தின் வண்ணமாக ஆன்மா இருக்கும். சகலநிலையில் ஆன்மா கருவிகளோடு சார்ந்து கருவிகள் வண்ணமாக இருக்கும். சுத்தநிலையில் சிவத்தைச் சார்ந்து சிவத்தின் வண்ணமாக இருக்கும்.
கேவலம் சகலம் ஆகிய பெத்த நிலைகளில் சிவம் உயிருடன் கூடி நின்றே அவற்றை உய்விக்கின்றது. “உய்யவென் னுள்ளத்தில் ஓங்காரமாய் நின்ற மெய்யா”, ‘மருவியெப் பொருளும் வளர்ப்போன் காண்க’’ ‘யானேதும் அறியாமே என்னுள் வந்து நல்லனவும் தீயனவும் காட்டா நின்றாய்’ முதலிய திருமுறைத் தொடர்கள் மெய்கண்டார் குறிக்கும் முதல்வனின் காணும் உபகாரம் காட்டும் உபகாரம் ஆகியவற்றிற்குப் பிரமாணம் ஆகின்றன. இத்தகைய திருமுறைத் தொடர்கள் மெய்கண்டாரின் சைவ சித்தாந்தத்திற்கும் திருமுறைகளுக்கும் உள்ள அழுத்தமான உறவுகளைக் காட்டுவன.
திருஞானசம்பந்தர் காலத்தில் வேதநெறி , இந்திய வழிபாட்டு நெறிகளுக்கிடையே (Cults) வேற்றுமையில் ஒற்றுமை கண்டது. இது பத்திநெறியின் பயன்பாடு. மெய்கண்டார் தத்துவத்துறையில் எல்லா நெறிகளும் குழம்பிய நிலையில் உண்மையான வைதிக சைவநெறி இன்னதெனத் தெளிவு காண ஒற்றுமையில் நுண்ணிய வேற்றுமைகளைக் கண்டார். இது அறிவு நூலின் பயன்பாடு.
A fantastic information packed article. You need to be an expert even to write a comment on this, which I’m not. Thanks for educating us with such a nice article.
Excellent article. If you can ( I know it cannot be done in an article but can be tried) depict the difference between Advaita as depicted by Sankara and Meikandar it would be very helpful.
Regards
S Baskar
தமிழ்ல “ஓம்” படம் போட்டு தமிழிஷ்ல இணைக்கலாமே, அதுலேயே உங்க வடமொழி பற்ற காமிக்கிறிங்க அப்பறம் என்ன எளவுக்கு இந்த “தமிழ்”இந்து வேசம் ?
ஒவ்வொருமுறை ஐயா எழுதும்போதும் புதிய விவரங்களை அறிந்து கொள்கிறோம்.
சிவ பெருமான் ஆலகாலத்தை உண்டதை, தியாகம் என்ற புதிய கண்ணோட்டத்தில் காண வைத்தது ஐயா தான் !
At the same time as Mr. Baaskarji has mentioned, if the differece between the concept of Advaithaa as explained by Adi Sankara and Saiva sitthaadaha can be clafified more clearly, it would be benefitial for us.
Its also has been said that Advaitha philosophy has been exsisting even before Adi Sankara, Adi sanakara has established that firmly!
More importantly we (I) want to know the fundamentals of Saiva Siththantha clearly, rather than approaching it in the angle of Adhvaitha!
மிகவும் செறிவுள்ள கட்டுரை. அருமை. ஒவ்வொரு வாக்கியத்தையும் நிறுத்தி சிந்தித்துப் பார்த்தபின் தான் அடுத்த வாக்கியத்துக்கு நகர முடிந்தது. ஒரே ஒரு சந்தேகம், இந்த கட்டுரையில் காஷ்மீரி சைவத்தைப் பற்றி எதுவும் குறிப்பிடவில்லையே?
மிக அருமையான கட்டுரை அய்யா….உங்கள் கருத்துக்கள் முக்கியமானவை. வட இந்திய தத்துவியலாளர்கள் தென்னிந்திய சைவத்துக்கு உரிய மரியாதை செய்யவில்லை என்ற குறை நியாயமானதும் உண்மையானதும் ஆகும். அதனை நாம் நீக்க வேண்டும். நம் பெருமைகளை நாம் தானே மேலெடுத்து செல்ல வேண்டும். அதே நேரத்தில் ஜியு போப்புக்கு சைவத்தின் மீது எவ்வித உண்மை அக்கறையும் அன்பும் மரியாதையும் கிடையாது. உலகில் எங்கும் காணக்கிடைக்காத மிக மோசமான மூடநம்பிக்கைகளை கொண்டதாக இழிந்து இருப்பதாக அவர் சைவத்தை தமது திருவாசக மொழிபெயர்ப்பின் முன்னுரையில் குறிப்பிடுகிறார். சைவத்தின் சிறப்பை சைவ ஹிந்துக்களாகிய நாம்தான் முன்னெடுத்து செல்லவேண்டும். ஆனால் சிவனருள் இன்றி எந்த நரியும் பரியாவதில்லை. ஜி.யு.போப் போன்ற மிஷிநரிகள் உட்பட.
ஐயா வணக்கம்!
கடந்த சில வருடங்களாய் இணையத்தில் எழுதுவதை நிறுத்திவிட்டாலும், கிடைக்கும் நேரத்தில் அவ்வப்போது தமிழ் ஹிந்து தளத்தை மட்டும் விடாமல் படித்து வருகிறேன்.
தங்களின் அற்புதமான கட்டுரைகளுக்கு மிக்க நன்றி.
வைணவம் உட்பட அனைத்து வழிகளுடனும் ஒட்டிப்போகும் சைவம் எப்படி பின்னாளில் வெட்டிப்போகும் சைவம் ஆனது என்பது ஒரு சோகக்கதை.
தங்களின் இந்தக்கட்டுரைக்குப் பிற்சேர்க்கையாய் ஒன்று:
மெய்கண்டதேவரும் பதியின் இயல்பைச் சுட்டுகையில் ‘அக்கரங்கள் இன்றாம் அகர உயிர் இன்றேல், இக்கிரமத்து என்னும் இருக்கு’ என்று வேதப் ப்ரமாணத்தையே கையாள்கிறார்.
பிறபின்னர்..
அருமையான, கருத்துச் செறிவுள்ள கட்டுரை ஐயா.
நாட்டார் மற்றும் பழங்குடி வழிபாடுகளை அழித்தொழிக்காமல், அதே சமயம் அவற்றின் முதிரா அம்சங்களை நெறிப்படுத்தி அவற்றை சைவம் தன்னுள் ஏற்றுக் கொண்டது பற்றியும் அற்புதமாக எழுதியுள்ளீர்கள்.
இந்தியா முழுவதும் அக்காலத்தில் புழங்கிய தத்துவச் சொற்கள் மற்றும் தர்க்க முறைமைகளைக் கொண்டே சைவசித்தாந்தம் தன் தரப்பை முன்வைக்கின்றது. ஆனால் தமிழகத்திற்கு வெளியே அது பரவாததற்குக் காரணம், மூல நூல்கள் அக்காலத்திய அறிவுப் புல/இணைப்பு மொழியான வடமொழியில் மொழியாக்கம் செய்யப் படாததும், அதனால் பாரத நாட்டின் பிற பிரதேசங்களின் தத்துவ, சமய அறிஞர்களைச் சென்று சேராமாலும் இருந்ததே என்று தோன்றுகிறது. மாதவாசாரியார் தமது சர்வ தரிசன சங்கிரஹம் நூலில் மெய்கண்ட சித்தாந்தத்தைக் குறிப்பிடாதற்கு அந்த்த் தத்துவப் பிரிவு பற்றி அவர் ஒன்றுமே அறியாமல் இருந்திருக்கக் கூடும் என்பதே காரணமாகப் படுகிறது – காழ்ப்புணர்வு என்று சொல்வதற்கில்லை, ஏனெனில் வைதிகரான அவர் அவைதிக தத்துவப் பிரிவுகளைக் கூட அதில் தவறாமல் குறிப்பிடுகிறார்.
ஒப்பீட்டில் தமிழகத்தில் தோன்றிய ராமானுஜ சித்தாந்தம் தென்னகத்தின் மற்ற பகுதிகளிலும், அதையும் தாண்டி வடபாரதம் முழுவதும் பரவியது. கோட்டியூர் நம்பி கோஷ்டிபூரணராகவும், தொண்டரப் பொடியார் பக்த-சரண-ரேணுவாகவும், வில்லிதாசர் தனுர்தாசராகவும் ஸ்ரீவைஷ்ணவ வடமொழி நூல்களில் உருமாற்றம் பெற்றனர்! இதன் காரணமாகவே ராமானுஜ சித்தாந்தம் வல்லாபாசாரியார், ராமானந்தர், கபீர்தாசர் ஆகிய பல ஆசாரியர்களின் வைணவ பக்தி இயக்கங்களின் மீது தாக்கம் செலுத்தியது.
ஆனால் தற்போதைய இந்திய தத்துவவியலாளர் சைவசித்தாந்தம் பற்றி தற்போதைய இணைப்பு மொழியான ஆங்கிலம் மூலம் ஓரளவாவது அறிந்து கொள்ள முடியும். எனவே, அதற்கு உரிய இடம் அவர்கள் அளிக்காதிருப்பது தவறே ஆகும் என்னும் தங்கள் கருத்துடன் உடன்படுகிறேன்.
இத்திறக்கிலும் நாம் செய்யவேண்டியது ஏராளம் உள்ளது. திருமந்திரம் போன்ற முக்கியமான நூல்களின் நேர்த்தியான ஆங்கில மொழிபெயர்ப்புகள் கூட மிகச் சமீப காலங்களிலேயே வெளிவந்துள்ளன. கன்னட வீரசைவ அடியார்களின் வசன இலக்கியத்தில் தேர்ந்தெடுத்த பாடல்களை பிரபல ஆங்கிலக் கவிஞர் ஏ.கே.ராமானுஜன் “Speaking of Siva” (Peguin Publication) என்ற பெயரில் ஆங்கிலக் கவிதைகளாக வெளியிட்டுள்ளார். ஆனால், அதனினும் சுவையும், ஆழமும், தத்துவச் செறிவும் மிகுந்த தேவார, திருமுறைப் பாடல்கள் கொண்ட இத்தகைய ஒரு பிரபலமான தொகுப்பு இதுகாறும் வந்திலது. ஜே.எஸ்.நல்லுசாமிப் பிள்ளை அவர்களைப் பற்றியே கூட சமீபத்தில் தான் ஜெயமோகன் கட்டுரை (https://jeyamohan.in/?p=708) வாயிலாக நான் அறிந்து கொண்டேன். சைவ சித்தாந்தம் பற்றி ஆங்கிலத்தில் சுவைபட இன்னும் பல நூல்கள் எழுதப் படவேண்டும். நல்லுசாமிப் பிள்ளை அவர்களின் நூல்கள் கூட இப்போது கிடைப்பதாகத் தெரியவில்லை. அவற்றை புதிய பதிப்புகளாக வெளியிடல் வேண்டும்.
அருமையான கட்டுரை தந்ததற்கு மனமார்ந்த நன்றி ஐயா. கிறுஸ்துவ மிஷநரிகள் பற்றிய அரவிந்தனின் கருத்தை நானும் ஆமோதிக்கிறேன். சொல்லப்போனால் தமிழ் சைவ மரபை வைதீகத்திற்கு எதிராக திருப்புவதில் அவர்கள் ஓரளவிற்கு வெற்றி கண்டார்கள் என்று கூட சொல்லலாம். இன்றும் கூட சில தமிழ் சைவ சித்தாந்தவாதிகள் விவரம் புரியாமல் அவர்களுடன் சேர்ந்துகொண்டு ஸம்ஸ்க்ருதத்திற்கு எதிரான நடவடிக்கைகளில் இயங்குவதைப் பார்க்கிறோம். சிவபெருமான் தான் அவர்களுக்கு நல்புத்தி கொடுக்கவேண்டும்.
நிற்க, நீங்களும், நம் வாசக நண்பர்களில் பலரும் ”சேக்கிழார் அடிப்பொடி” முதுமுனைவர் தி.ந.இராமச்சந்திரன் அவர்களைப் பற்றி அறிந்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். கடந்த 12, 13 தேதிகளில் தஞ்சையில் அவருடைய 76-ஆவது பிறந்த தின விழாவில், தமிழ் பல்கலைக் கழகம் தஞ்சாவூர் – தத்துவ மையமும், சேக்கிழார் அடிப்பொடி சைவ சமய அறக்கட்டளையும் இணைந்து அவருக்கு சிறந்த முறையில் பாராட்டு விழா நடத்தினர். அதைப் பற்றி விவரமாகப் பின்னால் எழுதுகிறேன்.
இங்கு அவரைப் பற்றிச் சொல்லக் காரணம், சைவ சமயத்திற்கும், சைவ இலக்கியங்களுக்கும் அவர் ஆற்றியுள்ள மகத்தான சேவைகளில் முக்கியமான ஒன்று அவற்றை ஆங்கிலத்தில் அற்புதமாக மொழிபெயர்த்ததும் ஆகும் என்பதை உங்கள் அனைவரிடமும் பகிர்ந்துகொள்ளத் தான். திருவாசகம், திருக்கோவையார், திருமந்திரம், ஆறாம் திருமுறை, பெரியபுராணம், காரைக்காலம்மையார் பாடல்கள், திருவருட்பயன், உண்மை நெறி விளக்கம், மற்றும் பல இலக்கியங்களையும், பாடல்களையும் அருமையாக ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து உலகம் புகழ் பெறச் செய்திருக்கிறார்கள். சிறந்த ஆராய்ச்சியாளரான அவர், பல நூற்களையும் எழுதியுள்ளார்கள். பல அரிய காணக்கிடைக்காத, நூற்களையும், கட்டுரைகளையும், பாடல்களையும் கூடத் தொகுத்து வெளியிட்டிருக்கிறார்கள்.
திரு ஹரன் அவர்களுக்கு, சேக்கிழார் அடிப்பொடி திரு டி.என். இராமச்சந்திரன் அவர்களை நான் அறிவேன். அவருடைய திருவாசக ஆங்கிலமொழிபெயர்ப்பும் வேறு சில பதிப்புக்களும் என்னிடம் உள்ளன. வைதிக சைவத்திற்கு நூல்கள் வெளியிடுவதன் மூலம் அருந்தொண்டாற்றி வருகின்றார்.
வடமொழி வெறுப்பும் பிராமண வெறுப்பும் தமிழ்ச்சைவத்தை ஒரு குறுகிய வட்டத்துக்குள் உழலச் செய்கின்றது என்பது என் எண்ணம். சேனாவரையர், பேராசிரியர் முதலிய உரைகாரர்களும், குமரகுருபரர் , சிவஞான முனிவர்,கச்சியப்ப முனிவர் முதலிய கவியோகிகளும் யாழ்ப்பாணம் ஆறுமுக நாவலர், சந்தமறையும் தமிழும் தேர் தன்னேரில்லாக் குமரகுருதாச சுவாமிகளும் இருமொழிகளிலும்வல்லவராகத் திகழ்ந்துள்ளனர். இவர்களைக் காட்டிலும் தமிஉக்கும் சைவத்துக்கும் தொண்டாற்றிய தனித்தமிழ்ப் பற்றாளர் ஒருவரும் இலர்.
திரு ஹரன் அவர்களுக்கு, சேக்கிழார் அடிப்பொடி திரு டி.என். இராமச்சந்திரன் அவர்களை நான் அறிவேன். அவருடைய திருவாசக ஆங்கிலமொழிபெயர்ப்பும் வேறு சில பதிப்புக்களும் என்னிடம் உள்ளன. வைதிக சைவத்திற்கு நூல்கள் வெளியிடுவதன் மூலம் அருந்தொண்டாற்றி வருகின்றார்.
வடமொழி வெறுப்பும் பிராமண வெறுப்பும் தமிழ்ச்சைவத்தை ஒரு குறுகிய வட்டத்துக்குள் உழலச் செய்கின்றது என்பது என் எண்ணம். சேனாவரையர், பேராசிரியர் முதலிய உரைகாரர்களும், குமரகுருபரர் , சிவஞான முனிவர்,கச்சியப்ப முனிவர் முதலிய கவியோகிகளும் யாழ்ப்பாணம் ஆறுமுக நாவலர், சந்தமறையும் தமிழும் தேர் தன்னேரில்லாக் குமரகுருதாச சுவாமிகளும் இருமொழிகளிலும்வல்லவராகத் திகழ்ந்துள்ளனர். இவர்களைக் காட்டிலும் தமிழுக்கும் சைவத்துக்கும் தொண்டாற்றிய தனித்தமிழ்ப் பற்றாளர் ஒருவரும் இலர்.
நண்பர் ஞானப் பித்தன் அவர்களே,
//தமிழ்ல “ஓம்” படம் போட்டு தமிழிஷ்ல இணைக்கலாமே, அதுலேயே உங்க வடமொழி பற்ற காமிக்கிறிங்க அப்பறம் என்ன எளவுக்கு இந்த “தமிழ்”இந்து வேசம் ?//
அவசரப் படாதீர்கள்,கொஞ்சம் சிந்தியுங்கள்! தமிழ் ஹிந்து சிறப்பான பணி செய்து வருகிறது.
இந்து மதம் வட மொழி என்று கூறப் படும் சமஸ்கிருதத்தையோ, அல்லது வேறு எந்த மொழியையோ நம்பி இல்லை. இந்து மதம் உண்மையைத் தன் அடித்தளமாகக் கொண்டுள்ளது.
“உண்மையே வெல்லும்” என்ற உண்மையின் அடிப்படையிலேயே உண்மையைத் தேடும் வழியே இந்து மதம்.
உண்மையை உயிருக்கு புரிய வைப்பதன் மூலம், அந்த உயிரை இருட்டில் இருந்து வெளிச்சத்திற்கு அழைத்து சென்று, உயிரை அடிமை நிலையில் இருந்து விடுதலை நிலைக்கு உயர்த்துவதே இந்து மதத்தின் நோக்கம்.
தமிழில் இந்து மதத்தின் எல்லா உண்மைகளும் சிறப்பாகக் கூறப்பட்டுள்ளன. இன்னும் சொல்லப் போனால், சமஸ்கிருதத்தையும் மிஞ்சிய வகையில் இந்து மதத்தின் உண்மைகள், தமிழிலும், பிற திராவிட மொழியிலும் உண்டு!
இந்தியாவைப் பொருத்த அளவில் ஆன்மீகம் என்பது, மனிதனின் அறிவை உயர்த்தி, அவன் உயிரை விடுதலை அடையச் செய்வது என்பதுதான்!
உண்மை – அதை எந்த மொழியில் சொன்னாலும் அது (உண்மை) ஒன்றாகத்தான் இருக்க முடியும்!
“உலகம் உருண்டையானாது” என்று சொன்னாலும், “EARTH IS ROUND” என்று
சொன்னாலும், பொருள் ஒன்றுதான்!
மனித உயிர் பற்றீய ஆராய்ச்சியில் கிருட்டிணர்,
” கதாஸூன், அகதாஸூன், ந அனுசோசந்தி பண்டிதா” -என்று கூறியுள்ளார்.
“சான்றோர் இங்கே இருப்பவர்களைப் பற்றீயோ, இறந்தவர்களைப் பற்றீயோ எண்ணிக் கலங்குவதில்லை” என்று பொருள்!
அதையே பட்டினத்தார்
” செத்த பிணத் தருகே இனிச் சாம்பிணம் கத்துதையோ ” என்று பாடியுள்ளார்!
“காம்பிணங்கும் பணைத்தோளார்க்கும் பொன்னுக்குங் காசினிக்கும்
தாம்பிணங்கும் பலஆசையும் விட்டுத்தணித்துச் செத்துப்
போம்பிணம் தன்னைத் திரளாகக் கூடிப் புரண்டினிமேற்
சாம்பிணம் கத்துதையோ ? என்செய்வேன் தில்லைச்சங்ககரனே”.
மேலும் கிருட்டிணர்,
“நத்வே வாஹம், ஜாது நாசம், ந த்வம் னேமே ஜனாதிபா” என்றும்,
“வாசாம்சி ஜீர்ணானி யதா விஹாய
நவானி க்ருஹ்ணாதி நரோபராணி
ததா சரீராணி விஹாய ஜீர்ணான்
யன்யானி ஸம்யாதி நவாணி தேஹீ ” என்றும்,
கூறியுள்ளதையே பட்டினத்தார்,
“அன்னை எத்தனை எத்தனை அன்னையோ?
அப்பன் எத்தனை எத்தனை அப்பனோ?
பின்னை எத்தனை எத்தனை பெண்டீரோ?
பிள்ளை எத்தனை எத்தனை பிள்ளையோ?
முன்னை எத்தனை எத்தனை சன்மமோ?
மூடனாயடி யேனும றிந்திலேன்,
இன்ன மெத்தனை யெத்தனை சன்மமோ?
என்செய் வேன்? கச்சியேகம்ப நாதனே? ”
என்று பாடியுள்ளார்!
எனவே எந்த மொழியில் சொன்னாலும், உண்மை ஒன்றுதான்.
எந்த மொழியில் சொன்னாலும் உண்மை ஒன்றுதானே- பின்ன என்னதுக்கு சம்ஸ்கிருதம் படிக்க வேண்டும் என்று கேட்கலாம். சில விஷயங்கள் ஒவ்வொரு மொழியில் தெளிவாக சொல்லப் பட்டு உள்ளன!
உதாரணமாக, “எழுமின், விழிமின் குறி சேரும் வரை நில்லாது செல்மின்” என்ற வாக்கியம் சம்ஸ்கிருத வாக்கியமான, “உத்திஸ்டத, ஜாக்ரத, ப்ராப்யவரான் நிபோதித” என்ற வட மொழி வாக்கியத்தின் மொழி பெயர்ப்பு. இதில் குறிப்பிடப்பட்டுள்ள, ” ஜாக்கிரத” என்ற வார்த்தையை தமிழில் “விழிமின்” என்று எழுதியுள்ளனர். ஆனால், இந்த வார்த்தை “ஜாக்கிரத” மிக முக்கியமானது. “ஜாக்கிரத” என்ற வார்த்தையால் உணரப்படும் ஜாக்கிரதை, “விழிமின்” “என்ற வார்த்தையால் உணரப்படுமா- என்பது சந்தேகம்!”ஜாக்கிரதை”யை கைவிட்டு விட்டதால் தான், இன்றைக்கு தமிழ்நாட்டில் மக்கள், ஆன்மீக விஷயத்தில் ஏமாந்து நிற்கின்றனர்!
எனவே பிற மொழியில் சிறிது புலமை பெறுவது தவறு இல்லை.
“எண்ணிய எண்ணியாங்கு எய்துவர் எண்ணியார்
திண்ணியர் ஆகப் பெறின்”
இதை மூல மொழியான தமிழ் மொழியில் பயிலும் போது கிடைக்கும் “திண்ணியம்” மொழி பெயர்ப்பில் கிடைக்காது என்பது அறிந்ததே.
ஆனால் யாரையும் வட மொழி பயிலச் சொல்லி கட்டாயப் படுத்தவில்லை. கட்டாயப் படுத்துவது என்பது இந்து மதத்தில் இல்லை. வடமொழி அறியாமலேயே இந்து மதத்தைப் நன்கு புரிந்து கொள்ளவும், சிறப்பாக பின்பற்றவும் முடியும்
என் தாய் மொழி தமிழ் மொழிதான்.
தமிழ், ஆங்கிலம் தவிர வேறு எந்த மொழியையும் நான் அறிந்து இல்லை.
இங்கே பகவத் கீதையில் இருந்து நான் குறிப்பிட்டுள்ள வட மொழி வாக்கியங்கள்- தமிழிலே எழுததப் பட்ட பகவத் கீதையிலிருந்தே நான் எடுத்து எழுதியனவாகும்.
என்னுடைய இந்த கட்டுரைக்கு ஏற்பு அளித்த அரவிந்தன் நீலகண்டன், ஜாவாகுமார், ஜடாயு, , திருச்சிக்காரர் முதலிய சிந்தனையாளர் அனைவருக்கும் நன்றி. வேதமதம் அளித்திருக்கும் சுதந்திரத்தாலும் மொழிப்பிணக்காலும் தன் ஆற்றலைத் தான் அறியாது மறந்திருப்பது போலக் காட்சி அளிக்கின்றது. ஞான மத்த கஜம் என, அரியேறு எனக் கிளர்ந்து இந்துக்கள் அனைத்துப் பிரிவினரையும் ஒன்றுபடுத்தி வழிநடத்தும் ஒருமெய்த் துறவியைத் தர வேண்டி, – திருஞானசம்பந்தப் பிள்ளையாரைப் பெற சிவபாத இருதயர் இறைவனை வேண்டியதைப் போல- வேண்டுகின்றேன்.
ஊகத்திற்கு மட்டும் இடமளிக்காமல் அகச்சான்று காட்டி எழுதப்பட்ட
அருமையான கட்டுரை.
தேவ்
i want to many more things about that “vetrumaiyil otrumai”
ஓம். சிவோஹம். நல்லதை நினைப்போம். நல்லதே நடக்கும்.
நமசிவாயம்.
Good article. Hard work. The author has delved deep into Saiva Sithaantha philosophy. He deserves our heartiest congrats!
True, this philosophy is unknown outside TN although it is ancient. As Jadayu has pointed out, in ancient times, no one took it outside – and if they had, it did not succeed in reaching out as Srivaishnavam did.
In our times, Sanskrit is not the link language of the country. Either English or Hindi is. If English, there are many scholars outside TN, who will read it in English and tell their own people in their language. If Hindi, the people of many states can access to it directly.
In today Tamilnaadu, there are a lot of persons who excel in both English and Tamil and could bring the philosophy outside via English. But they are not interested in religious matters, as it is a matter of conviction, not material advantage.
Life demands so many things today and religion is not a demand for most of the people. So, scholars taking interest for conviction’s sake becomes a rarity.
Bad luck.
தமிழிஷ் மூலம் இந்த அற்புதமான தளம் அடைந்தேன். நன்றிகள் பல.
அய்யா, நான் இத்தலத்தை சற்று தாமதமாக பார்த்தால் இந்த அருமையான கட்டுரைகளை படிக்கவில்லை. நீங்கள் எழுதிய “ஜீ.யு.போப் அவர்களும் திருவாசகமும்” மற்றும் “கிறிஸ்துவின் பிலாக்கணம்- ஒரு பார்வை” என்ற கட்டுரைகளை மட்டுமே படித்தேன்!
அருமையாக எழுதியிருக்கிறீர்கள் அய்யா!
ஆனால் கி.பி. இரண்டாம் நூற்றாண்டிலிருந்துதான் சைவம் தெரியப்பட்டது என்பது ஏற்றுக்கொள்ளும்படி இல்லை. ஏன்னெனில், கிருஷ்ண யஜூர் வேதத்தில் வரும் சுவேதாச்வதாரா உபநிடத்தில், உருத்திரமூர்தியை முழுமுதற்கடவுளாக வழிபடும் முறையைப் பற்றி விளக்க பட்டிருக்கிறதே… மேலும், அப்பய்ய தீக்ஷிதர் “சைவ அத்வைதம்” என்று ஒரு மார்க்கத்தையே உருவாக்கினார் என்று கூறப்படுகிறதே..
நீங்கள் சொல்வதுபோல ஆதிசங்கரர், இராமானுஜர், மத்வர், சைதன்யர் போல நம் நாயன்மார்களோ, ஆழ்வார்களோ தமிழ்நாட்டிற்கு வெளியில் தெரியப்படவில்லை. ஆனால் சுவாமி விவேகானந்தர் சொன்னதுபோல சைவமும் துவைதமதம் என்றே அறியப்படுகிறது? அதாவது சைவம் வேறு, உயிர்கள் வேறு என்று!
மேலும், சங்கரர் முன்வைத்த அத்வைதம் இன்று இந்துமதத்தின் மிகப்பெரிய மார்கமாக அறியப்படுகிறது. இது ஏனெனில், அவற்றில்தான் கட்டுப்பாடில்லை. உதாரணம், இராமானுஜரை பின்பற்றும் ஸ்ரீ வைஷ்ணவர்கள் திருமாலை மட்டுமே வணங்கவேண்டும் என்று வீரவைனவர்கள் (மறந்தும் புறம் தொழா மாந்தர்கள்) சொல்கின்றனர். ஆனால், சங்கரரே சிவன், அம்மன், திருமால், பிள்ளையார், முருகன் மற்றும் சூரியன் என்று ஆறு தெய்வங்களில் எவரைவேண்டுமானாலும் வழிபடலாம் என்கிறாரே (ஷன்மதக் கடவுள்கள்). ஆக நீங்கள் சொன்ன மற்ற நெறிகளை உள்வாங்கிக்கொள்ளும் வைதீக நெறியாக சங்கரரின் அத்வைதம் அறியப்படுகிறதே!
இறுதியாக, சைவ சித்தாந்த இலக்கியங்கள் பிற மொழிகளில் நம்மவர் மொழிபெயர்க்கவில்லை, வெள்ளையர் செய்தனர் என்கிறீர்கள். ஆனால், இராமகிருஷ்ண மடத்தில், “பெரிய புராணம்” ஆங்கிலத்தில் கிடைக்கிறது அய்யா..
ஆனால் நீங்கள் செய்யும் பனி வார்த்தைகளால் விவரிக்க முடியாத மாபெரும் தொண்டு.. தொடரட்டும் உங்கள் பனி!
நமச்சிவாய வாழ்க…
அறிய பல தகவல்களைத் தொகுத்துத் தந்த உங்களுக்கு மிக்க நன்றி. மொழிச் சர்ச்சையில் ஈடுபடுவோர் இலக்கிய வளர்ச்சிக்குத் தடையாகவே உள்ளார்கள். தமிழ் சிறந்த மொழி என்று கூறுவதை விட தமிழ் இலக்கியத்திலே உள்ள சிறப்பான பகுதிகளைக் கட்டுரையாக கொடுக்கலாம் – மொழி பெயர்க்கலாம். இதனால் மொழி வளமடையும். அதை விட்டுவிட்டு உயர்வு தாழ்வு பற்றி அருள் கூர்ந்து பேச வேண்டாம். தங்கள் கட்டுரைக்கு மிக்க நன்றி. பயனுடைய அற்புதமான தகவல்கள். தங்கள் மொழி மற்றும் இறைப் பணி தொடரட்டும்.
முனைவர் கோ.ந. முத்துக்குமாரசுவாமி ஐயா அவர்களின்
வைதிக சைவம்- வேற்றுமையில் ஒற்றுமை
கட்டுரை கண்டேன். சைவத்தின் தொன்மையும், அதன் வைதீக மற்றும் அவைதீக(தாந்த்ரீக)ப்பிரிவுகளைப்பற்றியும் தெளிவாக உரைக்கும் ஆசிரியர் போற்றுதலுக்குரியவர் என்பதில் ஐயமில்லை. பல் வேறுபட்ட பிரிவுகளையும் அனைத்து செல்லும் வைதீக சைவ நெறியின் சிறப்புகள் தெற்றென விளங்குகின்றன இக்கட்டுரையால். ஒரு சைவனாகவும், சைவ சித்தாந்தங்கள் மற்றும் வேதாந்த தத்துவ இயல் களின் மாணவனாக சில கருத்து மாறு பாடுகள் எனக்கு இதில் உண்டு.
முதல் கருத்து ஸ்ரீ கண்டர் என்னும் ஸ்ரீ நீலகண்டஆராத்யாயர் சங்கரருக்கு பின் வந்தவர் என்ற கருத்து. ஐயா இப்படி எழுதுகிறார். “ஷ்ரீகண்டர் எனப்படும் நீலகண்ட சிவாச்சாரியார் கி.பி. 11 ஆம் நூற்றண்டில் வாழ்ந்தவர். இவர் சிவபரமாக பிரம்ம சூத்திரத்திற்குப் பாடியம் வரைந்தார் அது நீலகண்டபாடியம் என வழங்கப்படுவதாயிற்று. சங்கரர் இராமானுஜர் நிம்பர்கர் முதலியோருடைய கொள்கைகளை நீலகண்டர் தம்முடைய பாடியத்தில் கடுமையாகக் கண்டிக்கின்றார்’ ………………………………….
இது தவறு என்பது போற்றுதலுக்குரிய முடிகொண்ட நாகலிங்க சாஸ்திரி அவர்களின் கருத்து. ஸ்ரீ நாகலிங்க ஆராத்யாயர் அது பற்றி ஒரு நூலே எழுதியுள்ளார். இதில் அவர் ஸ்ரீ நீலகண்ட பாடியம் சங்கரருக்கு முந்தையது என்று நிறுவுகிறார். ஸ்ரீ நீலகண்டரின் வேதாந்தம் ஸ்ரௌத்த சைவசித்தாந்தம் என்று மட்டுமல்ல சுத்தாத்வைதம்(இங்கே ஆதி சங்கராச்சார்யரின் அத்வைதம் கேவலாத்வைதம் என கூறப்படுகிறது ), சிவவிசிஷ்டாத்விதம், சிவத்வைதம் எனப்படுகிறது. ஆக ஐயா கூறும் ” மெய்கண்டாரின் கோட்பாடு ‘ சுத்தாத்துவித வைதிக சைவசித்தாந்தம்’ என்பது ஸ்ரௌத்த சைவசிதந்தத்தொடு இசைந்திருப்பதைக்காணவும். இரண்டும் ஒன்றா வேறு வேறா என்பதை ஆய்வுகள் தான் கூறவியலும் . ஆனால் இரண்டும் சிவத்தைப்போற்றும் வேதாந்த சித்தாந்தங்கள் என்பது தெளிவு.
இரண்டாம் கருத்து அய்யா அவர்களின் சைவ சித்தாந்தம் ஆகமங்களையும் வேதங்களை சம்பிரதாயமாக பிரமானங்கலாக கொண்டுள்ளன என்பது ” மெய்கண்டார், சம்பிரயமாக சைவசித்தாந்ததிற்கு வேதாகமங்கள் பிரமாணம் எனக் கூறப்பெற்றாலும், திருமுறைகள், தமிழிலக்கணம், பாரம்பரியத் தமிழ்ச்சிந்தனை ஆகியவற்றைப் பிரமாணமாகக் கொண்டு முதல் நூலாகச் சிவஞானபோதத்தை அருளிச் செய்தார். இந்நூல் மெய்கண்டாரின் சொந்தப் படைப்பே அன்றி மொழிபெயர்ப்பு அன்று”.
வழுத்துதற்குரிய சந்தானாசிரியர்களில் தலையாய ஸ்ரீ மெய்கண்டாரின் சிவஞான போதம் மூல நூல் என்பதில் ஐயமில்லை. இந்திய மெய் ஞான மரபில் தமிழரின் பெருங்கொடை சிவஞான போதம். ஆனால் வேதங்களையும் ஆகமங்களையும் பெயரளவில் அடிப்படையாக கொண்டது என்ற அய்யாவின் கருத்து ஏற்புடையது அல்ல. சைவ சித்தாந்த நூல்களை படிக்கும் தோறும் வேதங்களுக்கும் ஆகமங்களுக்கும் நம் ஆச்சாரியார்கள் அளித்த முக்கியத்துவம் தெரிகிறது. முமூர்த்திகளுக்கு மேலானவன் சிவம் என்பதும் சிவ வழிபாடே முக்திக்கு வழி என்பது ஆகமங்கள் போற்றிய வைதீகம்.
திருமுறைகள் யாவும் தமிழில் நம் அருளாளர்களால் வெளிப்படுத்தப்பட்ட வேத மொழிகளே.
அன்பிற்கினிய சிவஸ்ரீ விபூதி பூஷண் அவர்களுக்கு, வணக்கம். தங்கள் பெயரே தங்கள் மீது பெருமதிப்பு வைக்க என்னைத் தூண்டுகின்றது. என் கட்டுரையை வாசித்து மறுமொழி வழங்கியமைக்கு நன்றி. ஸ்ரீகண்டசிவாச்சாரியார் ஏனைய பாடியக்காரர்களுக்கு முன்னையவர் என்ற கருத்து எனக்கும் உடன்பாடே.Siva stated, that since the influence of Maharshi Vighanas and Badari who were sent earlier to propagate Siva Bhakthi is fading away, He is sending Nilalohita Rudra to take birth on Earth to drive away the insanity of the people under the preachings of the Mayavadis and to propagate Srouta Sivaradhya Sampradayam.
மாயா வாதம் பற்றிய இந்தத் தொடர் சங்கரைத் தொடர்புபடுத்திவிட்டது. சுட்டிக் காட்டியமைக்கு நன்றி.
தென்னாட்டுச் சைவ சித்தாந்தம் வைதிக சைவம் என்றே வழங்கப்படுகின்றது. வேதப்பயனாம் சைவம் என்பது தெய்வச் சேக்கிழார் வாக்கு. இதில் எனக்கு மாறுபட்ட கருத்து இல்லை. ஆனால் வேத உபநிடதங்களுக்குப் பிற பாடியக்காரர்கள் தங்கள் கருத்துக்கேற்பப் பொருள் கொள்கின்றனர். திருமுறைகளுக்கு மாறுபடாதவாறு சித்தாந்திகள் அவற்ருக்குப் பொருள் கொள்கின்றனர். வேதத்தின்மீது சைவசித்தாந்திகளுக்கு இருக்கும் உரிமையை வலியுறுத்துவதே என்னுடைய நோக்கம்.
போற்றுதலுக்குரிய முத்துக்குமாரசாமி அய்யா அவர்களுக்கு வணக்கங்கள். தங்கள் மறுமொழிக்கு மிக்க நன்றி. உங்களைப்போன்ற தமிழாசிரியர்கள் பாடம் கேட்டு இயல்பாகவே சிவபக்தி அமைந்த அடியேன் சைவசித்தாந்தத்திலும் ஆர்வம் கொண்டேன். சமீபத்தில் ஸ்ரௌத்த சித்தாந்த நூல்களை வாங்கிப்படித்து வருகிறேன். அதில் கண்டவற்றையே எனது மறுமொழியில் குறிப்பிட்டேன்.
ஐயா அவர்கள் நானிலம் பயனுற தொடர்ந்து எழுத வேண்டுகிறேன்.
இது தொடர்பாக எனக்கு இன்னும் ஐயம். அதாவது தமிழகத்தில் காணப்படும் வீரசைவ மடங்கள் சைவசிதந்தம் சார்ந்தவையா? அல்லது கர்நாடகத்தில் வழங்கும் சக்திவிஷிஷ்டாத்வதம் எனப்படும் வேதாந்தம் சார்ந்தவையா. தமிழில் காணப்படும் வேதாந்த நூல்கள் இத்தகையனவா.
வணக்கங்களுடன்
சிவஸ்ரீ விபூதிபூஷன்
அன்பிற்கினிய சிவஸ்ரீ விபூதி பூஷண் அவர்களுக்கு, நீங்கள் ஸ்ரெளத்த சைவசித்தாந்தம் பற்ரிய நூல்களைப் ப்டித்து வருவதை அறிய மகிழ்ச்சி. நான் தமிழில் காசிவாசி செந்திநாதய்யர் அவர்கள் மொழிபெயர்த்துள்ள பிரம்ம சூத்திரம் சைவ பாடிய்ம் மட்டுமே படித்துள்ளேன். அதில் எவ்வெவ்விடங்களில் மாயாவாதிகளும் பிறரும் தங்களுக்கேற்ற வகையில் பிரம்ம சூத்திரத்தில் மாறுதல்களும் இடைச்செறுகல்களும் செய்துகொண்டுள்ளனர் எனச் சுட்டிக் காட்டியுள்ளார். தமிழ்ச்சைவம் சிவசத்திக்குப் பரிணாமம் கூறுவதில்லை. சிரெள்த்த சைவம் சிவசத்தியே பிரமஞ்சமாகப் பரிணமித்துளது எனக் கூறும் என அறிகின்றேன். இதுவொன்றே இரண்டற்கும் வேறுபாடு எனக் கூறக் கேட்டுளேன். தாங்கள் வாசித்து வரும் ஸ்ரெள்த்த சைவம் பற்ரிய நூல்களையும் அவை கிடைக்கும் இடத்தையும் தெரிவிக்க வேண்டுகின்றேன். தமிழ் நாட்டைப் பொறுத்தவரையில் இங்கு நிலவிவரும் வீர சைவத்திற்கும் சைவசித்தாந்தத்திற்கும் வேறுபாடு இல்லை. இலிங்க தாரணம், இட்டலிங்க பூசை தவிர வேறு வேறுபாடு அனுசரிப்பதில்லை. தமிழ்நாட்டில் முதல் வீரசைவ ஆச்சாரியராகிய துறையூர் சிவப்பிரகாச சுவாமிகள் திருவாவடுதுறை ஆதீனத்தைச் சார்ந்தவரே. அவர் வீரசைவர் ஆனது தில்லைக் கூத்தப்பிரானின் வழிபாட்டில் இருந்த முட்டுக்கட்டையைக் களைய நிகழ்ந்த ஒரு வரலாறு.
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவராகிய செந்திநாதையர் அவர்களின் பிரம்மசூத்திர சிவாத்துவைத சைவ பாடியம் இன்றும் கிடைக்கிறதா? நானும் அதைப் படித்ததில்லை.. இம்மாபாடியத்தை ஐயரவர்களின் எல்லா நூல்களுக்கும் மகுடம் போன்றது என்று பெரியவர்கள் போற்றக் கேள்வியுற்றிருக்கிறேன். இன்று வழக்கொழிந்து போயிருக்கிற அந்நூல் பற்றியும் அந்நூலில் உள்ள முக்கிய கருத்துக்கள் பற்றியும் வணக்கத்திற்குரிய முனைவர் அவர்கள் இயலுமாகில் ஒரு கட்டுரை எழுத வேண்டும் என்று விண்ணப்பிக்கிறேன்.
சங்கராச்சார்யார் போல ராமானுஜாச்சார்யார் போல நீலகண்ட சிவாச்சார்யார் சைவர்களுக்குப் பிரதானமானவர் என்றும் அவருக்கு திருமுல்லைவாயில் தலத்தை அடியொற்றி எல்லாத் தலங்களிலும் திருவுருவப் பிரதிஷ்டை பண்ணி வழிபாடாற்ற வேண்டும் என்றும் செந்திநாதையர் அவர்கள் விரும்பியதாகவும் தெரிகிறது. அவ்வளவிற்கு நீலகண்டாச்சார்யாருடைய பிரம்மசூத்திர மாபாடியம் சிறப்புற்று விளங்கியதா? என்கிற கேள்வியும் என்னுள் பிறக்கிறது.
இது தொடர்பில் ஆழ்நத அறிவும் ஆய்வும் தேடலும் கொண்ட முனைவர் வீபூதி பூஷண் போன்றவர்கள் குறிப்பிடத்தக்க விஷயங்கள் தெரிந்தால் இங்கோ அல்லது தனித்த கட்டுரையிலோ விரிவாக எழுத வேண்டும் என்று பிரார்த்திக்கிறோம்.
போற்றுதலுக்குரிய முத்துக்குமாரசுவாமி அய்யாவுக்கும் அன்பிற்குரிய ஈழத்து அறிவர் சர்மா அவர்களுக்கும் வணக்கம். தங்கள் மறுமொழிகளுக்கு நன்றிகள்.
முனைவர் ஐயா அவர்களுக்கு வீர சைவம் சைவசித்தாந்தம் வேறுபாடு பற்றி பதில் அளித்தமைக்கு நன்றி. நீங்கள் துறையூர் சிவப்பிரகாசர் என்று குறிப்பிட்டிருக்கிறீர்கள் அது துறைமங்கலமோ என்று அடியேனின் நினைவு.
ஸ்ரௌத்த சைவ சைவசித்தாந்தம் பற்றி வணக்கத்திற்குரிய சிவயோகி முடிகொண்ட நாகலிங்க சாஸ்திரி அவர்கள் நூற்றுக்க்கு மேற்பட்ட நூல்களை செய்துள்ளார். அவற்றில் பன்னிரைண்டை ஆங்கிலத்தில்அவரது சீடரான சிவஸ்ரீ சுப்பாராவ்(இவர் ஒய்வு பெற்ற IRS அதிகாரி) அவர்கள் வெளியிட்டுள்ளார். இந்த நூல்கள் பற்றிய விவரங்களை ஸ்ரௌத சைவசிதாந்தம் பற்றிய ஆரிய செய்திகளை கருத்துக்களை கீழ்க்கண்ட இணைய தளத்தில் காணலாம்.
https://sroutasaivasiddhanta.com
இந்த இணையதளத்தில் கண்ட செய்திகளையும் விவரங்களையும் படித்து மெய்சிலிர்த்தேன். சிவபெருமானே வேதம் காட்டும் விழுப்பொருள் என்றும் இஷ்டலிங்க வழிபாடே மோட்சத்திற்கு தன்னிகரில்லா வழி, சிவ பஞ்சக்ஷரி, சிவ லிங்கம் மட்டுமல்ல, அக்கமணி(கண்டிகை ருத்ராட்சம்), திருநீறு(பஸ்மம்), வில்வதளம் ஆகியனவும் ஸிவஸ்வரூபமே என்று சிவ யோகி நாகலிங்க சாஸ்திரிகாரு நிறுவும் விதம் அலாதி. இவையாவும் வேதம் போற்றும் சாதனங்கள், வைதீகம் அன்றி தந்த்ரீகம் அல்ல என்று அவர் நிறுவுகிறார்.
இந்த நூல்களைப்படிக்க வேண்டும் என்ற ஆர்வம் மிகுதியால் சிவஸ்ரீ சுப்பாராவ் அவர்களின் குமாரர் சிவஸ்ரீ கிருஷ்ணப்பிரசாத் அவர்களைத்தொடர்பு கொண்டேன்(அலைபேசி எண் 09885464873). அதிசயம் ஆனால் உண்மை நீங்கள் அந்த புத்தகங்களைப் படிக்க வேண்டும் அல்லவா. உங்கள் முகவரியை ஈமெயில்லில் அனுப்புங்கள் புத்தகங்களை அனுப்புகிறேன் என்றார் அவர். பணம் எத்தனை அனுப்புவது வங்கி கணக்கு எண் போன்ற விவரங்களை நீங்கள் அனுப்புங்கள் பணத்தை உங்கள் கணக்கிற்கு மாற்றி விடுகிறேன் என்றேன் அடியேன். இல்லை இல்லை நான் புத்தகங்களை முதலில் அனுப்புகிறேன் பணத்தை பின்னர் அனுப்புங்கள் என்றார் அவர். புத்தகங்கள் ஒரு மாதத்திற்கு முன்பே வந்தன ஆனால் இன்னும் பணம் அனுப்புவது பற்றிய விவரங்கள் வரவில்லை. இரண்டு முன்று முறை அவரோடு தொலைபேசியில் அவற்றை அனுப்புங்கள் என்று சொல்லிவிட்டேன். இன்றோ நாளையோ அவை வரும் என நினைக்கிறேன். ஒரு சிவனடியார் மற்ற சிவனடியாரிடம் எவ்வளவு நம்பிக்கை வைத்திருக்கிறார் என்பது எனக்கு இதன் மூலம் உணர்த்தப்பட்டது.
சிவயோகி ஸ்ரீ நாகலிங்க ஆராத்யாயர்(வழிபாட்டிற்குரியவர்) அவர்களின் நூல்களில் மதவினோத சர்ச்சை மற்றும் வேதாந்தர்த பரிஷ்கரதாரஹர்ரம் ஆகிய இரண்டும் அனைத்திலும் காணப்படும் ஆழ்ந்த கருத்துக்களை கொண்டுள்ளன என்பதால் அவற்றையேனும் சைவத்தின் பால் ஈடுபாடு கொண்டோர் படித்தல் நலம் என்பது அடியேனின் எண்ணம். ஸ்ரௌத சைவ சித்தாந்தம் எவ்வாறு பிற வேதாந்தங்கலான, த்வைதம், அத்வைதம், மற்றும் விஷிச்டத்வைதம் ஆகியவற்றிலிருந்து வேறுபடுகிறது என்பதை இந்நூல்கள் தெளிவுபடுத்துகின்றன.
முனைவர் அய்யா அவர்கள் காசிவாசி செந்திநாதைய்யர் அவர்களின் பிரம்மசூத்திரம் பாடியம் பற்றி குறிப்பிட்டுள்ளீர்கள். அடியேன் நேற்று ஈழத்து தத்துவ அறிஞர் வித்வான் லட்சுமணன் அவர்கள் எழுதிய இந்திய தத்துவ ஞானம் என்ற தமிழ் நூலை வாசித்துக்க்கொண்டிருந்தேன்( இந்திய தத்துவ ஞானத்தை படிக்க நினைக்கும் தமிழர் அனைவருக்கும் இது அரிச்சுவடி). அதில் நம் சைவசித்தம் பற்றிய கட்டுரை ஒன்றில் சிவத்திரு செந்திநாதையர் சைவசித்தாந்தம் வைதீகம் என்று தெளிவாக நிறுவுகிறார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது(ஸ்ரீ நாகலிங்க சாஸ்திரி வடமொழியில் எழுதியுள்ளதைப்போல). அவரது பாடியம் தமிழர்களால் ஒதுதற்குரியது.
செந்திநாதைய்யர் அவர்களின் நூல்கள் தமிழ் சைவ பிரிவினை வாதிகளிடமிருந்து மக்களை சைவத்தை காக்க அவை உதவும். வேதத்தை(மறை என்று திருமுறைகளில் சொல்லப்பட்டுவது அறம், பொருள், இன்பம் வீடாம்) சமஸ்கிருதத்தை முற்றாக நிராகரிக்கும் இவர்களின் கருத்துக்கள் ஸ்ரீ நாகலிங்க சாஸ்திரியாருக்கு முன்னரோ செந்திநாதையருக்கு முன்னரோ நில்லாது. எனவே சிவத்திரு செந்திநாதையர் நூல்களை மீண்டும் பதிப்பிக்க ஆடல்வல்லபிரான் அருளவேண்டும். இப்போதைக்கு xerox copy யாவது கிடைத்தால் படிக்க விரும்புகிறேன்.
ஈழத்து சைவமணி ஸ்ரீ மயூரகிரிசர்மா அவர்கள் சிவனிய அறிஞர் செந்தினாதைய்யர் பற்றி எழுதியிருக்கிறார்கள்.
காசிவாசி செந்திநாதய்யர் அவர்கள் ஸ்ரீ நீலகண்டாச்சரியார் அவர்களிடம் கொண்டிருந்த மதிப்பு னம்மனைய சைவர்கள் பின்பற்றற்குரியது. தமிழக சைவ சித்தாந்தத்திற்கும் த்ரிலிங்க தேசத்து(ஆந்திரா) ஸ்ரௌத சைவசித்தாந்ததிற்கும் கருநாடக வீரசைவத்திற்கும் நெருங்கிய தொடர்புண்டு. இங்கே இன்னொரு செய்தி காஷ்மீரத்தில் உள்ள சைவம் கூட ஸ்ரீ கண்டாச்சாரியாரின் உரையை மையமாக எழுந்தது என்பதே அது. நம் தமிழ் சைவ சித்தாதந்த அறிஞர்களும் ஸ்ரீ கண்டஆராத்யாயரைப்போற்றியுள்ளனர் எனவே சைவத்தை திரிலிங்க தேசத்தில் ஸ்ரீ நீலலோஹித ருத்ராம்சமாக தோன்றி வடக்கையும் தெரிகையும் இணைத்த அவரும் நம்சிவாலயங்களில் வழிபாட்டிற்குரியவர்.
ஸ்ரீ நீலகண்டாச்யாரியார் அவர்களின் பெருமைகள் பலப்பல. அவர் ஸ்ரீ சங்கராச்சாரியார் அவர்களுக்கு முன் தோன்றி பிரம்மா சூத்திர பாஷ்யம் தந்தார் என்பது ஒன்று. அவர் அருளியது விஷிச்டாத்வைதம் என்பது இரண்டாவது. மூன்றாவது அவர் அருளிய பாடியம் வித்யாஸ்தானங்கள் பதினாங்கனையும் அதாவது
வேதங்கள், ஆகமங்கள், இதிகாசங்கள், புராணங்கள், தர்மசாத்திரங்கள் அனைத்தையும் ஒருங்கே கணக்கில் கொண்டு வரையப்பட்டது.
ஸ்ரீ சங்கரரைப்போல ஒரு சிலவற்றை நிராகரிக்கும் போக்கையும் ஸ்ரீ ராமானுஜரைப்போல ஒருசில புராணங்களை தாமசம் என்று நிராகரிக்கும் போக்கை அவர் கையாளவில்லை. எல்லாவற்றிற்கு மேலாக கர்மஞான சமுச்சய வாதம் மற்றும் சிவபரமயம் . வேதத்தின் கர்மகாண்டப்படி உபநயனமும் (காயத்ரி த்யானமும்) ஞான காண்டத்தின் படி சிவமஹா தீக்ஷை( பாசுபத விரதம், வேதத்தில் குறிப்பிடப்படும் சிரோ விரதம், நித்ய இஷ்டலிங்க பூஜைக்காக) வலியுறுத்துவது ஸ்ரீ கண்டரின் சிறப்பாகும்.
சிவஸ்ரீ விபூதிபூஷன்
சிவபூஜா துரந்தரர்களுக்கு நமஸ்காரம்.
ஊடே கருத்துப்பரிவர்த்தனத்திற்கு க்ஷமிக்கவும்.
காசிவாசி ஸ்ரீ செந்திநாத ஐயரவர்களைப் பற்றி வாசிக்க நேர்ந்தது வள்ளிமணாளனருளே. அவர் சரித்ரம் வாசிக்கையில் கீழ்க்கண்ட வாசகங்கள் கருத்தை ஈர்த்தன.
\\\\\அவர் முருகப்பெருமானை உபாசனா மூர்த்தியாகக் கொண்டார் என்றும் கருத இடமுண்டு.\\\\\\\ஐயரவர்கள் கதிர்காமஞ் சென்று பன்னிரு தினங்கள் உபவாசமிருந்து கந்தபுராணத்தைக் கருத்தூன்றிக் கற்று வந்தார்கள்.\\\\
காசிவாசி ஸ்ரீ செந்திநாத ஐயரவர்களது சரித்ரம் கந்தமடம், யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த க.சி.குலரத்தினம் அவர்களால் 1983ல் ப்ரசுரம் செய்யப்பட்டது கீழ்க்கண்ட சுட்டியில்
https://www.noolaham.net/project/01/98/98.htm
மேற்கண்ட புஸ்தகம் pdf வடிவில் கீழ்க்கண்ட சுட்டியில்.
https://noolaham.net/project/01/98/98.pdf. புஸ்தக முகப்பில் ஸ்ரீ செந்திநாத ஐயரவர்களது திருவுருவப்படம்.
1983ல் என்றபடிக்கு யாழ்ப்பாணத்தில் கலஹத்திற்கு முன் என தெரிகிறது. ஸ்ரீ செந்திநாத ஐயரவர்களது சரித்ரம் வாசித்தது பாக்யமென்றால் ஸ்ரீ க.சி.குலரத்தினம் அவர்களது முகவுரை பெரும் பாக்யம். முகவுரையில் ஸ்ரீ செந்திநாத ஐயரவர்களது குரு ஸ்ரீ ஆறுமுகநாவலர் மற்றும் முன்னோர்களான சைவசமயப் பெரியார்களின் பெயர்களை வாசிப்பதே மனதுக்கு உகப்பளிக்கிறது.
“முப்போதுந் திருமேனி தீண்டுவார்க் கடியேன்
முழுநீறு பூசிய முனிவர்க்கும் அடியேன்
அப்பாலும் அடிச்சார்ந்த அடியார்க்கும் அடியேன்”
என்ற திருத்தொண்டத்தொகையடிகள் நினைவுக்கு வருகிறது.
நமோ மஹத்ப்ய:
இந்த திவ்ய சரிதரத்தை வாசிக்க ஹேதுவாய் இருந்த தங்களுக்கு மீண்டும் நமஸ்காரம்.
ஊடே கருத்து தெரிவித்தமைக்கு மீண்டும் க்ஷமா யாசனம்.
வேலும் மயிலும் சேவலும் துணை.
முருகப்பெருமானின் அடியவர் அய்யா கிருஷ்ணக்குமார் அவர்களுக்கு நன்றிகள். இவ்வண்ணமே மகான் ஸ்ரீ செந்திநாத அய்யர் அவர்களின் ஸ்ரீ நீலகண்ட பாஷ்ய உறையும் கிடைக்கப்பெற்றால் மிகன்று.
வணக்கங்களுடன்
சிவ ஸ்ரீ விபூதிபூஷன்
எனக்கு ஒரு சந்தேகம். எந்த ஒரு கால நிர்ணயத்திற்கும் வரலாற்று ரீதியாக அகச்சான்றுகளும் புறச்சான்ருகளும் பயன்படுகின்றன. அது போல நீலகண்ட பாடியத்தின் காலத்தைச் சங்கரருடைய பாஷ்யத்திற்கு முந்தையதாக நிர்ணயிக்க மேற்கூறப்பட்ட வகையான வரலாற்றுச் சான்றுகள் உள்ளனவா? அவற்றைச் சுருக்கமாகக் கூற இயலுமா?
அன்பிற்கினிய சிவ்ஸ்ரீ விபூதி பூஷண் அவர்களுக்கு, வணக்கம். தங்களுடைய மறுமொழியிலிருந்து அரிய பலசெய்திகளை அறிந்து கொண்டேன். நீங்கள் காட்டியுள்ள சுட்டியிலிருந்துதான் சிரெள்த்த சைவத்தைப் பற்றிய அறிமுகம் பெற்றேன். அதை அறிந்தவுடன் பெரிதும் மகிழ்ந்தேன். சித்தாந்த சைவம் தென்னாட்டில் மட்டும் சுருங்கி விட்டது என மனச் சுருக்கத்துடன் இருந்த எனக்கு இச்சுட்டியைப் படித்தவுடன் மனத் தனிமை ஒழிந்தது.
சிவாத்துவிதத்தைச் சித்தாந்த நூல்கள் சிவவிசிஷ்டாத்வைதம் என்று கூறும். சிவாத்வைதம் – நிமித்தகாரண பரிணாமவாதம் பேசும். இது சித்தும் அசித்துமாகிய பிரபஞ்சம் சிவபரம்பொருளின் அம்சமாய், அதற்குக் குணமாக இருப்பன என்னும் கொள்கையுடையது.. ஆதலின் இது இராமானுஜர் விளக்கிய விசிஷ்டாத்துவிதம் போன்றது எனலாம். இராமானுஜர் பரம்பொருள் நாராயணன் என்கிறார். நீலகண்டர் சிவம் என்கிறார். ஆதலின் இப்பாடியம் சிவவிசிஷ்டாத்வைதம் எனப்படும். உமாபதி சிவம் சங்கற்ப நிராகரணம் என்னும் நூலில் இதனை அகச்சமயங்களில் ஒன்றாக் கொண்டு நிராகரணம் செய்தார்.
மாதவச் சிவஞான முனிவர் தம்முடைய திராவிட மாபாடியத்தில் பிரபஞ்ச முதற்காரன ஆராய்ச்சி என்ற பகுதியில், இச்சிவாதுவிதத்தை மறுக்கிறார். அவ்வாறு மறுத்தாலும், அவர், சிவாத்துவிதம், சித்தாந்தத்தொடு பொருளால் முரணுதலின்றாயினும் வாய்பாடு மாத்திரையான் முரணுதலின் சிவாத்துவிதம் வேறு எனப்பட்டது என்று உணர்க என எழுதினார். தென்னாட்டில் வழங்கி வரும் சைவ சித்தாந்தத்திற்கு மிக அணுக்கமானது சிவாத்துவிதம் என்பதால் சிவஞான முனிவர் தம் மாபாடியத்தில் பலைடங்களில் இச்சிவாத்வைத பாடியத்தை மேற்கோளாக எடுத்துக் காட்டினார்.
சந்தமறையும் தமிழும் தேர் தன்னேரில்லா பாம்பன்சுவாமிகள் தம்முடைய நூல்களி நீலகண்டபாடியத்தைச் சைவபாடியம் என்ப் போற்றுகின்றார்..
பிரமசூத்திரம் சிவாத்துவித சைவபாடியம் – காசிவாசி செந்திநாதய்யர் அவர்கள் அருளிய மொழிபெயர்ப்பு தஞ்சாவூர் சேக்கிழார் அடிப்பொடி டி. என். இராமச்சந்திரன் அவர்களால் 2005ல் வெளியிடப்பட்டது. விவரம்:
தெய்வச் சேக்கிழார் சைவசித்தாந்தப் பாடசாலை
5 -D, செல்வம் நகர், தஞ்சாவூர் – 613 007. விலை ரூ 400/=
இங்கே தெளிவான வகையில் பல்வேறு செய்திகளையும் பகிர்ந்து கொண்டமைக்காக முனைவர் அவர்களுக்கும் விபூதிபூஷண், கிருஷ்ண குமார் ஆகியோருக்கும் மனமார்ந்த நன்றிகள்.
திருமாலடியார் திரு. கந்தர்வன் அவர்கள் ஸ்ரீ கண்டாச்சாரியார் ஸ்ரீ சங்கராச்சாரியாருக்கு முன்வாழ்ந்ததற்கு அக்ச்சான்று களும் புறச்சாண்றுகளும் உண்டா என்று கேட்டுள்ளார். ஆம் உள்ளன. போற்றுதலுக்குரிய சிவயோகி ஸ்ரீ நாகலிங்க சாஸ்திரி அவர்கள் இதுபற்றி ஒரு நூலே எழுதியுள்ளார். அதன் சுருக்கத்தை அடுத்த மறுமொழியில் அவசியம் எழுதுகிறேன்.
முனைவர் முத்துகுமாரஸ்வாமி அய்யா அவர்கள் சிவாத்வைதம் எவ்வாறு சைவசித்தாந்த்தோடு வேறுபடுகிறது என்றும் அது அகச்சமயம் என்றும் தெளிவு படுத்தியிறுக்கிறார்.மகான் செந்திநாதையர் தமிழில் மொழிபெயர்த்த ஸ்ரீ நீலகண்டாச்சாரியாரின் பிரம்ம சூத்திர உரை கிடைக்கும் முகவரியை அளித்தமக்கும் நன்றிகள்.
அய்யா உங்கள் கட்டுரையில்
” மெய்கண்டாரின் கோட்பாடு ‘ சுத்தாத்துவித வைதிக சைவசித்தாந்தம்’ என்று குறிப்பிடுகிறீர்களே இவ்வேறுபாட்டை விளக்கினால் நன்று.
சிவஸ்ரீ. விபூதிபூஷண்
திருமாலடியார் திரு கந்தர்வன் அவர்கள் ஸ்ரீ கண்டாச்சாரியாரின் பிரம்மசூத்திர பாடியம் ஸ்ரீ சங்கராச்சாரியாரின் பாடியத்திற்கு காலத்தால் முற்பட்ட்து என்பதற்கு அகச்சான்றுகள் மற்றும் புறச்சான்றுகள் கேட்டுள்ளார். அவருக்கு நன்றிகள்.
1. ஸ்ரீ சிருங்கேரி பீடத்தின் சங்கராச்சாரியாராக விளங்கிய ஸ்ரீ வித்யாரண்ய ஸ்வாமிகள் கிபி 1350 வாக்கில் இயற்றிய சங்கர விஜயம் நூலில் காணப்படும் ஸ்ரீ சங்கராச்சாரியார் கூறிய இரண்டு ஸ்லோகங்கள் ஸ்ரீ சங்கரர் தனது திக்விஜயத்தை துவங்கிய காலத்திற்கு முன்னறே ஸ்ரீ கண்டாச்சாரியாரின் பாஷ்யம் எழுதப்பட்டுவிட்டது என்பதும் பயன்பாட்டில் இருந்திருக்கிறது என்பதும் புலனாகிறது.
2. அத்வைத சம்பிரதாயத்தாரால் போற்றப்படும் ஸ்ரீ அப்பைய தீக்ஷிதர் அவர்கள் ஸ்ரீ நீலகண்ட பாடியத்திற்கு சமஸ்கிருதத்தில் உரை வழங்கியவர். அவரது உரை சிவார்க்க மணீதீபிகை என்பதாகும். ஸ்ரீ தீக்ஷிதர் அவர்கள் ஸ்ரீ கண்டரின் பாடியம் ஸ்ரீ சங்கர பாடியத்திற்கு காலத்தால் முற்பட்டது என்று கூறியுள்ளார்.
இவை ஸ்ரீ மஹாமஹோபாத்யாய சிவயோகி நாகலிங்க சாஸ்திரி அவர்களின் ‘The Greatness and Antiquity of the Neelakanta Bhashyam’ என்ற நூலில் காணப்படும் செய்திகள்.
சிவஸ்ரீ. விபூதிபூஷண்
அன்பர் சிவஸ்ரீ விபூதிபூஷன் அவர்களே,
தாங்கள் என் கேள்விக்குப் பொறுமையாக மறுமொழியிட்டதற்கு நன்றிகள்.
S S Suryanarayana Sastri என்னும் ஆய்வாளர் தமது “Sivadvaita of Srikantha” என்ற ஆங்கில நூலின் முன்னுரையில்:
“The view that Srikantha was the earliest of the commentators has little argument to support it.” என்று கூறுகிறார். இக்கூற்றின் உண்மைத் தன்மை பற்றி நடுநிலை நின்று அறிய ஆசை; ஆகவே கேட்டேன்.
(1)-இல் நீங்கள் கூறும் நூல் “மாதவீய சங்கர விஜயம்” என்று நினைக்கிறேன். அந்நூலை வரலாற்றுச் சான்றாக ஏற்பதில் தடங்கல் உள்ளது. “ஆதி சங்கரர் கால ஆராய்ச்சி” என்ற எனது தமிழ் ஹிந்து கட்டுரையைப் பார்க்கலாம்.
சுருக்கமாக ஒரு உதாரணம்: மாதவீய சங்கர விசயத்தில் ஆதி சங்கரர் ஸ்ரீஹர்ஷர், உதாயனர், அபிநவகுப்தர் முதலானோருடன் வாதம் செய்ததாக வருகிறது. ஸ்ரீஹர்ஷரும் உதாயனரும் அபிநவகுப்தரும் கி.பி. 10-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் என்று வரலாற்று ரீதியாகத் தெளிவாக அறிகிறோம். ஆகையால் இந்நூலை வரலாற்றுச் சான்றாக ஏற்பதில் சிக்கல்கள் உண்டு என்றே கூற இடமுள்ளது. இவ்வளவு பிழைகளைக் கொண்டுள்ள ஒரு நூலை மகா பண்டிதராகிய வித்யாரண்யர் எழுதியிருப்பாரா என்பது வேறொரு கேள்வி.
(2) //அத்வைத சம்பிரதாயத்தாரால் போற்றப்படும் ஸ்ரீ அப்பைய தீக்ஷிதர் அவர்கள் ஸ்ரீ நீலகண்ட பாடியத்திற்கு சமஸ்கிருதத்தில் உரை வழங்கியவர். அவரது உரை சிவார்க்க மணீதீபிகை என்பதாகும். ஸ்ரீ தீக்ஷிதர் அவர்கள் ஸ்ரீ கண்டரின் பாடியம் ஸ்ரீ சங்கர பாடியத்திற்கு காலத்தால் முற்பட்டது என்று கூறியுள்ளார்.//
எந்த இடத்தில் கூறியுள்ளார் என்ற ஏட்டுக் குறிப்பைத் தர முடியுமா?
எப்படி இருப்பினும் இவ்விரு செய்திகளும் வரலாற்று ரீதியான ஆராய்ச்சிக்குப் பயன்படாது என்றே கருதுகிறேன். அப்பைய தீட்சிதர் காலமோ சங்கரர் காலத்துடன் ஒப்பிட்டுப் பார்க்கையில் மிக மிக அண்மையானதாகும்.
(a) சங்கரரோ, அவருக்கு முன்பு இருந்தவர்களோ,
(b) அல்லது சங்கரரது நேரிடைச் சீடர்களாகிய பத்மபாதர் அருளிய முதல் நான்கு சூத்திரங்களுக்கான உரையாகிய “பஞ்சபாதிகையிலோ” , அதன் விளக்க நூலாகிய பத்தாம் நூற்றாண்டு “விவரணத்திலோ”
(c) அல்லது சங்கரரது மற்றொரு சீடராகிய சுரேஷ்வரர் அருளிய “வார்த்திகங்களிலோ”,
(d) அல்லது கி.பி.841-ஆம் ஆண்டு எழுதி முடிக்கப்பட்ட பாஸ்கர மதத்தைக் கண்டிக்கும் அத்வைத பிரம்ம சூத்திர பாஷ்யமாகிய “பாமாதியிலோ”
(e) அல்லது மேற்கண்ட நூற்களின் அனுபாஷ்யங்களாக அமைந்துள்ள “பிரகடார்த்த விவரணம்”, “வேதாந்த கல்பதரு”, “தத்வ தீபனம்”, “ருஜு விவரணம்”, “நியாய நிர்ணயம்”, “பிரம்ம சூத்திர வார்த்திகம்”, “ரத்னப்ரபா” முதலான அநேக நூல்களில் ஏதோ ஒன்றிலோ,
(f) அல்லது மற்ற நியாய, வைசேஷிக, ஜைன, பெளத்த, விசிஷ்டாத்வைத வைணவ, த்வைத நூல்களிலோ
நீலகண்ட பாடியத்திலுள்ள வரிகளைப் பெயரிட்டோ பெயரிடாமலோ மேற்கோளாக எடுத்திருந்தால் அது ஆதாரப்பூர்வமான சான்றாகும்.
உதாரணமாக, சங்கரருக்கு முன்பு இருந்த போதாயனர் (“விருத்தி காரர்” என்று அத்வைதிகள் இவர்களை அழைக்கின்றனர்), டங்கர், திராமிடர், பர்த்த்ரு பிரபஞ்சர், முதலானோரைப் பெயரிட்டும் பெயரிடாமல் சில இடங்களிலும் மேற்கோள் எடுத்துள்ளார். பெயரிடாமல் மேற்கோள் எடுத்திருக்கும் இடங்களிலெல்லாம் பிராசீன அத்வைத டீகைகாரராகிய ஆனந்தகிரி என்பவர் டீகைகளில் “இது திராமிடர் கூறியது”, “இது பர்த்ரு பிரபஞ்சர் கூறியது” என்றெல்லாம் காட்டியுள்ளார். இந்நூல்கள் எல்லாம் பல்வேறு சுவடிகளிலிருந்து தொகுக்கப்பட்டு critical-ஆக edit செய்யப்பட்டு பல நூலகங்களில் இந்தியாவிலும் வெளி நாடுகளிலும் கிடைக்கின்றன. இவை வரலாற்றுச் சான்றுகளாகின்றன.
அன்புள்ள திரு கந்தர்வன்,
நீங்கள் கால ஆராய்ச்சியில் ஈடுபாடு கொண்டுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது.
நற்பணியைத்தொடர வேண்டுகிறேன்.
நீங்கள் அது மாதவீய சங்கர விஜயமா என்று கேட்டுள்ளீர்கள் ஸ்ரீ நாகலிங்க ஆராத்யாயர் கூறுகிறார் ஆம்.
அத்வைத வித்யாச்சாரியாரான ஸ்ரீ அப்பைய தீட்சிதர் தனது சிவார்க்க மணி தீபிகை வ்யாக்யானத்தில் ஸ்ரீ நீலகண்ட பாடியம் ஸ்ரீ சங்கர பாடியத்திற்கு முன்னது என்று கூறியுள்ளார். என்று கூறியுள்ளார். ஸ்ரீ அப்பைய தீட்சிதர் அவர்களின் சுலோகம்
Param Tvaadima MapyaanyEsaam
Trayaanaamidam Srikanthiya Bhaasyam.
ஸ்ரீ கண்டரின் பாஷ்யம் மற்ற மூன்று பாடியங்களுக்கு முன்னது என்பது இந்தன் பொருள் என்று ஸ்ரீ ஆராத்யாயர் கூறுகிறார்.
இந்த சுலோகம் ஸ்ரீ காலஹஸ்தி ஆஸ்தான பண்டிதரான ஸ்ரீ ஹலஷ்யனாத சாஸ்திரிகளால் பதிப்பிக்கப்பட்ட ஸ்ரீ அப்பைய தீட்சிதரின் நூலின் முன்னுரை(Preface) உள்ளதாகக் கூறுகிறார்.
ஸ்ரீ ஆராத்யாயர் ஸ்ரீ கண்ட பாடியத்தின் முதன்மை தென்னகத்து பண்டிதர்களால் மறுக்கப்படவில்லை என்றும் கூறியுள்ளார்.
சிவஸ்ரீ விபூதிபூஷன்
The following is the statement of Sri S.S.S Sasthry about the place and period of Srikantha.:
“Very little is known of Srikantha’s place, period or parentage.. The Samkara Digvijaya ascribed to Madava Acarya mentions a Srikantha who was the head of a matha at Gokarnam in the West Coast. According to that work he was a theist and Haradatta was one of his pupils: in a disputation with samkara, Srikantha owned himself defeated , and renounced his theism; thus, Srikantha was elder contemporary of Samkara. Unfortunately, this work is unreliable even in respect of its professed authorship. ”
திரு சாஸ்திரியார் அவர்கள் இந்தப் புனை கதையஃஇ மறுத்துள்ளாரே அன்றி ஏனைய பாடியக்காரர் மூவருக்கும் முற்பட்டவர் என்பதை மறுக்கவில்லை.
ஸ்ரீகண்டரும் ஹரதத்தரும் சைவர்களால் போற்றப்படும் பேரறிஞர்கள். இவர்கள் சங்கரரிடம் தோற்றுவிட்டதாகப் புனையப்பட்ட இதுபோன்ற பல கற்பனைகள் சங்கரரின் வழிதோன்றல்களிடம் உண்டு.
The view that Srikantha was the earliest of the commentators has little argument to support it.”
இந்தத் தொடர் எங்கே உள்ளது எனத் தேடினேன் . கிடைக்கவில்லை
“The period when Srikantha wrote is still more difficult of determination. A careful study of the work seems to provide a number of clues., but they all in turn, reveal themselves as inconclusive. Every conceivable theory has been put forward – that he was the earliest of the known commentators , that he succeeded sanmkara anD Ramanuja too, and that he came after Haradaddacariya but before Ramanuja. Each one of these can find some plausible grounds in its support. “
// The view that Srikantha was the earliest of the commentators has little argument to support it.”
இந்தத் தொடர் எங்கே உள்ளது எனத் தேடினேன் . கிடைக்கவில்லை//
பக்கம் 27-இல் கடைசியில் உள்ளது. அதன் சுட்டி இதோ: https://www.archive.org/stream/sivadvaitaofsrik030622mbp#page/n41/mode/2up/
அந்தப் பாராவில் சாஸ்திரி அவர்கள் கூறுவது:
“The view that Srikantha was the earliest\ of the commentators has little argument to support it. It is said that Appayya Diksita in the Catur-mata-lesa-sangralia lists the commentaries in the following chronological order Srikanthiya-Bhagavatpadiya- Ramanujlya-Anandatirthiya. Assuming the correctness of the reference, it is by no means certain that the order is chronological; for, it conflicts with suggestions in the Anandalahari and the Sivadvaita Nirnaya (both by the same author) to the effect that Srikantha came after Samkara and before Ramanuja. Nor does it correspond to the order in which the bhasyas are treated in the Catur-mata-lesa-sangraha, that order being Ananda-tirthiya, Ramanujiya, Srikanthiya
and Bhagavatpadiya.”
அன்புக்குரிய கந்தர்வன் மற்றும் முனைவர் ஐயா அவர்களுக்கு நன்றிகள். திருமாலடியார் அவர்களுக்கு இந்த ஆர்கைவ் காட்டியதற்கு நன்றிகள். பல பழைய நூல்கள் அதில் உள்ளன. பேராசிரியர் சூர்யநாராயண சாஸ்திரி அவர்கள்(பரிதிமால் கலைஞர் தானோ) ஆங்கிலத்தில் எழுதிய நல்ல நூலை அறிமுகப்படுத்தியதற்கும் நன்றி. அந்த நூலை முழுமையாக வாசிக்க வேண்டும். ஒரு சில பக்கங்கள் முன்னும் பின்னும் படித்தேன். ஸ்ரீ கண்டாச்சாரியாரின் காலத்தை நிர்ணயிப்பதில் உள்ள சிக்கல்கள் தெரிகின்றன. ஸ்ரீ அப்பைய தீக்ஷிதரின் நூல்களில் மாறுபட்ட வரிசைக்கிரமம் ஆச்சாரியார்களின் காலத்தைப்ப்பற்றி காணப்படுவதாக பேராசிரியர் உரைப்பது தர்க்கப்பூர்வமானதாகத்தெரிகிறது. மொத்ததில் ஸ்ரீ கண்டாச்சாரியார் ஸ்ரீ ராமனுஜாச்சாரியாரின் சம காலத்தவர் என்ற கருத்தினை சாஸ்திரிகள் வெளிப்படுத்தியுள்ளார். இருவரின் கோட்பாடுகளிடையே வேறுபாட்டையும் காட்டுகிறார். ஒருவரிடமிருந்து மற்றவர் பெற்றுக்கொண்டனர் என்பதையும் நிராகரிக்கிறார்.
ஐயா சைவசித்தாந்தம் சிவாத்துவிதம் பற்றிய விளக்கம் தந்துள்ளீர்கள். நன்றி வணக்கம்.
இவர் பரிதிமாற் கலைஞர் அல்லர். இவர் சென்னைப் பல்கலைக்கழகத்தில் தத்துவத்துறைப் பேராசிரியராக இருந்தவர்.
வணக்கத்திற்குரிய வீபூதிபூஷண் அவர்களுக்கு,
ஸ்ரீ கண்டாச்சார்யார் ஆதிசங்கரருக்குப் பிற்பட்டவரா? அவர் கிருஹஸ்தரா? அவரது காலம் ராமானுஜர் காலத்திற்கு சமீபமானது என்றால் அவர் நாயன்மார்களின் பிரபந்தங்களைத் (திருமுறைகளை) கற்றிருக்க வாய்ப்புண்டா? இது பற்றிய செய்திகள் தங்களுக்குத் தெரிந்தால் தெரிவிக்க வேண்டுகிறேன். ஆக, ஒட்டு மொத்ததில் ஸ்ரீகண்டாச்சார்யாருடைய வராலற்றைப் பற்றிய விபரங்களை அறிய விரும்புகிறேன்.
கண்டாச்சார்யார் பற்றி தமிழ்நூல்கள் பெரிதளவில் ஒன்றும் சொன்னதாகத் தெரியவில்லையே..? இவரது தாய்மொழி தமிழ் தானா? இவை எல்லாம் எனக்கு உள்ள சில சந்தேகங்கள் தெரிந்தால் தெரிவிக்க வேண்டுகிறேன். சைவ சித்தாந்திகளின் முதன்மை ஆச்சார்யர் ஆகிய இவரது வரலாறும் காலமும் உறுதிப்பட வேண்டும் என்ற ஆவலுடையவனாயிருக்கிறேன்.
மதிப்பிற்குரிய முனைவர் ஐயா மற்றும் அன்புகொழுமிய சர்மா அவர்களுக்கு,
வணக்கங்கள்,
நீங்கள் கூறுவது சரிதான். பரிதிமால்கலைஞர் வி.கே. ஸ்ரீநிவாச சாஸ்திரி என்பதாக ஒரு நூலில் சமீபத்தில் கண்டேன்.
தத்துவப் பேராசிரியர் எஸ். எஸ். சாஸ்த்திரி ஸ்ரீ நீலகண்டாச்சாரியார் எங்கு பிறந்தார் என்பத்தற்கு ஆதாரம் கிடைத்திலது என்கிறார். மாகான் காசிவாசி செந்தினாதையரவர்கள் குறிப்பிடும் வடதிருமுல்லைவாயில் ஆலயத்தின் சிவாச்சாரியார்கள் ஸ்ரீ கண்டாச்சார்யாரின் வம்சத்தவர் என்று நம்புவதாக பேராசிரியர் கூறுகிறார். ஆனால் ஸ்ரீ நாகலிங்க ஆராத்யாயர் ஸ்ரீ நீலகண்ட ஆராத்யாயர் த்ரிலிங்க(இது தான் தெலுங்கு எனப்படுகிறது தற்போது) ஆந்திரத்தில் அவதரித்தவர் என்று கூறுகிரார். இலிங்க தாரணம் செய்யும் அந்தணர்கள்(ஆராத்யாயர்/ வழுத்துதற்குறியர்) தற்காலத்தில் ஆந்திரத்தில் மட்டுமே உள்ளனர். இவர்கள் ஸ்மார்த்தர்கள் அல்ல. ஸ்ரீ நீலகண்டர் லிங்கதாரி என்பதும் அவர் பாடியம் இலிங்க தாரணத்தை வலியுறுத்துவதாலும் அவர் த்ரைலிங்க தேசத்தவர் என்பது தான் சரி.
ஸ்ரீ நாகலிங்க ஆராத்யாயர் ஸ்ரீ கண்டாச்சாரியார் அவர்களின் தாய் தந்தையர் பெயர் அவதாரம் செய்த நாள், ஜாதகம் ஆகியவற்றையும் குறிப்பிட்டுள்ளார்.
அவற்றை அடுத்த பின்ணூட்டத்தில் எழுதுகிறேன்.
இன்னெரு கருத்து ஸ்ரீ கண்டாச்சாரியார் ஸ்ரீ நீலகண்ட்ட சிவாச்சாரியார் எனவும் வழங்கப்படுவதால் நம் தமிழகத்து ஆதிசைவ குடியினரும் ஆந்திரத்து வைதீக ஆராத்யாயரும் ஒரே குடியினராக இருக்கக்கூடும். அங்கே உள்ள சிவாலயங்களில் கூட ஸ்ரீ கண்டரின் மூர்த்தி இல்லை. (வட திருமுல்லைவாயிலில் ஸ்ரீ கண்டரின் மூர்த்தி செய்தியை தொலைப்பேசியில் ஸ்ரீ கிருஷ்ணப்பிரசாத் ஆராத்யாரிடம் சொன்னேன் அவருக்கு அளவுகடந்த மகிழ்ச்சி).
ஸ்ரீ கணடர் சைவர்களுக்கு ஆச்சாரியர்( ஸ்மார்த்தர்களுக்கு சங்கரர் போல, ஸ்ரீவைணவர்களுக்கு ஸ்ரீ ராமானுஜர் போல) என்ற மகான் அய்யர் அவர்களின் கருத்து ஏற்புடையது. தமிழக சைவசித்தாந்தம் வேறு ஆயினும் ஸ்ரீகண்டரின் ஸ்ரவ்த்த சைவசித்தாந்ததின் வளர்ச்சி நிலை. காஸ்மீர சைவத்தின் மூல நூல் ஸ்ரீகண்டாச்சாரியாரின் பாடியம் என்று ஹிந்து ஃபிலாசபி என்ற நூலில் கண்டேன். வீரசைவம் வ்ர்ணாசிரம்க்கொள்கைத்தவிர்த்து விசிஷ்ட்டாத்த்வைதமான ஸ்ரீ கண்டரின் கொள்கைகளை ஏற்றுக்கொள்கிறது.
அவர் நமது அறுபத்து மூவராகியத் திருத்தொண்டர்களைப்பற்றி அறிந்திருப்பாரா என்பது தெரியவில்லை. மகான் காசிவாசி அய்யரவர்களின் நூலில் ஏதேனும் குறிப்புகள் உளவோ அறியேன். ஆனால் கருனாடகத்து வீரசைவர்கள் நமது நாயன்மார்களைப் போற்றினர் இன்றும் போற்றுகின்றனர்.
ஸ்ரீ நீலகண்ட ஆராத்யாயரின் வரலாறு
ஸ்ரீ நாகலிங்க சாஸ்திரி அருளிய ஸ்ரீ நீலகண்ட விஜயத்தில் கண்டுள்ளபடி
ஸ்ரீ நீலகண்டாச்சாரியார் ஸ்வபானு தெலுங்கு வருடத்தில் சைத்திர மாதத்தில், சுத்த தசமியில், கடக லக்கினம் புஷ்ய நட்ச்சத்திரத்தில் ஆந்திர மானிலம் வாரங்கல் அருகில் உள்ள ஸ்ரீ காளேஸ்வரம் என்ற ஊரில் பரத்வாஜ கோத்திரத்தில் கிமு 3100ல் ஸ்ரீ நீலலோஹித ருத்ராம்சமாக அவதரித்தார். அவரது பெற்றோர் ஆராத்யாயர்களான திருமதி கௌரி மற்றும் ஸ்ரீ விஸ்வேவர மஹேஷ்வரர் ஆவர்.
ஸ்ரீ நீலகண்டாச்சாரியார் சாட்சாத் ஸ்ரீ பரமேஸ்வரனால் சிவபக்தி வளரவும் வேத வியாசரின் சூத்திரங்களின் மெய்ப்பொருளை உலகோருக்கு உணர்த்தவும் அனுப்பப்பட்டார். உபனயனத்திற்குப்பின் வாரணாசியில் ஸ்ரீ ஸ்வேதாச்சாரியாரிடம் ஸ்ரீ நீலகண்டர் சாம்பவ தீக்ஷை(வேதம் போற்றும் ஸிரோ விரதமான இலிங்க தாரணம் அளிக்கப்படும் சிவமஹா தீக்கை), பெற்றதோடு வேதம், சிவாகமங்கள், இதிஹாசங்கள், புராணங்கள், தர்மசாஸ்திரங்கள், போன்ற சர்வதரிசனங்களையும் கசடறக் கற்றார். அகோரவித்யையும் அவருக்கு அளித்த ஸ்ரீ ஸ்வேதாச்சாரியார் அவரை இல்லற தர்மத்தில் விளங்க ஆணையிட்டார். அதன்படி ஸ்ரீ நீலகண்டர் தமது ஊரான ஸ்ரீ காளேஸ்வரம் திரும்பி ஸ்ரீ வீரபத்ராராத்யாயர் அவர்களின் திருமகளான ஸர்வமங்களா அவர்களை மணந்தார். இத்தம்பதியினருக்கு அகோரனாதர், காளேஸ்வரா, ஸ்ரீகிரிஸ்வரா என மூன்று புதல்வர்கள் இருந்தனர். இன்று வாரங்கல் பகுதியில் வாழ்ந்துவரும் காளேஸ்வரம் என்ற பட்டப்பெயர் கொண்ட(தெலுங்கில் இண்டிப் பேரு) அந்தணர்கள் ஸ்ரீ கண்டாச்சாரியாரின் வழிவந்தவர்கள் ஆவர்.
ஸ்ரீ நீலகண்டாச்சாரியாரின் சீடர்களான ஹரதத்தர், பவதேவர், சோமசேகரர், மற்றும் பீமேஸ்வரர் ஆகியோர் முறையே தெற்கு, வடக்கு, மேற்கு கிழக்கு திசைகளில் ஸ்ரீ நீலகண்ட பாடியத்தையும் பிரஸ்தானத்திரயத்தையும் பிரச்சாரம் செய்தனர்.
ஸ்ரீ நீலகண்டாச்சாரியார் ஜைன, பௌத்த, சாருவாக மத்தினரையும் வாதில் வென்றார். காசிமானகரில் இருந்த பண்டிதர் யாவரையும் மத விவாதத்தில் வென்றார். ப்கவத்பாதாச்சாரியார் சிவ ஏகோ த்யேயஹ என்ற அதர்வசிகையின் முழக்கத்தையும் ஸ்ரௌத்த சைவசித்தாந்தத்தையும் நிலைனாட்டினார் . காசிமானகரில் ஸ்ரீ விசுவனாதரின் தேவியே அவரது உரையை தமது சிரமேல் வைத்து போற்றியதால் பண்டிதர் அனைவரும் அவரடி பணிந்தனர்.
ஸ்ரீ நீலகண்ட சிவாச்சாரியாரின் ஸ்ரௌத்த சைவசித்தாந்தத்தின் அடிப்படை கொள்கைகளாக ஸ்ரீ நாகலிங்க ஆராத்யாயர் கூறுவன சில.
1. சிவ ஏவ காரணம்: பிரபஞ்சத்திர்கு மூல காரணமான பரம்பொருள் பிரம்மம் சிவமே.
2. ஸாயுஜ்யமே மோட்சம் முக்தி: சிவபரம்பொருளின் திருவருளால் ஆன்மர்களுக்கு விளையும் சாயுஜ்யமே வேதங்கள் கூறும் முக்தி ஜீவ பிரம்ம அய்க்கியம் அன்று.
3. தத்வத்ரையம் நித்யசத்யம்: ஜீவன், ஜகம், ஈஸ்வரன் ஆகியவை நித்யமானவை. ஈஸ்வரனாகிய சிவம் நாமம், உருவம் உடைய சகுணபிரம்மமே அன்றி நிர்குணபிரம்மம் அல்லன்.
4. அத்வைதிகளின் கருத்துக்களான பிரம்மம் சத்யம் ஜகத் மித்யம் மற்றும் ஜீவோ ப்ரஹ்மைவ ந பரஹ் வேத சம்மதமானது அன்று. அவை அவைதீகமானவை.
அன்பிற்கினிய வீபூதிபூஷண் அவர்களுக்கு,
தாங்கள் எனது வேண்டுகோளை ஏற்று இங்கே நீலகண்டாச்சார்யரின் வரலாற்றைப் இங்கே பதிவிட்டமைக்கு நன்றிகள் பல.. …
ஆனால் தாங்கள் இங்கே குறிப்பிட்ட நீலகண்ட விஜயத்தின் வண்ணமான வரலாறு ஆய்வு நிலைப்பட்டதாகத் தெரியவில்லை… இற்றைக்கு 5100 வருஷங்களுக்கு முன் இந்த ஆச்சார்யர் இருந்து பாஷ்யம் எழுதினார் என்று சொன்னால் யார் தான் நம்புவார்கள்..?
நான் நினைக்கிறேன்.. இந்த வரலாற்றுப் பிரச்சினைகளுக்குப் பின்னே.. பழங்காலத்தில் வேறு வேறு விதமான ஆண்டுகள்.. காலக்கணிப்புகள் வழக்கில் இருந்தமை காரணமாக இருக்கலாம்..
ஸ்ரீ நீலகண்ட சிவாச்சாரியாரின் ஸ்ரௌத்த சைவசித்தாந்தத்தின் அடிப்படை கொள்கைகளாக ஸ்ரீ நாகலிங்க ஆராத்யாயர் கூறுவன சில. என்று இங்கே நீங்கள் சுட்டிக் காட்டியவற்றிலிருந்து நம் வழக்கில் உள்ளதும் தத்துவஞான மரபில் சிறப்பிடம் வகிப்பதுமான இன்றைய சைவசித்தாந்தம் ஏராளமாக வேறுபடுகிறதல்லவா..?
இவற்றின் காரணமாகவோ.. என்னவோ.. இன்றைக்கு சைவ சித்தாந்திகள் மெய்கண்டதேவர், மற்றும் உமாபதிசிவத்திற்கு அளிக்கிற உயர்வையும் உன்னத போற்றுதலையும் நீலகண்டருக்கு வழங்குவதில்லை.. என்றும் சிந்திக்கத் தோன்றுகிறது.
பிரம்ம சூத்ரத்தில் புத்த மதத்தின் சூன்ய வாதமும் (நியாய,வைசேசிக என்று சர்வமும் தான்) கண்டிக்கப் படுகிறது – இது கண்டிப்பாக புத்தருக்கு பிற்காலத்தில் தான் எழுதப்பட்டிருக்க வேண்டும். (பிரம்ம சூத்ரம் எழுதியது வியாசர் இல்லை – பாதாராயனர் வேறு வியாசர் வேறு என்று கொள்பவருக்கு தான் இது ஏற்புடையதாக இருக்கும்).
வேத வியாசர் தான் பாதாராயனர் என்று வைத்துக் கொண்டாலும், இன்றைக்கு இருக்கும் சான்றுகளின் (வானவியல் மற்றும் அகழ்வாராய்ச்சி) படி மகாபார்ரதப் போர் நடந்தது சுமார் BCE 3067இல் என்பது (பார்க்க ISKON video, அரவிந்தன் அவர்களின் கட்டுரை, மஹா பாரதத்தை பற்றி வெளிவந்துள்ள எண்ணற்ற ஆய்வு புத்தகங்கள் . இப்படி பார்த்தால் கிட்டத்தட்ட நீலகண்டரும், வியாசரும், கிருஷ்ணரும் சம காலத்தவர் ஆகிவிடுவர்.
வியாசர் பல ஆயிரம் ஆண்டுகள் வாழ்தார் மஹா பாரத போருக்கு முன்னரே வியாசர் பிரம்ம சூத்திரம் எழுதி விட்டார் என்று சிலர் சொல்லலாம். அது சரியல்ல – பிரம்ம சூத்திரத்தில் பகவத் கீதைக்கும், உபநிஷத்களுகும் உள்ள வேற்றுமைகள் சமன் படுத்தப்படுகின்றன. பகவத் கீதை மஹாபாரத போரின் போது தான் கிடைத்தது என்பதை நாம் அறிவோம்.
இதற்கும் மேலாக – மிக முக்கியமான உபநிஷத் ப்ரிஹுதாரன்யக உபநிஷத்தின் முக்கிய கர்த்தா யாஞவல்கர் ஸ்ரீ கிருஷ்ணரின் காலத்திற்கு முற்பட்டவர் – இவர் கிருஷ்ணரின் தந்தையான வசுதேவருக்கு அசுவமேத யாகம் செய்வதில் உதவி உள்ளாரென்று சான்று உள்ளது. மேலும் இவர் ஜனகராஜரிடம் (சீதையின் தந்தை அல்ல) சம்வாதம் செய்ததை ப்ரிஹுதாரன்யக உபநிஷத்தில் காண்கிறோம்.
கிருஷ்ணரும் இதே ஜனகரை பகவத் கீதையில் நாலாவது அத்யாயத்தில் குறிப்பிடுகிறார்.
ஆக பிரம்ம சூத்திரம் ப்ரிஹுதாரன்யக உபநிசத் காலத்திற்கு முற்பட்டதாக இருக்க வாய்ப்பே இல்லை.
இதை எல்லாம் கணக்கில் கொண்டு நீங்களே முடிவு செய்து கொள்ளலாம்
அன்பிற்கினிய ஸ்ரீவிபூதிபுஷண் அவர்களுக்கு, தாங்கள் ஸ்ரீகண்டர் வரலாறு பற்றிய நூல்களைப் பெற்று சில செய்திகளை அறிவித்தமைக்கு நன்றி ஸ்ரீகண்டரின் திருப்படிமம் திருமுல்லைவாயிலில் அமைக்கப்பட்டிருந்தாலும் அவர் தமிழ் நாட்டைச் சார்ந்தவ்ர் எனக் கொள்ளுவதற்கில்லை. ஆந்திர நாட்டவராகவே இருந்திருக்க் கூடும். அவர் சங்கரருக்குக் காலத்தால் முந்தியவர் எனக் காசிவாசி செந்திநாதய்யர் முதலியோர் கருதினாலும் அதற்கு வலுவான ஆதாரங்கள் இல்லை. இராமானுஜரின் சம காலத்தவர் அல்லது சற்று முந்தியவர் என எஸ்.எஸ் சூரியநாராயண சாத்திரியார் கூறுவதே இன்றளவில் ஏற்புடைத்து.
தமிழ்நாட்டில் திருமுறைகளின் வழி முகிழ்த்த சுத்தாத்துவித சைவ சித்தாந்தத்துக்கு வேதாந்த சூத்திரம் – வியாசசூத்திரம் – பிரம்ம சூத்திரம் என வழங்கப்படும் நூல்கள் பொருந்தாது என்று தனியே சிவஞானபோத சூத்திரம் மெய்கண்ட தேவநாயனார் செய்து வைத்தார். மாதவச் சிவஞான முனிவர் ஸ்ரீகண்ட பாடியத்தை உரிய இடங்களில் போற்றியும் மாறுபடும் இடங்களைச் சுட்டி விளக்கியும் மாபாடியம் செய்தருளினார்.
வடமொழியும் தென்மொழியும் நன்கு கற்றோர் வேதாகம சாத்திரங்களில் நல்ல பயிற்சியுடையோர் சைவ சித்தாந்த வளர்ச்சியினை வேதமுதல் மெய்கண்டசாத்திரம் வரை எடுத்துக் காட்டினால் மிக்க பயன் விளையும் மாதொருபாகர் அருள்வாராக.
தமிழகத்துச் சைவ ஆதீனங்கள் திருக்கயிலாய பரம்பரை என்று கூறப்படுவன வடநாட்டிலும் தெலுங்கு நாட்டிலும் சைவ சந்தானங்கள் இருந்தன என்பது கல்வெட்டுக்கள் வாயிலாக அறியப்படும் செய்தி. (எபிக்ரப்ஹிகா ஈண்டிகா வால்யூம் 3 P 266 ) அவற்றில் குறிப்படத்தக்க சந்தானம் மத்தமயூர சந்தானம் என்பது. இச்சந்தானத்துக்கு நருமதையாற்றங்கரையில் கோகழி என்னும் இடத்தில் (கோகழியாண்ட குருமனிதன் தாள் வாழ்க) கோளகிரிமடம் என்னும் மடம் இருந்ததாகத் தெரிகின்றது. இவர்கள் தமிழ்நாட்டிலும் திருமடங்கள் அமைத்துப் பணி செய்தனர். சோமசம்பு பத்ததி முதலிய பூஜா பத்ததிகள் எல்லாம் இவர்கள் வழி வந்தன என அறியப்படுகின்றது. திருவொற்ரியூரிலும் கோளகி மடம் இருந்ததென்றும் அங்கு வாகீச பண்டிதர் என்பார் இருந்து சைவசித்தாந்தம் போதித்தர் என்றும் கல்வெட்டுக்களால் அறியப்படுகின்றது. சோமசித்தாந்தம் வக்காணிக்கும் வாகீச பண்டிதர் என்பது கல்வெட்டுத்தொடர். சைவசித்தாந்த சாத்திரங்கள் பதினான்குக்கும் முற்பட்ட சைவசாத்திரம் ஒன்றுண்டு. ஞானாமிர்தம் எனப்பெயரிய அந்த நூல் இந்த சந்தானத்தில் வந்தது. அதில் கூறப்பட்டுள்ள செய்திகள் ஸ்ரீகண்டபாடியத்துடன் ஒப்பு நோக்கத்தக்கன. திராவிட மாபாடியத்தில் இருநூல்களுமே எடுத்தாளப் பட்டுப் பெருமை படுத்தப்பட்டுள்ள்னவாயினும் சிவசத்திக்குப் பரிணாமம் கூறுவதனாலும், சிவத்துக்கு நிமித்தமும் உபாதானமும் கூறுவதனாலும் மறுக்கப்படுகின்றன.
இந்த ச்ந்தானங்கள் இன்று மறைந்து விட்டமைக்கும் மங்கி விட்டமைக்கும் காரனம் ஆராயப்பட வேண்டும் வடநாட்டிலும் சிவ வழிபாடு தத்துவ அடிப்படையிலன்றி ஒரு cult போல உள்ளது. ஸ்ரீவிபூதி பூஷன் ப்ரம்மஸ்ரீ சர்மா போன்ற இளைஞர்களுக்கு இத்துறையில் சிந்தனை செல்வது அறியப் பெருமையாக உள்ளது.
அன்புக்குரிய திரு சாரங்க், சர்மா, மற்றும் முனைவர் அய்யா ஆகியேறுக்கு நன்றிகள். ஸ்ரீ கண்டச்சாரியார் அவர்தம் காலம் எது என்று ஸ்ரீ நாகலிங்க ஆராத்யாயர் கூறியதை மொழிபெயர்த்து அளித்துள்ளேன். இது அவர்களின் நம்பிக்கை. தத்துவப்பேராசிரியர் சாஸ்த்திரியார் கூறுவது அறிவுப்பூர்வமாக ஏற்கத்தக்கது.
முனைவர் அய்யா அவர்கள்
இந்த சந்தானங்கள் இன்று மறைந்து விட்டமைக்கும் மங்கி விட்டமைக்கும் காரனம் ஆராயப்பட வேண்டும்
என்று கூறியிறுக்கிறார். சமய வரலாற்று ஆராய்ச்சியாளருக்கு உரிய கேள்வி.
அடியேனைப் பொருத்த வரையில் யான் வரலாற்று ஆராய்ச்சியாளனோ, இலக்கியத் தத்துவ ஆய்வாளனோ அல்லன். தற்காலத்தில் சமூக முன்னேற்றம் மனித நலம் பற்றியே ஆய்ந்து வருகிறேன். சமயம், சமய நிறுவனங்கள், அமைப்புகள், நம்பிக்கைகள், வழிபாடுகள் மனித நலனுக்கு எப்படி பங்காற்றுகின்றன என்பதை களப் பணி மூலம் ஆராய முனைந்துள்ளேன். அதற்கு இலக்கியம், தத்துவ, வரலாற்றுப் புல அறிவு அவசியம். ஆகவே அதனை புரிந்துணர முயல்கின்றேன்.
வடனாட்டில் எழுந்த பக்தி இயக்க வரலாற்றைப் ஆழ்ந்து படித்தால் இது தெளிவாகும்.
அந்த வகையில் இதுபற்றி ஒரு சில எண்ணங்கள்.
தமிழகத்திலும் கருனாடகத்திலும் செழித்த சைவம் ஆந்திரத்திலும் அருகியது ஏன்? மஹாராட்டிரத்தில் அத்துனை சிறப்புடன் அது இல்லை.
சமய இயக்கங்கள் மற்றும் அரசின் ஆதரவு என்னும் இரு காரணிகள் இதணை விளக்களாம்.
தமிழகத்திலும் கருனாடகத்திலும் பல அடியார்கள் சைவத்தை வளர்த்தனர். அரசர்கள் ஆதரவளித்தனர். ஆந்திரத்தில் விஜய நகர அரசர்கள் வைணவத்தினை வளர்த்தனர். பெரும் சிவனடியார்களும் குறைவு. மராட்டியத்தில் சைவத்தினை வைணவ பக்தியியக்கம் தன்னுள் கொண்டுள்ளதாகவும் நினைக்கிறேன். ஸ்ரீ பண்டரிபுரத்தின் பக்தி இயக்கம் இன்றும் ஹரஹர மஹாதேவா என்று முழங்குகிறது.
வடனாட்டில் பக்தியியக்கம் வைணவம் சார்ந்ததாகவே இருந்துள்ளதால் சைவம் செழிக்கவில்லை. இங்கு குறிப்பிடத்தக்கது சைவம் வாழ்கிறது என்பதே.
ஆனால் காஸ்மீரத்தில் சைவம் தத்துவமாக செழித்துள்ளது பல மஹான்கள் அருளினால்.
அன்பார்ந்த சைவ நண்பர்களே .நீலகண்ட சிவாசாரியார்களின் பிரம்மசூத்திர பாஸ்யம் கீழ் கண்ட வலையில் தரவிறக்கம் செய்துகொள்ளலாம்
https://www.dli.ernet.in/cgi-bin/metainfo.cgi?&title1=piramachuuttira%20chivaatduvitachaivapaat%27iyam&author1=sriin-iilakand-t%27achivaachaariyaar&subject1=Literature&year=1909%20&language1=tamil&pages=670&barcode=2990100190417&author2=NULL&identifier1=NULL&publisher1=Senthilnathaswami%20Press,%20Tirumangalam&contributor1=NULL&vendor1=svi&scanningcentre1=ttd,%20s.v%20digital%20library&slocation1=CPL&sourcelib1=Others%20&scannerno1=0&digitalrepublisher1=NULL&digitalpublicationdate1=0000-00-00&numberedpages1=668&unnumberedpages1=2&rights1=OUT_OF_COPYRIGHT©rightowner1=NULL©rightexpirydate1=0000-00-00&format1=NULL%20&url=/data2/upload/0044/680
ஆனால் சைவம்-வைதீக விரோதம் போற்றி, சமீப காலமாக நம் கொங்கதேசத்தில் தமிழ்முறை என்ற பேரில் கோயில் கும்பாபிஷேகங்கள், கல்யாணங்கள் மற்றும் இன்னபிற சுப/அசுப காரியங்கள் செய்ய ஒரு குழு சுற்றி வருகிறது. இவர்கள் எல்லாம் யார்..? இவர்களின் பின்னணி என்ன? சூழ்ச்சிகள் என்னென்ன?? இவற்றால் நாம் என்னென்ன இழப்புகளை சந்தித்தோம், சந்திக்க இருக்கிறோம், இவர்கள் ஏன் புறக்கணிக்கப்படவேண்டியவர்கள் என்பதை துகிளுரித்துக் காட்டும் ஆதாரங்களுடன் கூடிய பதிவு.
https://www.karikkuruvi.com/2015/02/blog-post_9.html
“இதனைச் சைவம் என்ற பெயரால் கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் தோன்றிய மணிமேகலை ஆசிரியர் குறிப்பதால் அறியலாம்.” மணிமேகலை காப்பியம் கி. பி. 2ஆம் நூற்றாண்டில் இயற்றப்பட்டது என்பதற்கு ஆதாரங்கள் எவை?
முனைவர் கோ.ந. முத்துக்குமாரசுவாமி ஐயா!
உங்களது விளக்கங்களுக்கு நன்றிகள். ஆனால், சில ஐயப்பாடுகள் எனக்குள்ளன. அவற்றை நீக்கமுடியுமா?
அனைத்து சைவ, வைஷ்ணவ, மற்றும் கடவுள்கள் ஒலியெழுப்பும் கருவிகளான உடுக்கு, மணி,சங்கு, வீணை, புல்லாங்குழல் என்பவைகளைக் காவுகின்றவே? ஏன்? இவைகள் எதனை அடையாளப்படுத்துகின்றன? சிவன் என்ற கடவுள் உடுக்கினையும், ”திரிசூலம்”எனக் குறிப்பிடப்பட்டுவரும் ஒரு சாதனத்தையும் காவுகின்றார். அவரது நெற்றியில்முக்குறி உள்ளது. இவைகள் தனித்தனியாகவும். கூட்டாகவும் எவற்றை அடையாளப்படுத்துகின்றன? அதைப்போலவே, விஷ்ணு என்ற கடவுள் நெற்றியில் “U” வடிவிலான அடையாளத்தினை இட்டும், ஒரு கையில் சங்கினையும், மற்றைய கையின் சுட்டுவிரலால் ஒரு வட்டச் சக்கரத்தையும் சுழற்றுகிறார். இவைகள் தனித்தனியாகவும் கூட்டாகவும் எவற்றை அடையாளப்படுத்துகிற்றன? இதைப்பொலவே மருகள் ஒரு கையில் மணியையும், மற்றைய கையில் வேலினையும், நெற்றியில் முக்குறியையும் இட்டுள்ளார். இவைகள் தனிததனியாகவும். கூட்டாகவும் எவற்ற அடையாளப்படுத்தகின்றன. இப்படி ஏனைய கடவுள்களுக்கு விளக்கங்களை கூறுவீர்களா?
Arumaiyana katturai…..therindhu kolla vendiya vidayangal …… Ella tharappu makkalukkumana thennaattu Saiva siddantham vaazhga…..