ஸ்ரீமத் வால்மீகி ராமாயண படைப்பாய்வுகள் – ஒரு பறவைப் பார்வை – பாகம் – 2

வன்தாளி னிணைவணங்கி வளநகரம் தொழுதேத்த மன்ன னாவான்
நின்றாயை* அரியணைமே லிருந்தாயை நெடுங்கானம் படரப் போகு
என்றாள்*எம் இராமாவோ! உனைப்பயந்த கைகேசி தன்சொற் கேட்டு*
நன்றாக நானிலத்தை யாள்வித்தேன் நன்மகனே! உன்னை நானே.

முந்தையவை: பகுதி 1

…….. இந்தியவியலாளர்களின் ஆக்ஷேபங்களும் அதற்கெதிரான சமாதானங்களும்

5. மதம் மற்றும் புராணக் கட்டமைப்பு சார்ந்த விஷயங்கள் பால மற்றும் உத்தரகாண்டங்களில் மற்றும் ராமாயணத்தின் மற்ற காண்டங்களிலிருந்து வேறுபடுதல்

டாக்டர் எம்.விண்டர்னிட்ஸ் (Dr.M.Winternitz) மற்றும் டாக்டர் ஜேக்கபி (Dr.Jacobi) :-

பால காண்டம் மற்றும் உத்தரகாண்டம் இவையிரண்டில் மட்டிலும் ராமபிரான் விஷ்ணுவின் அவதாரமாகக் காட்டப்படுகிறார். இரண்டாம் காண்டம் முதல் ஆறாம் காண்டம் வரை பொதுவிலே தீரம் மிக்க கதாநாயகனாகவும் மனிதனாகவுமே ராமபிரான் காட்டப்படுகிறார். இந்தப் பகுதிகளிலும் சில இடங்களில் ராமபிரான் விஷ்ணுவின் அவதாரமாகக் காட்டப்படுகிறார் என்பது வாஸ்தவம் தான். ஆனால் அவை இடைச்செருகல்கள் எனக்கருதப்படவேண்டும் என விண்டர்னிட்ஸ் அபிப்ராயப்படுகிறார். எங்கெல்லாம் பௌராணிகமான கதைப்பகுதிகள் வருகின்றனவோ அங்கெல்லாம் வேதத்தில் சொல்லப்பட்ட இந்த்ரனே ராமாயணத்தில் சொல்லப்படும் கடவுளாக எடுத்துக்கொள்ளப்படவேண்டுமே அல்லாது விஷ்ணு அல்ல எனவும் அபிப்ராயப்படுகிறார்.

இந்தியவியலாளர்கள் வேதகாலம் மற்றும் பௌராணிக காலம் என காலக்கணக்குகளை விபாகம் செய்தபடிக்கு இந்த ஆக்ஷேபம் அணுகப்படுகிறது. விண்டர்னிட்ஸ் அவர்களின் கருத்து ராமாயண கால நிகழ்வுகளில் பொருந்தாது என்பது மட்டுமல்ல. பௌராணிக ராமாயண காலத்திற்கு முற்பட்டதான பின்-வேத காலத்திலேயே இந்த்ரனின் முக்யத்வம் பின் தள்ளப்பட்டுள்ளது என்பதைப் புறக்கணிக்க முடியாது. இந்த்ரன் தேவர்களுக்கெல்லாம் தலைவன் என்று காட்டப்பட்டாலும் மும்மூர்த்திளை விட தாழ்ந்த ஸ்தானத்தில் சொல்லப்படுகிறான் பின்-வேத காலத்தில் என்பது நோக்கத் தக்கது.

ராமாயண காவ்யத்தில் இரண்டு தேவர்கள் மட்டிலும் உயர்வான ஸ்தானத்தில் சுட்டப்படுகிறார்கள். ப்ரம்மா மற்றும் விஷ்ணு. தேவாசுரர்களுக்கான மோதலில் ப்ரம்மா நடக்க வேண்டிய விஷயங்களைத் திட்டமிட விஷ்ணுவின் அவதாரமான ராமபிரான் அனைத்து நற்சக்திகளின் உருவகமான தேவர்களுக்காக (இந்த்ரன் உள்ளிட்ட) செயல்பாடுகளை நிகழ்த்தி ராவணனுடன் மோதி ராவணனை வதம் செய்கிறார்.

இந்தியவியலாளர்கள் வேதகாலம் மற்றும் பௌராணிக காலம் என காலக்கணக்குகளை விபாகம் செய்தபடிக்கு இந்த ஆக்ஷேபம் அணுகப்படுகிறது. விண்டர்னிட்ஸ் அவர்களின் கருத்து ராமாயண கால நிகழ்வுகளில் பொருந்தாது என்பது மட்டுமல்ல. பௌராணிக ராமாயண காலத்திற்கு முற்பட்டதான பின்-வேத காலத்திலேயே இந்த்ரனின் முக்யத்வம் பின் தள்ளப்பட்டுள்ளது என்பதைப் புறக்கணிக்க முடியாது. இந்த்ரன் தேவர்களுக்கெல்லாம் தலைவன் என்று காட்டப்பட்டாலும் மும்மூர்த்திளை விட தாழ்ந்த ஸ்தானத்தில் சொல்லப்படுகிறான் பின்-வேத காலத்தில் என்பது நோக்கத் தக்கது.
.

டாக்டர் ஜேக்கபி அவர்களும் முதல் மற்றும் ஏழாம் காண்டத்தில் ராமபிரான் விஷ்ணுவின் அவதாரமாகக் காட்டப்பட்டாலும் மற்ற காண்டங்களில் மனிதனாகக் காட்டப்படுகிறான் என்ற கருத்தைக் கொண்டுள்ளார். ஆயினும் அதிலும் கூட இரண்டாம் காண்டத்தில் மனிதனாகவும் ஆனால் மூன்று முதலாக ஆறாம் காண்டத்தில் அதிமானுஷ்யனாகவும் அபூர்வ சக்திகள் வாய்ந்தவனாகவும் காட்டப்படுகின்றான் என்ற பேதமுடனான கருத்தையும் முன்வைக்கிறார்.

அவருடைய உருவகப்படி இரண்டாம் காண்டத்தில் மனிதனாக முன்வைக்கப்படும் ராமபிரானை மூன்றாம் காண்டத்திலிருந்து இந்த்ரனாக உருவகப்படுத்துகிறார். வாயுமைந்தன் ஹனுமனின் துணையோடு இந்த்ரனாக உருவகப்படுத்தப்படும் ராமபிரான் இந்த்ரனுக்கு எதிரியாக உருவகப்படுத்தப்பட்டுள்ள வ்ருத்ராசுரனின் (ராவணன்) பிடியிலிருக்கும் சீதாபிராட்டியை மீட்பதாக ஒரு புரிதலை முன்வைக்க விழைகிறார்.

ramayana-hanuman

ராமாயண காவ்ய நாயகன் மூன்று நிலைகளில் முன்வைக்கப்படுவதாக ஜேக்கபி அவர்கள் கருதுகிறார்.

கதாநாயகனான ராமன் அறத்தை நிலைநாட்டும் நாயகனாக மாற்றப்படுகிறான். பின்னர் ஒரு குழுவின் நாயகனான அவன் முழு தேசத்திற்கும் நாயகனாக முன்வைக்கப்படுகிறான்.

அல்லது மனிதனிலிருந்து தேவனாகவும் பின்னர் மும்மூர்த்திகளில் ஒருவரான விஷ்ணுவின் அவதாரமாகவும் சித்தரிக்கப்படுகிறான் என்றும் கருதலாம்.

ஹிந்துஸ்தானமுழுதும் கவிதா சாஹித்யங்களில் கதாநாயகர்கள் இவ்வாறு வெகு உயர்ந்த நிலையில் கொண்டாடப்படுகிறார்கள் என்பதும் அவதானிக்கத்தக்கது. ப்ருத்விராஜன் மற்றும் சமுத்ரகுப்தர் இவ்வாறு கொண்டாடப்படுவது ஸ்ரீ ஷர்மா அவர்களால் சுட்டப்படுகிறது.

தமிழகத்திலும் ஸ்ரீ மதுரை வீரன், கதாநாயகன் என்ற ஸ்தானத்திற்குப் பின் காலப்போக்கில் கடவுளாகவே கொண்டாடப்படுவது மண்ணின் மாண்பு என்பதனை மறுக்க இயலாது.

மக்களுக்குத் தலைவனான அரசனை விஷ்ணுவின் அம்சமாகவே கருதுவது தேசத்தின் மாண்பு. கடவுளே இல்லை என்று சொல்லிய ஸ்ரீ ராமசாமி நாயக்கர் அவர்களையே கடவுளாக்கி அவர் சிலைக்கு சூடம் கொளுத்தி தேங்காய் உடைப்பது என்பது நகைச்சுவையான விஷயமன்று. இந்த தேசத்தில் மக்களின் (ஒரு குழுவின்) தலைவனாக கருதப்படுபவரை கடவுளுக்கீடாகக் கொண்டாடுவது என்பதின் தொடர்ச்சி இந்த விஷயம் என்பது நோக்கத் தகுந்தது. இது இந்த மண்ணின் மாண்பு. இந்த மண்ணின் என்ற படிக்கு தமிழகம் மட்டுமின்றி முழு ஹிந்துஸ்தானத்திலும் என்பது நோக்கத் தகுந்தது.

முழுமையும் ஹைந்தவமான ஒரு விஷயத்தை முழுவதுமான மேற்கத்திய கண்ணோட்டத்தில் பார்க்க விழையும் ஆய்வாளர்களுக்கு ராமபிரான் என்ற பாத்ரத்தை புரிந்து கொள்வதில் வெகுவான குழப்பங்கள் உள்ளன என்பது திண்ணம். வால்மீகி ராமபிரானை மனிதனாகக் காண்பித்தாலும் முழு ராமாயண காவ்யத்திலும் விரவியுள்ள எண்ணிறந்த நிகழ்வுகளில் ராமபிரானில் பொதிந்துள்ள அமானுஷ்யமான தெய்வீகத்தன்மைகளையும் கூடவே காட்டுகிறார் என்பதனை மறுக்கவியலாது.

6. ராமாயண காவ்யத்தில் உபயோகிக்கப்பட்டுள்ள பாஷை மற்றும் கவிதை முறைமைகளில் முதல், கடைசீ காண்டத்திலும் மேலும் மற்றைய காண்டங்களிலும் காணப்படும் வேறுபாடு.

கவிதை முறைமை மற்றும் பாஷையின் ப்ரயோகம் என்ற நோக்கில் பரிசீலனை செய்கையில் இரண்டு முதல் ஆறாம் காண்டங்களில் காணக்கிட்டும் உயர்வான ஒரு சைலி முதல் மற்றும் கடைசீ காண்டங்களில் காணப்படுவதில்லை என விண்டர்னிட்ஸ் அபிப்ராயப்படுகிறார். இது மட்டுமின்றி இன்னொரு கருத்தையும் முன்வைக்கிறார். ராமாயண கவிதைகள் பொதுமக்களிடையே வெகுவாகப் புழங்கியதைக் கண்ணுற்ற ப்ராம்மணர்கள் அந்தக் காவ்யத்தை தங்கள் வசம் ஏற்று மதசார்பற்ற (secular) காவ்யத்தில் தங்களுடைய மதம் சார்ந்த மற்றும் இறையியல் சார்ந்த கருத்துக்களை நுழைத்துள்ளார்கள் எனக்கருத முகாந்திரம் இருக்கிறது என்று கருத்து தெரிவித்துள்ளார்.

இது போன்ற கருத்துக்கள் ராமாயண காவ்யத்தை முழுமையான ஆய்வுக்கு உட்படுத்தியதில் மறுதலிக்கப்படுகின்றன. டாக்டர் ஜேக்கபி அவர்கள் முழு ராமாயண காவ்யத்திலும் முதல் காண்டத்திலிருந்து ஏழாம் காண்டம் வரை கிட்டத்தட்ட ஒரே மாதிரியான சந்தஸ் (பா முறை) கையாளப்பட்டதாகவும் அதுவும் கிட்டத்தட்ட ஓரே சைலியில் அவை காணப்படுவதாகவும் கருத்துத் தெரிவித்துள்ளார். இவ்வளவு மிகப்புராதனமான காவ்யத்தில் இலக்கணப்பிழைகள் காணப்படுவதும் கூட இயல்பே. இலக்கணப்பிழைகள் கூட முழு ராமாயண காவ்யத்திலும் கிட்டத்தட்ட ஒரே மாதிரி காணப்படுகின்றன என்று ஜேக்கபி அவதானிக்கிறார். ஆக 1 மற்றும் 7ம் காண்டங்களை 2-6 காண்டங்களிலிருந்து வேறாகக் காண்பதற்கு பாஷா ப்ரயோகமோ கவிதை முறைமைகளோ காரணி ஆக முடியாது என்பது சித்தம்.

விருப்பு வெறுப்புகள் சார்ந்த படிக்கு காவ்யம் மறுவடிவமைப்புக்கு உட்பட்டுள்ளது எனில் நிஜப்பகுதிகள் மற்றும் இடைச்செருகலான பகுதிகளில் கதைக்கரு சார்ந்தோ பாஷாப்ரயோகம் சார்ந்தோ கவிதை முறைமைகள் சார்ந்தோ வேறுபாடுகளை நிறுவ வேண்டும். ஆனால் ஒட்டுமொத்தமான பார்வையில் எந்தப் பகுதிகள் (1-7) இடைச்செருகல்கள் என்று கருதப்படுகிறதோ அவை நிஜம் என்று கருதப்படும் (2-6) பகுதிகளிலிருந்து எந்த விதத்திலும் வேறுபடவில்லை என *நேர்மையாக* ஜேக்கபி அவர்கள் கருத்துப்பதிகிறார்.

இதே கருத்தை மேக்டொனல் அவர்களும் அவதானிக்கிறார். மேலும் க்ஷத்ரியர்களுடைய மாண்பைக் காட்டும் ஒரு காவ்யத்தில் ப்ராம்மணர்கள் அவர்களுடைய கருத்துக்களை வலிந்து நுழைத்துள்ளனர் என்று கருத எந்த முகாந்தரமும் இல்லை என்ற கருத்தை “A history of Sanskrit Literature” என்ற தனது நூலில் ஸ்ரீ மேக்டொனல் அவர்கள் பகிர்ந்துள்ளார்.

இதே சமயத்தில் காவ்ய ஆராய்ச்சி என்ற நோக்கில் மிக முக்யமாக முன்வைக்கப்பட வேண்டிய கருத்தினையும் ஸ்ரீ ஷர்மா அவர்கள் முன் வைக்கிறார்.

ஒட்டு மொத்தமாக பாஷா ப்ரயோகம் மற்றும் கவிதை முறைமை இவற்றில் முழு ராமாயண காவ்யத்திலும் ஜேக்கபி அவர்களும் மேக்டொனல் அவர்களும் ஒற்றுமையையே காண்கின்றனர். ஆயினும் ஸ்ரீ ஷர்மா அவர்களது கூற்றுப்படி ஒரு பெரும் காவ்யத்தில் பாஷா ப்ரயோகங்கள் மற்றும் பா முறைமைகள் ஆகியவை சொல்லப்படும் விஷயம், சொல்லப்படும் பாத்ரம், சொல்லப்படும் நிகழ்வு இவை சார்ந்து மாறுபட சாத்யக்கூறுகள் உள்ளன என்பதை மறுக்க இயலாது. உதாரணத்திற்கு சுந்தர காண்டத்தில் இயற்கையை வர்ணிக்கும் இடங்களிலும் உரையாடல்கள் காணப்படும் இடங்களிலும் லங்காபுரியை வர்ணிக்கும் இடங்களிலும் காணப்படும் பாஷா ப்ரயோகம் மற்றும் பா முறைமைகள் யுத்த காண்டத்தில் யுத்தத்தை வர்ணிக்கும் போக்கிலிருந்து மாறுபடுவது இயல்பே என்பதை அவதானிக்க முடியும்.

பால காண்டம் மற்றும் உத்தர காண்டம் மூல ராமாயணத்தின் அங்கமாக இருக்கக் கூடிய சாத்தியக்கூறுகளை மற்றொரு இதிஹாசமான மஹாபாரதம் மூலமும் ஸ்ரீ ஷர்மா அவர்கள் அணுகுகிறார். ராமாயண காவ்யத்தைப் பற்றியும் ராமாயண கதாபாத்ரங்கள் பற்றியும் அதன் ஆசிரியரான வால்மீகி முனிவர் பற்றியும் மஹாபாரதத்தில் உள்ள குறிப்புகள் நோக்கத் தக்கவை. யுத்தகாண்டத்தில் சொல்லப்படும் ச்லோகத்தின் ஒரு பாதி (hemistich) அப்படியே மஹாபாரதத்தில் வார்த்தைக்கு வார்த்தை எடுத்துக்காட்டப்படுகிறது எனப் பகிருகிறார்.

யுத்தகாண்டத்தில் மாயாசீதையை இந்த்ரஜித் வாளால் வதம் செய்யும் படலம்

யுத்தகாண்டம் – 71ம் சர்க்கம் – 27ம் ச்லோகம் (ச்லோகத்தின் முதல் பாதி)

न हन्तव्याः स्त्रियश्चेति यद्ब्रवीषि प्लवङ्गम

ந ஹந்தவ்யா: ஸ்த்ரியஸ்சேதி யத்3ப்3ரவீஷி ப்லவங்கம

குரங்கே! பெண்களை வதம் செய்யலாகாது என்று நீ சொல்வது சரி தான் (இந்த்ரஜித் ஹனுமனிடம்)

தவிர மஹாபாரதத்தில் நான்கு இடங்களில் ராமகதை சொல்லப்படுகிறது

  1. ஆரண்யகபர்வத்தில் காணப்படும் ராமோபாக்யானம் (ராமகதை)
  2. ஆரண்யகபர்வத்தில் காணப்படும் ஹனுமத் – பீம சம்வாதம் (உரையாடல்)
  3. த்ரோணபர்வத்தில் காணப்படும் ஷோடசராஜோபாக்யானம் ( பதினாறு ராஜாக்களைப் பற்றிய கதைகள்)
  4. சாந்திபர்வத்தில் காணப்படும் ஷோடசராஜோபாக்யானம்

வனவாசத்தில் இருக்கும் தர்மபுத்ரருக்கு ராமகதை சொல்லப்படுகிறது. வாழ்க்கையில் மிகவும் கஷ்டதசையில் இருப்பவர்கள் அது போன்று கஷ்டம் அனுபவித்த வேறு மாந்தர்கள் சுகத்தையும் எதிர்காலத்தில் அனுபவிப்பார்கள் என நம்பிக்கை தரும்படிக்காக இந்த சூழ்நிலையில் ராமகதை சொல்லப்படுகிறது. ஆகையால் இங்கு சொல்லப்படும் ராமகதை ராமபட்டாபிஷேகத்துடன் நிறைவு பெறுகிறது. ஆயினும் விஷ்ணுவின் அவதாரமாக ராமபிரான் தேவர்கள் துயர்நீக்க அவதரிப்பது சித்தரிக்கப்படுவதும் ராக்ஷஸர்களின் பூர்வ சரித்ரம் சொல்லப்படுவதும் ராமாயண காவ்யத்தின் பாலகாண்டம் மற்றும் உத்தரகாண்டத்தில் சொல்லப்பட்ட பகுதிகளை உள்வாங்கியமையை துலக்குகிறது. இந்த மஹாபாரதமென்னும் இதிஹாசத்தைப் படைத்தவருக்கு, அந்த இதிஹாசம் படைத்த காலகட்டத்தில் புழக்கத்தில் இருந்த ராமகதை உள்ளது உள்ள படிக்கு விபரங்கள் பகிரப்பட்டுள்ளன என்பதும் புலனாகிறது.

பீம ஹனுமத் சம்வாதத்தில் ஹனுமான் ராமபிரானிடம் ராமகதை புழக்கத்தில் உள்ள வரை ராமபிரான் புவியில் வாழ வேண்டும் என ப்ரார்த்தித்துக்கொள்வது உத்தரகாண்டத்தில் வரும் நிகழ்வை படம் பிடிக்கிறது.

யாவத்3ராம கதா2வீர ப4வேத் லோகேஷு சத்ருஹன்
தாவஜ்ஜீவேயமித்யேவம் ததாஸ்த்விதி ச ஸோ(s)ப்3ரவீத் (மஹாபாரதம் – III – 147/37)

யாவத்3ராமகதா2ம்வீர ச்ரோஸ்யே(s)ஹம் ப்ருத்வீதலே
தாவச்சரீரே வத்ஸ்யந்து மம ப்ராணா ந சம்சயா: (ராமாயணம் – உத்தரகாண்டம் – 39/16) – (கோரக்பூர் பதிப்பின்படி சர்க்கம் ஒத்துப்போகவில்லை)

சாந்திபர்வத்து ஷோடசராஜோபாக்யானம் ராமபிரான் பதினோராயிரம் வருஷம் ஆட்சி புரிந்ததாகச் சொல்கிறது.

த3சவர்ஷஸஹஸ்ராணி த3சவர்ஷசதானி ச
ராஜ்யம் காரிதவான் ராமஸ்ததஸ்து த்ரிதிவம் க3த: (ம.பா XII – 29-54)

தசவர்ஷஸஹஸ்ராணி தசவர்ஷசதானி ச
ராமோ ராஜ்யமுபாஸீத்வா ப்3ரம்ஹலோகம் க3மிஷ்யதி ( ராமாயணம் – உ.கா – 1/76)

த்ரோணபர்வத்து ஷோடசராஜோபாக்யானத்தில் ராமபிரான் தனது தேசத்தை எட்டு பாகங்களாக விபாகம் செய்து அதனை தன் மகன்களான குச லவர்களுக்கும் தன் தம்பி மார்களுடைய மகன் களிடையேயும் ஒப்படைக்கும் விஷயம் சொல்லப்படுகிறது.

இவையாவும் ராமாயண காவ்யத்தில் உத்தரகாண்டத்தில் சொல்லப்படுபவை என்பது குறிப்பிடத்தக்கது.

டாக்டர் ஸி.பல்க் (Dr.C.Bulcke) என்ற அறிஞர் மஹாபாரதத்தில் சொல்லப்படும் ராமகதை சம்பந்தப்பட்ட நிகழ்வுகளில் ராமபிரானது அவதாரத்தன்மையோ அல்லது ராமாயண பாலகாண்டம் மற்றும் உத்தரகாண்டம் பற்றிய நிகழ்வுகளோ காணக்கிட்டாது என தனது நூலான *ராமகதை* யில் கருத்துப்பதிந்துள்ளார். மேற்கண்ட எடுத்துக்காட்டுகளிலிருந்து இந்த அறிஞருடைய கூற்றுகள் பிழையானது என்று நிரூபணமாகிறது.

lov kush 1

மேலும் மஹாபாரதத்தை எழுத்தில் வடிக்கும் காலத்தில் அவ்வாறு வடித்தவர்களுக்கு ராமாயண காவ்யத்தில் பாலகாண்டம் துவங்கி உத்தரகாண்டம் உள்ளிட்ட ஏழுகாண்டங்கள் இருந்தமை தெரிய வந்திருக்கிறது என்ற விஷயமும் நோக்கத் தக்கது.

அடுத்த பாகத்தில் க்ரிடிகல் எடிஷன் பதிப்பில் ஈடுபட்ட பதிப்பாசிரியர் குழுவினரின் பார்வைகளைப் பார்ப்போம்.

புண்டரிக மலரதன்மேல் புவனியெல்லாம் படைத்தவனே!*
திண்டிறலாள் தாடகைதன் உரமுருவச் சிலைவளைத்தாய்!*
கண்டவர்தம் மனம்வழங்கும் கணபுரத்தென் கருமணியே!*
எண்டிசையு மாளுடையாய்! இராகவனே! தாலேலோ.

4 Replies to “ஸ்ரீமத் வால்மீகி ராமாயண படைப்பாய்வுகள் – ஒரு பறவைப் பார்வை – பாகம் – 2”

  1. Shri KK JI, Why so much importance is given to these ” Western Indic scholars? I urge all to read Rajiv Malhotra’s incisive writing on Western Indic scholars in his book ” Being different”. Why do Indians give importance to coloured, distorted Western point of view?
    As I have said earlier, one must have knowledge of Sanskrit to criticize Valmiki Ramayanam. It is akin to criticizing Shakespeare’s works without full scholarly knowledge of English. Is Mr Jayabarathan a Sanskrit scholar? What are his credentials as a Sanskrit scholar?

  2. இப்படிப்பட்ட கிராமத்தில் பிறக்க, வாழ புண்ணியம் செய்யவேண்டும்.

    https://www.dinamalar.com/news_detail.asp?id=899675

    பள்ளிப்பட்டு: வன வாசத்தால் ராம பிரான் அனுபவித்த துன்பத்தை, தாங்களும் உணரும் விதமாக, கிராம மக்கள், நேற்று, ஆடு, மாடுகளுடன் ஊரை காலி செய்து, வனத்தில் குடியேறினர். வெறிச்சோடிய கிராமத்தை தோட்டிகள் காவல் காத்தனர்.

    பள்ளிப்பட்டு ஒன்றியம், வெங்கடராஜகுப்பம் ஊராட்சியைச் சேர்ந்தது வெங்கடராஜகுப்பம் கிராமம். இங்கு, 500 குடும்பத்தினர் வசிக்கின்றனர், ஊரில், சீதா, ராமர், லட்சுமணர் கோவில் உள்ளது.

    வனவாசம்:

    ஆண்டுதோறும், தை மாதத்தில், வனவாசத்தால் ராமபிரான் அனுபவித்த துன்பத்தை தாங்களும் உணர வேண்டும் என்ற பக்தி சிரத்தையால், கிராம மக்கள் ஒரு நாள் வனவாசம் மேற்கொள்வது வழக்கம். கடந்த, 60 ஆண்டுகளாக இந்த வழக்கம் பின்பற்றப்படாமல் இருந்தது. இந்த ஆண்டு, மீண்டும் தங்கள் மூதாதையர்கள் பின்பற்றிய பக்தி மார்க்கத்தை கடைபிடித்து, கிராம மக்கள், நேற்று வனவாசம் மேற்கொண்டனர். அதிகாலை 4:00 மணியளவில், குழந்தைகள் முதல், முதியவர்கள் வரையிலான கிராம மக்கள், அனைவரும், கிராமத்தில் இருந்து, சீதா, லட்சுமணர் உடனுறை ராமபிரான் உற்சவர் சிலைகளுடன், கிராமத்தை விட்டு, அருகில் உள்ள காட்டுப்பகுதிக்கு புறப்பட்டனர். தங்களுடன் ஆடு, மாடு உள்ளிட்ட வளர்ப்பு பிராணிகளையும் அழைத்துச் சென்றனர். காட்டில் கோவில் அமைத்து, சுவாமிக்கு பூஜை நடத்தினர். ராமருக்கு முன்பாக, களிமண்ணால் செய்யப்பட்ட சிவலிங்கம் அமைத்து அபிஷேகம் நடத்தினர்.

    காட்டுக்குள்…:

    இதில், திரளான பெண்கள் மாவிளக்கு ஏற்றி வழிபட்டனர். மாட்டு வண்டிகள் சகிதம் காட்டுக்குள் குடியேறிய கிராம மக்கள், நேற்று பகல் பொழுது முழுவதும் காட்டில் தங்கி, உணவு சமைத்து உண்டனர். பின், மாலையில், உற்சவ மூர்த்திகளுடன் புறப்பட்டு கிராமத்தை அடைந்தனர். 60 ஆண்டுகளுக்கு பின், நேற்று நடந்த திருவிழாவிற்கு, வெங்கடராஜகுப்பத்தை பூர்வீகமாக கொண்டு, கர்நாடகா, ஆந்திர மாநிலங்களில் வசிக்கும் குடும்பத்தினரும், வந்திருந்தனர். மொத்தம், 2,000 பேர் நேற்றைய வனவாசத்தில் கலந்து கொண்டனர்.

  3. மிகவும் அருமையான விவாதம். ஸ்ரீ கிருஷ்ணகுமார் அவர்களுக்கு ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தியின் பரிபூர்ண கடாக்ஷம் நிச்சயமாக உண்டு.

  4. Respected Shri Rama ji

    Once I too had an impression that the complete breed of indologists are lock stock and barrel mischief mongers devoid of content.

    But, I always believe that before finding fault with something, it is always better to know the content and form our opinion. Especially when we find fault with some one’s wrong opinion.

    For one thing, I have very strong belief in the traditional point of view. And you would have seen that although on many aspects the views of indologists differ from traditional views, on some counts their views are reasonable.

    I have not come across a single researcher who have ever said that the Mula Valmiki Ramayana has been subjected to such heavy insertions so that one can say that the current version is one which is altogether different from the original.

    Sure, I have doubts on many biased research propositions, but you might have found that even the researchers could not substantiate on some of their biased reasearch propositions and on the contrary reached different conclusions.

    Their wonderful establishment that throughout the kavya, the meter in whihc the kavya is composed are alike. The style of language is same. Even grammatical mistakes perceived by the reasearchers are alike throughout kavya. The fact that brahmins should have intentionally made insertions in the kavya has been rebutted by Sri Mcdonnel.

    Leave alone whether Shri.Jeyabharathan has basic sanskrit knowledge or not. There are innumerable research articles written in English in which respected Jeyabharathan is very conversant. He could have referred them before having recorded the ill intended abuse that the current version of Ramayana is as good as a lie compared to the Mula Ramayana.

    rRespected Shri.Jeyabharathan has listed out a number of books in his reply.

    The sort of questions he had raised about Valmiki Ramayana in his *nataka*, which I would be countering in my second series —- you would come to know the heights of pseudo rationalism, pseudo secularism, ill informed north-south sort of racist comments and what not.

    My current article has taken up only one of his ill intended abuse, i.e the current version of Ramayana completely differ from the Mula Ramayana to the extent that the current version can be branded as lie.

    You may differ from some of the views of indologists recorded herein but from their views you can see for yourself that the views of Shri.Jeyabharathan are flawed.

    தகவலுக்கு நன்றி ஸ்ரீ அடியவன். வாழ்த்துக்களுக்கு நன்றி ஸ்ரீ ஆர்.எஸ்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *