“உங்க படம் இருந்தா குடுங்க சாமீ. உங்க மாதிரியே ஒண்ணு செய்து தரேன்” என்றார், பொம்மைக்காரர்.
கவிஞர் பதில் பேசவில்லை. அவர் கவனமெல்லாம் அந்தக் காளைகளின் மீதே பதிந்துபோயிருந்தது. அவற்றின் கட்டுறுதியான உடலமைப்பிலும் அந்த உடலை அவை முன்னிறுத்தியிருக்கிற கம்பீரத்திலும் அவர் மனதைப் பறிகொடுத்து விட்டிருந்தார். ‘சிவத்தைச் சுமக்கப் பொருத்தமான வாகனம்தான்’ என்று தமக்குள் சொல்லிக் கொண்டார்.
‘நானுந்தான் எழுதி எழுதிக் குவிக்கிறேன். இன்றைய இளைஞன் கட்டிடளங்காளை என்று சொல்லத் தக்கவனாய் இருக்க எப்படியெல்லம் இருக்க வேண்டும் என்று வார்த்தைகளால் வரிகளை நிரப்பிக் கவிதை செய்கிறேன். என்னதான் முயற்சி செய்தாலும் முழுத் திருப்தி வருவதாய் இல்லை. ஆனால் இவன் என்னடாவென்றால் வெறும் களி மண்ணை வைத்துக்கொண்டே அதைச் செய்துகாட்டிவிட்டானே’ என்று அதிசயித்தார்.
கவிஞர் குடும்பத்தோடு குயவர் பாளையத்துக்கு வந்திருந்தார். உடன் அவருடைய சஹிருதயர்களான வ.வே.சு.ஐயரும், மண்டையம் ஸ்ரீநிவாசாச்சாரியாரும்கூட அவரவர் குடும்பத்துடன் வந்திருந்தார்கள்.
லக்ஷ்மி, ஸரஸ்வதி, துர்க்கை என்கிற மூன்று ஜீவாதார லட்சணங்களில் பராசக்தியை உணர்ந்து கொண்டாடுகிற நவராத்திரி நெருங்கிக்கொண்டிருந்த சமயம். வீட்டில் கொலு வைக்க வேண்டும் என்று திடீரென அறிவித்து விட்டாள், சுபத்திரை. அவளிடம் விண்ணப்பம், வேண்டுதல் எல்லாம் கிடையாது. எடுத்த எடுப்பில் பிரகடனம்தான். மற்றவர்கள் ‘அம்மாடி, உத்தரவு’ என்று கீழ்ப்படிய வேண்டியதுதான். அப்பாவுக்குத் தப்பாமல் பிறந்த பெண்!
சுபத்திராவின் அறிவிப்பைக் கேட்டதும் பாப்பா சகுந்தலாவும், ஆமாம், வைக்க வேண்டும் என்று குதித்தாள்.
குழந்தைகளுக்கு என்ன தெரியும் குடும்ப நிலவரம்?
சுபத்திரை சகுந்தலாவைவிட இரண்டு வயது சிறியவள்தான். ஆனால் பார்வைக்கு அவள்தான் பெரியவள் என்று நினைக்கத் தோன்றுகிற மாதிரி நல்ல வளர்த்தியாக இருப்பாள். வாட்ட சாட்டமாய் மல்யுத்த வீரர் போலத் தோற்றமளிக்கும் வராகனேரி வேங்கடேச சுப்பிரமணிய ஐயரின் மகளாயிற்றே, வேறு எப்படி இருப்பாள்? பாப்பா சகுந்தலாவும் தன் அப்பாவைப்போல் நெஞ்சில் உரம் இருந்தாலும், மேனியில் பொலிவு தெரிந்தாலும் உடல் வளர்ச்சியில் கொஞ்சம் பின்தங்கித்தான் இருந்தாள்.
குழந்தைகளுக்குத் தங்களுடைய அப்பாமார்கள் எதற்காக இப்படி முன்பின் தொடர்பில்லாத ஓர் ஊருக்குக் குடும்பத்தோடு வந்து உட்கார்ந்துகொண்டிருக்கிறார்கள் என்றெல்லாம் யோசிக்கிற வயதில்லை. அவர்கள்பாட்டுக்குப் பட்சிகள் மாதிரி புதுச்சேரித் தெருக்களிலும், கடற்கரை, தோப்பு, துரவு என்றும் உற்சாசமாகப் பறந்து திரிந்து கொண்டிருந்தார்கள். ஏதோவோர் உல்லாசப் பயணம் வந்திருப்பதுபோலத்தான் அவர்களுக்கு நினைப்பு.
அவர்களின் அப்பாக்கள் புதுச்சேரி எல்லையைத் தாண்டி ஓரடி எடுத்து வைத்தாலே உச்சாணிக் கிளையில் காத்திருக்கும் பிணந்தின்னிக் கழுகுகள் போல பிரிட்டிஷ் ராஜாங்கப் போலீஸ் அவர்களைக் கொத்திகொண்டு பறந்துவிடும் என்பது பாவம், குழந்தைகளுக்கு என்ன தெரியும்?
ஆனால் பெரியவர்கள் இந்தப் பிரச்சினைகளெல்லாம் லவலேசமும் பிஞ்சுக் குழந்தைகளின் காதுகளுக்கு எட்டாமல் பார்த்துக்கொள்வார்கள்.
எல்லாருமாக வெளியே போகிறபோதெல்லாம் நிழல்போலப் பின்தொடரும் உளவாளி போலீஸ்காரர்களை யதேச்சையாக கவனித்து, “யாராப்பா, இவாள்லாம்? எதுக்கு நம்ம பின்னாலேயே வரா?” என்று மகள் சுபத்திராவோ, கவிஞரின் புதல்வி சகுந்தலா பாப்பாவோ, மண்டையம் ஸ்ரீநிவாஸாசாரியாரின் புத்ரி யதுகிரியோ அப்பாவித்தனமாகக் கேட்கிறபொழுது எல்லாரையும் முந்திக்கொண்டு மீசையை முறுக்கியபடி வ.வே.சு. ஐயர் விளக்கம் அளித்துவிடுவார்:
“நாமெல்லாம் ராஜ பரம்பரை இல்லையா? பாரா, பாதுகாப்பு, பக்கபலம் எல்லாம் வேணும்தானே? அதுக்காகத்தான் ராஜாங்கமே நம்மைப் பார்த்துக்க அவாளை அனுப்பி வெச்சிருக்கா.”
“சரியாகச் சொன்னிர் ஐயரே!…” என்று கவிஞர் அட்டகாசமாக நகைப்பார். நிமிர்ந்த மார்பை மேலும் முன்னால் துருத்திக்கொண்டு நடப்பார். மண்டையமோ மேல்த்துண்டால் வாயைப் பொத்திக்கொண்டு சிரிப்பார்.
சுபத்திரை கொலு வைக்கவேண்டும் என்று உத்தரவு போட்டதும் பொம்மைகள் வாங்குவதென்று முடிவாகிவிட்டது. மூன்று வீடுகளிலுமே கொலு வைத்துவிடலாம் என்று தீர்மானித்தார்கள்.
கொலுவுக்கு பொம்மைகள் வாங்கப் போகிறார்கள் என்று கேள்விப்பட்டதும் நாகசாமி, “இங்கே குயவர் பாளையம் என்று தனியாக ஒரு வட்டாரமே இருக்கிறது. புதுச்சேரி மண் பொம்மைகளுக்குப் பாரீஸ் வரைக்கும் பெயர் வாங்கிக் கொடுக்கிற அபாரமான கலைஞர்கள் எல்லாம் அங்கே இருக்கிறார்கள். நேரடியாக அங்கே போய்விட்டால் வட்டாரம் முழுக்க சுற்றிப் பார்த்து விருப்பம் போல பொம்மைகள் வாங்கிக் கொள்ளலாம். விலையும் சகாயமாக இருக்கும்” என்று யோசனை சொன்னார். இந்தியா பத்திரிகை அலுவலகத்தில் வேலைக்கென வந்த நாகசாமி, மூன்று குடும்பங்ளுக்குமே அணுக்கத்தொண்டராகி விட்டவர். அதிலும் கவிஞர் என்றால் பசை மாதிரி ஒட்டிக் கொண்டு விடுகிற அந்நியோன்னியம்!
நாகசாமியின் யோசனை உடனே அங்கீகரிக்கப்பட்டு மறுநாளே குயவர் பாளையத்துக்கு வந்துசேர்ந்துவிட்டார்கள். அங்கே ஒவ்வொரு குடிசை வாசலிலும் களிமண்ணைக் குழைப்பதும், குழைத்த மண்ணை அச்சில் அடைப்பதும், அச்சிலிருந்து எடுத்த பொம்மைகளுக்கு மெருகேற்றுவதுமாக பொம்மைத் தயாரிப்புத் தொழில் மும்முரமாக நடந்தேறிக்கொண்டிருந்தது. ஏழெட்டு வயதுச் சிறுவர் சிறுமியர் கூட மூக்கை மூக்கை உறிஞ்சிக் கொண்டு அவர்களாகவே பொம்மைகளுக்கு வண்ணம் தீட்டுவதும், சிறிய ரக பொம்மைகளைத் தாமே செய்வதுமாக இருப்பதைக் கண்டதும் அவர்கள் ஆச்சரியப்பட்டுப் போனார்கள்.
அதெப்படிக் குழந்தைகள்கூட இவ்வளவு அழகாக வேலை செய்கிறார்கள் என்று வியப்பை அடக்க மாட்டாமல் வாய்விட்டே கேட்டுவிட்டார்கள்.
“பரம்பரை பரம்பரையா செய்துவர தொழிலாச்சே, எதை எப்படிப் பண்ணணும்னு ரத்தத்துலயே ஊறிப் போயிட்டிருக்குங்க. கண்ணால பார்த்துப் பார்த்தே கை தானா வேலை செய்ய ஆரம்பிச்சுடும்” என்று சிரித்தார், ராமர் பட்டாபிஷேக பொம்மைக்கு முன்னேற்பாடு செய்துகொண்டிருந்த ஒரு பொம்மைக்காரர்.
ஒவ்வொரு குடிசை வாசலையும் பார்த்துக் கொண்டே அவர்கள் முன்னேறி நடந்தபோது, ஒரு குடிசையின் வாசலில் வாலைக் கிளப்பிக் கொண்டு ஓடத் தயாராக இருப்பதுபோல் வலது முன்னங்காலை எடுத்துவைத்து நிற்கிற இரண்டு காளைகளைக் கண்டதும் ஆணியடித்தாற்போல் அங்கேயே நின்றுவிட்டார், கவிஞர். உருவத்தில் நிஜக் காளைகளையும்விட மிகமிகச் சிறியவைதாம்; ஆனால் எவ்வளவு தத்ரூபம்! அவரது மனத்திரை அவற்றை நிஜக் காளைகளின் வடிவில் பெரிதாக்கிக் காட்டியது.
கவிஞர் நின்றதும் மற்றவர்களும் விசைநின்றுபோன யந்திரங்களாய் நின்றுவிட்டார்கள். குயவர் பாளையத்தில் இவர்கள் துழைந்ததுமே ஒரு வழிகாட்டி மாதிரி கூடவே வரத் தொடங்கியிருந்தவன் அவர்களுக்கு அந்தக் காளை பொம்மைகளுக்குப் பக்கதிலேயே உட்கார்ந்து, கன்றுக் குட்டியை அணைத்துக் கொண்டிருக்கிற குழந்தைக் கிருஷ்ணன் பொம்மைக்கு வண்ணம் தீட்டிக் கொண்டிருந்த பெரியவரை அறிமுகம் செய்துவைத்தான்.
“இந்தப் பேட்டையிலேயே இவர்தாங்க வாத்தியாரு. இவருக்கப்பறந்தான் மத்தவங்க. புதிசா எதான பொம்மை செய்யணும்னா அல்லாரும் இவர் கிட்ட வந்துதான் யோசனை கேப்பாங்க.”
பொம்மைக்காரர் அண்ணாந்து அவர்களைப் பார்த்தார். புன்முறுவலுடன் எழுந்து நின்று கும்பிட்டார். பதிலுக்கு இவர்களும் கும்பிட்டார்கள்.
பொம்மைக்காரர் என்ன நினைத்தாரோ, கவிஞரை மட்டும் சில நிமிடங்கள் கூர்ந்து அவதானித்தார். கவிஞரோ அதை கவனியாமல் காளைகளின் மீதே மனம் லயித்திருந்தார்.
“சொல்லுங்க சாமீ, உங்க படம் இருந்தா குடுக்கறீங்களா” என்று மறுபடியும் கேட்டார், பொம்மைக்காரர்.
“என்ன என் படமா” என்று சிரித்தார், சுய நினைவுக்கு மீண்ட கவிஞர்.
“இவர் கேக்கறதிலே என்ன ஆச்சரியம்? யாருக்குமே உன்னைப் பார்த்தா அப்படித்தான் கேக்கத்தோணும். அதுவும் இவர் மாதிரி ஒரு கலைஞனுக்கு உன் மாதிரியே ஒரு உருவம் செய்யக் கை துறுதுறுக்கத்தான் செய்யும்” என்றார், ஐயர்.
கவிஞர் ஏதோ பதில் சொல்ல முற்படுகையில் ஐயரே கண்கள் மின்ன மறுபடியும் பேசலானார்:
“எங்கிட்ட அபநீந்திரநாத் தாகூர் வரைஞ்ச பாரத மாதா பாணியிலே வேற ஒரு கோணத்துலே இருக்கற மாதிரி ஒரு படம் இருக்கு. அதை இவர்கிட்டக் குடுத்து அதே மாதிரி பெரிசா ஒரு பொம்மை செய்யச் சொன்னா என்ன?”
நல்ல யோசனை என்று ஆமோதித்தார், ஆச்சாரியார்.
“ஐயர் சொலலறதுதான் சரி. என் பொம்மையைப் பண்ணறது அப்புறம் ஆகட்டும். இப்ப பாரத மாதா பொம்மையைப் பண்ணிக் குடும்” என்றார், கவிஞர்.
“ஆகட்டுங்க. ஆனா அது யாருங்க?” என்று குழப்பத்துடன் கேட்டார், பொம்மைக்காரர்.
கவிஞர் உடனே ஆவேசம் வந்த மாதிரி நாடக பாணியில் அதட்டலாகப் பேச ஆரம்பிவிட்டார்.
“பாரத மாதாவைத் தெரியாதா? ஹூம், இன்றைக்குப் பெற்ற தாயையே இன்னார் என்று பிள்ளைகளுக்கு அடையாளம் காட்ட வேண்டியிருக்கு! என்ன செய்ய, ஆயிரம் வருஷங்களா பாசி படர்ந்துகிடக்கற தடாகம்! உள்ளே கண்ணாடி மாதிரி ஜலம். ஆனா கண்ணுக்குத் தெரியலே!” என்றவர், ஆவேசம் ஒரு வெறியாகவே பொங்கிவிட்டதுபோல்,
‘தொன்று நிகழ்ந்த தனைத்தும் உணர்ந்திடு
சூழ்கலை வாணர்களும் –இவள்
என்று பிறந்தனள் என்றுண ராத
இயல்பினளாம் எங்கள் தாய்’
என்று பாடினார்.
அனைவருமே அதைக் கேட்டு மின்னோட்டம் வீரியமாய் உள்ளே பாய்ந்த நீண்ட விளக்குகள் மாதிரி உணர்ச்சிப் பிழம்புகளாய் நின்றார்கள்.
“சாமீ, நீங்க பாடறதுக்கு என்ன அர்த்தம்னு எனக்கு விளங்கலே. ஆனா கேக்கறப்ப ஒடம்பெல்லாம் என்னவோ செய்யுது” என்றார், பொம்மைக்காரர்.
“பாரத மாதா! அப்படீன்னா நம்ம தேசம்! தாய்நாடு! சொந்த பூமி! நமக்கெல்லாம் தாய்! நம்மைப் பெற்றவள்! நம்ம தாய் தகப்பன், அவர்களுக்கும் முன்னே வாழையடி வாழையாய்ப் பிறந்து வளர்ந்து பல்கிப் பெருகி வாழ்ந்து மறைந்த பாட்டன் பாட்டி முப்பாட்டன் முப்பாட்டி சகலரையும் பெற்றெடுத்தவள்!” என்றார் கவிஞர்.
“அப்ப நம்ம ஆயி, மகமாயின்னு சொல்லுங்க” என்று பரவசத்துடன் குதூகலித்தார், பொம்மைக்காரர்.
“சரியாகச் சொன்னீர்! அவளேதான்!” என்றார், கவிஞர், உற்சாகமாக.
“பாரதி, உன்னுடைய மந்திரக் கோலை எங்கே ஒளித்து வைத்திருக்கிறாய்” என்று கேட்டார், ஐயர்.
கவிஞர் மார்பை நிமித்தி, அதன் நடுவே வலக்கை ஆள் காட்டி விரலால் தொட்டுக் காட்டிச் சிரித்தார்.
மறுநாள் காலையில் படத்தைக் கொண்டு வந்து கொடுப்பதாகச் சொல்லிவிட்டு அவரிடமே சில பொம்மைகளையும் வாங்கிக் கொண்டு அவர்கள் புறப்பட்டார்கள்.
பொழுது விடிந்ததுமே ஐயர் கவிஞரைத் தேடி வந்துவிட்டார்.
கையில் பகவத் கீதை. அதற்குள் பாரத மாதாவின் படத்தை பத்திரப்படுத்தியிருப்பார் போலும்.
அவரது வருகைக்காகவே காத்திருந்ததுபோல் கவிஞர் புறப்பட்டு விட்டார். இருவருமாகக் குயவர் பாளையம் நோக்கி நடந்தார்கள்.
கவிஞர் படத்தைக் காண்பிக்குமாறு ஐயரிடம் ஏனோ கேட்கவில்லை. பொம்மைக்காரரிடம் படத்தைக் கொடுக்கிறபோது பார்த்துக்கொள்ளலாம் என்று இருந்துவிட்டிருக்கலாம். எந்நேரமும் தான் உள்ளே கொலுவீற்றிருக்கிறாளே, படத்தில் என்ன பார்வை என்றுகூட நினைத்திருக்கலாம்!
பொம்மைக்காரர் முதல்நாள் போலவே குடிசை வாசலில் வேலையில் முனைந்திருந்தார். அவர்கள் வரக்கண்டதும் முகம் மலர எழுந்து நின்று கும்பிட்டார்.
ஐயர் மெளனமாகப் புத்தகத்தைத் திறந்து படத்தை எடுத்து பொம்மைக்காரரிடம் நீட்டினார்.
“என்ன சாமீ, இதையா செய்யச் சொல்லறீங்க?” என்று திகைத்தார் அதைக் கையில் வாங்கிப் பார்த்த பொம்மைக்காரர். மகமாயின்னீங்களே… என்று முணுமுணுத்தார்.
அப்போதுதான் கவிஞர் படத்தைக் கையில் வாங்கிப் பார்த்தார். அவரும் திடுக்கிட்டார். “இதென்ன ஐயர்வாள்?” என்றார்
“இன்றைக்கு நம் பாரத மாதா இருக்கிற கோலந்தான்! நம் பாரத மாதாவை அவள் பிள்ளைகள் இப்படித்தானே நிறுத்தி வைத்திருக்கிறோம்?” என்றார் ஐயர், சலிப்புடன்.
படத்தில் இருந்த அம்மை தலைவிரிகோலமாய் ஒற்றைச் சேலை உடுத்தி மூளியாய் நின்றாள். சிரசிலிருந்து அலையலையாய்ப் புறப்பட்ட கூந்தல் இமய மலைச் சிகரங்கள் என உயர்ந்தும் தாழ்ந்தும் நீண்டு நெளிந்து ஓடின. முக பாவம் அபலையெனத் தோற்றம் கொண்டிருந்தது. கவிஞர் சிந்தனை வசப்பட்டு நின்றார். பொம்மைக்காரர் கவலையுடன் கவிஞரின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தார்.
“இதில் யோசிக்க என்ன இருக்கிறது? ஓவியன் நன்றாக யோசித்து சரியாகத்தான் வரைந்திருக்கிறான். இருந்த ஐசுவரியங்களையெல்லாம் இழக்கும்படித்தானே பாரத மாதாவை இன்று மொட்டையாய் வைத்திருக்கிறோம். இருக்கிற செல்வங்களையெல்லாம் அந்நியர்கள் அபகரித்துக்கொண்டுபோக, இவள் வறுமையில் வாடி நிற்பதுதானே நிஜம்? பேராசைக்காரப் பால்காரன் இன்னும் இன்னும் என்று ரத்தம் வருகிற மட்டும் ஒட்ட ஒட்டக் கறக்கிற மாதிரி வெள்ளைக்காரன் மேலும் மேலும் சுரண்டிக் கொண்டிருக்கிறான்! சும்மா, இதில் இருக்கிற மாதிரியே பொம்மையைச் செய்துவிடு அப்பா” என்றார் ஐயர்.
கவிஞருக்கு கண்கள் மட்டுமின்றி முகமே சிவந்துவிட்டது. உதடுகள் துடித்தன. “ஹூம், இதென்ன பேச்சு? சர்வாலங்கார பூஷிதையாய் இருக்கட்டும் நம் பாரத மாதா. அவளுக்கு என்ன குறை? அந்நியன் அப்படி என்னத்தை வாரிகொண்டு போய் விட்டான்? வழிய வழிய நிறைந்து கீழே சிதறிக் கிடக்கிறதைப் பொறுக்கிக்கொண்டு போனானாயிருக்கும். அப்படியும் இன்னும் தரையில் கிடக்கிறது. அதையும் லஜ்ஜையில்லாமல் பொறுக்கிக் கொள்கிறான். அவ்வளவுதானே!
இதோ இந்த பொம்மைக்காரர் இருக்கிறாரே, இவரே பாரத மாதாவின் செல்வம்தான். இவர் போல இன்னும் எத்தனை எத்தனையோ ஐசுவரியங்கள் பாரதத் தாய்க்கு. விதவிதமான செல்வங்கள்! அதெப்படி ஏழையாகிவிடுவாள்? கங்கையையும் காவிரியையும் சுருட்டிக் கக்கத்தில் வைத்துக்கொண்டு போய்விட்டார்களா? பொன் விளைகிற பூமியையும் அப்படி விளைவிக்கிற கைகளையும் வெட்டி எடுத்துக்கொண்டு போய்விட்டார்களா? கலைகளயும் காவியங்களையும் அவற்றைப் படைக்கிறவர்களையும் கடத்திக்கொண்டா போய்விட்டார்கள்? மெய்ஞான, விஞ்ஞான மகிமைகளைப் பறித்துக் கொண்டார்களா? அப்புறம் எப்படி அவள் ஏழையாக முடியும்? பொம்மைக்காரரே, நம்ம பாரத மாதா எண்ணெண்ணைக்கும் ராணி மகா ராணிதான். நல்ல அரக்குப் பட்டுடுத்தி, சிரசில் மகுடம் தரிச்சு, உடம்பெல்லாம் ஆபரணங்களோட ஆசியும் அபயமும் வழங்கற ஹஸ்தங்களோட நிற்கிற மாதிரி பொம்மையைச் செய்யும்!” என்ற கவிஞர்,
உடனே ஆவேசமாகப் பாடவும் தொடங்கிவிட்டார்:
‘யோகத்திலே நிகரற்றவள் உண்மையும்
ஒன்றென நன்கறிவாள் – உயர்
போகத்தி லேயும் நிறைந்தவள் எண்ணரும்
பொற்குவை தானுடையாள்!’
ஐயர் மெய்சிலிர்த்துப் போனார். அவரது கண்களிலில் ஊற்றுப் பெருக ஆரம்பித்துவிட்டது.
“ஆமாம், இவர் சொல்லறதுதான் சரி. அப்படியே செய்துடும்” என்றார், வழக்கத்துக்கு மாறான கம்மிய குரலில்.
பொம்மைக்காரர் சந்தோஷமாகத் தலையை அசைத்தவாறு உடனே வேலையைத் தொடங்கினார்.
பாரத மாதாவை— அல்ல, அல்ல, அவருடைய ஆயி மகமாயியைச் செய்யத்தான்.
(ஆதாரம்: சகுந்தலா பாரதி எழுதிய ‘என் தந்தை.’)
–நன்றி: அமுதசுரபி (டிசம்பர் 2011)
அற்புதமாக இருக்கிறது.. பாரதி நம் வாழ்விற்கு வழி காட்டும் சாரதி..
மஹா கவியின் பிறந்த நாளில், அவரை நினைக்க வைத்த கட்டுரைக்கும், கட்டுரையாளருக்கும் நன்றிகளும், வாழ்த்துகளும் உரித்தாகட்டும்…
– சீனு
பாரதி வாசகர் வட்டம், ஈரோடு.
மலர்மன்னன் அய்யா,
உண்மையிலேயே நடந்த சம்பவமா? இல்லை புனைவா? படிக்கப் படிக்க கண்களில் கண்ணீர் உகுக்கிறது. மனமார்ந்த நன்றி.
மகாகவி பாரதியின் வாழ்வே ஒரு வேள்வி. அவரை நினைக்குந்தோறும், நம் நெஞ்சில் உற்சாகமும் தீவிரமும் பெருகுகின்றன. நல்ல நாளில் இதை மறுபிரசுரம் செய்துள்ள தமிழ் ஹிந்துவுக்கும் நன்றி.
-சேக்கிழான்
பாரதி பிறந்த நாளில் மட்டும் நினைக்கப்படவேண்டியவரல்ல…எல்லா நாளிலும் நினைக்கப்பட வேண்டியவர்.வாழ்ந்த காலத்தில் மூச்சு விடும் ஒவ்வொரு நொடியும் தேசத்தையும் பாரத மாதாவையும் பாரத கலாசாரத்தையும் நேசித்தவர்.சரியான நேரத்தில் வந்துள்ள இந்த படைப்பு பாராட்டுக்குரியது
புதுகை செல்வாசொல்வதுபோல பாரதி அனுதினமும் உணரப்பட வேண்டிய ஒரு வியக்திதான், ஒருவரது பிறந்த நாளையொட்டி விசேஷமாக அவரை நினைவு கொளவது நமது மரபு. சம்பிரதாயமாக அல்லாமல் நான் அவ்வபோது எழுதி வரும் பாரதி வாழ்க்கைச் சம்பவச் சிறுகதைகள் வெவ்வேறு சந்தர்ப்பங்களில்தான் வெளியாகி வருகின்றன. உதாரணமாக இந்த வருட அமுத சுரபி தீபாவளி மலரிலும் பாரதி வாழ்க்கைச் சம்பவச் சிறுகதை ஒன்றை எழுதியுள்ளேன். இவ்வாறே அடுதத மாதமும் இரு சிறுகதைகள் பிரசுரமாகக் கூடும்..
வ.வே.சு. அய்யரும் பாரதியாரும் புதுச்சேரியில் பாரத மாதா பொம்மை செய்ய குயவர் பாளையத்தில் ஒரு பொம்மைக்காரரிடம் வேண்டியதும் அய்யர் அபநீந்திரநாத் பாணியில் அணிகலன்கள் ஏதுமில்லாத பாரதத் தாயின் சித்திரத்தைக மாதிரிக்குக் கொடுத்ததும் பாரதியார் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து சர்வாலங்கார பூஷிதையாய் பாரத மாதா பொம்மையைச் செய்யுமாறு கூறியதும் உண்மையில் நிகழ்ந்தவையே. இது ஒரு தகவலாக சகுந்தலா பாரதியின் என் தந்தை என்கிற சிறு நூலில் பதிவாகியுள்ளது. அதை அடிப்படையாக வைத்து நான் எனக்குள்ள இயல்பின் பிரகாரம் சிறுகதையாக எழுதியுள்ளேன்.
-மலர்மன்னன்
பகிர்வுக்கு நன்றி.மீண்டும் பாரதியார் பிறந்ததைப்போல் இருக்கிறது.
நல்ல கட்டுரை – எல்லை அம்மன்கள் மகமாயி எல்லாம் பாரத மாதாதான் என்பதை பாமரனும் படித்தவனும் உணரவேண்டும். ஒவ்வொரு ஹிந்துவின் இல்லத்திலும் பாரதமாதா படத்தை வரவேற்பு அறையில் நிச்சயம் வைக்க வேண்டும். ஒரு வருத்தம் இந்த தத்ரூபமாக பொம்மை செய்வது படம் வரைவது இப்பொழுது மிகவும் நலிந்து கொண்டுவருகிறது. அதைவிட கொடுமை பல பொம்மைகளிலும் படங்களிலும் திரைபட நடிகைகளின் சாயல்தான் தெரிகிறது. இப்படி சூழ்நிலையையும் கெடுத்து மனத்தையும் கெடுத்து பார்க்கும் பார்வையும் கெடுத்து ஒரு இக்கட்டான சூழலில் இன்று நாம் இருக்கிறோம். இதற்கு இந்த கட்டுரை சிறிது ஆறுதலை தருகிறது.
-சேக்கிழான் அருமையாக உண்னர்திவிட்டார், அதற்க்கு மேல் என்னால் மறுமொழி முடியவில்லை என்றல்லும், மலர்மன்னன் அவர்களை வாழ்த்த முடியாவிட்டாலும் வணங்கி மகிழ்கிறேன்
உயிரோட்டம் ததும்பும் நடை.
பாரதியை அப்படியே காட்ச்சிப்படுத்தி நம் முன்னே அதே உணர்வுகளை கொண்டு வரும் இந்த படைப்பு மிகவும் நெகிழ்ச்சி ஊட்டுவதாக இருக்கிறது.
வெளியிட்ட அன்பர்களுக்கு நன்றி.
V. Srinivasan.
ஐயா , ஐயருக்கு பாரதி கோபத்துடன் கொடுத்த பதிலைப் படிக்கும்போது பாரதியே என் கண் முன்னால் நின்று வீராவேசமாக பேசுவது போல் இருந்தது. அந்த வரிகளைப் படித்து முடித்தபின் என் கண்களில் குபுக் என்று நீர் வந்து விட்டது. பாரதியைப் பற்றி படிக்கும்போது ,கேட்கும்போது உடல், மனம் எல்லாம் என்னவோ செய்கிறது பாரதி நம்முடனேயே வாழ்வது போன்ற பிரமை ஏற்படுகிறது.
உடலில் ஓர் பரவசம், சிலிர்ப்பு, கண்களில் நீர் நிறைந்தது,……. இதுதான் இந்த கதையை படிக்கும் போது கண்டேன், மலர்மன்னன் ஐயா, நன்றி! பாரதமாதாவுக்காக பரவச நிலையை அடைய செய்தமைக்காக!
பாரதி நினைவுக்கு அருமையான அஞ்சலி.
நன்றி.
– பாரதி அன்பன்
// கவிஞருக்கு கண்கள் மட்டுமின்றி முகமே சிவந்துவிட்டது. உதடுகள் துடித்தன. “ஹூம், இதென்ன பேச்சு? சர்வாலங்கார பூஷிதையாய் இருக்கட்டும் நம் பாரத மாதா. அவளுக்கு என்ன குறை? அந்நியன் அப்படி என்னத்தை வாரிகொண்டு போய் விட்டான்? வழிய வழிய நிறைந்து கீழே சிதறிக் கிடக்கிறதைப் பொறுக்கிக்கொண்டு போனானாயிருக்கும். அப்படியும் இன்னும் தரையில் கிடக்கிறது. அதையும் லஜ்ஜையில்லாமல் பொறுக்கிக் கொள்கிறான். அவ்வளவுதானே!
இதோ இந்த பொம்மைக்காரர் இருக்கிறாரே, இவரே பாரத மாதாவின் செல்வம்தான். இவர் போல இன்னும் எத்தனை எத்தனையோ ஐசுவரியங்கள் பாரதத் தாய்க்கு. விதவிதமான செல்வங்கள்! அதெப்படி ஏழையாகிவிடுவாள்? கங்கையையும் காவிரியையும் சுருட்டிக் கக்கத்தில் வைத்துக்கொண்டு போய்விட்டார்களா? பொன் விளைகிற பூமியையும் அப்படி விளைவிக்கிற கைகளையும் வெட்டி எடுத்துக்கொண்டு போய்விட்டார்களா? கலைகளயும் காவியங்களையும் அவற்றைப் படைக்கிறவர்களையும் கடத்திக்கொண்டா போய்விட்டார்கள்? மெய்ஞான, விஞ்ஞான மகிமைகளைப் பறித்துக் கொண்டார்களா? அப்புறம் எப்படி அவள் ஏழையாக முடியும்? பொம்மைக்காரரே, நம்ம பாரத மாதா எண்ணெண்ணைக்கும் ராணி மகா ராணிதான். நல்ல அரக்குப் பட்டுடுத்தி, சிரசில் மகுடம் தரிச்சு, உடம்பெல்லாம் ஆபரணங்களோட ஆசியும் அபயமும் வழங்கற ஹஸ்தங்களோட நிற்கிற மாதிரி பொம்மையைச் செய்யும்!” //
பாரதியின் பக்கத்தில் நிற்கும் உணர்வை ஏற்படுத்துகிறது.
ஆனால் இப்போதெல்லாம் நினைவில் ஓடுவது “விதியே விதியே என்செய நினைத்திட்டாய் என் தமிழ் சாதியை” என்று அவர் குமுறியதுதான்.