அரசுப் பள்ளி என்பதே இன்று கெட்டவார்த்தையாக நடுத்தர வர்க்கத்திடம் மாறிவிட்டது. அரசு பள்ளி ஆசிரியர்களே தங்கள் குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்ப்பதில்லை. அரசு பள்ளி ஆசிரியர்களுடன் ஒப்பிட மிகக் குறைவான ஊதியமும் அதைவிடக் குறைவான தொழில் சூழல் சுதந்திரமும் கொண்ட தனியார் பள்ளிகளில் ஆசிரியர்களின் தொழில் திறமை மிக அதிகமானதாக உள்ளது. அரசு பள்ளி ஆசிரியர்களின் வாழ்க்கைத் தரமும் அரசு பள்ளிகளின் கல்வித் தரமும் எதிர்மறை விகிதமாக உறவு கொண்டுள்ளன. ஏன்?
இந்த யதார்த்த களத்தில் அமைக்கப்பட்டுள்ளது ‘சாட்டை’ திரைப்படத்தின் கதை. ஒரு ஆசிரியர், ஒரே ஒரு ஆசிரியர் மிகவும் பின் தங்கிய அரசு பள்ளி ஒன்றை சீர்செய்கிறார். மாவட்ட அளவிலேயே சிறந்த பள்ளியாக மாற்றுகிறார். இது தான் ’சாட்டை’யின் கதை.
வழக்கமான தமிழ் திரைக்கதைக்கான எல்லா சாத்தியங்களும் கொண்ட திரைக்களம். ஆசிரியர்-மாணவர் அசட்டு நகைச்சுவைகள், பதின்ம வயதின் தெய்வீக காதலுக்காக கிராமத்து மாணவனும் மாணவியும் ஆஸ்திரேலியாவில் டூயட், அரசு பள்ளியில் ஊழல் செய்யும் அனைவரையும் தரையில் கால் பாவாமல் பறந்து பறந்து கதாநாயகன் துவம்சம் செய்யும் காட்சி, கதாநாயக ஆசிரியரை பார்த்து உருகி ஒரு பதின்ம மாணவி கனவில் சுவிட்சர்லாந்தில் டூயட்., டூயட் முடிந்த பிறகு ஆசிரியர் அறிவுரை, ஆசிரியரும் ஆசிரியை ஒருத்தியுமாக மற்றொரு காதல் ட்ராக்… இப்படி தமிழ் திரை உலகின் எல்லா சாத்தியங்களும் ஜொலிக்கும் கதைக் களத்தில் அவற்றை எல்லாம் முற்றாக புறந்தள்ளி தனிப்பாதை ஒன்றை வகுத்திருக்கிறார் இயக்குனர் எம்.அன்பழகன். சங்கர் படங்களில் ஒன்றை கவனிக்கலாம். பிரச்சனைகள் உண்மையான யதார்த்தமான பிரச்சனைகளாக இருக்கும். ஆனால் தீர்வுகள் சூப்பர் ஹீரோயிஸ கனவு தீர்வுகளாக – ஏன் பாசிச வன்முறையை அடிப்படையாகக் கொண்ட தீர்வுகளாகக் கூட அமையும். நடுத்தர வர்க்கமும் படத்தைப் பார்த்து தன் பிரச்சனைகளை கனவுலகில் மறக்க – ஏதோ ஒரு அவதார புருஷனின் வருகையை எதிர்பார்க்கக் கற்றுக் கொள்ளும். இங்கு ‘சாட்டை’ இந்த பொதுவான தமிழ்ப் பட சட்டகத்திலிருந்து முழுமையாக மாறி நிற்கிறது.
அரசு பள்ளிகளில் உள்ள அத்தனை அவலங்களையும் அவற்றின் ஒட்டுமொத்த பரிமாணங்களுடன் இரக்கமில்லாமல் முன்வைக்கிறது சாட்டை. பள்ளி நோட்டீஸ் போர்டில் வட்டிக்கடன் வாங்கிய இதர ஆசிரியர்களுக்கு எப்போது தவணையைக் கட்ட வேண்டும் என எழுதிப் போடும் துணை தலைமையாசிரியர். காதுகுத்து விழாவுக்கு அரசு பள்ளி பெஞ்சுகள் செல்லும் நிலை. ஏதாவது நல்லது செய்ய வேண்டுமென நினைத்தாலும் அதை செய்ய வழியில்லாமல் பரிதவித்து நிற்கும் மௌனச் சிறுபான்மை எனும் சிறு வட்டம். செய்யும் பிழைக்கு சாதியை சர்வ சாதாரணமாகச் சொல்லித் திட்டும் அவலம். மாணவனின் சுயத்தை சிதைக்கும் தண்டனைகள். பதின்ம வயது மாணவர்களின் பிரச்சனைகள் குறித்த எவ்வித புரிந்துணர்தலும் இன்மை. அரசு பள்ளி மாணவர்களின் திறமை(யின்மை) குறித்த முன்முடிவுகள், … இவை அனைத்தின் ஒரு ஒட்டுமொத்த வடிவமாக திகழும் வில்லன் பாத்திரம் சிங்க பெருமாள். இவை அனைத்தையும் எதிர்த்து தனிமனிதனாக ‘அரசாங்க வாத்தியாக’ கேள்வி கேட்கும், போராடும் தயாளன் எனும் இளம் இயற்பியல் ஆசிரியர். ஹீரோயிசம் இல்லாமல் வேறென்னவாக இருக்கப் போகிறது கதை என்று கேட்கலாம் தான்.
தயாளனாக நடித்தவர் (சமுத்திரகனி) எவ்வித ஹீரோயிசமும் இல்லாத அடுத்த தெரு அரசு வாத்தியாரைப் போலவே தான் இருக்கிறார். அவருடைய பெரிய வலிமை அவருடைய மதிப்பீடுகள் மட்டுமே என காட்டப்படுவதுதான் இத்திரைப்படத்தின் மிகப் பெரிய தார்மிக வலிமை. நம் தமிழ்ச் சூழலில் அது தான் வர்த்தக ரீதியான பலவீனமும்.
தோப்புக் கரணம் போடுவதும் தீபாராதனை செய்வதும் மூளையை சமனப்படுத்தி அதன் செயல்திறமையை அதிகரிப்பது என தயாளன் சொல்கிறார். மாணவர்களைச் செய்ய சொல்கிறார். பள்ளி முழுவதும் முட்டங்கால் போடச் சொல்லி மாணவர்களை அவலப் படுத்தும் தண்டனைகளுக்கு பதிலாக தோப்புக் கரணத்தை மட்டுமே தண்டனையாக்க தலைமை ஆசிரியரிடம் சொல்கிறார். மூடப் பட்டிருக்கும் உடற்கல்வி அறையைத் திறக்கிறார். விளையாட்டுக்கான பொருட்களை மாணவர்களிடம் அளிக்கிறார். இங்கே தயாளன் சுந்தர ராமசாமியின் ‘நாடார் வாத்தியார்’ சிறுகதையை நினைவு படுத்துகிறார். மாணவர்களுக்கு மேலே நின்று போதிக்கும் ஒரு ஆசிரியராக தனித்து நிற்காமல் மாணவர்களின் எண்ணங்களை அவர்களின் யோசனைகளை, அவர்களின் ஏக்கங்களை அவர்களிடமிருந்து கற்று இணைந்து கற்பிக்கும் முறையைக் கொண்டு வருகிறார் தயாளன். உபநிடத கல்வியின் பண்பாட்டுத் தொடர்ச்சி? ஆனால் பிற பெரும்பாலான ஆசிரியர்களிடமிருந்து கடுமையான எதிர்ப்பு வருகிறது.
’அரசு பள்ளி போட்டியில் வென்று என்ன லாபம்? நாங்கள் ஜெயித்தால் அது எங்கள் கல்வி வர்த்தகத்தில் பணத்தை குவிக்கும்’ என அரசு பள்ளி தோற்றுப்போக பேரம் பேசும் இன்னொரு ஆசிரியரிடம் தயாளன் சொல்கிறார் – “பாடம் சொல்லிக் கொடுப்பதை விட முக்கியமான கடமை தனிமனித ஒழுக்கத்தையும் தேச பக்தியையும் மாணவர்களுக்குச் சொல்லி கொடுப்பது தான். அதை சொல்லிக் கொடுக்க வேண்டிய நீங்களே இப்படி இருந்தால்…” ஒவ்வொரு மாணவனுக்குள்ளும் இருக்கும் தனித்தன்மையை வெளியில் கொண்டு வந்து மலர வைக்கும் கடமை ஆசிரியர்களுக்கும், தன் குழந்தையிடம் நம்பிக்கை வைக்க வேண்டிய கடமை பெற்றோருக்கும் இருப்பதை கூறுகிறது திரைப்படம்.
அரசு பள்ளிகளில் படிக்கும் பெண் குழந்தைகள் சமுதாய மாற்றத்தின் முக்கிய வினை ஊக்கிகள். ஒரு சமுதாயத்தின் பண்பாட்டு அளவுகோலே அந்த சமுதாயத்தில் பெண்களின் விடுதலை எந்த அளவு முழுமை அடைந்திருக்கிறது என்பதுதான் என்பார் பாபாசாகேப் அம்பேத்கர். அவ்விதத்தில் பெண்களுக்கு கல்வி என்பது அடிப்படை தேவை. ஆனால் அரசு பள்ளிகளில் படிக்கும் பெண்களுக்கோ கல்வி என்பது ஒரு பெரும் luxury. ’படிச்சதெல்லாம் போதும்’ என எப்போதும் சொல்லும் சூழல் வீடுகளில் நிலவும் போது ஆசிரியரே பாலியல் சீண்டல்களில் ஈடுபட்டால்? மிகவும் முக்கியமான இப்பிரச்சனையை எவ்விதத்திலும் மலினப்படுத்திவிடாமல் அதன் கடுமையை உணர்த்துவதுடன் அதை எப்படி நல்ல ஆசிரியர்கள், நிர்வாகம், பெற்றோர்கள் என அனைவரும் இணைந்து எதிர்கொள்ளலாம் என சொல்கிறது ’சாட்டை’.
அடிபட்டு மரணத்தின் அருகே ஆசிரியர் இருக்கையில், மாணவர்களில் முரடனாகவும் அவன் சொந்த தந்தையாலேயே உபயோகமற்றவன் என ஒதுக்கப்பட்டவனாகவும் காட்டப்படும் பழனி, அந்த ஆசிரியர் தனது பௌதீக இருப்புக்கு அப்பால் ஒரு குருவாக, என்றென்றைக்குமான வழிகாட்டியாக, மதிப்பீடுகளின் உருவகமாக மாறுவதை உணர்கிறான். அரசுப் பள்ளி ஆசிரியர் ஒவ்வொருவருக்கும் தம் மாணவரின் வாழ்க்கையில் சாஸ்வதமான, என்றென்றும் அன்புடன் நினைக்கப்படும் வழிகாட்டும் குருவாக மாறும் சாத்தியம் ஆசிரியரல்லாத அனைவர் மனதிலும் ஏக்கத்தை ஏற்படுத்தும். எத்தகைய புனிதமான பணி ஆசிரியர்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது என்பதை ஒவ்வொரு நிகழ்ச்சி மூலமாகவும் சொல்கிறது இத்திரைப்படம். பதின்ம வயது ஒருதலைக் காதல் கனிந்து வரும் போது தன் ஆசிரியர் மாணவியின் பெற்றோருக்கு கொடுத்த வார்த்தையின் கண்ணியத்தைக் காப்பாற்ற முரட்டு மாணவன் பழனி அதைப் புறந்தள்ளி முன் நகர்கிறான். மிகச் சிறப்பான மதிப்பீடுகளை வர்த்தக சமரசமில்லாமல் சமுதாயத்தின் முன் வைக்கிறது திரைப்படம்.
ஒரு கலைப் படைப்பு என்ற அளவில் இந்த திரைப்படத்தின் பல குற்றம் குறைகளை பட்டியலிடுவது ஒரு சிலருக்கு சாத்தியமாக இருக்கலாம். ஆனால் சமுதாய அறத்தை முன்வைத்து எடுக்கப்பட்ட இந்தப் படைப்பில் அதை மட்டுமே பெரிதாகக் காட்டி பேசுவது அப்படி செய்பவரின் மேதாவித் தனத்தை மட்டுமே காட்டும், மேதைமையை அல்ல. மேலும் அப்படி செய்வது, அடிப்படை மானுட அற மதிப்பீடுகளை விடவும் தொழில் நுட்பத்திற்கு அதிக மதிப்பு தருவது போலாகும்.
ஒவ்வொரு தமிழனும் கட்டாயமாக தன் குடும்பத்துடன் இந்த திரைப்படத்தைச் சென்று பார்த்து இதை வெற்றியடைய செய்வது தேசிய சமுதாயக் கடமை. இத்திரைப்படம் தமிழில் வந்தது தமிழ் சமுதாயத்துக்கு நிச்சயமாக பெருமையளிக்கும் விஷயம். இத்திரைப்படம் இந்தியிலும் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டு தேசம் முழுவதும் வெளியிடப்பட வேண்டும்.
2013ம் ஆண்டு சுவாமி விவேகானந்தரின் 150 ஆவது பிறந்த ஆண்டு விழா நிறைவடைகிறது. இளைஞர்களின் எழுச்சியையும் முழுமையான மனிதத் துவம் அளிக்கும் கல்வியையும் பேசியவர் சுவாமி விவேகானந்தர். இந்த தருணத்தில் இத்திரைப்படத்தை எவ்வித வர்த்தக நோக்கமும் இல்லாமல் நம் சமுதாய நன்மைக்காகவே எடுத்தளித்த தயாரிப்பாளர் பிரபு சாலமன் உட்பட ஒவ்வொருவரையும் பெருமைப்படுத்த வேண்டியது தேசபக்த அமைப்புகளின், அனைத்து இந்து இயக்கங்களின் கடமையும் கூட.
படமும் அருமை, விமர்சனமும் அருமை. தம்பி இராமையா மட்டும் கொஞ்சம் underplay பண்ணிருக்கலாம் !
நல்ல படங்கள் உருவாகின்ற போது அதனைப் பாராட்ட வேண்டியதும், அதனைப் பிரபலம் செய்து கொடுக்க வேண்டியதும் :நல்ல சினிமாவைக் கண்டடைய வேண்டும்” என்ற விருப்புடைய ஊடகங்களின், ஊடகவியலாளர்களின் கடமையும், பொறுப்பும் ஆகும்.. அந்த வகையில், இந்தக் கட்டுரையை இங்கே இடுகை செய்தமைக்கு தமிழ் ஹிந்து ஊடகக் குழுமத்திற்கு நன்றி தெரிவிக்க விரும்புகின்றோம்..
மிகவும் நல்ல படம். அனைத்து அரசு பள்ளிகளின் ஆசிரியர்களுக்குக் கண்டிப்பாக காண்பிக்க வேண்டிய படம்.
அபத்தமான படம். உடன் பணி புரிபவரின் பாலின அத்துமீறல்களையும் மௌனமாக தாங்கும் ஆசிரியர் பறந்து பறந்தே அடித்திருக்கலாம். முறையற்ற முறையிலேயே தனியார் பள்ளி மாணவர்கள் பெற்றியை சாதிக்கிறார்கள்; அரசு பள்ளி மாணவர்கள் ஆசிரியர்களினாலேயே கல்வியில் ஆர்வமின்றி உள்ளார்கள். இது போன்ற அனுமானங்கள் அபத்தக் குவியல்கள். கில்லி பயின்று விளையாட்டில் வெற்றி காண்பது; அருமையான குத்துபாட்டு கலைப்போட்டி. தானே ஒரு முன்னால் ரவுடி என சகல கலா ஆசிரியர் கொடுக்கும் வாக்குமூலம்; போதுமடா சாமி. விவேகானந்தர் பாவம் விட்டுவிடுங்கள்.
எனது இயற்பியல் ஆசிரியர் திரு ரவீந்திரன் அவர்களை கண் முன் கொண்டு வந்தார் சமுத்ரக்கனி. ஆமாம் 1980 குளசெல் வி கே பி பள்ளியில் இப்படி உயர்ந்த சிந்தனைகளோடு இருந்தார் அவர். பலமுறை பலமுறை குடும்பத்தோடு பார்த்தேன்
இன்றுதான் இந்தப் படத்தை விஜய் டிவியில் காண முடிந்தது. வணிக ரீதியான சில சமரசங்கள் இருந்தாலும் படம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது.
\\ஒரு கலைப் படைப்பு என்ற அளவில் இந்த திரைப்படத்தின் பல குற்றம் குறைகளை பட்டியலிடுவது ஒரு சிலருக்கு சாத்தியமாக இருக்கலாம். ஆனால் சமுதாய அறத்தை முன்வைத்து எடுக்கப்பட்ட இந்தப் படைப்பில் அதை மட்டுமே பெரிதாகக் காட்டி பேசுவது அப்படி செய்பவரின் மேதாவித் தனத்தை மட்டுமே காட்டும், மேதைமையை அல்ல. மேலும் அப்படி செய்வது, அடிப்படை மானுட அற மதிப்பீடுகளை விடவும் தொழில் நுட்பத்திற்கு அதிக மதிப்பு தருவது போலாகும்.\\
ஒத்துப் போகிறேன்
அருமையான விமர்சனம்.சாட்டை தவறான ஆசிரியர்களுக்கு நிஜமான சாட்டை அடி தான்.
இத்திரைப்படம் தமிழில் வந்தது தமிழ் சமுதாயத்துக்கு நிச்சயமாக பெருமையளிக்கும் விஷயம்.
இத்திரைப்படத்தை எவ்வித வர்த்தக நோக்கமும் இல்லாமல் நம் சமுதாய நன்மைக்காகவே எடுத்தளித்த தயாரிப்பாளர் பிரபு சாலமன் உட்பட ஒவ்வொருவரையும் பெருமைப்படுத்த வேண்டியது நமது கடமையும் கூட.
தமிழ் ஹிந்து ஊடகக் குழுமத்திற்கு நன்றி