வயநாட்டுச் சிங்கம் பழசி ராஜா – ஒரு மாபெரும் சினிமா

இந்தியச் சுதந்திரப் போராட்டம் என்பது சுயராஜ்யம் கேட்கும் மக்கள் இயக்கமாக மாறுவதற்கு முன்பாக சிறு சிறு மன்னர்கள் தத்தம் ராஜ்யங்களின் உரிமைகளைத் தக்க வைத்துக் கொள்ளும் சிறு சிறு போர்களாகவே ஆரம்பித்து பின்னால் மாபெரும் வெள்ளமாக, பெரும் மக்கள் இயக்கமாக உருவெடுத்த ஒன்று. சுதந்திரப் போராட்டம் என்னும் பிருமாண்டமான வரலாற்று நிகழ்வை வெறும் காங்கிரஸ் தலைமையிலான சுதந்திரப் போராட்டமாகச் சுருக்குவது மாபெரும் வரலாற்றுப் பிழை.  வரலாற்றின் பக்கங்களை இன்னும் நெருக்கமாகச் சென்று புரட்டிப் பார்க்கும் பொழுது இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் கெட்டி பொம்முக்களின் பிரதி இருந்திருக்கலாம் என்ற செய்தி தெரிய வருகிறது. அந்தந்த பகுதியில் இருக்கும் வரலாற்றாசிரியர்களினால், படைப்பாளிகளனால் வரலாற்றின் இருண்ட பக்கங்களில் காணாமல் போய் விட்ட மறைந்து போன வரலாறுகளை மீட்டெடுத்து பதிவு செய்ய வேண்டி வருகிறது. அப்படி வரலாற்றின் பக்கங்களில் இருந்து மறைந்து போன மற்றொரு உரிமைக் குரலே கேரள தேசத்தின் தன் மண்ணின், தன் மக்களின் உரிமைகளுக்காகக் குரல் எழுப்பிய மற்றொரு மாவீரன் பழசி ராஜாவின் குரல். பரந்து விரிந்த பாரத தேசத்தில் வெள்ளையர்களை எதிர்த்துப் போராடிய வீரர்களில் ஒரு மங்கள் பாண்டேயும், ஒரு ராணி லட்சுமி பாயும், ஒரு பகத் சிங்கும் வெளியில் தெரிந்த அளவுக்கு ஒரு கெட்டி பொம்முவோ, ஒரு பழசி ராஜாவோ தெரியாமல் போனது வரலாற்றுப் பதிவின் மாபெரும் பிழையே. அந்த இடைவெளியைச் சரி செய்ய சினிமா என்னும் சக்தி வாய்ந்த ஊடகம் மூலம் வெளிப்படும் முயற்சிகளே வீரபாண்டிய கட்டபொம்மன்களும், கப்பலோட்டிய தமிழன்களும், பழசி ராஜாக்களும்.

கேரளத்தில் வயநாட்டுச் சிங்கம் என்று அழைக்கப் பட்ட, தான் வாழ்ந்த மண் தன் மக்களுக்கு உரியது அது வியாபாரம் செய்ய வந்த கும்பனிக்காரர்களுக்கு உரியது அல்ல, அவர்களுக்கு கப்பம் கட்ட மாட்டேன் என்று மறுத்துப் போராடிய இந்தியாவின் மாபெரும் சுதந்திரப் போரின் ஆரம்ப அத்யாயங்களை எழுதிய ஒரு குறு நில மன்னன் பழசி ராஜா.  அதை ஒரு வரலாற்று நூலாகவோ, ஆராய்ச்சிக் கட்டுரையாகவோ அல்லது நாவலாகவோ எழுதினால் பரவலாக அனைத்து இந்தியாவையும் சென்று அடையாது. அனைத்து இந்தியர்களிடமும் பழசி ராஜாக்களின் தியாகங்களைக் கொண்டு சேர்ப்பதற்கு சினிமா போன்ற ஒரு சக்தி வாய்ந்த ஊடகம் தேவைப் படுகிறது. அந்தத் தேவையைச் சரியாக உணர்ந்து ஒரு மாபெரும் சினிமாவாக உருவாக்கியிருக்கிறார் இயக்குனர் ஹரிஹரன்.

அமெரிக்கப் பழங்குடிகளைத் திரட்டி ஒருங்கிணைக்க முயன்று ஹாரிசான் என்னும் அமெரிக்க கவர்னரை எதிர்த்துப் போராடிய செவ்விந்தியத் தலைவன் டெக்கும்சேவைப் போலவே  பிரிட்டிஷாரின் காலனி ஆதிக்கத்தை எதிர்த்து வடகேரளத்தில் நடந்த உரிமைப் போரே வெள்ளையர்களுக்காக பழசி ராஜா துவந்த யுத்தம்.

mammootty-pazhassi-rajaகேரளத்தில் பிரிட்டிஷ் அதிகாரத்தை எதிர்த்த முதல் போராளி. கோட்டையம் பகுதியை ஆண்டு வந்த ஒரு குறு நில மன்னன், பல பெரிய நிலக்கிழார்களின் தலைவன். மைசூர் மன்னன் திப்பு சுல்தானை எதிர்த்த பிரிட்டிஷ் படைகளுக்கு உதவிய மன்னர். திப்பு சுல்தானை ஜெயித்த பின்னர் பிரிட்டிஷ் கம்பெனியின் கண்கள் கேரளத்தின் மலபார் பகுதிகளின் இயற்கை வளங்களின் மேல் விழுகிறது. அங்கு விளையும் மிளகு போன்ற பயிர்களின் செல்வத்தினால் கவரப்பட்ட பிரிட்டிஷார்கள் அந்தப் பகுதியையும் தங்கள் முழு ஆளுகைக்குள் கொண்டு வந்து அந்தப் பகுதி நிலக்கிழார்களையும் குறு மன்னர்களையும் பிரிட்டிஷ் கம்பெனியின் சார்பாக மக்களிடம் வரி வசூலித்து தங்களுக்குக் கப்பம் செலுத்துமாறு பணிக்கிறார்கள். பிரிட்டிஷாரின் பகையைச் சம்பாதித்துக் கொள்ள விரும்பாத பெரும் நிலக்கிழார்கள் அனைவரும் பணிந்து விவசாயிகளிடமிருந்து வரி வசூலித்து கப்பம் கட்ட ஒத்துக் கொள்கிறார்கள். அதில் கோட்டயம் பகுதியின் மன்னரான பழசி ராஜா மட்டும் கட்டாய வரி வசூலை எதிர்க்கிறார். வியாபாரம் செய்ய வந்த கம்பெனியாருக்கு தங்கள் மக்களின் விவாசாயத்திலும் , நிலத்திலும், வருமானத்திலும் பங்கு கோர எவ்வித உரிமையும் இல்லை என்று மறுக்கிறார். பழசி ராஜாவின் மாமா பிரிட்டிஷாரிடம் தனக்கு மன்னர் பட்டம் பெற்றுக் கொடுத்தால் தான் வரி வசூல் செய்து தரும் பொறுப்பை ஏற்றுக் கொள்வதாக கடிதம் அனுப்புகிறார். அவர்களுக்கு உதவியாக தனது ஆளையும் அனுப்பி வைக்கிறார். அவர்கள் உதவியுடன் பிரிட்டிஷ் படை பழசி ராஜாவின் அரண்மனைக்குச் சென்று அவரைக் கைது செய்யச் செல்கிறார்கள். அவர்கள் வரும் முன்பே காட்டுக்குள் தப்பிச் சென்று விடுகிறார் பழசி ராஜா. ஆனால் அவரது அரண்மனையையும் நிலவறையும் கொள்ளை அடித்து தங்கம், நகைகள், என்று அவரது செல்வங்கள் அனைத்தையும் கொள்ளையடித்துச் சென்று விடுகிறார்கள் வெள்ளைக்காரர்கள். பிரிட்டிஷ் கம்பெனியிடம் இருந்து தப்பிச் செல்லும் பழசி ராஜா வயநாடு காட்டுக்குள் ஒளிந்து கொண்டு பிற பெரிய நிலக்கிழார்களின் ஆதரவையும், வயநாட்டுப் பழங்குடியினரான குறிச்சியார்களின் ஆதரவையும் பெற்று ஆதிவாசிகளாலும் தன் படைகளாலும் உருவான ஒரு கொரில்லா படையை உருவாக்குகிறார்.

பழசி ராஜா படையினரின் ஆயுதங்களான வில்லும் அம்பும், வாளும், வேலும், கேடயங்களும் பிரிட்டிஷ்ஷாரின் துப்பாகிகளுக்குன் பீரங்கிகள் முன்னும் நிற்க தாக்குப் பிடிக்க முடியவில்லை. பழங்குடியினரின் கொரில்லா தாக்குதல்களினால் பெரும் இழப்புக்களை பிரிட்டிஷார் சமாளிக்க முடியாமல் பழசி ராஜாவுடன் ஒரு அமைதி ஒப்பந்ததிற்கு வருகிறார்கள். மக்களின் அமைதியை முன்னிட்டு பழசி ராஜாவும் ஒப்பந்ததிற்கு சம்மதிக்கிறார். ஆனால் ஒப்புக் கொண்ட படி பிரிட்டிஷார் நடந்து கொள்ளாதபடியால் மீண்டும் போர் துவங்குகிறது. பழசி ராஜாவின் தளபதிகளும், ஆதரவாளர்களும் தூக்கிலடப் படுகிறார்கள். இரு புறமும் பெரும் இழப்புக்களுக்குப் பின்னால் சண்டையில் இருந்து பழங்குடியினர் விலகிக் கொண்டதினாலும், பிற மன்னர்களின் ஆதரவு எதிர்பார்த்தபடி பழசி ராஜாவுக்குக் கிட்டாதபடியாலும் இறுதிப் போரில் தன் தளபதிகளையும் வீரர்களையும் இழந்த பழசி ராஜா கடுமையான சண்டைக்குப் பின்னர் பிரிட்டிஷ் படையால் சுட்டுக் கொல்லப் படுகிறார். பழசி ராஜா திட்டமிட்ட படி பிற சிறு மன்னர்களின் ஆதரவோ சிவகங்கையில் இருந்து படைகளோ அவருக்குக் கிட்டவில்லை. கேரளத்தின் பிற நிலக்கிழார்கள் கிழக்கிந்திய கம்பெனியுடன் அமைதியாகப் போய் விட்டதால் தென்னிந்தியாவின் குறுநில மன்னர்களுக்குள் ஒற்றுமை இல்லாது போய் விடுகிறது. அவரது வீரத்தைக் கண்டு பிரமிக்கும் பிரிட்டிஷ் கலெக்டர் அவரை மாபெரும் வீரனாக மதித்து உரிய கவுரவுத்துடன் அடக்கம் செய்கிறார். இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்தின் ஆரம்ப காலப் போரினை நடத்திய கேரள வீரன் பழசி ராஜாவின் கதை. பழசி ராஜாவைப் பற்றிய பிரிட்டிஷ்காரர்களின் ஆவணங்களின் அடிப்படையில்   இதை ஒரு மாபெரும் வரலாற்றுச் சினிமாவாக உருவாக்கியுள்ளார் இயக்குனர் ஹரிஹரன்.

பொழுது போக்குப் படங்கள் மலையாளம் உட்பட அனைத்து மொழிகளிலுமே ஆயிரம் வருகின்றன. ஆனால் காலத்தால் அழியாத அபூர்வமான திரைப் படங்கள் ஒரு நூற்றாண்டில் வெகு சிலவே வருகின்றன. கட்டாயம் தியேட்டருக்குச் சென்று கண்டு ரசித்து உணர வேண்டிய படங்கள் குறிஞ்சி மலர் மலர்வது போல வெகு அபூர்வமானவை. அப்படிப் பட்ட பிரமிக்கத் தக்க ஒரு சினிமா முயற்சி கேரள வர்மா பழசி ராஜா.  நம் வரலாற்றின் ஒரு பக்கத்தை அறியத் தரும் வெறும் டாக்குமெண்டரி படமாக இந்த சினிமா நின்று விடவில்லை. அனைத்துத் தரப்பினரையும் கவரும் அபாரமான காட்சிகளுடனும், சிறப்பான கலையுணர்வுடனும், ஆகச் சிறந்த தொழில்நுட்பங்களின் கலவைளுடனும் சேர்ந்த ஒரு பிருமாண்டமான சினிமாவாக இந்த சினிமா உருவெடுத்துள்ளது.

72 வயதாகும் ஹரிஹரன் மலையாளத்தின் மாபெரும் இயக்குனர். பரிணயம், ஒரு வடக்கன் வீர கதா போன்ற விருதுகள் குவித்த அருமையான திரைப்படங்களை அளித்த இயக்குனர். கேரள மண்ணின் பாரம்பரியத்தை தன் படங்களின் மூலமாக தொடர்ந்து காண்பித்து வருபவர் ஹரிஹரன். இந்தியாவின் மிகச் சிறந்த இயக்குனர்களில் ஒருவர். இந்தப் படத்தின் கதாசிரியர் ஞானபீட விருது பெற்ற இந்தியாவின் மிகச் சிறந்த எழுத்தாளர் எம் டி வாசுதேவன் நாயர். இந்தப் படத்திற்கு இசைமைத்திருப்பவரோ இசை மேதை இளையராஜா. இந்தப் படத்திற்கான விசேஷமான ஒலி அமைப்புக்களைச் செய்திருப்பவர் ஆஸ்கார் பரிசு பெற்ற ஒலி நுட்ப வல்லுனர் ரசூல் பூக்குட்டி. பழசி ராஜாவாக நடித்திருப்பவரோ இந்தியாவின் மிகச் சிறந்த நடிகர்களில் ஒருவரும், நான்கு முறை சிறந்த நடிகருக்கான தேசீய விருது பெற்றவருமான மம்மூட்டி. இத்தனை சாதனையாளர்களின் ஒருங்கிணைப்பில், சிறப்பான உழைப்பில் மிகப் பெரும் பொருட் செலவில், கச்சிதமான திட்டமிடலில் எடுக்கப் பட்டுள்ளது பழசி ராஜா,  இந்தப் படம் தமிழிலும் மொழி மாற்றம் செய்து மறு ஒலிப்பதிவு செய்யப் பட்டு வெளிவர இருக்கிறது. தமிழ்ப் படத்திற்கான வசனத்தை எழுத்தாளர் ஜெயமோகன் எழுதியுள்ளார்.

வழக்கமாக தமிழிலும் தெலுங்கு, இந்தி போன்ற பிற மொழிகளில் எடுக்கப் படும் வரலாற்று அல்லது சமீபத்திய வரலாற்று (பீரியட்) சினிமாக்களில் ஒரு வித ஃபார்முலாவைக் காணலாம். மன்னர்கள் என்றாலே வைரமும் நவரத்தினங்களும் பதிக்கப் பட்ட கீரீடங்களும், ஜரிகை பதிக்கப் பட்ட ஆடை ஆபரணங்களையும், உடல் முழுக்க நகைகளையும் அணிந்து கொண்டு ஒரு நன்கு அலங்கரிக்கப் பட்ட நடமாடும் கிறிஸ்மஸ் மரம் போல, நடமாடும் நகைக் கடை போல வருவார்கள். உணர்ச்சி பொங்க நரம்புகள் முறுக்கேற கண்கள் சிவக்க அடுக்கு மொழி பேசுவார்கள். காதல் செய்வார்கள். நவரசங்களையும் பொழிந்து நடிப்பார்கள். அவர்கள் வாழும் அரண்மனைகள் மாட மாளிகைகளுடனும், கூட கோபுரங்களுடனும், கோட்டை கொத்தளங்களுடனும் இருக்கும், மந்திரி சபையோ டிஸ்னி லேண்டின் அரங்கம் போல பள பளப்பாகக் காட்சி அளிக்கும். ராணிகளும், சேடிகளும், இளவரசிகளும் இன்னமும் அதிக ஜரிகை ஆடைகளுடனும், நகைகளுடனும் காட்சியளிப்பார்கள். யாருமே யதார்த்தமான வழக்கு மொழியில் பேசி விட மாட்டார்கள். உணர்ச்சி வயமாக எதுகை மோனைகள் தப்பாமல் அடுக்கு மொழியில் உரையாடிக் கொள்வார்கள். ஒவ்வொரு இறப்பிற்கும் சோகத்திற்கும் குறைந்தது பத்து பக்கங்களாவது வசனம் பேசி நம்மை சோகத்தில் பிழிவார்கள். இதுவே நாம் காணும் வரலாற்று படங்களின் எழுதப் படாத இலக்கணம். உண்மையில் வரலாறு என்பதும், மன்னர்கள் வாழ்ந்த வாழ்க்கை யதார்த்த பூர்வமானது என்பதையும் அவர்கள் வாழ்ந்த காலக் கட்டம் நமக்கு அளிக்கும் பல்வேறு ஆவணங்கள் மூலமாக அறிந்து கொண்டு ஒரு வரலாற்று சினிமாவை நம்பகத்தன்மையுடன் மிகையின்றி எடுக்கலாம் என்ற  சாதாரண  உண்மையை நம் சினிமாக்காரர்கள் புரிந்து கொள்வதேயில்லை.

மலையாள சினிமா என்றுமே யதார்த்தத்தைக் காட்டும் சினிமாக்கள். எம் டி வாசுதேவன் நாயர் என்னும் இலக்கியவாதியும் ஹரிஹரன் என்னும் மிகச் சிறந்த இயக்குனரும் சேரும் பொழுது அதில் இன்னம் நுட்பமும், தத்ரூபமும், யதார்த்தமும் கூடுகிறது. இந்த பழசி ராஜாவும் அதற்கு விலக்கில்லை. பழசி ராஜாவின் வரலாறு நடந்த காலகட்டமான 1700களின் இறுதிகளில் அவர்கள் வாழ்ந்த கொட்டாரங்கள், அணிந்த உடைகள், அவர்கள் பேசிய பேச்சுக்கள், நடை உடை பாவனைகள், பயன்படுத்திய வாகனங்கள், அணிந்த நகைகள் என்று எந்தவொரு அம்சத்திலும் கற்பனையான படோபடங்கள் இன்றி மிக இயல்பாகவே காண்பித்திருக்கிறார்கள். ஆடம்பர ஆபரணங்கள், செயற்கையான வசனங்கள் மிகைப் படுத்திய நடிப்பு என்று எதையும் எங்கும் காண முடிவதில்லை.

எத்தனையோ இடங்களில் பழசி ராஜாவாக வரும் கேரளத்தின் புகழ் பெற்ற நடிகரான மம்மூட்டியை உணர்ச்சிகரமான வசனங்கள் பேச வைத்து அவருக்கு கை தட்டுப் பெற்றுத் தந்திருக்கலாம். ஆனால் மிக அழுத்தமாக உணர்ச்சிகளைக் காண்பிக்காமல் அடக்கி வாசிக்கிறார் மம்முட்டி. தேவைக்கு அதிகமாக மிகை நடிப்போ வசனங்களோ அவர் பேசுவது இல்லை. வெள்ளைக்காரர்களுடன் பேசும் பொழுது வெள்ளைக்காரர்களிடத்தும் பழசிராஜாவிடத்தும் கோப உணர்ச்சிகள் ததும்பி வழிகின்றன. ஆனாலும் கூட தேவைப்பட்டதற்கு அதிகமாக இயல்புக்கு மாறாக ஒரு வார்த்தை அதிகம் பேசப் படுவதில்லை. நடிகர்களின் நுட்பமான முகபாவங்கள் வாயிலாகவும் அந்தக் காட்ச்சியின் ஒளிப்பதிவு, இசை வாயிலாகவும் அந்த உணர்ச்சிப் பிராவகம் வெளிப்படுத்தப் பட்டு விடுகிறது. பக்கம் பக்கமாக வசனம் பேசாமல் காட்சிகளின் வாயிலாகவே அந்த உணர்வுகள் வெளிப்படுத்தப் பட்டு விடுகின்றன. சினிமா என்பது ஒரு காட்சி பூர்வமான மீடியம் என்பதை முழுக்க உணர்ந்த ஒரு தேர்ந்த இயக்குனரின் திறமை படம் முழுவதும் ஒவ்வொரு ஃப்ரேமிலும் வெளிப்படுகின்றன. வரலாறு என்பது எவ்வித  மிகைப் படுத்துதலும் இன்றி வரலாறாகவே மட்டும் சொல்லப் பட வேண்டும் என்பதில் மிகுந்த அக்கறை எடுத்துள்ளார்கள் கதாசிரியரும் வசனகர்த்தாவுமான எம் டி யும், இயக்குனர் ஹரிஹரனும். நடிப்பிலும், வசனத்திலும் ஒரு துளி செயற்கையோ மிகையோ இல்லாமல் வெகு யதார்த்தமாக இந்த சினிமா எடுக்கப் பட்டுள்ளது.

ஜிகினாக்களால் ஆனதுதான் வரலாற்று சினிமா என்ற மாயையில் சிக்கி விட்டத்  தமிழ் பட ரசிகர்களுக்கு இந்தப் படத்தில் வரலாறு இயல்பான வரலாறாகவே காட்டப் பட்டுள்ள விதம் ஒரு வித கலாச்சார அதிர்ச்சியைக் கூட அளிக்கக் கூடும். இந்த சினிமாவில் காண்பிக்கப் படும் கதையும், கதாபாத்திரங்களும் கற்பனை அல்ல. பழசி ராஜாவின் வீரவரலாறு அப்பொழுதைய தலைச்சேரி கலெக்டராக இருந்தவரும் இந்த சினிமாவில் ஒரு முக்கியமான பாத்திரமானவருமான தாமஸ் என்பவரால் அவரது கலெக்டர் குறிப்புகளாக ஆவணப் படுத்தப் பட்டுள்ளன. அந்த உண்மையான ஆவணங்களின் அடிப்படையிலும், பழசி ராஜாவின் கதையை அறிந்தவர்கள் மூலமாகவும் அந்தக் காலக் கட்டத்தின் வரலாற்று உண்மைகள் மிகையின்றி வெகு யதார்த்தமான ஒரு சினிமாவாக எடுக்கப் பட்டுள்ளது.

இந்தப் படத்தின் முக்கியமான சிறப்பு அம்சம் அதன் சித்திரம் போன்ற காட்சிகளே. படத்தில் வரும் பெரும்பான்மையான காட்சிகள் ஒரு பெரிய மிக அகலமான மாபெரும் ஓவியத்தை, லூவர் ம்யூசியத்தில் இருக்கும் ஒரு அகண்ட பனோரமிக் ஓவியத்தினைக் காணும் உணர்வை ஏற்படுத்துகின்றன. சினிமாவாகப் பார்க்காமல் வெறும் ஸ்லைட் ஷோக்களாக மட்டும் பார்த்தால் கூட ஒரு மாபெரும் ஓவிய ஆல்பத்தைப் பார்த்த உணர்வு நிச்சயம் ஏற்படும். அப்படித் துல்லியமாக ஒவ்வொரு ஃப்ரேமும் திட்டமிடப் பட்டு அழகுடனும், நுட்பமான  உணர்ச்சிகள் மிளிரவும் எடுக்கப் பட்டுள்ளன. படத்தில் பழசி ராஜாவின் படைகளுக்கும் பிரிட்டிஷ் படைகளுக்கும் நடுவே பல சிறு சண்டைகளும் போர்களும் நடக்கின்றன. ஒவ்வொரு சண்டையிலும் பல நூறு நடிகர்கள் மிக உக்கிரமாக ஆக்ரோஷமாகப் போரிடுகிறார்கள். ஒரு சில சண்டைகள் அடர்ந்த கானகத்தின் ஊடாக நடக்கின்றன. இருந்தாலும் அனைத்துச் சண்டைகளுமே வழக்கமாக நம் சினிமாக்களில் காண்பிக்கப் படுவது போல ஒட்டு மொத்த ஒரு கொலாஜாகக் காண்பிக்கப் படாமல் தெளிவான துல்லியமான சண்டைக் காட்சிகளாக, தத்ரூபமாக நேரில் பார்க்கும் உணர்வை அளிப்பதாக எடுக்கப் பட்டுள்ளன. இது போன்ற காட்சித் தெளிவான ஒரு போர்க்களக் காட்சியை நாம் ”சேவிங் தி ப்ரைவேட் ரியான்” என்ற ஸ்பீல் பெர்க் படங்களில் மட்டுமே நாம் காணக் கூடியவையாக இருந்தன.  பல நூறு பேர்கள் கலந்து கொள்ளும் பிரமாண்டமான காட்சிகளும், தலைச்சேரி கோட்டையும், காட்டில் கட்டப் பட்டுள்ள பனமரக் கோட்டையும், இறுதிக் காட்சியில் நடக்கும் போர்க்களமும் இன்னும் ஏராளமான இடங்களும் முதலில் தூரக் காட்சிகளாக எடுக்கப் பட்டு அதன் முழுப் பரிமாணமும், இருக்கும் ஆட்களின் எண்ணிக்கை, இடங்களின் விஸ்தீரணம் எல்லாம் காட்டப் பட்டு பின்னர் அருகில் நெருங்கி நடக்கும் ஆக்‌ஷனைக் கிட்டத்தில் சென்று துல்லியமாகவு, தெளிவாகவும் காட்டியிருக்கிறார்கள். ஒளிப்பதிவாளர்கள் ராமநாதன் ஷெட்டியும் வேணுவும் நம்மை பிரமிப்பில் வாய் பிளக்க வைத்திருக்கிறார்கள்.

காமிரா கோணங்களும், காட்சி அமைப்புக்களும் இந்தப் படத்தின் முக்கியமான பலம். காட்டுக்குள் சூரிய வெளிச்சம் நீண்ட குழல்கள் போலவும், கொட்டும் அருவிகள் போலவும் விரியும் காட்சி, தொடர்ச்சியான வயநாட்டு மலைச் சிகரங்கள், பழசிராஜாவின் கொட்டாரம், ஆதிவாசிகளின் குடியிருப்புக்கள்,  தலைச்சேரி கோட்டைக்குள் வெள்ளைக்காரர்கள் நடத்தும் கூட்டங்கள், கடற் பகுதிகள், அடர் வனப் பகுதிகள் என்று ஒவ்வொரு ஃப்ரேமும் அற்புத காட்சி அனுபவங்களாக அமைகின்றன. மிகுந்த நுட்பத்துடனும், அக்கறை எடுத்தும், பொருட்செலவும், உழைப்பும், கலை நுணுக்கமும் கொண்டும் கொட்டாரங்களும், கோட்டைகளும் திரையில் கொணரப் பட்டுள்ளன. பழசி ராஜாவின் அரண்மனையின் உள்ளும், அவரது மாமாவின் அரணமனை உள்ளும் உள்ள சுவர்களில் பல வண்ண ஓவியங்கள் வரையப் பட்டு அந்தக் காலத்துக் கொட்டாரங்களின் உள் அழகு வெளிப்படுத்தப் பட்டுள்ளன. அந்த ஓவியங்கள் மெல்லிய விளக்குகளின் வெளிச்சத்தில் அழகுற காட்சியளிக்கின்றன. மிகவும் அக்கறையெடுத்து, மிகவும் கவனத்துடன் காட்சிகளில் தத்ரூபத்தையும், நம்பகத்தன்மையையும் கொண்டு வந்திருக்கிறார்கள். வழக்கமாக 60 கோடி 70 கோடி செலவில் படம் எடுப்பதாகச் சொல்லப் படும் தமிழ் படங்களில் பெரும் பகுதி நடிகர்களுக்கும், தேவையில்லாத வீண் ஆடம்பர செட்டிங்குகளுக்கும், வெளிநாட்டுப் பாடல் காட்சிகளுக்கும் செலவழிந்து விடும். ஆனால் இந்தப் படத்திற்காக செலவழிக்கப் பட்டதாகச் சொல்லப் படும் 20 கோடிகளின் ஒவ்வொரு பைசாவும் இந்தப் படத்தின் ஒவ்வொரு காட்சியின் உள்ளும் சென்றிருப்பது திரையில் இந்தப் படத்தின் ஒவ்வொரு காட்சியின் பின்னுள்ள கலையழகையும் பிருமாண்டத்தையும் காணும் பொழுதும் உணர முடிகிறது.

இந்த சினிமாவின் மற்றொரு பிரமிப்பு இதன் இசையும், சம்பவங்களின் பொழுது ஏற்படும் ஒலிகளுமேயாகும். இசையமைப்பாளர் இளையராஜாவின் மகுடத்தில் மற்றொரு பொன்னாலான சிறகு இந்தப் படத்தின் பின்னணி இசையும் பாடல்களும். இளையராஜாவைப் போலவே தன் திறமை முழுவதையும் வெளிப்படுத்தி காட்சிகளின் பிருமாண்டத்தையும், நிஜத்தன்மையும் அதிகரித்திருக்கிறார் காட்சிகளுக்குத் தேவையான பல்வேறு நுட்பமான ஒலிகளை உருவாக்கியுள்ள ஆஸ்கார் விருது பெற்ற ஒலியியல் வல்லுனர் ரசூல் பூக்குட்டி அவர்கள். பரபரப்பான ஒரு காட்சியில் அப்பொழுதுதான் மழை பெய்து ஓய்ந்திருக்கிறது, பழசி ராஜாவைத் தேடி பிரிட்டிஷ் ஆட்களும், காவலர்களும் வந்து சூழ்ந்துள்ளனர், முற்றத்தில் பழசி ராஜாவின் மனைவி பதை பதைத்து நிற்கிறார் அந்த பரபரப்பான சூழ்நிலையில் காட்சியின் பின்னணியில் மழைத் துளிகள் சொட்டுச் சொட்டாக விழுந்து கொண்டிருக்கும் சப்தம் துல்லியமாக எழுகிறது. சண்டைகளின் பொழுது நூற்றுக்கணக்கான போர் வீரர்கள் ஒருவரை ஒருவர் தள்ளிக் கொள்ளும் இயக்கமும், முட்டி மோதும் சப்தமும், வாட்கள ஒன்றுடன் ஒன்று மோதிக் கொண்டும், கேடயங்கள் வாள்களைத் தாங்கும் பொழுது எழுப்பும் ஒலியும் , துப்பாக்கியில் இருந்து வெளிவரும் குண்டின் ஓசைகளும்,  வில்லில் இருந்து விஷ் விஷ் என்று கிளம்பும் அம்புகளின் ஒலிகளும், அவை தன் இலக்கை அடையும் பொழுது ஏற்படும் சப்தங்களும்,  வீரர்களின் ஓங்கார ஒலிகளும்,  தரை அதிர ஓடும் குதிரைகள் குளம்பொலியும், அங்கம் இழந்தவர்கள் எழுப்பும் அல்றல்களும் இன்னும் பல்வேறு விதமான சப்தங்களையும் மிகத் துல்லியமாக, மிகக் கவனமாகப் பதிந்து காட்சிகளின் பொழுது மிகத் தத்ரூபமாக வெளிவருகின்றன.  அத்தனை நுட்பமான ஓசைகளும் நுண்ணிப்பாகக் கவனிக்கப் பட்டு உருவாக்கப் பட்டுள்ளன. அந்த தனித் தனி ஒலிகள் அனைத்தும் இசையுடன் இணையும் பொழுது பிருமாண்டமான காட்சிகளுக்கு மேலும் மெருகூட்டுகின்றன, காட்சிகளுக்கு அபாரமான நம்பகத்தன்மையை எழுப்புகின்றன. பல இடங்களின் மேகம் கறுத்து பெரும் இடி மின்னலுடன் கூடிய பிரளயம் போன்ற மழை பெய்கிறது. மலைக்காட்டில் பெய்யும் அந்தப் பெரும்ழைகள் வெகு தத்ரூபமாக அதன் இடி ஓசைகளுடன் அற்புதமாக கொண்டு வரப் பட்டுள்ளது. ரசூல் பூக்குட்டி தன்னுடன் இளையராஜாவுக்கும் சேர்த்து இன்னொரு ஆஸ்கார் பெற்றால் ஆச்சரியப் படுவதற்கில்லை. இளையராஜாவின் பின்னணி இசை ஹாலிவுட்டின் மாபெரும் படங்களில் மட்டுமே கேட்டிருக்கக் கூடிய அனுபவத்தை அளிக்கின்றன. நிச்சயம் பல நூறு இசைக் கலைஞர்களை ஒருங்கிணைத்த ஆர்கெஸ்டிரேஷன் இசையையே அவர் இந்த சினிமாவுக்காக மிகழும் உழைத்து தன் திறைமை அனைத்தையும் செலவிட்டு இசைத்திருக்க வேண்டும். சினிமாவில் மொத்தம் மூன்று பாடல்களே பயன் படுத்தப் பட்டிருந்தாலும் அவை அனைத்துமே அற்புதமான காட்சி இன்பத்தையும் இசை அனுபவத்தையும் அளிப்பவையாக உள்ளன.

படம் முழுக்க ஏராளமான சண்டைக் காட்சிகள் நம்ப முடியாத வேகத்துடனும் துல்லியத்துடனும் வருகின்றன. சாமுராய் படங்களிலும், ”க்ரவுச்சிங் டைகர்” போன்ற படங்களில் கண்ட வேகமயமான சண்டைகள் போலவே படத்தில் வரும் களரிப் பயட்டுக்களும், பெரும் போர்களும் அமைந்திருக்கின்றன. முக்கியமாக ஆதிவாசிகள் மேற்கொள்ளும் கொரில்லா சண்டைகள், புயல் வேகத்துடன் அவர்கள் பாய்ந்து தாக்கும் காட்சிகளும் பிரமிக்க வைக்கின்றன. குறிப்பாக மனோஜ் கே ஜெயனும், பத்மப் பிரியாவும் ஆதிவாசிப் போராளிகளான சந்துவாகவும், நீலியாகவும் வந்து மின்னல் வேக சண்டைகள் பலவற்றை நிகழ்த்துகிறார்கள். நடிகை பத்மப்பிரியா மற்றுமொரு விஜயசாந்தியாக உருவெடுத்து விடக் கூடிய சாத்தியங்களை இந்த சினிமா அளித்துள்ளது. பல சண்டைக் காட்சிகளில் தனி நபர்கள் பல பேர்களை வீழ்த்தும் காட்சிகளை நம்ப முடியாவிட்டாலும் அவை போன்ற பல தாக்குதல்களை பழசி ராஜாவும் அவரது தளபதிகளும் மேற்கொண்டு பிரிட்டிஷ் படைகளுக்குப் பெருத்த சேதம் விளைவித்த செய்திகள் பிரிட்டிஷ்காரர்களாலேயே பதியப் பட்டிருப்பதினால் அவை உண்மையில் நடந்த தாக்குதல்களாகவே இருந்திருக்க வேண்டும்.

பழசி ராஜாவாக வரும் கம்பீரமான மம்மூட்டியின் நடிப்பைப் பற்றி நாம் கூற வேண்டியதில்லை. மம்மூட்டியின் கம்பீரமும் அபாரமான நடிப்பாற்றலும் பழசி ராஜா என்ற வீரனின் பாத்திரத்திற்குக் கச்சிதமாகப் பொருந்தியுள்ளது.  கறாரான அளவான மிகையில்லாத இயல்பான நடிப்பு. மம்மூட்டிக்கு மேலும் பல விருதுகளை இந்தப் படம் பெற்றுத் தந்து விடும். மம்மூட்டி, ஜகதி, ஜகதீஷ், திலகன், நெடுமுடி வேணு, தேவன், அலெக்ஸ் போன்ற மலையாளத்தின் ஆகச்சிறந்த நடிகர்கள் மிகச் சிறப்பாகச் செய்திருப்பதில் எந்தவொரு ஆச்சரியமும் இல்லை. இந்தப் படத்தின் எதிர்பாராத ஒரு ஆச்சரியம் தமிழ் நடிகர் சரத் குமாரின் நடிப்பே. பழசிராஜாவின் படைத் தளபதியான கொங்கன நாயராக நடித்திருக்கிறார் சரத் குமார். தளபதிக்கே உருவான திரண்ட உடல்வாகு, நிதானம், பணிவு, உடல் மொழி, பார்வையிலேயே உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் நடிப்பு என்று தான் இது வரை சென்றிராத நடிப்பின் எல்லைகளைத் தொட்டிருக்கிறார் சரத்குமார். சரத்குமாரின் உடல் வாகும், கம்பீரமான ஆளுமையும் ஒரு வீரம் நிறைந்த தளபதியின் பாத்திரத்திற்கு மிகக் கச்சிதமாகப் பொருந்தியிருக்கிறது. சரத்குமார் பிரமாதமாகச் செய்திருக்கிறார். அவருக்கு இந்தப் படம் பெரும் புகழை அளிக்கப் போவது உறுதி.

pazhassi-raja-14படத்தில் ஏராளமான வெள்ளைக்காரர்கள் நடித்திருக்கிறார்கள். அந்தக் கால பீரீயட் ஃபிலிம்களில் எல்லாம் கொஞ்சம் வெளுப்பான கலரில் இருக்கும் ஜாவர் சீத்தாரமனும், அசோகனும், எஸ் வி ரெங்காராவ்களுமே வெள்ளைக்காரர்களாக அவதாரம் எடுத்து விடுவார்கள். முகத்தில் கால் கிலோ பவுடரும் கொஞ்சம் மைதா மாவும் மட்டுமே இவர்களை வெள்ளைக்காரர்களாகக் காண்பிக்கப் போதுமானவயாக் இருந்ததும்,  தமிழை சற்று நீட்டிப் பேசி விட்டால் அது வெள்ளைக்காரர்கள் பேசும் ஆங்கிலமாக இருந்ததும் ஒரு காலம். நிறைய பிரிட்டிஷ் கதாபாத்திரங்கள் நிறைந்த இந்தப் படத்தில் ஒரிஜினல் பிரிட்டிஷ் நடிகர்கள் பலரும் நடித்திருக்கிறார்கள். ஹாலிவுட் நடிகர்களை வைத்து படம் எடுக்க இன்னமும் நிதிநிலமை இடம் கொடுக்காத போதிலும் நடித்த அத்தனை வெளிநாட்டு நடிகர்களும் தத்தம் பாத்திரங்களை வெகு கச்சிதமாகவே செய்துள்ளார்கள். மேஜர் கார்டனாக வரும் நடிகரும், கலெக்டர் தாமஸ் பேபராக வரும் நடிகரும் மிகக் கச்சிதமாக அளவாக உணர்ச்சிகளை வெளிப்படுத்துகிறார்கள். கவர்னர் டங்கனுக்கும் பழசி ராஜாவுக்கும் ஒப்பந்தம் நடைபெறும் காட்சியில் உணர்ச்சி வெள்ளம் இரு தரப்பின் மனதிலும் கொந்தளிக்கிறது. இருந்தாலும் இரு புறத்திலும் ஏற்படும் சேதத்தினைக் கருத்தில் கொண்டும், மக்களின் அமைதியான வாழ்க்கையினைக் கருத்தில் கொண்டும் இரு புறத்திலும் ஒரு வித சமாதான உடன்படிக்கைக்கு வருகிறார்கள். கோபம், ஆற்றாமை, அவமானம், வெறுப்பு, இயலாமை, விரக்தி என்று சகல உணர்வுகளும் உச்ச கட்ட கொதிநிலையில் நிலவிக் கொண்டிருக்கின்றன. அந்த சூழ்நிலையில் பழசி ராஜா எடுக்கும் முடிவை அனைத்துத் தரப்பும் அறியக் காத்திருக்கின்றனர். கவர்னர் டெங்கனின் கண்கள் சிவக்க கைகல் படபடக்க அமர்ந்திருக்கிறார். பழசி ராஜா தன் கோபத்தையும் உணர்ச்சிகளையும் கட்டுப் படுத்தி உடன்படிக்கைக்கு தன் நிபந்தனைகளுடன் ஒப்புதல் தருகிறார். உடன்படிக்கை ஏற்பாடு ஆனவுடன் அனைவரிடமும் ஒரு பெருமூச்சும் ஒரு வித ஆசுவாசமும் ஏற்பட்டு படபடப்புக் குறைகிறது. அந்த இடத்தில் தோன்றும் அத்தனை நடிகர்களும் அந்த சூழ்நிலையை முழுக்க உள்வாங்கி மிக அற்புதமாக நடித்திருக்கிறார்கள். நடிகர்களின் திறமையை வெளிப்படுத்தும் அருமையான இடங்களில் ஒன்று தலைச்சேரி கோட்டையில் நடைபெறும் அந்த உடன்படிக்கை காட்சி.

malayalam-movie-pazhassi-raja-photosஎம் டி வாசுதேவன் நாயரின் வசனம் பல இடங்களில் கனமாக வெளிப்படுகிறது. தன் மனைவியையும் பிற பெண்களையும் அரண்மனையில் விட்டு விட்டுத் தான் மட்டும் தப்பி ஓடும் பொழுது பழசி ராஜா கவலைப் படும் தன் மனைவியிடம் சொல்கிறார் “ஆயிரம்தான் இருந்தாலும் பிரிட்டிஷ்காரர்களுக்கு ஒரு வித அறம் உள்ளது,  எந்த நிலையிலும் பெண்களைக் கவர மாட்டார்கள் கவலைப் படாதே” என்ற வசனம் முகலாயப் படையெடுப்புக்களில் பெண்களைக் கவர்ந்து செல்லும் வழக்கத்திற்கும் பிரிட்டிஷ்காரர்களின் கட்டுப்பாட்டிற்கும் உள்ள வித்தியாசத்தைக் கூர்மையாகச் சொல்கிறது. பெருமானும், பகவதியும் குடி கொண்டிருக்கும் இந்த நாட்டில் வெள்ளையருக்கே ஏது உரிமை என்று பழசி ராஜா வெம்புகிறார். எனக்காக அழாதீர்கள், அடிமைப் பட்டுக் கிடக்கும் இந்த மண்ணிற்காக அழுங்கள் என்கிறார். தன் அடிமை நிலையை விரக்தியுடனும் வேதனையுடனும்  குமுறும் இடங்களிலும் வசனம் கூர்மையாகக் கையாளப் பட்டிருக்கிறது. வியாபாரம் செய்ய வந்த இடத்தை தங்கள் வசமாக்கிக் கொள்ளும் அந்த மண்ணின் மக்களை அடிமைப் படுத்தி நடத்தும் பிரிட்டிஷ்காரர்களைக் கூட இந்தப் படம் அரக்கர்களாகச் சித்தரிக்கவில்லை. அவர்களில் ஒரு சிலரிடமும் மனசாட்சி உறுத்துவது பல இடங்களில் சுட்டப் படுகின்றது. கலெக்டரின் காதலி, கவர்னர் டங்கன், கலெக்டர் தாமஸ் பேபர் என்று பலரிடமும் அந்த உணர்வுகள் காண்பிக்கப் படுகின்றன. இறுதியில் பழசி ராஜாவின் உக்கிரமான ஆவேசமான வீராவேசமான ருத்ரதாண்டவம் போன்ற ஒரு வீரத்தைக் கண்டு உறைந்து போயிருக்கும் கலெக்டர் தாமஸ் துப்பாக்கி பயன்படுத்துவதைத் தடை செய்து விட்டு கடைசி வரை பழசி ராஜாவை உயிருடன் கைது செய்து விடவே துடிக்கிறார். இறுதியில் சுடப் பட்டுக் கொல்லப் பட்ட பின்னரும் கூட இவன் ஒரு மாவீரன், மாபெரும் வாள்வீரன் இவனது வீரம் மதிக்கப் பட வேண்டும் என்று சல்யூட் செய்து பழசி ராஜாவிற்கு உரிய மரியாதையை அளிக்க உத்தரவிடுகிறார். அவர்களின் பல்லக்கிலேயே அவரது உடல் ஏற்றப் பட்டு அடக்கம் செய்யப் படுகிறது.

ஹரிஹரனின் முந்தைய படங்கள் போல இந்தப் படம் கேரளத்தின் பாரம்பரியத்தில் அதிக கவனம் செலுத்தவில்லை என்றும், ஒரு வடக்கன் வீரகதா போல ஆழமாக இல்லையென்றும் ஒரு சிலர் குறை சொல்கிறார்கள். நேரம் அதிகம் என்பது மற்றொரு குறையாகச் சொல்லப் படுகிறது. இந்தப் படம் கிட்டத்தட்ட மூன்றரை மணி நேரம் ஓடியது. ஆனால் எனக்கு மூன்று நிமிடங்கள் போலச் சென்றன, ஒரு ஃப்ரேம், ஒரு துளி கூட என்னை அலுக்கச் செய்யவில்லை. என் கவனத்தைச் சிதறச் செய்யவில்லை. அந்த மூன்றரை மணி நேரமும் நான் வயநாட்டின் அடர்ந்த கானகத்துக்குள்ளாக இருந்த உணர்வே மிஞ்சியது. வயநாட்டின் ஆதிவாசிகளையும் அவர்களுக்கும் பழசி ராஜாவுக்குமான உறவுகளை இன்னும் யதார்த்தமாகக் காட்டியிருந்திருக்கலாம். பழசி ராஜாவின் பலவீனங்கள் ஏதும் இருந்திருப்பின் அவற்றையும் இன்னும் யதார்த்தமாகக் காட்டியிருக்கலாம்

காட்சி பூர்வமாகவும், தொழில் நுட்ப நேர்த்தியிலும், நடிப்பிலும், இசையிலும், கதை சொல்லப் பட்ட உத்தியிலும், நடிப்பிலும், வரலாற்றை நேர்த்தியாகவும் உண்மையாகவும் சொன்ன விதத்திலும், கலை நேர்த்தியிலும், உன்னதமான இயக்கத்திலும், ஒருங்கிணைப்பிலும் இன்னும் எண்ணற்ற விதங்களிலும் இந்த பழசி ராஜாவின் வரலாறு ஒரு உன்னதமான சினிமா அனுபவமாக உருவெடுத்துள்ளது. இது போன்ற சினிமாக்கள் ஒரு நூற்றாண்டில் ஒரு முறையே உருவாகும் அபூர்வமான கலைப் படைப்புக்கள். மலையாளத்தின் பாரம்பரியத்தை, அக நெகிழ்ச்சிகளை, ஆழ் மனப் போராட்டங்களைச் சிறப்பாக காண்பிக்கும் கலைப் படங்கள் ஏராளமானவை இருக்கின்றன. இருந்தாலும் இந்த சினிமாவின் தளம் வேறு.  மேற்சொன்ன பல்வேறு காரணங்களினால் இந்திய சினிமா வரலாற்றில் தனக்கென ஒரு தனியிடத்தைப் பெறுகிறது.  இதன் பிரமிப்பை, தொழில்நுட்பங்களின் மேன்மையை, காட்சிகளின் அழகியலை அகண்ட திரையில் உரிய ஒலி அமைப்புகள் அமைந்த திரையரங்குகளில் மட்டுமே அனுபவிக்க இயலும்.

நாம் பெற்ற சுதந்திரம் இன்னும் ஒரு முறை அடகு வைக்கப் படாமல் இருக்கவும், நம் பெற்ற சுதந்திரத்தின் அருமையினையும், அதன் பின் சென்ற்றுள்ள லட்சக்கணக்கான தியாகிகளின், வீரர்களின் அர்ப்பணிப்பை நினைவு படுத்திக் கொண்டேயிருக்கவும் பழசி ராஜாக்கள் நமக்கு தேவையாக உள்ளன. பிரிட்டிஷ்காரர்களிடம் இருந்து எண்ணிலா தியாகங்கள் மூலம் பெற்ற நம் சுதந்திரத்தை நாம் இன்று குவட்ரோச்சிகளிடமும், ஊழல் ராஜாக்களிடமும், இத்தாலிய ராணிகளிடமும் இழந்து கொண்டிருக்கிறோம். நாமும் நம் வருங்காலச் சந்ததியினரும் இழப்பது எது என்பதை இந்தப்  பழசி ராஜா நமக்கு நினைவு படுத்தட்டும். படத்தை குழந்தைகளுக்கும், நம் இளைய தலைமுறைகளுக்கும் அவசியம் அறிமுகப் படுத்துங்கள். அவர்கள் தங்கள் பாடப் புத்தகங்களில் படிக்க நேரும் போலி வரலாற்றை விட உண்மையாகச் சொல்லப் பட்டிருக்கும் இந்த வரலாற்றை அறிந்து கொள்ளட்டும். நம் தேசத்தின் மீதும், பாடுபட்டுப் பெற்ற சுதந்திரம் மீதும் அவர்களுக்கும் பற்று வளரட்டும்.

20 Replies to “வயநாட்டுச் சிங்கம் பழசி ராஜா – ஒரு மாபெரும் சினிமா”

  1. Pingback: pligg.com
  2. மலையாள சினிமா என்றுமே யதார்த்தத்தைக் காட்டும் சினிமாக்கள்.

    Please avoid these kind of sweeping statements.
    How many films starring Prem Nazir, jeyan etc ( even earlier films of Mohanlal and Mammooty ) were real and classic ?
    Tamilhindu site seems to be promoting of late malayalam films through its reviews..Nothing against Malayalam, but there needs to be a balance in views.

  3. அருமையான விமர்சனம். நிச்சயம் படம் பார்க்கத் தூண்டும் வரிகள். நல்ல விவரனை.. பழசிராஜா போன்ற படங்கள் வெற்றியடைதல் வேண்டும். சரித்திரங்களெல்லாம் பாடப்புத்தகங்களிலிருந்து வேகமாக வெளியேறும் காலமிது. இப்படி ஏதேனும் திரைப்படங்கள் வந்து சொன்னால்தான் உண்டு..

    வாழ்த்துக்கள்…

  4. நல்ல தெளிவான விமர்ச்சனம். பார்க்க வேண்டும் என நினைத்திருக்கும் மிக சில திரைப்படங்களில் இதுவும் உண்டு. சினிமா என்ற கூட்டுமுயற்சியை வெறும் காசாக பார்க்கும் திரை சமூகத்தில் ஒரு சில இது போன்ற திரைப்படங்களாவது முயற்சி செய்யபடுவது ஒரு கைதட்ட கூடிய விஷயம் என்பது என் கருத்து.

  5. I like this type of film very much i dont think about this cinema for giving more details for our country details i first thank this website for give good news to me i really happy to see this film i am waiting for this cinema release.

  6. Raja

    I agree with you that many Malayalam movies are nor realistic. The word “Perumbaalaana” was missing in the article. I wanted convey the message “mostly Malayalaym industry present more realistic movies than others” Apart from that TH.com does not have any intention to promote any Malayalam movies. I’ve written reviews for some English and Hindi movies too. It is sad that the coverage of TH.com on some English and Tamil movies did not come to your notice. It is not the language, it is the content that attracts TH.com, I believe. At least i introduce any movie when it is related to the goals of TamilHindu.com, if they happened to be Malayalam it is just a coincidence only. As long as any movie has some message towards Indian nationalism or Hindu interest, I cover them as an intro to the readers. Normally I happened to see many movies very lately. Since I happened to this movie in Malayalam version last week which have relevance to the purpose of this site, I thought of covering it. Except for the stunt sequences most of the movie was realistically made. The only exaggeration in this movie is those hyped up stunt scenes.

    Bharathaputran, Ahori and Muthukumar, thanks for your comments.

    Thanks
    Viswa

  7. //
    Raja

    I agree with you that many Malayalam movies are nor realistic. The word “Perumbaalaana” was missing in the article. I wanted convey the message “mostly Malayalaym industry present more realistic movies than others” Apart from that TH.com does not have any intention to promote any Malayalam movies. I’ve written reviews for some English and Hindi movies too. It is sad that the coverage of TH.com on some English and Tamil movies did not come to your notice.
    //

    Viswamitra,

    I know that you did not really mean that !
    The article is really good and I do not have any eligibility to find minor faults. Just wanted to have some fun criticizing you 🙂
    btw..I am also sad about my loss of memory on your reviews on some English movies !
    Expecting more from you.

    -Raja.

  8. Thankyou for the great review.
    The choice of words were beautiful.
    I live near Thirupathi and speak little malayalam but I saw the film when I was in Kerala because they shot near my place.
    The movie is one of the best movies i saw in my life. and watching with kerala audience was great. they reacted for everything positively.
    There are some minor negatives like the flexibility of the stars in action.
    But it’s a justified compromise if you want their acting.
    And I don’t think we have any right to mention about negatives in this film especially considering the crass stupid films all the industries make these days.
    IT is a golden classic film which keeps our interest. The Direction was excellent.
    Hariharan really took us into that period and after the film you feel like you stepped out of a world. Mammootty was also so grand as the King. Wonder if anyone else has such presence.
    I was afraid when they said they were cutting some length in tamil. Every scene is so special and any change would reduce the impact.
    But i am glad to hear the tamil version is good. I hear there is also a telegu version.

    These kind of movies in such times is a blessing.
    I am happy the media is taking it up to promote.

  9. நல்ல இயக்குனரும், கதாசிரியரும் இணையும் போது சிறந்த படங்களுக்கான அடித்தளம் அமைகிறது. அதனுடன் சிறந்த கலைஞர்களின் பங்கேற்பு சிறந்த படத்தையளிக்கிறது. தமிழில் இதுபோன்ற முயற்சிகளே அனேகமாக இல்லை எனலாம். துணை நடிகைகள், நடிகர்கள் கும்பலாய் ஆட கதாநாயகியின் “மத்யப் பிரதேச” நடனமே திரைக்காவியம் எனவும் இயக்குநரின் சாதனை எனவும் பேசப்படுகின்றன. இந்த “குப்பை காட்சியமைப்புகளை” தற்போது மலையாளத்திரையுலகமும் வெகுவாக பயன்படுத்த ஆரம்பித்துவிட்டது. ப்ளெஸ்ஸி,(தன்மாத்ரா, காழ்ச்சா) சத்யன் அந்திக்காடு, ப்ரியதர்ஷன், சிபி மலையில்,கமல் போன்றோர் தரமான படங்களைத் தருகின்றனர். ஹரிஹரன் + M T வாசுதேவன் நாயர் கூட்டணி போல் தமிழ்த்திரையுலகில் அமையுமா என்பது சந்தேகத்திற்குரியதே. விஸ்வாமித்ராவின் விமர்சனம் ஆற்றொழுக்காய் அமைந்தவிதம் பாராட்டுக்குரியது. சரத்குமாரின் திறமையை ஏன் தமிழ் இயக்குநர்களால் சரியாக வெளிக்கொணர முடியவில்லை என்ற கேள்விக்கு பதில் அவர்களால் தரமுடியுமா என்பதும் தெரியவில்லை.

  10. //அந்தக் கால பீரீயட் ஃபிலிம்களில் எல்லாம் கொஞ்சம் வெளுப்பான கலரில் இருக்கும் ஜாவர் சீத்தாரமனும், அசோகனும், எஸ் வி ரெங்காராவ்களுமே வெள்ளைக்காரர்களாக அவதாரம் எடுத்து விடுவார்கள். முகத்தில் கால் கிலோ பவுடரும் கொஞ்சம் மைதா மாவும் மட்டுமே இவர்களை வெள்ளைக்காரர்களாகக் காண்பிக்கப் போதுமானவயாக் இருந்ததும், தமிழை சற்று நீட்டிப் பேசி விட்டால் அது வெள்ளைக்காரர்கள் பேசும் ஆங்கிலமாக இருந்ததும் ஒரு காலம்.//

    இது சரி காமெடி! (:-))

    //நாம் பெற்ற சுதந்திரம் இன்னும் ஒரு முறை அடகு வைக்கப் படாமல் இருக்கவும், நம் பெற்ற சுதந்திரத்தின் அருமையினையும், அதன் பின் சென்ற்றுள்ள லட்சக்கணக்கான தியாகிகளின், வீரர்களின் அர்ப்பணிப்பை நினைவு படுத்திக் கொண்டேயிருக்கவும் பழசி ராஜாக்கள் நமக்கு தேவையாக உள்ளன. பிரிட்டிஷ்காரர்களிடம் இருந்து எண்ணிலா தியாகங்கள் மூலம் பெற்ற நம் சுதந்திரத்தை நாம் இன்று குவட்ரோச்சிகளிடமும், ஊழல் ராஜாக்களிடமும், இத்தாலிய ராணிகளிடமும் இழந்து கொண்டிருக்கிறோம். நாமும் நம் வருங்காலச் சந்ததியினரும் இழப்பது எது என்பதை இந்தப் பழசி ராஜா நமக்கு நினைவு படுத்தட்டும். படத்தை குழந்தைகளுக்கும், நம் இளைய தலைமுறைகளுக்கும் அவசியம் அறிமுகப் படுத்துங்கள். அவர்கள் தங்கள் பாடப் புத்தகங்களில் படிக்க நேரும் போலி வரலாற்றை விட உண்மையாகச் சொல்லப் பட்டிருக்கும் இந்த வரலாற்றை அறிந்து கொள்ளட்டும். நம் தேசத்தின் மீதும், பாடுபட்டுப் பெற்ற சுதந்திரம் மீதும் அவர்களுக்கும் பற்று வளரட்டும்.//

    இது நெத்தியடி!

    விஸ்வாமித்ரா வாத்யாரே! சூப்பரா எயுதிக்கிறே நைனா! டேங்க்ஸுபா.

    வர்டா…

    மன்னாரு

  11. I thought Pazhasi Raja was just another Malayalam Film. But, the review by Viswamitra makes me to see that film with my children. Thnx.

  12. Watched in Tamil.

    Amazing technical brilliance ! A must watch !
    Tamil people will come to know of neighboring Kerala’s culture better by these films.

  13. இது போன்ற படங்களை மிகப் பெரும் வெற்றியடையச் செய்வதன் மூலம் இந்த தேசத்தின் கௌரவம் மிகுந்த பழம்பெருமை வாய்ந்த இது போன்ற தலைவர்களுக்கு நாம் மீண்டும் உயிர் கொடுக்கமுடியும்;

    பணம் சம்பாதிக்கவேனும் இன்னபிற முத்துக்களையும் உயிரோவியமாகக் காணும் பாக்கியமும் வரும் தலைமுறையினருக்குக் கிட்டும்;அந்த கால படங்களுடன் ஒப்பிட்டு (கிறிஸ்மஸ் மரம் போன்ற வர்ணனைகள் தேவையற்றது; ஏன் சோளக் கொல்லை பொம்மைகள் என்று சொல்லக்கூடாதா…?) உயிரோட்டமுள்ளதொரு விமர்சனத்தை விருப்புவெறுப்பில்லாமல் படைத்திருக்கும் விஸ்வாமித்ரா அவர்களுக்கு வாழ்த்துக்கள்..!

  14. for youth -> This is boring movie. They tried to make movie like Brave heart but slow screen play and length of the movie has screwed it up

  15. இந்தத் திரைப்படத்தை ஆலுவா என்னும் கேரள நகரிலுள்ள ஒரு திரையரங்கில் பார்க்க நேர்ந்தது. மலையாள மொழியில் வெளியிட்டிருந்தார்கள். எனக்கு மலையாளம் தெரியாது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் தீபாவளி வெளியீடாக இது வெளிவந்தது. மொழி தெரியாவிட்டாலும் கதை ஓட்டம் புரிந்தது. என் மனத்தைத் தொட்ட அற்புதமான படம். தேச பக்தி கொண்ட உண்மையான ஒரு வீரனின், வீரப் பெருமக்களின், கதையாக இருந்தது. அக்கதையின் மூலமும் உட்பகைதான் நம் தோல்விகளுக்கெல்லாம் காரணம் என்பதும் புரிந்தது. தமிழகத்திலும் இது மொழி மாற்றம் செய்யப்பட்டு வெளியானது. ஆனால் வரவேற்பு இல்லை. திரைத்துறையை முழுமையாக எதிர்க்காமல் நாம் இருப்பதற்கு இத்திரைப் படம் போன்ற ஆக்கங்களும் முக்கியக் காரணங்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *