ஸ்ரீ ராமகிருஷ்ண தபோவனத்தின் ஸ்தாபகர் சுவாமி சித்பவானந்தர் 1958 இல்வெளியிட்ட சந்தேகம் தெளிதல் எனும் நூலின் பாகம்-1 இல் உள்ள ஒரு கேள்வி பதில்.
கேள்வி: பிரம்ம சூத்திரத்தின் முதல் அத்தியாயம் மூன்றாம் பாதம் 34 முதல் 38 வரையில் உள்ள சூத்திரங்களில் சூத்திரர்கள் வேதாத்யயனம் செய்வதோ, பிரம்ம வித்தையைக் கற்றலோ வாசித்தலோ கூடாது என்று இருக்கிறது. பிரம்ம சூத்திரம் பிரஸ்தான த்ரயத்தில் ஒன்று என்று சொல்லியிருக்கிறது. ஆகையால் சூத்திரர்கள் பிரம்ம சூத்திரம் வேதம் முதலியவைகளைக் கற்கலாமா? கூடாதா? சூத்திரர்கள் என்பவர் யார்?
இங்கு எழுந்துள்ள கேள்விகளுக்கு மட்டும் விடை கொடுத்துவிட்டு நாம் நின்றுவிடுவோமானால் அது அரைகுறையான விடையாய்விடும். பல முக்கியமான கருத்துக்கள் ஒருவாறு ஆராய்ந்ததும் ஆராய்ச்சி செய்ததுமாகிய நிலையில் விட்டுவைக்கப் படுவனவாகும். ஹிந்து தர்மத்தைப் பற்றியே அதைப் பின்பற்றுபவர்களுள் சிலர்க்கிடையிலும், புறமதஸ்தர்களுக்கிடையிலும் விபரீதமான அபிப்பிராயங்கள் இருந்து வருகின்றன. அவைகளையெல்லாம் நம்மால் இயன்றவரை அகற்றி வைப்பது நம் கடமையாகும்.
ஹிந்து மதம் உலகிலுள்ள மதங்களுக்கெல்லாம் தாய் மதம் என்று அமெரிக்க சர்வமத மகாசபையில் விவேகானந்த சுவாமிகள் பகர்ந்துள்ளார். அப்படி அவர் இயம்பியது தமது சொந்த ஹோதாவில் அல்ல. வாழையடி வாழையாக வந்துள்ள நம் நாட்டு மஹரிஷிகளின் பிரதிநிதியாயிருந்து அவர் அங்ஙனம் பகர்ந்தருளினார். ஹிந்து மதத்தில் யாரையாவது விலகிவைத்தல் (exclusion) என்பது மட்டும் இடம் பெறக்கிடையாது என்று அவர் வைதிக மதத்தைப் பெருமை பாராட்டினார். அத்தகைய வேதாந்தத்தினுள் சிறுமையும் அற்பத்தனமும் எவராவது நுழைத்துவிடக் கிடையாதா? இதை ஆராய்வதற்குஆதாரங்கள் வேண்டியவளவில் இருக்கின்றன. இங்கு எழுந்துள்ள கேள்வியே அதைச் சுட்டிக்காட்டுகிறது.
மலையுச்சியினின்று பார்த்தால் மேடுவும் மடுவும் தென்படமாட்டா. பரந்த வெட்டவெளியே தென்படும். காலம் எனும் மலையுச்சியினின்று பார்த்தால் ஹிந்து மதத்தின் மகிமையும் அதே பாங்கில் பரந்த ஞான வெளியாகப் புலப்படும். கணக்கற்ற மேலாம் கொள்கைகளையெல்லாம் அது தன்னகத்து அடக்கியது என்பது புலப்படும். சுருங்கச் சொல்லின் சர்வமத மஹாசபை என்பதும் வேதாந்த தர்சனம் என்பதும் ஒரே பொருளைக் குறிப்பவைகளாம். அத்தகைய பரந்த பாரமார்த்திகப் பொக்கிஷத்தினுள் ஏதோ சிற்சில இடங்களில் மாசும் படிந்து விடுமானால் அதில் வியப்பு ஒன்றும் இல்லை. அத்தகைய மாசு எவ்விதத்திலும் அதன் உயர்வைக் கெடுத்துவிடாது. கடலினுள் அழுக்குப் படிந்த நீர்ப்பரப்பு கடலின் மகிமையைக் குறைத்துவிடுவதில்லை. அதே விதத்தில் ஹிந்து மதத்தின் மகிமை மாசற்றதாக என்றென்றும் மிளிர்ந்து கொண்டிருக்கிறது. பிரபஞ்சத்திலுள்ள உயிர்களெல்லாம் அறிந்தோ அறியாமலோ பரம்பொருளை நோக்கிப் பயணப்பட்டுக் கொண்டிருக்கின்றன. அவ்வுயிர்களின் பயணத்தில் ஒவ்வொன்றுக்கும் ஏற்ற ஊக்கத்தையும் உதவியையும் ஆங்காங்கு எடுத்து வழங்குவதே வேதாந்தத்தின் கோட்பாடு ஆகும். எவ்வுயிரையாவது எப்பொருளையாவது சிறுமைப்படுத்துவதும் தடைப்படுத்துவதும் வேதாந்தக் கோட்பாடு ஆகாது. பல்லாயிரம் ஆண்டுகளாக வேதாந்த தரிசனம் எல்லாப் படித்தரங்களிலும் இருக்கின்ற உயிர்களுக்குப் பாரமார்த்திகப் பெருவாழ்வைத் தக்கமுறைகளில் எடுத்து வழங்கி வந்திருக்கிறதென்பது அறிவுடையோர்க்கு நன்கு விளங்கும்.
அதிகாரி பேதம் என்பதை ஹிந்து மதம் அல்லது வேதாந்தம் முற்றிலும் அங்கீகரிக்கிறது. அவரவர் ஜீர்ண சக்திக்கேற்ற பிரகாரம் உணவை வழங்குவது போன்று மக்களின் பரிபாகத்துக்கேற்றவாறே பிரம்ம வித்தையை எடுத்துப் பரிமாற வேண்டும் என்பது கோட்பாடு. இத்தனை ஆயிரம் ஆண்டுகளாக இக்கோட்பாடு வெற்றிகரமாகவே அனுஷ்டிக்கப்பட்டு வந்திருக்கிறது. அவரவர் தகுதிக்கேற்ற மார்க்கத்தை சான்றோர் உயிர்களுக்குக் காட்டியிருக்கின்றனர்.
வேதத்தில் கர்மகாண்டம் என்றும் ஞானகாண்டம் என்றும் இரண்டு பகுதிகள் உண்டு. கர்மகாண்டத்தில் பிரவேசிக்கின்றவன் அதற்கேற்ற தகைமையுடையவனாக இருக்க வேண்டும்; சம்ஸ்காரம் பெற்றவனாக இருக்கவேண்டும் என்று பகரப்படுகிறது. உபநயனம் அல்லது லட்சியத்தின்பால் நடாத்தப்படுதல் என்பது அதன் பொருள். அப்படி நடாத்தப்பெறுகின்ற மாணாக்கர்களுள் தலை மாணாக்கன் அந்தணன், இடை மாணாக்கன் சத்திரியன், கடை மாணாக்கன் வைசியன், வைதிக கர்மத்துக்கு ஏற்ற தகுதி சற்றேனும் இல்லாதவன் சூத்திரன். இப்படி மக்களை நான்கு வகைப்படுத்தினர் பண்டைப் பெரியோர். எக்காலத்திலும் எல்லாச் சமுதாயங்களிலும் இத்தகைய பாகுபாட்டைக் காணலாம். இது இயற்கையின் அமைப்பு. இதை அறிந்துகொண்டு அதற்கேற்ற முறைகளைக் கையாளுதல் அறிவுடையோர் செயல். நான்கு வர்ணத்தின் அமைப்பு என்பது இதுவே. நல்வினை எதையும் தானே ஆற்ற இயலாதவன், அறிவு மழுங்கியிருப்பவன், சர்வ காலமும் துன்பப்படும் தன்மையிலிருப்பவன் சூத்திரன் என்பதாகும். அறிவு வளர்ச்சியை அவன்பால் காண்பது அரிது. நுண்ணிய கரும விதிகளை முறையாக அனுஷ்டிப்பது அதிலும் கடினமானது. ஆகவே சூத்திரன் வைதிக கர்மத்துக்கு அதிகாரியல்ல. இது பிறப்பை முன்னிட்டதுமன்று, இனவேற்றுமையை வளர்ப்பதற்காக அமைந்ததுமன்று. பரிபாகத்திலுள்ள ஏற்றத்தாழ்வை அங்கீகரிப்பதாக அமைந்துள்ள ஏற்பாடாகும்.
வேதத்தையும் வேதாந்தத்தையும் வாழ்க்கையில் அனுஷ்டிக்க வல்லவர்கள் யாரோ அவர்கள் அதிகாரிகள் ஆகின்றனர். அனுஷ்டிக்க இயலாதவர்கள் அதிகாரிகள் ஆகமாட்டார்கள். அதற்கேற்ற பரிபாகம் இன்னும் அவர்களுக்கு வரவில்லை என்பதுதான் அதன் கருத்து. தக்க அதிகாரிகள் வாயிலாகப் பல்லாயிரம் ஆண்டுகளாக வேதாந்தம் நன்கு காப்பாற்றி வைக்கப்பட்டிருக்கிறது. இதற்குப் பண்டைப் பெருமக்களுக்கு நாம் என்றென்றும் நன்றியுடையவர்களாக இருந்தாக வேண்டும். ஞான வாழ்க்கைக்கு தகுந்த அதிகாரி இல்லாது போனால் அது க்ஷீணித்துப் போய்விடும். ஆதலால் தகுந்த சத்பாத்திரங்களைக் கொண்டு அதைக் காப்பாற்றி வைப்பதே ரிஷியக்ஞம் என்பதாகும். இது முறையாக நடைபெற்று வந்திருப்பது பாராட்டத் தக்கதேயாம்.
உபநிடதங்கள் பிரம்ம சூத்திரங்கள் பகவத் கீதை ஆகிய இம்மூன்றும் பிரஸ்தானத் திரயங்களே (வேதாந்தத்தின் மூன்று ஆதார நூல்கள்) என்பதில் ஐயமில்லை. பிரம்ம வித்தையைப் புகட்டுவதுதான் இவற்றின் லட்சியம்.. பிரம்ம வித்தைக்கு ஏற்ற சத்புருஷர்கள் யார் என்பதைப்பற்றியும் ஐயம் திரிபு அற அவைகள் விளக்கியிருக்கின்றன. உயிர்களெல்லாம் தங்கள் சொரூப ஞானத்தை அடைய அல்லது பிரம்ம ஞானத்தை அடைய முயன்று கொண்டிருக்கின்றன என்பதுதான் வேதாந்தத்தின் சாரம். அதற்குத் தகுதியுடையவர் விரைவில் ஞானத்தைப் பெற்றுவிடுகின்றனர். தகுதியில்லார் தகுதியடையும் வரை பல பிறவிகள் எடுத்து முயன்றாக வேண்டும். இங்ஙனம் வேதாந்தம் பகர்கின்றது. இயற்கையில் நாம் காணும் காட்சியும் இதற்குச் சான்று ஆகும்.
எக்குடியில் பிறந்தவன் ஆயினும் அவன் ஈஸ்வர விபூதிகளையெல்லாம் அடையப் பெற்றிருக்கலாம். அவன் அவதார புருஷனாக ஆன்றோர் அனைவராலும் ஆராதிக்கப்பட்டு வருவதற்கும் சான்றுகள் வேண்டியவாறு காணலாம். இடையர் குலத்தில் பிறந்து வளர்ந்த கண்ணனைக் கடவுள் என்றே ரிஷிகள் போற்றி வந்துள்ளது இதற்கு நல்ல எடுத்துக்காட்டு ஆகும். ஆக, இந்தியன் ஒருவனுக்கு பிறப்பு முட்டுக்கட்டை என்பது பரந்த ஹிந்துமதத்தின் ஐதிகத்தில் இல்லை.
பிரம்ம சூத்திரங்களில் முதல் அத்தியாயம் பாதம் 3 இல் 34 முதல் 38 ஆவதுவரையில் உள்ள சூத்திரங்கள் வேதத்துக்கும் வேதாந்தத்துக்கும் அதிகாரியில்லாதவர் யார் என்னும் கேள்வியை எடுத்துக்கொள்கிறது. சூத்திரர் அவைகளுக்கு அதிகாரியல்ல என்று சொல்லுவதில் அர்த்தம் உண்டு. குணத்திலும் கர்மத்திலும் பண்படாதவன் ஒரு நாளும் அதிகாரி ஆகமாட்டான். ஒருவனுடைய குணத்தையும் கர்மத்தையும் நிர்ணயிப்பதற்குப் பிறப்பு முக்கிய காரணமாகாது. பண்பும் செய்தொழிலுமே அவன் பரிபாகத்தை விளக்கிவிடும். பிறப்பை முகாமையாக வைத்துக் கொண்டு நான்கு வர்ணங்களையும் நிர்ணயிப்பது தத்துவத்துக்கு ஒவ்வாத பிரிவினையாகும். உலக மக்களது வாழ்க்கையை ஆராய்ந்து பார்த்தாலே இந்த உண்மை நன்கு விளங்கும். பிறப்பை அடிப்படையாகக்கொண்டு ஒரு மனிதன் பிரம்ம ஞானத்துக்குத் தகுதியற்றவன் ஆகிவிடுகிறான் என்னும் கோட்பாடு உபநிடதங்களில் இல்லை.
இனி ஸ்மிருதி என்று எடுத்துக்கொண்டால் பகவத் கீதையைத்தான் ஸ்மிருதி என்று எடுத்துக்கொள்ளும் வழக்கம் இருந்து வருகிறது. பகவத் கீதையில்,
”யார் என்னை எப்படி வழிபடுகிறாரோ அவருக்கு நான் அப்படியே அருள்புரிகிறேன். பார்த்தா மக்கள் யாண்டும் என் வழியையே பின்பற்றுகின்றனர். கேடு மிக உடையோனும் வேறு ஒன்றையும் எண்ணாது என்னைப் பஜிப்பானானால் அவன் சாது என்றே கருதப்பட வேண்டும். ஏனென்றால் அவன் நன்கு தீர்மானித்தவன் ஆகிறான். பார்த்தா, பெண்களும் வைசியர்களும் சூத்திரர்களும் அவ்வாறே. பாவச்சூழலில் பிறப்பவர்களும் என்னைச் சார்ந்திருந்து நிச்சயமாகப் பரகதிஅடைகின்றனர்.” (கீதை 9:30 & 32)
இவ்வாறு பகரப்பட்டிருக்கிறது. ஆக, ஸ்மிருதியினின்றும் நமக்குக் கிடைக்கும் பிரமாணம் மக்கள் எல்லாரும் பிரம்மஞானத்துக்கு தகுதியடைந்து வருகிறார்கள் என்பதேயாம். உலகிலுள்ள வெவ்வேறு மதங்களைப் பின்பற்றிச் சிறந்த ஞானிகள் ஆகியுள்ள சான்றோர்களது வரலாறுகளை ஆராய்ந்து பார்த்தாலும் இப்பேருண்மை விளங்கும்.
பிரம்ம சூத்திரங்களில் இந்த ஐந்து சூத்திரங்களுக்குப் பாஷ்யக்காரர் எடுத்துக்கொள்ளும் வியாக்கியானம் விந்தைக்குரியதாக இருக்கிறது. வியாக்கியானம் போகும் போக்கின் கருத்தை வேறொரு உபமானத்தைக் கொண்டு விளக்கினால் மற்றவர்களுக்கு அது எளிதில் விளங்கிவிடும். அதாவது ஒருவன் ஏழையின் வயிற்றில் பிறந்திருக்கிறான். அவனிடத்து செல்வமில்லை. ஆகையால் அவன் ஏழை. ஏழையாக இருப்பதால் பணம் தேடுவதற்கு அவனுக்கு அதிகாரமில்லை. பணம் தேட முயற்சி செய்தால் எல்லாவிதமான நடவடிக்கைகளையும் எடுத்துக்கொண்டு அப்படிப் பணம் சம்பாதிக்காது ஒருவனைத் தடுத்துவிட வேண்டும். சூத்திரன் ஒருவன் வைதிக ஸம்ஸ்காரத்துக்கு ஆசைப்படுவதும், பிரம்ம வித்தைக்கு நாட்டம் கொள்வதும் இப்பாங்கில் விலக்கப்படுகின்றன. இனி ஒவ்வொரு சூத்திரத்தின் போக்கைக் சுருக்கமாக ஆராய்வோம்.
34, 35 ஆவது சூத்திரங்களில் ஜானசுருதி என்னும் அரசனை ரைக்வர் என்னும் ரிஷி (இவர் தொழிலால் வண்டி ஒட்டுபவர்) சூத்திரன் என்று திரஸ்கரித்தார். அதனால் வேந்தனுக்கு வியாகூலம் வந்துவிட்டது. ஜானசுருதி உண்மையில் சூத்திரன் அல்லன். துக்கப்படுகிறவன் சூத்திரன். அந்தத் துக்கத்தை முன்னிட்டுத்தான் அவன் அங்ஙனம் அழைக்கப் படுகிறான் என்னும் கோட்பாட்டில் பாஷ்யம் போகிறது. பிறப்பை முதன்மையாக வைத்துக்கொண்டு பாஷ்யம் இங்கு விரிவடைந்து கொண்டு போகிறது என்றாலும் மனபரிபாகம் பிறப்பினும் முக்கியமானது என்னும் கோட்பாடு அதில் புதைந்து கிடக்கிறது. உண்மையை எவ்வளவு மறைக்க முயன்றாலும் அது ஏதேனும் ஒருவிதத்தில் முன்னணியில் வந்து நிற்கிறது. 37 ஆவது சூத்திரத்தில் ஜாபால சத்தியகாமனுக்கு பிரம்ம ஞானம் புகட்டியதற்குக் காரணம் யாது என்ற ஆக்ஷேபம் வருகிறது. அதாவது அவன் பொதுமாது ஒருத்தியினுடைய மகனாக இருந்தமையினால் பிரம்மஞானத்துக்குத் தகுதியற்றவன் என தடை வந்தது. இந்தத் தடைக்குச் சமாதானம் வியப்புக்குரிய முறையில் பாஷ்யத்தில் வருகிறது. அவன் சத்தியத்தைப் பேசியதனால் அவன் பிராம்மணனாகத் தான் இருக்கவேண்டும் என்று குரு யூகித்தாராம். சத்தியம் பேசுபவர்களெல்லாம் மேல் வருணத்தார் என்பது யுக்திக்கு ஒத்தது. பிறப்பினும் பண்பாடே மேலானது என்பதை ஞாபக மறதியாக பாஷ்யக்காரர் ஒத்துக்கொள்கிறார். பிறப்பு வேற்றுமையை நிலைநாட்ட முயன்ற முயற்சி தமக்கே பிரதிகூலமாகப் போய்விடுகிறது.
38 ஆவது சூத்திரத்தில் ஸ்மிருதியும் ஆக்ஷேபணை செய்கின்றதனால் சூத்திரர்களுக்கு வேதாத்யயனமும் வைதிககர்மமும் பிரம்மஞானமும் வழங்கலாகாது என்று பாஷ்யக்காரர் முடிவு கட்டுகிறார். இங்கு ஸ்மிருதி என்று பகரப்படுவது ஐதிகமாக வந்துள்ள பகவத்கீதையை அல்ல. மனுஸ்மிருதியே பெரிதும் ஆதாரமாக எடுத்துக்கொள்ளப்படுகிறது. “வேதத்தை காதால் கேட்கின்ற சூத்திரனுடைய காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றவேண்டும், அரக்கைப்போட்டு அடைத்துவிட வேண்டும்” என்பது ஸ்மிருதி வாக்கியம். “சூத்திரன் ஒருவன் ஸ்மசானத்துக்கு ஒப்பானவன். ஆகவே அவன் அருகில் வேதபாராயணம் செய்யலாகாது. வேதத்தை அவன் உச்சரிப்பானாகில் அவனுடைய நாவைப் பிளந்துவிட வேண்டும். வேதத்தைக் காப்பாற்ற முயலுவானாகில் சரீரத்தை வெட்டிவிட வேண்டும்”. விதுரர், தர்ம வியாதர் போன்ற சூத்திரர்களுக்கு ஞானம் எப்படி வந்தது என்ற ஆக்ஷேபணைக்குப் பாஷ்யக்காரர் சமாதானம் கூறுகிறார். அது முற்பிறப்பில் செய்த நல்வினைப் பயனாம். இப்படியெல்லாம் சூத்திரன் ஒருவன் வேதத்துக்கும் வேதாந்தத்துக்கும் அருகதை உள்ளவன் அல்லன் என்று ஸ்மிருதியை மேற்கோளாகக் கொண்டு பாஷ்யம் எழுதப்பட்டுள்ளது. ”பிறப்பில் எல்லோரும் சூத்திரர். பிறகு ஸம்ஸ்காரத்தால் மேன்மக்கள் துவிஜர் ஆகின்றனர்” என்பதும் ஒரு ஸ்மிருதி வாக்கியம். பாஷ்யக்காரர் இதை மறந்துவிட்டார் போலும்.
சூத்திரன் ஸ்மசானத்துக்கு ஒப்பானவன் என்று ஸ்மிருதி பகர்கிறது. அக்காரணத்தை முன்னிட்டு அவனுக்கு அருகில் வேதாத்யயனம் நடைபெறலாகாதாம். ஸ்மிருதி பகர்வது போன்று ஸ்மசானம் அத்தகைய விலக்குதற்குரிய இடமன்று. உலகப்பற்றுடையார் வாழும் கிருகத்தைவிட அது புனிதமானது ஆகும். ருத்திர பூமி என்று அது பகரப்பெறுகிறது. ஸ்மசானவாசி என்பது சிவனுக்கு அமைந்த நாமங்களில் ஒன்று. ஸ்மசானத்துக்கருகில் வேத பாராயணம் செய்யலாகாதென்றால் சிவசன்னிதியில் அது செய்யலாகாது என்று பொருள்படுகிறது. இத்தகைய அனர்த்தமான கொள்கையை சான்றோர் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்.
காசிக்கே மஹாஸ்மசானம் என்பது ஒரு பெயர். காலமெல்லாம் ஆங்கு பிரேதங்கள் தகிக்கப்படுகின்றன. பிணம் வெந்துகொண்டிருப்பதற்கருகில் அமர்ந்து தியானம் செய்வது சிறந்த சாதனம் என்று ஆங்கு யதிகள் (துறவிகள்) அதைச் சர்வகாலமும் அனுஷ்டித்து வருகின்றனர். ஸ்மிருதியிலுள்ள கோட்பாட்டின்படி காசி க்ஷேத்திரமே வேத அத்யயனத்துக்கு தகுதியற்றதாகிறது. ஆனால் ஆங்குத்தான் கணக்கற யாகங்கள் நடைபெற்று வந்திருக்கின்றன. வேத வேதாந்த சிரவணத்துக்குத் தாயகமாகக் காசியம்பதி அமைந்திருக்கிறது.
உண்மையை ஆராயுங்கால் சூத்திரன் ஸ்மசானம் போன்றவன் அல்லன். யதி ஒருவனே நடமாடும் ஸ்மசானத்துக்கு ஒப்பானவனாவான். அவன் மாண்டு போனவனாக வைத்து ஆத்மபிண்டம் போட்டுக்கொள்கிறான். அதற்கு அவன் ஏற்ற அதிகாரியாயிருப்பானாகில் அக்கணம் முதற்கொண்டு அவனுடைய உடலம் பிரேதத்துக்கு ஒப்பானதாக அவன் கருதிக்கொள்கின்றான். ஆகையினால்தான் விவாகம் முதலியன நடைபெறும் இடங்களில் யதியின் மேனி தென்படலாகாது என்னும் ஐதீகம் வந்துள்ளது. இனி, ஸ்மிருதியைப் பின்பற்றுதலென்றால் யதியின் அருகில் வேதாத்யயனம் செய்யலாகாது என்பதாகும். இது பொருளற்ற கொள்கை என்பது சொல்லாமலே விளங்குகின்றது.
பிரம்மத்துக்கு அன்னியமாக ஒன்றும் இல்லவே இல்லை என்று அத்வைதத்தை ஸ்தாபிக்க வந்த ஆதிசங்கர பகவத்பாதர் இங்ஙனம் கூறியிருக்க முடியுமா என்னும் ஐயம் இயல்பாகவே எழுகிறது. இக்கொள்கை சங்கரருடையதோ அல்லது சங்கரர் பெயரால் பாஷ்யத்தினுள் இதை நுழைத்த வேறு யாருடையதோ நாம் உறுதி கூற முடியாது. இதைப் பகிர்ந்துள்ள மனிதர் பரிபாகம் எத்தகையது என்பது தெற்றென விளங்குகிறது. காசியில் கள்குடம் எடுத்து வந்த சண்டாளனை வணங்கி அபேத புத்தியைப் பெற்ற ஆதிசங்கரருக்கு இத்தகைய பேதபுத்தியும் கல்நெஞ்சமும் வந்திருக்க முடியுமா என்பது கேள்வி.
இனி இதில் அடங்கியுள்ள கோட்பாடுகளை ஆராய்வோம்.
மனு ஸ்மிருதி போன்றது காலத்துக்கேற்றவாறு மாறுபாடடையும் தன்மையுடையது. பெரும்பாலும் அது அரசர்களுக்குரியது. இக்காலத்தவர்களாகிய நமக்கு அவருணத்தார் என சொல்லப்படும் ஸ்ரீமான் அம்பேத்கார் தான் அவைத் தலைவராயிருந்து ஸ்மிருதியை (Constitution of the Republic of India) அமைத்திருக்கிறார்.
இது முற்றிலும் லௌகிகமானது. சங்கரர் போன்ற வேதாந்தி ஒருவருக்கு மனு ஸ்மிருதி பிரமாணமாகாது. இன்றைக்கு மனுஸ்மிருதியைக் கொளுத்த ஒரு கூட்டம் முன்வந்திருக்கிறது. ஆனால் அதைக் குறித்து அவர்கள் அவ்வளவுக்கு ஆத்திரப்பட வேண்டிய அவசியமில்லை. பயனற்ற பகுதிகளைக் கொண்ட அது தானே பின்னணிக்குப் போய்விட்டது. பொருட்காட்சிச் சாலையில் பல பண்டைப்பொருட்களைப் பாதுகாத்து வைப்பது போன்று இத்தகைய ஸ்மிருதிகளையும் பாதுகாத்து வைக்கலாம். என்னென்ன இயல்புடைய மாந்தர் முன்னாளில் இருந்திருக்கின்றார்கள் என்பதற்கு இத்தகைய ஸ்மிருதிகள் பிரமாணம் ஆகும்.
பாஷ்யக்காரர்களுடைய சில கொள்கைகளைக் குறித்து விவேகானந்த சுவாமிகள் பாஷ்யக்காரர்கள் பல தடவைகளில் வேண்டுமென்றே அல்லது அறியாமையினால் பொய் சொல்லியிருக்கிறார்கள் என்று தாக்கியுள்ளார். இது போன்ற பாஷ்யத்தை அங்ஙனம் வகைப் படுத்துவதற்கு இது இடம் கொடுக்கிறது. ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர் தமது சன்னியாசி சிஷ்யர்களுள் வெவ்வேறு குடிகளில் பிறந்தவர்களை
எடுத்துக்கொண்டார். அவர்களில் ஒருவர் லாட்டு எனும் சூத்திர இளைஞர். சூத்திரன் என்னும் சொல்லுக்குப் பிறப்பை முன்னிட்டு நாம் எனென்ன விளக்கம் தரமுடியுமோ அதெல்லாம் லாட்டு என்னும் இளைஞனுக்கு ஒத்ததாயிருந்தது. கல்வியறிவும் அவனுக்கு சிறிதும் கிடையாது. அத்தகைய இளைஞனை பரமஹம்சர் ஆட்கொண்டார். சன்னியாசி ஆக்கினார். அற்புதானந்த சுவமிகள் என்பது அவரது தீக்ஷாநாமமாகும். பரமஹம்சருடைய அற்புதச்செயல் என்றே அந்த சிஷ்யருடைய ஜீவிதத்தைச் சொல்லவேண்டும். பிரம்மஞானத்தைப் பற்றி உபநிடதங்கள் கூறும் கோட்பாடுகளெல்லாம் அவருக்கு சுகானுபவமாய் அமைந்திருந்தன.
இதையெல்லாம் ஆராயுங்கால் உண்மையான வேதாந்தம் எது, வேதாந்தத்தின் பெயரால் அதனுள் புகுத்தப்பட்ட கசடு எது என்பதை நாம் எளிதில் அறிந்துகொள்ளலாம். தத்துவ ஆராய்ச்சிக்கு ஒப்ப சூத்திரர் என்பார் மனபரிபாகம் அடையாதவர்; கற்றல் கேட்டல் விஷயத்தில் இன்னும் கீழான நிலையில் இருப்பவர். ஒரே குடும்பத்திலுள்ள சகோதரர்களில் ஒருவன் பிராம்மண இயல்பு உடையவராக இருக்கலாம், இன்னொருவன் க்ஷத்திரிய இயல்பு உடையவராக இருக்கலாம். வேறொருவன் வைசிய இயல்பு உடையவராக இருக்கலாம். மற்றொருவர் சூத்திர இயல்பு கொண்டவராக இருக்கலாம். இதுதான் இயற்கையின் நடைமுறைக்கு முற்றிலும் ஒத்ததாகிறது.பிறப்பை முன்னிட்டுப் பாகுபடுத்துவது ஏமாற்றத்தை உண்டு பண்ணும்.
பிரஸ்தானத்திரயத்தை இன்று உலகெங்குமுள்ள உத்தமர்களுக்கு வழங்குவதற்கென்றே ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சரும் விவேகானந்த சுவாமிகளும் தோன்றியுள்ளார்கள்.
விளக்கங்களுக்கும் தெளிவுபடுத்தியமைக்கும் ஆசிரியருக்கு நன்றி.
காலங்கள் மாறினாலும் மாறாத நீதிகளும் நியதிகளும் நம்முடைய மதத்தில் உண்டு. எடுத்துப் பரண் மேல் வைக்க வேண்டிய விழயங்களும் நிறைய இருக்கிறது.
இதில் எது வேண்டும் எது வேண்டாம் என்று முடிவு செய்யவேண்டிய பொறுப்பு சாஸ்திர ஞானம் உடையவர்களைச் சேர்ந்தது.பிற உயிர்களிடம் சம பாவம் கொண்ட மகான்களும் சில இடங்களில் சாஸ்திரக் கட்டுப்பாடுகளை மீறி இருக்கிறார்கள்.எருமை மாட்டு கூட வேதம் சொல்லியிருக்கிறது.சாந்த சக்குபாயிக்காக அவளுடைய கணவனின் காலைப் பிடித்திருக்கிறான் கண்ணன்.வேதம் பயில்வது தொடர்பான கேள்விகளை விவேகத்துடன் முன்வைக்கும் உரிமை நம் அனைவருக்கும் உண்டு.
தமில்ஹிந்து ஆசிரியர் குழு சில நியாயமான தர்கபூர்வமான கேள்விகளைக் கேட்டிருக்கிறது. இதில் உள்ள ஆர்வம் பாராட்டுக்குரியது.படகைக் கவிழ்க்காமல் பயணம் செய்யவேண்டும் என்ற எச்சரிக்கையை மட்டும் நினைவூட்ட விரும்புகிறேன்.
அய்யா இது தமிழ் ஹிந்து ஆசிரியர் குழு கேட்ட கேள்வி அல்ல. சந்தேகம் தெளிதல் எனும் தலைப்பில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு (இங்கு கொடுக்கப்பட்டுள்ளது சூத்திரனுக்கு பிரம்மஞானமும் வேதம் ஓதுதலும் உரித்தானதா என பிரம்மசூத்திர பாஷ்யத்தின் அடிப்படையில் ஒரு அன்பர் எழுப்பிய வினாவுக்கு) சுவாமி சித்பவானந்த மகராஜ் தர்மசக்கரம் இதழில் அளித்த பதில் பின்னர் நூலாக வெளிவந்தமையிலிருந்து இது கொடுக்கப்பட்டுள்ளது. எனவே இது ஒரு மஹான் காட்டிய மார்க்க தரிசனம். இப்பாதையில் பயணம் செய்வது கடும் புயலிலும் கரைச்சேர்க்கும். படகை கவிழ்க்குமோ எனும் கற்பனையே அவசியமற்றது.
இந்த தெளிவுரையை எழுதியது சுவாமி சித்பவானந்தர்.
பிறகேன் ஆசிரியர் “ஆசிரியர் குழு” என்று இருக்கிறது?
இந்த தெளிவுரையை எழுதியவர் பெயரை போடுதலே நியாயமானது.
நண்பரே,
இந்த விழயத்தை இங்கே பிரஸ்தாபித்தது தமிழ்ஹிந்து ஆசிரியர் குழு. ஏற்கனவே கேட்கப்பட்ட கேள்வியில் உடன்பாடு இருப்பதால்தானே அது இங்கே மறுபிரசுரம் செய்யப்படுகிறது. கேள்வி கேட்டவர் அன்பர், பதில் அளித்தவர் சுவாமி சித்பவானந்தர் அதை இங்கு மறுபிரசுரம் செய்தவர்கள் ஆசிரியர் குழுவினர் என்பதை கட்டுரையை படிக்கும் அனைவரும் சுப்பு உட்படப் புரிந்துகொண்டிருப்பார்கள் . கேள்வியின் வரலாற்றை சுருக்கமாக சொல்லும்போது `ஆசிரியர் குழு கேட்ட கேள்வி ` என்று குறிப்பிடுவதில் தவறு இல்லை என்று நினைக்கிறேன். இந்தப் புரிதலில் தவறு இருந்தால் நீங்கள் விளக்கலாம்.திருத்திக் கொள்கிறேன்.
மறுமொழிகளின் பயணம் இப்போதுதான் தொடங்கியிருக்கிறது.எச்சரிக்கை அவசியமா இல்லையா என்பதை முடிவில் தெரிந்துகொள்ளலாம்.
// இந்த தெளிவுரையை எழுதியது சுவாமி சித்பவானந்தர்.
பிறகேன் ஆசிரியர் “ஆசிரியர் குழு” என்று இருக்கிறது?
இந்த தெளிவுரையை எழுதியவர் பெயரை போடுதலே நியாயமானது.
//
அன்புடையீர், தலைப்பை மட்டும் படிக்காமல் கட்டுரைக்கு உள்ளேயும் படித்து விட்டித் தங்கள் கருத்தைச் சொல்வது நலம். எழுதியது சித்பவானந்தர் என்று தெளிவாகக் குறிப்பிட்டிருக்கிறோம்.
பழைய நூல்களில் இருந்து சில கேள்வி பதில்கள் மற்றும் கட்டுரைகளை அவ்வப்போது எடுத்து ஆசிரியர் குழு மீள்பதிவு செய்து வருகிறது என்பதை இந்தத் தளத்தைத் தவறாமல் படித்து வரும் வாசகர்கள் அறிவார்கள். இது அந்த வகையில் அடங்கும்..
இனிவரும் இத்தகைய மீள்பிரசுரங்களூக்கு “ஆசிரியர் குழு” என்பதை மாற்றி வேறு ஏதாவது சொல்லைப் போட முடியுமா என்பது பற்றி யோசிக்கிறோம். நன்றி.
//ஸ்ரீ ராமகிருஷ்ண தபோவனத்தின் ஸ்தாபகர் சுவாமி சித்பவானந்தர் 1958 இல்வெளியிட்ட சந்தேகம் தெளிதல் எனும் நூலின் பாகம்-1 இல் உள்ள ஒரு கேள்வி பதில்.//
முதல் வரியில் இது ஆசிரியர் குழு translate செய்திருப்பார்கள் என்று நான் புரிந்துக் கொண்டேன்.
// subbu
22 November 2009 at 10:03 pm
நண்பரே,
இந்த விழயத்தை இங்கே பிரஸ்தாபித்தது தமிழ்ஹிந்து ஆசிரியர் குழு. ஏற்கனவே கேட்கப்பட்ட கேள்வியில் உடன்பாடு இருப்பதால்தானே அது இங்கே மறுபிரசுரம் செய்யப்படுகிறது. //
அன்புள்ள சுப்பு அவர்களுக்கு, இதை மீள்பிரசுரம் செய்ததன் நோக்கம், அந்த நூலின் தலைப்பே கூறியது படி “சந்தேகம் தெளிதல்” என்பது. இத்தகைய சந்தேகங்கள் *பொதுப் புலத்தில்* உலவுகின்றன, எனவே அவற்றைத் தெளிவிக்கும் வகையில் மகான்கள் கூறியது என்ன என்பதைத் தெரிவித்தே ஆகவேண்டும் என்பதற்காகவே மீள்பிரசுரம் செய்கின்றோம்.
இதற்கு முன்பு, கீதையும், சீதையும் பெண்ணடிமைத் தனத்தை வலியுறுத்துகின்றனவா என்று ஒரு கேள்வி-பதில் வெளியிட்டிருந்தோம் . ஏனென்றால் அந்தக் கேள்வி *பொதுத் தளத்தில்* எழுப்பப் பட்டது (ஆசிரியர் குழுவால் அல்ல).
இந்தக் கேள்வி பதிலுக்கும் அதுவே பொருந்தும்.
The discussion, I humbly feel, should be on the merrits of the article, rather than spltiing hair on who wrote what and when and who should be given the due credits
Slightly off topic. Please look at this link. British children singing in Sanskrit in the palace, in London.. Will our “Sicklularists” allow this to happen in our parliment in Delhi?
https://www.youtube.com/watch?v=0M652COEqNg
the comments tend to deviate from the core of the article. the ongoing slinging match between sri.subbu and the tamilhindu editorial does not serve any purpose.
//ஹிந்து மதத்தில் யாரையாவது விலகிவைத்தல் (exclusion) என்பது மட்டும் இடம் பெறக்கிடையாது என்று அவர் வைதிக மதத்தைப் பெருமை பாராட்டினார். //
ஏட்டு சுரைக்காய் கறிக்குதவாது.
இப்போது நடைமுறையில் விலக்கிவைத்தல் என்பது சர்வசாதாரணமாக உள்ளதே? எப்போது இப்படியெல்லாம் பழம்பெருமை பாடுவதை விடுத்து, விலக்கப்பட்டவர் மற்றும் தாழ்த்தப்பட்டவர்கள் நலனுக்காய் ஏதாவது செய்வீர்கள்.
தமிழன்
//இப்போது நடைமுறையில் விலக்கிவைத்தல் என்பது சர்வசாதாரணமாக உள்ளதே?//
இருக்கிறது என்பது உண்மை. ஆனால் ‘சர்வசாதாரணமாக’ என்பது சிறிது ஓவராகத் தோன்றுகிறது.
அப்படி இருப்பவர்களுக்கு என்று அரசாங்கம் சலுகைகள் அறிவிக்கிறது, சட்டங்கள் இயற்றுகிறது. அனுபவிப்பவர்களேதானே அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள். கேடயங்கள் ஆயுதமாகத்தானே பல இடங்களில் பயன் படுத்தப்படுகிறது.
நம்மை ஆள என்று நம்மில் சிலரால்(எல்லோரும் ஓட்டு போடுவதில்லையே) அனுப்பப்படுபவர்கள் நம்மையே விலக்கி வைத்து விடுகிறார்களே. அதற்கு என்ன செய்வது?
வணக்கம்,
////இந்த தெளிவுரையை எழுதியது சுவாமி சித்பவானந்தர்.
பிறகேன் ஆசிரியர் “ஆசிரியர் குழு” என்று இருக்கிறது?////
இது போன்ற கேள்வி பலமுறை இங்கே பலரால் கேட்கப் பட்டு விட்டது.
நண்பரே இந்த தெளிவுரை சுவாமி சித்பவானந்தரால் எழுதப்பட்டது என்று ஆசிரியர் குழுவால் சுட்டிக்காட்டப்பட்டு இங்கே ஆசிரியர் குழுவால் தொகுத்து பதியப் படும்போது வேறு எப்படி போடுவது? நீங்கள் சொல்வது போல சுவாமிஜி அவர்களின் பெயரை போட வேண்டுமாயின் இது அவரது நேரடிப் பதிவாக இருக்க வேண்டும் அல்லவா?
//இருக்கிறது என்பது உண்மை. ஆனால் ‘சர்வசாதாரணமாக’ என்பது சிறிது ஓவராகத் தோன்றுகிறது.
அப்படி இருப்பவர்களுக்கு என்று அரசாங்கம் சலுகைகள் அறிவிக்கிறது, சட்டங்கள் இயற்றுகிறது. அனுபவிப்பவர்களேதானே அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள். கேடயங்கள் ஆயுதமாகத்தானே பல இடங்களில் பயன் படுத்தப்படுகிறது.
நம்மை ஆள என்று நம்மில் சிலரால்(எல்லோரும் ஓட்டு போடுவதில்லையே) அனுப்பப்படுபவர்கள் நம்மையே விலக்கி வைத்து விடுகிறார்களே. அதற்கு என்ன செய்வது?//
நண்பர் Armchaircritic,
நான் சொல்ல வந்தது, இடஒதுக்கீடு பற்றியோ, அரசியலை பற்றியோ அல்ல. இந்து வேதங்களை, ஏன் சேரிகளுக்கும், அரிசனமக்களுக்கும் யாரும் கொண்டு செல்வதில்லை? இவர்கள் ஆத்ம தாகத்துக்கு எதுவும் கிடைப்பதில்லை, கடைசியில் கிறிஸ்த்துவர்கள் அவர்களிடத்தில் பைபிளை தந்துவிடுகிறார்கள். அப்புறம் கிறிஸ்த்துவர்கள் அப்படி செய்கிறார்கள், இப்படி செய்கிறார்கள் என்று புலம்பி என்ன பயன்?
இப்படிக்கு,
தமிழன்
//இந்து வேதங்களை, ஏன் சேரிகளுக்கும், அரிசனமக்களுக்கும் யாரும் கொண்டு செல்வதில்லை? இவர்கள் ஆத்ம தாகத்துக்கு எதுவும் கிடைப்பதில்லை, கடைசியில் கிறிஸ்த்துவர்கள் அவர்களிடத்தில் பைபிளை தந்துவிடுகிறார்கள். அப்புறம் கிறிஸ்த்துவர்கள் அப்படி செய்கிறார்கள், இப்படி செய்கிறார்கள் என்று புலம்பி என்ன பயன்?//
அருமையான கருத்து. உங்கள் முதல் மறுமொழியில் எனக்கு விளங்கவில்லை. மன்னிக்கவும்.
மனிதர்களின் இந்த நால்வகைப் பாகுபாடு பிறப்பினால் விளைவதில்லை, அவரவர்களுடைய தன்மை சார்ந்த செயல்களால் மட்டுமே என்பதைத்தான் நமது நூல்கள் சொல்கின்றன என்பதை ஏன் எவ்வளவு எடுத்துச் சொன்னாலும் அது பதிய மறுக்கிறது? இதன் காரணத்தை நாம் ஆராய வேண்டும். இதில் அடியேனின் எண்ணம் கீழ்வருமாறு:
1. சாதாரண மக்களுக்கு மறைநூல்கள் நேரடியாக அணுகவியலாத மொழியில் உள்ளன.
2 . நேரடியாக அணுகக்கூடிய வகையில் அமைந்த நூல்களும் (உதாரணம், தமிழில் தேவாரம், திவ்யப்ரபந்தம், போன்றவை) மிகவும் இலக்கண சுத்தமாக இருப்பதால், பாமர மக்கள் (பெரும்பான்மையினர்) எளிதில் புரிந்துகொள்ளமுடியும் என்ற வகையில் உள்ளதாகச் சொல்ல இயலாது.
3 . பிறப்பால்தான் பாகுபாடுகள் என்னும் வகையில், பெரும்பான்மையினரின் நடவடிக்கைகள் உள்ளன . இது ஒரு பொய்யைப் பலதடவைக் கூறியபடி இருந்தால் அதுதான் உண்மை என சாதாரண மக்கள் பலரும் நம்பத் தலைப்படுவர் என்னும் முதுமொழிக்கேற்ப உள்ளது.
4 . பிரித்தாளும் சூழ்ச்சியில் ஈடுபடுவோருக்கு இந்த அறியாத்தனம் மிகவும் வசதியாக உள்ளது. எனவே அவர்கள் இந்தப் பொய்யை வலியுறுத்தியவாறே இருப்பர்.
5 . சாதாரண மக்களுக்கும் உண்மை என்ன என்பதை நேரிடையாக அறியும் ஆர்வமும் இல்லை.
6 . தெரிந்தவர்கள் தெரியாதவர்களுக்கு எடுத்தியம்பவேண்டும் என்னும் தார்மிகக் கடமை இல்லாதவர்களாக உள்ளார்கள்.
ஜாதி அடிப்படையிலான ரிசர்வேஷனை ஒழித்து ,கலப்பு திருமணம் செய்துகொண்டோருக்கே அரசு வேலைவாய்ப்பில் இடம் என்று அரசியல் சட்டத்தை திருத்தி எழுதினால் , ஜாதிகளும், ஜாதிச்சங்கங்களும், சாதிச்சங்கங்களை வைத்து பிழைப்பு நடத்தி, வோட்டு வேட்டை ஆடிவரும் அரசியல் பிழைப்போரும் துண்டைக்காணோம், துணியைக்காணோம் என்று தலைமறைவு ஆகிவிடுவார்கள். பெரும்பான்மை அரசியல்வாதிகள் ஜாதி வியாபாரிகளாக இருப்பதால் , எதிர்கால இளைய தலைமுறை இதற்கு நல்ல தீர்வு காணும் என்பது நமது நம்பிக்கை.
வேதம் அனைவருக்கும் உரியது. வேதத்தை ஓதுவதற்கும் வேதாந்த ஞானத்தை பெறுவதற்கும் அனைவருக்கும் உரிமை உண்டு என்ற சித்பவானந்த சுவாமிகளின் மிக்க ஏற்புடையது. வேதம் நம் பண்பாட்டின் ஆதார சுருதி. வேதத்தை ஒருசிலருக்கு மட்டுமே ஒதுக்கீடு செய்ததால் தான் நம் தேசம் வீழ்ந்தது. அன்னை பாரதம் உயர்ந்திட வேத ஒலி திக்கெட்டும் முழங்கட்டும். வேதாந்த போதனை அனைவருக்கும் வழங்கப்படவேண்டும். நாம் வேத மந்திரங்களான ஸ்ரீ ருத்ரம், ஸ்ரீ சுக்தம், விஷ்ணுசுக்தம் போன்ற மந்திரங்களை செவி மடுப்போம். காயத்ரி மந்திரம் ஜெபிப்போம். வேதாந்த நூல்களான உபநிடங்களை வாசிப்போம். மெய்ப்பொருளை அனுபூதியில் உணர்வோம். வேதம் என்றும் வழி என்று கொட்டுமுரசே.
இந்தக் கட்டுரை இன்றைக்கு ஒரு கம்யூனிஸ்ட்டுக்கு பதில் சொல்ல உதவியாய் இருந்தது. மிக்க நன்றி.