‘கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை’ என்ற பழமொழி காங்கிரஸ் கட்சிக்கு என்றே உருவானது போல இருக்கிறது. “சண்டையிலே சட்டை கிழியாம என்ன செய்யும்?’ என்று வாய்ச்சவடால் விடுவார் நடிகர் வடிவேலு ஒரு படத்தில். அது நமது நிதி மந்திரி பிரணாப் முகர்ஜிக்குக் கச்சிதமாகப் பொருந்துகிறது. ஜனநாயக நெறிமுறைகளை மீறுவதையே வழக்கமாகக் கொண்ட காங்கிரஸ் கட்சிக்கு மீண்டும் நாடாளுமன்றத்தில் குட்டு விழுந்திருக்கிறது. ஆனால் அதிலிருந்து பாடம் கற்றதாகத் தெரியவில்லை மன்மோகன் சிங்.
எதற்கு இத்தனை பில்டப் என்று நீங்கள் யோசிக்கக் கூடும்; அண்மையில் நாடாளுமன்றத்தில் சில்லறை வணிகத்தில் 51 சதவீதம் அந்நிய முதலீடு தொடர்பான மசோதாவைக் கொண்டு வருவதற்காக மத்தியில் ஆளும் காங்கிரஸ் தலைமையிலான ஐ.மு.கூட்டணி அரசு முடிவு செய்ததும், அதற்கு எழுந்த எதிர்ப்பால் பின் வாங்கியதும் வாசகர்கள் அறிந்திருக்கலாம். ‘சில்லறை வணிகத்தில் 51 சதவீதம் நேரடி அந்நிய முதலீடு என்ற முடிவிலிருந்து பின்வாங்கும் பேச்சுக்கே இடமில்லை’ என்று முழங்கிய பிரதமர், மறுநாளே தனது பேச்சைக் குறைத்துக் கொண்டார். அரசு கவிழாமல் காக்க இம்முடிவை ஒத்திவைப்பதாக(8.12.2011) பிரணாப் முகர்ஜி அறிவித்தார்.
அந்த அளவுக்குச் சில்லறை வணிகம் அரசுக்குச் சிக்கலை ஏற்படுத்தியதா? இந்தக் கேள்விக்குப் பதில் கூறுவதற்கு முன்னர் இந்த விவகாரத்தின் அடிப்படையைச் சிறிது புரிந்து கொள்வது குழப்பங்களைத் தெளிவிக்கும்.
தாராளமயம், உலகமயம் போன்ற சொற்களால் உலகப் பொருளாதாரத்தைக் கட்டுக்குள் வைக்கச் செல்வந்த நாடுகள் தீட்டும் திட்டத்தின் பல அம்சங்களுள் ஒன்றுதான், சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீடு. இந்தத் திட்டம் விரைவில் காங்கிரஸ் அரசால் கொண்டுவரப்படும் என்பது இரண்டு ஆண்டுகளுக்கு முன்னரே தெரிய வந்த விஷயம் தான். நாட்டின் ஒவ்வொரு துறையையும் சீர்திருத்த வேண்டுமானால் அவற்றை அந்நியருக்குத் திறந்து விடுவதுதான் சரியான முடிவாக இருக்கும் என்பது பொருளாதார மாமேதை மன்மோகனாரின் கருத்து. இத்தாலிய அன்னையின் தயவில் ஆளும் அவரிடம் வேறெந்த நல்ல முடிவையும் நீங்கள் எதிர்பார்த்தால் அது உங்கள் தவறு.
இந்த நிலையை எதிர்பார்த்து, அன்றே எதிர்ப்புக் குரலை ஒலிக்கத் துவங்கியது ‘சுதேசி ஜாக்ரண் மஞ்ச்’ எனப்படும் சுதேசி விழிப்புணர்வு இயக்கம். சில்லறை வணிகம் என்பது நாடு முழுவதும் உள்ள மக்களை மிகவும் நெருக்கமாகப் பிணைக்கும் பொருளாதார அமைப்பு. இந்தியாவில் உள்ள வணிகர்கள் தானாக அமைந்த சுயம்புவாக உருவானவர்கள். இதற்கு சமூக அடித்தளமும் உண்டு. சொல்லப்போனால், ஒவ்வொரு மாநிலத்திலும் வர்த்தகத்துக்கென்றே சில சமூகங்கள் உள்ளன. தமிழகத்தில் நாடார்கள் இதற்கு ஓர் உதாரணம். கிராமப்புறங்களில் மட்டுமல்லாது நகர்ப்புறங்களிலுள்ள நடுத்தர மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவு செய்பவர்களாகச் சில்லறை வணிகர்களே உள்ளனர். அந்த அடிப்படையான வேரில் தான் வெந்நீர் ஊற்ற காங்கிரஸ் முயற்சி செய்கிறது என்பதை சுதேசி இயக்கம் உணர்ந்து கொண்டு, ஆரம்பத்திலேயே எச்சரித்தது.
அத்துடன் சுதேசி இயக்கம் சும்மா இருந்து விடவில்லை; வர்த்தகத் துறையில் ஈடுபட்டுள்ளோரைத் தொடர்பு கொண்டு சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீட்டின் ஆபத்து குறித்து விளக்கியது. சிறு வணிகர்கள் துவங்கி, வணிகர் சங்கங்கள் வரை சுதேசி இயக்கத்தால் தொடர்பு கொள்ளப்பட்டனர். குறிப்பாகச் சுதேசி இயக்கத்தின் முன்னணித் தலைவரான எஸ்.குருமூர்த்தியின் பணி இதில் மிக முக்கியமானது. (காண்க: மொத்தமாய் விலை பேசப்படும் சில்லறை வியாபாரம்) அவரது தொடர்ந்த பிரசாரம், அறிவுஜீவிகளையும் சிந்திக்கச் செய்தது. மாவட்டம் தோறும், சில்லறை வணிகத்தின் சிறப்புகளையும் அதற்கு எமனாக வரவுள்ள அந்நிய முதலீடு குறித்தும் கருத்தரங்குகள் நடத்தப்பட்டன. அவற்றில் அந்தந்தப் பகுதியிலுள்ள தொழில் அமைப்புக்கள், வணிகர் சங்கங்கள், சிந்தனையாளர்கள் பங்கேற்றனர்.
சுதேசி இயக்கம் இது தொடர்பாகப் பல நூல்களையும் வெளியிட்டது. பத்திரிகைகளில் கட்டுரைகள் பல வெளிவந்தன. ஒரு வகையில் இவை அனைத்தும் ஒரு பொதுக்கருத்தை உருவாக்கும் முயற்சியாகவே இருந்தன. இடதுசாரிகளும் கொள்கையளவில் அந்நிய முதலீட்டுக்கு எதிரானவர்களாக இருந்த போதும், வணிகத் துறையில் அந்நிய முதலீடு குறித்துத் தீவிர இயக்கம் நடத்தத் தவறினர் என்பதை இங்கு குறிப்பிட்டாக வேண்டும். ஆனால், சுதேசிப் பொருளாதாரத்தை வலியுறுத்தி வந்த சுதேசி இயக்கத்துக்கு, இவ்விஷயம் மிக அத்தியாவசியமாகப் பட்டது. எனவே தான், நாடு முழுவதும் இது குறித்த பிரசார இயக்கத்தையும் நடத்தியது. அதன் தொடர்ச்சியாக நாட்டின் முதற்பெரும் தொழிற்சங்கமான பாரதீய மஸ்தூர் சங்கமும், சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீட்டுக்கு எதிராகக் குரல் கொடுத்தது. அரசியல் ரீதியாகப் பாரதீய ஜனதாக் கட்சியும் சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீட்டின் ஆபத்தை எதிர்த்துக் குரல் எழுப்பியது.
தொடர்ந்து நடந்த கருத்துருவாக்க நிகழ்ச்சிகள் காரணமாக, வணிகர்கள் பலரும் சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீட்டின் அபாயத்தை உணரத் துவங்கினர். அவர்களும் தங்கள் பங்கிற்கு இக்கொள்கைக்கு எதிரான கருத்துக்களை முன்வைக்கத் துவங்கினர்; தமிழகத்தில் வியாபாரிகள் சங்கத் தலைவர் வெள்ளையன் இக்கருத்தைப் பிரசாரம் செய்தவர்களில் முக்கியமானவர்.
ஒரு கிழக்கிந்தியக் கம்பெனி வர்த்தகம் என்ற பெயரில் நாட்டில் நுழைந்து நடத்திய அக்கிரமங்கள் போதாதா எந்ன்ற கேள்வி எழத் துவங்கியது; அமெரிக்காவின் வால்மார்ட்டும் பிரிட்டனும் டெஸ்கோவும் தங்கள் பல்லாயிரம் கோடி டாலர்களை இந்தியாவில் முதலீடு செய்வது நமது நாட்டை வளர்ப்பதற்காக இருக்காது என்பது ஓரளவு புரிந்து விட்டது.
ஏற்கனவே குளிர்பானத் துறையில் கோலா சகோதரர்களின் நுழைவால் இந்தியக் குளிர்பானச் சந்தை எப்படிக் கபளீகரமானது என்பதை நேரிடையாக உணர்ந்த அனுபவமும் கை கொடுத்தது. ஆனால், ஆளும் காங்கிரஸ் கட்சியினருக்கு இவை எதுவும் புரிவதாக இல்லை; வழக்கம் போல நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத் தொடர் நடக்கும் தருணத்தில் நாடாளுமன்றத்துக்கு வெளியே இது குறித்த முக்கியமான அறிவிப்பை வெளியிட்டார் பிரணாப் முகர்ஜி; இது நாடாளுமன்ற ஜனநாயகத்துக்கு எதிரானது என்று தெரிந்தும் அவ்வாறு செய்யக் காரணம் இருந்தது.
முதலாவதாக, ஊழல் எதிர்ப்பு இயக்கத் தலைவர் அன்னா ஹசாரே நிர்ப்பந்திக்கும் சட்டத்தை எப்படியாவது தள்ளிப்போட வேண்டும் என்பது அரசின் கபட எண்ணம். லோக்பால் மீதான மக்களின் கவனத்தைத் திசை திருப்ப அரசு ஆடிய நாடகம் இது. அடுத்ததாக, வெளிநாடுகளில் உள்ள கறுப்புப் பணம், விலைவாசி உயர்வு, பெட்ரோல் விலை மீதான கட்டுப்பாடின்மை, ஸ்பெக்ட்ரம் ஊழலில் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்துக்கு உள்ள தொடர்பு, தெலுங்கானா பிரச்னை உள்ளிட்ட பல சங்கடமான விஷயங்களிலிருந்து நாடாளுமன்ற மக்கள் பிரதிநிதிகளின் கவனத்தைத் திசை திருப்ப இதை விட நல்ல உபாயம் வேறில்லை, எனவேதான் நாடாளுமன்றம் நடக்கும்போது, கொள்கை முடிவுகளை மக்களவையில் தான் வெளியிட வேண்டும் என்ற இலக்கணத்தை வேண்டுமென்றே மீறினார் முகர்ஜி.
அவர் எதிர்பார்த்தது போலவே நடந்தது; ஏற்கனவே சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீட்டை எதிர்த்து வந்த பிரதான எதிர்க்கட்சியான பாஜகவும் அந்நிய முதலீட்டுக்கு நேர் எதிரிகளான இடதுசாரிகளும் நாடாளுமன்றத்தில் அமளியில் ஈடுபட்டனர். தவிர அரசுக்கு எதிரான ஒத்திவைப்புத் தீர்மானங்களுக்கும் எதிர்க்கட்சிகள் முயன்றன. அ.தி.மு.க, பிஜு ஜனதா தளம், சமாஜ்வாதி கட்சி உள்ளிட்ட பல கட்சிகள் அரசின் முடிவைக் கடுமையாக எதிர்த்தன. அரசின் கூட்டணிக் கட்சியான திரிணாமூல் காங்கிரசும் இவ்விஷயத்தில் அரசை எதிர்த்தது; தி.மு.கவும் கூட அரசுக்கு அறிவுரை கூறியது.
நாடாளுமன்றத்தில் அரசியல் கட்சிகள் போராடிக் கொண்டிருந்த நிலையில் நாடு முழுவதும் வர்த்தக நிறுவனங்கள் கடையடைப்பு, வேலைநிறுத்தம் உள்ளிட்ட போராட்டங்களால் தங்கள் எதிர்ப்பை அரசுக்குத் தெரியப்படுத்தின. பெரும்பாலான வர்த்தகர்கள் அரசின் முடிவுக்கு எதிராக இருந்தது கண்டும் கூட, “அரசு தனது முடிவில் உறுதியாக உள்ளது; இது தீர்க்கமாக ஆலோசித்து எடுக்கப்பட்ட முடிவு” என்றே கூறி வந்தார் பிரதமர்.
இந்நிலையில் ‘பாஜக ஆளும் மாநிலங்களில் சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீட்டாளர்களை அனுமதிக்க மாட்டோம்’ என்று அறிவித்தார் பாஜக தலைவர் நிதின் கட்காரி. தமிழக முதல்வர் ஜெயலலிதா, ஒடிஸா முதல்வர் நவீன் பட்நாயக், உ.பி. முதல்வர் மாயாவதி, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஆகியோரும் இவ்வாறே அறிவித்தனர். ஆரம்பத்தில் அரசு முடிவை ஆதரித்த அகாலி தளம் போன்ற கட்சிகள் கூட, வணிகர்களின் ஒற்றுமை கண்டு தங்கள் முடிவை மாற்றிக் கொண்டன.
மொத்தத்தில் சில ஜால்ராக் கட்சிகள் தவிர பிற கட்சிகள் அனைத்தும் அரசு முடிவுக்கு எதிராக ஒருங்கிணைந்தன. நாடாளுமன்றத்தில் பாஜகவும் இடது சாரிகளும் கைகோர்க்க மாட்டார்கள் என்று மனப்பால் குடித்துக்கொண்டிருந்த காங்கிரசுக்கு அதிர்ச்சி கிடைத்தது. இரு தரப்பும் ஒன்று சேர்வது போன்ற தோற்றம் கண்டதும், தான் நடத்திய நாடகம் தனக்கே எமனாகி விடுமோ என்று தவித்தது காங்கிரஸ். இறுதியில் திரிணாமூல் காங்கிரஸ் எதிர்ப்பதால் இதைக் கைவிடுவதாகச் சால்ஜாப்புக் கூறி, இப்போதைக்கு இம்முடிவை ஒத்தி வைத்திருப்பதாக அறிவித்திருக்கிறது காங்கிரஸ்.
சில்லறை வணிகத்தில் 51 சதவீத நேரடி அந்நிய முதலீடு என்பது கிட்டத்தட்ட நமது வர்த்தகத்தைத் தாம்பாளத்தில் வைத்து அந்நிய நிறுவனங்கள் கையில் கொடுத்து விடுவது போலத்தான். அரசு நிறுவனமான ‘மாருதி உத்யோக்’ நிறுவனம் எவ்வாறு ‘மாருதி சுசுகி’ நிறுவனமாக மாற்றம் பெற்றது என்பதை நாடு அறிந்தே உள்ளது. ஊழல் மயமான அரசு அதிகாரிகளை மிக எளிதாக விலைபேச முடியும் நம் நாட்டில், பகாசுரப் பன்னாட்டு நிறுவனங்கள் கடை விரித்தால், என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். ( காண்க : சந்தைப் பொருளாதாரமா? அல்லது சந்தை சமூகமா? ) தினசரி கடன் வாங்கித் தொழில் நடத்தும் சிறு வணிகர்கள் ‘வால்மார்ட்’டுக்கு வால் பிடிக்க வேண்டியதுதான். அதைப் பற்றிய கவலை ஏதும் இன்றி நாட்டு மக்களுக்கு உபதேசம் செய்து கொண்டிருக்கிறார் மன்மோகனார்.
இப்போதும் கூட, எதிர்க்கட்சிகள் எதிர்ப்பதால் இதைக் கைவிடுவதாக அரசு அறிவிக்கவில்லை. கூட்டணிக் கட்சிகளின் எதிர்ப்பு காரணமாகவே இம்முடிவை ‘ஒத்தி வைத்திருப்பதாக’ அரசு அறிவித்திருக்கிறது. அந்நிய நேரடி முதலீடு என்ற முடிவை முழுமையாகத் திரும்பப் பெற வேண்டும் என்ற பாஜக, இடதுசாரிகளின் கோரிக்கை அரசால் நிராகரிக்கப்பட்டுள்ளது. அக்கட்சிகளும், நாடாளுமன்ற முடக்கத்தைத் தவிர்க்க, வேறு வழியின்றி அரசின் முடிவில் திருப்தி அடைந்திருக்கின்றன. மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா ஸ்வராஜ், ‘இவ்விஷயத்தில் யாருக்கும் தோல்வி இல்லை; மக்களுக்கே வெற்றி’ என்று கூறி இருக்கிறார். அவ்வளவு பெருந்தன்மை காட்ட வேண்டிய அவசியமோ, தகுதியோ காங்கிரஸ் கட்சிக்கு இருப்பதாகத் தெரியவில்லை.
எது எப்படியாயினும், சில்லறை வணிகத்தில் நேரடி அந்நிய முதலீடு என்பது தெரிந்து விட்டது. இப்போதைக்கு அக்கட்சி தன்னைச் சூழ்ந்துள்ள பிரச்னைகளிலிருந்து தப்பிய பிறகு மறுபடியும் முருங்கை மரம் ஏறவே போகிறது. சில்லறை மனிதர்கள் திருந்தப் போவதில்லை. ஆனால், சுதேசி இயக்கம் ( பார்க்க : https://www.swadeshionline.in ) உருவாக்கிய பொதுக்கருத்து மக்களிடையே ஏற்படுத்திய எழுச்சி கனன்று கொண்டே இருக்கும் என்பதை அரசுக்கு யாராவது எடுத்துச் சொன்னால் நல்லது.
மக்களுக்கு சரியான விதத்தில் விழிப்புணர்வு ஏற்படவில்லை, பல விஷயங்களில்.
சோனியாவின் அடிமை மன்மோகனின் அரசு இந்திய மக்களை மொத்தமாக அடிமைகள் ஆக்கப் பார்க்கிறது. இணையம் வழியாக ஏற்படும் விழிப்புணர்வை எல்லோருக்கும் எளிதில் கிடைக்கும் மீடியாவிலும் ஏற்படுத்த வேண்டும்.
தமிழ் ஹிந்துவும் முடிந்தால் ஒரு வானொலியும், தொலைக்காட்சியும் துவங்க வேண்டும்.
வாழ்க பாரதம். ஒன்று படுவோம். வீழ்ச்சியையாவது தடுப்போம்.