பிரபஞ்சம்: நெய்ல் டிகிரீஸ் டைசனின் பார்வையில்

மூலம்: Neil deGrasse Tyson, an American astrophysicist.
தமிழில்: பிரதீப் பெருமாள்

neil-degrasse-tysonதொடக்கத்தில், அதாவது ஒரு 12 அல்லது 16 பில்லியன் (மஹாகும்ப) ஆண்டுகளுக்கு முன்னால் நாம் இன்று அறிந்தும் அறியாமலும் இருக்கிற பிரபஞ்சத்தின் எல்லா இடமும் வஸ்துவும் மற்றும் எல்லா சக்தியும் ஒரு ஊசிமுனையின் ட்ரில்லியன்-ல் ஒரு பாக அளவில் அடக்கப்பட்டதாக இருந்தது. இந்தச் சமயத்தில் நாம் கற்பனை செய்ய முடியாத அளவில் அது வெப்பமுடையதாகவும் நாம் எண்ணிப் பார்க்க முடியாத இயற்கையின் ஈட்டமும் மிக்கதாகவும் இருந்தது. அப்போதுதான் அது அகிலம் ஒன்று என்பதை நிருபிப்பது போல இருந்தது.

இன்னும் காரணங்கள் அறிவியல்பூர்வமாக அறியப்படவில்லை; ஆனால் அது அப்போது திடீரென விரிவடையத் தொடங்கிது. இச்சமயத்திலே பிரபஞ்சத்தின் வெப்பம் 1030 டிகிரி செல்சியஸ் ஆகவும் அதன் வயது 10-43 நொடிகளாகவும் இருந்தபோது வஸ்துக்களை குறித்த நமது சமர்த்திதல்களும், அவதிஞானம் (The Knowledge about Space and Time) குறித்த நமது தற்போதைய அறிவும் அர்த்தமற்றவைகளாக இருந்தன. பின்னர் சிறிது காலத்தில் கருந்துவாரங்கள் உருவாகுதலும் மறைதலும் பின்னர் மீண்டும் ஒருங்கிணைந்த ஆற்றலின் வெளிப்பாடாக உருவாகுதலும் நடந்தது.

black-holeஇந்த அதிசீதமான நிலையில் நாம் பொதுவாக ஒத்துக்கொண்ட ஊக இயற்பியலின்படி பச்சிளம் பிரபஞ்சத்தின் பஞ்சு போன்ற மெத்தென இருந்த தொடக்கக் குமிழிகளின் அமைப்பால் இடத்துக்கும் காலத்துக்குமான வளைவு மிகவும் நெருங்கி அமைந்தது. இந்தச் சகாப்தத்தின் போது ஐன்ஸ்டீன் அவர்களால் விளக்கப்பட்ட பொது சார்புநிலைக் கோட்பாடுத் தேற்றமும் (நவீன ஈர்ப்பு விசைத் தேற்றம்) க்வாண்டம் இயக்கவியலும் (பருப்பொருளின் மிக சிறிய அளவுகளால் விளக்கப்படுதல்) தனியாகப் பிரித்து அறிய முடியாததாக இருந்தது.

தொடர்ந்து அகிலமானது விரிவடைந்து அதன் வெப்பம் சிறிது தணிந்து குளிர்ச்சி அடைந்தபோது ஈர்ப்பு விசை ஆனது குழந்தைப் பிரபஞ்சத்தின் மற்ற விசைகளில் இருந்து பிரிய ஆரம்பித்தது. அதன் பின்னர் விரைவிலேயே பலமான நியூக்ளியர் விசையும் மந்தமான மின் விசையும் ஒன்றில் இருந்து ஒன்று பிரிய நேர்ந்தது. இதனால், இதனுடன் சேர்ந்து சேமித்து வைக்கப்பட்டு இருந்த மாபெரும், குறிப்பிட்டு இது தான் என்று சொல்லமுடியாத சக்தியின் மிகபெரிய வெளியேற்றமும் அகிலத்தின் பரிமாணத்தை 3000000 ஒளி ஆண்டுகளாக குறுகிய காலத்தில் பெருக்கச் செய்தது.

இது மாதிரி வெளியேற்றப்பட்ட சக்தி ஆனது ஒரு வஸ்து அதன் அதி வெப்ப நிலையில் இருந்து அதன் விறைத்துப் போன குளிர்ச்சிக்குச் செல்லும்போது வெளியேற்றப்படும் வெப்பஆற்றலின் சக்திக்கு இணையானதாகக் கொள்ளலாம். இது மாதிரி வெளியேற்றப்படும் வெப்பம் (Latent Heat) மறைந்திருந்த வெப்பம் என்று சொல்லப்படுகிறது.

அதாவது கொடுக்க பட்ட வெப்பத்தின் போது பூஜியம் டிகிரியில் உள்ள ஒரு கிராம் நீரில் சேமித்து வைக்கப்படும் வெப்ப ஆற்றல் ஆனது அதே வெப்பத்தை ஒரு கிராம் பனிகட்டிக்குத் தரும்போது அதனுள் சேமித்து வைக்கப்படும் வெப்ப ஆற்றலைக் காட்டிலும் அதிகம் ஆகும். இது மாதிரியாக நீருக்கும் அதன் பனிகட்டிக்கும் ஆன வெப்ப ஆற்றல் சேமிக்கும் வித்யாசமே நீரின் latent (மறைந்திருந்த) வெப்பம் எனப்படுகிறது.

photons-maatter-and-antimatterஇந்தத் தொடர்ச்சியான பிரபஞ்சத்தின் விரிவாக்கமே, அகிலத்தின் வீக்க சகாப்தம் எனப்படுகிறது. இத்தருணத்தில் பரமாகாசத்தில் வஸ்துக்களும் சக்தியும் சமமான அடர்த்தியில் விநியோகிக்கப் படுதல் நடந்தேறியது. அப்படியே அதில் பிரதேச வேறுபாடுகள் இருந்திருப்பினும் அது ஒரு லட்சத்தில் ஒரு பங்காகவே இருந்திருக்கும். இன்று சோதனைச்சாலையில் ஆய்வு செய்து உறுதி செய்யப்பட்ட இயற்பியலின்படி, அன்றைய பிரபஞ்சத்தின் நுண்ஒளிகள் (Photons) ஆனது இருந்த போதுமான வெப்பத்தின் விளைவாக அதன் சக்தியை சித்தாகவும் (Antimatter) அசித்தாகவும் (Matter) இரு துகள்களாக தானாகவே மாற்றியது. ஆனால் உடனடியாக இவ்விரண்டும் ஒன்றுடன் ஒன்று மோதி நிர்மூலமாகி அதன் சக்தி மறுபடியும் நுண்ஒளிக்குள் இணைந்தது. சித்துவிற்கும் அசித்துவிற்கும் இடையே ஆன ஒத்த தன்மை இவ்விரண்டும் பிரிவதற்கு முன்னால் உடைந்துபோனது. இதனால் சித்தை விட அசித்து சொற்ப அளவில் அதிகமாகியது. இதற்கான காரணம் இன்னும் அறியப்படவில்லை. இது மாதிரி மிகச்சிறிய அளவில் ஒத்ததன்மை இல்லாமல் போனதே எதிர்காலப் பிரபஞ்சத்தின் பரிணாம வளர்ச்சிக்கு மிக மிக முக்கியமான காரணமாக அமைந்தது.

ஒவ்வொரு மஹாகும்பம் (பில்லியன்) சித்துவிற்கும் ஒரு மஹாகும்பம் (பில்லியன்) + ஒரு அசித்துத் துகள்கள் பிறக்க தொடங்கியது. இப்படி இருந்த அகிலமானது தொடர்ந்து குளிர்ச்சி அடைந்தபோது மந்த-மின்விசைகள் இரண்டாகப் பிரிந்து மின்காந்த விசையாகவும், மந்த அணுகரு விசையாகவும் ஆகி நாம் இன்று நன்கு அறிந்த நான்கு வேறுபட்ட விசைகள் முழுமை அடைந்தது. இந்நேரத்திலே நுண்ஒளியின் (Photon) ஆற்றல் குறையத் தொடங்கி சித்து மற்றும் அசித்து என்ற இரட்டைத் துகள்கள் அதனிடத்தில் இருந்து தோன்றுவது நின்றுவிட்டது. கொஞ்சநஞ்சம் ஒட்டி இருந்த இவ்விரட்டைத் துகள்களும் துரிதமாகவே நிர்மூலமாகியது.இதனால் பிரபஞ்சத்தில் ஒவ்வொரு பில்லியன் போட்டான்களுக்கும் ஒரு சாதாரண அசித்துவின் (matter) தனித் துகள் மட்டும் இருந்து சித்து (Antimatter) என்பதே இல்லாமல் போனது.

அசித்துவிற்கும் சித்துவிற்கும் இடையே ஆன ஒத்ததன்மை அற்ற நிலை ஏற்படாமல் இருந்து இருந்தால் இன்று விரிந்துகொண்டே இருக்கும் பிரபஞ்சம் ஆனது ஒளியால் தொகுக்கப்பட்ட, நம் அறிவுக்கு எட்டாத ஏதோ ஒன்றாக இருந்திருக்கும். அப்போது வான்-இயற்பியலாளர்கள் தேவைப்பட்டிருக்க மாட்டார்கள்.

இவ்வாறு சித்து இல்லாமல் போன மூன்று விநாடிகளில் நிர்மூலமானவற்றில் இருந்த கழிவான ப்ரோடான்களும் நியூட்ரான்களும் சேர்ந்து எளிமையான அணுகருவாக உருவெடுத்தது. இந்த நேரத்திலே, இருந்த நுண்ஒளிகளை இங்கும் அங்கும் சிதற செய்துகொண்டிருந்த எலெக்ட்ரான்களானது உருவான பருப்பொருள் மற்றும் ஆற்றலின் கூட்டுக் கலவையாக இருந்த ஒளி ஊடுருவ முடியாத அணுக்கருக்களின் குழம்பை அடைந்தது. இங்கே நாம் ஒன்றை நினைவில் கொள்ள வேண்டும். அதாவது இது நடந்த சமயத்தில் பிரபஞ்சத்தின் வெப்பம் குறைந்து கொண்டே வந்ததையும் அவ்வாறு குறைந்த வெப்பம் குழம்பாக அலைந்து கொண்டிருந்த அணுக்கருக்களிடம் எலெக்ட்ரான்களைக் கொண்டுசென்று சுற்றச் செய்ய, பளுவற்ற ஹைட்ரஜன், ஹீலியம் மற்றும் லித்தியம் ஆகிய முன்றின் முழுஅணுக்கள் முழுமை பெற்றதையும்.

இப்போது பிரபஞ்சத்தில் முதன்முறையாக, தளதளவென கண்ணுக்குப் புலப்படும் ஒளி தெரிந்தது. இந்த அதி சுதந்திர நுண்ஒளி ஆனது இன்று நாம் பரமாகாச (Cosmic) நுண்அலைகளின் பின்னணியில் காணலாம். முதல் 100 கோடி ஆண்டுகளில் அகிலம் தொடர்ந்து விரிவாகி இன்னும் கொஞ்சம் வெப்பம் தணிய, பருப்பொருட்கள், ஈர்ப்பு விசையினாலே பெரும்திரளாகக் குவிந்து இன்று நாம் அண்டங்கள் (Galaxies) என்று சொல்லும் நிலையை அடைந்தது. இப்படி நூற்றுக்கும் அதிகமான மகாகும்ப (பில்லியன்) அண்டங்கள் உருவாகி அதில் ஒவ்வொன்றிலும் பல மகாகும்ப எண்ணிகையில் ஆன நட்சத்திரங்களைக் கொண்டிருந்தது. இந்நட்சத்திரங்களின் உள்ளகத்தில் வெப்பம்சார்ந்த அணுப்பினைவுகள் நடந்துகொண்டு இருந்தது. நம் சூரியனைக் காட்டிலும் 10 மடங்கு அதிகமான அடர்த்தியும் பருமையும் கொண்டிருந்த இந்த நட்சத்திரங்களில் போதுமான அழுத்தமும் வெப்பமும் அதன் உள்ளகத்தில் (Core) உருவாகி அந்த நட்சத்திரங்களில் அதிகமாக இருந்த ஹைட்ரசனைக் காட்டிலும் பளு நிறைந்த 12 வேறு தனிமங்களைத் தயாரித்தது. இந்த 12 வேறுபட்ட தனிமங்களே கிரகங்களையும் அதன்மேல் உயிரினத்தையும் இயற்ற வழிவகுத்தது. இந்தத் தனிமங்கள் வரவிருக்கும் எல்லாத் தொல்லைகளுக்கும் காரணமாக இருந்தது. இவைகள் அந்த நட்சத்திரங்களுக்கு உள்ளேயே இருந்திருந்தால் இன்று எனக்கும் இதை எழுதவேண்டிய நிலை ஏற்பட்டு இருக்காது. நீங்களும் இதைப் படித்து, தலை கிறுக்குப்பிடிக்க வேண்டிய அவசியமும் இல்லாமல் போய் இருக்கும்.

supernovaஆனால் நம் துரதிர்ஷ்டம் இந்த மாபெரும் நட்சத்திரங்கள் பயங்கரமாக வெடித்து அதன் வேதியியலாக செறிவூட்டப்பட்ட ஆண்மையை (தனிமங்களை) அண்டமெலாம் சிந்தச் (சிதறச்) செய்தது. இப்படிச் செறிவூட்டப்பட்டு சிந்தியவற்றில் இருந்து அவ்வளவாக கௌரவிக்கபடாத ஒரு நட்சத்திரம் (நம் சூரியன்) கத்தி உடைய மனிதனின் கை போன்று அமைப்புடைய விண்மீன் கூட்டத்தின் ஒரு பகுதியில், பால்வெளி என்ற அண்டத்தின் ஒரு மினுமினுக்கும் வைரமாக, பேரண்டத்தின் ஒரு மூலையில் (கன்னி என்று அழைக்கபடுகிற பிரபஞ்சத்தின் மேம்பட்ட நட்சத்திரக் கூட்டத்தின் புறஎல்லையில்) மின்னியது.

எந்த வாயுக்களின் மேகத்தில் இருந்து நம் சூரியன் பிறந்ததோ அதிலேயே 9 கிரகங்களும் ஆயிரகணக்கான வால் நட்சத்திரங்களும் கோடிக்கணக்கான விண்கற்களையும் பெற்றெடுப்பதற்கான கடினமான தனிமங்களும் சூல் கொண்டு இருந்தது. இந்த நட்சத்திர முறை உருவான சமயத்தில் குறிப்பிடத் தக்க அளவிலான பருப்பொருட்கள் வெகுவாக சுருக்கப்பட்டு முதன்மை வாயுக்களின் மேகத்தில் இருந்து- அதாவது உருவான சூரியனைச் சுற்றிக்கொண்டிருந்த பளு மிகுந்த மேகத்தை விட்டு வெளியே வீசி எறியப்பட்டது. இது போன்று எறியப்பட்டவைகள், சூரியன் உருவாகி மீதம் இருந்த கழிவுகளே எனக் கொள்ளலாம். இந்தக் கழிவுகள் அதிவேகமான வால்நட்சத்திரங்களாகவும் விண்கற்களாகவும் பல நூறு லட்சம் ஆண்டுகள் வானில் ஒன்றுடன் ஒன்று மிதமிஞ்சிய வேகத்தில் மோத, உருகிய நிலையில் ஆன பாறைக் கோளங்கள் உருவாகி கிரகங்களின் அடிப்படைக் கட்டுமான வேலைகள் ஜரூராகத் தயாரானது. இந்தக் கழிவுப் பொருள்களின் அளவு குறையக் குறைய, கிரகங்களின் மீது இவைகள் மோதுதலும் குறைய ஆரம்பிக்க, கிரகங்களின் சூடும் குறையத் தொடங்கியது.

sun-and-earthபூமி என்று நாம் குறிப்பிடும் ஒன்று; அதன் கடலானது நீர்த் தன்மையில் இருக்கும் வண்ணமான சூரிய மண்டலத்தின் சரியான பகுதியில் மேற்சொன்ன நிகழ்வின் முடிவில் அமையப்பெற்று இருந்தது. இந்த பூமி சூரியனுக்கு இன்னும் கொஞ்சம் அருகில் போயிருந்தால் இந்த நீர்த் தன்மை கடலானது ஆவியாகி வறண்ட பாலைக்கிரகம் எனப் பெயர் பெற்று இருக்கும். அதுபோல் இல்லாமல் பூமி இப்போது இருக்கும் இடத்தைவிட்டு இன்னும் சற்று பின்னால் அமைய நேர்ந்து இருந்தால் அதில் இருக்கும் கடல் உறைந்துபோய் பனிக்கிரகம் ஆகி இருக்கும். இதில் எது நடந்து இருந்தாலும் நாம் இன்று அறிந்து இருக்கிற உயிரினங்கள் உருவாகி இருக்காது. இந்த நீர்க் கடலினில் இருந்த செழிப்பான வேதியியலால் நாம் இது வரை அறிந்து கொள்ள முடியாத நுட்பத்தின் விளைவால் எளிமையான மற்றும் பிராண வாயு தேவைப்படாத பாக்டீரியாக்கள் கிளம்பி, அன்று பூமியின் முக்கிய அல்லது மட்டுமே இருந்த கரியமில வாயு (கார்பன் டை ஆக்சைடு) சுற்றுப்புறத்தை போதுமான அளவுக்குத் தேவையான பிராண வாயு (ஆக்ஸிஜன்) கொண்ட சூழ்நிலைக்கு மாற்றியது. இதனால் பிராண வாயு தேவைப்படும் ஜீவராசிகள் தோன்றி கடலையும் மண்ணையும் ஆதிக்கம் செய்ய ஆரம்பித்தன. இதே சாதாரணமாக இரட்டை அணுக்களாகக் (O2) காணப்படும் ஆக்ஸிஜன் ஆனது முன்றாகச் (O3) சேர்ந்து ஓசோன் எனப் பெயர்பெற்று பூமியின் மேல் வளிமண்டலத்தில் குடிகொண்டு நம்மை, சூரியனில் இருந்து வரும் பூமியின் மூலக்கூறுகளுக்கு விரோதமான புற ஊதாக் கதிர்களில் இருந்து காத்தும் வருகிறது. பூமியில் உள்ள விதவிதமான உயிரினங்களும் நாம் இந்தப் பிரபஞ்சத்தில் வேறெங்கேனும் இருக்கலாம் என்று நினைத்துகொண்டிருக்கும் உயிரினங்களும் பரமாகாசத்தில் மிகுதியாக உள்ள கார்பனுக்கும் அதனில் இருந்து உருவான எண்ணில் அடங்கா எளிய மற்றும் சிக்கலான மூலக்கூறுகளுக்கும் நன்றிக்கடன் பட்டவைகளாக உள்ளன.

நிறைய விதமான கார்பன் அடிப்படையிலான மூலக்கூறுகள் இருக்கும் போது எப்படி நீங்கள் மற்ற ஒட்டுமொத்த மூலக்கூறுகளை விவாதிக்கப் போகிறீர்கள்?

ஆனால் வாழ்கை நொறுங்கிவிடக்கூடியது. வெகுமுன்னர் விண்கற்கள் பூமியை விட்டு விட்டு தாக்கி, அதன் சூழ்நிலை அமைப்பை சேதாரம் செய்தது அல்லது மாற்றி அமைத்தது. இந்த விண்கற்கள், நாம் சற்று முன்னம் கூறியதுபோல சூரியனும் மற்ற கிரகங்களும் உருவாகி மீதம் இருந்த வஸ்துக்கள். வெறும் 65 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னால் (பூமியின் இதுவரை வாழ்நாள் காலத்தில் 2 சதவிகிதத்துக்கும் குறைவு அது) ஒரு 10000 கோடி டன் எடை கொண்ட பெரு விண்கல் ஒன்று Yucatan Peninsula-வில் விழுந்தது.அதன் காரணமாக அன்று பூமியில் இருந்த 90 சதவிகித விலங்குகளும் தாவரங்களும் அழிந்தது. அதில் அழிந்தவை தான்  நிலவாழ் விலங்குகளாக இருந்த டினோசர்களும். இப்படி நேர்ந்த சூழ்நிலையியல் துன்பத்தால் டினோசர்களின் இடத்தை அன்று தப்பித்த பாலூட்டிகள் எடுத்துக்கொள்ள வழி பிறந்தது. இந்தப் பாலூட்டிகளில் ஒரு கிளையாக பெரிய மூளையுடன் ஒன்று இருந்தது. அது கூட்டம் கூட்டமாக வாழும் விலங்கினமாக இருந்து, ஹோமோ சாபின்ஸ் என்கிற ஒரு வகை மனித இனமாக உருவெடுத்து, அது அறிவு என்ற ஒன்றினை பெருக்கி அறிவியல் முறைகளையும் கருவிகளையும் கண்டுபிடித்து, வான் இயற்பியலையும் கண்டுபிடித்து, பிரபஞ்சத்தின் ஆரம்பத்தையும் அதன் பரிணாம வளர்ச்சியையும் ஊகித்து உணரத் தொடங்கியது.

ஆம், பிரபஞ்சத்திற்குத் தொடக்கம் உண்டு! ஆம், பிரபஞ்சம் தொடர்ந்து பரிணாம வளர்ச்சி அடைகிறது! ஆம், நம் ஒவ்வொருவருடைய உடம்பின் அணுக்களையும் பிரபஞ்சத்தின் தொடக்கமான பெருவெடிப்பின் உள்ளேயும், மாபெரும் நட்சத்திரங்களின் உள்ளக அதிவெப்ப அணுக்கரு உலைகளிலும் துப்பறியலாம்! நாம் இந்தப் பிரபஞ்சத்தில் இருக்கிறோம் என்பது மட்டும் உண்மை இல்லை, அதன் ஒரு பகுதியாகவும் இருக்கிறோம் என்பதே அதி உண்மை. நாம் பிரபஞ்சத்தில் இருந்து பிறந்தோம். இன்னும் நீங்கள் சொல்லலாம், பிரபஞ்சம் தன்னை வெளிப்படுத்த நமக்கு அதிகாரமும் ஆற்றலும் தந்துள்ளது என்பதையும்; நாம் இப்போதே தொடங்கி இருக்கிறோம், எல்லை இல்லா பயணத்தை என்பதையும்!

neil-de-grasse-tysonஅமெரிக்காவின் நியூயார்க் நகரில் அக்டோபர் 5, 1958-ல் பிறந்த நெய்ல் டிகிரீஸ் டைசன் (Neil deGrasse Tyson) வானியற்பியல் துறையைச் சேர்ந்தவர். The Pluto Files: The Rise and Fall of America’s Favorite Planet உள்பட புகழ்பெற்ற பல புத்தகங்களையும் பத்திரிகைகளுக்கு சிறப்பான பல கட்டுரைகளும் எழுதிவருபவர். சிறுவயதிலேயே சிறந்த அறிவியலாளராக ஆசிரியர்களால் இனம்காணப்பட்ட இவர் படித்துவாங்கிய பட்டங்களைத் தவிர ஏராளமான சிறப்பு விருதுகளை பல பல்கலைக்கழகங்களிடம் பெற்றவர்; NASA Advisory Council உறுப்பினர்; 1996-லிருந்து Hayden Planetarium இயக்குநர்; மற்றும் PBS, Planetary Society-லும் பணியாற்றுபவர்; ஆப்ரிக்க-அமெரிக்க அறிவியல் ஆராய்ச்சியாளர்களில் முதன்மையான ஐம்பதுபேரில் ஒருவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்….

9 Replies to “பிரபஞ்சம்: நெய்ல் டிகிரீஸ் டைசனின் பார்வையில்”

  1. ” இந்த பூமி சூரியனுக்கு இன்னும் கொஞ்சம் அருகில் போயிருந்தால் இந்த நீர்த் தன்மை கடலானது ஆவியாகி வறண்ட பாலைக்கிரகம் எனப் பெயர் பெற்று இருக்கும். அதுபோல் இல்லாமல் பூமி இப்போது இருக்கும் இடத்தைவிட்டு இன்னும் சற்று பின்னால் அமைய நேர்ந்து இருந்தால் அதில் இருக்கும் கடல் உறைந்துபோய் பனிக்கிரகம் ஆகி இருக்கும்.இதில் எது நடந்து இருந்தாலும் நாம் இன்று அறிந்து இருக்கிற உயிரினங்கள் உருவாகி இருக்காது…..”

    இன்னும் சற்று விளக்கமாகக் கூறுவதென்றால், சூரியனுக்கு 5 சதவிகிதம் அருகாமையிலோ, அல்லது 15 சதவிகிதம் தொலைவிலோ பூமி இருந்திருந்தால் அப்படி நிகழ்ந்திருக்கும். இது மிகவும் குறுகிய தொலைவு என்பதை சுக்கிரனை வைத்துக் கொண்டு நாம் கணிக்கலாம். நம்மைவிட சுக்கிரனுக்கு 2 நிமிடங்கள் முன்புதான் சூரிய ஒளி வந்தடைகிறது. பிரபஞ்சத் தோற்றக் காலத்தில் சுக்கிரன் பூமியைவிட சற்றே உஷ்ணமாய் இருந்தது; அங்கு கடல்களும் இருந்திருக்கலாம். அந்தக் கூடுதல் வெப்பத்தினால் கடல்களின் நீர் வற்றி, ஹைட்ரஜன் அணுக்களும் வெறுவெளியில் வெளியேறியது. அதனால் மீந்த ஆக்ஸிஜன் அணுக்கள் கார்பனுடன் கலந்து கார்பன்-டை-ஆக்சைடாகி சுக்கிரனின் வெப்பமோ ஈயமும் உருகும் அளவு 470* C ஆகி, காற்றழுத்தமோ பூமியைவிட 90 மடங்கு கூடுதலாகியது. இப்பேர்ப்பட்ட சூழ்நிலையில் மனித குலம் தழைத்திருக்க முடியாது. ஆக நாம் இந்த 2 நிமிட இடைவேளையில் தப்பிப் பிழைத்திருக்கிறோம். இதே போன்று ஐந்தாறு நிமிடம் தாமதமாகி இருந்தால் செவ்வாய் போன்ற கிருகத்தின் உறைபனியில் விரைத்துப் போயிருப்போம். இந்த விதத்தில் சகல சீவ ராசிகளும் புண்ணியம் செய்தவையே.

  2. மாயாஜாலம் மிக்க நடை. அறியும் ஆர்வத்தைத் தூண்டுகிறது.

    உருதுக் கவிதைகளை ரசிப்பது போல ரசித்தேன்.

    எனக்கு உருது புரியாது.

  3. வணக்கம்
    அற்புதமான கட்டுரை. கட்டுரை ஆசிரியருக்கும் பதிப்பித்தாருக்கும் உளமார்ந்த பாராட்டுக்கள்
    அன்புடன்
    நந்திதா

  4. அபிராமி அந்தாதியில் இருந்து ஒரு வரி …

    ” ஒன்றாய் அரும்பி பலவாய் விரிந்து இந்த உலகமெலாம் நின்றாள் ”

    அபிராமி அந்தாதி நானுறு ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்டது அபிராமி பட்டர் முழு நிலவொளியை மட்டும் காண வில்லை பிரபஞ்ச தோற்றத்தையே கண்டிருக்கிறார் .

    பிரதீப் discovery சேனல் பார்த்த திருப்தி கிடைத்தது .. நன்றி

    — பிரகதீஸ்வரன்

  5. Dear Mr. Pradeep ,

    Brilliant work!

    I really appreciate your efforts on explaining the concepts (proposed or assumed concepts) about creation.

    Ofcourse we are seekkers of truth, not blind folded. We welcome the truth.

    I only wish thst , if the articles is split in to many articles with detailed eloboration, it could have been very good.

    Even nowyou can split this article into many parts and explain detail.

    //1) தொடக்கத்தில், அதாவது ஒரு 12 அல்லது 16 பில்லியன் (மஹாகும்ப) ஆண்டுகளுக்கு முன்னால் நாம் இன்று அறிந்தும் அறியாமலும் இருக்கிற பிரபஞ்சத்தின் எல்லா இடமும் வஸ்துவும் மற்றும் எல்லா சக்தியும் ஒரு ஊசிமுனையின் ட்ரில்லியன்-ல் ஒரு பாக அளவில் அடக்கப்பட்டதாக இருந்தது. இந்தச் சமயத்தில் நாம் கற்பனை செய்ய முடியாத அளவில் அது வெப்பமுடையதாகவும் நாம் எண்ணிப் பார்க்க முடியாத இயற்கையின் ஈட்டமும் மிக்கதாகவும் இருந்தது. அப்போதுதான் அது அகிலம் ஒன்று என்பதை நிருபிப்பது போல இருந்தது. //

    On what basis this theory is said?

    You can detail this and put this as one article and then proceed further.

  6. அனைவருடைய கருத்துக்கும் நன்றி!

    பிரபஞ்சம் போன்றே அதனை பற்றி அறிவதும் சில பக்கங்களில் அடக்க முடியாமல் இருப்பது ஞாயம்தானே!

    இது திரு.நெய்ல் டிகிரீசே டைசனின் சிறு குறிப்பு மட்டுமே. என்னால் முடிந்த அளவு ஜனரஞ்சகமாக எழுத முயற்சி செய்தேன்.

    திரு திருச்சிகாரர் சொன்னதுபோல ஒவ்வொன்றையும் தனியாக பிரித்து எழுத முயற்சிக்கிறேன்.

    கடலில் இருப்பதால் பல நேரங்களில் நெட் கிடைப்பது கஷ்டமாக உள்ளது.

    கருத்து தெரிவித்த மற்றும் இதனை படித்த,பார்த்த அனைவருக்கும் நன்றி!

    அன்புடன்,
    பிரதீப் பெருமாள்

  7. அன்புடைய திரு பிரதீப் பெருமாள்,

    தங்கள் முயற்சி பாராட்டுக்கு உரியது

    இந்தக்கட்டுரை யில் குறிப்பிடப்பட்டுள்ள புத்தகம் கிடைக்கும் இடம் தெரிவிக்க

    வேண்டுகிறேன்.

    அன்புடன்

    வே.ஜம்புநாதன்

    .

  8. நண்பர் ஜம்புநாதன் அவர்களே,

    தங்கள் பிரபஞ்சம் குறித்தும்,மேலும் பல விஷயங்களை குறித்து புத்தகங்களை இலவசமாக பதிவிறக்கம் செய்ய http://www.scribd.com என்ற வலைத்தளத்தில் தேடலாம்.முதலில் signup செய்து கொள்ளுங்கள்.

    குறிச்சொல்களாக universe,galaxy,blackholes,hubble என்று தேட தேட மாளாத மின்புத்தகங்கள் கிடைக்கும்.எனினும் இந்த அறிவியலை பற்றி தமிழில் நிறைய புத்தகங்கள் இல்லை என்பது தமிழர்களாகிய நாம் வருத்தப்பட வேண்டிய விஷயமாக உள்ளது.

    அன்புடன்,
    பிரதீப் பெருமாள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *