முந்தைய பகுதிகள்: பகுதி 1
தொடர்ச்சி…
ஒரு வேலைக்கு நேர்காணல் என்று போகும்போது அங்கு நம் தகுதியை எடை போடுபவர்கள் நம்மிடம், இதற்கு முன் வேலை செய்த அனுபவம் இருக்கிறதா என்று கேட்கலாம். புதிதாக வேலை தேடுபவரிடம் அதை எப்படி எதிர்பார்ப்பது என்று தெரியாமலும் சிலர் அப்படிக் கேட்கிறார்கள். ஆனால் அப்படிக் கேட்பதற்குக் காரணம், வேலை தேடுபவரிடமிருந்து “வேலையில் என்னென்ன எதிர்பார்க்கிறீர்களோ, அதைச் சரியாகச் செய்து முடிப்பேன்” என்ற பதிலைத்தான் எதிர்பார்க்கிறார்கள் என்று நினைக்கிறேன். அதே போன்று ஆன்மாவைப் பற்றிப் புரிந்துகொள்ள விரும்பும் நாம் அதற்கு வேண்டிய தகுதிகளின் விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாமே.
1. तपोभि: क्षीणपापानां शान्तानां वीतरागिणां |
मुमुक्षूणामपेक्ष्यो sयमात्मबोधो विधीयते ||
தபோபி⁴: க்ஷீணபாபானாம்ʼ ஸா²ந்தானாம்ʼ வீதராகி³ணாம்ʼ |
முமுக்ஷூணாமபேக்ஷ்யோ sயமாத்மபோ³தோ⁴ விதீ⁴யதே ||
தவங்களினால் பாவம் தவிர்ந்தவராய் சாந்தி
அவிர்ந்தவராய் ஆசை அறுந்தாராய் – பவமுக்தி
ஆதரம் ஆர்ந்தாருக்கு அடையத் தகும் ஆன்ம
போதமாம் ஈது புகல்
சில தவங்கள் செய்ததனால் மேலும் பாவங்கள் செய்வதைத் தவிர்த்தவர்களாகவும், மனத்தில் சாந்தி அடைந்தவர்களாகவும், உலக விஷயங்களில் ஆசைகள் இல்லாதவர்களாகவும், பிறப்பிறப்புச் சுழல்களில் இருந்து விடுபட விரும்புவோர்களாகவும் இருப்போர்களுக்கு என்று இந்த ஆன்ம போதம் சொல்லப்படுகிறது.
எவன் ஒருவனுடைய வாழ்க்கையிலும் ஒரு கட்டம் வரும். அதுதான் அவன் ஏதேனும் ஒரு மரண சம்பவத்தைச் சந்திக்கும் கட்டம். இது ரமணர் போன்ற ஞானிகளுக்கும் வந்திருக்கிறது; தெருவில் போகும் ஒருவனை இடித்துத் தள்ளியிருக்கக் கூடிய வாகனத்திலிருந்து மயிரிழையில் தப்பியவனுக்கும் வந்திருக்கிறது; வாழ்வில் ஒன்றை மிகவும் எதிர்பார்த்து அது கிடைக்காது அலுத்துப் போய் இறந்து போகலாமா என்று யோசித்தவனுக்கும் வந்திருக்கிறது. அல்லது தான் மிகவும் நேசித்தவர் இறந்ததும் அவரது உயிரற்ற உடலைப் பார்க்கும்போதும் அது வந்திருக்கிறது. இந்த எண்ணம் வருவதற்கு இதுதான் தகுதி என்று எதுவும் கிடையாது. அப்படி வரும்போது மரணத்தைப் பற்றிய அவனுக்குள் உதிக்கும் எண்ணங்கள்தான் அவரவர்க்கு ஏற்ப வகைவகையாய் மாறுகின்றன.
எல்லோருக்கும் ஆரம்பம் பிறப்பு என்றாலும், அவனை மிகவும் சிந்திக்க வைப்பது அவனுக்கு ஒரு நாள் வரக்கூடிய அவனது இறப்புதான். ஏனென்றால் வாழ்வை வாழ்வாங்கு வாழ்ந்து ஒருவன் வேண்டியது அனைத்தையும் பெற்றவனுக்கும் மரணம் வருகிறது. அதேபோல வாழ்க்கையை வாழத் தெரியாது தவித்து, இருப்பதையும் இழந்து, இன்னும் என்ன செய்வது என்றும் தெரியாது, இறப்பது ஒன்றுதான் தனக்கு விடுதலை என்ற நிலைக்குத் தள்ளப்பட்டவனுக்கும் மரணம் வருகிறது. ஆக அனைவருமே மரணத்தை வாழ்க்கையின் உறுதியான ஒரு முடிவு என்றே பார்க்கின்றனர். ஆனால் இறப்பைப் பற்றித் தீவிரமாக யோசிப்பவனுக்குத்தான் அது பிறப்பின் மறுபக்கம் என்று தெரிகிறது.
அதாவது பிறந்தால் இறப்பது நிச்சயம் என்றும், அப்போது தான் ஏன் பிறந்தோம் என்ற எண்ணமும் வருகிறது. அப்படி யோசிப்பவனுக்குத்தான் பிறப்பதால் நிச்சயம் வரும் இறப்பு என்ற ஒரு பிறப்பிறப்புச் சுழலில் சிக்காமல் இருப்பது என்றால் என்ன என்ற எண்ணமும் கூடவே வருகிறது. அப்படி ஒரு சாகா நிலை இருக்குமானால் அதை எப்படி அடைவது என்ற உந்துதல் இருப்பவனையே முமுக்ஷூ என்று கூறுகிறார்கள். அதாவது இறக்காமல் இருப்பதற்கு பிறக்காமல் இருக்க வேண்டும்; அது எப்படி என்று யோசிப்பவன்தான் முமுக்ஷூ என்ற சாதகன்.
ஒருவன் இறந்துவிட்டால் அவன் இயற்கை எய்தினான் என்று சொல்கிறோம். தன்னைச் சுற்று முற்றும் பார்த்து இயற்கையில் என்ன நடக்கிறது என்று கூர்ந்து பார்ப்பவனுக்கு இதன் உண்மை புரியும். சுற்றியுள்ள மனிதர்கள் தன்னைப் போலவே விதவிதமாய் எண்ணுபவர்கள் ஆதலால், அவர்கள் தங்களது செயலால் தங்கள் சுற்றத்தை மாற்றி அதைத் தங்களுக்கு ஏற்ப அமைத்துக் கொள்ளமுடிகிறது. அதைச் செயற்கை என்று சொல்லி, அதைச் செய்வதுதான் அவனது இயற்கை என்று தெரிந்துகொள்கிறோம். அதுமட்டும் அல்லாமல் ஒவ்வொருவனும் வெவ்வேறு மாதிரியாக இருப்பவர்கள் என்பதும் அவனுக்குத் தெரிகிறது.
மனிதனைப் போலவே தன் இன விருத்தி என்று ஒரு சில விஷயங்களில் மற்ற ஜீவராசிகள் ஈடுபட்டாலும், மனிதனளவு ஒரு குடும்பம், சமூகம், தேசம், உலகம் என்ற விதவிதமான கட்டுக்கோப்பான வெளிப் பார்வைகள் இல்லாது, பொதுவாக கண்டதே காட்சி கொண்டதே கோலம் என்று அவைகள் வாழ்வதையும் அவன் பார்க்கிறான். ஒரு சில மிருகங்கள் கூட்டாக வேட்டையாடினாலும், வேறு பல விஷயங்களில் சேர்ந்து இருந்தாலும், அவனது பார்வை போல பொதுவாக அவைகளுக்கு இல்லை என்பதால் மட்டுமே அவைகளை ஒதுக்கிவிட முடியாது; அவைகளில் சிலவற்றிற்கு அவனை விடவும் கூர்மையான பார்வையோ, மோப்பமோ, இருளில் காணும் சக்தியோ, அதிர்வுகளை உணர்வதோ அல்லது அதுபோன்ற வேறு சில இந்திரியாதி விஷயங்களிலோ அவனை விடவும் அவைகளுக்குத் தேர்ச்சி இருக்கின்றன என்றும் அவன் தெரிந்து வைத்திருக்கிறான்.
ஆனாலும் அவைகள் அப்படி இருப்பது அவனுக்குத் தெரியும் என்பது அவைகளுக்குத் தெரியுமா என்பதில் அவனுக்கு எப்போதுமே ஒரு சந்தேகம் உண்டு. அது மட்டுமல்லாது ஒன்று தனக்குத் தெரியும் என்பதோடு, அது தெரியும் என்பதும் தெரியும். ஆனால் அவைகளுக்கோ ஒன்று தெரியும், அப்படித் தெரிவதாலேயே அவைகள் தங்கள் தினப்படி வாழ்க்கையை நடத்துகின்றன, ஆனால் தனக்குத் தெரியும் என்பது அவைகளுக்குத் தெரியுமா என்பதிலும் அவனுக்குச் சந்தேகம் உண்டு. இங்குதான் மனிதன் அவைகளினின்றும் வித்தியாசப்படுகிறான் என்று இதுவரை தெரிந்து வைத்திருக்கிறான். அதாவது ஒன்றை அறிவது மட்டுமல்லாது, அந்த அறிவைப் பற்றி அறிவது என்பதில் மனிதன் மற்ற ஜீவராசிகளிடம் இருந்தும் வித்தியாசப்படுகிறான்.
அந்த ஜீவராசிகளைத் தவிர அவன் தன் சுற்றத்தில் தாவர வகைகளையும் காண்கிறான். மற்றவை போல் அவைகளுக்கு வளர்ச்சி இருந்தாலும், அவை இருக்கும் இடத்தைவிட்டு நகர்வதில்லை. இந்த அசல வகை உயிர்களும் விதையிலிருந்தோ அல்லது வேறு வழியிலோ முளைத்து பூ மலர்ந்து, காய், கனி என்று வளர்ந்து, மறுபடியும் அதில் உள்ள விதைகள் மூலமோ, வேறு முறையிலோ இன்னுமொரு தாவரம் அந்த இனத்தில் வளர்கிறது. இப்படியாகத் தன் இனவிருத்தியை இவைகள் செய்கின்றன. இப்படி தானும் தன்னைச் சுற்றியுள்ள அனைத்து ஜீவராசிகளும் பிறந்து, வளர்ந்து, இறந்து போகும் காட்சியை அவன் இயற்கையில் நடப்பதாகப் பார்க்கிறான். இந்தச் சூழலில் அவன் தன் மரணத்தையும் இயற்கை எய்துவதாகக் கருதுகிறான்.
அப்படிப் பிறக்கும் எந்த ஜீவராசிகளுக்குமே அவைகளின் பிறப்பிற்கும் இறப்பிற்கும் இடையில் அவை வாழ்வதற்கு உணவு இன்றியமையாததாக இருக்கிறது. எந்த உணவை எப்படிச் சாப்பிடுவது என்ற விஷயத்தில் மனிதன் மற்றவைகளைவிட மிகவும் வித்தியாசப்படுகிறான். தாவரம் அது இருக்கும் இடத்தில் என்னென்ன கிடைக்கிறதோ அதை எடுத்துக்கொண்டு, அது தவிர மற்றதற்கு வெளி உதவியைச் சார்ந்து இருக்கிறது. பிராணிகளோ அதன் இரையைத் தேடிப் பெறுகின்றன. அவற்றில் சில தன் இனத்தவரையே கொன்று தின்னவும் செய்கின்றன. சில பிராணிகள் அப்படிச் செய்யாது காய்கனிகளையே சாப்பிட்டாலும், அவை எதுவும் உணவைப் பக்குவப்படுத்தாமல், பறித்து அப்படியே பச்சையாகச் சாப்பிடுகின்றன.
மனிதர்களில் பலர் மாமிசம் உண்டாலும், அதைப் பக்குவப்படுத்தி உண்கின்றனர். ஆனாலும் அந்த உணவைவிட காய்கறி உணவே, மிருக உணர்வுகளைத் தூண்டாது, தூய்மையான சத்வ எண்ணங்களைக் கொடுக்கிறது என்பதை மனிதன் அறிந்திருக்கிறான். அந்தத் தூய எண்ணங்களே மேலும் பல நல்ல செயல்களுக்கும் ஆதாரமாய் இருக்கிறது என்பதையும், அதனால் அச்செயல்கள் மூலம் அவன் சார்ந்திருக்கும் சமூகத்திற்கும் அவன் மிக்க பயனுள்ளவனாய் ஆகிறான் என்பதையும் அறிந்திருக்கிறான். அப்படி இருப்பதனால் அவன் மனிதனின் பரிணாம வளர்ச்சிக்கு மேலும் உதவலாம் என்று அவனுக்குத் தெரிந்திருக்கிறது. இப்படியாக மனிதன் யோசிக்க முடிவதால், அவன் ஒருவனால் மட்டுமே பிறந்ததன் காரணம் இறப்பதற்கு மட்டும் அல்ல, அதற்கும் மேல் ஒன்று இருக்கலாம் என்று தீர்மானிக்க முடிகிறது.
அப்படித் தீர்மானித்த அவன், தான் காணும் உலகம் தன் இந்திரியங்களால் உணரப்பட்டது, அந்த இந்திரியங்கள் உடலுடன் சம்பந்தம் கொண்டவை. அந்த உடலுக்குத்தான் பிறப்பும் இறப்பும் இருக்கிறது, தான் அந்த உடல் மட்டும்தானா என்ற கேள்வியுடன் தனது ஆராய்ச்சியைத் தொடங்குகிறான். மற்றவர் காண்பதுதான் நம் உடல், அதைத் தவிர அவர்கள் காணாதபடி நமக்கு மனம், அறிவு என்றும் இருக்கின்றன என்று உணர்கிறான். அதாவது உலகத்தில் காணக் கூடியது, காண முடியாதது என்றும் இருக்கின்றன என்று தெளிந்த அவன், மனம் என்பது நமது எண்ணங்களின் தொகுப்பு, “நான்” என்ற அகந்தையே நமது எண்ணங்களால் வளரும் உணர்ச்சிகளின் தொகுப்பு என்று அறிகிறான். அவை தன் இந்திரியங்கள் மூலம் முன்பு பெறப்பட்டது என்றும், அவைகளின் தொகுப்பைத் தவிர தற்போது வரும் இந்திரியங்களின் தகவலுமே அவனது உலகப் பார்வைகளாக உருவாகின்றன என்று தெளிகிறான்.
இவை யாவும் நமது என்று சொன்னாலும், அவை எப்போதும் காணப்படுவதோ, உணரப்படுவதோ இல்லை. அவை யாவும் நம் விழிப்பு நிலையில் மட்டும்தான் இருக்கின்றன. ஆனாலும் விழித்திருப்பது தவிர நமக்கு ஆழ்ந்த உறக்கமும், கனவும் ஆகிய இருவேறு நிலைகள் உள்ளன. அவைகளில் நமது அனுபவம் வேறு மாதிரி இருக்கின்றன, ஆனாலும் நாம் நாமாக எப்போதும் இருக்கிறோம் என்றால் நமது உண்மை நிலை என்ன என்று கேட்டு அதை அறிய முயற்சிப்பவன் தான் முமுக்ஷூ. அந்த அறிவைப் பெற முயல்பவன் இந்த ஆன்ம போதம் சொல்லப்போவதைக் கேட்பதற்குத் தகுதியுள்ளவன் ஆகிறான். அந்த வேட்கை தீவிரமாக இருக்க வேண்டும் என்றால் அவன் எப்படிப்பட்டவனாக இருந்ததால் அந்த நிலைக்கு வந்திருப்பான் என்றும் சங்கரர் இங்கு கூறியிருக்கிறார்.
தன்னைத் தானே அறிவது என்பது ஒரு தீவிர முயற்சி என்பதால் அந்த நிலையை அடைவதற்கு ஒருவன் சில நிலைகளைத் தாண்டி வந்திருக்க வேண்டும். எப்போது ஒருவன் பிறப்பையும் இறப்பையும் தன் உடலோடு தொடர்புகொண்டு பார்க்கிறானோ, அப்போதே அவனுக்கு உடல் இருக்கிறது என்று உணரப்படுகின்ற விழிப்பு நிலையில்தான் உலகமும் தெரிகிறது என்ற உண்மையும் புரிகிறது. அத்தகைய உடல் இருப்பதே தெரியாத அவனது கனவு மற்றும் உறக்க நிலைகளிலும் அவனுக்குச் சில அனுபவங்கள் இருப்பதாலும், அந்தக் கனவைக் காணும் அவனுக்கே வேறோர் உடலும், அதனுடன் வேறோர் உலகமும் காணப்படுவதால் அவனுக்கு விழித்தவுடன் காணப்படும் உலகைப் பற்றிய சந்தேகம் வளர்கிறது.
எப்போதும் இருக்கும் உண்மையான நிலையைத் தேடுபவனுக்கு வந்து வந்து போகும் இந்த உலகங்கள் எப்படி உண்மையாய் இருக்கும் என்ற எண்ணம் தீவிரமாக வளரும்போது, அவனுக்கு உலக விஷயங்களில் ஆசைகள் இல்லாது போகின்றன. இதை “வீதராகிணாம்” என்ற சொல்லால் சங்கரர் குறிப்பிடுகிறார். ஆசை போகிறது என்றால் விரக்தி என்று எடுத்துக் கொள்ள வேண்டாம்; அவைகளின் மேல் இருக்கும் ஈர்ப்பு வெகுவாகக் குறைகிறது என்று கொள்ளலாம். தினப்படி வாழ்வின் தேவைக்கு மேல் அநாசியமான ஈடுபாடு தவிர்க்கப்படுகிறது என்று சொல்லலாம்.
எப்போது உலகியல் விஷயங்களில் ஈடுபாடு குறைகிறதோ, அப்போதே அவை கிடைக்காததால் தனக்கு முன்பு வந்த ஓர் ஏக்கமும், பிறருக்குக் கிடைத்துவிட்டதால் வந்த பொறாமை, கோபம் முதலானவைகளும் போய்விட்டன என்று நம்ப இடம் இருக்கிறது. இவை தவிர மனமும் உண்மை நிலை ஒன்றைத் தேடி ஒரு வைராக்கியத்தோடு இருப்பதால், இவை எல்லாம் ஒருமுகமாகச் சேர்ந்து மனத்தளவில் ஒரு அமைதியைக் கொடுத்திருக்கிறது. இதை “ஷாந்தானாம்” என்ற சொல்லால் குறிப்பிடுகிறார்.
உலக விஷயங்களிலும் முன்பு போல் நாட்டமில்லை, மனமும் அடங்கியிருக்கிறது என்னும்போது தனக்கும், பிறருக்கும் வேண்டிய வேலையை மட்டும் செய்வதால் நல்ல காரியங்கள் தவிர வேறு எதுவும் நடைபெற்றிருக்க முடியாது. தான், பிறர் என்ற பாகுபாடு இருந்தால்தானே தனக்கென ஒன்றும், பிறர்க்கு மற்றொன்றும் என்று செயல்கள் வளர்ந்து பாவம் செய்யத் தூண்டியிருக்கும். இப்போதுதான் அப்படி இல்லையே; அதனால் அவர்கள் பாவச் செயல்களை ஒழித்தவர்கள் ஆகிறார்கள். இந்த நிலையை “க்ஷீணபாபானாம்” என்ற சொல் குறிப்பிடுகிறது.
இந்த மாதிரி நிலைமையை அடைந்திருப்போர் பகவத் கீதை சொல்கிறபடி தன் சரீரத்தாலும், வாக்காலும், மனத்தாலும் ஒன்றுபட்டு தவம் செய்திருக்க வேண்டும். அப்படி அவை மூன்றும் நடந்திருக்கவில்லை என்றால் நான் என்ற அகந்தை ஓங்கியும், அதனால் இரட்டைகளான தான்-பிறர் என்ற பாகுபாடும், அதை ஒட்டிய பாவச் செயல்களும் நடந்துகொண்டிருக்கும்.
சுவரை வைத்துக்கொண்டுதான் சித்திரம் வரைய வேண்டும் என்பது போல், உலகின் நிலையற்ற தன்மையையும் அதனால் என்றும் உள்ள உண்மையையும் அறிவதற்கு உடலே முதல் காரணம் என்று மட்டும் அல்லாமல் கருவியாகவும் ஆகிறது. முதலில் உடல் அளவில் உலக விவகாரங்களில் ஈடுபட்டு பல அனுபவங்களையும் பெற்று, அப்புறமாக சில சந்தேகங்கள் வரவும் அதைப் பலரிடம் கேட்டும், பேசியும், படித்தும் தெளிந்தும் ஒரு நிலைக்கு வரும்போது, மேற்கொண்டு கேட்டவைகளில் மனதை ஒருமுகப்படுத்தி மேலே செல்வதற்கு என்று ஒன்றன்பின் ஒன்றாக நமது பயிற்சி தொடங்குவதற்கு உடலும், அதைச் சார்ந்த மனமும் கருவிகளாக உள்ளன.
நம்மை விடப் படித்த சான்றோர்கள், நல்வழி காட்டும் குருமார்கள், தினப்படி நாம் காணும் ஆசிரியர்கள், வேதம் ஓதும் அந்தணர்கள் என்று நம் வாழ்வில் இவர்கள் போல் வரும் பலப்பல பெரியோர்களிடம் நாம் காட்டும் மரியாதை, அடக்கம் என்பது தவிர உடலைக் கட்டுப்படுத்தும் சில வழிமுறைகளான தூய்மையாய் இருத்தல், விரதம் காத்தல், சாத்விக உணவருந்தல் என்பதனால் கொல்லாமை, புலனடக்கம் என்றிவ்வாறானவை எல்லாம் சரீரத் தவம் என்ற முதல் படியில் வருகிறது. மற்றவரைப் புண்படுத்தாமல் பேசுதல், உண்மையே பேசுதல், அனைவரும் மகிழும்படி பேசுவது தவிர நல்ல ஆன்மிகத் தேடலைத் தூண்டியும், வளர்க்கவும் உதவும் நூல்களைப் படித்தல் என்பவை எல்லாம் வாக் தவம் என்ற இரண்டாம் படியில் வருகின்றன. தன்னைச் சுற்றியுள்ள அனைத்து ஜீவராசிகளிடமும் அன்பாய் இருத்தல், அமைதியோடு இருந்து தன் வாழ்க்கை மூலம் அனைவருக்கும் வழி காட்டுதல், எதற்குத் தேவையோ அதை மட்டும் பேசி பொதுவாக மௌனம் காத்தல் என்றிவ்வாறான இதய சுத்தியுடன் இருப்பது மானச தவம் என்ற மனதளவில் கடைப்பிடிக்கப்படும் தவமாக அடுத்த படியில் வருகிறது.
இத்தகைய தவங்கள் செய்வதாலேயே ஒருவனுக்கு ஆன்மாவைப் பற்றிய அறிவு வளர்ந்துவிடாது. இவைகள் எல்லாம் ஆன்மாவைப் பற்றிய அறிவை வளரவிடாது தடுக்கும், நமது முந்தைய பாவச் செயல்களால் நாமே வளர்த்துவிட்டுள்ள, திரைகளை அகற்ற உதவும். இதனால் பாவச் செயல்கள் குறைந்து மனம் ஓர் அமைதி நிலைக்கு வந்து, அதனால் உலகச் செயல்களில் தேவைக்கு மேல் அதிகமான நாட்டம் நமக்கு இல்லாதபடி செய்து, பிறப்பு இறப்பு என்றால் என்ன என்று நம்மை முன்னே கூறியபடி சிந்திக்க வைக்கும். இத்தகைய தொடர் நிகழ்வுகளால் மட்டுமே ஆன்மாவைப் பற்றிய சிந்தனை பலப்படும்.
என்றும் உள்ள ஆன்மாவை உணர்வது என்பது வெறும் அறிவு பூர்வமானது என்றிருந்தால் இக்கட்டுரையின் தொடக்கத்தில் எடுத்துவைத்த வாதங்களைப் படித்ததுமே நாம் ஆன்மாவை உணர்ந்திருக்க வேண்டும். ஆனால் படிப்பது, சிந்திப்பது என்பதெல்லாமே நமது மனம், அறிவு இவைகளின் மூலம் நடப்பதாலும், என்றும் உள்ள ஆன்மாவை திரை போட்டு நாமே மறைத்து வைத்திருப்பதால் அத்திரையை அகற்ற முயற்சி செய்வதே இந்தச் சிந்தனையின் முதல் பயன் என்பதாலும், நாம் அறிவு கொண்டு ஆன்மாவை உணரமுடியாது என்பதை நினைவில் கொள்ளவேண்டும். நாம் ஆன்மாவைப் பற்றிய போதத்தின் முதல் படியில் இருக்கிறோம்.
(தொடரும்)
அன்பு ராமன் ஐயா: பணிவான வணக்கங்கள்.
தாங்களின் “அருணாசல அக்ஷர நாமாவளி” அனுபவங்கள் குறித்து படித்து சிலிர்த்தேன்.
இந்த நாமாவளியின் எழுத்து வடிவம் இத்தளத்தில் உங்கள் கட்டுரையின் 8-ஆம் பாகத்தின் கடைசியில் உள்ளது.
இதே நாமாவளியை ஒலி வடிவமாகவும் பதித்துள்ளீர்களா? வலைத்தளங்கள் எதிலாவது உள்ளதா? இல்லை விற்பனைக்கு உள்ளதா ?
நன்றி அய்யா.
வாசகர் மூர்த்தி அவர்களுக்கு வணக்கங்கள் பல. அருணாச்சல அக்ஷர நாமாவளி ஒலி வடிவில் இதுவரை பதிக்கப்படவில்லை. திருப்பதியில் பலமுறை ஒலிநாடா வழியே கேட்ட “ஸ்ரீ ஸ்ரீனிவாசா, ஸ்ரீ சைலவாசா, ஸ்ரீ வேங்கடேசம் மனஸாஸ் ஸ்வராமி” என்ற மெட்டில்தான் நாமாவளி எழுதப்பட்டது. நாங்கள் அப்படித்தான் பாடுவோம். தாங்களும் அப்படியே முயன்று பாருங்கள். மறுமொழிக்கு நன்றி.