அதர்வ வேதம் 12.1.
சத்தியம், மகத்தானதும் மாறாததுமான முடிவில்லாத பிரபஞ்ச லயம்,
புனிதம், தவம், தெய்வீக ஆற்றல், வேள்வி
இவையே பூமியைத் தாங்குகின்றன.
கடந்தவைகளுக்கும் வருபவைகளுக்கும் அரசியான அவள்
நமக்காக, வாழும் உலகமாய்ப் பரந்திடுக. (1)
உச்சிகளும், சரிவுகளும்
மனிதர்களைப் பிணைக்கும் பல சமவெளிகளும் கொண்ட பூமி
பல்வேறு சக்திகள் பொருந்திய மூலிகைகளைத் தாங்கும் பூமி
நமக்காகப் பரந்து வளம் பொருந்தியதாகுக. (2)
நாற்திசைகளுக்கும் பேரரசியான எவளிடத்தில்
அன்னமும் பயிர்களும் பிறக்கின்றனவோ,
எவள் பற்பல அசையும் உயிர்களையும் தன்மீது தாங்குகிறாளோ,
அந்த பூமி பசுக்களையும், அன்னத்தையும் நமக்கு வாரி வழங்கிடுக. (4)
ஆதியில் அவள் ஆழ்கடலின் நீருள் இருந்தாள்
மெய்யுணர்ந்த ரிஷிகள் தம் அற்புத சக்திகளால் அவளை நாடினர்
அமுதமயமான அழிவற்ற சத்தியத்தால் மூடப்பட்டு
அவள் இதயம் அப்பால் உள்ள ஆகாயவெளியில் இருந்தது.
அந்த பூமி நமக்கு உன்னதமான தேசத்தையும்,
அதில் ஒளியையும், வலிமையும் அளித்திடுக.
சமநிலை தவறாமல், இரவு பகல் விடாமல்
வளைந்தோடிப் பாய்கின்றன அவளது நீர்ப் பெருக்குகள்.
எப்போதும் நிரம்பிய தாரையாகிய அந்த பூமி
நம் மீது பாலைப் பொழிக.
நம்மை ஒளியில் நனைத்திடுக. (8-9)
ஓ பூமி,
உனது மலைகளும், பனிபடர்ந்த சிகரங்களும்,
உனது காடுகளும் எப்போதும் இனியதாகுக.
பழுப்பும், கருப்பும், சிவப்பும், பலவண்ணங்களும் ஆனவள்
இந்திரன் காக்கும் இறுகிய பூமி.
இந்தப் பூமி மீது நான் நிற்கிறேன் –
வெல்லப் படாதவனாக, அழிக்கப் படாதவனாக, குறையாதவனாக.
உன் மையத்தில் உள்ளதையும்
உன் கொப்பூழில் உதித்ததையும்
உன் உடலில் விளையும் ஊணையும் தருக.
எம்மைப் புனிதமாக்குக.
பூமி தாய்; நான் புவியின் மகன்.
தந்தை வடிவான வானம் நம்மை நிறைத்திடுக. (11-12)
பூமிக்குள் அக்னி உறைகிறது
செடிகளில் அக்னி உள்ளது
நீர் அக்னியைச் சுமந்து செல்கிறது
கல்லில் அக்னி உள்ளது
மனிதருக்குள்ளும் அக்னி உள்ளது
மாடுகளிலும், குதிரைகளிலும் அக்னி உறைகிறது.
அக்னி விண்ணில் சுடர்கிறது
வான்வெளியில் தெய்வீக அக்னியே நிரம்பியுள்ளது
மனிதர் மூட்டுகிற அந்த அக்னியே
நெய்யை விரும்பி உண்டு, அவிகளைச் சுமந்து செல்கிறது
அக்னியை ஆடையாக உடுத்த
கருங்கால்கள் கொண்ட பூமி
என்னைச் சுடர்விடச் செய்க.
எனது ஒளியைத் தீட்டுக. ( 19 – 21)
பூமி, உன்னிடம் உதித்த நறுமணத்தை
செடிகளும், நதிகளும் சுமந்து செல்கின்றன.
கந்தர்வர்களும், அப்சரஸ்களும்
அந்த நறுமணம் உடையோராகின்றனர்.
அந்த நறுமணத்தால் என்னை இனிமையாக்கு.
யாரும் என்னை வெறுக்காதிருக்கட்டும்.
உனது அந்த நறுமணம் தாமரையில் பிரவேசித்தது
அமரர்கள் முன்பு அதனை சூரியனின் திருமணத்திற்காகக் கொண்டுவந்தார்கள்
அந்த நறுமணத்தால் என்னை இனிமையாக்கு.
யாரும் என்னை வெறுக்காதிருக்கட்டும்.
ஆண்களிலும், பெண்களிலும் உள்ள உனது நறுமணம் எதுவோ
இளைஞனின் ஒளியும், கம்பீரமும் எதுவோ
வீரர்களிலும், புரவிகளிலும் உள்ளது எதுவோ
வனமிருகங்களிலும், யானைகளிலும் உள்ளது எதுவோ
கன்னிப் பெண்ணின் இளமை ஒளி எதுவோ
ஓ பூமி, இவற்றுடன் எம்மை ஒன்றுகூட்டுவாய்
யாரும் என்னை வெறுக்காதிருக்கட்டும். (23-25)
பாறைகளும், மணலும் கொண்ட பூமி
கற்களும், துகள்களும் கொண்டு ஒன்றாய்ச் சேர்ந்து இறுகிய பூமி
பொன்முலையாளான அந்த பூமியைப் போற்றுவோம்.
மரங்களும், பெரும் காடுகளும் எதன் மீது உறுதியாக நிற்கின்றனவோ
அந்த அனைத்துலகையும் தாங்கும் பூமியைப் போற்றுவோம்.
எழுதலிலும் அமர்தலிலும்
நிற்கையிலும் உலவுகையிலும்
வலது காலாலும், இடது காலாலும்
பூமியில் உதைக்காமல் இருப்போம் (26-28)
பூமி, உனது கிழக்குப் பிரதேசங்களும்
வடக்கும், தெற்கும், மேற்கும்
நான் செல்வதற்கு இனியவையாகுக.
இவ்வுலகில் நான் இடறி விழாமலிருக்கட்டும் (31)
பூமி, உன்னிடமிருந்து எதைத் தோண்டினாலும்
அது விரைவில் வளரட்டும்.
உனது இதயத்தையும், மர்மஸ்தானங்களையும்
நாங்கள் சேதப் படுத்தாதிருப்போமாக.
எங்கு உலகைச் சமைத்த எமது முன்னோர்
புனித மொழிகளை ஓதினரோ,
ஏழு ரிஷிகள் காலம் தோறும்
வேள்வியும், தவமும் புரிந்தனரோ
அந்த பூமி நாம் விரும்பும் செல்வத்தை நமக்கு அளிக்கட்டும்.
பகன் செயலை அருளட்டும், இந்திரன் வழிகாட்டிச் செல்லட்டும். (35-37)
பூமி மீது மானிடர் பல்வேறு மொழிகள் பேசிப் பாடி ஆடுகின்றனர்.
துந்துபி ஒலிக்க, போர்முழக்கம் எழ, யுத்தங்களில் மோதுகின்றனர்.
அந்த பூமி நம் எதிரிகளை விரட்டிடுக.
என்னைப் பகைவன் இல்லாதவனாய்ச் செய்க. (41)
உனது பாதைகளில் பல மனிதர் பயணிக்கின்றர்.
ரதங்களும், வண்டிகளும் போகின்றன.
நல்லோர், தீயோர் ஆகிய இருவருமே ஒன்றாக நடக்கின்றனர்.
நாம் அப்பாதைகளுக்குத் தலைவர்களாவோம்.
திருடர்களையும், பகையையும் துரத்துவோம்.
பூமி கனவானையும், முட்டாளையும் சுமக்கிறாள்.
நல்லோர், தீயோர் இருவரின் மரணத்தையும் கடந்து செல்கிறாள்.
பூமி வீரியமிக்க வராகத்துடன் நட்பாக இருக்கிறாள்.
தெருப்பன்றிகளும் அவள்மீது தன்னிச்சையாகத் திரிகின்றன. (47-48)
கருமையும் வெண்மையும் இணைந்து
இரவு பகல்களாக பூமி மீது படர்கின்றன.
மழை அவளைத் திரையிட்டு மூடுகிறது.
ஒவ்வொரு அன்பு ததும்பும் வீட்டிலும்
பூமியாகிய அவள் நமக்கு இன்பம் அளிக்கட்டும். (52)
பூமி மீது
கிராமங்களிலும் காடுகளிலும்
சபைகளிலும் குழுக்களிலும் கூட்டங்களிலும்
உனக்கு இனியதையே பேசுவோம்.
தான் பிறந்தது முதல்
பூமி நிலத்தில் வாழும் மக்களை (பல்வேறு இடங்களிலும்) சிதறச் செய்தாள்
குதிரை தன் காலால் புழுதியைச் சிதறடிப்பது போல.
பின் அவள் மகிழ்ச்சியுடன் விரைந்தாள்.
உலகைக் காப்பவள்
காட்டு மரங்களையும், செடிகளையும் அரவணைப்பவள். (56-57)
அமைதியும் நறுமணமும் இனிமையும்,
நிறைந்த பாலும், அமுதம் சுரக்கும் மார்பகமும் உடையவள் பூமி.
அவள் தன் பாலைப் பொழிந்து என்னை ஆசிர்வதிக்கட்டும்.
அவள் வான்வெளியின் கடலின் ஒளியில் புகுந்திருந்தாள்.
ஆகுதியுடன் விஸ்வகர்மன் அவளை நாடினான்.
அன்னையை வேண்டி நின்றவர்களுக்கு அமுதூட்டி வளர்க்க
மறைந்திருந்த அந்த மகத்தான பாத்திரம் வெளிப்பட்டது.
நீயே அந்தப் பாத்திரம்,
அனைவருக்கும் அன்னையாகிய அதிதி.
அனைவரின் ஆசைகளையும் நிறைவேற்றும் காமதேனு.
அதற்கும் மேலானவள்.
உன்னிடத்தில் குறைபவை அனைத்தையும்
பிரபஞ்ச லயத்தில் முதன்முதலில் பிறந்த பிரஜாபதி
இட்டு நிரப்புகிறார்.
ஓ பூமி, உன்னில் பிறப்பவை அனைத்தும்
எங்களுக்கு நலமளிப்பவையாக இருக்கட்டும்.
நோயுறாமலும், வீணாகாமலும் இருக்கட்டும்.
நீண்ட ஆயுளுடனும், அறிவு விழிப்புடனும்
உனக்குக் காணிக்கை அளிப்பவர்களாக நாங்கள் இருப்போம்.
ஓ பூமி, தாயே
விண்ணுடன் ஒன்றுகூட்டி
(மண்ணில்) என்னை நிலைநிறுத்திக் காத்து இன்பம் அளித்திடுக.
ஓ கவியாகிய ரிஷியே,
எனக்கு அருளும் ஒளியும் தருக. (59-63)
********
அதர்வ வேதத்தின் பன்னிரண்டாவது காண்டத்தின் முதல் சூக்தமாக 63 பாடல்கள் அடங்கிய பூமி சூக்தம் உள்ளது (மேலே, அடைப்புக்குறிக்குள் உள்ளவை பாடல் எண்கள்). ஆழ்ந்த கவித்துவமும், ஆன்மிகமும் ததும்பும் மொழியில் நாம் வாழும் பூமியை அன்னையாக, தெய்வமாகப் போற்றிப் பாடும் அதர்வான் என்ற வேத ரிஷியின் பாடல் இது.
பூமியை புவீ ஈர்ப்பு போன்ற பௌதிக சக்திகள் மட்டுமல்ல, சத்தியமும், தவமும் தாங்குகின்றன என்று முதல் பாடல் பகர்கின்றது.
பண்புடையார்ப் பட்டுண்டு உலகம்; அஃதின்றேல்
மண்புக்கு மாய்வது மன்
என்ற திருக்குறள் கருத்துடன் இது இயைந்துள்ளது. புராணங்களில் அரக்கர்களின் கொடுமை தாங்காமல் பூமி பாரமுற்று தெய்வீக சக்திகளை வேண்ட, அவதாரங்கள் தோன்றி பூமியைக் காப்பாற்றும் கதைகளைக் காண்கிறோம்.
பூமியைப் பெண்ணாக, தாயாக, பாலைப் பொழியும் பசுவாக இந்தப் பாடல்கள் குறிப்பிடுகின்றன. இந்த உருவகம் இந்துப் பண்பாட்டில் இன்று வரை உயிர்த்துடிப்புடன் உள்ளது. வாசலில் கோலமிட்டு பூமித் தாயை அழகு செய்யும் மரபும், விதை விதைப்பதானாலும், வீடு கட்டுவதானாலும் முதலில் பூமியைப் பூஜை செய்து அனுமதி பெறும் பழங்குடிச் சடங்குகளும் இன்றும் நம் வாழ்வின் அங்கமாக உள்ளன. ”பூமி தாய்; நான் புவியின் மகன்” (பாடல் 12) என்ற உணர்வே தாய் மண், தாய் நாடு என்ற பாச உணர்வாகப் பின்னர் பரிணமித்திருக்கிறது. தேசத்தைத் தாயாகக் கருதிப் போற்றும் “வந்தே மாதரம்” என்ற இந்திய தேசியப் பாடலும் இந்த உணர்வினையே எதிரொலிக்கிறது.
********
பூமி முழுவதும் ஆதியில் கடலாகவே இருந்தது (8வது பாடல்) என்ற கருத்து அறிவியல்பூர்வமானது. இயற்கைச் சக்திகளும், மனிதனும், பிரபஞ்சமும் ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைந்தவை என்ற கருத்தும் பல பாடல்களில் தென்படுகிறது. இன்றைக்கு சுற்றுச் சூழல் ஆர்வலர்களும், புவிநேசர்களும் கூறும் சூழலியல் கருத்தாக்கங்களுடன் இயைவதாக வேத ரிஷியின் இந்தக் கவிதை விளங்குகிறது என்றே சொல்லலாம்.
பூமி என்பது உயிரற்ற ஜடப் பொருள் என்று சில பத்தாண்டுகள் முன்பு வரை நவீன அறிவியல் கருதி வந்தது. ஆனால் தற்போது பூமியை ஒன்றுக்கொன்று தொடர்புடைய ஒரு மாபெரும் உயிர்ப் பிணைப்பாகக் காணவேண்டும் என்பது போன்ற சூழலியல் சித்தாந்தக் கருத்துக்கள் அறிவியல் தளத்திலும் செவிமடுக்கப் படுகின்றன.

1970களில் ஜேம்ஸ் லவ்லாக் மற்றும் லின் மார்குலிஸ் ஆகிய உயிரியலாளர்களால் கையா கோட்பாடு (Gaia Theory) முன்வைக்கப் பட்டது. கையா (Gaia) என்பது கிரேக்க பூமி தெய்வத்தின் பெயர். பூமியில் ஏற்படும் பருவநிலை மாற்றங்கள் போன்ற உயிர்-வேதியியல் செயல்பாடுகள் தொடர்பற்றவை அல்ல. மாறாக ஒரு பிரக்ஞைபூர்வமான, சீரான, உயிர்த்துடிப்புள்ள ஒழுங்குமுறையில் (homeostasis) நடைபெறுபவை என்பது இந்தக் கோட்பாட்டின் மையக் கருத்தாகும். கையா என்பது ஒரு ஒற்றைப்படையான சக்தி அல்ல, மாறாக அது பல முனைகளில் செயல்படும் ஒரு அலைவரிசைத் தன்மையிலானது (spectrum) என்று இந்தக் கருதுகோள் பின்னர் வளர்த்தெடுக்கப் பட்டது. தொடக்கத்தில் இது ஒரு தத்துவமே அன்றி அறிவியல் அல்ல என்ற விமர்சனங்கள் எழுந்தன. பின்னர் பல பரிசோதனைகள் புவி நிகழ்வுகள் உயிரோட்டத்துடன் நடைபெறுபவை என்ற கூற்றுக்கு ஆதாரம் சேர்த்தன. 2006ம் ஆண்டு தான் எழுதிய The Revenge of Gaia என்ற நூலில் காடுகள் அழிப்பு, கட்டற்ற தொழில்மயமாக்கலால் ஏற்படும் சூழல் மாற்றங்கள் ஆகியற்றை நாம் கண்டுகொள்ளாமல் விட்டதால் என்னென்ன சீரழிவுகளை உலகம் ஏற்கனவே சந்தித்துக் கொண்டிருக்கிறது என்பது பற்றி லவ்லாக் எழுதினார்.
வேத காலத்திலேயே இயற்கையை நேசத்துடன் பாதுகாத்துப் பயன்படுத்துவது பற்றி இந்தியப் பண்பாடு பேசியது என்பது குறித்து நாம் உண்மையிலேயே பெருமிதம் கொள்ளலாம். ஆனால் தற்போதைய நிலைமையை வைத்துப் பார்க்கையில், நடைமுறையில் நமது நதிகளையும், சிற்றாறுகளையும், ஓடைகளையும், காடுகளையும் மற்ற இயற்கை வளங்களையும் நாம் வேகவேகமாக சீரழித்துக் கொண்டிருக்கிறோம் என்ற பெரும் உண்மை முகத்தில் அறைவதைத் தடுக்க முடியவில்லை. ‘நடந்தாய் வாழி காவேரி’ (தி.ஜானகிராமன் & சிட்டி) என்று நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு எழுதப் பட்ட பயண நூலில் காவிரியின் கரைகள் நெடுக நீரில் குளித்துக் கொண்டும், கும்மாளமிட்டுக் கொண்டும் சென்ற கோஷ்டிகளைப் பற்றிப் படித்து விட்டு, அந்த இடங்களை இப்போது சென்று பார்த்தால் அதெல்லாம் உண்மையில் அப்படி இருந்ததா என்றே சந்தேகம் வருவதைத் தவிர்க்க முடியவில்லை.
நகரமயமாக்கலுக்கும், மக்கள்தொகைப் பெருக்கத்திற்கும், தொழில் வளர்ச்சிக்கும் நாம் கொடுக்கும் விலை காமதேனுவையே கொஞ்சம் கொஞ்சமாகக் கசாப்புக் கடைக்கு அனுப்புவதற்கு ஈடாக இருக்கிறது.
வேதரிஷி பாடிய பூமி சூக்தம் அது பற்றிய பிரக்ஞையை அவரது சந்ததியினரிடம் கொண்டுவரட்டும்!
வெகு நாட்களுக்கு பிறகு, இங்கு environmentalism பேசப்படுகிறது. ஆனால் இன்னும் விரிவாக, வெவ்வேறு கோணங்களில் அலசப்பட்டு இருந்தால் நன்றாக இருந்து இருக்கும்.
// ss
28 April 2010 at 4:59 pm
வெகு நாட்களுக்கு பிறகு, இங்கு environmentalism பேசப்படுகிறது. ஆனால் இன்னும் விரிவாக, வெவ்வேறு கோணங்களில் அலசப்பட்டு இருந்தால் நன்றாக இருந்து இருக்கும். //
அன்புள்ள எஸ்.எஸ், நன்றி. இந்தப் பதிவின் நோக்கம் பூமி சூக்தம் என்ற அற்புதமான வேதக் கவிதையைத் தமிழில் தருவதே. அதை முடித்ததும் தோன்றிய சில எண்ணங்களை அடிக்குறிப்பாகக் கீழே எழுதினேன், அவ்வளவே.
சூழலியல் பற்றி விரிவாகப் பேச ஏராளமான விஷயங்கள் உள்ளன.
திரு.ஜடாயு அவர்களுக்கு,
எளிமையான தமிழில் வேத மந்திரங்களை மொழிபெயர்த்து வழங்கியுள்ளீர்கள். பாராட்டுகள்.
இயற்கையை பற்றின தெளிவான புரிதல் நம் முன்னோர்களுக்கு இருந்ததை
பற்றி கண்டிப்பாக பெருமிதம் கொள்ளலாம். மேற்கத்திய பாணியில்
தங்களை வளர்த்து கொள்பவர்களுக்கு இது புதியதாக இருக்கும். ஆனால்
நம் பொக்கிஷங்களை வாசிக்க வேண்டுமே!.
சுற்று சூழலை நாம் துவம்சம் செய்கிறோம் என்பதில் எள்ளளவும் சந்தேகம்
இல்லை. ஆனால் இது Heads you win, Tails I Loose என்பதை போன்றது.
உதாரணமாக இந்தியா மற்ற நாடுகளை விட அதிகமாக அக்கறை
காட்டினால், ஒரு ஆப்பிரிக்க நாடாகி விடும். இயற்கையை நாசமாக்கி
முன்னேறினால் என்றோ ஒரு நாள் புவியின் Equilibrium மாற்றத்தினால்
பேரழிவு ஏற்படத்தான் செய்யும். ஆனால் அழிவிலும் ஒரு சந்தோஷம்
இருக்கும். நாம் தனியாக அழிய மாட்டோம். நம்மோடு சேர்ந்து மொத்த
உலகமும் அழியும்.
அன்புள்ள பாலாஜி, மிக்க நன்றி.
// ஆனால் இது Heads you win, Tails I Loose என்பதை போன்றது.
உதாரணமாக இந்தியா மற்ற நாடுகளை விட அதிகமாக அக்கறை
காட்டினால், ஒரு ஆப்பிரிக்க நாடாகி விடும். … நாம் தனியாக அழிய மாட்டோம். நம்மோடு சேர்ந்து மொத்த உலகமும் அழியும். //
சுற்றுச்சூழல் என்பதற்கு புவி-அரசியல் (geopolitical) அளவில் ஒருவிதமான பிம்பம் தோன்றியுள்ளது. வளர்ந்த நாடுகள் வளரும் நாடுகளின் முன்னேற்றத்தை மட்டுப் படுத்த விதிக்கும் கட்டுப்பாடுகள் (கார்பன் கிரெடிட்) போன்ற விஷயங்கள் தான் சூழலியல் என்ற அணுகுமுறையில் நீங்கள் சொல்கிறீர்கள் என்று நினைக்கிறேன். இந்தக் கட்டுப்பாடுகள் விஷயத்தில் உங்களுடன் நான் ஒன்றுபடுகிறேன். இந்தியா நிபந்தனையற்ற இத்தகைய எந்தக் கட்டுப் பாடுகளுக்கும் உடன்படக் கூடாது.
ஆனால், சுற்றுச் சூழல் என்பது அது மட்டும் அல்லவே? நமது நதிகளையும், காடுகளையும், இயற்கை வளங்களையும் மீளவே வழியில்லாமல் சீரழிய விடுவதற்கும், மேற்சொன்ன விஷயத்திற்கும் என்ன தொடர்பு?? இவை முழுக்க முழுக்க நமது பேராசை, சுரண்டல், ஊழல், அரசுகளின் மெத்தனம் ஆகிய பல காரணிகளாலும், நமது இயற்கை நேசப் பாரம்பரியத்தை நாமே மறந்ததாலும் தான் ஏற்பட்டது.
உதாரணமாக, ஆறுகளில் மணல் கொள்ளை என்ற பூதாகாரமான ஊழலை, சமூகவிரோத செயல்பாட்டை கட்டுமான வளர்ச்சி என்ற பெயரில் எப்படி நியாயப் படுத்த முடியும்? கட்டுமான வளர்ச்சியில் ஏற்படும் தேவைகளை நிரப்ப பல்வேறு அறிவியல்பூர்வமான, innovative முறைகளை நாம் கைக்கொள்ளலாம். உதாரணமாக, மணலின் பயன்பாடு குறைவான மாற்றுத் தொழில்நுட்பங்கள் – அவற்றை ஊக்குவித்துப் பயன்படுத்துவது பற்றி அரசும், சமூகமும் ஏன் யோசிப்பதில்லை? இன்றைக்கு தமிழகத்தின் ஆறுகள், ஓடைகள் முழுவதையும் இந்த ஊழல் அரித்துத் தின்று கொண்டிருக்கிறது.
சொல்லப் போனால், வளர்ந்த மேற்கத்திய நாடுகள் green house gasesஐ வெளியிட்டு காற்றுவெளியைப் பாழாக்கி விட்டாலும், புவியின் மீதுள்ள தங்கள் பசுமையையும், காடுகளையும், நீர்வளத்தையும் மிகச் சிறப்பாகவே பாதுகாத்து வருகின்றன. நாம் தான், கங்கையும், காவிரியும் நம் கண்முன்னால் சாக்கடைகளாக ஆவதைக் கண்களால் கண்டு கொண்டு ஒன்றும் செய்ய முடியாதவர்களாயிருக்கிறோம்..
திரு.ஜடாயு அவர்களுக்கு,
/*உதாரணமாக, ஆறுகளில் மணல் கொள்ளை என்ற பூதாகாரமான ஊழலை, சமூகவிரோத செயல்பாட்டை கட்டுமான வளர்ச்சி என்ற பெயரில் எப்படி நியாயப் படுத்த முடியும்? கட்டுமான வளர்ச்சியில் ஏற்படும் தேவைகளை நிரப்ப பல்வேறு அறிவியல்பூர்வமான, innovative முறைகளை நாம் கைக்கொள்ளலாம். உதாரணமாக, மணலின் பயன்பாடு குறைவான மாற்றுத் தொழில்நுட்பங்கள் – அவற்றை ஊக்குவித்துப் பயன்படுத்துவது பற்றி அரசும், சமூகமும் ஏன் யோசிப்பதில்லை? இன்றைக்கு தமிழகத்தின் ஆறுகள், ஓடைகள் முழுவதையும் இந்த ஊழல் அரித்துத் தின்று கொண்டிருக்கிறது*/
very well said. The entire Tamirabarani river sand has gone now. The beauty that
we haved enjoyed in our childhood is missing.
RGK
அன்புள்ள ஜடாயு
மொழியாக்கம் நன்று
பழைய சம்ஸ்கிருதப் பாடல்களின் மொழிஅமைப்பில் ஒரு பொதுத்தன்மை உள்ளது. சொல்லுக்கு சொல் இன்றைய இலக்கணப்படி மொழியாக்கம் செய்தால் ‘எவள் பற்பல அசையும் உயிர்கள் அனைத்தையும் தாங்குகிறாளோ’ என்ற வகையில்தான் மொழியாக்கம் செய்ய முடியும். ‘யார்’ ‘எவள்’ ‘எது’ போன்ற சொல்லாட்சிகள் வந்தபடியே இருக்கும்.
ஆனால் இப்படி மொழியாக்கம் செய்வது ஒலிசார்ந்து ஒரு பொருத்தமின்மையை உருவாக்குகிறது. அதாவது இந்த மொழியமைப்பானது ஆங்கில சொற்றொடர்வடிவம் சம்ஸ்கிருத சொற்றொடர்வடிவை சந்திக்கும்போது உருவாவது. சம்ஸ்கிருத மந்திரங்களை இந்த அமைப்பில்தான் மொழியாக்கம் செய்தாகவேண்டுமென்பதில்லை. அம்மந்திரங்களின் அழகும் தொனி¢யும் வரவேண்டுமென்றால்
நான்கு திசைகளுக்கும் பேரரசி!
அவளிடத்தில் பிறக்கின்றன அன்னமும் பயிர்களும்!
அசையும் அசையா உயிர்களனைத்தையும் தாங்குபவள்!
செல்வங்களையும் அன்னத்தையும்
அவள் நமக்கு வாரி வழங்கிடுக!
என்று மொழியாக்கம்செய்யலாம்.
வேதங்களின் சம்ஸ்கிருத அமைப்பு பற்றி நிறையவே எழுதப்பட்டிருக்கிறது. அவை மொழியிலக்கணம் சரியாக உருவாகாத அதிதொன்மைக்காலத்தைச் சேர்ந்தவை. பல இடங்களில் தெளிவான எழுவாய்ப்பயனிலை அமைப்பு கூட அவற்றில் இல்லை. நிறைய வரிகள் கொண்டுகூட்டிப் பொருள் கொள்ளப்பட வேண்டியவை. பல இடங்களில் சொல்லிணைப்புகள் இன்றைய இலக்கணப்படி பொருள் கொள்ளவே முடியாதவை
ஆகவே வேதங்களை மொழியாக்கம் செய்வது மிகக் கடினம். நேர்ச்சொல் எடுத்து மொழியாக்கம் செய்வது இன்னமும் கடினம். ஆகவேதான் நெடுங்காலம் வேதங்கள் மொழியாக்கம் செய்யப்படவில்லை. ஆரம்பகட்ட மொழியாக்க ஆசிரியர்களான வள்ளத்தோள் நாராயணமேனன் போன்றவர்கள் வெகுவாக திணறி பல இடங்களில் நெருடலாகவே மொழியாக்கம் செய்திருக்கிறார்கள்
[ரிக் வேத நிபுணரான இ.எம்.எஸ் நம்பூதிரிப்பாடு சொன்னார். வள்ளத்தோளின் மொழியாக்கம் மூலத்துக்கு நீதி செலுத்தியிருக்கிறது. மூலத்தை வாசித்த காலத்தில் எனக்கு எதுவும் புரியவில்லை. மொழியாக்கத்தை வாசித்தாலும் புரியவில்லை]
க்ரி·பித் போன்றவர்கள் ஆங்கிலத்தில் சுதந்திரம் எடுத்துக்கொண்டு மொழியாக்கம் செய்தார்கள். ஆங்கில மொழியின் சொற்றொடரமைப்பு அதற்கு ஒத்தும் வந்தது. ஆனால் தமிழில் அந்த சொற்றொடரமைப்பு நெருடுகிறது. ஆகவே வேதங்களின் சொல்லாட்சியை தமிழுக்குரிய சொல்லாட்சிக்கு கொண்டுவரும் சுதந்திரத்தை எடுத்துக்கொள்ளலாம் என்றே நினைக்கிறேன்
ஜெயமோகன்
அருமை! நாம் சரியான விதத்தில் இயற்கையை பயன்படுத்த தவறி விட்டோம்! அது தான் இன்றைய நிலைமைக்கு காரணம்! இனிமேலாவது உணர்ந்து நடந்தால் நல்லது! நன்றி!
அன்புள்ள ஜெயமோகன்,
// ஆகவே வேதங்களின் சொல்லாட்சியை தமிழுக்குரிய சொல்லாட்சிக்கு கொண்டுவரும் சுதந்திரத்தை எடுத்துக்கொள்ளலாம் என்றே நினைக்கிறேன் //
ஆமாம். வேத இலக்கணம் பற்றித் தாங்கள் கூறியது மிகவும் சரி.
இந்த மொழியாக்கத்தில் பல இடங்களில் நான் சரியாகவே தமிழ் சொல்லாட்சிக்கு மாற்றி செய்திருக்கிறேன். சில இடங்களில் திணறி சொல்லுக்கு சொல் அப்படியே மொழியாக்கி விட்டேன். சுட்டிக் காட்டியதற்கு மிக்க நன்றி.
ஜடாயு அவர்களே,
அருமை.
இயற்கையைப் போற்றும் (அதாவது தெய்வமாக வணங்கும்) கவிதைகள் பல வேதங்களில் உள்ளன. புராணங்களிலும் உள்ளன.
இந்தக் கவிதைகள் இறையை மண்ணிலும் கண்ட மனிதர்களின் படைப்புகள். கிறுத்துவ இறையியலின்படி ஹிந்துத்வத்தில் உள்ள பேகன் (pagan) பண்பாட்டுக் கூறுகள்.
இந்தக் கவிதைகள் அனைத்தையும் ஒரு மொழிபெயர்ப்புத் தொடராக நீங்கள் தரவேண்டும் என வேண்டுகோள் விடுக்கிறேன்.
அன்பின் ஜடாயு !
வேதங்களை அறிய நல்லதொரு வாய்ப்பு. மகிழ்ச்சி . இலங்கைப் பத்திரிகைகளில் உங்கள் மொழிபெயர்ப்பு வருவது நன்று என எண்ணுகின்றேன்.
// வேதரிஷி பாடிய பூமி சூக்தம் அது பற்றிய பிரக்ஞையை அவரது சந்ததியினரிடம் கொண்டுவரட்டும்!//
அவாணமே நானும் வேண்டிக்கொள்கிறேன்!
எப்படில்லாம் இவனுங்க மதத்தை பரப்புகிறாங்க பாருங்க நம்ம வேதங்களும் உபனிஷத்துகளும் இவர்களிடம் படும் பாட்டை இந்த இணைப்பில் பாருங்க அசந்தால் எல்லாமே கொள்ளை போய் விடும் கவனம் கவனம் https://peacetrain1.blogspot.com/search/label/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF
Rrespected Sirs,
I request Sri Jatayu to please provide the original test which in Deva nagari script’ This will help those who donot know Tamil well enough to understand the depth of the BHOOMI SOOKTHAM.
Thanking you,
Yours,
Jambunathan.V.
அன்புள்ள ஜடாயு,
பூமி சூக்தம் மொழிபெயர்ப்பு மிகவும் நன்றாக உள்ளது. இனி செய்யும் மொழிபெயர்ப்புக்களில் வேண்டுமளவு சுதந்திரம் எடுத்துக்கொள்ளவும். கருத்தே முக்கியம். வாக்குத்தெய்வம் உமக்கு எல்லா அனுகூலங்களையும் அருளட்டும்.