இராமன் – ஒரு மாபெரும் மனிதகுல விளக்கு – 16

ஆங்கில மூலம் : எஸ். லக்ஷ்மிநாராயணன்
தமிழாக்கம் : எஸ். ராமன்
முந்தைய பகுதிகள்
தொடர்ச்சி..

16.1 இறப்பின் சிறப்பு

நேரம் போகப் போக வாலிக்கு மூச்சு விடுவது கடினமாகிக்கொண்டு வருகிறது. அவனது மனைவி தாரா, மகன் அங்கதன், மற்றும் இதர வானரர்கள் இறந்து கொண்டிருக்கும் வாலியைச் சுற்றி நின்று கொண்டிருக்கின்றனர். மரணம் வரப்போகும் சமயம் வாலி நல்ல குணங்களோடு காணப்படுகிறான். அவனுக்கு இராமரைப் பற்றி எந்தக் காழ்ப்புணர்ச்சியும் இல்லை; அதேபோல சுக்ரீவனிடத்தும் எந்த வெறுப்பும் இல்லை. சுக்ரீவனிடம் அவனுக்குள்ள பழைய பாசம்தான் வெளிப்படுகிறது. நடந்தவை எதற்கும் தன் மேல் கோபம் கொள்ளவேண்டாம் என்று சொல்லி, தன் மார் மீதிருந்த தங்கச் சங்கிலியை கழற்றி எடுத்துக்கொள்ளுமாறு வாலி சுக்ரீவனிடம் கேட்டுக்கொள்கிறான்.

தன் மகன் அங்கதனை நன்றாக பார்த்து வளர்க்கும்படி, தன் உயிர் பிரியும் முன் சுக்ரீவனிடம் வாக்குறுதி கேட்கிறான். தாராவும், சுக்ரீவனும் துக்கத்தைத் தாங்க முடியாமல் நிலை குலைந்து நிற்கின்றனர். தன்னால்தானே தன் அண்ணனுக்கு அப்படி ஒரு முடிவு வந்து விட்டது என்று சுக்ரீவன் மிகவும் வருந்தினான். வாலியின் பூதவுடல் தீயில் இடப்பட்டு தகனம் செய்யப்படுகிறது. நம் பண்டைய வழக்கப்படி உற்றாரும், சுற்றாரும் நதி நீர் எடுத்துத் தெளித்து பிரிந்த ஆவிக்கு இறுதி மரியாதை செலுத்துகின்றனர். வாலியின் பிரிவு சுக்ரீவனை எவ்வளவு வேதனைப்படுத்தியதோ அதே அளவு இராமரையும் நெகிழச் செய்தாலும் மேற்கொண்டு ஆவதற்கான உதவிகளைச் செய்தார்.

ஸுக்³ரீவேணேவ தீ³னேன தீ³னோ பூ⁴த்வா மஹாப³ல:|

ஸமானஸோ²க: காகுத்ஸ்த²: ப்ரேதகார்யாண்யகாரயத்|| 4.25.52||

மஹாப³ல: mighty, புருஷோத்தமர்

காகுத்ஸ்த²: Kakustha, இராமர்

தீ³னேன by the piteous, துக்கத்துடன்

ஸுக்³ரீவேண with Sugriva, சுக்ரீவனுடன்

இவ as though, போல

ஸமானஸோ²க: equally sad, அதேபோல துக்கம்

தீ³ன: pitiable one, வேதனையை

பூ⁴த்வா was equally, சமமாக அனுபவிக்கும்

ப்ரேதகார்யாணி funeral rites, இறுதிச் சடங்குகள்

அகாரயத் directed, மேற்பார்வை செய்தார்.

புருஷோத்தமர் இராமரும் சுக்ரீவனைப் போலவே துக்கம் மற்றும் வேதனையை அனுபவித்துக்கொண்டே, இறுதிச் சடங்குகள் செய்வதற்கு வேண்டிய உதவிகளைச் செய்தார்.

கொலையும், சாவும் அடக்க முடியாத வேதனைகளையும், மிருகத்தனமான உணர்வுகளையும் வெளிப்படுத்த வைக்கின்றன. இங்கு ஒரு சகோதரன் தன் சகோதரனையே கொல்ல நேர்ந்ததே என்று வருத்தப்படுகிறான்; அவனது நண்பனாகிய இராமரும் அந்தக் கொலைக்குத் துணை போகவேண்டி வந்ததே என்று வேதனைப்படுகிறார். உண்மைதான், இராமருடைய மற்றைய குணங்களோடு இதையும் ஞாபகத்தில் வைத்துக்கொள்ள வேண்டிய ஒரு அம்சமே.

16.2 மாரிக்காலத்து இன்னிசை மழை

ஆவணி மாதம் வந்ததால் மழைக் காலம் ஆரம்பமாகிவிடவே, சீதையைத் தேடும் முயற்சியை மழைக் காலத்தின் இறுதி வரை தள்ளிப்போட வேண்டியதாயிற்று. பதினான்கு வருடங்கள் காட்டில் இருக்க வாக்குக் கொடுத்தபடி, நண்பன் சுக்ரீவனின் பட்டாபிஷேகத்துக்காக கிஷ்கிந்தாவுக்கும் செல்லாமல், ராம-லக்ஷ்மணர்கள் பிரஸ்ரவண மலையில் ஒரு குகையை மழைக் காலத்தில் ஒதுங்கி இருப்பதற்காகத் தேர்ந்தெடுத்தார்கள். மழைக்காலத்தில் காட்டில் நடக்கும் இயற்கை வனப்புகளை விவரமாகவும் அழகாகவும் சித்தரிக்க வால்மீகி தவறவில்லை.

மற்ற நாடுகளில் போல் அல்லாது பாரத தேசத்தில் மழைப் பருவத்தில் நடக்கும் இயற்கை மாற்றங்கள் இங்கு வசிக்கும் மக்கள், சுற்றுப்புற சூழல், விவசாயம், பொருளாதாரம், உடல், மனம், மற்றும் இயற்கை வனப்புகள் எல்லாவற்றையும் எவ்வளவு பாதிக்கிறது என்பது இருந்து அனுபவிப்பவர்களுக்குத்தான் நன்கு புரியும். இயற்கையின் மாற்றங்கள் நம் ஒவ்வோர் உடலிலும் அவரவர்க்கேற்ப மாற்றங்களை உண்டாக்கும் வகையில்தான் நாம் இருக்கும் வீடுகளும் இருந்தன; நாம் ஈடுபடும் செயல்களும் அமைந்தன. ஆனால் கால மாற்றத்தில் இவை எல்லாமே மாறியிருந்தாலும், இன்னும் அதன் சுவடுகள் பல இடங்களிலும், செயல்களிலும் காணப்படுகின்றன. மழையினால் வரும் நீரை சேமிக்க என்று பல இடங்களிலும் குளங்கள், ஏரிகளை வெட்டியும், அதற்கு மழைநீர் செல்வதற்கு இயற்கையாக அமைந்த வாய்க்கால்கள் தவிர செயற்கையாக கால்வாய்களும் உருவாக்கப்பட்டிருந்தன.

அப்படி மழை வெள்ளத்தால் பெருகி வரும் நீரின் வேகத்தால் சாலைகளும் துண்டாடப்படும்; சில தாழ்வான இடங்களே அதனால் மூழ்கியும்விடும். அதனால் மக்கள் போவதும் வருவதும் தடைப்படும் ஆதலால் முடிந்தவரை மக்கள் தாங்கள் இருக்கும் இடத்திலேயே தங்குவார்கள். அது தவிர, கொளுத்தும் வெயிலுக்குப்பின் வரும் மழையினாலும், நீரோட்டத்தினாலும் ஊர்ந்து வரும் கண்ணுக்கும் தெரியாத சீவராசிகளைக் கூட தாம் அறியாமலும் காலால் மிதித்து கொன்றுவிடக் கூடாதே என்று சாதுக்கள் போன்றோர் இடம் விட்டு இடம் நகர மாட்டார்கள்; நிச்சயமாக நீரோட்டங்களைத் தாண்ட மாட்டார்கள். இவை தவிர, இயற்கையில் பூக்கள் பூப்பதும், அவை பூக்க என்று சில ஆயத்தங்கள் உருவாவதும், அவைகளில் உள்ள தேனைச் சுவைக்க வண்டுகள் சுற்றிப் பறப்பதும், மற்றும் பறவைகள், மிருக இனங்கள் என்று வகைக்கேற்ப மண்ணுக்கு மேலே நடக்கும் அதிசயங்கள் தவிர மண்ணுக்குக் கீழே உள்ள உலகங்களில் என்ன நடக்கிறது என்று கண்ணுக்குத் தெரியாவிட்டாலும் அங்கு நடப்பதன் விளைவுகளை மேலே பார்த்து அனுபவிக்கும் எவருக்குமே அதைப் பற்றி எண்ணங்கள் இருக்கும் என்றால், எதைப் பற்றியும் எழுதும் கவிகளுக்கா அதைத் தவிர்க்க முடியும்? ஆதலால் இப்படியான சிறப்பு கொண்ட மழைக் காலத்து வனப்புகளை வால்மீகியும் எதுவும் சொல்லாது விட்டு விடுவாரா?

வானில் விரியும் நிறங்களும், பறவைகள் எழுப்பும் இசைக் கூவலும், வண்டுகளின் ரீங்காரமும், மிருகங்களின் களியாட்டமும் வானிலிருந்து விழும் மழை நீரைப் பார்த்ததும் நடக்கும் ஒத்திகை பார்க்காத இயற்கை நாடகங்கள். கிஷ்கிந்தா காண்டத்தில் வால்மீகியின் வர்ணனையைப் பற்றித் தெரிந்துகொள்ள, அதன் 28-வது அத்தியாயத்தில் உள்ள 66 செய்யுட்களில் மாதிரிக்கு ஒன்று என்று கீழே 36-வது செய்யுளைப் பார்ப்போம்.

ஷட்பாத³தந்த்ரீமது⁴ராபி⁴தா⁴னம்ʼ ப்லவங்க³மோதீ³ரிதகண்ட²தாலம்|

ஆவிஷ்க்ருʼதம்ʼ மேக⁴ம்ருʼத³ங்க³னாதை³ர்வனேஷு ஸங்கீ³தமிவ ப்ரவ்ருʼத்தம்|| 4.28.36||

 

வனேஷு – in the forest, காட்டினில்

ஷட்பாத³தந்த்ரீமது⁴ராபி⁴தா⁴னம் – the sweet humming sounds of bees like the music of string instruments, ரீங்கரிக்கும் வண்டுகளின் இனிய ஓசை தந்திக் கருவிகளின் இசை போல

ப்லவங்க³மோதீ³ரிதகண்ட²தாலம் – the noises of frogs sounding like the beating of trumpets to keep the rhythm with the beating of drums of thunder clouds, இடிஇடிக்கும் மேள ஓசைக்கு ஒத்தாக துந்துபியின் பிளிறல் போல் தவளைகளின் கத்தலும்

மேக⁴ம்ருʼத³ங்க³னாதை³: – sounds of clouds like the sounding like the beating of drums, மேகங்கள் ஊடே வரும் இடியின் ஓசை மேளம் கொட்டுதல் போலவும்

ஆவிஷ்க்ருʼதம் – manifested, காணப்பட்டன

ஸங்கீ³தம் – musical event, இன்னிசைக் கச்சேரி

ப்ரவ்ருʼத்தம் இவ – as if commenced, தொடங்கியது போல

(இந்த வால்மீகியின் ஸ்லோகத்திற்கு மூல ஆசிரியர் எழுதியிருக்கும் ஆங்கிலக் கவிதையையும் தந்து, அதனால் எனக்குள் ஏற்பட்ட உள்ளக் கிளர்ச்சியையும் அதன் கீழே தமிழில் வரைந்திருக்கிறேன். கவிஞர்கள் மன்னிப்பாராக.)

The buzzing bees hummed and sang
Like the tunes, one plays on strings
Frogs in ponds and paddy fields
Croaked and chorused rhythmic beats
Clouds from distant mountains tops
Drum like boomed their thunderous noise
That was the concert monsoon gave
To Rama and his brother in Prasravana cave

ர்ர்ர்ரர்… என்று சுற்றிச் சுழலும் வண்டுகள் ரீங்கரிக்கும் ஓசைதான் யாழினின்று வரும் நாதமோ?

கிர்..கிர்..கிர்… என்று வயலிலும் குளக்கரையிலும் கத்தும் தவளைகள் அதற்குத் தரும் தாளமோ?

மலை உச்சியைத் தவழும் மேகங்களின் உரசலால் ஒளிரும் இடிதான் காது பிளக்கும் மேளமோ?

இவைதான் பிரஸ்ரவண மலைக் குகைவாசிக்கு இயற்கை தரும் இன்னிசை ஜாலமோ?

இருபத்தெட்டாவது அத்தியாயம் முழுவதும் வர்ணனையுடன் உள்ள ஸ்லோகங்கள் ராகத்தோடு பாடக் கூடியதாக அமைந்திருக்கிறது. அதை ஒருவரால் பாட முடியா விட்டாலும் உரக்க வாசித்தாலே அதன் அருமை தெரியும்.

16.3 பருவ நாடகம்

மழைக் காலத்தில் எங்கும் போக முடியவில்லை. அதனால் சீதையைத் தேடும் படலம் தற்காலிகமாக நின்றதால், இராமர் மலைக் குகையை விட்டு எங்கும் செல்லவில்லை. பின்பு வானத்தில் மேகக் கூட்டம் கலைந்து மழையும் நின்றதால், சுற்றியுள்ள காற்றில் ஒருவித வாடை வந்து இலையுதிர் காலம் வந்துகொண்டிருப்பதை அறிவித்தது. இது சீதையை மறுபடியும் தேட ஆரம்பிக்கச் சரியான நேரம். ஆனால் சுக்ரீவனோ கிஷ்கிந்தாவை விட்டு வராததாலும், அவன் சீதையைத் தேடும் வழிகள் பற்றி ஏதும் யோசித்திருக்கிறானா என்று தெரியாததாலும், இராமருக்கு எரிச்சல் வந்தது. இதை இராமர் லக்ஷ்மணனிடம் சொல்லி சுக்ரீவனைப் பார்த்துவிட்டு, அவரது வருத்தத்தையும் தெரிவிக்கச் சொல்கிறார். இதை எழுதும்போது வால்மீகி இலையுதிர் காலத்தின் இயற்கைக் கோலத்தை வருணித்து இராமரது கவனத்தை அவரது பிரச்சினைகளிலிருந்து திசை திருப்புவதுபோல் அமைந்திருக்கிறது இந்தப் பாடல்.

ஜலம்ʼ ப்ரஸன்னம்ʼ குமுத³ம்ʼ ப்ரபா⁴ஸம்ʼ க்ரௌஞ்சஸ்வனஸ்²ஸா²லிவனம்ʼ விபக்வம்

ம்ருʼது³ஸ்²ச வாயுர்விமலஸ்²ச சந்த்³ரஸ்²ஸ²ம்ʼஸந்தி வர்ஷவ்யபனீதகாலம்|| 4.30.53||

குமுத³ம்ʼ ப்ரபா⁴ஸம் lotuses blooming in the night, இரவில் மலரும் தாமரைகள் க்ரௌஞ்சஸ்வனம் the sounds of Krauncha birds, கிரௌஞ்சப் பறவைகளின் குரல்கள்

ப்ரஸன்னம் pleasant, சுகமான

ஜலம் waters, நீர்

விபக்வம் fully ripened, நன்கு முற்றிய

ஸா²லிவனம் paddy fields, நெல் வயல்கள்

ம்ருʼது³: gentle, மெல்லிய

வாயு: breeze, மென்காற்று

விமல: bright, வெளிச்சமான

சந்த்³ரஸ்²ச Moon, நிலா

வர்ஷவ்யபனீதகாலம் coming to an end of the rainy season, மழைக்காலம் முடிவது

ஸ²ம்ʼஸந்தி speak out, சொல்கிறது.

அன்றலர்ந்த தாமரை மலர்களின் வாசமும், கிரௌஞ்சப் பறவைகளின் கீச்.. கீச் குரல்களும்

பொன் வேய்ந்த வயலில் பொன்னியின் துவளலும், கதிரைத் தழுவிச் செல்லும் மென்காற்றும்

கலங்கி வந்த நீர் தெளிவானதாலும் நீலவான் ஒளிர் வெண்ணிலவின் தண் கதிர்களும்

இடிநிறை மழைக் காலம் போய் இலையுதிர் காலம் புகுந்ததைக் காட்டுமே.

வாழ்க்கை என்றாலே ஆயிரம் பிரச்சினைகள் இருக்கும். அவைகளையே நினைத்து அதிலேயே உழன்று கொண்டிருந்தால், நம்மைச் சுற்றி நல்லது நாலு நடப்பதைப் பார்த்து ரசிக்காமல் போய் விடுவோம். ஒரு பருவம் போய் இன்னொன்று வரும்போது சுற்றுமுற்றும் பார்த்து அந்த இயற்கையின் மாற்றத்தையும், அழகையும் ரசிக்காமல் இருந்து விடாதீர்கள் என்று இங்கு இராமருக்குக் காட்டுவதுபோல் வால்மீகி நமக்கும் சொல்கிறார்.

16.4 வாக்கினிலே இனிமை வேண்டும்

சீதையைத் தேடுவதில் சுக்ரீவன் மும்முரம் காட்டவில்லையோ என்ற சந்தேகம் இராமரை வாட்டுகிறது என்று லக்ஷ்மணனுக்குத் தெரிய வந்ததும், அவனுக்குக் கோபம் வந்து சுக்ரீவன் ஒருவேளை ஒன்றும் செய்யவில்லை என்றால் தான் அவனுக்கு அதற்குண்டான தண்டனையையும் கொடுத்துவிட்டு வருவதாகச் சொல்கிறான். ஆனால் லக்ஷ்மணன் அப்படி சுக்ரீவன் கோபத்தைத் தூண்டும் வகையில் ஏதேனும் எகத்தாளமாகச் செய்வதையோ, முரட்டுத்தனமாகப் பேசுவதையோ இராமர் விரும்பவில்லை. சுக்ரீவனின் அமைதியும், காரியத்தைத் தள்ளிப் போடுவதும் கவலை அளிப்பது உண்மையானாலும் அவனிடம் பணிவுடன் பேசும்படிச் சொல்கிறார்.

ஸாமோபஹிதயா வாசா ரூக்ஷாணி பரிவர்ஜயன்|

வக்துமர்ஹஸி ஸுக்³ரீவம்ʼ வ்யதீதம்ʼ காலபர்யயே|| 4.31.8||

 

காலபர்யயே not attempting timely action, காலத்தில் செய்ய வேண்டியது

வ்யதீதம் who exceeded, தள்ளிப் போடுபவர்

ஸுக்³ரீவம் to Sugriva, சுக்ரீவனுக்கு

ரூக்ஷாணி harsh, கடுமையாக

பரிவர்ஜயன் avoiding, தவிர்க்க

ஸாமோபஹிதயா by adopting conciliating, விட்டுக்கொடுக்கும் போக்கைத் தழுவி

வாசா with word, வார்த்தைகளால்

வக்தும் to speak, பேசி

அர்ஹஸி proper for you., உனக்குச் சரியானதல்ல.

காலத்தில் செய்ய வேண்டியதைச் செய்யாமல் இருந்தாலும் சுக்ரீவன் கடுமையாக எதுவும் செய்துவிடவில்லை. அவனிடம் இரக்கமற்ற வார்த்தைகளைப் பேசிவிடாதே.

எவருக்குமே பல சமயங்கள் கோபம் வந்து, முடிக்காத வேலையை முடித்து வைப்பதற்கு கடுமையாகப் பேசத் தோன்றுவது இயல்பானதே. அதற்குப் பலமான காரணங்களும் இருக்கலாம். பேச்சில் கடுமையோ, செயலில் முரட்டுத்தனமோ இருந்தால் நமக்கு நடக்க வேண்டிய வேலை நடக்காமலே போகலாம். நாம் அப்படிப் பேசுவது அவர்களது உணர்வுகளைத் தூண்டிவிட்டு அவர்களை நமக்கு எதிராகப் பேசவும் வைத்து, வேலைகளை முடக்கவும் செய்யலாம். முடிக்க வேண்டியது முடிக்கப்படாமலோ, வேண்டியதற்கு எதிர்மறையான வேலைகளோ நடந்தேறலாம்.

16.5 குடி குடியைக் கெடுக்கும்

கோப முகத்துடனும், தூசியைக் கிளப்பும் வண்ணம் கால்களை உதைத்துக்கொண்டும் லக்ஷ்மணன் கிஷ்கிந்தா நோக்கி நடந்த நடையிலிருந்தே ஏதோ வேண்டாதது நடக்கலாம் என்று யூகித்த வானரர்கள் ஒதுங்கி நின்று அவனுக்கு வழி விட்டனர். குடித்துக்கொண்டும், அரசவையில் பேசிச் சிரித்துக்கொண்டும் அரண்மனையில் சிங்காதனத்தில் வீற்றிருந்த சுக்ரீவனுக்கு, லக்ஷ்மணன் கோட்டை வாசலுக்கு வந்துவிட்டதாக இளவரசன் அங்கதன் தெரிவித்தான். இதற்குள் விவரங்களைத் தெரிந்துகொண்ட அமைச்சர் அனுமானும் சுக்ரீவனை அமைதியாக இருக்குமாறும், லக்ஷ்மணன் கோபத்தைத் தூண்டிவிடாதவாறு பேசுமாறும், அவன் கோபத்திற்கு நிச்சயம் ஏதேனும் காரணம் இருக்குமாதலால் மன்னிக்க வேண்டிக்கேட்கவும் சொல்கிறான். மழைக்காலம் முடிந்தும் முன்பு அவர்களுக்குக் கொடுத்த வாக்குறுதிப்படி சீதையைத் தேடும் வேலையை ஆரம்பிக்காது சுக்ரீவன் மந்த கதியில் இருப்பதாகவும் அனுமன் சொன்னான்.

கோட்டை வாயிலில் வெகுநேரம் காத்துக் கொண்டிருந்தும் கதவு திறக்கப்படாமல் இருக்கவே, பொறுமை இழந்த லக்ஷ்மணன் கோபத்தில் வில்லை எடுத்து அதன் நாண்களை முறுக்கி ஓசையைக் கிளப்பினான். அந்த சத்தத்தைக் கேட்ட சுக்ரீவனுக்கு வந்திருப்பவரின் நிலைமை புரிந்துவிட்டது. வாலியின் மனைவி தாரா ஒரு புத்திசாலி; மேலும் அவள் இன்முகம் கொண்டவள். ஆதலால் அவளுக்கு நிலைமையைப் பேசிச் சரி செய்யும் திறமை உண்டு. தான் முன்னே சென்று லக்ஷ்மணனை வரவேற்பதற்கு வேண்டிய தைரியம் சுக்ரீவனுக்கு இல்லாததால், முதலில் தாராவை அனுப்பி லக்ஷ்மணனின் கோபத்தைக் கொஞ்சம் தணிக்கச் செய்யலாம் என்று நினைத்து அவளை அனுப்பினான். அவர்கள் மது அருந்தும் வழக்கம் கொண்டவர்களாதலாலும், ஏற்கனவே அவள் அளவாக மது அருந்திவிட்டதால் தன்னால் தயக்கம் ஏதும் இல்லாது பேச முடியும் என்று சொல்லிவிட்டு அவள் கோட்டை வாசலை நோக்கிப் போகிறாள்.

ஸா பானயோகா³த்³வினிவ்ருʼத்தலஜ்ஜா ….. 4.33.40||

பானயோகா³த் having been in drunken state, மது அருந்திய மயக்க நிலையில்

வினிவ்ருʼத்தலஜ்ஜா shedding bashfulness, தயக்கத்தை ஒதுக்கிவிட்டு

ஸா she, அவள்.

மது அருந்திய மயக்க நிலையில் அவளுக்குத் தயக்கம் ஏதும் இல்லை.

மகிழ்ச்சியான வாழ்க்கையை விரும்பும் வானரர்களுக்கு மது அருந்தும் பழக்கம் உண்டு. இந்தச் செய்யுள் மூலம், தாரா செய்வதுபோல் அளவோடு மது அருந்தினால் அது சில சங்கடமான சந்தர்ப்பங்களைச் சந்திக்கும் தெம்பைக் கொடுக்கிறது என்று வால்மீகிக்கும் தெரியும் போல் இருக்கிறது. ஆனால் அதுவே அளவுக்கு அதிகமாகப் போவதைக் கண்டிக்கும் அவர் அதை லக்ஷ்மணன் மூலம் தெரியப்படுத்துகிறார்.

பானாத³ர்த²ஸ்²ச த⁴ர்மஸ்²ச காமஸ்²ச பரிஹீயதே|| 4.33.46||

பானாத் by drinking, குடித்ததால்

அர்த²ஸ்²ச material wealth, பொருட் செல்வம்

காமஸ்²ச by desire, ஆசையால்

த⁴ர்மஸ்²ச morals, நீதிகள்

பரிஹீயதே will be destroyed, அழிந்து போகும்.

ஆசையால் குடிப்பவர்கள் அதற்கு அடிமையாகி பொருட் செல்வம், அருட் செல்வம் எல்லாம் இழப்பார்கள்.

எல்லா சீவராசிகளிடத்தும் என்ன நடக்கிறதோ, அதைச் சொல்லிவிட்டு எவருக்கு எது விருப்பமோ அதை அவர்கள் எடுத்துக் கொள்ளட்டும் என்று வால்மீகி விட்டுவிடுகிறார்.

(தொடரும்..)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *