நீதிக்கட்சியின் மறுபக்கம் – 02

திருட்டு எழுத்தும் புரட்டு வரலாறும்:

முதுபெரும் திராவிட இயக்க எழுத்தாளர் க.திருநாவுக்கரசு அவர்கள், ‘களத்தில் நின்ற காவலர்கள்’ என்ற தலைப்பில் ஆதிதிராவிடத் தலைவர்களின் வாழ்க்கை வரலாற்றை எழுதி 1993ல் வெளியிட்டார். இந்த புத்தகத்தில் தலித் தலைவர்களின் வரலாற்றைச் சுருக்கமாக திரட்டித் தந்துள்ளதாக அவர் தெரிவிக்கிறார். உண்மையில், இந்தப் புத்தகத்தில் உள்ள தகவல்களில், க.அயோத்திதாசர் பற்றிய தகவல்கள் மற்றும் பின்னிணைப்புகளைத் தவிர மற்றவை அனைத்தும் அறிஞர் அன்புபொன்னோவியம் எழுதியவை. அவற்றை அப்படியே திருடி க.திருநாவுக்கரசு எழுதியிருக்கிறார். அவர் எங்கிருந்து திருடினார் ?

1969ல் பதிவுசெய்யப்பட்ட செட்யூல்டு வகுப்பினர், மலைவாசியினர் சமூக நல மன்றம், சென்னை என்ற சங்கம் 1971ம் ஆண்டுக்கான ஒரு நாள்காட்டியை வெளியிட்டது. அந்த நாள்காட்டியில்தான் அறிஞர் அன்புபொன்னோவியம் தாழ்த்தப்பட்ட சமூகத்தின் உயர்வுக்காகப் பாடுபட்ட தலைவர்களின் வாழ்க்கைக் குறிப்புகளை எழுதியிருக்கிறார். இந்த நாள்காட்டியில் உள்ள தகவல்களை மீண்டும் அகில இந்திய பட்டியலினத்தோர், மலைவாசியினர், பிற்படுத்தப்பட்டோர், மற்றும் சிறுபான்மையோர் பணியாளர் நல சங்கத்தின் சார்பாக செட்யூல் வகுப்பினர், மலைவாசியினர் சமூக நல மன்றம் 1974ல் வெளியிட்டது. இந்த நாள்காட்டியில் உள்ள தாழ்த்தப்பட்ட தலைவர்களின் வாழ்க்கைக் குறிப்புகளைகளைத்தான் க.திருநாவுக்கரசு அவர்கள் அப்படியே “களத்தில் நின்ற காவலர்கள்” என்ற தன் நூலில் ‘பயன்படுத்தியிருக்கிறார்’.

இவர் இதைப் பயன்படுத்தியது தவறே இல்லை. ஆனால் அத்தகவல்களை எங்கிருந்து எடுத்தார், அதை மூல நூலில் யார் எழுதினார்கள் என்பவற்றை மறைத்ததுதான் தவறு.  தன்மகன் உட்பட பலருக்கு முன்னுரையில் நன்றி தெரிவித்த க.திருநாவுக்கரசு, அறிஞர் அன்புபொன்னோவியத்திற்கும் நன்றி தெரிவித்து இருக்கலாம். ஆனால், அப்படி நன்றி தெரிவித்திருந்தால் அது தன் எழுத்து அல்ல என்று தெரிந்துவிடுமே என்ற காரணத்தால்தான் அவர் நன்றி தெரிவிக்கவில்லை. மேலும் ஒரு தாழ்த்தப்பட்டவர் எழுதியதைத் தாம் அப்படியே பயன்படுத்தியிருக்கிறோம் என்ற நெருடலும்கூட அறிஞர் அன்பு பொன்னோவியத்தின் பெயரை வெளியே சொல்லாததற்கு ஒரு காரணமாக இருக்கலாம்.

“களத்தில் நின்ற காவலர்கள்” என்ற இந்த நூல் உண்மையின் களத்தில் எதை நிரூபிக்கிறது ?

ஒரு தலித் எழுத்தாளரை, திராவிட இயக்கத்தவர் தொடர்ந்து இருட்டடிப்பு செய்து வருகிறார்கள் என்பதைத்தான் இந்த நூல் நிறுவுகிறது. அது மட்டுமா ?

இந்நூலின் 92ஆம் பக்கத்திலும் 154ம் பக்கத்திலும் பி. எம். மதுரைப்பிள்ளை பற்றிய தகவல்கள் வருகின்றன. ‘புரவலர் பெருமகன் பி. எம். மதுரைப்பிள்ளை’ என்ற தலைப்பில் 92ம் பக்கத்தில் பி. எம். மதுரைப்பிள்ளையைப் பற்றிப் பேசிவிட்டு, அவரைப் பற்றி மேலும் சில தகவல்களை மீண்டும் தருவதாக நினைத்து 154ம் பக்கத்திலும் மதுரைப்பிள்ளையைப் பற்றித் தகவல்கள் தருகிறார்.  அவை “பி. எம். மதுரைப்பிள்ளை” என்ற தலைப்பில் திரு.வி.க வெளியிட்ட தகவல்கள் என்று குறிப்பிடுகிறார். அவரது குறிப்பின்படி, திருவிக தனது கட்டுரையில் 1921ஆம் ஆண்டு நடைபெற்ற வேலைநிறுத்தத்தில் ஆதிதிராவிடர்க்கு உதவி புரிந்தவர் என்று மதுரைப்பிள்ளையைக் குறிப்பிட்டுள்ளார்.

எம். சி. மதுரைப்பிள்ளை

பி. எம். மதுரைப்பிள்ளை

அதாவது 92ம் பக்கத்தில் உள்ள மதுரைப்பிள்ளையும், 154ம் பக்கத்தில் உள்ள மதுரைப்பிள்ளையும் ஒருவரே என்ற முடிவில் அவர் எழுதியிருக்கிறார். ஆனால், உண்மை என்ன?

92ம் பக்கத்தில் உள்ள பி. எம் மதுரைப்பிள்ளை 1858ல் பிறந்து 1913ஆம் ஆண்டு இறந்துபோனவர்.  திருவிக குறிப்பிடும் எம்.சி. மதுரைப்பிள்ளை 1880ல் பிறந்து 1935ல் இறந்தவர்.

திருவிக குறிப்பிடுவது எம். சி. மதுரைப்பிள்ளையை. திருநாவுக்கரசு குறிப்பிட நினைப்பதோ பி. எம் மதுரைப்பிள்ளையை.

(படங்கள் உதவி: அன்பு. பொ. ஆதிமன்னன்)

திருநாவுக்கரசு உண்மையிலேயே தேடி அலைந்து இந்த புத்தகத்தை எழுதியிருந்தால் இந்த உண்மைகள் அவருக்குப் புரிந்திருக்கும்! இது திருட்டுப் புத்தகம்தானே ! அதுவும் ஒரு ஆதிதிராவிட எழுத்தாளரின் புத்தகத்தைத்தானே திருடியிருக்கிறோம் என்ற நினைப்பில் எதையுமே ஆராயாமல் வெளியிட்டுவிட்டார் போலும். ஆனால் அறிஞர் அன்புபொன்னோவியம் தான் எழுதிய “மக்களுக்கு உழைத்த பெருமக்கள்” என்ற நூலில் தெளிவாக இருவரையும் பிரித்தே எழுதியிருக்கிறார். அது மட்டுமா ?

திருநாவுக்கரசுவின் இந்த புத்தகத்துக்கு அணிந்துரை எழுதியிருக்கிறார் திராவிட இயக்க எழுத்தாளரும், ஆய்வாளருமான (!) எஸ்.வி.ராஜதுரை. எப்பொழுதுமே தாழ்த்தப்பட்டவர்களால் நடத்தப்பட்ட போராட்டங்களை – வரலாற்றை – தாழ்த்தப்பட்டவர்களால் போராடிப் பெற்ற உரிமைகளை – நீதிக்கட்சி, ஈவேரா இவர்களுக்கு உரிமையாக்கி விடுவார் இவர். இந்த புத்தகத்திலும் அதுமாதிரியான ஒரு வரலாற்றுப் புரட்டலை செய்திருக்கிறார் எஸ். வி. ராஜதுரை.

இந்நூலின் அணிந்துரையில் “தலித் தலைவர் எம்.சி.ராஜா நீதிக்கட்சியில் உறுப்பினராகவே தனது அரசியல் வாழ்வைத் தொடங்கினார். டாக்டர் நாயர்தான் தம்மை அரசியலில் ஈடுபடுத்திய ஆசிரியர் என்று அவரே பல நேரங்களில் கூறியுள்ளார்” என்று எழுதியிருக்கிறார். ஆனால், “டாக்டர் நாயர்தான் தம்மை அரசியலில் ஈடுபடுத்திய ஆசிரியர்” என்று எம்.சி.ராஜா எங்கே, எப்போது கூறினார் என்ற விபரத்தை மட்டும் தரவில்லை !! போகிற போக்கில் எழுதிச் சென்றுள்ளார்.

எம்.சி.ராஜா தன் அரசியல் வாழ்வை ஆதிதிராவிட மகாஜனசபையிலிருந்தே துவங்கினார். தனது 25வது வயதில் 1908ல் இருந்து பொதுத்தொண்டில் ஈடுபட ஆரம்பித்தார். 1916ல் சென்னை ஆதிதிராவிட மகாஜன சபாவைச் சீரமைப்பதில் பெரும்பங்காற்றினார். அந்த சபாவின் கௌரவச் செயலாளராகவும் அவர் ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 36வது வயதில் 1919ல் சட்டமன்ற உறுப்பினரானார். 1927ல் நாடாளுமன்ற உறுப்பினரானார்.

இதுதான் உண்மை. எம். சி. ராஜாவை அரசியலில் கொண்டு வந்தது ஆதிதிராவிட மகாஜனசபை. ஆனால், அவரை அரசியலுக்குக் கொண்டு வந்த பெருமையை நீதிக்கட்சியைச் சேர்ந்த டாக்டர் நாயருக்குத் தானம் செய்து விட்டார் எஸ். வி. ராஜதுரை. அது மட்டுமா ?

இந்த நூலில் “சில சாதனைகளும் தகவல்களும்” என்ற தலைப்பில் நீதிக்கட்சி ஆட்சியில் தாழ்த்தப்பட்டவர்களுக்கு என்னென்ன உரிமைகள் பெறப்பட்டன என்பதையெல்லாம் எழுதியிருக்கிறார். அவருடைய நோக்கம் தாழ்த்தப்பட்டத் தலைவர்களின் வரலாற்றை எழுதுவதல்ல. அனைத்துச் சாதனைகளும் நீதிக்கட்சியால் மட்டுமே பெறப்பட்டது என்று நிலைநிறுத்தவே இந்தத் தகவல்களைச் சேர்த்திருக்கிறார்.

வரலாற்றை தம் எண்ணத்திற்கு ஏற்ப மாற்றி எழுதுவதிலும், அதை நம்ப வைக்க, எழுதியவற்றையே மீண்டும் மீண்டும் எழுதுவதிலும் இந்த திராவிட இயக்க எழுத்தாளர்கள் மிக திறமைசாலிகள்தான். ஒரு பொய்யைத் தொடர்ந்து சொன்னால்தான் உண்மை என்று அது நம்பப்படும் என்று நன்கு தெரிந்தவர்கள் அவர்கள். இல்லையென்றால், சமீபத்தில், பத்து வருடங்களுக்கு முன்பு எழுதிய நூல்கள்வரை இப்படிப்பட்ட பொய்களைத் தொடர்ந்து எழுதுவார்களா? பொய்களைத் தருவது மட்டுமல்ல. உண்மைகளையும் இருட்டடிப்பு செய்திருக்கிறார்கள். தாழ்த்தப்பட்டவர்களின் வரலாற்றை, திராவிட இயக்கத்தார் இருட்டடிப்பு செய்யும் வரலாற்றை, இத்தொடரின் ஒவ்வொரு அத்தியாயத்திலும் நாம் பார்க்கத்தான் போகிறோம். இதோ.

நீதிக்கட்சி தோன்றுவதற்கு முன்பே தாழ்த்தப்பட்டவர்கள் தங்கள் உரிமைக்காக போராடிய வரலாறுகள் பல உண்டு. அப்படிப் போராடிய தாழ்த்தப்பட்ட தலைவர்களையும் அவர்களின் போராட்டங்களையும் பற்றிச் சுருக்கமாகப் பார்ப்போம்.

பண்டித க. அயோத்திதாசர் (1845 – 1914):

பண்டித க. அயோத்திதாசர்
சமுதாயத்திலிருந்து அறியாமையை நீக்கவும், உயர்வு தாழ்வு மனப்பான்மையைக் கண்டித்தும், மக்களைச் சிந்திக்க தூண்டும் வகையில் பல நூல்களை எழுதினார். 1886லிருந்து பகுத்தறிவுக் கொள்கையை முதன் முதலில் தமிழகத்தில் பரவச் செய்த பெருமைக்குரியவர். கிராமங்களில் உள்ள நிலமற்ற விவசாயிகளுக்கு நிலமும், இடுகாடு-சுடுகாடு போன்றவைகளும் கிடைக்க வழிசெய்தவர். மருத்துவத்திலும் இவர் சிறந்து விளங்கினார்.

1889ல் கர்னல் ஆல்காட், மேரி பால்மெர், ஆனி பெசன்ட் உதவியுடன் நகரில் பல பள்ளிகளை அமைத்தார். 1902ல் தென்னிந்திய பௌத்த சாக்கிய சங்கத்தை நிறுவினார். சமயம், சமுதாயம், கல்வி ஆகிய துறைகளில் மக்களுக்கு இடைவிடாமல் பணியாற்றினார்.  1907ல் தமிழன் என்ற பத்திரிகையைத் துவக்கினார். இது இலங்கை, பர்மா, சிங்கப்பூர், தென்னாப்பிரிக்கா போன்ற கடல்கடந்த நாடுகளிலும், இந்தியா முழுவதிலும் பவனி வந்தது. அவர் படைத்த நூல்களில் ‘புத்தரது ஆதிவேதம்’ அவரது ஆராய்ச்சித் திறனுக்கு ஓர் சான்றாகும்.

இரட்டைமலை சீனிவாசனார் (1860 – 1945)

இரட்டைமலை சீனிவாசனார்
இவர் நீலகிரியில் வணிகத்துறை கணக்காயராக பணியாற்றினார். சென்னையில் குடியேறிய பின் 1882லிருந்து 1885வரை பல அரசாங்க குறிப்பேடுகளையும், வரலாற்று நூல்களையும், கல்வெட்டுகளையும் ஆராய்ந்தார். தென்னிந்தியா முழுவதிலும் சுற்றுப்பயணம் செய்து மக்களின் அன்றாட வாழ்ககை நிலைமைகளை நேரில் கண்டறிந்தார். 1884ல் தியோசஃபிகல் சொசைட்டியின் ஆண்டு விழாவில் கலந்துகொண்டார். ஆனால், அவ்வமைப்பு பழங்குடி மக்களுக்குப் பயன்படாது என்று உணர்ந்து அப்பேரவையிலிருந்து விலகினார். பழங்குடி மக்கள் வாழும் பகுதிகள் தோறும் சென்றார். உலக அறிவு தடுக்கப்பட்ட அவர்களிடம் அவர் கல்வி கற்றல், சுகாதாரத்துடன் இருத்தல், சுத்தமான ஆடைகளை அணிதல், ஒழுங்காகப் பேசுதல் போன்றவற்றின் அவசியத்தை உணர்த்தினார். 1891ல் ஆதிதிராவிட மகாஜன சபையில் திறம்பட பணியாற்றினார். 1892ல் ‘பறையன்’ என்ற பத்திரிகையைத் தொடங்கி மக்கள் விழிப்படையும் வகையில் பல அரிய கருத்துக்களை வெளியிட்டார்.

1893ல் ராயப்பேட்டை வெஸ்லி பள்ளியில் பழங்குடி மக்களின் மாநாட்டைக் கூட்டினார். இதுவே பழங்குடி மக்களுக்காக இந்தியாவில் கூட்டப்பட்ட முதல் மாநாடாகும். 1900 வரை எண்ணற்ற மாநாடுகளைக் கூட்டி மக்கள் நலன் அடையவும், பாதுகாப்புப் பெறவும் ஆங்கில அரசிடம் ஓயாமல் போராடினார். பிறகு, இங்கிலாந்து செல்ல புறப்பட்டு, இடையில் தென்னாப்பிரிக்கா சென்று அரசாங்கப் பணியை மேற்கொண்டார். அங்கும்கூட இந்தியப் பழங்குடி மக்களின் நலனில் அக்கறை கொண்டிருந்தார். அங்கிருந்தவாறே இந்திய மக்களின் நல்வாழ்விற்காகச் சிந்தித்தார், செயல்பட்டார். 1921ல் மீண்டும் இந்தியாவிற்கு வந்து, சமுதாய பணியில் தீவிரமாக ஈடுபட்டார். 1922ல் சென்னை சட்டசபைக்குத் தெரிந்தெடுக்கப்பட்டார். 1925ல் தீண்டாமை ஒழிய பல திட்டங்களைத் தந்தார். 1930ல் லண்டன் வட்டமேஜை மாநாட்டிற்கு இந்திய பழங்குடி மக்களின் சார்பில் கலந்துகொண்டார்.

1932ல் பூனா ஒப்பந்தத்தில் பொறுப்பேற்று அண்ணல் அம்பேத்கருடன் இணைந்து பணியாற்றினார். சென்னை சட்டமன்ற உறுப்பினராகவும் தொடர்ந்து தொண்டாற்றினார்.

பழங்குடி மக்களின் பாதுகாவலன் எம்.சி. ராஜா (1883-1945)

எம். சி. ராஜா
இவர் இளமையில் ஆசிரியராகப் பணியாற்றினார். மாணவர்களுக்குப் பல நூல்களை எழுதினார். 1936ல் நுங்கம்பாக்கத்தில ‘திராவிடர் பள்ளியை’ துவக்கி வைத்தார். நகர் முழுவதிலும் இரவுப் பள்ளிகளை நிறுவ தூண்டுதலாக இருந்தார். சென்னை மாநகர சாரணர் குழுவின் தலைவராகப் பலகாலம் இருந்து ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்ளும் பண்பாட்டை வளர்த்தார். சென்னை பச்சையப்பன் கல்லூரியில் பழங்குடி மாணவர்களை 1927லிருந்து சேர்த்துக் கொள்ள வகை செய்தார்.

இளம் வயதிலேயே மாநில ஆதிதிராவிட மகாஜன சபையின் செயலாளராகத் தொண்டாற்றினார். பேச்சுத்திறன் மிகுந்த இவர் மக்களிடம் கால நிலைமையையும், அவர்களுடைய கடமையையும் தெளிவாகச் சுட்டிக் காட்டினார். 1917லிருந்து பழங்குடி மக்களின் தீண்டாமை ஒழிப்பு, ஆலய நுழைவு போன்ற போராட்டங்களில் அவர் ஆற்றிய பணி சிறப்பானதாகும். 1919ல் சென்னை சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். பிறகு பாராளுமன்றத்திலும் பணியாற்றினார்.

பழங்குடி மக்களுக்கிருக்கும் இன்னல்களும், இழிவுகளும் நீங்கி முன்னேற அரசியல் அதிகாரம் பெற வேண்டினார். இதற்காக பட்லர் கமிட்டி, மாண்டேகு-செம்ஸ்போர்ட், சைமன் கமிஷன் போன்ற பல குழுக்களைச் சந்தித்து சாட்சியம் கூறினார். 1929ல் லண்டன் சென்று பழங்குடி மக்களின் நலனுக்காகப் போராடினார். 1930ல் வட்டமேஜை மாநாட்டிற்காக அரிய கருத்துக்களை வெளியிட்டார். கூட்டுத்தொகுதியுடன் கூடிய தனித்தொகுதி முறையை முதலில் கூறியவர் இவர்தான். மக்களுக்காக அரசியலே தவிர அரசியலுக்காக மக்கள் அல்ல என்பது இவருடைய வாதமாகும். சிறிது காலம் தமிழக அமைச்சராக பணியாற்றினார். இறுதிக்காலம் வரை சட்டமன்றத்தில் தொண்டாற்றினார்.

சிந்தனைச் செம்மல் பேராசிரியர் என். சிவராஜ் (1892-1964)

அம்பேத்கருடன் நமச்சிவாயம் சிவராஜ்
பட்டப்படிப்பிற்குப் பிறகு சிறிது காலம் உயர்நீதி மன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றினார். பிறகு சட்டக் கல்லூரி விரிவுரையாளராகவும், பேராசிரியராகவும் இருந்தார். இவர் இளமையிலிருந்தே பழங்குடித் தலைவர்களோடு இணைந்து தொண்டாற்றினார். தன்னுடைய கருத்தாழமிக்க உரைகளால் மக்களால் நல்ல சிந்தனையாளராக இவர் மதிக்கப்பட்டார். மக்களுக்காகப் பல கூட்டங்களையும் மாநாடுகளையும் கூட்டி சிறந்த கருத்துக்களைக் கூறினார். நீதிக்கட்சியும் சுயமரியாதை இயக்கமும் இவரை நன்கு பயன்படுத்திக் கொண்டன.

1922ல் சென்னை சட்டமன்ற உறுப்பினரானார். நகரின் பல இடங்களில் மாணவர் விடுதிகள் தோன்றக் காரணமாயிருந்தார். மக்கள் சொந்த நில விவசாயிகளாக மாறாத வரையில், அவர்களுடைய அடிமைமுறை மாறாது என்ற கொள்கையை உடையவர். சட்டமன்றத்தின் பல்வேறு குழுக்களில் இடம்பெற்று சிறப்பாக பணியாற்றினார். 1945ல் மாநகராட்சி மேயரானார். 1942ல் தொகுக்கப்பட்டோர் சம்மேளனத்தின் அகில இந்திய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். சான்பிரான்ஸிஸ்கோ மாநாட்டில் கலந்துகொண்டு இந்திய ஏழை மக்களின் இடர்பாடுகளை விளக்கினார்.

1946ல் மக்களின் இழிவுகளை நீக்கி இன்னல்களை போக்க ஏதும் நடவடிக்கை எடுக்காததால் ஆங்கில அரசை எதிர்த்து அவர்கள் தந்த திவான் பகதூர் என்ற பட்டத்தை உதறித்தள்ளினார். இந்தியர்களையும், ஆங்கிலேயர்களையும் தட்டிக்கேட்கும் வகையில் 1946ல் ஜெய்பீம் என்ற ஆங்கில வார இதழை துவக்கி நடத்தினார். தொகுக்கப்பட்டோர் சம்மேளனம் அரசியல் இயக்கமாக மாறியபோதும் அதனுடைய அகில இந்திய தலைவராகவே நீடித்தார். 1956ல் பேரறிஞர் அம்பேத்கர் அவர்கள் உருவகப்படுத்திய அகில இந்திய குடியரசு கட்சியை உருவாக்கி அதன் காப்பாளராகவும் ஒப்பற்ற தலைவராகவும் விளங்கினார். 1944லும் 1960லும் பாராளுமன்ற உறுப்பினரானார். அங்கு பல செயற்குழுக்களில் பங்கேற்று நாட்டிற்கு செயல்வகை மிகுந்த திட்டங்களை தந்தார்.

புரவலப் பெருமகன் பி.எம். மதுரைப்பிள்ளை(1858 – 1913)

1877ல் சென்னை கவர்னராக இருந்த பக்கிங்ஹாம் பிரபுவிடம் எழுத்தராக பணியாற்றினார். பிறகு ரங்கூன் ஸ்ட்ராங் ஸ்டீல் என்ற அமைப்பின் ஊழியரானார். வாணிபத்தில் நன்னடத்தையும் நம்பிக்கைக்குரியவர்ராகவும் இருந்தவர். துபாஷ் ஸ்டீவ்டேன் என்ற ஏற்றுமதி இறக்குமதி வர்த்தக நிறுவனத்தை சுயமாக ஆரம்பித்துத் திறமையாக நடத்தினார். இங்கிலாந்து, ஸ்காட்லாந்து, வேல்ஸ், ஜெர்மனி, டென்மார்க், பிரான்ஸ், நார்வே, இத்தாலி, எகிப்து ஆகிய மேலைநாடுகளுக்குச் சுற்றுப்பயணம் செய்தார்.

தன்னுடைய வருவாயில் ஒரு பகுதியை இந்து கோயில்களுக்கென்று நிரந்தரமாகக் கொடுத்து வந்தார். சொந்தமாக ஒரு கோயிலையும் கட்டினார். இந்து மதத்தைச் சேர்ந்தவர் என்பதால், குறுகிய மனிதாபிமானியாக இல்லாமல், கிறிஸ்துவர்களாலும், முகம்மதியர்களாலும் நடத்தப்பட்டு வந்த ஸ்தாபனங்களுக்கும்கூட உதவி புரிந்து வந்தார். சமூகத்தில் காணப்படும் கோளாறுகளுக்கு, கல்விதான் சரியான மருந்து என்பதை உணர்ந்து ஒரு உயர்நிலை பள்ளியைக் கட்டினார். அறிவுக்கு உகந்த நல்ல கதைகளையும், கருத்துக்களையும் அச்சிட்டு இலவசமாக மக்களுக்கு வழங்கினார்.

1885லிருந்து 1900 வரை ரங்கூன் முனிசிபாலிடி கமிஷனராக இருந்தார். சுமார் 25 ஆண்டுகள் இரண்டாவது வகுப்பு கௌரவ நீதிபதியாக பணியாற்றினார். டர்பன் மருத்துவமனைக்கு ஒரு பெருந்தொகையை நன்கொடையாக கொடுத்து உதவினார். பழங்குடி புலவர் பெருமக்கள் இவர் மீது கவிபாடி பல உயர்ந்த பரிசில்களை பெற்றிருக்கிறார்கள். இவரை கிறிஸ்தவ, முகம்மதிய புலவர்களும் பாடியுள்ளனர். சுமார் 500க்கும் மேற்பட்ட புலவர்கள் பாடிய பாக்களைக் கொண்ட 1500 பக்கங்களுடைய ‘மதுரை பிரபந்தம்’ என்ற நூல் ஒன்றே இன்றும் அவர் புகழ் பாடி நிலவுகிறது.  இவர் 1906ல் ஐந்தாம் ஜார்ஜ் மன்னரிடம் சிறந்த பொதுத் தொண்டர் என்ற அறிமுகம் செய்து வைக்கப்பட்டார்.

மக்களுள் மாணிக்கம் டி. ஜான்ரத்னம் (1846-1942)

ஸ்பென்ஸர் கம்பெனியில் ஊழியராகப் பணியாற்றினார். சமூகத்திலிருக்கும் கொடுமைகளுக்கும் சமயத்துறையில் நிலவும் வெறிச் செயல்களுக்கும் கலைக்கல்வி, தொழிற்கல்வி ஆகியவைகளால் ஏற்படும் பொருளாதார முன்னேற்றமே நல்ல மாற்றமாகயிருந்து பழங்குடி மக்கள் எதிர்காலத்தில் வளர வைக்கும் என்று நம்பிய இவர் 1886ல் ஒரு ‘மாதிரிப் பள்ளியை’ நிறுவினார். அப்பள்ளி பயனளிப்பதை அறிந்து 1892ல் ஆண்-பெண் இருபாலரும் படிக்க ஆயிரம் விளக்கில் பெரியதொரு கல்விக்கூடத்தை அமைத்தார். அவரே தலைமை ஆசிரியராக இருந்து பணியாற்றினார். மேலும், மக்கிமா நகர், தேனாம்பேட்டை போன்ற பகுதிகளிலும் பள்ளிகளைத் தொடங்கினார்.

இவையன்றி சித்திரம், தச்சு, தையல் போன்றவைகளைக் கற்கும் தொழிற்கல்வி கூடம் ஒன்றையும், மாணவர் விடுதியையும் 1889ல் தோற்றுவித்தார். 1877ல் புனிதரான அவர், அதற்கு முன்னும் பின்னும் சமயத்துறையில் சிக்கலற்ற வண்ணம் மக்களை கவரத்தக்க பணியில் ஈடுபட்டார். 1885ல் திராவிட பாண்டியன் என்ற தமிழ் வெளியீட்டைத் துவக்கித் திறமையான வாதங்களால் மக்களை விழிப்படையச் செய்தார்.

அன்றைய சூழ்நிலையில் பழங்குடி மக்கள் பல்வேறு பெயர் கொண்ட அமைப்பைக்களில் இயங்க ஆரம்பித்தனர். இவர் 1892ல் ‘திராவிடர் கழகம்’ என்ற அமைப்பை துவக்கி அதனைச் சமுதாயப் பணியில் ஈடுபடுத்தினார். இதற்கான பல அறிவு சார்ந்த விளக்கங்களை வெளியிட்டார். 1897லிருந்து சிலகாலம் கௌரவ நீதிபதியாக தொண்டாற்றினார். பழங்குடி மக்களின் வாழ்விலும் வளத்திலும் அக்கறை கொண்டிருந்த இவர் அவர்களுக்கு குடியிருக்கவும், பள்ளி கூடத்திற்கும் நிலம் பெறவும் கவர்னரைப் பார்த்து முறையிட்டு அவற்றைப் பெற்றுத்தந்தார். பழங்குடி மக்களை ஓரணியில் திரட்ட இணைப்புப் பாலமாக கூடுமிடம் ஒன்றை சுமார் நூறு ஏக்கர் நிலத்தில் சமூகக் கூடத்துடன் அமைக்க முயன்றார். பழங்குடி மக்களுள் எழுந்த கிறிஸ்தவர், பௌத்தர், சைவர், வைணவர் போராட்டங்களால் இது தடைபட்டு விட்டது.

பெரும் வணிகர் பி.வி. சுப்ரமணியம் (1859 – 1936)

தொழிலில் நாணயமும், செயலில் திறமையும், நம்பிக்கையும் கொண்ட இவர் வணிக துறையில் அயராது உழைத்தார். ஏராளமாக பொருள் சேர்த்தார். ஊறுகாய் மன்னர் என்று பலராலும் உலகமெங்கும் புகழப்பட்டார். அவர் தம் ஊறுகாய் வகைகளை இங்கிலாந்து பேரரசர் குடும்பத்தினர் முதல் உலகத்தின் எல்லாப்பகுதி மக்களும் அதனை பெரிதும் விரும்பினர். இவர் தமிழகத்தின் கோடீஸ்வரர்களில் ஒருவராவார். இவர் பழங்குடி மக்களின் சமய நெறியாளர்களான தட்சிணாமூர்த்தி சுவாமிகள் போன்றவர்களை ஆதரித்தும், அவர்களுக்கு தலமெடுத்தும் அவற்றுக்கு காப்பாளராகவும், பல்வேறு சமயத்துறைகளுக்கும் பேருதவியாயிருந்தார்.

பழங்குடி மக்கள் அனைவரும் கல்வியை – குறிப்பாக ஆங்கில கல்வியைப் பெற வேண்டுமென்பது இவரது ஆசையாகும். எனவே பல சிறு பள்ளிகளுக்கு பொருளுதவி செய்து ஊக்குவித்தார். 1920ல் வேங்கடாசலம் ஏழையர் பள்ளியை சிந்தாதிரிப்பேட்டையில் துவக்கினார். இன்றும் அது நடைபெற்று வருவது பெருமைக்குரியதாகும். பலமுறை ஒரு பெரிய பள்ளியைத் தோற்றுவிக்க முயற்சித்தார். சமுதாயத்தில் அன்றுள்ள சமய சமுதாய உட்போராட்டங்களாலும் வேறு காரணங்களாலும் அது தடைபட்டுவிட்டது. வணிகத் துறையில் பெரிதும் ஆழ்ந்திருந்த இவர் தமது மக்களின் நல்வாழ்விலும் அக்கறை கொண்டிருந்தார்.

தமிழ் மக்களுள் இருக்கும் பிளவுகளையும் பிணக்குகளையும் ஒழிக்க வேண்டுமானால் ஒரே பெயரின் அடிப்படையில் இயங்க வேண்டும் என்று எண்ணினார். எனவே 1922ல் திராவிடர் – ஆதிதிராவிடர் ஆகிய இருபெரும் வகுப்பினரையும் மாநாட்டின் வாயிலாக ஒன்று கூட்டி அறிவுரை வழங்கினார். பழங்குடி மக்களால் நடத்தப்பெறும் கூட்டங்களுக்கும் மாநாடுகளுக்கும் ஆகும் செலவினங்களை இவரே ஏற்றுக் கொள்வார். தலைவர்கள் வெளியூர்களுக்கும், அயல்நாடுகளுக்கும் செல்லும்போதெல்லாம் அவர்களுக்கு உடை, வழிச்செலவு போன்றவற்றை கொடுத்து உதவுவார். சமுதாயத்தில் பழங்குடி மக்களுக்கு ஏற்படும் இன்னல்களுக்கு கவர்னர் வைசிராய் போன்றோரிடம் முறையிட்டு அவ்வப்போது பயன் காணுவார்.

வி.ஜி. வாசுதேவப்பிள்ளை (1878 – 1938)

இவர் வள்ளல் ரங்கூன் மதுரைப்பிள்ளை அவர்களின் மருமகனும் தலைவர் சிவராஜ் அவர்களின் மாமனாருமாவார். கல்லூரிப் படிப்பை இடையில் நிறுத்திவிட்டு 1900ஆம் ஆண்டு முதல் சமுதாயத் தொண்டில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். நமது மூத்த தலைவர்களான ஆர்.சீனிவாசன், எம்.சி.ராஜா போன்றோர்களிடையே தனித்தன்மை வாய்ந்த தலைவராக திகழ்ந்தார். 1912 முதல் சிறிதுகாலம் ரங்கூன் சென்று வள்ளல் மதுரைப்பிள்ளை பள்ளியின் கண்காணிப்பாளராக பணியாற்றி மீண்டார். சென்னை மாநில சிறையதிகாரியாகவும் அலுவலாற்றினார். பொதுத்தொண்டில் தீவிரமாக செயல்பட்டுப் பல அரிய ஆலோசனைகளையும், திட்டங்களையும் தந்ததின் மூலமாக பலராலும் பாராட்டப்பட்டார். பழங்குடி மரபில் இந்தியாவிலேயே முதல் மாநகராட்சி உறுப்பினராக (1920ல்) ஆக்கப்பட்ட பெருமைக்குரியவர்.

அவரது உழைப்பின் நினைவாக சென்னை வால்டாக்ஸ் நெடுஞ்சாலையில் வாசுதேவ பிள்ளை பூங்கா ஒன்று அமைக்கப்பட்டது இங்கு குறிப்பிடத்தக்கதாகும். தொடர்ந்து இவர் பல்வேறு அமைப்புகளில் பங்கு கொண்டு திராவிட, ஆதித்திராவிட மக்களுக்கென பல மாநாடுகளை கூட்டுவித்து பொதுவாக மக்கள் வாழ்க்கைப் பிரச்சினைகளுக்காகப் போராடினார். இவற்றில் 1928-1925ம் ஆண்டுகளில் பச்சையப்பன், வெஸ்லியன் கல்லூரிகளில் நடைபெற்ற மாநாடுகளின் நடவடிக்கைகளையும், கவர்னரிடம் சென்று வலியுறுத்தியதையும் சிறப்பாகக் கூறுவார்கள். 1935ம் ஆண்டிலிருந்து சென்னை சட்டமன்ற உறுப்பினராகவும் அரசாங்கம் அமைத்த பல்வேறு குழுக்களில் பங்கேற்று மக்களுக்கும் நாட்டிற்கும் அரிய பல சேவைகளை செய்தார்.

ராவ் சாகேப் வி. தர்மலிங்கம் பிள்ளை (1872-1944)

இவர் 1872ல் சென்னையில் பிறந்து ரங்கூனில் வளர்ந்தார். தனது கல்லூரி படிப்பிற்குப் பிறகு கணக்கியல் துறை அதிகாரியாகவும் வருவாய்த்துறை அதிகாரியாகவும் பணியாற்றினார். 1860ல் பழங்குடி மக்களின் பாதுகாவலர்கள் பலர் பல நூல்களையும், பத்திரிகைகளையும் வெளியிட்டு அவை கடல் கடந்து சென்று மக்களை விழிப்படைய செய்தன. அவற்றின் மூலம் உணர்ச்சி பெற்றவர்களில் தலைவர் தர்மலிங்கமும் ஒருவர்.

ரங்கூன், சிங்கப்பூர், சிலோன், தென்னாப்பிரிக்கா போன்ற இடங்களில் குடியேறிய மக்களின் வாழ்க்கைத் தடுமாற்றங்களையும், இந்தியாவிலுள்ள இழிவான நிலைகளையும் உணர்ந்த அவர் இந்தியாவிற்கு திரும்பியவுடன் சிறிதுகாலம் கூட்டுறவு சங்கங்களின் தலைவராகவும், கௌரவ நீதிபதியாகவும் தொண்டாற்றிக் கொண்டே சமுதாயத் தொண்டில் அதி தீவிரமாக ஈடுபட்டார்.

1917, 1923 ஆண்டுகளில் மாண்டேகு-செம்ஸ்போர்ட், சைமன் கமிஷன் போன்ற குழுக்களின் சீர்திருத்த ஆய்வின்போது எழுந்த கொந்தளிப்பில் பழங்குடி மக்களின் தலைவர்களோடு இணைந்து விரைந்த முன்னேற்றத்திற்கு அரிய திட்டங்களைத் தந்தார். வட்டமேஜை மாநாடு, பூனா ஒப்பந்தம் போன்ற காலங்களில் தலைவர்களில் சிலர் வேறு இயக்கங்களுக்கு இழுக்கப்பட்டார்கள். அதற்குப் பலியாகாமல் தனித்து நின்று ஷெட்யூல்டு வகுப்பினர் நன்மை ஒன்றையே கருத்தில் கொண்டு பல மாநாடுகளைக் கூட்டி தீர்மானத்தினை நிறைவேற்றக் காரணமாக இருந்தார்.

சிறிது காலம் கௌரவ நீதிபதியாகவும் பணியாற்றினார். 1928-1932 வரை சென்னை சட்ட மன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டுச் சிறப்பாகப் பணியாற்றினார். வடசென்னையில் பல சங்கங்கள், இரவுப் பள்ளிகள், கூட்டுறவு பண்டக சாலைகள் போன்றவைகள் இவரது தலைமையில் சிறப்பாக தொண்டாற்றின. ராயல் கமிஷன், ஹாமன்ட் குழு போன்றவைகளில் பழங்குடி மக்களின் விரைந்த முன்னேற்றத்திற்கு பல அரிய திட்டங்களை தந்திருக்கிறார்.

மாண்புமிகு தலைவர் ம. பழனிச்சாமி (1870-1941)

1900வரை தவத்திரு கங்காதர நாவலர் அவர்களின் அன்பு மாணவராக இருந்து திருப்பணிக் கூட்டம் என்ற அமைப்பால் மக்களிடையே அருள்நெறி பரப்பி வந்தார். நற்பழக்கம், நல்லொழுக்கம் போன்ற அறநெறிகளால் மக்கள் விழிப்படைய முதுபெரும் ஞானமார்க்க பெருந்தொண்டர்களுக்கு உறுதுணையாக இருந்து தொண்டாற்றினார். நுங்கம்பாக்கம் பாலசுப்ரமணி ஆலயத்தின் ஸ்தாபகராகவும், திருக்காப்பாளராகவும் பலகாலம் இருந்து பணியாற்றினார்.

1921ல் மாணவர் விடுதியை ராயப்பேட்டையில் துவக்கி கவனமாகவும், பாதுகாப்பாகவும் மாணவர் படிக்க வகை செய்தார். ஒழுக்கமும் புலமையும் ஒருவரை சமூகத்தில் உயர்த்த வல்லது என்பதற்கு இவர் ஓர் உதாரணமாக திகழ்ந்தார். இவருடைய நற்பண்புகளாலும் புலமையாலும் ஈர்க்கப்பட்ட சங்கராச்சாரியார் அவர்கள் இவருக்கு 1923ல் பொன்னாடை போர்த்தி பெருமைப்படுத்தியது நல்ல சான்றாகும்.

இவர் சோதிட கணிதத்திலும் தேர்ந்தவர் என்று பலராலும் புகழப்பட்டவர். சமூக எழுச்சிப் பணியில் பெரும் பங்கு கொண்டார். பழந்தலைவர்களுடன் இணைந்து பல மாநாடுகளையும் கூட்டங்களையும் கூட்டினார். பெருந்தலைவர் எம்.சி.ராஜா அவர்களுடன் சமுதாய-அரசியல் துறைகளில் தீவிரமாக பாடுபட்டவர்களில் இவரும் ஒருவர்.

1929ல் பழங்குடி மக்களால் செய்யப்பட்ட வகைவகையான உண்ணும் பண்டங்களையும், தச்சு, தையல் போன்ற பொருள்களையும் தொழில் திறனை காட்டும் வகையில் காட்சியில் வைத்தார். 1917ல் எழுந்த அரசியல் எழுச்சியில் டாக்டர் நாயருடனும் பெருந்தலைவர்களுடனும் இணைந்து அயராது உழைத்தார். ‘திராவிடர் வாலிபர் சங்கம்’ போன்ற பல்வேறு அமைப்புகளில் தலைவராக இருந்து தொண்டாற்றினார். 1931ல் சென்னை மாநகராட்சிக்கு போட்டியிட்டார்.

சுவாமி தேசிகாநந்தா (1877-1949)

அரசியலில் மதத்தையும், மதத்தில் சமுதாயத்தையும் போட்டுக் குழப்பிய பல பெரியவர்களை நாம் கண்டவர்கள்தான். அகப்புறத் துறைகளான அரசியல், சமயம், சமுதாயம், கல்வி, தொழில் போன்ற அனைத்து துறைகளிலும், தனித்தனியாக சிறப்புடன் பணியாற்றி மக்களைக் குழப்பமடையச் செய்யாமல் முன்னேற்றியவர் ஒருவர் தமிழகத்தில் உண்டென்றால் அது சுவாமி தேசிகானந்தா அவர்களேயாவார்கள்.

இவர் 1877ல் சென்னை பெரம்பூரில் பிறந்தார். நல்ல குடும்பத்தின் செல்வப் புதல்வனாக சீலமாக வளர்க்கப்பட்டார். எம்.ஏ. படிப்போடு கல்வியை நிறுத்திக் கொண்டு 1917ல் எழுந்த அரசியல் சமுதாய சூழ்நிலைகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு அதிதீவிரமாக பணியாற்றினார். இவர் ஆங்கிலம், தமிழ் மொழிகளில் தேர்ச்சியோடும், பல இலக்கியங்களில் புலமையும் நாவன்மையும் படைத்தவராகவும் இருந்தார்.

1918ல் பழங்குடி மக்களை உய்விக்க பல பள்ளிகளைத் தோற்றுவித்தார். இதில் ஜியோர்ஜ் பேரரசர் பேரால் தொடங்கிய பள்ளி குறிப்பிடத்தக்கது. இவற்றோடு மக்களுக்கு வீட்டுமனை வழங்கவும், சிறுதொகை மூலம் பொருளாதாரத்தை விருத்தி பண்ண கடன் வசதி தரும் கூட்டுறவு சங்கங்களையும் ஏற்படுத்தினார். பக்கிங்ஹாம் கர்நாடிக் தொழிலகத்தின் மேற்பார்வையாளராகவும், தொழிலாளர் அதிகாரியாகவும் கௌரவ நீதிபதியாகவும் பணியாற்றினார்.

1920ல் தவத்திரு. தேசிகானந்தா பெரம்பூர் பக்கிங்ஹாம் கர்நாடிக் மில்லில் நடந்த கலவரத்தில் முக்கிய பங்கேற்றார். இதில் பங்குகொண்ட மற்றொரு தலைவர் எம்.சி.ராஜா அவர்களாவார். பழங்குடி மக்களை வேலை நிறுத்தத்திலிருந்து விலக்கி தலித்துகள் மில்லில் தொழில் கற்பதற்குத் துணை செய்தார். மில்லில் பெரும் பகுதிகளில் தலித்துகள் நுழைய முடியாதிருந்த நிலையை மாற்ற இவர் பேருதவியாக இருந்தார். பழங்குடி மக்களுக்கு மில்லில் அதிகரித்து வரும் வேலை வாய்ப்பு நிலையைக் கண்டு மேல் சாதிக்காரர்களுக்கு வேலையில்லாமல் போய்விடுமென்று பயந்து சர். சி. பி. தியாகராய செட்டியார், திரு.வி.க. போன்ற உயர்த்தப்பட்ட சாதி இந்துத் தலைவர்கள் தங்கள் ஆட்களை வேலைக்கு அனுப்பியதும் குறிப்பிடத்தக்கதாகும்.

இதனால் ஏற்பட்ட பயங்கர விளைவுகளிலும், புளியந்தோப்பு ஷெட்யூல் வகுப்பு – சாதி இந்து – முஸ்லீம் கலவரத்தாலும் ஏற்பட்ட விளைவுகளைச் சமாளித்து ஷெட்யூல் வகுப்பு மக்களை காப்பாற்றிய பெருமையும் இவரையே சார்ந்ததாகும். இவரது தமிழ் அறிவினையும், இலக்கிய, யோக, ஞான மார்க்கங்களில் இவருக்கிருந்த ஆழ்ந்த புலமையும், வாதத்திறமையும் கண்டு வியந்தவர்களில் வடிவேல் செட்டியார், இலவழகனார், திரு.வி.க, உ.வே.சா, மறைமலையடிகள் போன்றோர் குறிப்பிடத்தக்கவர்கள். இறுதி நாட்களில் சமயத்துறையில் சத்குரு அந்து சுவாமிகளின் அடியாராக இருந்தார்.


(தொடரும்)

6 Replies to “நீதிக்கட்சியின் மறுபக்கம் – 02”

  1. கடைத் தேங்காயைத் திருடி, வழிப்பிள்ளையாருக்கு உடைத்து, உடைத்ததையே திருப்பி திருப்பிச் சொல்லி, உண்டியலை உருட்டிக்கொண்டு போகும் சாமர்த்தியசாலிகள் திராவிட இயக்கத்தார்.

  2. உயர்நீதிமன்ற கருப்பு கொடி விவகாரத்தில்

    அது என்ன ” பஞ்ச பாண்டவர்களைப் போல அவர்கள் வந்து கலாட்டா செய்தார்கள்? “.

    ” பாலம் கட்ட எந்த பொறியியல் கல்லூரியில் படித்து பட்டம் வாங்கினார்? ” “குடிகாரன் என்று எழுதப்பட்டிருக்கிறது ” மாதிரி மீண்டும் பிரச்சினைக்கு அஸ்திவாரமா?

  3. இன்று இருப்பவர்கள் தனக்கு மட்டுமே வாழ்பவர்களாக இருக்கும்போது, என்ன செய்ய முடியும்!

  4. Salute to Mr. Venkatesan,

    Great work done! astonishing!

    Tamil Hindu (TH) has good stuff for publishing books, documentation is one of the weak area of us, because of continuous articles, TH can publish good number of books.

    I am interested to support u

    great work, thanks a lot
    regards

  5. தீண்டத்தகாத, தாழ்த்தப்பட்ட, ‘ஆதி’ என்ற அடைமொழிகொண்ட, பழங்குடி என அரசால் சொல்லப்பட்ட மக்கள் தொகை ஊருக்கு வெளியே ஒதுக்கப்பட்டு வாழ்ந்தது என்றால், ஊரில் யார்தான் வாழ்ந்தார்கள்? கிராமம் கிராமமாகவே மக்கள் வாழ்ந்து கொண்டிருந்தபோது, ஊர் என்ற கற்பனையான வசதிமிக்க ஒன்றை ஏற்படுத்தி, கிராமத்தில் வாழ்ந்து கொண்டிருந்தவர்களை, ஏமாற்றியதுதான் நீதிக்கட்சியின் சமுதாயத் தொண்டு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *