தொன்மங்களையும் நாயகர்களையும் தேடி…

கதைகள் கேட்டு வளர்ந்தது மனித மனம். அந்த கதைகளின் ஊடாக ஒரு நாயகனாக ஒரு நாயகியாக தன்னைத் தானே அடையாளப்படுத்திக் கொள்ள பழக்கப்பட்டதுதான் நம்முடைய மனது. குழந்தைபிராயத்தில் தொன்ம கதைகள் கேட்கும்போது அந்த கதைகளின் நம்பகத்தன்மையையும் அந்த நாயகனின் இருப்பையும் எந்த விதமான கேள்விகளையும் முன் வைக்காமலே நாம் ஏற்றுக் கொள்கிறோம். குழந்தைப்பிராயமென்றில்லை, இன்று கூட மனம் சோர்ந்து போன தருணங்களில் நமக்கு பக்க பலமாக இருப்பது ஏற்கனவே நிகழ்த்தப்பட்ட மனித சாகஸங்கள்.

திடீரென பளீரென விடிந்த ஒரு காலைப்பொழுதில் ஒரு ஞானோதயம் – உண்மையிலேயே இந்த சாகஸங்கள் நிகழ்த்தப்பட்டனவா? கூறப்பட்ட தொன்மங்கள் எல்லாம் உண்மையானவையா? இப்படிப்பட்ட அற்புத இடங்களும் மனிதர்களும் இருந்து உண்மையா? சில கதாபாத்திரங்கள் இதிகாச புராணங்களில் ஒரு குறீயீடாகவே தோற்றுவிக்கப்பட்டதாக ஒரு சாரார் கூறும் கருத்து உண்டு. அப்படியென்றால் நம்முடைய கதை நாயகர்கள் உண்மையான மனிதர்கள் இல்லையா? ஏறக்குறைய இதே போன்ற கேள்வி தான் மைக்கெல் வுட்-க்கும் தோன்றியிருக்க வேண்டும்.

பி பி சி தொலைக்காட்சிக்காக மனிதர் எடுத்த நான்கு ஆவணப்படங்களின் தொகுப்பைப் பற்றி தான் இந்தக் கட்டுரை. மொத்தம் நான்கு ஆவணப்படங்கள் நான்கு மணி நேரம். அதில் முதல் இரண்டு மட்டும் இந்த கட்டுரையில். பொதுவாக உலக சினிமாக்கள் என்று எடுத்துக் கொண்டால் ஆவணப் படங்கள் குறித்த அறிமுகம் மிகவும் அரிதாகவேதான் நிகழ்த்தப்படுகிறது. பெரும்பாலும் ஆவணப்படங்கள் தொலைகாட்சிக்காகத்தான் எடுக்கப்படுகின்றன. சில தியேட்டரில் வெளியிடுவதற்காகவும். இதில் IMAX தனி அனுபவம். IMAX என்ற திரைப்பட வடிவம் சாகஸ பயணங்களை ஆவணப்படுத்த உகந்த வடிவமாக தோன்றுகிறது. உலக சினிமாக்கள் என்றால் மாற்று சினிமா, மற்றும் வேறு மொழியில் எடுக்கப்பட்ட சீரியஸான திரைப்படங்கள் , கவித்துவமாக எடுக்கப்பட்ட திரைப்படங்கள் என்று ஒரு வெகுஜன கருத்து நம்மிடையே உண்டு. தவறேதும் இல்லை. அது ஒரு கருத்து நிலை, அவ்வளவே. ஆனால் உலகத்தில் எடுக்கப்படும் மிகவும் முக்கியமான திரைவடிவமென்று நான் கருதுவது ஆவணப்பட வடிவம். இவற்றை எடுப்பது அவ்வளவு சுலபமில்லை.

என்னுடைய நண்பரின் நண்பர் ஒருவர் ஆப்பரிக்க காடுகளில் மனைவியுடன் சுற்றித் திரிகிறார், பல வருடங்களாக – விலங்குகளின் இன விருத்திக்கான குணாதிசயங்களைப் பற்றி ஆவணப்படம் எடுப்பதற்காக. பல வருட உழைப்பும், நீண்ட ஆராய்ச்சியும், மன திடமும் தேவைப்படுகிறது – சில ஆவணப் படங்கள் குறைத்த ஆராய்ச்சியை முடிக்க மட்டுமே 4-5 வருடங்கள் கூட ஆகலாம். உலகத்தின் ஆவணப்படங்களின் பொதுஜன பார்வைக்காக வைக்கப்படுபவை பயணங்கள் குறித்த படங்கள் (IMAX திரைப்படங்கள் பெரும்பாலும் ஆபத்தான பயணங்கள் குறித்த திரைப்படங்கள்), சரித்தர ஆராய்ச்சி பற்றிய திரைப்படங்கள் (நெஃபர்டிடி என்பவள் உண்மையில் யார், உலகத்தில் ஏழு ஆதி அதிசயங்கள் உண்மையிலேயே இருந்தனவா – இப்படி இருக்கும் இதன் தலைப்புகள்). அறிவியல் உண்மைகளின் அடிப்படையில் எடுக்கப்படும் ஆவணப்படங்கள் பெரும்பாலும் திரையரங்குகளை எட்டுவதில்லை. பல சமயம் கட்டிப்போடும் திரைக்கதையுடன் வரும் இந்த ஆவணப்படங்கள் மலிவான கமர்ஷியல் திரைப்படங்களைக் காட்டிலும் ஆயிரம் மடங்கு போதை தருவன.

மைக்கேல் எடுத்திருக்கும் நான்கு ஆவணப்படங்களும் வரலாற்றின் பக்கங்களில் இதுவரை முடிவான விடை காணப்படாத தொன்மங்களைப் பற்றியது. அந்த தொன்மங்களை சார்ந்த நாயகர்களைப் பற்றியது – அவர்கள் உண்மையில் இருந்தார்களா? காலப்போக்கில் மருவி மருவி முற்றிலும் உண்மை அல்லாத புணைவாக மாறக்கூடிய தன்மை கொண்ட தொன்மங்கள் எல்லாம் வெறும் புணைவா என்று ஆராய வரலாற்றின் பாதையில் பின் செல்கிறார்.

the_queen_of_sheba01முதலாவது ஷீபாவின் அரசி. பலரும் நினைப்பது போது போல ஷீபா என்பது ஒரு பெண்ணின் பெயரல்ல – அது ஒரு பேரரசின் பெயர். அந்த பேரரசை ஆண்ட அரசி ”ஷீபாவின் அரசி” என்று வரலாற்றின் பக்கங்களில் அறியப்படுகிறாள் – தற்காலத்தில் நாம் அறியும் அவளின் பெயர் “மகைடா”. இருப்பினும் ஷீபாவின் அரசி என்றே இனி வரும் இந்த கட்டுரையில் அவளை அழைப்போம்

ஷீபாவின் அரசி பற்றிய தகவல்கள் பைபிளிலும், குரானிலும், ஆறாவது பாட புத்தகங்களிலும் கிடைக்கின்றன. ஷீபாவின் அரசி சாலமனை கேட்ட கேள்விகளும் சாலமனின் புத்திசாலித்தனமும் பள்ளி காலங்களில் நமக்கு அறிமுகமாகியிருந்தாலும், ஷீபாவின் அரசி பற்றிய பல்வேறு கோணங்கள் நம்மிடையே இருக்கின்றன – அரசி, பேரழகி, சாத்தானின் வடிவம் என்று பல்வேறு கோணங்கள்.

தற்காலிக எதியோப்பியாவின் வரலாறு ஷீபாவின் அரசிக்கும் சாலமனுக்கும் பிறந்த மகனிடமிருந்துதான் துவங்குகிறது. அந்த மகனின் பெயர் மெனலிக். இதற்கான ஆதாரம் “Glory of Kings” என்ற மிகப்புராதானமான புத்தகத்தில் இருப்பதாக எடுத்துக் காட்டுகிறார் மைக்கேல். ஆனால் இந்த புத்தகம் சில நூறு ஆண்டுகளுக்கு முன் பிரிட்டிஷ்காரர்களால் எதியோப்பிவிலிருந்து களவாடப்பட்டு இங்கிலாந்து எடுத்துச் செல்லப்பட்டுவிட்டது. பின்னர் யொஹன்னெஸ் என்ற எதியோப்பிய மன்னனின் முயற்சியால் அது மீண்டும் எதியோப்பியாவிற்கே கொண்டு வரப்பட்டது. ஒரு நீண்ட கடிதத்தை யொஹென்னஸ் விக்டோரியா அரசிக்கு எழுதி அந்த புத்தகத்தை மீண்டும் தருமாறு கோரிக்கை விடுத்ததால் கீஸ் (Geez) என்ற மிகப்பழையான மொழியில் எழுதப்பட்ட அந்தப் புத்தகம் மீண்டும் எதியோப்பாவிற்கே 1872 ஆம் ஆண்டு வருகிறது. ஆனால் பழைய ஏற்பாடில் சாலமனுக்கும் ஷீபாவின் அரசிக்கும் இடையில் எந்த விதமான தாம்பத்திய உறவும் நிகழ்ந்த்தாக குறிப்புகள் இல்லை. (இதை மைக்கேலுக்கு இத்துறைக்கான வல்லுனர் விளக்குவதன் மூலம் நாம் அறிகிறோம்.)

ஷீபாவின் அரசி கிட்டத்தட்ட கிருஸ்து பிறப்பதற்கு ஏறக்குறைய 900 ஆண்டுகளுக்கு (சிலர் 750 ஆண்டுகள் என்று கூறுகின்றனர்) முன்னர் கடல் கடந்து ஜெருஸலத்திற்கு கூடை கூடையாக பரிசு பொருட்களும், வாசனை திரவியங்களும், யானைத் தந்தங்களும், எடுத்துக்கொண்டு சாலமனை சந்திக்கச் செல்கிறாள். ஏன்? உலகத்திலேயே மிகவும் புத்திசாலி அரசன் என்று தான் கேள்வியுற்ற அரசனை தான் நேரிடையாக சந்திக்க விரும்புவதாக ஷீபா கூறியதாக சரித்திர ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இவர்களிடையே மலர்ந்த காதலில் பிறந்த மகனே எதியோப்பியாவின் முதல் அரசன்.

மைக்கேல் தன்னுடைய பயணத்தின் இலக்காக நிர்ணயித்திருப்பது ஷீபாவின் அரசி வாழ்ந்த கோட்டையை கண்டுபிடிப்பதுதான். இதற்காக எந்த பாதையின் வழியாக சாலமனை சந்திக்க ஷீபாவின் அரசி பயணத்தை மேற்கொண்டிருக்க வேண்டும் என்று அணுமானித்து அந்த பாதையைத் தேடிச் செல்கிறார். அடிஸ் அபாபாவிலிருந்து அக்ஸம் என்ற இடம் நோக்கி நகர்கிறது பயணம். ஷீபாவின் அரசியின் தலை நகரம் என்று கருதப்படும் இடம், அக்ஸம்.

இந்த இடத்தில், மைக்கேல் நம்மை வரலாற்றின் சில முக்கிய பக்கங்களுக்கு அழைத்துச் செல்கிறார். கிராமத்தில் இருக்கும் ஒரு தேவாலயத்திற்கு கூட்டிச் செல்கிறார் – இந்த உலகையே திகைக்கச் செய்யும் ஒரு ரகசியம் அங்கு பாதுகாக்கப்படுவதாக சொல்கிறார். தன் தந்தையை சந்திக்கும் பொருட்டு ஜெருஸலம் சென்று சாலமனை சந்திக்கிறார் மெனலிக் – அப்போது உள்ளம் மகிழ்ந்து போன சாலமன் மெனலிக்-ற்கு ஒரு பரிசு பொருளை கொடுத்து அனுப்புகிறார். அது வேறெதுமில்லை, மோஸசிற்கு கடவுள் கொடுத்ததாக நம்பப்படும் பத்து கட்டளைகள் பொறிக்கப்பட்ட இரண்டு கற்பலகைகள். அவற்றை எதியோப்பிய எடுத்துச் சென்ற மெனலிக் அவற்றை அந்த சிறிய தேவாலயத்தில் வைத்து பாதுகாப்பதாக சொல்கிறார். இந்த ஆவணப்படத்தைப் பார்க்கும் போது கிறிஸ்துவ மதத்துடன் ஆதி தொடர்புடைய நாடாக, உலகத்திலேயே மிகப்பழமையான கிறிஸ்துவ நாடாக எதியோப்பியா தோன்றுகிறது.

ஆனால் அக்ஸம் ஷீபாவின் அரசியின் தலை நகரமாக இருக்காது என்று நம்பத்தகுந்த சில ஆதாரங்கள் கிடைக்கின்றன. அங்கே நிறுவப்பட்டிருக்கும் மிகப்பழைமையான கற்தூண்களின் காலம் கி பி முதல் நூற்றாண்டு – ஏறக்குறைய ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய சரித்திரத்தைப் பற்றி நாம் பேசிக்கொண்டிருக்கிறோம். இந்த தேடல் யேஹாவின் புனித மலைக்கு மைக்கேலை இட்டுச் செல்கிறது. இந்த இடம் ஷீபாவின் அரசியின் அரண்மனை இருந்ததாக கருதப்படும் இடம். இங்கே சில மிகப் பழைமையான சிதிலமடைந்த கோயில்கள் காணக்கிடைக்கின்றன – 600 B C காலத்தவை. ஆனால் அந்த இடத்தில் காணக்கிடைக்கும் மற்ற குறிப்புகள் ஆப்பரிக்க கலாசரத்தை சார்ந்தவையாக இல்லமல் அரேபிய கலாசாரத்தை சார்ந்தவையாக இருக்கின்றன. அங்கே கிடைக்கும் கல்வெட்டுகளில் யேமனை தலைமையாக்க் கொண்டு ஆண்ட சாபா அரச வம்சாவளியின் மொழி. சாபா…ஷீபா !

அந்த பயணம் அவரை கடல் கடந்து அரேபியாவில் இருக்கும் யேமன்-க்கு இட்டுச்செல்கிறது. குரானிலும் பைபிளிலும் ஒரு அரசி குறித்த குறிப்புகள் இருந்ததற்கான நியாயம் புலப்படுகிறது. யேமனின் படித்துறை நகரங்களில் உலகத்தின் மிகச்சிறந்த வாசனாதிரவியங்களுக்கான சந்தை இன்றளவும் உயிர்ப்போடு இருப்பதை நமக்குக் காட்டுகிறார். ஆனால் அரேபியாவில் இந்த அரசிக்கு பெயர் பல்கா ! அதே அரசி, ஆனால் வேறு பெயர். அவள் சார்ந்த கதைகளில் அவ்வளவாக மாற்றமில்லை.

யேமனிலிருந்து சில கிலோமீட்டர் தொலைவிலிருக்கும் பாலைவனப்பிரதேசத்தில் நமக்கு ஒரு மிகவும் பழமையான மக்கள் அதிகம் ஆக்கிரமிக்காத பகுதியில் கோட்டைகளும் அதைச்சுற்றிலும் பசுமையான பள்ளத்தாக்கையும் நமக்குக் காட்டுகிறார். தண்ணீரை தேக்கி வைக்க மிகப்பெரிய அணைகளையும் காட்டுகிறார். இந்த இடமே ஷீபாவின் பேரரசு இருந்த இடமாக இருக்கக்கூடும் என்று உணர்த்துகிறார்.

இந்த பயணத்தின் போது நம்மையும் அறியாமல் ஆப்பிரிகாவின் வரலாற்றிலிருந்தும், கிறிஸ்துவத்தின் வரலாற்றிலிருந்தும் சில பக்கங்கள் நம் மூளையில் பதியப்பட்டுவிடுகிறது. ஷீபாவின் அரசி உண்மையிலேயே இருந்திருக்க்க்கூடும் என்றுதான் தோன்றுகிறது. ஏறக்குறைய 3000 ஆண்டுகளுக்கு முன் கடல் பயணம் மேற்கொண்ட ஒரு பெண் அரசியைக் நினைக்கையில் ஆச்சரியம் மேலோங்குகிறது.

shangrila01இந்த தொன்மத்தைக் காட்டிலும் அதிகமான வியப்பை ஏற்படுத்தியது ஷாங்காரி-லாவின் தேடல். ஷாங்காரி-லா என்பது பூமியில் இருக்கும் சொர்கத்தைக் குறிக்கிறது. பூமியில் சொர்கமா ? தொன்மவியலின் படி பூமி பேராசை, பொறாமை, வன்முறை போன்ற தீய சக்திகளின் பிடியில் ஆட்பட்டு அழியும் தருவாயில் பூமியை புதிதாக தோற்றுவிக்கத் தேவையான அணைத்து அறிவுடனும் செல்வத்துடன் ஆற்றலுடனும் கூடிய மக்கள் ஒரு இடத்தில் மறைந்து வாழ்வதாகவும் அவர்கள் தேவைப்படும் போது தங்களை வெளிப்படுக்கொண்டு புதிய உலகை ஸ்ருஷ்டிப்பார்கள் என்பது நம்பிக்கை. அவர்கள் மறைந்து இருக்கும் இடமே ஷாங்காரி-லா. ஆனால் இந்த திபெத்திய வார்த்தைக்கு பூலோக சொர்கம் என்ற பொருளெல்லாம் இல்லை.

ஜேம்ஸ் ஹில்டன் என்ற நாவலாசிரியர் 1933 ஆம் ஆண்டு எழுதிய The Lost Horizon என்ற நாவலில் தான் ஷாங்காரி லா பற்றிய விவரணை வருகிறது. அந்த நாவலின் முதலே தான் ஷாங்காரி லா பற்றிய ஆர்வம் தற்காலிக சமுகத்தில் அதிகரித்த்து என்றால் மிகையல்ல. ஆனால் சில நூற்றாண்டுகளாகவே ஷாங்காரி லா பற்றிய கருத்தும் தொன்மமும் மனித சமுகத்தை ஆட்டிப் படைத்திருக்கிறது.

சரித்திரத்தில் மைகேல் வுட் ஷாங்கரி லாவைத் தேடிச் சென்ற முதல் மனிதர் கிடையாது. இவருக்கு முன்னரே பலர் ஷாங்காரிலாவை தேடிச் சென்று பல மாதிரியிலும் கண்டடைந்திருக்கின்றனர். ஆனால் எந்த ஒரு குறிப்பிட்ட இடத்திற்கும் ஷாங்கரி லா என்ற முழுமையான அடையாளத்தைக் கொடுக்க முடியவில்லை. அவரவரின் அனுபவத்தின் படி திபெத்தில் இருக்கும் பல பள்ளத்தாக்குகளில் ஏதோ ஒரு திபெத்திய பள்ளத்தாக்கு ஷாங்கரி லாவாக இருக்கக்கூடும் என்ற தோற்றமே அன்றி முடிவான கருத்து எதுவும் கிடையாது. ஆனால் திபெத்தில் வாழும் பூர்வீக குடிமக்கள் மலைகளுக்கு அப்பால் ஷாங்கரி லா இன்றும் இருக்கின்றது என்று தீவிரமாக நம்புகின்றனர்.

அக்பர் அவர் காலத்தில் கங்கை எங்கே தோன்றுகிறது என்பதை ஆராய ஒரு தனிப்படையை அமைத்து தேடச்சொன்ன போது அவர்கள் திரும்பி வந்து சொன்ன செய்தியானது ஆச்சரியமானது – இமயத்துக்கு அப்பால் ஒரு ராஜாங்கம் இருப்பதாகவும் அங்கே மக்கள் கூட்டமாக மிகவும் மகிழ்ச்சியாக வாழ்வதாகவும் சொன்னார்கள். அவர் அரசவை மக்கள் அந்த இடம் ”ஷம்பாலா” என்றும் மிகப்பழமை வாய்ந்த அரச வம்சம் அந்த இடத்தை அன்றும் ஆண்டுவந்ததாக சொன்னார்கள். அவர்களின் மத சடங்குகள் கிறிஸ்துவ மத சடங்குகளோடு ஒத்து இருப்பதாக சொன்ன செய்தி, அக்பரின் அவைக்கு வந்த போர்துகிஸ்ய விருந்தினர்களுக்கு பேருவகையான செய்தியாக இருந்த்து. எங்கோ தொலைந்து போன கிருஸ்துவ மதத்தின் ஒரு கிளை அங்கே இருப்பதாக அவர்கள் தீவிரமாக நம்பினார்கள்.

அப்படி நம்பி அந்த கிருஸ்துவ மத கோட்பாடுகளை பரப்பவும் இமயமலைக்கு அப்பால் இருக்கும் அந்த உலகத்தைப் பார்க்கும் பொருட்டும் பயணம் மேற்கொண்டவர் அண்டோனியோ டி அண்ட்ரேட் (Antonio de Andrade) என்ற போர்த்கீஸிய மத போதகர். அக்பரின் காலத்தில் இயேசு சபையினர் கிருஸ்துவ மதத்தை இந்தியாவில் பரப்பும் பொருட்டு அக்பரை மத மாற்றம் செய்ய இந்தியாவிற்கு வந்தனர். (இது குறித்த அதிக குறிப்புகள் லாரன்ஸ் பின்யான் (Laurence Binyon) எழுதிய அக்பர் என்ற சரிதையில் கிடைக்கின்றது – இந்த புத்தகம் தமிழிலும் சரவணன் என்பவரால் மொழி பெயர்க்கப்பட்டிருக்கின்றது.) அப்படி வந்தவர்களில் ஒருவர் தான் அண்டோனியோ. இவரே இமயமலையைத் தாண்டி திபெத்திய பள்ளத்தாக்குகளுக்குச் சென்ற முதல் மேற்கத்தியர் என்று சொல்லலாம். இவர் “The discovery of Tibet” என்ற மிகச்சிறந்த பயணக்கட்டுரையை எழுதி இருக்கிறார். இதுவே மைக்கேலின் பயணத்திற்கு பெரும் உதவியாக இருக்கிறது.

மைக்கேல், அண்டோனியோ சென்ற பாதையிலே பயணிக்கிறார். அவரின் குறிக்கோளும் குக் (Guge) என்ற அரச வம்சம் தஞ்சம் புகுந்த ஒரு ஸாபரங் (Tsaparang) பள்ளத்தாக்கிலேயே முடிகிறது. ஆனால் இந்த இலக்கை நோக்கி அவர் மேற்கொண்ட பயணம் மிகவும் சிலிர்ப்பானதாக அமைகிறது. உலகத்தின் மையம் என்று கருதப்படும் ப்ளிங்கு குன்று போல் காட்சி தரும் கைலாய மலையை நமக்கு காட்டுகிறார். அதன் அடியில் கடல் போல பெருகி நிற்கும் மானஸரோவர் ஏரியை காட்டுகிறார்.

அவரது பயனத்தின் முதல் படியாக ஹரித்வார் சென்று பின்னர் வளைந்து நெளிந்து செல்லும் ஆபத்தான இமய மலையின் அடிவார மலைப்பாதை வழியாக கங்கையின் வழியை பின்பற்றி செல்கிறார். பத்ரிநாத் வழியாக இந்தியாவின் கடைசி கிராமமான மானாவை அடைகிறார். அங்கிருக்கும் மானஸ் கனவாய் மூடப்பட்டிருந்த காரணத்தால் அங்கிருந்து நேராக செல்ல முடியாமல் சுற்றுப் பாதையில் பயணிக்கிறார். நேபாளம் சென்று அங்கிருந்து திபெத்திற்கு செல்ல முயல்கிறார். ஆனால் இந்த பயணம் எதற்கு – ஷம்பாலாவை அடைய.

ஷம்பாலா என்பது பண்டைய திபெத்திய அரசர்களின் ராஜ்ஜியம். அந்த அரசர்கள் காலசக்கர தந்திரத்தை பழகியதாக குறிப்புகள் இருக்கின்றன. இமயமலையை தாண்டி பனிமலைகள் சூழ்ந்த ஒரு பள்ளத்தாக்கு இருப்பதாகவும் அங்கு இருக்கும் பளிங்கு போன்ற ஒரு மலையே ஷம்பாலாவின் நுழைவாயிலாகவும் குறிக்கப்பட்டிருக்கிறது. அந்த ஷம்பாலாவில் மக்கள் அனைவரும் சந்தோஷமாகவும், பேரறிவோடும் வாழ்வதாகவும் குறிப்புகள் இருப்பதாகவும் அதை தேடியே செல்வது மைக்கேலின் கருத்தாகவும் அமைகிறது.

இதில் குறிப்பிடப்பட்டிருக்கும் அந்த பளிங்கு மலை கைலாய மலையே. இந்து மத நம்பிக்கையிலும் கைலாயமே ஈஸ்வரன் வாழும் இடமாக குறிக்கப்படுவதால் ஆர்வம் தொற்றிக் கொள்கிறது. ஏதோ ஒரு உண்மை குறியீடாகவோ அல்லது கருத்தாகவோ சொல்லப்படுகிறது. அது என்ன என்று மனிதனின் அறிவிற்கு எட்டவில்லை. சரித்திரம் நம்மை உள்வாங்கிக் கொள்கிறது. அது மறைத்து வைத்திருக்கும் மர்மங்களைக் கண்டு சற்றே அச்சம் ஏற்படுகிறது.

மைக்கேல் தன் தொடரும் பயணத்தில் உலகின் எல்லையில் இருக்கும் கிரமங்கள் வழியாக நம்மை கூட்டிச் செல்கிறார் – மின்சாரம், தொலைதொடர்பு வசதியற்ற கிராமங்கள். ஆனால் போகும் வழியெல்லாம் விருந்தோம்பலை தவறாத கிராமங்கள். அவர்களின் உதவியால் கைலாயத்தின் அடிவாரத்தை அடைந்து ஆள் அரவமற்ற கைலாயத்தையும் மானஸரோவரையும் காட்டும் போது சிலிர்ப்பாக இருக்கிறது. இதுவரை யாருமே ஏறியிராத கைலாயத்தை சுற்றி இருக்கும் வெந்நீர் ஊற்றில் இளைப்பாறுகிறார் மைக்கேல். நினைத்துப் பாருங்கள் – பல ஆயிரம் அடி உயரத்தில் ஆள் அரவமற்ற பனி மலைகள் சூழ்ந்த ஒரு தனி இடத்தில் இயற்கையாகத் தோன்றிய வெந்நீர் ஊற்று – பூலோக சொர்கம்.

இங்கிருந்து பயணித்து ஆண்டோனியோ அடைந்த ஸாபரங்க்-ஐ அடைகின்றனர். இந்த இடம் தாம் திபெத்திய அரச வம்சங்களில் ஒன்றான குக் அரச வம்சத்தின் தலை நகரம். இந்த இடம் ஷம்பாலா பற்றிய எந்த விதமான குறிப்புகளும் தோன்றுவதற்கு முன் குக் அரச வம்சத்தினரால் உருவாக்கப்பட்டதென்றும் பின்னர் கிருஸ்தவ மத்ததினரை பிரசாரம் செய்ய அனுமதித்த்தால் கோபம் கொண்ட அண்டை நாடான லடாக் மன்னர் போர் தொடுத்ததால் ஸாபரங் அழிவை சந்திக்க நேரிட்டதென்றும் குறிப்பிடுகிறார்.

பல்வேறு மலைகுன்றுகளுக்கு மத்தியில் உலகத்தவர்களின் பார்வையில் படாதவாறு அமைக்கப்பட்டிருக்கும் ஸாபரங் ஷாங்காரி-லா பற்றிய விவரணைகளுடன் சற்றே பொருந்துகிறது. ஆனால் இது தான் அந்த புனித பூமியா ? தெரியாது. காலம் மறைத்து வைத்து இருக்கும் ரஹஸ்யங்களைப் பார்க்கும் ஆச்சரியத்தைக் காட்டிலும் மிரட்சியே ஏற்படுகிறது. எங்கும் தொலைதொடர்பு, சுருங்கிய உலகம் என்று நாம் பேசிக் கொண்டிருக்கும் போது ஆள் அரவமற்ற, பாதைகள் அற்ற, நவின வசதிகள் அற்ற ஒரு இடம் இந்த உலகத்தில் இன்னும் கவர்ச்சியான கன்னிப்பெண்ணைப் போல உயிர்ப்போடு இருக்கிறது. அது வேறு ஒரு உலகத்திற்கு நம்மை இழுத்துச் செல்கிறது. அந்த உலகம் நாம் வாழும் உலகம் இல்லை. அங்கே போட்டி, பொறாமை சூது வஞ்சகம் என்று எதுவுமே இல்லை. இயற்கை மட்டும் சர்வ வியாபியாக் இருக்கிறது. எங்கு பார்த்தாலும் பூமி பிரபஞ்சம் தோன்றிய காலத்திலிருந்த்து போலவே இருக்கிறது. மனிதனின் அடையாளம் எங்குமே இல்லை.

இந்த இடத்தில் பல் நூறு ஆண்டுகளுக்கு முன் ஒரு அரசாங்கமே நடந்திருக்கின்றது என்னும் செய்தி – மனிதன் தமக்குள் உறவாடும் பொருட்டு மனிதன் இயற்கையோடு ஒன்றுதலை கைவிட்டிருக்கிறான் என்று புலப்படுகிறது. மனிதனைக் காட்டிலும் சக்தி வாய்ந்த இயற்கை மனிதன் ஆடிக் களைக்கட்டும் என்று காத்திருக்கிறது போலும். இயற்கைக்கு திரும்புதல் என்பது சர்வ நிச்சயமான செயலாக மாறக்கூடும். மைக்கேல் இறுதியாக சொல்லும் போது ஷாங்காரி-லா என்பது நமது கையில்தான் இருக்கிறது அதை உருவாக்குவதும் சிதைத்தலும் நம் பொறுப்பே என்கிறார் – சத்தியம்.

15 Replies to “தொன்மங்களையும் நாயகர்களையும் தேடி…”

  1. “அக்பரின் காலத்தில் இயேசு சபையினர் கிருஸ்துவ மதத்தை இந்தியாவில் பரப்பும் பொருட்டு அக்பரை மத மாற்றம் செய்ய இந்தியாவிற்கு வந்தனர். (இது குறித்த அதிக குறிப்புகள் ராபர்ட் பின்யான் எழுதிய அக்பர் என்ற சரிதையில் கிடைக்கின்றது – இந்த புத்தகம் தமிழிலும் சரவணன் என்பவரால் மொழி பெயர்க்கப்பட்டிருக்கின்றது.) அப்படி வந்தவர்களில் ஒருவர் தான் அண்டோனியோ.”

    ஓ, அப்பவே வந்தாச்சா அண்டோனியோ !!

    வரலாற்றுப் புதிர்கள் குறித்த அருமையான கட்டுரை. ஐயம் என்னவெனில், பிரபலப்படுத்தப்படுகிற இதுபோன்ற அனைத்து வரலாற்று மர்மங்களும் எதனால் கிருத்துவ புராணங்களை உண்மையென நம்ப வைக்க முயலுகின்றன?

    எதனால், திருநாவுக்கரசரும், ஔவையாரும், அகத்தியரும் வரலாற்றுப் புதிர்களாக, ஆராயப்படவேண்டிய வாழ்க்கைகளாகத் தெரியவில்லை?

    சங்கப் பலகையைத் தேடி ஏன் சங்கம் வளர்த்த தமிழர்கள் பயணிக்கவில்லை?

  2. நல்ல கட்டுரை.

    இந்தப் படங்கள் எங்குக் கிடைக்கும்? அது பற்றிய தகவல்கள் இருந்தாலும் தரவும். நன்றி.

  3. Krishnan,

    Sorry for my comments. I feel this article is more appropriate in vatican.org or howtochristianiaze.org.

    ..எதனால், திருநாவுக்கரசரும், ஔவையாரும், அகத்தியரும் வரலாற்றுப் புதிர்களாக, ஆராயப்படவேண்டிய வாழ்க்கைகளாகத் தெரியவில்லை?

    சங்கப் பலகையைத் தேடி ஏன் சங்கம் வளர்த்த தமிழர்கள் பயணிக்கவில்லை?..

    Good question.. There could also be a documentary from Vatican which can say SOMA plant can be found in some remote part of Mangolia and hence Hinduism came to India from Mangolia..

    Regards
    S Baskar

  4. இந்தியாவில் Saregama நிறுவனம் விநியோகிக்கிறார்கள். விலை 300-400 வரை இருக்கலாம் என்று நினைக்கிறேன். வாடகைக்கு எடுத்துப் பார்க்க வேண்டுமென்றால் Tic Tac-இல் (சென்னையில்) இருக்கிறது.

  5. நல்ல கட்டுரை. ஆனால் இது தமிழ் இந்துவிற்கு ஏற்ற கட்டுரை அல்ல. சந்திரசேகர் கிருஷ்ணன் அப்பாவியாக எழுதியிருக்கிறார். கிறிஸ்துவ மதமே 300 ஆண்டில்தான் கான்ஸ்டாண்டின் மன்னனால் தன் ஆட்சியை ஒற்றுமையாக வைப்பதற்காக உருவாக்கப் பட்ட ஒரு அரசியல் மதம் தான். பிற மதங்களில் உள்ள உருப்படியான விஷயங்கள் பலவற்றையும், பாகன் மத நம்பிக்கைகள் சிலவற்றையும் சேர்த்து பைபிள் என்று ஒரு கட்டுக்கதையை உருவாக்கி இன்று உலகத்தையே அடிமையாக்கி வருகிறார்கள். எங்கே இந்த மதத்திற்கு ஆயிரம் ஆண்டும் தொன்மை இல்லையே என்று சொல்லி விடுவார்களோ என்பதற்காக இப்படி எல்லாம் டாக்குமெண்டரிகள் எடுத்து மக்களிடம் கிறிஸ்துவத்திற்கு பல்லாயிரக்கணக்கான ஆண்டு தொன்மை இருக்கிறது என்று நம்ப வைக்க எடுக்கப் பட்ட ஒரு டுபாக்கூர் முயற்சியே இந்த டாக்குமெண்டரிகள். நிறைய காசு இருக்கிறது. டெக்னிக்கலாகவும், பிரமிப்பான இடங்களையும் காண்பிப்பது இவர்களுக்குப் பெரிது அல்ல. ஒரு சந்திரசேகரன் கிருஷ்ணனை அதற்குப் பின்னால் கிறிஸ்துவ மத தொன்மம் இருக்கிறது என்று நம்ப வைத்து விட்டார்கள் அல்லவா அதுதான் அதன் வெற்றியே. இப்படி கிறிஸ்துவ மதத்தை உயர்த்தும் நோக்கத்துடன் நுட்பமான அரசியலுடன் எடுக்கப் பட்ட டாக்குமெண்டரிகளை எப்படி தமிழ் இந்து ஆசிரியர் குழு அனுமதித்தது என்று ஆச்சரியமாக உள்ளது.

    ஷாங்கரிலா குறித்த அற்புதமான அழகான வர்ணணனையை ஜெயமோகனது பனி மனிதன் நாவலில் படிக்கலாம்.

  6. வணக்கம்,

    ஒன்று மட்டும் நிச்சயமாக அறிய முடிகிறது, எப்பாடு பட்டாவது தன்னிடம் இருக்கும் தத்துவக் குறைபாடுகளை இந்து தர்மத்தின் மீது தனது முத்திரையை குத்தி ஈடுகட்டி உலகை வளைத்து விடலாம் என்பதுவே கிறிஸ்துவத்தின் உள்நோக்கம் என்பது வெட்ட வெளிச்சமாகிறது.

    வேதங்களை உதாரணம் காட்டினார்கள், திருவள்ளுவர், மாணிக்க வாசகர், என்று ஒரு பட்டியலில் பல இந்து மகான்களின் பெயர்களை எழுதி அத்துனை பெரும் கிறிஸ்துவத்தால் தான் மோட்சம் பெற்றதாக ஒரு கட்டுக்கதை விட்டார்கள்.

    இப்போது அக்பரின் தேடல் குழு கங்கையை இமயத்துக்கு தேடப்போய் அங்கே பழமை வாய்ந்த கிறிஸ்துவ வழிபாடு சார்ந்த வழிப்பாட்டு கூட்டம், மீண்டும் மறுபடி அதை நோக்கி பயணம், கைலாய தரிசனம், அதன் பின்னணியில் அந்த மர்ம நபர்களின் வாழ்க்கை, இப்படி கொஞ்சம் கொஞ்சமாக கைலாயமும் இயேசுவின் பேரில் பட்டா போடப் படுகிறதா?

    இந்த குள்ளநரித்தனத்தை பல நூற்றாண்டுகள் ஆன பின்னரும் மேற்கத்தியர் விட்டபாடில்லை . நமது பல பாரம்பரியங்கள், பல உலக சரித்திரங்கள் போன்றவற்றை பெரும்பாலும் மேற்கத்தியவரே ஆராய்கின்றனர், அவர்களின் பல முடிவுகள் மறு விசாரணை செய்யப்பட வேண்டி உள்ளது என நினைக்கிறேன் .அவர்களின் நோக்கமே உலகத்தின் அனைத்து கலாச்சாரமும் கிறிஸ்துவுக்கு பின்னால் என்பதாக இருக்கவேண்டும் என்பதில் வெறித்தனமாக உள்ளதை அறிய முடிகிறது.

  7. அநாநி,
    ஒரு விஷயம் கிறிஸ்துவத்திற்கு எதிராக இருந்தால், அது ஒரு பெரிய கண்டுபிடிப்பு. ஆனால் ஒன்று அதற்கு ஆதரவாக இருந்தால் அது ஒரு டுபாகூர் முயர்ச்சி. பேஷ் பேஷ் ரொம்ப நன்னா இருக்கு.

    அன்புடன்,
    அசோக்

  8. Dear Mr. Baskar,

    You said:

    “I feel this article is more appropriate in vatican.org or howtochristianiaze.org. ”

    My response:

    I respect your values, but I beg to differ from you. The author has not praised anything christian, but only revealed what they do.

    If he had not written about it, then we would not have known about it. Knowledge seeking is the primary pillar of Hinduism.

    Our gods do not forbid us from the fruit of knowledge, and call us sinners. For us, it is a sin not to eat the fruit of knowledge.

    May many such articles open doors of knowledge to us !! May the author who wrote such a beautiful article live long in prosperity !!

  9. Dear Baskar,

    //இப்போது அக்பரின் தேடல் குழு கங்கையை இமயத்துக்கு தேடப்போய் அங்கே பழமை வாய்ந்த கிறிஸ்துவ வழிபாடு சார்ந்த வழிப்பாட்டு கூட்டம், மீண்டும் மறுபடி அதை நோக்கி பயணம், கைலாய தரிசனம், அதன் பின்னணியில் அந்த மர்ம நபர்களின் வாழ்க்கை, இப்படி கொஞ்சம் கொஞ்சமாக கைலாயமும் இயேசுவின் பேரில் பட்டா போடப் படுகிறதா?//

    Yes.

    This is because the bible tells its purblind followers that the entire material wealth in this world are created for the bible thumpers’ consumption. It says that those who do not follow bible also are for the Bible bangers to bang and destroy.

    That is the theological rhetoric that makes the Europeans to swindle the earth – either it was the yesteryears colonization or the contemporary corporations.

    Their motto with the human beings is “All your base are belong to us”

    But, only the Hindus respond “Resistance to Dharma is futile”

  10. Dear Ganapathy,

    I have not written against knowledge seeking. My only worry is the western media/ evangelists are capable of creating a Myth into Scientific theory. We all know about Robert D Nobili..

    I have seen a documentary in UK where they were tracing the roots of Hinduism. The narator interviewed some of the Tea Shop owners of Peshawar to understand what is Soma. These tea shop owners shown him some plant roots and told that it is not growing anymore in Peshawar. The narrator went to some part of Kazakstan interviewed some families and from them he concludes that Soma has/had grown in Kazakastan and hence Hinduism came from kazakstan. This documentary was not shown in some obsure channel.

    I am not a fanatic but I do not have any faith on the impartiality of the Western Media. In most of the books either fiction or non fiction written by western authors ( I am talking about commonly read books ) you could see they attribute every part of Yoga to Buddhism and not Hinduism.

    We also know how they want to fit every thing just 2000 years before Christs birth. So for them Budhism nicely fits into their timeline. They could not even understand , even the best of the western critics , that Budhism is just a offshoot of Hinduism.

    Regards
    S Baskar

  11. BBC pondrana என்றுமே கிறிஸ்துவrgalukகே கைkகூலிகளாகவே செயல்பட்டு வருகின்றன. மலைகளும் நதிகளும் மரம் செடி கொடிகளும் ஹிந்துக்களால் மட்டிமே புனிதங்கLaaகப் போற்றப்படுகின்றன.

  12. இந்த ஆவண படங்களின் பெயர்களை தர முடியுமா?

    நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *