புனிதமான போர்க்களம்

kurukshetra-gita-dwar இந்திய தேசிய நெடுஞ்சாலை எண் ஒன்று’ என்ற கெளவரத்தைப் பெற்றிருக்கும் பரபரப்பான டெல்லி – பதான்கோட் 6 வழிச் சாலையில் சென்றுகொண்டிருக்கும் நம்மைச் சட்டென்று கவரும் அந்த பிரமாண்டமான நுழைவாயிலும் அதன் மீதிருக்கும் கீதோபதேசச் சிற்பமும் நாம் பார்க்கப் போய்க்கொண்டிருக்கும் ‘குருஷேத்திரா’ நகர் அதுதான் என்பதைச் சொல்லுகிறது. பல பஞ்சாப்-ஹரியான் கிராமங்களைப் போல குருஷேத்திராவும் மெல்ல மெல்ல தனது கிராம முகத்தை இழந்து நகரமாகிக் கொண்டிருப்பது அதன் வீதிகளில் தெரிந்தாலும், நகர் முழுவதிலும் சாலைச் சந்திப்புகளில்  காணப்படும் அர்ஜுனன் சிலை, விஷ்ணு சக்கரம் தாங்கிய பகவானின் விரல், கீதையின் வாசகங்கள் பொறிக்கப்பட்ட பாறைகள் முதலியவை அந்த இடத்தின் அழகான பாரம்பரியத்தைத் தெளிவாகச் சொல்லுகின்றன.

“புனித கீதை பிறந்த இடத்தைப் பார்க்க எப்படிப் போகவேண்டும்?” என்ற நமது கேள்விக்கு, “அதற்கு 10கீமீ போகவேண்டும்; எங்களூரில் அதைத் தவிரவும் பார்க்கவேண்டிய பல முக்கிய இடங்களிருக்கின்றன. பார்த்துவிட்டு அங்கே போங்களேன்,” டைட்டான ஜீன்ஸும், முழுக்கைச் சட்டையும் அணிந்திருந்த அந்த பஞ்சாபி பெண் சொன்னபோது முகத்தில் சொந்த மண்ணின் பெருமை தெரிந்தது.

kurukshetra-brahma-sarovarஅவர் தந்த பட்டியலில் முதலிடம் இந்தத் தீர்த்தம்.  1800 அடி நீளம் 1800 அடி அகலப் பரப்பில் பரந்து விரிந்திருக்கும் பிரம்ம ஸரோவரைப் பார்த்துப் பிரமித்து நிற்கிறோம். சரியாகத்தான் பெயரிட்டிருக்கிறார்கள். (ஸரோவர் என்றால் கடல்.) நீண்ட படித்துறைகள், அகன்ற பாதை, உடைமாற்றிக்கொள்ள வசதியாகக் கட்டப்பட்ட மண்டபங்களால் இணைக்கப்பட்ட சுற்றுப்புறப் பிராகாரம், அதன் மேல்தளத்திற்குப் போக படிகள், அங்கே வசதியாக உட்கார்ந்து இந்த அழகான அமைதிக்கடலை ரசிக்க ஆசனங்கள், எல்லாவற்றிக்கும்மேல் பளிச்சென்ற பராமரிப்பு. ஆச்சரியமாகவும் சந்தோஷமாகவுமிருக்கிறது.

கிரகண காலங்களில் இங்கு நீராட பல லட்சம் பத்தர்கள வருகிறார்கள் என்ற தகவல் பிரமாண்டத்திற்கான காரணத்தைப் புரிய வைத்தது. தீர்த்தத்தின் நடுவே ஒரு சிவன் கோயில். தீவாக இருந்த இந்தக் கோயிலுக்கு இப்போது எளிதில் போக ஒரு சிறிய பாலம். ஏரியில் நீர் ஏறினாலும் உள்ளே நீர் புக முடியாத வகையில் அமைக்கபட்டிருக்கும் அந்தச் சின்னஞ்சிறு அழகிய கோயில், பெரிய நீர்ப் பரப்பில் மிதக்கும் சின்ன படகைப் போல் இருக்கிறது.

இந்தப் புனித நீராடுமிடம், நகரின் நடுவிலிருப்பதால் விழாக் காலங்களில் மட்டும் வாகனங்கள் பயன்படுத்த, கரைகளை இணைத்துக் கட்டப்பட்டிருக்கும் பெரிய பாலம். பாலத்தில் நீர்ப்பரப்பைத் தழுவிவரும் குளிர்ந்த காற்றில் நடந்து மறுபுறம் வரும் நம்மைத் தாக்கும் மற்றொரு ஆச்சரியம், அங்கே கம்பீரமாக நிற்கும் பிரமாண்டமான அந்த வெண்கலச் சிற்பம்.

gitopadeshaகுழம்பிய முகத்துடன் நிற்கும் அர்ஜுனன்– வலது கரத்தில் குதிரைகளின் கடிவாளங்களை லாகவமாகப் பிடித்தபடி முகத்தைச் சற்றே திருப்பி அவருடன் பேசும் கண்ணண், சீறீப் பாயத் தயாராகவிருக்கும் குதிரைகள் என்று ஒவ்வொரு அங்குலத்திலும் உயிரோட்டத்தைக் காட்டும் அந்த பிரமாண்டமான கீதோபதேசக் காட்சி- சிற்பத்தின் செய்நேர்த்தி நம்மை அந்த இடத்திலியே கட்டிப் போடுகிறது. ஓடத் துடிக்கும் நான்கு குதிரைகள் காட்டும் வெவ்வேறு முக பாவனைகள், பறக்கும்கொடி தாங்கிய ரதத்தின் குடையின் முகப்பில் சிறிய ஆஞசனேயர் உருவம், குடையிலிருந்து தொங்கும் சிறுமணிகள்(*) போன்ற சின்னச் சின்ன விஷயங்கள் கூட நுட்பமாக வடிக்கப்பட்டிருப்பதில், உருவாக்கிய கலைஞர்களின் ஆத்மார்த்தமான உழைப்பை உணருகிறோம். எத்தனை பேர், எத்தனை நாள்கள் உழைத்தார்களோ என்று வியக்கிறோம்.

kurushetra-arjunaஅந்த வாளகத்தைவிட்டு வெளியே வந்து நடக்கும்போது, வீதி முழுவதும் பல அறக்கட்டளைகள் நிறுவியிருக்கும் கீதா மந்திர்கள். அம்புப் படுக்கையில் கிடக்கும் பீஷ்மருக்கு தன் பாணத்தால் அர்ஜுனன் நீலத்திலிருந்து நீர் வழங்கும் காட்சியையும், தன் குருதியாலேயே முதியவருக்குக் கர்ணன் தானம் தரும் காட்சியையும் சிலைகளாக்கி முகப்பில் நிறுத்தியிருக்கும் அந்த பிர்லா அறக்கட்டளையின் மந்திருக்குள் நுழைகிறோம். நிறுவிய காலகட்டதில் நவீனமாக இருந்திருக்கும் நகரும் பொம்மைகளாலான மஹாபாரதக் காட்சிகள் இன்று பொலிவிழந்தும் செயலிழந்துமிருக்கின்றன.

இவ்வளவு பெரிய அறக்கட்டளை, இதையேன் கவனிக்காமல் விட்டிருகிறார்கள் என்று எண்ணியபடியே நகரின் நடுவேயிருக்கும் அந்த உயரமான பெரிய உருளை வடிவக் கட்டடத்திலிருக்கும், “சயன்ஸ் செண்ட்டருக்குள்” நுழைகிறோம். முதல் தளத்தின் வட்டச் சுவர் முழுவதிலும் தரையிலிருந்து மேற்கூரை வரை 35 அடி உயர பாரதப் போரின் காட்சிகள் முப்பரிமாணச் சித்திரமாக நிற்கிறது. ஓளியமைப்பு, தொலைவில் ஒலிக்கும் மரண ஒலங்கள் மெல்ல கேட்கும் கீதை, சுற்றியிருக்கும் அந்த 18 நாள் போர்காட்சிகள், எல்லாம் சேர்ந்து, நடுவில் நிற்கும் நமக்கு ஒரு போர்க்களத்திலிருக்கும் உணர்வைத் தருகிறது. அந்தச் சூழ்நிலை தரும் மனஅழுத்தம், அந்தத் தரமான ஒவியங்களை ரசிக்க முடியாமல் செய்கிறது.

தரைத்தளத்திலிருக்கும் கருவூலத்தைப் பார்த்தபின் தான்–

  • பாண்டவ, கௌரவர்களின் மூதாதையர்களான குரு வம்சத்தினரின் முதல் அரசர் தவமிருந்து வரம்பெற்று உருவாக்கியது தான் பரத நாடு
  • குருஷேத்திரத்திற்கு வந்த சீன யாத்ரிகர் யூவான் சூவாங் தனது குறிப்பில் இந்த நகரைப் புகழ்ந்திருக்கிறார்
  • இந்த இடம் முகமதியர், சீக்கியர் புத்த மத்தினருக்கும் முக்கியமான வழிபாட்டு தலம்
  • கெளதம புத்தர், குரு கோவிந்தசிங், வந்திருக்கிறார்கள்

… போன்ற பல வியப்பான தகவல்களை அறிந்து கொள்கிறோம்.

kurukshetra-bhadrakali-shakthipeethநகரில் 300க்கும் மேற்பட்ட கோவில்களிருப்பதைவிட ஆச்சரியம் அவற்றில் தினசரி வழிபாடுகள் தவறாமல் நடைபெறுவதுதான், புனிதமான கீதைபிறந்த இடத்தைப் பார்க்கப் பயணத்தைத் தொடரும் வழியில் நாம் சென்ற இந்த பத்திரகாளி கோயில் தான் மிகமிகப் பழமையான சக்திபீடம். கிருஷ்ணரே வழிபட்டதாக அறியப்பட்டது. வேண்டிக்கொண்டபடி போரில் வெற்றி அருளியதால் பாண்டவர்கள் தங்கள் குதிரைகளையே அன்னைக்குக் காணிக்கையாகக் கொடுத்திருக்கிறார்கள். இன்றும் வேண்டுதல் பலித்தால் பத்தர்கள் சிறிய மண்குதிரை பொம்மையை காணிக்கையாகப் படைக்கிறார்கள். சன்னதியில் மலர்ந்த தாமரையில் நிற்கும் ஒரு துண்டிக்கப்பட்ட கால்; தேவியின் உடல் வெட்டி வீசப்பட்டு விழுந்த இடங்கள் எல்லாம் சக்திபீடங்கள் என்றும் இங்கு விழுந்தது கால் என்றும் அறிகிறோம். இப்படி, தனியாக அங்கம் மட்டும் வேறுஎங்காவது பூஜிக்கப்படுகிறதா என எண்ணிக்கொண்டே பயணத்தைத் தொடர்கிறோம்.

அறுவடை முடிந்து காய்ந்து கிடக்கும் நிலங்களையும் குடிசை வடிவில் அடுக்கப்பட்டிருக்கும் வைக்கோற்போர்களையும், நகர நாகரிகத்தின் நிழல்படாத சில அசலான ஹரியானா கிராமங்களையும் கடந்து நாம் வந்திருக்குமிடம் ஜ்யோதிஷர்.
மாங்கனி வடிவத்தில் பச்சை வண்ணத்தில் நீர் நிறைந்த ஒரு குளம். ஒரு புறத்தில் அல்லி பூத்திருக்கிறது, அதன் ஒரு கரையில் வழவழப்பான தரையுடன் பெரிய அரைவட்ட மேடை. அகலமான படிகள். நடுவே வலையிட்டு மூடிய ஒரு ஆலமரம். (குளத்தில் அதன் இலைகள் விழாமலிருக்கவும் பறவைகள் வந்து அமைதியைக் குலைத்து விடாமலிருக்கவும்) மரத்தைச் சுற்றி வெண் சலவைக்கல் மேடை. அதன் மீது கண்ணாடிக் கதவிடப்பட்ட சிறு மண்டபம். உள்ளே சலவைக் கல்லில் கீதா உபதேசக் காட்சி. மலர்கள் பரப்பிய தரையில் எரியும் ஒற்றை அகல். மரத்தின் அடியில் நடப்பட்டிருக்கும் சிறு கல். கொண்டுவந்த சிறு கீதைப் புத்தகங்களை மரத்தின் அடியில்வைத்து பூஜிப்பவர்கள், சற்றுதொலைவில் அமர்ந்து கீதை வாசிப்பவர்கள், தியானம் செய்பவர்கள், சன்னமான ஒலியில் ஸ்லோகம்… என அந்த இடம் ஒரு அழகான தெய்வ சன்னதியைப்போல் இருக்கிறது. கீதையின் முதல் ஸ்லோகத்தின் முதல் வரியில் சொல்லப்பட்டிருக்கும், “தர்மஷேத்திரம்” இதுதான்.

kurukshetra-banyan-treeஇந்தக் குளமும். ஆலமரமமும் தான் நடந்த பாரதப்போருக்கும், பகவான் ஸ்ரீகிருஷ்ணர் அர்ஜுனனக்கு கீதையை உபதேசித்ததற்குமான சாட்சி. அந்த மரத்தின் விழுதுகளில் வழித்தோன்றலாக எழும் மரங்களை பலஆயிரமாண்டுகளாக போஷித்துப் பாதுகாத்துவருகிறார்கள். தொடர்ந்து பராமரிக்கபடும் குளத்தையும், மரத்தையும் தரிசிப்பதைப் புண்ணியமாகக் கருதி வருபவர்களுக்கு, அருகிலேயே கீதைபிறந்த கதையை தினசரி இரவில் ஒலி, ஒளிக் காட்சியாகக் காட்டுகிறர்கள்
ஒருபுறம் ஆராய்ச்சியாளார்கள் பாரதப்போர் நிகழ்ந்த காலத்தை நிருபிக்க, சான்றுகளைத் தேடி சர்ச்சை செய்துகொண்டிருப்பதையும், மறுபுறம் காலம் காலமாக செவிவழிச் செய்தியாகச் சொல்லபட்ட இந்தச் சாட்சிகளே தெய்வமாக மதிக்கப்படும் விநேதத்தையும் என்ணிக் கொண்டே திரும்புகிறோம்..

“ கீதை எப்போது சொல்லப்பட்டது என்பது நமக்கு முக்கியமில்லை. அதில் என்ன சொல்லபட்டிருக்கிறது என்பது தான் முக்கியம்,” என்ற விவேகானந்தரின் அற்புதமான வாசகம் நினைவிற்கு வந்தது.

8 Replies to “புனிதமான போர்க்களம்”

  1. Thankyou for the article Mr V Ramanan.
    We have not gone there-but your description takes us there.
    Saravanan

  2. ரமணன்ஜி அவர்களுக்கு ,
    பணிவான வணக்கங்களுடன்
    நான் இதுவே உங்களது படைபினை முதன் முறையாக காண்கிறேன் ,நன்றாக இருந்தது. குருஷேத்ர நகர் பற்றிய தகல்கள் அருமை ,மேலும் இதுபோன்ற படைபுகளை உங்களிடம் எதிர் பார்ர்கிறேன்.
    ஒரு விண்ணப்பம்
    நம் தமிழகத்திலுள்ள கோவில்களையும் சரித்தர புகழ் பெற்ற ஹிந்து வரலாற்று சிறப்புகளையும் வெளிகொனருமாறு விழைகிறேன்

  3. மிக்க நன்றி திரு ரமணன் அவர்களே. சகோதரர் திரு சரவணன் கூறியதுபோல இது வரை கேட்டறியாத பார்த்தறியாத குருஷேத்ரத்தை நேரில் கண்டதுபோல் ஒரு இனிய உணர்வு.

  4. சிறப்பான பதிவு. அருமையான கட்டுரை.மேலும் மிக நல்ல பதிவுகளை உங்களிடமிருந்து எதிர்பார்கிறேன்.
    நன்றி . வாழ்க வளமுடன் . சாய்ராம் .

  5. ரமணன்ஜி அவர்களுக்கு ,
    நம் தமிழகத்திலுள்ள கோவில்களையும் சரித்தர புகழ் பெற்ற ஹிந்து வரலாற்று சிறப்புகளையும் வெளிகொனருமாறு விழைகிறேன்

    நன்றி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *