கரங்கள் [சிறுகதை]

குநந்தன் தன் கணினியை திறந்துவிட்டு மெல்ல நாற்காலியில் சாய்ந்தார். மெல்லிய வலியாக முதுகுவடத்தில் இருநொடிகள் ஓடி மறைந்த உணர்வில் வயதை உணர்ந்தார் ரகு. கணினித் திரை மென்சிவப்பிட்டது. பழைய லெனின்கிராட் இன்று மீண்டும் செயிண்ட் பீட்டர்ஸ்பர்க்காக மாறி நிற்கும் நகர். அது லெனின்கிராடாக இருந்த போது அந்நகரின் செஞ்சுடர் முன்னால் பூங்கொத்துடன் இளம் வயது ரகு தோழர் ரகுவாக.. காம்சோமால் முகாமுக்கு சென்ற நினைவுகள்.. சோஷலிஸ சுவர்க்கம் உயிருடனிருந்த நாட்களின் சந்தோஷ நினைவு மிஞ்சல்களின் மின்னணுப் பதிவு கணினி திரையின் சுவரோவியமாக.

மின்னஞ்சல் பெட்டியை திறந்தார் ரகு. பல்கேரியாவிலிருந்து.. பல்கேரியாவில் தனக்கு தெரிந்தவர்கள் யார்? புருவம் நெரிய அனுப்பியவர் பெயரை நோக்கினார்.  செர்ஜி லியோன்ஸ்கி. அட! எத்தனையோ வருடங்களுக்கு பின்.. ஏறக்குறைய கால் நூற்றாண்டுக்கு பின்னர் ஒருதொடர்பு !

அன்புள்ள தோழர் ரகுநண்டன்,

என்னை நினைவிலிருக்கும் என நம்புகிறேன்…இப்போது நான் பல்கேரிய பயோனிக்ஸ் செயற்கை கர பிரிவின் மின்னணு நரம்பியல் பிரிவின் பொறுப்பில் உள்ளேன்…

ரகுவின் மனம் காலத்தில் பயணித்தது. 1987 இன் அக்டோபரில் ஒரு நாள்… பாண்டிச்சேரியிலிருந்து சென்னை விமான நிலையத்துக்கு சென்று கொண்டிருந்த அந்த அம்பாசிடர் காரில் ரகுநந்தனும் நிரஞ்சன் பாஸுவும் சென்று கொண்டிருந்தனர். பாண்டிச்சேரி மக்கள் கலை-அறிவியல் அமைப்பின் சார்பில் அக்டோபர் புரட்சியின் 70 ஆவது ஆண்டுவிழா கொண்டாட்டங்களுக்காக சோவியத் சைபர்நெட்டிக்ஸ் விஞ்ஞானி தோழர் செர்ஜி இயோன்விச் லியோன்ஸ்கி வருகிறார். அவரை அழைத்து வர வேண்டும்.

சென்னைக்கு வரும் ஒரே ஏரோப்ளாட் விமானம் ரன்வேயில் இறங்குவதை இருவரும் வரவேற்பிலிருந்தே காண முடிந்தது. இன்று போல இத்தனைக்கு கட்டுப்பாடுகள் இல்லாத, பயங்கரவாத பிரச்சனைகள் இல்லாத நாட்கள் அவை. சுளீரிடும் வெயில் விமானத்தின் உலோக உடலெங்கும் பட்டு மின்னி பிரதிபலிக்க, சிவப்பு பட்டைகளில் இறக்கைகள் முளைத்த பாட்டாளி வர்க்க சின்னம் தகதகத்தபடி, அந்த பிரம்மாண்டமான சோவியத் விமானம் ரன்வேயில் ஓடி நின்றது. ரகு நிரஞ்சனிடம் கூறிய வார்த்தைகள் இன்றைக்கும் அவருக்கு நினைவில் இருக்கின்றன – “புரட்சியின் தூய வோல்கா ஆகாய கங்கையாக நம் மண்ணில் இறங்குகிறது பாருங்கள் தோழர்… அதன் வேகத்தை தடை செய்ய சனாதன சிவன்களின் இருள் சடைகள் இங்கில்லை”.

“கவிதை… தோழர் கவிதை” என்றான் நிரஞ்சன் பாஸு வங்காள உச்சரிப்புடனான ஆங்கிலத்தில். பாஸு ஆராய்ச்சி செய்வது சூழலியல் அமைப்புகள் குறித்து. பாண்டிச்சேரி சூழலியல் மையத்தில் முனைவர் பட்ட ஆராய்ச்சி மாணவன். கலை அறிவியல் கழகத்தின் மாணவர் அமைப்பாளன். கட்சியிலும் உறுப்பினன். மிக இளம் வயதிலேயே மாஸ்கோவுக்கு செஸ் போட்டிக்காக அனுப்பப்பட்ட தீவிர சோவியத் அபிமானி.

லியோன்ஸ்கியின் சைபர்நெட்டிக்ஸ் (Cybernetics) அறிமுக நூலை ரகு படித்திருந்தார் ’அனைவருக்குமான அறிவியல்’ எனும் தலைப்பில் மிர் பதிப்பகத்தார் வெளியிட்ட நூல்கள் வரிசையில். அந்த நூல் சைபர்நெட்டிக்ஸுக்கான சிறந்த அறிமுக நூலாக இருந்தது. ஒவ்வொரு அத்தியாயத்துக்கும் சரியாக லெனின் அல்லது ஏங்கெல்ஸின் ஒரு மேற்கோள் இருக்கும். எப்படி டயலெடிக்ஸ் எனும் முரண்பாட்டு இயக்கவியல் அறிவியலை – குறிப்பாக சைபர்நெட்டிக்ஸை-  சோவியத் யூனியனில் வழி நடத்தி செல்கிறது என்பதை லியோன்ஸ்கி ஒரு தனி அத்தியாயமாக விளக்கியிருந்தார். முதலாளித்துவ, கருத்து முதல்வாத நாடுகளில் சைபர்நெட்டிக்ஸுக்கு உள்ள தத்துவார்த்த சிக்கல்கள் எவையும் சோவியத் யூனியனில் இல்லை. பாண்டிச்சேரியில் ஏற்பாடு செய்திருந்த விழாவில் சோவியத் யூனியனின் அறிவியல் தொழில்நுட்ப சாதனைகள் குறித்து லியோன்ஸ்கி பேச வேண்டும்.

விமானத்திலிருந்து இறங்கிய செர்ஜி லியோன்ஸ்கி அவரது கறுப்பு வெள்ளை புகைப்பட பிம்பத்திலிருந்து ரொம்ப வேறுபட்டு ரொம்ப ஒல்லியாக இருந்தார். கூர்மையான மூக்கும் பயணத்தின் அசதியில் சொக்கும் கண்களும் வலது கையில் சோவியத் யூனியனுக்கே உரிய பெரிய சூட்கேஸுமாக வந்தவரை அம்பாஸிடர் காரில் ஏற்றி மூவரும் கிளம்பினார்கள். பயணத்தின் போது அவர் எதுவுமே அதிகமாக பேசவில்லை. ரகு பேச முயற்சித்த போதெல்லாம் ஒற்றை வார்த்தைகளிலேயே அவர் பதிலளித்தார்.

பாண்டிச்சேரியின் முக்கிய உயர்தர விடுதி ஒன்றில் தங்குதல். மூன்று நாட்கள் லியோன்ஸ்கி தங்கினார். அதில் ஒரு நாள் தோழர்கள் வீடுகளில் நெருக்கமான கலாச்சார பரிவர்த்தனைக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அடுத்த இரண்டு நாட்களில் லியோன்ஸ்கியின் நடவடிக்கைகளில் சில முறைமைகளை ரகு கவனித்தார். பாஸு இருக்கும் போதெல்லாம் மிகவும் அளந்தே பேசினார் லியோன்ஸ்கி. சைபர்நெட்டிக்ஸ் குறித்து உற்சாகமாக பேசினாலும் மார்க்ஸிய தத்துவ தாக்கம் குறித்து பேசும் போது மிகவும் சம்பிரதாயமாக ஓரிரு வார்த்தைகளுடன் நிறுத்திக் கொண்டார். சைபர்நெட்டிக்ஸிலும் கூட ஃபாரஸ்டரையும் ஜான் வான் நியூமானையும் குறித்து பேசுவதில் அவர் காட்டிய உற்சாகம் சோவியத் அறிவியலாளர்கள் குறித்து பேசுவதில் இல்லை.

“தோழர், அன்றைய மாலை உங்கள் வீட்டில் நடந்த ஒரு நிகழ்ச்சி என்னை மிகவும் பாதித்தது. அன்றைய சூழலில் என்னால் அதை காட்டிக்கொள்ள முடியவில்லை. கொஞ்சம் சூடாகவே அன்று உரையாடல் உங்கள் வீட்டில் நிகழ்ந்தது என்றாலும், அதில் கூறப்பட்ட வார்த்தைகள் என்னில் ஏற்படுத்திய தாக்கம் சிறிதும் அகலவில்லை.”

பாண்டிச்சேரியில் லியோன்ஸ்கியின் இறுதிநாள் மாலை ரகுநந்தன் வீட்டில் என ஏற்பாடாகியிருந்தது. அதில் ரகுவுக்கு ஒரு சின்ன சங்கடம் இருந்தது. ரகுநந்தன் வீட்டில் கொலு வைத்திருந்தார்கள். அவரது தந்தை கொஞ்சம் தீவிர சக்தி உபாசகர். நவராத்திரி ஒன்பது நாட்களும் பாண்டிச்சேரி அரவிந்தர் ஆசிரமத்திலிருந்து ஒரு பெரியவர் லலிதா சஹஸ்ரநாமத்தை குறித்து உரை நடத்ததுவார். அன்று மாலை லியோன்ஸ்கி அவரது வீட்டுக்கு பாஸுவுடன் வந்திறங்கிய போது அந்த ஆசிரமத்துக் காரரும் வந்திருந்தார்.

நல்ல வாரி சீவிய முடியால் முன்வழுக்கை இன்னும் பிரதானமாக தெரிந்த விரிந்த வட்ட முகம். பட்டை கண்ணாடியும் குறும்பு நிறைந்த கண்களுமாக இருந்த அவரை ‘எம்.பி.பண்டிட்’ என்றார்கள். ஆசிரமத்தின் முக்கியமான தத்துவவாதி என்றும், ஸ்ரீஅரவிந்தர் – அன்னை இருவரின் காரியதரிசியாகவும் இருந்தவர் என்றும் அவ்வப்போது தன் தந்தை அவ்ரைக் குறித்து சிலாகித்து கூறுவதை ரகு கேட்ட்துண்டு. இன்றைக்குத்தான் அவரை முதன்முதலில் ரகு பார்த்தது.

லியோன்ஸ்கி கொலுவைப் போய் பார்த்தார். வீட்டுப் பெண்கள் ஒளிந்திருந்து அந்த ஒல்லியான நெட்டை வெள்ளைக் காரரை வேற்றுலக வாசியை பார்ப்பது போல பார்த்தார்கள். ”எல்லாமே சுட்ட மண் பொம்மைகள்தான்” என்றார் ரகு லியோன்ஸ்கியிடம், “அனைத்தும் ஒரே பருப்பொருள் தோற்றங்கள் என்பதை எப்படியோ ஆதி மனம் உணர்ந்திருந்திருக்கலாம். பிறகு உருவான சமூக அமைப்புகள் அதற்கு கருத்துமுதல்வாத தெய்வீக சாயங்கள் பூசி இத்தகைய தொல்குடி கொண்டாட்டங்களை தமது அதிகார அமைப்புகளுக்குள் ஜீரணித்துவிட்டன.” செர்ஜி லியோன்ஸ்கி ரகு கூறியதை உள்வாங்கியதற்கான எவ்வித சைகையுமின்றி மையமாக தலையசைத்தார், “ஓஹோ… ம்ம்ம்”

பிறகு அனைவரும் வரவேற்பறையில் அமர்ந்தார்கள். எம்.பி.பண்டிட்டும் அமர்ந்திருந்தார். லியோன்ஸ்கியை ரகுவின் தந்தையாரே பண்டிட்டுக்கு அறிமுகப்படுத்தினார். லியோன்ஸ்கியின் புலம் சைபர்நெட்டிக்ஸ் என்றவுடனேயே பண்டிட் மிகவும் சகஜமாக உரையாட ஆரம்பித்தது ரகுவுக்கு அதிசயமாக இருந்தது. பாஸுவுக்கு பண்டிட்டை பார்த்ததுமே பிடிக்கவில்லை என்பது முகச் சீற்றத்திலேயே தெரிந்தது.

“எந்திரங்களும் மனித தன்னுணர்வும் குறித்த புரிதல் முக்கியமானது” என்றார் பண்டிட். லியோன்ஸ்கி அதை ஆமோதித்ததை பாஸு வெளிப்படையான எரிச்சலுடன் எதிர்கொண்டான். “இதற்கு ஏதாவது வேத ஸ்லோகம் வைத்திருப்பீர்களே ! பண்டிட்ஜி, இதோ லியோன்ஸ்கியின் பயோனிக்ஸ் (Bionics) கரங்கள் குறித்த ஆராய்ச்சிக்கு கூட அதர்வண வேதத்தில் ஸ்லோகம் இருக்குமல்லவா?” பாஸுவின் குரலில் வெளிப்பட்ட எரிச்சலும் வெறுப்பும் ரகுவைக் கூட சற்றே அயர்ச்சி கொள்ள வைத்தது.

பண்டிட்டின் முகம் மாறவே இல்லை. ”வேதம் வரைக்கும் போக வேண்டாம். ஸ்ரீ லலிதா சஹஸ்ர நாமத்திலேயே இருக்கிறது. சுவாரசியமான சம்பவ ஒற்றுமை என்று சொல்வேன். இன்றைக்கு நாங்கள் பார்க்கவிருக்கிற நாமம் “சர்வ யந்திராத்மிகா”. இன்றைய சூழலில் ஒன்றை சொல்லலாம் திரு.லியோன்ஸ்கி. லலிதா சஹஸ்ரநாமம் பிரக்ஞையை அதன் அனைத்து பரிமாணங்களிலும் பெண் தெய்வமாக உருவகித்து அதனை முடிவற்ற பெயர்களால் வழிபடுகிறது. பிரக்ஞையின் நீட்சியாகவே கருவிகளையும் கரங்களையும் காண முடியும்”

ரகு இப்போது இடைபுகுந்தார். ”கரங்கள் கருவிகளை கையாள்வதின் முக்கியத்துவம் மானுட பரிணாம வளர்ச்சியில் முக்கிய பங்கு வகித்ததை குறித்த முக்கியமான பார்வையை ஏங்கெல்ஸ் வைத்திருக்கிறார். இயந்திரங்களுக்கு ஆன்மா உண்டு என்பதை போன்ற தொல்பழங்கால கற்பனை அல்ல அது. ஏங்கெல்ஸ் முன்வைக்கும் கருவிகள்-கரங்கள்-மானுட பரிணாம வளர்ச்சி என்கிற பார்வை மானுடத்தின் தனித்தன்மையான தன்னுணர்வு எப்படி உருவானது என்பதையும் விளக்க வல்லதல்லவா?”

லியோன்ஸ்கி இப்போது மெதுவாக தொண்டையை கனைத்து கொண்டார். “ஏங்கெல்ஸ் மானுடவியலாளரல்ல. அவர் முன்வைத்த ஊகங்கள் சரியாக இருக்கலாம். ஆனால் சைபர்நெட்டிக்ஸ் கருவிகளையும் மானுட உறுப்புகளையும் பார்க்கும் பார்வைக்கு ஏங்கெல்ஸின் கருத்து எத்தனை உபயோகமாக இருக்கும் என்பது யோசிக்க வேண்டிய விஷயம்”.

ரகுவுக்கு இது கொஞ்சம் அதிர்ச்சியாகவே இருந்தது. “ஆனால் காம்ரேட் நீங்களே ஏங்கெல்ஸின் இந்த மேற்கோளை உங்கள் நூலில் பயன்படுத்தியிருந்தீர்கள் அல்லவா?” செர்ஜி லியோன்ஸ்கி பலவீனமாக புன்னகை புரிந்தார்.

இப்போது பண்டிட் பேசினார், “ஏங்கெல்ஸ் மட்டுமல்ல. பொதுவாக பொருள்முதல் வாதம், கருத்துமுதல் வாதம் என கோடு கிழித்து விளையாடும் எல்லா பார்வைகளிலும் ஒரு அடிப்படை பலவீனம் உள்ளது. காரண காரிய அம்பு ஒன்றை அவர்கள் தீட்டிவிடுகிறார்கள். எது காரணம் எது காரியம் என்பதில் சண்டை பிடிக்கிறார்கள். ஆனால் திரு.லியோன்ஸ்கி, இந்திய தத்துவமரபில் சத்காரியவாதம் என்று ஒன்றுண்டு – காரியமும் காரணமும் ஒன்றில் ஒன்று உறைவதாக காணும் பார்வை.. எனில் எது முதல் காரணம் என்கிற கேள்வி பொருளிழந்து விடுகிறது பாருங்கள்! பருப்பொருள் ஆதி காரணம் என்றும், தன்னுணர்வு அதன் விளைவு என்றும் கொண்டால், சத்காரியவாதத்தில் அந்த ஆதிகாரணத்திலேயே தன்னுணர்வான விளைவு உள்ளொடுங்கித் தான் இருக்கிறது. ஜடப் பொருளிலும் ஆன்ம சைதன்யம் உள்ளொடுங்கியிருப்பதாக இந்திய மரபு கருதுவது இதனால்தான்.. ஏன் இதே லலிதா சஹஸ்ரநாமத்தில் ஜடசக்தி, ஜடாத்மிகா என்றே பெயர்கள் இருப்பதை பார்க்கலாம்”.


லியோன்ஸ்கி மீண்டும் தொண்டையை செருமிக் கொண்டார், “ஆனால் திரு.பண்டிட் உங்கள் பார்வையில் ஒரு குறைபாடு இருப்பதை நான் சுட்ட முடியும். இதோ பாருங்கள். கை ஒரு வேலையை செய்ய வேண்டுமென வைத்துக் கொள்வோம். அப்படியென்றால் அதற்கு மூளையிலிருந்து கட்டளை செல்கிறது – ஏறக்குறைய ஒரு கம்ப்யூட்டரின் மைய கேந்திரத்திலிருந்து கட்டளை செல்வது போல.” பண்டிட் புன்னகைத்தார், “அது நம் கட்டமைப்பு என்று கூட சொல்வேன் திரு.லியோன்ஸ்கி. பல நேரங்களில் செய்கைகள் இப்படி நிகழ்வதில்லை. நாம் கண்டுணர்ந்து எதிர்வினை ஆற்றியதாகக் கருதும் பல செயல்கள் உண்மையில் அவ்வாறல்ல என்பதாக நவீன நரம்பியல் பரிசோதனைகளே கூறுகின்றன. பல முடிவுகளை நாம் தன்னுணர்வுடன் எடுப்பதற்கு பல மில்லி செகண்டுகளுக்கு முன்பே அது தொடர்பான மின்காந்த செயல்பாடுகள் சூல் கொள்ள ஆரம்பித்துவிடுகின்றன அல்லவா?”

லியோன்ஸ்கி புன்னகைத்தார், “திரு.பண்டிட் ஒரு கீழை தத்துவஞானிக்கு, நீங்கள் நரம்பியலின் முக்கிய ஆராய்ச்சிகளை கரைத்து குடித்திருப்பீர்கள் போல! நீங்கள் லிபெட்டின் பரிசோதனைகளை குறிப்பிடுகிறீர்கள் அல்லவா?”

“ஆம்”, பண்டிட்டின் முகம் பிரகாசமடைந்தது, “பெஞ்சமின் லிபெட்டின் பரிசோதனைகளைத்தான் குறிப்பிடுகிறேன்.. நீங்கள் சொல்லும் கணினியின் மைய கேந்திர ஆணைகள், அவை மூலம் செயல்படும் உடலுறுப்புகள் என்கிற சைபர்நெட்டிக் அமைப்பு – உண்மையில் பதில் சொல்ல வேண்டியது இந்த பரிசோதனைக்குத் தான் என்று நான் கருதுவேன். கூடவே ஸ்காட் கெல்ஸோவையும் கணக்கில் எடுத்துக் கொள்ளுங்கள் என்பேன் ”.

“ப்ரில்லியண்ட்” என்றார் செர்ஜி லியோன்ஸ்கி.

“அது யார் ஸ்காட் கெல்ஸோ?” என்றார் ரகு. புதிய பெயராக இருந்தது அது.லியோன்ஸ்கி வழக்கம் போல தொண்டையைக் கனைத்து கொண்டு சொன்னார், “சோவியத் யூனியனில் கெல்ஸோவின் ஆராய்ச்சிகள் அவ்வளவாக ரசிப்பதில்லை. நேர்கோடற்றத் தன்மையுடனான இயங்கியலை (non-linear dynamics) நரம்பியக்கத்தின் அடிப்படை செயல்பாடாக அவர் முன்வைக்கிறார். பண்டிட் சொல்வது போல அவரது பார்வை மட்டும் வலுவடைந்ததென்றால் சைபர்நெட்டிக்ஸ் காரர்களின் அழகான எளிமையான ‘கம்ப்யூட்டர் போன்ற மூளை செயல்பாடு’ என்கிற கற்பிதங்களை எல்லாம் மூட்டை கட்டி வைக்க வேண்டியதுதான்”.

“பச்சையான கருத்து முதல் வாதத்தின் வேகாத இறைச்சி” அனைவருக்கும் கேட்கும்படி முணுமுணுத்தான் பாஸு.

ஆனால் பண்டிட் இப்போது முழு வேகத்துடன் இருந்தார், “எனவே, ஜடம் என நாம் பார்க்கிற பருப்பொருளுக்குள் தன்னுணர்வு உள்ளொடுங்கி உள்ளது. நாம் பரிணாமம் என சொல்வது அத்தன்னுணர்வு மேலும் மேலும் வெளிப்படும் சாத்திய வெளிகளை திரைச்சீலைகள் போல விரிப்பதைத்தான். மானுட பரிணாமம் என நாம் சொல்வதில் நிகழ்வது இதுதான். கருவிகளாகட்டும், கரங்களாகட்டும். தன்னுணர்வு அவை அனைத்திலும் சூல் கொண்டு மடலவிழ்க்க இயலும். இப்பார்வை ஏங்கெல்ஸ் கரங்களின் பரிணாம முக்கியத்துவத்தை குறித்து பேசியதைக் காட்டிலும் ஆழமானதும் முழுமையானதுமாக இருக்கும். கரங்களை மூளையின் கட்டுப்பாட்டில் இருக்கும் கருவியாக காணாமல் அவற்றையே தன்னளவில் சைதன்யத்தின் உறைவிடமாகவும் வெளிப்பாடாகவும் காணும் பார்வை நம் பண்பாட்டில் இணைந்திருக்கிறதல்லவா?” இறுதியாக அவர் கேட்ட கேள்வி ரகுவையும் பாஸுவையும் நோக்கியதாக அமைந்தது.

லியோன்ஸ்கி பண்டிட்டையே பார்த்துக் கொண்டிருந்தார். பைஜாமா குர்தாவில் மத இலக்கிய வியாக்கியானம் செய்ய வந்த பண்டிட்டிடமிருந்து பாஸுவோ ரகுவோ நிச்சயமாக இத்தனை கச்சிதமான எதிர்வினையை எதிர்பார்க்கவில்லை. அதிலும் இறுதியில் ஏங்கெல்ஸை அவர் சொன்னது நேரடியாக பாஸுவை கடுமையாக சீண்டியிருப்பதை பாஸுவின் முகத்தில் படர்ந்த செம்மையில் காணமுடிந்தது. “நீ… நீங்கள் எதை சொல்கிறீர்கள்? “ என்றான் பாஸு மெல்லிய குரலில்.

“தினமும் காலையில் எழுந்ததும் கரங்களை குவித்து அவற்றை நோக்கி நம் குழந்தைகள் சொல்வார்களே… ”

“அன்றன்றைய தின அதிர்ஷ்டத்தை வேண்டுகிற எளிய பாமர மனதின் பிரார்த்தனை பண்டிட்ஜி” என்று சொல்லி விட்டு உரக்க சிரித்தார் பாஸு, “எப்படிப்பட்ட எளிய காட்டுமிராண்டி மன பிரார்த்தனைக்கு எப்படிப்பட்ட போலி முலாம் பூச்சு விளக்கங்களை அளிக்கமுடிகிறது! உங்கள் வர்க்கத்தின் மூவாயிரம் ஆண்டுகளின் திறமையே இந்த தந்திர வார்த்தை ஜாலங்களில்தான் இருக்கிறது.. பிழைப்பல்லவா..”

உண்மையில் பண்டிட்டின் அமைதியான புன்சிரிப்பே அன்றைய தினத்தை ரசாபாசமாகாமல் காப்பாற்றியது எனலாம். ரகுவுக்கு பாஸுவின் நடத்தை ரசிக்கவில்லை என்றாலும் தோழமையும் கருத்து ரீதியாக பாஸுவுடன் உடன்பட்டமையும் அவரை மௌன புன்னகையுடன் தன் தோழருடனேயே நிற்க செய்தது. ஆனால் செர்ஜி லியோன்ஸ்கி கிளம்புவதற்கு முன்னால் பண்டிட்டிடம் தனியாக கைகுலுக்கி விடை பெற்றதை ரகு பாஸு இருவருமே கொஞ்சம் அசௌகரியமாகத் தான் உணர்ந்தார்கள்.

*****

“தோழர் ரகுநண்டன், அன்று நீங்கள் கேட்ட கேள்விகள் பலவற்றுக்கான பதில்களை தவிர்த்தேன். அதற்கு இரண்டு காரணங்கள். ஒன்று. பாஸு உண்மையில் என்னை கண்காணிப்பதற்காக கட்சி அமர்த்தியிருந்த உளவாளி. இரண்டாவதாக என் நூலில் உள்ள மார்க்ஸிய தத்துவ கோட்பாடுகள் என்னால் எழுதப்பட்டவை அல்ல. அவை சேர்க்கப்பட்டவை. ஆனால் அவை இல்லாமல் என் புத்தகங்கள் வெளியிடப்படவே முடியாது என்பதால் நான் அவற்றை அனுமதித்தே ஆக வேண்டும். உண்மையில் சைபர்நெட்டிக்ஸை பூர்ஷ்வா அறிவியல் என சோவியத் யூனியன் ஸ்டாலின் காலத்தில் தடை கூட செய்திருந்ததை தாங்கள் அறிந்திருக்கலாம்.

நீங்கள் அனைவரும் சோவியத் அறிவியல் சாதனைகளை மெச்சிக் கொண்டிருந்தீர்கள் . ஆனால் உண்மையில் நான் இந்தியாவுக்கு அனுப்பப்பட்டதன் காரணம் வேறு. ஆப்கானிஸ்தானில் உறுப்புகளை, குறிப்பாக கால்களை, கண்ணி வெடியில் இழக்கும் சோவியத் வீரர்களுக்கு மிக சிக்கனமாக திறமையுடன் உருவாக்கப்படும் ஜெய்ப்பூர் செயற்கை கால்களை ஆராய்ச்சி செய்து அவற்றை மேம்படுத்தி வைக்கும் ஒரு செயல் திட்டத்துக்காகவே நான் வந்திருந்தேன். அதாவது தோழர், நீங்கள் சோவியத் யூனியனின் அறிவியல் சாதனைகளை கொண்டாடிக் கொண்டிருந்த போது உங்கள் நாட்டின் எளிய தொழில் பட்டறைகளிலிருந்து உதவி பெறவே ஒரு சோவியத் சைபர்நட்டிஸ்க்ட் உங்கள் நாட்டுக்கு வந்திருந்தான் என்பதை உங்களால் புரிந்து கொள்ள முடிகிறதா?

சோவியத் யூனியன் உடைந்த போது பல்கேரிய பயோனிக்ஸ் மையத்தில் இணைந்தேன். திரு.பண்டிட் சொன்ன விஷயம் உண்மையிலேயே அதுவரை ஒரு முக்கிய பிரச்சனையாக இருந்த ஒரு விஷயத்தில் எனக்கு தெளிவைக் காட்டியது என்றுதான் சொல்ல வேண்டும். உங்கள் தத்துவ பரிபாஷையில் சொல்ல வேண்டுமென்றால் – அது.. அது ஒரு தரிசனம். ஆம்… பொதுவாக மூளையை நரம்பியக்கத்தின் மைய கேந்திரமாகவும் அதிலிருந்து இயக்கப்படும் கருவியாக கரத்தையும் காண்பதுதான் எங்கள் துறையின் மைய பார்வையாக இருந்தது. ஆனால் கரத்தை அதற்கே உரிய தன்னுணர்வு கொண்ட ஒன்றாக அதனுடன் உரையாடும் ஒரு தன்மையை கட்டமைக்க முடிந்தால்… இது எங்கள் பார்வையையும் செயல்திட்ட்த்தையுமே மாற்றியமைத்தது.

உயர் பேரின குரங்குகளில் கருவிகளை தன்னுணர்வின் நீட்சியாக கொண்டு செயல்படும் தன்மையை நரம்பியல் பதிவு செய்துள்ளது. எனவே இது மானிடத்தின் தனிப்பெரும் குணாதிசயம் என்கிற ஏங்கெல்ஸ் வாசகம் பொய்யாகி விட்டது. நல்ல காலம் சோவியத் யூனியன் இப்போது இல்லை. இல்லாவிட்டால் இந்த ஆராய்ச்சிகள் எல்லாம் பூர்ஷ்வா சதிகளல்ல என்பதை நிரூபிக்க நாங்கள் எத்தனை கட்சி கமிசார்களிடம் என்னவெல்லாம் விண்ணப்பங்களை செய்திருக்க வேண்டியிருந்திருக்குமோ யார் அறிவார்! செயற்கை கரங்களை, நரம்பியக்கத்தையும் செயற்கை மின்னணு இணைப்புகளையும் கொண்டு, இன்னும் நன்றாக உடலுடனும் நரம்பு மண்டலத்துடனும் ஒருங்கிணைக்க முடியும். இந்த புரிதலை எனக்கு உங்கள் வீட்டுக்கு வந்திருந்த பண்டிட் தான் அளித்தார் என சொல்ல வேண்டும். ஏறக்குறைய சைபர்நெட்டிக்ஸ் செல்ல வேண்டிய பாதையை அவர் சரியாக ஊகித்திருந்தார் என்பது தான் உண்மை. இன்றைக்கு தன்னுணர்வு சார்ந்த செயல்பாடுகள் மூளையின் உயர் கேந்திரங்களில் உருவாக்கப்பட்டு கீழே கடத்தி வரப்படுபவை என்கிற பார்வை மாறி உடலனைத்துமாக தன்னுணர்வு செயல்பாடு ஒருவித பரவுதல் தன்மையுடன் இருப்பது ஏற்கப்பட்டு வருகிறது. நாம் பயன்படுத்தும் கருவிகளுக்கும் நம் அதிக செயல்பாட்டில் இருக்கும் கரங்களுக்கும் இது இன்னும் சிறப்பாகவே பொருந்தும்.

ஒருவிதத்தில் இந்தியர்களாகிய நீங்கள் கொடுத்து வைத்தவர்கள். உங்கள் தத்துவ வழிகாட்டிகள் அன்புடனும் திறந்த மனதுடனும் இருக்கிறார்கள். எதிர்க் குரல்களை அழிக்க நினைக்காதவர்களாக, ஏன் புன்சிரிப்புடன் எதிர்கொள்பவர்களாக இருக்கிறார்கள். நீங்கள் சோவியத் சூழலில் வாழ்ந்திருந்தால் தான் நான் இதை ஏன் பெரிதாக கருதுகிறேன் என்பதை புரிந்து கொள்ளக் கூடும்.

சரி, எதுவானாலும் அவர் கூறிய வார்த்தைகள் என்னுள் ஏற்படுத்திய ஒரு புரிதலை ஒரு பெரும் வெளிச்சமாகவே நான் உணர்ந்தேன். அதன் பின்னர் உங்கள் நகரத்திலிருந்து ஜெய்ப்பூருக்கு நான் சென்றேன். அங்கே செயற்கை கால்களையும் கரங்களையும் உருவாக்கும் அந்த எளிய பட்டறைக்கு நான் சென்றிருந்தேன். அன்று விஜயதசமி என்று சொன்னார்கள். அவர்களின் கருவிகள் அனைத்துக்கும் மாலைகள் அணிவிக்கப்பட்டு பூஜைகள் செய்யப் பட்டன. என்னுடன் வந்திருந்த ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக பேராசிரியர், இந்த பூஜைகள் உண்மையில் தொழில் கருவிகளைக் கண்டு புரோகித வர்க்கம் கொள்ளும் அச்சத்தால் உழைக்கும் மக்களை மூடத்தனத்தில் கட்டிப் போட ஏற்படுத்தப்பட்ட புரோகிதர்கள் உருவாக்கிய சடங்குகள் என கூறினார். ஆனால் எனக்கு அவை வேறுவிதமாக பொருள் தந்தன. இக்கருவிகள் மானுட பேருணர்வின் வெளிப்பாடுகள். அவையும் தன்னுணர்வு கொண்டவை என போற்றப்படுவதில் இந்திய பண்பாட்டின் ஒரு பெரும் புரிதல் வெளிப்படுகிறது. இதை நான் கூறிய போது அந்த ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக பேராசிரியர் என் முகத்துக்கு நேரே முகம் சுளித்தார் என்பதையும் சொல்ல வேண்டும்.

எதுவானாலும், கரங்களும் கருவிகளும் தன்னுணர்வின் நீட்சிகள் மட்டுமல்ல, தன்னளவில் சுயம் கொண்டவை. இந்தப் புரிதல் குறித்தே அண்மை காலமாக நவீன நரம்பியலும் மெல்ல நகர்ந்து செல்கிறது. அடிப்படையில் செயற்கை கரம் – மின்னணு பாதைகள் – நரம்பு மண்டலம் ஆகியவற்றை இணைக்கும் ஒரு மனப்பயிற்சியை உருவாக்கினேன். ஒருவிதத்தில் இது உங்கள் பண்பாட்டிலிருந்து நான் பெற்ற நன்கொடை என்பதால்..

மின்னஞ்சலுடன் இணைப்பாக வந்திருந்த வீடியோ க்ளிப்பை க்ளிக்கினார் ரகு.

அந்த கறுப்பின சிறுவன் கணினித் திரையின் முன் அமர்ந்திருந்தான். அவனது தலையிலும் நெற்றியிலும் இருந்து சென்ஸார்கள் முன்னால் இருந்த பேனல்களில் சென்று மறைந்தன. கணினி திரையில் இரு செயற்கை கரங்கள் மின்னணு பிம்பங்களாக தெரிந்தன. அவற்றின் அசல்கள் சிறிது தொலைவில் உலோக மினுமினுப்புடன் இருந்தன. அவற்றுடன் பல மெல்லிய பச்சையும் சிவப்புமான இழைகள் இணைந்திருந்தன. அச்சிறுவனிடமிருந்து செல்லும் சென்ஸார்களின் நீட்சிகளே அந்த இழைகள் என ஊகிக்க முடிந்தது. ஆப்பிரிக்க உள்நாட்டு போர் ஒன்றில் கண்ணி வெடிகள் வெடித்ததில் மிகச்சிறு வயதில் இரு கரங்களையும் இழந்த அச்சிறுவனுக்கு செயற்கை கரங்கள் பொறுத்தப்படுவது குறித்து கிழக்கு ஐரோப்பிய அழுத்தம் கொண்ட ஆங்கிலத்தில் ஒரு பெண் குரல் விவரணம் கூறியது.

“பிரச்சனை மன ஓட்டத்துடன் கைகளின் இயக்கத்தை இணையவைப்பது குறித்தது. இதற்கு முன்னாள் சோவியத் யூனியனின் முக்கிய பயோனிக்ஸ் ஆராய்ச்சியாளரான செர்ஜி லியோன்ஸ்கி ஒரு புதுமையான மன பயிற்சியை இத்தகைய செயற்கை உறுப்பாளர்களுக்கு உருவாக்கியுள்ளார்.

கரங்களின் இயக்கத்துடன் மனதை இணைக்க ஒருவித கீழை நாட்டு தியான முறையை அவர் பயன்படுத்துகிறார். 1980களில் தென்னிந்தியாவுக்கு சென்ற போது அங்கே அவர் இதை குறித்து தெரிந்து கொண்டாராம்..”

இப்போது அந்த சிறுவனை நோக்கி காமிரா நகர்ந்தது.

அச்சிறுவனின் கண்கள் மிகுந்த கவனக் குவியலுடன் மிளிர்ந்தன. அவனது வாய் உறுதியுடன் எதையோ உச்சரித்தது. அவன் முன்னாலிருந்த கணினித் திரைக் கரங்கள் மெல்ல மெல்ல எழுந்தன. இரு உள்ளங்கைகளாக அவை திரும்பின. அதே இயக்கம் சற்றுத் தொலைவிலிருந்த உலோக கரங்களிலும் செயல்பட ஆரம்பித்தது.
அச்சிறுவன் கூறும் சொற்கள் மெதுவாக ரகுநந்தனின் காதுகளில் பொருள்பட ஆரம்பித்தன..

கராக்ரே வஸதே லக்ஷ்மி
கரமத்யே சரஸ்வதி
கரமூலே து கோவிந்த:
ப்ரபாதே கர தர்சனம்.

தோழர் ரகுநந்தன் உறைந்து அமர்ந்திருந்தார். கணினியின் வீடியோ பிளேயர் மீண்டும் அந்த க்ளிப்பை தொடங்கியது.

*****

பின் குறிப்பு:

1. இக்கதையின் கரு எழுத்தாளர் ஜெயமோகனின் ‘பனிமனிதன்’ நாவலில் ஒரு இடத்தில் கூறப்படும் கருத்தில் இருந்து பெறப்பட்டது.

2. இக்கதையில் சொல்லப்படும் அறிவியல் கற்பனை ஊகங்கள் கலந்த சில நிஜ சாத்தியங்களின் அடிப்படையிலானது மட்டுமே. இது குறித்து மேலும் அறிய, கீழ்க்கண்ட சுட்டிகளைப் பார்க்கலாம் –

https://journalofcosmology.com/Consciousness160.html
https://www.youtube.com/watch?v=IQ4nwTTmcgs
https://www.consciousness.arizona.edu/abstracts.htm

16 Replies to “கரங்கள் [சிறுகதை]”

  1. ஆலந்தூர் மள்ளன் அவர்களே,

    வழக்கம்போல் அருமையான சிறுகதை. இந்தக் கதை, கால-வெளி பற்றிய தரிசனம் கொண்டிருந்தவரான ஐன்ஸ்டீன் நடராஜரைப் பார்த்து வியந்ததையும், ஒப்பன்ஹீமர் அணுகுண்டுச் சோதனையின் போது கீதையை நினைவு கூர்ந்ததையும் நினைவுறுத்துகிறது.

    நம் முன்னோர்களின் பார்வையின் விரிவையும் ஆழத்தையும் நாம் உணர முயலாததால்தான் அய்ரோப்பிய அரைவேக்காட்டு மதிப்பீடுகளால் நாம் நமது தத்துவங்களையும், வரலாற்றையும் அளந்து கொண்டிருக்கிறோம்.. இழந்த ஞானத்தையும், தரிசனங்களையும் மீட்டெடுக்கும் ஜெயமோகன் அவர்களின் முயற்சியில் உங்களைப் போன்ற ஆய்வாளர்களின் முயற்சியும் இணைவது பெரும் மகிழ்சியும், நம்பிக்கையும் தருகிறது.

    தொடரட்டும் உங்கள் தரிசனம்..

  2. இந்து மெய்ஞானத்தையும், நவீன அறிவியலையும், சித்தாந்த ரீதியாக தடைசெய்யப்பட்ட சோவியத் ருஷ்யாவின் அறிவியல் ஆராய்ச்சிகளையும், உண்மையான ஆளுமையான M.P.Panditஐயும் இணைத்து எழுதப்பட்ட நல்ல புணைவு. ஆலந்தூர் மள்ளனின் முக்கியமான முயற்சி.

    ஜெயமோகனின் புணைவுகளிலும், தத்துவக் கட்டுரைகளிலும் அடிக்கடி வரும் ஒரு அம்சம்; நுண்ணுயிர்கள், சிறுபூச்சிகள், பல விலங்குகள் தனித்தனிமனமாக இயங்காமல் ஒட்டுமொத்தமாக ஒரே மனதாக இயங்குவதை சுட்டிக்காட்டியபடியே இருக்கும். நாம் எதிர்கொள்வது அவற்றின் கூட்டுமனத்தை.

    இதை அப்படியே கொஞ்சம் நீட்டித்து, மனிதன் என்பவனே கூட பல தன்னுனர்வுள்ள செல்களின் அல்லது உறுப்புக்களின் கூட்டுவடிவம் என்று ஆளந்தூர் மள்ளனின் கதையைப் புரிந்து கொள்ளலாம். கூடவே சொல்வனத்தில் அரவிந்தன் நீலகண்டன் எழுதிய மாயஉறுப்புக்கள் நிறுவிய ஞானதரிசனம் என்னும் கட்டுரையும் https://solvanam.com/?p=2279 சேர்த்து வாசிக்கலாம். நம் ஒவ்வொரு உயிரியல் தன்மைக்கும் அதைக்குறிக்கும் ஒரு இடம் மூளையில் உள்ளது. மூளையின் அந்த செயல்பாட்டு மையங்கள் பாதிக்கப்படாதவரை அந்த உறுப்புகள் இருந்தாலும் இல்லாவிட்டாலும் நாம் அவை இருப்பதாகவே உணர்வோம். அதே போல ஒரு உறுப்பு நல்லபடியாக இருந்தாலும் மூளையில் உள்ள அதன் செயல்பாட்டு இணைப்புப் பகுதி பாதிக்கப்பட்டிருந்தால் நம்மால் அந்த உறுப்பின் செயல்களச் சரியாகச் செய்யமுடியாது (உதாரணம்: வாய், தொண்டைக்குழாய் போன்றவை சரியாக இருந்தாலும் மூளையின் பேச்சுப் பகுதி பாதிக்கப்பட்டால் மொழி/பேச்சுக் குறைபாடு உண்டாகும்). அதற்காக “மூளை என்னும் கம்ப்யூட்டர்” என்ஊ சொன்னவுடன் நம் உறுபுக்களைக் கொண்டு செய்யும் எல்லாச் செயல்களுக்கும் அதுவே ஆதியும் அந்தமும் என்று சிவப்புச் சிந்தாந்தப்படிப் புரிந்துகொள்ள வேண்டியதில்லை. மூளை நம் எண்ணங்களைச் செயல்களாக மாற்ற ஒருங்கிணைப்பு மட்டுமே நடத்துகின்றது. அந்த எண்ணம் அல்லது இச்சை உடம்பின் ஏதோ ஒரு இடத்தில் குவித்து வைக்கப்படவில்லை. ஒவ்வொரு செல்லிலும், உடம்பெங்கும் நீக்கமற நிறைந்து விரவியுள்ளது.

    இந்த இடத்தில் தான் இந்திய சிந்தனை ஒருபடி முன்னால் சென்று வழிகாட்டுகிறது. அந்த இச்சை என்பது எங்கிருந்துவந்தது என்று கேட்டு, அது பிரபஞ்சத்தின் ஒட்டுமொத்தக் கட்டமைப்பிலேயே உள்ளது என்று பதிலளித்து இன்னும் பிரம்மாண்டமான ஒரு கூட்டமைப்பின் தன்னுணர்வுள்ள அங்கமே ஒட்டு மொத்த உயிரமைப்பும் என்ற தரிசனத்தைத் தருகிறது.

    நரம்பியல், பரிணாமவியல் இணைந்து இங்கே ஒருநாள் வரும்.

  3. கதையில் கூறப்பட்டிருக்கும் ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமத்தின் ‘ஜடசக்தி’, ‘ஜடாத்மிகா’ என்னும் மந்திரங்கள் மிகவும் நுண்மையான பொருள் கொண்டவை.

    பிரபஞ்சத்திலுள்ள அனைத்தையும் பௌதிகர்கள் ‘ஜடம் மற்றும் ஆற்றல்’ (matter and energy) என இரண்டாக வகுப்பர். இன்னும் கொஞ்சம் நுணுகிப் பகுத்தால், ஜடப் பொருட்கள் மூலக்கூறுகள் மற்றும் அணுக்கள் ஆகியவற்றால் ஆனதென்று சொல்லலாம். அணுக்களோ வெறும் சக்தித் துகள்களின் (எலக்ட்ரான், புரோட்டான், நியூட்ரான்) சுழற்சி மட்டுமே.

    இதையே சாக்தர்கள் (சிவம்) ஜடம் என்ற ஒன்று உண்மையில் இல்லை என்றும், ஜடப்பொருள் அப்படி ஜடமாகத் திரண்டு இருப்பதே அதனுள்ளே உறையும் சக்தியின் ஆற்றல் என்றும் வாதிடுவார்கள். சக்தி கட்டிவைத்திருக்கவில்லை என்றால் ஜடத்திருக்கு இருப்பே இல்லை என்பது அவர்கள் வாதம். ஆக ஜடாத்மாவாக இருப்பவள் சக்தி தான் என்பது சாக்த தத்துவம். இருப்பதெல்லாம் ஆதார சக்தி மட்டுமே, சிவமே இல்லை.

  4. ஸ்ரீ ப்ரகாஸ் சங்கரன்
    “இருப்பதெல்லாம் ஆதார சக்தி மட்டுமே, சிவமே இல்லை”. இந்த மொழி சாக்தர்களில் மூடர் மொழி. என்னகதை இது சக்தி எப்போதும் சிவத்தினுடையது. சிவம் எப்போதும் சக்தியுடனே பிரிபர நிற்பது நெறுப்பும் சூடும் போல.
    சைவர்களுக்கும் சாக்தர்களுக்கும் சிண்டுமுடிக்கும் பின்னூட்டம் இங்குவேண்டாம்.உண்மையான சாக்தர்கள் சிவத்தோடே சக்தியை வழிபடுகிறார்கள். மெய் சைவர்கள் சிவபெருமானை சக்திவிஸிஷ்ட மூர்தமாகவே கொள்வர். சிவ லிங்கத்தின் இடை சக்தி கோளம் சிவம் என்றேவழிபடுவர் சைவர். ஸ்ரீ சக்ர வழிபாட்டில் மேல் நோக்கிய முக்கோணத்தை சிவம் என்று கீழ் நோக்கிய முக்கோணம் சக்தி என்றும் வழிப்டுவர் மெய் சக்தர்.
    வேதம் முழங்கு கிறது சிவ் ஏவ கேவல: ஆதியில் சிவமே இருந்தது. அனைத்தும் ஊழியில் ஒடுங்குவது சிவத்திலே சிவலிங்கத்திலே. ஆக சிவமே இல்லை என்று சிவ நிந்தை செய்யவேண்டாம் ப்ரகாஸ் சங்கரன் என்ற இரு சிவ சப்தங்களை ப்பெயரில் கொண்ட நீங்கள்.

  5. அன்புக்குரிய ஸ்ரீ ஆலந்தூர் மள்ளன்
    அருமையான சிறுகதை. கடந்த ஒரு மாதமாக உங்கள் கதையை வெகு நாளாக தமிழ் ஹிந்துவில் காணவில்லையே என்ற எண்ணம் எனக்குள் இருந்துகொண்டே இருந்தது. இன்று சிவனருள் சக்தி அதனை நிறைவேற்றி யுள்ளது.
    கம்யூனிஸ சித்தாந்தத்தினைக்காட்டிலும் நமது சிந்தனை முறை எப்படி சிறந்து விளங்குகிறது என்ற கருத்து இக்கதை மூலம் தெளிவாகிறது.
    இங்கே ஒரு சிறு ஐயம் ஸ்ரீ அரவிந்தர் இயக்கத்தினரில் ஸ்ரீ லலிதா சகஸ்ர நாமத்திற்கு உரை வழங்கக்கூடியவர்கள் இருக்கிறார்களா? என்பது அது. ஸ்ரீ அரவிந்தர் ஸ்ரீ அன்னை ஆகியவர்களை மட்டுமே அவர்கள் வணங்குவதை அறிவேன்.
    அன்பும் பாராட்டும் வாழ்த்தும் நிறைக

  6. //இங்கே ஒரு சிறு ஐயம் ஸ்ரீ அரவிந்தர் இயக்கத்தினரில் ஸ்ரீ லலிதா சகஸ்ர நாமத்திற்கு உரை வழங்கக்கூடியவர்கள் இருக்கிறார்களா?//

    திரு.எம்.பி.பண்டிட் அவர்களின் தொடக்க விளக்க உரையுடன் அவரது குரலிலேயே ஸ்ரீ லலிதா சஹஸ்ர நாமம் ஒலிநாடாவை நான் 1989 இல் ஸ்ரீ அரவிந்த ஆசிரமத்தில் வாங்கியுள்ளேன்.

    கருத்துகள் கூறிய அன்பர்கள் அனைவருக்கும் நன்றி. மேலும் கருத்துகளையும் விவாதங்களையும் எதிர்பார்ப்புடன் எதிர்நோக்குகிறேன்

  7. குழப்பமான கட்டுரை. ஒன்றும் புரியவில்லை.

  8. அன்புள்ள சிவஸ்ரீ.விபூதிபூஷன், நான் சிவ-சக்தி என்பதைப் பற்றித் தத்துவத் தளத்தில் விவாதிக்கப்படுவதைச் சொன்னேன். matter and Energy ஐப் பற்றி எழுதியுள்ளதை கவனிக்கவும். தாங்கள் அதை பக்தி, சமய, வழிபாட்டுத் தளத்தில் எடுத்துக்கொண்டுவிட்டீர்கள். அதனால் சைவ-சாக்த சிண்டுமுடிப்பு, சிவநிந்தனை என்ற குழப்பம் உங்களுக்கு வந்துவிட்டது. அது என் நோக்கமும், விருப்பமும் அல்ல என்பதைத் தெளிவுபடுத்திக் கொள்கிறேன். புரிதலுக்கு நன்றி.

  9. இச்சிறு கதை மிகவும் அறிவியலின் அதீத தாக்கத்திற்கு உட்பட்டு.. சிறுகதைக்குரிய பண்புகளை இழந்து நிற்பதாகவும்.. ஒரு கட்டுரை போலாகி விட்டதாகவும் தோன்றுகின்றது… இந்த விஷயத்தை இன்னும் எளிமைப்படுத்தி இரண்டு சிறுகதைகளாக எழுதியிருக்கலாமே.. புரிதலுக்குக் கொஞ்சம் கடினமாக இருக்கின்றது… இவ்வாறு குறிப்பிடுவதற்கு மரியாதைக்குரிய மள்ளன் அவர்கள் மன்னிப்பார்களாக…

  10. மறைந்த ஸ்ரீ எம். பி. பண்டிட் அவர்களை சட்டென்று நினைவூட்டியமைக்கு மிக்க நன்றி. அவர் ஸ்ரீ கபாலி சாஸ்த்ரியாரின் சீடர். இருவருமே ஸ்ரீ அரவிந்த ஆசிரமத்தில் இருந்தவர்கள்தாம். அவ்விருவருமே நாங்கள் ஸ்ரீ அரவிந்த ஆசிரமத்தில் இருந்த காலத்தில் எங்களுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தவர்கள். இன்றைக்கு ஸ்ரீ அரவிந்தர்- ஸ்ரீ அன்னை வழிபாடு ஒரு கல்ட் மாதிரி ஆகியிருக்கிறது. நாங்கள் அவர்களை உடலியக்கத் தோற்றத்துடன் தரிசித்து மகிழ்ந்த காலத்தில் அவர்களை குருமார்களாகவே கண்டோம். சமஸ்க்ருத மொழியில் தேர்ச்சி மிக்க கபாலி சாஸ்த்ரியாரும் எம் பி பண்டிட்டும் சக்தி உபாசகர்கள். பண்டிட் அவர்களைப் பலமுறை சந்திக்கும் அரிய வாய்ப்பையும் பின்னாளில் பெற்றிருக்கிறேன். ஒருமுறை அவர் மிகுந்த ஆவேசத்துடன் என்னைக் கூர்ந்து நோக்கி நயன தீட்சை அளித்தார். அதன் பின்னரே எனது ஆன்மிகப் பயணம் மிகத் தீவிரம் அடைந்தது. இந்த நிகழ்ச்சி சுமார் நாற்பது ஆண்டுகளுக்குமுன் என் சகோதரி ஸ்ரீமதி விஜயா சங்கர நாராயணன், சகோதரியின் கணவர் ஸ்ரீ எஸ். சங்கர நாராயணன் ஆகியோரின் சென்னை ராயப்பேட்டை லட்சுமிபுரம் இல்லத்தில் நடந்தது. என் சகோதரி, சகோதரியின் கணவர் இருவருமே கபாலி சாஸ்த்ரியாரின் சீடர்கள். பண்டிட் எங்கள் குடும்ப நண்பர். ஓர் அருமையான கடந்த காலத்தை எனக்கு இச்சிறுகதை திரும்பவும் வாழ்ந்து ஆனந்திக்கும் வாய்ப்பைத் தந்தது.
    ஸ்ரீ அரவிந்த ஆசிரமத்தில் கடந்துபோன காலத்தில் ஸ்ரீ லளிதா சஹஸ்ரநாமம் மட்டுமின்றி நமது தெய்வ நம்பிக்கை சார்ந்த பலவாறான நாமாவளிகளும் பக்தியுடன் சொல்லப்பட்டு வந்தன. யோகீச்வரரான ஸ்ரீ அரவிந்தர்கூட ஒரு சக்தி உபாசகரே. சக்தி உபாசனை என்பது உண்மையில் சிவ உபாசனையும் ஆகும். சிவனை உறைநிலையில் உள்ள சக்தியாகவும், சக்தியை இயங்கு நிலையில் உள்ள சிவமாகவும் உபாசிக்கிறோம். ஸ்ரீ நடராஜத் திருமேனியை இயங்குநிலை சக்தியாகவே காண்கிறோம். சக்தி உபாசகர் முதலில் சிவபூசை செய்த பின்னரே சக்தியை ஆராதிக்கிறார். சிவபூசையின்போது அவர் சக்தியை உறைநிலையில் தியானித்து, அதன் பின்னர் சக்தியை இயங்குநிலை சிவமாகக் கொண்டாடுகிறார். இவை நுட்பமான உணர்வு அனுபவங்கள். வார்த்தைகள் அவற்றை சோபை இழக்கச் செய்கின்றன.
    மூளையே சகலத்தையும் ஆட்டுவிக்கும் சர்வாதிகார கேந்திர ஸ்தானம் என்கிற மேற்கத்திய விஞ்ஞானத்தை நமது விஞ்ஞானமாகிய மெய்ஞானம் எப்போதோ புறந்தள்ளிவிட்டது. குண்டலினி தத்துவத்தில் பொதிந்துள்ள செய்தி இதுவே. ஆறு சக்கரங்களுக்கும் அவையவைக்கென இயக்க சுதந்திரம் உண்டு. இது பிறவற்றுக்கு பொருந்தும்.
    ஆலந்தூர் மள்ளன் சிறுகதை பல மெய்ஞான விஞ்ஞானங்கள் பற்றிய சிந்தனைகளைத் தூண்டிவிடும் ஆற்றலைப் பெற்றிருப்பது மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது.
    -மலர்மன்னன்

  11. மிகவும் அழகாக புனைவு பெற்று அற்புதமாக இந்திய ஞானிகள் இந்த உலகத்திற்கு, மானிடத்திற்கும் கூறிச் சென்ற பிரபஞ்ச ரகசியங்களில் இந்த விஞ்ஞானக் கூறுகள் யாவும் உள்ளடங்கியதே என்பதை மிகவும் நேர்த்தியா சமைத்த ஆக்கம்.

    மார்க்சீயம், ஏங்கல்ஸ்சீயம் இவைகள் எல்லாம் அன்றைய சமூக பொருளாதார சூழலின் தேவை… கால ஓட்டத்தில் அவைகள் விஞ்ஞானத்தின் வளர்ச்சியால் சில காலாவதியாவதும் சிலவைகள் வரலாறாய் இருப்பதும் சிலவைகள் புழக்கத்தில் இருப்பதும் புறப்பொருள் வாழ்வியலில் இன்று இருக்கும் நிலைமையாக கொள்ளலாம்.

    மலர்களின் நிறம் விஞ்ஞானம் என்றால் அதனின் மணம் மெஞ்ஞானமாகிறது… காட்சிகள் விஞ்ஞானத்தால் விளக்கப் படுமானால் அதனுள் இருக்கும் ஒன்றே ஆனத் தத்துவமான இயக்கத்தை மெஞ்ஞானம் அன்றி உணரமுடியாது… என்பதைப் போல அறிவியலுக்கும் அருளியளுக்கும் உள்ள தொடர்பை முழுதாக உணர்ந்தால் இவைகள் யாவும் விளங்கும்.

    அருளியல் அறிவியலின் சுவாசம் (ஜீவன் / ஆத்மா / ஈஸ்வரன்)!!!
    அறிவியல் அருளியலின் வெளிப்பாடு!!!

    மிகவும் அருமையான பதிவை எழுதி வெளியிட்ட எழுத்தர், பதிவர் இருவருக்கும் எனது நன்றிகள்.

  12. கரங்களை மேலே தூக்கி உள்ளங் கைகளை அகல விரித்து ஒவ்வொரு விரலையும் பிறைச் சந்திர வடிவில் வளைத்து மின்காந்த அலைகளை உள்வாங்கும் ஆன்டெனாவாகக் கரங்களைப் பயன்படுத்தி செய்திகளைப் பெறும் சாத்தியக் கூறு நமது ரிஷிகளுக்கும் சித்தர்களுக்கும் இருந்தது. ஸ்ரீ அரவிந்தர் ஆன்ம சக்தியை ஆகாயத்திலேருந்து பூமியில் இறக்கிய தருணத்தைப் பலர் படித்திருக்கலாம். அற்கான செயல்முறையிலும் இந்த சாத்தியக் கூறு பயன் பட்டிருக்கக் கூடும்.
    -மலர்மன்னன்

  13. ஸ்ரீ எம் பி. பண்டிட் அவர்களின் முழுப் பெயர் மாதவ புண்டலிக பண்டிட் என்பதாகும். 1939-லேயே ஸ்ரீ அரவிந்த ஆசிரமம் சேர்ந்த அவர் ஸ்ரீ அன்னையின் செயலராகத் தொண்டு செய்தார். பின்னாளில் ஸ்ரீ அரவிந்த ஆசிரமத்தின் செயலராக இருந்தார். அவரது தாய்மொழி கன்னடம். எனது மறுமொழியைப் படித்த சூட்டோடு சூடாகவே தொலை பேசியில் மேலும் விவரங்கள் கேட்கப்படுவதால் இதனைப் பதிவு செய்கிறேன். பண்டிட் அவர்களின் நூல்கள் ஏராளம். அவை பற்றிய விவரங்களையெல்லாம் என்னால் இப்போது விவரிக்க இயலாது. இணையத்தில் M P Pandit என்று தேடினால் கிடைக்கும். ஆனால் ஓரளவு தேர்ச்சி இருந்தால் மட்டுமே படித்துப் புரிந்துகொள்ள முடியும். நிறைய நிறைய எழுதியபின் நான் தெரிந்துகொண்ட விஷயம் எழுதுவது வியர்த்தம் என்பதே என்று ஒருதடவை அவர் என்னிடம் சொன்னார். அவர் சொன்னதை சரியான அர்த்தத்தில் புரிந்து கொள்ள வேண்டும். அடிப்படையான உண்மையை உணர்த்தத்தான் முடியும். பேச்சாலோ எழுத்தாலோ அல்ல. ஞானசிரியர்கள் எழுதுவதற்கும் பேசுவதற்கும் அப்பால் வேறு முறைகளில் மிகத் தெளிவாகப் புரிய வைப்பார்கள். அதுவே மிகவும் சிலாக்கியமானதாகும்.
    -மலர்மன்னன்

  14. அற்புதம் ஆலந்தூர் மல்லன்.

    இன்றைய புனைவு நாளைய நினைவாகலாம்.
    இன்னொரு ஜெயமோகன் உருவாகிவிட்டார். வாழ்த்துக்கள்!

    -சேக்கிழான்

  15. அன்புக்குரிய ஸ்ரீ ப்ரகாஸ் சங்கரன் தங்களது விளக்கத்திற்கு நன்றி. சிவம் சக்தி என்பதை சடம் ஆற்றல் (Matter and Energy) என்பது தவறான புரிதல். சிவம் ஜடம் அன்று அது சத்துப்பொருள். ஸ்ரீ மலர்மன்னன் ஐயா அவர்கள் தமது பின்னூட்டத்தில் குறிப்பிடுவது போல் சிவம் நிலை ஆற்றல் என்றும். சக்தி என்பது இயக்க ஆற்றல் என்றும் புரிந்து கொள்ளவேண்டும். நன்றி

  16. வறுமைக் கோட்டின் கீழ் வாழும் பல கோடி மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பது தொடர்பில் இத்தகைய கதைகள் எததகைய பங்களிப்பை வழங்குகின்றன? எந்த அணியில் இருக்கின்றன? போன்றவைகளை வைத்தே இத்தகைய கதைகள் மதிப்பீடு செய்யப்பட வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *