வருடம் 1897. சுவாமி விவேகானந்தர் கல்கத்தா பாக்பஜார் வீட்டில் அமர்ந்திருக்கிறார். பசுப் பாதுகாப்பு சமிதி நிர்வாகிகள் அவரைச் சந்திக்க வந்திருக்கின்றனர். கிழடு தட்டிய பசுக்களை வதையிலிருந்து பாதுகாத்து பராமரிக்க தாங்கள் அமைத்துள்ள கோசாலைகளுக்கு சுவாமிஜியைப் போன்ற பெரிய மனிதர்கள் உதவ வேண்டும்; ஏற்கனவே பிரபுக்களும் மார்வாரி வணிகர்களும் பெருந்தொகையை அளித்துள்ளனர் என்று தெரிவிக்கின்றனர். “உங்கள் மத்திய மாகாணத்தை பெரும் பஞ்சம் பீடித்துள்ளதே. ஒன்பது லட்சம் மக்கள் உணவு இல்லாமல் தவித்துக் கொண்டு மரணப் பட்டியலில் (death roll) இருப்பதாக அரசு அறிக்கை கூறுகிறதே. அவர்களுக்கு உதவ சமிதி ஏதேனும் செய்கிருக்கிறதா?” என்று சுவாமிஜி கேட்கிறார். “அது அவர்களது கர்ம வினை. நாம் என்ன செய்ய முடியும்” என்று பதிலளிக்கிறார் ஒரு நிர்வாகி.
அதைக் கேட்டதும், சுவாமிஜியின் பெரிய கண்கள் தீப்பொறி போல சிவந்தன; அவரது முகம் குப்பென்று சிவப்பாகியது. தனது கட்டுக்கடங்காத கோப உணர்ச்சியை அடக்கிக் கொண்டு அவர்களிடம் பேசினார் என்று பதிவு செய்கிறார் உடனிருந்த சீடர். “அப்படியானால் அந்த மாடுகள் சாவதும் அவற்றின் கர்ம வினை அல்லவா? அவற்றைக் காப்பாற்ற ஏன் முயற்சி செய்ய வேண்டும்? உங்களது சகோதரர்களும் சகோதரிகளும் கொத்துக் கொத்தாக மரணத்தின் கொடும் பற்களுக்குள் செல்வதைப் பார்த்தும், அவர்களை அதிலிருந்து காப்பாற்றக் கூடிய அளவு பணமும் வழியும் உங்களிடம் இருந்தும், அது கடமை என்று உங்களுக்குத் தோன்றவில்லையா?” என்று கேட்கிறார். “சரிதான். ஆனாலும் பசு நம் அன்னை என்று சாஸ்திரங்கள் சொல்கின்றன” என்று நிர்வாகி சங்கடத்தில் நெளிகிறார். முகத்தில் ஏளனப் புன்னகை தவழ, சுவாமிஜி சொல்கிறார், “ஆமாம்.. வேறு யார் இப்படிப் பட்ட புதல்வர்களைப் பெற்றிருக்க முடியும்?”
சாந்தமும் நிதானமும் கொண்ட துறவியான சுவாமிஜி ஏன் அந்தத் தருணத்தில் இப்படி கடுமை கொண்டார்? பாரதத்தின் மேட்டுக் குடிகள் ஏழைகளை, பாமரர்களை நசுக்குவது பற்றி அவரது பேச்சுக்களிலும் எழுத்துகளிலும் வரும் இடங்களில் ஏன் அவ்வளவு சீற்றம்?
அந்த காலகட்டத்திய வரலாற்றுப் பின்னணியில் தான் அதைப் புரிந்து கொள்ள முடியும். 19ம் நூற்றாண்டு முழுவதுமே இந்தியா பஞ்சத்தால் வேகவேகமாக செத்துக் கொண்டிருந்தது. இந்தியா அதற்கு முன் பல நூற்றாண்டுகளாக சந்தித்து, சமாளித்து, பழக்கப் பட்டிருந்தது போன்ற தனித்தனியான உதிரிப் பஞ்சங்கள் அல்ல அவை. பிரிட்டிஷ் வரி வசூல் முறைகள், விவசாய அழிப்பு, திட்டமிட்ட பொருளாதாரச் சுரண்டல்கள் ஆகியவற்றின் விளைவாக, வங்காளம், பம்பாய் மாகாணம், குஜராத், மதராஸ் மாகாணம் என இந்தியாவின் எல்லாப் பகுதிகளிலும் ஒரே காலகட்டத்தில் உருவான செயற்கைப் பஞ்சங்கள் இவை. 1800 முதல் 1875 வரையிலான 17 பஞ்சங்களில் சுமார் 65 லட்சம் இந்திய உயிர்கள் அழிந்தன. அடுத்த 25 வருடங்கள் இதைவிட பல மடங்கு கோரம் நிறைந்தவை. 1876 முதல் 1900 வரையிலான பஞ்சங்களில் மட்டும் 2 கோடியே 60 லட்சம் மரணங்கள் ஏற்பட்டன. சமீபகால உலக வரலாற்றில் நிகழ்ந்த மாபெரும் மானுட சோகங்களின் பட்டியலில் இடம்பெறுபவை இந்தப் பட்டினிச் சாவுகள். மறைந்து போனவர்களில் பெரும்பகுதியினர் இந்திய சமூக அடுக்கின் கீழ்த்தட்டில் இருந்த சாதிகளை, தலித் சமூகங்களைச் சேர்ந்தவர்கள் என்பது இந்தப் புள்ளி விவரங்களின் உட்குறிப்பாக உள்ள விஷயம். செல்வந்தர்களையே வீதிக்கு இழுத்து வந்து விட்ட பஞ்சம் பராரிகளை என்ன செய்திருக்கும் என்று சொல்ல வேண்டியதில்லை.
********
பன்னாலால் படேலின் “வாழ்க்கை ஒரு நாடகம்” (குஜராத்தி) போன்ற இந்திய நாவல்கள் இந்த சோக வரலாற்றை இலக்கியத்தில் பதிவு செய்துள்ளன. தமிழில் தாது வருஷப் பஞ்சம் குறித்த கும்மிகள், நாட்டார் பாடல்கள் போன்ற பொதுமக்களின் பதிவுகள் இருந்தாலும், நவீன இலக்கியத்தில் அழுத்தமாக, பிரக்ஞை பூர்வமாக இது பேசப் படவில்லை. ஜெயமோகனின் “வெள்ளை யானை” நாவல் அந்தக் குறையைப் போக்கியுள்ளது.
1870களின் சென்னை நகரம் நாவலின் களம். பிரிட்டிஷ் அதிகார வர்க்கத்தினரின மாலை நேர விருந்தில் மதுக்கோப்பைகளில் வழுக்கிச் செல்ல உள்ளூர் பனிக்கட்டி தகுந்தது அல்ல என்பதால் கப்பல்களில் அமெரிக்க பனி ஏரிகளின் வெண் பனிக்கட்டிகள் பாளம் பாளமாக வந்து இறங்குகின்றன. அவற்றை உடைக்கும் கடும் பணியில் நகரத்தின் கருப்பு ஏழைத் தொழிலாளிகள். நகரத்தின் சாக்கடை போன்ற ஒரு நரகக் குழியில் பன்றிகளைப் போல வசிக்கும் நிலைக்குத் தள்ளப் பட்ட சனங்கள். ஐஸ் ஹவுஸ் தொழிற்சாலையில் ஏற்படும் விபத்தில் சாகும் இரண்டு தொழிலாளிகளை செத்த எலி போல தூக்கி எறிந்து விட்டு தன் போக்கில் இயங்க முற்படுகிறது தொழிற்சாலை நிர்வாகமும் அதிகார வர்க்கமும். அயர்லாந்தில் பிறந்து பிரிட்டிஷ் ராணுவ அதிகாரியாக சென்னையில் இருக்கும் ஏய்டன் இந்த பிரசினையில் தலையிட நேர்கிறது – அவனது இயல்பான தனிமனித நீதியுணர்வும், மனசாட்சியும் துடிப்பதால். அதற்குக் காரணமானவன் அதே நகரத்தில் இருக்கும் காத்தவராயன். நெஞ்சில் உரமும் நேர்மைத் திறமும் கொண்டு தனக்குக் கிடைத்த சொற்பக் கல்வியின் மூலம் உந்தி மேலே வந்தவன்; தனது சனங்களின் உரிமை இழப்புகளை உணர்ந்தவன். அவர்களது மீட்சிக்காகப் போராடுபவன்.
ஊருக்குள் பஞ்சம் தலை விரித்தாடுகிறது. சாலை நெடுக, பட்டினியால் செத்து வீழ்பவர்களின் குடல்களை நாய் நரிகள் உருவித் தின்னும் காட்சிகளையும், ஒரு துண்டு ரொட்டிக்காக வெள்ளை துரையின் வண்டியின் பின்னால் ஓடி வரும் எலும்புக் கூடுகளையும் காணும் எய்டன் அமைதி இழக்கிறான். தனது அரசுக்கு அறிக்கை எழுதுகிறான். ஊழலிலும் சுரண்டலிலும் திளைத்த காலனிய அதிகார வர்க்கம், அதனுடன் கைகோர்த்து இயங்கும் ஜாதி இந்துக்கள், வர்த்தகர்கள், முதலாளிகளின் கூட்டுக் குழுக்கள் ஒருபுறம். பஞ்சத்தில் சாவதை ஒத்திப் போடுவதற்காக, அடிமாட்டுக்கும் குறைவான கூலியில் புழுக்கள் போல வேலை செய்து சாகத் தயாராக இருக்கும் சனங்கள் மற்றொரு புறம். எய்டனின் முயற்சிகள் அதிகார அடுக்குகளின் பகடையாட்டத்தில் முற்றாக தோல்வியை சந்திக்கின்றன. அடிபட்டவர்களின் எதிர்க்குரல் மெதுமெதுவாக முனகலுடன் எழுந்து, ஐஸ் ஹவுசில் இந்தியாவின் முதல் வேலை நிறுத்தப் போராட்டமாக வெடிக்கிறது. ஈவு இரக்கமற்ற நிர்வாகத்தின் ஆசியுடன், பிரிட்டிஷ் ராணுவத்தின் நேரடி நடவடிக்கை மூலம் உடனடியாக வன்முறையால் ஒடுக்கப் படுகிறது. இந்தக் கொந்தளிப்பின் இறுதியில், காத்தவராயன் தன் வாழ்க்கையில் எதிர் நிற்கும் போராட்டம் எவ்வளவு கடினமானது எனறு அறிந்து தன் செல்திசையை புத்த பகவானின் தர்மத்தில் கண்டு கொள்கிறான். ஆற்றாமையிலும், தன்னிரக்கத்திலும், குடியிலும் தன்னை அழித்துக் கொண்டு, அதிகாரத்தின் வேறொரு கண்ணியாக வேறெங்கோ சலிப்புடன் தொடர்கிறான் எய்டன்.
இந்த நாவலை வாசிக்கும் எவரையும், அதன் சம்பவங்களும், உக்கிரமான கணங்களும், உணர்ச்சிகளும் அதிர வைக்கும். நெஞ்சழிய வைக்கும். “துக்கம் நின்று அறிவினைச் சூறையாடவே” என்று கம்பனின் ஒரு வரி உண்டு. பஞ்சத்தின் கோரக் காட்சிகள் அத்தகைய அனுபவத்தை அளிப்பவை. பிரிட்டிஷ் காலனியத்தின் அடிமையாகி சுரண்டப் படும் அயர்லாந்தின் பிரஜையான எய்டன், அதே காலனிய மிருகத்தின் இன்னொரு உறுப்பாக, இந்தியாவின் பிரஜைகளை அழித்து ஒழிக்கும் அதிகார வர்க்கமாக ஆகும் வரலாற்றின் அவலம் அருமையாக நாவலில் எழுந்து வருகிறது. நடுத்தர வர்க்க வறுமையில் இருந்து தப்பிக்க, உடலை விற்க வேண்டிய கட்டாயத்தையும் ஏற்கும் ஆங்கிலோ இந்தியப் பெண் மரிசா. அவளிடம் காதலுக்காக ஏங்குகிறான், மன்றாடுகிறான் எய்டன். ஆனால், ஒரு கருப்பு இந்தியனின் முதுகுமீது கால்வைத்து வண்டியிலிருந்து இறங்கும் எய்டனின் காதலை நிராகரிக்கிறாள் அவள். நாவலின் நுட்பமான இடங்களில் ஒன்று இது. எய்டனுக்கும் காத்தவராயனுக்கும் இடையேயான விவாதங்கள் நாவலுக்கு ஒரு தர்க்க பூர்வமான, அறிவு சார் தன்மையை அளிக்கின்றன. அரசியல், சமூக வரலாற்றுக் கண்ணோட்டத்தில் இந்த நாவலின் பரிமாணம் வெளிப்படும் இடங்கள் அவை.
கற்பனாவாத கவிஞன் என்று அறியப் பட்டுள்ள ஷெல்லியின் கவிதை வரிகள் எய்டனின் அற உணர்வின் ஊற்றுக் கண்ணாக இருப்பது ஆழமான கலை நோக்கு. அயர்லாந்தின் புல்வெளிகளும், கப்பல் பிரயாணமும், அந்தக் காலத்து சென்னை கடற்கரை சாலையும், செயின்ட் ஜார்ஜ் கோட்டையும் எல்லாம் அபாரமான காட்சிப் படிமங்களாக நாவலில் விரிகின்றன. பிரிட்டிஷ் காரர்களுக்கும் தமிழர்களுக்கும் இடையேயான உரையாடல்களை ஒரு பொதுவான மொழியில் சித்தரிக்க வேண்டிய கட்டாயம். வட்டார வழக்குகளே இல்லாத நடை. ஆயினும், ஆசிரியர் கையாளும் எளிமையான ஆனால் தனித்துவமிக்க மொழியால் இந்த நாவல் உயிர்த்துடிப்பு கொண்டதாக, வாசகர்களுக்கு மிகவும் நெருக்கமான உணர்வைத் தரும் ஒன்றாக ஆகியிருக்கிறது. ஜெயமோகனின் பிரமிப்பூட்டும் எழுத்தாற்றலுக்கான இன்னொரு சாட்சியம் இது. தமிழின் மிகச் சிறந்த வரலாற்று நாவல்களின் பட்டியலில், கட்டாயம் வெள்ளை யானை முதன்மையான இடத்தைப் பெறும்.
*********
ஒரு இலக்கியப் பிரதியாக இந்த நாவலை வாசித்து, அதன் அதிர்வலைகள் அடங்கிய பின்பு , இந்த நாவலில் ஊடாடும் அரசியல், கருத்தியல் என்ன என்றும் யோசிக்க வேண்டியுள்ளது. ஏனென்றால், வெள்ளை யானை, அதன் இலக்கிய மதிப்புக்காக மட்டுமின்றி, அது திறந்து காட்டும் வரலாற்றின் பக்கங்களுக்காகவும், நவீன இந்தியா உருவாகி வரும் காலத்தில் காலனியமும், சமூக அடக்குமுறைகளும் இயங்கிய தளங்களை சித்தரித்தற்காகவுமே அதிகமாக பேசப் படும். ஐஸ் ஹவுஸ், பக்கிங்ஹாம் பிரபு போன்ற விஷயங்கள் மட்டுமல்லாமல், நாவலின் சில பாத்திரங்களும் நேரடியாக வரலாற்று மாந்தர்களின் சாயலுடன் படைக்கப் பட்டுள்ளனர். காத்தவராயன் தெளிவாகவே தலித் இயக்க முன்னோடி அயோத்திதாசரின் வார்ப்பு. ஐஸ்ஹவுஸ் முதலாளி முரஹரி ஐயங்கார் சென்னையின் அக்காலத்திய பிரமுகர்களில் ஒருவரான பிலிகிரி ஐயங்காரின் வார்ப்பாக இருக்கலாம். வழக்கமான பதிப்பகங்கள் அல்லாமல் தலித் அரசியலை முன்வைக்கும் “எழுத்து” பிரசுரம் இதை வெளியிட்டுள்ளது என்பதும் கவனத்திற்குரியது.
முதலாவது, 19ம் நூற்றாண்டின் கொடும் பஞ்சங்கள் பிரிட்டாஷாரால் செயற்கையாக, திட்டமிட்டு உருவாக்கப் பட்டவை என்று வெள்ளை யானை மிக அழுத்தமாக நிறுவுகிறது. துறைமுகங்களில் மூட்டை மூட்டையாக தானியங்கள் கப்பலில் ஏற்றப் படுவது, எலும்பும் தோலுமான மக்கள் தெருக்களில் அங்கங்கு விழுந்து கிடப்பது போன்ற காலனிய கால கோட்டுச் சித்திரங்களைப் பார்த்திருக்கிறோம். வரலாற்று நூல்களைப் படித்திருக்கிறோம். அவை எல்லாவற்றையும் விட ஆழமாக, தீவிரமாக இந்த சரித்திர உண்மையை இந்த நாவல் பொது வாசகர்களுக்கு எடுத்துச் சொல்லி விடுகிறது.
இரண்டாவது, பஞ்சங்களால் மிகப் பெருமளவு பாதிக்கப் பட்டவர்கள் தலித் சமுதாய மக்களே என்ற உண்மை. இந்தியாவில் 1871 முதல் அடுத்தடுத்த பத்தாண்டுகளில் ஆதாரபூர்வ மக்கள் தொகைக் கணக்கெடுப்புகள் நடத்தப் பட்டன. ஆரம்பகால கணக்கெடுப்புகள் இதை உறுதி செய்கின்றன.
மூன்றாவது சித்திரம் – இந்தப் பேரழிவின் போது சாதி இந்துக்களிடம் எந்த நீதியுணர்ச்சியும் வெளிப்படவில்லை. மட்டுமல்ல, தலித்களை மேலதிக வன்மத்துடனுடன் குரூரத்துடனும் அவர்கள் நடத்தினர். அறவுணர்வு சில வெள்ளைக் காரர்களிடம் மட்டுமே எழுந்தது. எளிய இந்திய மக்களுக்காக அவர்கள் மட்டுமே பரிதாபப் பட்டனர். ஏதாவது செய்ய முயற்சித்தனர் என்பது.
நாவலின் பக்கங்களைப் புரட்டப் புரட்ட, ஏதாவது ஒரே ஒரு இந்தியக் குரல், பட்டினியால் வதைபட்டு, தொழிற்சாலையில் உதை பட்டு சாகும் மக்களுக்காக எழுமா என்று யோசித்துக் கொண்டே வருகிறோம். ஒன்று கூட இல்லை. முரஹரி ஐயங்கார், நீலமேகம், நாராயணன், நாயுடுக்கள், செட்டிகள் எல்லாருமே அடக்குமுறையின், வணிக லாபம் தவிர வேறு எதையுமே யோசிக்காத சுயநலத்தின் பிரதிபலிப்பாக இருக்கிறார்கள். டியூக், பக்கிங்ஹாம் போன்ற வெள்ளையர்களூம் இத்தகைய கொடூரர்களே. ஆனால் அங்கு எய்டன், பிரான்னன், ஆண்ட்ரூஸ் போன்ற மனிதாபிமானிகளும் நெறிமுறைப் படி நடக்கும் பிரிட்டிஷ் அதிகாரிகளும் இருக்கிறார்கள்.
இந்தியர்களின், சாதி இந்துக்களின் மனசாட்சி செத்து சுண்ணாம்பாகி உறைந்து கிடந்தது என்ற முகத்தில் அறையும் உண்மை இந்த நாவலின் வாசகர்களை நிலைகுலையச் செய்யும். “இத்தனை மரணங்கள், கொடூரங்கள் அன்று எவரின் ஆன்மாவையும் சீண்டவில்லையா? எவரையும் இம்மி கூட அசைக்கவில்லையா? நாவல் இவ்வுணர்வை நம்முள் எழுப்பி நம்மை கூசி குறுக வைக்கிறது” என்று நரோபா இந்த நாவல் குறித்த தனது விமர்சனத்தில் எழுதுகிறார்.
இது நாம் கசப்புடன் எதிர்கொள்ள வேண்டிய உண்மையின் ஒரு பகுதி. இன்று சுதந்திர இந்தியாவின் அரசியல் சட்டங்கள் தலித்களின் உரிமைகளை, முன்னேற்றத்திற்கான வாய்ப்புகளை உறுதி செய்கின்றன. ஆனால், இன்றும், இந்திய சமூகமும், ஒரு சில இந்து இயக்கங்களும் கூட, தலித்களுக்கு எதிரான சாதிய வெறுப்புடன், காழ்ப்புடன் மட்டுமே இருக்கிறார்கள். ஒவ்வொரு இடத்திலும் தலித்துக்களை வெளியே தள்ளவும், அவமதிக்கவுமே பொது இந்திய சமூகம் முயல்கிறது.
இந்த நாவலை முன்வைத்து, இந்துத்துவர்களாகிய நாம் நம்மைக் கேட்டுக் கொள்ள வேண்டிய கேள்வி இது தான் – 1880களில் கிறித்தவ மதமாற்றத்துக்கு எதிராக துண்டுப் பிரசுரம் அச்சிட்டு வினியோகித்தார் அயோத்திதாசர் என்ற அதி தீவிர வைணவர். பின்னர் எப்படி அவர் அதி தீவிர இந்து மத நிராகரிப்பாளராக ஆனார்? இத்தனை வைணவர்கள் நிறைந்த சென்னையில் அவரது மக்கள் ஏன் அப்படி குரூரமாக கைவிடப் பட்டார்கள்? அதே கேள்வியை நாம் சமகாலத்திற்கும் நீட்டிக்கலாம் – 1980களில் இதே சென்னை நகரத்தில் தலித் மக்களின் குடியிருப்புப் பகுதிகளில் சுமார் 200 ஆர் எஸ் எஸ் கிளைகள் இருந்தன. சங்கப் பணி அருமையாக வளர்ந்து கொண்டிருந்தது. இன்று எத்தனை கிளைகள் உள்ளன?
பொதுவாக, நாட்டின் குடிமக்களுக்கு எதிராக இழைக்கப் படும் குற்றங்கள் – கொலை, கொள்ளை, வன்முறை, பாலியல் அத்துமீறல்கள் – இவை தலித்களுக்கு இழைக்கப் படும் போது நமது ஒட்டுமொத்த சமூகமும், காவல் துறையும், அரசு அமைப்புகளும், ஊடகங்களும் காட்டும் அசட்டையும், மௌனமும் வெளிப்படையானவை. இப்பொழுதே இந்த நிலை என்னும் போது 1877 எப்படி இருந்திருக்கும்? அந்தக் கற்பனையை மிக உக்கிரமாக நாவலாசிரியர் நிகழ்த்தியிருக்கிறார்.
அதே நேரத்தில், சமநிலை கொண்ட வரலாற்றுப் பார்வை என்பது எல்லாத் தரவுகளையும் உற்று நோக்கி பதிவு செய்வதும், பொதுப் படுத்தல்களைத் தவிர்ப்பதும் தான். எனவே, 1870களில் ஒரு இந்தியக் குரல் கூட எழவில்லை என்பது வரலாற்று ரீதியாக சரியல்ல; இந்த நாவல் கவனிக்கத் தவறி விட்ட விஷயங்கள் உள்ளன என்பதையும் சொல்ல வேண்டியிருக்கிறது.
அ) நாவலிலேயே “மதராஸ் மெயில் நிருபர்” என்று ஒரு இடத்தில் வருகிறது. சென்னையில் அப்போதைய பஞ்சத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் பற்றிய செய்திகளை முழுமையாக வெளியிட்டு பிரிட்டிஷ் ஆட்சியாளர்களை சங்கடத்திற்கு உள்ளாக்கியது சாதி இந்துக்கள் நடத்திய இந்தப் பத்திரிகை தான்.
ஆ) 1874ம் ஆண்டு மறைந்த வள்ளலார் பசிப்பிணி போக்குவதே மிக உயர்ந்த தர்மம் என்று ஊரூராக அலைந்து பிரசாரம் செய்திருக்கிறார். இது கண்டிப்பாக மக்களின் மனசாட்சியைத் தீண்டும் செயல் தான். 18,19ம் நூற்றாண்டுகளில் தமிழகத்தின் பல பகுதிகளில் கஞ்சித் தொட்டிகள் அமைக்கப் பட்டு எல்லா சாதியாருக்கும் பஞ்சகாலத்தில் உணவளிக்கும் தானதர்ம அமைப்புகள் இருந்தது பற்றி ஜெயமோகனே எழுதியிருக்கிறார். அவை சென்னை, செங்கல்பட்டு பகுதிகளில் செயல்படாமல் போனது ஏன்? அவற்றின் செயல்பாடு குறைந்த கூலியில் கூலியாட்கள் கிடைப்பதை தடுக்கும் என்பதால் பிரிட்டிஷ் அரசே கூட அதைத் தடை செய்து, முடக்கி இருக்கலாம். பஞ்சத்தின் கொடுமைகள் இந்திய ஆட்சியாளர்களின் அதிகாரத்திற்கு உட்பட்ட சமஸ்தானப் பகுதிகளை விட, பிரிட்டிஷார் நேரடியாக ஆண்ட பகுதிகளில் அதிகமாக இருந்ததற்கு என்ன காரணம்? இத்தகைய விஷயங்களுக்கான தரவுகள் கட்டாயம் இருக்கும். அ.நீ, ம.வெங்கடேசன் போன்ற ஆய்வாளர்கள் அவற்றைத் தேடி அளிக்க வேண்டும்.
இ) இந்திய தேசியவாதியான தாதாபாய் நவுரோஜி 1876 முதலே பிரிட்டிஷ் அரசு இந்தியப் பொருளாதாரத்தை சுரண்டுவதைக் குறித்து கவனப் படுத்தினார். 1901ம் ஆண்டு அவர் எழுதிய Poverty and UnBritish Rule என்ற புத்தகம் படித்த இந்தியர்களிடையே பிரிட்டிஷ் அரசின் அநீதியைத் தோலுரித்தது. “பொழுதெல்லாம் எங்கள் செல்வம் கொள்ளை கொண்டு போகவோ – நாங்கள் சாகவோ” என்று பாரதி பாடியது இதன் தாக்கத்தால் தான். நவுரோஜியின் கட்டுரைகளை பாரதி மொழி பெயர்த்திருக்கிறார். விவேகானந்தரின் கொதிப்பை இக்கட்டுரையின் ஆரம்பத்திலேயே பார்த்தோம்.
இந்திய – வெள்ளையின பண்பாடுகளும், இந்து – கிறிஸ்தவ மதங்களும் அடிப்படையிலேயே எதிரெதிராக வேறு பட்டுள்ளன என்று நாவலில் உணர்த்திச் செல்லப் படுகிறது. கருணையே உருவான ஏசு பிரிட்டிஷ் காரர்களின் மனசாட்சிக்கு, நீதியுணர்வுக்கு வழிகாட்டியாக இருக்கிறார். ஆனால் பள்ளி கொண்ட பெருமாள், விஷப் பாம்பு மீது படுத்துக் கொண்டு ஏழை மக்களை அடக்கு முறையாளர்கள் வதைப்பதை பார்த்து ரசிக்கிறார். இத்தகைய பொத்தாம் பொதுவான உருவகம் அபத்தமானது என்று எல்லாருக்கும் தெரியும். ஆனால் சமகால அரசியலில் இந்து மத எதிர்ப்புக்கு இதை சுளுவாகப் பயன்படுத்த முடியும். காத்தவராயன் பேசும் சில இடங்களில் அப்பட்டமான இனவாதமும், கடும் எதிர் துவேஷமும் கொப்பளிக்கின்றன. தனது இனத்தவரை வதைத்துக் கொல்வது அவர்கள் அனைவரின் கண்களிலும் களிப்பை வரவழைக்கிறது என்று பிற இந்திய சமூகத்தின் அனைத்து மக்களையும் விரோதிக்கும் காத்தவராயனின் மன நிலையுடன், புண்ணியத்தையும் தர்மத்தையும் குறித்து பேசும் அவனது தார்மீகம் ஒட்டவில்லை. நாவலின் இத்தகைய அம்சங்கள் எளிதில் வெறுப்புணர்வுப் பிரசாரங்களுக்குக் கருவியாக ஆகக் கூடும்.
ஜெயமோகனின் பல படைப்புகளில் நான் மேலே குறிப்பிட்ட வரலாற்றுச் சமநிலை உண்டு. பின் தொடரும் நிழலின் குரல் நாவல் மார்க்சிய சர்வாதிகாரத்தை, வன்முறையை தோலுரித்து அதே சமயம் அதன் மெய்யியலுக்கு இடம் கொடுக்கிறது. காடு நாவலில் மலையில் கிறிஸ்தவ மிஷனரிகளின் பணிகள் சொல்லப் பட்டு, அதைக் கேள்வி கேட்கும் ஆட்களும் இருக்கிறார்கள். ஆனால் இந்த நாவல், அவ்வாறு இல்லாமல் முழுவதும் ஒரு பக்கச் சாய்வாக உள்ளது என்று கருத இடமிருக்கிறது. சமநிலையான பார்வை நாவலின் தீவிர உணர்ச்சிகளைக் குலைக்கும் என்று கூட ஆசிரியர் கருதியிருக்கலாம். ஜெயமோகனின் படைப்பு சுதந்திரத்திற்கு உட்பட்ட விஷயம் அது.
வெள்ளை யானை நமது சமூக, வரலாற்றுப் பார்வைகளில் ஒரு திறப்பையும், மாறுபடும் இடங்களில் விமர்சனங்களையும் கோரி நிற்கக் கூடிய நாவல். அதன் சாராம்சமான செய்தி என்றால் விவேகானந்தரின் கீழ்க்கண்ட வாசகங்கள் தான் –
“இந்தப் பாமர மக்கள் ஆயிரக் கணக்கான ஆண்டுகளாக ஒடுக்கி நசுக்கப் பட்டிருக்கிறார்கள். கஷ்டங்களை சகித்திருக்கிறார்கள். முடிவில்லாத துன்பத்தை அனுபவித்ததின் பயனாக, ஆச்சர்யகரமான பொறுமையும், தைரியமும் பெற்றுள்ளார்கள். ஒரு கைப்பிடி அளவு தானியத்தை வைத்துக் கொண்டு உயிர் வாழ்ந்து அவர்கள் இந்த உலத்தையே உலுக்கி ஆட்டி விடுவார்கள். அவர்களுக்கு அரை வயிற்றுக்கு உணவு கொடுங்கள். பிறகு தோன்றுகிற அவர்களின் சக்தியைப் பாருங்கள். இந்த உலகமே கொள்ளாது.”
நாளை மீண்டும் சந்திப்போம்.
கட்டுரையாசிரியர் எந்த ஆதாரத்தின் அடிப்படையில் இன்று தலித் மக்கள் குடியிருப்புகளில் RSS கிளைகள் / வேலைகள் நடைபெறவில்லை எனக் கூறுகிறார்? தமிழ் ஹிந்து ஆசிரியர் குழு RSS நிர்வாகிகளிடமிருந்து இதற்கான விளக்கத்தினைப் பெற்று இங்கு வெளியிடுமாறு கேட்டுக் கொள்கிறேன்
ஆண்டவன் முன்னால் உயர்ந்தவன் தாழ்ந்தவன் ஏழை பணக்காரன் போன்ற பாகுபாடு கிடையாது. பகவான் அன்புக்கு ஆட்பட்டவன். திருபாணன் நந்தனார் வாழ்க்கையில் நிகழ்ந்த சான்றுகளில் அறியலாம். தீண்டாமை நோயால் ஹிந்து மதம் ஆபத்தை நோக்கி உள்ளது. ஆச்சாரிய புருஷர்களுக்கு வெளிநாடுகளில் இருந்து வரும் பணம் தான் முக்கியம் தாழ்த்த ஏழை எளியோருக்கு குறிப்பாக தலித் சமுசாயதிற்கு என்ன செய்தார்கள் என்பது அறியாமல் உள்ளன
நண்பர் ஜடாயு,
வெள்ளையானை பற்றிய உங்கள் விமர்சனம் வியப்பூட்டும் தகவல்களைச் சொல்கிறது. குறிப்பாக உங்கள் கட்டுரையின் தொடக்கம். தலித் மக்கள் இந்திய மக்களாலேயே பசியில் அவதியுறும் போது கண்டுங் காணாமல் கைவிடப் பட்ட அவலம் தொனிக்கிறது. விரிவாக எழுதியிருக்கிறீர்கள். வெள்ளை யானையை சென்னையிலிருந்து வாங்கி வரச்சொல்லிருக்கிறேன். மற்றவர் விமர்சங்களோடு உங்களுடைய ஒப்பிட்டுப் பார்க்கிறேன். அற்புதம்.
கோ.புண்ணியவான்.
\\தமிழில் தாது வருஷப் பஞ்சம் குறித்த கும்மிகள், நாட்டார் பாடல்கள் போன்ற பொதுமக்களின் பதிவுகள் இருந்தாலும், நவீன இலக்கியத்தில் அழுத்தமாக, பிரக்ஞை பூர்வமாக இது பேசப் படவில்லை\\
பூமணியின் அஞ்ஞாடி இது குறித்து மிக விரிவாகவே பேசுகிறது.
நீங்கள் கடைசியாக குறிப்பிட்ட விவேகானந்தரின் வாக்கியங்கள் மிகவும் அருமை. மேலும் “அயோத்திதாசர் என்ற அதி தீவிர வைணவர். பின்னர் எப்படி அவர் அதி தீவிர இந்து மத நிராகரிப்பாளராக ஆனார்? இத்தனை வைணவர்கள் நிறைந்த சென்னையில் அவரது மக்கள் ஏன் அப்படி குரூரமாக கைவிடப் பட்டார்கள்?” என்று குறிப்பிட்டு இருக்கறீர்கள்.இது பற்றிய மேலதிக தகவல்களை தெரிவிக்கமுடியுமா.
அன்புள்ள A.seshagiri அவர்களுக்கு, அயோத்தி தாசர் வாழ்க்கை வரலாறு குறித்த எல்லா நூல்களிலும் அந்தத் தகவல்கள் உள்ளன.
அயோத்திதாசர் 1845ல் சென்னையில் பிறந்தவர். அவரது குடும்பம் தாழ்த்தப் பட்ட சாதியைச் சேர்ந்ததாக இருந்தாலும், வைணவ சமயத்தைப் பின்பற்றியது (பாட்டனாரோ அல்லது முன்னோர்களோ ஒரு காலகட்டத்தில் ராமானுஜ தாசர்களாக ஆகியிருக்கலாம்) பிறகு நீலகிரிக்கு புலம்பெயர்ந்தார். அங்கு பழங்குடிகளான தோடர்களை அணிதிரட்டி 1870 களில் ‘அத்வைதானந்த சபை’ நிறுவினார்.. இந்த காலகட்டத்தில் அவருக்கு வேதாந்தம் மீதும் சிறிது ஈர்ப்பு இருந்தது.. ஆனால் அவரது முதன்மையான அடையாளமாக இருந்தது வைணவம் தான். கிருத்துவ மதமாற்றத்திற்கு எதிராக செயல்பட்டார். அவரது மகன்களுக்கு மாதவராமன், பட்டாபிராமன், ஜானகி ராமன், ராஜா ராமன் என்று வைண்வப் பெயர்கள் தான் வைக்கப் பட்டன… அவரது பிற்கால இந்து மத நிராகரிப்பு என்பது நிலவுடைமை பிரசினைகள், சாதி இந்துக்களால் கோயில்களில் நுழையும் உரிமை மறுக்கப் பட்டது, போன்ற பற்பல காரணங்களால் உருவானது. நாவலில், 1877 பஞ்சத்தின் பின்னணியில், தொழிலாளர் போராட்டம் தோற்கடிக்கப் பட்ட மன விரக்தியில் காத்தவராயன் தனது வைணவத்தைத் துறப்பதாக ஜெயமோகன் எழுதியிருக்கிறார். வரலாற்றூ நாவல்களீல் அத்தகைய புனைவு சுதந்திரம் எப்போதும் இருப்பது தான்..
// இத்தனை வைணவர்கள் நிறைந்த சென்னையில் அவரது மக்கள் ஏன் அப்படி குரூரமாக கைவிடப் பட்டார்கள்? // என்பது ஒரு தர்க்க பூர்வமான, implied கேள்வி.. அவர் எந்தெந்த வைணவர்களிடம் போனார், அவர்கள் உதவி மறுத்தற்கு ஆதாரம் உண்டா என்றெல்லாம் கேட்டால் நான் ஜுட்.. “வைணவர்கள்” என்பதற்குப் பதிலாக சைவர்கள், சனாதனிகள், சாதி இந்துக்கள் என்று இட்டு நிரப்பிக் கொள்ளுங்கள். கேள்வியின் தொனி அதே தான்.. அயோத்தி தாசர் என்று குறிப்பிட்டு சொல்வதால் வைணவர்கள் என்று சொல்வது சரிதான். உடனே உலக வைணவர்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து வந்து என்னைக் குதற வேண்டாம் என்றூ தயை கூர்ந்து கேட்டுக் கொள்கிறேன்..
இன்னொரு சுவாரஸ்யமான நகைமுரண் – அவரது அடுத்தடுத்த சந்ததியினர் இன்றும் வைணவ ஹிந்துக்களாகத் தான் தொடர்கிறார்கள் என்று கேள்வியுறூகிறேன். அவர் அரசியல் இயக்கத்தில் எடுத்த தீவிர கருத்து நிலைப்பாடுகள் குடும்ப அளவில் தாக்கம் ஏற்படுத்தவில்லை என்றூ தெரிகிறது.
ஸ்ரீ ஜடாயு வழங்கிய அயோத்திதாஸர் வாழ்கைக்குறிப்பு கர்னாடகத்து வீரசைவ ஞானி புரட்சியாளர் பசவண்ணர் சொன்ன தயவே தர்மத்தின் மூலம் என்பதை நமக்கு நினைவூட்டுகிறது. புத்தர் சொன்ன கருணையும் அதுவே. சைவமாகிலும் வைணவமாயினும் கருணைவேண்டும். கருணையற்ற வழிபாடு பாலை நிலத்தில் விழுந்த விதையைப்போலப்பயனற்றுப்போய்விடும். நாம் கருணையை இழந்ததாலே கருணை நாடகத்தினைக்காட்டி பல லட்சம் ஆதிவாசி தலித் மக்களை போலிக்கருணைக்காட்டி அபிராஹாமியர் மதமாற்றிவிட்டார்கள். அயோத்தி தாஸர் பேரரறிஞர் அதனால் அவர் பவுத்தரானார்.
மதமாற்றமும், வேற்று மதங்களின் வரவும் உண்மையில் நம் இந்துச்சமூகத்தில் ஒரு விதத்தில் நன்மையை உண்டாக்கின என்று சிந்திக்க இக்கட்டுரை தூண்டுகிறது..
அப்படி, வேறு மதங்கள் (கிறிஸ்தவம் போன்ற) இங்கு வாராதிருந்தால், இந்து ஜாதி வெறியர்களின் அட்டகாசம் இன்னும் இன்னும் அதிகரித்திருக்கும்……
இந்த வெறியர்களை அடக்கி, அழிப்பதற்காகவே, பகவான் அவதாரம் செய்ய வேண்டியிருந்திருக்கும்…. என்று நினைக்க வேண்டியிருக்கிறது…
திரு கோபி இராமமூர்த்தி அவர்கள் கூறியிருப்பது போலவே பூமணியின் அஞ்ஞாடி தாதுவருஷப் பஞ்சம் குறித்து விரிவாகப் பேசுகிறது. வெளிப்படையான அரசியல் சார்புகள் தெரியாமல் தரவுகளின் அடிப்படையில் நிலம், நீர், உணவு மற்றும் தாவரங்கள், மிருகங்கள், பறவைகள் என பஞ்சத்தால் பாதிக்கப்பட்ட அனைத்தையும் பூமணி சித்தரித்திருப்பது ஒரு பெரும் இலக்கிய சாதனைதான்.
எனவே தாது வருஷப் பஞ்சத்தைப் பற்றி அறிந்திராத தமிழ் வாசகச் சூழலில் முன்னோடி முயற்சியான அஞ்ஞாடி பற்றிக் குறிப்பிடுவது அவசியமென்றே கருதுகிறேன்.
“அயோத்தி தாசர் (மே 20, 1845 – 1914; தமிழ்நாடு) தென்னிந்தியாவின் முதல் சாதி எதிர்ப்புப் போராளி , சமூக சேவகர், தமிழ் அறிஞர் மற்றும் சித்த மருத்துவர் ஆவார். தலித் இயக்கம் உருவாக வித்திட்ட முன்னோடிகளில் இவர் ஒருவர். தலித் பின்புலத்தில் இருந்து வந்த இவர், ”
“பெரும் கல்விப்புலம் மிக்க குடும்பத்தில் பிறந்தவர் , இவருடைய தாத்தா பட்லர் கந்தப்பன் அவர்கள்தான் பிரதிகள் அழிந்து நூற்றாண்டுகளாக வழக்கில் இல்லாமல் போயிருந்த திருக்குறளை தன் குடும்ப சேமிப்பு ஏடுகளில் இருந்து மீட்டு எல்லிஸ் துரையிடம் வழங்கியவர் , அதன்பின் திருக்குறள் இன்றைய அச்சு வடிவுக்கு வந்தது ”
விக்கிபீடியாவில் இப்படி இருக்கிறது.
நூறு சொச்சம் வருடங்களுக்கு முன்னால் ஒரு தலித் பின்புலத்தில் இருந்து வந்த ஒருவர் தமிழ் அறிஞரகாக சித்த மருத்துவம் தெரிந்தவராக இருந்திருக்கிறார்.
அவர் தம் பாட்டன் மொழி அறிவு கொண்டவராக இருந்திருக்கிறார்.
மேலும் விக்கியில்
“தலித்கள் கல்வியில் மட்டுமே முன்னேறமுடியும் என்ற நம்பிக்கையில், வெசிலியன் மிஷன் பள்ளியை ஆயிரம் விளக்கு பகுதியில் தலித்களுக்காக நடத்திய அருட்திரு டி ஜான்ரத்தினம் அவர்களோடு தொடர்பு ஏற்பட்டது. ஜான்ரத்தினம் நடத்திய ‘திரவிடர் கழகம்’ அதன் சார்பாக வெளிவந்த ‘திராவிட பாண்டியன்’ என்ற செய்தி இதழிலும் பண்டிதர் பங்கெடுத்துக் கொண்டார்”
திராவிட இயக்கம் பற்றி , அதன் தலைமை குறிப்பிட்ட சில உயர் ஜாதிகளின் காவலர்களாக மட்டும் இருந்தது பற்றி, அவர்கள் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு என்ன செய்தார்கள் என்பது பற்றி இத்தளத்தில் நிறைய கட்டுரைகள் வந்தாயிற்று.
“இன்னொரு சுவாரஸ்யமான நகைமுரண் – அவரது அடுத்தடுத்த சந்ததியினர் இன்றும் வைணவ ஹிந்துக்களாகத் தான் தொடர்கிறார்கள் என்று கேள்வியுறூகிறேன். அவர் அரசியல் இயக்கத்தில் எடுத்த தீவிர கருத்து நிலைப்பாடுகள் குடும்ப அளவில் தாக்கம் ஏற்படுத்தவில்லை என்றூ தெரிகிறது.”
அவர்களது சந்ததியினர் “ஜாதி ஒழிப்பு” பேசும் இயக்கங்களின் உண்மை முகம் அறிந்து தங்கள் முன்னோர் காலகாலமாககொண்ட தெய்வ நம்பிக்கையை விட வேண்டாம் என்று எண்ணியிருக்கலாம்.
சாய்