கரிசன அரசு – ஆபத்தான மாநிலம் – பரிதாப மக்கள்: 1

தி. மு. க அரசின் கரிசனம்

coimbatore_blasts_01
மனிதம்’, ’மனிதாபிமானம்’ மற்றும் ‘மனித உரிமை’ ஆகியவற்றின் மீது நம் தமிழக முதல்வர் கொண்டுள்ள அக்கறை, ஒப்பிடுதலுக்கு அப்பாற்பட்டது. தற்போதுள்ள வேறு எந்த அரசியல் தலைவரும் இவ்விஷயத்தில் அவரை நெருங்க முடியாது. தமிழக அரசியலை அவதானித்து வருபவர்கள் சந்தனக் கொள்ளைக்காரனும், கொலைகாரனும் ஆன வீரப்பனை அவர் எந்த அளவு மனிதாபிமானத்துடன் நடத்தினார் என்பதை மறந்திருக்க மாட்டார்கள். அவனை ‘வீரப்பர்’ என்று மரியாதையாக அழைத்து தன் மனிதாபிமானத்தைக் காட்டிக் கொண்டவர். அது மட்டுமா? ’தமிழ்ச்சேவை’ மீது கொண்ட பற்றின் காரணமாக, ”தமிழுக்காகவும் தமிழ்நாட்டிற்காகவும் பாடுபடும் தீவிரவாதிகளையும், அவர்களின் தீவிரவாதத்தையும் நான் வரவேற்கவே செய்வேன்” என்று தன்னுடைய தமிழ் பற்றையும் காட்டிக்கொண்டவர் நம் முதல்வர். அப்படித்தானே மென்மையாகவும், பரிவுடனும், வீரப்பன் போன்ற தீவிரவாதிகளையும் அவர்களின் தீவிரவாதத்தையும் வளர்த்தார் தன் முந்தைய ஆட்சிகளில். சமத்துவ மற்றும் சமூக நீதிகளின் காவலனாகத் தன்னை முன்னிறுத்திக் கொண்டிருக்கும் அவர், தமிழ் தீவிரவாதிகளிடம் காண்பித்த அக்கறையையும், அன்பையும், மனிதாபிமானத்தையும், தற்போது இஸ்லாமிய பயங்கரவாதிகளிடமும் காண்பித்துள்ளார்.

கலைஞரின் அன்பு, அக்கறை போன்ற குணங்களும், மனிதாபிமானமும், அவரை உருவாக்கிய தலைவர் அண்ணாதுரையின் பிறந்தநாளில் உச்சத்திற்கு வரும்! அப்போது தமிழகத்துச் சிறைச்சாலைகளில் சௌக்கியமாக இருந்து வரும் ஆயுள்கைதிகளையும் மற்ற பயங்கரக் குற்றவாளிகளையும், நீதிமன்றங்கள் அவர்களுக்கு அளித்த தண்டனைகளை ரத்து செய்து விடுதலை அளித்து, மனு நீதிச் சோழனாகத் தன்னை உலகிற்கு முன்னிறுத்திக் காண்பிப்பார். அவர் தன்னுடைய முந்தைய ஆட்சிகாலத்தில் கடைப்பிடித்த இப்பழக்கம், 2006-ல் அவர் ஆட்சிக்கு வந்ததும் மீண்டும் தொடர்ந்தது. 2006-ல் 540 ஆயுள்கைதிகளையும், 2007-ல் 200க்கும் மேற்பட்ட ஆயுள்கைதிகளையும், அண்ணாதுரை பிறந்த நாளில் விடுதலை செய்த அவரின் மனிதாபிமானம், 15-09-2008-ல் அண்ணாதுரையின் நூறாவது பிறந்த தினத்தன்று, உச்சத்தையடைந்து 1400 கைதிகளை விடுதலை செய்து தமிழகத்தின் சட்ட ஒழுங்கைக் கேவலமாக்கி, தமிழக மக்களின் பாதுகாப்பைக் கேள்விக்குறியாக்கியது. ஜனதா கட்சியின் தலைவர் டாக்டர் சுப்ரமணியம் ஸ்வாமி அதற்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தாலும், மிகவும் இழுத்தடிக்ககூடிய சட்ட மற்றும் நீதிமன்ற முறைகளினால் தாமதமாகிப் பிரயோசனமில்லாமல் போனது.

ஆயுள் கைதிகளின் விடுதலைக்கேற்றவாறு, தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் சீரழிந்துப் போனதைக் கண்கூடாகப் பார்த்துக் கொண்டிருக்கிறோம். இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால், இம்மாதிரியாக தண்டனைக் காலம் முடிவதற்குள் விடுதலை செய்வதற்கு நம் அரசியல் அமைப்புச் சட்டம் அனுமதி அளிக்கவில்லை என்பதுதான். மேலும், இச்செயல் நீதியின் பாதையில் குறுக்கிடுவதும், நீதிமன்றங்களை அவமதிப்பதும் ஆகும். இச்செயல் இந்திய ஜனநாயகத்திற்கு ஏற்பட்ட ஒரு அவமானம் என்றால் மிகையாகாது.

அதிர்ஷ்டவசமாக, வீரப்பன் கும்பல் பயங்கரம், தமிழ் தீவிரவாதம், ஆகியவை தமிழகத்தில் சரித்திரமாகிப் போயின. ஆனால் இஸ்லாமிய பயங்கரவாதம் இன்னும் உயிருடன் இயங்கிக்கொண்டுதான் இருக்கிறது. இவ்வாண்டு அண்ணாதுரையின் 101-வது பிறந்த தினத்தின்போது, 1998 வருடத்திய கோவை குண்டு வெடிப்பில் ஈடுபட்ட 10 ‘அல் உம்மா’ பயங்கரவாதிகளை விடுதலை செய்ததன் மூலம் தி. மு. க அரசு இஸ்லாமிய பயங்கரவாதத்தின் வளர்ச்சிக்குத் தன்னால் முடிந்த உதவியைச் செய்திருக்கிறது என்றே சொல்லவேண்டும். சென்ற வருடம் வரை முதல்வர் கருணாநிதி விடுதலை அளிக்கப்படும் ஆயுள் கைதிகளின் பட்டியலில் பயங்கரவாதிகளை சேர்க்காமல் இருந்து வந்தார். சென்ற ஆண்டு, கோவைக் குண்டு வெடிப்பில் ஈடுபட்டுச் சிறையில் இருக்கும் பயங்கரவாதிகளின் குடும்பப் பெண்கள் அவர்களை விடுதலை செய்யக்கோரி ஆர்பாட்டம் செய்த போது கூட தி. மு. க அரசு கண்டு கொள்ளவில்லை. அவர்களைப் பட்டியலில் சேர்த்தால் மற்ற 1400 கைதிகளின் விடுதலை பிரச்சனையாகிவிடும் என்ற எண்ணம் கூட காரணமாக இருக்கலாம்.

சென்ற ஆண்டு அவர்களுக்கு உதவ முடியவில்லை என்கிற காரணத்தாலோ என்னவோ இந்த ஆண்டு அவர்களை விடுதலை செய்து, சமத்துவத்தையும் சமூக நீதியையும் நிலைநாட்டியுள்ளது தி. மு. க அரசு. மேலும் இஸ்லாமிய பயங்கரவாதிகளுக்குப் ‘புண்னியம்’ செய்து தமிழக மக்களின் பாவத்தையும் சம்பாதித்துக்கொண்டுள்ளது தி.மு.க அரசு. அரசாணைப்படி, அஷ்ரஃப் ஷேய்க், ஷாஹுல் ஹமீத், மொஹம்மத் ரஃபி, அப்பாஸ் அந்துல் ஜாஃபர், அப்துல் ஃபரூக், அப்துல் ரெஹ்மான், அப்துல் ரஹூப், ஃபக்ருதின் அலி அஹமது, அப்துல் வஹாப் மற்றும் மொஹம்மது இப்ராஹிம் ஆகியோருக்கு 15-09-09 அன்று விடுதலை கிடைத்தது. இவர்களில் அப்துல் வஹாப் மேலும் இரண்டு வழக்குகளில் சிக்கியுள்ளதால் அவரைத் தவிர்த்து மற்றவர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

தி. மு. க அரசின் முன்யோசனையற்ற இந்தச் செயலால் மாநிலப் பாதுகாப்பு ஆபத்திற்கு உள்ளாகியிருக்கும் நிலையில், இஸ்லாமியப் பயங்கரவாதம் தமிழகத்தில் எந்த அளவிற்கு வளர்ந்துள்ளது என்பதைத் தெரிந்துகொள்வது மிகவும் இன்றியமையாதது.

தமிழகத்தில் ஜிகாதின் ஆரம்பம்

”இந்திய இஸ்லாமிய மாணவர் இயக்கம்” நம் நாட்டில் பல மாநிலங்களில் பல பெயர்களில் இயங்கிக் கொண்டிருந்தபோது, தமிழகத்தில் பழனி பாபா என்பவர் “ஜிகாத் கமிட்டி” என்ற இயக்கத்தையும், எஸ். எ. பாஷா என்பவர் “அல் உம்மா” இயக்கத்தையும் தொடங்கி, மாநிலத்தில் ஆங்காங்கே மதக்கலவரங்களை நிகழ்த்தி, அவற்றின் முடிவில் கொலைகளையும் செய்து வந்தனர். 1994 அக்டோபர் மாதத்தில் இந்து முன்னணி தலைவர்களுள் ஒருவரான ராஜகோபால் கொலை செய்யப்பட்டது, இந்த இயக்கங்கள் செய்த பயங்கரவாதச் செயல்களுள் ஒன்றாகும்.

மாறி மாறி நடைபெற்ற கழகங்களின் ஆட்சிகள் இவ்வியக்கங்களின் வளர்ச்சியை கட்டுப்படுத்த தவறியதால், இவைப் பல சிறிய மதக் கலவரங்களில் ஈடுபட்டு, அவற்றின் மூலம் துணிவு பெற்று, ஒரு பெரிய பயங்கரவாதச் செயலாக 1993 நவம்பரில் சென்னை ஆர். எஸ். எஸ் அலுவலகத்தில் குண்டு வெடிப்பு நிகழ்த்தி 11 ஸ்வயம் சேவகர்களைக் கொலை செய்தன. அதுவரையில், இஸ்லாமிய பயங்கரவாதத்தின் முழு வீச்சையும், இவ்வியக்கங்களினால் ஏற்பட்டிருந்த பாதுகாப்புப் பிரச்சனைகளையும் அப்போதைய அ.தி.மு.க அரசு உணரவில்லை. ஆனால் சுதாரித்துக்கொண்டு உடனே நடவடிக்கையெடுத்து அல் உம்மா தலைவன் பாஷாவையும் மற்றும் பதினைந்து பயங்கரவாதிகளையும் கைது செய்தது அ.தி.மு.க அரசு.

பாஷாவும் அவன் ஆட்களும், கோவையில் “கோட்டைமேடு” என்னும் பகுதியைச் சேர்ந்தவர்கள். இப்பகுதியை மையமாகக் கொண்டே தமிழகத்தில் இஸ்லாமியப் பயங்கரவாதம் வளர்ந்தது என்று சொல்லலாம். ஆனால் ஆர்.எஸ்.எஸ் அலுவலகக் குண்டு வெடிப்புக்குப் பின்னர், அ.தி.மு.க ஆட்சியில், இப்பகுதி காவல் துறையின் பூரணக் கட்டுப்பாட்டிலும், 24 மனி நேரக் கண்காணிப்பிலும் வந்தது. கோட்டைமேடு, உக்கடம் போன்ற முஸ்லிம் மக்கள் அதிகமாக வாழும் பகுதிகளில் காவல் துறை ஐந்து தடை மையங்களை (check posts) அமைத்தது.

இதனிடையே, பழி தீர்க்கும் படலத்தில் பழனி பாபா கொலை செய்யப்பட்ட பிறகு, ஜிகாத் கமிட்டி சிதறுண்டு போனது. பின்னர் 1995-ல், பாஷாவுடன் ஏற்பட்ட மனமுறிவின் காரணமாக அல் உம்மாவிலிருந்து வெளிவந்த ஹைதர் அலி என்பவரால், “தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம்” தொடங்கப்பட்டது. ஜிகாத் கமிட்டியில் பழனி பாபாவுடன் இயங்கியதாகச் சொல்லப்பட்ட ஹைதர் அலி த.மு.மு.கவின் பொதுச் செயலாளராக இப்போது இயங்கி வருகிறார்.

பின்னர் வரப்போகும் பயங்கரங்களுக்கு முன்னோடியாக, 1995 ஜூலை 4 அன்று, முத்துகிருஷ்ணன் என்கிற தலித் இந்து இயக்கவாதிக்கு ஒரு வெடிகுண்டு பார்சல் அனுப்பப்பட்டு, அதைத் திறக்கப்போய் அவரின் அப்பாவி மனைவி தங்கம் இறந்து போனார். இச்சம்பவத்தைத் தொடர்ந்து மயிலாடுதுறை பா.ஜ.க வைச்சேர்ந்த ஜெகவீரபாண்டியன் என்பவருக்கும் ஒரு பார்சல் அனுப்பபட்டது. விவரமாகச் சுதாரித்துக்கொண்ட அவர் பார்சலைத் திறக்க எத்தனிக்காமல் காவல்துறைக்குத் தகவல் அனுப்பியதால் உயிர் பிழைத்தார். இவ்விரண்டு சம்பவங்களையும் புலன் விச்ச்ரணை செய்த சி.பி.சி.ஐ.டி சிறப்புப் பிரிவு, ஹரூண் இஸ்மாயில், ரபாயீ, மொஹம்மது குத்புதீன், ராஜா ஹுசேய்ன், ஜாகீர் ஹுசேய்ன், ஜுபேர், அப்துல் அஜீஸ் ஆகியோரைக் கைது செய்தது. எட்டாவது பயங்கரவாதியான அபூபக்கர் சித்திக் மட்டும் தப்பிவிட்டான். ஜாமினில் வெளிவந்து ஆகஸ்டு 2005-ல் துபாய்க்குத் தப்பிப்போன ஹரூண் ரஷித் சமீபத்தில் 20 ஜனவரி 2009 அன்று பாங்காக் வழியாகச் சென்னை வந்தடைந்தபோது பிடிபட்டான்.

கோவை: ஜிகாதிகளின் தமிழக பலிகள் – மகனை இழந்த சோகம்

இஸ்லாமிய பயங்கரவாதத்திற்கு எதிரான தி. மு. க அரசின் பலவீனமான செயல்பாடு
(கோவை குண்டு வெடிப்பிற்கு முன்)

1996 தேர்தல் சமயம்: – கோவையில் தி. மு. க வேட்பாளர்களான சி. டி. தண்டபாணி (சட்டசபை) எம். ராமநாதன் (பாராளுமன்றம்) ஆகிய இருவரும், தங்களுக்கு வாக்களித்து வெற்றி பெறச்செய்தால் தி.மு.க அரசு அமைந்தவுடன், கோட்டைமேடு, உக்கடம் பகுதிகளில் உள்ள ஐந்து தடை மையங்களையும் அப்புறப்படுத்துவதாக, அப்பகுதிகளில் முஸ்லிம் மக்களிடையே பிரசாரம் செய்து உறுதியளித்தனர். வாக்குகள் எண்ணிக்கை நடந்து கொண்டிருந்தபோது, தி.மு.க வின் வெற்றி உறுதி செய்யப்படுவதற்கு முன்னரே, முஸ்லிம் இளைஞர்கள் ஐந்து தடை மையங்களையும் உடைத்து எறிந்தனர். அப்போது ஏற்பட்ட கலவரத்தில், காவலர் இருவர் கத்தியால் குத்தப்பட்டனர். (Ref: https://www.mrt-rrt.gov.au/docs/research/IND/rr/IND30613.pdf).

மே 18, 1996: – மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் குண்டு வெடித்தது; த.மு.மு.க தலைவர் நைனா முகம்மதுவும், தொண்டர்கள் சேட் சாஹிப், ராஜா ஹுசேன், ஃபக்ருதின் ஆகியோரும் கைது செய்யப் பட்டனர். (Ref: https://www.assembly.tn.gov.in/archive/Resumes/11assly/11_01.pdf).

1996 முடிவில்: – கோவைச் சிறைச்சாலை வார்டர் பூபாலன் இஸ்லாமியப் பயங்கரவாதிகளால் படுகொலை செய்யப்பட்டார். (Ref: https://tnpolice.gov.in/Wanted/Want9.html).

basha01ஜனவரி 1997:- சென்னை ஆர். எஸ். எஸ் அலுவலகக் குண்டு வெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட பாஷா மற்றும் பதினைந்து அல் உம்மா பயங்கரவாதிகளும் வெளிவந்தனர். (Ref: https://www.thehindu.com/fline/fl1505/15050170.htm).

ஃபிப்ரவரி 8, 1997: – தஞ்சாவூர் சாலியமங்கலம் அருகே ”மொகம்மதியா” அரிசி ஆலையில் குண்டு வெடித்தது; தஞ்சை நகர போலீசார் ஜெலடின் குச்சிகள், ஸல்ஃபர், அம்மோனியம் நைட்ரேட், நைட்ரிக் ஆஸிட், சல்ஃபுரிக் ஆஸிட், துப்பாக்கிகள், வெடிமருந்துகள், வெடிப்பொறிகள் ஆகியவை அடங்கிய பெரிய பார்சல்களை அரிசி ஆலையிலிருந்து கைப்பற்றினர். (Ref: https://www.thehindu.com/fline/fl1505/15050170.htm).

ஃபிப்ரவரி 10, 1997: – கோவையிலிருந்து சென்னை வந்த அம்மானுல்லா என்கிற பயங்கரவாதியிடமிருந்து 100 வெடிப்பொறிகள் அடங்கிய அட்டைப் பெட்டியை சென்னைப் போலீசார் கைப்பற்றி அவனையும் கைது செய்தனர். அதே தினத்தில், வெடிப்பொறிகள், ஒயர்கள், கடிகாரங்கள் ஆகியவற்றுடன் சைக்கிளில் சென்று கொண்டிருந்த ஒரு பயங்கரவாதியை புறநகர் போலீசார் தாம்பரத்தில் கைது செய்தனர். (Ref: ‘Front Line’ – March 7-20, 1998)

மார்ச்சு 11, 1997: – கொடுங்கையூர் என்ற இடத்தில் சென்னைப் போலீசார், ஆயுதங்கள், வெடிகுண்டுகள், வெடிப்பொறிகள், ஒயர்கள், பைப்புகள் ஆகியவற்றை அதிக அளவில் கைப்பற்றி, இரண்டு அல் உம்மா பயங்கரவாதிகளைக் கைது செய்தனர். அவர்களுள் ஒருவன் அல் உம்மா தலைவன் பாஷாவின் சகோதரன் மொகம்மது கான் ஆவான்.

செப்டம்பர் 18, 1997: – தென் தமிழகத்தில் ஐந்து இந்து இயக்கத் தொண்டர்கள் கொல்லப்பட்டனர். மூன்று இஸ்லாமியப் பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டனர். (Ref: https://www.satp.org/satporgtp/publication/faultlines/volume16/Article5.htm)

செப்டம்பர் 24, 1997: – நீதிமன்றக் காவலில் வைக்கப் பட்டிருந்த ஷேக் தவூத் முஸ்தஃபா, சிறைச்சாலையிலிருந்து நீதிமன்றம் அழைத்துச் செல்லும்போது காவலர்களிடமிருந்து தப்பினான். இவன் மீனாட்சி அம்மன் கோவில் குண்டு வெடிப்பிலும் சம்பந்தப்பட்டவன். (Ref: https://cbi.nic.in/wanted/chen44.htm).

நவம்பர் 29, 1997: – கோவையில் போக்குவரத்துக் காவலர் செல்வராஜ் அல் உம்மா பயங்கரவாதிகளால் பட்டப் பகலில் கடமையில் இருந்த போது படுகொலை செய்யப்பட்டார். அதனைத் தொடர்ந்த கலவரத்திலும், பின்னர் காவல் துறை மேற்கொண்ட நடவடிக்கையிலும், 17 முஸ்லிம்கள் இறந்தனர். (Ref: https://www.thehindu.com/fline/fl1425/14251120.htm).

டிசம்பர் 6, 1997: – சென்னை செண்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து கிளம்பும் சேரன் எக்ஸ்பிரஸ், பாண்டியன் எக்ஸ்பிரஸ், ஆலப்புழா எக்ஸ்பிரஸ் ஆகிய ரயில் வண்டிகளில், கேரளத்தைச் சேர்ந்த “இஸ்லாமியப் பாதுகாப்புப் படை” என்கிற இயக்கத்தைச் சேர்ந்த பயங்கரவாதிகள் வைத்த குண்டுகள் வெடித்ததில், 10 பயணிகள் கொல்லப்பட்டு, 70க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயம் அடைந்தனர். இஸ்லாமியப் பாதுகாப்புப் படைக்கும் அல் உம்மா இயக்கத்திற்கும் அப்துல் நாசர் மதானிக்கும் உள்ள தொடர்பு தெரியவந்தது. (Ref: https://tnpolice.gov.in/Wanted/Want3.html).

டிசம்பர் 9, 1997: – கோவைப் புறநகரில் ஒரு சைக்கிளில் வைத்திருந்த குண்டு வெடித்ததில் மூன்று பெண்கள் இறந்தனர். அப்துல் குவாயம், சுல்தான் நாசர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

ஜனவரி 10, 1998:- சென்னை அண்ணா மேம்பாலத்திற்கு கீழே, அமெரிக்க தூதரகத்திற்கு அருகே குண்டு வெடித்தது. (Ref: https://tnpolice.gov.in/Wanted/Want3.html).

வரிசைக் கிரமப்படி கோவைத் தொடர் குண்டு வெடிப்பின் வரலாறு

தி. மு. க அரசு காலத்தியது (1996 முதல் 2001 வரை)

  • ஜனவரி 31, 1998: – ஒரு பயங்கரவாதச் செயல் நிகழ வாய்ப்பிருப்பதாக மாநில உளவுத்துறை அரசாங்கத்திற்குத் தகவல் அளித்தது.ஃபிப்ரவரி 12, 1998: – தான் கொடுத்த தகவலை உறுதி செய்த மாநில உளவுத்துறை, பா. ஜ. க தலைவர் அத்வானியின் தமிழக விஜயத்தில் அவரின் தேர்தல் பிரசாரத்தின்போது பயங்கரவாதச் செயல் நடக்க முகாந்திரம் உள்ளதாக அரசாங்கத்திற்கு தகவல் அளித்தது.ஃபிப்ரவரி 14, 1998: – மாலை 3. 50 மனி முதல் 4. 30 மணி வரை 11 இடங்களில் 13 குண்டுகள் வெடித்ததில் 10 பெண்கள் 1 குழந்தை உள்ளிட்ட 45 பேர்கள் பரிதாபமாக இறந்தனர். அடுத்த சில தினங்களில் மேலும் சிலர் இறந்து மொத்தம் சாவு எண்ணிக்கை 59-ஆக உயர்ந்தது. படுகாயம் அடைந்தோரின் எண்ணிக்கை 200க்கும் மேல் போனது.ஃபிப்ரவரி 15, 1998: – இஸ்லாமிய பயங்கரவாதிகள் மறைந்து இருக்கும் இடங்களைப் போலீசார் நெருங்கிய சமயத்தில் அவர்கள் வைத்திருந்த குண்டுகளே வெடித்ததில் 6 அல் உம்மா பயங்கரவாதிகள் இறந்து போயினர்.ஃபிப்ரவரி 17 1998: – அல் அமீன் காலனியில் அல் உம்மா பயங்கரவாதிகள் 4 பேர் தங்கள் மறைவிடத்தில் குண்டு வெடித்ததில் இறந்தனர்.

    கோவை: ஜிகாதிகளின் தமிழக பலிகள் – சிதைந்த கனவுகள்

    பின் நிகழ்வுகள்: –

    அத்வானி அவர்களின் பிரசாரப் பாதையில் (அதாவது கோவை விமான நிலையத்திலிருந்து பொதுக் கூட்டம் நடக்கவிருந்த மேடை வரை – பீளமேடு, ரயில் நிலையம், ஆர். எஸ் புரம் என்று பல இடங்கள்) மாட்டு வண்டிகள், பழ வண்டிகள், இரு சக்கர வாகனங்கள், சைக்கிள்கள் ஆகியவற்றில் குண்டுகள் வைத்திருந்தனர் பயங்கரவாதிகள். ராணுவம், காவல் துறை, தேசியப் பாதுகாப்புப் படை ஆகியவை தொடர்ந்து பல நாட்கள் சல்லடை போட்டு சோதனை செய்ததில் வெடிக்காமல் இருந்த குண்டுகள் பல இடங்களில் இருக்க, அவற்றை செயல் இழக்கச் செய்தனர். ஆர். எஸ் புரம் லோகமான்ய திலகர் தெருவில், பிரபல அன்னபூர்ணா ஒட்டல் பின்புறம், ஒரு காரில் 70 கிலோ அளவிற்கு வெடிமருந்துகள் வைக்கப்பட்டிருந்தது. அவற்றை வெடிக்காமல் செயல் இழக்கச் செய்து அப்புறப்படுத்துவதற்கு வெடிகுண்டு நிபுணர்களும், காவல் துறையும் நான்கு நாட்கள் தொடர்ந்து பிரம்மப் பிராயத்தனம் செய்து வெற்றியடைந்தனர். அந்த நான்கு நாட்களும் கோவை நகர மக்கள் தூக்கம் இழந்து நிம்மதி இழந்து பெரும் துன்பத்திற்கு ஆளாயினர்.

    தொடர் குண்டுகள் வெடித்த அதே தினம் தி.மு.க அரசு ஜிகாத் கமிட்டி, அல் உம்மா ஆகிய பயங்கரவாத இயக்கங்களை தடை செய்தது மக்களின் கடுமையான விமரிசனத்திற்கு ஆளானது. கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் செய்கிறது அரசு என்று பலர் கருத்து தெரிவித்தனர். ஆர்.எஸ்.எஸ் அலுவலக குண்டு வெடிப்பில் கைது செய்யப்பட்ட பாஷா முதலிய பதினாறு பயங்கரவாதிகளை விடுதலை செய்திருக்கவிட்டால் இந்த மாதிரி குண்டு வெடிப்பு நடந்திருக்காது என்றும், உளவுத்துறை கொடுத்த தகவல்களின் பேரில் தீவிரப் பாதுகாப்பு நடவடிக்கை எடுக்காமலும் அரசு தவறிழைத்து விட்டது என்றும் மக்கள் கடுமையான குற்றச்சாட்டுகளை அரசின் மீது சுமத்தினர்.

    தொடர் குண்டு வெடிப்புகளைத் தொடர்ந்து காவல் துறை எடுத்த நடவடிகைகளில், பேரளவிலான ஜெலடின் குச்சிகள், வெடிமருந்துகள், வெடிப்பொறிகள், பெட்ரோல் குண்டுகள், பைப் குண்டுகள், கத்திகள், வாள்கள், கோடரிகள், அறிவாள்கள், ஒயர்கள், பாட்டரிகள், ஆகியவைக் கைப்பற்றப்பட்டன. அல் உம்மா தலைவன் பாஷாவும், அவன் கூட்டாளிகள் 12 பேரும் மற்றும் அல் உம்மா, ஜிகாத் கமிட்டி, த.மு.மு.க போன்ற இயக்கங்களைச் சேர்ந்த நூற்றுக்கும் அதிகமான பயங்கரவாதிகளும் கைது செய்யப்பட்டு கோவை மத்தியச் சிறையில் அடைக்கப் பட்டனர்.

    காவலர் செல்வராஜ் கொலைக்குப் பிறகு நடந்த துப்பாக்கிச் சூட்டில் இறந்த முஸ்லிம்களின் ஈமச்சடங்குகளை வீடியோ எடுத்து அரபு நாடுகளுக்கு அனுப்பி எதிர்கால ஜிகாதிற்காக நிதி திரட்டியதாக பத்திரிகை வட்டாரங்களில் அப்போது சொல்லப்பட்டன. கேரளாவை சேர்ந்த “இஸ்லாமிய சேவா சங்கம்” என்று ஆரம்பிக்கப்பட்டு பின்னர் ”மக்கள் ஜனநாயகக் கட்சி”யாக மாற்றப்பட்ட இயக்கத்தின் தலைவன் அப்துல் நாசர் மதானி, ஈ. கே. நாயனார் தலைமையிலான கம்யூனிச அரசாங்கத்தால் தமிழகக் காவல் துறையிடம் ஒப்படைக்கப்பட்டு கோவை சிறையில் அடைக்கப்பட்டான்.

    மார்ச்சு 2, 1998: – கோவை தொடர் குண்டு வெடிப்புகள், மற்றும் அதற்கு முன்னால் நடந்த குண்டு வெடிப்புகளின் புலன் விசாரணைகளை, மத்தியப் புலனாய்வுத் துறையிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் முன்னாள் முதல்வரும் அ.தி.மு.க தலைவியுமான செல்வி ஜெயலலிதா.

    செப்டம்பர் 28, 1998: – முதல் நிலைக் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

    மார்ச்சு 5, 1999: – இறுதிக் நிலைக் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

    ஏப்ரல் 2000: – சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப் பட்டன.

    மே 2000: – நவம்பர்-டிசம்பர் 2007-ல் நடந்த மதக் கலவரங்களை விசாரணை செய்த நீதிபதி கோகுலகிருஷ்ணன் தலைமையிலான விசாரணைக் கமிஷன் தன் அறிக்கையை அரசாங்கத்திடம் அளித்தது.

    கோவை: மகனை இழந்த தாயை பார்த்து சிரித்த கொலைகார ஜிகாதி வெறியர்கள்

    அ. தி. மு. க அரசு காலத்தியது (2001 முதல் 2006 வரை)

    அக்டோபர் 2001: – குற்றம் சாட்டப்பட்டவர்கள் ஒவ்வொருவர் மீதும் குறிப்பிட்ட குற்றங்கள் பற்றிய சட்டப்பிரிவுகள் முதலிய தகவல்கள் பதிவு செய்யப்பட்டன.

    மார்ச்சு 2002: – சாட்சிகள் விசாரணை தொடங்கியது.

    இதனிடையே, அப்துல் நாசர் மதானியை ஜாமினில் வெளியில் எடுப்பதற்குப் பல முயற்சிகள் நடந்தன. ஆனால் பலனளிக்கவில்லை. அ.தி.மு.க அரசு இவ்விஷயத்தில் உறுதியாக இருந்தது. அப்போதைய உள்துறைச் செயலர் முனிர் ஹோடா முதல்வர் ஜெயலலிதாவிற்குத் தெரியாமல், மதானியை வெளியில் எடுப்பதற்காக, உதவிகள் செய்யப்போய், பின்னர் மாட்டிக் கொண்டதன் பேரில் முதல்வரால் தற்காலப் பணி நீக்கம் செய்யப்பட்டார்.

    ஜூன் 2, 2005: – கேரள முதல்வரும் காங்கிரஸ் தலைவருமான உம்மன் சாண்டி, மதானியின் தந்தையையும், மனைவியையும், அவர்கள் வீட்டில் சென்று சந்தித்து, மனிதாபிமான அடிப்படையில் அவனுடைய விடுதலைக்கு எப்படியேனும் ஏற்பாடு செய்வதாக உறுதியளித்தார். ஒரு பயங்கரவாதியின் வீட்டிற்குச் சென்று ஒரு மாநில முதல்வர் அவன் விடுதலைக்கு உறுதியளித்த இந்தக் கேவலமான செயல், நீதியின் மாட்சிமைக்குப் பெயர்போன பாரத தேசத்திற்குப் பெருத்த அவமானம் என்றால் அது மிகையாகாது.

    மார்ச்சு 14, 2006: – கேரள சட்டமன்றத்தில், மனிதாபிமான அடிப்படையில் மதானியை விடுதலை செய்யவேண்டும் என்று ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்திய சரித்திரத்தில் இம்மாதிரி இது வரை நடந்ததே இல்லை. ஜனநாயக உலகில் இந்தியாவைத் தலை குனியவைத்த ஒரு கேவலமான நிகழ்ச்சியை அரங்கேற்றிய ”பெருமை” கேரள சட்டசபையையும் அதன் அங்கத்தினராக இருந்த காங்கிரஸ் மற்றும் கம்யூனிசக் கட்சிகளையுமே சாரும்.

    2006-ல் தி. மு. க ஆட்சியமைத்த பிறகு

    மே மாதம் 2006-ல் தி. மு. க மீண்டும் அரசு அமைத்த உடனே, ஜெயலலிதாவினால் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்ட முனிர் ஹோடா முதல்வரின் உதவிச் செயலராக பணியில் அமர்த்தப்பட்டார். அப்போது தி. மு. க கூட்டணியில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகமும் உண்டு என்பது குறிப்பிடத் தக்கது.

    த.மு.மு.க தலைவர் ஜவஹிருல்லா அவர்கள், சன் தொலைக்காட்சியில் திரு வீரபாண்டியன் அவர்கள் நடத்தும் நேருக்கு நேர் நிகழ்ச்சியில், கோவைக் குண்டு வெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் பயங்கரவாதிகள் அனைவரையும் மனிதாபிமான அடிப்படையில் விடுவிக்க வேண்டும் என்று முதல்வருக்கு வேண்டுகோள் வைத்தார். தி.மு.க ஆட்சி அமைந்தவுடன் நடந்த ஒளிபரப்பாகும் இது.

    கேரள முதலமைசர் அச்சுதானந்தன், தன் அமைச்சர் குழு ஒன்றை மதானியைச் சந்திக்கக் கோவை சிறைச்சாலைக்கு அனுப்பினார். அவர்கள் மதானியிடம், தங்களுடைய தார்மீக ஒத்துழைப்பை நல்குவதாகவும், அவரை விடுதலை செய்ய, கூடிய விரைவில் ஏற்பாடு செய்வதாகவும், அச்சுதானந்தனின் செய்தியைக் கூறி உறுதி அளித்தனர். தனக்கு முன்னால் முதல்வராக இருந்த காங்கிரஸ் தலைவர் உம்மன் சாண்டி மதானியின் தந்தை மற்றும் மனைவியை சந்தித்ததற்குப் பதில் தருமாறு, கம்யூனிசத் தலைவர் அச்சுதானந்தன் போட்டியாக இந்த நடவடிக்கையை எடுத்துள்ளார்.

    ஜுன் 10, 2006: – கேரள முதல்வர் அச்சுதானந்தன் சென்னைக்கு வந்து தமிழக முதல்வர் கருணாநிதியைச் சந்தித்து மதானியை விடுவிக்குமாறு வேண்டுகோள் விடுத்தார். கருணாநிதி அதற்குச் சம்மதிக்காவிட்டாலும், மதானியின் வைத்தியத்திற்காகக் கோவைச் சிறைச்சாலையில் ஒரு பகுதியை சகல வசதிகள் கொண்ட ஆயுர்வேத மருத்துவ மையமாக மாற்ற உத்தரவிட்டார்.

    ஜூன் 2006: – சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைகள் தொடங்கின.

    ஏப்ரல் 2007: – வழக்கு விசாரணைகள் முடிவடைந்தன. 2345 சாட்சிகளில் 1300 சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர்.

    விசாரணைகள் ஆரம்பம் ஆவதற்கு முன்னர், த.மு.மு.க., தி.க., மனித நீதிப் பாசறை, விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆகியவை, குண்டு வெடிப்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ள பயங்கரவாதிகளை ஜாமினில் விடுவிக்க வேண்டும் என்று முதல்வர் கருணாநிதியை வற்புறுத்தினர். அவர்கள் கொடுத்த அழுத்தத்தினாலோ என்னவோ, அரசு தரப்பு தன்னுடைய வழக்காடுதலைச் சரியாகச் செய்ய மனமின்றி, அரைகுறையாகப் பல ஓட்டைகளுடன் நடத்தி முடித்தது.

    ஆகஸ்டு 1, 2007: – சிறப்பு நீதிமன்ற நீதிபதி உத்திராபதி தன் தீர்ப்பை வழங்கினார். குண்டு வெடிப்பில் பாதிக்கப்பட்டவர்களும், அவர்களின் குடும்பத்தாரும், மற்றும் தர்மத்தின் பக்கம் நிற்கும் அனைத்து மக்களும் அதிர்ச்சியடையும் வகையில், முக்கிய குற்றவாளியான மதானியையும் அவனுடன் ஏழு பயங்கரவாதிகளையும், விடுதலை செய்தார். பாஷா, அன்ஸாரி உள்ளிட்ட 158 பயங்கரவாதிகளையும் குற்றவாளிகள் என்று உறுதி செய்தும் தீர்ப்பு அளித்தார்.

    பின் நிகழ்வுகள்: –

    madhani_pinarayiவிடுதலையான மதானிக்கு ஒரு கதாநாயகனைப்போல் மாபெரும் வரவேற்பு திருவனந்தபுரத்தில் அளிக்கப்பட்டது. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநயக முன்னணியும், கம்யூனிஸ்ட் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணியும் போட்டி போட்டுக்கொண்டு மதானியைக் கவருமாறு அவனுக்கு வரவேற்பு அளித்தன. கம்யூனிஸ்ட் ஆளும் கட்சியாக இருந்தமையால் அரசு இயந்திரத்தை முழுமையாக ‘உபயோகித்து’ மதானியின் ஆதரவை வென்றது. கேரளத்தின் மானமற்ற அரசியல்வாதிகளால் ”உத்தமர்” என்று புகழாரம் சூட்டப்பட்ட மதானி, தனக்கென்று ஒரு புதிய நவீன பிம்பத்தை உருவாக்க முனைந்தான். தான் என்றுமே ஒரு பயங்கரவாதியாக இருந்ததில்லை என்றும், இனி தாழ்த்தப்பட்டவர்கள் மற்றும் இஸ்லாமியர்களின் முன்னேற்றத்திற்காகச் சேவை செய்வதே தன் எதிர்காலப் பணி என்றும் நாடகமாடினான். தன்னை ஒன்பது வருடங்களுக்கு மேலாக சிறையிலடைத்துத் துன்புறுத்திய தமிழக அரசிற்கு எதிராக வழக்கு தொடரப் போவதில்லையென்றும், ஆனால் தன் விடுதலையை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்தால், தான் அதனை எதிர்த்து வழக்கு தொடரப்போவதாகவும் எச்சரித்தான்.

    ஆக்ஸ்டு/செப்டம்பர் 2007: – குற்றம் உறுதி செய்யப்பட்ட அனைவருக்கும் தண்டனை வழங்கப்பட்டது.

    158 குற்றவாளிகளில் 69 பேருக்கு சதி, கொலை முயற்சி, கொலை, மத வெறுப்பைத் தூண்டுதல் போன்ற பிரிவுகளின் படி தண்டனை வழங்கப் பட்டது. 88 பேருக்கு 3 வருடம் முதல் 9 வருடம் வரையிலான சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. 43 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. 15 பேருக்கு 13 வருட கடுங்காவலும், 10 பேருக்கு 10 வருட கடுங்காவலும், 2 பேருக்கு 7 வருட கடுங்காவலும் தண்டனையாக அளிக்கப்பட்டது. அப்ரூவராக மாறிய ரியாஸ்-உர்-ரெஹ்மானுக்கு விடுதலை கிடைத்தது.

    அக்டோபர் 24, 2007: – முக்கிய குற்றவாளிகளுக்கான தண்டனை வழங்கப் பட்டது. அல் உம்மா தலைவன் பாஷாவிற்கு ஆயுள் தண்டனையும், அல் உம்மாவின் பொதுச் செயலாளராக இருந்த அன்ஸாரிக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், கொள்கைப் பரப்புச் செயலாளராக இருந்த மொஹாம்மது ஆஸிருக்கு நான்கு ஆயுள் தண்டனையும், மற்றொரு பயங்கரவாதி தஜ்ஜுதீனுக்கு ஆயுள் தண்டனையும் வழங்கப்பட்டது. தண்டிக்கப் பட்ட அனைவருக்கும் அவர்கள் ஏற்கனவே சிறையில் இருந்த ஒன்பது ஆண்டு காலமும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டது.

    (தொடரும்)

  • 12 Replies to “கரிசன அரசு – ஆபத்தான மாநிலம் – பரிதாப மக்கள்: 1”

    1. தவறுகளுக்கு கடுமையான தண்டனை இல்லாதவரை, இது போல் திரும்பவும் நடப்பதற்கு வாய்ப்புகள் அதிகமாகிறது. மேற்குறிப்பிட்ட சம்பவங்களுக்குப் பின் குற்றவாளிகளின் தண்டனையை குறைப்பதோ அல்லது கருணை அடிப்படையில் விடுதலை செய்வதோ தவறு. இது வரும் காலத்தில் பெரும் துன்பத்தை ஏற்படுத்தும். அனைவருக்கும் பொதுவான சட்டம் வர வேண்டும். இந்த நாட்டில் இருக்கும் போது இந்த நாட்டின் சட்டங்களை கடை பிடித்துதான் ஆக வேண்டும் என மக்களை கட்டாயப்படுத்தலாம். ஒரு குறிப்பிட்ட மதத்திற்கு சாதகமாக சட்டத்தை இயற்றக்கூடாது. சீனாவில் ஒரு குடிமகன் எந்த மதத்தை சேர்ந்திருந்தாலும் அவன் பொது சட்டத்தை மதித்தாக வேண்டும். அங்கு ஒற்றும் பேச முடியாது, ஒரு தரமான அரசால் மட்டுமே இது சாத்தியப்படும். இதற்கு மக்கள் ஒன்றுபட வேண்டும், ஒட்டு பொறுக்கிகள் இருக்கும் வரை இது நடப்பது கடினமே. மக்கள்தான் தீர்மானிக்க வேண்டும்.

      (Edited.)

    2. Lot of information and shocking news. Appreciating your article with proper evidence and proofs

    3. In the third video the father who lost his only son tells that he was asked to serve Madani who killed his only child.

      Horrible. My heart cries in pain and spills blood on seeing what hatred and aggression can do to every one. This should not happen to anybody – even to Madani.

      And the father says that though he was so angry on Madani, it is his duty to serve him. So, he did his duty with eyes full of tears and a heart broken by the islamic terrorism. But, he did his duty to the murderer of his only child.

      He is the Karma Yogi whose feet we should touch. And we should learn from him to do our duty. We should have democratically fought for the justice to these fellow human beings.

      We still have time. I want to provide monitory support to the Jihadi victims who are, so far, ignored by us. How can I do that?

    4. It is nauseating that those who vote after receiving money are Hindus as most of the christians and muslims know that MK is their Saviour more than their own gods.

    5. அன்பர்கள் நண்பர்கள் அனைத்து மதத்தவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்

      அன்புடன்
      ராம்

    6. சகோதரர் ஹரன் இத்தொடரின் மூலம் பலரும் சொல்ல அச்சப்படும் உண்மைகளை சொல்லியிருக்கிறார். பல தெரியாத உண்மைகளை வெளிக்கொண்டு வந்திருக்கிறார். நீதி கிடைக்காமல் தவிக்கும் ஹிந்து ஆன்மாக்களும் பலியான ஹிந்துக்களின் குடும்பங்களும் சிறிதாவது ஒரு சந்தோஷம் அடையும். கடவுள் ஹரனுக்கு அருளும் சக்தியும் அளிக்கட்டும். ஹிந்து சமுதாயம் ஹரனுக்கு கடமைப்பட்டிருக்கிறது.

    7. வணக்கம்,

      நண்பர்கள் அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

    8. பாரதத்தாய் இப்போது பாதி விழித்திருக்கிறாள். அதற்கு அடையாளம் ஹரனின் கட்டுரை.அவள் மீதி விழிக்கும்போது மிச்சமிருக்காது எதிர்ப்பு.

    9. நான் என் கடமையைச் செய்துள்ளேன் அரவிந்தன். இருப்பினும் உங்கள் வாழ்த்துக்களுக்கு என் மனமார்ந்த நன்றி.

      அனைவருக்கும் மகிழ்ச்சியான ஒளிமயமான தீபாவளி அமைவதற்கு கிருஷ்ண பரமாத்மா அருளட்டும். என் இதயம் கனிந்த நல்வாழ்த்துக்கள்!

    10. தீபாவளி வாழ்த்துக்கள்:

      எனதருமைச் சகோதரர்கள் அனைவருக்கும்,இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்,
      இந்த இனிய நன்நாளில்,அனைவரும் பேதமை மறந்து,ஒற்றுமையுடன் இன்புற்று வாழ,அனைவரும் உறுதி கொள்வோம்….

      அன்புடன்
      ரஜின்

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *