இலங்கையின் வடமுனையிலுள்ள மூன்று பக்கமும் கடலால் சூழப்பட்ட ஒரு குடாவாக, யாழ்ப்பாணம் இருப்பதால் சில தனித்துவமான பண்புகளை அது பேணி வந்திருக்கின்றது.
இதன் காரணமாக, யாழ்ப்பாணம் இந்து சமயம் சிறப்புற்றிருக்கும் பிற பிரதேசங்களை விடவும், இன்னும் இலங்கையின் பிற பகுதிகளை விடவும் சிறப்பான, தனித்துவமான பல பண்புகளை, நம்பிக்கைகளைக் கொண்டதாகவுள்ளது. யாழ்ப்பாணம் சிறிய குடாநாடாக இருப்பதால், பிற பகுதிகளுடன் நெருக்கமான தொடர்பற்றதாக அக்காலத்தில் இருந்திருக்கிறது.
இதனால், போர்த்துக்கேயர், ஒல்லாந்தர், பிரித்தானியர்கள் போன்ற அந்நிய மதத்தவர்கள் தங்களின் மதரீதியான கொடுங்கோலாட்சியை இங்கே நிலைநிறுத்தமுயன்றுள்ளனர். இதனால், இதற்கு எதிராக கடுமையாக போராடும் எண்ணமும் விருப்பும் மக்களுக்கு இயற்கையாகவே ஏற்பட்டிருக்கிறது.
இதனால், ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் போன்ற பெரியவர்களும் அவர் வழி வந்தவர்களும் எவருக்கும் விட்டுக் கொடுக்காத வீரசைவ செந்நெறியை இங்கே வளர்த்திருக்கிறார்கள். இதனால், பிற இடங்களில் சில பல மாற்றங்களை சமய வழிபாடு பெற்ற போதும், அவைகளை இங்கே நுழைய விடாது பாதுகாக்கும் ஒரு வகைப்பண்பை சில நிலைகளில் காணமுடியும்.
பாரம்பரிய உடை
யாழ்ப்பாணத்தில் கோயில் வழிபாடு மிகவும் முக்கியமானது. இவ்வழிபாட்டின் பல விடயங்களும் தமிழகத்துடன் ஒத்ததாகவே காணப்படுகின்றன. எனினும், சில பல வேறுபாடுகளும் தனித்துவங்களும் அவதானிக்கத்தக்கன.
முக்கியமாக, யாழ்ப்பாணத்துத் திருக்கோயில்களில் உள்ளே செல்லும் ஆண்கள் யாவரும் மேலாடையற்றவர்களாகவே உட்செல்ல அனுமதிக்கப்படுகின்றனர். இன்றளவும் உட்சென்று வழிபட விரும்புகின்ற ஆண்கள் யாவரும் வேட்டி அணிந்து மேலாடை இன்றியே வழிபாட்டுக்குச் செல்கின்ற வழக்கம் உள்ளமை அவதானிக்கத்தக்கது.
மேலங்கி, காற்சட்டை போன்றவை மேலைத்தேசத்தவரால் அறிமுகம் செய்யப்பட்டது. அவற்றை அணிந்து கோயிலுக்குச் செல்வதை விரும்பாத பெரியவர்கள் இதனை இன்றைக்கும் மிக இறுக்கமாகப் பின்பற்றி வரக் காணலாம்.
ஆனால், இன்றைக்கு இந்த நிலையை உடைக்கும் பிரதான சக்தியாகப் பெண்கள் இருக்கிறார்கள். ஆண்கள் விஷயத்தில் மிகவும் கடுமையாக பாரம்பரிய உடையை வலியுறுத்தும் யாழ்ப்பாண சமூகம் பகிரங்கமாக பெண்களை ஆலயத்தினுள் பாரம்பரிய உடையணியுமாறு வலியுறுத்தும் தன்மை குறைந்திருப்பதால், பெண்கள் பொதுவாக, பஞ்சாபி போன்ற ஆடைகளையே அணிவதை விரும்புவதை இன்று காணலாம்.
வெள்ளிக்கிழமைப் புனிதம்
எல்லா நாளும் புலால் உண்பவர்கள் கூட, வெள்ளிக்கிழமையன்று சுத்த சைவபோஜனம் செய்வது யாழ்ப்பாணத்தில் மிகவும் கண்டிப்பாக இருந்து வரும் பழக்கமாக இருக்கிறது.
யாழ்ப்பாணத்தில் சில பிரிவினர் மரக்கறி உணவை ‘சைவ உணவு’ என்று சொல்வதற்கு அப்பால் ‘ஆருதக்கறி’ என்றும் அழைக்கிறார்கள். இது ஜைனசமயத்திலிருந்து வந்த சொல்லாக இருக்கலாம்.
வெள்ளிக்கிழமை தோறும் ஊர்களில் உள்ள பெரிய திருக்கோயில்களில் உற்சவம் நடக்கிறது. சுக்கிரவாரமூர்த்தி என்றழைக்கப்படும் உத்ஸவர் திருவுலாக் கண்டருளும் காட்சியும் பல இடங்களில் காணலாம்.
பாடசாலைகள், கல்லூரிகளில் வெள்ளிக்கிழமை பிரார்த்தனை தீபாராதனையுடன் ஆரம்பமாகி சுமார் அரை மணி நேரம் வரை நீடிக்கும். இதன் போது, மாணிக்கவாசகப் பெருமான் அருளிய “சிவபுராணம்” பாடும் வழக்கமும் பரவலாயுள்ளமை கவனிக்கத்தக்கது.
மரத்தடிகளில் அமைந்துள்ள சிற்றாலயங்களில் பிற நாட்களில் பூஜைகள் நடக்காதவிடத்தும் வெள்ளிக்கிழமை வழிபாடும், பூஜையும் அவசியம் நடைபெறுகின்றன.
கப்பல் திருவிழா
யாழ்ப்பாணம் வலிகாமம் (நடுப்பகுதி), தீவகம், வடமராட்சி, தென்மராட்சி என்று நாற்பெரும் பிரிவுகளாக அமையும். இப்பிராந்தியங்கள் ஒவ்வொன்றிற்கும் தனித்துவமான சில சிறப்பியல்புகளையும் அவதானிக்கலாம்.
இதில் ஒன்றான வடமராட்சியில் நாகர் கோயில் என்றொரு இடமுண்டு. (தமிழ்நாட்டு நாகர் கோயிலுக்கும் இதற்கும் தொடர்புண்டா? என்பது ஆராயப்படவேண்டியது.) இவ்வூரில் பிரபலமான ஸ்ரீ நாகராஜர் திருக்கோயில் உள்ளது. இதனை ஊர் வழக்கில் பெரியதம்பிரான், நாகதம்பிரான் கோயில் என்பர்.
இவ்வூரில் இருந்த ஆலயத்தை அழிப்பதைத் தடுத்த இளைஞர்களை போர்த்துக்கேய கத்தோலிக்க வெறியர்கள் கப்பலில் ஏற்றிக் கொண்டு செல்ல முயன்றனராம். அப்போது, நாகராஜப் பெருமான் பாம்பாக அக்கப்பலினுள் சென்று வெள்ளைக்கார மாலுமிகளை அச்சுறுத்தி அந்த இளைஞர்களை விடுதலை செய்து, போர்த்துக்கேய வெள்ளையர்களையும் விரட்டினாராம்.
இக்கதையை அடிப்படையாகக் கொண்டு வருடா வருடம் பிரம்மாண்டமான கப்பல் திருவிழா இவ்வூரில் நடைபெற்று வருகின்றது. இதன் போது, இளைஞர்கள் மாலுமிகளைப் போல வேடமிட்டு நடிப்பது சிறப்பான நிகழ்ச்சியாகும்.
கதிரைப் பூஜை
வடமராட்சியின் துன்னாலையிலுள்ள நெல்லண்டைப்பதியில் பத்திரகாளியம்பாள் கோயிலுள்ளது. இவ்வன்னைக்கு நாட்டுக்கூத்து மிக விருப்பமானது என்பது ஐதீகம்.
இதனால், இக்கோயிலின் மேற்குப் புறத்தே பழங்காலந்தொட்டு நாடகங்கள் மேடையேற்றப்பட்டு வருகின்றன. இதனை இங்கே நேர்த்தியாகச் செய்யும் மக்களும் உள்ளனர்.
இக்கோயிற் கருவறையின் மேற்குச்சுவற்றில் ஒரு சாளரம்(யன்னல்) இருக்கிறது. அதன் வழியாக அம்பாள் கூத்தைப் பார்த்து ரசிக்கிறாள் என்பது ஐதீகம்.
“கூத்துகந்தாய் நேர்த்தியர் கூத்தாடுங்காலை
கோலமிடு வல்லிபுரக்கோயில் வைகும்
சீர்த்தமிடு நின்னண்ணன் தன்னையும் கூவிச்
சேர்ந்திருந்து மேலைமதில் யன்னல் ஊடாய்
பார்த்தவர்கள் வேண்டுவன பரிவில் ஈவாய்”
என்பது இவ்வூர்ப் புலவர் ஒருவர் பாடி வைத்த பழம் பாடல் ஒன்று. அருகிலுள்ள ஸ்ரீவல்லிபுரம் விஷ்ணுவாலயப் பெருமாளும் அவ்வன்னையும் இங்கே சேர்ந்திருந்து கூத்துப் பார்த்து அருள் புரிவதாகச் சொல்வார்கள்.
இவ்வாறான நம்பிக்கை நிலவுவதால் இங்கே கூத்து மேடையில் இரு கதிரைகள் இடப்பட்டு அலங்கரிக்கப்பட்டிருக்கும். அவ்விரு கதிரைகளின் முன்னால் நைவேத்தியங்கள் படைக்கப்பட்டிருக்கும். கூத்து தொடங்க முன் இவ்விரு கதிரைகளுக்கும் பூஜை நடக்கும். அன்னையும் அண்ணனும் (பெருமாளும்) இவ்விரு கதிரைகளிலும் வந்திருந்து கூத்துப் பார்த்தருளுவர் என்பது நம்பிக்கை. கூத்தாடும் கலைஞர்கள் எல்லாரும் இக்கதிரைப் பூஜையில் கலந்து கொள்வதும் சிறப்பு.
இவ்வாறு நெல்லண்டை காளி கோயிலில் நடக்கிற கூத்துக்கள் வல்லிபுரப்பெருமாளுக்கு பிரம்மோத்ஸவங்கள் நடைபெறும் போது நடைபெறா. இதற்கு காரணம் பெருமாள் அந்த வேளைகளில் தன் கோயிலிலிருந்து இங்கே கூத்துப் பார்க்க வரமாட்டார் என்ற நம்பிக்கையாகும்.
கிரேக்க நாடக அரங்குகளில் மூன்று கதிரைகள் தெய்வங்களுக்காக இடும் வழக்கிருக்கிறது. ஜப்பானியருக்கும் இந்த நம்பிக்கை இருக்கிறது. எது எவ்வாறோ, இந்த நம்பிக்கை எக்காலம் தொடக்கம் இங்கிருக்கிறது? என்பது எவராலும் அறுதியிட்டுச் சொல்ல இயலாததாயிருக்கின்றது.
ஆழ்வார் கோயில்
இதே வடமராட்சிப்பிரதேசத்தின் முக்கிய திருக்கோயில் வல்லிபுர ஆழ்வார் ஆலயம். இப்படி ஏன்? வல்லிபுர ஆழ்வார் என்கிறார்கள் என்றால், இங்கே மூலவராக எழுந்தருளியிருப்பவர் சக்கரத்தாழ்வாரேயாவார்.
மூன்று அகன்ற பிரகாரங்களுடனும் நான்கு இராஜ கோபுரங்களுடனும் பிரம்மோத்ஸவங்கள் நடக்கிற பெரிய திருக்கோயிலான இந்த விஷ்ணுவாலயத்தின் மூலவராக சுதர்சன சக்கரமே விளங்குவது எங்குமில்லாத தனிச்சிறப்பாகும்.
எனினும், அந்த சக்கரவடிவமாக பெருமாளே எழுந்தருளியிருப்பதாகப் வழிபடுவதே வழக்கம். ஆனால், ஆலய திருநாமம் வல்லிபுர ஆழ்வார் என்றே உள்ளது. உற்சவங்களுக்கும் சக்கரமாயவன் என்று மக்கள் அழைக்கிற சுதர்சன சக்கரமே உலா வருதலும் காணத்தக்கது.
இந்த ஆலயத்தை அண்டிய சமுத்திரத்தில் பெருமாள் மத்ஸய அவதாரம் (மீன் வடிவம்) எடுத்தார் என்பது வரலாறு. அந்த மீன் அதே சமுத்திரக்கரையில் குழந்தைப்பேறு வேண்டித் தவமிருந்த லவல்லி என்ற பெண்ணின் மடியில் பாய்ந்ததாம். அது அப்போதே ஆண் குழந்தையாயிற்றாம்.
அந்த அதிசயக்குழந்தை சிறிது நேரத்தில் மறைந்து போயிற்று. அப்போது சமுத்திரக்கரைக்கு ஒரு அந்தணர் வந்து இப்போது மூலவராக உள்ள சக்கரப்பெருமாளை கொடுத்து ஆசீர்வதித்து, இதனை வைத்து கோயில் அமைத்து வழிபடுமாறு பணித்து சென்றார். அவ்வண்ணமே இவ்வாலயத்தை உருவாக்கி வழிபட்டவர்கள் சகல செல்வ யோகம் மிக்க பெரு வாழ்வு பெற்றார்கள்.
இன்றைக்கும் இந்த அற்புதம் நிகழ்ந்த நாளான புரட்டாதிப் பௌர்ணமியை ஒட்டி பிரம்மோத்ஸவம் நடக்கிறது. அன்றைய தினம் சமுத்திரத்தில் தீர்த்தவாரி வெகு சிறப்பாக நிகழும். இவ்வரலாறு ஸ்காந்தபுராணத்தில் பாகமான தக்ஷண கைலாச புராணத்தின் ‘வல்லிபுரமஹாத்மியத்தில்’ பேசப்பட்டிருக்கிறது.
வேறு பெருமாள் கோயில்களில் இல்லாதவாறு இங்கே ‘ஞாயிற்றுக்கிழமை’ முக்கியமான புனித வழிபாட்டு நாளாக அனுசரிக்கப்படுகிறது. வழிபாட்டின் போது, எங்குமில்லாதவாறு சைவத்திருமுறைகள் ஓதப்படுகின்றன. சிவாச்சார்யார்கள் பூஜை செய்கின்றனர். இக்கோயிலை அடியொற்றி ஆரம்பிக்கப்பட்ட சில விஷ்ணுவாலயங்களை யாழ்ப்பாணத்தின் வேறு சில பாகங்களில் காணலாம்.
அடுப்பு நாச்சியார் வழிபாடு
நெருப்பை, அடுப்பை பெண் தெய்வமாகக் கருதி வழிபடும் முறை தமிழ்நாட்டில் இல்லாத இங்குள்ள தனித்துவ நம்பிக்கையாகும். முக்கிய நிகழ்வுகளுக்காக (திருமணம் போன்றவற்றிற்காக) உணவு, பலகாரங்கள் தயாரிக்கும் போது, சுமங்கலியான பேரிளம் பெண் ஒருத்தி அடுப்பின் கால்களுக்கு பொட்டுப்பூ இட்டு வழிபட்ட பின்னரே எண்ணெய்ச்சட்டி அடுப்பில் ஏறும். முதலில் வரும் பலகாரம் அடுப்பிலேயே இடப்பட்டு வழிபடும் வழக்கமுள்ளது.
இந்த வழிபாட்டில் ஆண்களின் வகிபங்கு எதுவுமில்லை என்பது கவனத்திற்குரியது.
அடி அளத்தல்
தீ மிதித்தல், காவடி எடுத்தல் போன்ற இறை வழிபாடுகள் போல பெண்களால் அடி அளத்தல் எனும் தனித்துவமான வழிபாடும் நிறைவேற்றப்படுகிறது. ஆண்கள் அங்கப்பிரதட்சணம் செய்வார்கள். பெண்கள் உடலின் எல்லா அங்கங்களும் நிலத்தில் பட விழுந்து வணங்குவதையோ, அப்படியே பிரதட்சணம் செய்வதையோ, இந்து தர்ம சாஸ்திரம் அனுமதிப்பதில்லை. (ஆனால், இன்றைய தமிழ்ச்சினிமாக்களில் இது முக்கிய வழிபாடாக காட்டப்பட்டு வருவது அவதானிக்கத்தக்கது.)
அதற்கு மாற்றாக ஒவ்வொரு அடிக்கும் ஒரு பஞ்சாங்க நமஸ்காரமாக கோயிலைச்சுற்றி நமஸ்கரிக்கும் வழக்கம் இலங்கை- யாழ்ப்பாணத்தில் இருக்கிறது.
புராண படனம்
யாழ்ப்பாணத்தில் கோயில்களில் ஒருவர் புராணப் பாடல்களை பதம் பிரித்து வாசிக்க இன்னொருவர் அதனை சாதாரண மக்களுக்கு புரிந்து கொள்ளும் வகையில் பாட்டும் பயனுமாக விரித்துரைக்கும் வழக்கம் உள்ளது. இவ்வகையில், பெரியபுராணம், கந்தபுராணம், திருவிளையாடற்புராணம், திருச்செந்தூர்ப்புராணம், மயூரகிரிப்புராணம், திருவாதவூரடிகள் புராணம், ஏகாதசிப்புராணம், சிவராத்திரிபுராணம், திருத்தணிகைப்புராணம், விநாயகர் புராணம் ஆகியவற்றை இப்படி சில மாதங்களுக்குப் படிக்கும் வழக்கம் உள்ளது.
கற்றாரே புரிந்து கொள்ளத்தக்க கடின நடையில் இருக்கும் பழந்தமிழ்ச் செய்யுட்களால் அமைந்துள்ள புராணப்பாடல்களை ஒருவர் முழுமையாக ஒரு முறை படித்து பின் மீண்டும் ஒவ்வொரு வசனங்களாகப் பிரித்துச் சொல்ல, அவ்வசனங்களின் பொருளை பயன்சொல்லுபவர் விரித்துரைப்பார். இந்த வழக்கத்தினால், சாதாரண பாமர மக்களுக்கும்,
எழுத்தறிவில்லாதவர்களுக்கும் கூட நிறைவாக புராணப்பாடல்களும், கதைகளும்
தெரிந்திருந்தது.
உதாரணமாக மாசிமகத்துடன் ஆரம்பமாகி தினமும் சில மணி நேரங்களை ஒதுக்கி கந்தபுராண படனத்தை ஆரம்பித்தால் மூன்று மாதங்களின் பின் வைகாசி விசாகத்தன்று பூர்த்தி செய்யும் வழக்கமுண்டு. இப்படி நீண்ட காலத்தை உள்வாங்கி நீண்ட நேரம் நடைபெறும் புராண படனத்தை இன்றைய அவசரஉலகில் பின்பற்றுதல் குறைந்து வருகின்றது.
ஜாதிகளும் நம்பிக்கைகளும்
யாழ்ப்பாணத்தில் பல்வேறு ஜாதியினரும் வாழ்ந்து வருகின்றனர். எனினும், தமிழ் நாட்டில் உள்ளது போலன்றி யாவரும் எந்த விதமான பாகுபாடுமின்றி இன்று பழகி வருகின்றனர். திருமணம் போன்றவற்றிலன்றி பிற விடயங்களில் இன்று இளம் சமூதாயம் ஜாதி பார்ப்பதில்லை.
கடும் போரும் அதனால் உண்டான நெருக்கடிகளும், பட்ச பேதமின்றி உண்டான பெருந்துன்பங்களும், பலரும் புலம்பெயர்ந்தமையும் ஜாதிப்பாகுபாடு ஒழிவதற்கு உதவியிருக்கிறது.
ஆனாலும் நீண்ட கால ஜாதீய எண்ணங்களும், அது சார்ந்த தடயங்களும், நம்பிக்கைகளும் இன்றும் நிலவிக் கொண்டேயுள்ளன.
சிறுதெய்வ வழிபாடுகளும் குறித்த ஜாதிக்குரிய கடவுளர்களின் வழிபாடுகளும் கூட நடைபெற்று வந்துள்ளன. ஆனால், இவை எல்லாம் இன்று மறைந்து வருகின்றன. அல்லது உரு, பெயர் மாற்றங்களைப் பெற்றுள்ளன.
எனினும், பஞ்சமர்கள் என்போர் யாழ்ப்பாணத்து ஜாதி அடிப்படையில் ஒரு காலத்தில் தாழ்த்தப்பட்டவர்களாக இருந்திருக்கிறார்கள் என்று தெரிகிறது. இந்த ஐந்து ஜாதிகளாக பள்ளர், நளவர், பறையர், அம்பட்டர், வண்ணார் என்கிற ஜாதிகள் காணப்படுகின்றன. இன்றைக்கு இப்பாகுபாடுகள் மகிழ்ச்சி தரக்கூடிய வகையில் குறைந்து வருகின்றன.
இவர்களை விட விஸ்வப்பிரம்மகுலத்தவர்கள் நிறையவே இருக்கிறார்கள். அவர்களாக தச்சர், கொல்லர், பொற்கொல்லர் (தட்டார்), கற்கொத்தியார், சிற்பாசாரிகள் ஆகிய ஐந்து ஜாதியினர் (பஞ்சகம்மாளர்) குறிப்பிடப்படுகின்றனர்.
இன்னும் வேளாளர்கள் என்ற வகுப்பாரே யாழ்ப்பாணத்தின் பெருநிலவுடமையாளர்களாக பெரும் ஜாதிக்காரராக கணிக்கப்படுகின்றனர். மிகச் சொற்ப அளவிலுள்ள பிராம்மணர்கள் கூட மரியாதைக்குரியவர்களாக இருந்தாலும் பொருளாதார நிலையில் வேளாளர்களையே அதிகம் தங்கியிருந்திருக்கிறார்கள். எனினும் வேளாளர்களுக்குள்ளும் சில உட்பிரிவுகள் இருந்திருக்கின்றன. இசைவேளாளர்கள் என்ற மங்கலவாத்தியம் இசைப்போரும் சைவக்குருக்கள் என்றும் பண்டாரம் என்றும் அழைக்கப்படும் சுவாமிக்கு மாலை கட்டும் வகுப்பாரும் உள்ளனர். ஓதுவார்கள் என்று தனி வகுப்பு இன்று இல்லை.
இன்னும், கோவியர்கள் என்றொரு வகுப்பும் செட்டிமார் வகுப்பும் யாழ்ப்பாணத்தில் இருக்கிறது. பரதவர் என்கிற மீனவ மக்கள் மிகவும் செறிவாயும் நிறைவாயும் பொருளாதார பலம் உடையவர்களாயும் சிறப்போடு வாழ்ந்து வருகின்றனர்.
பிராம்மணர்கள் என்கிற போது, அவர்களிடத்தே தமிழகத்திலுள்ளது போல, ஸ்மார்த்தர், வைஷ்ணவர், குருக்கள், வடமாள், சாஸ்திரிகள் போன்ற பிரிவுகள் இன்று இல்லை. யாவரும் ஒன்றுபடவே நோக்கப்படுகிறார்கள். எனினும், குருக்கள் என்கிற பிரிவுக்குள்ளேயே யாவரும் அடக்கப்படுகின்றமையும் காணக்கூடியது. இவர்களுக்கு தென்னிந்தியாவுடன் மணஉறவு 1950 வரை இருந்தமை அவதானிக்கத்தக்கது.
ஜாதிகளுக்குள் தனித்துவமான நம்பிக்கைகளும், வழக்காறுகளும் உள்ளன. முக்கியமாக திருமணம், போன்ற சுப நிகழ்வுகளிலும் அபரக்கிரியைகளிலும் அவ்வந்த பிரிவாரின் நடைமுறைகளைக் காணக்கூடியதாக உள்ளது. எனினும், இன்று பிராமண வகுப்பாரைத் தவிர பிற சமூகத்தவர்கள் யாவரதும் பூர்வ, அபர கிரியைகள் ஏறத்தாழ ஒரே விதத்திலேயே அதிகளவில் நடைபெறுவதைக் காணமுடிகின்றது.
இன்னும், தமிழகத்தில் பேசப்படும் கௌண்டர், மறவர், கள்ளர், கணக்கர், அகம்படியார், வன்னியர், போன்ற ஆயிரமாயிரம் ஜாதிகள் இங்கே பேசப்படுவதே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கண்ணகி வணக்கம்
இங்கே சிலப்பதிகார நாயகியான கண்ணகி வணக்கம் சிறப்புற்றிருக்கிறது. ஆங்காங்கே கோயில் அமைத்து இக்கண்ணகியை வழிபட்டு வந்திருக்கிறார்கள். ‘சிலம்பு கூறல்’ என்ற உரை கலந்த பாடல் காவியம் இவ்வழிபாட்டில் பாடப்படுகின்றது. அதில் சிலப்பதிகாரத்திற்கு மாறான சில, பல விடயங்களையும் காணலாம். அது கண்ணகியை பராசக்தியின் அம்சம் என்கிறது.
கண்ணகை மதுரையை எரித்த பின், பராசக்தி வடிவம் பெற்று பாம்பு உருவம் கொண்டு கோடிக்கரை வழியாக வட இலங்கையின் யாழ்ப்பாணத்தை அடைந்து பல தலங்களிலும் தங்கி நிறைவாக வற்றாப்பளை எனம் இடத்தை அடைந்ததாக இக்கதை சொல்லுகின்றது.
பாண்டிய அரசனின் பிள்ளைப் பேறு வேண்டிய தவத்தில் ஏற்பட்ட மனச்சலனமே அம்பிகையின் கோபமாக மாறியது என்றும், ஆனால், தவத்திற்கு இரங்கி அன்னை பாண்டியனின் மாங்கனி வாயிலாக, புதல்வியாக மாறினாள் என்றும் எனினும், சோதிடர்களின் கருத்தின் படி அவள் கடலில் விடப்பட்டு காவிரிப்பூம்பட்டினத்து வணிகனால் வளர்க்கப்பட்டாள் என்றும் அக்கதை சொல்கின்றது.
இக்கதை ஏறத்தாழ துளசி தாஸ ராமாயணம் போல கண்ணகையை இறைவியாக சித்தரிக்கும்
பாங்குடையதாக தனித்துவம் வாய்ந்ததாயுள்ளது. எனினும், சாதாரணமாக சிலப்பதிகாரத்தின் சீர்மையான நடையும், கற்பனை வளமும் இக்கதையிடத்தே காண்பது அரிதாயுள்ளது என்பதை ஏற்கவே வேண்டியுள்ளது.
அண்ணமார் வழிபாடு
யாழ்ப்பாண சமூகத்தில் தாழ்த்தப்பட்ட ஒரு பிரிவு (பள்ளர், நளவர் என்று அழைக்கப்பட்ட ஜாதி) மக்களின் வழிபடு தெய்வங்களுள் முக்கிய நிலையிலிருப்பவர் அண்ணமார் என்ற தெய்வம்.
இது தமிழ்நாட்டில் வழங்கும் அண்ணமார் சுவாமி கதை என்ற பொன்னர்- சங்கர் கதையிலிருந்து வேறுபட்டது. இக்கதையை யாழ்ப்பாணத்தில் அண்ணாமார் வழிபாடு செய்யும் மரபார் அறிந்திருக்கவே இல்லை. இப்போது சிறிது அறிந்திருப்பதும் மு.கருணாநிதியின் தொடர் நவீனத்தின் வழியே ஆகும்.
ஆனால், இங்கே அண்ணமாராக தங்கள் குல இளைஞன் ஒருவன் சாமியான கதையே சிலர்
சொல்வர். சிலர் சிவனின் காவல் தெய்வம் என்பர். இவ்வாறு பல கதைகளும் அவரவர் சொன்ன போதும், எதனையும் எழுத்தில் கிடைக்கவில்லை.
பனங்கூடலுள், குறித்த ஜாதியரின் குடியிருப்புக்குள் ஒரு பெருமரத்தடியில் கல்லாகவோ, பொல்லாகவோ வைத்து வழிபடப்பட்டு வந்த இவ்வழிபாடு காலமாற்றத்தாலும், ஜாதித்துவ அடையாளம் விரும்பி இழக்கப்படுதலாலும் சிதைந்து வருகின்றது. இப்போது சிவாகம நிலையில் இவ்வாலயங்களும் அமைக்கப்பெற்று அங்கே அன்னமஹேஸ்வரர் என்ற பெயரில் சிவலிங்கபிரதிஷ்டை நடைபெறுவதை பல்வேறு இடங்களிலும் அவதானிக்கலாம்.
இவ்வாறு ஆங்காங்கே சிறுதெய்வ வணக்கம் சார்ந்த நம்பிக்கைகள் நிலவிய போதும், கறுப்பன் போன்ற தெய்வங்களை இங்கு காண இயலவில்லை. ஐயனார் என்கிற போதும் அது பூர்ண புஷ்கலா உடனாய ஹரிஹரபுத்திரராகவே யாழ்ப்பாணத்தில் காணலாம்.
இவை யாவும் ஒரு அறிமுகமே.. யாழகத்தை அதன் கிராமங்களில் மறைந்து நிற்கும் தனித்துவ நம்பிக்கை பூர்வமான சமயத்தை, சமூகத்தைப் பற்றிய ஒரு பிரக்ஞையை உண்டாக்குவதே இக்கட்டுரையின் நோக்கமாகும். ஆகவே, இது பூரணத்துவமானதல்ல என்பதும் இவைகள் குறித்து ஆய்வுகள் இன்னும் நடைபெற வேண்டும் என்பதும் கவனத்தில் கொள்ள வேண்டியதாகும்.
~0~0~O~0~0~
அருமையான தொகுப்பு. மாறுபட்ட கோணம். முற்றிலும் பல புதிய செய்திகள். பழமையின் வழமையில் பெருமை கொள்ளும் பாங்கு. தெளிந்த நடை. ஒப்பிடலில் ஓர் உயர்வான பாணி. தொடரட்டும் உங்கள் தொண்டு. நி.த. நடராஜ தீக்ஷிதர், https://natarajadeekshidhar.blogspot.in
ஸ்ரீ மயூரகிரி சர்மா அவர்கள் வழக்கம் போல நன்றாக எழுதியுள்ள க்கட்டுரை இனிமையாகவும் செழுமையாகவும் அமைந்துள்ளது. தமிழக சமய நம்பிக்கைகளோடு பொருத்திப்பார்த்து யாழ்ப்பாண சமய நம்பிக்கைகளை பழக்கவழக்கங்களோடு சமூகநிலையையும் வர்ணித்துள்ளார் ஸ்ரீ நீர்வையார். பாராட்டுக்கள். தமிழ் நாட்டு ஆன்மீக அன்பர்கள் தம் யாழ்பாணத்து ஸ்கோதரர்களிடத்திலிருந்து புராண படணத்தினை அவசியம் கற்கவேண்டும். சகோதரிகள் ஆலயங்களில் அங்கப்பிரதக்ஷினம் செய்வதை நிறுத்தவேண்டும். பஞ்சாங்க நமஸ்காரம் செய்யவேண்டிய தாய்க்குலத்தோர் எல்லா அங்கமும் நிலம் படிய அங்கப்பிரதக்ஷிணம் செய்யவேண்டாம் என்று ஹிந்து சான்றோர்கள் பிரச்சாரம் செய்யவேண்டும்.
அன்புடன்
விபூதிபூஷண்
எந்த அளவிற்கு இலங்கையில் மத மாற்றம் நடை பெற்றிருக்கிறது.
இந்துக்குள், குறிப்பாகத் தமிழ்ச் சைவர்கள் அறிய வேண்டிய பல செய்திகள்க் கட்டுரியில் தெரிவித்துள்ளீர்கள். நன்றி சர்மா அவர்களே. யாழ்ப்பானத்தை சேர்ந்த என் உறவினர் ஒருவர் அங்கு, பள்ளிகளில் முப்பாலாகிய திருக்குறளுடன் வீட்டுப்பாலாக உமாபதி சிவம் அருளிய திருவருட்பயன் போதிக்கப்படுவதாகவும் இளமையில் தாம் கற்ற பாடல்களுடன் பொருளும் கூறக் கேட்டுள்ளேன். உறவினர் ஒருவர் கல்லூரியில் புள்ளியிய்ல் பேராசிரியராகப் பணிபுரிந்தவர், கம்யூனிச தத்துவத்தில் தீவிரமாக இருந்ததுபோல் சைவத்திலும் திருமுறைகளிலும் பயிற்சி உடைய்ராக இருந்தார் என்றும் கேள்விப்பட்டுள்ளேன். பேராசிரியர் கைலாசபதி போன்றோர் ஆறுமுக நாவலர் மற்றும் நாயன்மார்களைப் பற்றிக் குறிப்பிடும் போதெல்லாம் மரபுவழி நிற்பது யாழ்ப்பாணத்தின் பண்பாடே.
அன்புள்ள அய்யா! அங்கு பள்ளிகளில் சைவ சித்தாந்தம் ஒரு கட்டாயப் பாடம் என்பது உண்மையா? இப்போதும் அங்கு சைவ சித்தாந்தம் நடத்தப்படுகிறதா?
யாழ்ப்பாணத்தை அடியாகக் கொண்ட பல புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்களின் இளையசமுதாயத்தினர் அறிந்திராத பல விடயங்களை அறியத் தந்தமைக்கு திரு. மயூரகிரி சர்மா அவர்களுக்கு நன்றி.
இலங்கையின் பாடத்திட்டத்தில் எல்லா மதத்தினருக்கும் சமயம் ஒரு பாடமாக மூன்றாம் வகுப்பிலிருந்து கற்பிக்கப்படுகிறது. அதனால் ஈழத்தில் ஆரம்பக் கல்வி கற்ற ஒவ்வொரு தமிழ்மாணவனும் இந்து சமயத்தை ஒரு பாடமாகக் கற்பதால் எல்லோருக்கும் தமிழ்நாட்டுத் திருத்தலங்களைப் பற்றியும் பக்தி இலக்கியங்களாகிய தேவார, திருவாசகம், ஆழ்வார் பாசுரங்கள் பற்றிய அறிமுகம் கிடைக்கிறது அத்துடன் அதன் அருமை பெருமைகளையும் அறிய முடிகிறது. அது மட்டுமல்ல தமிழ்நாட்டுத் தலங்களின் வரலாறு அதன் தொன்மை, நாயன்மார்களின் தொண்டுகள் என்பனவும் அங்கு கற்பிக்கப்படுகிறது. அதனால் ஒவ்வொரு ஈழச் சைவத்தமிழனுக்கும் தமிழ்நாட்டுக்ககுப் போக வேண்டும் அங்குள்ள ஆலயங்களைத் தரிசிக்க வேண்டுமென்ற ஆவல் சிறுவயதிலேயே ஏற்படுகிறது. ஆனால் நாங்கள் தமிழ்நாட்டுக் கோயில்களை எவ்வளவு ஆர்வத்துடனும், பக்தியுடனும், அதன் மகிமையை, தொன்மையை அறிந்து அணுகுகிறோமே அதேயளவு ஏமாற்றத்துடனும், அதன் நிலையைப்பற்றிய கவலையுடனும், எந்தளவுக்குத் தமிழ்நாட்டுத் தமிழர்கள் அந்தக் கோயில்களைப் புறக்கணிக்கிறார்கள் என்ற வேதனையுடன் திரும்புகிறோம். இதற்குக் காரணம் தமிழ்நாட்டின் இளைய சமுதாயத்துக்கு அவர்களின் ஊரிலுள்ள பாரம்பரிய கோயிலின் வரலாறும், அருமை பெருமை கூடத்தெரியாது. அவர்களுக்குத் தெரிந்ததெல்லாம் பெரியார் என்ன சொன்னார் என்பது மட்டும் தான். தமிழ்நாட்டுக் கோயில்கள் எல்லாம் தமிழர்களின் சொத்துக்கள் அவையெல்லாம் தமிழர்களின் வரலாற்றினதும், கலாச்சாரத்தினதும் முக்கிய பங்கு என்பதை அவர்கள் உணரவதில்லை. அந்த நிலை மாறினால் தான் எமது வரலாறு அழிவிலிருந்து காப்பாற்றப்படும்.
அது மட்டுமல்ல, ஈழத்துக்குருமார்களின் பயபக்தி, தமிழ்நாட்டிலுள்ள கோயில் குருமார்களிடம் காண்பது அரிது. யாராவது வெளிநாட்டு ஈழத்தமிழர் தமிழ்நாட்டுக் கோயில்களுக்குப் போனால் அங்குள்ள குருமார்களின் நோக்கம் பண்ம் பண்ணுவது மட்டும் தான். இவ்வளவுக்கும் ஈழத்தமிழர்கள் கோயில், குருக்கள் என வரும்போது மிகவும் தாராள மனப்பான்மையுள்ளவர்கள். அந்த நிலை தமிழ்நாட்டுக் கோயில்களில் மாற வேண்டும். சடங்குகளைக் குருமார்களின் செளகரியத்துக்காக மாற்றாமல், ஈழத்தைப் போல், ஒழுங்காக வேதபாராயணங்களுடன் மட்டுமல்லாமல் தமிழ் வேதங்களாகிய தேவார திருவாசகத்துடன் நடத்தும் நிலை ஏற்பட வேண்டும். இந்த விடயத்தில் ஈழத்தமிழ்ச் சைவர்கள் தமிழ்நாட்டுக்கு முன்னோடியாகத் திகழ்கிறார்கள் என்பது மட்டும் உண்மை.
///ஆண்கள் அங்கப்பிரதட்சணம் செய்வார்கள். பெண்கள் உடலின் எல்லா அங்கங்களும் நிலத்தில் பட விழுந்து வணங்குவதையோ, அப்படியே பிரதட்சணம் செய்வதையோ, இந்து தர்ம சாஸ்திரம் அனுமதிப்பதில்லை//
என்னுடைய அம்மம்மா (பாட்டி) இந்தக் கருத்தை மறுக்கிறார். அவர் யாழ்ப்பாணத்தில் பிறந்து வளர்ந்து கல்வி கற்றவர். அவரின் கருத்துப்படி கோயிலின் கொடிமரத்தின் முன்னால் ஆண்கள் அட்டாங்க நமஸ்காரமும் பெண்கள் பஞ்சாங்க நமஸ்காரமும் செய்ய வேண்டும் என அவர்களுக்குச் சிறு வயதிலேயே கற்பித்தார்களாம்.
யாழ்ப்பாணத்தில் யாரும் அடியளப்பதில்லையாம் அது “அடி அழிப்பது” அதாவது நல்லூர்த் தேரில் முருகன் வீதி வலம் வரும்போது, மணலில் பதியும் புனிதமான தேர்ச்சில்லின் தடங்களை மற்றவர்கள் காலால் மிதித்து விடாமல் அவர்கள் மணலை பரப்பி அடியை அழிப்பது தான் வழக்கமே தவிர அடியளப்பதல்ல என்கிறார். அடியழிக்கும் போது பெண்களின் உடலில் எல்லா அங்கங்களும் நிலத்தில் படுவதில்லை. அடியழிப்பது என்பது கைகளால் தேர்ச்சக்கரத்தின் தடங்களை அழிப்பதும், பஞ்சாங்க நமஸ்காரம் செய்து கொண்டு தேரின் பின்னால் தொடர்வது மட்டும் தான்.
தமிழ்நாட்டைப் போல் கோயிலின் சுற்று வீதிகளில் எச்சில் துப்புவதும், குப்பை கொட்டுவதும், அசிங்கப்படுத்தும் வழக்கமும் ஈழத்தில் கிடையாது அதனால் அங்கு நம்பி மண்ணில் உருளலாம், கைகளாலும் மண்னை அளையலாம், எந்த வித தொற்று நோயும் வராது.
வீரசைவ செந்நெறி?????
வீரமான சைவமாக இருக்கலாம்….ஆனால் வீரசைவம் என்பது தனியொரு பிரிவு
நாவலர் பின்பற்றியது ஆதிசைவ வழி சைவ சித்தாந்தம்
https://en.wikipedia.org/wiki/Saiva_Siddhanta
https://en.wikipedia.org/wiki/Veerashaiva
இங்கே மறுமொழிகளைப் பதிவு செய்த அன்பர்கள் யாவருக்கும் நன்றிகள்..
ஈழத்துப் பண்பாடு பற்றிய இக்கட்டுரையில் தவறவிடப்பட்ட முக்கிய விடயங்கள் சிலவும் உள்ளன.
ஈழத்து இந்துமத மரபில், உதித்த ஒரு வாத்தியம் முக்கியமானது. அது ‘கடசிங்காரி’ என்று அழைக்கப்படுகின்றது. இது 1996கள் வரையில் எழுதுமட்டுவாள் என்ற ஊரில் உள்ள அம்பாள் ஆலயத்தில் வாசிக்கப்பட்டது என்று அறியமுடிகின்றது. ஆனால், என்னால் காணமுடியவில்லை. இன்று இதனை வாசிப்பதாகவோ, தெரியவில்லை.
இந்திய இசை வரலாற்றில் இடம்பெறாத இந்த வாத்தியமாவது, ஒரு வளையத்தில் தோலைப் பொருத்தி கடத்தின் வாய்ப்புறத்தின் மேல் வைத்து, ஒரு கையால் அழுத்தியும், விட்டும் மறுகை விரல்களால் அதன் மேல் அசைத்தும் வாசிப்பதாகும் என்று குறிப்பு ஒன்றைக் கண்டேன்.
அன்பிற்குரிய சகோதரி திவ்யாவுக்கு,
தாங்கள் இங்கு குறிப்பிட்ட விடயங்கள் உண்மையானவையே.. அடி அழித்தல் என்றே பேச்சு வழக்கிருந்தாலும் நான் அதனை அடி அளத்தல் என்றே கருதினேன். தாங்கள் குறிப்பிட்ட பிறகு, இப்படியும் இருக்கலாமோ? என்று நினைக்கத்தோன்றுகின்றது.
ஆனால், தமிழ்நாட்டு மக்களின் பக்தியையும், கோயில் வழிபாட்டையும் குறைத்து மதிப்பிடுவது தேவையற்றது என்பதே எனது தாழ்மையான அபிப்ராயம்.
பொதுவாக இலங்கையில் கோயிற் குருமார்கள் தமிழகத்துக் குருமார்களை விட, ஆச்சார்ய லக்ஷணம், ஆகமஞானம், கிரியை விஷயத்தில் அக்கறை, பாவனை உடையவர்களாக இருப்பதாகத் தெரிகிறது.
எனினும் தமிழகத்துக் குருமார்களான சிவாச்சார்யர்கள், பட்டாச்சார்யர்கள், சாஸ்திரிகள் ஆகியவர்கள் மிகவும் சிரத்தை, பக்தி உடையவர்களாகவும், இன்னும், சிறந்த வேத ஞானமுடையவர்களாயும், ஆத்மார்த்தபூஜையை ஒழுங்காகச் செய்பவர்காயும், சாஸ்திர, சம்ஸ்கிருத அறிவுடையவர்களாகவும் இருக்கிறார்கள்.
இவர்களில் பலரும் பல்லாண்டுகள் வேதபாடசாலையில் கற்றுச் சிறப்புற்றிருக்கிறார்கள்.
இலங்கையின் குருக்கள் சிறார்களில் பலரும் கூட, திருப்பரங்குன்றம், காஞ்சிபுரம், பிள்ளையார்பட்டி என்று தமிழகக் குருமார்களின் வழிகாட்டுதலில், வளர்ந்தவர்களேயாவர்.
அது போல, இலங்கையில் சில பல விடயங்கள் தமிழ்நாட்டைப் பார்த்துப் பழகவேண்டியன.
கோலம் போடுதல், சேலை அணிவது, திருமாங்கல்யத்தை சிறப்பாகப் போற்றிப் பேணுவது, வெளியில் செல்லும் போது ஒரு பூவாவது தலையில் சூடிக்கொள்வது, போன்ற விடயங்களில் தமிழ்நாட்டுப் பெண்களைப் பார்த்து இலங்கைப் பெண்கள் பின்பற்ற வேண்டும். இப்படி நீள நீளமாக ஒப்பிட்டுச் சொல்லாம்.. தயவு செய்து ஒன்றைத் தாழ்த்தி ஒன்றை உயர்த்தி பேச வேண்டாமே..? (பெண்கள் விஷயத்தில் அநாவசியமாகத் தலையிடுவதற்கு மன்னிக்க வேண்டும்)
இலங்கையின் சிறிய, அழகிய ஆலயங்களில் சென்று வழிபட்டவர்கள் தமிழ்நாட்டில் பிரம்மாண்டமான ஜன நெருக்கடி மிக்க வெளவால்கள் குடியிருக்கும் சுற்றுப்பிரகாரங்கள், கோபுரங்கள் உடைய, ஆலயங்களில் சென்று பணம் கொடுத்து பல மணிநேரம் கம்பிச் சட்டங்களுக்குள் நின்று அதன் பிறகு ஆண்களாயின் சேட்,பாண்ட் உடன் இறைவனை தரிசிப்பது என்பது கொஞ்சம் சிக்கலானது தான்.. இவற்றாலும் தமிழகக் கோயில்களுக்குள் வியாபார நிலையங்கள் நிறைந்திருப்பதும், தான் இலங்கையிலிருந்து வரும் இந்துக்களுக்கு வெறுப்பூட்டுவதாகத் தெரிகிறது..
ஆனால், இவற்றுக்கெல்லாம் சாதாரண பக்தர்களோ, அர்ச்சகர்களோ காரணமல்ல என்பதும் இவற்றினால் அவர்களும் வருத்தமும் துன்பமுமே அடைகிறார்கள் என்பதும் இவற்றுக்கெல்லாம் ஒரு அற(?)த்துறை காரணம் என்பதும் இவைகள் பற்றி வந்த தமிழ்ஹிந்துக்கட்டுரைகளைப் படித்தால் அறியலாமே..!
பணிவுடன்,
தி.மயூரகிரி சர்மா
திரு. மயூரகிரி சர்மா அவர்களுக்கு
உங்களின் கருத்துக்கு மிக்க நன்றி. நீங்கள் தவறாகப் புரிந்து விட்டீர்கள் என நம்புகிறேன். தமிழ்நாட்டு மக்களையோ அல்லது அவர்களின் பக்தியையோ குறைத்து மதிப்பிடுவதல்ல என்னுடைய நோக்கம். எமது முன்னோர்களின் தமிழ்நாட்டுக் கோயில்களின் அருமை, பெருமைகளை அவர்கள் அறியாமல், புறக்கணிக்கிறார்களே என்ற ஆதங்கம் தான். ‘நீரடித்து நீர் விலகாது’ என்று இலங்கையில் சொல்வது போல் தான் இதுவும்.
இருந்தாலும் ஈழத்தில் சாதாரண தமிழர்களுக்கும் அவர்களின் பிராமண மதகுருமார்களுக்குமுள்ள அன்னியோன்னியம், மதிப்பு, பரஸ்பர நம்பிக்கை என்பன தமிழ்நாட்டில் கிடையாது. தமிழ்நாட்டிலிருக்கும் பிராமண எதிர்ப்பு ஈழத்தில் கிடையாது. அதற்குக் காரணம் ஈழத்தமிழர்கள், பிராமணர்களை தமிழர்களாக, எங்களில் ஒருவராகப் பார்ப்பது தான், அவர்களும் தாங்கள் தமிழர்களல்ல என்று வாதாடியதாக நான் கேள்விப்பட்டதில்லை. ஆனால் தமிழ்நாட்டில் இந்த நிலையுண்டு. இதற்கு திராவிட அரசியலும், அறநிலையத்துறையும் காரணமாக இருந்தாலும் கூட சில தமிழ்நாட்டுக் குருமார்களும் தமிழர்களுக்கெதிராக நடப்பதை நாம் தமிழ்நாட்டுக் கோயில்களில் காணலாம். இந்த நிலை மாற வேண்டும். உங்களின் தலைப்புக்கும் இந்தக் கருத்துக்கும் தொடர்பில்லையானாலும் கூட, என்னால் தவிர்க்க முடியவில்லை.
நாங்கள் தமிழ்நாட்டில் கிராமங்களிலுள்ள மூலைமுடுக்குகளிலுள்ள கோயில்களுக்கெல்லாம் போயிருக்கிறோம். மூர்த்தி, தலம், தீர்த்தம் எல்லாம் சிறப்பாக அமைந்திருந்தாலும், ஈழத்துச் சிறிய கோயில்களில் கிடைக்கும் அமைதி, உள்ளத்தில் திருப்தி, சாந்தி, ஆன்மீக உணர்வு தமிழ்நாட்டுக் கோயில்களில் கிடைப்பதில்லை. மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்குள்ளேயே இந்துக்களல்லாதார் கடைகள் வைத்திருக்கின்றனர். ஈழத்தமிழர்கள் விரதமிருந்து கோயிலுக்குப் போய், அம்மனைத் தரிசித்து விட்டுத் திரும்பும் போது, யாரவாது பெரிய கோழிக்காலை, அவர் வைத்திருக்கும் கடையின் பக்கத்திலிருந்து கடித்துக் கொண்டே, எங்களை அம்மனின் படத்தை வாங்குமாறு கூப்பிட்டால், எப்படியிருக்கும் என்று உங்களால் உணர முடிகிறதல்லவா?
இலங்கைப் பெண்களைப் பற்றிய உங்களின் கருத்துக்கள் மிகவும் சரியானவை. மாற்றங்கள் தேவை, ஈழத்துப் பெண்கள் அடுப்படியை விட்டு வெளியில் வந்து நீண்ட காலமாகியதாலும், மேலைநாட்டுக் கிறித்தவ பண்பாடுகள் ஈழத்தமிழர்களை பெரியளவில் பாதித்திருப்பதாலும், ஆடை அலங்காரத்தில் மாற்றம் ஏற்பட்டு விட்டது. ஆனால் தமிழ்நாட்டைப் பற்றிக் கொண்ட இந்த வட இந்தியச் சுடிதார், ஈழத்துப் பெண்களையும் பற்றிக் கொண்டு இப்பொழுது கோயிலுக்குள்ளும் நுழையத் தொடங்கி விட்டது. இதற்கு முன்னால் ஈழத்தமிழ்ப் பெண்கள் மேலை நாட்டு உடைகளை வெளியில் அணிந்தாலும், கோயிலுக்குப் போகும் போது சேலை அல்லது பாவாடை தாவணி தான் அணிந்து செல்வர். அந்த விடயத்தில் புலம்பெயர்ந்த தமிழர்களாகிய நாங்கள் மாறவில்லை, ஈழத்தில் மாற்றம் ஏற்பட்டு விட்டது. 2011 இல் சேலை, முழுப்பாவாடை, தாவணி தவிர்ந்த ஏனைய உடைகளை நல்லூர்க் கோயிலில் அணிய தடை விதித்த நிர்வாகம் இந்த முறை அதைத் தளர்த்தி விட்டார்கள் போல் தெரிகிறது.
கோலம், பூவைத்தல், மாங்கல்யத்தைப் பேணுதல் எனும் தமிழ்நாட்டு வழக்கம் ஈழத்தில் குறைந்தமைக்குக் காரணம் ஈழத்தமிழ்ப் பெண்கள் பல தசாப்தங்களுக்கு முன்னாலேயே கல்வி வாய்ப்புக் கிடைக்கப் பெற்று ஆண்களுக்குச் சமமாக, வேலைக்காக வெளியில் போகத் தொடங்கியமை தான் என நினைக்கிறேன்.
“பெண்கள் உடலின் எல்லா அங்கங்களும் நிலத்தில் பட விழுந்து வணங்குவதையோ, அப்படியே பிரதட்சணம் செய்வதையோ, இந்து தர்ம சாஸ்திரம் அனுமதிப்பதில்லை. (ஆனால், இன்றைய தமிழ்ச்சினிமாக்களில் இது முக்கிய வழிபாடாக காட்டப்பட்டு வருவது அவதானிக்கத்தக்கது.)”
பெரும்பாலான மாரியம்மன் கோவில்களில், பெண்கள் அங்கபிரதட்சணம் செய்கிறார்கள். அவர்கள் யாரும் சாஸ்திரம் பார்த்து செய்வதில்லை.
Annual Animal Sacrifice in the Historic Kali Temple in Munneswaram, Sri Lanka. The Eelam Tamil Hindus and their spiritual leaders should get together and end this practice but should never allow the Sinhala Buddhist monks and the Sinhala ministers to poke their noses in the affairs of the Hindu Temples in Sri Lanka.
Sri Lanka’s controversial Minister of Public Relations Mervyn Silva vowed today to prevent animal sacrifice at the annual feast of the Munneswaram Sri Bhadra Kali Amman Kovil in Chilaw of the Northwestern Province. Silva said that he would commence a sit up campaign before the Munneswaram Hindu temple on the day the sacrifice is to take place.
https://thivyaaa.blogspot.ca/2012/08/annual-animal-sacrifice-in-historic.html
மத அனுஷ்டானங்களை பறிக்கும் ஜனாதிபதியின் செல்லக்கிறுக்கன் மேர்வின்!- யோகராஜன் ௭ம்.பி. காட்டம்
இந்துக்களின் பாரம்பரிய மத அனுஷ்டானங்களை தடுப்பதற்கோ, பறிப்பதற்கோ மேர்வின் சில்வா போன்ற அரசியல்வாதிகளுக்கு அதிகாரம் கிடையாது. வேண்டுதலுக்காக உயிர் பலி கூடாது ௭ன்பது பொது நியதி. ஆனால் அதை தமிழ் இந்துக்கள் மட்டும் மேற்கொள்ள கூடாது ௭ன்று தடுப்பதற்கு மேர்வின் சில்வா அவதார புருஷரோ, உத்தமரோ அல்ல.அறியாமை, ஆணவம், அடாவடித்தனம், அதிகாரப்போக்கு கொண்ட மேர்வின் சில்வாவின் செயல்பாட்டுக்கு அனைத்து இந்துக்களும் இதர சமூகத்து மக்களும் ௭திர்ப்பு தெரிவிக்க வேண்டும்.
வருடாந்தம் 2 லட்சம் மாடுகள் வெட்டப்படுகின்றன. தினசரி பல லட்சம் கோழிகளும், ஆயிரக்கணக்கான ஆடுகளும், பன்றிகளும் இறைச்சிக்காக பலியிடப்படுவதை ஏற்றுக்கொள்ளும் மேர்வின் சில்வா, இந்து தமிழர்களின் தெய்வ நம்பிக்கையிலும், மத வழிபாட்டிலும் கைவைப்பதற்கு ஜனாதிபதி இடமளிக்கக் கூடாது. இவ்வாறு நுவரெலியா மாவட்ட ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர். யோகராஜன் விடுத்துள்ள கண்டன செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
முன்னேஸ்வரம் காளி கோயிலில் பாரம்பரியமாக மேற்கொள்ளப்பட்டு வந்த தமிழர்களின் பலி பூசைகளுக்கு ௭திராக உண்ணாவிரதம் இருக்கப் போவதாகவும், பௌத்த மதத்தவன் ௭ன்ற ரீதியில் தடுக்கப் போவதாகவும் அமைச்சர் மேர்வின் சில்வா தனது அமைச்சில் நடத்திய பத்திரிகையாளர் மகாநாட்டில் தெரிவித்துள்ள கருத்துக்கு கண்டனம் தெரிவித்தே யோகராஜன் இவ்வாறு தெரிவித்தார்.
இலங்கையை பொறுத்தவரை ௭தற்கெடுத்தாலும் உண்ணாவிரதம் ௭ன்று அந்த புனித போராட்டத்தை கேலிக்கூத்தாக்கி புதைத்து விட்டார்கள். ஏகாதிபத்தியத்திற்கு ௭திராக உண்ணாவிரதம், அமெரிக்க ௭திர்ப்பு உண்ணாவிரதம், இப்படி ௭த்தனையோ உண்ணா விரதங்களை நம்நாட்டு மக்கள் தினசரி கண்டு சலித்திருக்கிறார்கள்.
நாட்டில் நடக்கும் அநியாயங்களுக்காக அட்டூழியங்களுக்காக ஊழல், மோசடிகளுக்காக, சிறுவர் துஷ்பிரயோகங்கள், பெண் மீதான வன்முறைகள், உண்மையான குற்றவாளிகள் , வன்முறையாளர்கள் சட்டத்தின் கண்களில் மண்ணைத் தூவி சுதந்திரமாக நடமாடுவதை கண்டித்து உண்ணாவிரதம் இருக்கலாம்.
ஆனால் சிறுபான்மை சமூகத்தின் மத வழிபாட்டின் கோட்பாடுகளிலும், சமய பாரம்பரிய அனுஷ்டான நம்பிக்கைகளுக்கும் ௭திராக ஆணவம் நிறைந்த அடாவடித்தனத்துடன் உண்ணாவிரதம் இருக்கப் போவதாக நாடகமாடுவது அரசியல் கேலிகூத்தாகும் ௭ன்று தெரிவித்த’ யோகராஜன் மேலும் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது,
கண்ணப்ப நாயனார் தெய்வ பக்திக்காக தனது கண்ணையே கொடுத்துள்ளார். சிபி சக்கரவர்த்தி புறா உயிரை காப்பாற்ற தனது தசையையே வெட்டி கொடுத்துள்ளார். பசுவின் கன்றுக்காக தனது மகனை தேர் சக்கரத்தில் பலி கொடுத்தது போன்ற படிப்பினையூட்டும் நம் முன்னோர்களின் வழி நடத்தல்களை மாறிவரும் உலக நியதிக்கு ஏற்றவாறு புரிந்து கொண்டுள்ளோம்.
அத்துடன் சமகால சமூக சமய நடவடிக்கையில் ஏற்பட்டுள்ள மறுமலர்ச்சியும், மாற்றங்களும் காலப்போக்கில் முன்னேஸ்வரம் காளியம்மன் ஆலயத்திலும் ௭திர்காலத்தில் ஏற்படுவதை தடுக்க முடியாது.
விஞ்ஞான நாகரிக வளர்ச்சியின் மூலம் சமூகத்துக்கு ஒவ்வாத நடவடிக்கைகள் அருகி வருகின்றது. உயிர்ப் பலி கூடாது ௭ன்று கூறும் மேர்வின் சில்வா முள்ளிவாய்க்காலில் 30 ஆயிரத்துக்கு அதிகமான தமிழ் மனித உயிர்கள் பலியெடுக்கப்பட்டதை ௭திர்த்து நியாயம் கேட்டு உண்ணாவிரதம் இருந்திருந்தால் அதை ஏற்றுக்கொள்ளலாம்.
இந்துக்களின் கோயில்கள் இடிக்கப்படுவதையும், பிள்ளையார் சிலைகள் தூக்கி கடத்தப்படுவதையும் பற்றி வாய்திறக்காதவர் சில ஆடுகள் மீதும் கோழிகள் மீதும் மட்டும் கருணைகாட்ட நினைப்பது பகல் வேஷமாகும்.
முன்னேஸ்வரத்தில் இந்துக்களின் ஒருநாள் பிரார்த்தனையை தடுத்து விளம்பரம் தேட நினைப்பது இந்துக்களை அவமதிப்பதாகவே கருதத் தோன்றுகிறது.
உண்மையான இந்துக்களின் தூய்மையான பிரார்த்தனைகளின் மத, மொழி உரிமைகளை மிரட்டலுக்காக விட்டுக்கொடுக்க முடியாது.
இவ்விடயத்தில் உலக இந்துக்கள் அனைவரும் ஒன்றிணைந்து சமய உரிமைகளையும், நம்பிக்கைகளையும் காப்பாற்றுவதற்கு முன்வர வேண்டும்.
அத்துடன் ஜனாதிபதியின் செல்லக் கிறுக்கனாக செயல்பட்டு வரும் மேர்வின் சில்வாவை இவ்விடயத்தில் ஜனாதிபதி கண்டித்து அடக்கி வைப்பதையே இந்துக்கள் ௭திர்பார்க்கின்றனர்
https://www.tamilwin.com/show-RUmqyIRaOalo6.html
//இலங்கையின் பாடத்திட்டத்தில் எல்லா மதத்தினருக்கும் சமயம் ஒரு பாடமாக மூன்றாம் வகுப்பிலிருந்து கற்பிக்கப்படுகிறது. அதனால் ஈழத்தில் ஆரம்பக் கல்வி கற்ற ஒவ்வொரு தமிழ்மாணவனும் இந்து சமயத்தை ஒரு பாடமாகக் கற்பதால் எல்லோருக்கும் தமிழ்நாட்டுத் திருத்தலங்களைப் பற்றியும் பக்தி இலக்கியங்களாகிய தேவார , திருவாசகம், ஆழ்வார் பாசுரங்கள் பற்றிய அறிமுகம் கிடைக்கிறது அத்துடன் அதன் அருமை பெருமைகளையும் அறிய முடிகிறது. அது மட்டுமல்ல தமிழ்நாட்டுத் தலங்களின் வரலாறு அதன் தொன்மை, நாயன்மார்களின் தொண்டுகள் என்பனவும் அங்கு கற்பிக்கப்படுகிறது. அதனால் ஒவ்வொரு ஈழச் சைவத்தமிழனுக்கும் தமிழ்நாட்டுக்ககுப் போக வேண்டும் அங்குள்ள ஆலயங்களைத் தரிசிக்க வேண்டுமென்ற ஆவல் சிறுவயதிலேயே ஏற்படுகிறது.நான் உட்பட ஆனால் நாங்கள் தமிழ்நாட்டுக் கோயில்களை எவ்வளவு ஆர்வத்துடனும் பக்தியுடனும் அதன் மகிமையை தொன்மையை அறிந்து அணுகுகிறோமே அதேயளவு ஏமாற்றத்துடனும் அதன் நிலையைப்பற்றிய கவலையுடனும் எந்தளவுக்குத் தமிழ்நாட்டுத் தமிழர்கள் அந்தக் கோயில்களைப் புறக்கணிக்கிறார்கள் என்ற வேதனையுடன் திரும்புகிறோம்//
திவ்யாவின் இந்த யதார்த்த உண்மை நான், என் குடும்பத்தவர்கள், நண்பர்கள் பட்ட அனுபவம். இது பற்றி பற்றி ஹிந்துஸஂதானி ஹிந்து மக்கள் அவசியம் சிந்திக்க வேண்டும் .நன்றி.
அற்புதமான கட்டுரை. தமிழ்நாடு பற்றிய திவ்யாவின் குறையும் நியாயமானதே. ஈழத்தமிழர்கள் எல்லா வளங்களும், அமைதியும் பெற்று நீடூழி வாழ வேண்டும்!