விதியே… விதியே…
என் செய நினைத்தாய் எம் மனித ஜாதியை
வீடு வந்திருச்சா…
இல்லை…
இப்போ…
இல்ல…
இப்போ…
இல்லை…
வீடு வந்திருச்சா…
வந்திருச்சு…
நொண்டியடித்து வந்த யாழினி கண்ணைத் திறந்து பார்க்கிறாள். கால் கொஞ்சம் பிசகியிருந்தால் கட்டத்தில் பட்டிருக்கும். நல்ல வேளையாக தப்பித்துவிட்டது. எச்சில் தேய்த்த சில்லைக் கட்டத்துக்கு அருகில் வீசிவிட்டு நொண்டியடித்தபடியே அதை மிதிக்க முயற்சி செய்கிறாள். சில்லில் அவள் காலை ஊன்றும் நேரம் பார்த்து எங்கிருந்தோ வந்த ஷெல், மிகச் சரியாக சில்லின் மேல் விழுந்து வெடித்துச் சிதறுகிறது. யாழினி தூக்கி எறியப்படுகிறாள். தனியாக தெறித்து விழுந்த கால் விலுக் விலுக் என்று துடிக்கிறது. அந்த ஒற்றைக் காலில் இருந்த கொலுசும் ‘ஜல் ஜல்’ எனத் துடித்து அடங்குகிறது. விளையாட்டுக்கு நொண்டியடித்த அவள் நிரந்தர நொண்டியானாள். ஊனமுற்ற காலுடன் நடந்து கொண்டிருந்தவளின் இன்னொரு காலை நோக்கி இன்னொரு ஷெல் வானில் இருந்து சீறிப் பாய்ந்து வருகிறது.
யாழினி ‘வீல்’ என்ற அலறலுடன் பதறியடித்து எழுகிறாள். சுற்றுமுற்றும் மிரட்சியுடன் பார்க்கிறாள். எங்கும் இருள் சூழ்ந்து கிடக்கிறது. பயத்தில் உறைந்தபடியே ஒற்றைக் காலைத் தரையில் ஊன்றுகிறாள். பிணம்போல் குளிர்ந்து கிடக்கிறது தரை. கட்டிலுக்கு அருகில் இருந்த ஊன்றுகோல், காலை இடறி விடுகிறது.
அந்த சத்தத்தைக் கேட்டு ஓடி வருகிறார் ஆயா. யாழினி ஓடிச் சென்று அவரை அணைத்துக் கொள்கிறாள்.
ஆயா : என்னம்மா…
யாழினி மிரட்சியுடன் ஆயாவைப் பார்க்கிறாள்.
ஆயா : மறுபடியும் அதே கனவா…
ஆயாவின் உடம்புக்குள் ஒடுங்கியபடியே ஆமாம் என்று தலையை அசைத்துக் காட்டுகிறாள் யாழினி.
ஆயா : இங்க ஷெல் எல்லாம் வராதும்மா… இங்க உனக்கு எந்த பிரச்னையும் வராது. நிம்மதியா தூங்கு.
யாழினியை இடுப்பில் தூக்கி வைத்துக்கொண்டு, வெளியே இருண்டு கிடக்கும் வானத்தில் தென்படும் நட்சத்திரங்களை ஜன்னல் வழியாகக் காட்டி ஆறுதல் சொல்கிறாள்.
யாழினி (நிமிர்ந்து நட்சத்திரங்களைப் பார்க்காமல் இருளைப் பார்த்தபடியே கேட்கிறது) : எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கணும்..?
ஆயா குழந்தையை ஆறுதலாகத் தடவிக் கொடுக்கிறார்.
ஆயா : அப்படியில்லம்மா. உனக்கு மட்டும் இப்படி நடந்ததா கவலைப்படாத. வாழ்க்கைன்னா இதெல்லாம் சகஜம்தான். நீ சின்ன பொண்ணு. போகப் போக எல்லாம் புரிஞ்சுப்ப. பேசாம படுத்துத் தூங்கு.
யாழினி : நான் என்ன தப்பு பண்ணினேன்..? எனக்கு மட்டும் ஏன் இப்படி நடந்துச்சு?
ஆயா (பெருமூச்சு விட்டபடியே) : மனசைப் போட்டு அலட்டிக்காம தூங்குடா செல்லம். எல்லாம் சரியாகிடும்.
சொல்லியபடியே ஆயா அவளைக் கட்டிலில் படுக்க வைத்து கம்பளியால் போர்த்திவிடுகிறார்.
யாழினி (போர்வையை எடுத்து வீசியபடியே) : நான் தூங்கமாட்டேன். என் பிரச்னைக்கு வழி சொல்லிட்டுப் போ.
ஆயா : சரி… சொல்றேன். ஆனா எனக்கு நீ ஒரே ஒரு விஷயம் செஞ்சு தரணும்.
யாழினி : ஒரு விஷயம் என்ன… நூறு விஷயம் கூடச் செய்யறேன். இந்தக் கனவு நின்னாப் போதும்.
ஆயா : சரி. நீ போயி போரினால பாதிக்கப்படாதவங்க வீட்ல இருந்து ஒரு குவளை தண்ணி வாங்கிட்டு வா. அதை வெச்சு உன்னைக் குணப்படுத்தறேன்.
யாழினி : அவ்வளவுதானா… வெறும் ஒரு குவளை தண்ணி வாங்கிட்டு வந்தா போதுமா?
ஆயா : ஆமா…
யாழினி : அதுக்கு அப்பறம் விளையாடும்போது மட்டும் நான் நொண்டி அடிச்சா போதும் இல்லையா?
ஆயா : ஆமாம்.
யாழினி : அப்படின்னா சரி. காலைல எழுந்ததுமே கண்ணுல தட்டுப்படற மொதல் வீட்டுல இருந்து வாங்கிட்டு வந்துடறேன்.
யாழினி ஆயாவின் தோளில் தலை சாய்த்துக் கொள்கிறது. ஆயா தட்டிக் கொடுத்தபடியே யாழினியைத் தூங்க வைக்கிறார்.
*****
மறுநாள் காலையில் சூரியன் பயந்தபடியே உதிக்கிறது. அறைக்குள் முதல் சூரிய ஒளிக்கதிர் நுழைந்ததும் யாழினி தாங்கு கட்டையை எடுத்துக்கொண்டு புறப்படுகிறது.
தெரு வெறிச்சோடிக் கிடக்கிறது. இரு மருங்கும் வளர்ந்திருக்கும் மரங்களின் இலைகள் முடிவற்று வீசும் குளிர் காற்றில் உறைந்ததுபோல் அசையாமல் இருக்கின்றன. முதலில் தென்படும் ஒரு வீட்டின் முன்னால் யாழினி சென்று நிற்கிறாள்.
யாழினி : அம்மா… அம்மா…
வீட்டுக்குள்ளிருந்து நடுத்தர வயதிலான ஒரு பெண் வேகமாக ஓடிவருகிறார். யாரையோ எதிர்பார்த்து ஓடி வந்தவர் அவரைக் காணாமல் முகம் வாடுகிறார். வாசலில் ஒரு ஊனமுற்ற ஒரு குழந்தை நிற்பதைப் பார்க்கிறார்.
பெண் : நீ தான் கூப்பிட்டியாம்மா…
யாழினி : ஆமாம்.
பெண் : காணாமப் போன என் குழந்தையோட குரல் மாதிரியே இருந்துச்சு. அதான்… (தன்னைத்தானே சிறிது தேற்றிக்கொள்கிறார்) அது சரி… உனக்கு என்னம்மா வேணும்.
யாழினி : ஒரு குவளை தண்ணி வேணும்மா…
பெண் : இதோ… கொண்டு வர்றேன்… நீ மொதல்ல வீட்டுக்குள்ள வா.
யாழினி தாங்கு கட்டையை ஊன்றியபடியே உள்ளே செல்கிறாள்.
பெண் : காபித்தண்ணி சாப்பிடறியாம்மா…
யாழினி : வேண்டாம்… வெறும் தண்ணி போதும். அப்பறம், உங்ககிட்ட ஒரு விஷயம் கேட்கணும். உங்க வீட்டுல போரினால யாரும் பாதிக்கப்படலை இல்லையா?
நீர் எடுக்க உள்ளே போக முயன்ற அந்தப் பெண் சட்டென்று அதிர்ந்து நிற்கிறார். சிறிது நேரம் அப்படியே நிற்பவர் மெதுவாகத் திரும்புகிறார்.
பெண் : என்ன கேட்டே? (இதழில் வேதனை கலந்த சிரிப்பு வெளிப்படுகிறது. சூன்யத்தைச் சிறிது நேரம் வெறித்துப் பார்க்கிறார். கண்ணீர் மெல்லிய கோடாக வழிகிறது. பொங்கி வரும் அழுகையை மென்று முழுங்கிக் கொள்கிறார். எதுவும் பேசாமல் உள்ளே செல்பவர் ஒரு சக்கர நாற்காலியைத் தள்ளிக் கொண்டு வருகிறார். அதில் இரண்டு காலும் துண்டாக்கப்பட்ட குழந்தை ஒன்று அமர்ந்திருக்கிறது) பாப்பா, உன் கதையை அக்கா கிட்ட சொல்லு என்கிறார் அந்தப் பெண்.
ஊனமாகாத கைகளையும் அடிபடாத தலையையும் ஆட்டியபடியே குட்டிப் பாப்பா கதை சொல்ல ஆரம்பிக்கிறது.
குட்டிப் பாப்பா : நாங்க ஒரு தோட்டத்துல வண்ணத்துப் பூச்சியைப் பிடிச்சு விளையாடிட்டிருந்தோம். வண்ணத்துப் பூச்சி தெரியுமா. நீ பாத்திருக்கியா… பூவுக்கெல்லாம் ரெக்கை முளைச்ச மாதிரி இருக்கும் (கைகளை ரெக்கைபோல் விரித்துக் காட்டுகிறது). கலர் கலரா இருக்கும். அதை ஒவ்வொண்ணா பிடிச்சி ஆளாளுக்கு சட்டையில ஒட்டி வெச்சுப்போம் (தன் சட்டையில் கைகளால் ஒட்டிக் காட்டுகிறது). அப்பறம் அதைப் பறக்க விட்டுருவோம். ரெக்கைகளோட கலரை சட்டைபூரா ஒட்ட வெச்சிட்டு நாங்களும் பறப்போம் (சக்கர நாற்காலியில் இருந்தபடியே பறந்து காட்டுகிறது).
அப்படி விளையாடிக்கிட்டிருந்தப்ப ஊர் எல்லைல புதுசா நட்ட ஒரு கம்பத்துல கொடி ஏத்த ஒருத்தர் வெளியூர்ல இருந்து வந்தாரு. கார்ல அவர் வந்து இறங்கினதும் ஊர்ல இருந்து பெரியவங்க எல்லாரும் அவரை வாழ்த்தி கோஷம் போட்டாங்க. அந்தப் பெரிய மனுஷருக்கு பொன்னாடை போத்தி, மாலை போடறதுக்கு விளையாடிக்கிடிருந்த குழந்தைகள்ல ஒருத்தர வரச் சொன்னாங்க. நாங்க விளையாடிட்டிருந்த மைதானம் கொஞ்சம் தள்ளி இருந்தது. ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு வழில ஓடினோம். நான் ரோட்டு வழியா ஓடினேன்.
அப்போ எனக்கு முன்னால ஒருத்தர் சைக்கிள்ள வேகமா போனாரு. நான்தான் ரொம்ப ஃபாஸ்ட் ஆச்சே. சைக்கிள் பின்னால வேகமா ஓடினேன். நான் பின்னால ஓடி வர்றதைப் பார்த்ததும் பதறிப் போயிட்டாரு. பின்னால வராதே அப்படின்னு கையால விரட்டினாரு. நான் அதைக் கேக்கலை. அவர் திரும்பித் திரும்பிப் பார்த்து என்னை ரொம்பக் கோபமா விரட்டினாரு. நைஸா சைக்கிளோட இன்னொரு பக்கத்துக்கு போயிட்டேன் (நாற்காலியில் பதுங்கியபடியே நடித்துக் காட்டுகிறது).
அவர் திரும்பிப் பார்த்தப்போ என்னைக் காணலைன்னதும் சைக்கிளை கொடிக்கம்பத்துக்கு பக்கத்துல கூடியிருக்கிறவங் களை நோக்கி ஓட்டினாரு. அவங்க இவர் வேகமா வர்றதைப் பாத்ததும் பதறிப் போய் ஏய் ஏய்ன்னு கத்தினாங்க. அதுக்குள்ள சைக்கிள் அவங்க பக்கத்துல போயிடிச்சு. நான் சட்டுன்னு சைக்கிள் கேரியர் பக்கத்துல இருந்த பெட்டியை இழுத்துப் பிடிச்சேன். சைக்கிள் ஓட்டிட்டு வந்தவர் திரும்பி என்னைப் பார்த்ததும் அதிர்ச்சி ஆயிட்டாரு. அவர் கண்ணுல ஏதோ ஒரு சோகம் சட்டுன்னு வந்துச்சு. அப்படியே ஸ்தம்பிச்சுப் போயிட்டாரு.
பெடலை மிதிக்கறதை அவரு நிறுத்திட்டாரு. ஆனா சைக்கிள் தானாவே ஓடிச்சுது. நானும் கேரியர் பெட்டியை பிடிச்சுக்கிட்டே ஓடினேன். சைக்கில் நேரா கூட்டத்துக்குள்ள போய் மோதிச்சு. அடுத்த நிமிஷமே டமால்னு ஒரு வெடி சத்தம் கேட்டுச்சு. சைக்கிள்காரரு, நான், கொடி ஏத்த வந்த தலைவர், கூடி நின்னவங்க எல்லாரும் வானத்துல பறந்தோம் (குழந்தை ஸ்லோமோஷனில் பறந்து காட்டுகிறது).
என் சட்டைல இருந்த வண்ணத்துபூச்சிங்களோட எல்லா நிறமும் அழிஞ்சிபோய் ஒரே சிவப்பு நிறமா ஆகிப் போச்சு. அப்படியே செத்துப் போய் இங்க வந்துட்டேன்…
என்று சொல்லி அந்த பாப்பா சிரிக்கிறது.
அந்த வீட்டுப் பெண் உள்ளே போய் ஒரு குவளையில் நீர் கொண்டு வருகிறார். வந்து பார்க்கையில் நீர் கேட்ட குழந்தையைக் காணவில்லை. என்ன நடந்தது என்று புரியாமல் குழப்பத்துடன் நிற்கிறார்.
***
தாங்கு கட்டையை ஊன்றியபடியே யாழினி அடுத்த வீட்டுக்குப் போகிறாள். நாலைந்து குழந்தைகள் வாசலில் விளையாடிக் கொண்டிருக்கின்றன. யாழினியைப் பார்த்ததும் விளையாட்டு நிற்கிறது.
யாழினி நேராக அவர்களிடம் போகிறது.
விளையாடும் குழந்தைகளில் ஒன்று : நீயும் விளையாட வர்றியா…
யாழினி : இல்லை. நான் விளையாட வரல்லை. எனக்கு நீங்க ஒரு சின்ன உதவி செய்யணும். உங்க வீட்டுல போரினால பாதிக்கப்பட்டவங்க யாராவது இருக்காங்களா?
விளையாடிக் கொண்டிருக்கும் குழந்தைகள் அனைத்துமே விழுந்து விழுந்து சிரிக்கின்றன.
அவர்களில் ஒரு சிறுவன் : யாராவதா? நாங்க எல்லாருமே கொத்து கொத்தா செத்தவங்கதான்.
யாழினி அதைக் கேட்டதும் அதிர்ச்சி அடைகிறாள்.
யாழினி : எல்லாருமேவா..? எப்படி?
சிறுவன் (தொடர்கிறான்) : நானு, இர்ஃபான், சலீம் எல்லாரும் தெருவுல பச்சைக் குதிரை விளையாடிட்டிருந்தோம். எது செஞ்சாலுமே நாங்க எல்லாரும் சேர்ந்துதான் செய்வோம். காலைல ஸ்கூலுக்குப் போகும்போது சேந்துதான் போவோம். சாயந்திரம் சேந்துதான் திரும்பி வருவோம். விளையாடறது, தொழுகைக்குப் போறதுன்னு எல்லாத்துக்குமே சேர்ந்துதான் போவோம். வருவோம். அதனாலதானோ என்னவோ எங்களைச் சேர்ந்தே கொன்னுட்டாங்க.
நாங்க தெருவில விளையாடிக்கிட்டிருந்தபோது மசூதில இருந்து தொழுகைக்கான அழைப்பு காத்துல அப்படியே அலை அலையா மிதந்து வந்துச்சு. அல்லா எங்களைக் கூப்பிடறாருன்னு சந்தோஷமா புறப்பட்டோம். ஆனா, அது சாத்தானோட அழைப்புன்னு அப்போ தெரியலை. குல்லாவை எடுக்க அவங்க அவங்க வீட்டுக்கு ஓடினோம். அம்மீ ஜான் ஆட்டுக்குட்டியை வீட்டுத் திண்ணைல கட்டிப் போட்டுக்கிட்டிருந்தாங்க. இன்னிக்கும் நீ என் கூட தொழுகைக்கு வரமாட்டியான்னு கேட்டேன்.
நான்தான் நாளைக்கு கட்டாயம் வருவேன்னு சொல்லியிருக்கேனேன்னு சொல்லிச்சு.
இதையேதான என்னிக்குக் கேட்டாலும் சொல்ற..? சரி உனக்கும் சேத்து நானே தொழுதுட்டு வர்றேன்-னு சொல்லிட்டு தொப்பியை எடுத்து மாட்டிக்கொண்டு ஓடினேன். வீட்டுக்கு முன் பக்க மரத்தில் இருந்து கொழைகளை ஒடித்து குட்டி ஆடுக்கு எட்டும் படியாகத் தூணில் கட்டிவிட்டுக் கொண்டிருந்த அம்மீஜான் சிரித்தபடியே விடை கொடுத்தார். நான் சிறிது தூரம் ஓடியதும் தெருவிளக்குகளும் வீட்டு விளக்குகளும் சட்டென்று அணைந்தன. அதிர்ந்துபோய், திரும்பிப் பார்த்தேன். அம்மீ ஜான் என்னைத் திரும்பி வந்துவிடும்படி அழைத்தார். அம்மீஜான் பக்கம் போனேன். சிறிது நேரம் ஏதோ யோசித்த அம்மீஜான் குனிந்து நெற்றியில் முத்தமிட்டார். போயிட்டுவா அப்படின்னார். நான் அம்மீஜானுக்கு முத்தம்கொடுத்துவிட்டு அல்லாவை நோக்கி ஓடினேன். அதுதான் நான் அம்மீஜானுக்குக் கொடுத்த கடைசி முத்தம்.
மெழுகுவர்த்தியின் மங்கலான, பொன்னிற ஒளியில் பிரார்த்தனை அறை தகதகத்துக் கொண்டிருந்தது. காலைக் கழுவிவிட்டு நான், இர்ஃபான், சலீம் எல்லாரும் முதல் வரிசையில் இடம்பிடித்து முழங்காலிட்டு அமர்ந்தோம். நெத்தில தழும்பு வரணுங்கறதுக்காக சின்ன கரித் துண்டுனால எங்களுக்கு முன்னால வழக்கம் போலத் தடவிக்கிட்டோம். ஆனா, அதுக்கு அவசியமே இல்லாமப் போச்சு. வெண்சுவரில் அல்லாவை நினைச்சு இரண்டு முறை தொழுதோம். மூன்றாவது முறை தரையில் மண்டியிட்டுவிட்டு எழுந்தபோது கண் முன் தெரிந்த காட்சி எங்களை அதிர்ச்சியில் உறைய வைத்தது. வெண் சுவரில் ஏகே-47 தாங்கியவர்களின் கரிய நிழல்கள்! என்ன ஏது என்று யோசிப்பதற்குள் இயந்திரத் துப்பாக்கிகள் இடை இடைவிடாமல் முழங்கத் தொடங்கின. வெண் சுவர் ரத்தத்தால் நிறம் மாறியது.
*****
யாழினி இன்னொரு வீட்டுக்குப் போகிறாள். அங்கு மர ஊஞ்சலில் தன்னந்தனியாக ஆடிக் கொண்டிருக்கும் ஒரு சிறுமி, செல்ல மரப்பாச்சி பொம்மையிடம் தன் கதையைச் சொல்லிக் கொண்டிருக்கிறது.
சிறுமி : போர் எங்களுக்கு போதும் போதும் ஆயிருந்தது. ஷெல்லடியில் இறப்பதில் ஆரம்பித்து, கண்ணிவெடி, கடத்தப்பட்டுக் காணாமல் போவது, கற்பழிக்கப்பட்டு கொலை, தற்கொலைத் தாக்குதல் என வீட்டுக்கு ஒருத்தரை அல்ல… எத்தனையோ பேரைக் காவு கொடுத்திருந்தோம். தியாகத்தின் கடைசி வழியான சயனைட் குப்பி கடித்துத்தான் யாரும் இறக்கவில்லை. பாக்கி எல்லா வழிகளிலும் போர் விருட்சத்தின் வேருக்கு நீர் வார்த்துவிட்டிருந்தோம். எஞ்சியிருந்தவர்களுக்கு எங்காவது போய் உயிர் வாழ்ந்தால் போதும் என்று தோன்றி, இருந்த சொத்து பத்தையெல்லாம் விற்று, கொடுக்க வேண்டியவர்களுக்குக் கொடுக்க வேண்டியதைக் கொடுத்து, விசா வாங்கி ஆஸ்திரேலியா வந்து சேர்ந்துவிட்டோம்.
அங்கு வந்து சேரும்போது நான் அம்மா வயிற்றில்தான் இருந்தேன்.
ஆயிற்று… ஆஸ்திரேலியா வந்து சேர்ந்து சில ஆண்டுகள் கழிந்துவிட்டன. அண்ணன் அக்காக்கள் விமானங்களைக் கண்டு பயப்படுவது குறைந்துவிட்டது. காலிங் பெல் அடித்தால் ஏற்படும் பயம் அம்மாவுக்கும் குறைந்துவிட்டது. இருளின் அமைதியைக் கிழித்தபடி இறங்கும் ஷெல்களின் சத்தம், ரத்தத்தின் இளஞ்சூடு, வெடி மருந்துகளின் மணம்… எல்லாவற்றையும் கொடுங்கனவாக விட்டுவிட்டு தூர தேசத்துக்கு வந்துவிட்டோம். ஆனால், போரின் கரங்கள் வெகு நீளமானவை என்பது எங்களுக்குத் தெரிந்திருக்கவில்லை.
செல்வரத்தினம் மாமா அன்று வந்திருந்தார். எவ்வளவு கூப்பிட்டும் அவர் மட்டும் போர்க்களத்தை விட்டு வரமாட்டேன் என்று சொல்லிவிட்டார். கழுத்தில் கிடக்கும் சயனைட் குப்பியை வாஞ்சையுடன் தடவிக் கொடுத்தபடியே, ‘தியாகத்தின் கடைசிக் கதவு எனக்காகத் திறந்திருக்கிறது’ என்று அடிக்கடிச் சொல்வார்.
ஹாலில் டிவி ஓடிக் கொண்டிருந்தது. நான் பிறந்து மூன்று வருடம் ஆகியிருந்தும் என்னை அப்போதுதான் முதல் முறையாகப் பார்க்கிறார். மடியில் எடுத்துப் போட்டுக் கொஞ்சிக் கொண்டிருந்தார். என் பால் பற்கள் வலுப் பெறத் தொடங்கியிருந்தன.
அம்மா அடுக்களையில் இருந்தபடியே பேசிக் கொண்டிருக்க, ஹாலில் இருந்த மாமா, குக்கர் சத்தத்தில் பேசுவதைக் கேட்க காதை அந்தப் பக்கம் திருப்பி கூர்ந்து கவனித்தபடியே பேசிக் கொண்டிருந்தார்.
மின்சாரம் நின்று போனது. மாமா சட்டை மேல் பட்டனை கழட்டி விட்டுக்கொண்டார். அம்மா, விட்டு வந்த உறவுகள் பற்றியும் நட்டு வைத்த மரங்கள் பற்றியும் கேட்டுக் கொண்டிருந்தார். மடியில் விளையாடிக் கொண்டிருந்த என் கண்ணில், கழுத்தில் கட்டியிருந்த சயனைட் குப்பி பட்டது. பற்கள் துறுதுறுத்தன. எம்பி எம்பிப் பிடிக்க முயன்றேன். முடியவில்லை.
பேச்சு வாக்கில் மாமா என்னைத் தோளில் போட்டுக் கொண்டார்.
போர்க்களத்துக்கும் அமைதிப் பூங்காவுக்கும் இடையில் பல கடல்கள்… பல மலைகள்… மாமா தோளில் தூக்கிப் போட்டதும் என் பிஞ்சுக் கால்களால் அவருடைய விலாவில் உந்தி அந்தக் கடல்களை, மலைகளைத் தாண்டினேன். அமைதியான தேசத்தில் பிறப்புக்கும் இறப்புக்கும் இடையில் சராசரியாக 60-70 வருட இடைவெளி இருக்கும். நான் அந்த இடைவெளியை ஒரே நொடியில் கடந்தேன்.
எங்கள் குடும்பத்தின் தியாகம் முழுமை அடைந்தது.
அம்மா கதறி விழுந்து அழுதார். நான் பிறந்ததும் மாமாவுக்கு சேதி சொல்லி அனுப்பியிருந்தார்கள். சக்கரம் பதித்த ஊஞ்சலை வாங்கி அனுப்பியிருந்தார். நான் தவழ ஆரம்பித்ததும் நடை வண்டி வாங்கி அனுப்பியிருந்தார். நடக்க ஆரம்பித்ததும் குட்டி சைக்கிள் வாங்கி அனுப்பியிருந்தார். எனக்கான எல்லா முதல் வாகனமும் நான்தான் வாங்கித் தருவேன் என்று ஒரு நாள் போனில் சொன்னார். நடுக்கூடத்தில் வாயில் நுரை தள்ள கிடத்தப்பட்டிருந்த என்னைக் காட்டி அம்மா, மாமாவிடம் சொன்னார்கள், போடா போ… இவனோட எல்லா வண்டியையும் நீதான் வாங்கித் தருவேன்னு சொன்னியே… போ இவனுக்கான சவ அடக்க வண்டியையும் நீயே வாங்கிட்டு வா என்று சொல்லி அழுதார்கள். விளையாட்டு அறையை விட்டு நான் வெளியே வந்து எல்லாவற்றையும் இழுத்துப் போட்டுவிடுவேன் என்று பயந்து அந்த அறையின் நிலைப்படியில் என் தோளுயரத்துக்கு பலகை அடித்து மூடியிருந்தார்கள். விளையாட்டு அறையை விட்டு வெளிய வராம தடுக்க முடிஞ்ச எங்களுக்கு இந்த உலகத்தை விட்டுப் போகும்போது தடுக்க முடியாம போச்சே… ன்னு சொல்லி அம்மா அழுதாங்க.
அதைவிட இன்னும் வேதனை என்னன்னா, நான் அம்மா சாப்பிடும்போதெல்லாம் உச்சா போய் வெச்சிடுவேன் இல்லைன்னா ஆய் போயிடுவேன். அம்மாவால ஒரு நாள் கூட நிம்மதியா ஒரு வாய் கூடச் சாப்பிட முடியாம இருந்தது. என்னைப் பொதைச்ச பிறகு நீத்தார் சடங்குல நடத்தப்பட்ட விருந்தின்போது அப்பா நடுவீட்டில இலையைப் போட்டு, ஒரு வாய் ஒழுங்கா சாப்பிட விடாது இந்த குட்டிப் பிசாசுன்னு திட்டிட்டே இருந்தியே வா வந்து சாப்பிடு… இன்னிக்கு உன்னை யாரும் தடுக்க மாட்டாங்கன்னு அப்பா சமைச்சு வெச்ச அவ்வளவுத்தையும் அந்த இலைல கொட்டி வெச்சாரு. வயத்துல வந்த நாள்ல இருந்து என்னை ஒரு நாள் கூட ஒழுங்கா தூங்கவிட்டதில்லை. இன்னிக்கு நான் நிம்மதியா தூங்கப்போறேன்னு சொல்லி அம்மா கதவை மூடிக்கிட்டு தூங்க ஆரம்பிச்சாங்க… அதுக்கப்பறம் எந்திரிக்கவே இல்லை.
*****
யாழினி தாங்கு கட்டையை ஊன்றியபடியே தெருவில் வேகமாக நடக்கிறாள். பின்னணியில் ஒரு குரல் நிதானமாகக் கேட்கிறது. யாழினி எந்தப் பக்கம் ஓடினாலும் அந்தக் குரல் விடாமல் கேட்கிறது.
கொலை ஒரு கலையாகிவிட்டிருந்தது எங்கள் காலகட்டத்தில்
(அது எதைக் குறிப்பதாக இருந்தாலும்
எங்கள் மன நல நிபுணர்கள்
மனதின் சமநிலையைத் தக்க வைக்க உதவி புரிந்திருக்கிறார்கள்)
ஏதோ அரிதாக நடக்கும் சம்பவம் போல்
இது ஒன்றும் அவ்வளவு தெளிவாக
மனதில் பதிந்து கிடக்க எந்தக் காரணமும் இல்லைதான்
ஒன்றைத் தெளிவாகச் சொல்லிவிடுகிறேன்
நான் உணர்ச்சி வசப்படுபவன் அல்ல.
ஒருபோதும் மனம் தளர்ந்துபோனது கிடையாது
உணர்ச்சிகளை வெளியில் காட்ட மிகவும் கூச்சப்படுவேன்
உங்களைப் போலவே,
அன்றாடக் கடமைகளை
அழகாகப் பார்த்துக்கொண்டு செல்வேன்
மிகவும் விசுவாசமானவன்.
‘மறந்துவிடு’ என்று அரசு சொல்லும்போது
அப்படியே செய்துவிடுவேன்.
மறந்துவிடும் என் திறமை என்றுமே
சந்தேகிக்கப்பட்டது கிடையாது
அது பற்றி நான் எந்தப் புகார் தெரிவித்ததும் கிடையாது
இருந்தும்
அந்தக் கும்பல் அந்த காரைத் தடுத்தி நிறுத்தியவிதம்
என் நினைவில் இப்போதும் இருக்கிறது.
காரில் நான்கு பேர் இருந்தனர்.
ஒரு பையன், ஒரு சிறுமி,
ஒரு ஆண், ஒரு பெண்
குழந்தைகளின் பெற்றோர் என்று நினைக்கிறேன்
(நான்கோ ஐந்தோ பேர்தான் இருந்ததுபோல் தெரிந்தது)
பிற கார்களைத் தடுத்து நிறுத்தியது போலத்தான்
இந்த காரையும் தடுத்து நிறுத்தினார்கள்.
எந்த வித்தியாசமும் அதில் இல்லை.
சில வழக்கமான கேள்விகள் கேட்கப்பட்டன.
தவறுதலாக எதுவும் நடந்துவிடக்கூடாது அல்லவா..?
அதன் பிறகு, காரியத்தில் இறங்கினார்கள்.
வழக்கம் போலவே எல்லாமும்
கதவை மூடுதல்
பெட்ரோல் ஊற்றுதல்,
தப்பித்துவிட முடியாதபடி சுற்றி நின்று கொள்ளுதல்
எல்லாமே வழக்கம் போல்
அப்போது யாரோ
எதுவோ வித்தியாசமாக உணர்ந்தார்கள் போலிருக்கிறது
இடதுபக்க இரண்டு கதவுகளையும் திறந்தார்கள்.
இரண்டு குழந்தைகளையும்
பெற்றோரிடமிருந்து வெளியே இழுத்தார்கள்.
குழந்தைகள் கதறி அழுதன
குழந்தைகளின் நன்மைக்காக
அவர்களுடைய விருப்பத்தையும் மீறி
சில செயல்களைச்
சில நேரங்களில் செய்யத்தானே வேண்டியிருக்கிறது.
அவர்கள் அப்படி நினைத்திருக்கக்கூடும்
காரியத்தில் கண்ணான இன்னொருவன்
சட்டென்று நெருப்பைத்
திறமையாகப் பற்ற வைத்தான்.
குப்பென்று தீ பரவியது
சுற்றிலும் எரிந்து கொண்டிருந்தவற்றின் எண்ணிக்கையில்
மேலும் இன்னொன்றாகச் சேர்ந்தது
நன்கு எரிய ஆரம்பித்ததும் கூட்டம்
புதிய சாகசத்தைத் தேடி நகர ஆரம்பித்தது
சிலர் கலைந்து சென்றனர்.
உள்ளிருந்த இருவர்
என்ன நினைத்திருப்பார்கள்
என்ன உணர்ந்திருப்பார்கள்
யாருக்கும் கவலையில்லை.
அமைதியை விரும்பும் மக்கள்
தங்கள் வீடுகளை நோக்கி
நடக்க ஆரம்பித்தனர்
அப்போது
திடீரென்று
காருக்குள் இருந்த மனிதர்
கார் கதவை உடைத்துத் திறந்தார்.
அவருடைய சட்டையும் தலைமுடியும்
ஏற்கெனவே தீயில் கருக ஆரம்பித்திருந்தன
பாய்ந்து குனிந்து தன்னிரு குழந்தைகளைப் பிடுங்கிக் கொண்டார்
திட்டமிட்ட செயல் ஒன்றை முடிப்பதுபோல்
எந்தப் பக்கமும் திரும்பாமல்
காருக்குள் குழந்தைகளுடன் புகுந்தார்.
உள்ளே
கார் கதவை
அழுத்தமாகத் தாழிட்டுக் கொண்டார்.
அந்தச் சத்தத்தை
வெகு துல்லியமாக
நான் கேட்டேன்.
******
(தொடரும்)
தனது அதிரடியான திரைப்பட விமர்சனங்கள், அலசல்கள் & கட்டுடைத்தல் மூலம் தமிழ் இணையத்தில் பிரபலமான B.R.மகாதேவன் ஒரு படைப்பாளியாக இலங்கைத் தமிழரின் ரத்தம் தோய்ந்த கண்ணீர் வரலாற்றை மையமாக வைத்து எழுதியிருக்கும் நாடகம் இது. அடுத்தடுத்த பகுதிகள் தொடர்ந்து தமிழ்ஹிந்துவில் வெளியாகும்.
சயனைட் குப்பியை விளையாட்டாகக் கடித்து இறந்த குழந்தையின் கதை மனதைப் பதைபதைக்கச் செய்கிறது. இலங்கைத் தமிழர் மீதான உண்மையான கரிசனம் இந்த எழுத்தில் தெரிகிறது. அரசியல் சார்புகள், பயங்கரவாத ஆதரவு எதுவும் இல்லாமல் இலங்கைத் தமிழர்களின் பேரழிவை, அவர்கள் தொடர்ந்து அனுபவிக்கும் கொடுமைகளை மானுட சோகம் என்ற அளவில் பதிவு செய்யும் நிறைய படைப்புகள் வர வேண்டும்.
நாடகத்தின் தொடக்கமே அருமையாக உள்ளது. வாழ்த்துக்கள் பி.ஆர்.மகாதேவன் அவர்களே.
அனைவரும் படிக்க வேண்டிய ஆக்கம். முழுவதும் படிக்க முடியவில்லை. மனது கனக்கிறது.
Fine story. Pl continue
விதியே விதியே முதல் பாகம் படித்தேன் – சொல்ல வார்த்தைகள் இல்லை , மனம் கனக்கிறது ! விடிவு எப்போது ?
இலங்கையில் தமிழர்கள் சுய ஆட்சி கேட்டு போரை ஆரம்பித்தபோது தமிழ் முஸ்லீம்கள் மட்டும் அவர்களுக்கு உறுதுணையாகக் களத்தில் இறங்கியிருந்தால் பிரச்னை இந்த அளவுக்குப் பெரிதாகியிருக்காது. ஆனால், அவர்கள் தங்களைத் தமிழர்களாக அடையாளம் காணவில்லை. இஸ்லாமியராக மட்டுமே அடையாளம் கண்டுகொண்டார்கள்..அவர்களின் வழக்கமே அதுதான். எந்த தேசத்தில் இருந்தாலும் அந்த தேசத்தை அவர்கள் நேசிக்க மாட்டார்கள். பன்றிக்கு என்னதான் அறுசுவை உணவை படைத்தாலும் அது மலத்தையே விரும்பி உண்பதுபோல் அவர்களுக்கு வேறு எந்த அடையாளத்தின் மூலம் எவ்வளவு வசதி வாய்ப்புகள் கிடைத்தாலும் அவர்கள் இஸ்லாம் என்ற ஒன்றுக்கு மட்டுமே விசுவாசமாக இருப்பார்கள். இலங்கையிலும் அதையே செய்தார்கள். அதுதான் ஈழ விடுதலைப் போரை பலவீனப்படுத்தியது. யாழ்பாணத்தில் இருந்து 80,000 பேரை போட்டது போட்டபடி புறப்பட்டுப் போகச் சொன்னதில் எந்தத் தவறும் இல்லை. துரோகிகளைப் பின் வேறு எப்படி நடத்த முடியும்?அவர்கள் தமிழர்களுடன் ஒற்றுமையாக இருந்திருந்தால் இந்தப் பிரச்னை எப்பதோ சுமுகமாகத் தீர்ந்திருக்கும் என்பது மட்டும் நிச்சயம். ஈழ தமிழருக்கு முஸ்லீம்கள் செய்த துரோகங்கள்;.https://m.facebook.com/story.php?story_fbid=297855633928404&id=297403353973632&_ft_=top_level_post_id.297855633928404%3Atl_objid.297855633928404%3Athid.297403353973632%3A306061129499414%3A3%3A0%3A1475305199%3A1822259410444863717&__tn__=%2As