இலங்கைத் தமிழர் வாழ்வில் புதிய ஒளிக்கீற்று!

cv-vigneswaran
இலங்கை வடக்கு மாகாண முதல்வராகவுள்ள முன்னாள் நீதிபதி க.வி.விக்னேஸ்வரன்.

கடந்த 30 ஆண்டுகளாக உள்நாட்டுப் போராலும், நிச்சயமற்ற அரசியல் சூழலாலும் பந்தாடப்பட்ட இலங்கை வாழ் தமிழர்களின் வாழ்வில் புதிய அத்தியாயம் மலர வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. அங்குள்ள வடக்கு மாகாணத்திற்கு நடத்தப்பட்ட தேர்தலில் மொத்தமுள்ள 38 இடங்களில் 30 இடங்களில் வென்று, தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தமிழரின் வாழ்வில் புதிய நம்பிக்கை ஒளிக்கீற்றை உருவாக்கியுள்ளது.

இலங்கையில் சிங்கள அரசியல்வாதிகளின் எதேச்சதிகாரப் போக்காலும், ஆதிக்க உணர்வாலும் அங்குள்ள தமிழர்கள் நசுக்கப்பட்டு வந்ததால் எழுந்த எதிர்ப்புணர்வே அங்கு ‘தனித் தமிழ் ஈழம்’ என்ற கோரிக்கை எழக் காரணமானது. ஆரம்பத்தில் ஒரு அரசியல் கோரிக்கையாக முன்வைக்கப்பட்ட ஈழம், தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் (எல்டிடிஇ) அமைப்பின் உதயத்தால், இலங்கையில் உள்நாட்டுப் போருக்குக்  காரணமானது. இந்திய அரசியல்வாதிகளின் துணையுடன் வளர்ந்த எல்டிடிஇ, ஒரு சமயத்தில் இலங்கைக்குள் போட்டி அரசு நடத்தும் அளவுக்கு வளர்ச்சி பெற்றது. இருப்பினும், அரசுத் தரப்பும், எல்டிடிஇ அமைப்பும் மோதிக்கொண்டு ரத்த ஆறை ஓடச் செய்தனர். இதில் அதிகமாகப் பாதிக்கப்பட்டது அங்குள்ள தமிழ் மக்கள் தான். அதையும் தாண்டி அவர்கள் எல்டிடிஇ அமைப்புக்கு ஆதரவு அளித்தற்கு, இலங்கை அரசின் பாரபட்சமான போக்கே காரணம்.

ஆரம்ப காலத்தில் எல்டிடிஇ அமைப்பின் கரமே ஓங்கி இருந்தது. இதற்கு, போட்டி அரசியல் குழுக்களைச் சார்ந்தவர்களை எல்டிடிஇ அமைப்பு  ‘களை’ எடுத்ததும் காரணம். இந்த நிலையில் மாற்றம் ஏற்பட்டது, ராஜீவ் இந்தியப் பிரதமராக இருந்த காலத்தில் தான். இலங்கையில் அமைதி ஏற்படுத்த அவர் மேற்கொண்ட முயற்சி தான் இலங்கையின் சூழலில் பெரும் மாற்றம் ஏற்படுத்தியது. அவர் அனுப்பிய இந்திய அமைதிப்படை, சிங்கள ராணுவம், எல்டிடிஇ என இரு தரப்பிலும் எதிர்ப்பைச் சந்தித்து, ஆயிரத்திற்கு மேற்பட்ட வீரர்களை பலிகொடுத்து நாடு திரும்பியது. இந்த படை நடவடிக்கையில் எல்டிடிஇ-யின் படைபலம் வெகுவாகக் குறைக்கப்பட்டது. இதையடுத்து எல்டிடிஇ நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் தமிழகத்தில் ராஜீவ் கொல்லப்பட்டதும், இலங்கை குறித்த நமது பார்வை மாறிப் போனது.

இந்திய அரசின் எதிர்ப்பு, தமிழ் மக்களிடையே ஆதரவு குறைந்தது, சர்வதேச அளவில் தீவிரவாத இயக்கங்களுக்கு எதிராக மேற்கத்திய நாடுகள் எடுத்த நடவடிக்கை ஆகியவற்றால், எல்டிடிஇ அமைப்பின் அடிப்படை வலு சிறிது சிறிதாகக் குறைந்தது. இந்த நேரத்தில் இலங்கை அரசுக்கு இந்தியா அளித்த ராணுவ உதவியால், அந்நாட்டு அரசு எல்டிடிஇ அமைப்புக்கு எதிரான போரை முடுக்கிவிட்டு அந்த அமைப்பை இல்லாதொழித்தது. 2004-ல் அதன் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டதுடன், இலங்கையில் தனிநாடு கோரிக்கைக்கு முற்றுப்புள்ளி வைப்பட்டுவிட்டது.

இந்த இடைப்பட்ட காலத்தில் அரசுத் தரப்புக்கும் எல்டிடிஇ-க்கும் இடையில் சிக்கிக்கொண்டு ஈழ மக்கள் அடைந்த வேதனையை எழுதி மாளாது. ஒருபுறம் ராணுவ அத்துமீறல்கள்; மறுபுறம் சிறார்களைக் கூட படையணியில் சேர்க்கும் எல்டிடிஇ-யின்  தீவிரச் செயல்பாடுகள்; தமிழர் பகுதியில் அரசியல்ரீதியான செயல்பாடுகளை மேற்கொண்டோருக்கு எல்டிடிஇ அமைப்பின் அச்சுறுத்தல்கள். இதனால் நிச்சயமற்ற எதிர்காலத்துடன், தனிநாடு கனவுடன் அம்மக்கள் உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு காலம் கழித்து வந்தார்கள். பிரபாகரனின் வீழ்ச்சியுடன் அந்த நிலைக்கு முடிவு கட்டப்பட்டது. ஆனால், அதற்குள் சுமார் 4 லட்சம் தமிழர்கள் கொல்லப்பட்டுவிட்டார்கள். லட்சக் கணக்கான இலங்கைத் தமிழர்கள் அகதிகளாக உலக நாடுகள் முழுவதும் பரவினார்கள்.

மன்னிக்க முடியாத முள்ளிவாய்க்கால் படுகொலைகள்
மன்னிக்க முடியாத முள்ளிவாய்க்கால் படுகொலைகள்

இலங்கை ராணுவத்திற்கும் எல்டிடிஇ அமைப்புக்கும் இடையே 2009–ல் நடைபெற்ற இறுதிப்போரில் முள்ளிவாய்க்கால் பகுதியில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கையே 1.5 லட்சம் என்று கூறப்படுகிறது. இந்தப் போரில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் இன்னமும் உலக அளவில் பேசுபொருளாக உள்ளன. ஐக்கிய நாடுகள் சபை இலங்கையில் நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்து கவலை தெரிவித்தது. இந்தியாவின் இலங்கை ஆதரவு நிலைப்பட்டால் அந்நாடு ஐ.நா-வின் கண்டனத் தீர்மானத்தில் இருந்து தப்பியது.

எனினும் போருக்குப் பிந்தைய இலங்கையின் ம்றுசீரமைப்புப் பணிகளை நேர்மையுடன் முன்னெடுக்குமாறு உலக நாடுகள் இலங்கையை வலியுறுத்தின. ஆனால், ஒரு பெரும் உள்நாட்டுப் போரில் வென்று இலங்கையின் பெருவாரியான சிங்கள மக்களின் ஆதரவைப் பெற்றுள்ள இலங்கை அதிபர் ராஜபட்ச, எதற்கும் மசிவதாக இல்லை. சிங்கள ஆதிக்கத்தை தமிழர் பகுதியில் அதிகரிப்பதற்கான திட்டங்களை அவர் ராணுவ முகாம்கள் அமைப்பதன் வாயிலாகச் செய்து வருகிறார்.

இலங்கையின் வடக்கு மாகாணம் தான் சிங்கள அரசியல்வாதிகளுக்கு சிம்ம சொப்பனமாக இருந்து வருகிறது. யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், முல்லைத்தீவு, வவுனியா ஆகிய மாவட்டங்கள் அடங்கிய வடக்கு மாகாணம் எப்போதுமே இலங்கையின் ஆளும் கட்சிக்கு எதிராகவே இருந்து வந்துள்ளது. இப்பகுதியில் மக்கள் இடப்பெயர்வைப் பயன்படுத்தி சிங்களக் குடியேற்றங்களை அமைத்துவிட்டால் நீண்ட  காலத்துக்கு அது உதவும் என்பதே ராஜபட்சவின் தந்திரம். எனவே தான், இப்பகுதிகளில் தமிழ்ப் பெண்கள் மீது வல்லுறவுத் தாக்குதல்கள், இளைஞர்களை காரணமின்றி கைது செய்து சித்ரவதை செய்தல், இந்துக் கோயில்களை இடித்தல், புத்த விகாரங்கள் அமைத்தல், போக்குவரத்துக் கட்டுப்பாடு போன்ற நடைமுறைகளால் தமிழர்கள் போருக்குப் பின் கடுமையாக ஒடுக்கப்பட்டார்கள்.

250px-Sri_lanka_nothern_provienceபோருக்குப் பின் நல்லிணக்க ஆணையம் அமைத்த இலங்கை அரசு, அதன் பரிந்துரைகளை தனது அரசியல் பிரசாரத்திற்குப் பயன்படுத்திக் கொண்டதே தவிர, அவற்றை அமலாக்கவில்லை. இதனை ஐ.நா. பிரதிநிதியான நவநீதம் பிள்ளையே கண்டித்திருக்கிறார். இந்த நிலையில் தான், சர்வதேச நிர்பந்தங்களுக்கு உட்பட்டு, வடக்கு மாகாணத்தில் தேர்தலை இலங்கை அரசு நடத்தியது. எதிர்பார்த்தது போலவே, அங்குள்ள தமிழ் மக்கள் இலங்கை அரசுக்கு எதிராகவும், தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு ஆதரவாகவும் பெருவாரியாக வாக்களித்து ஜனநாயகரீதியாக தங்கள் உரிமையை நிலைநாட்டி இருக்கிறார்கள்.

இந்தத் தேர்தலில் ராஜபட்ச தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி-  தமிழர்கள் கட்சிகள் ஒருங்கிணைந்த தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆகியவை பிரதான போட்டியாளர்களாக இருந்தன. இலங்கைத் தமிழரசு கட்சி, ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (ஈபிஆர்எல்எப்- சுரேஷ் அணி), தமிழீழ விடுதலை இயக்கம் (டெலோ), தமிழர் விடுதலைக் கூட்டணி, தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (புளாட்) ஆகிய 5 கட்சிகள் தமிழ்க் கூட்டமைப்பில் இடம் பெற்றுள்ளன. இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் சம்பந்தன் இதன் தலைவர் ஆவார். இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் கட்சியும் தனித்து களம் கண்டது.  தேர்தலின் முடிவில், தமிழ் தேசிய கூட்டமைப்பு- 30, ஐ.ம.சு.கூட்டணி- 7, இ.மு.கா- 1 என வெற்றியைப் பகிர்ந்து கொண்டுள்ளன. இதன்மூலமாக, தமிழ் மக்களின் உள்ளக்கிடக்கை வெளிப்பட்டுள்ளது.

த.தே.கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனுடன்  முதல்வர் விக்னேஸ்வரன்
த.தே.கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனுடன் முதல்வர் விக்னேஸ்வரன்

தேர்தலுக்கு முன்னதாகவே, தமிழ் தேசிய கூட்டமைப்பின் முதல்வர் வேட்பாளராக, இலங்கை உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி கனகசபாபதி விசுவலிங்கம் விக்னேஸ்வரன் அறிவிக்கப்பட்டார். அவர் வடக்கு மாகாண முதல்வராகவுள்ளார். இதற்கு முந்தைய பொம்மை அரசுகள் போலல்லாது, இம்முறை உண்மையான நிர்வாகம் தமிழர் பகுதியில் நடைபெற வாய்ப்புள்ளதாக உலக நாடுகள் கணிக்கின்றன. இத்தேர்தலில் 68 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதும் குறிப்பிடத் தக்கது. இதுவரை காணாத 3-ல் 2 பங்கு பெரும்பான்மையுடன், உலக நாடுகள் கண்காணிப்பில் நடைபெற்ற தேர்தலில் வென்றுள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பு அம்மக்களின் விருப்பங்களை நிறைவேற்ற அந்த கதிர்காம முருகன் அருள்புரிய வேண்டும்.

வளர்ச்சிப் பணிகள் என்பவை அடிப்படை உரிமைகளுக்கு பிறகானவையே என்பதையும் வடக்கு மாகாண சபைத் தேர்தல் உணர்த்தி உள்ளது.  “ஐக்கிய இலங்கைக்குள் சுயாட்சி“ என்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முழக்கத்தை தமிழ் மக்கள்  தங்கள் வாக்குகளினால் முன்னோக்கிக் கொண்டு சென்றுள்ளனர்.

மேலும் சர்வதேச நாடுகளுக்கு இதன்மூலமாக,  இலங்கையை தற்போது ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியின் ஆதிக்கத்திற்கு வளைந்து போக முடியாது என்கிற அறிவிப்பையும் வடக்கு மாகாண மக்கள் விடுத்திருக்கிறார்கள்.  இது, அதிபர் ராஜபட்ச தலைமையிலான  அரசாங்கம் சர்வதேச ரீதியில் செய்த தமிழர் போராட்டங்கள் குறித்த மலினமான பிரசாரத்துக்கும் முடிவு கட்டியிருக்கிறது.

இத்தேர்தல் முடிவுகளை தமிழக அரசியல் கட்சிகளும் இந்திய அரசும் வரவேற்றுள்ளன.

காண்க: தமிழக அரசியல் தலைவர்களின் வாழ்த்து (தினமணி செய்தி 23.09.2013)

ஜனநாயகரீதியாக தங்கள் வாழ்வுரிமையை நிலைநட்டும் தமிழ் மக்கள்.
ஜனநாயகரீதியாக தங்கள் வாழ்வுரிமையை நிலைநாட்டும் தமிழ் மக்கள்.

அதேசமயம், இலங்கை மக்களின் சுயநிர்ணயம் உள்ளிட்ட அரசியல் தேவைகளை அவர்களே தீர்மானிக்க தமிழக அரசியல் கட்சிகள் விட்டுவிட வேண்டும். தங்கள் அரசியல் லாபத்திற்காக தமிழக கட்சிகள் வெளியிடும் காலத்திற்கு ஒவ்வாத தனி ஈழ முழக்கங்களால், இலங்கையில் வாழும் நமது சகோதர தமிழ் மக்களுக்கு எவ்வகையிலும் நன்மை விளையாது. இதனை, இலங்கை வடக்கு மாகாண முதல்வராகத் தேர்வு பெற்றுள்ள விக்னேஸ்வரனே கூறி இருக்கிறார்.

மக்களின் மனநிலையை உண்ர்ந்து அதற்கு மதிப்பளிப்பதன் வாயிலாக, ராஜபட்சவும் சிங்கள அரசியல்வாதிகளும் தங்களைத் திருத்திக்கொள்ள இத்தேர்தல் முடிவுகள் வாய்ப்பளித்துள்ளன. இதற்கு முன் தமிழர் பிரதிநிதிகளை கொலை செய்து அப்பழியை எல்டிடிஇ மீது சுமத்தியது போன்ற பைத்தியகாரத்தனமான நடவடிக்கைகளில் ராஜபட்ச அரசு இறங்கக் கூடாது.

தமிழர் பகுதி மறுசீரமைப்பு உண்மையான ஆதுரத்துடன் செயல்பட வேண்டிய கடமை ராஜபட்சவுக்கே அதிகமாக உள்ளது. உலகம் முழுவதும் கூர்ந்து கவனிக்கப்படும் இலங்கை அரசியல் சாசனத்தின் 13-வது சட்டத் திருத்தத்தை தட்டிக் கழிக்காமல் நிறைவேற்ற வேண்டியதும் இலங்கை அரசின் முன்னுள்ள முக்கியமான பொறுப்பாகும்.

காண்க: 13-வது சட்டத் திருத்தம்- ஒரு மாயமான் (பழ. நெடுமாறன் கட்டுரை- தினமணி- 03.07.2013)

அதேபோல, வன்முறையற்ற அரசியல் பாதை மூலமாக, போரால் சீர்குலைந்துள்ள தங்கள் பகுதியை மறுசீரமைப்பு செய்யும் கடமையை தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு மக்கள் வழங்கி உள்ளனர்.

இந்த இரு எதிர்பார்ப்புகளையும் பூர்த்தி செய்ய வேண்டியது, அரசு மற்றும் விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழர் பிரதிநிதிகளின் கடமை.

நடந்தவை நடந்தவை தான். அந்த கசப்புகளையே தொடர்ந்து நெஞ்சில் சுமந்து நிகழ்கால வாழ்க்கையை தொலைத்துவிட முடியாது; கூடாது. வரலாறு அளித்த அனுபவங்களிலிருந்து பாடம் கற்றுக்கொண்டு ஆக்கப்பூர்வமான முயற்சிகளில் ஈடுபடுவோரே சரித்திரத்தை உருவாக்குகின்றனர். வடக்கு மாகாண முதல்வர் விக்னேஸ்வரன் அந்த சரித்திரத்தைப் படைக்க வேண்டும். இந்தியா அதற்குப் பின்புலமாக உதவ வேண்டும். இவை நடைபெற இறைவனைப் பிரார்த்திப்போம்!

 

ராணுவத்தை வடக்கிலிருந்து வாபஸ் பெற வேண்டும்
.
– புதிய முதல்வர் விக்னேஸ்வரன்

.
போருக்குப் பின், தமிழர் பகுதியில் அதிகரித்துள்ள சிங்கள் ராணுவ நடமாட்டம்.
போருக்குப் பின், தமிழர் பகுதியில் அதிகரித்துள்ள சிங்கள ராணுவ நடமாட்டம்.

யாழ்ப்பாணம்: இலங்கையின் வடக்கு மாகாணத்தில் குவி்த்து வைக்கப்பட்டுள்ள ராணுவம் தான் இப்போதைய பெரும் பிரச்சினை,  ஒரே பிரச்சினை. எனவே ராணுவத்தை விலக்கிக் கொள்ள வேண்டும் என்று இலங்கையின் வடக்கு மாகாண முதல்வராக பதவியேற்கவுள்ள விக்னேஸ்வரன் தெரிவி்த்துள்ளார்..

இலங்கையின் வடக்கு மாகாணத்திற்கு நடந்த தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு வெற்றி பெற்றுள்ளது. அபார வெற்றியுடன் அந்தக் கூட்டமைப்பு ஆட்சியமைக்கிறது. முதல்வராக ஓய்வு பெற்ற இலங்கை உச்ச நீதிமன்ற நீதிபதி  சி.வி.விக்னேஸ்வரன் பதவியேற்கவுள்ளார். இந்த நிலையில் வி்க்னேஸ்வரன் அளி்த்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:
.
மக்கள் எங்கள் மீது முழு நம்பிக்கை வைக்க வேண்டும். வைத்துள்ளனர் என்பதையே இந்த தேர்தல் முடிவு காட்டுகிறது.
.
இலங்கையில் பிரிவினையை நாங்கள் விரும்பவில்லை. இதை அரசுத் தரப்பும் நம்ப வேண்டும். ‘பெடரல்’ அதிகாரம் கொண்ட சுயாட்சியைத் தான் தமிழர்கள் விரும்புகிறார்கள்.
.
வடக்கின்  பெரும்பாலான பகுதிகளில் ராணுவம் குவி்க்கப்பட்டுள்ளது. இது தான் மக்களுக்கு முக்கியப் பிரச்சினையாக உள்ளது. அவர்கள் உடனடியாக பாசறைக்குத் திரும்ப வேண்டும். திரும்பப் பெற வேண்டும்.
இந்த அமோக வெற்றி மிகுந்த மகிழ்ச்சியைத் தந்துள்ளது. மக்கள் என் வசம் பெரும் பொறுப்பை ஒப்படைத்துள்ளார்கள். மக்கள் சமாதானத்துக்காக வாக்களித்துள்ளார்கள். அவர்கள் தமது எண்ணங்களை வாக்குகளில் பிரதிபலித்துள்ளார்கள் என்றார்.
.
தகவல் உதவி: ஒன் இந்தியா (23.09.2013)
.

11 Replies to “இலங்கைத் தமிழர் வாழ்வில் புதிய ஒளிக்கீற்று!”

  1. போர் முடிந்த ஆண்டு 2009 மேலே உள்ள கட்டுரையில் 2004 என்று உள்ளது இது தவறு

  2. இந்த தேர்தல் நடந்ததினால் தமிழ் மக்களுக்கு எந்த உரிமையும் கிடைக்காது கிடைக்கபோவதும் இல்லை. இலங்கையில் மாகாண சபை என்பது வெறும் பொம்மை அமைப்பு எந்தவொரு அதிகாரங்களும் இல்லாத அமைப்பு. இந்த தேர்தலின் நோக்கமே வடமாகாண தமிழர்கள் யார் பக்கம் இருக்கிறார்கள் தங்களை யார் ஆள வேண்டும் என நினைகிறார்கள் என்பதை உலகத்திற்கு நிருபணம் செய்யவதர்க்காகவே நடத்தபட்டது. தனி தமிழீழம் என்பதை கூட்டமைப்பினர் கைவிட்டாலும் சுயாட்சி என்பதை நோக்கியே அவர்களின் பிரசாரம் இருந்தது அதே போல் புலிகளை முன்னிலைப்படுத்தியே அவர்களின் பிரசாரமும் மேற்கொள்ளபட்டது. மக்களும் புலிகளை மனதில் வைத்தே கூட்டமைப்பிற்கு தங்களின் ஓட்டுகளை அளித்தனர்.இதற்கு காரணம் போர் முடிந்த நான்கு வருடங்களில் இலங்கை அரசு எதற்காக இந்த போரை ஆரம்பித்ததோ, தமிழ் மக்கள் எதற்காக இந்த போராட்டத்தை 60 வருடங்களாக நடந்தினார்களோ அதற்கான தீர்வு இன்னும் கிடைத்தபாடில்லை மக்கள் மீண்டும் புலிகளை தேட ஆரம்பித்தனர்.இன்று இலங்கையில் புலிகள் இல்லாவிட்டாலும் அவர்களின் அரசியல்(கூட்டமைப்பு புலிகள் அரசியல் பிரிவு தலைவர் தமிழ்செல்வனால் தொடங்கப்பட்ட அரசியல் கட்சி ) தொடர்கின்றது. இதிலிருந்து புலிகள் ஆரம்பித்த போரட்டத்தின் வடிவம் மாறி இருக்கிறதே தவிர அவர்களின் கொள்கை அல்ல. இது அந்த மக்களின் அடுத்த கட்ட போரட்டத்திற்கான ஜனநாயக ஆரம்பம். இன்னும் அவர்கள் பயணிக்க வேண்டிய தூரம் நிறைய இருக்கிறது அதில் தடங்கல்களும் உள்ளது. ஆனால் நமது நாட்டில் பெரும்பான்மையான ஊடகங்கள் தமிழ் மக்களுக்கு இந்த தேர்தல் மூலமாக உரிமை கிடைத்துவிட்டதாக பொய் பிரசாரம் செய்து வருகின்றனர் இது அவர்களின் போராட்டத்தை குலைக்கும் நோக்கிலே இருக்கின்றது அதே போல் ஈழத்தை வைத்து அரசியல் செய்வோரும் அந்த மக்களின் முடிவிற்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டும் சுயாட்சி வேண்டாம் எங்களுக்கு நாளைக்கே ஈழம் வேண்டும் போன்ற வெற்று கூச்சல்களை தவிர்த்து அந்த மக்களுக்கு உரிமைகளை பெற்று தர ஒரு சிறு முயற்சியாவது செய்ய வேண்டும்.கூட்டமைப்பும் மக்களுக்கு வேண்டிய உரிமைகளை பெற்று சுயாட்சி எனும் குறிக்கோளை நோக்கி பயணிக்க வேண்டும் என்று அங்கு தமிழ் மக்களுக்கு உரிமைகள் கிடைக்கின்றனவோ அன்றே அவர்களின் துன்பங்களுக்கு விடியல் கிடைக்கும்.

  3. தவறு சரி செய்யப்பட்டது.
    நண்பர் திரு. சண்முகத்துக்கு நன்றி.

  4. எது என்ன வாக இருந்தாலும் தேர்தல் ஓரளவுக்கு ஞாயமாக நடந்துள்ளது என்பதை ஒப்புக்கொள்ளவேண்டும். ராஜா பக்ஷே இனி சில சலுகைகளை தமிழருக்கு பகிர்ந்தளிக்க வேண்டிய கட்டாயம் வந்துள்ளது. மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுய ஆட்சி முறைக்கு தமிழரும் ஒப்புக்கொள்ள வேண்டுமே அன்றி தனி நாடு என்பது கவைககுஉதவாது. பிரிவினைவாதம் தவிர்த்திருந்தால் மேதகு பிரபாகரனை நாம் இழந்து இருக்க மாட்டோம்.

  5. //இதற்கு முந்தைய பொம்மை அரசுகள் போலல்லாது இம்முறை உண்மையான நிர்வாகம் தமிழர் பகுதியில் நடைபெற வாய்ப்புள்ளதாக உலக நாடுகள் கணிக்கின்றன.//
    இலங்கை – இந்திய ஒப்பந்தம் 1987 இல் கைச்சாத்திடப்பட்டதின் மூலம் இலங்கையில் அதன் மாகாணங்களுக்கு தேர்தல் நிர்வாக முறை ஏற்பட்டது. 1988 ஆம் ஆண்டு தமிழர் பகுதிக்கான முதல் நடைபெற்ற மகாணசபை தேர்தலில் யாரும் பங்கு பற்ற கூடாதது என்று புலிகள் தடைவிதித்தது. பங்குபற்றிய வேட்பாளர்கள் பலர் புலிகளால் கொல்லபட்டனர். வாக்காளர்கள் தேர்தலில் வாக்களிக்க கூடாது என்று புலிகளால் பயமுறுத்தபட்டனர். ஈபிஆர்எல்எப்- சுரேஷ் அணி என்று அப்போ ஒரு அணி இருக்கவில்லை. ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (ஈபிஆர்எல்எப் ) ஒரு அணி தான் தேர்தலில் வெற்றி பெற்றது .புலிகளின் பயங்கரவாதிற்கு மத்தியில் நடந்த அந்த தேர்தல் முழுமையானதில்லை. அதன் காரணமாக 1988 பின் தமிழ் மாகாண சபை தேர்தல்கள் நடைபெறவில்லை.புலிபயங்கரவாதிகள் அழிக்கப்பட்ட பின் சுதந்திரமாக நடைபெற்ற தேர்தல் தற்போது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
    //இதற்கு முன் தமிழர் பிரதிநிதிகளை கொலை செய்து அப்பழியை எல்டிடி மீது சுமத்தியது போன்ற பைத்தியகாரத்தனமான நடவடிக்கைகளில் ராஜபட்ச அரசு இறங்கக் கூடாது.//
    அமிர்தலிங்கம் தொடக்கம் தமிழர் பிரதிநிதிகளை கொன்று குவித்தவர்கள் புலிகள் என்பதை புலி ஆதரவாளர்கள் கூட அறிவார்கள்.இவ்வளவும் ஏன் புலிகளினால் புலிகளின் பொம்மையாக வைத்திருப்பதிற்காக உருவாக்கபட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தர் அவர்கள் கூட புலிகளின் கொலை பட்டியலில் தனது பெயர் இருந்ததை இலங்கை பாராளுமன்றத்தில் பகிரங்கமாக தெரிவித்திருக்கிறார்.
    சம்பந்தர் அவர்கள் வெளியிட்ட முக்கியமான கருத்துகளில் ஒன்று
    “புலிகள் இருந்த காலங்களில் எமது தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களுக்கு சுதந்திரமாக கருத்துக்களை வெளியிட சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. தற்போது கிடைத்துள்ள சந்தர்ப்பத்தில் எமது சுதந்திரமான கருத்துக்களை வெளியிடுகிறோம்”

  6. அன்புள்ள சிறிலங்கா ஹிந்து,

    போட்டிப் போராளிக் குழுக்களை எல்டிடிஇ-யினர் அழித்தொழித்தது எவ்வளவு உண்மையோ (இதை நான் எனது கட்டுரையில் ஓரிடத்தில் குறிப்பிட்டிருக்கிறேன்), அதே அளவு உண்மை தான், அரசுத் தரப்பினர் தமிழர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்பிக்களை கொலை செய்ததும்.

    சில வேளைகளில் இந்தக் குற்றங்களை எல்டிடிஇ மீது சுமத்தி அரசுத் தரப்பு தப்பிக்கொண்டதும் உண்மையே. அமைதிப்படைக்கும் எல்டிடிஇ-க்கும் இடையே பகைமை ஏற்படவும் கூட இலங்கை ராணுவம் நடத்திய சில தாக்குதல்கள் காரணம் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.

    எனது கவலை, இப்போது வெற்றி பெற்றுள்ள எந்தத் தமிழர் பிரதிநிதிக்கும் அந்த நிலை வந்துவிடக் கூடாது என்பதே.

    இந்தியாவில் ஆட்சி மாற்றம் ஏற்படும்வரை தமிழர் பிரதிநிதிகள் பத்திரமாகச் செயல்பட வேண்டும். இதுவே என் கருத்து.

    -சேக்கிழான்.

  7. இந்த தேர்தலில் வேலுப்பிள்ளை பிரபாகரன் போட்டியிட்டிருந்தால் விக்னேஸ்வரன் பெற்ற ஓட்டுக்களை விட அதிக ஓட்டுக்களை பெற்றிருப்பார். ஈழத்தமிழர்கள் நன்கு படித்தவர்கள். அவர்களின் சொந்த பந்தங்கள் உலகம் பூராவும் பரவியுள்ளார்கள். பலர் நல்ல நிலைமையிலும் உள்ளார்கள். தமிழ்நாட்டு தமிழர்களை போல் அவர்கள் அரைகுறையாக படித்த கூமுட்டைகள் அல்ல. இந்த தேர்தலை சர்வதேச சமூகம் உன்னிப்பாக கண்காணித்ததால் ராஜபக்சவும் அவரது ராணுவமும் ஓரளவுக்கு மேல் அயோக்கியத்தனம் செய்ய முடியவில்லை. இருந்தும் தங்களால் முடிந்த அயோக்கியத்தனங்களை செய்தார்கள். தமிழர் கூட்டணி வேட்பாளர் வீட்டை சூறையாடினார்கள். உதயன் நாளேட்டை போலியாக ஆயிரக்கணக்கான பிரதிகள் அச்சடித்து தமிழ் மக்களை குழப்பும் செய்திகளை சிங்கள ராணுவம் வெளியிட்டது. இது ஒரு நூதன அயோக்கியத்தனம். இந்திய அரசியல்வாதிகள் இதை காப்பியடிக்கலாம். கடைசியில் அதிர்ச்சி அளிக்கும் விதமாக தமிழர் கூட்டணி பெருவாரியான இடங்களில் வென்றது.

  8. 1987ம் ஆண்டு கைச்சாத்திடப்பட்ட இந்திய- இலங்கை ஒப்பந்தத்தின் மூலம் தீர்ந்து போய் இருக்க வேண்டிய பிரச்சனைகளை தீர்ந்து போகாமல் இருக்க சகல நடவடிக்கைள் எடுத்து இலங்கை தமிழ் மக்களுக்கு பாரிய இழப்புகளையும், மாபெரும் அழிவுகளையும் மட்டுமே ஏற்படுத்தி பழையபடி 1987 ம் ஆண்டில் இலங்கை தமிழ் மக்கள் எங்கே நின்றார்களோ அதே இடத்திற்கே அந்த மக்களை கொண்டு வந்து சேர்த்த வேலுப்பிள்ளை பிரபாகரன் ஒரு சாதனையாளர் என்பதில் சந்தேகமில்லை.
    அடைந்தால் திராவிட நாடு இல்லையேல் சுடுகாடு என்ற கூறிய இந்திய திராவிட தலைவர்களால் கூட இந்திய தமிழ் பிரதேசங்களை சுடுகாடாக மாற்ற முடியவில்லை. ஆனால் வேலுப்பிள்ளை பிரபாகரன் அப்படி சுடுகாடாக மாற்றி காட்டிய ஒரு சாதனையாளர்.

  9. இலங்கை வடமாகாண முதலமைச்சராக தெரிவு செய்யப்பட்ட தமிழ் தேசியக்கூட்டமைப்பை சேர்ந்த விக்னேஸ்வரன் இன்று காலை இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து பதவியேற்று கொண்டார்.
    https://tamil.dailymirror.lk/–main/84896-2013-10-07-06-53-11.html

  10. Srilanka Hindu எழுதியபடி சம்பந்தரின் பெயர் இருந்திருக்கலாம்.ஆனால் அதன் பின்னர் அவர் வன்னிக்கு பலதடவை சென்று Pirabhakaran, Tamilselvan இருவரையும் சந்தித்துள்ளார்.அதனை அவர் மறைத்தது பிழை.
    புலிகள் செய்த பல கொலைகளுக்குப் பின்னால் பல பிறதேச உளவு நிறுவனங்கள் இருந்துள்ளன.இந்திய உளவு நிறுவனத்தின் வேண்டிதலின் பிரகாரம் புலிகள் அனுராதபுர படுகொலையைச் செய்தார்கள்.இது பற்றி American Time சஞ்சிகை எழுதியிருந்தது.
    புலிகளின் கொலைகள் தவிர்க்கப்படிருக்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *