இந்த வாரம் இந்து உலகம் (ஃபிப்ரவரி – 10, 2012)

தைப் பூசத் திருநாளின் கடைசி நாளான தெப்போற்சவத் திருநாள் மதுரை மாரியம்மன் தெப்பக்குளத்தில் பிப்ரவரி 7-ஆம் தேதி, செவ்வாய்க்கிழமை, வெகு விமர்சையாக நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட மீனாட்சி சுந்தரேஸ்வரர், ஆர்ப்பரிக்கும் மக்கள், கடைகள், என்று வழமையான கொண்டாட்டங்களோடு இந்தமுறை லேசர் தொழில்நுட்பத்தைக்கொண்டு காணொளியும் நிகழ்த்தப்பட்டது அனைவரையும் உற்சாகமூட்டுவதாக அமைந்தது.

***

அரசு சார்பில் அறநிலையத்துறை கோயில்களில் பணியாற்றும் அர்ச்சகர் முதல் அனைத்து தரப்பட்ட திருக்கோயில் பணியாளர்களுக்கும் இரண்டு நாட்கள் மனிதநேய பயிற்சி நடந்தது. இதன் தொடர்ச்சியாக, கோயில்களில் பூஜை காரியங்களில் ஈடுபடும் அர்ச்சகர்கள், ஓதுவார்கள், பட்டாச்சாரியார்கள் போன்ற அனைவரும் ஆகம விதிகள் உள்ளிட்ட அனைத்து விதிகளும் முறையாக அறிந்து கொள்ளும் வகையில் அவர்களுக்கு 6 வார காலம் புத்தொளி பயிற்சி என்னும் புதிய பயிற்சியை தமிழகம் முழுவதும் நடத்துவதற்கு அறநிலையத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழகம் முழுவதும் 25 கோயில்களில் இதற்கான பயிற்சி ஃபிப். 9ம் தேதி துவங்கி 6 வாரங்கள் நடக்கிறது.

***

சான்ஃப்ரான்சிஸ்கோ விமான நிலையத்தில் டெர்மினல் 2-இன் அருகில் நமது தொன்மையான கலையான யோகாவுக்கென ஒரு அறை திறக்கப்பட்டிருக்கிறது. நீண்ட பயணக் களைப்பில் வரும் பிரயாணிகளிக்கு மிகச் சிறந்த ஆசுவாச அறையாக, தங்கள் உள்ளுணர்வையும் புதுப்பித்துக்கொள்ளும் வகையாக இது இருப்பது குறித்து பயணிகள் மகிழ்ச்சி தெரிவித்து வருகின்றனர்.

***

ஜப்பானைச் சேர்ந்த 45 வயதுப் பெண்மணி ஒருவர், நிலநடுக்கத்தில் இறந்த தனது பெற்றோருக்கு இந்து முறைப்படி பித்ரு காரியங்களைச் செய்ய இந்தியா வந்தார். ஸ்ரீரங்கப்பட்டிணம் காவிரிக் கரையில் அவற்றைச் செய்துமுடித்தவர், தனது பெற்றோர் இறப்பு தந்த துக்கத்துடன் தன் வாழ்விலும் மேன்மேலும் பிரச்சினைகள், பெற்றோர் பிரமைகள் தோன்றுவது என்று மன உளைச்சலில் இருந்ததாகவும், அவர்கள் மோட்சம் பெற விரும்பி இந்த பித்ரு காரியங்களைச் செய்ததாகவும் மனநிறைவுடன் தெரிவித்தார்.

***

தமிழகத்தில் மட்டுமே 30000-க்கும் அதிகமான கோயில்கள் இந்து அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் இருக்கின்றன. இந்தக் கோயில்களில் பக்தர்களிடமிருந்து தட்சணை, காணிக்கை, நன்கொடை போன்றவற்றை வசூலிப்பதில் தவறில்லை. ஆனால் சாமியை தரிசனம் செய்யவும் கட்டணம் வசூலிப்பதை இந்து முன்னணி கண்டிக்கிறது. தனது எதிர்ப்பைப் பதிவுசெய்ய ஒரு கோடி கையெழுத்து இயக்கம் என்ற ஒன்றை செயல்படுத்த முடிவெடுத்துள்ளது. அதன்படி இந்த இயக்கம் பிப்ரவரி 4-ஆம் தேதி திருநெல்வேலி நெல்லையப்பர் கோயிலிலிருந்து தொடங்கப்பட்டு தொடர்ந்து பல இடங்களுக்கும் செல்லத் திட்டமிட்டுள்ளது.

***

ஃபிப்ரவரி 3ம் தேதி அண்ணாதுரை நினைவு நாளை ஒட்டி தமிழகத்தில் பல்வேறு இடங்களில் உள்ள கோவில்களில் சிறப்பு வழிபாடு, அன்னதானம் நடைபெற்றது. ஆண்டுதோறும் நிதி வசதியுள்ள கோவில்களில், அனைத்து சமுதாய மக்கள் பங்குபெறும் வகையில், அண்ணாதுரை நினைவு நாளன்று, சிறப்பு வழிபாடு மற்றும் பொது விருந்து நடத்தப்படுகிறது. இவ்வாண்டு மாநிலத்தில் 370 கோவில்களில் சிறப்பு வழிபாடு மற்றும் பொது விருந்து நடப்பதாக இந்து அறநிலையத்துறை செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.

***

கேரள மாநிலம் காசர்கோடு நகரின் அருகில் இருக்கும் கும்பலே கணிபூர் கோபால கிருஷ்ணன் கோயில் 1500 ஆண்டுகளுக்கும் மேலாகப் பழைமையானதாகச் சொல்லப்படுகிறது. காசர்கோடு-மங்களூர் வழித்தடத்திற்காக சாலை போக்குவரத்துத் துறையும் நெடுஞ்சாலை அமைச்சும் அதை இடிக்கவிருப்பதைத் தடுக்கக் கோரி, கட்சி, மதம் கடந்த ஒரு லட்சத்திற்கும் அதிகமான பொதுமக்கள் கலந்துகொண்ட மாபெரும் பேரணிகள் நடைபெற்றன. மாவட்ட கலெக்டரிடமும் மாநில முதல்வரிடமும் மனுக்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

***

கௌடில்யரின் “அர்த்தசாஸ்திரம்”– இதன் 450 ஆண்டுகள் பழமைவாய்ந்த கையெழுத்துப் பிரதி ஒன்று ஓரியண்டல் ரிசர்ச் இண்ஸ்டிட்யூட், மைசூரில் பாதுகாக்கப்பட்டு வருகிறது. சமீபத்தில் இங்கு வருகைபுரிந்த அமெரிக்கத் தூதரக அதிகாரி ஜெனிஃபர் மெக்இன்டைர், இதனைப் பார்வையிட்டபோது மகிழ்ந்து, இதனை மேலும் சீரமைத்துப் பாதுகாக்க 50000 டாலருக்கான காசோலையை நன்கொடையாக அளித்துள்ளார்.

***

இந்து சமய உணர்வுகளை புண்படுத்திய, “தாண்டவபுரம்” நூலுக்குத் தடை விதிக்கவும், நூலாசிரியரை கைது செய்யக்கோரியும் நேற்று கோவை காந்திபுரத்தில் மாபெரும் உண்ணாவிரத போராட்டம் நடந்தது. இதில், மதுரை ஆதீனம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

***

***

பூரி சங்கராசாரியார் சுவாமி நிச்சலானந்தா சரஸ்வதி அவர்கள், ஒரிஸாவில் இருக்கும் ஜகத்சிங்பூர் மாவட்டத்தில் தனது வருகையின்போது ஆற்றிய உரையில், ஹிந்துக்களுக்கு இந்நாள்களில் தங்கள் மத, கலாசாரத்தின் மீதான பற்று, அதைக் காக்கவேண்டிய உணர்வு மங்கிவருவதுகுறித்து வருந்தினார். பிற சமயங்கள், மேலை கலாசாரங்கள் பாராம்பரியமிக்க நமது சனாதன தர்மத்திற்கு அளிக்கும் அச்சுறுத்தலை எதிர்க்க அனைவரும் ஒன்றுபட்டு, ஹிந்துமதத்தைக் காக்க முன்வர வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.

***

மொரீஷியஸ் பாராளுமன்றத்தில்  ஸம்ஸ்கிருதத்தை பேண, வளர்த்தெடுக்க ஒரு மசோதாவைத் [THE SANSKRIT-SPEAKING UNION BILL (No. XI of 2010)] தாக்கல் செய்திருக்கிறது. சம்ஸ்கிருதத்தை, பேச, எழுத என்றில்லாமல் அதன் கலை, கலாசார, கணினித் தளங்களிலும் முன்னெடுக்கக் கூடிய திட்டமுன்வரைவோடு தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது.

***

கொசுறு:

 • ஹெவன்லி இன்டர்டினாமினல் மிஷன் டிரஸ்ட் சீட்டு கம்பெனியின் மாநில பொறுப்பாளரான பாதிரியார் அந்தோணி செய்த கூட்டு மோசடியில் சுமார் 12,500 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இரட்டிப்புப் பணம் தருவதாக ஆசை காட்டிச் செய்த ரூ.13 கோடி மோசடி அம்பலமானது.
 • அமெரிக்காவின் செனெட் உறுப்பினர்களில் சிலர் இந்து மதம் ஒரு பாகனிய மதம் என்ற வகையில் பேச, அது குறித்து HuffingtonPost தளத்தில் வந்துள்ள கட்டுரை, ஆபிரகாமிய மதங்களில் உள்ள ஒரே தெய்வ வழிபாட்டிற்கும், இந்து மதம் கூறுகிற பிரம்மம் என்கிற மூலப் பொருளுக்கும் ஏராளமான வேறுபாடு உள்ளது என்று கூறுகிறது. ஆபிரகாமியத்தின் ஒற்றை தெய்வம் மற்ற தெய்வங்களை மறுதலித்து விடுகிறது. ஆனால் இந்து மதத்தில் உள்ள மூலப் பொருள் உள்ளுறையாக இருந்து எல்லா தெய்வங்களையும் இணைக்கிறது என்று அக்கட்டுரையில் குறிப்பிடப் பட்டுள்ளது.
 • ஹிந்து பத்திரிக்கைக்கு கர்நாடகாவில் பள்ளிப் பாடப்புத்தகங்களில் பாரதீய கலாசார செய்திகள் கலந்து விடுகிறதோ என்ற கவலை பிறந்திருக்கிறது. Saffron slant in new social studies textbooks என்ற கட்டுரையில் புலம்பல் வெளிப்பட்டிருக்கிறது.

3 Replies to “இந்த வாரம் இந்து உலகம் (ஃபிப்ரவரி – 10, 2012)”

 1. //…தரிசனம் செய்யகட்டணம்…//

  புகழ் பெற்ற தலங்களைத் தவிர மற்ற கோயில்களுக்கு, வரையரையில்லாமல் எந்தக் கோயிலுக்கு எவரிடம் வேண்டுமானாலும் நன்கொடை வாங்கும் பழக்கத்தை முதலில் நிறுத்த வேண்டும்.

  அந்தந்தக் கோயில் பராமரிப்புச் செலவினங்களை, அந்தந்தக் கோயில் எதற்காக, யாவரால் உருவாக்கப்பட்டதோ அவர்களே பார்த்துக்கொள்ள வேண்டும்.

  எங்கோ கோயில் கட்டுவதற்கும் எங்கோ அன்னதானம் போடுவதற்கும் எவரெவரிடமோ நிதி கேட்டு நிற்பதை நிறுத்த வேண்டும்.

  இன்று பல உள்ளூர்க் கோயில்களை… குறிப்பாக சிவன் மற்றும் பெருமாள் கோயில்களை, உள்ளூர் மக்கள் வைகுண்ட ஏகாதசி, பிரதோஷம் ஆகிய நாட்களைத் தவிர மற்ற நாட்களில் திரும்பியே பார்ப்பதில்லை.

  ஒரு ஆண்டின் பிற நாட்களில் அந்தக் கோயில்களில் சமூக விரோதம், அக்கறையின்மை ஆகிய குணங்கள்கொண்ட கனவான்களால் குப்பை,கூளங்கள் சேர்ந்து, இருள் மண்டிக் கேட்பாரற்றுக் கிடக்கின்றன.

  இவற்றைஎல்லாம் அந்தந்தப் பகுதி மக்கள் அக்கறையில்லாமல் பார்த்துக்கொண்டு இருந்துவிட்டு, விசேஷ நாட்களில் மட்டும் இறைவனிடம் வந்து எனக்கு அதைக் கொடு, இதைக் கொடு என்று இறைஞ்சுவதனால் என்ன நன்மை நிகழ்ந்துவிடும்?

  அந்தந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள் தங்கள் வருமானத்தின் ஆறில் ஒரு பகுதியை ஆன்மீகக் கார்யங்களுக்காக ஒதுக்கி, அதில் ஒரு பகுதியைத் தங்கள் பகுதிக் கோயில் பராமரிப்புக்காக ஒதுக்கினால், சேவார்த்திகளிடம் கையேந்தும் நிலை மாறும்.

  தரிசனத்துக்குக் கட்டணம் வசூலிக்கும் கொடுமையைக் ‘கோயில் நிர்வாகச் செலவு’ என்றாவது ஞாயப் படுத்தலாம். ஆனால், கட்டணம் கொடுப்பவருக்கும் கொடுக்காமல் தரிசனம் செய்பவருக்கும் தரிசிக்கும் ‘இடத்தில்’ வேறுபாடு இருக்கக் கூடாது.

  எல்லாத்தரப்பாரும் ஒரே இடம் வரையிலேயே தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட வேண்டும்.

  பணம் செலுத்துவதால் ஒரு பக்தர் பெறும் கூடுதல் வாய்ப்பு என்பது ‘விரைவான தரிசனம்’ என்பதாக மட்டுமே இருக்க வேண்டும். தவிர, பொது தரிசனத்துக்கான நேர வரையரை பல கோயில்களில் நடை முறையிலுள்ளது. இது தவிர்க்கப்பட வேண்டும்.

  தர்ம தரிசனத்துக்குக் காலை நடை திறப்பது முதல் இரவு நடை மூடும் வரை தடையே இருக்கக் கூடாது.

  நான் சென்றிருந்த ஒரு தலப் பயணத்தின்போது, பல ஊர்களிலுள்ள கோயில்களைப் பிற்பகல் நடை அடைத்த பிறகு சிறப்பு நேர்வாகக் கருதித் திறந்து, உள்ளே அனுமதித்தார்கள். நாங்கள் தரிசனம் செய்யச் சென்ற கோயில்களில், எங்களுடன் வந்த சிலரின் செல்வாக்கு இருந்ததால், இது சாத்தியமாயிற்று. இது ஏன் சாதாரண மனிதனுக்கு மறுக்கப்பட வேண்டும்?

  முக்யஸ்தர் வருகை என்றால், கோயில் பூஜை நேரங்கள், நடை சார்த்தும் நேரம் என்று எல்லாம் மாறுகின்றன. ஆனால், சாமானியன் போனால், கோயில்களில் எவ்வளவோ வேண்டாக் கட்டுப்பாடுகள்.

  மொத்தத்தில் இன்னும் கோடானு கோடி சாமான்ய ஹிந்துக்கள், எல்லாத் துன்பங்களையும் பொறுத்துக்கொண்டு, கோயில்களுக்குச் சென்று வருவது இறைவனின் பேராற்றலைத்தான் காட்டுகிறது.

  பக்தர்கள் வருகையை அதிகரிக்கவும் அவர்கள் வெறுத்துப்போய்ப் பிற இடங்களை நாடுவதற்கு வழி செய்துவிடாமல் இருக்கவும் கோயில்களில் காசு பிடுங்கும் கொடுமையை அழித்தே ஆக வேண்டும்.

 2. ஹிந்துக்களின் ஒரு தெய்வ கோட்பாட்டிற்கும் ஆபிரகாமிய மதங்களின் ஒரு தெய்வ கோட்பாட்டையும் அலசும் திரு. கொன்ராட் எல்ஸ்ட் கட்டுரை http://www.chakranews.com/hindus-and-monotheism/2105

 3. ”சீரியஸ்ஸான” பதிவு செய்தியில், “ரிலாக்ஸ்” செய்ய, ஹிந்து நாளேட்டின் அந்த கனடா நாட்டின் செய்தி. வேற்று கிரகத்தில் மனிதர்கள் இருக்கிறார்கள் என்று கண்டுப்பிடித்தாலும் ஹிந்து நாளிதழ் இதே மாதிரி அதற்கும் செய்திகளை போடும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *