ஆங்கில மூலம் : எஸ். லக்ஷ்மிநாராயணன்
தமிழாக்கம் : எஸ். ராமன்
தொடர்ச்சி..
7.1 துணையின் மடமையும், கடமையும்
இராமர், லக்ஷ்மணன், சீதை மூவரும் தசரதர், கௌசல்யை மற்றும் அங்கிருந்தோரிடம் விடைபெற்றுக்கொண்டு காட்டுக்குப் புறப்படுவது எந்த மனத்தையும் உலுக்கும் ஒரு காட்சி. கௌசல்யை அப்போது சீதையைப் பார்த்து ஓர் அறிவுரை கூறுகிறாள். காட்டில் தங்கி வாழ்வது என்பது மிகவும் கடினமானது; தன் கணவன் எல்லாச் செல்வங்களையும் இழந்து ஏழையாக நிற்கும்போது, எந்தப் பெண்ணிற்குமே அந்த வாழ்க்கை மேலும் பிடிக்காமல் அவனிடம் சண்டை போட்டுக்கொண்டு அவனை விட்டுப் பிரிந்து வரவே தோன்றும். அந்த நிலையில் இருக்கும் ராமனுடன் கூடவே இருந்து அவனது துயரங்களில் அவனுடன் ஒரு பிரியாத துணையாக இருக்கவேண்டும் என்று கௌசல்யை சீதையிடம் கூறுகிறாள்.
ஏஷ ஸ்வபா⁴வோ நாரீணாமனுபூ⁴ய புரா ஸுக²ம்|
அல்பாமப்யாபத³ம்ʼ ப்ராப்ய து³ஷ்யந்தி ப்ரஜஹத்யபி|| 2.39.21||
புரா formerly, முன்பாக
ஸுக²ம் pleasures, சுக போகங்கள்
அனுபூ⁴ய having enjoyed, அனுபவித்துவிட்டு
அல்பாமபி even though small, சிறியது என்றாலும்
ஆபத³ம் trouble, பிரச்சினை
ப்ராப்ய having obtained, வந்ததும்
து³ஷ்யந்தி censure them, குற்றம் காண்பார்கள்
ப்ரஜஹத்யபி or even abandon them, விலகிவிடுவார்கள்
ஏஷ: this one, இதுவே
நாரீணாம் women(அ)s, பெண்களின்
ஸ்வபா⁴வ: nature, இயற்கை.
கணவனின் நல்ல காலத்தில் முன்னர் அவனுடன் சுகபோகங்களை நன்கு அனுபவித்திருந்தாலும், அவனுக்குக் கொஞ்சம் கஷ்ட காலம் என்று வந்துவிட்டால் வெறுத்துப்போய் பெண்கள் அவனிடம் சண்டை போட்டுக்கொண்டு, அவனை ஒதுக்கவும் செய்வார்கள். இது பெண்களின் இயற்கைக் குணம்.
ஸ த்வயா நாவமந்தவ்ய: புத்ர: ப்ரவ்ராஜிதோ மம|
தவ தை³வதமஸ்த்வேஷ நிர்த⁴ன: ஸத⁴னோ(அ)பி வா|| 2.39.25||
ப்ரவ்ராஜித: exiled to the forest, வனவாசம் புரியும்
மம my, என்
ஸ: புத்ர: son, மகன்
த்வயா by you, உன்னால்
நாவமந்தவ்ய: is not to be disdained, வெறுக்கப்படக் கூடாது
நிர்த⁴ன: without wealth, ஏழையோ
ஸத⁴னோ(அ)பி வா or with wealth, செல்வந்தனோ
ஏஷ: he, அவன்
தவ your, உன்னுடைய
தை³வம் அஸ்து be your god, கடவுளாக இருக்கட்டும்.
நாடு கடத்தப்பட்டதுபோல் வனவாசம் புரியும் என் மகனை அவமதிப்பதுபோல் நடக்காதே. ஏழையோ, செல்வந்தனோ, கடவுளை எப்படிப் பார்ப்பாயோ அப்படியே அவனிடமும் நடந்து கொள்.
உலகத்தில் சாதாரணமாக நடக்கக் கூடியதை வால்மீகி இங்கு சொல்கிறார். பெண்கள் என்று இங்கு சொல்லப்பட்டிருந்தாலும் இது ஆண்களுக்கும் பொருந்தும். ஆணோ, பெண்ணோ எவருக்குமே கஷ்டமான, துக்கமான வாழ்க்கை என்றால் அது ஒத்துக்கொள்வதில்லை. தனக்கு அறிமுகமாயிருந்த வசதிகள் எதுவும் தன் வசமின்றி கைவிட்டுப் போவதை எவருமே விரும்புவதில்லை. அப்படி ஒரு நிலை உருவானால், கூட உள்ள துணையைக் கைவிடவும் பெரும்பாலோர் தயங்குவதில்லை. பணம் பத்தையும் செய்வதால், எவருக்கும் ஏழ்மை நிலை பிடிப்பதில்லை. தானே விரும்பி இராமருடன் காட்டுக்குச் செல்வதால், சீதைக்கு இந்த அறிவுரை தேவையே இல்லை. ஆனாலும் பொதுவாக மக்களுக்குச் சரியான சந்தர்ப்பத்தில் இது போன்ற செய்திகளைக் கொண்டுபோய் சேர்க்கவேண்டும் என்பதால், வால்மீகி இடத்திற்குப் பொருத்தமான இதை எழுதியிருக்கிறார்.
7.2 அகத்தின் அழகு
அமைச்சர் சுமந்த்ரா ரதத்தை ஓட்ட, அதில் இராமர், லக்ஷ்மணன் மற்றும் சீதை பயணித்து காட்டுக்குள் நுழைகின்றனர். காட்டின் எல்லையை அடைந்ததும், சுமந்த்ராவை அங்கிருந்து அயோத்திக்குத் திரும்பச் சொல்லி, தசரதரிடம் இப்படியாகச் சொல்லச் சொல்கிறார். தங்கள் மூவருக்குமே, அயோத்யாவின் சுகபோக வாழ்வைத் துறந்துவிட்டு கடினமான வன வாழ்க்கையை மேற்கொண்டதில் எந்த வருத்தமும் இல்லை. மேலும் அவருக்கு ஊக்கம் கொடுக்கும் வகையில், வன வாசம் முடிந்து அயோத்திக்குக் கட்டாயம் திரும்பி வருவோம், பதினான்கு ஆண்டுகளும் வேகமாகப் பறந்து விடும் என்று சொல்லி அனுப்புகிறார்.
நைவாஹமனுஸோ²சாமி லக்ஷ்மணோ ந ச மைதி²லீ |
அயோத்⁴யாயாஸ்²ச்யுதாஸ்²சேதி வனே வத்ஸ்யாமஹேதி ச|| 2.52.28||
அயோத்⁴யாயா: from Ayodhya, அயோத்யாவிலிருந்து
ச்யுதாஸ்²சேதி having been banished, நாடு கடத்தப்பட்டு
வனே to forest, காட்டுக்கு
வத்ஸ்யாமஹேதி ச has to be residing, தங்குவதற்கு
அஹம் we, நாங்கள்
நைவ அனுஸோ²சாமி not feeling agonised, துயர எண்ணங்கள் இல்லை
லக்ஷ்மண: Lakshmana, லக்ஷ்மணன்
மைதி²லீ ச and Sita also, சீதைக்கும் கூட
ந not sad about it, வருத்தம் இல்லை.
அயோத்யாவிலிருந்து நாடு கடத்தப்பட்டு காட்டில் வாழ அனுப்பப்பட்டு இருப்பதில் எங்களுக்கு எந்தவிதத் துயரமும் இல்லை; லக்ஷ்மணனுக்கும், சீதைக்கும் கூட இதில் வருத்தம் இல்லை.
ஒருவனின் செய்கைகள் அவனது குணத்தைப் பளிச்சென்று காட்டும்படி அமைந்திருக்க வேண்டும் என்பது வால்மீகி முன்பு விரும்பத்தக்க குணாதிசயங்கள் பற்றி தொடுத்திருந்த பட்டியலில் ஒன்றாகும். கடமையில் கருத்தாய் இருத்தல், மற்றும் தன் தந்தையின் கௌரவத்தைக் காப்பதில் நாட்டம் என்ற இரண்டு குணங்களுமே இராமர் காட்டிற்குப் போவது, மற்றும் அமைச்சர் சுமந்த்ராவிடம் தந்தைக்குச் சொல்லி அனுப்பும் செய்தி என்ற இரண்டு செயல்களில் தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது. இதேபோல அவரது மற்றச் செயல்கள் மூலமும், இது மட்டுமன்றி மற்றவர்க்காக அவருக்கு இருக்கும் அக்கறை என்ற குணங்கள் எல்லாமே நன்றாகத் தெரியவரும்.
7.3 செய்வன திருந்தச் செய்
இராமர், லக்ஷ்மணன், சீதை மூவரும் காட்டினுள்ளே சென்று பரத்வாஜ முனிவர் இருக்கும் இடத்தைச் சென்றடைந்தனர். சித்திரகூட மலைச் சாரல் அவர்கள் தங்குவதற்கு ஒரு அற்புதமான இடம் என்று அவர் அவர்களிடம் சொன்னார். நல்ல கனிகள் தரும் மரங்கள் பல இருக்கும் ஒரு இடத்தை அங்கு தங்குவதற்கு இராமர் தேர்ந்தெடுத்தார். அது வால்மீகி மற்றும் பல முனிவர்களும் இருக்கும் இடம். இராமர் வால்மீகி முனிவரைப் போய் பார்க்க, அவரும் அவர்களை வரவேற்று அங்கு குடில் ஒன்று கட்டி தங்கச் சொன்னார். லக்ஷ்மணன் சுற்றுப்புறத்தில் அலைந்து குடிலுக்குத் தேவையான மரங்களை வெட்டி, அவைகளை வேண்டிய தூண்களாகவும் அளவாகச் செதுக்கி, ஒரு அழகான குடிலைக் கட்டினான். அது இராமருக்கு மிகவும் பிடித்தமாக அமைந்தது. அதில் தங்கப் போவதற்கு முன் லக்ஷ்மணனையே மனை புகு விழா ஒன்றைச் செய்யச் சொன்னார். ஒரு இடத்தில் குடி போவதற்கு முன்பாக, அக்னி வளர்த்து, வேண்டிய தான தருமங்கள் செய்து, அந்த வீட்டையும் அதில் இருக்கப்போகும் மனிதர்களையும் சகல நலன்களுடனும் நன்கு வாழ இறைவனை மனதாரக் கும்பிட்டு, அதன் பின்னரே அங்கு தங்கப் போவது என்பது நமது நெடுநாளைய வழக்கம்.
ம்ருʼக³ம்ʼ ஹத்வா(அ)(அ)நய க்ஷிப்ரம்ʼ லக்ஷ்மணேஹ ஸு²பே⁴க்ஷண!|
கர்தவ்ய ஸ்²ஸா²ஸ்த்ரத்³ருʼஷ்டோ ஹி விதி⁴ர்த⁴ர்மமனுஸ்மர|| 2.56.23||
ஸு²பே⁴க்ஷண one who has auspicious looking eyes, கனிவான பார்வையைக் கொண்ட லக்ஷ்மண Lakshmana, லக்ஷ்மணா!
ம்ருʼக³ம் the antelope, மான்
ஹத்வா having killed, வேட்டையாடிக் கொன்று
க்ஷிப்ரம் quickly, உடனே
இஹ here, இங்கே
ஆனய bring, கொண்டு வா
ஸா²ஸ்த்ரத்³ருʼஷ்ட: as prescribed by the scriptures, சாஸ்திரங்களில் சொல்லப்பட்டிருக்கும்
விதி⁴: rites, சடங்குகள்
கர்தவ்ய: ஹி will have to be carried out, செய்யவேண்டும்.
த⁴ர்மம் the tradition, சம்பிரதாயப்படி
அனுஸ்மர recollect, நினைவில் கொள்.
லக்ஷ்மணா! கனிவான பார்வையைக் கொண்ட மானொன்றை வேட்டையாடிக் கொன்று அதை உடனே இங்கே கொண்டு வா. சாஸ்திரங்களில் சொல்லப்பட்டிருக்கும் முறைகளைப் பின்பற்றி சடங்குகள் செய்யவேண்டும். நம் சம்பிரதாயப்படி இதெல்லாம் செய்யவேண்டும் என்று உனக்கும் தெரியுமே.
(ஆங்கில மூலப் பதிப்பில், இங்கு ஆசிரியர் இந்தச் செய்யுளின் இரண்டாவது வரியை மட்டும் கொடுத்திருக்கிறார். முதல் வரியில் வரும் ‘மானைக் கொன்று படைப்பது பற்றி’ ராமரே இப்படிச் சொல்லியிருக்கிறாரே என்று எவராவது தவறாக எடுத்தாளலாம் என்று நினைத்தாரோ என்னவோ! பின்னோக்கிப் பார்க்கும்போது கற்காலத்தில் அனைவருமே இறைச்சி சாப்பிடுவது என்பது சர்வ சாதாரணமாக இருந்திருக்கிறது என்பதும் உண்மையே; மாமிசம் படைப்பது என்பதும் வழக்கத்தில் இருந்திருக்கிறது என்பதைச் சொல்வதற்கே இங்கு முழுச் செய்யுளையும் கொடுத்துள்ளேன். இப்போதும் கிடா வெட்டி படைப்பது என்று இருக்கிறது அல்லவா? காலப் போக்கில் மாமிசத்தை விட, காய் கனிகள் சாப்பிடுவதே மிக நல்லது என்றும், அவையே சாத்விக எண்ணங்களுக்குக் கைகொடுக்கிறது என்பதும் தெரியவர இறைச்சி சாப்பிடும் வழக்கம் குறைந்தும், சில சமூகங்களில் அடியோடு மறைந்தும் போயிருக்கிறது. தெற்கே சதுரகிரியில் உள்ள இரண்டு மகாலிங்கங்களில், சுந்தர மகாலிங்கம் அருகே இறைச்சி படைப்பது இன்றும் தொடர்கிறது. ஆனால் சந்தன மகாலிங்கத்திற்கு காய் கனிகள் மட்டுமே படைப்பதையும் நாம் இங்கு நினைவு கூறலாம். சம்பிரதாயம் என்பதை நாம் காலத்திற்கு ஏற்பக் கையாள்வதில் தவறு இல்லை. அப்பழக்கங்களில் உள்ள அடிப்படை உண்மைகளை எப்போதும் மறவாது இருப்பது நன்மை பயக்கும்.)
கட்டப்பட்டது என்னவோ ஒரு சிறிய குடிசைதான்; ஒரு வீடுமல்ல, நிச்சயமாக ஒரு அரண்மனையல்ல. சீதையும், லக்ஷ்மணனும் பெரிய மாளிகைகளில் வாழ்ந்து பழகியவர்கள். அங்கு நடக்கும் மனை புகு விழாக்களையும் அவர்கள் பார்த்திருப்பார்கள். அவர்களுக்கு ஒரு குடிசை, அதுவும் கிடைத்த பொருட்களைக் கொண்டு கட்டப்பட்ட சாதாரண குடிசை, அதற்கு மனை புகு விழா நடத்த வேண்டும் என்று அவர்களுக்கு யோசனை கூட வந்திருக்காது. இராமருக்கோ ஒரு குடிசையானாலும் அது ஒரு தங்குமிடம்; அங்கு தங்கப்போவோர்களுக்கு நடப்பது எல்லாம் நன்மையாக முடியவேண்டும் என்பதால் அதற்கு செய்ய வேண்டிய விழாவைச் செய்து, இறைவனை வேண்டிக்கொள்ள வேண்டும் என்று நினைவில் இருக்கிறது.
அதை அவர்களுக்கும் நினைவூட்டுகிறார். குடியிருக்கும் குடிலானாலும், குடிக்கும் கூழானாலும், உடுக்கும் உடையானாலும், எதுவானாலும் எப்போதானாலும் அதைக் கொடுத்த இறைவனுக்கு நன்றி சொல்லித் தொடங்குவதே எல்லாச் சடங்குகளின் உட்கருத்தாகும். எதற்கு எந்தத் தேவதை என்று கருதப்படுகிறதோ அதற்கு விசேஷமாகச் சில வேண்டுதல்கள் இருக்கும். அதையும் சொல்லி தனக்கும், உற்றார், சுற்றார், உலகத்தோர் அனைவருக்கும் நன்மை பயக்க என்று வேண்டியே எந்தச் சடங்கும் தொடங்கும்; முடியும்போதும் அப்படியே. அவைகளைச் செய்வதன் அவசியத்தை லக்ஷ்மணன், சீதைக்குச் சொல்வது போல வால்மீகியும், சடங்குகள் எல்லாவற்றையும் அதன் உட்பொருள் உணராமல் மேம்போக்காகச் செய்யும் மனிதர்களுக்கும் அறிவுறுத்துகிறார்.
7.4 ஒரு கொடியில் இரு மலர்கள்
நாட்டின் எல்லை வரை சென்று காட்டுக்குள் இறக்கிவிட்ட அமைச்சர் சுமந்த்ராவை இராமர் அயோத்திக்குத் திரும்பச்சொல்லி, தசரதருக்குச் செய்தி கொண்டுபோகச் சொல்லியும், சுமந்த்ராவுக்கு அவர்களை விட்டுப்போக மனமில்லை. அவர் இராமரிடம் அங்கேயே தங்கி, அவருக்குச் சேவை செய்ய உத்திரவு கேட்டார். இராமரோ அதற்கு மறுத்துவிட்டார். அமைச்சர் போய் கைகேயியிடம் அவர்களைக் காட்டில் விட்டுவிட்டு வந்ததைச் சொல்லவில்லை என்றால், எல்லோரும் ஏதோ சூழ்ச்சி செய்து அவர்களை வேறெங்கோ மறைவிடத்திற்கு அனுப்பி, சில காலம் கழிந்தபின் படைபலம் கூட்டி வந்து ஆட்சியைக் கைப்பற்ற சூது நடக்கிறதோ என்று அவளுக்குத் தோன்றும்படியான சந்தேகம் வர இடம் கொடுக்கக்கூடாது என்று இராமருக்குத் தோன்றியது. அதனால் அவர் சுமந்த்ராவிடம், கைகேயியிடம் போய் அவர்கள் காடு போய் சேர்ந்து அவளது இரண்டாவது கோரிக்கையை பரிபூரணமாக நிறைவேற்றிவிட்டதை சொல்லச் சொன்னார்.
சுமந்த்ரரும் அப்படியே வந்து சொல்ல, தசரதர் காட்டிற்குச் சென்றுள்ளவர்கள் எப்படி இருக்கிறார்கள், அங்கு வாழும் கஷ்டத்தை எப்படித் தாங்குகிறார்கள், அவர்கள் ஏதேனும் செய்தி சொல்லி அனுப்பினார்களா என்று கவலையோடும், ஆவலோடும் கேட்கிறார். இராமர் சொல்லி அனுப்பிய செய்தியோ மிகவும் அடக்கமாகவும், தசரதரது நலனில் மிகவும் கவலை கொண்டதாகவும் இருந்தது. அதேபோல் தனது தாய்க்குச் சொன்னதும் தசரதரைக் கண்ணும் கருத்துமாகக் காக்கவேண்டும் என்றும், சித்தி கைகேயியிடம் நல்லதனமாக இருக்க வேண்டியும் இருந்தது. தம்பி பரதனுக்குச் சொன்னதோ, மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு நாட்டை நன்கு ஆள வேண்டியும், தனது பெற்றோர்கள் இருவரையும் நன்கு பார்த்துக் கொள்ளும்படியும் இருந்தது.
ஆனால் இதற்கு நேர்மாறாக லக்ஷ்மணனது செய்திகள் ஆத்திரத்தை வெளிப்படுத்துவதாகவும், மிகக் கடுமையாகவும் இருந்தன. காட்டிற்கு பதினான்கு வருடங்கள் செல்லும் தண்டனையை பெறுவதற்கு இராமன் அப்படி என்னதான் தவறு செய்திருந்தான் என்று தசரதரைக் குறிப்பாகக் கேட்டனுப்பியிருந்தான். இனிமேலும் தசரதர் எனது தந்தையே அல்ல என்று வேறு கடுமையாகச் சொல்லியிருந்தான்.
அஹம்ʼ தாவன்மஹாராஜே பித்ருʼத்வம்ʼ நோபலக்ஷ்யே|
ப்⁴ராதா ப⁴ர்தா ச ப³ந்து⁴ஸ்²ச பிதா ச மம ராக⁴வ:|| 2.58.31||
அஹம் I,
மஹாராஜே in that great king, அந்தப் பேரரசரான
பித்ருʼத்வம் fatherhood, தந்தைப் பதவி
நோபலக்ஷ்யே I do not see, நான் கருதவில்லை
மம to me, எனக்கு
ராக⁴வ: Rama alone, ராமன் ஒருவனே
ப்⁴ராதா ச brother, சகோதரன்
ப⁴ர்தாச also protector, காப்பாளனும்
ப³ந்து⁴ஸ்²ச friend, தோழன்
பிதா father, தந்தை.
அந்தப் பேரரசரான தசரதரை என் தந்தையாக நான் கருதவில்லை. ராமன் ஒருவனே எனது சகோதரன், காப்பாளன், தோழன், மற்றும் தந்தை.
கொடி ஒன்றானாலும் அதில் பூக்கும் மலர்கள் எல்லாம் எப்படி ஒரே மாதிரியாக இருக்கும்? இராமாயணத்தில் நாம் முற்றிலும் முரண்பாடு கொண்ட மனிதர்களைப் பார்க்கிறோம். தனக்கு என்ன துன்பங்கள் வந்தாலும் தாங்கிக்கொண்டு, தந்தையின் கௌரவத்தைக் காப்பாற்றுவதிலேயே குறியாக இருக்கும் இராமரையும் நாம் பார்க்கிறோம். மறுபுறம் தந்தை தசரதரின் நிலையை ஏற்றுக்கொள்ளாமல், அவர் கொடுத்த வரங்களினால் அவரது மனநிலையையே சந்தேகிப்பதும் அல்லாமல், கைகேயியின் அநியாயமான வேண்டுகோளை மறுக்காததால் அவரைத் திடமற்றவர் என்று பேசும் லக்ஷ்மணனையும் பார்க்கிறோம். மேலும் லக்ஷ்மணன் தன் தந்தையை நிராகரித்துவிட்டு, ராமன் எங்கு போனாலும் தானும் அங்கேயே இருப்பதில் பெருமை கொள்கிறான்.
தந்தையையே நிராகரிக்கும் ஒரு மகனைப் பற்றியும் சொல்லும் வால்மீகிக்கு காரணம் நிச்சயமாக ஒன்று இருக்கும். நீதி, நேர்மை விஷயங்களில் ஒவ்வொருவரும் வேறுவேறு மாதிரியாகத்தான் இருப்பார்கள்; எல்லோரது கண்ணோட்டமும் ஒரே மாதிரியாக இருக்காது என்று காவியத்தைப் படிப்போர்களுக்கு அவர் உணர்த்துகிறார். யார் எவருக்கு எது விருப்பமோ அதை அவர்கள் வழிகாட்டுதலுக்குத் தேர்வு செய்து கொள்ளட்டும் என்று இருந்திருப்பார். ஆக வால்மீகி எல்லோருக்கும் ஒரே வழிதான் என்று சொல்பவர் இல்லை. இதைப் படிப்பவர்களும் தனது உள்ளத்தில் எல்லாவற்றையும் வாங்கி, அசை போட்டு அவரவர் அறிவுக்கு நல்லவர் எனப்பட்டவரை வழிபடட்டுமே என்றுதான் இருந்திருப்பார். அவர் இராமராகவோ, லக்ஷ்மணனாகவோ, அல்லது பரதன், சீதை, ஏன் ராவணனாகவோகூட, எவராவது இருக்கலாம். அது அவர்களது உரிமை. எல்லோரது குணநலன்களையும் நன்கு அலசிப் பார்த்துவிட்டு இராமர்தான் எனது வழிகாட்டி என்பதைப் படிப்பவர்கள்தான் தீர்மானிக்கவேண்டும் என்பதுதான் வால்மீகியின் எண்ணமாக இருந்திருக்கவேண்டும்.
(தொடரும்)
தர்மத்தைப்பற்றிய பார்வை ஒவ்வொருவருக்கும் வேறு வேறு விதமாக இருக்கலாம் என்பது உண்மையே. ஆனால் ஸ்ரீ ராமரையே ஸ்ரீ ராமாயணம் சான்றாண்மையாளராகக் காட்ட வருகிறது. இராவணன் உள்ளிட்டோரையல்ல. தங்கள் கட்டுரை 7-4- ன் முடிப்புப் பகுதி சற்று நெருடுகிறது.
மிருகக் கொலை பற்றிய தகவலும் அதை ஸ்ரீ ராமர் தன தம்பியிடம் செய்யச் சொன்னார் என்பதும் எனக்குப் புதியவை. குஹன் கொடுத்த தேனையும் மீனையும் ‘ஏற்றுக்கொண்டதாக’ அறிவித்த ஸ்ரீ ராமர் ‘உண்டதாக’ அறியவில்லை (கம்பர் வழி). கற்காலத்தில் விலங்குகளை எல்லோரும் உண்டார்கள். பின்புதான் உணவுப் பழக்கம் மேன்மையடைந்தது என்பவையெல்லாம் சரியாக இருக்கலாம். ஆனால் ஸ்ரீ ராமரின் பண்பும் அவர் காலமும் நாகரீகத்தில் முன்னேறியவையே. இந்த முரணுக்கு விளக்கம் அறிய முயல்வோம்.
வால்மீகி முனிவருக்கு ஸ்ரீ ராமாயணம் உபதேசிக்கப்பட்டுத்தான் ஸ்ரீ ராமாயணத்தை அவர் செய்ததாக அறிகிறோம். ஆனால் வனத்தில் வால்மீகியை ஸ்ரீ ராமர் சந்தித்ததாக சம்பவம் வருவது எப்படி என்று தெரியவில்லை. இவற்றுக்கெல்லாம் சரியான விடைகள் இருக்கும். தெரிந்துகொள்ள முயல்வோம்.