பொய்கள் அறிவியலாக்கப்படும் கலிகாலம் – பகுதி 1
(தொடர்ச்சி…)
பகுதி-II – அபத்தமான நோய்த் தகவல்கள்
அறிவியல்: உடலையும் மனதையும் தூய்மையாக வைத்து கொள்வது; உணவை சரியான அளவில், சரியான நேரத்தில் எடுத்து கொள்வது; தேவையான உடல் உழைப்பை மேற்கொள்வது அல்லது உடற்பயிற்சியை மேற்கொள்வது; இம்முறைகளை அனுசரித்தால் மனிதன் நோய்நொடியில்லாத வாழ்க்கையையும் மூப்படைவதை தள்ளிப்போடவும் முடியும். இது அறிவியல்.
அபத்தம்: புற்றுநோய், இருதய நாளங்கள் முழுவதும் அடைப்பு, சிறுநீரகங்கள் செயல் இழப்பது போன்ற நோய்கள் வந்தபின் இயற்கை முறையில் வாழ்வதாலேயே அந்நோய்களைக் குணப்படுத்தி விடலாம் என்று நம்புவது அபத்தம்.
வெடியுப்பு பீரங்கிசாமியிடம் Gmail படும்பாடு
சில மாதங்களுக்கு முன் Gmail-இல் Priority Inbox என்றொரு வசதியை ஏற்படுத்தினார்கள். மிகவும் அவசியமான மின்னஞ்சல்கள் மட்டுமே இந்தப் பகுதிக்கு வரும். நானும் இதை உபயோகித்து வருகிறேன். எனக்கு அடிக்கடி மின்னஞ்சல் அனுப்புபவரிடமிருந்து மின்னஞ்சல் வந்ததால் அந்தப் பகுதிக்கு வந்து விட்டது. திறந்தால் ஒரே குப்பையான அறிவியல். அனுப்புபவர் யார் என்றுதான் Gmail-ஆல் சோதித்துப் பார்க்க முடியுமே தவிர, உள்ளிருக்கும் விவரங்களை எப்படி ஆராய முடியும்?.
இணைய தளங்களிலும் பத்திரிகைகளிலும் சில சரியான நோய் குறித்த செய்திகள் வெளிவந்தாலும் பெரும்பாலும் பரபரப்புக்காக மிகைப்படுத்தலும் அதையும் தாண்டி பல நேரங்களில் அப்பட்டமான பொய்களும் பிரசுரிக்கப் படுகின்றன. முற்காலங்களில் போல் அல்லாது, பொதுஜனம் சற்றே அதிகப் பொதுஅறிவு கொண்டிருப்பினும் இப்பொய்களுக்கு முக்கியத்துவம் சமூகத்தில் அதிகரித்து வருவது மிகவும் ஆபத்தானது. இது இந்தியர்களுக்கு மட்டுமான பிரச்சினை அல்ல. மேற்குலக நாடுகளிலும் பொய்கள் எந்தக் கூச்சமும் இன்றி பரப்பப்பட்டு வருகின்றன.
புற்றுநோய் பற்றின அபத்தப் புரிதல்
15 நாள்களில் உடல் பருமனில் இருந்து விடுதலை, இதய நாளங்களில் முழுவதுமாக அடைப்பு இருந்தாலும் (Complete blockage of Arteries) அறுவை சிகிச்சையின்றி குணம், சீறுநீரகம் முற்றிலுமாக செயல் இழந்திருந்தாலும் டயாலிஸஸ் இல்லாமல், அறுவை சிகிச்சை இல்லாமல் குணம் என்றெல்லாம் நமக்கு ஊடகங்களில் இருந்து செய்திகள் வருகின்றன.
இன்று சமூகத்தில் அனைத்து நோய்களைப் பற்றின தவறான தகவல்கள் பரப்பப்பட்டு வந்தாலும் இக்கட்டுரையில் புற்றுநோயை உதாரணமாக எடுத்துக் கொள்வோம்.
மேலே கூறிய மின்னஞ்சலில் எனக்கு ஒரு தகவல் வந்தது. “வெறும் பழங்களைச் சாப்பிடுவதின் மூலம் புற்றுநோயிலிருந்து விடுதலை பெறலாம்”. இந்த மின்னஞ்சலில் இருந்து முக்கிய பகுதிகளைத் தமிழ்படுத்தி கீழே தருகிறேன்.
ஸ்டீபன் மேக் (Stephen Mak) என்றோரு மருத்துவராம். அவர் மிகவும் முற்றிய நிலையில் உள்ள புற்றுநோயாளிகளுக்கு வைத்தியம் செய்கிறாராம்.
அவர் இதுவரை சிகிச்சை செய்த புற்றுநோயாளிகளில் 80 சதவிகிதம் பேரை குணப்படுத்தி விட்டாராம்.
“புற்றுநோய்க்கு மருந்து கிடைத்து விட்டது. நாம் நம்புகிறோமா இல்லையா என்பதுதான் இன்றைய கேள்வி!” என்கிறார் இந்த மருத்துவர்.
புற்றுநோயைக் குணப்படுத்துவது மிகவும் சுலபமாம். வெறும் வயிற்றில் பழங்களைச் சாப்பிட வேண்டும். நன்றாக எச்சிலுடன் கலந்து மெதுவாக மென்று சாப்பிட வேண்டும். ஹையா!!! புற்றுநோய் போயே போச்சே போயிந்தே Its gone.!!!
அது மட்டும் இல்லை. இந்த முறையில் பழங்களைச் சாப்பிட்டால் முடி நரைப்பது, சொட்டை விழுவது, கண்களின் கீழ் வரும் கருவட்டம் போன்றவை ஏற்படாது.
3 நாள்கள் வெறும் பழங்களை மட்டுமே சாப்பிட்டால், 3 நாள்கள் கழித்து முகத்தில் தேஜஸ் ஒளி விடும்.
(அனுப்புநர், பெறுநர் பகுதிகளை நீக்கிவிட்டு இந்த மின்னஞ்சலின் பகுதிகளை Upload செய்துள்ளேன். நீங்களும் இந்தத் தகவலைப் பெற்று புற்றுநோயிலிருந்து சாகா வரம் பெறலாம்.
சரி, இதில் உள்ள சில விஷயங்கள் உண்மைதான். அவையாவன–
(1) பழங்கள் உடலுக்கு நல்லது.
(2) பழங்களில் உள்ள Anti-Oxidants இதயத்திற்கு நல்லது.
(3) பழங்களை அடிக்கடி உணவில் சேர்த்து கொள்வதால் மூப்பு அடைவதை தள்ளிப்போட முடியும். (மூப்பு அடைவதின் இரு முக்கிய வெளி அடையாளங்களான தோல் சுருங்குதலைத் தள்ளிப்போடவும் தேவையான சக்தியை உடலுக்கு அளிப்பதிலும் பழங்கள் முக்கியப் பங்காற்ற முடியும்.)
ஆனால் இந்த பலன்களை மனிதர்கள் ஆயிரக்கணக்கான வருடங்களாக அறிந்து வைத்துள்ளார்கள். இதைப் பிரசுரிப்பதால் யாரும் சீண்ட மாட்டார்கள். நவீன அறிவியல் சமூகத்தில் இல்லாத காலத்திலும் உலகம் முழுவதிலும் மனிதர்கள் பழங்களைத் தங்கள் உணவின் முக்கியமான பகுதியாக சாப்பிட்டுக் கொண்டுதான் இருந்தார்கள். கொஞ்சம் மசாலாவைத் தடவி, வாய்க்கு வந்தபடி எழுதி, புற்றுநோய் குணமடையும் என்றால் குப்பனும் சுப்பனும் படிப்பார்கள். இன்று நாம் நவீனத்துவம் அடைந்து விட்டதால் சாஃப்ட்வேர் எஞ்சினீயர்களும் கார்பரேட் எக்ஸிக்யூடிவ்களும்கூட படிக்கிறார்கள்.
எனக்கு வந்த மின்னஞ்சல் பலருக்குச் சென்று, கடைசியாக எனக்கு வந்தது என்று குறிப்பிட்டேன். அந்த மின்னஞ்சலின் பெறுநர் பகுதிகளைக் கவனித்தேன். இந்தியாவின் பிரபல கம்பெனிகளில் பணிபுரிபவர்களுக்கு அனுப்பப்பட்டிருந்தது. அவர்களில் சிலர் நம்பியதனாலேயே என்வரை இந்த குப்பை வந்து சேர்ந்துள்ளது.
இதிலும் கடைசியாக வெடியுப்பு பீரங்கிசாமி உலா வருகிறார். மின்னஞ்சலில் கடைசியாக மேலும் 10 பேருக்கு அனுப்பி உங்கள் கருணையை மனித சமுதாயத்திற்கு அளியுங்கள் என்று எழுதியிருப்பதால் பல பேரிடம் மின்னஞ்சல் மூலமாகப் பரவி கடைசியாக எனக்கும் வந்துசேர்ந்திருந்தது.
ஐரோப்பாவில் நடத்தப்பட்ட ஆராய்ச்சி முடிவு
10 ஐரோப்பிய நாடுகளில் 5 இலட்சத்திற்கும் அதிகமான மக்களிடம் கிட்டத்தட்ட 15 வருடங்கள் நடத்திய ஆராய்ச்சியின் முடிவு, பழங்களைச் சாப்பிடுவதால் மட்டும் புற்றுநோயைத் தடுக்க முடியாது என்பதுதான். (பழங்களை சாப்பிடக்கூடாது என்று அவர்கள் கூறவில்லை. புற்றுநோயைத் தடுக்க முடியவில்லை என்பதுதான் செய்தி)
மேலே கூறிய மின்னஞ்சல் மூலமாக மட்டுமல்லாமல் பத்திரிகை, தொலைகாட்சி போன்றவற்றின் மூலமாகவும் பொய்யான நோய்த் தகவல்கள் பரப்பப்பட்டு வருகின்றன. உதாரணமாக ஒரு தொலைக்காட்சியில் சமையல் குறிப்பு ஒளிபரப்பாகி கொண்டிருந்தது. பேட்டி அளித்தவர் பழங்களால் செய்யப்படும் ஓர் உணவைச் செய்து காண்பித்தார். கூடவே சர்வசாதாரணமாக, பழங்களில் Anti-Oxidants இருப்பதால் அதைச் சாப்பிடுபவர்களுக்கு இருதய நோய் வரவே வராது என்று ஒரே போடாகக் கூறினார். நான் ஏற்கெனவே சுட்டிக் காட்டியபடி, பழங்களை சாப்பிடுவது இருதயத்துக்கு நல்லது என்பது அறிவியல் என்றாலும், பழங்களை சாப்பிட்டால் இருதய நோய் வரவே வராது என்பது அபத்தமான வாதம்.
சகலகலா வல்லவர்களான இந்தக் கட்டுரையின் “அறிவியல் எதிர்ப்பு ஜாம்பவான்கள்” ஏதோ ஒரு வழியில் வதந்தி ஒன்றைக் கசிய விட்டுள்ளார்கள். அதன்படி, புற்றுநோய் உள்ள நோயாளிகள் காண்டாமிருகத்தின் கொம்பை அரைத்து அதனை திரவத்தில் கலந்து குடித்தால் புற்றுநோய் குணமாகும். இதனால் காண்டாமிருகங்கள் அழிவின் விளிம்புக்குச் சென்றுள்ளதாக தகவல் தெரிவிக்கிறது. இந்தக் கட்டுரை காண்டாமிருகத்தைக் காப்பாற்ற எழுதப்படவில்லை. அதைச் செய்ய மிருகப்பாதுகாப்புக் குழுக்கள் உள்ளன. இந்தக் கட்டுரைக்கு விஷயம்– பொழுதுபோகாத சில “வெடியுப்பு பீரங்கிசாமி”க்கள் நோயுற்றிருக்கும் மக்களைத் தவறாக வழிகாட்டி இலாபம் சம்பாதிக்கிறார்கள் என்பதுதான்.
ஒரு திரைப்பட உதாரணம்
சுக்ருதம் என்றொரு மலையாளத் திரைப்படம். நாம் அத்திரைப்படத்தின் விமர்சனத்தை விட்டு விடுவோம். கதாநாயகனுக்கு புற்றுநோய் என்பது தெரிய வருகிறது. புற்றுநோய் முற்றிவிட்டதால் சிகிச்சை, பலனளிப்பது சாத்தியமில்லை என்கிறார் மருத்துவர். சில மாதங்களே வாழ முடியும் என்றும் கூறிவிடுகிறார். இதை அறிந்த கதாநாயகன், எப்படியும் சாகத்தான் போகிறோம், நம் கிராமத்திலேயே கடைசி நாள்களைக் கழித்து விடலாம் என்று முடிவெடுக்கிறார். அவரின் நண்பன் ஓர் இயற்கை மருத்துவரை அறிமுகப்படுத்துகிறார். முதலில் தயங்கும் கதாநாயகன் கடைசியாக மருத்துவருடன் அந்த இயற்கை மருத்துவமனைக்குச் செல்கிறார்.
இயற்கையுடன் ஒட்டிய வாழ்க்கை முறையை கதாநாயகன் கடைபிடிப்பதை நமக்குக் காண்பிக்கிறார்கள். சில காட்சிகளுக்கு பிறகு அந்த இயற்கை மருத்துவர் இரத்தப் பரிசோதனை முடிவைப் பார்க்கிறார். (இரத்தப் பரிசோதனைக்கு மட்டும் நவீன மருத்துவம் வேண்டுமாம். செம போங்கு). இரத்த வெள்ளை அணுக்களின் எண்ணிக்கை (Blood White Cells Count) கிட்டத்தட்ட ஒழுங்காக ஆகிவிட்டது என்று அறிவிக்கிறார்.
நாம் ஒரு சமூகத்தில் எப்படிப்பட்ட தகவல்களைத் தருகிறோம் என்று கவனியுங்கள். இத்திரைப்படத்தைப் பார்த்த சில இரசிகர்களாவது தங்களின் குடும்பத்தினருக்குப் புற்றுநோய் வந்தால், இயற்கை வாழ்க்கைமுறையை நாடினால்? விளைவு அவசியமில்லாமல் சில உயிர்கள் உலகிலிருந்து வெளியேறும்.
இதைப் படிக்கும் அன்பர்கள் நான் ஏதோ இயற்கை மருத்துவத்துக்கு எதிரி என்று எண்ண வேண்டாம். நானே என் உணவுப் பழக்கத்தில் வேப்பம்பூ, மணித்தக்காளி போன்றவற்றைச் சேர்த்து கொண்டுதான் இருக்கிறேன்.
நான் கூற வந்த விஷயம், இயற்கை மருத்துவத்தைப் பற்றி அல்ல. இயற்கையாக வாழ்வதனாலேயே புற்றுநோய் வரை குணப்படுத்த முடியும் என்ற அபத்தத்தை வெளிப்படையாக எதிர்ப்பதற்குத்தான்.
புற்றுநோய் பற்றின நவீன அறிவியலின் புரிதல்
நம் மனித உடல் பல கோடி செல்களால் ஆனது. செல்கள் பிரிந்து இரண்டாகவும் நான்காகவும் உற்பத்தி ஆகிக் கொண்டே இருக்கின்றன. மரணம் ஏற்படும் வரை. இது கிட்டத்தட்ட ஒரு பிரதி எடுக்கப்படும் வேலைதான். பிரதி எடுக்கப்படும்போது சில சிறிய தவறுகள் ஏற்படும். அவற்றை சரிசெய்யவும் நம் உடலில் இயக்கங்கள் உள்ளன. Carcinogens என்று கூறப்படும் ஒரு கூறு இந்தத் தவறு ஏற்படுவதை வேகப்படுத்துகிறது. (மது, புகையிலை, சில சூழ்நிலை காரணிகளால் உடலில் carcinogens அதிகரிக்கிறது என்பது தற்போதைய அறிவியல்). ஒரு செல் (malignant) தவறுகளுடன் உற்பத்தியாகி விட்டால் உடலில் புற்றுநோய் ஏற்பட்டுவிட்டது என்றுதான் அர்த்தம். பிறகு அந்த செல் பிரிந்து பிரதி எடுக்கப்படும் போது புற்றுநோய் செல்கள் உடல் முழுதும் ஏற்பட்டு மரணம் சம்பவிக்கிறது.
20-ஆம் நூற்றாண்டின் துவக்கம் வரை பாதிக்கப்பட்ட உடல் பகுதியை நீக்கும் முறைதான் இருந்தது. பிறகு மாத்திரைகள் Chemotherapy, Radiation Therapy போன்றவை மூலம் புற்றுநோயைக் கட்டுக்குள் வைத்து கொள்வதில் பெரிய முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இந்தத் துறை அனுதினமும் புதிய கண்டுபிடிப்புகளை சமூகத்துக்கு அளிக்கிறது. உதாரணம் Targeted Therapy. மாத்திரைகள் மூலம் செல்களை அழிக்கும் போது நல்ல செல்களும் அழியத்தான் செய்யும். அதைப் பெருமளவில் குறைப்பதில் நவீன மருத்தவம் பெரிய முன்னேற்றங்களை அடைந்துள்ளது.
அமேரிக்காவில் 2008-ஆம் ஆண்டின் அதிபர் தேர்தலுக்காகப் போட்டியிட்ட ஜான் மெக்கைன், மெலனோமா என்னும் சருமப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர். 3 முறை அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. 30 வருடங்களாக அவர் இதற்கான சிகிச்சை எடுத்து கொள்கிறார். இன்றும் அவர் நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கிறார் என்பதே புற்றுநோய் சிகிச்சை மிகப்பெரிய முன்னேற்றம் அடைந்திருப்பதை காண்பிக்கிறது.
இன்றுள்ள நிலையில் புற்றுநோய் முற்றுவதற்கு முன்னால் கண்டுபிடித்து விட்டால் உயிர்விட வேண்டிய அவசியமே இல்லை.
புற்றுநோய் ஒரு நவீன நோய்
ஒரு முக்கியத் தகவலை இங்கு குறிப்பிட்டாக வேண்டும். கி.பி.1500-க்கு மேல்தான் மேற்கத்தியர்கள் ஒரு மனித உடலை (பிணத்தை) அறுத்து உள்ளிறுக்கும் பகுதிகளை ஆராய முற்பட்டதாக ஏராளமான குறிப்புகள் வரலாற்றிலிருந்து நமக்குக் கிடைக்கின்றன. உதாரணமாக “லியோனார்டோ டா வின்சி” (Leonardo Da Vinci) அக்காலத்திய போப்பாண்டவரின் அனுமதியின் பேரில் பல அநாதைப் பிணங்களை அறுத்து ஆராய்ந்து குறிப்புகளை ஆவணப்படுத்தியுள்ளார். 1700-க்கு மேல் நுண்பொருள்நோக்கியின் (Microscope) மூலம் மனித உடலின் கட்டிகள் சோதிக்கப்பட்டன. புற்றுநோய் சமூகத்தில் பெரிய அளவில் இருந்திருக்கவேயில்லை என்பது வரலாற்றிலிருந்து நமக்குத் தெரிய வருகிறது.
நவீன வாழ்க்கையின் அடையாளங்களான மது, புகையிலை, சுரங்கம் தோண்டுதல், ஆஸ்பஸ்டாஸ் போன்றவைகளால்தான் புற்றுநோய் இன்று பெரிய அளவில் உள்ளது என்பதும் இன்றைய அறிவிலாளர்களால் நிறுவப்பட்டுள்ளது. அதனாலேயே பழைய மருத்துவ முறைகளில் இந்நோயை சமாளிப்பதை பற்றின முக்கியத்துவம் இல்லாமல் இருப்பதில் ஆச்சரியம் ஏதுமில்லை.
பத்திரிகைகளின் சீரிய பணி
தமிழில் வெளியாகும் மகளிருக்கான பத்திரிகை ஒன்றில் மணித்தக்காளிக் கீரையைச் சாப்பிடுவதால் தொண்டை புற்றுநோயை குணப்படுத்தி விடலாம் என்று ஒரு கண்டுபிடிப்பு. என் தாயார் என்னிடம் இந்தச் செய்தியைக் காண்பித்தார். நான் என்ன கூறுவது? மணித்தக்காளிக் கீரையை ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நாம் உண்கிறோம். (நானும்தான்). அதற்காக அதைச் சாப்பிட்டாலே தொண்டைப் புற்றுநோய் குணமாகும் என்பது முற்றான அபத்தம். மணித்தக்காளிக் கீரை வாய்ப்புண்ணை குணமாக்கும் என்பது இந்திய மருத்துவம். தொண்டை புற்றுநோயும் வாய்ப்புண்தான் என்று நினைத்து விட்டார்களோ என்னவோ!
இந்தச் செய்திகளை எழுதுபவர்கள் பலே கில்லாடிகளாக இருக்கிறார்கள். முற்றிலும் அறிவியல் அல்லாதவற்றை எழுதுவதில்லை. ஓர் அளவிற்கு நோய் வராமல் தடுக்கும் குணமுள்ள உணவை அடிப்படையாக வைத்துக்கொண்டு அதற்கு மசாலா தடவி, நோய் வந்தவுடன் அந்த உணவு பெரிய நோய்களையே சரிசெய்து விடும் என்பார்கள். இதை எதிர்ப்பவர்களை இந்திய, சீன மருத்துவ முறைகளை எதிர்ப்பவர்கள் என்று முத்திரை குத்தவும் முடியும் என்பதால் அவர்கள் Safe-ஆகவே இருப்பார்கள்.
மேலும் நவீன அறிவியல் ஒரு Closed Entity இல்லை. அது, முன்னேற்றம் ஏற்பட ஏற்பட அவற்றை உள்வாங்கிக் கொண்டு தன் தரத்தை அதிகப்படுத்திக் கொள்கிறது. புற்றுநோய்க்கான மருந்தாக மாத்திரைகளையும் கதிர்வீச்சையும் பயன்படுத்தினால் நோயாளிகளுக்கு பெரிய அளவில் பக்கவிளைவுகள் ஏற்படுகின்றன. அந்தப் பக்க விளைவுகளை (புற்றுநோயை அல்ல) மட்டுப்படுத்த தற்பொழுது பழமையான சீன மருத்துவ முறைகளைக் கைக்கொண்டுள்ளனர்.
இது அறிவியல்; இது ஊகம், இன்னும் முழுமையான ஆராய்ச்சி முடிவுகள் வரவில்லை- என்று பிரித்து எழுதுவதே சரி. அப்படி எழுதாத பத்திரிகைகளை நாம் கண்டிப்பாக பகிஷ்கரிக்க வேண்டும்.
நவீன மருத்துவம் எல்லா நோய்களையும் குணப்படுத்த முடியும் என்று கூறவில்லை. இன்றும் சில நோய்களைச் சமாளிப்பதே பெரிய விஷயமாக உள்ளது. சில நோயாளிகளுக்கு என்ன நோய் என்பதைக் கூடக் கண்டுபிடிக்க முடியாத சூழ்நிலை இன்றும் உள்ளது. அமேரிக்காவில் இதற்காக ஒரு தனி மருத்துவமனை இயங்குகிறது. Undiagnosed Diseases Program (UDP) அறியமுடியாத நோய்களைக் குணப்படுத்த முயற்சிக்கும் இந்த அமைப்பில் கைவிடப்பட்ட கேஸ்கள் எடுத்துக்கொள்ளப் படுகின்றன. இந்த நோயாளிகள் ஏதோ ஓர் உபாதையினால் அவதிப்படுவார்களே தவிர அதற்கான காரணத்தை எந்த மருத்துவராலும் கண்டுபிடிக்க முடியாது. இந்த அமைப்பு இப்படிப்பட்ட நோயாளிகளின் இரத்தத்திலிருந்து, D.N.A வரை எந்த முன்அனுமானமும் இன்றி ஆராய்ந்து நோயைக் கண்டுபிடிக்க முயற்சிக்கிறார்கள். 15 சதவிகிதம் மட்டுமே இவர்களால் வெற்றி அடைய முடிகிறது என்பதுதான் இதன் விசேஷம்.
இதைக் கூற வந்ததே, நவீன அறிவியலால் இன்னும் பல நோய்களைக் கண்டுபிடிக்க கூட முடியவில்லை என்பதையும் பிறகுதான் அதற்கான மருந்தையும் கண்டுபிடிக்க வேண்டும் என்பதையும் நாம் அறிந்து கொள்வது அவசியம்.
பகுதி-III – வேதிப்பொருள்களால் பக்கவிளைவுகள்
(தொடரும்…)
துரதிர்ஷ்ட வசமாக நாம் இன்டர்நெட்டில் வரும் எல்லா செய்திகளையும் நம்பி விடுகிறோம். அது சரியாக இருக்குமா என்று யோசிப்பது இல்லை.
இயற்கைக்கு எதிராக செய்யும் எந்த செயல்களுக்கும் நிச்சயம் எதிர்வினை உண்டு. பாதிப்புக்களை தடுக்கமுடியாது. இப்படிப்பட்ட செயற்கை மாற்றங்களுக்கு ஈடுகொடுத்து இயற்கை தன்னை சமநிலை படத்திக்கொள்கின்றது. ஆனால் இது இப்டியே தொடரும் என்பதற்க்கு எந்த உத்திரவாதமும் கிடையாது. எனவேதான் நம்முன்னோர்கள் இயற்கையோடு ஒட்டிவாழும் வாழ்கையையே வலியுறுத்தினார்கள்.
சும்மாவா சொன்னார்கள் ஆரோக்கியமான வாழ்கைக்கு நாள் இருமுறை வாரம் இருமுறை மாதம் இருமுறை வருடம் இருமுறை என்று !!!
‘சுக்ருதம்’ மலையாளப் படத்தைக் குறிப்பிடும் கட்டுரையாசிரியருக்கு குண்டு துளைத்து தொண்டைப் புற்று சரியான தமிழ்ப்படம் நினைவில்லாதது எனக்கு ஆச்சரியமளிக்கவில்லை. தமிழ்ஹிந்து தொடர்ந்து கமலின் கருத்துகளை எதிர்த்தோ புறக்கணித்தோ வருவதை என்போன்றோர் கண்காணித்தே வருகிறோம் என்பதை இங்கே பதிவுசெய்கிறேன். 🙂
Cancer 1500 ஆம் நூற்றாண்டுக்கு முன்னமே இருந்தது – கிருமி கண்ட சோழன் (குலோத்துங்கன்) இறந்தது தொண்டையில் புற்று நோய் வந்து தான் என்று கூறுவர்
மஞ்சள் காமாலைக்கு இன்றும் பல இடங்களில் பச்சிலை வைத்யத்தில் மக்கள் நம்பிக்கை இருக்கிறது. இருபது வருஷங்கள் முன் எனக்கு காமாலை வந்த போது ஆஸ்பத்திரியில் பல நாட்கள் ட்ரிப்ஸ் கொடுத்து இறங்காத சீரம் பிலிருபின் பச்சிலை வைத்யத்தில் ஒரே நாளில் இறங்கியது.
arivil silarin poluthu pokkakivtathu ethai pathirikkaikalum seikinrana varuntha kutia visayam
This is a good illustration for ridiculous article in otherwise intellectual TamilHindu.com
நான் இன்று கூக்லேளில் மேலோடமாக பார்க்கும் போது ஒரு அரேபியா விஞ்ஜானி அதுல் அல்ரூஎஸ் -இவர் வுலக அளவில் ,வானியல்,கணிதவியல், இயற்கை விவசாயம் ,சமஸ்க்ரிதம், கிரேக்கம், இன்னும் பல விசயங்கள் தெரிந்தவர் என்று புகழ் பின்பு அவர் இதை இந்திய வந்து இந்திய அறிவியலை கற்று, முதல் முதலாக வுலகிருகிறு அரங்கேற்றியவர் .இவரே பூமியின் சுட்ட்ரலவாய் முதலி kooriyathagavum கூறப்பட்டு வுள்ளது. நாம் தான் நமது vaithiya முறையை ,அறிவியலை கற்பதும் இல்லை,நம்புவதும் இல்லை. வுலகம் நம் தேசத்தில் இருந்து பல கற்றும், களவும் சித்து வுள்ளது என்பது வுண்மை அதற்கு இந்த அரேபியா விஞ்ஜானி ஒரு வுதாரணம். ” நாம் தங்க பொதி சுமக்கும் கழுதைகள் – இன்று “