கலாசார பன்முகத்தன்மையின் தோல்வி?: ஒரு பார்வை – 1

(க்கட்டுரையின் அனைத்துக் கருத்துக்களும் எழுதியவருடையவையே. அவற்றுடன் நாங்கள் முழுமையாக உடன்படவில்லை. ஆயினும், கலாசார பன்முகத்தன்மை பற்றிய விவாதத்தின் ஒரு அங்கமாக தமிழ்ஹிந்து தளத்தில் இக்கட்டுரையை வெளியிடுகிறோம் – ஆசிரியர் குழு)

naturalization-ceremony-washington“நான் இதுநாள்வரை குடிமகனாக, எந்த ஒரு வெளிநாட்டு அரசர் (அல்லது) பலம் மற்றும் அதிகாரம் உள்ளவர் (அல்லது) அரசாட்சி (அல்லது) இறையாண்மைக்கு விசுவாசமாகவும் நம்பிக்கையுடனும் இருந்தேனோ அவற்றை முற்றும் முழுவதுமாக துறக்கிறேன். எல்லா உள்நாட்டு வெளிநாட்டு அமேரிக்க எதிரிகளையும் எதிர்ப்பேன்; அமேரிக்க அரசியல் சட்டத்தையும், அதன் பல்வேறு சட்டங்களையும் ஆதரிக்கவும் காப்பாற்றவும் செய்வேன். தேவை ஏற்படின் சட்டத்திற்கு உட்பட்டு இராணுவத்தில் ஆயுதம் தாங்கியோ அல்லது எனக்களிக்கப்படும் வேலைகளையோ செய்வேன். எந்த வற்புறுத்தலும் இல்லாமலும், அமேரிக்க அரசியல் சட்டத்தை ஏமாற்றாமலும் இந்த உறுதிமொழியை ஏற்கிறேன்.”

மேலே குறிப்பிட்டுள்ள இந்த வாக்கியங்களை அமேரிக்காவில் குடியேற விரும்பும் ஒவ்வொருவரும் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டுதான் அமேரிக்க குடிவாசியாக மாறுகின்றனர்.

ஒரு நாட்டின் குடியுரிமையை துறந்து விட்டு மற்றொரு நாட்டின் குடியுரிமையை ஏற்றுக்கொள்வது பெரும்பாலும் பொருளாதார காரணங்களுக்காகவே நடைபெறுகிறது. ஆனால் தன் சொந்த நாட்டின் சட்டங்களுக்கும், குடியேறும் நாட்டின் சட்ட திட்டங்களுக்கும் உள்ள வேற்றுமைகள், கலாச்சார வேறுபாடுகள் போன்றவற்றை அறிந்தேதான் இந்த மாற்றத்தை ஏற்கின்றனர்.

oooOOOooo

டந்த சில மாதங்களாக, மேற்கத்திய தலைவர்கள் ஒவ்வொருவராக தங்கள் நாட்டில் கலாச்சார பன்முகத்தன்மையின் (Multi-Culturalism) அப்பட்டமான தோல்வியை வெளிப்படையாக கூறி வருகின்றனர்.

அக்டோபர் 2010 – ஜெர்மனியின் அதிபர் அஞ்செலா மெர்கல்.

டிசம்பர் 2010 – முன்னாள் ஸ்பெயினின் பிரதமர் ஜோஸ் மரியா – “கலாச்சார பன்முகத்தன்மை” மேற்கத்திய சமூகங்களை பிரித்து பலவீனப் படுத்துகிறது.

டிசம்பர் 2010 – முன்னாள் ஆஸ்திரேலிய பிரதமர் ஜான் ஹோவார்ட் – இந்த கொள்கை குடியேறிகளை மேற்கத்திய சமூகங்களுடன் ஒருங்கிணைக்கவில்லை.

பிப்ரவரி 2011 – பிரிட்டனின் பிரதமர் டேவிட் கேமரூண்

பிப்ரவரி 2011 – பிரான்ஸின் அதிபர் நிகோலஸ் சர்கோஸி

இந்த தலைவர்களில் மூவர், பிரிட்டானிய, பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி போன்ற நாடுகளின் பிரதமர் அல்லது அதிபர்கள். தற்பொழுது பதவியில் உள்ளவர்கள். இவர்கள் இந்த கொள்கையை விமர்சிக்க காரணம் மிகவும் எளிமையானது. ஐரோப்பாவிலேயே கிட்டத்தட்ட 8 முதல் 10 சதவிகிதம் முஸ்லீம் மக்களை கொண்ட தேசங்கள் இவைதான்.

சுய தம்பட்டம்:

இந்த மேற்கத்திய அரசியல் தலைவர்களின் விமர்சனங்களுக்கு முன்னாலேயே தமிழ் ஹிந்துவில் 2010 ஜனவரியில் “இனவாதமும், இனப் படுகொலைகளும்-ஒரு பார்வை” என்ற எனது கட்டுரை வெளிவந்தது.

அக்கட்டுரையில் இந்த “கலாச்சார பன்முகத்தன்மை” என்பதெல்லாம் வெட்டிப் பேச்சுதான். எப்பொழுது, வேற்று இனத்தவர்கள் கணிசமான சதவிகிதமாக உயர்கிறார்களோ, அப்பொழுதிலிருந்தே அந்த பிராந்தியத்தில் பிரச்சினைகள் ஆரம்பித்துவிடும். வரலாற்றில் நடந்த மோதல்கள், இன்று வரை தொடரும் வேற்றுமைகள், மனிதனின் இயற்கையான மனநிலை என்று எந்த கண்ணோட்டத்திலும் இது உருப்படாத கொள்கை என்றும், மேற்கத்தியர்கள் உடனடியாக வேற்றினத்தாருக்கு குடியுரிமை அளிப்பதை நிறுத்த வேண்டும் என்றும் எழுதியிருந்தேன்.

கிட்டத்தட்ட 30 வருடங்களாக (1970 முதல் 2001 வரை) இந்த கொள்கையைப் பற்றின பொது விவாதங்கள் மேற்கத்திய நாடுகளில் நடக்கவே இல்லை என்று கூறலாம். யாரெல்லாம் இக்கொள்கையை விமர்சனம் செய்கிறார்களோ, அவர்களை “இனவெறியர்கள்” என்று புத்திஜீவிகளும், பொதுஜன ஊடகங்களும் கட்டம் கட்டின.

2001 செப்டம்பர் 11 தாக்குதல் பல மாற்றங்களை மேற்கத்திய நாடுகளில் உருவாக்கியது. சிறிது சிறிதாக இன வேற்றுமை குறித்த விவாதங்கள் சூடு பிடிக்க தொடங்கின. அடுத்து 2005ல் லண்டன் மாநகரத்தில் நடந்த குண்டுவெடிப்பு இந்த விவாதத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றது. காரணம், அதை செய்தவர்கள், பிரிட்டனில் பிறந்த அல்லது குடியேறிய முஸ்லீம்கள்.

அதுநாள்வரையில் ஊடகங்கள் முன்வைத்த வாதங்கள் தவிடுபொடியாகின.வேலைவாய்ப்பின்மைதான் தீவிரவாதத்திற்கு காரணம் என்ற குற்றச்சாட்டு லண்டன் குண்டுவெடிப்புடன் அடக்கம் அடைந்தது. மேற்கத்திய நாடுகளில் குடியேறி அங்குள்ள மக்களின் வாழ்க்கை முறைகளை கண்டுவிட்டால், வேற்றின குடியேறிகள் மேற்கத்திய சமூகத்துடன் ஒன்றிணைந்து விடுவார்கள் என்ற வாதமும் சமாதி அடைந்தது.

2005ல் லண்டன் மாநகரில் நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதல்கள் பட்டதாரிகளாலும், மருத்துவர்களாலும், முக்கியமாக இரண்டாம் தலைமுறை இஸ்லாமிய குடியேறிகளாலும் நடத்தப்பட்டன. ஆதரிப்போரின் வாதங்கள் தவிடுபொடியாயின!

கலாச்சார பன்முகத்தன்மை என்னும் கொள்கையை ஆதரிப்பவர்கள் கடந்த 3 தசாப்தங்களாக மீண்டும் மீண்டும் கூறிவரும் சில உளறல்களைப் பார்க்கலாம்.

(1) வேற்றினத்தவர்கள் மேற்கத்திய நாடுகளில் குடியேறியவுடன் அனுபவம் புதியதாகவே இருக்கும். அரசாங்கத்தால் கட்டுப்படுத்தப் படாத மனித வாழ்க்கை, துணிவுடனும் சம உரிமையுடனும் வாழும் பெண்கள், வாழ்க்கையின் அனைத்து சந்தோஷங்களையும் சரிநிகர் சமானமாக அனுபவிக்கும் பெண்கள், அடிப்படை சுதந்திரம், குடியேறிகள் பார்த்திராத வாழ்க்கை வசதிகள், லஞ்ச லாவண்யமற்ற அரசு அமைப்புகள், பகிர்ந்தளிக்கப்பட்ட, ஒரே இடத்தில் குவிந்திராத அரசு அதிகாரம், முழுமையான மத சுதந்திரம் போன்றவை சில காலத்திற்கு அதிர்ச்சியை அளித்தாலும் அவர்களும் காலப்போக்கில் மேற்கத்திய சமூக கலாச்சார விழுமியங்களை தனதாக்கிக் கொண்டு விடுவர்.

(2) பல இனத்தவர்களை கொண்ட சமூகங்கள் உருவாகி பல்துறைகளிலும் புதிய சிந்தனைகள் ஊற்றெடுக்கும்.

(3) சில காலங்களுக்கு அவர்களின் சொந்த நாட்டு கலாச்சார முறைகளை அனுசரிக்க அனுமதி அளித்தால், வரும் காலத்தில் அவர்கள் விரும்பியே மேற்கத்திய கலாச்சார முறைகளுடன் பின்னி பிணைந்து விடுவர்.

மேற்கூறிய சால்ஜாப்புகள் / உளறல்கள் ஒவ்வொன்றும் பொய்த்துப் போயின. 2வது தலைமுறை வேற்றின குடியேறிகள் கூட மேற்கத்திய சமூகங்களுடன் ஒன்றிணைந்து வாழ விரும்பவில்லை. மீண்டும் மீண்டும், மேலும் மேலும் விசேஷ வசதிகளை தங்கள் சொந்த நாட்டின்/மதத்தின் கலாச்சார விழுமியங்களுக்கு ஏற்றவாறு அனுசரிக்க கோரிக்கை விடுக்கின்றனர்.

மேலும் மேற்கத்திய நாடுகளில் வாழ்ந்து கொண்டே, அந்நாடுகள் அளிக்கும் அனைத்து வசதிகளையும் பெற்றுக் கொண்டே அந்நாட்டு கலாச்சாரத்தை வெளிப்படையாக ஏசுகின்றனர். அவர்கள் கனவிலும் நினைக்க முடியாத சுதந்திரம் கிடைத்திருப்பதால் இப்படியெல்லாம் ஊடகங்களிலும் மேடைகளிலும் பேச முடிகிறது.

british-pm-david-cameronபிரிட்டனின் பிரதமரின் உரை:

ஜெர்மனியின் முனிச் நகரில் பாதுகாப்பு மாநாடு ஒன்றில் திரு.டேவிட் கேமரூன் உரை நிகழ்த்தினார்.
(உரையின் வீடியோ இங்கே.)

இந்த உரையில் திரு.டேவிட் கேமரூன் சாதாரணமாக அரசியல்வாதிகள் பேசத்தயங்கும் அல்லது பேச பயப்படும் இஸ்லாமிய தீவிரவாத, அரசியல் நிலைப்பாடுகளை தீவிரமாக எதிர்க்கிறார். பல தவறுகளை ஐரோப்பிய நாடுகள் செய்ததாக ஒப்புக் கொள்கிறார்.

(1) பல்வேறு இனத்தவர்களை தனித்தனியாக தத்தமது கலாச்சார அடையாளங்களுடன் வாழ அனுமதித்தது முதல் தவறு. குடியேறிகளின் சில சமூக அடையாளங்கள் மேற்கத்திய நாடுகளின் பொது விழுமியங்களுக்கு எதிராக இருந்த போதும் கண்டும் காணாமல் இருந்தது. குறிப்பாக பதின்ம வயது பெண் குழந்தைகளுக்கு திருமணம் செய்விப்பது. பிரச்சினை ஏற்பட்டால் தங்கள் சொந்த நாட்டிற்கு வலுக்கட்டாயமாக கொண்டு சென்று திருமணம் செய்விப்பது போன்றவை.

(2) அடிப்படைவாத / தீவிரவாத எண்ணங்கள் கொண்டிருந்தாலும், குற்றம் செய்யாத வரையில், அவர்களை கண்டுகொள்ளாமல் இருந்தது.

பிரிட்டனில் கைது செய்யப்பட்ட பல தீவிரவாதிகள், இதுபோன்ற தீவிரவாத ஆனால் குற்றம் செய்யாத இஸ்லாமிய மதக்குழுக்களிடமிருந்து பயிற்சி பெற்றது தெரிய வந்துள்ளது. ஆகவே குற்றங்களை செய்ய ஆரம்பிக்கவில்லை என்றாலும் மேற்கத்திய சமூகங்களுக்கு எதிரான அல்லது பிரிவினைவாதத்தை தூண்டும் குழுக்களை தடை செய்யாமல் இருந்தது அடுத்த தவறு. சில நேரங்களில் அரசாங்கத்தை சேர்ந்த அமைச்சர்கள் உட்பட பல்வேறு பெரும்புள்ளிகள் இப்படிப்பட்ட மதத்தலைவர்களுடன் ஒரே மேடையில் தோன்றினர். இந்நடவடிக்கைகள் மூலம் அந்த தீவிரவாதம் பேசும் மதக்குழுக்களுக்கு நம்பகத்தன்மையை, அரசு அமைப்புகளுக்கும், பொது மக்களுக்கும் அளித்தது அடுத்த தவறு.

(3) முஸ்லீம் இளைஞர்களை மேற்கத்திய சமூகத்தில் ஐக்கியமாக்க சில பரிந்துரைகள் அளிக்கப்பட்டன. அதன்படி சில இஸ்லாமிய மதக்குழுக்களுக்கு கொடை வழங்கப்பட்டது. தாங்கள்தான் அரசாங்கத்திற்கும் முஸ்லீம் மக்களுக்கும் பாலம் என்றும் தாங்கள்தான் முஸ்லீம் மக்களை பிரதிநிதித்துவம் செய்கிறோம் என்றும் கூறிய மதக்குழுக்களுக்கு முன்யோசனை இன்றி கொடை வழங்கப்பட்டது. அம்மதக்குழுவின் தலைவர்கள் வெளிப்படையாக மேற்கத்திய நாகரீகத்தை எதிர்ப்பவர்களாகவும், கலாச்சார பன்முகத்தன்மையை நம்பாதவர்களாகவும் இருந்தனர் என்பது நன்றாகவே தெரிந்திருந்தாலும் அதை சட்டை செய்யாமல் விட்டது.

ஒரு மதக்குழுவுக்கு வரிப்பணத்தைஅளிக்கும் முன்பு சில விஷயங்களை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். அம்மதக்குழு அனைத்து மனிதர்களுக்குமான மனித உரிமையை ஒப்புக்கொள்கிறதா? எல்லா மனிதர்களும் சட்டத்திற்கு முன் சமம் என்பதை ஏற்கிறதா? ஜனநாயகத்தை நம்புகிறதா? குடிமக்களுக்கு தங்கள் அரசாங்கத்தை தேர்ந்தெடுக்கும் உரிமை உள்ளது என்பதை ஏற்கிறதா? தன் இனத்தவர்கள் வேற்றினத்தாருடன் இணைந்து வாழ ஒப்புக் கொள்கிறதா அல்லது தனியே வாழ அழைப்பு விடுக்கிறதா?

(4) ஒரு வெள்ளைக்காரர் இனவாதம் பேசும்போது மிகவும் வெளிப்படையாக மேற்கத்திய சமூகம் எதிர்க்கிறது. ஆனால் அதே சமயம் அதைப்போன்றே மோசமான வாதத்தை ஒரு வெள்ளையர் அல்லாதவர் வெளிப்படுத்தும்போது வெள்ளையர்களே கை கட்டி வாய் பொத்தி கொள்கிறார்கள்.

(5) இந்த இடத்தில் ஒரு சந்தேகம் வரலாம். குற்றம் செய்யாத ஒரு குழுவை தடை செய்வதோ அல்லது அத்தலைவர்களின் இயக்கத்தை தடுப்பதோ வெள்ளையர்கள் பரிபாலித்து வரும் சுதந்திரத்திற்கு எதிராக உள்ளதே!

இங்கு ஒரு விஷயத்தை யோசிக்க வேண்டும். இதைப்போன்றே ஒரு வெள்ளைக்கார குழு முஸ்லீம் இனத்தவர் அழிய வேண்டும் என்று பேசினால் ஆனால் குற்றம் செய்யாது இருந்தால் கூட, வெள்ளையர்கள் சும்மாவா இருப்பார்கள்?.

(6) மேற்கத்திய அரசுகள் முஸ்லீம் நாடுகளில் தலையிடுவதாலேயே தீவிரவாதம் பெருகியுள்ளது என்ற ஒரு பொதுகருத்து உருவாக்கப் பட்டுள்ளது. மேற்கத்தியர்கள் மத்திய கிழக்கு நாடுகளில் குறிப்பாக பாலஸ்தீனத்தில் தலையிடுவதை நிறுத்திவிட்டால் இது நின்று விடும் என்ற வாதம் முன்வைக்கப் படுகிறது. இது முற்றும்முழுவதுமான தவறான வாதம். இஸ்லாமிய தீவிரவாதம் என்பது கொள்கை ரீதியானதும், அரசியல் ரீதியானதும் ஆகும். இந்த குற்றச்சாட்டை ஒரு வாதத்திற்காக ஏற்றுக்கொண்டு நாம் மாறினால் கூட இந்த தீவிரவாதம் தொடரும்.

திரு. டேவிட் கேமரூண் பல வெள்ளையர்களின் மனநிலையை ஒத்து ஆனால் “அரசியல் சரிநிலையை” “Political Correctness”பற்றி கவலைப்படாமல் தைரியமாக பேசி உள்ளார். ஆனாலும் ஒரு அரசியல்வாதிக்கே உரிய லாவகமும் அவரின் பேச்சில் உள்ளது. குறிப்பாக ஐரோப்பிய நாடுகள் தவறு செய்திருந்தாலும் பல்வேறு இனங்களைச் சேர்ந்தவர்கள் பிரிட்டனில் சேர்ந்து வாழ முடியும் என்றே நம்புகிறார். அனைத்து பிரிட்டானிய மக்களுக்குமான எதிர்காலத்திற்கான நம்பிக்கையையும், வசதிகளையும் அளித்து விட்டால் இது நடக்க முடியும் என்றும் கனவு காண்கிறார்.

இந்த இடத்தில் நான் அவரின் கருத்துடன் வேறுபடுகிறேன். அவர் கூறும் நிலை எதிர்காலத்தில் வருவதற்கு சாத்தியமே இல்லை. வேற்றினத்தவர்கள் வெள்ளையர்களின் கலாச்சாரத்துடன் ஒத்து போவதென்பது கனவிலும் நடக்காது. எனினும் விவாதத்தை ஆரம்பித்து வைத்ததற்காக பிரிட்டனின் பிரதமரை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

குடியேறிகளினால் உருவாகும் சமூகப் பிரச்சினைகள்:

என் பழைய கட்டுரையில் மேற்கத்திய நாடுகளில் குடியேறிகளால் உருவாகியிருக்கும் பிரச்சினைகள் சிலவற்றை உதாரணங்களாக எழுதியிருந்தேன். அதைப் போன்றே மேலும் சில உதாரணங்களை இக்கட்டுரையில் எழுதுகிறேன். இவற்றை தனித்தனி நிகழ்ச்சிகளாக நோக்குவது அரசியல்வாதிகளுடையது; ஓட்டிற்காகவும், பதவிக்காகவும் வாழும் மனிதர்களுடையது;உண்மையை பார்க்க விரும்பாத மனிதர்களுடையது.

இந்த உதாரணங்கள் மிகவும் அடிப்படையான கேள்வியை கேட்க வைக்கும். அந்த கேள்விக்கான பதிலாகத்தான் ஐரோப்பிய தலைவர்கள் சமீபத்தில் “கலாச்சார பன்முகத்தன்மை” என்னும் கொள்கையை விமர்சிப்பது.

குடியேறிகளைப் பற்றி விமர்சனம் செய்யும்போது முஸ்லீம்களைப் பற்றின விமர்சனங்கள் சற்று தூக்கலாக வந்துதான் தீரும். ஏனெனில் மற்ற இனத்தவர்களை விட மேற்கத்திய சமூகத்துடன் ஒன்றாதது மட்டுமல்ல அவர்களை அந்நாட்டில் வாழ்ந்து கொண்டே வெறுப்பதும் அவர்களில் பலரிடம் காணப்படுகிறது. எனவே இக்கட்டுரையிலும் இந்த வழி தொடரும். அதே சமயத்தில் ஹிந்துக்கள், சீக்கியர்கள், புத்த மதத்தை சேர்ந்தவர்கள் என்று அனைத்து வேற்றினத்தவர்களுக்கும்
மேற்கத்திய நாடுகளில் குடியுரிமை வழங்கக்கூடாது என்பதே எனது தனிப்பட்ட, துணிவான கருத்து.

இதற்கு நான் கூறும் காரணங்களை இனி முன்வைக்கிறேன்.

சில உதாரணங்கள்:

(1) அமேரிக்காவில் வெள்ளைக்கார நாத்திகர்கள் பொழுது போகவில்லையென்றால் இயேசு பொம்மையை கழுதை பொம்மையின் மேல் வைத்து எரிப்பார்கள். அதை வீடியோவாக எடுத்து Youtubeல் பிரசுரிப்பார்கள். குளிர்காய விரும்பும் நாத்திகர்கள் 10 பைபில் புத்தகங்களை எரிப்பார்கள். இவற்றைப் போன்ற நிகழ்ச்சிகள் அங்கு சர்வசாதாரணமானது. அவர்களின் அரசியல் சட்டம் ஒவ்வொரு குடிமகனுக்கும் இந்த உரிமைகளை வழங்குகிறது. அதை எதிர்ப்பவர்கள் தங்கள் தரப்பு நியாயத்தை முன்வைப்பார்கள். வீடியோவை பார்க்க மாட்டார்கள். அவ்வளவுதான். ஆனால் எரிப்பதை தடுப்பது கனவிலும் நடக்க முடியாது. எனவே, அங்கு குடியேறிய வேற்றினத்தார்கள், வேற்று மதத்தவர்கள் மட்டும் தங்கள் புனிதநூலை எரிக்கிறார்களே என்று கூப்பாடு போடுவது சிறுபிள்ளைத்தனமானது.

south-park

(2) அமேரிக்க தொலைக்காட்சி ஒன்றில் “Comedy Central” தயாரித்த South Park கேலிச்சித்திர தொடர் போன வருடம் ஒளிபரப்பானது. எல்லா மத தெய்வங்களும் ஒரு பாத்திரமாக அந்த நிகழ்ச்சியில் வந்தார்கள். அதில் யேசு கிறிஸ்து பெண்களை கிண்டலடிப்பார். புத்தர் கஞ்சா அடிப்பார். இராமரும் கிருஷ்ணரும் சேட்டைகள் செய்வார்கள். முகமது நபியின் முகத்தை காண்பிக்க கூடாது என்பதால் ஒரு கரடி பொம்மையை தலையில் வைத்து கொண்டு அவர் வருவார். முஸ்லீம்களைத் தவிர மற்ற அனைத்து மதத்தை சேர்ந்தவர்களும் அதை ஒரு நகைச்சுவையாக பார்த்தார்கள். பாதிக்கப்பட்டவர்கள் தொலைக்காட்சியை அணைத்து விட்டிருப்பார்கள். ஆனால் முஸ்லீம் குழு ஒன்று மட்டும் அந்த தொலைக்காட்சி நிறுவனத்துக்கு மிரட்டல் விட்டது. அடுத்த வாரம் அந்நிகழ்ச்சி தணிக்கை செய்யப்பட்டது.

மேற்கத்திய நாடுகளில் குடியேற விரும்பும் வேற்றின மக்களுக்கு அங்குள்ள சுதந்திரம் பற்றி தெரியாதா என்ன? குடியேறும் வரை ஒரு விதமான நடிப்பு; குடியேறியவுடன் உண்மை முகம் வெளிப்படுகிறது.

(3) சமீபத்தில் “Patiala House” என்ற ஹிந்திப்படம் பார்த்தேன். பிரிட்டனில் வாழும் ஒரு சீக்கிய குடும்பம் 1970களில் சில இனவாத வெள்ளைக்கார வாலிபர்களால் தொந்தரவு செய்யப்படுகிறது. அக்குடும்பத்தில் இருக்கும் ஒரு 17 வயது பையன் இங்கிலாந்து நாட்டின் கிரிக்கெட் அணியில் விளையாட தேர்ச்சி பெறுகிறான். ஆனால் குடும்பத் தலைவர் தன் மகன் இங்கிலாந்து அணியில் விளையாட அனுமதி தர மறுக்கிறார். இது எப்படி சரியாகும் என்பது அடிப்படை கேள்வி? இங்கிலாந்து அரசு அளிக்கும் அனைத்து கல்வி, மருத்துவம் போன்ற வசதிகள் வேண்டும்; அந்நாட்டு அரசு அளிக்கும் சுதந்திரம் வேண்டும். ஆனால் ஒரு சில வெள்ளைக்காரர்கள் செய்யும் தவறுக்காக அந்நாட்டையே பழிப்பது போன்ற காட்சிகள் அப்படத்தில் வருகின்றன. ஏன்? பிரச்சினை ஏற்பட்டவுடன் இந்தியாவிற்கு வந்து விடுவதுதானே?

patiala-houseஇது ஏதோ ஒரு திரைப்படம் அல்ல. 1990களின் மத்தியிலிருந்தே பல ஹிந்தி திரைப்படங்கள் வெளிநாட்டு வாழ் இந்திய வம்சாவளிகளுக்காகவே (Person of Indian Origin PIO) எடுக்கப்பட ஆரம்பித்தன. அமேரிக்காவிலும் ஐரோப்பாவிலும் நம்மவர்கள் நிறையபேர் குடியேறி உள்ளதாலும், நல்ல சந்தை இருப்பதாலும் மேற்கத்திய நாடுகளில் கதை ஓட்டம் நடப்பதாகவே பல திரைப்படங்கள் எடுக்கப்பட்டன.இத்திரைப்படங்களில் இந்திய கலாச்சாரம் உயர்த்தி காண்பிக்கப்பட்டது மட்டுமல்ல, மேற்கத்திய கலாச்சாரம் வெகு கேவலமாக சித்தரிக்கப்படும். நாம் ஊகிக்கிறபடியே அந்நாட்டு வெள்ளை இனப்பெண்கள் வெகு கேவலமாக சித்தரிக்கப்படுவார்கள். இந்திய வம்சாவளி குடும்பத்தலைவர் தன் பெண்குழந்தையை அந்த பாதிப்பு இல்லாமல் வளர்ப்பதாகவும் கதை நகரும்.

இதில் எல்லாம் நமக்கு என்ன பிரச்சினை? இந்தியர்களுக்கு ஒரு பிரச்சினையும் இல்லை. பிரச்சினை, மேற்கத்திய நாடுகளில் வாழும் இந்தியாவிலிருந்து சென்று குடியேறியவர்களுக்குதான். அங்குள்ள இந்திய வம்சாவளி குடியேறிகளின் அமைப்புகள் இத்திரைப்படங்களை விமர்சனம் செய்து இதுவரை ஒரு அறிக்கையும் விட்டதில்லை. மேலும் இப்படங்களும் அங்கு சக்கை போடு போடுகின்றன. நம் கலாச்சாரம்தான் மிகவும் உயர்ந்ததாயிற்றே! அந்த நாட்டின் குடியுரிமையை ஏன் வேண்டி பெற்றார்கள்?

பெரும்பான்மை வெள்ளையரின் ஆதரவைப் பெறுவதுதான் குடியேறிகளின் நோக்கமாக இருக்க வேண்டுமே ஒழிய, வெள்ளையர்களின் நாட்டில் வாழ்ந்து கொண்டே, அவர்கள் உருவாக்கி இருக்கும் அனைத்து நவீன அறிவியல் கட்டமைப்புகளையும் அனுபவித்துக் கொண்டே அவர்களை விமர்சனம் செய்வது “உண்ட வீட்டிற்கு இரண்டகம் செய்வதுதான்” என்று நான் கருதுகிறேன்.

(4) பிரிட்டனில் சேனல்-4 என்ற தொலைக்காட்சி நிறுவனம் 2007ல் பிரிட்டனின் மசூதிகள் சிலவற்றில் கற்றுக் கொடுக்கப்படும் வெறுப்பை கக்கும் பேச்சுகளை ஒளிபரப்பி பரபரப்பை ஏற்படுத்தியது.

(தொடரும்)

7 Replies to “கலாசார பன்முகத்தன்மையின் தோல்வி?: ஒரு பார்வை – 1”

  1. திரு ஆர். பாலாஜி அவர்களே,

    எனது சொந்தமான கருத்து என்னவென்றால் பாரத தேசத்தவர்கள் பாரதத்தில் இருந்தால் தான் நல்லது. பாரத தேசத்துக் குடியுரிமையை விட்டு அயல்நாட்டுக் குடியுரிமையை ஏற்பது என்பதை நான் கனவில் கூட நினைத்ததில்லை. இது ஒரு புறம் இருக்கட்டும். Multiculturalism என்பது சில மேற்கத்திய (குறிப்பாக மேற்கைரோப்பிய) நாடுகளில் unity in diversity என்ற கோட்பாட்டிலிருந்து விலகி, இஸ்லாமிய வெறியாட்டத்திற்கு மண்டியிடுதல் எனும் நிலையை அடைந்து மிகவும் லூசுத்தனமாக, வக்கிரமான ரீதியில் கடைப்பிடிக்கப்படுகிறது என்பதில் எனக்கும் உடன்பாடே.

    பெரும்பாலான இந்தியர்கள் சுயநலம் கருதியே மேற்கத்திய நாடுகளில் குடிபுகுகின்றனர் என்பதும், அதிலும் சிலர் சட்டதிட்டங்களை மீறி backdoor வழிமுறைகளைக் கடைபிடித்தும் வருகின்றனர் என்பதும் அருவருக்கத்தக்கதே.

    இன்னும் சிலர், பொதுவிடங்களில் பெரும்பான்மையினருக்குப் புரியாதவண்ணம் இந்திய மொழிகளில் அவர்கள் முன்னால் அவர்களையே கிண்டலடிப்பதும் கேலி செய்வதும் மிகவும் கண்டிக்கத்தக்கதே.

    ஆனாலும்,

    // பெரும்பான்மை வெள்ளையரின் ஆதரவைப் பெறுவதுதான் குடியேறிகளின் நோக்கமாக இருக்க வேண்டுமே ஒழிய, வெள்ளையர்களின் நாட்டில் வாழ்ந்து கொண்டே, அவர்கள் உருவாக்கி இருக்கும் அனைத்து நவீன அறிவியல் கட்டமைப்புகளையும் அனுபவித்துக் கொண்டே அவர்களை விமர்சனம் செய்வது “உண்ட வீட்டிற்கு இரண்டகம் செய்வதுதான்” என்று நான் கருதுகிறேன். //

    மேற்கண்ட வரிகள் ஓவராக இருக்கிறது. என்ன சொல்கிறீர்கள்? அவர்கள் நடை/உடை/பாவனைகளை இந்தியர்களும் மேற்கொண்டே தீர வேண்டும் என்றா? குடிபுகுந்த நாட்டின் சட்ட திட்டங்களுக்குக் கட்டுப்பட்டு நடந்தால் போதும். ஒரு குடிமகனுக்குச் சட்டரீதியான மற்றும் ஒழுக்கரீதியான கடமை இதுவே (there are no other legally or morally binding criteria for immigrants). ‘அவர்களை விமர்சனம் செய்யக்கூடாது’ என்பதெல்லாம் ஒருவிதமான அடிப்படைவாதமே.

    இன்னும் ஒரு ரீதியாக பார்த்தால் நீங்கள் சொல்வது குடியரசுக் கட்சியில் உள்ள சிலர் அமெரிக்காவை விவிலிய அடிப்படையிலான “Judeo-Christian” (whatever that means… as Christians were the worst perpetrators of anti-semitism until the end of WW2) நாடாகச் சொல்லுவதை நியாயப்படுத்தவும் உதவும்.

    அதுதவிர, அமேரிக்கா போன்ற நாடுகள் பழங்குடி மக்களை நடத்திய விதத்தையும் வியட்நாம் போரில் செய்த அட்டூழியங்களையும் விமர்சிக்கக்கூடாது என்பது போன்ற நிலையையும் நியாயப்படுத்தும்.

    நவீன அறிவியல் கட்டமைப்புகளுக்கும் குடிபோதை, இயற்கைச் சீரழிவு, MTV கலாச்சாரத்திற்கும் எந்தவித சம்பந்தமுமில்லை (அப்படியே இருந்தாலும் குடிபோதையும் MTV-யும் அறிவியலுக்கும் தொழில்நுட்பத்துக்கும் தடையாகவே இருக்கின்றன என்று தான் சொல்லவேண்டும்).

    மற்றபடி (என் அபிப்பிராயத்தில்) பெரும்பாலும் குப்பையான, நகைக்கத்தக்க தரம்வாய்ந்த PIO திரைப்படங்களை நீங்கள் வெகு சீரியசாக எடுத்துக் கொண்டு விட்டீர்கள் என்று தெரிகிறது. அதை ரசிப்பவர்களுக்கு small-time fun தவிர அத்திரைப்படங்களால் பெரிய தாக்கம் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை.

  2. அராபிய,அயிரோப்பிய மற்றும் அமெரிக்க நாடுகள் மலத்தில் பணம் கிடைத்தாலும், சுத்திகரிப்பு என்ற பெயரில், பணத்தைப் பண்ண எண்ணும் பணப்பேய்கள். அவர்களின் தேனொழுகும் பாலொழுகும் பேச்சுக்களும், உரிமை,சுதந்திரம்,கட்டுப்பாடின்மை போன்றனவும், பணம் கொள்ளை அடிக்கத்தான். இவ்வுலகில், அவர்களால் கொல்லப்பட்ட, பிணங்களிலும் பணத்தைப்பார்ப்பவர்கள் அவர்கள். அதற்காகத்தான், குடியேற நினைப்பவர்கள் அங்கு செல்கின்றார்கள். ஒபாமா, சமீபத்தில், மருத்துவ செலவு குறைவு என்பதற்காக, இந்தியா செல்லாதீர்கள் என்று கூவினார். கலாசாரம், பன்முகம், பண்பாடு என்பதெல்லாம், அங்கெல்லாம் பணம் பண்ணத்தான். அங்கெல்லாம் பணம் பண்ணும்போது, இந்தியாவில், அதே பெயர்களில், ஸ்பெக்ட்ரம், கறுப்புப் பண வங்கிக் கணக்குகள் போன்றவற்றில், பணம் கொள்ளையடிக்கப்படுகின்றது. இதற்குத் துணை போனவர்களும், மேலை நாட்டவரே.

  3. looks like author is supporting every nusance in the name of freedom… neenkal America green card holderaa or Citizenaa Mr. Balaji !!..

  4. தமிழ்ஹிந்து தள வாசகர்களை மிக நீண்ட இடைவெளிக்கு பிறகு சந்திக்கிறேன்…

    //அமேரிக்க தொலைக்காட்சி ஒன்றில் “Comedy Central” தயாரித்த South Park கேலிச்சித்திர தொடர் போன வருடம் ஒளிபரப்பானது. எல்லா மத தெய்வங்களும் ஒரு பாத்திரமாக அந்த நிகழ்ச்சியில் வந்தார்கள். அதில் யேசு கிறிஸ்து பெண்களை கிண்டலடிப்பார். புத்தர் கஞ்சா அடிப்பார். இராமரும் கிருஷ்ணரும் சேட்டைகள் செய்வார்கள். முகமது நபியின் முகத்தை காண்பிக்க கூடாது என்பதால் ஒரு கரடி பொம்மையை தலையில் வைத்து கொண்டு அவர் வருவார். முஸ்லீம்களைத் தவிர மற்ற அனைத்து மதத்தை சேர்ந்தவர்களும் அதை ஒரு நகைச்சுவையாக பார்த்தார்கள். பாதிக்கப்பட்டவர்கள் தொலைக்காட்சியை அணைத்து விட்டிருப்பார்கள். ஆனால் முஸ்லீம் குழு ஒன்று மட்டும் அந்த தொலைக்காட்சி நிறுவனத்துக்கு மிரட்டல் விட்டது. அடுத்த வாரம் அந்நிகழ்ச்சி தணிக்கை செய்யப்பட்டது.//

    சுதந்திரம் என்பதன் வரையறை என்ன என்பதை அறியாமல் எழுதிய வாசகங்கள் இவை.சுதந்திரம் என்பது என்ன??..உனது கையை நீட்டலாம்,அது எனது மூக்கை தொடாதவரை தான் உன் சுதந்திரத்தின் எல்லை.அது என் மூக்கை தொட்டால் அது அத்துமீறல்..

    அவன் கை உன் மூக்கு வரை நீள்வதுதான் சுதந்திரம்,வேண்டுமானால் நீ வீட்டுக்குள் போ என்பதா சுதந்திரம்??..இஸ்லாமியர்கள் தவிர மற்ற அனைவருக்கும்(ஹிந்துக்களும் சேர்த்துதான்) மதம் ஒரு கேளிக்கை பொருளாகிவிட்ட அவலநிலை(இந்திய/தமிழ் சினிமாக்களில் ஹிந்து தெய்வங்களை கேளிக்கை பொருளாக்கி பழகியதன் விளைவு),அவ்ர்கள் அதை ரசிக்கிறார்கள்..அதற்காக நானும் என் மதம் கேவலப்படுத்தப்படும் போது,அது அவர்களின் சுதந்திரம் என பொருந்திக்கொள்ளவேண்டும் என கோருவது எத்தனை அறிவீனமான வாதம்???

    மேலே தாங்கள் சொன்ன கேளிக்கைகள் அனைத்துக் சுதந்திர மீறல் எனபதை அவர்கள் உணராதது வேறு என்றால் அதை தாங்களும் உண்ராதது வினோதம்…இது போன்ற கேளிக்கை சித்திரம் எந்த மதத்திற்கு எதிரானாலும் தவறுதான்…பைபிலை கிழிப்பதும்,குர்ஆனை எரிப்பதும்,சுதந்திரத்தின் கூறுகளாக விவாதிப்பது வியப்பாகவே உள்ளது…

    அத்துமீரலை சுதந்திரம் என வாதிடுவது என்னமாதிரியான மனோநிலை..???

    இன்று உன் மதத்தை கிண்டலடித்து உன்வீட்டு டீவியிலே நிகழ்ச்சி காட்டப்படும்,அதை விரும்பி பார்,அல்லது டீவியை அமர்த்திவிடு.இது அவன் சுதந்திரம் அது உன்னை காயப்படுத்தத்தான் செய்யும்…

    நீ வெளியே சென்றால் பொருக்கிகள் உன் கையை பிடித்து இழுப்பார்கள் அது அவர்கள் சுதந்திரம்,உனக்கு பிடிக்கலைனா..வீட்டோட இருந்துக்கோன்னு சொல்ரதுக்கும் ஆகப்பெரிய வேறுபாடுகள் இல்லை…

    ஒன்றை எதிர்க்கவேண்டும் என்பதற்காக,எதை ஆதரிக்கிறோம் என்பதையும் சிந்தித்துப் பாருங்கள்…

    (மட்டுறுத்தல் இல்லாமல் வெளியிடுவீர்கள் என நம்புகிறேன்)

    தவறு இருந்தால் சுட்டிக்காட்டுங்கள்..திருத்திக்கொள்கிறேன்…

    அன்புடன்
    ரஜின்

  5. திரு முரளி,
    நான் தஞ்சாவூர் மாவட்டத்தில் ஒரு டொக்கு கிராமத்தில் வாழ்பவன். அதை
    இந்த கட்டுரையிலேயே குறிப்பிட்டிருக்கிறேன்.

    திரு. ரஜின்,
    நீங்கள் சுட்டிக்காட்டிய என் கட்டுரையின் பகுதியை நான் ஆதரிக்கிறேனா
    இல்லையா என்பதைப் பற்றி அல்ல. விவாதம்.

    ஒருவர் அமேரிக்காவில் குடியுரிமை பெறும்போதே அமேரிக்க அரசியல்
    சட்டத்தின் “1st Amendment” என்றால் என்ன என்று தெரிந்துதான் இருக்கும். ஏற்கெனவே பைபிலை எரிக்கும் நாத்திகர்கள் அடுத்த மதப்புத்தகங்களையும் எரிப்பார்கள் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி. நம்மூர் திராவிட கழக, இந்துமத எதிர்ப்பு மட்டும் கொண்ட, பொய் நாத்திகர்கள் போல் அல்ல அங்கிருப்பவர்கள். என் தரப்பு விவாதம் மிகவும் எளிமையானது. அங்குள்ள சுதந்திரத்தைப் பற்றி முழுமையாக தெரிந்த பிறகே குடியுரிமை பெற்று விட்டு பிறகு எதிர்ப்பது சிறுபிள்ளைத்தனம் என்பதுதான்.

    அமேரிக்க கலாச்சாரத்தை எதிர்ப்பதாக இருந்தால் சொந்த நாட்டிலேயே
    வாழ்ந்து கொண்டு எதிர்க்கலாமே! அவர்கள் நாட்டின் குடியுரிமையை
    பெற்றுவிட்டு அந்த நாட்டின் சுதந்திரத்தையே பயன்படுத்தி அவர்களையே
    ஏன் வம்புக்கு இழுக்க வேண்டும்? அப்படி இழுத்தால் விளைவுகளையும்
    சந்திக்க தயாராக வேண்டும் என்பதும் என் கட்டுரையில் தொக்கி நிற்கும்
    செய்தி.

  6. பாலாஜி அவர்களே…
    தாங்கள்,தங்களுக்கு உடன்பாடில்லாத ஒரு கருத்தையா மெனக்கெட்டு கட்டுரையாக்கியுள்ளீர்கள்?,,,தாங்கள் குறிப்பிட்டுக்காட்டும் மதக்காழ்ப்பு சுதந்திரத்திற்கு??? கட்டுரை முழுக்க தங்களின் தார்மீக ஆதரவை வழங்கிவிட்டு,,.

    //வேற்றினத்தவர்களுக்கும் மேற்கத்திய நாடுகளில் குடியுரிமை வழங்கக்கூடாது என்பதே எனது தனிப்பட்ட, துணிவான கருத்து.//எதற்காக இதை சொல்கிறீர்கள்?அவர்களின் மதகாழ்ப்பு சுதந்திரத்தை ஆதரிப்பதால்தானே….

    இப்டி கட்டுரைல துணிவா பேசீட்டு,அதுவல்ல விவாதம் என நழுவுவது நல்லா இல்லை..ஆமாம் நான் அதை ஏற்கிறேன்னு சொல்லவேண்டிதானே..
    ——————————————————————————————————————–

    முதலில் ஒரு நாட்டில் வாழும் அந்நாடு சாராத பிற மதத்தவர் அனைவரும் குடியேறிகள் என்ற பொதுப்பார்வை முற்றிலும் தவறானது,,,,அப்படிப்பார்த்தால் இந்தியாவில் உள்ள முஸ்லீம்,கிருஸ்தவர்கள் அனைவரும் குடியேறிகளா?இல்லையே,,,,அவர்கள் அனைவரும் சரிநிகர் இந்தியக்குடிமக்கள். அதுபோல…அமேரிக்காவிலும் குடியேறி முஸ்லீமகள் என்பவர்கள் எத்துனை சதம் அங்கு ஹிந்துக்கள் இருக்கிறார்களோ அத்துனை சதம்தான் இருக்க முடியும்..மற்றவர்களெல்லாம்,அமேரிக்க பிரதான குடிகள்,முஸ்லீம்களாக மாறியவர்களாக இருப்பார்கள்,,,

    2010 அமேரிக்க மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி ,அமேரிக்க மக்கள்தொகையில் 2.4%,அதாவது சுமார் 7 மில்லியன் மக்கள் முஸ்லீம்களாக உள்ளனர்…அவர்கள் அனைவரையும் குடியேற்றிவிட்டதா அமேரிக்கா???,,, அவர்கள் அனைவரும் பூர்விக அமேரிக்கர்கள், முஸ்லீம்களானவர்கள்…

    அதுமட்டுமல்லாது அமேரிக்காவில் குடியேருபவர்களில் அதிகபட்சமாக மெக்சிகோவினர் 23 %,சீனா,பிலிப்பைன்ஸ்,இந்தியா என இவர்கள் சராசரியாக 4%,எனவும்,வியட்நாம்,கியூபா,கொரியா என இவர்கள் 3-2% எனவும் குடியேறுபவ்ர்கள் என 2010 கணக்கெடுப்பு இருக்க….முஸ்லீம் குடியேறிகள் அங்கு ஆக்கிரமித்துவிட்டார்கள் என்பது ஆதாரமற்ற பேச்சு….

    //ஒருவர் அமேரிக்காவில் குடியுரிமை பெறும்போதே அமேரிக்க அரசியல்
    சட்டத்தின் “1st Amendment” என்றால் என்ன என்று தெரிந்துதான் இருக்கும். //

    தாங்கள் தமிழாக்கிய அதே அமன்மெண்டை நானும் படித்தேன்..அது மதரீதியான விஷ்யங்களை பேசவே இல்லையே…அதுமட்டுமல்லாது அந்த உறுதி மொழியானது குடியேரிகளைவிட,அந்நாட்டின் பிரதான குடிகளுக்குத்தானே சகோ முதலில் பொருந்தும்….அப்படி இருக்க,,, குடியேறிகளை விடுங்கள்….அங்குள்ள பிற மதத்தவரும்,தங்களின் மதத்தை ஒரு சாரார் பழித்தால் அதற்கு எதிராக போராட அவர்களுக்கு உரிமை உண்டல்லவா?…

    அமேரிக்க அரசு வழங்கிய சுதந்திரத்தில் பொத்தாம் பொதுவாக குர் ஆனை கிழிக்கவும் அனுமதி பைபிளை எரிக்கவும் அனுமதி அப்டீன்னு நமக்கு தோனுனதைலாம் சேத்துக்கிட்ட எப்படி?

    அரசியல் சாசனம் பஸ் டாப்ல பயணம் செய்ரத பத்தி சொல்லலைங்கிரதுக்காக அத அனுமதின்னு எடுத்துக்கிறதா?

    அப்டி பாத்தா..குற்றவியல் தண்டனை சட்டம் வரையறுக்கும் குற்றங்களை தவிர அனைத்திற்கும் அனுமதி,அனைத்திற்கும் சுதந்திரம் என்று எடுத்துக் கொள்வதா?

    //குடியேறிகளைப் பற்றி விமர்சனம் செய்யும்போது முஸ்லீம்களைப் பற்றின விமர்சனங்கள் சற்று தூக்கலாக வந்துதான் தீரும்.//

    என்றைக்குத்தான் தமிழ்ஹிந்துல,முஸ்லீம்களை லேசா விமர்சனம் பண்ணி இருக்கீங்க சகோ…பழகிடுச்சு…

    மட்டுறுத்தல் இன்றி எனது கருத்துக்களை அனுமதித்ததற்கு எனது மனமார்ந்த நன்றிகள்…

    அன்புடன்
    ரஜின்

  7. கலாசார பன்முகத்தன்மையின் தோல்வி?: ஒரு பார்வை – 1… இந்த கட்டுரை தலைப்பிற்கு பொருத்தமானதாக தெரியவில்லை. பிரச்சினையை வம்பிழுப்பதாகவே தெரிகின்றது. உதாரணம் காட்ட வேறு இனத்தவர்களின் செய்தியும் இருக்கின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *