உழவாரப் பணியில் ‘சிவ கணங்கள்’: சிதம்பரம் வழிகாட்டுகிறது!

chidambaram_chitrambalamபாரதத்தில் கோயில்கள் சமுதாயத்தைப் பிணைக்கும் சக்தி கேந்திரங்களாக விளங்குகின்றன. ஒவ்வொரு கோயிலுக்கும் ஒவ்வொரு முக்கியத்துவம் இருக்கிறது. தங்கக்கோயில் என்றவுடன் நமக்கு நினைவுக்கு வருவது, அமிர்தசரசில் உள்ள சீக்கியர்களின் ‘ஹரிமந்தர் சாஹிப்’ எனப்படும் பொற்கோயில் தான். அது போலவே, தமிழகத்தின் பொற்கோயில் என்றால், பொற்கூரையால் வேயப்பட்ட அம்பலம் கொண்ட, சிதம்பரம் நடராஜர் கோயில் தான் அனைவர் நினைவுக்கும் வரும்.

நாற்பது ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள மாபெரும் நடராஜர் கோயிலில், ஒருகாலைத் தூக்கி நடமிடும் உலகப்புகழ் பெற்ற மூர்த்தத்துடன் பக்தர்களுக்கு அருளாசி வழங்குகிறார் ஈசன். அருகிலேயே கோவிந்தராஜப் பெருமாளாக விஷ்ணுவும் அருள்பாலிக்கிறார். சைவ- வைணவ ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக இக்கோயில் விளங்கி வருகிறது.

பஞ்சபூதத் தலங்களில், ஆகாயமே இங்கு இறைவனாக வழிபடப்படுகிறது. ‘சிதம்பர ரகசியம்’ என்று இதனை பக்தர்கள் குறிப்பிடுகின்றனர். இக்கோயிலில் பரம்பரை பரம்பரையாக வழிபாட்டுப்பணிகளை நடத்தி வருபவர்கள் தீட்சிதர்கள். ‘தில்லை வாழ் அந்தணர் தம் அடியார்க்கும் அடியேன்’ என்பது சுந்தரர் பாடல்.

இமயத்திலிருந்து சிவனே தலைமையேற்று, மூவாயிரம் தீட்சிதர்களுடன் சிதம்பரம் வந்ததாக ஐதீகம். எனவே தான் தீட்சிதர்கள் ‘தில்லை மூவாயிரவர்’ என்று அழைக்கப்படுகின்றனர். இவர்கள் வேதம் மட்டுமல்லாது தேவாரப் பாடல்களும் திருவாசகமும் பாடி சிவனுக்கு வழிபாடு நடத்தி வருகின்றனர்.

அண்மைக்காலம் வரை தீட்சிதர்களின் கட்டுப்பாட்டில் சிதம்பரம் நடராஜர் கோயில் இருந்தது. கோயிலில் அரசின் கட்டுப்பாட்டைக் கொண்டுவரும் வகையில், சென்ற ஆண்டு இக்கோயிலை அறநிலையத்துறை கையகப்படுத்தி இருக்கிறது. இதை எதிர்த்து பக்தர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

கோயிலுக்கு சம்பந்தமில்லாத நாத்திகர்களால் சமீபகாலமாக நடராஜர் கோயிலில் தேவையற்ற பிரச்னைகள் ஏற்படுத்தப்படுகின்றன. கோயில் வழிபாட்டில் சமஸ்கிருதம் மட்டுமே பயன்படுத்தப்படுவதாகவும், தமிழ் புறக்கணிக்கப்படுவதாகவும் விஷமப் பிரசாரம் செய்து, குழப்பம் ஏற்படுத்துகின்றனர். இதற்கு தமிழக அரசும் துணைபோகிறது.

உண்மையில், தேவார மூவரின் (அப்பர், சுந்தரர், சம்பந்தர்) தேவாரப்பாக்கள் தில்லை அம்பலத்தில் பாடப்படுவது பாரம்பரியமாகக் கடைபிடிக்கப்படுவதாகும். தென்மொழி தமிழும் வடமொழி சமஸ்கிருதமும் சிவனின் உடுக்கை ஒலியில், இருபுறமும் தோன்றியவை என்பது தான் சைவர்களின் நம்பிக்கை. தேவாரப் பாடல்கள், சிவனை ‘வேத முதல்வன்’ என்றே அர்ச்சிக்கின்றன. அத்தகைய வேத மந்திரங்களை சிவனின் கருவறையில் அர்ச்சிக்கக் கூடாது என்று, கோயிலுக்கு சம்பந்தமில்லாத நாத்திகர்களும் பகுத்தறிவாளர்களும் கூறுவது மடமை.

இத்தகைய பிரசாரத்தால், சிவ பக்தர்கள் மனம் புண்பட்டுள்ளது. அரசும் நாத்திகர்களுக்கு ஆதரவாகச் செயல்படுவதால், ஆன்மிக நேயர்கள் திகைப்பில் ஆழ்ந்தனர். தீட்சிதர்களின் வழிபாட்டு உரிமையைப் பறிக்க பல திசைகளில் நடத்தப்படும் முயற்சிகள், கோயிலின் பாரம்பரிய நடைமுறைகளில் தலையிடுவதாகும் என்று பக்தர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில்தான், திருக்கோயில் பக்தர் பேரவை, சிதம்பரம் கோயிலைக் காக்க களம் புகுந்தது.

nataraja_shadowமொழியின் பெயராலும் ஜாதியின் பெயராலும் மக்களை பிளக்கும் அரசியலை வெல்ல, பக்தர்களை ஆலயப் பாதுகாப்புக் குழு சிவபக்தியின் அடிப்படையில் ஒன்றுதிரட்டியது. அதன் அமைப்புச் செயலாளர் திரு. சுதாகர், பக்தர்களை ஆக்கப்பூர்வமான வழியில் செயல்படுத்தினார். சமூகத்தின் பலதரப்பினரையும் நகரின் பிரமுகர்களையும் சந்தித்து விழிப்புணர்வூட்டிய திருக்கோயில் பக்தர் பேரவை, ‘உழவாரப்பணி’ வாயிலாக கோயிலைக் காக்கும் பணியில் மக்களை ஈடுபடுத்த திட்டமிட்டது. உழவாரப் பணிக்காக தமிழகம் எங்கும் யாத்திரை செய்து கோயில்களை புனருத்தாரணம் செய்த அப்பரின் அடியொற்றி, இப்பணியில் பக்தர் பேரவை முனைந்தது.

பேரவையின் அழைப்புக்கு சிதம்பரம் மக்கள் செவி சாய்த்தனர். இளைஞர்கள், பெண்கள், அண்ணாமலை பல்கலைக்கழக மாணவர்கள் உள்பட பலநூறு பேர் கோயில் காக்கும் தெய்வீகப் பணிக்காக இணைந்தனர். உழவாரப்பணிக்கு நிச்சயித்திருந்த நாளில், அதிகாலை ஏழு மணியளவில், சிதம்பரம் கோயில், பக்தர்களால் நிறைந்தது.

பக்தர்கள் மத்தியில் பேசிய, நகர் ஆர்.எஸ்.எஸ். செயலாளர் சபேசன், ஆண்ட சராசரத்தை விளக்கும் நடராஜரின் ஆனந்தத் தாண்டவத்தை விளக்கினார். அணுக்கருவின் உள்ளமைப்பை வெளிப்படுத்துவதாக நடராஜரின் ஆனந்தத் தாண்டவம் இருப்பதை அவர் விளக்கினார்.

அடுத்துப் பேசிய திருக்கோயில் பாதுகாப்புக் குழுவின் பொருளாளர் பட்டு என்கிற ரங்கநாதன், இலங்கைத் தமிழறிஞர் ஆனந்த குமாரசாமி, சிதம்பரம் நடராஜர் குறித்து உலகப் புகழ் பெற்ற நூல்களை எழுதி இருப்பதை நினைவு கூர்ந்தார். அழகு, ஆற்றல், கருணை, சீர்மை ஆகியவற்றை சிவனின் ஆனந்தத் தாண்டவம் காட்டுகிறது என்று ஆனந்த குமாரசாமி கூறுவதாக அவர் குறிப்பிட்டார். அதன் பிறகு கோயிலை தூய்மைப்படுத்தும் பணி துவங்கியது.

சிதம்பரம் கோயில் மிக பிரமாண்டமானது. இதன் பிரகாரங்கள் நீளமானவை. ஐந்து பிரகாரங்களும், சிறியதும் பெரியதுமாக நூற்றுக் கணக்கான கோயில்களும் அடங்கியது சிதம்பரம் நடராஜர் கோயில். இக்கோயிலை சுத்தப்படுத்த ‘சிவகணங்கள்’ களம் இறங்கிவிட்டன. எங்கும் பக்திப் பரவசம். ‘தென்னாடுடைய சிவன போற்றி! என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி’ என்ற முழக்கத்துடன், துடைப்பம், தண்ணீர் வாளிகள், மம்மட்டி, அரிவாள் உள்ளிட்டவற்றுடன் பக்தர்கள் தூய்மைப் பணியில் இறங்கினார்கள்.

கோயிலில் சேர்ந்திருந்த குப்பைகளை அகற்றுவது மட்டும் அவர்களது நோக்கமல்ல; கோயிலை மறைமுகமாகப் பீடித்துள்ள அரசியல் சாத்தான்களை விரட்டவும் அவர்கள் ஆவேசத்துடன் துடைப்பங்களை ஏந்தினர். மதியம் வரை தொடர்ந்தது தூய்மைப்பணி. மதியம் தீட்சிதர்கள், அவர்களுக்கு அன்புடன் அன்னமிட்டனர். ஜாதி வேறுபாடின்றி அனைவரும் ஒரே வரிசையில் அமர்ந்து தீட்சிதர்கள் வழங்கிய உணவை உண்டனர். சிவபக்தி அவர்களை ஒருங்கிணைத்துவிட்டது. உணவுக்குப் பிறகு மீண்டும் தொடர்ந்தது உழவாரப்பணி.

கோயிலில் கிடந்த குப்பைகள் அகற்றப்பட்டன. தேவையற்ற கற்களும், மதில்களில் முளைத்திருந்த செடிகளும் அகற்றப்பட்டன. பிரகாரங்கள் தண்ணீரால் கழுவிவிடப்பட்டன. தினமும் பல்லாயிரக் கணக்கானோர் வந்து செல்லும் நடராஜர் கோயில் தூய்மையானது. அன்பர்களின் திருப்பணி கண்ட, கோயிலுக்கு வந்த பக்தர்கள் பலரும் கூட, தாங்களாகவே முன்வந்து இப்பணியில் சிறிதுநேரம் இணைந்து பணியாற்றி, சிவனின் அருளுக்கு பாத்திரமாயினர்.

chidambaram_temple_complex

மாலைநேரம், கோயில் வெளிப்புறத்தில் மலை மலையாக குப்பைகள் குவிந்திருந்தன. சிதம்பரம் நகராட்சி தலைவர் அனுப்பிய டிராக்டர்கள் அந்தக் குப்பைகளை கொண்டு சென்றன. சிதம்பரம் கோயில் தூய்மையானது. இப்போது புது மெருகுடன் கோயில் காட்சி அளிக்கிறது; சிதம்பரம் மக்கள் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.

திருக்கோயில் பக்தர் பேரவையின் வழிகாட்டுதலால், சிதம்பரம் கோயில் இப்போது தூய்மையாகிவிட்டது. கோயிலைச் சூழ்ந்துள்ள சுயநல சதிகாரர்களுக்கு இது ஆக்கப்பூர்வமான எச்சரிக்கையாக அமைந்தது.

திருநாளைப்போவார்க்கு அருளிய ஈசன், தில்லைவாழ் அந்தணர்களுக்கு நேரும் நெருக்கடிகளையும் நீக்குவான். அதற்கு பக்தர்கள் வாயிலாகவே ஆக்கப்பூர்வமான வழிகாட்டுவான்- என்றபடி ‘சிவகணங்கள்’ சிறப்பு வழிபாட்டுடன் வீடு திரும்பினர். எங்கும் ‘நமச்சிவாய’ கோஷம் எதிரொலித்தது.

v_shanmuganathanவி.சண்முகநாதன் தமிழகத்தில் ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கத்தின் மாநில அமைப்பாளராகவும், தென்பாரத பிரசாரச் செயலாளராகவும் இருந்தவர்; தற்போது புதுடில்லியில், பாரதீய ஜனதா – நாடாளுமன்றக் கட்சியின் இணை செயலாளராக பணியாற்றி வருகிறார். தமிழகத்தில் ‘திருக்கோயில் பக்தர் பேரவை’ என்ற அமைப்பை நிறுவியவரும் இவரே.

நன்றி: விஜயபாரதம் (10.09.2010) இதழ்

13 Replies to “உழவாரப் பணியில் ‘சிவ கணங்கள்’: சிதம்பரம் வழிகாட்டுகிறது!”

  1. மிக சிறந்த ஆன்மீக பணி. நினைத்து பார்க்கும் பொது நெஞ்சம் நெகிழ்கின்றது. அவர்களின் செயல்கள் சிறக்கட்டும்.
    நன்றியுடன்
    சோமசுந்தரம்

  2. Pingback: Indli.com
  3. மிகச்சிறந்த பணி! ஏற்கனவே கோவில்பட்டி, மற்றும் பல ஊர்களிலும் உள்ள உழவாரப் பணித்தொண்டர்கள் ஆலயங்களில் உழவாரப் பணிகளைச் செய்து வருகிறார்கள்! அவர்களுக்கும் உற்சாகம் ஊட்டுவதாகவும் இந்த நிகழ்வு அமைந்துள்ளது! நன்றி! தமிழகத்தின் ஆலயங்கள் தூய்மையாக பராமரிக்கப் பட வேண்டும்!ஆலயத்திற்கு வந்து செல்லும் பக்தர்களும் இதில் பங்கேற்றதில் இன்னும் மகிழ்ச்சி! ஒவ்வொரு ஊரின் சிறப்பும் அதன் ஆலயங்களில் அமைந்துள்ளது! நன்றி!

  4. தில்லை வாழ் அந்தணர் தம் அடியார்க்கும் அடியேன்
    திருக்கோயில் தூய்மைப்பணி அடியார்க்கும் அடியேன்.

    (“புகைப்படம், நிழற்படம் எடுத்து செய்தி செய் அடியார்க்கும் அடியேன்” -என்று அடுத்தமுறை சொல்ல வாய்ப்பு வேண்டும். இதைச் செய்யாததால்தான், ஏதோ ஹிந்து சமுதாயம் வெறும் சடங்குகளிலும் சம்பிரதாயங்களிலும், சாதீயத்திலும் ஊறியது போலவும், மனிதத்தையும், மானுட சேவையையும் கருத்தில் கொள்ளாதது போலவும் ஒரு மாயத்தோற்றத்தை அந்நிய மதத்தாரும் அரசியலாரும் உருவாக்க முடிகிறது.)

  5. எல்லாம் அவன் திருவிளையாடல்.
    நாத்திகர்களுக்கும் கால அவகாசம் தந்து அப்பவும் திருந்தாவிடில் பின்னரே தடுத்தாட்கொள்(ல்) வான் எந்தை எம்பிரான்.
    ஓம் நம சிவாய

  6. இந்த பதிவுடன் சம்மந்தம் இல்லாதது,
    யாரவது தயவு செய்து துளசியின் புராணத்தை,அதன் வழிபாட்டு தாத்பர்யத்தை விளக்கமுடியுமா?

  7. சார் அப்டியே கொஞ்சம் திருச்சி பக்கம் வாங்க ப்ளீஸ். இங்கே அன்பில் வடிவழகிய நம்பி கோவில், திருவெள்ளறை புண்டரீக பெருமாள் கோவில், போல பல கோவில்களில் இதே போல உழவார பணி செய்து தர வேண்டுகிறோம்.

  8. இறை அன்பர்கள் திரு. வி. சண்முகநாதனுக்கும், சிதம்பரம் நகர் ஆர்.எஸ்.எஸ். செயலாளர் திரு. சபேசன் மற்றும் அனைத்து தொண்டர் படையினர் அவர்களுக்கும் நெஞ்சம் நெகிழ நன்றி கலந்த வணக்கங்கள். நான் சிதம்பரத்தில் (மும்பையிலிருந்து பணி ஓய்வுக்குப் பின்) நான்கு மாத காலம் வசிக்கும் வாய்ப்பு பெற்றேன். தில்லையம்பல ஈசரையும் அன்னை சிவகாமியையும் மனம் குளிர தரிசித்த பாக்கியம் பெற்றோம். பின் என் மகன் திருமணம் ஆனவுடன், மகன், மருமகளுடன் தரிசிக்கும் பேறும் அருளிய அந்த ஆடலரசரை நினையாத நாளில்லை. புனிதமான அந்தக்கோயிலில் அப்பொழுதெல்லாம் வெளிப்பிரகாரத்தில் சிறுவர்கள் கிரிக்கட் முதலியன விளையாடுவதும், பொழுது போகாத சில போக்கிரிகள் திருக்குளத்தருகே பீடி சிகரெட் பிடித்துத் திரிவதையும், மேற்கு வீதியிலிருந்து தெற்கு வீதி வரையுள்ள தூரத்தைக் கடக்க அனைத்து தரப்பினரும் (பிற மதத்தவரும்) காலணிகளை கையிலே தூக்கிக்கொண்டு கோயில் கோபுர வாயில் வழியாக செல்வதையும் பார்த்து வேதனையுற்றோம். ஒரு சிலரிடம் சொல்லிப் பார்த்தோம். விடிவில்லை. தற்சமயம் ஏற்பட்டிருக்கும் அதிசய மாற்றம் ஒரு விழிப்புணர்வு. இப்பணி ஒவ்வொரு ஊரிலும் செயல்படவேண்டும். எங்கள் ஊரான நாகையில் அன்னை நீலாயதாக்ஷி அம்மன் திருக்கோயிலுக்கும் இப்பணி செய்யப்படவேண்டும். இன்னுமொன்று சோல்லிக்கொள்ள ஆசைப்படுகிறேன். சில தனி நபர்வசம் இருக்கும் கோயில்கள் நீங்கலாக தமிழ் நாட்டுக் கோயில்களில் மட்டும் சுத்தம் என்பது கடைப்பிடிக்கப்படாத ஒன்று. கடவுள் சன்னிதிகளில், நவக்கிரக பீடங்கள் உள்பட, அகல் விளக்குகள் வைக்கிறேன், கற்ப்பூரம் காட்டுகிறேன் என்று அவரவர்கள் கண்ட கண்ட இடங்களில் வைத்து அழுக்கும் எண்ணெயும் தண்ணிரும் கலந்து சேறாகி நாற்றமும் உண்டாகி, அருவெறுப்புறும் நிலைக்கு ஆளாக்கிவிடுகிறார்கள். உதாரணம், நாகை நீலாயதாக்ஷி அம்மன் கோயில் முகப்பிலிருக்கும் அருள்மிகு நாகாபரண பிள்ளையார் திருக்கோயில். அர்ச்சகர் கூட கர்பக்கிருகத்திற்குள் நுழையமுடியாதபடி எண்ணெய்ச்சேறு. அங்குள்ள அறங்காவலரிடமும் பக்தர்களிடமும், அர்ச்சகர்களிடமும் சொல்லிப் பார்த்தாயிற்று. பலனில்லை. ஆகவே, உழவாரப் பணி பேரவை அன்பர்களுக்கு ஒரு வேண்டுகோள் – அனைத்துக் கோயில்களிலும் எல்லா கடவுள் சன்னிதிகளிலும் அவ்வப்போது சுத்தமாக்கப்படும் வடிகட்டி உள்ள புனல் கூடிய குடம் ( ப்ளாஸ்டிக் அல்லது பித்தளை) வைக்கப்பட்டு அதில் தான் தங்கள் கொண்டுவரும் பிரார்த்தனைக்கான நெய் அல்லது எண்ணெய் ஊற்றப்படவேண்டும் என்றொரு கட்டளையிட்டு செவ்வனே நிறைவேற்ற ஏற்பாடு செய்யுங்கள். கோயில் நிர்வாகிகள் அந்த எண்ணெயை உபயோகித்து எல்லா சன்னிதிகளையும் ஒளியூட்டலாம். கோயில்களில் புகை தவிர்ப்பதற்காக ஏற்கனவே கற்பூரம் ஏற்றக் கூடாது என்றொரு கட்டளை இருக்கிறது. அதையும் செவ்வனே நிறைவேற்ற, தவறுதலாக கொண்டுவருபவர்களை, அர்ச்சனை சீட்டு வாங்குமிடத்தில் ஒரு பெட்டி வைத்து, போடச் சொல்லலாம். கோயில் அருகிலுள்ள கடைகளில் கற்பூரம் விற்காமலிருக்க வேண்டுகோள் விடுக்கலாம். என் யோசனகள் பலருக்குப் பிடிக்காது. மன்னிக்கவும்.

  9. வி.ராமஸ்சாமி அவர்களின் கருத்துடன் முழுதும் உடன்படுகிறேன். ஒவ்வொரு கோவிலும் இதுபோன்ற உழவாரப்பணி செய்து சுத்தம் செய்வதன் மூலம் நமது கோவில் என்ற நெருக்கம் உண்டாகும். ஒரு காலத்தில் அக்னீஸ்வரர் கோவிலுக்கு மலைப்பாதை அமைக்கவும், கோபால்சாமி மலை பெருமாள் கோவிலுக்கு சுற்றுச்சுவர் மற்றும் மராமத்து வேலைகளுக்கு உழவாரப்பணி செய்தது ஞாபகம் வருகிறது. இன்றும் மனதிற்கு நெருக்கமாக உணரும் கோவில்களில் அக்னீஸ்வரர் & கோமதி அம்மன் கோவிலும் ஒன்று. எனது மதிப்பிற்குரியவர்களில் ஒருவரான சண்முக நாதன் அவர்களை இக்கட்டுரைவாயிலாக சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி.

  10. Sir.. excellent work.. but when is this bhakthar peravai going to take control of the temple? As of now, the temple authorities will be very happy that they need not spend hundial collection for the temple works, which they can divert to other purposes..

    Its not difficult to bring people together.. but the success lies in how we are going to achieve the purpose..

    Some actions i suggest:

    1. Canvass the people NOT to put money in the hundial, and in turn donate to a trust for this peravai.. this money should be used for further maintenance works.. When there is no collection in the temple, the government will go away, as it will be a loss for them to pay salary from government coffin..

    If hindus could do this for major temples, almost all temples can be recovered..

    2. Retrieve all records of temple lands, and share this information to public.. if there is any encroachment, take legal/political/spiritual action to recover these lands..

    3. So far, the temple was in control with dikshithar.. now it gone to government.. we have to form a people’s commitee with appropriate rules and regulations, choose a proper head, so that when we win in supreme court, we have an apparatus in place to take over temple administration..
    This people’s committee should be a participation from both dikshithars and people.. where the dikshithars have exclusive rights and authority over all pooja related things and the people’s committee should have authority over maintenance of the temples.. Frequent meetings to be conducted b/w these two groups to collectively manage and maintain the temples..
    This is just my suggestion.. if there is any better way, we can implement this..

    4. Its not enough just to clean the temple and pray.. we have to train the people, particularly the youhts in singing the pasurams of the nayanmars.. and we have to train the people to sing devaram and thiruvasagam.. the whole thing cannot be byhearted by single person.. so we have to split our devaram and thiruvasagam in to small sections and allocate each section to different people so that they can byheart these and sing regularly in the temple..
    The bhakthi pasurams is the direct remedy to the christian carol songs.. we have to change the present situation where temple is only considered as a place to just visit and pray.. we have to revive back the old tradition of expressing bhakthi through pasurams.
    The vision of the chola is need for now..

    There are many other suggestions.. but i will rest here.. hope appropriate people take note of my points.. willing to hear from other commenters..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *