இரு பாகங்கள் கொண்ட இத்தொடரில் முதல் பாகம் இங்கே.
திருப்பாவையில் ஆண்டாள், தன்னை கிருஷ்ணன் வாழ்ந்த காலத்தில் வாழ்ந்த ஒரு கோபிகையாக மனதில் உருவகித்து, மற்ற கோபிகைகளுடன் சேர்ந்து கிருஷ்ண பக்தி பண்ணுகிறாள். முந்தைய பதிவில் ஆண்டாள் மார்கழி மாத அதிகாலையில் எழுந்திருந்து, தமது தோழிமார் வீடுகளுக்கு சென்று அவர்களையும் எழுப்புவதாக அமைந்த பாசுரங்களை அனுபவித்தோம். இவ்வாறு கோபிமார்களை எழுப்பி அழைத்துக் கொண்டு அவர்களுடன் திருவாய்ப்பாடியில் இடைக்குலத்து தலைவன், கண்ணனின் தந்தையாகிய நந்தகோபருடைய இல்லத்துக்கு வந்து சேருகிறார்கள்.
நந்தகோபரின் இல்லத்தில் கட்டுக் காவல் அதிகம். வாசலில் முதல் நிலை, இரண்டாம் நிலை என்று காவல் காக்கிற துவாரபாலகர்களை வணங்கிகதவை திறந்து உள்ளே கண்ணனைக் காண அனுமதிக்குமாறு இறைஞ்சுகிறார்கள். நாயகனாய் நின்ற நந்தகோபனுடைய கோயில் காப்போனே!மணிக்கதவம் தாள் திறவாய்! நாங்கள் ஆயர் சிறுமியரோம்! அறை – பறை என்று பாவை நோன்புக்கு சாதனங்கள் வாங்கிப் போக வந்தோம். அவற்றைத் தருவதாக அந்த மாயன் மணிவண்ணனே, நென்னலே வாய்நேர்ந்தான்! எங்களுக்கு வாக்கு கொடுத்திருக்கிறான். அதன் பொருட்டு, அவனிடம் அவற்றைப் பெற்றுபோக, தூய்மையான மனத்தினராய் வந்தோம்! கண்ணனைப் பாதுகாக்க எண்ணி மூடி இருக்கிற, கண்ணனிடம் பிரேமை கொண்ட இந்த கதவுகள் எம்மை உள்ளே விட மறுக்கின்றன. இக்கதவுகளை நீங்களே திறந்து உதவுங்கள் – நேச நிலைக்கதவம் நீக்கேலோர் எம்பாவாய்! என்று கேட்க, காவலர்களும் திறந்து இவர்களை உள்ளே அனுமதிக்கிறார்கள்.
இவ்வாறு அனுமதி பெற்று உள்ளே நுழைந்த ஆண்டாள், உறக்கத்தில் இருக்கிற நந்த கோபரையும், யசோதை பிராட்டியையும், பலராமரையும், கண்ணனையும் உறக்கத்திலிருந்து விழித்தெழுவதற்காக நல்வார்த்தைகள் சொல்லி, அவர்கள் பெருமையைச் சொல்லி திருப்பள்ளி எழுச்சி பாடுகிறாள். அம்பரமே! தண்ணீரே! சோறே! அறஞ்செய்யும் எம்பெருமான் – நந்த கோபாலா! என்று ஏகாரம் போட்டு அவர் செய்யும் தான தர்மங்களை சொல்கிறாள். வஞ்சிக் கொடிபோல உள்ள ஆயர்குடிப் பெண்களில் கொழுந்து போன்றவளே! எங்கள் குலத்தை விளக்க வந்த குலவிளக்கே! எம்பெருமானின் மனைவியான எம்பெருமாட்டியே! யசோதா! இங்கே எழுந்திராய்! இவ்வாறு நந்தகோபரையும், யசோதையையும் எழுப்பிய பின் அவள் கண்ணில் கண்ணன் இருக்கும் அறை தென்படுகிறது.
தாம் பலகாலம் தேடிவந்த பொருள் கண்ணில் பட்டது போல உணர்ச்சி மேலிட மஹாபலி தானம் தந்தேன் என்று தாரை வார்க்கும் நீர் கீழே விழும் முன்பாக, எழுலகத்தையும் அதை தாண்டி வளர்ந்து, ஊடு அறுத்து என்று எல்லா உலகங்களின் ஊடாகவும் வளர்ந்த ஓங்கி உலகளந்த கோமகனே! தேவதேவனே! என்று அழைக்கிறாள். கண்ணன் எழுந்திருக்க வில்லை. அண்ணன் பலராமன் எழுந்த பின்தான் எழுந்திருக்க வேண்டும் என்று இருக்கிறானோ என்று நினைத்து, பொன் போன்ற திருப்பாதங்களை பொலிய விட்டு உறங்கும் எங்கள் செல்வா! பலதேவா! உன் தம்பியும் நீயும் உறக்கத்திலிருந்து எழுக! என்று அழைக்கிறாள்.
இவ்வாறு அழைத்தும் எழுந்திருக்காதபடியால் கண்ணனின் பிராட்டியான நப்பின்னையை துணைக்கு அழைக்கிறார்கள். நப்பின்னை – நற்பின்னை என்பது நல்ல தங்கை என்று மஹா லக்ஷ்மியைத்தான் குறிக்கும் என்று கூறுவர். மதம் உந்துகின்ற களிறு – இயல்பாகவே பலமுள்ள யானை, மதம் பிடித்து விட்டால் அதன் மூர்க்கம் மிகவும் அதிகமாகி விடும். அத்தகைய யானைகளையும் எதிர்த்து நின்று சண்டை இடக்கூடிய மருமகளே! நப்பின்னாய்! கந்தம் கமழும் குழலீ! கடை திறவாய்! வந்தெங்கும் கோழி அழைத்தன காண்! உன் வீட்டு ‘மாதவிப் பந்தல்’ மேல், பலகாலும் – பலமுறை குயில் முதலிய பறவைகள் கூவுவதை நீ கேட்கவில்லையா! என்று இவர்கள் அழைக்க உள்ளே சத்தமே இல்லை. கதவு சாவி துவாரம் வழியாகப் பார்க்கிறார்களாம். நப்பின்னையோ ஒரு கையில் கண்ணனையும், மறு கையில் அவனுடன் போட்டிஇட்டு வென்ற பந்தினையும் பிடித்துக் கொண்டு தூங்குகிறாள். பிஞ்சு விரல்கள் நிறைய அள்ளி நீ பிடித்திருக்கும் பந்தாக நாங்கள் பிறந்திருக்கக்கூடாதா! என்று இவர்கள் ஏங்குகிறார்கள். கண்ணனை அவள் ஏற்கனவே அடைந்தவள். இவர்கள் அடைய தவிப்பவர்கள். அதற்கு அவள் உதவியை நாடுபவர்கள். அதனால் உன் மைத்துனன் என்று கண்ணனிடம் நப்பின்னைப் பிராட்டியின் உறவைச் சொல்லி அவளின் உதவியை நாடுகிறார்கள். சீரார் வளையொலிக்க வந்து உன் செந்தாமரைக் கையால் கதவைத் திறவாய் என்று கேட்கிறார்கள்.
இதற்கடுத்த பாசுரமாகிய “குத்துவிளக்கெரிய…” பாசுரம் ஒரு அற்புதமான பாசுரம். கண்ணன் போர்களில் யானைகளோடு பொருதி அவற்றைக் கொன்று அவற்றின் தந்தங்களை எடுத்து வந்து ‘கோட்டுக்கால்’ – நான்கு கால்களாக தந்தக்கட்டில் செய்து வைத்திருக்கிறான். அதில் மெத்தென்ற பஞ்ச சயனமிட்டு அதன் மீதேறி படுத்துக் கொண்டிருக்கிறார்கள் கண்ணனும் நப்பின்னையும். இவர்கள் நப்பின்னையை அழைக்க, அவளும் எழுந்து வர முயற்சிக்க, பக்தர்களை ரட்சிக்க நானல்லவோ முதலில் செல்ல வேண்டும், இவளே போகிறாளே என்று அவளை பிடித்து தடுத்து விட்டானாம் கண்ணன். மலர்மார்பா வாய்திறவாய் என்று இவர்கள் கேட்க, நப்பினையோ கண்ணனை பதில் கொடுக்க விடாமல் பார்வையாலேயே தடுத்து விட்டாளாம். அதனால் நீங்கள் இப்படி செய்யலாமா? உலகிற்கே தாய் தந்தையர்களாகிய நீங்கள் படுத்திருக்கும் படுக்கை உங்கள் குழந்தைகளாகிய நாங்கள் ஏறி விளையாடி துகைத்த பின்னர் தானே நீங்கள் அனுபவிக்க வேண்டும்? என்று கேட்டு கண்ணனுக்கு பக்தர்களை ரட்சிப்பதும், நப்பின்னை அதற்கு உதவுவதும் தானே அழகு. நீங்கள் இவ்வாறு ஒருவரை ஒருவர் தடுப்பது தத்துவமன்று தகவுமன்று என்று இவர்கள் இரைஞ்சுகிறார்கள்.
இதற்கு அடுத்த “முப்பத்து மூவர்…” பாசுரத்தில் கண்ணனை செப்பமுடையவன்! திறலுடையவன்! என்றெல்லாம் அவன் பலம், வீரம், பராக்கிரமங்களை சொல்கிற ஆண்டாள், பிராட்டியைச் சொல்லும்போது, மென்முலையாள், செவ்வாய் சிறுமருங்குல் நப்பின்னை நங்காய்! என்று அவள் பெண்மையை சொல்கிறாள். ஏகாதச ருத்ரர்கள், த்வாதச ஆதித்யர்கள், அஸ்வினி தேவர்கள் இருவர் – என்று முப்பத்து மூன்று தேவர்களுக்கும், அவர்கள் வம்சத்து தேவர்களுக்கும் ஒரு கெடுதி ஏற்பட்டால் ஓடி ஓடி தேவர்களது துயர் துடைப்பவனே! எங்கள் குரல் கேட்டு உறக்கம் தவிர்த்து எழுந்திராய்! எங்களுக்கு அமரரைப்போல் அரசு, செல்வம் எல்லாம் வேண்டாம். உன் பக்தர்களான எங்களுக்கு பயமும் இல்லை. உன் கடைக்கண் பார்வையையே எதிர்ப்பார்த்து இருக்கிறோம். செப்பம் உடையாய்! திறலுடையாய்! செற்றார்க்கு வெப்பம் கொடுக்கும் விமலா! துயிலெழாய்! என்று ஏத்திப் புகழ்ந்து அடுத்து பிராட்டியையும் திருவே! துயிலெழாய்! என்று அந்த மஹாலக்ஷ்மியே இங்கே நப்பின்னை என்று திருப்பள்ளியெழுச்சி பாடுகிறார்கள். அதன் பின் உக்கமும் தட்டொளியும் தந்துன் மணாளனை இப்போதே எம்மை நீராட்டு! என்று கேட்கும் போது, இது மனித உறவாக இருந்தால், மனைவியிடமே கணவனைக் கொடு என்று ஒரிருவரல்ல, பஞ்ச லட்சம் கோபிகைகளும் போய் நின்று கேட்க முடியுமா! இது தெய்வீக உறவு. எல்லோருக்கும் துளி துளி எடுத்துக் கொடுத்தாலும் அப்போதும் அது பூரணமாக இருக்கும் ப்ரம்மமாயிற்றே!
ஏற்ற கலங்கள் – எத்தனை குடங்கள், பாத்திரங்கள் வெவ்வேறு அளவில் எடுத்து வைத்து பால் கறந்தாலும், எதிர்பொங்கி மீதளிப்ப என்று அவை எல்லாம் நிரம்பி வழிகின்ற அளவில், ஏமாற்றாமல் பாலை சொரிகின்ற வள்ளல் பெரும் பசுக்கள், நிறைய உடையவரான நந்தகோபரின் மகனே! “ஊற்றம் உடையாய்!” – சிறிதளவும் அயராது, தயங்காது எல்லா ஜீவன்களையும் படைத்து, அவற்றைக் காத்து, அவற்றுக்கு புலன்களையும் இன்பத்தையும் தந்து என்று இதில் தான் உனக்கு எத்தனை உற்சாகம்? பெரியாய்! உலகினில் தோற்றமாய் நின்ற சுடரே! துயிலேழாய்! என்று அடுத்து நப்பின்னையுடன் சேர்ந்தே கண்ணனுக்கு இந்த பாசுரத்தில் திருப்பள்ளி எழுச்சி பாடுவதாக சொல்வர். மேலும் உன் விரோதிகள் உன்னை எதிர்த்து உன் வீரத்துக்கு தோற்று உன்னிடம் வந்து அடைந்தார்கள். உன் பக்தர்கள் உன் குணத்துக்கு, உன் பெருமைக்கு தோற்று உன்னிடம் வந்து சேர்ந்தார்கள். நாங்கள் உன் பெருமைக்கு தோற்று உன்னை போற்றி யாம் வந்தோம் என்று வாழ்த்துப் பாடுகிறாள் ஆண்டாள்.
துரியோதனன், அர்ஜுனன் போன்ற ஞாலத்து பெரிய அரசர்கள் முதற்கொண்டு, கணக்கற்ற அரசர்களும், சக்ரவர்த்திகளும் தங்கள் சொத்து, தன் நாடு, தம்மக்கள், தன் உடல், தன் ஆன்மா என்று தன்னையே அபிமானித்து வந்தவர்கள் அந்த அபிமானம் நீங்க உன் கட்டிற்கால் கீழே வந்து கூட்டம் போட்டிருப்பது போலே நாங்கள் வந்து நிற்கிறோம். நிலவும், கதிரவனும் ஒரு சேர எழுந்தாற் போல் எங்களை நோக்குதியேல், உன்னை பிரிந்திருப்பதான சாபம் நீங்கி உன்னுடன் நாங்கள் சேர்ந்துவிடுவோம். இதற்கு அடுத்த பாசுரத்தில் கண்ணன் விழித்தெழ அவனிடம் பேசவும் ஆரம்பித்து விடுகிறார்கள்!
குளிர் நடுக்குகிற, பனி – மழை போல் பெய்து கொண்டிருக்கிற மார்கழி மாத காலத்தில், தன் குகையில் – மன்னிக் கிடந்துறங்கும் – சோம்பலை அள்ளி பூசிக்கொண்டு தன் துணையோடு அணுஅளவும் விலகாமல் படுத்துத் தூங்குகிறதாம் சிங்கம். கண்விழித்து அசைந்து, வேரிமயிர் பொங்க – வெப்பாடும் பேர்ந்து உதறி மூரி நிமிர்ந்து, கர்ஜித்து வேட்டையாடக் கிளம்பும் சிங்கத்தைப்போலே, எங்கள் பூவைப்பூவண்ணா! உன் படுக்கை அறையை விட்டு வெளியே போந்தருளி கோப்புடைய சீரிய சிங்காதனத்தில் இருந்து, நாங்கள் வந்த காரியத்தைக் கேட்கவேண்டும் என்று அழைக்கிறாள் ஆண்டாள். அவ்வாறு கண்ணனும் வர அடுத்த பாசுரத்தில் போற்றிப் பாடுகிறாள். அன்று மஹாபலியை அடக்க மூன்று உலகத்தையும் ஈரடிகளால் அளந்தாய் என்று துவங்கி ‘உன் சேவகமே யேத்திப்பறை கொள்வான் வந்தோம் இன்று இரங்கு’ என்று சொல்லி முடிக்கிறாள்.
ஒருத்தி மகனாய் பிறந்து ஓரிரவில்
ஒருத்தி மகனாய் ஒளித்து வளரத்
தரிக்கிலானாகித் தான்தீங்கு நினைத்த
கருத்தைப் பிழைப்பித்துக் கஞ்சன் வயிற்றில்
நெருப்பென்ன நின்ற நெடுமாலே!
என்னே உன் அலகிலா விளையாட்டுக்கள்! உன்னை உன்னிடமே கேட்டு வந்தோம். நாங்கள் கேட்கும் பறை முதலான சேவை செய்யும் கருவிகளை தந்தாய் எனில் – அதாவது உனக்குச் சேவை செய்ய வாய்ப்புக் கொடுத்தாஎனில் நாங்கள் உன்னையும் உன் பிராட்டியான மஹாலக்ஷ்மியையும் என்றும் நிலையான செல்வமாக பெற்று, உங்களுக்கு சேவகம் செய்து, இதுகாறும் பிறவிகள் பல எடுத்த வருத்தமும் தீர்ந்து மகிழ்வோம் என்கிறாள் ஆண்டாள்.
நடுவில் சில பாசுரங்களில் கண்ணனை தங்களில் ஒருவனாக நினைத்துப் பாடிவந்த ஆண்டாள் இனி கண்ணனை முக்தி அளிக்கும் தேவனாகவே கண்டுகொண்டு பாசுரங்களை பாடுகிறாள். மாலே! மணிவண்ணா! நாங்கள் வேண்டுவன என்னவென்று கேட்டியேல், உன்னிடம் உள்ள பாஞ்ச சன்னியம் எனும் சங்கு வேண்டும், பெரிதான பேரிகைகள் வாத்தியங்கள் வேண்டும். பல்லாண்டு இசைக்கக் கூடிய உன் பக்தர்கள் துணை வர வேண்டும். இருள் விலக்க அழகான விளக்குகள் வேண்டும். இன்னும் நோன்புக்கு வந்து கொண்டிருக்கிற பேர்களுக்கு தொலைவிலேயே இடத்தை அடையாளம் சொல்லத்தக்க கொடிகள் வேண்டும். இவற்றையெல்லாம் குடையாகக் காக்க கூடிய மேல்விதானம் வேண்டும் என்று ஒரு பெரிய பட்டியலையே கேட்டு விடுகிறார்கள்.
கூடாரை வெல்லுஞ் சீர்க் கோவிந்தா! கூடாத பேர்களை வெல்லுவான் என்றால், அவனை விரும்பிக் கூடுகிற பேர்களிடம் தோற்றுப்போகிறான் என்றுதானே ஆகிறது! “உன்றன்னைப் பாடிப்பறை கொண்டு யாம் பெறும் சம்மானம் நாடு புகழும் பரிசு” என்று நாங்கள் பாடியதோடு அல்லாமல் நாடே எங்களை பாடுமாறு ஒரு பரிசு வேண்டும் என்கிறார்கள். சூடகமே, தோள்வளையே, தோடே, செவிப்பூவே, பாடகமே என்றனைய பல்கலனும் நீ தரவேண்டும். ஆடையுடுப்போம் – உன்னிடம் உள்ள ஆடைகளையும் நாங்கள் எடுத்து அணிந்து கொள்வோம். அதன்பின்னே பால்சோறு, மூட நெய்பெய்து முழங்கை வரை வழியும் அளவுக்கு நெய்யுமாக உனக்கு அளித்து நாங்களும் அனுபவித்து கூடியிருந்து குளிர்வோம் என்கிறாள்.
குறைவொன்றுமில்லாத கோவிந்தா! உன்றன்னோடு உறவேல்! நமக்கிங்கு ஒழிக்க ஒழியாது! – இனி உனக்கும் எமக்கும் உள்ள உறவை அறுத்துக் கொள்ளவே முடியாது. நாங்கள் கறவைகள், பசுக்கள் பின்னாலே சென்று மாடு மேய்ப்பவர்கள். காட்டில் போய் சேர்ந்து உட்கார்ந்து உண்போம். பிறகு மாலையில் வீட்டுக்கு பசுக்களை ஓட்டி வருவோம். இப்படியே பொழுது போக்கினோம். எங்களுக்கு புண்ணியம் எது பாபம் எது என்று எதுவும் அறியாத பிள்ளைகளோம். அன்பினால் உன்றன்னைச் சிறுபேரழைத்தனவும் சீறி அருளாதே! குற்றம் குறைகளை மன்னித்து, பொருட்படுத்தாது, நாங்கள் விரும்புவதை அளித்து எங்களை ஏற்றுக் கொள் என்று கேட்கிறார்கள்.
“சிற்றஞ் சிறுகாலே” என்று துவங்கும் பாசுரமே திருப்பாவைக்கு முத்தாய்ப்பான பாடல். இந்த பாசுரம் வரை அறை – பறை போன்ற சாதனங்கள் நோன்பிற்காக வேண்டும் என்று கேட்டு வந்த ஆண்டாள், அது அல்ல நான் தேடி வந்தது என்று உண்மைக் காரணத்தை சொல்லி விடுகிறாள். தத்துவமாகவும் கவித்துவமாகவும் பாடி வந்த ஆண்டாள் “சிற்றம் சிறுகாலே…” பாசுரத்தில் திருமாலை கண்ணன் வடிவில் நேரில் கண்ட பரவசத்தை வெளிப்படுத்துகிறாள். இற்றைப் பறைகொள்வான் அன்று! காண், கோவிந்தா, எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உன்றன்னோடு உற்றோமே யாவோம், உனக்கே நாமாட்செய்வோம்! என்று நாங்கள் வெறும் பறை எனும் கருவியை பெற்றுப்போக வரவில்லை. அது வெற்றுக் காரணம்! நாங்கள் வந்தது உன்னிடம் அடிமையாக இருக்கும் பெரும் பேற்றை பெற்றுப்போகவே! என்று சரணாகதி செய்து விடுகிறாள்.
வங்க கடல் எனும் பாற்கடலைக் கடைந்து மா என்கிற மகாலக்ஷ்மியைப் பெற்ற மாதவனை, விஷ்ணு பக்தர்களுக்கு ஊறு செய்த அசுரர்களை அழித்த கேசவனை, ஆய்ப்பாடியில் திங்கள் திருமுகத்து சேயிழையார்களான பெண்பிள்ளைகள், அவன் இருக்குமிடத்துக்கே சென்று இரைஞ்சி, அங்கே பறை கொண்டார்கள். அவனை அடையும் சாதனத்தை அவனிடமிருந்தே கேட்டுப் பெற்றார்கள். இந்த ஆற்றை – பெருஞ்செயலை பிற்காலத்தில் ஆண்டாள் அனுகரித்து, பக்தியால் உணர்ந்து பாடினாள். இந்த பூவுலகிற்கே அணியான புதுவை என்கிற ஸ்ரீவில்லி புத்தூரில், பைங்கமல தண் தெரியல் என்று தண்மையான குளிர்ந்த மாலைகளை அணிந்தவராகவும், பட்டர்பிரான் என்று பண்டிதர்களுக்கு தலைவராகவும் பெரியாழ்வார் விளங்குகிறார். அப்பேர்பட்டவருடைய திருமகளான கோதை நமக்கு கொடுத்த பரிசான இந்த சங்கத்தமிழ் மாலையாகிய இந்த முப்பது பாசுரத்தையும் தப்பாமல் உரைப்பவர்களை, இரண்டு கை போதாது அணைக்க என்று நான்கு கைகளால் பகவான் எடுத்து அணைப்பானாம். அப்படி செங்கண் திருமுகத்து செல்வத் திருமாலால் என்றும் எங்கும் திருவருள் என்று லக்ஷ்மி கடாக்ஷம் பெற்று இன்புறுவர் என்று மங்கல வாழ்த்துரை செய்து திருப்பாவையை முடிக்கிறாள் ஆண்டாள்.
அனைவருக்கும் கண்ணனின், ஆண்டாளின் திருவருள் கிடைக்கட்டும்.
(முற்றும்)
// கோதை நமக்கு கொடுத்த பரிசான இந்த சங்கத்தமிழ் மாலையாகிய இந்த முப்பது பாசுரத்தையும் தப்பாமல் உரைப்பவர்களை, இரண்டு கை போதாது அணைக்க என்று நான்கு கைகளால் பகவான் எடுத்து அணைப்பானாம். //
அற்புதம்… ஈரிரண்டு மால் வரைத்தோள் என்பதற்கு அற்புதமான விளக்கம்… நன்றிகள்..
மங்கலம் தங்கும் பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்..
//கண்ணன் எழுந்திருக்க வில்லை. அண்ணன் பலராமன் எழுந்த பின்தான் எழுந்திருக்க வேண்டும் என்று இருக்கிறானோ என்று நினைத்து, பொன் போன்ற திருப்பாதங்களை பொலிய விட்டு உறங்கும் எங்கள் செல்வா! பலதேவா! உன் தம்பியும் நீயும் உறக்கத்திலிருந்து எழுக! என்று அழைக்கிறாள்.//
என்னைப் போலவே காலையில் லேட்டாக எழுந்திரிக்கும் கண்ணன் வாழ்க வாழ்கவே ! 🙂
அப்புறம் ஒரு சந்தேகம். மகாலக்ஷ்மியை என் தங்கை என்று ஆண்டாள் ஏன் அழைக்கிறாள் ?
மூத்தாளை அக்கா என்றல்லவா அழைக்க வேண்டும் ?
// மூத்தாளை அக்கா என்றல்லவா அழைக்க வேண்டும் ?
மூத்தவள் – ஜேஷ்டா தேவி என்கிற மூதேவி என்பது ஐதீகம். பாற்கடலைக் கடைந்த போது முதலில் வந்ததால் அவளே மூத்தவள்.
இளையவள், பின்னால் வந்த நற்”பின்னை” யே மகாலட்சுமி.