ஒரு நாள் மாலை அளவளாவல் – 1

[கடந்த 30.4.2011 அன்று வெங்கட் சாமிநாதன்: வாதங்களும் விவாதங்களும் என்ற் புத்தக வெளியீட்டை ஒட்டி சென்னை வந்திருந்த வெங்கட் சாமிநாதனை ஒரு நாள் மாலை கே.எஸ் சுப்பிரமணியம் வீட்டில் சந்தித்து அளவளாவியதில் ஒரு பின் மாலை கழிந்தது. கலந்து கொண்டவர்கள் திலீப் குமார், எம்.ராஜேந்திரன், கே. எஸ். சுப்பிரமணியம், எஸ் சாமிநாதன், பின் வெ.சா வின் நெடு நாளைய நண்பர் துரை ராஜ். அந்த அளவளாவலின் ஒரு பகுதியைக் கீழே காணலாம்]

திலீப் குமார்: சாமிநாதன், நேற்று நீங்க பேசினபோது, ஒரு விஷயம் சொன்னீங்க. எப்போதுமே, என்ன சொன்னாலும் என்னை விமரிசகன்னே பாக்கறாங்க. ஆனால் நான் என்னை விமர்சகன்னு நினைத்துக்கொண்டு எதுவுமே சொன்னதில்லை. எழுதினதில்லை. ஒருத்தனின் பொது அறிவுக்கு என்ன படுமோ அதைத் தான் சொல்லி வந்திருக்கிறேன் எனக்கு ஏதும் extraordinary intellectual brilliance-ஓ அல்லது artistic sensibility-ஓ இருப்பதாக நான் நினைக்கவில்லை………

-- திலீப் குமார் --

வெ.சா: கடவுள் ஒண்ணும் எனக்கு Extraordinary intellectual brilliance-ஓ sharp artistic sensibility-ஓ கொடுத்துவிடலை. சாதாரணமாக எனக்குப் புரிகிற விஷயங்களை, எல்லாருக்கும் புரியக்கூடிய விஷயங்களைத் தான் சொல்லி வந்திருக்கிறேன். நான் நம்புகிறேன். ஆனால் மற்றவங்க அதைச் சொல்றதில்லை.. சொல்லலைன்னா அதுக்கு காரணம், கட்சிக் கட்டுப்பாடு, ஜாதிப் பார்வை, கொள்கை, இன்னும் ஏதும் ஆசைகள். அவங்க வளர்ந்த விதம், இப்படித் தான் பார்க்கணும், இப்படித்தான் சொல்லணும்னு அப்படி ஒரு தீர்மானம் அவங்களுக்கு. , எவ்வளவு பேசினாலும், ”மக்களுக்குப் புரியாததை எதுக்குய்யா எழுதணும்,” என்கிற மாதிரியான சில கோஷ வார்த்தைகள் தயாராக அவங்க ஒவ்வொருத்தர் கிட்டேயும் இருக்கும். , இனிமே இதுக்கு ஒரு பதிலுமே இல்லை, இருக்கமுடியாது என்கிற மாதிரி. ஆனால் அப்படி இல்லை.

திலீப்: என்னை விமரிசகனா பாக்காதீங்கன்னு சொல்றீங்க.

வெ.சா: ஆமாம் அது என்னவோ போல இருக்கு.

திலீப்: அப்ப, விமர்சனம் மாதிரி விஷயங்களைப் பற்றி, சாமிநாதன், உங்க கருத்து என்ன? நீங்கள் ஒத்துக்கறேங்களோ இல்லையோ……

சுப்ரமண்யம்: இப்படி அதைப் பார்க்கலாம். எதையும் நான் எப்படி பார்க்கிறேன்.? ஏன் அப்படிப் பார்க்கிறேன். அது மற்றவங்களுக்குப் போய்ச்சேரணும் இந்த வழிலே அதைப் பார்க்கலாமே. சாமிநாதன் சொல்ற போக்கிலேயே சொல்லட்டும்.

வெ.சா: நேத்திக்குப் பேசினவங்கள்ளாம் இவர் ஏதோ பெரிசா பண்ணிருக்காரு. 50 வருஷமா உழைச்சிருக்காரு. எங்களுக்குத் தெரியாத விஷயங்களையெல்லாம் சொல்லி ஒரு புதிய பாதையை அமைத்திருக்காருண்ணு எல்லாம் சொன்னாங்க. ஆனா இதை யாருமே செய்திருக்கக் கூடும் என்ற நினைப்புதான் எனக்கு. அப்போது பட்டது. இந்த புத்தகத்தைப் ( வாதங்களும் விவாதங்களும்) படிச்சப்போ சிலர் சில தவறான அபிப்ராயங்களையும் சொல்லியிருக்காங்கண்ணு தெரியறது. அதைப் பின்னாலே பார்க்கலாம். நான் எழுதியிருப்பது யாருமே செய்திருக்கக் கூடிய விஷயங்கள் தான். எனக்கு சில விஷயங்களில் புதுசாக exposure கிடைச்சிருக்கு. எனக்குக் கிடைத்த exposure,-, இதை தமிழில் எப்படிச் சொல்றதுன்னு தெரியலை, என்னோடு இருந்த, இருக்கும் மற்றவர்களுக்கும் கிடைச்சதுதான். இருந்தாலும் அவர்கள், தங்களைச் சுற்றி தமக்கு பழக்கமான ஒரு உலகத்தை அது குடியாத்தமோ இல்லை, பாளையங் கோட்டையோ உருவாக்கிக்கொண்டு அந்த cocoon-க்கு ள்ளேயே இதமா இருந்த ஜனங்களும் இருக்காங்க.

ஆனால் எனக்கு புதிதாக என் எதிரில் ஒன்று பட்டதென்றால், ஒரு வியப்பு, ஒரு ஆச்சரியம். இந்த வியப்பு யாருக்குமே ஏற்பட்டிருக்கக் கூடிய ஒன்று தான். உடனே நான் அதன் பின்னாலே போறேன். நான் அதைத் தேடிப் பெறவில்லை. அது என் முன்னாலே வந்து நின்றது. முன்னால் வந்து நின்றதில் எனக்கு ஒரு கவர்ச்சி, ஒரு ஈடுபாடும் அக்கறையும் ஏற்பட்டது. அது புதிதாக இருந்தது. இதைப் பத்தி தெரியணும், இந்த அனுபவம் எனக்குத் திரும்பத் திரும்பக் கிட்டணும் என்று நான் அதன் பின்னால் போகிறேன்.

இதைத் தேடல் என்று சொல்வது தவறு. என்னமோ தெரியலை. இதுக்கு என்ன வார்த்தை சொல்றது? என்னுடைய வாழ்க்கையிலே ஒவ்வொரு கட்டத்திலும் இப்படி ஏதோ ஒன்று எதிர்ப்படறது. நான் அதைத் தேடிப் போகலை. நான் அதன் பின்னால் போகிறேன். அப்பவும் அந்த பாதையில் நேராகத் தான் போகிறேன் என்றில்லை. அந்த வழியில் திடீரென்று வேறொன்று எதிர்ப்படும். உடனே அதுவும் என்னை இழுத்துக்கொண்டு போகிறது. இப்படித் தான் நான் ஈடுபாடு கொண்டதெல்லாம் நேர்ந்திருக்கிறது.

எழுதத் தொடங்கினது பற்றிச் சொன்னேன். எழுதவேண்டும் என்ற ஆசையால் எழுதினவன் இல்லை. ஏதோ ஒரு பெரிய விமர்சகனாக வரணும்னு ஆசைப்பட்டு திட்டம் போட்டு செய்ய. செல்லப்பா சுதேசமித்திரன் இதழில் கிட்டத்தட்ட 40 – 50 பக்கம் நாலு வாரம் தொடர்ந்து எழுதினார். அதற்கு மேல் எழுத பத்திரிகைக் காரங்க இடம் கொடுக்கலை. உடனே அவருக்கு நாமே ஏன் ஒரு பத்திரிகை தொடங்கக் கூடாது என்று எழுத்து பத்திரிகை ஆரம்பித்தார் செல்லப்பா. இதெல்லாம் எனக்கு பின்னால் தெரிந்த விஷயங்கள். தற்செயலாக ஒரு நாள் தில்லியிலே ஒரு வாசக சாலையில் எழுத்து கிடந்தது. பார்த்தேன். அது ஒரு கார் ஷெட். யாராவது நினைச்சுப் பார்த்திருப்பாங்களா? ஒரு வாசக சாலையிலே ஆனந்த விகடன், இருக்கும் கல்கி இருக்கும். குமுதம் இருக்கும். ஆனால் எழுத்து? அந்த கார்ஷெட் வாசக சாலை இருந்த வீட்டுச் சொந்தக் காரருக்கு செல்லப்பா வத்தலக் குண்டு கால நண்பர். நண்பராச்சேன்னு செல்லப்பா அவருக்கும் ஒரு எழுத்து இதழை அனுப்பியிருக்கார்.

-- சி.சு.செல்லப்பா --

தெரிஞ்சவங்களுக்கெல்லாம் கல்யாணப் பத்திரிகை ஒண்ணு அனுப்பறதில்லையா? அந்த மாதிரி. இல்லாட்டா அவருக்கும் எழுத்து பத்திரிகைக்கும் ஒரு சம்பந்தமும் கிடையாது. அவரும் இதுவும் ஒரு பத்திரிகைன்னு கல்கி, குமுதத்தோடு இதையும் சேத்துப் போட்டிருக்கார். அது என் கண்ணிலே பட்டது. அது எனக்குப் பிடிச்சது. நான் அதன் பின்னாலே போறேன். உடனே எழுத்துக்கு நான் சந்தா அனுப்பினேன். . அடுத்த மாதமோ என்னவோ நான் ஜம்முவுக்கு மாற்றலாகிப் போனேன். ஜம்முலே இருக்கறபோது எழுத்திலே வந்த ஒரு கதை எனக்குப் பிடிக்கலை. ரொம்ப சாதாரண விஷயம். சொன்னதையே சொல்லிக்கொண்டிருப்பது போல பட்டது. நான் செல்லப்பாவுக்கு எழுதினேன் – ஏன் இதையெல்லாம் போடறீங்க?

ஒரு நல்ல சிறுகதை எப்படி இருக்கணும்னு சுதேசமித்திரனில் 40 பக்கம் எழுதினவர் தன் பத்திரிகையில் இப்படி ஒரு கதையைப் போடறதான்னு எனக்கு எரிச்சல். செல்லப்பா அந்த கடிதத்தை பிரசுரம் செய்து என்னையும் எழுதச் சொன்னார். இப்படி எங்காவது நடக்குமா? ஒரு பத்திரிகையின் தேர்வைக் கேள்வி எழுப்பி எழுதியவனை அந்தப் பத்திரிகை ஆசிரியர் எங்காவது தன் பத்திரிகைக்கு எழுதச் சொல்வாரா? அது நடந்தது என் விஷயத்தில். நான் என்ன அவரைக் கண்டித்து எழுதினால் என்னை எழுதச் சொல்வார் என்றா திட்டமிட்டு எழுதினேன்? எனக்கு எரிச்சல். அந்த எரிச்சலைச் சொன்னேன். அவர் பக்கத்திலே இருந்திருந்தால் பேசியிருக்கலாம். இல்லை. அதனால் எழுதினேன். “என்னய்யா படம். நல்லாவே இல்லய்யா? என்று படம் பார்த்து திரும்பும் போது கூட இருக்கறவர் கிட்டே சொல்றதில்லையா? அப்படியே இன்னும் சில விஷயங்கள். பின்னால் தொடர்ந்து நடந்தது. சிதம்பர ரகுநான் ஒரு சமயம் உளறிக் கொட்டியிருந்தார் மனுஷன். எனக்கு எரிச்சல். செல்லப்பாவுக்கு எழுதினே.ன். அதையும் அவர் போட்டார். சிதம்பர ரகுநாதனுக்கு படு கடுப்பு,. செல்லப்பாவைக் கேட்டாராம். “இதிலே என்ன இருக்குன்னு போட்டிங்க”ன்னு. “சரி இதுவும் வரட்டும்னு தான் போட்டேன்”னு சொன்னாராம். செல்லப்பா. மறுபடியும் அவருக்கு கடுப்பு. செல்லப்பா எனக்குச் சொன்னார்.. சரி, எரிச்சல் படற விஷயமானாலும் நமக்கு இங்கே வரவேற்பு இருக்குன்னு தெரிஞ்சது.

திலீப்: சாமிநாதன் தன் முதல் புத்தகத்தை (பாலையும் வாழையும்) சிதம்பர ரகுநாதனுக்குத் தான் dedicate பண்ணியிருக்கிறார்.

வெ.சா: ரகுநாதனோட சாந்தி பத்திரிகையில் அவர் எழுதியிருந்ததைப் படித்த போது, என் மனசிலே இருக்கிறதை யெல்லாம் இந்த ஆள் எழுதுகிறாரே, இதையெல்லாம் வெளிலே தைரியமா சொல்லலாம் போல இருக்கிறதே என்று என்னை எண்ண வைத்த முதல் ஆள் அவர். அதை நான் சொல்லித் தான் ஆக வேண்டும். அது 1950 களின் ஆரம்பத்தில் பின்னால் தான் அவர் கெட்டுப் போனது. கெட்டுப் போனால் அதையும் உடனே சொல்ல வேண்டியது தானே. காரசாரமாக கிண்டல் பன்ணி எழுதினேன். செல்லப்பாவும் அதையும் போட்டுட்டார். அதுக்காக நான் க்ரிட்டிக் ஆயிட்டேன்னு அர்த்தமா?

திலீப்: நவீன தமிழ் இலக்கிய பாரம்பரியத்தில் உங்களுடைய role –ஐ எப்படி பார்க்கிறீங்க? க்ரிட்டிக் இல்லேன்னு சொல்றீங்க. இவ்வளவு பண்ணிட்டீங்க. நீங்க க்ரிட்டிக் ஆயிட்டிங்க சாமிநாதன். There is no going back now.

வெ.சா. There is no going back -னா I don’t disown anything ஆனால் லேபில் ஒண்ணும் ஒட்டாதீங்க.

திலீப்: நான் இப்ப சொல்றேன். நாம 3000 வருஷம் பாரம்பரியம் உள்ள ஒரு மொழிலே எழுதிட்டு இருக்கோம். அதிலே நாம் இப்போ எந்த நிலையிலே இருக்கோம்னு ஒரு சின்ன sense கிடைச்சா சுவாரஸ்யமாக இருக்குமேன்னு அந்த அர்த்தத்திலே கேக்கறேன்.. க.நா.சு. இருகார் செல்லப்பா இருக்கார் அதுக்கு அப்புறம் நீங்க….

வெ.சா: க.நா.சு. தன்னை க்ரிட்டிக்குன்னு சொல்லவே இல்லையே இதையெல்லாம் பேசவேண்டியிருக்கு. வேறு யாரும் பேசலையே. ஆகையினாலே நான் பேசறேன் அப்படீன்னுதானே அவர் சொன்னார்.

திலீப்: அதுக்குத் தான் மெனக்கெட்டிருக்கீங்களே. எல்லாத்தையும் படிச்சு…

வெ.சா. சொல்ல வேண்டியது இருக்கு. விஷயம் இருந்தது. நான் பேசணும்னு இருந்தது எனக்கு ஒருத்தர் இடம் கொடுக்கறாரே, சரிதான்னு நினைச்சேன். இப்ப சுப்பிரமணியம் இங்க எனக்கு இடம் கொடுக்கலேன்னா நான் இங்கே வந்து உடகார்ந்து கொண்டிருப்பேனா. எனக்கு இடம் கொடுங்கய்யான்னு நான் கேட்கலே, இல்லையா? அவர் வந்து சொல்றார் எழுதுங்கன்னு. நான் யார் வீட்டுக் கதவையாவது தட்டினேனா? எனக்கு நேர்ந்தது அப்படி.. நேர்ந்தது என்றால், சொல்றதுக்கு இடம் கொடுக்கறார்யா, பின் ஏன் சொல்லக்கூடாது.? இல்லையா? சொல்றதுக்கு விஷயம் இருக்கு. எனக்கு பிடிக்கலைன்னா பிடிக்கலை. நீங்கள் இடம் கொடுக்கலைன்னா, பக்கத்திலே இருக்கிற நம் நண்பர்களோடு பேசிக்கொள்றோம். பேசறதுக்கு பதிலா எனக்கு ஒரு மேடை கொடுக்கறீங்க. அவ்வளவு தானே.

ஒருத்தர் என்னைக் கேட்டார். நான் திரும்பத் திரும்ப சொன்னேன். அது அவருக்கு புரியவே மாட்டேன்கிறது. “அதைப் பத்தி ஏன் எழுதலை, இதைப் பத்தி ஏன் எழுதலேன்னு. நான் ஏன் எழுதணும்? நான் அதைப் பாக்கலைய்யா. அது ஒரு காரணம். நான் பார்த்ததா நீங்களா நினைச்சுக்கறீங்க. நான் பார்த்திருந்தாலும் நான் ஏன் அதைப் பத்தி எழுதி்ய்ய்யே ஆகணும்? ஆயிரம் புஸ்தகம் இருக்கு. நீ ஏன் அதைப் படிக்கலே? ஏன அதைப் பத்தி எழுதலேன்னெல்லாம் என்னைக் கேட்க முடியாது. நான் என்ன S.H.O வா? எங்கே என்ன கொலை, குத்து நடந்ததுன்னு F.I.R எழுதியாகணும் பின்னே போய் புலன் விசாரணை செஞ்சாகணும்னு. என்னை யாராவது இந்த வேலைக்கு நியமனம் பண்ணியிருக்காங்களா? “இல்லைங்க, ‘இல்லைங்க”ன்னு சொல்லிட்டே சொன்னதையே திரும்பத் திரும்ப சொல்றார் அவர்.

It was a horror. அந்த பயங்கரத்தை என்னால் எப்படி சகித்துக் கொள்ள முடியும்? “நீ ஏன் அந்த நாடகத்தைப் பத்தி எழுதலை”ன்னு திரும்பத் திரும்ப கேக்கறார். ஒன்று, நான் அந்த நாடகத்தைப் பார்க்கவில்லை.. பார்த்ததாக நினைத்துக்கொண்டது உங்க தப்பு. நான் அதைப் பார்த்திருந்தாலும் கூட அதைப் பற்றி எழுதுவதும், எழுதாது இருப்பதும் என் சுதந்திரம். என் உரிமை அதுபற்றி எழுதுவேனா, இல்லை எழுதாமல் இருப்பேனா என்பது. நான் அதை அலட்சியம் பண்ணலாம். அதையும் நீங்கள் கேள்வி கேட்க முடியாது. நான் தவிர்த்திருக்க விரும்பியிருக்கலாம். ஆனால் அந்த நாடகத்தின் பொறுப்பாளர் வேண்டுமானால் என்னைக் கேட்கலாம். ஏன்யா எழுதலைன்னு. அப்போ நான் வாயைத் திறக்காமல் இருந்தால் அது வேறு விஷயம். அப்படியும் ஒன்றும் நடக்கவில்லை.. அடுத்தாற்போல் அதை எனக்குப் பிடிக்கவில்லை, அதனால் அதைப் பற்றி எழுதாமல் விட்டு விட்டேன். அவரே என்னை எழுதச்சொல்லிக் கேட்டிருந்தால் நான் எழுதியிருப்பேனா? எழுதியிருக்கலாம். எழுதாமல் விட்டிருக்கலாம். நான் என்ன காரணத்தால் எழுதவில்லை என்பதைச் சொல்லி அதை விட்டிருப்பேன். நான் எழுதாமலே இருக்கலாம். இதில் எல்லா சாத்தியங்களும் இருக்கு. நீங்கள் இப்படித்தான் செயல்படணும், இருக்கணும் என்று என்னை யாரும் நிர்ப்பந்திக்க முடியாது . இல்லையா?

ராஜேந்திரன்: நிச்சயமாக முடியாது.
வெ.சா:  இதெல்லாம் என் சுதந்திரம். நான் எனக்குள் தீர்மானித்துக் கொண்டுள்ள சுதர்மம். இதெல்லாம் பத்தி பேசணும். ரொம்ப ஆச்சரியமான விஷயம். தில்லி ரவீந்திர பவன் புல்வெளியிலே 1966 லேன்னு நினைக்கிறேன், நடேசத் தம்பிரானும், கண்ணப்ப தம்பிரானும் ஒரு மணி நேரம் ஆடின தெருக்கூத்துப் பார்த்தேன். அதற்கு முன்னாலே நான் தெருக்கூத்து பார்த்ததே கிடையாது. அப்போதான் பார்த்தேன். It was earth shaking. என்ன தியேட்டர் அது! இது மாதிரி ஒண்ணை இதற்கு முன் நான் பார்த்தது கிடையாது. அதைப் பத்தி எனக்கு ஒன்றுமே தெரியாது. அந்தப் புல்வெளியிலே எழுப்பின ஒரு சின்ன மேடையிலே இந்த இரண்டு பேரும் மஹாபாரதத்தையே நம் முன்னாலே கொண்டு வந்து காட்டின காரியம். இதைப் பத்தி எழுதணும்னு தோணித்து. தில்லிலே ஏகப்பட்டது நடக்கறது. தக்ஷிண் பாரத நாடக சபான்னு ஒண்ணு கிட்டத் தட்ட 15 வருஷமா நாடகம் போட்டுட்டு இருந்தாங்க. ஆனால் ஒரு தடவை கூட நான் போனது கிடையாது. ஒரு தடவை போனபோது ஏண்டாப்பா போனோம்னு ஆச்சு. அதைப் பத்தியெல்லாம் எழுதலை. ஆனால் இதைப்பத்தி எழுதணும். இது தியேட்டர்.

மணி மாதவ சாக்கியார் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தார். இடையில் வேஷ்டி. மேலே ஒரு துண்டு. அவ்வளவு தான். பேசிக்கொண்டிருந்த போது ஒரு விஷயத்தை விளக்க அங்கே உட்கார்ந்த படியே perform பண்ண ஆரம்பித்து விட்டார். அப்போ அவருடைய முக பாவங்களையும் முத்திரைகளையும் நேத்ராபிநயத்தையும் பார்க்க, கண் முன் தெய்வத்தையே பார்ப்பது போல இருந்தது. வேஷம் இல்லை. வெற்று உடம்போடு அபிநயம் மாத்திரம். தான் அது தியேட்டர். சுமார் 20 பேர் நாங்க இருந்திருப்போம். பேசிக்கொண்டிருக்கும் போது திடீரெனெ நடந்தது இது. இப்போ, ‘தெய்வத்தைத் பாத்தியான்னு எவனாவது கேட்டா, கஷ்டம் தான். அது ஒரு moment of trance. கூடியாட்ட அபிநயத்தின் போது. அது தெருக்கூத்தும் போது தான், இல்லை கணியான் ஆட்டத்தின் போது தான் வரும் என்கிறது தப்பு. எந்த ஆழ்ந்த தன்னை மறந்த ஈடுபாட்டிலும் ட்ரான்ஸ் வரும். ஒருத்தனுக்கு புத்தகம் படிக்கிற போது கூட வரும். எழுதும் போது கூட வரும். எதிலும் தன்னை மறக்கும் ஆழ்ந்த ஈடுபாடு இருந்தால் வரும். எத்தகைய ஈடுபாடு, எத்தகைய ஆழம் என்பதைப் பொறுத்தது அது.

அதைப் பத்திக் கூட நான் எழுதியிருக்கிறேன்.  ஜானகிராமன் எழுதற போது சில இடங்களில் பார்க்கலாம். திடீரென எங்கோ தாவுவார். ஒரு இடத்திலிருந்து, ஒரு நிலையிலிருந்து இன்னொன்றுக்குத் தாவுவார். It is a quantum jump. அது நிகழும்னு கூட நாம் எதிர்பார்க்கமுடியாது. ஒரு மணிநேரம் நமக்குத் தெரிந்த விஷயங்களைப் பத்தி நாம் எழுதுகிறோம். ஒரு சம்பவம், ஒரு பாத்திரம், நம்மையறியாதே ஒரு தாவல் இருக்கும். உண்டா இல்லையா? நாம் நினைத்துப் பார்க்காத, திட்டமிடாத ஒரு விஷயம் இருக்கும். That is art.. அந்த trance என்பது எல்லா இடங்களிலும் இருக்கும். அது உங்களுடைய அனுபவத்தையும் ஈடுபாட்டையும் பொருத்தது. அதனால், ”இதைப்பத்தி நினைக்கலே, சும்மா கதை படிச்சிட்டு உட்கார்ந்துட்டு இருந்தேன்”னு சொல்றான் என்றால் அவனுக்கு ஈடுபாடு இல்லைன்னு அர்த்தம். ஒரு கட்டத்துக்கு மேல் அவனால் போகமுடியாதுன்னு அர்த்தம். அவனுக்கு சில விஷயங்களைச் சொன்னாலும் அவனுக்கு ஏறல்லைன்னு அர்த்தம். அதற்காக, எனக்கு இதெல்லாம் ஏறணும்னு கடவுள் வரப் பிரசாதம் எனக்கு கிடைச்சிருக்கா என்ன?, ”நீ க்ரிட்டிக்கா அவதாரம் எடுத்து உலகத்துக்கு ஞான ஒளி வீசுன்னு?” கடவுள் என்னை அனுப்பிச்சிருக்காரா என்ன?

நான் ஒழுங்கா தமிழ் படிச்சது கிடையாது. இங்கிலீஷ் ஒழுங்கா தெரியாது. தப்பு நிறைய வரும். எனக்கு சங்கீதம் தெரியாது. நாடகம் தெரியாது. நாட்டியம் தெரியாது. எதையும் நான் முறையா படிச்சது கிடையாது.எதோட இலக்கணமும் தெரியாது.

-- வெ.சா ---

எனக்கு என்னதான் தெரியும்..  பின்னே? எனக்கு எதையும் பார்த்தா அதைப் பாத்து பிரமிச்சு நிக்கத் தெரியும். அந்த பிரமிப்பை நான் சொல்கிறேன். இது என்ன விமர்சகனுடைய வேலையா? இது என்ன ஒரு Job- ஆ? நான் என்ன தாசில்தாரா, கணக்கப் பிள்ளையா? கணக்கு வழக்கு பார்க்க? என்ன ஸ்வாமி? It is my freedom to talk. Freedom- ன்னு சொன்னவுடனே என்னமோ யாரோ என்னை suppress பண்றாங்கன்னு அர்த்தம் இல்லை. சில விஷயங்களைப் பேசணும்னு தோன்றது. குழந்தையைப் பாத்தா நம் முகம் மலர்றது. நாம் சிரிக்கிறோம். அதைப் பார்த்தா என்னமோ விவரிக்கமுடியாத ஆனந்தம் வருது. அதற்கு ஈடு ஒன்றுமே கிடையாது. அந்த ஆனந்தத்தைப் பத்தி சொல்றோம். குழந்தை சிரித்தால் அதைப் பத்தி என்ன நாம் எழுதணும்னு இருக்கா என்ன? இயல்பான விஷயம். This is how we live. That is also part of living. இப்படித்தான் நாம் வாழ்கிறோம். இதெல்லாம் தான் நம் வாழ்க்கை இல்லையா? குழந்தை சிரித்தால் நம் மனசு குளிர்ந்து போகிறது இல்லையா? சந்தோஷமா இருக்கு இல்லையா? சிரிக்கணும்னு நீங்க ப்ளான் பண்ணி சிரிக்கிறது இல்லையே? அது போலத்தான் எழுத்தும். அது போலத் தான் பேச்சும். நாம் பேசுவது, எழுதுவது, எல்லாமே, அது ஏதோ நமக்கு ஒரு வேலை கொடுத்துட்டாங்க, அந்த கொடுத்த வேலையைச் செய்யறோம்னு அர்த்தமில்லை.”ஏன்யா நீ க்ரிட்டிக், ஏன்யா அதைப் பத்தி எழுதலைன்னா அது அபத்தமா இருக்கு. It is vulgar. Downright vulagar. Vulgar – ன்னு சொல்றயான்னா, vulgar – ஆக படறது, சொல்றேன். எப்படி vulgar. னு சொல்கிறேன்னு எப்படி நான் உனக்கு விளக்கிச் சொல்லமுடியும்? But I feel it is vulgar. If you don’t feel it then we are not in the same state of mind., we don’t have the same perception. நான் பாக்கறதை நீ பாக்கலை. நீ பார்க்கவும் முடியாது. ….நான் எங்கேயோ போய்விட்டேன் போலிருக்கே….

திலீப்: சரியாத்தான் போறீங்க. .

ராஜேந்திரன்: நல்லாத்தான் போயிட்டிருக்கு. அழகா போயிட்டிருக்கு…

[அளவளாவல் தொடரும்…]

One Reply to “ஒரு நாள் மாலை அளவளாவல் – 1”

  1. Pingback: Indli.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *