பண்டைக்குலமும் தொண்டக்குலமும்

sekkizharசாதியைப் பற்றித் தமிழ்ஹிந்துவிலும் பிற தளங்களிலும் எழுதப்படும் கட்டுரைகளிலும் மறுமொழிகளிலும் சைவநாயன்மார்கள் அறுபத்துமூவரில் ஒருவரான, திருநாளைப்போவார் நாயனார் என்று போற்றப்படுபவரான நந்தனார் பற்றிக் கட்டாயம் பேசப்படுகின்றது.

மூதறிஞர் இராஜாஜி போன்றவர்களால் சமூகஒற்றுமை குறித்து நந்தனார் வரலாறு பேசப்பட்டால், பகுத்தறிவாளர் என்றும் சமூகப்புரட்சியாளர் என்றும் தம்மைப் பிரகடனப் படுத்திக் கொள்வோரால் சமூகக் காழ்ப்புணர்ச்சியை வெளிப்படுத்துவதற்கும் பார்ப்பன சமூகத்தின்மீது வெறுப்பை உமிழ்வதற்கும் அச்சமூகத்தை சாதிக்கொடுமைக் காவலர்களாகவும் மனிதநேயமற்ற அரக்கர்களாகவும் காட்டுவதற்கும் பயன் படுத்தப்படுகின்றது.

நந்தனார் வரலாற்றை முதன்முதல் முழுமையாகக் கூறும் தெய்வச்சேக்கிழாரின் உள்ளக் கருத்திலிருந்து இவர்கள் எத்துணை தூரம் விலகிச் செல்லுகின்றார்கள், நந்தனாரைத் தங்கள் சமயத் தலைவராக, நாயனாராக ஏற்று வழிபடும் சைவர்கள் எப்படி நோக்குகின்றார்கள் என்பன சிந்திக்கத் தக்கனவாகும்.

தொகை வகை விரி:

திருநாளைப்போவார் நாயனாரை, முதன் முதலில் நம்பியாரூரராகிய சுந்தரமூர்த்திநாயனார், தம்முடைய திருத்தொண்டத் தொகையில்,

‘செம்மையே திருநாளைப் போவார் அடியாருக்கும் அடியேன்’

என்று குறிப்பிடுகின்றார். இத்தொடரில் உள்ள ‘செம்மை’ இங்குச் சிவனிடத்தில் அவருக்கு இருந்த நீங்காத பத்திநிலையை உணர்த்தும். செம்மைபுரி சிந்தையராய்த் திருநாளைப்போவார் என்ற பெயர் வாய்ந்த பெரியவருக்கும் நான் ஆளாவேன்’ என்பது இத்தொடரின் பொருளாகும்.

திருத்தொண்டத் தொகை எழுந்தவரலாறு திருத்தொண்டத்தொகைக்குத் தமிழ்ச் சைவர்கள் தரும் ஏற்றத்தை விளக்கும்.

‘மாதவஞ்செய் தென்திசை வாழ்ந்திடத்
தீதிலாத் திருத்தொண்டத் தொகைதர’,

நம்பியாரூரர் திருவெண்ணெய்நல்லூரில் சைவவேதியர் குலத்தில் திருஅவதாரம் செய்தார்.

நம்பியாரூரர் தம்முடைய சாதியாகிய சைவவேதியர் குலத்தில் தோன்றிய புத்தூர் சடங்கவி சிவாச்சாரியாரின் திருமகளாரைத் திருமணம் செய்துகொள்ளும்போது மறையவராக இறைவர் வந்து தடுத்தாட்கொண்டார். அப்பொழுது நம்பியாரூரர் தம்முடைய பிறப்பின் வழிச் சாதியை உயர்த்திப் பேசும் முறையில் “ஓரந்தணன் மற்றோர் அந்தணனுக்கு அடிமையாகும் வழக்கு உலகில் உண்டோ” என்று வாதிட்டார்.

சைவராஜதானியாகிய திருவாரூரிலே, திருத்தேவாசிரிய மண்டபத்திலே, ‘மண்மேல் மிக்கசீர் அடியார் கூடி , எண் இலார் இருந்த போதில்’ அவர்களைகண்டு, ‘இவர்க்கு யான் அடியேன் ஆகப் பண்ணும் நாள் எந்நாள்? ‘ என்று பரமர்தாள் பரவிச் சென்றார். பிறப்பால் தோன்றிய சாதி வேறுபாடு, ‘பரிபூரணனுக்கே அடிமை செய்து வாழும்’ தொண்டக் குலத்தில் அழிந்து விடும் என்று சிவபரம்பொருளே உணர்த்த, ‘ஓரந்தணன் மற்றோர் அந்தணனுக்கு அடிமையாதல் இல்லை’ என்றுதன் சாதிப் பெருமை பேசிய சுந்தரர், ‘திருநீலகண்டக் குயவனாருக் கடியேன்’, பாணனாருக் கடியேன்’ எனச் சமுதாயத்தில் கீழ்நிலையில் உள்ள சாதியில் பிறந்த அடியாருக்கும் அடியேன்’ என்று தம் அடிமைத் திறத்தை வெளியிட்டார்.

சிவதொண்டர்கள் இருபிறப்பாளர். தாய்தந்தையரால் வந்த பிறப்பு ஒன்று. அது சாதியைக் குறித்த பிறப்பு. சிவத்தொண்டராதல் இரண்டாம் பிறப்பு. அது பிறப்பால் தோன்றிய சாதியை அழித்துத் தொண்டர் அனைவரையும் ‘சிவகோத்திரத்தினர்’ ஆக்குகின்றது.

நம்பியாரூரர் திருத்தொண்டத்தொகை பாடியருளும்போது, ‘திருநாளைப் போவார்’ என்ற திருநாமம் மட்டுமே இறையருளால் அறியப் பெற்றிருந்தது. அவருடைய இயற்பெயர் முதலியன எதுவம் அறிய வராநிலையில், நம்பியாரூரர், ‘திருநாளைப் போவார் அடியாருக்கும் அடியேன்’ என்று பாடியருளினார்.

நம்பியாரூரருக்குப் பின் , திருநாரையூர்ப் பொல்லாப்பிள்ளையார் திருவருள் பெற்ற நம்பியாண்டார் நம்பிகளுக்குத் திருநாளைப் போவாரைப் பற்றிய மேலும் சில செய்திகள் தெரிய வந்தன. நம்பிகள் தாம் அருளிய ‘திருத்தொண்டர் திருவந்தாதி’யில் திருநாளைப் போவாரின் வரலாற்றை ஒரு பாடலில் பாடினார். அப்பாடல் –

“நாவார் புகழ்த்தில்லை யம்பலத் தானருள் பெற்றுநாளைப்
போவா னவனாம் புறத்திருத் தொண்டன்றன் புன்புலை போய்
மூவா யிரவர்கை கூப்ப முனியா யவன்பதிதான்
மாவார் பொழில்திகழ் ஆதனூர் என்பர்இம் மண்டலத்தே”

(திருத்தொண்டர்திருவந்தாதி, 20)

இந்தப் பாடலில் நாம் பெறுகின்ற செய்திகள்:
1. திருநாளைப்போவாரின் பிறப்பிடம் பொழில்கள் சூழ்ந்த ஆதனூர்.
2. புலைச்சாதியினர்.
3. தில்லையம்பலவாணரின்மேல் அளப்பரும் பத்தி உடையவர்.
4. தில்லையம்பலவாணர் அருளால் புன்புலை நீங்கப் பெற்றார்.
5. தில்லை மூவாயிர அந்தணரும் கைகுவித்துத் தொழும்படியான முனிவராயினார்.
6. ‘புறத்திருத் தொண்டன்’ என்றமையால் அவரது மரபும், தொண்டராயின நிலையும், மரபுக்கு ஏற்ப அவர் செய்த திருத்தொண்டுகளும் குறிக்கப்பட்டன.

நம்பியாண்டார் நம்பிகள் கூறிய செய்திகளுக்கு மேல் தெய்வச்சேக்கிழார், – அவர் சோழப்பேரசின் முதலமைச்சர் என்னும் தகுதியினார், பலசெய்திகளை அறிந்து, திருநாளைப் போவாரின் வரலாற்றை விரிவாகப் பாடினார். இவருடைய இயற்பெயர் நந்தனார் என்பதைச் சேக்கிழார்தாம் முதலிற் கூறினார்.

புலைச்சாதியிற் பிறந்து தம்முடைய முன்னுணர்வினால் சிவபத்தியை வளர்த்துக் கொண்ட நந்தனாரின் மனநிலையை சேக்கிழார் மிகத் தெளிவாகவும் யதார்த்தமாகவும் எடுத்துக் காட்டியுள்ளார்.

நந்தனாரின் மனநிலையை எடுத்துப் பேசும் முன் அவர் பிறந்து வளர்ந்து வாழ்ந்துகொண்டிருக்கும் புலைப்பாடியின் நிலைமையை சேக்கிழார் சொல்லோவியமாகத் தீட்டுகின்றார். அவர் பிறந்த குடியும் வாழ்ந்த சூழ்நிலையும் அவருடைய மனநிலையை உருவாக்கின.

இலைக்கூரை வேயப் பெற்ற குடிசைகள், அவற்றின் மீது சுரைக்கொடிகள், ஒழுங்கற்ற தெருக்கள், அவற்றில் குஞ்சுகளுடன் அலைந்து திரிந்து மேயும் கோழிகள், வார்கள் நெருங்கிய முற்றங்கள், அங்குக் கூரிய நகங்களையுடைய நாய்களின்குட்டிகளைக் கவர்ந்து அலைத்து விளையாடும் இரும்புக்காப்பணிந்த சிறுவர்கள், அந்த நாய்க்குட்டிகளின் மெல்லிய குரைப்பு சிறுவர்கள் இடுப்பில் அணிந்துள்ள இரும்புச் சதங்கையின் ஒலியை அடக்கி ஒலித்தல், பள்ளப்பெண்கள் மருதமரத்தின் கிளையில் கட்டித் தொங்கவிட்டுள்ள தோலாலான தொட்டிலில் குழந்தைகளை உறங்குவித்தல், வஞ்சி மரங்களின் மெல்லிய நிழலடியில் புதிக்கப்பட்ட பானைகளில் கோழிப் பெடைகள் முட்டையுடன் அடைகாத்தல், வார்க்கட்டினை உடைய தோற்பறைகள் தொங்குகின்ற மாமரங்கள், வங்குள்ள தென்னை மரங்கள், அவற்றினுள் அண்மையில் ஈன்ற குட்டிகளுடன் உறங்கும் தாய் நாய்கள், கடைஞர்களை வினை செய்யக் கூவும் கொண்டையுடைய சேவல்கள், காஞ்சிமரத்தின் நிழலில் நெல்குறும் புலைமகளிரின் பாட்டொலி, நெற்கதிர்களைக் கூந்தலிற் செருகிய மள்ளத்தியர் பறையொலிக்கு ஏற்ப கள்ளூண்டு களிக்கும் மள்ளருடன் கூத்தாட்டயருதல் எனும் இத்தகைய சூழலில் நந்தனார் பிறந்து வளர்ந்து வாழ்ந்து வருகின்றார்.

நந்தனாரின் வாழ்க்கைப் போராட்டம்

இத்தகைய இயல்புடைய புலைப்பாடியில் பிறந்து வளர்ந்த நந்தனார், இப்பின்னணியில் வாழும் மக்களைப் போலவே வாழ்தல்தான் இயற்கைநெறி. இந்தச் சூழ்நிலையை எதிர்த்து வாழ்ந்தால், அந்த வாழ்க்கை போராட்டமாகத்தான் ஆகும். அத்தகைய போராட்ட வாழ்வை விரும்பி நந்தனார் மேற்கொண்டார். இவ்வாறு புலைப்பாடியை வருணித்த சேக்கிழார், “ நந்தனார் என ஒருவர் உளரானார் “ எனக் கூறினார். அந்தப் புலைப்பாடியின் சூழ்நிலைக்கு ஒத்தியங்கி வாழ்ந்த பிறரெல்லாம் மறைந்து போக, எதிர்நீச்சலிட்டுச் செயற்கரிய செய்த பெரியோராகிய நந்தனார் இன்றும் உளரானார் என்பது சேக்கிழார் கருத்து.

thirunaalaippovarஅந்தப் புலைப்பாடியில் வாழும் மக்களின் மனநிலைக்கு முற்றும் வேறுபட்ட மனநிலையில், “பிறந்து உணர்வு தொடங்கியபின்” சிவபிரானிடத்தில் “சிறந்து எழுங்காதலினால் , செம்மைபுரி சிந்தையராய், மறந்தும் அயல் நினைவு இன்றி” வாழ்ந்தார். (செம்மை என்றால் சிவம்பதம்.’செம்மையேயாய சிவபதம் அளித்த செல்வமே’ திருவாசகம்)

நந்தனார், தம் குலத்தில் தோன்றிய பிறரைப் போலவே ‘பறைத்துடவை’ எனும் மானியம் பெற்று ஊரிலே பறையடித்தல் முதலிய தம் குலத்துக்குரிய தொழில்களைச் செய்து வாழ்ந்தார். இவர் குலத்தொழில் செய்வதனைச் சேக்கிழார், ‘சார்பினால் தொழில் செய்வார் தலைநின்றார் தொண்டினால்’ என்றார். புலையர் பிறவியின் சார்பினால் வரும் மரபுத் தொழிலைச் செய்தாரென்றாலும் தம் சாதி மக்களிலிருந்து வேறுபட்டுச் சிவதொண்டிலும் தலைநின்றார் என்பது கருத்து. ‘கூரிலைய முக்குடுமிப் படையண்ணல்’ கோவில்கள்தோறும் பேரிகை, முரசு முதலிய இசைக்கருவிகளுக்கு வேண்டிய தோல் , வார் முதலியனவற்றையும், யாழுக்கும் வீணைக்கும் தேவைப்படும் நரம்புகளையும், சிவபெருமானுடைய அருச்சனைகளுக்குரிய கோரோசனை ( கோரோசனை பசுவின் வயிற்றினின்றும் எடுக்கப்படும் மஞ்சள் நிறமுள்ளதொரு வாசனைப் பண்டம். இது இறைவனது திருமெய்ப்பூச்சுச் சந்தனக் குழம்புக் கலவைக்கு உதவுவது) முதலியவற்றை உதவி வந்தார்.

வார், தோல், கோரோசனம் முதலியன இவருடைய குலத்தொழிலில் எளிதாகக் கிடைப்பன. இப்பொருள்களை விற்றுத் தம் வயிறு வளர்க்கும் பொருள்களாக்காமல் சிவன் திருக்கோவில்களுக்கு அளித்துச் சிவத்தொண்டுக்கு உரிய பொருள்கள் ஆக்கினார் . சிவார்ச்சனைக்கு உதவுவது முற்பிறப்பின் உணர்வினால் நந்தனார் உள்ளத்தில் பெருகிய ஆசையின் விளைவாகும். அந்த ஆர்வத்தைத் தூண்டியது, ஆதனூரில் இருந்த சிவன் திருக்கோவில். ஆதலின், ஆதனூரின் பெருமையை, “ நீற்றலர்பே ரொளிநெருங்கும் அப்பதி” என்றார், சேக்கிழார். (அப்பகுதி நீறுபூசும் அடியார்கள் கூட்டம் மிகுந்துள்ளது, திருநீற்றுச் சார்பினால் உளதாகும் சிவஞானப் பேரொளி நந்தனார், திருநாளைப் போவார் நாயனார் ஆக ஏதுவாக அமைந்தது என்பது குறிப்பு) இவை உடலால் அவர் செய்த சிவத்தொண்டு. பிறந்தது புலைப்பாடி யென்றாலும் புலைப்பாடியில் வாழும் ஏனையோரின் மனநிலைக்கு வேறுபட்ட மனநிலையுடையராய், சிவனடியாராய் வாழ்வதற்கு ஏதுவாக அமைந்தது, திரு ஆதனூர் சிவன் திருக்கோயில்)

அத்துடன்,

‘பாடவேண்டும் நான்போற்றி நின்னையே,
பாடி நைந்துநைந் துருகி நெக்குநெக்-
காடவேண்டும் நான்”

என மணிவாசகர் விரும்பியபடியும்,

“ஆடுவதும் பாடுவதும் ஆனந்தமாக நின்னைத்
தேடுவதும் நின்னடியார் செய்கை பராபரமே”

எனத் தாயுமானார் கூறும் படியும், நந்தனார், சிவன் திருக்கோயில்களில் திருவாயில் புறம் நின்று, ”மெய்விரவு பேரன்பு மிகுதியினால் ஆடுதலும், அவ்வியல்பில் பாடுதலும்” செய்தார். இவ்வாறு ஊனும் உயிரும் கலந்து சிவத்தொண்டில் நந்தனார் ஈடுபட்டிருந்தார்.

இவ்வாறு இவர் வாழும் நாளில் இவருக்குத் தில்லைத் திருத்தலத்தைத் தரிசிக்கும் ஆவல் மூண்டெழுகின்றது. தில்லை சைவர்களுக்கெல்லாம் பெருங்கோவில் அல்லவா!

நந்தனாரின் மனநிலை

அவருக்குத் தில்லையைத் தரிசிக்க வேண்டும் என்ற ஆசை என்று பிறந்ததோ அன்றுமுதல் அவருடைய மனம் அவருடைய விருப்பத்திற்கு எதிராக நின்றது. அவருடைய மனமே அவருக்கு எதிரியாக இருந்தது.

இரவெல்லாம் துயிலாது கண்விழித்துத் தில்லையையே நினைந்திருப்பார். புலர்ந்தவுடன், ‘ அத்திருத்தலத்தில் சேரும் தன்மை நான் பிறந்துள்ள எனது குலத்தினொடு பொருந்துவதில்லை’ என்று எண்ணி, ‘இதுவும் எம்பெருமானுடைய ஏவலே’ என்று தில்லைக்குப் போகும் முயற்சியை ஒழித்திடுவார். ஆயினும் ஆசை மேன்மேலும் அதிகரிக்க ‘நாளைப்போவேன்’ என்பார். ‘நாளைப் போவேன்’ என நாட்கள் பல கழிந்தன. இக்காரணத்தாலேயே இவருக்குத் திருநாளைப் போவார் நாயனார் என்ற காரணப் பெயரும் தோன்றியது.

தில்லையைத் தரிசனம் செய்தவர்களுக்குப் பிறவி இனி இல்லை என்ற மரபுவழி சொல்லப்படுகின்ற மொழியை நினைந்து, தில்லைத் தரிசனமாம் நற்செயல் செய்வதில் இனிக் காலம் தாழ்க்கலாகாது எனப் ‘பூளையின் பூப்போன்ற பிறவியாகிய பிணிப்பு’ ஒழிய’ அங்குப் போகத் துணிந்து எழுந்தார். வழியிலுள்ள திருநின்றியூர், திருநீடூர், திருப்புள்ளிருக்குவேளூர் முதலிய தலங்களில் முன் கூறியவாறு வழிபட்டார்.

நந்தனார் தில்லையின் மருங்கு அணைந்தார். தில்லையின் திருவெல்லையை வணங்கி எழும்பொழுதில், அங்கு வேதியர் ஆற்றும் வேள்விச் செந்தீயில் எழுகின்ற புகைப் படலத்தைக் கண்ணுற்றார். வேதியர்கள் மறைகளை ஓதுகின்ற திருமடங்களும், அந்தணச் சிறார்கள் வேதம் பயிலும் பெருங்கிடைகளும் கண்டார். அங்கு மறையோதும் ஒலியையும் செவியுற்றார். இவை அவருடைய மனத்தில் அவர் பிறந்த குலத்தின் நிலையை நினைவூட்டின. ‘தம் குலம் நினைந்தே அஞ்சி அணைந்திலர் நின்றார்.’ என்று சேக்கிழார் கூறுகிறார். குறைவுடைய தமது குலச் சார்பினால், வேள்விச்சாலைகள், வேதம் பயிலும் இடங்கள் ஆகியவற்றின் அருகில் செல்லலாகாது என்று நடைமுறையில் இருந்துவரும் விதி வழக்கம் பற்றி அவர் அவற்றின் அருகில் செல்ல அஞ்சினார்.

தில்லைக்கு நந்தனார் புறப்படுமுன், மனம் எழுவதும் தவிர்வதும் ஆகப் பலநாட்கள் கழிந்தன. ஆயினும் பெருகுகாதலால் உந்தப்பட்டு தில்லையின் எல்லையை அடைந்தபோது வேள்விச்சாலைகளும் மறையோதும் கிடைகளும் அவற்றின் பெருமைகளையும் (காணாராயினும் கேட்டறிந்தமையால்) நந்தனார் நினைந்தார். அப்பெருமைகள் பற்றிய நினைவுகள் அவர் அங்குச் செல்லத் தடைகளாயிருந்தன. இந்தத் தடைகளே தில்லைத் தரிசனம் பற்றிய அவருடைய ஆராக்காதலை மேலும் முருகி எழச் செய்தன. அதனால் தில்லைப் பதியைப் பலமுறையும் வலம் வருவாராயினார்.

பெரியபுராணத்திற்குப் பேருரை வரைந்த சிவக்கவிமணி அவர்கள் நந்தனாரின் இந்த மனநிலையை அழகுற எடுத்துக் காட்டுகின்றார்.

“மெய்ப்பரிவு சிவன் கழற்கே விளைத்த உணர்வில்” பெருங்காதலாய் எழுந்த ஆசை இன்னபடித்தென்று சொல்லமுடியாத அளவில் வளர்ந்து மேலும் ஓங்கிற்று. தான் பிறந்த குலத்தைப் பற்றிய தாழ்வுணர்ச்சியும் வேதியர்களின் ஒழுக்கம் பற்றிய பயபக்தியும் அவரைத் தில்லைநகரினுள் புகாதவாறு தடுத்தன. ஆதலால் ‘ உள்ளே போகவும் முடியாமல், விட்டு நீங்கவும் முடியாமல், தேனடைத்த பாண்டத்தினைச் சுற்றும் எறும்பு போலச் சுற்றிச்சுற்றி வருவாராயினர். தாய்ப்பசுவினை ஒரு வீட்டின் உள்ளே வைத்து அடைத்துக் , கன்றினை வெளியே நிறுத்தினால், அக்கன்று அவ்வீட்டினைச் சுற்றிச்சுற்றி வரும் இயல்பு போல’ நந்தனாரும் தில்லைநகரைச் சுற்றிச் சுற்றி வருவாராயினார்.

nandanar1இவ்வாறு நாட்கள் பல கழிந்தன. ‘மன்றின் நடங் கும்பிடுவது எவ்வண்ணம், திருநடம் கும்பிட இன்னல் தரும் இந்தப் பிறவி ஒருதடை ” என்ற ஏக்கத்தோடு நந்தனார் உறங்கும்போது, “மன்னுதிருத் தொண்டரவர் வருத்தமெலாந் தீர்ப்பதற்கு”, ஒருநாள், அம்பலத்தாடுவார் அவர்கனவின்கண் முறுவலுடன் அருள்செய்தார். “ இப்பிறவி போய் நீங்க, எரியினிடை நீமூழ்கி , முப்புரிநூல் மார்பருடன் என் முன் அணைவாய்” என அம்பலவாணர் மொழிந்தார்.

தில்லைத் திருக்கோயிலுக்குள் நந்தனார் புக அவருடைய மனமே அவருக்குத் தடையாக இருந்தது என்ற உண்மை பெரியபுராணத்தில் திருநாளைப்போவார் புராணத்தில் நன்கு வெளிப்படுகின்றது. நந்தனாருடைய மனத்தினில் சில எண்ணங்கள் நன்கு அழுத்தமாகப் பதிந்து போயிருந்தன (obsession).

அவையே அவருடைய வருத்தங்களுக்குக் காரணமாகவும் இருந்தன.

அவையாவன:.
1. தான் பிறந்த குலம் இழிகுலம்.
2. இழிகுலத்தில் பிறந்த தன்னுடைய உடம்பும் இழிந்தது.
3. இழிந்த இந்த உடம்புடன் தில்லைத் திருக்கோயிலில் நுழைவதும் இறைவன் திருமுன்னர் நிற்பதும் ஆகாது.
4. வேள்வி செய்யவும் மறை ஓதவும் தில்லையம்பலவாணனுக்கு நெருக்கமாக இருந்து தொண்டு செய்யவும் உரிமையுடைய மறையோர் பிறப்பே பிறப்புக்களில் உயர்ந்த பிறப்பு..

தில்லையம்பலவனுடைய திருநடங் கும்பிடப் பெறுவதற்குத் தம்முடைய இழிபிறவியே தடை என்று அவருடைய எண்ணத்தில் ஆழப் பதிந்து இருத்தலினால், அத்தாழ்வுணர்ச்சியினால், இறைவனே அழைத்தாலும் அவர்முன்னே இவர் போகத் துணியார். இந்தத் தாழ்வுணர்ச்சியின் காரணமாக அவர் அடியார்கூட்டத்திலும் தம்மை இணைத்துக் கொள்ள இயலவில்லை.

எனவே, ‘வேண்டுவார் வேண்டுவதே ஈவான்’ ஆகிய பெருமான் இவருடைய இழிபிறப்பைப் பற்றிய மன அழுத்தத்தை முதலில் போக்க வேண்டும்; அவர் உயர்ந்ததாக நினைக்கும் மறையவர் கோலம் தருதல் வேண்டும். பின்னர் அவரைத் தம் முன்னர் வருவிக்க வேண்டும் எனக் கருதினான். எனவே, இறைவன் “இப்பிறவி போய் நீங்க, எரியினிடை நீமூழ்கி, முப்புரிநூல் மார்பருடன் என் முன் அணைவாய்” என்று அருளிச் செய்து தில்லைவாழ் அந்தணருக்கு எரி வளர்க்க ஆணையிட்டார்.

இறைவனுடைய கட்டளையைக் கேட்ட தில்லைவாழ் அந்தணர்கள் “ அம்பலவர் திருவாயின் முன்பு அச்சமுடன் ஈண்டினர்” அம்பலவருடைய திருவருளுக்கு ஆளாகிய அன்பரை இதுகாறும் அறியாது இருந்துவிட்டோமே என்னும் வருத்தமே அவர்களுடைய அச்சத்துக்குக் காரணம். “எம்பெருமான் அருள்செய்த பணிசெய்வோம்” என்று தம் அன்பு பெருக திருத்தொண்டனாராகிய நந்தனாரிடம் சென்றனர். சென்று , “ஐயரே! அம்பலவர் அருளால் இப்பொழுது அணைந்தோம், வெய்ய அழல் அமைத்து உமக்குத் தரவேண்டி” என விளம்பினர். ( வெய்ய – வெம்மை, விருப்பம்).

மறையவர்கள் அவ்வாறு அறிவித்தபின் நந்தனார், மறையவர்கள் நெருப்பு அமைத்த குழியை எய்தினார்; இறையவர் தாளை மனத்தினில் தியானம் செய்துகொண்டே எரியை வலம் வந்தார். இறைவனின்கழலை உன்னி அழலினுள் புகுந்தார். எரியினுட் சேர்ந்த தீயினிடத்து,

“…… இம்மாயப்
பொய்தகையும் உருவொழித்துப் புண்ணியமா முனிவடிவாய்
மெய்திகழ்வெண் ணூல்விளங்க வேணிமுடி கொண்டெழுந்தார்.”

அதாவது, மாயாகாரியமாகிய பொய் பொருந்திய உருவினை ஒழித்துப் புண்ணிய உருவமுடைய முனிவர் வடிவம் கொண்டு, மார்பினில் வெண்புரிநூல் விளங்கச் சடைமுடியும் கொண்டு மேலெழுந்தனர். செந்தீயின் மேல் வந்து எழுகின்றபோது செம்மலரின் மேல் வந்து எழுந்த அந்தணன் (பிரமன்) போலத் தோன்றினார்.

எரியில் நந்தனார் மூழ்கினார் என்ற செய்தி புத்தாராய்ச்சினருக்குப் பல்வேறு எண்ணங்களை எழச் செய்துள்ளது. தில்லைவாழந்தணர்கள் தில்லைக் கோவிலுக்குள் நுழைவதற்குத் துணிந்த இழிகுலத்தினராகிய நந்தனாரைச் சுட்டெரித்துக் கொன்றுவிட்டனர் என்றும், கீழவெண்மணி நிகழ்ச்சி அன்றே தொடங்கி விட்டது என்றும், சிவபெருமானும் அந்தணச் சார்புடையனாய் நந்தனை பூணூல் தரித்த பர்ப்பனனாய் ஆக்கியே தம் முன் வர அனுமதித்தான் என்றும் இன்னும் பலவாறு திரித்துக் கூறினர். இன்னும் , சிவபெருமான் அனுமதித்தும் நந்தி இழிகுல நந்தனைத் திருக்கோவிலில் நுழைய அனுமதிக்கவில்லை என்றும், சிவன் ‘சற்றே விலகியிரும் பிள்ளாய்” என நந்தியை விலகியிருக்கச் செய்ததாகவும் திருப்புன்கூர் நிகழ்ச்சியைத் தில்லை நிகழ்ச்சியாகவும் இவ்வாறு கதையினைத் திரித்தும் உரைத்தனர்.

நந்தனார் நெருப்பினுள் மூழ்கியது பற்றிச் சைவமரபில் பற்றிய சிந்தனைகள்

இத் “தவமறையோரெல்லாரும்” நந்தனாரிடம் பேசிய சொற்களின் நுட்பம் நோக்கத்தக்கது. ‘அடே, நந்தன் பயலே! உன்னைத் தீயிலிட்டுப் பொசுக்கி மந்திர ஸம்ஸ்காரம் செய்து உள்ளே சேர்த்துக் கொள்கிறோம்’ என்று அவர்கள் சொல்லவே இல்லை. ஆனால், “ஐயரே! அம்பலவர் அருளால் இப்பொழுதணைந்தோம், வெய்ய தழலமைத்துத் தரவேண்டி” என்றார்கள். ஆராத காதல் ஒப்பரிதாய் வளர்ந்தோங்க உள்ளுருகும் நந்தனாரைத் தங்களுக்கு அன்புப் பாடம் கற்பிக்கும் “ஐயரே” என்றழைத்ததை நோக்குக. தங்கள் குலச் செருக்காலும் புறப்பூசைச் செருக்காலும் உண்மையன்பின் உறைவிடத்தை அறியாத அந்தணர்கள் கண்ணுதலருளால் காட்டக் கண்டார்களாதலின், “அம்பலவர் அருளால் இப்பொழுது அணைந்தோம்” என்றார்கள். அன்பிற்கு முன் மந்திர ஸம்ஸ்காரங்கள் நில்லாவென்பதை நன்குணர்ந்த அந்தணர்கள் “அழல் அமைத்து உமக்குத் தர வேண்டி” என்று, தாங்கள், இறைவன்சொல்லியபடி செய்யும் ஏவலாளர்கள் என்பதையும் விளக்கினார்கள். நந்தனார் இறைவனை நினைந்து அழலை வலம் வந்தார்; கைதொழுது நடமாடுங் கழலுன்னி அழல் புகுந்தார்; புண்ணியமாமுனிவடிவாய் மார்பில் முந்நூல் விளங்க எழுந்தார்.

நந்தனாருக்கு நெருப்பால் உடலைச் சுட்டுப் பொசுக்கும் நிகழ்ச்சிக்கு மாறாக, புலைப்பிறப்பு நீங்கும் அரிய ஸம்ஸ்காரம் நிகழ்ந்தது. நிகழ்த்தியவன் வேறு ஒரு அந்தணன் அல்லன். பரமேஸ்வரனே இதனை நிகழ்த்தினான். இறைவனே நந்தனைத் தீயில் உருமாற்றி முப்புரி நூல் அணிவித்து அந்தணனாக்கினான். நந்தன் செம்மலர்மேல் விளங்கும் வேதா வாகிய பிரமனைப் போலத் தோன்றினார், என்பது தெய்வச் சேக்கிழார் திருவாக்கு.

nanaalai_iஇறைவன் திருவடியன்பினால், கடைஞன் எனப்படும் ஒருவர்- , எந்த உயர் பிறப்பினரைக் கண்டு அவர் கூசி ஒழுகினாரோ அந்த வேதியர் குலத்துக்கெல்லாம் முன்னவராய் ‘வேதியன்’ என்ற சிறப்புப் பெற்ற பிரமனைப் போலத் திகழப் பெற்றார்.

இறைவன் செய்த செயலைப் பின்னாளில் ஐயா வைகுண்டர் செய்து தம் அடியவர்களுக்குத் ஏற்றத்தைத் தந்தார். எந்த சமூகத்தினர் தலைக்குத் துண்டு கட்டக் கூடாது, மேல் துண்டுபோடக் கூடாது என்று உயர்குடியினர் விதித்திருந்தனரோ, அந்தக் குடியினர் தலைப்பாகை அணிந்து கொண்டு , மேல்துண்டு போர்த்துக் கொண்டுதான் இறைவழிபாடு செய்ய வேண்டும், தம்மை வழிபடவேண்டும் என்று விதித்துப் பிறசமூகத்தினருக்கு மேலாக உயர்த்தினார் ஐயா வைகுண்டார்.

சைவ மரபில் நெருப்பு சிவனுக்கு ஒரு குறியீடு. நெருப்பு சிவனுக்கு வடிவம். வேள்வியில் மூட்டும் தீக்கு சிவாக்கினி என்று பெயர். ‘எரிசுடராய் நின்ற இறைவா போற்றி’ என்று அப்பர் இறைவனைக் கண்டு போற்றினார். அஞ்ஞானம், அறியாமை என்பது ஆணமலம். அது இருள் வடிவினது. இருளை ஒளியே விரட்டும். சிவன் ஒளி வடிவினன்; ஞானமே வடிவானவன். பெருந்தேவர் இருவர் தம்முள் அடிமுடிதேட எழுந்த திருக்கோலம் நெருப்பு மேனி.

மணிவாசகர் வரலாற்றில் திருப்பெருந்துறையிலும் திருஞானசம்பந்தரின் திருமணத்தின்போது திருமணநல்லூரிலும் சோதியினுள் அடியார்கள் புகுந்து சாயுச்சியநிலை பெற்ற செய்தி பேசப்படுகின்றது.

சிவதீக்கையிலும் ஆன்மார்த்த வழிபாட்டிலும் பூத உடலை மந்திரவிதியால் எரித்தலும் அருளுடல் ஆக்குதலும் உண்டு. சிவபூசை செய்வோர் அதற்குக் கருவியாய், இருவினைகளுக்குக் கொள்கலமாயும் பஞ்சபூத பரிணமமாகவும் உள்ள உடலைப் பாவனையால் அழித்து, மீள அருள்மயமாக உண்டாக்குதலே பூதசுத்தி எனப்படும். சிவன் ஆணையால் தில்லைவாழ் அந்தணர் உண்டாக்கிய நெருப்பு பூதசுத்தி செய்து தூய்மையாக்கும் மந்திர பூர்வமான சிவாக்கினியே அன்றி உடலைச் சுட்டுப் பொசுக்கும் நெருப்பாகிய பெளதிக நெருப்பன்று என்பது சைவர்கள் கொள்கை.

திருநாளைப் போவாரும் திருநீலகண்ட யாழ்ப்பாணரும்:

தில்லைஅருகில் இருக்கும் திரு எருக்கத்தம்புலியூர் எனும் திருத்தலத்தில் பிறந்து வாழ்ந்தவர் திருநீலகண்ட யாழ்ப்பாணர். அவருடைய மனைவியார் மதங்க சூளாமணியார். யாழ் என்னும் இசைக்கருவி தோலால் மூடப்பட்ட பத்தர் என்னும் உறுப்பு உடைமையாலும், நரம்புகள் விலங்குகளின் உடலிலிருந்து எடுக்கப்படுதலினாலும், யாழ்ப்பாணர்கள் அக்காலத்தில் தாழ்குடிப் பிறப்பினர்களாகக் கருதப்பட்டனர்.

thiruneelakanda-yaazh-panarபாணனாரும் பாடினியாரும் திருஞானசம்பந்தப் பெருமானின் சிவனருள் பெற்ற இசைத்திறத்தைக் கேள்வியுற்று அவரைக் காணும் பொருட்டுச் சீகாழிக்கு வருகின்றனர். அளவிலா மகிழ்ச்சி கொண்ட திருஞானசம்பந்தர், பாணனாரையும் பாடினியாரையும், ‘ஐயர்! நீர் (எம்) உள மகிழ இங்கு அணைந்த உறுதி உடையோம்’ என்று முகமன் கூறி தோணிபுரத் திருக்கோவிலுக்கு அழைத்துச் செல்லுகின்றார்.

திருக்கோவிலின் பாணனாரையும் பாடிணியாரையும் புறமுன்றினில் நிறுத்திக் கும்பிடுவித்து, “ ஏயும் இசை உங்கள் இறைவருக்கு இங்கு இயற்றும்” என்று கூற இருவரும் யாழிசை விரித்துத் தோணிப்பெருமானைப் பாடினர் எனச் சேக்கிழார் கூறுவதில் ஒன்றை மனத்தில் இருத்தல் வேண்டும்.

சீகாழி திருஞானசம்பந்தர் பிறந்து வாழ்ந்த தலம். அவர் பிறந்த அந்தண குலத்தவர்கள் பெரும்பான்மையராக வாழ்ந்த தலம். எனவே, திடீர்ப் புரட்சி எதுவும் செய்யாமல், அக்காலத்தில் நிலவிவந்த வழக்கத்தை ஒட்டிப் பாணனாரைத் திருக்கோவிலினுள் அழைத்துச் செல்லாமல், திருஞானசம்பந்தர், புறமுன்றினில் நின்று கும்பிடுவித்தார். இப்பொழுதுதான் அவர் பாணனாருடன் அறிமுகம் ஆகின்றார். ஆயினும் பாணனாரின் பெருமையை அறிந்து அவரை “ஐயரே” என்று அழைக்கப் பாணனாரின் தாழ்ந்த சாதி தடையாக இருக்கவில்லை. பின்னர், தம் மனையில் இருவரும் தங்க உரிய ஏற்பாடுகள் செய்தார்.

திருமனையில் இருந்தபோது ஆழிவிடம் உண்ட அண்ணலாரைக் காழிப் பிள்ளையார் போற்றிய பதிக இசையைப் பாணனார் யாழில் இட்டு எவ்வுயிரையும் மகிழ்வித்தார். பின்னர்ப் பாணனார், திருஞானசம்பந்தரிடம் “நீர் அருள்செய்யும் அறிவரிய திருப்பதிக இசையை யாழில் இட்டு அடியேன் உங்களைப் பிரியாமல் சேவிக்கப் பெற வேண்டும்” எனத் தொழுது வேண்டினார். பிள்ளையார் ‘தம்பிரான் அருள் இதுவே” என மனமகிழ்ந்தார். அன்று முதல் திருஞானசம்பந்தரின் அருகிருந்து யாழ் வாசிக்கும் முறைமையால் அகலா நண்புடன் வாழ்ந்தார்.

திருஞான சம்பந்தர் தில்லையை வழிபட வேண்டும் என்ற ஆவலுடன் புறப்பட்டபோது, அவருடன் அவரைப் பெற்றெடுத்த புண்ணியம் வாய்ந்த சிவபாத இருதயர் முதலாய மறையவர்களுடன் யாழ்ப்பாணனாரும் பாடினியாரும் உடன் சென்றனர். தில்லையில் வேதநாதமும் மங்கல முழக்கமும் நிறைந்து ஓங்க தில்லைவாழ் அந்தணர்கள் ‘சோபன ஆக்கம்’ சொல்லி எதிர்கொண்டு வரவேற்றனர்.

அவ்வரவேற்பின்போது ஞானசம்பந்தருடன் பாணனார் தம்பதியினரும் உடன் இருந்தனர் என்பதை நினைவில் நிறுத்த வேண்டும். அங்குப் பாணனாரை அவருடைய பிறப்பைச் சுட்டித் தடுத்து நிறுத்துவார் ஒருவரும் இல்லை. சம்பந்தருடன் பாணனாரும் திருக்கோவிலுள் அம்பலவாணர் முன்னின்று சேவித்ததால், அம்பலவர் தீட்டுப்பட்டுவிட்டார் என்று புண்ணியாவாசகமும் செய்யப்படவில்லை.

sambandhar_palaniஅதன் பின்னர், திருவேட்களம், திருக்கழிப்பாலை முதலிய திருத்தலங்களை வழிபட்டு மீண்டும் தில்லைக்கு வ்ந்தார். பிள்ளையார் தில்லையை இவ்வாறு இருமுறை வழிபட்டார்.

பாணனார் பிள்ளையாரின் அடிதொழுது,’ அடியனேன் பிறந்த திருவெருக்கத்தம் புலியூர் முதல் நிவாநதிக் கரையின் மேலுள்ள ஒப்பில் தானங்கள் பணிந்திட வேண்டும்’ என வேண்டினார். இந்தப் பயணங்களில், தந்தையாராகிய சிவபாத இருதயருடன் பரிசனங்களு தவமுன்வர்களும் செல்ல, திருஞானசம்பந்தர், “செங்கையாழ்த் திருநீலகண்டப் பெரும்பாணனாருடன் சேர, மங்கையார் புகழ் மதங்க சூளாமணியார் உடன்வர் வந்தார்” என்று கூறியதை நினைவில் கொள்ள வேண்டும். திருவெருக்கத்தம் புலியூரை அடைந்தபோது, “ ஐயர்! நீர் அவதரித்திட இப்பதி எத்தகைய அளவில் மாதவம் முன்பு செய்திருக்க வேண்டும்” எனப் பிள்ளையார் பாணனாரைப் பாராட்டிச் சிறப்பித்தார்.

திருஅயவந்தியில் திருநீலநக்கர் எனும் அந்தணர் பெருமான் தம்முடைய நெடுமனையில் , திருஞானசம்பந்தர் , பாணனாருக்கும் பாடினியாருக்கும் இனிது தங்க இடம் அமைத்துத் தரக் கூற, அந்தணர் வீட்டில் புனிதமான அக்கினிகாரியம் நடத்தும் இடத்தில் அவ்ர்களைத் தங்க வைக்கின்றார். முத்தீ புனித்மடைந்து வலமாகச் சுற்றி வளர்ந்தது.

திருப்புகலூரில் முருகநாயனார் எனும் அந்தணர் திருமடம் அமைத்துச் சிவத்தொண்டு புரிந்து வந்தார். அவருடைய திருமடத்தில் திருஞானசம்பந்தர் தம் பரிவாரங்களுடன் தங்கினார். அவர் அங்கிருப்பது கேள்வியுற்று சாந்தை அவயந்தியிலிருந்து அந்தணர் பெருமானாம் திருநீலநக்கர் அங்கு வருகின்றார். திருநாவுக்கரசர் பெருமானும் தம் அடியவர்களுடன் அத்திருமடத்தில் வந்து தங்கினார். அத்திருமடத்தில் அடியவர்கள் எத்தகைய வேறுபாடும் இன்றி,

“திருப்பதிகச் செழுந்தமிழின் திறம் போற்றி மகிழ்வுற்றுப்
பொருப்பரையன் மடப்பாவை இடப்பாகர் பொற்றாளில்
விருப்புடைய திருத்தொண்டர் பெருமையினை விரித்துரைத்து அங்கு,
ஒருப்படு சிந்தையினார்கள் உடனுறைவின் பயன்பெற்றார்”.

திருமுருகநாயனார் திருமடத்தில் தங்கியிருந்த அடியவர்கள் அனைவரும் அந்தணர் முதலிய பலசாதியினராயினும், இறைவன் பொற்றாளில் விருப்புடைய திருத்தொண்டர்கள்; திருப்பதிகச் செழுந்தமிழின் திறம் அறிந்தவர்கள்; அதில் மகிழ்வுறுபவர்கள்; அதனால் அனைவரும் ஒருப்படு சிந்தையினர்.

அந்த ஒருப்படு சிந்தையினரில் திருநீலகண்ட யாழ்ப்பாணரும் ஒருவர். அந்தத் திருக்கூட்டத்தில் அவர் தயக்கமின்றி அந்தணர்களுடனும் கலந்து பழக, அவருடைய சிவபத்தியும் இசைப் புலமையும் திருப்பதிகப் பயிற்சியும் திருஞானசம்பந்தரிடம் அவருக்கு இருந்த நெருக்கமான பழக்கமும் ஏதுவாக அமைந்தன. அதனால் பாணனார் தாம் பிறந்த குலம் பற்றிய எவ்விதச் சிந்தனையும் இன்றி , அதனால் தோன்றும் தயக்கமும் இன்றிப், பிற அடியவர்களுடன் கலந்து பழகினார். திருஞானசம்பந்தரின் அடியவர் கூட்டத்தில் இருக்கும் தகுதியைத் திருநீலகண்டரும் பாடினியாரும் வளர்த்துக் கொண்டமையால், அந்தணர் முதலாய பிற அடியவர்களுடன் பழகுவதில் அவர்களுக்கு எந்த மனச்சிக்கலும் விளையவில்லை என்பது அறியத்தக்கது.

திருஞானசம்பந்தரின் திருமணத்தின்போது குழுமியிருந்த அடியார் கூட்டத்தில் அந்தணர்கள் உள்ளிட்ட எல்லா சாதியினருடன், பாணர் தம்பதியினரும் இருந்தனர். திருப்பெருமணம் கோவிலில் எழுந்த சோதியில்,

”சீர்பெருகு நீலநக்கர் திருமுருகர் முதல்தொண்டர்,
ஏர்கெழுவு சிவபாத இருதயர் நம்பாண்டார் நம்பி”

முதலிய அந்தணர் பெருமக்களுடன், பெரும்பாணரும் தம் மனைவியாருடன் உடன்புகுந்தார். இச்செய்திகளால் யாழ்ப்பாணர் சிவனடியவர்களாகிய அந்தணர் கூட்டத்திலேயே இருந்தமையால் அவருக்கு சாதி குலம் பற்றிய சிந்தனைக்கு வாய்ப்பிருக்கவில்லை போலும்.

நந்தனார் சிறந்த சிவபக்தராக இருந்தாலும் அவருக்கு அடியவர் கூட்டத்தில் சேரும் வாய்ப்பே கிடைக்கவில்லை. தம்முடைய இழிபிறப்புக் குறித்த தாழ்வுணர்ச்சி அவருடைய மனத்தில் அழுத்தமாகப் படிந்து விட்டது. அவர் வாழ்ந்திருந்த புலைப்பாடியும் செய்துவந்த புலைத்தொழிலும் அந்தத் தாழ்வுணர்ச்சிக்கு உரமேற்றி விட்டன. ‘திருநீற்றொளி பரவும்’ ஆதனூர் , நந்தனாரின் உள்ளத்தில் சிவபக்தியை வளர்த்தாலும், அவர் வாழ்ந்த சூழல் தாழ்வுணர்ச்சியையும் கூடவே வளர்த்து விட்டது. தாழ்வுணர்ச்சி சற்று அதிகமாகவே இருந்தது எனலாம். இது ஒரு மனப்பிறழ்வு எனலாம். அந்த மனப்பிறழ்வுக்கு இறைவன் செய்தது அதிர்ச்சி வைத்தியம்.

தொண்டக் குலத்தினருக்கு பண்டைக் குலநினைவு வராது.; வரக்கூடாது.

31 Replies to “பண்டைக்குலமும் தொண்டக்குலமும்”

  1. Just an outstanding and scholarly piece of article, with the correct empahsis on truth and truth alone! It would be really great if this eminent scholar could add a few lines about how a subsequent work by Gopalakrishnabharati, who for all wrong reasons created his own fiction and which eventually served as a basis for the source of misinterpretation by forces enimical to Sanatana Dharama traditions with a view to drive a wedge between different segments of the Bharatiya society.

    Thiruchitrambalam!

  2. திருநாளைப் போவார்-திருநீலகண்ட யாழ்ப்பாணர் ஒப்பாய்வு மிகச் சிறப்பாகவும் சரியாகவும் அமைந்துள்ளது. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளதுபோல் நந்தனாருக்குப் பிற சைவத் தொண்டர்களுடன் கலந்துறவாடும் வாய்ப்பே கிட்டவில்லை. திருப்புன்கூரிலும் சரி, தில்லையம்பதியிலும் சரி, பிற அடியார்களுடன் இணைந்து செல்லும் வாய்ப்பின்றித் தனியாகவே அவர் செல்ல நேர்ந்துள்ளது. எனவே தமது பிறப்பின் பிரக்ஞை அவருக்குக் கூடுதலாகவே இருந்துள்ளது. தில்லையில் அவர் ஊருக்குள் புகுமுன் ஓமக்குளம் என்னும் திருக் குளத்தில் மூழ்கி எழுந்து அதன் பின்னர் ஆலயம் செல்ல முற்பட்டதாக இன்றளவும் இருந்துவரும் செய்தி. ஊரெல்லையில் இன்றும் ஓமக் குளம் உள்ளது. சிதம்பரம் செல்லும் சிவனடியார்கள் சாதி வித்தியாசம் இன்றி நந்தனாரை நினைந்து தொழ முதலில் அங்கு செல்வதும் பின் இளமையாக்கினார் கோயில் திருக் குளத்திற்குச் சென்று திருநீல கண்டர் நினைவைப் போற்றுதலும் வழக்கம் என்று அறிஞர் மலர்மன்னன் நந்தனார் பற்றி நிகழ்த்திய உரையில் கூறக் கேட்டுள்ளேன். மேலும் அவர் கூறியதாவது:
    அணமைக் காலம் எனக் கூறத் தகும் இருநூறு ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த
    கோபால கிருஷ்ண பாரதியார் சாதி முறைப்படியும் ஒரு பிராமணர்தான். த்மிழில் கீர்த்தனைகள் இயற்றுவதோடு, கதாகாலட்சேபம் செய்வதும் வழக்கம். நாகை தன வணிகர் அழைப்பின் பேரில் அங்கு சென்று சிவ நேசச் செல்வர்கள் கதையினைக் கூறி மகிழ்வித்த கோபால கிருஷ்ண பாரதியாரிடம் அந்த வைசிய குலப் பெருமக்கள் நாயன்மார்களில் எவர் கதையினையாவது கீர்த்தனைகளாகப் பாடி இயற்ற வேண்டுமென்று விண்ணப்பித்தனர். அதற்கு இசைந்து நந்தனார் சரிதத்தை இசை நாடகமாக இயற்ற கோபால கிருஷ்ண பாரதியார் தீர்மானித்தார். இதைக் கேட்டு நாகை தன வணிகரும் மிக்க மகிழ்ச்சி தெரிவித்தனர். பிராமாணரான கோபால கிருஷ்ண பாரதியார் நந்தனாரின் கதையைத் தேர்வு செய்வதில் எவ்விதத் தயக்கமும் காட்டவில்லை. அதேபோல் மேல் சாதியினரான தன வணிகருக்கும் (நாட்டுக் கோட்டைச் செட்டியார்கள்) அது குறித்து எவ்விதத் தயக்கமும் இருக்கவில்லை. த்ங்கள் குலத்து காரைக்கால் அம்மையின் கதையைத் தேர்வு செய்யுமாறு அவர்கள் வேண்டவும் இல்லை. கோபால கிருஷ்ண பாரதியார் நந்தனார் சரிதத்தை இயற்றியபின் அதனைச் சிறப்பாக அரங்கேற்ற அவர்கள் ஏற்பாடு செய்தனர். ஆகவே பொதுவாக ஹிந்துக் களிடையே சாதியின் அடிப்படையில் ஏற்றத் தாழ்வு பாராட்டும் போக்கு இல்லை, சாதியைக் கருத்தில் கொள்ளாமல் குணம் நாடிப் போற்றித் தொழுவதே ஹிந்துக்கள் மரபு என்று மலர்மன்னன் அவர்கள் பேசினார்கள்.
    நந்தனாரின் தீக்குளிப்பு கட்டுரையாளர் குறிப்பிட்டுள்ளதுபோல் ஒரு குறியீடே ஆகும். எம்பெருமான் திருவண்ணாமலையில் தீப்பிழம்பாகவே எழுந்து நிற்கிறார். அருணாசல உச்சியில் கொழுந்துவிட்டு எரியும் கார்த்திகை தீபம் எவரது ஊனுடலையும் சுட்டெரிப்பதற்காக அல்ல, நான் எனும் அகந்தையை எரித்துச் சாம்பராக்கித் தூய்மை செய்யவே அவ்வாறு சுடரொளியாய் விளங்குகிறது. அதே குறியீடுதான் நந்தன் விஷயத்திலும் அவனது தாழ்வு மனப்பான்மையினைச் சுட்டெரிக்க வந்தது என்றும் மலர்மன்னன் அவர்கள் அன்றைய கூட்டத்தில் சொன்னார்கள்.

  3. நல்ல கருத்துச் செறிவுள்ள கட்டுரை முனைவர் ஐயா. அடியார் குழாம் என்ற சூழல் கிட்டாமையே நந்தனாரின் தாழ்வுணர்ச்சிக்குக் காரணம் என்ற தங்களது புதிய கண்ணோட்டம் அருமை. யாழ்ப்பாணர் வரலாற்றில் அவருக்குக் கிடைத்த அங்கீகாரம் பற்றிய சரியான விளக்கத்தையும் கட்டுரை அளிக்கிறது. தலைப்பும் அருமை.

    பெரியாழ்வாரின் ஒரு பாசுரத்தில் தங்களது கட்டுரையின் சாரம் அடங்கியுள்ளது என்று நினைக்கிறேன் –

    தொண்டக் குலத்தில் உள்ளீர் ! வந்தடி தொழுது ஆயிர நாமம் சொல்லிப்
    பண்டைக் குலத்தைத் தவிர்ந்து பல்லாண்டு பல்லாயிரத்தாண்டென்மினே!

    இதனை மையமாக வைத்து முன்பு அடியேனும் ஒரு சிறு பதிவு எழுதியிருந்தேன் –
    கண்ணன் எந்தக் குலம்? https://jataayu.blogspot.com/2006/12/blog-post_25.html

  4. நன்றி திருஜடாயு. தங்களுடைய அற்புதமான கட்டுரையை இன்று தான் ப்டித்தேன். தாங்கள் உரைத்தவாறு பெரியாழ்வாரின் பாசுரமே இந்தத் தலைப்பை ஈந்து அதன் போக்கில் என்னைச் சிந்திக்க வைத்தது. திரு கோபாலகிருஷ்ண பாரதி அவர்களின் நந்தன் சரிதை உள்ளமுருக்கிக் கண்ணீரை வரவழைக்கும் அற்புதப் படைப்பு, எனினும் மூல நூலினின்றும் சற்று நழுவிவிட்டது. படைப்பாளிக்கு அந்தச் சுதந்திரம் உண்டு. வேதியர் என்ற ‘வில்லன்’ பாத்திரப் பண்பு ‘பகுத்தறிவாளர்’களால் சாதிப்பண்பு போலப் பேசப்படுவது , படைப்பாளிக்கு வெற்றி. ஆயினும் மூலநூலுக்கு முரண். அந்த வேதியர்களை நினைவில் வைத்துக் கொண்டு தில்லை வாழ் அந்தணர்களையும் ஏனைய மறையவர்களையும் ஏசுவது மரபின் வழி வந்த சமயச் சான்றோர்களையும் அதிர்ச்சியடையச் செய்வதாகும். சத்தியபாமா, அடியார்க்கு அடியான், பாலமுருகன் ஆகியோரின் கருத்துக்களுக்கும் நன்றி.

  5. கோபால கிருஷ்ண பாரதியாரின் நந்தன் சரிதக் கீர்த்த்னையில் பண்ணை ஐயர் நந்தனின் பக்திச் சிறப்பினை உணர்ந்தபின் அவன் அடி தொழுது வணங்கித் துதித்ததாகவும் எழுதப்பட்டுள்ளது. ஆனால் இதனைக் கண்டுகொள்ளாமல் விடுவது ஹிந்து விரோதிகள் வழக்கம். கோபால கிருஷணரின் படைப்பில் உள்நோக்கம் ஏதும் இல்லை. நாடகச் சுவை கூட்ட அவர் உருவாக்கிய கற்பனையில் ஒரு கொடிய பாத்திரமாகவே பிராமணர் காணப்பட்ட போதிலும் பின்னர் அவர் வருந்தி நந்தனைத் துதிதது தில்லைக்கு அனுப்பிவைப்பதாகவே உள்ளது. கோபால கிருஷ்ண பாரதியாரும் ஒரு பிராமணராக இருந்த போதிலும் இவ்வாறு அவர் பாத்திரப் படைப்பினைச் செய்தது கவனிகத்தக்கது. நம்மிடையே சாதி அடிப்படையில் பார பட்சம் காட்டும் போக்கு இல்லை என்பதோடு சாதிச் செருக்கு ஏதும் இல்லாத நமது நிலையினையும் இது உறுதி செய்கிறது.

  6. மிக சிறந்த கட்டுரை. நத்தனரை பற்றிய புதிய நோக்கு.
    தி-கழகத்தினர் இதை படித்து தெளிவு பெறவேண்டும். அவர்கள் நமது பெரியபுராணத்தை இழிவு படுத்தி பேசும்போது இந்த கட்டுரையை காட்டி அவர்களின் போலி மத சாயத்தை உலகிற்கு காட்டவேண்டும்.

  7. It is a coincidence that I went to Nandanar Charithram held last week at Bridgewater NJ temple auditorium as fund raising for Thirumurai awareness program of Sri Dayananda Saraswati. 12 kirtanas of Gopalakrishna Bharathi on Nandanar was sung beautifully and the background was also explained.
    Thiruchitrambalam.

  8. இந்து மதம் எப்போதும் மாறாமல் இருந்த போதிலும் அதைப் பின்பற்றுபவர் அவ்வப் போது நிலவும் சமூக சூழ்நிலைக்கு ஏற்ப அதை மட்டுப் படுத்தி விட்டனர்.

    பண்டைய இந்திய சமுதாயத்தில் தொழில் அடிப்படையில் சாதிகள் உருவாகி அவை பிறப்பு அடிப்படையில் இருக்கப் பட்டு விட்டன.

    நந்தனார் அளவுக்கு ஆன்மீகத்தில் ஈடுபாடு உடையவர்கள் சமுதாயத்தின் எல்லாப் பிரிவிலும் , குறிப்பாக தலித் பிரிவினரிலும் உள்ளனர்.

    அந்தணர் உடலுக்கும் , மற்றவர் உடலுக்கும் எந்த வேறுபாடும் இல்லை. எல்லாமே அழியப் போகும் உடலே. அந்தணர் ஒருவரின் கையை வெட்டுப் பட்டு விட்டால் அதை சேர்த்து வைத்தால் ஒட்டிக் கொள்வதில்லை.

    எனவே அக்காலத்தில் எழுதப் பட்ட பாடல் அக்கால சமூக சூழ்நிலையின் கருத்தாக்கத்தில் எழுதப் பட்டு இருக்கலாம். இதில் சிவனே செய்ததாகக் கூறி சிவ தத்துவத்தின் மேல் பழி விழும்படி வேண்டியதில்லை. புலித்தோலை அரைக்கு அசைத்து, சுடு காட்டுஸ் சாம்பல் பூசி கபாலம் ஏந்தித் திரியும் சித்தனின் தத்துவம் போல யாக்கை நிலையாமை தத்துவத்தை அவ்வளவு சிறப்பாக யாரும் சொன்னது இல்லை. எல்லா உடலும் அழியும் , உயிரே நீ என்ன செய்யப் போகிறாய் என நினைவூட்டும் சிவ தத்துவம் எல்லா மனிதர்களுக்கும் உடனடி ஆன்மீக உயர்வு தரக் கூடியது . எனவே முனைவர் ஐயாவுக்கு நமது வேண்டுகோள் என்ன என்றால் நீங்கள் சிவ தத்துவத்தை தலித் மக்களுக்கு எடுத்து செல்வதே மிக அவசியமான செயலாகும். முன்பு நடந்த நிகழ்ச்சி என்ன என்று தெளிவாக தெரியாத போது, அதில் காலம் கழிப்பது அவசியம் இல்லாத செயல் என்பதே எனது தாழ்மையான கருத்து.

    அர்ச்சகர தேவநாதன் அதே உடலுடன் அக்கிரமம் செய்யும் போது யாரும் எந்த உடலுடனும் சிவ தத்துவத்தின் உண்மை நிலையை எட்ட இயலும் என்று கருதுவதில் தவறில்லை.

    சிவ தத்துவத்தின் அடிப்படையில் இன்னும் இன்னும் அதிக அளவில் தலித் மக்கள் ஆன்மீகத்தில் முன்னேறி விட்டால் , மான மிகுக்களின் சாயம் வெளுத்து விடும். எனவே இப்போதைய தேவை ஆன்மீக உயர்வே. அதை எல்லா மக்களுக்கும் வழங்க தேவையான பக்தியும், அனுபவமும் உங்களுக்கு உள்ளது என்பதே எங்கள் நம்பிக்கை.

    அதை விட்டு விட்டு நாம் போஸ்ட் மார்ட்டம் செய்து கொண்டு இருந்தால் மான மிகுக்களுக்கு கல்லா கட்ட வசதியாகி விடும் என்பதே எமது தாழ்மையான கருத்து.

  9. //அர்ச்சகர தேவநாதன் அதே உடலுடன் அக்கிரமம் செய்யும் போது யாரும் எந்த உடலுடனும் சிவ தத்துவத்தின் உண்மை நிலையை எட்ட இயலும் என்று கருதுவதில் தவறில்லை. – திருச்சிக்காரன்//

    இவ்வாறு சம்பந்தமின்றி திடீரென ”மானமிகு”களுக்கு அடியெடுத்துக் கொடுப்பதுதான் மானமிகுக்களுக்கு கல்லா கட்ட வசதியாகிவிடும் ( இப்படிக் கூறுவதன் மூலம் இவர் சொல்லவருவது என்ன வென்று ஒருவாறு யூகித்து இதனைக் குறிப்பிடுகிறேன்).

    நந்தனாரின் உத்தமமான வரலாறு குறித்து நாம் பேசி மெய் சிலிர்த்துக் கொண்டிருக்கும் நேரத்தில் இவ்வாறு ஒரு அருசியான விஷயத்தை உள்ளே நுழைப்பது அவசியம்தானா? இது இவர் குறிப்பிடும் அந்த மானமிகுகளுக்கு மறைமுகமான ஆதரவுபோல் அல்லவா உள்ளது?

    தீக்குளிப்பு என்பது ஒரு குறியீடு, சிவபெருமான் தீப்பிழம்பெனத் தோன்றுபவன், அவன் தன்னில் ஒரு ஜீவாத்மாவை அரவணைத்துக் கொள்கிறான் எனில் அது ஜாதி வித்தியாசமின்றி அனைவருக்குமே தீக்குளிப்பாகத்தான் இருக்கும் என்ற அடிப்படையில் இங்கு ஆய்வு நடைபெறுகையில் அதனைப் புரிந்துகொள்ளாமல் அல்லது வேண்டுமென்றே திசை திருப்புவது போல் இக்கருத்துப் பரிமாற்றங்களைப் போஸ்ட் மார்ட்டம் என்று திராவிட கழக பாணியில் தரம் தாழ்த்தி விமர்சிப்பது சரியா?

  10. //தீக்குளிப்பு என்பது ஒரு குறியீடு, சிவபெருமான் தீப்பிழம்பெனத் தோன்றுபவன், அவன் தன்னில் ஒரு ஜீவாத்மாவை அரவணைத்துக் கொள்கிறான் எனில் அது ஜாதி வித்தியாசமின்றி அனைவருக்குமே தீக்குளிப்பாகத்தான் இருக்கும் //

    இதுவே தவறான திசை திருப்பல். இதை வைத்துக் கொண்டு சிவனை அடைய தீக்குளிப்பு செய்ய வேண்டுமா என்ற வகையிலே போய் விடும்.

    இந்து மதம் அஹிம்சையான , அமைதியான மதம்.

    கடுமையான தவங்கள் செய்தவர்கள் அக்காலத்தில் உண்டு. ஆனால் உடலை வருத்தி கடும் தவம் செய்பவன், தன்னையும் வருத்தி, உள் இருக்கும் என்னையும் வருத்துகிறான் என்று சொல்லி இருக்கிறார்கள்.

    //நாம் பேசி மெய் சிலிர்த்துக் கொண்டிருக்கும் நேரத்தில்//

    //ஒரு ஜீவாத்மாவை அரவணைத்துக் கொள்கிறான் எனில் அது ஜாதி வித்தியாசமின்றி அனைவருக்குமே தீக்குளிப்பாகத்தான் இருக்கும் என்ற அடிப்படையில்//

    நானோ, நீங்களோ தீக் குளிக்கப் போகிறோமா? அப்படி குளித்தல் தெரியும் மெய் சிலிர்ப்பது.

    //இவ்வாறு ஒரு அருசியான விஷயத்தை உள்ளே நுழைப்பது அவசியம்தானா? //

    அருசியான விஷயம் என்று தெரிகிறது அல்லவா? அருசியான விஷயம் கோவிலுக்குள் போகும்போது அமுதமான நபர்கள் கோவிலுக்குள் போகலாம். அதை சொல்லத்தான் எழுதினோம்.

    //இவ்வாறு சம்பந்தமின்றி திடீரென ”மானமிகு”களுக்கு அடியெடுத்துக் கொடுப்பதுதான் மானமிகுக்களுக்கு கல்லா கட்ட வசதியாகிவிடும்//

    அடியும் எடுத்துக் கொடுக்கவில்லை. நுனியும் எடுத்துக் கொடுக்கவில்லை. மான மிகுக்களுக்கு திட்டத்தான் தெரியும். மக்களுக்கு அமைதி தேவை, விடுதலை தேவை அதை வழங்க ஆன்மீகத்தால் தான் முடியும்.

    இந்து மதத்தின் மேல் எந்த தவறும் இல்லை. அவரவர் மனம் எப்படி இருக்கிறதோ அதற்கேற்ப மனசாட்சி உறுத்தலாம்.

  11. //இதுவே தவறான திசை திருப்பல். இதை வைத்துக் கொண்டு சிவனை அடைய தீக்குளிப்பு செய்ய வேண்டுமா என்ற வகையிலே போய் விடும்.//
    குறியீடு என்பதன் பொருளை யாராவது இவருக்கு எடுத்துச் சொன்னால் நன்றாக இருக்கும்.

  12. //அருசியான விஷயம் என்று தெரிகிறது அல்லவா? அருசியான விஷயம் கோவிலுக்குள் போகும்போது அமுதமான நபர்கள் கோவிலுக்குள் போகலாம். அதை சொல்லத்தான் எழுதினோம்//

    அருசியான விஷயம் கோவிலுக்குள் போகலாம் என்று நமது ஆகம விதிமுறைகளோ சம்பிரதாயங்களோ எங்காவது அனுமதி வழங்கி யுள்ளனவா? இதென்ன விபரீதமான வாதம்? ஒரு தவறான நடத்தை (வழக்கு விசாரணையில் உள்ளது, தீர்ப்பாகவில்லை என எண்ணுகிறேன். அக்கப்போர், ஆபாச ரசனைப் பத்திரிகைகள் படிக்கும் வழககம் எனக்கு இல்லையாதலால் இம்மாதிரி விஷயங்களில் விவரமாக எதுவும் தெரியாது. மற்றவர்கள் பேசக் கேட்டு ஓரளவு காதில் விழுவதுதான். இவர் தேவ நாதன் என்று திடீரென ஒரு பெயரைச் சொன்னதும் முதலில் அதென்னவென்று புரியாமல் அக்கம் பக்கத்தில் விசாரித்ததில் ஒரு அர்ச்சகர் தனது வாய்ப்பை துஷ்பிரயோகம் செய்து கர்ப கிருஹத்தில் முறைகேடாக நடந்து கொண்டார் என்று தெரிய வந்தது.) திருட்டுத்தனமாக ஒரு பொறுப்பற்ற பலவீனரால் மேற்கொள்ளப்பட்டது என்பதற்காக அது ஏதோ வழக்கமானதுதான் என்பது போல, அவ்வாறு நடப்பது சகஜம் என்னும் தொனியில் அதனை நியாயப்படுத்தியும் “அது கோவிலுக்குள் போகலாம் என்றால் இத்வும் போகலாம்” என்று வாதிடுவதுதான் மான மிகுகளுக்குத் துணை போவதாகும். இப்படி நிதானம் இல்லாமால் எழுதும் மறுமொழிகளை தமிழ்ஹிந்து எப்படி, ஏன், அனுமதிக்கிறது?

    அறிஞர் முனைவர் கோ ந முத்துக்குமாரசுவாமி அவர்கள் தமிழ்ஹிந்து வுக்குக் கிடைத்திருக்கும் அரிய அறிவுச் செல்வம். அவரது கட்டுரை ஒவ்வொன்றும் உயர்ந்த தரத்தில் நல்லுணர்வையூட்டும் தூய படைப்பாக உள்ளது. இவரது கட்டுரைகளுக்கு வரும் மறுமொழிகள் கூடுமானவரை அவற்றின் தசரத்திற்கு இணையாக இல்லாவிடினும் ஓரளவுக்கேனும் தரம் மிக்கனவாய், விஷய கனம் இருப்பனவாய் உள்ளனவா என்று பார்த்து அதன் பின் பிரசுரம் செய்வதே ஆசிரியர் குழுவின் கடமையாக இருப்பின் மகிழ்ச்சி.

  13. தீக் குளிப்பு என்பது உடலைச் சாம்பலாக்கும் தற்கொலை செய்துகொள்வோர் செயல் போன்றதொன்றன்று. இதன் உண்மையான பொருளைச் சைவசித்தாந்த சாத்திரத்தின் வழி தீக்கை புரிவோரும் பெற்றோருமே அறிய இயல்வதாகும். சிவபூசை செய்வோர் நாள்தோறும் இதனைச் செய்வர். இதனைக் காஞ்சிப் புராணத்தின் சனற்குமாரப் படலத்தில் மாதவச் சிவஞான முனிவர்கள் எடுத்துக் கூறுகின்றார். அவர் கூறுகின்ற முறையிலேயே கூறுகின்றேன். அதனைப் பெரிதாக விளக்கும் அறிவும் அனுபவமும் எனக்கில்லை. புரிந்துகொள்வோர் புரிந்து கொள்க.சிவபூசைக்கு முன் சந்தியாவந்தனம் (சைவசம்பிரதாயத்தில் அனுஷ்டானம் எனப்படும்) செய்தபின் “இந்திரதிசை எனும் கிழக்கு திசையை நோக்கி மோனம் எய்தி தருப்பை போன்ற தூய இருக்கையின் மீதில் யோகநூலுட் கூறப்படும் பலவகை ஆசனங்களுள் எவ்வாறு இருந்தால் சுகமாகுமோ அவ்வாறு இருத்தல் வேண்டும். அதன் பின் , இந்த உடம்பு பஞ்ச பூத காரியம் ஆகையால் உடம்பில் உள்ள பூதங்களை பிருதிவி, அப்பு, தேயு, வாயு, ஆகாயம் என்னும் இம்முறையில் ஒன்றின் ஒன்றாக ஒடுக்க வேண்டும். உயிரை பிரமரந்திரம் என்னும் பிரமத்தை அடைதற்கு வாயிலாகிய உச்சித் துவாரத்தில் ஒடுக்க வேண்டும். இதன் பின்னர் பூத சுத்தி கூறப்படுகிறது. அதற்குரிய செய்யுள் வருமாறு. ” பாதகக் குழிசிப் புலைஉடல் தொடக்கைப் பவன பீசனத்தால் உணக்கிப், போதர வன்னி பீசத்தால் வேவப் பொடித்தது வாரிபீசத்தால், சீதமா நனைத்துத் தரணிபீ சத்தால் திரட்டிவே றுறுப்பெலாம் பகுத்து, மேதகச் சத்தி பீசத்தால் நிறைத்து மேயபின் விதியுளி உயிரை”, “ஆசுதீர் உடம்பின் முன்புபோ லிருத்தி — — —” இதன் பொருள்: சிவபூசைக்குக் கருவியாகவும் இருவினைகளுக்குக் கொள்கலமாகவும் பஞ்சபூத பரிணாமமாகவும் உள்ள உடலை (பாதகக் குழிசி) பவனபீசத்தால்( வாயு பீஜமந்திரத்தால்) உணக்கி (வாடச்செய்து), வன்னி பீசத்தால் (வன்னி- நெருப்பு. அக்கினி பீஜமந்திரத்தால் எரித்து சாம்பலாக்கி)ப் பொடித்ததை வாரி பீசத்தால் ( வாரி – நீர் அப்பு பீஜமந்திரத்தால்) குளிர்ச்சி பெற நனைத்து, வேறு உறுப்பெலாம் திரட்டி, அதன் பின் சத்தி பீஜ மந்திரத்தால் முன் சொன்ன குற்றம் தீர்ந்த உடம்பில் (ஆசுதீர் உடம்பினல்) பிரமரந்திரத்தில் ஒடுக்கிய உயிரை நிறுத்தி என்பது இதுவரை எடுத்தக் காட்டப்பட்ட பாடலின் பொருளாகும். ஆசுதீர் உடம்பு – சுத்தி செய்யப்பட்ட உடம்பு. ‘உணக்கி, பொடித்து’ என்றவற்றால் உடலை அழித்தலும், ‘நனைத்து திரட்டி நிறைத்து’ என்றதால் உண்டாக்குதலும் கூறப்பட்டன. நந்தனார் தம்முடைய உடலை ஆசுசேர் உடல் எனக் கருதி மயங்கினார். சிவனது ஆணையால் சிவாக்கினி மூலம் உணக்கிப் பொடித்து நனைத்துத் திரட்டி நிறைத்து’த் தூய அருளுடம்பாக்கி அந்தணர்கள் அவரை மகிழ்வுறுத்தினர் என்பது கருத்து. சைவ சம்பிரதாயம் அறிந்தோருக்கே இந்த உண்மை புலனாகும். மற்றையோர் இதனை அறிய இயலாமல் மனதுக்குத் தோன்றியபடி பேசுவர். சம்பிரதாயத்தின் சிறப்பை அறிந்தமையால் அல்லவா அருணகிரிநாதப் பெருமான் திருவிராலிமலைத் திருப்புகழில், ” சம்ப்ர தாயமொ டேயு நெறியது பெறுவேனோ” என்று ஏங்கினார். (பார்க்க காஞ்சிப் புராணம், சனற்குமாரப் படலம், செய்யுள்கள் 16, 17, 18)

  14. //தீக்குளிப்பு என்பது ஒரு குறியீடு, சிவபெருமான் தீப்பிழம்பெனத் தோன்றுபவன், அவன் தன்னில் ஒரு ஜீவாத்மாவை அரவணைத்துக் கொள்கிறான் எனில் அது ஜாதி வித்தியாசமின்றி அனைவருக்குமே தீக்குளிப்பாகத்தான் இருக்கும் //

    //குறியீடு என்பதன் பொருளை யாராவது இவருக்கு எடுத்துச் சொன்னால் நன்றாக இருக்கும்.//

    நல்லது. தீக்குளிப்பு என்பது வெறும் குறியீடு என்றால், நந்தனார் தீக்குளித்த சம்பவம் உண்மையா, இல்லையா? உண்மையாக நடந்தது என்ன? அல்லது அது தீமிதி போன்ற ஒரு நிகழ்ச்சியா?

    எப்படி இருப்பினும் – பிராமணர் உடல் எடுத்துதான் இறைவனை அடைய முடியும் என்கிற கருத்து – சமூகத்தால் நம்பப் பட்ட ஒரு கருத்தே தவிர, அப்படிப் பட்ட ஒரு கருத்து இந்து மதத்தின் எந்த ஸ்ருதியிலும் இல்லை.

    பகவத் கீதையில் தெளிவாக, எல்லா மானிடரும் முக்தி அடைய முடியும் என்பது சொல்லப் பட்டு இருக்கிறது. வேறு என்ன அத்தாரிட்டி வேண்டும்? குண, கருமத்துக்கு ஏற்பதான் ஒருவன் உயர்வதும் தாழ்வதும் என்பதும் தெளிவாக உள்ளது.

    ஸ்மிருதிகளை ரெபர் செய்தாலும் சொர்க்கத்துக்குப் போக வேண்டுமானால் மனித உடலில் போக முடியாது (திரிசங்கு) என சொல்லப்பட்டதாக தெரிகிரோமே அல்லாது,

    முக்தி அடைய உடல் ஒரு பிரச்சினை இல்லை. இது மனிதனின் ஆத்மா சமபந்தப் பட்ட விவகாரம்.

    எனவே மான மிகுக்களின் வாயாடலுக்கு பதிலுக்கு பதில் லாவணி பாடுவதை விட சைவத்தை சேரிகளுக்கு எடுத்து செல்வதே சிறப்பு. இப்போது சிதம்பரம் கோவில் உட்பட எந்த கோவிலுக்கும் யாரும் போகலாம்.

    எனவே வெறுப்புக் கருத்துக்கள் இல்லாத ஒரே மதமான இந்து மதத்தின் ஆன்மீகத்தை, எல்லா தரப்பு மக்களுக்கும் வெள்ளம் போலப் பாய்ச்ச இதுவே சரியான நேரம். மானமிகுக்களுக்கு மேடை போட்டு திட்டுவதற்கு மேல் செய்வதற்கு ஒன்றும் இல்லை. ஆனால் ஆன்மீகவாதி, சிவ தத்துவத்தின் மூலம் மனிதனின் மனத்தை கட்டுப் படுத்தி ஆன்மாவில் (உயிரில்) நிலை நிறுத்தும் பயிற்ச்சியை தர முடியும்.

    அந்தப் பயிற்ச்சியில் கிடைத்த இனபத்தை அனுபவித்தவன் –
    “சந்துரு வர்ணு நீ, அந்த சந்தமுனு ஹிருதயார
    விந்தமூன ஜூசி பிரமானந்த மனுபவின்ச்சுவார்” –
    அந்த பேரானந்தத்தை அனுபவித்தவன் வெறுப்புக் கருத்துக்களை கேட்டு புன்முறுவல் பூப்பானேயன்றி, பொய் பிரச்சாரத்தில் மயங்க மாட்டான்.

    எனவே முனைவர் ஐயா ஆன்மீக சாதனையை எல்லா மக்களுக்கும் டிரான்ஸ்பர் செய்ய வேண்டும் என்பதையே, என்னுடைய கோரிக்கையாக வைத்து இருக்கிறேன்.

    இந்து மதம் பின்பற்றப் பட்ட விதத்தில் தவறுகள் இருந்திருந்தால், திருத்திக் கொண்டு வேகமாக முன்னேறுவோம். தவறு இந்து மதத்தின் மீது அல்ல! அதனால் பூசி மொழுக வேண்டியதில்லை!

    இதற்க்கு மேல் என்ன சொல்ல முடியும்?

    நான் எழுதியதில் தவறு இருந்தால் சொல்லுங்கள் , திருத்திக் கொள்கிறேன்!

  15. //அல்லது வேண்டுமென்றே திசை திருப்புவது போல் இக்கருத்துப் பரிமாற்றங்களைப் போஸ்ட் மார்ட்டம் என்று திராவிட கழக பாணியில் தரம் தாழ்த்தி விமர்சிப்பது சரியா?//

    இதில் தரம் தாழ்த்தி எதுவும் எழுதி விடவில்லை என நினைக்கிறேன். போஸ்ட் மார்ட்டம் என்ற சொல் நடை முறையில் உபயோகப் படத்தப் படும் ஒரு சொல்லே. பல வாக்குவாதங்களில் இது சொல்லப் படுகிறது. இதே பொருளைத் தரும் வேறு சொல் சரியாக அகப்படவில்லை.

  16. பிராமணனகப் பிறந்தோ அல்லது பிராமணனாக உடல் மாற்றம் எய்தியோதான் முத்தி அடைய முடியும் என்று எந்த சாத்திரத்திலும் சொல்லப்படவில்லை. அப்படி எங்காகிலும் எழுதி வைக்கப்பட்டிருந்தால் அது வேத முரண். நாரைக்கும் முள்ளிச் செடிக்கும் முத்தி அடையும் தகுதி உண்டு என்று சைவநூல்கள் கூறும்போது மனிதனுக்கு அந்த்த் தகுதி இல்லை என்று கூற லாமா? இங்கு பேசப்பட்டது நந்தனாரின் மனநிலை மட்டுமே. வேதமோதி வேள்வி செய்து அம்பலவானருக்கு அருகிருந்து பணிசெய்யும் மறையவர் குலத்தின் மீது உயர்வு மனப்பான்மையும் புலைத் தொழில் செய்யும் தம் குலத்தின் மீது தாழ்வுணர்ச்சியும் வலிமையாக இருந்தன. அவர் தன் புலை உடலை இழிவாகக் கருதி அதன் காரணமாகவே தில்லைக்குச் செல்லாது திருநாளைப் போவார் ஆயினார். இறைவன் அவருடைய மனப்பான்மையை அவர் போக்கிலேயே மாற்றினான். நந்தனார் வரலாறு மூவருக்கும் முற்பட்டது. எந்தவொரு முக்கியமான நிகழ்ச்சியும் எழுத்தில் பதிவு செய்யாத போனால் காலப்போக்கில் மக்கள் வாய்மொழியால் பரிமாறிக் கொள்ளும்போது உருமாற்றம் எய்தி தொன்மைப் புராண நிலையை அடையும். Myth making பற்றிய ஆய்வாளர்களின் கருத்தை அன்பர்கள் அறிவார்கள். அந்தமுறையில் நந்தனார் வரலாற்றையும் புரிந்துகொள்ளல் வேண்டும். என்னுடைய கட்டுரை நந்தனார், திருநீலகண்ட யாழ்ப்பாணர் இருவருடைய மனநிலையில் மலைக்கும் மடுவுக்கும் போல இருந்த வேற்றுமை, அதற்குக் காரணம், அந்த வேற்றுமை தோன்றாமல் இருக்கப் பரிகாரம் இவற்றைச் சிந்திப்பதுதானே ஒழிய நந்தனாரை அந்தணர்கள் எரித்துச் சாம்பலாக்கினார்கள் என்பது குறித்தோ, நந்தனைப் பிராமணனாக்கி இறைவன் தன்னிடத்தில் சேர்த்துக் கொண்டான் என்பதோ அல்ல. செருப்புக் காலோடும் வேடக் கோலத்தோடும் தன்னிடத்தில் கண்ணப்பனைச் சேர்த்துக் கொண்டான் என்றும் அதே புராணம்தான் கூறுகின்றது. என் விளக்கங்கள் ‘மானமிகு ‘பகுத்தறிவாளர்’களுக்கு அல்ல. சமயநம்பிக்கை உடைய தழிழர்களுக்கே. பக்தியாகிய அன்புநெறி மனிதர்கள் தாமாக ஏற்படுத்திக் கொண்ட செயற்கைப் பிரிவினைகளை சலசலப்பின்றி நீக்கும் என்பதைத் திருத்தொண்டர் புராண வரலாறுகள் எடுத்துக் காட்டுகின்றன. இது நடைமுறைக்கும் ஒத்து வருகின்றது.

  17. தீக்குளிப்பிற்கு மிகச் சிறப்பாக விளக்கம் அளித்த அறிஞர் முனைவர் முத்துக்குமாரசுவாமி அவர்களின் திக்கு நோக்கித் தொழுகிறேன். நந்தனார் குறித்து அறிஞர் மலர்மன்னன் ஆற்றிய உரையில் இதே கருத்தைத்தான் மக்கள் புரிந்துகொள்ளும் மொழியில் குறிப்பிட்டார்கள். அதனை ஒரு குறியீடு என்று சொல்லிப் பல உதாரணங்களைக் கூறினார்கள். தீ என்பது மற்ற பூதங்களைப் போன்றதல்ல, அது தனித் தன்மை வாய்ந்தது, அதற்கென்று மூலகங்கள் இல்லை, தீ என்பதே ஒரு பேராச்சரியம், பேராற்றல், எனவேதான் நமது ஹிந்து சமயத்தில் அதற்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது எனக் கூறிய அவர், அறிஞர் முத்துக் குமாரசுவாமி அவர்கள் தெரிவித்த சைவ சித்தாந்தக் கோட்பாட்டினையும் எடுத்துரைத்தார்கள். திண்ணை டாட் காமில் சில ஆண்டுகளுக்கு முன் அறிஞர் மலர்மன்னன் அவர்கள் “நந்தன் இல்லாமல் நடராசரா?” என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதினார்கள். அது மிகுந்த முக்கியத்துவம் பெற்றது (தமிழ்ஹிந்து வாசகர்களுக்காக் அதனை மறுபிரசுரம் செய்வது பற்றி ஆசிரியர் குழு பரிசீலிக்கலாம்) . அதனைப் படித்த சென்னை மந்தைவெளி டாக்டர் ஸ்ரீனிவாசன் என்ற பிரபல சரும நோய் நிபுணர் மலர்மன்னன் அவ்ர்களுடன் தொடர்புகொண்டு லேடி சிவஸ்வாமி பள்ளியில் நந்தனார் பற்றி உரை நிகழ்த்த ஏற்பாடு செய்தார்கள். அதற்கு இணங்க மலர்மன்னன் அவர்கள் நிகழ்த்திய உரை உட்பொருள் மிக்கதாய் இருந்ததுடன் மிகுந்த உணர்ச்சிப் பெருக்குடன் அமைந்தது. அந்த உரை யினைக் கேட்ட அனைவரும் சிதம்பரம் கோயிலில் மீண்டும் நந்தனார் சிலையினை நிறுவுமாறு தீட்சிதர் பெருமக்களுக்கு வேண்டுகோள் தீர்மானம் நிறைவேற்றி, டாக்டர் ஸ்ரீனிவாசன் முதல் கையொப்பமிட்டு அனுப்பினார்கள். அன்று மலர்மன்னன் அவர்களின் அரிய உரையினைக் கேட்கும் வாய்ப்பினைப் பெற்றவர்களில் நானும் ஒருத்தி. துரதிருஷ்டவசமாக அந்த உரை ஒலிப்பதிவு செய்யப்படவில்லை. அறிஞர் முத்துக்குமாரசுவாமி அவர்களின் கட்டுரையில் கண்டுள்ள பல விவரங்களுடன் (குறிப்பாக, நந்தனாரின் தாழ்வு மனப்பானாமை, உடலைப் பிரதானமாகக் கருதியதால் அவ்வாறு அவருக்குத் தாழ்வு மனப்பான்மை ஏற்பட்டமை), அவர் குளித்தெழுந்தது ஓமக் குளத்தில்தான், தீக் குண்டத்தில் அல்ல என்ற விவரம், சைவ சித்தாந்தக் கோட்பாடு, அக்னியின் பணி எனப் பல த்த்துவங்களையும் அவர் விளக்கினார். வள்ளலார் தமது உடலைப் பஞச பூதங்களாகப் பிரித்தளித்த விவரத்தினையும் அப்போது அறிஞர் மலர்மன்ன்ன அவர்கள் குறிப்பிட்டுப் பேசினார்கள். அது கேட்டு வள்ளலார் பற்றியும் அவர் பேச வேண்டும் என்று கேட்க்கொள்ளப்பட்டது. ஆனால் வள்ளலார் பற்றி அவரது உரை பின்னர் நிகழ்ந்ததா என்று அறியேன். இக்குறை நீங்க அறிஞர் முத்துக் குமாரசுவாமி அவர்கள் வள்ளலார் பற்றி சைவ சித்தாந்தப் பார்வையில் ஒரு கட்டுரை எழுதி எங்களுக்கு விழிப்புணர்வூட்ட வேண்டுகிறேன்.

  18. //இதன் பொருள்: சிவபூசைக்குக் கருவியாகவும் இருவினைகளுக்குக் கொள்கலமாகவும் பஞ்சபூத பரிணாமமாகவும் உள்ள உடலை (பாதகக் குழிசி) பவனபீசத்தால்( வாயு பீஜமந்திரத்தால்) உணக்கி (வாடச்செய்து), வன்னி பீசத்தால் (வன்னி- நெருப்பு. அக்கினி பீஜமந்திரத்தால் எரித்து சாம்பலாக்கி)ப் பொடித்ததை வாரி பீசத்தால் …….. உண்டாக்குதலும் கூறப்பட்டன.//

    இது ஒரு தெளிவான விளக்கம். முனைவர் ஐயா இதை இன்னும் விளக்கி இதை செய்யும் முறையை கூறினால் இன்னும் சிறப்பாக இருக்கும். இதைக் கட்டுரையில் இணைத்து விட்டால் பொருத்தமாக இருக்கும்.

    //சிவன் ஆணையால் தில்லைவாழ் அந்தணர் உண்டாக்கிய நெருப்பு பூதசுத்தி செய்து தூய்மையாக்கும் மந்திர பூர்வமான சிவாக்கினியே அன்றி உடலைச் சுட்டுப் பொசுக்கும் நெருப்பாகிய பெளதிக நெருப்பன்று என்பது சைவர்கள் கொள்கை.//

    ஐயா, இந்தக் கருத்துக்கு கட்டுரையில் முக்கியத்துவம் கொடுத்து எழுதியிருந்தால் அதோடு இப்போது கூறப் பட்ட விளக்கத்தையும் இணைத்து இருந்தால் சிறப்பாக இருந்திருக்கும்.

    கட்டுரையில் நந்தனார் பெளதிக நெருப்பில் எரிவது போல படம் போடப் பட்டு உள்ளது. அது இப்போது உள்ள கருத்துக்கு மாறான பொருளை தருகிறது. எழுத்தை விட ஓவியம் ஒருவரின் கருத்தை விரைவில் கவர்கிறது.

    முனைவர் ஐயாவிடம் மிகவும் தெளிவான விளக்கங்கள் அளித்து இருக்கிறார். சைவ சிந்தாந்த தியான முறைகளை அறியும் வாய்ப்பு கிடைத்தது. அந்த வகையில் நமக்கு நல்லதே.

  19. ஐயா,மான மிகுக்களும் ஆன்மீகத்தைப் புரிந்து கொள்ளும் நிலை வரும் என நம்புகிறேன். மகேந்திர பல்லவனுக்கு திருநாவுக்கரசர் உணர்த்தியது எங்களை விட உங்களுக்கு நன்றாகத் தெரியும். உங்கள் எழுத்துக்கள் எல்லோருக்கும் ஆன்மீக உணர்வை உருவாக்கும் சக்தி வாய்ந்தவை என்பதே எம் கருத்து!

  20. சீதை தீ குளித்தது பற்றி ?

    யாஜ்யவல்கர் தன்னை சுற்றி தீ வளர்த்து தவம் புரிந்து தான் சுக்ல யசுர் வேதத்தை சூர்ய பகவானிடம் கற்று உலகுக்களித்தார் – நந்தனார் பௌதிக தீயில் தன்னை இட்டுக் கொண்டிருந்தாலும் அது அப்படியே மக்களை உலுக்கி விட்டு எல்லோரும் தீ குளிக்கப்போவதில்லை – கண்ணப்பர் கண்ணை பிடுங்கினதால் எல்லோரும் என்ன கண்ணை பிடுங்கிக்கொண்டா திரிகிறார்கள் – இதை போல எவ்வளவோ அதி மானுஷ்யமான விஷயங்கள் நமது மதத்திலே உண்டு – ப்ரகுஅல்லாதன் தீயிளிடப்பட்டது, துருவனின் கடும் தவம்…. சரி யாரவது ஒருவர் துறைவனை போல முயற்சி செய்துள்ளார்கள – தீ குளிக்க மட்டும் முண்டிக்கொண்டு வந்துவிடுவார்களா என்ன?
    – அதில் உள்ள ரசத்தை எடுத்துகொண்டால் நல்லது

    நந்தனாருக்கு தனது உடம்பின் மீது ஒரு தாழ்வுணர்ச்சி இருந்தது அதலால் அவர் மனம் போலவே மாற்றி தரப்பட்டார் – இதே போல திருப்பானாழ்வார் கதை உண்டு – அவரை அப்படியே பூத உடலுடன் தான் ச்வீகரிக்கிறான் அரங்கன்

  21. ஒரு கட்டுரை வந்தால், அந்த கட்டுரையை ஒட்டியோ வெட்டியோ பின்னூட்டங்கள் வருவது கருத்துப் பரிமாற்றமே.

    கருத்துக்கு கருத்து என்ற அளவிலே விவாதிக்காமல் ”தரக் குறைவு” எனத் தனி நபர்க் காழ்ப்புணர்ச்சியில் இறங்குவது தேவை இல்லாதது.

    என்ன தரக் குறைவு? என்ன விஷய கணம் இல்லாமல் போய் விட்டது?

    கருத்துக்கு கருத்து பதில் சொல்ல இயலாத காரணத்தால் தனி நபரை இழிவு படுத்துவதில் இறங்குகிறார்கள். தாம் உலக விவகாரங்களில் பற்றே இல்லாமல் நிஷ்டையில் இருந்து எழுந்து வந்து எழுதுவது போலவும், மற்றவர்கள் எல்லாம் அக்கப், போர் ஆபாசங்களில் ஈடுபடுபவர்கள் போலவும் எழுதுவது காமெடியே! வழக்கு விசாரணையில் உள்ளது, தீர்ப்பாகவில்லையாம் (அவ்வளவு டீடைலாக அக்கப்போர்கள் அப்டேட்டாகி இருக்கிறது), தீர்ப்பு வராத நிலையில் ஒன்றும் சொல்லக் கூடாது என்பதை குறியீடாக சொல்கிறார்கள் – அவ்வளவு அனுதாபம்.

    நாம் வழக்கைப் பற்றி ஒன்றும் சொல்லவில்லை, வக்காலத்து வாங்க விரும்புபவர்கள் வக்காலத்து வாங்கிக் கொள்ளுங்கள். முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைப்பது, இந்து மதத்திற்கு அதிக கெடுதல் விளைவிப்பதாகும்.

    எது தரக் குறைவு என்பது சிந்திப்பவர்களுக்குத் தெரியும்.

  22. அன்புக்குரிய நண்பர் சாரங்கனும் விவாதத்தில் இறங்கி விட்டார் , அதுவும் நான் கருத்து தெரிவித்ததைக் கண்டித்து என்பது போல இருக்கிறது. இந்த முறையும் முன்னூறு , நானூறு பின்னூட்டங்கள் போக விரும்பவில்லை. எனவே நான் இந்த ஒரே ஒரு பின்னூட்டத்தை இட்டு விட்டு விலக விரும்புகிறேன்.

    நண்பர் சாரங்கனார் முதலில் நான் எழுதியதைச் சரியாகப் படிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன். நான் யாரையும் தீக் குளிக்கச் சொல்லவில்லை. அடுத்தவர் தீக் குளிப்பு நமக்கு வருத்தத்தை உண்டு பண்ணுமே அல்லாது, மெய் சிலிர்ப்பை உருவாக்கக் கூடுமா எனபதே நமது வினா!

    சீதை தீக்குளிப்பு நிகழ்வுக்கு காரணம் வேறு. அது இங்கே பொருத்தம் இல்லாதது. பிரஹலாதனை மற்றவர்களே தீயில் இறக்கினார்கள், எனவே அதுவும் பொருத்தம் இல்லாதது.

    இங்கே நந்தனார் தீக்குளிப்பு சாதி சமபந்தப் பட்டது.

    நந்தனார்க்கு தன உடலைப் பற்றிய தாழ்வு உணர்ச்சி இருந்தால் அதை அவரின் ஆன்மீக வலிமை மூலம் போக்கி விடலாம் என்பதே நம் கருத்து. அது ஆன்மீக சுத்தியே என்பதையே முனைவர் ஐயாவும் விளக்கியுள்ளார்.
    முள்ளிச் செடிக்கும் முத்தி அடையும் தகுதி உண்டு என்று சைவநூல்கள் கூறும்போது மனிதனுக்கு அந்த்த் தகுதி இல்லை என்று கூறலாமா? ஆதி மூலமே என கஜேந்திரன் அழைத்ததாக சொல்லியிருக்கும் போது, மனிதனின் தாழ்வுணர்ச்சியை ஆன்மீகத்தின் மூலமே சரி செய்யலாம். //தில்லைவாழ் அந்தணர் உண்டாக்கிய நெருப்பு பூதசுத்தி செய்து தூய்மையாக்கும் மந்திர பூர்வமான சிவாக்கினியே அன்றி உடலைச் சுட்டுப் பொசுக்கும் நெருப்பாகிய பெளதிக நெருப்பன்று என்பது சைவர்கள் கொள்கை//

    ஆன்மீகத்தைப் பொறுத்த அளவில் உடல் முக்கியம் இல்லாதது.

    நம்முடைய மான மிகு சகோதரர்கள் இந்த விவகாரத்தில் இலவு காத்த கிளியாகவே ஆகப் போகின்றனர். ஏனெனில் இந்து மதம் வர்ணாஸ்ரம கட்டமைப்பை தாண்டி வெளியே வந்து விட்டது.

    இந்து மதம் என்றாலே வர்ணாஸ்ரமமே என்பது போல பிரச்சாரம் செய்து கொண்டு உள்ளனர் சில மான மிகு அறிவாளிகள். சில ஆத்திக அறிவாளிகளும் வர்ணாஸ்ரமம் இன்னும் இருக்கிறது என்கிற கனவில் இருக்கின்றனர்.

    ஆனால் வர்ணாஸ்ரமம் என்பது இந்திய சமுதாய அமைப்பே. அது இந்து மதத்தின் அடிப்படை அல்ல.

    இந்து மதத்தின் அடிப்படை, உண்மையே!

    உண்மையை அடைவதே (அசத்தோமா சத்கமய) துன்பத்தில் சிக்கியுள்ள உயிரை விடுதலை பெற்ற நிலையை அடைய செய்வதே இந்து மதத்தின் நோக்கம்.

    அதை அடைய கர்ம யோகம், கர்ம பலத் தியாகம், பக்தி, தியானம்…. இவ்வாறாக பல வழிகள் சொல்லப் பட்டு உள்ளன. நான் சொல்லியது சரியா நண்பர்களே? இதில் அனேகமாக நமக்குள் கருத்து வேறுபாடு இருக்காது என நம்புகிறேன்.

    இந்த அடிப்படை, நோக்கம், வழிகள் இவை எந்த ஒரு மனிதனுக்கும் பொருந்தும்.

    எனவே இந்து மதத்திற்கும், வர்ணாசிரம அமைப்புக்கும் உள்ள தொடர்பு ஞானத்துக்கும் அறியாமைக்கும் உள்ள தொடர்பே, சூரியனுக்கும் மேகத்துக்கும் உள்ள தொடர்பே.

    இப்போது இந்திய சமுதாயத்தில் சாதி வேறுபாடுகள் வேகமாக குறைந்து வருகின்றன. அதை விட வேகமாக இந்து மதம் வர்ணாஸ்ரம மறைப்புக்கு வெளியே தன கிரகணங்களைப் பாய்ச்சுகிறது.

    திருப்பதி பாலாஜி கோவிலில் சாமி கும்பிடுபவன் தன முன்னால் செல்பவன் எந்த சாதி எனத் தெரிந்து வைத்து இருக்கிறானா?

    ஜருகண்டி, ஜருகண்டி, இந்து மதம் வேகமாக முன்னேருதண்டி.

    எனவே கையைப் பிசையும் மாண்பு மிகுக்கள் 1917ல் ஸ்பர் டான்க் ரோடிலே நாயர் பேசியது, 1935 ல் கும்பகோணம் மாநகராட்சியில் நடை பெற்றது என பழைய பஞ்சாங்கத்தை பேச வேண்டிய நிலைக்கு தள்ளப் பட்டு விட்டனர்.

    இப்போது உள்ள இந்து மதத்தின் மீது அவர்களால் எந்தக் குற்றமும் சொல்ல முடியவில்லை. அப்படி சொலவதானால் அது நித்யா விவகாரம் போன்றதே.

    எனவே அவர்களுக்கு வேறு வழி இல்லாததால் பழைய விடயக்களைப் பேசிக் கொண்டு உள்ளனர். நமக்கு இந்து மதத்தை எல்லோரிடமும் கொண்டு சேர்க்கும் வேலை இருக்கிறது. அதை விட்டு விட்டு நாமும் பழைய நிகழ்ச்சிக்கு இப்போது பதில் குடுப்பது, அவர்களின் வலையில் சிக்கும் செயலே.

    இதை சொல்வதில் எனக்கு எந்த தயக்கமோ, பயமோ இல்லை. இதை நான் சொல்வதற்காக எல்லோரும் சேர்ந்து என்னைத் திட்டினாலும் எனக்கு வருத்தமில்லை.

    எனவே நான் சொல்ல வருவது என்ன என்று புரிந்து கொண்டு பிறகு அது உங்களுக்குப் பிடிக்காமல் இருக்கிறதே என்பதற்காகத் திட்டுங்கள், புரிந்து கொள்ளாமலே திட்டி உபயோகம் இல்லை.

  23. நண்பர் திருச்சிகாரரே

    உங்களை திடாவில்லையே – உங்களின் கருத்தை பற்றி எனக்கு பட்டதை தான் எழுதினேன்
    சொல்வதை புரிந்துகொண்ட தான் எழுதினேன் – எந்தெந்த காரணத்திற்கு தீ குளிதார்களோ அந்தந்தகாரணம் சிறக்க மறுபடியும் தீக்குளித்த திருஷ்டாந்தங்கள் எங்கே இருக்கிறது

    பத்தினி என்று நிருபணம் செய்ய எவ்வளவு பேர் தீ குளிக்கிறார்கள் – பத்தினி என்று நிரூபணம் தீ குளிக்காமல் செய்திருக்க முடியாதோ? கட்டாயமாக ராமனால் செய்திருக்க முடியும்
    எவ்வளவோ கோவில்கள் இடிந்தே போய் விட்டன – பக்தியை காட்ட எவ்வளவோ பேர் கண்ணை பிடுங்குகிறார்கள், காலை தருகிறார்கள், கையை தருகிறார்கள்

    ஆன்மிகத்திற்கு எவ்வளவோ தடை இருக்கிறது – இந்த கருணாநிதி தீயில் இட்டவேரல்லாம் ப்ரகுஅல்லாதன் ஆகிவிட வில்லை – அழகிரி ராஜ்யம் கிடைக்கவில்லை, அப்பனின் அன்பு தனுக்கில்லை என்று கடும் தவமா செய்யபோகிறார்?

    இதே போல தான் இந்த ஜாதி விஷயமும்- இப்படி ஒரு விஷயம் நடந்தமையால் யாரும் அதை செய்துவிடப் போவதில்லை – ஆன்மிக வழியில் சொல்லிவிட்டாலும் செய்து விட போவதில்லை

    பாணனை லோக சாரங்கர் தோள்களின் மீது வைத்து தூக்கிக்கொண்டு போனார் (அரங்கன் கூட்டி வர சொன்னார்) – இன்றைக்கு எவ்வளவு பேர் அப்படி செய்கிறார்கள்

    இந்த தீயில் இடும் கருத்தை தவறாக திரித்து கூறுகின்றனரே என்றார் ஆதங்கத்தில் தான் இந்த கட்டுரையே எழுதப்பட்டு இருக்கிறது – மறுபடியும் முதல் பத்து வரிகளை படித்தால் தெரிந்து விடும்

  24. //ஒரு கட்டுரை வந்தால், அந்த கட்டுரையை ஒட்டியோ வெட்டியோ பின்னூட்டங்கள் வருவது கருத்துப் பரிமாற்றமே. //

    ரொம்ப சரி. ஆனால் வெட்டி வரும் பின்னூட்டம் வெட்டித்தனமாகப் போய்விடக்கூடாது! வெட்டி எழுதுவதானால் அதற்குக் கட்டுரையில் கண்டுள்ள விஷயம் குறித்து ஓரளவாவது அறிமுகம் இருக்க வேண்டும். கட்டுரையின் அடிப்படையினையே புரிந்துகொள்ளாமல் இடும் பின்னூட்டம் வெட்டித்தனமான பின்னூட்டமாகத்தான் போய்விடும்.

    //கருத்துக்கு கருத்து என்ற அளவிலே விவாதிக்காமல் ”தரக் குறைவு” எனத் தனி நபர்க் காழ்ப்புணர்ச்சியில் இறங்குவது தேவை இல்லாதது.//

    இதில் காழ்ப்புணர்ச்சி எங்கே வந்தது? காழ்ப்புணர்ச்சி என்றால் பொறாமை என்று அர்த்தம். இவர் மீது ஏன் எதற்காகப் பொறாமை ஏற்பட வேண்டும்?

    போஸ்ட் மார்ட்டம் என்றால் பிணத்தை அறுத்து, எதனால் மரணம் நிகழ்ந்தது என்று பார்த்தல் என்று அர்த்தம். இங்கு கட்டுரையின் விவாதப்பொருள் ஆன்மிகம் சார்ந்த, இரு சைவப் பெருமகனார்களைப் பற்றிய ஒப்பாய்வு. தீக்குளிப்பு என்பது ஒரு குறியீடு என்கிற விளக்கம். இதில் போஸ்ட்மார்ட்டம் என்ற பதத்தைப் பயன் படுத்துவததைத் தரக் குறைவு என்று சொல்வது எப்படித் தனிநபர் காழ்ப்புணர்ச்சியில் சொல்வதாகும்? எதற்கும் இடம் பொருள் ஏவல் அறிந்து சொற்களைப் பயன்படுத்துவது என ஒரு நாகரிகம் உள்ளது அல்லவா? திருமண வீட்டில் இன்ன சொற்களைத்தான் பயன்படுத்தலாம், இன்ன விஷயம்தான் பேசலாம் என்கிற பண்பாடில்லாமல் திராவிட இயக்கத் தலைவர்கள் பேசுவது போல் இங்கே பேசுவது முறையாகுமா?

    மேலும், அந்த அர்ச்சகன் பற்றிய பிரஸ்தாபம் இங்கு தரக் குறைவானதே யன்றி க்ட்டுரைக்குப் பொருந்தக் கூடிய மிகவும் முக்கியமான விவரமா?

    //(அவ்வளவு டீடைலாக அக்கப்போர்கள் அப்டேட்டாகி இருக்கிறது), தீர்ப்பு வராத நிலையில் ஒன்றும் சொல்லக் கூடாது என்பதை குறியீடாக சொல்கிறார்கள் – அவ்வளவு அனுதாபம். //

    தெரியாத ஒரு விஷயம் பற்றி விசாரிக்கும்போது அரைகுறையாக அல்லாமல் முழுமையாகத் தெரிந்துகொண்டு அதன்பிறகு கருத்து வெளியிடுவதுதான் முறை. இதுவே என் வழக்கமும். இதில் ’’அவ்வளவு டீடெய்லாக அப்டேட் ஆகியிருக்கிறது ’’ என்று என்மீது ஏளனம் எதற்கு?

    ஒரு வழக்கு விசாரணையில் இருக்கும்போது கருத்துக் கூறுவது தவறு என்பது நாகரிக உலகம் முழுவதும் கடைப்பிடிக்கப்பட்டு வரும் நியாயமான நடைமுறை. ஆனால் இங்கோ ஒரு சிலர் விஷயத்தில் மட்டும் எல்லாம் தலைகீழாக இருக்கிறது. குற்றப் பத்திரிகை தாக்கல் செய்வதற்கு முன்பே வெளியுலகில் குற்றம் நிரூபணமாகி கடும் தண்டனையும் வழங்கப்பட்டு விடுகிறது! வழக்கு விசாரணையில் உள்ளது என்று நான் சம்பிரதாயம் கருதிச் சொன்னால் “அவ்வளவு அனுதாபம்” என்று என் எழுத்துக்கு உள்நோக்கம் கற்பிக்கத் தோன்றுகிறது. பிறகு தனி நபரை இழிவு செய்வதாக என்மீதே பழியைச் சுமத்தவும் முடிகிறது.

    (edited and published)

  25. //இங்கு பேசப்பட்டது நந்தனாரின் மனநிலை மட்டுமே. வேதமோதி வேள்வி செய்து அம்பலவானருக்கு அருகிருந்து பணிசெய்யும் மறையவர் குலத்தின் மீது உயர்வு மனப்பான்மையும் புலைத் தொழில் செய்யும் தம் குலத்தின் மீது தாழ்வுணர்ச்சியும் வலிமையாக இருந்தன. அவர் தன் புலை உடலை இழிவாகக் கருதி அதன் காரணமாகவே தில்லைக்குச் செல்லாது திருநாளைப் போவார் ஆயினார். இறைவன் அவருடைய மனப்பான்மையை அவர் போக்கிலேயே மாற்றினான். நந்தனார் //

    மறையவர் குலத்தின்மீது ஏன் உயர்வு மனப்பான்மை வந்தது?
    தன் குலத்தின் மீது ஏன் தாழ்வுணர்ச்சி வந்தது?
    தன் புலை உடலை ஏன் இழிவாகக கருதினார்?

    //என் விளக்கங்கள் ‘மானமிகு ‘பகுத்தறிவாளர்’களுக்கு அல்ல. சமயநம்பிக்கை உடைய தழிழர்களுக்கே//

    சமயநம்பிக்கை உடைய தமிழர்களுக்கு நீங்கள் ஏன் மெனக்கெட்டு எழுத வேண்டும். அவர்கள் எவரேனும் நந்த்னாரின் கதையை நம்ப மாட்டோம்; அல்லது கதையில் நிறைய ஓட்டைகள் என்றார்களா? அவர்கள்தான் சமயநம்பிக்கையுடையவர்களே. நீங்கள் எதற்கு?

    பசித்தவனுக்கு உணவா? இல்லை, நளபாக உணவைப் புசித்து ஏப்பமிட்டு மல்லாந்து கிடப்பவன் முன் உணவை வைப்பீர்களா?

    In your original essay, you are referring to மானமிகுகள். அவர்களை மனதில் வைத்துத்தான் இக்கட்டுரை. அவர்கள் கேள்விகளுக்கு பதில் சொல்லுங்கள்.

    தீக்குளிப்பு இவருக்கு மட்டுமேன்? இவர் ஏன் தன் குலத்தைத் தாழ்வாகவும் வேதியரை உயர்வாகவும் கருது தாழ்வுணர்ச்சி கொள்ள வேண்டும்?

    டாக்டர், it is not convincing. Please go further and explain to me. நான் ஒரு மானமிகு. ஹா…ஹா…ஹா…please face me for some days to come.

    Further, வேறு எவரையாவது தீக்குழிக்கச்சொன்னாரா இறைவன்? அல்லது வேதியர்கள் சொன்னார்களா?

    தீக்குளிப்பு ஒரு குறியீடு? அதாவது symbol.

    அந்தக் குறியீடு இவருக்கு மட்டுமேன் மதிப்புமிகு மரியாதைமிகு சத்தியபாமா ?

  26. ஐயா,
    எனக்கு நீண்ட நாட்களாக இந்த சந்தேகம் இருந்துகொண்டே இருந்தது. நாலாம் வர்ணம் என்றும் சொல்லும் சூத்திர குலத்தில் அவதரித்த வாயிலார் நாயனாரையும், இளையான்குடி மாற நாயனாரையும் யாரும் ஆலயத்திற்குள் செல்லக்கூடாது என்று தடுக்கவில்லை, தீக்குளிக்க சொல்லவில்லை. மாறாக ஏன் நந்தனாரை மட்டும் அவ்வாறு சொன்னார்கள் என்று. எதோ ஒன்று மறைக்கப்பட்டுள்ளது அல்லது தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது என்று மட்டும் புரிந்தது. இன்று அந்த சந்தேகம் நீங்கப்பெற்றேன்.(நன்றி திரு.ஜடாயு அவர்கள் இந்த பக்கத்தை காண்பித்ததற்கு).

    அய்யா ஒரு சந்தேகம் எதோ எனக்குள்ள சிற்றறிவை கொண்டு நான் படித்து உணர்ந்து கொண்டது வேதத்தில் எங்குமே சூத்திரர்கள் தாழ்ந்தவர்கள் என்றோ, இழி பிறப்புக்கள் என்றோ,அவர்கள் செய்யும் தொழில் இழிவான தொழில் என்றோ சொல்லப்பட்டதாக (எனக்கு) தெரியவில்லை.

    மனு ஸ்மிருதி 2.147 The birth that happens from the womb of the mother after parent’s desire for procreation is an ordinary birth.Real birth happens when the person completes his education.

    (உண்மையான பிறப்பு கல்வி பெற்ற பிறகே)

    10.4 Brahmin, Kshatriya & vaishya take second birth after education. Shudra who couldn’t complete education is fourth varna.

    (மற்ற 3 வர்ணத்தினரும் கல்வி கற்றதால் வர்ணம் மாறினார்கள். ஆனால் இவன் கல்வி கற்க முடியாததால் தான் சூத்திரனாகவே இருக்கிறான்).

    4.141 never deny respect and rights to a person who is handicapped,uneducated,aged or coming from a lower family. those are not the parameters to judge a person.

    3.112. if ashudra or vashya comes as a guest the family should feed him with due respect.
    3.116. a householder should eat from remaining food only after he has fed the scholors and servants to their satisfaction.
    2.137. a very old shudra deserves more respect than anyone else regardless of his or her wealth,company,age,actions or knowledge.

    என எங்குமே சூத்திரர்களை இழிவாகவே சொல்லவில்லை.
    அவர்களால் படிக்க முடியவில்லை அதனால் அவர்கள் சூத்திரர்கள்.
    அவர்கள் just சூத்திரர்கள் அவ்வளவுதான்.

    இப்படி இருக்கையில் எப்போதில் இருந்து இந்த இழி பிறப்பு, இழிவான தொழில் என்ற எண்ணம்/சொல் ஏற்பட்டது.

    சாக்கடைக்குள் இறங்கி சுத்தம் செய்யவில்லை என்றால் நாறி போகும் ஊரு என்று கூட ஒரு பாடல் வரும். அவர்கள் பிணத்தை எரிக்கவில்லை என்றாலும் அதுதானே நடக்கும் அப்படி இருக்கையில் அது எப்படி இழிவான தொழில் ஆகும்.

  27. கற்க முடியாமல் அவர்கள் ஏன் இருந்தார்கள்? பின் இறந்தார்கள்? நீங்கள் போற்றும் கல்வி அவர்கட்கு ஏன் மறுக்கப்பட்டது? அவர்களிடமிருந்து மறைக்கப்பட்ட பட்டது?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *