ஆன்மீக இலக்கியம் – பண்பு, பார்வை, பணி

லக்கியம் பற்றிய புரிதல் இன்றி அலக்கியங்களை இலக்கியங்ளாகக் கொண்டாடும் அவலச் சூழலில் வாழ்கின்றோம். கவிதைப் படைப்புகளும், கதைப்புனைவுகளும், திரையாக்கங்களும் புற்றீசல்களாகப் பிறக்கின்றன.  நம்மைச் சுற்றிலும்   பறந்து பறந்து சூழல் இனிமையைச் சிதைக்கின்றன. பிறழ்மனப் பிரச்சாரங்களால் மனமாசு மண்டலச் சிறையாக வாழ்க்கை மாறுகிறது .

இலக்கியம் என்றால் என்ன ? இலக்கு + இயம் –என்றும், இலங்கு + இயம் – என்றும் பிரித்துப் பொருள் விரித்து மேடை சுகம் காண்பதுண்டு. காலத்தின் கண்ணாடி, காலத்தின் பெருக்காடி (lens) என்றெல்லாம் எடுத்துரைத்துக் காலட்சேபம் நடத்துவதுண்டு. சமூக மனக்குரல், புரட்சியின் பூபாளம் என்றெல்லாம் சாமி ஆடுவதுண்டு .

இலக்கியம் என்றால் என்ன? அது ஒரு கலை. கலையின் நோக்கம் என்ன ?அனுபவப் பகிர்வு ! அதுவும் அழகுபடப் பகிர்ந்து நிற்பது !

கல்லில் எழும் அழகிய அனுபவப் பகிர்வு சிற்பம் ! வரைகோடுகளிலும் வண்ணக்கலவைகளிலும் மிளிரும் அழகிய அனுபவப் பகிர்வு ஓவியம் ! அகண்ட ஒலிக்கடலைக் கடைந்தெடுத்த சந்த இனிமையின் பகிர்வு இசை ! மெய்ப்பாடுகளில்  ஏந்தி நிற்கும் எழில்மிகு அனுபவப் பகிர்வு நடனம் ! மொழியில் முயலும் அழகிய அனுபவப்பகிர்வு இலக்கியம் !

கல்லும் , வரைகோடும் , ஒலியும் , உடல்மொழியும் ,மொழியும் ஊடகங்கள் ! அவற்றின் வழிச் சுரந்து பொங்கும் அனுபவப் பகிர்வழகுதான் கலைகளின் மையம் !

கலைகளின் பொதுமையான உயிர்ப்பண்பு அனுபவப் பகிர்வழகு என்பதால் அதுவே இலக்கியத்துக்கும் உயிர்ப்பண்பு ! மொழி இலக்கியத்தின் ஊடகம் என்பதால் அதன் விளைவாகச் சுரக்கும் சில தனிச்சிறப்புகளும் இலக்கியத்தில் மிளிரும் ! இவ்விரண்டின் இசைவினிமையில் இலக்கியம் உன்னதத்தை முயலும் .

kannagi-on-separationஎடுத்தாளும் அனுபவம் எதுவும் ஆகலாம் . ஈயும் ஆகலம் ; ஈசனும் ஆகலாம் –பனித்துளியும் ஆகலாம் ; பாற்கடலும் ஆகலாம்.  கண்ணகிப் பெண்மை ஆகலாம் ; காகுத்தன் மேன்மை ஆகலாம் – குளத்தங்கரை அரசமரக் குரலாகலாம் ; நகர்ப்புறப் புளியமர வாழ்வாகலாம் – எதுவும் ஆகலாம் ! அனுபவத்தரம் இலக்கியத் தரத்தை நிர்ணயிக்கும்.

ஜானி-ஜானி-எஸ் பப்பா-வின் சிரிப்பும் , திருநாவுக்கரசர்  விலாவறச் சிரித்த சிரிப்பும் ஒன்றல்ல. திருவிழாக் கடை முன்பு பொம்மைக்காக அழும் சிறுமிஅழுகையும் ,அழுதால் உன்னைப் பெறலாமே எனும் மாணிக்கவாசக அழுகையும் ஒன்றல்ல .

உணர்ச்சித் தள வேறுபாடுகள் உள; மனமுதிர்ச்சி ஆழ வேறுபாடுகள் உள; பார்வை நிறபேதங்கள் உள; அனுபவத் தர வேறுபாடுகள் உள.  இவ் வேறுபாடுகளுக்கேற்பவே இலக்கியத்தரம் அமையும் .

இலக்கிய வகைகள் பல, வடிவஙள் பல. அங்கு தன்னுணர்ச்சிக் குரல்களும் ஒலிக்கும். எடுத்துரை குரல்களும் ஒலிக்கும். ஓவியத்திறன்மிக்க படிமக்குரல்களும் ஒலிக்கும்.  காட்சிப்படுத்தும் நாடகக் குரல்களும் ஒலிக்கும். குறியீட்டுக் குரல்களும் ஒலிக்கும். இக் குரல்கள் அனைத்தும் தனித்தனியாகவும் ஒலிக்கும், விரவியும் ஒலிக்கும். படைப்பவன் பார்வைக்கும் , பண்பிற்கும் ஏற்ப இக் குரல்கள் வண்ண பேதங்கள் பெறும். எனினும் அனுபவப் பகிர்வழகு எனும் உயிர்த்துடிப்பில்தான் இவை இலக்கியச் செழுமை பெறும்.

வளமையான இல்க்கியப் பாரம்பரியம் தமிழுக்கு உண்டு. பாரதப் பண்பாட்டு ஞானத்தின் அழகும் ஆற்றலும் பெற்று ஒளி வீசுவது அது. எனினும் இன்று ஐரோப்பிய-அமெரிக்கத் திறனாய்வுப் பார்வையே  தமிழ் இலக்கியப் பார்வையாகத் திகழ்கின்றது . தொன்மையும் வளமையும் கொண்ட தமிழ் தனக்கென ஓர் சுதேசித் திறனாய்வுப் பார்வையை வளர்க்காதது நிச்சயமாக வருந்துதற்குரிய விஷயமே. முற்போக்கு இலக்கியம், தலித் இலக்கியம் என்பன போலும் குறுகிய சித்தாந்த சார்பு கொண்ட கருத்தாக்கஙகளும் மார்க்ஸீயப் பார்வை, உளவியல் பார்வை போலும் அலக்கியப் பார்வைகளும் உண்மையில் அபத்த சாகசங்கள். இவை இலக்கியத்தை அதன் உயிர்ப்பண்பிலிருந்து வெகுதூரம் எடுத்துச் செல்கின்றன. இலக்கியச் சித்திரவதை செய்கின்றன.

தொல்காப்பியரின் பொருளிலக்கணப் பார்வை படிக்கப்படுகின்றது. மேற்கோளாட்சி பெறுகின்றது. ஆனால் ஒரு கோட்பாடாக வளர்த்தெடுக்கப் படவில்லை. ஆராய்ச்சிமுகம் பெறவில்லை. எடுத்துக் காட்டாக மெய்ப்பாட்டியல் எக்காலப் படைப்புகளையும் எம்மொழிப் படைப்புகளையும் அளக்கவும் ஆழப்படுத்தவும் உதவும் அடிப்படைச் சுரப்புகளைக் கொணடது என்பது உணரப்படவில்லை.

உரையாசிரியர்களின் பார்வையும் கூர்மையும் தமிழ் இலக்கியத் திறனாய்வுப் பர்வையை வளர்த்தெடுப்பதில் மிக மிக உதவும். ஓர் எடுத்துக்காட்டு – முல்லை வைந்நுனை எனும் அகப் பாடலுக்கு நோக்கு எனும் சிறப்பு அமைந்த திறத்தை உரையாசிரியர் விளக்கும் முறை.  திருமுருகாற்றுப்படையின் முதலுவமையின் அழகையும் ,ஆழ்பொருளையும் விளக்கித் திரு கு . கோதண்டபாணிப்  பிள்ளை என்பார் ஒரு தனி நூலே இயற்றியுள்ளார். உவமையின் நுட்பம் அழைத்துச் செல்லும் சிகரத்துக்கு அந்நூல் ஓர் எடுத்துக் காட்டு. தொல்காப்பிய உவமவியலின் துணை கொண்டு இலக்கியப் பரப்பில் பயணம் மேற்கொண்டால் இன்னும் பல திறனாய்வு நலங்கள் பெருகும்.

இலக்கியத் திறனாய்வுச் சீதையைச் சித்தாந்தப் பரப்புரை என்னும் இராவணச் சிறையிலிருந்து மீட்டெடுத்தல் வேண்டும். ஸஹிருதயப் பார்வை அலசல்களும், ஔசித்தியவிளக்கங்களும், சுவைக் கொள்கைப் புரிதல்களும், தொனிமண்டலத்தின் ஏறுபடிகளும் தமிழில் புதுப்புனலாகப் பெருக வேண்டும்.

*****

மானுடத்தின் அக உலக அழகியல் அனுபவ விழிப்பும் , விரிவுமே கலையின் வரலாறு. இலக்கியக் கலையில் நிகழ்வதும் இதுவே.

எப்போதும் விரிந்து விரிந்து பெருகும் – ஆழ்ந்து ஆழ்ந்து ஆழம் காணும் – பறந்து பறந்து சிகரம் தேடும் – அனுபவப் பகிர்வழகே இலக்கிய சுகம், இலக்கிய ஞானம். இதற்கு ஹைக்கூவும் உதவும், காவியமும் உதவும். சிறு கதையும் உதவும், பெரு நாவலும் உதவும்.  நாடகமும் உதவும், திரையுலகும் உதவும்.

முன் விரியும் வாழ்க்கையே கலைஞனின் களம் ! இயற்கை அரங்காகவும் , மானுட அரங்காகவும் அது அவன் முன் விரிகிறது ! புலன் நுகர்வில் முகிழ்க்கின்றது படைப்பு – எனினும் அது.உணர்ச்சிகளில் வளமை பெறுகின்றது – கருத்துகளில் பார்வை பெறுகின்றது – கற்பனைகளில் சிறப்புறுகின்றது !

புலனுகர்வுகள்  – உணர்ச்சிகள்-கருத்துகள் – கற்பனைகள் என்பவற்றைக் கருவியாகக் கொண்டு அவற்றையே தாண்டி ஓர் ஆன்மவெளியில் கலைஞன் வந்திறங்கும் போது அக்கலைஞனின் கலைப்படைப்பில் ஒரு மகோன்னதம் சித்திக்கும். இச் செயல்பாட்டினைத் தம் நிலைக்களனாகவும் , இயங்கு தளமாகவும் கொண்ட இலக்கியங்கள் ஆன்மீக இல்க்கியங்கள் எனப்படும் .

காரைக்காலம்மையாரின் திருவாலங்காட்டுத் திருப்பதிகத்திலும் ஆண்டாளின் திருப்பாவையிலும் கண்டடையும் வெளி’யில் ஆன்மீக இலக்கியத்தின் அர்த்தத்தைப் புரிந்து கொள்ளலாம் .

Andal-t“கள்ளிக் கவட்டிடைக் காலைநீட்டி” சுடலையில் சேட்டிதங்கள் செய்யும் காட்சியில் தொடங்கிய பேயுலகும் அச் சுடலை நடுவே அனலேந்தி ஆடும் அப்பன் திருநடனமும் அழைத்துச் செல்லும் சிகரம் உலக இலக்கியத்தில் மிக அரிதான உச்சம்.  வில்லியம் பிளேக்கின் புலிக்காட்சியை (Tiger, by William Blake) ஓர் ஒப்பீட்டுக்காக அருகில் வைத்துக் கொண்டு, ஆண்டாளின் “மாரி மலை முழைஞ்சில் மன்னிக் கிடந்துறங்கும் சீரிய சிங்கம் தீயுற்றுக் கண்விழிக்கும்” காட்சியைச் சிறிது அனுபவித்தாலும் தெரியும் ஆன்மீக இலக்கிய நறுஞ்சுவை. திருமுருகாற்றுப்படையிலும், திருமுறைகளிலும், ஆழ்வார் பாசுரங்களிலும், அருணகிரிப் பெருமானின் அற்புதப்பாடல்களிலும் கரை தொட்டு அழைக்கும் ஆன்மீக அலைகள்  அனந்தம்!

பக்தி இலக்கியங்களை இலக்கியங்களே அல்ல என ஒரு காலத்தில் சிந்தித்த ஐரோப்பியப் பார்வையின் அபத்தத்தையும் இங்கு நினைவு படுததிக் கொள்வது நல்லது .

*******

ஆன்மீக ஆர்வலர்கள் இலக்கியப் பார்வை ஒன்றை வந்தடைதல் வேண்டும்.  வடித்தெடுக்க வேண்டும். கல்விக் களங்களில் இது கருதிய பணிகளை மேற்கொள்ள வேண்டும். பொதுப் புத்தியில் அதற்குரிய இடத்தை நிலை பெறுத்தல் வேண்டும்.

மேலைக் காற்று  இலக்கியத் திறனாய்வுக்கு வேண்டாம் என்பதல்ல நோக்கம். சுய பார்வைகளையும் , சுதேசிப் பார்வைகளையும் இழந்து – அபத்தப் பார்வைகளையும் அலக்கியப் பார்வைகளையும் வளரவிட வேண்டாம் என்பதுவே நோக்கம்.

உன்னதச் சிந்தனைகள் எங்கிருந்தாலும் எம்மை வந்தடைய வேண்டும் எனும் ரிக்வேதப் பிரார்த்தனை எங்கும் எப்போதும் ஒலிக்க வேண்டும்.  இலக்கியக் கலையிலும் இப்பிரார்த்தனை நம்மை வழிநடத்தும். ஆனால் வீசும் காற்று நமது உன்னதங்களை அழிக்கும் காற்றாக இருத்தல் கூடாது என்பதே நமது பார்வையாதல் வேண்டும்.

எனில் – ஆன்மீக இலக்கிய சத்சங்கங்கள் தேவை. சத் என்னும் சத்தியம்  நோக்கிய கூட்டுமுயற்சியே சத் சங்கம். உண்மை நோக்கிய தவழ்வோ-தாவலோ-தவமோ நிச்சயமாக இலக்கியத்தின் அனுபவப் பகிர்வழகாகக் கண்டடையப் பட வேண்டும். இதற்கு இலக்கியத் திறனாய்வின் சுதேசிமுகம் வலியுறுத்தப்பட வேண்டும்.  கொங்கு தேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பியின் தேன் தேடல் முன்னிறுத்தப்படல் வேண்டும். காமம் செப்பாது கண்டது மொழிதல் திறன் பயிற்றுவிக்கப்பட வேண்டும். இதற்கு உகந்த வகையில் சிந்தனை அரங்குகள், பயிலரங்குகள், ஆய்வரங்குகள், பிரசுரங்கள், நூல் வெளியீடுகள் என்பவை வளர்க்கும் பெரு முயற்சி தேவை. மிகவும் தேவை.

பேரா. என்.சுப்பிரமணியம் அவர்கள் நாகர்கோவில் தெ.தி. இந்துக் கல்லூரியில் தமிழ்த் துறைத் தலைவராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். தமிழ் மரபிலக்கியத்தில் குறிப்பாக பக்தி இலக்கியங்களில் ஆழ்ந்த புலமையும் ஈடுபாடும் கொண்டவர்.

12 Replies to “ஆன்மீக இலக்கியம் – பண்பு, பார்வை, பணி”

 1. இலக்கியம் என்ற கலைத் திறத்தைப் பற்றிய மிகத் தெளிவான பார்வை. “அனுபவப் பகிர்வழகு” எனும் சொற்றொடர் , இனியும் மேல் செப்பனிடப்பட முடியாத முழுமை பெற்ற சொற்றொடராக மிளிர்கிறது. கஞ்சிக்கு உப்பில்லை என்போர்க்கும் பாலுக்குச் சர்க்கரை இல்லை என்போர்க்கும் விசனம் ஒன்றே எனச் சொல்லுகின்ற தமிழ் விசனத்திலிருந்து மாறுபட்டு, உணர்ச்சி வெளிப்பாடுகளின் தளத்தில் உள்ள வேற்றுமைகளின் அனுபவமே இலக்கியத் தரத்தினை நிர்ணயம் செய்கிறது ( உ-ம் பொம்மைக்குக் குழந்தை அழுவதும் அழுதால் உன்னைப் பெறலாமே என்ற அழுகையும்) எனப் பதிவு செய்துள்ள கருத்தினை வரவேற்கிறேன். -வவேசு

 2. மிகவும் தெளிவானதும் அருமையானதுமான விளக்கம். எது இலக்கியம் எனத் தடுமாறுவோருக்கு சரியான பாதையைத் தெளிவாகக் காட்டும் கட்டுரை. மிக்க நன்றி.

 3. ஹோலி உத்ஸவத்தின் முஸ்தீபுகளில் நான் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் படிக்கு அவகாசம் எனக்கு குறைவே. ஆனால் இந்த வ்யாசம் காந்தம் போல் கவர்ந்துள்ளது என்றால் மிகையாகாது.

  எப்படிப்பட்ட கந்தறகோள எழுத்துக்குப்பையை அலக்கியம் என்று அடையாளம் காண வேண்டும் என்பதில் எனக்குப் பெரும் குழப்பமில்லை. ஆனால் இலக்கியம் என்பது எது என்பதற்கு மிக அழகான விவரணத்தை இந்த வ்யாசம் தந்துள்ளது என்றால் மிகையாகாது.

  பல தொல் தமிழ் நூற்களின் உள்ளார்ந்த கருத்துக்களை இந்த வ்யாசம் பேசும் பாங்கு எனக்குப் புரிபடவில்லை. ஆனால் வ்யாசத்தின் ஒட்டு மொத்த சித்திரம் மனதில் ஆழப்பதிகிறது. அருமை.

  மிகக் கவனமாக நான் அவதானித்த விஷயம் கீழ்க்கண்ட வாசகம்.

  \\ வளமையான இல்க்கியப் பாரம்பரியம் தமிழுக்கு உண்டு. பாரதப் பண்பாட்டு ஞானத்தின் அழகும் ஆற்றலும் பெற்று ஒளி வீசுவது அது. \\

  பற்பல கருத்தாக்கங்களிலும் வ்யாசங்களிலும் மறைமுகமாக இழையோடும் ஒரு செய்தி தமிழ்ப்பாரம்பர்யம் என்பது பாரதப் பண்பாட்டு ஞானத்தினின்று வேறுபட்ட ஒரு விஷயம் என்பது. ஆஸேது ஹிமாசலம் வாழ்ந்துள்ள எனக்கு நான் உகக்கும் தமிழ்ப்பண்பாடு என்பதும் — நான் ஹிந்துஸ்தானம் முழுதும் சென்று கண்டு புழங்கி அறிந்த — பற்பல மொழிகள் பேசும் மக்களால் அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு எடுத்துச்செல்லப்படும் — செறிவான பாரதப்பண்பாடு என்பதும் ஒன்றேயான விஷயம் என்பது. இதை மேற்கண்ட வாசகம் செறிவுடன் விளக்குகிறது.

  \\ உன்னதச் சிந்தனைகள் எங்கிருந்தாலும் எம்மை வந்தடைய வேண்டும் எனும் ரிக்வேதப் பிரார்த்தனை எங்கும் எப்போதும் ஒலிக்க வேண்டும். இலக்கியக் கலையிலும் இப்பிரார்த்தனை நம்மை வழிநடத்தும். ஆனால் வீசும் காற்று நமது உன்னதங்களை அழிக்கும் காற்றாக இருத்தல் கூடாது என்பதே நமது பார்வையாதல் வேண்டும். \\

  பொன் எழுத்துக்களில் செதுக்கப்பட வேண்டிய வாசகங்கள்.

  \\ கொங்கு தேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பியின் தேன் தேடல் முன்னிறுத்தப்படல் வேண்டும் \\

  \\ காமம் செப்பாது கண்டது மொழிதல் திறன் பயிற்றுவிக்கப்பட வேண்டும். \\

  வேண்டுதல் – வேண்டாமை — அரும் விளக்கம்.

  மனதில் ஆழப்பதிந்த அருமையான வாசகங்கள் :-

  \\ இலக்கியம் பற்றிய புரிதல் இன்றி அலக்கியங்களை இலக்கியங்ளாகக் கொண்டாடும் அவலச் சூழலில் வாழ்கின்றோம். பிறழ்மனப் பிரச்சாரங்களால் மனமாசு மண்டலச் சிறையாக வாழ்க்கை மாறுகிறது . \\

  \\ அருணகிரிப் பெருமானின் அற்புதப்பாடல்களிலும் கரை தொட்டு அழைக்கும் ஆன்மீக அலைகள் அனந்தம்! \\
  நுமது திருத்தாள்களில் எம் சென்னியிருக்கக் கடவதாக.

  \\ தொன்மையும் வளமையும் கொண்ட தமிழ் தனக்கென ஓர் சுதேசித் திறனாய்வுப் பார்வையை வளர்க்காதது நிச்சயமாக வருந்துதற்குரிய விஷயமே. முற்போக்கு இலக்கியம், தலித் இலக்கியம் என்பன போலும் குறுகிய சித்தாந்த சார்பு கொண்ட கருத்தாக்கஙகளும் மார்க்ஸீயப் பார்வை, உளவியல் பார்வை போலும் அலக்கியப் பார்வைகளும் உண்மையில் அபத்த சாகசங்கள். இவை இலக்கியத்தை அதன் உயிர்ப்பண்பிலிருந்து வெகுதூரம் எடுத்துச் செல்கின்றன. இலக்கியச் சித்திரவதை செய்கின்றன. \\

  சம்மட்டி அடி.

 4. அழகான அருமையான வ்யாசத்திற்கு ஒரு த்ருஷ்டிப்பொட்டா தெரியவில்லை. நான் மிகக் கடுமையாக வேறு படும் வாசகத்தையும் பகிரவேண்டும்.

  \\ இலக்கியத் திறனாய்வுச் சீதையைச் சித்தாந்தப் பரப்புரை என்னும் இராவணச் சிறையிலிருந்து மீட்டெடுத்தல் வேண்டும் \\

  சித்தாந்தப் பரப்புரையின் இலக்கு மற்றும் அது இயங்கும் தளம் இவையிரண்டும் இலக்கியத் திறனாய்வு என்ற விஷயத்துடன் முற்றிலும் வேறானது.

  ஆன்மீக நூற்கள் சித்தாந்த ரீதியான பரப்புரைகள் மற்றும் இலக்கியத் திறனாய்வுகள் என இரண்டு *பார்வைகளிலும்* அணுகப்பட்டுள்ளன.

  சித்தாந்தப் பரப்புரை எக்காரணம் கொண்டும் ஒரு சிறை அல்ல. உரைநிலையில் வைக்கப்பட்டுள்ள ஒரு கருத்தாக்கமும் அல்ல. ஒரே நூலுக்கு பற்பல சித்தாந்த வாதிகளால் எழுதப்படும் பரப்புரைகளும் ஒரே நூலுக்கு ஒரே சித்தாந்தத்தைச் சார்ந்த வெவ்வேறு ஆசிரியர்களால் எழுதப்படும் பரப்புரைகளும் மேற்கண்ட கருத்தை மறுதலிக்கின்றன.

  சிறை என்று மட்டிலும் சுட்டாது *இராவண* என்ற இழிவான அடைமொழியையும் *சித்தாந்தப் பரப்புரை* க்குக் கொடுத்தமையை மிகக் கடுமையாக எதிர்க்கிறேன்.

  சித்தாந்தப் பரப்புரைகள் பொழுது போகாதவர்கள் எழுதித் தள்ளூம் எழுத்துக்குப்பைகள் அன்று. மாறாக தர்க்க பூர்வமாக சித்தாந்தத்தை நிர்த்தாரணம் செய்யும் படிக்கு மதிக்கூர்மையுடனும் சான்றாதாரங்கள் சார்ந்தும் எழுதப்பட்ட, எழுதப்படும் காலத்தை விஞ்சி நிற்கும் பெருமை மிக்க ஆவணங்கள்.

  சில விஷயங்களில் இலக்கியத் திறனாய்வுகள் சித்தாந்தப் பரப்புரைகளிலிருந்து வேறுபடலாம். சிலவற்றில் ஒற்றுமைகளும் இருக்கலாம்.

  ஆனால் மேற்கண்ட வாசகம் சித்தாந்தப் பரப்புரைகளும் இலக்கியத் திறனாய்வுகளும் ஒன்றுக்கொன்று முரண்பட்ட கருத்தாக்கங்கள் மட்டிலும் என்ற விஷயத்தை திணிப்பது போன்ற தோற்றத்தைத் தருவதாக எனக்குத் தோன்றியதால் இந்தக் கருத்துப் பகிர்வு.

  சித்தாந்தப் பரப்புரைகளை இழிவான அடைமொழிக்கு உள்ளாக்கியமையால் சற்றுக் கடுமையான எதிர்வினை. இந்தக் கருத்துப் பகிர்வை மிக அழகான ஆழ்ந்த கருத்துக்களடங்கிய ஒரு அருமையான வ்யாசத்தின் விதிவிலக்காக மட்டிலும் கருதுகிறேன். வ்யாசத்தின் ஒட்டுமொத்த அடிநாதத்துடன் முற்றிலும் எனக்கு உடன்பாடே.

 5. அன்புள்ள கிருஷ்ணகுமார் ஐயா,

  நீங்கள் ஆட்சேபித்துள்ள வாசகத்தில் “சித்தாந்தப் பரப்புரை” என்பதன் பொருள் ideological propaganda. நவீன தமிழ் உரைநடையில் சித்தாந்தம் என்பதற்கு ideology என்று பொருள், சைவ/வைணவ சித்தாந்தங்கள் என்ற ரீதியிலான பொருள் அல்ல.

  பல சம்ஸ்கிருத மொழி சொற்கள் நவீனத் தமிழ் உரைநடையில் (எல்லா இந்திய மொழிகளீன் நவீன உரைநடைகளிலும் தான்) ஒரு குறிப்பிட்ட பொருளைத் தரும் சொற்களாக, கலைச் சொற்களாக பயன்பட்டு வருகின்றன. தொடர் பயன்பாட்டினால் வாசகர்களுக்கு அந்தப் பொருள் தெளிவாகப் புரியும். அத்தகைய சொற்களுக்கு அவற்றின் பாரம்பரியான சம்ஸ்கிருத அர்த்தத்தை எடுத்துக் கொள்ளக் கூடாது – அது குழப்படியான பொருளையே தரும்.

 6. பேராசிரியர் ஐயா அருமையாக எழுதியுள்ளார். நம்முடைய இலக்கியங்களை அன்னியர்களின் அதிலும் மாறுபட்டவர்கள் நம் பண்பாட்டை சமயத்தினை அழித்தொழிக்க முயலும் விரோதிகள் பார்வையில் மட்டுமே பார்ப்பதுதான் இன்றைய இலக்கிய த்திறனாய்வாளர்களின் வழக்கமாக இருக்கிறது. ஒரு சமூகப்பொருளாதார ஆராய்ச்சியாளனாக பல இலக்கணங்களையும் தர்சனங்களையும் பாரம்பரியமாகக்கொண்ட நாம் ஏன் அன்னியரிடம் கடன்வாங்கும் வக்கற்றவர்களானோம் என்று வருந்தியதுண்டு. நமக்கென்று திறனாய்வு மரபுண்டு ஆராய்ச்சிப்பாரம்பரியமும் நெடியதாய் உண்டு என்று கட்டியம் கூறுகிறது இந்தக்கட்டுரை. ஐயாவுக்கு நன்றிகள்.

 7. பேராசிரியர் ஐயா
  “முற்போக்கு இலக்கியம், தலித் இலக்கியம் என்பன போலும் குறுகிய சித்தாந்த சார்பு கொண்ட கருத்தாக்கஙகளும் மார்க்ஸீயப் பார்வை, உளவியல் பார்வை போலும் அலக்கியப் பார்வைகளும் உண்மையில் அபத்த சாகசங்கள்”.
  இந்த கூட்டத்தில் தலித் இலக்கியத்தினை சேர்க்கவேண்டாமே என்பது அடியேனின் எண்ணம். காரணம் தலித் இலக்கியம் நமது சமூகத்தில் தாழ்த்தப்பட்ட மக்கள் படும் துயரை துன்பத்தினை அவரது அனுபவத்திலிருந்தே அவர்கள் தாமேசொல்லமுயல்வது. ஆகவே அந்த முயற்சி 100% சரியானது, நியாயமானது, ஆழ்மானதும் வரவேற்கத்தகுந்ததும் ஆகும்.

  மார்க்சீயம் சார்ந்த சமூகவியல் பார்வையும் சரி சிக்மண்ட் ப்ராய்டின் உளப்பகுப்பாய்வு அணுகுமுறையும் சரி பிளவுண்டவை முழுமையற்றவை. வக்கிரமானவை. இல்லாதச்சிக்கலை கட்டி சுட்டுபவை என்பது அடியேனின் எண்ணம்.ஆனால் சமூகத்தினையோ தனிமனித உளவியலையோ புரிந்து கொள்ளும் வகையில் இலக்கிய ஆய்வுகள் அமைவது நல்லதே.
  பேராசிரியர் பயன்படுத்தியுள்ள சித்தாந்தம் என்ற பதத்திற்கு ஸ்ரீ ஜடாயு ideology என்று சொல்லியுள்ளார். ஐடியாலஜிக்கு கருத்தியல் என்பதே சரியான தமிழாக்கம் இருக்கமுடியும் என்பது அடியேனின் எண்ணம். சித்தாந்தம் என்றால் நமக்கு உடனே நினைவுக்கு வருவது சைவசித்தாந்தம், அத்வைத சித்தாந்தம், மாத்வ சித்தாந்தம். இவையெல்லாம் நிச்சயம் ஐடியாலஜி அல்ல. அதற்கும் மேல் ஆழ்ந்த ஆன்மிக முடிபுகள்.

 8. \\ அத்தகைய சொற்களுக்கு அவற்றின் பாரம்பரியான சம்ஸ்கிருத அர்த்தத்தை எடுத்துக் கொள்ளக் கூடாது – அது குழப்படியான பொருளையே தரும். \\

  அன்பின் ஸ்ரீ ஜடாயு மஹாசய

  தவறு என் புரிதலில் தானேயன்றி ஆசிரியரின் கருத்தில் இல்லை என்பதை தெளியவைத்தமைக்கு நன்றி.

  I stand corrected. probably that was a knee jerk reaction from my end.

  வேதாந்திகள் மற்றும் சித்தாந்திகள் எழுதும் வ்யாக்யானாதிகளை *விரிவுரை* என்று கொள்ளலாமேயன்றி *பரப்புரை* என்று அல்ல என்றும் ***இப்போது*** பொறுமையாக சிந்திக்கையில் தெரிகிறது. என்னுடைய பிறழ்வான புரிதலால் வ்யாக்யானாதிகளின் ஸ்தான கௌரவத்தை குறைத்து விட்டேனோ என்றும் தோன்றுகிறது.

  ஆசிரியர் மிகத்தெளிவாகச் சொல்லியிருக்கிறாரே

  \\ ஆனால் வீசும் காற்று நமது உன்னதங்களை அழிக்கும் காற்றாக இருத்தல் கூடாது என்பதே நமது பார்வையாதல் வேண்டும் \\

  சூடிக்கொடுத்த சுடர்க்கொடியாளைப் பற்றிய அவதூறு கதையினை *மசு* பல்கலைக்கழகத்தினர் பாடப் புத்தகமாக வைத்ததை அம்பலப்படுத்தி பொதுமக்கள் கவனத்துக்குக் கொணர்ந்த தொண்டினை செய்தவர் பேராசிரியப்பெருந்தகை ஸ்ரீமான் சுப்ரமண்யம் என்பதும் நினைவில் உள்ளது.

  குறையொன்றுமில்லாத அருமையான வ்யாசத்தை சமர்ப்பித்த பேராசிரியப்பெருந்தகை அவர்களுக்கு மீண்டும் எனது மனமார்ந்த நன்றிகள்.

  எனது அதிகப்ரசங்கத்துக்கு க்ஷமாயாசனங்கள்.

 9. முற்போக்கு, தலித், உளவியல் ,மர்க்ஷிச்ம் பற்றிய உங்கள் கருத்து பிழையானவை .இவைகளை புறக்கணிக்காது இவற்றோடு அல்லது இவைகளின் நட்கூறுகளுடன் ஆன்மீகத்தையும் இணைத்து பொருத்தி முன் நகர்வதே காலத்தோடு ஒட்டிய செயல். மேற்கும் கிழக்கும் இணைந்து செல்வதே வளர்ச்சிக்கு அறிகுறி. இவ்வகையில் அமரர் மு தளையசிங்கத்தின் எழுத்துக்களை முன்னோடியாக பார்க்கலாம் .

  ரிஷி

 10. \\ முற்போக்கு, தலித், உளவியல் ,மர்க்ஷிச்ம் பற்றிய உங்கள் கருத்து பிழையானவை \\

  அன்பின் ஸ்ரீ ரிஷி. தவறான புரிதல்.

  முற்போக்கு, தலித் மற்றும் மார்க்ஸிஸ கருத்தாக்கங்களை காரண கார்யங்கள் இல்லாது பொத்தாம் பொதுவாக இழித்துரைப்பதோ அல்லது சாடுவதோ எனக்கும் உடன்பாடில்லாத விஷயம். இந்த வ்யாசத்தில் ஆசிரியர் அப்படியொரு பார்வையை முன்வைக்கவில்லை என்பது என் புரிதல்.

  ஆசிரியர் முற்போக்கு, தலித், மார்க்ஸிஸக் கருத்துக்களைப் பற்றி தன் கருத்துக்களை பொத்தாம் பொதுவாக முன்வைக்கவில்லை.

  மாறாக ஹிந்து, தமிழ் இலக்கியங்களின் — கட்டமைப்புகளை – அதன் முழுமையை ஆராயாது — *cherry picking* பாங்கில் சித்தாந்தப் பரப்புரைகளாக இவற்றை இழிவு செய்யும் போக்கினை ஆசிரியர் வன்மையாகக் கண்டிக்கிறார்.

  த்ராவிட மடத்தினர் கம்ப ராமாயணம், சிலப்பதிகாரம் முதல் திருக்குறள் வரை எந்த நூலையும் விட்டு வைக்காது தங்கள் காமாலைக் கண் பார்வையால் அவற்றை இழிவு செய்தமை சரித்ரம். மார்க்ஸிஸ்டுகளும் முற்போக்காளர்களும் இந்தப் போக்கிலிருந்து விதிவிலக்கானவர்கள் அன்று என்பதை இவர்களின் பக்ஷபாத எழுத்துக்கள் பறை சாற்றுகின்றன என்றால் மிகையாகாது.

 11. மதிப்பிற்குரிய ஐயா

  சுய சுதேசிப் பார்வைகளை நாம் இழக்ககூடாது .வரவேற்கிறேன் . இங்கே இரண்டு விடயங்களைப் பார்க்கவேண்டும் . முதலில் நமது தமிழ் / ஆன்மீக இலக்கியங்களை சமுதாய முன்னேற்றப் பார்வையில் மக்களிடம் எடுத்து விளக்கியுள்ளோமா. எத்தனை ஆன்மீகத் திறனாய்வு நூல்களை நாம் இலகு தமிழில் சாதாரண மக்களிடையே கொண்டுசென்ருள்ளோம் . ஒடுக்கப் பட்டுள்ள மக்களின் நலனுக்காக சமயத்தையும் ஆன்மீகத்தையும் புது விளக்கங்களுடன் எடுத்துகூறி திட்டங்கள் வகுத்து நடைமுறைப் படுத்தி உள்ளோமா. நம்மால் பதில் கூறமுடியாது. ஏனெனில் நாம் கிறிஸ்தவர்களையும் திராவிடர்களையும் குறை கூறுவதை தவிர செயலில் முன்னின்று ஏதையும் செய்யவில்லை. இரண்டாவதாக எமது தமிழ் ஆன்மீக விடயங்களை உலக சித்தந்தங்களுடன் இலக்கியங்களுடன் ஒப்பிட்டு உலகத் தரத்திற்கு ஏற்ப ஒப்பாய்வு செய்தல் வேண்டும். உலக மொழிகளில் இவற்றை வெளியிடல் வேண்டும். இதற்கு சுய சிந்தனையாளர்களும் அவர்களுக்கு ஆதரவு அளிப்போர்களும் தேவை. இவ்வகையில் பல கட்டுரைகளை மு. த அவர்கள் எழுதியதை மதிபிற்குரிய சுந்தர ராமசாமியும் ஜெயமோஹனும் குரிப்பிட்டுளர்கள்.

  நமது சமயமும் சமூகமும் குண்டு சிரட்டையில் இருந்து வெளி வரவேண்டும் முதலில் . இதுவே என் கவலையும் ஆவலும்.

  ரிஷி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *