அண்மைக் காலமாக பட்டிதொட்டிகளிலெல்லாம் பறக்க விடப்பட்ட, ஒலிபரப்பப்பட்ட “பிறப்பொக்கும் எல்லா வுயிர்க்கும்……” என்ற குறள் வாசகம் எல்லோரதும் போல என் கவனத்தையும் கவர்ந்தது. மற்றவர்க்கு என்ன தோன்றிற்றோ, எனக்குத் தோன்றிய சில எண்ணங்களை உங்களுடன் இங்கு பகிர்ந்து கொள்கிறேன்.
எனது கையடக்கக் குறள் பதிப்பு ஒன்றில் அதன் சரியான பொருளைத் தேடினேன். அதில் “பிறப்பால் (மனிதர்கள் மட்டுமல்ல) எல்லா உயிர்களும் ஒன்றே. செய்கின்ற தொழிலால் மட்டுமே வேறுபாடு உண்டு. இதில் உயர்வு தாழ்வு இல்லை” என்று இருந்தது. பிறக்கும் போது ‘பிறக்கிறோம்’ என்பதில் எல்லோரும் ஒன்றே. அது சரி, ஆனால் எங்கு பிறக்கிறோம், எப்படிப் பிறக்கிறோம் என்பதில் மனிதர்கள் என்ன, எந்த சல, அசல உயிர்கள் நடுவேயும் வேற்றுமை வெகுவாக உள்ளதே. இதன் காரணம் என்ன? வேறு ஏதேனும் பொருள் பொதிந்திருக்குமோ என்று யோசித்துக் கொண்டிருக்கையில், www.tamilonline.com -மின் மே மாதத் தென்றல் இதழில் அதன் ஆசிரியரான மதுரபாரதி என்பவர் எழுதிய கட்டுரை எனது எண்ணங்களுக்கு மேலும் நீரூற்றியது.
அது வழக்கறிஞர், கவிஞர், இலக்கியவாதி, சிறந்த சொற்பொழிவாளர், பாரதி கலைக்கழகத்தின் தலைவர் என்ற பன்முகம் கொண்ட கே. ரவி என்பவரின் சொற்பொழிப்புத் தொகுப்பான “சொற்களுக்குள் ஏறிக்கொள்” என்னும் நூலை விமர்சிக்கும் கட்டுரை. அந்த விமர்சனக் கட்டுரையில் அவர் குறிப்பிட்டுள்ளதை அப்படியே கீழே தருகிறேன்:
“…. ‘வள்ளுவன் எல்லாக் காலத்துக்கும் ஏற்ற கருத்துக்களைச் சொன்னவன்’, ‘வள்ளுவன் ஓர் ஆணாதிக்கவாதி’, ‘வள்ளுவன் விதியின் உயர்வைப் பேசுகிறவன்’, ‘சமநீதி சொன்னவன்’, மக்களுக்குள்ளே உயர்வு தாழ்வு பேசியவன்’ என்று தத்தம் புலப்பாட்டுக்கு ஏற்பப் பலர் பலவிதமாகப் பேசியுள்ளனர். சொல்பவர்கள் எல்லோரும் அறிஞர்கள்தாம். எல்லோருமே வாதத் திறனோடு வலுவாகக் கூறியவர்கள்தாம். இதில் உண்மை எது?
2000 ஆண்டுகள் கடந்த பின்னும் ஒரு புலவனின், நீதியறிஞனின் சொற்கள் இன்னமும் புரிகின்றன, சமுதாயத்துக்குப் பொருத்தமாக உள்ளன என்பதே இமாலய வியப்பு. அதில் ஒவ்வொரு சொல்லுமே இன்றைய சிந்தனைக்குச் சரியாகப் பொருந்தி வர வேண்டும் என்று எண்ணுவது கேட்பவனின் மடமையே தவிர, வள்ளுவனின் தவறு அல்ல. விவாதிக்க நூலாசிரியர் எடுத்துக் கொண்ட குறள்:
பிறப்பொக்கும் எல்லா வுயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான்.ரவி கூறுகிறார், ‘எப்படிப் பார்த்தாலும் பிறக்கும் போது எல்லோரும் சமமானவர்களாகவே பிறக்கின்றார்கள் என்ற கூற்று நடைமுறை மெய்மைக்கு முரணானது என்பதுடன் திருக்குறளில் உள்ள வேறு பல குறட்கருத்துக்களுக்கும் முரணானதாகவே தோன்றுகிறது’.
சரி. அப்படியானால் குறளை எப்படிச் சரியாகப் புரிந்து கொள்வது? இந்த முயற்சிக்கு வரும்போது நூலாசிரியரின் குறிப்பு ஒன்று மிகப் பொருளுள்ளதாகத் தெரிகிறது. அவர் சொல்கிறார்: ‘படிப்பவரின் அறிவு, மனப்பக்குவத்துக்கு ஏற்ப மென்மேலும் நுட்பமான, உயர்வான, சிறப்பான கருத்தை ஒவ்வொரு குறளும் தருவதாலேயே அந்த நூலை மறைநூல் என்று கொண்டாடுகிறோம். நிலைக்கு ஏற்பப் பொருளேற்றம் கொள்வது சரி. ஆனால் தம் கருத்துக்கு ஏற்ப ஓர் உரையாசிரியர் வலிந்து பொருள் திரிபு செய்வது சரியில்லை. பொருளேற்றம் சரி; பொருள் திரிபு சரியில்லை.’ எப்படி பொருள் காணலாம் என்று வரையறுத்தபின் மேலே சொல்கிறார்.
பிறப்பு ஒக்கும் எல்லா உயிர்க்கும் என்ற தொடரை, எல்லா உயிர்க்கும் பிறப்பு ஒக்கும் என்ற முற்றுப் பெற்ற வாக்கியமாகக் கொள்வதால்தான் மேற்சொன்ன சிக்கல்களும் முரண்பாடுகளும் எழுகின்றன. அந்தத் தொடரைக் குறட்பாவில் உள்ளவாறே படித்துப் பார்க்கலாமே: பிறப்பு ஒக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பு ஒவ்வா. அதாவது, பிறப்பிலே சமமாக இருப்போர்க்குக் கூட சமச் சிறப்பு கிடைப்பதில்லை. இது நடைமுறையில் சரிதானே?’
‘பிறப்பிலே சமமாகப் பிறப்போர்க்குக் கூடச் சிறப்பு வேறுபட என்ன காரணம்? செய்தொழில் வேற்றுமை என்று குறள் விடை தருகிறது.’…”.
இப்படியாக மதுபாரதி அவர்கள் நூலில் உள்ளதைக் குறிப்பிட்டுக் காட்டியுள்ளதைப் படிக்கும்போது எனக்கு என் மனதில் தோன்றியதற்கு ரவி அவர்கள் மூலம் விடை கிடைத்தது போலவும் இருந்தது; மேலும் என் சிந்தனையை தூண்டி விடுவது போலவும் இருந்தது.
பிறப்பதெல்லாம் ஒரு நாள் இறக்கவேண்டும் என்னும் நியதியைக் குறிப்பிடும் முகமாகவே, பிறப்பு எனும் சொல்லிலேயே இறப்பு எனும் சொல்லும் உள்ளடங்கியே வருகிறது என்றே கொள்ளலாம். பிறந்ததெல்லாம் சிறந்து விளங்குவதில்லை, அதன் காரணம் பிறந்த ஒன்று செய்யும் செயலில் உள்ளது என்பதோடு இக்குறள் முடிகிறது. குறளின் தொடக்கமோ பிறப்பு என்பதை மட்டுமே கொண்டிருக்கிறது. இது வரை எல்லாம் சரியே. ஆனால் செய்யப்பட்ட வினையின் பயன் என்ன ஆகிறது? இதற்கு “செய் தொழில்” என்ற குறளின் இரண்டாம் அடியில் வரும் தொடரை ஆராய்ந்தால் மேலும் விளக்கம் கிடைக்கும் என்று எனக்குப் படுகிறது. தமிழ் இலக்கணப்படி இத்தொடர் வினைத் தொகை என்ற வகையைச் சாரும் எனக் கொண்டால், அதற்கு மூன்று காலங்களையும் குறிப்பிடும் தகுதி உண்டு. “செய்த தொழில்” என்று கடந்த காலத்தையும், “செய்யப்படுகின்ற தொழில்” என்று நிகழ் காலத்தையும், “செய்யப்போகிற தொழில்” என்று வரும் காலத்தையும் குறிப்பிடும். “செய்தொழில் வேற்றுமை யான் பிறப்பு….. “ எனக் கொண்டால் பிறப்பு என்பதையே முன்பு செய்த செயலின் பயன் என்றுமாகி, பிறக்கும்போதே சீவராசிகளுக்குள்ள பேதங்களையும் இக்குறளே நன்கு விளக்குகிறது.
பேதங்கள் என்பது நாம் ஏதோ கற்பித்துப் புகுத்துவது என்றிருக்க வேண்டிய அவசியமில்லை. அது அனைத்துப் பரிணாம வளர்ச்சியிலும் தானாகவே உருவாவது. நம் உடலில் உள்ள எல்லாமே “செல்கள்”தான் என்றாலும், ஒவ்வொரு பாகத்துக்கும் ஒரு தனித் தத்துவம் உண்டு. இல்லையென்றால் இதயம், கை, கால் என்ற விதவிதமான உறுப்புகள் ஒரு உடலில் இருக்க முடியாது. இது எல்லா ஜீவராசிகளுக்கும் பொதுவானதுதான். மரத்தை எடுத்துக் கொண்டால் வேர், தண்டு, இலை, பூ, காய் என்று இருப்பது போலத்தான்; பரிணாம வளர்ச்சியில் ஒவ்வொரு உறுப்புக்கும் அதற்குரிய பங்கு உண்டு. அவை ஒன்றையொன்று சார்ந்து வளரும். ஒன்றை ஒன்று உயர்த்தியோ தாழ்த்தியோ பார்ப்பது சரியில்லை என்பது உண்மைதான். ஆனாலும் ஒவ்வொன்றின் தனித்தன்மையை உணராது இருப்பது அறிவுக்கு ஒவ்வாதது. ஜீவராசிக்குள்ள பேதங்களோ தம்தம் செயல்களால் உருவானவை. இதையும் இயற்கை நியதியையும் போட்டுக் குழப்பிக் கொள்ள வேண்டாம்.
முன்பு செய்த செயலின் தொடராய் இப்போது பிறக்கிறோம் என்றால், தற்சமயம் செய்யும் செயலால் நமது வாழ்க்கை பாதிக்கப்படுகிறது என்றும் ஆகிறது; நல் விளைவுகள் என்றால் நாம் சிறப்பு அடையலாம் என்றும் ஆகிறது. அதாவது நாம் செய்யும் கர்மத்துக்கு உண்டான பலன் வருகிறது, அதன் தொடர்ச்சியாக இப்பிறவியில் இல்லையென்றால் வரும் பிறவியிலாவது உண்டு என்றாகிறது. சிலர் இத்தொடர் நிகழ்வை நம் மன ஆறுதலுக்காக நமக்கு நாமே கற்பித்துக் கொண்டது என்று கூறுகின்றனர். அப்படி இல்லை என்கிறது சிலரின் சொந்த அனுபவங்கள். நம்புவோர் இதை மேலும் படிக்கலாம், நம்பாதோரைப் பற்றி நாம் சொல்ல என்ன இருக்கிறது?
என்னைப் பொருத்தவரை இதை நான் ஒரு நடுநிலையாளராகத்தான் கேட்டுக்கொண்டும், பார்த்துக்கொண்டும் இருந்தேன், டாக்டர் ப்ரான் வைஸ் என்பவரின் நூல்களை படிக்கும்வரை. அவர் மறுபிறவி தவிர வரப்போகும் பிறவிகளின் சாத்தியக் கூறுகளைப் பற்றியும் வெவ்வேறு நூல்களில் மருத்துவ ரீதியில் தான் எதிர்கொண்ட, ஆராய்ந்த நிகழ்வுகளைப் பற்றி எழுதியுள்ளதை நான் படிக்க நேர்ந்தது.
நேர்ந்தது என ஏன் சொல்கிறேன் என்பதற்கு முதலில் விளக்கம் கொடுக்கிறேன். ஒரு முறை தொலைக்காட்சி ஒன்றில் ஒருவரது அனுபவத்தைப் பற்றிச் சொல்லிக்கொண்டு இருந்தார்கள். மேலும் அவரது பேட்டியும் அதில் இருந்தது. அதைப் பார்த்த ஒரு மாதம் கழித்து, பேட்டி கொடுத்த அந்த அனுபவசாலியையே தெருவில் எதேச்சையாகப் பார்த்தேன். எனது மனைவிக்கு ஆர்வம் வந்து அவர்தானா என அவரையே விசாரிக்க அவரும் ஆமாம் எனச் சொல்ல, அவரிடம் மேலும் பேசிக்கொண்டிருந்தோம். அவர் தமிழ்நாட்டில் ஒருவருக்கு வளர்ப்பு மகளாக வந்ததாகவும், அந்தத் தந்தை திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் பக்தர் என்றும், அதனால் அக்கடவுளர் ஞாபகமாகத் தனக்குப் பெயர் இட்டிருப்பதாகவும் கூறியது எனக்கு ஓர் உபரிச் செய்தி.
அவரிடம் பேசும்போது அவர் தனது முந்தைய பிறவி ஞாபகம் வரும்போது சில வருத்தங்கள் வருவதாகவும் தெரிவித்தார். அதற்கு நான், நினைவுகள் வந்தாலும் அவைகளை மிகவும் பொருட்படுத்தாது, சாட்சிபோல் பார்த்துக்கொண்டிருக்கும் மன நிலையை வளர்த்துக் கொள்ள வேண்டும், அப்போது எல்லாம் சரியாகிவிடும்; இதனால்தானோ என்னவோ நம்மில் சிலரைத்தவிர எவருக்குமே இத்தகைய நினைவுகள் வராது இருப்பது ஒரு மறைமுக ஆசியே என்று சமாதானம் சொல்லிக்கொண்டு இருந்தேன். அப்படியும் மீறி சிலருக்கு அந்நினைவுகள் வந்தால் அதற்கும் காரணம் ஏதாவது இருக்கும். அதை அவரவர்களே கவனித்துக் கண்டுபிடிக்க வேண்டியிருக்கும். தங்களுக்கும் அப்படி இருக்கலாம் என்று சொல்லிவிட்டு, அன்று இரவே நாங்கள் லண்டனுக்குப் பயணம் செய்யவேண்டி இருந்தததால், அவரிடம் அப்புறம் பேசலாம் என்று சொல்லி, அன்றைய பேச்சை அவசரமாக முடித்துக்கொண்டு வீடு திரும்பி விட்டோம். அதுவரை இங்கொன்றும் அங்கொன்றுமாகக் கேட்டதும், பத்திரிகைகள், புத்தகங்கள் வாயிலாகப் படித்தறிந்ததோடு சரி, அனுபவம் பெற்ற எவரையும் சந்தித்ததில்லை என்பதால், அவரைப் பார்த்துப் பேசியது ஒரு புது அனுபவமாகத்தான் இருந்தது. நான் அவரிடம் பொதுவாகச் சொன்ன சமாதான வார்த்தைகளுக்கு லண்டனில் எனக்கு மேலும் விளக்கம் கிடைத்தது என்றால், நான் அதைப் பற்றி என்ன சொல்ல? எங்கள் திட்டப்படி லண்டனும் போய்ச் சேர்ந்தோம்.
அங்கு சென்ற ஓரிரு நாட்கள் கழிந்தபின், எங்களது இந்த எதிர்பாராத அனுபவத்தைப் பற்றிப் பேசிக்கொண்டிருக்கும் போது, அங்கிருந்த எங்களது உறவுக்காரப் பெண் ஒருவர் அதற்கு விளக்கம் கொடுத்துக் கொண்டிருந்தார். அவருக்கு எப்படி அது தெரிந்தது என்று கேட்கும்போது அவர் பெங்களூரில் தனக்கு அமெரிக்க ஆசிரியர் ஒருவரின் புத்தகம் கிடைத்ததாகச் சொல்லி, டாக்டர் ப்ரான் வைஸ் என்பவரின் புத்தகம் ஒன்றையும் கொடுத்தார். ஆர்வத்தோடு அதைப் படித்தால் பல விளக்கங்கள் கிடைத்தன. அந்த மருத்துவரோ மத சம்பந்தங்களில் மிகவும் பற்று இல்லாத கிறித்தவர், அவரது மன நோயாளியோ ஆன்மிக நாட்டம் மிகவும் இல்லாத, ஞாயிற்றுக் கிழமைகளில் மாதா கோவில் போகும் ஒரு சாதாரண கிறித்தவர். அவர்கள் இருவருக்குமே கிறித்துவ தத்துவப்படி பிறவி என்பது ஒன்றே என்பதுதான் எண்ணம்; மறுபிறவி உண்டு என நாம் சொல்லும் தத்துவங்கள் ஏதும் அவர்கள் அறியாதவர்கள். அந்த நோயாளிக்கு அடிக்கடி ஒரு மன உபாதை வரும். அதனாலேயே அவர் இந்த மருத்துவரின் உதவியை நாடியுள்ளார். மனோரீதியான சிகிச்சை நடந்து கொண்டிருக்கும்போது, அந்நோயாளி திடீரென மருத்துவரின் இளம் வயதிலேயே இறந்துபோன மகன் இறந்து போன காரணத்தையும், அவன் தற்போது இருக்கும் நிலையில் சுகமாக இருப்பதாவும் சொல்ல, மருத்துவருக்கு ஒரே ஆச்சரியம்.
அவரது பிரமிப்புக்கு பல காரணங்கள் உண்டு. ஒன்று, அவர் மகனுக்கு வந்த வியாதி மிக மிக அபூர்வமானது; அது நூற்றுக்கோடியில் ஒருவருக்கு வரலாம். இரண்டு, அந்தத் துயர சம்பவம் நடந்து பல ஆண்டுகள் ஆயிருந்தன. மூன்று, அதுவும் அவர் வேறு மாநிலத்தில் இருந்தபோது நடந்தது. நான்கு, அதைத் தனது சொந்தத் துயரமாக எடுத்துக்கொண்டு, அதைப் பற்றிப் பேசினால், தனது மனைவி மிகவும் துயறுருவாள் என்ற காரணத்திற்காக, மருத்துவ ரீதியில் மிக அபூர்வமானதான அந்த நிகழ்வு பற்றி அவர் எங்கும் அநாவசியமாகப் பேசியதும் இல்லை. அப்படியும் இந்த மன நோயாளிக்கு அந்த விவரம் சிகிச்சை அளிக்க ஏதுவாயிருந்த ஆழ்நிலை மயக்கத்தில் தெரிந்துள்ளது என்றபோது, அவர் அது பற்றி அறிய மேலும் நோயாளியை அம்மயக்க நிலையிலேயே கேள்விகள் கேட்கக் கேட்க, ஒருவர் எடுக்கும் பல பிறவிகள் பற்றி மருத்துவர் அறிகிறார்.
(தொடரும்…)
பிறப்பு ஒக்கும் என்பதற்கும் சிறப்பு எவ்வாறு ஒவ்வாது என்பதையும் எடுத்து ஆண்டிருக்கும் விதமே மிக அருமை. அது தவிர டாக்டர் பிரான் வைஸ் அவர்களின் அனுபவத்தை கேட்டபோது விஞ்ஞானம் தரும் விளக்கம் இன்னும் சிறப்பாக உள்ளது. நன்றி.
கருணாநிதி எழுதிய குறள் விளக்கம் உரை என்ற தவறான பெயரை தாங்கி உள்ளது. இது வள்ளுவருக்கே இழுக்கு.
கடவுள் வாழ்த்து முதல் எல்லாவற்றிற்குமே தவறான விளக்கங்கள். உதாரணமாக மடியின்மையில் குறள் 610 விஷ்ணுவின் வாமன அவதாரமென்பது பலருக்கு தெரியும். ஆனால் இந்த கருணாநிதி அதை மன்னவன் காலடிக்கு விளக்கம் என்று பொய் விளக்கம் அளிக்கிறார். குறள் 560 அறுதொழிலோர் என்பதற்கும் கருணாநிதி விளக்கம் சூனியமே
எம் ஆர் ராதா அளித்த கலைஞர் பட்டம் எப்படி பொருந்தும் வள்ளுவருக்கே இழுக்கென்றால்?
இவர் எழுதிய பொய் விளக்கங்களை மக்களுக்கு எடுத்துரைக்க வேண்டும்
பிறப்பொக்கும் குறள் ஜன்மனா ஜாயதே சூத்ரஹ சம்ஸ்காராத் த்விஜா உச்யதே அத்யயனாத் விப்ரஹ ப்ரம்ம ஞானாத் ப்ராம்மணஹ என்பதின் சுருக்கமே. பிறப்பால் எல்லாம் சமம். உயர்வதற்கு சம வாய்ப்பு உடையவர். காது கண் ஊனமுற்றவரை விலக்கி பெரும்பான்மையோர் ஒரே வாய்ப்புடையவர். ஆனால் அவர் அவர் செய்யும் தொழிலாலும் குணத்தாலும் உயர்வு. இதையேதான் வள்ளுவர் வேறு விதமாக குறள் 409ல் கல்லாமையில் கூறுகிறார்
கீதையில் அத்தியாயம் சுலோகம் 13ல் பகவான் இதையே கூறுகிறார்.
கருணாநிதி செய்த குறள் விளக்கத்தை மக்களுக்கு கூறி இந்த கலைஞர் வேடத்தை கலைக்க வேண்டும்
எல்லாருக்கும் ஒரு பட்டம் கொடுத்து உண்மையை மறைக்கின்றனர்
அருமையான ஒரு தலைப்பை விவாதத்திற்கு எடுத்துக்கொண்ட உங்களுக்கு முதலில் நன்றி.
இங்கு என்னுள் எழும் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள விழைகிறேன்.
திருவள்ளுவரைப் பொறுத்தவரை அவர், தமது குரல்களை வையத்து வாழ்வாங்கு வாழ்தல் எப்படி என்னும் நோக்கத்தை மட்டுமே அடிப்படையாக வைத்து ஆக்கியுள்ளார் என்பதில் சற்றும் ஐயமில்லை. இதனால்தான், அவர் கடவுள் வாழ்த்தைத் தனது திருக்குறளின் முதல் அதிகாரமாக அமைத்திருந்தாலும் இறைவழிபாடு என்னும் செயலுக்குள் தேவைக்குமேல் ஆழமாகப் புகவில்லை. அவர் கருத்துப்படி, ஒருவன் இவ்வுலக வாழ்க்கையோடு தொடர்புள்ள, அறம், பொருள் இன்பம் ஆகிய மூன்றையும் நன்குணர்ந்து அறச் செயல்களில் ஈடுபட்டு, பொருளின் இன்றியமையாமையை உணர்ந்து, ஆனால், அறவழியில் பொருளீட்டி, உலகின்பம் துய்ப்பானாகில் அவனுக்கு வீடுபேறு அடைவது இயல்பாக நிகழ்ந்துவிடும். இக்காரணத்தால்தான் அவர் வீடுபேறு என்னும் தலைப்பை தனியாக எடுத்துக்கொள்ளவே இல்லை.
இந்த அடிப்படையை ஒருபுறம் மனதில் கொண்டு தற்போது,
“பிறப்பொக்கும் எல்லா வுயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான்.”
குறளுக்கு வருவோம்.
மேற்படிகுறளின் பொருள் சரிவரப் புரிய அது அமைந்துள்ள அதிகாரத்தை நோக்குதல், அதில் உள்ள மற்ற குறள்களையும் எடுத்துக்கொண்டு அனைத்தையும் சேர்த்து நோக்கிப் பொருள் கொள்ளல் ஆகிய செயல்கள் நமக்கு உதவும்.
இக்குறள், “பெருமை” (excellence ) என்னும் அதிகாரத்தில் அமைந்துள்ளது. எனவே இவ்வதிகாரத்தில் அமைந்துள்ள அனைத்துக் குறள்களும் பெருமையின் இலக்கணத்தை எடுத்துக் கூறுவதாகவே இருக்கும்.
எடுத்துக்காட்டாக 971 , 972 , 973 , குரல்களின் பொருளை நோக்குவோம்.
971 – ஒருவனுக்கு ஒளியைத்தருவது (பெருமை சேர்ப்பது) அவனது உள்ளமேன்மையே, ஒருவனுக்கு இழிவானது உள்ளமேன்மையின்றி காலம் கழிக்கலாம் என்னும் எண்ணமே.
972 – பிறப்பு என்பதைப் பொதுவாக உடைய எல்லா உயிர்கட்கும், அவற்றின் செயல்களின் வெவ்வேறுபட்ட வகை காரமாக சிறப்பு உண்டாகாது.
973 – மேல்நிலையில் (அந்தஸ்து) இருந்தாலும், மேன்மையற்றோர் மேலோர் அல்லர்; தாழ் நிலையில் (அந்தஸ்து) இருந்தாலும் கீழ்மை அற்றோர் கீழோர் அல்லர்.
இவ்வாறு மற்ற குறள்களையும் நோக்குகையில் அவை, பெருமை என்பது குடிப் பிறப்பினாலோ, செய்யும்தொழிலாலோ, அந்தஸ்தாலோ, வருவதன்று, தனது செயல்களை செயற்கரிய முறையில் ஆற்றுவதாலும், சீரிய பண்புடைமையாலும், செருக்கற்றமையாலும், பணிவினாலும் மட்டுமே வருவது என்னும் திரண்ட கருத்து இவ்வதிகாரத்தில் உள்ள அனைத்துக் குறள்களையும் ஒருசேர நோக்குவதால் தெளிவாகிறது.
பிறப்பு என்பதில் ஒற்றுமை இருப்பினும் பிறந்த குடி, அந்தஸ்து, இடம் இவற்றில் வேற்றுமை உள்ளதே இதை விளக்க வேண்டாமா என்றால் அதனை விளக்க அவர் ஊழ் என்னும் 38 -ஆம் அதிகாரத்திலுள்ள குரல்களையே பயன்படுத்துகிறார் என்பது தெளிவாகிறது.
எனவே இங்கு வினைப்பயன், அதன் காரணமாக பிறவியில்/ செய்தொழில் வேற்றுமை என அவர் ஆழமாகப் புகவில்லை.
மன்னிக்கவும் :
கீதையில் நாலாம் அத்தியாயம் சுலோகம் 13ல் பகவான் இதையே கூறுகிறார்.
என்று இருக்க வேண்டும்
திரு ராமன் அவர்களீன் கட்டுரையைத் தொடர்ந்து படித்து வருகிறேன். மிக நன்று. அதுவும் சுவாரஸ்யமான இடத்தில் தொடரும் போட்டு விட்டாரே! ம் ம் …
முற்பிறவி-மறுபிறவி பற்றி இந்த வலைப்பூவில் கூட பல சுவையான தகவல்கள் உள்ளன.
https://ramanans.wordpress.com/category/%E0%AE%85%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D%C2%A9/
எல்லோருக்கும் மிக்க நன்றி. திரு. ஸ்ரீனிவாச ராகவன் குறிப்பிட்டுள்ளதுபோல ஒரு குறளின் தகைமையை அதன் அதிகாரத்தோடு காண்பதே நல்லது. ஆமாம், வீடு பற்றிய பகுதி திருக்குறளில் இல்லை. அதைச் சொல்லாமல் சொல்வதால்தான் அது மறை ஆகிறதோ?
நான் செவி வழி கேட்ட ஔவையின் பாடலை, எனக்கு ஞாபகம் உள்ளவரை இங்கு பகிர்ந்து கொள்கிறேன். (திருத்தம் செய்வோர் செய்யலாம்). இரண்டுக்கும் குறைவான அடிகளில் உள்ள பல யதார்த்தமான விஷயங்களைப் பற்றி ஒரு புலவர் குறளைப் பற்றிப் பேச, ஔவை 1330 பாடல்கள் இருந்தும் வீடு பற்றிப் பேசாததைச் சொல்லி, நாலே அடிகளில் அனைத்தையும் சொல்வதாக இயற்றிய பாடலின் சாராம்சம்:
ஈதல் அறம், இறைவனுக்கு ஈட்டல் பொருள்,
காதல் இருவர் கருத்தொருமித்து கலந்து
பட்டதே இன்பம், அரனை நினைந்து – இம்
மூன்றும் விட்டதே வீடு.
நிற்க. “சில சொற்களுக்குள் ஏறிக் கொண்ட”வர்களைப் பற்றிய விளக்கத்தில், நானோ வெகு சில சொற்களைக் கொண்டு நான் கண்டவைகளைச் சொல்லிக் கொண்டிருக்கிறேன்.