முந்தைய பகுதிகள் – பகுதி 1 | பகுதி 2 | பகுதி 3
“மா நிலம் இயலா முதல்முறை அமையத்து,
நாம வெள்ளத்து நடுவண் தோன்றிய
வாய்மொழி மகனொடு மலர்ந்த
தாமரைப் பொகுட்டு நின் நேமி நிழலே!”
[– பரிபாடல், 3]
சங்ககாலத் தமிழ்ச் சான்றோர்களின் மேற்கண்ட கூற்றில், நம் ஹிந்து சனாதன தருமத்தில் சிருஷ்டி குறித்த முக்கிய நம்பிக்கை ஒன்று இடம்பெறுகிறது. “மகாபிரளயம் முடிந்த பிறகு ஆதிக் கல்பத்திலே பெரிய அளவதாகிய பூமி தோன்றுவதற்கு முன் பிரளய நீரின் நடுவே, வாய்மொழியாகிய வேதத்தை உரைக்கும் பிரம்ம தேவருடன் ஒரு தாமரை மலர் தோன்றியது. மகரந்தப் பொகுட்டை உடைய அப் பெரிய தாமரை மலரை உந்தியில் கொண்ட திருமாலது திருச் சக்கரப் படையே (இந்த உலகனைத்திற்கும்) நிழலாகிறது” என்பது இவ்வரிகள் வரையும் படிமம்.
திருமகள் கொழுநனுடைய திருநாபியிலிருந்து ஊழிக்காலங்களின் தொடக்கத்தில் ஒரு தாமரை மலர் தோன்றியதென்பதும் அதில் நான்முகனாராகிய பிரம்மதேவர் படைக்கப்பட்டார் என்பதும் தொன்றுதொட்டு நம் வேதங்களிலும் இதிகாச-புராணங்களிலும் வழங்கப்பட்டுவரும் செய்தியாகும். கலையுலகம் ஓங்கியிருந்த காலங்களில் பாரதநாடெங்கிலும், தென்கிழக்காசிய நாடுகளிலும், சிற்பிகளும் ஓவியக்கலைஞர்களும் இப் படிமத்தைத் தம் ஆக்கங்களில் பதித்துள்ளனர். மேலும், இவ்விதிகாசத்தைச் சங்ககாலத் தமிழ்ச் சான்றோர்களும் அறிந்திருந்தனர் என்பது மேற்கண்ட பாடல் வரிகள் காட்டும் செய்தி.
திருவுந்தித் தாமரையை நினைவுப்படுத்தவே ‘பத்மனாபன்’ முதலான நாமங்களும் அவனுக்கு ஏற்பட்டது. திருவனந்தபுரத்தில் ’பத்மனாப சுவாமி’ என்ற பெயருடன், “கிடந்த திருக்கோலத்துடன்” கோயில் கொண்டுள்ள திருவுருவைப் பற்றிச் சேர வேந்தர்களைக் குறித்த ’பதிற்றுப்பத்து’ என்ற சங்கநூலிலேயே உள்ளது; விரிவாக வேறொரு கட்டுரையில் காண்போம். இப்பொழுது பொதுவாகத் திருநாபிக் கமலம் கூறும் தத்துவத்தைச் சங்க இலக்கியம் விளக்கும் விதத்தையும், அது வடமொழி நூல்களோடும் ஒத்திருப்பதையும் காண்போம்.
வேதப்பகுதியிலேயே நான்முகன் உட்பட உலகமெல்லாம் நாரணனின் திருநாபிக் கமலத்தில் உண்டாயிற்று என்பது மறைமுகமாகச் சொல்லப்பட்டுள்ளதாக ஆசாரியார்களும் உரைகளில் குறிப்பிடுகின்றனர்:
“அஜஸ்ய நாபா4வத்4யேகம் அர்பிதம் யஸ்மின் விச்’வானி பு4வனானி தஸ்து2:”
என்பது ரிக்வேதத்தில் விஸ்வகர்மா சூக்தத்தில் (10-வது மண்டலம், 82-வது சூக்தம்) வரும் மந்திரம். “பிறப்பில்லாதவனுடைய நாபியிலே ஒன்று உண்டானது. அதில் உலகனைத்தும் நிலைபெற்றன.” என்பது இதன் பொருள். சிருஷ்டியை விளக்கும் மிக முக்கியமான சூக்தத்தில் இம்மந்திரம் வருகிறது. ஆதி சங்கர பகவத்பாதர் தாம் பண்ணிய விஷ்ணு சஹஸ்ரநாம பாஷ்யத்தில், அத்தியாயத்தின் மூலப்பகுதியில்
“அப்ரமேயோ ஹ்ருஷீகேச’: பத்3மநாபோ4 (அ)மரப்ரபு4:”
எனுமிடத்தில் வரும் ’பத்மனாபன்’ என்ற நாமத்திற்கு, “சர்வ ஜகத் காரணமாகிய தாமரை மலர் எவன் நாபியில் இருக்கிறதோ, அவன் பத்மனாபன்” என்ற விளக்கத்தைக் கூறி அங்கேயே மேற்கண்ட விஸ்வகர்மா சூக்த மந்திரத்தைப் பிரமாணமாக எடுத்துள்ளார்.
ஆதி சங்கரரின் இவ் வேத விளக்கத்தை ஊர்ஜிதப்படுத்தும் வண்ணம் மகாபாரதத்தில் ஒரு சுலோகம் வருகிறது. அம்புப் படுக்கையில் கிடந்தவண்ணம் பீஷ்மர் கண்ணனுக்குச் செய்த வாழ்த்து பற்றி முதல் பகுதியில் கண்டோம். அவ்வாழ்த்தில் பலவிடங்கள் வேத உபப்பிரம்மணமாக (அதாவது, வேதத்தின் பொருளைத் ஐயமற உரைப்பதாக) வருவதைப் பற்றியும் பார்த்தோம். நாம் எடுக்கப்போகும் இச்சுலோகமும் அப்படித்தான் — மேற்கண்ட விஸ்வகர்மா சூக்த மந்திரத்தின் பொருளை விளக்குகிறது:
“அஜஸ்ய நாபா4வத்4யேகம் யஸ்மின் விச்’வம் ப்ரதிஷ்டி2தம் |
புஷ்கரம் புஷ்கராக்ஷஸ்ய தஸ்மை பத்3மாத்மனே நம: ||”
[– மகாபாரதம், 12.47.40]
“பிறப்பில்லாத தாமரைக்கண்ணனுடைய நாபியிலிருந்து தோன்றிய தாமரை உலகத்திற்கெல்லாம் ஆதாரமாய் விளங்கிற்று. அந்தத் தாமரை வடிவில் உள்ள அவனுக்கு வணக்கங்கள்” என்பது இதன் பொருள். இச் சுலோகம் சொல் அமைப்பிலேயே வேத மந்திரத்துடன் ஒத்திருப்பதும் நோக்கத்தக்கது.
அதே வேதமந்திரத்தை விளக்கும் பின்வரும் ஸ்கந்த புராணச் சுலோகமானது, த்வைத மத ஆசாரியாராகிய மத்வரால் பிரம்ம சூத்திர விளக்கவுரையில் பிரமாணமாக எடுக்கப்பட்டுள்ளது:
“அஜஸ்ய நாபா4விதி யஸ்ய நாபே4ர்பூ4ச்ச்ருதே: புஷ்கரம் லோகஸாரம் |
தஸ்மை நமோ விஸ்தஸஸ்த விச்’வபூ4தயே விஷ்ணவே லோககர்த்ரே ||”
[பிரபஞ்சத்தை உள்ளடக்கிய தாமரையானது, ’அஜஸ்ய நாபௌ4’ (பிறப்பற்ற பெருமான் திருவுந்தியிலே) எனத்தொடங்கும் வேத வாக்கியத்தாலே எவனுடைய நாபியிலிருந்து உண்டானதாக அறியப்படுகிறதோ, வெளிக்காணும் எல்லா உலகையும் செல்வமாகக் கொண்ட உலகங்களுக்குக் காரணமான அந்த விஷ்ணுவுக்கு நமஸ்காரம். — பிரம்ம சூத்திர மாத்வ பாஷ்யம் 1.1.1]
இவ்விளக்கங்களுடன் சிலப்பதிகாரத்தில் ஆய்ச்சியர்கள் பாடும் பின்வரும் வரிகளையும் ஒப்பிட்டுப் படிக்கலாம்:
“பெரியவனை மாயவனைப் பேருலக மெல்லாம்
விரிகமல வுந்தியுடை விண்ணவனை”
[– சிலப்பதிகாரம், மதுரைக்காண்டம், ஆய்ச்சியர் குரவை]
இவ்வாறு பிரமனையும் படைத்த திருமாலின் உந்தித் தாமரைமலர் பிரபஞ்சத்திற்கே ஆதாரமாகிப் பெரிதாகக் காணப்பட்டது. இந்நினைவாலேயே, இவ்வுலகில் பிரம்மாண்டமாக அழகுடன் விரிந்து காணப்படுவனவற்றிற்கும் அம்மலரையே உவமையாகக் கூறினர் சங்கப் புலவர்கள்:
1) பத்துப்பாட்டில் ஒன்றாகிய பெரும்பாணாற்றுப்படையில், காஞ்சி நகரத்திற்குத் திருமாலின் உந்தித்தாமரை உவமையாகக் கூறப்பட்டது:
“நீனிற வுருவி னெடியோன் கொப்பூழ்,
நான்முக வொருவற் பயந்த பல்லிதழ்த்,
தாமரைப் பொகுட்டிற் காண்வரத் தோன்றி”
[– பெரும்பாணாற்றுப்படை, 401-405]
(நெடியோன் = திருமால், கொப்பூழ் = வயிறு, பொகுட்டு = பூவின் இடையில் காணப்படும் மகரந்தக் கூட்டம்)
2) இதுபோலவே, மதுரையைப் பற்றிய பரிபாடல் திரட்டுப் பகுதியும் இதே உவமையைக் கூறிற்று:
“மாயோன் கொப்பூழ் மலர்ந்த தாமரைப்
பூவொடு புரையும், சீர் ஊர்; பூவின்
இதழகத்து அனைய தெருவம்; இதழகத்து
அரும் பொகுட்டு அனைத்தே, அண்ணல் கோயில்;
தாதின் அனையர், தண் தமிழ்க் குடிகள்;
தாது உண் பறவை அனையர், பரிசில் வாழ்நர்;
பூவினுள் பிறந்தோன் நாவினுள் பிறந்த
நான்மறைக் கேள்வி நவில் குரல் எடுப்ப
ஏம இன் துயில் எழுதல் அல்லதை,
வாழிய வஞ்சியும் கோழியும் போலக்
கோழியின் எழாது, எம் பேர் ஊர் துயிலே.”
[– பரிபாடல் திரட்டு, 7]
இப்பாடலைப் பாடிய புலவர், தாம் வாழும் ஊரான மதுரையைத் திருமாலின் திருவுந்தியிலே தோன்றி மலர்ந்த தாமரைப் பூவுடன் ஒப்பிடுகிறார். அந்நகரத்தில் உள்ள தெருக்கள் பிரமனைத் தாங்கும் அத்தாமரை மலரின் இதழ்களைப் போல வரிசையாக உள்ளனவாம். பாண்டியநாட்டு ராஜதானியாகிய அந்நகரத்தின் நடுவே உள்ள அரச அரண்மனையானது அப்பூவின் நடுவில் உள்ள பொன்னிற மகரந்தப் பொகுட்டினை ஒத்ததாம். அந்நகரிலுள்ள மக்கள் மகரந்தப் பொடித் துகள்களைப் போல காணப்பட்டனராம். அம்மன்னனைப் பாடிப் பரிசில்பெற வருகின்ற புலவர்கள் மலரில் காணப்படும் மகரந்தத்தையும் தேனையும் பருகப் பறந்துவரும் வண்டுகளைப் போல காணப்பட்டனராம்.
அத்துடன், அத்தாமரைமலரின்கண் தோன்றிய பிரமனது வாயில் பிறந்த நான்கு வேதங்களையும், அவ்வூரில் வாழ்ந்து வந்த அந்தணர்கள் அதிகாலையில் பாராயணம் பண்ணுகிறார்களென்று மேற்கண்ட சங்கநூற் பாடல் வரிகள் கூறுகின்றன. இவ்விடத்தில், “பிரமனுடைய நான்கு வாய்களிலிருந்து நான்கு வேதங்கள் பிறந்தன” எனும் புராணச் செய்தியையும் காணலாம் [விஷ்ணு புராணம், 1.5.48; பாகவத புராணம், 3.12.34-37].
இப்படி உவமைகள் போய்க்கொண்டிருக்க, திருமாலின் அவயவங்களுக்கு எதை அளவையாகச் சொல்ல? வேறிடத்தில் புலவர்கள்,
“‘இன்னோர் அனையை; இனையையால்’ என,
அன்னோர் யாம் இவண் காணாமையின்,
பொன் அணி நேமி வலம் கொண்டு ஏந்திய
மன்னுயிர் முதல்வனை ஆதலின்,
நின்னோர் அனையை, நின் புகழொடும் பொலிந்தே!
நின் ஒக்கும் புகழ் நிழலவை;”
[மாயக்கண்ணனே! ’இவரைப் போல நீ இருக்கிறாய், இத்தகைய தொழில்களை உடையாய்’ என்று கூறும் வண்ணம் வேறு ஒன்றைக் காணாமையால், உயிர்கட்கு முதல்வனாகிய – பீதாம்பரம் அணிந்த – வலக்கையில் சக்கரம் கொண்ட உன்னையே, உனக்கு உவமையாகக் கூறுவோம். — பரிபாடல், 1] என்று “அவனுக்கு அவனே உவமையாவான்” கூறுகையால்,
“நின்னில் தோன்றிய நிரை இதழ்த் தாமரை
அன்ன நாட்டத்து அளப்பரியவை;”
[பெருமானே! உன்னிடத்தே தோன்றிய அடர்த்தியான இதழ்களைக் கொண்டுள்ள தாமரையைப் போன்ற அழகிய கண்களை உடையாய் — பரிபாடல், 4]
என்றனர்.
விஸ்வகர்மா சூக்தம் தவிர இன்னும் சில வேத வாக்கியங்கள் நான்முகனைப் படைத்த உந்தித் தாமரையின் தத்துவத்தைக் கூறுகின்றன. விரிவிற்கந்சி ஒரு உதாரணத்துடன் நிறுத்திக்கொள்வோம். கொப்பூழ்த் தாமரை பற்றிய குறிப்பு மூல மறைநூலாகிய வடமொழி வேதத்திலேயே உள்ளமையால், “வேதமாகிய ஓடைநீரில் மலர்ந்த தாமரை” என்றும் பழந்தமிழ்ப் பெரும்புலவர் பாடியுள்ளனர்:
“‘வாய்மொழி ஓடை மலர்ந்த
தாமரைப் பூவினுட் பிறந்தோனும் தாதையும்
நீ’ என மொழியுமால், அந்தணர் அரு மறை.”
[திருமாலே! வேத/உபநிடதங்களாகிய ஓடைநீரில் மலர்ந்த தாமரைப்பூவினுள் பிறந்தவனும், அவன் தந்தையும் நீயே என்று அந்தணர்கள் ஓதும் மறை மொழிகிறது — பரிபாடல், 3]
மேற்கண்ட வரிகளில் நான்முகக் கடவுளாகிய பிரமனைத் திருமாலுடன் அபேதமாகப் படிக்கப்படுவதும் நோக்கத்தக்கது. முதற் பரிபாடலிலும் இதே பொருளையுடைய வரியொன்று உள்ளது. ’உலகத்தில் காணப்படும் காரியப்பொருள்களனைத்தும் திருமாலே. நிகழ்வதெல்லாம் அவ்விறைவனின் லீலைகளே’ என்று படித்துவிட்டு இறுதியில்,
“நலம் முழுது அளைஇய புகர் அறு காட்சிப்
புலமும், பூவனும், நாற்றமும், நீ”
[நன்மை முழுதும் பொருந்திய குற்றமற்ற மெய்யுணர்வினை அளிக்கும் வேதமும், மலரின்மேலிருப்பவனாகிய பிரமனும், அப் பிரமனுடைய தொழிலாகிய படைப்புத்தொழிலும் நீயே — பரிபாடல், 1:45-46]
என்று சங்கப் புலவர்கள் பாடுகிறார்கள். கம்பரும்,
“‘ஆதிப் பிரமனும் நீ!
ஆதிப் பரமனும் நீ!
ஆதி எனும் பொருளுக்கு
அப்பால் உண்டாகிலும் நீ!
சோதிச் சுடர்ப் பிழம்பும் நீ ‘
என்று சொல்லுகின்ற
வேதம் உரைசெய்தால் வெள்காரோ
வேறு உள்ளார்?”
[– கம்ப ராமாயணம், ஆரணிய காண்டம், கவந்தன் வதைப் படலம், 45]
என்றார். இன்னொரு விதமாகப் பார்த்தால், மேற்கண்ட வரிகள் பிரபஞ்ச சிருஷ்டியில் காரியப்பொருளுக்கும் காரணப்பொருளுக்கும் உள்ள தொடர்பை விளக்குகின்றன. திருமால் காரண நிலை; நான்முகன் முதலான சித்துக்களாகிய ஆத்மாக்களையும், அசித்துக்களாகிய ஜடப்பொருள்களையும் அடக்கியுள்ள பிரபஞ்சமானது காரிய நிலை. பொதுவாகப் பார்த்தால் காரணம் காரியத்தை விட்டுப் பிரியாமல் இருப்பதாலும், குறிப்பாகப் பார்த்தால் நாரணனே பிரபஞ்சம் முழுவதிலும் வியாபித்து உயிருக்கு உயிராய் இருப்பதாலும் காரியமாகிய பிரமனைக் காரணமாகிய திருமாலோடு அபேதமாக, “தாமரைப் பூவினுட் பிறந்தோனும் தாதையும் நீ” என்று பரிபாடல் வரிகள் இயம்பின. இப்படிப் பொருள் கொள்ளாமல் நேரிடையாக திருமாலும் பிரமனும் எல்லா வகையிலும் ஐக்கியம் என்று கொண்டால், பரம்பொருளின் அருளுக்கு உட்பட்டவராகவும், காரியநிலையிலுள்ள ஒருவராகவும் பிரமனைக் குறித்து வரும் பற்பல வேத வாக்கியங்கள் அர்த்தமற்றுப் போய்விடும்; காரணப்பொருளுக்கே உண்டான தனிப்பட்ட குணங்கள் பரம்பொருளுக்கு உண்டு எனும் வேத வாக்கியங்கள் கேள்விக்குறிகளாகிவிடும்.
நான்முகனைப் படைக்கும் திருமாலது தனிப்பெருமையை,
“பிரமனையும் படைத்த ஆதி கர்த்தாவே!”, “’பிதாமஹ’ என்று சொல்லப்படும் பிரமனுக்கும் தந்தையாகிய உன்னை ’பிரபிதாமஹ’ என்று சொல்லலாம்” [– கீதை, 11.37,11.39]
என்று அர்ஜுனனும் கீதையில் கண்ணனைத் துதிக்கையில் செப்பினான். கௌசல்யா தேவியை வர்ணிக்கும்பொழுது கம்பர்,
“இருந்த அந்தணனோடு எல்லாம்
ஈண்றவன் தன்னை ஈனப்
பெருந்த தவம் செய்த நங்கை”
[– கம்பராமாயணம், அயோத்தியா காண்டம், தைலம் ஆட்டுப் படலம், 62]
என்று பாடுகிறார் (இருந்த அந்தணன் = நான்முகக் கடவுள்).
திராவிட வேதமாகிய பிரபந்தத்திலும்,
தாமரை யுந்தித் தனிப்பெரு நாயக”
[– திருவாசிரியம், 1]
என்று நம்மாழ்வாரும்,
“பூவலர் உந்தி தன்னுள் புவனம் படைத்து உண்டுமிழ்ந்த,
தேவர்கள் நாயகனைத் திருமாலிருஞ்சோலை நின்ற,
கோவலர் கோவிந்தனை”
[– பெரிய திருமொழி, 9.9.1 ]
என்று திருமங்கை ஆழ்வாரும்,
“என்னரங்கத் தின்னமுதர், குழலழகர் வாயழகர் கண்ணழகர், கொப்பூழில் எழுகமலப் பூவழகர்”
[– நாச்சியார் திருமொழி, 102]
என்று ஆண்டாளும், இன்னும் பல ஆழ்வார்களும், இப்பெருமையைப் பாடியுள்ளனர்.
படைக்கும் கடவுளாக பிரமனையும் படைத்தவனாகக் காணப்படுவதால் திருமால் சகல காரணங்களுக்கும் காரணனாகிறான். இக்காரணத்தால்,
“நமோ நமஸ்தே அகி2ல காரணாய
நிஷ்காரணாய அத்3பு4த காரணாய”
[– ஸ்ரீமத் பாகவதம், 8.3.15]
என்று கஜேந்திராழ்வான் முதலைப் பிடியிலிருந்து விடுபட “ஆதி மூலமே” என்று கண்ணனை அழைக்கும்போது கூறுகிறான். உலகத்திலுள்ள காரணப்பொருள்கள் எல்லாவற்றுக்கும், அந்தந்த பொருட்களுக்கு மேலான ஒரு காரணப்பொருள் காணப்படுகிறது: குடத்துக்குக் காரணம் மண்ணும் குயவனும், ஆனால் அம்மண்ணுக்கும் குயவனுக்கும் வேறு காரணப்பொருள் இருக்கிறது. இப்படி காரிய-காரண தொடர்ச்சி போய்க்கொண்டிருக்க, ஒரே ஒரு காரணப்பொருள் மாத்திரம் தனக்கு மேல் ஒரு காரணம் இல்லாதபடி தனித்து நிற்கிறார் (‘நிஷ்காரணாய’). அவர் எல்லாவற்றுக்கும் மூல காரணமாகிறார் (‘அகில காரண காரணாய’). இப்பெருமைகள் வேறெந்த காரணப்பொருளுக்கும் காணப்படாமையால், அவரே ’அற்புத காரணன்’ (‘அத்3பு4த காரணாய’) என்று கஜேந்திரனால் அழைக்கப்படும் திருமால்.
(தொடரும்)
// அம்புப் படுக்கையில் கிடந்தவண்ணம் பீஷ்மர் கண்ணனுக்குச் செய்த வாழ்த்து பற்றி முதல் பகுதியில் கண்டோம். அவ்வாழ்த்தில் பலவிடங்கள் வேத உபப்பிரம்மணமாக (அதாவது, வேதத்தின் பொருளைத் ஐயமற உரைப்பதாக) வருவதைப் பற்றியும் பார்த்தோம். //
வேதாந்தம், பக்தி ரசம், கருத்தாழம் மிக்க இந்த வாழ்த்தினை “பீஷ்ம ஸ்தவராஜம்” என்று சிலர் அழைக்கின்றனர்.
பெருந்தகையீர்!!
இணைய இதழ் மூலம், நீங்கள் தமிழய் போற்றி பாதுகாக்கும் விதம் அருமை பாராட்டுக்கள்,
மறைந்த எனது தந்தையார் எழுத்தாளர் திரு.தாமரைக்கண்ணன் இணைய தள முகவரியும், வலைப்பூவையும் சேர்த்தால் நலம்.
https://www.thamaraikannan.com/
https://writerthamaraikannan.blogspot.in/
அன்புள்ள,
தாமரை திருமேனியர்
7708817136