பழந்தமிழர் கண்ட வேதாந்தக் கருமணி – பகுதி 3

முந்தைய பகுதிகள் பகுதி 1 |
பகுதி 2

பரிபாடலில் பிரபஞ்ச சிருஷ்டி

nebula

வேதங்களின் சிகரங்களாகிய உபநிடதங்கள் பிரபஞ்ச சிருஷ்டியை விளக்கும் இடங்களில், அச் சிருஷ்டிக்கு முதற்காரணமாகிய ’அவ்யக்தம்’, 'மூலப் பிரகிருதி', 'தமஸ்' எனப் பலவாகக் கூறப்படும் மாயையானது ஆதியில் பரம்பொருளுடன் ஒன்றியிருந்த நிலையைக் கூறுகின்றன. சிருஷ்டிக் காலம் தொடங்கியபின் ஜடப்பொருளாகிய அம்மாயையிலிருந்து ’மகான்’, ’அகங்காரம்’ என்னும் தத்துவங்கள் தோன்றின என்றும், அகங்காரத்திலிருந்து ஆகாயம், ஆகாயத்திலிருந்து காற்று, காற்றிலிருந்து நெருப்பு, நெருப்பிலிருந்து நீர், நீரிலிருந்து மண் என்னும் பஞ்சபூதங்களாகப் பரிணமித்தன என்றும் கூறும். உபநிடதங்கள் கூறியவழி பிரபஞ்சம் விரிவதற்கு முன் இருந்த நிலையையும், முறையே பஞ்சபூதங்கள் தோன்றிய வரிசையையும் ’கீரந்தையார்’ என்னும் சங்கப் புலவர் பாடிய இரண்டாம் பரிபாடலில் கீழ்க்கண்ட வரிகள் விளக்குகின்றன:

"தொல் முறை இயற்கையின் மதியொ

. … … … … … … … மரபிற்று ஆக,

பசும் பொன்னுலகமும் மண்ணும் பாழ்பட,

விசும்பில் ஊழி ஊழ்ஊழ் செல்ல,

கரு வளர் வானத்து இசையின் தோன்றி,

உரு அறிவாரா ஒன்றன் ஊழியும்;

உந்து வளி கிளர்ந்த ஊழூழ் ஊழியும்;

செந் தீச் சுடரிய ஊழியும்; பனியொடு

தண் பெயல் தலைஇய ஊழியும்; அவையிற்று

உள் முறை வெள்ளம் மூழ்கி ஆர்தருபு,

மீண்டும் பீடு உயர்பு ஈண்டி, அவற்றிற்கும்

உள்ளீடு ஆகிய இரு நிலத்து ஊழியும்"

[— பரிபாடல், 2:1-12]

என்பன அவை. இதில் முதலிரண்டு வரிகள் இப்பொழுது உள்ள தொகுப்பில் முழுமையாகக் கிடைக்கவில்லை யெனிலும், "மண்ணுலகமும் பசும்பொன்னுலகமும் பாழ்பட, ஒன்றுக்கொன்று மாறி வருதலாகிய பழைய இயல்பினையுடைய மதியமும் ஞாயிறுங்கெடுதலால் அழகிழந்த இயல்பிற்றாக விசும்புகெட்ட ஊழிகள் முறைமையாகக் கழிந்தனவாக" என்னும் பரிமேலழகர் உரையிலிருந்து இவ்வரிகளின் செய்தி நமக்குக் கிடைக்கிறது (விசும்பு = வானம், ஆகாயம்). ஊழி கழிந்த இந்நிலையை கேரள தேசப் பண்டிதராகிய நாராயண பட்டரும் நாராயணீயத்தில்,

"வ்யக்தாவ்யக்தம் ந கிஞ்சித்3-அப4வத்-ப்ராக்-ப்ராக்ருத-ப்ரக்ஷயே

மாயாயாம் குண ஸாம்யருத்34 விக்ருதௌ த்வய்-யாகதாயாம் லயம் |

நோ ம்ருத்யுச்'ச ததா3(அ)ம்ருதம் ச ஸமபூ4ன்னாஹ்னோ ந ராத்ரே: ஸ்தி2தி:

தத்ரைக: த்வம் அசி'ஷ்யதா2 கில பரானந்த3 ப்ரகாசா'த்மனா ||"

[பெருமானே! முந்தைய மகா பிரளயத்தின்போது, பிரபஞ்சம் என்பது நாம ரூபங்களோடு இல்லாமல் இருந்தது. அப்பொழுது மாயை என்னும் மூலப் பிரக்ருதி உன்னிடமிருந்து பிரியாவண்ணம், புலன்களைக்கொண்டு நேராகவோ, அனுமானத்தாலோ அறியப்படாத ஒன்றாய் விளங்கிற்று. பிறப்பிறப்பு நிலைகளும் இல்லை; பகல் இரவு எதுவும் இல்லை. பரமானந்த சோதியாக நீ ஒருவனே பொலிந்து நின்றாய். — ஸ்ரீமத் நாராயணீயம், 5.1]

என்னும் பாடலால் குறிப்பிடுகிறார். (இங்கு ’மாயை’ என்றும், வேறு சில நூற்களில் ’தமஸ்’ என்றும் குறிப்பிடப்பட்டுள்ள மூலப் பிரக்ருதியின் இலக்கணமும் பெயரும் நவீன விஞானிகளால் கூறப்படும் "Dark matter" என்பதன் இலக்கணத்தோடும் பெயரோடும் ஓரளவு உடன்படுவது சிலருக்கு ஆர்வமூட்டலாம். தமஸ் என்பதற்கு இருள் என்றும் பொருள் உண்டு.)

வராகக் கற்பம்

இனி அடுத்து வரும் வரிகளில் கீரந்தையார் சிருஷ்டி குறித்துப் புராணங்களில் கூறப்படும் செய்தியொன்றைச் சுருக்கமாக எடுத்துள்ளார். ஊழியின் தொடக்கத்தில் படிப்படியாகப் பஞ்ச பூதங்கள் முறையாகத் தோன்றிய பிறகு, நான்முகக் கடவுளை நாரணன் பிறப்பித்தான். அதன் பிறகு, நான்முகக் கடவுள் நாரணன் துணை கொண்டு மரீசி முதலான பிரஜாபதிகளையும் சுயம்பு மனுவையும் (ஸ்வாயம்பு4வ மநு) படைத்தார். காச்யப பிரஜாபதியின் ஒரு மனைவியாகிய அதிதிக்குத் தேவர்களும், மற்றொரு மனைவியாகிய திதிக்கு அசுரர்களும் பிறந்தனர். சுயம்பு மனுவும் பிரஜாபதிகளும் மேற்கொண்டு சிருஷ்டியைத் தொடரும் வேளையில் அசுரர்களுள் ஒருவனாகிய இரணியாட்சன் பூமியைக் கடலுக்குள் ஆழ்த்தி ஒளித்து வைத்தான். நிலம் மறைந்ததால் மேற்கொண்டு பிராணிகளின் சிருஷ்டி தடுக்கப்பட்டது. கல்பத்தின் தொடக்கமாகிய அக்காலத்தில் வாசுதேவன் வெண்ணிற வராகமாய் அவதரித்து அசுரனை வென்று மூழ்கியிருந்த நிலத்தைத் தன் கொம்பிலே உயர்த்தி மீட்டான் என்பது பல புராணங்களில் வரும் செய்தி. வராக அவதாரம் பற்றிய குறிப்புகள் ஆங்காங்கு யஜுர் வேதத்திலும் காணப்படுகிறது.

varaha-avataram

ஒரு கல்பமானது நான்முகனாகிய பிரம்மாவுடைய ஒரு நாள். இது பத்தாயிரம் கலியுகக் காலங்களுக்குச் சமமாகும். கல்பத்தின் தொடக்கத்தில் திருமால் வெண்ணிற வராகவுருக் கொண்டவதரித்து உலகம் காத்ததால் இக்கல்பத்திற்குச் "சுவேத வராக கல்பம்" என்று பெயர். வைதீக ஒழுக்கத்தில் சங்கல்பம் செய்யும்பொழுது "ச்'வேத வராஹ கல்பே" என்று கூறும் வழக்கும் இன்றுவரை கடைபிடித்து வரப்படுகிறது. சங்ககாலமாகிய அந்நாளிலேயே இப்பெயர் வழங்கப்பட்டு வந்திருப்பதைப் பரிபாடல் கீழ்க்கண்ட வரிகளில் படம்பிடித்துக் காட்டியுள்ளது:

"நெய்தலும், குவளையும், ஆம்பலும், சங்கமும்,    

மை இல் கமலமும், வெள்ளமும், நுதலிய    

செய் குறி ஈட்டம் கழிப்பிய வழிமுறை

கேழல் திகழ்வரக் கோலமொடு பெயரிய

ஊழி ஒருவினை உணர்த்தலின், முதுமைக்கு

ஊழி யாவரும் உணரா;

ஆழி முதல்வ! நிற் பேணுதும், தொழுது."

[— பரிபாடல், 2:13-19]

"மகா பிரளயம் முடிந்தபிறகு ‘நெய்தல்’, ‘குவளை’, ‘ஆம்பல்’, ‘சங்கு’, ‘கமலம்’, ‘வெள்ளம்’ என்றெல்லாம் கல்ப காலங்களுக்குப் பெயரிடப்பட்ட வண்ணமே, இப்பொழுது நிகழும் கல்பத்தின் பெயரானது நீ வராகவுருவெடுத்து மண் மடந்தையை மீட்டு வந்த ஒரே ஒரு செயலைக் குறிக்கும் எனப் பார்க்கும்போது, எண்ணற்ற அருஞ்செயல்களைப் புரிந்துள்ள உனது காலத்தை எத்தனை கல்ப காலங்களாலும் அளவிட முடியாது எனத் தெரிகிறது. ஆகையால் உன் முதுமையை எவராலும் உணர இயலாது." என்பது இவ்வரிகளின் பொருள். இதன் மூலம் மாயோன் அழிவற்று விளங்கி நிற்கும் பரம்பொருளே என்னும் கொள்கையையும் அவன் அவதாரச் சிறப்பையும் காட்டுகிறார் சங்கப்புலவர். இக்கருத்தையே ஆதி சங்கரருடைய சீடரான சுரேஷ்வரர் பிருகதாரண்யக வார்த்திகத்தில்  "முதியவனாகவும் அழிவற்றவனாகவும் விளங்கும் திருமால்" ("புராண: சா'ச்'வதோ விஷ்ணு:" — 1.4.135, 2.1.268; "புராண: சா'ச்'வதோ அசிந்த்ய:" — 4.4.1288-1289) என்று கூறியுள்ளார்.

கம்பரின் புலமையும் ஞானமும்

இங்கு எடுக்கப்பட்டுள்ள இரண்டாம் பரிபாடலில், தத்துவ விளக்கங்களுக்கு இடையே கீரந்தையார் நகைச்சுவையாகப் பாடும் பாடற்பகுதி ஒன்று வருகிறது:

"ஓங்குயர் வானின் வாங்குவிற் புரையும்

பூணணி கவைஇய வாரணி நித்தில

நித்தில மதாணி அத்தகு மதிமறுச்

செய்யோள் சேர்ந்தநின் மாசில் அகலம்

வளர்திரை மண்ணிய கிளர்பொறி நாப்பண்

வைவான் மருப்பின் களிறுமணன் அயர்பு

புள்ளி நிலனும் புரைபடல் அரிதென

உள்ளுநர் உரைப்போர் உரையொடு சிறந்தன்று"

[திருமாலே! மிக உயர்ந்த விசும்பிடத்தே இடப்பட்ட வளைந்த இந்திர வில்லையொத்த பல்வேறுநிற ஔிகளையுடையதும், பூணப்படுவனவாகிய பிற அணிகலன்களாலே அகத்திடப்பட்டதுமாகிய உன் மார்பானது, நெடிய அழகிய

முத்துமாலைகளாலே இயற்றப்பட்ட 'நித்தில மதாணி' என்னும் அழகிய திங்களுக்குற்ற மறுவைப் போன்று இலத்சுமிப் பிராட்டியைக் கொண்ட உன் குற்றமற்ற மார்பானது, 'ஆதி வராகமாகப் பூமியை நீ மணந்தாய்' என்று கூறுவோர் கூற்றுடன் தகுமோ? தகாது. — பரிபாடல், 2:28-35]

arulmigu-srimushnam-bhoovaraha-swami

'திருமகள் உன் மார்பில் இருக்க, நீ பூமிப் பிராட்டியை மணந்தாய் என்னும் கூற்று தகாது' என்று நகைச்சுவையாக, வஞ்சிப்புகழ்ச்சியணியில் பாடியுள்ளார். வேதம் தமிழ் செய்த நம்மாழ்வாரோ, ‘(வாமன அவதாரத்தில்) அளந்தும், (வராக அவதாரத்தில்) நீரிலிருந்து தூக்கி எடுத்தும், (பிரளய காலத்தில்) தன்னுள்ளே மறைத்து வைத்தும், (சிருஷ்டிக் காலத்தில் மீண்டும்) வெளிப்படுத்தியும், மிகப்பெரிய திருத்தோள்கள் நிரம்பும்படி தழுவிக்கொள்பவனாய்’ பூதேவியிடம் பெருமாள் கொண்டுள்ள அன்பை வருணிக்கிறார்:

கிடந்திருந்துநின்றளந்து கேழலாய்க்கீழ்புக்

கிடந்திடும், தன்னுள்கரக்குமுமிழும்,

தடம்பெருந்தோளாரத்தழுவும் பாரென்னும்

மடந்தையை, மால்செய்கின்றமாலார்க்காண்பாரே.

[— திருவாய்மொழி, 2.8.7]

பரிபாடலில் உள்ள விளையாட்டான புகழ்ச்சியை, திருவாய்மொழியில் நம்மாழ்வார் பாடிய விதத்துடன் இணைத்துக் கம்பநாட்டாழ்வார் பின்வரும் பாடலில் பாடுகிறார்:

"அரவாகிச் சுமத்தியால் அயில்எயிற்றின் ஏந்துதியால்

ஒருவாயின் விழுங்குதியால் ஓரடியால் ஔித்தியால்

திருவான நிலமகளை இஃதறிந்தாற் சீறாளோ!

மருவாருந் துழாயலங்கன் மணிமார்பின் வைகுவாள்"

[பாதாள லோகத்தில் அனந்தன் என்னும் பெயருடன் பாம்பு உருவம் கொண்டு பூமியைத் தாங்கி நிற்கிறாய். வராக மூர்த்தியாகிக் கொம்பிலே உலகத்தைத் தாங்குகிறாய். பிரளய காலத்தில் விழுங்கி ’ஞாலமுண்டவன்’ எனப் புகழ் பெற்றாய். வாமன அவதாரத்தில் ஒரே அடியால் பூமியை உன் திருவடிக்கீழ் ஒளியச் செய்தாய். நீ பூமிப் பிராட்டி மீது இவ்வளவு அன்பு வைத்திருப்பதை உன் திருமார்பில் வீற்றிருக்கும் திருமகள் அறிந்தால் சினம் கொள்ள மாட்டாளோ? — கம்பராமாயணம்: III, விராதன்வதைப் படலம், 58]

இவ்வாறு பலவிடங்களில் கவிச்சக்கரவர்த்தியாகிய கம்பர் சங்கத் தமிழர் மரபையும், ஆழ்வார்கள் வழிமொழிந்ததையும், வேத வேதாந்த இதிகாச-புராண செய்திகளையும் இணைத்தே தம் காவியத்தில் பல பாடல்களைப் படைத்துள்ளார். வைணவ சம்பிரதாயத்தில் கம்பருக்கு இருந்த ஈடுபாட்டினையும் இவற்றிலிருந்து நாம் அறிகின்றோம். மேலும் பல உதாரணங்களைப் பின்வரும் பகுதிகளில் காண்போம்.

வேள்விகளுக்கு நாயகன்

ராகப் பெருமானின் வீரச்செயலைக் கண்டு மகிழ்ந்த யோகிகளும் முனிவர்களும், வேதத்தில் பூர்வ பாகத்தில் கூறப்பட்ட வேள்விகளெல்லாம் திருமால் சொரூபமே என்றும், வேள்விகளை வியாபித்து நின்று பலன்களை அளிப்பவனும் அவனே என்றும் பாடுவதாக பராசர பகவான் விஷ்ணு புராணத்தில் காட்டுகிறார் [விஷ்ணு புராணம், 1.4.31-34]. இவ்வாழ்த்து மகாபாரதப் பகுதியாகக் கருதப்படும் ஹரிவம்சத்திலும் வராக அவதாரம் படிக்கப்படும் இடத்தில் உள்ளது. 'யக்ஞ வராகப் பெருமாள்’, ’யக்ஞ மூர்த்தி’ என்ற பெயர்களும் திருமாலுக்கு இதனால் ஏற்படுகின்றன. உலகவழக்கிலும் ’யக்ஞ நாராயணன்’ என்ற பெயரையும் சிலர் சூட்டிக்கொள்வதைப் பார்க்கிறோம். சுருதிகளின் சாரமாகிய பகவத் கீதையிலும் கண்ணனும், "அதி4யஜ்ஞோ அஹம் ஏவ" [அதியக்ஞம் எனப்படுவதும் நானே — பகவத் கீதை, 8.4] என்றான். இவ்விடத்திற்கு சங்கரர் பாஷ்யத்தில் "யஜ்ஞோ வை விஷ்ணு:" [வேள்வியைக் குறிக்கும் யக்ஞ சப்தம் விஷ்ணுவே — யஜுர் வேத தைத்திரீய சம்ஹிதை, 1.7.4] என்ற வேதவாக்கைச் சான்றாக எடுத்துள்ளார். பல இடங்களில் கண்ணன் இதை மேலும் வலியுறுத்துகிறான் (4.24, 9.16).

vedic ritual

கேழலாய் உருவெடுத்து ஊழிக்காலத்தில் உலகம் காத்தவனை வேள்விநாயகனாகச் சங்கப் புலவரும் விஷ்ணு புராணத்தில் வருவதைப் போல வராகவவதாரத்தை விளக்கும் பகுதியிலேயே பாடுகிறார்:

"செவ்வாய் உவணத்து உயர் கொடியோயே!

கேள்வியுள் கிளந்த ஆசான் உரையும்,

படி நிலை வேள்வியுள் பற்றி ஆடு கொளலும்,

புகழ் இயைந்து இசை மறை உறு கனல் முறை மூட்டித்

திகழ் ஔி ஒண் சுடர் வளப்பாடு கொளலும்,

நின் உருபுடன் உண்டி;

பிறர் உடம்படுவாரா

நின்னொடு புரைய

அந்தணர் காணும் வரவு."

[சிவந்த வாயை உடைய கருடனைக் கொண்ட உயர்ந்த கொடியை உடையவனே! வேள்வியாசிரியன் கூறும் மறைமொழி நினது உருவமாகும்; வேள்வித் தூண் நீயே ஆகலான், அதன்கட் பிணிக்கப்படும் விலங்கு நினது உணவாகும்; அவ் வேள்வியின்கண் வேதமுறைப்படி அந்தணர் வளர்க்கும் வேள்வித்தீ நீ அவ் வந்தணர் கண்கூடாகக் காணும் பொருட்டுத் தோன்றும் வெளிப்பாடாகும் — பரிபாடல், 2:60-68]

இச்செய்தியையே திருமழிசை ஆழ்வாரும்,

"வேதமாகி வேள்வியாகி விண்ணினோடு மண்ணுமாய்

ஆதியாகி யாயனாய மாயமென்ன மாயமே."

[ — திருச்சந்த விருத்தம், 34]

என்றும், வால்மிகி முனிவர்,

"த்வம் யஜ்ஞஸ் த்வம் வஷட்காரஸ் த்வம் ஓம்கார: பராத்பர: |

ப்ரப4வம் நித4னம் வா தே நோ விது3: கோ ப4வானிதி ||"

["நீயே யக்ஞமூர்த்தி. ’வஷட்’ என்னும் (வேள்வி நடத்துபவரால் உச்சரிக்கப்படும்) சொல் நீயே. நீயே ஓங்காரம். மேலானவைகளுக்கும் மேலானவன் நீயே. உன்னுடைய முதலும் முடிவும் எவரும் அறியார்." — வால்மிகி இராமாயணம், 6.117.20]

என்றும் வலியுறுத்தி உள்ளனர். கம்பரும்

'மண்பால்-அமரர் வரம்பு

        ஆரும் காணாத,

எண்பால் உயர்ந்த, எரி

        ஓங்கும் நல் வேள்வி

உண்பாய் நீ; ஊட்டுவாய் நீ;

        இரண்டும் ஒக்கின்ற

பண்பு ஆர் அறிவார்?

        பகராய், பரமேட்டி!

[— கம்பராமாயணம்: III, கவந்தன் வதைப் படலம், 47]

என்னும் விருத்தத்தில் வேள்விகளெல்லாம் திருமால் சொரூபம் என்று பாடுகிறார் (பரமேட்டி = பரம்பொருள்; ’பரமேஷ்டி’ எனும் வடமொழிச் சொல் திரிபு).

திருமாலின் ஆயிரம் பெயர்களை அறிவிக்கும் விஷ்ணு சஹஸ்ரநாம அத்தியாயத்திலும், வேள்விமுதல்வனாகப் பரந்தாமனைப் பல நாமங்களில் படிக்கப்பட்டது. இந்நாமங்களுக்குச் சங்கரர் எழுதியுள்ள உரையிலிருந்து சுருக்கமான விளக்கங்கள் பின்வருபவை. பரிபாடல் வரிகளுக்கும் இவ்வுரைப்பகுதிகளுக்கும் உள்ள ஒற்றுமை தெளிவாக விளங்குகிறது:

இஷ்ட: (308-வது நாமம்) — வேள்விகளால் ஆராதிக்கப்படுபவன்.

ஹவிர்ஹரி: (359) — யாகத்தில் அக்கினியில் இடப்படும் அவிப்பாகத்தை (ஹவிர்பாகத்தை) எடுத்துக் கொள்பவன்.

யஜ்ஞ (445, 971) — வேள்விகளின் சொரூபமாக இருப்பவன்; வேள்வி ரூபத்தில் எல்லா தேவர்களையும் போஷிப்பவன்.

யஜ்ஞபு4க் (979) — வேள்விகளில் வழங்கப்படும் அவியுணவை நுகர்பவன்.

யஜ்ஞாங்க3: (974) — வராகமூர்த்தி ரூபத்தில் வேள்விகளை அங்கமாகக் கொண்டவன்.

இத்தகைய விளக்கங்களுக்கெல்லாம் அடித்தளமாக விளங்கும் தத்துவம் என்னவென்றால், நாரணனே அனைத்துயிர்களுக்கும் எல்லாப் பலன்களையும் அளிப்பவனே என்பதாம். அங்ஙனமே, அந்தந்த தேவதைகளைக் குறித்துச் செய்யப்படும் யாகங்கள் எல்லாம் எல்லா தேவர்களுக்கும் உயிராய், அவர்களுக்கு உள்ளிருந்து நியமிப்பவனாக விளங்கும் மாயவனைக் குறித்ததே என்பதாகும். கண்ணன் இதைக் கீதையில் தெளிவாக விளக்குகிறான். இதை,

"ஆங்கனைத்து வேள்விகளுக்கு மாராத் தியனானே

பாங்கதனி னானே பலங்கொடுப்பே — னீங்கென்னை

யிவ்வா றறியா ரிதனாலத் தத்துவத்தின்

அவ்வா நழுவுவர்சார் வற்று."

[ — பகவத் கீதை வெண்பா, 9.24]

என்ற அழகிய மணவாள ஜீயரின் தமிழ் வெண்பாவிலிருந்து அறியலாம் (ஆராத்தியன் = வணங்கப்படுபவன்). மிகவும் கடினப்பட்டுப்  பொருளீட்டி யாகங்களைச் செய்தே கண்ணனை வழிபடவேண்டும் என்பதும் இல்லை; அவன் எளிதில் அடையக்கூடியவன். அவரவர்களுக்கு இயன்ற ஒரு இலையையோ, மலரையோ, கனியையோ, அல்லது மிஞ்சிப்போனால் சிறிது தண்ணீரையோ பக்தர்கள் தூய மனத்துடன் அவனுக்குச் சமர்ப்பித்தால் மிகப்பெரிய பேறாகிய வீட்டின்பத்தைக் கண்ணன் தருகிறான் என்பதை,

"பத்ரேஷு புஷ்பேஷு ப2லேஷு தோயேஷு அக்ரீத லப்4யேஷு ஸதை3வ ஸத்ஸு

4க்தி-ஏக லப்4யே புருஷே புராணே முக்த்யை கிமர்த2ம் க்ரியதே ந யத்ன"

[பத்திரம் (இலை), புஷ்பம், பழம், தண்ணீர் முதலானவைகளைக் கொண்டு பக்தி செய்வதாலேயே எளிதில் அடையப்படுபவனாக அந்த புராண புருஷன் இருக்க, மோட்சத்தைப் பெறும் முயற்சியில் ஏனோ இறங்குவதில்லை!]

என்ற மகாபாரத வசனம் கூறுகிறது. கீதையிலேயே கண்ணனும்,

"பத்திரமும் பூவும் பழமும் புனலுமெனக்

கொத்தியலும் பத்தி யுடனுதவி — சுத்திய

தூமனத்தான் றன்ததனைத் துய்ப்பனவ னப்பத்தி

யாமனத்த தென்றுநா னார்ந்து."

[ — பகவத் கீதை வெண்பா, 9.26]

என்று உரைத்துள்ளான்.

இன்னுமொரு செய்தி இங்கு நோக்கத்தக்கதாகும். விஷ்ணுவுக்கும் வேள்விக்கும் உள்ள தொடர்பை வைத்து சில அதிசயமான விளக்கங்களை வேதாந்த ஆச்சாரியர்கள் அளித்துள்ளனர். கீதையில் (3.9), "யக்ஞத்திற்காகச் (வேள்விக்காகச்) செய்யப்படும் வினைகளைத் தவிர மற்ற கர்மங்கள் ஒருவனைப் பிறவிக்கடலில் ஆழ்த்துபவை" என்று உள்ளது. இங்கு ஆதி சங்கரர், "யக்ஞம் என்று இங்கு சொல்லுவது பகவானாகிய விஷ்ணுவையே. ’யஜ்ஞோ வை விஷ்ணு:’ என்று வேதம் கூறுகின்றதன்றோ. ஆகையால், பகவானை அடையும்/ஆராதிக்கும் பொருட்டு செய்யப்படும் கர்மங்களைத் தவிர மற்றவை சம்சாரத்தில் ஆழ்த்தும்." என்றே வியாக்கியானம் செய்துள்ளார்! பதிமூன்றாம் நூற்றாண்டில் ஆனந்தகிரி என்னும் பண்டைய அத்வைத சம்பிரதாய ஆசாரியாரும் "யக்ஞம் முழுமைபெறுவதன் பொருட்டு செய்யப்படும் கன்ம வினைகள் ஞானியைச் சம்சாரக் கடலில் ஆழ்த்துவதில்லை" என்று தொடங்கும் 4.23-ஆம் கீதை வாக்கியத்திற்கு, "யக்ஞம் என்ற பதத்தால் குறிக்கப்படும் பகவான் நாராயணனை, விஷ்ணுவை, உகப்பிக்கச் செய்யப்படும் வினைகள்" என்று தமது பாஷ்ய டீகையில் வழங்கியிருப்பதும் நோக்கத்தக்கது. 'இறைவனை உகப்பிப்பதைத் தவிர தாழ்ந்த மற்ற பலன்களில் ஈடுபடாமல் கடமைகளை செய்து மக்கள் நற்கதி ஏந்தவேண்டும்' என்பதே அவர்கள் நோக்கம்.

(தொடரும்)

9 Replies to “பழந்தமிழர் கண்ட வேதாந்தக் கருமணி – பகுதி 3”

 1. வராக அவதாரம் பற்றீய பல இலக்கியச் செய்திகளை அருமையாகத் தொகுத்தளித்திருக்கிறீர்கள். அருமை. வராக வழிபாடு மிகத் தொன்மையானதும் பாரதத்தின் பல பகுதிகளிலும் பரவியிருந்த ஒன்றாகும். குப்த, சாளுக்கிய, ஹொய்சள கால வராகச் சிற்பங்கள் ஏராளம் கிடைக்கின்றன.

  சமீபத்தில் ஒரு வைணவ அறிஞர் வீட்டிற்குச் சென்ற போது அங்கு coffee table book அளவில் இருந்த ஒரு புத்தகத்தைப் பார்த்தேன்…

  Varaha Images in Madhya Pradesh: An Iconographic Study – By Haripriya Rangarajan.

  அழகிய புகைப்படங்கள். நூலும் மிக நேர்த்தியாக எழுதப் பட்டிருந்தது. மத்தியப் பிரதேசம் என்ற ஒரு மாநிலத்தில் மட்டுமே எத்தனை எத்தனை வராகங்கள்! கண்டு மலைத்தேன். சில சிற்பங்களில் வராகத்தின் வாய்க்குள்ளும், உடல்மீதும் பிரபஞ்ச இயற்கை முழுவதையும் சித்தரிக்கும் காட்சிகள் செதுக்கப் பட்டிருந்தன. ஒவ்வொரு சிற்பமும் ஒரு கலை அற்புதம்! பூமிப் பிராட்டியைத் தாங்கி நிற்கும் 4-5-6ம் நூற்றாண்டு வராகச் சிற்பங்கள் பலவற்றில் பூமி தெளிவாக கோள வடிவில் காட்டப் பட்டிருந்தது. மேற்கத்தியர்கள் இந்த அறிவியல் கருத்தாக்கத்திற்கு வந்து சேர்வதற்குப் பல நூற்றாண்டுகள் முந்தைய காலத்தவை அவை.

 2. //பூமிப் பிராட்டியைத் தாங்கி நிற்கும் 4-5-6ம் நூற்றாண்டு வராகச் சிற்பங்கள் பலவற்றில் பூமி தெளிவாக கோள வடிவில் காட்டப் பட்டிருந்தது.//

  ஆரியபடரின் ‘சூரிய சித்தாந்தத்திலிருந்து’ அண்மையில் சில பகுதிகளைப் படிக்க நேர்ந்தது. மிகத் தெளிவாக பூமியை ‘கோளம்’ என்று ஐந்தாம் நூற்றாண்டிலேயே அவர் கூறியுள்ளார்.

 3. ஸ்ரீ கந்தர்வன் நமஸ்காரம்

  பழந்தமிழர் கண்ட வேதாந்தக் கருமணியின் மூலம் மிகச்சுவையாக தமிழ்ச்சங்க நூல்களிலும் வேத இதிஹாஸ புராணங்களிலும் சொல்லப்படும் விஷயங்களின் சாம்யதையை தெளிவாக எடுத்துரைக்கிறீர்கள். நன்றிகள் பல. வராஹப் பெருமான் சம்பந்தமாக விஷ்ணு ஸஹஸ்ரநாமம், உபநிஷத், விஷ்ணுபுராணம், பகவத்கீதை போன்ற பல நூல்களில் சொல்லப்பட்ட விஷயங்கள் பரிபாடல், கம்பராமாயணம் மற்றும் திருவாய்மொழி போன்ற நூல்களில் சொல்லப்பட்ட விஷயங்களுடன் கருத்தொருமிக்க இருப்பது ஆஸேது ஹிமாசலம் நாம் ஒருவரே என்பதை த்ருடமாக்குகிறது.

  ஸ்ரீமத் பாகவதத்தின் த்ருதீய ஸ்கந்தத்திலும் (பதின்மூன்றாவது அத்யாயம்) ஹிரண்யாக்ஷ வதத்திற்குப் பிறகு வராஹப்பெருமானை ரிஷிகள் “ஜிதம் ஜிதம் தே” உமக்கு ஜெயம் என வராஹப்பெருமானை யக்ஞ ஸ்வரூபமாகவே ஸ்துதி செய்கிறார்கள்.

  க்ருஷ்ணம் வந்தே ஜகத்குரும்.

 4. இது ரிக் வேத காலத்திலேய பிரசித்தம்

  ரிக் வேத மந்த்ரம்

  த்ரினாபி சக்ரம் அஜரமனர்வம் யத்ரேமா
  விஷ்வா பூனானி தரது: 1.164.2

  this clearly proves that rig vedic people had the knowledge that the planets had elliptical shape and also travelled in an elliptical path. thrinaabi (elliplse needs three points)

  சூர்ய சித்தாந்த ஸ்லோகம்

  யோஜனானி ஷதான்த்யஷ்டௌ பூகர்ண த்விகுணாணி ச
  தத்வத்கர்தோ தஷகுணாத் பதம் பூபரிதிர் பவேத்

  deduces the circumference of the earth to 4.008 X 10^7 meters

 5. திரு கிருஷ்ணகுமார்,

  தங்கள் ஆதரவுக்கு நன்றிகள்.

  // ஸ்ரீமத் பாகவதத்தின் த்ருதீய ஸ்கந்தத்திலும் (பதின்மூன்றாவது அத்யாயம்) ஹிரண்யாக்ஷ வதத்திற்குப் பிறகு வராஹப்பெருமானை ரிஷிகள் “ஜிதம் ஜிதம் தே” உமக்கு ஜெயம் என வராஹப்பெருமானை யக்ஞ ஸ்வரூபமாகவே ஸ்துதி செய்கிறார்கள். //

  இப்பொழுது தான் பார்த்தேன். கட்டுரையிலேயே குறிப்பிட்டிருக்கலாம் ஏனோ விட்டுப் போய்விட்டது.

  அதே போல, இன்னொரு கம்பராமாயணச் செய்யுளையும் சான்றாக மேற்கோள் காட்டியிருக்கலாம். ஈரானிய வதைப் படலத்தில் கீழ்க்கண்ட விருத்தம் வருகிறது:

  ‘”மந்திரம் மா தவம் என்னும் மாலைய,
  தந்துறு பயன் இவை, முறையின் சாற்றிய
  நந்தல் இல் தெய்வம் ஆய், நல்கும் நான்மறை
  அந்தம் இல் வேள்விமாட்டு அவிசும் ஆம்-அவன்.”

 6. // ஈரானிய வதைப் படலத்தில் //

  தட்டச்சுப் பிழை… இரணிய வதைப் படலம் என்று வர வேண்டும். ஈரானில் குண்டு போடக் காத்திருக்கும் CIA பற்றிச் சொல்லவில்லை. 🙂

 7. Sri கந்தர்வன் சார்
  Namaskaram-s. Indeed grateful for your depth and width of knowledge that proves a boon to people like me untrained in our own philosophic granaries; and also for several ideas and hints for further reading into the realms of our vedic heritage and vedic vision thai is portrayed throughout your article, beautifully.
  We are blessed to have chanced to stumble onto your writings through a college friend of mine from Guindy Engineering.
  Many respectful regards’
  M C மணி

 8. Shri M C Mani,

  It is indeed very heartening to read your appreciation. One of the major incentives for me in writing these articles is being able to reach people like you who find at least a little bit of delight and benefit from my work.

  However, I myself am a novice in these matters. I have had the great fortune of reading the works of many giants in this field, and of having the opportunity to collect and compile information – rather like a poor man who accidentally stumbled upon a chest of vast treasures.

  If you haven’t done so already, kindly read all the four articles that have been published thus far in this series (btw… more articles in this series are on their way)

  It is disheartening to see our people being led astray by so-called “dravidian movement” and pseudo-secular anti-Hindu influences, hence it is better that we arm ourselves with a wealth of information to counter people who are plotting to make us deny our own Tamil Vedic heritage.

 9. Namaskaram-s.
  I need azhvargal avatharamum,vazhkalamum……….pls update the full history about azhvargal.
  regagrds,
  vinoth.k
  sriperumbudur,
  kanchipuram (dist)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *