வெள்ளிமலை என்றவுடன் திருக்கயிலாயம்தான் ஹிந்துக்களின் நினைவிற்கு வரும். அதேபோல, கன்யாகுமரி மாவட்டத்தில் ஒரு வெள்ளிமலை ஹிந்துக்களின் கலங்கரை விளக்காக ஒளிர்ந்து வருகிறது. அங்கு விவேகானந்தா ஆசிரமம் அமைந்துள்ளதும் அதன் மூலம் சமய வகுப்பு எனும் பண்பாட்டுக் கல்வி போதித்து வருவதும் இனிய செய்திகள்.
அந்த ஆசிரமத்தின் நிர்வாகி சுவாமி சைதன்யாநந்தா அண்மையில் ஈரோடு வந்திருந்தார். அவரை நேரில் சந்திக்கச் சென்றோம். எளிமையான தோற்றம், மலர்ந்த முகம், அன்பான பேச்சு, ஆழமான கருத்தோடு அவர் நம்மிடம் பேசியதை தமிழ்ஹிந்து வாசகர்களோடு பகிர்ந்து கொள்கிறோம்.
-சு.சண்முகவேல், ஈரோடு.
சுவாமி சைதன்யாநந்தாஜி மகராஜ்: ஓர் அறிமுகம்
சிறுவயது முதல் ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் தொடர்புடையவர். மாணவப் பருவத்தில் நெருக்கடி நிலையை எதிர்த்துப் பணியாற்றியவர். பட்டப் படிப்பு முடித்த பிறகு சுவாமி மதுரானந்தரின் அன்பால் ஈர்க்கப்பட்ட சுவாமி சைதன்யாநந்தர், தன்னை ஸ்ரீ விவேகானந்தா ஆசிரமத்தில் இணைத்துக் கொண்டார்.
1989-இல் சுவாமி மதுரானந்தரிடம் சந்நியாச தீட்சை பெற்று, 1998 மே மாதம் முதல், ஆசிரமத்தின் தலைமைப் பொறுப்பேற்று செயலாற்றி வருகிறார். பொதுவாக, துறவிகள் அன்பை மட்டுமே போதிப்பார்கள். ஆனால், சுவாமிஜி அன்பை மட்டுமின்றி வீரத்தையும் அறிவுறுத்துவார்.
சுவாமிஜி, வெள்ளிமலை ஆசிரமத்தைப் பற்றி கொஞ்சம் சொல்லுங்கள்…
ஸ்ரீ விவேகாநந்த ஆசிரமம் 1940-இல் ஸ்ரீமத் சுவாமி அம்பானந்த மகராஜ் அவர்களால் நிறுவப்பட்டது.
1874-இல் கேரளாவில் பிறந்த சுவாமி அம்பானந்தருக்குப் பெற்றோர் இட்ட பெயர் மதுரநாயகம் பிள்ளை. கல்லூரிப் படிப்பை முடித்து, சென்னையில் தங்கி மேற்படிப்பைத் தொடர்ந்தார்.
அவ்வேளையில் (1897இல்) அமெரிக்காவிலிருந்து திரும்பிய சுவாமி விவேகானந்தருக்கு, சென்னையில் அளிக்கப்பட்ட வரவேற்பு நிகழ்ச்சியில் அம்பானந்தர் கலந்துகொண்டு சுவாமிஜியை தரிசித்தார். அதனால் ஈர்க்கப்பட்ட அம்பானந்தர் ஒருநாள் சுவாமிஜியைக் கடற்கரையில் சந்தித்துப் பேச முயன்றபொழுது “பின்னர் பேசலாம், போய்ப் பாடங்களைப் படியுங்கள்” எனக் கூறி ஆசிர்வதித்து அனுப்பியுள்ளார்.
படிப்பை முடித்து ஆசிரியர் பணி செய்து வந்தாலும், சுவாமிஜியின் நினைவிலேயே வாழ்ந்த அம்பானந்தரை ஸ்ரீமத் நிர்மலானந்த சுவாமிகள் 1914-இல் கல்கத்தா அழைத்துச் சென்றார். அங்கு அன்னை சாரதா தேவியிடம் மந்திர தீட்சை பெற்றார்.
1932-இல் ஆசிரியர் பணியைத் துறந்து திருவனந்தபுரம் அருகேயுள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண ஆசிரமத்தில் சேர்ந்தார். 1935-ஆம் ஆண்டு ஸ்ரீமத் நிர்மலானந்த சுவாமிகள் துறவற தீட்சை வழங்கி, ஸ்ரீ அம்பானந்த சுவாமிகள் எனப் பெயரிட்டார். 1940-இல் தைப்பூசத் திருநாளில் வெள்ளிமலையில் ஆசிரமம் அமைத்தார்கள். அம்பானந்தஜி மகராஜ் 1951 மே 6-ஆம் நாள் மகாசமாதி அடைந்தார். அதன் பிறகு, சுவாமி மதுரானந்தர் ஆசிரமத்தின் தலைமைப் பொறுப்பேற்றார்.
மதுரானந்த சுவாமிகள் 1922-இல் கன்னியாகுமரி மாவட்டத்தில் பிறந்தவர். சிறு வயதிலேயே ஆன்மீகத்தில் ஈடுபாடு கொண்டிருந்த மதுரானந்தர், தனது 12வது வயதில் புலால் உணவைத் தவிர்த்தார். கல்லூரி படிக்கும் காலத்தில் (1940) 18 வயது இளைஞரான மதுரானந்தர், சுவாமி அம்பானந்தரை சந்தித்து ஆசி பெற்றார். பின்னர் படிப்பைத் தொடர்ந்து, பி.ஏ. தத்துவ இயலில் பட்டம் பெற்று, 1945-இல் ஸ்ரீ விவேகாநந்த ஆசிரமத்தில் தொடங்கப்பட்ட பள்ளிக்கு ஆசிரியராகப் பொறுப்பேற்றார்.
1951-ம் ஆண்டு, ஆக்ஸ்ட் மாதம் பெளர்ணமி நாளில் ஸ்ரீமத் அம்பானந்த சுவாமிகளின் சகோதரத் துறவிகள் மூலம் முறைப்படி துறவற தீட்சை பெற்று, ‘ஸ்ரீமத் சுவாமி மதுரானந்தர்’ எனப் பெயர் பெற்றார். 1951-இல் அம்பானந்தரின் மகாசமாதிக்குப் பிறகு மதுரானந்தர், ஆசிரமத்தின் தலைமைப் பொறுப்பேற்று நடத்தி வந்தார்.
கல்லூரி காலத்தில் சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்றது, கன்யாகுமரி விவேகானந்தர் பாறையில் நினைவுச் சின்னம் எழுப்புவதற்கு முதலில் ஏற்படுத்தப்பட்ட குழுவில் இணைந்து தொண்டாற்றியது, 1993-இல் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடுகள் கட்டிக் கொடுத்தது, பல்வேறு கோவில் கும்பாபிஷேகங்கள் செய்தது என, சுவாமியின் சமுதாயப் பணிகள் எண்ணிலடங்காதவை. சுருக்கமாகச் சொன்னால் மதுரானந்தரை அறிந்திராத மக்கள் கன்னியாகுமரி மாவட்டத்தில் இல்லை எனலாம்.
1981-இல் இந்து சமய இளைஞர் இயக்கம் துவங்கப்பட்டது. 1984-இல் சமயக் கல்வியை போதிக்கும் ‘ஹிந்து தர்ம வித்யாபீடம்’ நிறுவப்பட்டது. 1994-இல் நெட்டாங்கோட்டில் துறவறம் மேற்கொள்ளும் தாய்மார்களுக்காக ஸ்ரீ சாரதேஸ்வரி ஆசிரமத்தை நிறுவினார். மதுரானந்த சுவாமி 19 நபர்களுக்கு துறவற தீட்சையும், நூற்றுக் கணக்கானோருக்கு மந்திர தீட்சையும் வழங்கியுள்ளார். சுவாமி மதுரானந்தர் 1999 ஜுன் 2ஆம் நாள் ஸ்ரீ ராமகிருஷ்ணரில் ஐக்கியமானார்.
நான் 1981-இல் ஆசிரமத்தில் சேர்ந்து, 1989-ல் மதுரானந்தரிடம் துறவற தீட்சையும் ‘சுவாமி சைதன்யாநந்தர்’ என்ற நாமமும் பெற்று, 1998 மே மாதம் முதல் ஆசிரமத்தின் பணிகளைக் கவனித்து வருகிறேன்.
சுவாமி, சமய வகுப்பு என்றால் என்ன?
புற சமயத்தவர்களின் மதமாற்றம் என்பது ஹிந்து மதத்திற்குப் பெரும் சவாலாக இருக்கிறது. அதற்கு வறுமை, நோய், வேலைவாய்பு, வரதட்சிணை போன்ற பிரச்சினைகள்தான் காரணமா என யோசித்தால் இவை அனைத்து மதங்களிலுமே இருக்கின்றன. ஆனால் அதற்காக அவர்கள் மதம் மாறுவதில்லை. ஹிந்துக்கள் மட்டுமே மதம் மாற்றப்படுகிறார்கள்.
அதுமட்டுமின்றி, ஒரு ஹிந்து பெண் மற்ற மதத்து ஆண்களையோ, மற்ற மதத்துப் பெண்கள் ஹிந்து ஆண்களையோ காதலித்தால், அங்கு ஹிந்து மதத்தைச் சார்ந்தவர் மட்டுமே கட்டாயமாக மதம் மாற்றப்படுகிறார். ஆக, மதமாற்றத்திற்கு மேற்கண்ட பிரச்சினைகள் காரணம் அல்ல என்பது தெளிவாகப் புரிந்தது.
விவேகானந்தா கேந்திரம் சார்பாக கிராமங்களுக்குச் சென்று, நான்கு நாள் இளைஞர் முகாம்கள் நடத்தினோம். அதன்மூலம் ஹிந்துக்களுக்கு மதத்தை போதிக்க வேண்டிய கட்டாயமும் அவசியமும் புரிந்தது.
கிறிஸ்தவர்களுக்கு சர்ச்சிலும், முஸ்லிம்களுக்கு மதரஸாவிலும் மதம் போதிக்கப்படுகிறது. ஆனால் ஹிந்துகளுக்கு முறையாக மதத்தைப் போதிக்கக்கூடிய அமைப்பு இல்லை. ஹிந்துகளும் தங்கள் மதத்தைப் பற்றித் தெளிவாகப் புரிந்துகொண்டால் மதம் மாற மாட்டார்கள். அதனால்தான் குறைந்தபட்சம் ஒரு ஹிந்து தெரிந்திருக்க வேண்டியவை தொகுக்கப்பட்டு ஐந்து நிலை கொண்ட பாடத்திட்டத்தினை உருவாக்கினோம்.
எப்போது இந்த வகுப்புகளைத் துவக்கினீர்கள்?
முன்பு ‘கீதா வகுப்பு’ என்ற பெயரில் ஆங்காங்கே கோயில்களில் சமயச் சொற்பொழிவுகள் நடந்து வந்தன. 1981-ஆம் ஆண்டு நாம் அதை ஒழுங்குபடுத்தி ஒரு புத்தகமாக வெளியிட்டு அதன்மூலம் தேர்வுகள் நடத்தப்பட்டன.
1984-இல் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு குழு மூலம், ஒவ்வொரு வயதினருக்கும் ஏற்றாற்போல, தொடக்கநிலை, இளநிலை, வளர்நிலை, உயர்நிலை, முதுநிலை என ஐந்து நிலைகளாக பாடத்திட்டங்கள் உருவாக்கப்பட்டு, அதனடிப்படையில் தற்போது பாடங்களும், தேர்வுகளும் நடத்தப்பட்டு வருகின்றன. இதே ஆண்டில், ‘இந்துசமயக் கல்வி அறக்கட்டளை’ பதிவு செய்யப்பட்டது.
சமய வகுப்பில், வாரத்திற்கு இரண்டு மணி நேரம் மாணவர் வகுப்பு, மாதம் ஒருமுறை ஆசிரியர்களுக்கான பயிற்சி, ஆண்டுக்கு ஒருமுறை தேர்வு நடத்தி சான்றிதழ்- பரிசுகள் வழங்குதல், ஐந்து நிலை தேறியவர்களுக்கு ‘வித்யாஜோதி’ பட்டம் வழங்குதல் என இக்கல்வி போதிக்கப்படுகிறது.
சமய வகுப்பு ஆசிரியர்களுக்கு இதற்காக எந்தவிதக் கட்டணமும் கொடுப்பதில்லை. ஒவ்வொருவரும் விருப்பப்பட்டே இதைச் செய்கிறார்கள்.
பட்டமளிப்பு விழா ஆண்டுதோறும் கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெறும். மாணவர்கள், பெற்றோர் என 15 ஆயிரம் பேர் கலந்து கொள்வார்கள். பட்டம் பெறும் மாணவர்கள் தனது பெற்றோருக்கு பாதபூஜை செய்து, அக்னி சாட்சியாக, “நான் இந்து சமுதாயத்திற்காகப் பாடுபடுவேன். பிரசாரம் செய்வேன்” என உறுதி எடுத்துக்கொண்டு பட்டம் பெறுகிறார்கள்.
எந்தெந்தப் பகுதிகளில் சமயவகுப்பு நடக்கிறது?
மதமாற்றங்களினால் பெரிதும் பாதிக்கப்பட்டதில் கன்னியாகுமரி மாவட்டமும் ஒன்று. ஆகவே எங்கள் பணியை முதலில் இங்கிருந்தே துவங்கினோம். தற்போது கன்யாகுமரி மாவட்டத்தில் 750 வகுப்புகள் நடந்து வருகின்றன. சென்னை, கோவை, ஈரோடு, தூத்துக்குடி போன்ற பகுதிகளில் 60 வகுப்புகளும், கேரளாவில் 40 வகுப்புகளும், ஸ்ரீலங்காவில் சில வகுப்புகளும் நடந்து வருகின்றன.
சமயவகுப்புகளுக்கு சமுதாயத்தில் எந்த அளவுக்கு வரவேற்பு இருக்கிறது?
ஆரம்ப காலத்தில் கொஞ்சம் சிரமமாகத்தான் இருந்தது. ஏனென்றால் 80 சதவிகித ஆசிரியர்கள், தாய்மார்கள். வகுப்பு எடுக்க பக்கத்து ஊர்களுக்குச் சென்று வரும்போது சமூக விரோதிகளின் கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளாக வேண்டி இருந்தது. அப்போது அவர்களுக்கு நாம் ஆதரவாகத் துணை நின்றோம்.
இப்போது சூழ்நிலை மாறியுள்ளது. குடும்பத்திலும் ஆதரவான சூழ்நிலை, சமுதாயத்தில் ‘சமயவகுப்பு ஆசிரியர்’ என்றால் மரியாதை கிடைக்கிறது.
சமயவகுப்பின் மூலம் சமுதாயத்தில் என்ன மாற்றம் நிகழ்ந்துள்ளது?
இதன்மூலம் நமது குழந்தைகளுக்குச் சமய அறிவு வளர்கிறது, சமய ஒற்றுமை மேலோங்குகிறது, ஜாதி வேற்றுமை ஒழிகிறது, மதமாற்றம் தடுக்கப்படுகிறது. அதுமட்டுமின்றி மாற்று மதத்தவர் மற்றும் நாத்திகவாதிகளின் கேள்விகளுக்கும் கிண்டல்களுக்கும் பதிலடி கொடுக்கப்படுகிறது.
முன்பெல்லாம் கோயில் திருவிழா என்றால், ஆடல், பாடல் என பெரும் தொகை வீணடிக்கப்பட்டு வந்தது. சமயவகுப்பு மற்றும் நமது தொடர் பிரசாரத்தின் மூலம் அதுபோன்ற நிகழ்ச்சிகள் குறைந்துள்ளன. அந்தப் பெரும் தொகை சேமிக்கப்பட்டு, கல்வி, வீடு கட்டுதல், ஏழைக் குழந்தைகளுக்கு டெபாசிட் செய்தல் போன்ற சமுதாய நலத்திட்டங்களுக்காகச் செலவிடப்படுகிறது.
நம்மிடம் பூசாரிப் பயிற்சி பெற்றவர்கள் திருமணம் நடத்துவதிலிருந்து, கோயில் கும்பாபிஷேகம் வரை நடத்திவைக்கிறார்கள். பிராமணன் என்பது பிறப்பை வைத்து முடிவு செய்வதில்லை என்பதை ‘ஹிந்து தர்ம வித்யா பீடம்’ உறுதியாக அறிவிக்கிறது. இதன்மூலம் ஜாதி ஏற்றத் தாழ்வுகள் வேரறுக்கப்படுகின்றன.
ஆசிரமத்தின் சார்பாக வேறு என்னென்ன பணிகள் செய்கிறீர்கள்?
- சமய வகுப்பு தவிர, தாய்மார்களிடையே பக்தியைப் பெருக்குவதற்காகத் திருவிளக்கு பூஜை நடத்த பயிற்சி கொடுக்கப்படுகிறது. சுபநிகழ்ச்சிகள் நடக்கும் வீடுகளில் மங்களப் பிரார்த்தனையும் துக்கம் நடந்த வீடுகளில் ஆத்மசாந்திப் பிரார்த்தனையும் நடத்த பயிற்சி கொடுக்கப்படுகிறது.
- கோவில் பூசாரிகளுக்கான பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன. (2000 ஆண்டிலிருந்து 2007 வரை இலங்கை அரசின் அழைப்பின் பேரில், ஆண்டுதோறும் நமது ஆசிரமத்திலிருந்து சென்று, பூசாரிகளுக்குப் பயிற்சி கொடுத்து வந்தோம்).
- விநாயகர் சதுர்த்தி அன்று குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது. துர்காஷ்டமி தினத்தை மகளிர் தினமாகக் கொண்டாடுகிறோம். விஜயதசமி வித்யா தினமாகக் கொண்டாடப்படுகிறது. அந்நாளில் குழந்தைகளுக்கு ‘ஏடு தொடங்குதல்’ எனும் வைபவம் நடத்தி வைக்கப்படுகிறது.
- ஆண்டுதோறும் மாணவர் மாநாடு நடத்தப்படுகிறது. மாநாட்டில் ஒன்றிய அளவினான பேச்சு, குழுப்பாடல், மாறுவேடம், நடனம் ஆகிய போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்கப்படுகின்றன. மாணவர்களுக்கு ஆண்டுதோறும் கல்வி ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது.
- சமயவகுப்புச் செய்திகளை மக்களிடையே கொண்டு செல்வதற்காக, ‘வேதமுரசு’ எனும் மாத இதழ் வெளிவந்து கொண்டிருக்கிறது. மேலும் நிறைய ஆன்மிக நூல்களை வெளியிட்டும், விற்பனையும் செய்து வருகிறோம்.
- அதுமட்டுமின்றி கடந்த காலங்களில் ஹிந்து மதத்திலிருந்து மாற்று மதத்திற்குச் சென்றவர்கள், ஹிந்து இயக்கங்களின் துணையோடு மீண்டும் தாய்மதம் திருப்பும் பணியையும் செய்து வருகிறோம்.
ஹிந்து இயக்கங்களுடன் உங்கள் உறவு எவ்வாறு உள்ளது?
நமது மாவட்டத்தைப் பொருத்தவரை, அனைத்து இயக்கங்களும் நமது பணிக்கு உறுதுணையாக இருக்கிறன. அதேபோல் நாமும் நாம் வேறு, நமது இயக்கங்கள் வேறு என்று பிரித்துப் பார்ப்பதில்லை.
உதாரணமாக, ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் காவிக்கொடியை வேறு அமைப்புகள் பயன்படுத்துவதில்லை. ஆனால் ஹிந்து தர்ம வித்யா பீடத்தின் பட்டமளிப்பு விழாவிற்கு சங்கத்தின் காவிக் கொடிதான் ஏந்திச்செல்லப்படுகிறது.
ஹிந்து இயக்கங்கள் நடத்தும் நிகழ்ச்சிகளில் நாம் கலந்து கொள்கிறோம். நமது நிகழ்ச்சிகளில் அனைத்து இயக்கத்தினரும் கலந்து கொள்கின்றனர்.
ஆசிரமம் எவ்வாறு நிர்வாகிக்கப்படுகிறது?
இதற்கென மூன்று அறக்கட்டளைகள் அமைக்கப்பட்டுள்ளன.
1) ஸ்ரீ விவேகாநந்தா ஆசிரம் – தினசரி பூஜை, நூல் நிலையம் பராமரிப்பு, சமய சொற்பொழிவுகள் போன்ற பணிகள் இதன்மூலமாக மேற்கொள்ளப்படுகின்றன.
2) ஹிந்து தர்ம வித்யா பீடம் – 5 ஆண் துறவியர்கள் ஆசிரமத்தில் தங்கியுள்ளனர். இதன்மூலம் சமய வகுப்பு சார்ந்த பணிகள், திருவிளக்கு பூஜைகள், பிரார்த்தனை போன்ற பணிகள் நடக்கின்றன. மேலும் ஸ்ரீ சாரதேஸ்வரி ஆஸ்ரமும் நிர்வகிக்கப்படுகிறது. இங்கு 5 பெண் சந்நியாசிகள் தங்கி சேவைபுரிந்து வருகிறார்கள்.
3) ஸ்ரீ ராமகிருஷ்ண சேவா சங்கம் – கல்வி உதவி, திருமண உதவி, வீடுகள் கட்டுதல் போன்ற நலத்திட்ட உதவிகள் இதன்மூலமாக மேற்கொள்ளப்படுகின்றன.
இதற்காக ஆன்மீக அன்பர்களிடமிருந்து நன்கொடை பெறப்படுகிறது. தினசரி பூஜைக்காக ரூ.1008, ஆலோசனைக் குழு உறுப்பினராக ரூ.1000, வேதமுரசின் டெபாசிட் சந்தாதாரராக ரூ.1000, நிரந்தர வைப்பு நிதி மற்றும் நன்கொடைகள் பெறப்படுகின்றன.
நாகர்கோவிலிலிருந்து மேற்கே 17 கி.மீ. தூரம், தக்கலைக்குத் தெற்கே 10 கி.மீ. தூரம், இரணியல்–முட்டம் சாலையில் 5 கி.மீ. தூரத்தில் வெள்ளிமலை ஆசிரமம் அமைந்துள்ளது. இங்கு தற்போது ஸ்ரீ ராமகிருஷ்ணர் ஆலயம் கட்டும் பணி நடந்து வருகிறது.
ஸ்ரீ ராமகிருஷ்ணர் ஆலயம் கட்டுவதன் நோக்கம் என்ன?
முதலில் நம்மிடம் உள்ள நூல்களைப் பராமரித்து வைப்பதற்காக ஒரு நூலகம் கட்டவே யோசித்தோம். பிறகு ஒவ்வொன்றாக சேர்த்து ஸ்ரீ ராமகிருஷ்ணர் ஆலயம், ஸ்ரீ சுவாமி மதுரானந்தர் மணி மண்டபம், நூலகம், தியான மண்டபம், பண்பாட்டு வகுப்பெடுக்கும் ஆசிரியர்கள் கூட்டம் நடத்த ஓர் அரங்கம் என ஒரு கோடி ரூபாய் மதிப்பீட்டில் திருப்பணிகள் செய்ய முடிவெடுக்கப்பட்டது.
2007-ஆம் ஆண்டு திரு.சி.மணி அவர்களைத் தலைவராகக் கொண்ட திருப்பணிக்குழு அமைக்கப்பட்டது. 23-4-2007 அன்று திருவனந்தபுரம் ராமகிருஷ்ணா மிஷன் ஸ்ரீமத் சுவாமி சக்ரானந்தஜி மகராஜ், திருவிதாங்கூர் மகாராஜா மார்த்தாண்ட வர்மா ஆகியோர் பூமிபூஜை செய்து திருப்பணிகளைத் துவக்கி வைத்தனர்.
தற்போது 70 சதவிகிதப் பணிகள் நிறைவடைந்துள்ளன. மீதமுள்ள 30 சதவிகிதப் பணிகளைப் முடிப்பதற்காக நிதி திரட்டி வருகிறோம். இறைவன் அருளால் துவங்கப்பட்ட இப்பணி சீரோடும் சிறப்போடும் நடந்து வருகிறது.
திருவருளும் குருவருளும் கூட்டிவைக்க, இறை அன்பர்களின் உதவியோடும் 2012-ஆம் ஆண்டு பிப்ரவரி 7-ஆம் நாள் கும்பாபிஷேகம் நடத்தத் திட்டமிட்டுள்ளோம்.
திருப்பணிக்காக பத்தாயிரம் ரூபாய்க்குமேல் வழங்குபவர்கள் படம் திறப்பு விழா மலரிலும், ஐம்பதாயிரம் ரூபாய்க்குமேல் வழங்குபவர்கள் பெயர் கல்வெட்டிலும் பொறிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இப்புனித வேள்வியில் தங்களை இணைத்துக்கொள்ள விரும்பும் அன்பர்கள், நன்கொடைகள் அனுப்பலாம் என்றார்.
-சுவாமிகளுடனான நேர்காணல் அனுபவம் மிகுந்த ஊக்கமூட்டுவதாக அமைந்திருந்தது. ஹிந்து என்ற பெருமித உணர்வு நெஞ்சில் நிறைய விடைபெற்றோம்.
நன்கொடை அனுப்புவோர் கவனத்துக்கு…
“ஸ்ரீ ராமகிருஷ்ண சேவா சங்கம்” என்ற பெயரில், ஸ்ரீ விவேகானந்த ஆசிரமம், வெள்ளிமலை, கல்படி அஞ்சல், கன்னியாகுமரி மாவட்டம்- 629204 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
டிமாண்ட் டிராப்ட் (டி.டி.) அனுப்புவோர், நாகர்கோவிலில் மாற்றத்தக்கதாக அனுப்புதல் நலம். நன்கொடைகளுக்கு 80ஜி வரிவிலக்கு உண்டு.
தொடர்பு எண் : 04651-237411, 214632.
ஆசிரமத்தின் சேவைப்பணிகள் குறித்து மேலும் தெரிந்துகொள்ள வலைத்தளம்: www.vivekanandaashram.org
மின்னஞ்சல் : swamichaitanyananda@gmail.com
vellimalai aasirammathin sevai panigal pirammippa irukkirathu…
avargalathu seavi thodara valthukkal.
ramakrishnar alayam amaya manamuvanthu uthavuvom.
kumbabisegathil kalanthu kondu punniyam peruvom.
அய்யா வெள்ளிமலை பத்தி எதுவுமே சொல்லாமல் விட்டு விட்டது வேதனை தருகிறது இன்னும் விளக்கி இருக்கலாம்
நல்ல நேர்காணல்.
சன்முகவேலுக்கு பாராட்டுக்கள்.
-சேக்கிழான்
நான் வெளி மாநிலத்தில் இருக்கிறேன்
எனக்கு சமயவகுப்பு சார்ந்த சில புத்தகங்கள் தேவை யாரை தொடர்பு கொள்ள வேண்டும் சொல்லுங்கள்