தொடர்ச்சி..
சென்ற ஒப்பீட்டில் ‘அகலியை சாப விமோசன’த்தைப் பற்றியும், இராமன்-சீதையின் முதல் சந்திப்பைப் பற்றியும் கண்டோம். கம்பனும் வால்மீகியும் எவ்வாறு வேறுபடுகிறார்கள் என்பதையும் கண்டோம். இருவரும் அவரவர்கள் காலத்துப் பண்பாட்டையும், மரபையும் ஒட்டியே இராமகாதைக்கு வடிவம் கொடுத்தார்கள்.
மாய மான் இராமன் குரலில் ஓலமிட்டதைக் கேட்டு சீதைக்கும், இலக்குவனுக்கும் இடையில் நடந்த வாக்குவாதத்தைப் பற்றி எவ்வாறு எழுதி உள்ளார்கள் என்பதைக் காண்போம்.
…பொன்மானைக் கண்டதும், அதைப் பிடித்துத் தரும்படி இராமனிடம் கேட்கிறாள் சீதை. அது மாய மான் என்று அறியாது, இலக்குவனை சீதைக்குக் காவலாக வைத்துவிட்டு, அதைப் பின்தொடர்ந்து செல்கிறான் இராமன். ஓடிக் களைத்த இராமன், மானை அம்பால் அடிக்கிறான். மாய மான் உருவம் கொண்ட அரக்கனான மாரீசன், “ஏ சீதா, ஏ லட்சுமணா!” என்று இராமனின் குரலில் கூக்குரலிட்ட வண்ணம் மண்ணில் சாய்ந்து இறக்கிறான். அக்கூக்குரல் சீதை, மற்றும் இலக்குவனின் காதுகளில் விழுகிறது…
வால்மீகி சொல்வதைக் காண்போம்:
आर्तस्वरम् तु तम् भर्तुः विज्ञाय सदृशम् वने |
उवाच लक्ष्मणम् सीता गच्छ जानीहि राघवम् || ३-४५-१
வனத்தில் எழுந்த பரிதாபமான குரலைத் தன் கணவனுடையதாக அறிந்து, இராமனிடம் செல் என்று இலக்குவனிடம் சீதை கூறினாள்.
न जगाम तथा उक्तः तु भ्रातुः आज्ञाय शासनम् || ३-४५-४
அவ்வாறு சொல்லப்பட்டும், அண்ணனின் ஆணையை நினைவில் கொண்டு (இலக்குவன்) செல்லாமலிருந்தான்.
तम् उवाच ततः तत्र क्षुभिता जनक आत्मजा |
सौमित्रे मित्र रूपेण भ्रातुः त्वम् असि शत्रुवत् || ३-४५-५
यः त्वम् अस्याम् अवस्थायाम् भ्रातरम् न अभिपद्यसे |
इच्छसि त्वम् विनश्यन्तम् रामम् लक्ष्मण मत् कृते || ३-४५-६
लोभात् तु मत् कृतम् नूनम् न अनुगच्छसि राघवम् |
व्यसनम् ते प्रियम् मन्ये स्नेहो भ्रातरि न अस्ति ते || ३-४५-७
அதைக்கண்டு மனம் கொதித்த ஜானகி அவனிடம் கூறினாள். “சுமித்திரையின் மகனே! நண்பனைப் போன்ற உருவத்துடன் உடன் பிறப்பின் எதிரியாக நீ இருக்கிறாய். எப்பொழுது நீ இந்தமாதிரி நிலையில் அண்ணனின் (உதவிக்குப்) போகாமல் இருக்கிறாயோ, இலக்குவா, நீ எனக்காக (என்னை விரும்பியே) இராமனின் அழிவை விரும்புகிறாய். என்(மீது) எழுந்த பேராசையால் அன்றோ தேவைப்படும்போது இராகவனைப் பின்தொடராமல் (உதவிக்குச் செல்லாமல்) இருக்கிறாய்! தவிப்பில் இருக்கும், (அனைவருக்கும்) பிரியமான அண்ணனிடம் உனக்கு அன்பு இல்லை.”
…இப்படிப் பட்ட கடும் சொற்களை சீதை கூறினாலும், இலக்குவன் நிதானமாக, “இராமனை யாராலும் துன்புறுத்த இயலாது, மூவுலகங்களுமே சேர்ந்து எதிர்த்தாலும், அவனைக் கட்டுப்படுத்த முடியாது, இப்பொழுது கெட்ட குரல் இராமனுடைது அல்ல. மாயையை உண்டு பண்ணும் அரக்கனுடையதாக இருக்கலாம். அந்த சிறந்த மானைக் கொன்றுவிட்டு உங்கள் கணவர் திரும்புவார்.” என்று பதினோரு சுலோகங்களில் எடுத்துரைக்கிறான். அவன் சொல்லில் நம்பிக்கை இல்லாததாலும், ஆபத்தில் மாட்டிக்கொண்டு இருக்கும் தன் கணவரின் உதவிக்குச் செல்லாமல், தான் கடும் சொல் கூறியும் தன்னை விட்டு அகலாமல் இருக்கிறானே என்ற பதட்டத்தினாலும் சீதை மேலும் சீற்றமடைகிறாள்…
सुदुष्टः त्वम् वने रामम् एकम् एको अनुगच्छसि |
मम हेतोः प्रतिच्छन्नः प्रयुक्तो भरतेन वा || ३-४५-२४
समक्षम् तव सौमित्रे प्राणान् त्यक्ष्यामि असंशयम् || ४-५-२६
रामम् विना क्षणम् अपि न एव जीवामि भू तले |
इति उक्तः परुषम् वाक्यम् सीतया रोमहर्षणम् || ३-४५-२७
अब्रवीत् लक्ष्मणः सीताम् प्रांजलिः विजितेन्द्रियः |
उत्तरम् न उत्सहे वक्तुम् दैवतम् भवती मम || ३-४५-२८
वाक्यम् अप्रतिरूपम् तु न चित्रम् स्त्रीषु मैथिलि |
स्वभावः तु एष नारीणाम् एषु लोकेषु दृश्यते || ३-४५-२९
श्रोत्रयोः उभयोः मध्ये तप्त नाराच सन्निभम् |
उपशृण्वंतु मे सर्वे साक्षिनो हि वनेचराः || ३-४५-३१
गमिष्ये यत्र काकुत्स्थः स्वस्ति ते अस्तु वरानने || ३-४५-३३
रक्षन्तु त्वाम् विशालाक्षि समग्रा वन देवताः |
निमित्तानि हि घोराणि यानि प्रादुर्भवन्ति मे |
अपि त्वाम् सह रामेण पश्येयम् पुनरागतः || ३-४५-३४
“மிகவும் கெட்டவனே! என்பொருட்டு (என்னை அடைவதற்காக) நீ தனியாகவோ, அல்லது பரதனால் தூண்டப்பட்டோ, இரகசியமாக காட்டுக்கு இராமனைத் தொடர்ந்து வந்திருக்கிறாய். சுமித்திரையின் மகனே, உன் முன்னாலேயே என் உயிரைத் துறந்து விடுவேன். இப்புவியில் ஒருகணமும் இப்புவியில் இராமனில்லாமல் நான் வாழ மாட்டேன்.” (கோபத்தினால்) மயிர்க்கூச்செறிவுற்ற சீதையால் இப்படிப்பட்ட குத்தும் சொற்கள் சொல்லப்பட்டன.
(இதனால்) உணர்வு ஓடுங்கப்பட்டுப் போன இலக்குவன் சீதையைக் கைகூப்பிச் சொன்னான். “மைதிலி, (நீ) எனக்கு தெய்வமாக ஆகிறாய். பதில் உரைக்கவும் திறனற்றவனானேன். பெண்களிடம் சொல்லத்தகாத வார்த்தைகள் (இருப்பது) என்பது வியப்பல்ல. பெண்களுடைய இப்படிப்பட்ட இயல்பு இவ்வுலகங்களில் காணப் படுகிறது. (இவ்வாறு கடும் சொற்களைச் சொல்வது) இரு காதுகளுக்கு நடுவில் (தைத்த) சுடும் அம்பைப்போல இருக்கிறது. (இதைக்) கூர்ந்து கேட்கும் காட்டில் செல்பவர் எல்லோருமே (வனம் வாழ் தெய்வங்கள் அனைவருமே) இதைக் கேட்கிறார்கள்.
“எங்கு காகுஸ்தர் (இராமன் இருக்கிறாரோ) அங்கு செல்வேன். இனிய முகம் உள்ளவளே! நீ நலமாக இருப்பாயாக. அகண்ட கண்களை உடையவளே! வனத்தில் இருக்கும் எல்லாத் தெய்வங்களும் உம்மைக் காப்பார்களாக! இந்த சகுனங்களை மதிப்பிட்டால், தீயனவாகவே எனக்குப் படுகின்றன. இராமனோடு கூடத் திரும்பி வருங்கால், உம்மைப் நான் பார்ப்பேனோ?”
गोदावरीम् प्रवेक्ष्यामि हीना रामेण लक्ष्मण |
आबन्धिष्ये अथवा त्यक्ष्ये विषमे देहम् आत्मनः || ३-४५-३६
पिबामि वा विषम् तीक्ष्णम् प्रवेक्ष्यामि हुताशनम् |
न तु अहम् राघवात् अन्यम् कदाअपि पुरुषम् स्पृशे || ३-४५-३७
…இவ்வாறு இலக்குவன் சொன்னாதும், நீர் மல்கும் கண்களுடன் சீதை, “இலக்குவா, இராமன் இல்லாவிட்டால், கோதாவரியில் புகுவேன், தூக்கில் தொங்குவேன், இல்லாவிட்டால், மலை உச்சியில் இருந்து (குதித்து) உடலைத் துறப்பேன். இல்லை, கடும் விஷத்தைக் குடிப்பேன்; தீயில் பிரவேசிப்பேன்.. இராகவன் அல்லாது மற்ற ஆடவர்கள் ஏன்னை ஒருபொழுதும் தொட விடமாட்டேன்”
இவ்வாறு கூறி வயிற்றில் அடித்துக்கொண்டு அழுதாள். இப்படி அழுத சீதையை வணங்கிவிட்டு, இராமன் சென்ற இடத்தை நோக்கிச் சென்றான், இலக்குவன்.
கம்பர் இந்நிகழ்ச்சியை எவ்வாறு சித்தரிக்கிறார்?
…மாய மானின் கூக்குரலைக் கெட்ட சீதை, இராமனுக்குத்தான் எதோ தீங்கு நேர்ந்துவிட்டது என் நினைத்து வயற்றில் அடித்துக்கொண்டு கீழே விழுந்தால். “நான் மானைப் பிடித்துக் கொடு என்று கேட்டதால் தானே இந்நிலை நேர்ந்தது என்று தரையில் புரண்டு அழுதாள்.
குற்றம் வீந்த குணத்தின் எம் கோமகன்
மற்று அவ் வாள் அரக்கன் புரி மாயையால்
இற்று வீழ்ந்தனன் என்னவும் என் அயல்
நிற்றியோ இளையோய் ஒரு நீ என்றாள். – 3.806
“குற்றம் (என்பதே) கலக்காத என்னுடைய அரசகுமாரன், அந்த அரக்கன் செய்த மாயையால் நிலைதடுமாறி வீழ்த்து விட்டான் என்று அறிந்தும், என் அருகில் நிற்பாயோ, நீ ஒரு தம்பியோ?” என்றாள்.
இவ்வாறு சீதை சினம் கொண்டு கேட்டவுடன், இராமனுடைய வலிமையைப் பற்றியும், யாரும் அவனை வெல்ல இயலாது என்றும், தம் இருவர் பெயரையும் சொல்லி அலறி இருப்பது மான் உருக்கொண்டு வந்த அரக்கன்தான் என்றும், கவலைப்படாமல் இருக்கும்படியும் சீதையை இலக்குவன் வேண்டுவதாகக் கம்பர் ஏழு செய்யுள்களில் கூறுகிறார்.
என்று அவன் இயம்பலும் எடுத்த சீற்றத்தள்
கொன்றன இன்னலள் கொதிக்கும் உள்ளத்தள்
நின்ற நின் நிலை இது நெறியிற்று அன்று எனா
வன் தருகண்ணினள் வலிந்து கூறுவாள். – 3.814
ஒரு பகல் பழகினார் உயிரை ஈவரால்
பெருமகன் உலைவுறு பெற்றி கேட்டும் நீ
வெருவலை நின்றனை வேறு என் யான் இனி
எரியிடைக் கடித்து வீழ்ந்து இறப்பென் எனா. – 3.815
இந்த விதமாக அவன் (இலக்குவன்) சொல்லியும், (உள்ளத்தில்) எழும்பிய சீற்றத்தினால், தானே கொல்லப்படுவது போன்ற துயரத்தை அடைந்து, கொதிக்கும் உள்ளத்துடன், (இங்கு) நிற்கும் உனது நிலையானது நெறியில்லாத ஒன்றாகும் என்று கடிந்து சொல்ல ஆரம்பித்தாள்.
“ஒரு நாள் பழகியவர்கள்கூட உயிரையும் கொடுப்பார்கள். எனவே, உயர்ந்தவன் (இராமன்) தீங்கடையும் செய்தி கேட்டும், ஒன்றும் தோன்றாமல் நீ நின்று கொண்டிருக்கிறாய். இனி வேறு என்ன (செய்ய இயலும்)? இப்போது நான் தீக்கு நடுவில் விழுந்து இறப்பேன்!” என்றாள்.
அவளைத் தடுத்து நிறுத்திய இலக்குவன், அவள் கால்களில் விழுந்து வணங்கி, இராமன் தனக்கு இட்ட கட்டளையை மீறி, அவளைத் தனியாக விட்டுச் செல்லும்படி செய்ததை நினைத்து மனம் நொந்தவாறு செல்கிறான்.
அறம்தனால் அழிவு இலது ஆகல் ஆக்கலாம்
இறந்து பாடு இவர்க்கு உறும் இருக்கின் இவ் வழி
துறந்து போம் இதனையே துணிவென் தொல்வினைப்
பிறந்து போந்து இது படும் பேதையேன் எனா. – 3.820
நல்வினை(தர்மம்)யால் (மட்டுமே) அழிவு ஏற்படாதவாறு காக்க இயலும். இங்கு இருந்தால் இவருக்கு (சீதைக்கு) இறக்கும்படி ஆகிவிடும். இந்த இடத்தைவிட்டு நீங்குவதையே நான் துணிந்து செய்வேன். முன்வினைப் பயனால் உண்டான இந்த (வேதனையை) அனுபவிக்கும் பாவியானேன் என்று (மனதிற்குள் புலம்பினான்).
இங்கு ஏதாவது தீங்கு ஏற்பட்டால், கழுகுகளின் தலைவனான (ஜடாயு) பார்த்து தன்னால் இயன்ற வண்ணம் காத்துக்கொள்வான் என்று தன்னைத் தானே தேற்றிக் கொண்டு சென்றான்.
ஒப்பீடு
இலக்குவன்-சீதை சொற்பரிமாற்றம் கம்பரால் சுருக்கமாகவே கொடுக்கப்பட்டிருக்திறது. முதலில் சீதை அழுததை இரண்டு செய்யுள்களில் (8 வரிகளில்) கூறிய கம்பர், ஒரே ஒரு விருத்தப் பாவின் மூலம் (4 வரிகளில்), இலக்குவனை இராமனின் உதவிக்குச் செல்லுமாறு சீதை கூறியதாக எழுதி இருக்கிறார்.. வால்மீகி ஒரு சுலோகத்தில் (ஒரு வரியில்) மாய மானில் குரலை தனது கணவரின் குரல் என்று அடையாளம் கண்டு கொண்டபின், மூன்று சுலோகங்களில் (ஆறு வரிகளில்) இராமனுக்கு உதவியாகச் செல்லும்படி இலக்குவனிடம் சொல்வதாகச் சித்தரிக்கிறார்.
துவக்கத்திலேயே வால்மீகியும், கம்பரும் வேறுபடுகிறார்கள். சீதையின் கழிவிரக்கத்தைப் பற்றி, தன்னால்தானே தன் கணவருக்கு இந்நிலை ஏற்பட்டதே என்று புலம்புவதைப் பற்றியும் கம்பர் விளக்குகிறார். ஆனால், வால்மீகியோ, மாய மானின் குரல், தனது கணவருடையது என்று நினைத்து சீதை இலக்குவனிடம் பேச ஆரம்பித்து விட்டதாகக் குறிப்பிட்டிருக்கிறார். இதிலிருந்து கம்பரும், வால்மீகியும் பெண்களைப் பற்றி சிறிது மாறுபாடாக எண்ணி இருக்கிறார்கள் என்று ஊகிக்கலாம். இது இலக்குவனின் வாய்மொழியாகப் பின்னர் வால்மீகி இராமாயணத்தில் வெளிப்படுகிறது.
கம்ப இராமாயணத்தில், இலக்குவன் ஏழு பாக்களின் மூலம் (28 வரிகளில்), இராமனுக்கு எந்தவிதமான தீங்கும் நேராது என்றும், தன் அண்ணனின் வல்லமையும் விளக்குகிறான். வால்மீகி இராமாயணத்தில், இது சிறிது மாறுபடுகிறது. சீதை சொல்லியும், இலக்குவன் ஏதும் சொல்லாமல் நின்றதாகவும், அதைப் பொறுக்காத சீதை ஐந்து சுலோகங்களின் மூலம் (பத்து வரிகளில்) இராமன் அழியவேண்டும் என்று இலக்குவன் விரும்புவதாகவும், அப்படி ஆகிவிட்டால், தன்னை அடையலாம் என்ற தகாத ஆசையினால் உதவிக்குச் செல்லாமல் நிற்பதாகவும், அவன் மீது கடும் சொற்களினால் குற்றம் சாட்டுவதாகவும் எழுதி உள்ளார். அதன் பின்னரே இலக்குவன், இராமனுடைய வல்லமையைப் பற்றி 10 சுலோகங்களில் (21 வரிகளில்) சொல்வதாக வர்ணிக்கிறார். வால்மீகி எழுதியதைப் போன்று சீதையின் இலக்குவன் மீது கடும் சொல் அம்புகளை எய்யாததற்கு, கம்பரின் தமிழ் மரபும் ஒரு தலையாய காரணம் என்று படுகிறது. தமையனின் தாரம் தாய்க்கு நிகர் என்பது தமிழர் பண்பாடு. எனவே, தனயனுக்கு நிகரான இளைய பெருமாள் இலக்குவன் தன் மீது தகாத ஆசை கொள்ளுவான் என்று சீதையால் எண்ணிக்கூடப் பார்த்திருக்க இயலாது, அப்படி எழுதினால் சீதையைத் திருமகளுக்கு இணையாக என்ன, ஒரு சராசரிப் பெண்ணாகக் கூட, தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று அதை எழுதாமல், கம்பர் விட்டுவிட்டார் என்றே எண்ணத் தோன்றுகிறது.
ஆனால், வால்மீகியோ, இலக்குவன் சீதையின் கடும் சொற்களுக்கு, தன்னைப் பற்றி கேவலமாகப் பேசப் பட்ட எந்தக் குற்றச் சட்டுகளுக்குமே பதில் எதுவும் சொல்லாமல், இராமனுக்கு எதுவும் நேர்ந்திருக்காது, அவரின் கட்டளையை மீறி நான் செல்ல முடியாது என்று மட்டுமே கூறுவதாக எழுதியுள்ளார். மேலெழுந்த வாரியாகப் பார்த்தால் வால்மீகி ஏன் இப்படி எழுதியிருக்கிறார், இலக்குவன் ஏன் சீதைக்கு தனது நேர்மையைப் பற்றி விளக்கம் தெரிவிக்கவில்லை என்று தோன்றும். முதலாவதாக, சீதையை சோபனே (शोभने), அதாவது, மங்கலமானவளே, மிகச் சிறந்தவளே என்றுதான் இலக்குவன் குறிப்பிடுகிறான். இதிலிருந்து அவளைப் பற்றி தவறான எண்ணம் தனக்கு எதுவும் இல்லை என்று ஒரே சொல்லில் தெரிவிக்கிறான். மேலும், சீதை இருக்கும் மன நிலையில் தான் என்ன சொன்னாலும் பயனில்லை என்றே அவன் நினைக்கிறான் என்று வால்மீகி நமக்குப் புரிய வைக்கிறார்.
அதற்குப் பிறகும் சீற்றம் தணியாதவளாக, இலக்குவன் மீதும், ஏன் பரதன் மீதுமே குற்றச் சாட்டுகளை அடுக்குவதாக வால்மீகி எழுதுகிறார். கடைசியில், என்ன செய்தாலும் தன்னை அடைய முடியாது என்றும், தன்னை அடைய முயற்சித்தால் உயிரைப் போக்கிக் கொள்வதாகவும் சீதை சொல்கிறாள். இது சீதையின் கற்பை உயர்த்துவதாகவே அமைகிறது. கணவர் உயிருக்கு ஆபத்து என்று நினைக்கும் பொது, உணர்ச்சி வசப்பட்ட சீதை தான் என்ன சொல்கிறோம் என்பதை உணராமலேய பேசுவதாகத்தான் வால்மீகி வர்ணித்திருக்கிறார். கற்பில் சிறந்திருந்தாலும், சீதை ஒரு சாதாரணப் பெண்ணாகத்தான் அவரால் உருவகப் படுத்தப் படுகிறாள். அதை அறிந்தே, இலக்குவன் சிந்தியாதவண்ணம், உணர்ச்சிப் பெருக்கில் சொல்லப்பட்ட அவளது சொற்களை ஒதுக்கி விடுகிறான் என்றும் நாம் புரிந்து கொள்ளவேண்டி இருக்கிறது.
இருப்பினும், ஏழு சுலோகங்களில் சீதைக்கு இலக்குவன் பதிலளிப்பதாக வால்மீகி விளக்கி உள்ளார். அவற்றில் சீதையை தெய்வத்திற்கு இணையாகவே தான் நினைப்பதாகக் கூறி, தனது தூய்மையை விளக்கிவிட்டு, அவளது கடும் சொற்கள் பழுக்கக் காச்சிய அம்பு போலத் தனது காதுகளுக்கு நடுவில் பாய்வது போல இருக்கிறது என்கிறான். அச் சொற்களால் செய்வதறியாது திகைத்து, நின்று போனேன் என்று தன் நிலைமையைச் சீதைக்கு எடுத்துக் கூறுகிறான். மேலும், பெண்கள் தங்கள் காரியம் ஆகவேண்டும் என்பதற்காக எதை வேண்டுமாலும் பேசுவார்கள் என்றும் சொல்கிறான். இதன்மூலம் வால்மீகி பெண்களைப் பற்றி, அவர்கள் தெய்வத் தன்மை பொருந்தியவர்கள் ஆனாலும், பெண்களாக இருந்தால் எப்படி நடந்து கொள்வார்கள் என்று இலக்குவன் மூலமாக விளக்குகிறார். கம்பரோ, பெண்களை உயர்வாகப் போற்றும் தமிழ் மரபுக்கு இவ்வாறு பெண்களைப் பற்றி விவரிப்பது உகந்ததல்ல என்று விட்டு விடுகிறார்.
இலக்குவன் செல்லாவிட்டால் தான் உயிரைத் துறந்துவிடுவேன் என்று சீதை சொல்வதாக இரண்டு கவிஞர்களுமே எழுதி இருக்கிரார்கள். இலக்குவன் வாளாவிருப்பது நல்ல நெறி அல்லவென்றும், அவன் செல்லாவிட்டால், தீ மூட்டி உயிர் துறப்பேன் என்று சீதை வாய்மொழியாகவே கம்பர் தெரிவிக்கின்றார். வால்மீகியோ, இராமனைத் தவிரத் தன்னை யாரும் தொட முடியாது என்றும், அப்படி ஒரு நிலை வந்தால், உயிரை எப்படித் துறப்பேன் என்று பல வழிகளைக் சீதை கூறுகிறாள் என்று தெரிவிக்கிறார். சீதையின் சொல்லில் இருக்கும் முரண்பாட்டை (irony), நமக்குத் தெரிவிக்கிறார் வால்மீகி. மற்றவர் யாரும் தன்னைத் தொடும் நிலை வந்தால் உயிர் துறப்பேன் என்ற சீதையை, இராவணன் தூக்கிச் செல்லபோகும் முன்னதாகவே முறையை நமக்குக் கோடிட்டுக் காட்டுகிறார் அந்த மகாகவி. கம்பர் இவ்வாறு சீதை வாய்மொழியாகச் சொல்லாததும் சீதை இராவணன் கவர்ந்து செல்லும் புனைவை மனதில் கொண்டுதான்.
இவ்வாறு சீதை சொன்னதும், அவளை வணங்கிவிட்டுத் திரும்பிப் பார்த்துக்கொண்டே இலக்குவன், இராமன் இருக்குமிடம் தேடிச் சென்றான் – இது வால்மீகி சொன்னது.
“இங்கிருந்தால் மதிப்பிற்குரிய சீதை இறப்பாள்; சென்றால் பெருங்கேடு வந்து சேரும். ஊழ் வினையால் எனக்கு இந்நிலை ஏற்பட்டது. அறம் ஒன்றினால் மட்டும்தான் அழிவைத் தடுக்க இயலும்.” என்ற இலக்குவன், சீதையைச் சுற்றி வலம் வந்து வணங்கி அங்கிருந்து அகன்றான் — இது கம்பரின் கூற்று.
இருவருமே, இலக்குவனின் நேர்மையையும், கடமை உணர்வையும், இருதலைக்கொள்ளி நிலைமையையும் விவரிக்கிறார்கள். கம்பருக்கு ஊழ்வினையில் (கர்மா, முன்வினைப் பயன்) இவற்றில் இருக்கும் நம்பிக்கை இலக்குவன் வாயிலாக வெளிவருகிறது. வால்மீகியோ, அதைப் பற்றி ஒன்றுமே எழுதவில்லை.
இறுதியில், தீங்கு எதுவும் ஏற்பட்டால், கழுகுகளின் தலைவன் ஜடாயு காப்பான் என்ற நம்பிக்கையுடன் செல்கிறான் என்று முடிக்கிறார் கம்ப நாட்டார். வனத்தில் வாழ் தெய்வங்கள் சீதையைக் காப்பாற்றட்டும் என்று இலக்குவன் இயம்பியதாக வால்மீகி வரைகிறார்.
மகாகவிகள் இருவருமே பின்நாள் வரப் போவதை, முன்கூட்டியே தெரிவிக்கிறார்கள். வால்மீகி சீதை வாயிலாகத் தெரிவித்தால், கம்பர், இலக்குவன் வாயிலாகத் தெரிவிக்கிறார்.
கம்பர் சீதையைத் திருமகளின் அவதாரம் என்று காண்பிப்பதால், அத்தகைய தெய்வ மாதின் வாயில் தகாத சொற்கள் வரக்கூடாது என்று “இடக்கர் அடக்கி” இருக்கிறார். வால்மீகியோ, அப்படிச் சீதையைக் காண்பிக்காததால், மானிடப்பெண்ணின் இயல்புகளை அவள் மேல் போர்த்தி இருக்கிறார்.
ஒப்பீடு நீண்டு விட்டது; எனவே, இராவணன் சீதையைக் கவர்ந்து செல்லும் பகுதியை அடுத்த ஒப்பீட்டில் காண்போம்.
(தொடரும்)
துணைபுரிந்தவை:
வால்மீகி இராமாயண வடமொழி மூலம் (ஆரண்ய காண்டம், நாற்பத்தைந்தாம் சர்க்கம்): https://www.valmikiramayan.net/
கம்பராமாயணம் – ஆரண்ய காண்டம் – 9. சடாயு உயிர் நீத்த படலம்: வர்த்தமானன் பதிப்பகம், சென்னை.
வடமொழி – ஆங்கில அகராதி (Sanskrit – English Dictionary): www.srimadbhagavatam.org
Kambar with 11.000 stanzas of heart_melting metaphors & similes as compared to Valmiki’s “‘s 24,000 couplets, is my go to poet for the interpretation of Ramayanam. Valmiki’s Ramayana has so much room for ambiguity and thus leads to variations.
. Sita, as interpreted by Kambar is more holier & is regarded as Laxmi avatharam as compared to every day Indian women of those day. To me, it reflects his respectful devotion to Rama & his woman. Enjoyed reading it.
மதிப்பிற்குரிய கட்டுரை ஆசிரியருக்கு,
// வால்மீகி எழுதியதைப் போன்று சீதையின் இலக்குவன் மீது கடும் சொல் அம்புகளை எய்யாததற்கு, கம்பரின் தமிழ் மரபும் ஒரு தலையாய காரணம் என்று படுகிறது. தமையனின் தாரம் தாய்க்கு நிகர் என்பது தமிழர் பண்பாடு. //
// பெண்கள் தங்கள் காரியம் ஆகவேண்டும் என்பதற்காக எதை வேண்டுமாலும் பேசுவார்கள் என்றும் சொல்கிறான். இதன்மூலம் வால்மீகி பெண்களைப் பற்றி, அவர்கள் தெய்வத் தன்மை பொருந்தியவர்கள் ஆனாலும், பெண்களாக இருந்தால் எப்படி நடந்து கொள்வார்கள் என்று இலக்குவன் மூலமாக விளக்குகிறார். கம்பரோ, பெண்களை உயர்வாகப் போற்றும் தமிழ் மரபுக்கு இவ்வாறு பெண்களைப் பற்றி விவரிப்பது உகந்ததல்ல என்று விட்டு விடுகிறார். //
இப்படி இரண்டு மூன்று தடவை “தமிழர் பண்பாடு, தமிழர் பண்பாடு” என்று எழுதுவதன் நோக்கம் என்னவென்று தெளிவாக இல்லை, ஆனால் ஊகிக்க முடிகிறது. தமிழர்-வட நாட்டு இந்துக்கள் (அல்லது) ஆரிய-திராவிட பிரிவினை (இன ரீதியில் இல்லாமற் போனாலும் கலாச்சார ரீதியிலான பிரிவினை) என்று ஒரு பிரமையை உண்டு பண்ணுவது மிகவும் தவறு.
வால்மீகி ஏதோ பெண்களைக் குறைத்துச் சொல்லுவதாகவும் எழுதியிருக்கிறீர்கள்.
“காவ்யம் ராமாயணம் க்ருத்ஸ்னம் சீதாயாச்’ சரிதம் மஹத்” என்று எழுதியவர் வால்மீகியே.
// தமையனின் தாரம் தாய்க்கு நிகர் என்பது தமிழர் பண்பாடு. //
“ராமம் தசரதம் வித்தி மாம் வித்தி ஜனகாத்மஜாம்” (அயோத். 40-வது சருக்கம், 9-வது சுலோகம்) என்று சுமித்திரை, இலக்குவன் தன்னிடமிருந்து விடைபெற்றுச் செல்லும்போது “சீதையைத் தாயாகிய என்னுடன் சமமாக எண்ண வேண்டும்” என்று மகனுக்கு அறிவுரை கூறிய தாய் வாக்கியத்தை இக்கட்டுரை ஆசிரியர் காணவில்லை போலும்.
அல்லது “நாஹம் ஜானாமி கேயூரே நாஹம் ஜானாமி குண்டாலே, நூபுரம் து அபிஜானாமி நித்யம் பாதாபிவந்தநாத்” (கிஷ்கிந்தா காண்டம், 6-வது சருக்கம், 22-வது சுலோகம்) என்ற இடத்தில் “இந்த வளையல்களையோ காதணிகளையோ நான் அறிவேன் அல்லேன். ஆனால், இந்தக் கால் கொலுசுகளைக் கண்டிப்பாக சீதையினுடையது தான் என்று என்னால் அடையாளம் காண முடிகிறது. தினசரி அந்த பாதங்களையே வணங்கியதால்” என்று இலக்குவன் சீதை வானத்திலிருந்து எறிந்த அணிகலன்களை சுக்கிரீவன் காட்டியபோது சொல்லும் வார்த்தையிலிருந்து கூட “வால்மீகியின் எழுத்துப்படி இலக்குவன் சீதையைத் தன் தாயாகவே நினைத்திருந்தான்” என்று இக்கட்டுரை ஆசிரியருக்குப் புலப்படவில்லையா?
வடதேசத்தில் காவியம் இயற்றிய வால்மீகியும் இப்படி எழுதியிருக்க, “தமையனின் தாரம் தாய்க்கு நிகர் என்பது தமிழர் பண்பாடு” என்று தனியாகப் பிரித்துக் காட்டுவானேன்? “தமையனின் தாரம் தாய்க்கு நிகர் என்பது பாரதப் பண்பாடு” என்று சொல்வது தானே பொருத்தம்?
இறுதியாக ஒரு பரிந்துரை — வடமொழியில் தேர்ச்சி இல்லை என்றால் வடமொழி வல்லுனர்களையும் பாஷ்யங்களையும் பார்க்கவும். அகராதியைக் கொண்டு சொல் பிரித்து அர்த்தம் தேடுவது விபரீதார்த்தங்களுக்கு இடம் கொடுக்கக் கூடும்.
// பெண்கள் தங்கள் காரியம் ஆகவேண்டும் என்பதற்காக எதை வேண்டுமாலும் பேசுவார்கள் என்றும் சொல்கிறான் //
இப்படி இலக்குவன் சொல்லுவதாக வால்மீகி எந்த சுலோகத்திலும் சொல்லவில்லை. இது valmikiramayan.net இணையதளத்தின் மொழிபெயர்ப்பாளரின் தனிமனிதக் கருத்து.
// இதன்மூலம் வால்மீகி பெண்களைப் பற்றி, அவர்கள் தெய்வத் தன்மை பொருந்தியவர்கள் ஆனாலும், பெண்களாக இருந்தால் எப்படி நடந்து கொள்வார்கள் என்று இலக்குவன் மூலமாக விளக்குகிறார். கம்பரோ, பெண்களை உயர்வாகப் போற்றும் தமிழ் மரபுக்கு இவ்வாறு பெண்களைப் பற்றி விவரிப்பது உகந்ததல்ல என்று விட்டு விடுகிறார். //
வால்மீகி சீதா-ராமர்களின் லக்ஷ்மீ-நாராயண அவதாரத்துவத்தை ஒரு சில இடங்களிலேயே காட்டியிருந்தாலும், ஐயந்தீரத் தெளிவாகவே காட்டியிருக்கிறார். வேறு இடங்களில் அவதாரத்தில் அவர்கள் தன்னிச்சையாக மேற்கொண்ட மானுடத்துவம் சார்ந்த வேஷத்தை மனதில் கொண்டே காவியம் படைத்திருக்கிறார். ஆனால் இதிலிருந்து “வால்மீகி இராமனையும் சீதையையும் உண்மையாகவே குறை-நிறைகள் கலந்த சாதாரண மனிதர்களாகவே கண்டார்” என்று சொல்வதற்கு இடமே இல்லை என்பது அவதாரத்துவத்தை ஐயந்தீரக் காட்டும் அவரது சுலோகங்களிலிருந்தே தெரிகிறது.
ஆனால், கம்பருடைய காவியத்திலோ தேடத் தேட சீதா-ராமர்களின் தெய்வீகத் தன்மையே காவியம் முழுவதிலும் மலிந்து காணப்படுகிறது. இரு கவிகளுடைய வருணனைகளுக்கு உள்ள வித்தியாசம் அது. இருவேறு கவிகளின் ருசி பேதத்தைக் காண்பிக்குமே அன்றி, இல்லாத கலாச்சார-கருத்து வித்தியாசத்தை ஒருபோதும் காண்பிக்காது.
இப்படி இருக்க, பெண்களை எந்தக் கண்ணோட்டத்துடன் நோக்க வெண்டும் என்பதில் இரு கவிகளுக்கும் உள்ள கருத்து வேறுபாடு தெரிகிறது என்று சொல்வது நிறைவான ஆராய்ச்சியின்மையையே காட்டுகிறது.
கம்பரே ஆதிகவியாகிய வால்மீகியை வணங்கி, வால்மீகியைப் பின்பற்றியே தாம் இராமாயணம் எழுதுவதாகக் கூறியுள்ளார், பாயிரத்தில் –
தேவ பாடையின் இக் கதை செய்தவர்
மூவர் ஆனவர் தம் உளும் முந்திய
நாவினார் உரையின்படி நான் தமிழ்ப்
பாவினால் இது உணர்த்திய பண்பு. அரோ.
ஆசிரியர் குழுவிற்கு —
ஆ சேது ஹிமாசலம் பாரதத்திலுள்ள இந்துக்களை ஒன்று சேர்க்க வெண்டிய இத்தருணத்தில் — ஒற்றுமை உணர்விலே சிரத்தையை உண்டுபண்ண வேண்டிய இத்தருணத்தில் — உங்கள் தரப்பிலிருந்து ஒரு disclaimer கூட இல்லாமல் இப்படிப்பட்ட பிரிவினைக் கருத்துக்களைத் தனக்குள்ளே அடக்கியிருக்கும் இந்தக் கட்டுரையை வெளியிட்டிருப்பது வருத்தத்தைத் தருகிறது.
அன்பார்ந்த ஸ்ரீ கந்தர்வன்,கோடானு கோடி வந்தனங்கள்.
சொல்லப்பட்ட பல விஷயங்களினின்று நான் வேறுபட்டாலும் பலதுக்கு மாற்றுக்கருத்துக்கள் நினைவில் வந்தாலும் Exact Context நினைவில் வரவில்லை.
\\ கம்பருடைய காவியத்திலோ தேடத் தேட சீதா-ராமர்களின் தெய்வீகத் தன்மையே காவியம் முழுவதிலும் மலிந்து காணப்படுகிறது. இரு கவிகளுடைய வருணனைகளுக்கு உள்ள வித்தியாசம் அது. இருவேறு கவிகளின் ருசி பேதத்தைக் காண்பிக்குமே அன்றி, இல்லாத கலாச்சார-கருத்து வித்தியாசத்தை ஒருபோதும் காண்பிக்காது. \\
திருவரங்கப்பெருமான் சன்னிதியில் அரங்கேறிய மஹாகாவ்யம் கம்பராமாயணம். ஆர்ஷ வசனம் – ஆன்றோர் வாக்கு என்ற படிக்காகும் கம்பநாட்டாழ்வாரின் காவ்யத்தில் காணப்படும் பேதம் – கவியின் ருசி சார்ந்ததே என்று நிறுவியமை அருமை.
\\ இப்படி இரண்டு மூன்று தடவை “தமிழர் பண்பாடு, தமிழர் பண்பாடு” என்று எழுதுவதன் நோக்கம் என்னவென்று தெளிவாக இல்லை, ஆனால் ஊகிக்க முடிகிறது. தமிழர்-வட நாட்டு இந்துக்கள் (அல்லது) ஆரிய-திராவிட பிரிவினை (இன ரீதியில் இல்லாமற் போனாலும் கலாச்சார ரீதியிலான பிரிவினை) என்று ஒரு பிரமையை உண்டு பண்ணுவது மிகவும் தவறு. \\ தமையனின் தாரம் தாய்க்கு நிகர் என்பது பாரதப் பண்பாடு” என்று சொல்வது தானே பொருத்தம்? \\ இப்படிப்பட்ட பிரிவினைக் கருத்துக்களைத் தனக்குள்ளே அடக்கியிருக்கும் இந்தக் கட்டுரை \\
பேராசிரியர் ஸ்ரீ சுப்ரமண்யம் அவர்களது வ்யாசத்திற்கு உத்தரமெழுதுகையில் என் மனதில் முள்ளாய் உறுத்திய விஷயம் இது.
*தமிழர் பண்பாடு* என்று நம்முடைய உயர்வான அறநெறிகளை நானும் பெருமையுடனேயே உகப்புக் கொள்கிறேன். ப்ரச்சினை அப்படி ஒரு உகப்பு கொள்வதில் இல்லை. ஆனால் ஹிந்துஸ்தானத்தின் மற்ற ப்ரதேசத்தினரின் பண்பாடு (மாற்றுப் பண்பாடு என்பது Oxymoron) தமிழ்ப்பண்பாட்டை விட தாழ்ந்தது என்ற கருத்தாக்கம் மேட்டிமைத் தன்மையது. வெற்று ப்ரமை. இப்படிப்பட்ட ப்ரமை விலக திறந்த மனத்துடன் குறைந்த பக்ஷம் நாலைந்து மாற்று ப்ரதேசத்தினருடனாவது கலந்து பழகுதல் அவசியம்.
உடை, உணவு, வாழ்க்கை முறைகள் – இவற்றில் ஆசேது ஹிமாசலம் – அந்தந்த இடங்களின் தட்பவெப்பங்களுக்கு ஏற்ப நிச்சயம் வித்யாசம் இருக்கத்தான் செய்யும். இவை வேற்றுமைகள்.
ஒட்டு மொத்தமான பாரதீயப்பண்பாடு – உயர்வான அறநெறிகள் – இவை நாலைந்து என்ன? ஏழெட்டு விவித ப்ரதேசங்களில் ஒரேபோல நான் கண்டு பெருமைப்பட்ட விஷயம்.
அன்பின் ஸ்ரீ கந்தர்வன், கடுமை இல்லாது வால்மீகி ஹ்ருதயத்தை பல ச்லோகாதிகளின் வாயிலாக ஆதார பூர்வமாக விளக்கியமைக்கு நன்றி. Yet, I am afraid that more off-the-track interpretations are yet to come. I would appreciate, if you throw light further.
முனிசிம்ஹமாகிய வால்மீகி ஹ்ருதயத்தை அவதானித்தல் என்பது – ஆன்றோர் வாக்குகள் வாயிலாகச் செய்யப்பட வேண்டிய விஷயம். சொந்த அபிப்ராயாதிகள் – அதுவும் cherry picking படி அமைபவை………
கந்தர்வன்
இதே தொடரின் முதல் கட்டுரையில் நீங்கள் எழுதியது இதோ:
///// மங்கையரால் தலைக்கு மேலே கைகூப்பி வணங்கத்தக்க உமையவளைப் போன்ற //
மூலத்தில், “உமாதேவி போன்ற சிறப்புடைய மாதர்களும்” என்று பொருள்கொள்ளும்படி “உமையாள் ஒக்கும் மங்கையர்” என்றிருக்க, இப்படி மாற்றி அர்த்தம் கொள்ளுவதற்கு எங்கு இடமிருக்கிறது? தன மனதிற்குவந்த சொந்தக் கருத்துக்களை நூலாசிரியர்களின் மீது ஆரோபித்து (ஏற்றி / திணித்துச்) சொல்ல வேண்டாம்.////
மூலத்தில் இருக்கும் பாடல் இதோ:
////உமையாள் ஒக்கும் மங்கையர் உச்சிக் கரம் வைக்கும்
கமையாள் மேனி கண்டவர் காட்சிக் கரை காணார்
இமையா நாட்டம் பெற்றிலம் என்றாரிரு கண்ணால்
அமையாது என்றார் அந்தர வானத்தவர் எல்லாம். – 1.509////
உமையாள் ஒக்கும் “மங்கையர் உச்சிக்கரம் வைக்கும்” என்று இருப்பதை நீங்கள் கவனிக்க வில்லை.
“மங்கையரால் தலைக்கு மேலே கைகூப்பி வணங்கத்தக்க உமையவளை” என்று சொல்வது உங்களுக்கு எதனால் பிடிக்க வில்லை? அப்படியானால் உமையவள் என்ன தலைக்கு மேலே கை கூப்பி வணங்கத் தகாதவளா? நீங்கள் சொல்வது போல உமையவள் சிறப்புடையா மாதர்தானா?உமையவளை மாதர் என்று நீங்கள் எப்படிச் சொல்லலாம் ? உமையவள் உலக மாதா, பராசக்தி, இறைவி இல்லையா?
அவலை நினைத்து உரலை இடிக்கிறீர்கள். கோபம் வந்தால் நியாயம் கண்ணில் தெரியாது என்பது சரிதான்.
நிற்க,
இவ்வாறெல்லாம் நீங்கள் சொல்வது ஹிந்து ஒற்றுமையை வளர்க்குமா? இதைச் சொல்லிவிட்டு நீங்கள் ஆசிரியர் குழுவுக்கு கூறுவது என்ன?
///ஆ சேது ஹிமாசலம் பாரதத்திலுள்ள இந்துக்களை ஒன்று சேர்க்க வெண்டிய இத்தருணத்தில் — ஒற்றுமை உணர்விலே சிரத்தையை உண்டுபண்ண வேண்டிய இத்தருணத்தில் — உங்கள் தரப்பிலிருந்து ஒரு disclaimer கூட இல்லாமல் இப்படிப்பட்ட பிரிவினைக் கருத்துக்களைத் தனக்குள்ளே அடக்கியிருக்கும் இந்தக் கட்டுரையை வெளியிட்டிருப்பது வருத்தத்தைத் தருகிறது.////
“படிப்பது ராமாயணம், இடிப்பது பெருமாள் கோவில்” என்று ஒரு சொல்வழக்கு நினைவுக்கு வருகிறது.
// “மங்கையரால் தலைக்கு மேலே கைகூப்பி வணங்கத்தக்க உமையவளை” என்று சொல்வது உங்களுக்கு எதனால் பிடிக்க வில்லை? //
எதனால் பிடிக்கவில்லை என்று சொல்லுகிறேன்…
1) “உமையாள் ஒக்கும் மங்கையர் உச்சிக் கரம் வைக்கும்
கமையாள்” என்பதற்கு “குணத்திலும் அழகிலும் உமையவளைப் போன்ற மங்கையர்கள் தலைமேல் கைவைத்து வணங்கத்தக்க நற்பண்புகளுடைய சீதை” என்று தான் பொருள்.கம்பன் கழக அறநிலை விளக்கக் குழுவின் விளக்கமும் இதுவே: https://tamilvu.org/slet/l3700/l3700ur1.jsp?x=588
ஒருக்காலும் “இந்த அர்த்தம் எனக்குப் பிடிக்கவில்லை” என்று நினைத்து, இதை மாற்றி “மங்கையரால் தலைக்கு மேலே கைகூப்பி வணங்கத்தக்க உமையவளை” என்று கவி சொல்லாததையெல்லாம் சொல்ல இடமில்லை. இலக்கணப் பிழை தான் மிஞ்சும்..
2) “என் மனதிற்குப் பிடித்தவற்றைத் தான் கம்பரும் சொல்லுகிறார்” என்று முன்பே முடிவெடுத்து விட்டு கலர்க் கண்ணாடி வழியாகக் காவிய புராணாதிகளைப் படிப்பது தவறு என்பதனாலும் பிடிக்கவில்லை. காய்தல் உவத்தல் அன்றி கம்பர் என்ன சொல்லியிருக்கிறார் என்று முழு காவியத்தையும் அவதானத்துடன் பார்த்து அறிய வேண்டும்.
// அப்படியானால் உமையவள் என்ன தலைக்கு மேலே கை கூப்பி வணங்கத் தகாதவளா? //
இப்படி நான் சொல்லாததையெல்லாம் சொல்லி என்மேல் திணித்துக் கேட்டால் என்ன சொல்வேன்? ஆம், உமையவள் தெய்வம் தான். இல்லை என்று சொல்லவில்லை. “(குணத்திலும் அழகிலும்) உமையவளைப் போன்ற மங்கையர்” என்று சொன்னால் உமையவள் வெறும் மங்கை தான், தெய்வமில்லை என்று அர்த்தம் ஆகுமா? அம்மங்கையர் அழகிலும் குணத்திலும் உமையவளை ஒத்தவர்கள் என்று தான் அர்த்தம் ஆகும்.
”திருவுடை மன்னனைக் காணில் திருமாலைக் கண்டேனே” என்பதைப் போன்றதே இதுவும்.
எனக்கு பார்வதி தேவியின்மீது அதீத பக்தி இருப்பதனால் கம்பர் வாக்கியத்தை மாற்றிச் சொல்ல முடியுமா? ஒருக்காலும் முடியாது. “கம்பர் இப்படிச் சொல்லியுள்ளார். ஆனால் அவர் சொல்வதை என்னால் மனமார்ந்து ஏற்க இயலாது” என்று கூறுவது எவ்வளவோ மேல்.
// கோபம் வந்தால் நியாயம் கண்ணில் தெரியாது என்பது சரிதான். //
இது உங்களுக்கே பொருந்தும். எனக்கு எந்தக் கோவமும் இல்லை. நீங்கள் தான்
// “படிப்பது ராமாயணம், இடிப்பது பெருமாள் கோவில்” என்று ஒரு சொல்வழக்கு நினைவுக்கு வருகிறது. //
என்றெல்லாம் கோவத்துடன் திட்டுகிறீர்கள்.
பாரத ஒற்றுமைக்கும் இத்தகைய நடுநிலையான பற்றுதலின்றி செய்யப்படும் ஆராய்ச்சியும் வரலாற்று உணர்வும் தான் சிறந்தது.
அன்பார்ந்த ஸ்ரீ க்ருஷ்ணகுமார்
// Yet, I am afraid that more off-the-track interpretations are yet to come. I would appreciate, if you throw light further. //
Gladly…
கம்பன் அறநிலையக் குழுவின் விளக்கமும் சரி, உங்கள் விளக்கமும் சரி அபத்தத்தின் உச்ச கட்டம். இறைவியான பராசக்தி உமையவள் சிரம் குவித்து மண்ணில் வாழ்ந்த சீதையை வணங்குதல் என்பது கம்பனின் கருத்தாக இருக்கவில்லை. விளக்க உரை எழுதுபவரின் பிழை அல்லது பிழை பட்ட மனது என்பதுதான் சரி.
உயர்திரு கந்தர்வன், கிருஷ்ணகுமார் அவர்களுக்கு,
நான் எழுதிய ஒப்பீட்டுக் கட்டுரையை முழுதும் படித்துக் கருத்துச் சொல்லி இருப்பதற்கு மிக்க நன்றி. தங்கள் கருத்தில் கொடுத்துள்ள மேற்கோள்களில் இருந்து தங்களது மேன்மை புலனாகிறது. மேன்மை பொருந்திய தாங்கள் தங்களது பொன்னான நேரத்தை என் கட்டுரைகளைப் படிக்கச் செலவு செய்தது மட்டும் அன்றி, கருத்தை எழுதவும் செய்திருக்கிறீர்கள். அதற்காக என் பணிவான வணக்கங்களை ஏற்றுக்கொள்ளுங்கள். பொதுவாக கருத்துத் தெரிவிப்பது என்றால் நிறை, குறை, இரண்டையும் குறிப்பிடுவதுதான் வழக்கம். உங்கள் கருத்துக்கலைப் படித்ததும், என் கட்டுரையில் ஒரு நிறை கூட இல்லை, குறையே உள்ளது என்ற மாதிரியான தொனியும் எனக்குப் படுகிறது. அப்படி நான் எண்ணுவது தவறு என்றால் முன்கூட்டியே அதற்கான வருத்தத்தையும் தங்களுக்குத் தெரிவித்து விடுகிறேன்.
கீழ்க்கண்ட கருத்துக்களை முன்வைத்திருக்கிறீர்கள்:
1.// தமிழர்-வட நாட்டு இந்துக்கள் (அல்லது) ஆரிய-திராவிட பிரிவினை (இன ரீதியில் இல்லாமற் போனாலும் கலாச்சார ரீதியிலான பிரிவினை) என்று ஒரு பிரமையை உண்டு பண்ணுவது மிகவும் தவறு. இருவேறு கவிகளின் ருசி பேதத்தைக் காண்பிக்குமே அன்றி, இல்லாத கலாச்சார-கருத்து வித்தியாசத்தை ஒருபோதும் காண்பிக்காது // திரு கிருஷ்ணகுமார் அவர்கள் தெரிவித்தது. // ஹிந்துஸ்தானத்தின் மற்ற ப்ரதேசத்தினரின் பண்பாடு (மாற்றுப் பண்பாடு என்பது Oxymoron) தமிழ்ப்பண்பாட்டை விட தாழ்ந்தது என்ற கருத்தாக்கம் மேட்டிமைத் தன்மையது. //
2. //“தமையனின் தாரம் தாய்க்கு நிகர் என்பது தமிழர் பண்பாடு” என்று தனியாகப் பிரித்துக் காட்டுவானேன்? “தமையனின் தாரம் தாய்க்கு நிகர் என்பது பாரதப் பண்பாடு” என்று சொல்வது தானே பொருத்தம்?//
3. //வடமொழியில் தேர்ச்சி இல்லை என்றால் வடமொழி வல்லுனர்களையும் பாஷ்யங்களையும் பார்க்கவும். அகராதியைக் கொண்டு சொல் பிரித்து அர்த்தம் தேடுவது விபரீதார்த்தங்களுக்கு இடம் கொடுக்கக் கூடும்.// அது மட்டுமல்ல, எனக்கு தமிழும் சரியாகத் தெரியவில்லை என்பதுபோல // மூலத்தில், “உமாதேவி போன்ற சிறப்புடைய மாதர்களும்” என்று பொருள்கொள்ளும்படி “உமையாள் ஒக்கும் மங்கையர்” என்றிருக்க, இப்படி மாற்றி அர்த்தம் கொள்ளுவதற்கு எங்கு இடமிருக்கிறது? // என்றும் எழுதி உள்ளீர்கள்.
4. //உங்கள் தரப்பிலிருந்து ஒரு disclaimer கூட இல்லாமல் இப்படிப்பட்ட பிரிவினைக் கருத்துக்களைத் தனக்குள்ளே அடக்கியிருக்கும் இந்தக் கட்டுரையை வெளியிட்டிருப்பது வருத்தத்தைத் தருகிறது.//
5. // வால்மீகி ஏதோ பெண்களைக் குறைத்துச் சொல்லுவதாகவும் எழுதியிருக்கிறீர்கள்.//
திரு. கிருஷ்ணகுமார் அவர்களும், உங்களுடைய 1, மற்றும் 3ம்; கருத்தைப் பின் மொழிந்திருக்கிறார்.
என் தரப்பில் தன் கருத்தை முன் வைத்த திரு இனியவன் அவர்களுக்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொண்டு மேற்சொன்ன ஐந்து கருத்துகளுக்கும் எனது விளக்கத்தை அளிக்கிறேன்.
1. நம்முடைய பரந்த, சிறந்த, பாரத தேசம் 56 நாடுகளாகப் பகுக்கப்பட்டிருந்தது என்பதும், அதை ஒரு குடைக்கீழ் ஆண்ட ஒரே மன்னர் பரதன் (இராமயணத்துப் பரதன் அல்ல) என்பதும், அதனாலேய ‘பாரத நாடு’ என்று அழைக்கப் பட்டதும் வரலாறு. தமிழ் பேசும் பகுதியை சமஸ்கிருதத்தில் ‘திராவிட தேசம்’ என்றும், தமிழ் மொழியை ‘திராவிட பாஷா’ என்றும் குறிப்பிட்டார்கள். இன்றும் வடநாட்டில் ‘திராவிட்’ என்ற குடும்பப் பெயர் உள்ளவர்கள் இருக்கிறார்கள். கோவில்களிலும் பூசை முடிந்த பின்னர் நான்கு வேதங்களைப் ஓதிவிட்டு, ‘திராவிட வேடம் அவதாரயே’ என்று தேவாரத்தையோ, திவ்யப் பிரபந்த்த்தையோ ஓதுவார்கள். ‘திராவிட’ என்ற சமஸ்கிருதச் சொல்லை திராவிட இயக்கத்தினர் பயன்படுத்துவது, ஹிட்லர் ஸ்வஸ்திகாவைப் பயன் படுத்துவது போலத்தான். நான் தமிழ்ப் பண்பாடு என்பது சமஸ்கிருதத்தில் ‘தேசாசாரம்’ என்று வழங்கப் படுகிறது.
தமிழ் நாட்டுக்கும், கேரளவுக்குமே பண்பாடு வேறுபாடுகள் உள்ளன. தமிழ்நாடு தகப்பன் வழி நாடு என்றால், கேரளா தாய் வழி நாடு. இதை ஒருவர் எழுதினால் அது ஒரு நாட்டை உயர்த்தி, மறு நாட்டைத் தாழ்த்துவது அல்ல. வேறுபாட்டைக் குறிப்பிடுவதே ஆகும். தவிரவும், கம்பருக்கு ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னரே வால்மீகி இராமாயணத்தை மனக்கண்ணில் கண்டு எழுதினர். அவர் எழுதியது பாரத மக்கள் அனைவருக்குமே. ஆயினும், கம்பர் எழுதியது தமிழ் மக்களுக்கு மட்டுமே. தமிழ்நாடு பாரதத்தின் உள்ளடங்கிய நாடே. ஒவ்வொரு நாட்டிற்கும் பழக்க வழக்கங்கள் மாறலாம். தென்னிந்தியாவில் மாமன் மக்கள், அத்தை மக்களை மணம் செய்து கொள்வது இன்றும் இருக்கிறது. ஆனால் அது வட இந்தியாவில் இல்லை. ஆகவே, கம்பர் தமிழ்நாட்டுப் பழக்க வழக்கத்தை, அதாவது பண்பாட்டை அனுசரித்தே இராமாயணத்தை எழுதினர் என்பதில் ஐயமே இல்லை. துளசிதாசும் மற்றம் செய்துதான் இராமயணத்தை அவதி மொழியில் வடித்தார். ருசிபேதம் என்பது சரியான வாதம் அல்ல..
பிரிவினை செய்ய நான் நினைத்தே இல்லை. ஆரியர் படையெடுப்பு ஆங்கிலேயர் கட்டிய கதை என்பதையும் நான் அறிவேன். உங்களுக்கு அது எப்படித் தோண்டியது என்று எனக்குத் தெரியவே இல்லை. நாம் எந்த வண்ணக் கண்ணாடியை அணிந்து கொண்டு பார்க்கிறோமோ, அந்த நிறத்தில்தான் எல்லாப் பொருளும் புலப்படும் என்பது ஆன்றோர் வாக்கு.
2. இலக்குவன் சீதையைத் தனது தாய்க்கும் மேலாகவே மதித்து வந்தான் என்பதை நீங்கள் வலியுறுத்தினீர்கள். நானும் அதையே தானே எழுதி இருக்கிறேன்? கோபத்தில்கூட தமிழ் நாட்டில், கம்பர் காலத்தில் அப்படி ஒரு சொல் சீதை வாயில் வருவதாக எழுவதை அவர் விரும்பவில்லை என்பதற்கு தமிழ்ப் பண்பாடுதான் காரணம் என்று எழுதினால், அது மற்ற பண்பாடுகளைவிட உயர்ந்தது என்று குறிப்பிடுவதாகத் தாங்கள் எண்ணுவது எனக்குச் சரியாகப் படவில்லை. கிருஷ்ணன் சிறந்தவன் என்றால், இராமன் சிறந்தவன் அல்ல என்பது பொருள் அல்ல,. சீதை தனது வாயாலேயே மும்முறை ‘‘என்மீது உள்ள ஆசையால் தான் நீ இராமனின் உதவிக்குச் செல்ல மாட்டேன் என்கிறாய்’ என்று சொல்வதாக வால்மீகியே எழுதி உள்ளார். அதைக் கீழே கொடுத்திருக்கிறேன். ஆரண்ய காண்டத்தில், நாற்பத்தைந்தாம் சர்க்கத்தில், ஆறாவது, ஏழாவது, இருபத்திநான்காம் சுலோகங்களில் சீதை சொல்வது இது.
यः त्वम् अस्याम् अवस्थायाम् भ्रातरम् न अभिपद्यसे |
इच्छसि त्वम् विनश्यन्तम् रामम् लक्ष्मण मत् कृते || ३-४५-६ –
लक्ष्मण, मत् कृते त्वम् रामम् विनश्यन्तम् इच्छसि: இலக்குவா, என் பொருட்டு நீ இராமனின் அழிவை விரும்புகிறாய்.
लोभात् तु मत् कृतम् नूनम् न अनुगच्छसि राघवम् |
व्यसनम् ते प्रियम् मन्ये स्नेहो भ्रातरि न अस्ति ते || ३-४५- ७—
मत् कृतम् लोभात् तु – என்மீது கொண்ட பேராசையால் அன்றோ (காரணமாகவே)
सुदुष्टः त्वम् वने रामम् एकम् एको अनुगच्छसि |
मम हेतोः प्रतिच्छन्नः प्रयुक्तो भरतेन वा || ३-४५-२४ — मम हेतोः=என் பொருட்டு
3. ஒரு மொழி என்பது கடல் போன்றது. அதில் லட்சக் கணக்கான சொற்கள் உள்ளன. பல சொற்கள், இடத்திற்குத் தகுந்தபடி பொருளும் மாறுகின்றன. எனவே, எந்த மொழி அறிந்தவர்களும், அகராதியைத் துணை கொள்வது, அடக்கத்தையே காட்டுகிறது. மகாகவி காளிதாசனே, ரகுவம்ச மகாகாவியத்தில், ‘நான் மாபெரும் ரகுவம்ச மகாகவியத்தைச் சொல்ல முயற்சிப்பது தோணி ஓட்டத் தெரியாத ஒருவன் பெருங்களைக் கடப்பதற்கு ஒப்பான செயல் என்று அவையடக்கத்துடன் எழுதி இருக்கிறார். அவர்களுக்கே அப்படிப்பட்ட ஒரு அவையடக்கம் இருக்கும் பொது, நான் எம்மாத்திரம்? வந்த சொல்லையே திரும்பத் திரும்பக் கையாளக்கூடது என்பதற்காக கலைக்களஞ்சியத்தைப் (thesauruas) பயன் படுத்துவதில்லையா? அதை நான் குறிப்பிட்டதால், ‘மொழி அறிவற்ற நீ அகராதியைக் கைக்கொள்ளாமல் ஆன்றோர் எழுதிய விளக்கத்தைப் படிக்க வேண்டும் என்று பொருள் கொள்ளுமாறு என்னைத் தாக்குவது வருந்தத் தக்கதே. நான் ஆன்றோர் எழுதிய விளக்கத்தைப் படித்தேனா, படிக்கவில்லையா என்று எப்படி நீங்கள் அறிவீர்கள்?
உரைநடை வேறு, கவிதை வேறு. இந்திய மொழிகள் அனைத்திலும் பெயர்ச் சொல்லில் வேற்றுமை விகுதி (suffix) சேர்க்கப்படுவதால், உரைநடை போன்று எழுத வேண்டிய அவசியம் இல்லை. பெயர்ச்சொல், உரிச்சொல், வினை இவற்றை முன்பின்னாக எழுதல்லாம்.
உதாரணமாக, பகவத் கீதையில், கிருஷ்ணபிரான், “பரித்ராணாய சாதூனாம், விநாசய ச துஷ்க்ருதாம், தர்ம சம்ஸ்தாபனார்த்தாய சம்பவாமி யுகே யுகே.” என்று சொல்கிறார். உரைநடையாக எழுதினால், “‘சாதூனாம் பரித்ராணாய, துஷ்க்ருதாம் விநாசாய, தர்ம சம்ஸ்தாபனார்த்தாய ச, யுகே யுகே சம்பவாமி” என்று எழுத வேண்டும். ஆனால், இது உரைநடையாக எழுதப் படவில்லை. கவிதை இலக்கணத்தை அனுசரித்து சொற்கள் முன்னும் பின்னுமாக எழுதப்பட்டுள்ளன. அது போலத்தான் கம்பரும் விருத்தப்பாவில் எழுதி உள்ளார். “உமையாள் ஒக்கும் மங்கையர் உச்சிக் கரம் வைக்கும்” என்று எழுதியது யாப்பிலக்கணத்தை அனுசரித்ததே. உரைநடைக்கு மாற்றும்போது “மங்கையர் கரம் உச்சி வைக்கும் உமையாள் ஒக்கும்”, அதாவது மாதர்கள் கைகளை உச்சியில் வைத்துத் (தொழும்) உமையாளைப் போன்றவள் (சீதை) என்றே பொருள் கொள்ள வேண்டும். ஏனென்றால் உமையாள் சிவனின் பாதி. அவளைத்தான் மங்கையர் தொழுவார்கள். சீதையாகப் பிறந்திருக்கும் இலக்குமியை உமையாளைப் போன்ற மங்கையர்கள் தொழுதார்கள் என்று சொல்வது தகுமா? அப்படிக் கம்பர் எழுதுவார் என்று எண்ணவும் கூடுமோ? கம்பன் அறநிலைக் கழக விளக்கம் வேறாக இருக்கலாம். இது கம்பன் திருநாளில் (காரைக்குடியில்) கம்ப ராமாயணத்தைக் கரைத்துக் குடித்தவர் ஒருவர் கொடுத்த விளக்கத்தைக் கேட்டு நினைவில் கொண்டு எழுதியதே.
4. நான் தமிழ்ப் பண்பு என்று மூன்று தடவை எழுதி இருப்பதால் எனது கட்டுரை பிரிவினையைத் தூண்டுகிறது என்கிறீர்கள். அதுவே நீங்கள் கட்டும் சான்று. நீங்கள் சொல்வதைப் பார்த்தால் “தமிழ் ஹிந்து” என்று அழைக்கப் படுகின்ற இந்த இணைய தளமே பிரிவினையைத் தூண்டும் விதமாகப் பெயர்க் கொண்டிருக்கிறது என்று சொல்வது போலவும், “பாரத ஹிந்து” என்று பெயரை மாற்றவேண்டும் என்று சொல்லாமல் சொல்வது போல மற்றவர்கள் நினைக்க வழி வகுக்காதா? கண்ணாடிச் சுவருக்குள் இருந்துகொண்டு கல் எறியலாமா? ஒரு தமிழன் இந்து, புத்த, சமண, இஸ்லாம், கிறித்தவனாகவோ, நாத்திகனாகவோ இருக்கலாம். ஒரு இந்து தமிழனாகவோ, ஆங்கிலேயனாகவோ, ஆஸ்திரேலியனாகவோ, அமெரிக்கனாகவோ, பாகிசஸ்தானியாகவோ, இலங்கையைச் செர்ந்தவனாகவோ இருக்கலாம். அப்படிச் சொல்லிக்கொள்வது பிரிவினை அல்ல, இந்து சமயம் என்ற மலர் மாலையின் பல வண்ணப் பூக்கள் என்பதுதான்.
5. மாமுனி வால்மீகி இலக்குவன் வாயிலாகச் சொன்னதைக் (ஆரண்ய காண்டம், நாற்பந்த்தைந்தாம் சர்க்கம், 21ம் சுலோகம் கீழே காண்க.
वाक्यम् अप्रतिरूपम् तु न चित्रम् स्त्रीषु मैथिलि |स्वभावः तु एष नारीणाम् एषु लोकेषु दृश्यते || ३-४५-२९
Respected Sri Krishnakumar, you have written, // Yet, I am afraid that more off-the-track interpretations are yet to come. I would appreciate, if you throw light further..// . I have given you nothing but respect. You may disagree completely with what I have written. It is your privilege. But, concluding that whatever I am going to write is off-track interpretations – that too without reading anything I that is going to be published — this is nothing but hitting below the belt. I never expected this from a honorable person like you.
// இறைவியான பராசக்தி உமையவள் சிரம் குவித்து மண்ணில் வாழ்ந்த சீதையை வணங்குதல் என்பது கம்பனின் கருத்தாக இருக்கவில்லை. விளக்க உரை எழுதுபவரின் பிழை அல்லது பிழை பட்ட மனது என்பதுதான் சரி. //
இது தான் அபத்தத்தின் உச்சக் கட்டம்… அந்த விளக்கக்குழுவில் இருந்த சான்றோர்களையும், உ.வே. வை. மு. கோபால கிருஷ்ணமாச்சாரியார் போன்ற கம்பராமாயண உரை தந்த சான்றோர்களையும் விட இனியவன் புத்திசாலி போலும்!
முதலில், அந்த இடத்தில் உமையவள் சீதையை வணங்கியதாகக் கம்பர் கூறவில்லை என்று நானும் அறநிலை விளக்கக் குழுவும் கூறவில்லை. மீண்டும் ஒரு முறை படியுங்கள்:
“உமாதேவியின் அழகை ஒத்த அழகையும், உமாதேவியின் குணத்தைப் போன்ற குணத்தையும் பெற்ற மங்கையர் சீதையைக் கைமேல் தலைவைத்துத் துதித்தனர்”… இதிலிருந்து “சீதையை உமா தேவி வணங்கினார்” என்று நான் கூறுவதாக எப்படித் தேறும்? “நிலவைப் போன்ற பெண் அங்கு வந்தாள்” என்றால் “நிலா அங்கு வந்தது” என்று அர்த்தமாகிவிடுமா?
“இறைவியாகியவள் மண்ணில் வாழ்ந்தவளை வணங்கலாமா” என்று கேட்பது உங்கள் துவேஷத்தையும் கண்மூடித்தனத்தையுமெ காட்டுகிறது. சீதை மோட்ச புரியாகிய வைகுண்டத்தில் நித்தியமாகத் திருமாலுடன் வாசஞ்செய்யும் திருமகள் என்பதைக் கம்பர் பல இடங்களில் பாடியுள்ளார். மீட்சிப் படலத்தில் சிவபெருமானுடைய வாக்கும் இதோ இருக்கிறதே!
முன்னை ஆதி ஆம் மூர்த்திநீ;
மூவகை உலகின்
அன்னை சீதை ஆம் மாது, நின்
மார்பின் வந்து அமைந்தாள்.
// கம்பனின் கருத்தாக இருக்கவில்லை //
ஐயா, சாரே… கம்பரின் உண்மையான கருத்து என்னவென்று பாரும். நிலத்தில் வாழ்ந்த இராமனைத் தான் தேவர்கள் மீட்சிப் படலத்தில் துதிக்கின்றனர். அங்கு பிரமன்,
சொன்ன நான்மறைத் துணிவினில்
துணிந்த மெய்த்துணிவு
நின் அலாது இல்லை; நின் இன் இல் வேறு
உளது இலை நெடியோய்!
என்றும்,
‘முன்பு பின்பு இருபுடை எனும்
குணிப்பு அரு முறைமைத்
தன்பெருந் தன்மை தான் தெரி
மறைகளின் தலைகள்,
“மன்பெரும் பரமார்த்தம் “ என்று
உரைக்கின்ற மாற்றம்,
அன்ப! நின்னை அல்லால் மற்று இங்கு
யாரையும் அறையா.
‘எனக்கும், எண் வகை ஒருவற்கும்,
இமையவர்க்கு இறைவன்
தனக்கும், பல்பெரு முனிவர்க்கும்,
உயிருடன் தழீஇய
அனைத்தினுக்கும், நீயே பரம்
என்பதை அறிந்தார்,
வினைத் துவக்கு உடை வீட்ட அரும்
தளைநின்று மீள்வார்.
என்று கூறும் செய்யுளிலிருந்து பிரமன், சிவன், இந்திரன் அனைவர்க்கும் காரண கர்த்தா இராமனே என்று கம்பர் பாடியிருக்கிறாரே!
// முதலில், அந்த இடத்தில் உமையவள் சீதையை வணங்கியதாகக் கம்பர் கூறவில்லை என்று நானும் அறநிலை விளக்கக் குழுவும் கூறவில்லை. //
மன்னிக்கவும். அங்கு நான் சொல்ல வந்தது —
முதலில், அந்த இடத்தில் உமையவள் சீதையை வணங்கியதாகக் கம்பர் கூறுகிறார் என்று நானும் அறநிலை விளக்கக் குழுவும் கூறவில்லை
உயர்திரு கந்தர்வனுக்கும், கிருஷ்ணகுமாருக்கும் பணிவன்புடன் எழுதுவது.
பதில் சொல்ல விட்டுப் போனது:
உபநிஷதங்களுக்கு ஆதி சங்கரர், ராமானுஜாச்சாரியார், சின்மயானந்தா, இன்னும் பலர் விரிவுரையும், விளக்கமும் எழுதி இருக்கிறார்கள். அதில் அவர்கள் வேறுபட்டும் இருக்கிறார்கள். அத்வைதியாகப் பிறந்த இராமானுஜர், விசிஷ்டாத்வைத கொள்கைக்குக் காரண கர்த்தரானார். அதுதான் இந்து சமயத்தின் மேன்மை. நீ இப்படித்தான் பொருள் கொள்ளவேண்டும் என்று கட்டாயப் படுத்துவது இந்து சமயக் கோட்பாடு அன்று.
அதனாலேயேதான் மாணிக்கவாசகப் பெருமான், ‘முன்னைப் பழமைக்கும் பழமையனே, முன்னைப் புதுமைக்கும் போற்றுமெப் பெத்தியனே!” என்று சிவ பெருமானைப் ஏத்திப் புகழ்ந்திருக்கிறார். இறைவனே, புதுமையும், பழமையுமாகவும், இருக்குங்கால், புதுமையான சிந்தனை இருக்கக் கூடாது என்று வாதிக்கல்லாமா?
அப்படி இருந்தால் என்றும் அழியாது தளிர் விட்டுக்கொண்டு இருக்கும் சமயமாக இந்து சமயம் (சனாதன தர்மம்) இருந்திருக்காது. “நெற்றிக்கண்ணைத் திறந்தாலும் குற்றம் குற்றமே!” என்று முக்கண்ணனோடு நக்கீரன் வாதிடாமல் இருந்திருந்தால், உலகத்திலேயே தொடர்ந்து பேசப்பட்டுவரும், மொழியாகத் தமிழும் திகழ்ந்திருக்காது.
அன்பின் ஸ்ரீ இனியவன், பெயரில் இருக்கும் இனிமையை சொற்களிலும் ப்ரதிபலிக்க முயற்சி செய்யலாமே.
மதிப்பிற்குறிய ஸ்ரீமான் ஒரு அரிசோனன் அவர்கள் மஹாபாரதத்தை ஒட்டி எழுதிய வ்யாசத்தை உகந்து சிறியேன் உத்தரமெழுதியுள்ளேன். இந்த வ்யாசம் எமக்கு ச்லாக்யமாக இல்லை. ஏன் என்பதனை எனது முந்தைய உத்தரத்தில் தெளிவு படுத்தியிருக்கிறேன்.
ஸ்ரீமான் கந்தர்வன் அவர்களுடைய உத்தரத்தில் சற்றேனும் கோபம் என்ற விஷயம் காணக்கிட்டவில்லை. இது கற்பனையான ஆரோபம். மாறாக தெளிவான ஆழமான கருத்துக்களால் அவரது உத்தரம் நிறைந்துள்ளது. அதற்கு மாறாக உங்களுடைய உத்தரங்கள் கொதிக்கும் எண்ணையில் குதிக்கும் கடுகுகளுக்கு மேல் உள்ளன என்றால் மிகையாகாது. நிற்க.
வால்மீகி ராமாயணம் *பண்பாடு* என்ற அலகீட்டில் மாற்றுக்குறைவான பார்வைகளை முன்வைக்கிறது என்ற ஸ்ரீமான் அரிசோனன் அவர்களது கருத்து எங்கெல்லாம் பிழையானது என்று குறிப்பிட்டது மட்டிலும் அல்லாமல் வால்மீகி ராமாயணத்தின் காண்டம் சர்க்கம் ச்லோகம் வரை ஆழ்ந்து ஒவ்வொரு விளக்கத்தையும் ஸ்ரீமான் கந்தர்வன் அவர்களது உத்தரம் முன்வைத்துள்ளது.
பொறுத்தார் பூமி ஆள்வார்.
அன்பின் ஸ்ரீ இனியவன்
\\ விளக்க உரை எழுதுபவரின் பிழை அல்லது பிழை பட்ட மனது என்பதுதான் சரி. \\
மேற்கண்ட அரும் பெரும் விளக்கம் உங்களது கருத்துக்கு எப்படி நூற்றுக்கு நூறு ஒத்து வருகிறது பாருங்கள்.
\\ கம்பன் அறநிலையக் குழுவின் விளக்கமும் சரி, உங்கள் விளக்கமும் சரி அபத்தத்தின் உச்ச கட்டம். இறைவியான பராசக்தி உமையவள் சிரம் குவித்து மண்ணில் வாழ்ந்த சீதையை வணங்குதல் என்பது கம்பனின் கருத்தாக இருக்கவில்லை. \\
குதர்க்கம் என்பதற்கு ஒரு எல்லை உண்டு.
ஸ்ரீமான் கந்தர்வன் முதற்கண் சொந்த வ்யாக்யானங்கள் எதுவும் *சீதையை வணங்குதல்* என்ற விஷயத்தில் முன்வைக்கவில்லை. கம்பன் அறநிலையக் குழு என்ற தமிழ் கற்ற சான்றோர்களின் ஒரு குழுமத்தின் அபிப்ராயத்தை உரிய உரலுடன் முன்வைத்துள்ளார்.
அது சொல்லும் விஷயம் :-
\\ குணத்திலும் அழகிலும் உமையவளைப் போன்ற மங்கையர்கள் தலைமேல் கைவைத்து வணங்கத்தக்க நற்பண்புகளுடைய சீதை” என்று தான் பொருள்.கம்பன் கழக அறநிலை விளக்கக் குழுவின் விளக்கமும் இதுவே: https://tamilvu.org/slet/l3700/l3700ur1.jsp?x=588 \\
மேற்கண்ட வாசகத்தில் சீதையை வணங்குபவர்களாகக் காட்டப்பட்டுள்ளவர்கள் *மங்கையர்கள்*. பராசக்தியான *உமாதேவி* *சீதா தேவியை* வணங்குவதாக மேற்கண்ட வாசகம் கூறவே இல்லை. *சீதா தேவியை* வணங்கிய மங்கையர்கள் குணத்திலும் அழகிலும் உமா தேவியுடன் ஒப்பிடப்பட்டிருக்கிறார்கள். அவ்வளவே. உலகத்தில் உள்ள உயர்வான நற்பண்புகளைக் காண்பவர் அதில் இறைமையைக் காணுதல் என்ற உயர்வான பாரதப் பண்பாட்டின் படி. மிக அருமையாக, ஸ்ரீமான் கந்தர்வன் அவர்கள் விளக்கிய படி, “திருவுடை மன்னனைக் காணில் திருமாலைக் கண்டேனே”.
*உமா தேவி* *சீதா தேவியை* வணங்கினாள் என்று ஸ்ரீமான் கந்தர்வனும் சொல்லவில்லை. கம்பன் அறநிலையக் குழு என்ற தமிழ் கற்ற சான்றோர்களின் குழுவும் சொல்லவில்லை.
இப்படி யாரும் சொல்லாத ஒரு கூற்றை இவர்கள் எல்லாரும் சொன்னது போன்று ஒரு விதண்டாவாதம் செய்வது முறையான விவாதத்திற்கு உகந்ததல்ல.
ஆன்மீக நூற்களுக்கு விளக்க உரை எழுதியவர்கள் சான்றோர்கள். சான்றோர்களின் விளக்க உரைகளை மறுதலிப்பது என்பது மலையை தாம்புக்கயிற்றால் வலிப்பதற்கு சமானம். மறுதலிக்க முனைவதை ஒப்புக்கு ஏற்றுக்கொண்டாலும் மறுதலிப்பு என்பது முறையான மொழி மற்றும் இலக்கணக்குறிப்புகள் சார்ந்த ஒரு முயற்சி என்றால் அதற்கு உரிய மரியாதை இருக்கும். மாறாக மறுதலிப்பு என்பது கோபதாபத்துடன் கூடிய வசவுடன் மட்டிலுமானது என்றால் அது புறந்தள்ளப்படும்.
*வித்யா ததாதி வினயம்*. கற்ற கல்விக்கு அழகு அடக்கம். ஒரு சான்றோரை அல்லாது தமிழ் கற்ற மிகப்பல சான்றோர்களுடைய விளக்கம் *அபத்தம்* என்றும் சொல்லி, அந்த விளக்கம் மொழி சார்ந்து இலக்கணம் சார்ந்து ஏன் தவறு என்று எந்த விளக்கமும் கொடுக்காது சான்றோர்களுடைய கருத்தை திரித்து இங்கு முன் வைப்பதை என்னென்பது.
வள்ளல் அருணகிரிப்பெருமானே…….. உங்களுடைய *மாதவர்க்கதிபாதகமானவர்* திருப்புகழ் தான் நினைவுக்கு வருகிறது.
இந்த வடக்கு தெற்கு விவாதம் தேவை இல்லாதது. ராமாயணம் பன்னெடுங் காலமாக வழங்கி வரும் ராமன் கதை. அதன் தொன்மையாலேயே அதன் வேறுபாடுகளும் வருகின்றன. வால்மீகி காலம் வேறு. கம்பன் காலம் வேறு. கால மாற்றங்களினாலேயே வேறுபாடுகளும் வருகின்றன. நேற்றுதான் இது பற்றி நாங்கள் தீவிரமாக விவாதித்தோம். இன்று நாம் தமிழில் ஜெயதேவர் போல ராச லீலை எழுத முடியாது. இன்று கடவுள் பற்றி நமக்கு உள்ள கருத்துக்கள் வேறு. இருநூறு ஆண்டுகள் முன்பு கூட தியாகராஜ சுவாமிகளைப் பார்த்து நீங்கள் தெய்வீக கவியாக வேண்டுமானால் இருக்கலாம். ஆனால் நீங்கள் மஹா கவி இல்லை. ஏனென்றால் நீங்கள் ஸ்ரிங்கார ரசத்தை எழுதவில்லை என்று மற்ற கவிஞர்கள் கூறிவிட்டனர். அதனால்தான் அவர் ஸ்ரின்காரத்தை நௌக சரித்ரம் நாடகப் பாடல்கள் மூலம் எழுதினர். அதன் பின்னே தான் அவர் ஒரு முழுமையானவராகக் கருதப் பட்டார். இன்று அவ்வாறு எழுதினால் தமிழ் ஹிந்துவே நாலு கட்டுரை போட்டு தாக்கிவிடும். ஆர்ப்பாட்டம் நடக்கும். அது ஒரு காலம். இது ஒரு காலம். அவ்வளவுதான். இதில் வடக்கும் இல்லை. தெற்கும் இல்லை.
உயர்திரு கர்தர்வன், கிருஷ்ணகுமார் அவர்களே,
//வால்மீகி ராமாயணம் *பண்பாடு* என்ற அலகீட்டில் மாற்றுக்குறைவான பார்வைகளை முன்வைக்கிறது என்ற ஸ்ரீமான் அரிசோனன் அவர்களது கருத்து எங்கெல்லாம் பிழையானது//
இப்பொழுது எனக்கு உண்மை விளங்குகிறது.
நான் ஒருபொழுதும் வால்மீகி இராமாயணத்தை ஓரிடத்திலும் மாற்றுக்குறைவாக மதிப்பிடவே இல்லை. இந்தவிதமான எண்ணமே தங்களுக்கு எழக் கூடாது. உயர்திரு சங்கரநாராயணன் எழுதியதுபோல, கால மாற்றங்களின் வேறுபாட்டையும், பாக்களை வைத்து, கவிச்சக்கரவர்த்திகள் இருவரின் மனதில் என்ன ஓடியிருக்ககூடும் என்பதை என் சிற்றறிவிற்கு எட்டியவண்ணம் ஒப்பீட்டை எழுதி இருக்கிறேன். அது உங்களின் கருத்துக்கு மாறுபட்டதாகவும் இருக்கலாம்.
நான் வால்மீகி அவர்களைப்பற்றி மாற்றுக்குறைவாக எழுதி உள்ளேன் என்ற என்ற நினைப்பே உங்கள் உள்ளங்களில் பொறி தட்டக் காரணமாக இருக்கிறது, அதுவே உங்கள் உள்ளத்து உணர்ச்சிகளைப் பொங்கி எழச் செய்திருக்கிறது என்று எண்ணத் தோன்றுகிறது. நாம் என்னதான் நமது உணர்ச்சிகளை மறைத்து எழுதினாலும் அது எளிதில் மற்றவருக்குப் புலப்படுத்தத்தான் செய்யும்.
திரு இனியவனுக்கும் அந்த உணர்ச்சி புலப்பட்டிருக்காவிட்டால் அவர் //கோபம் வந்தால் நியாயம் கண்ணில் தெரியாது என்பது சரிதான்.// என்று ஏன் எழுதவேண்டும்?
எனவே, நான் மாமுனி வால்மீகியை மாற்றுக்குறைவாக ஒப்பிடுகிறேன் என்ற மனத்திரையை நீக்கிவிட்டு ஒப்பீட்டை மறுபடியும் படியுங்கள். “பிழை இருந்தால் பொறுக்கவும்” என்று முதல் ஒப்பீட்டிலேயே எழுதி இருக்கிறேன். பிழைகளைச் சுட்டிக் காட்டுவதும், சந்தேகம் கேட்பதும், மாற்றுக் கருத்துகளை முன்வைப்பதும் உங்கள் உரிமை.
அது வேறு, இந்த இடங்களில், கட்டுரை ஆசியனின் கருத்தை ஒப்புக் கொள்ளவில்லை என்பதுவும் வேறு.
உன் கட்டுரையில், நிறையே இல்லை, உனக்கு எந்த மொழியும் தெரியாது, நீ ஒப்பீடு செய்யும் திறன் அற்றவன், மற்ற சான்றோர்களின் விளக்கத்தைப் படிக்காமல் குறைகுடமாக ஏன் கூத்தாடுகிறாய், நீ எழுதப் போகும் மற்ற ஒப்பீடுகளும் அப்படியே இருக்கும், என்னும் அளவுக்குக் (அது எவ்வளவு மறைமுகமாக இருந்தாலும்) கருத்து எழுதுவது வேறு.
நீங்கள் எழுதி இருப்பதையே திரும்பத் திரும்பப் படியுங்கள், அது புலனாகும். அதுவே இனியவன் அவர்களின் உணர்ச்சியையும் தட்டி எழுப்பி உள்ளது என்றும். திரு சங்கரநாராயணன் அவர்களைச் சமாதானப்படுத்தும் அளவுக்கு எழுதவும் வைத்திருக்கிறது என்றும் நம்புகிறேன்
உங்கள் இருவரின் மீதும் என்னுள் இருக்கும் மதிப்பு எள்ளவும் குறையவில்லை. உங்கள் மேதாவிலாசத்திற்கு என்றும் நான் தலை வணங்குகிறேன். தொடர்ந்து உங்கள் கருத்தை எழுதுங்கள். என் சிற்றறிவுக்கு எட்டிய விளக்கங்களைக் கொடுக்க நான் கடமைப் பட்டிருக்கிறேன்,
உயர்திரு சங்கரநாராயணன் எழுதி உள்ளது அஞ்சனமாக இருக்கிறது. நன்றி.
“உமையாள் ஒக்கும் மங்கையர் உச்சிக் கரம் வைக்கும்” என்று எழுதியது யாப்பிலக்கணத்தை அனுசரித்ததே. உரைநடைக்கு மாற்றும்போது “மங்கையர் கரம் உச்சி வைக்கும் உமையாள் ஒக்கும்”, அதாவது மாதர்கள் கைகளை உச்சியில் வைத்துத் (தொழும்) உமையாளைப் போன்றவள் (சீதை) என்றே பொருள் கொள்ள வேண்டும். ஏனென்றால் உமையாள் சிவனின் பாதி. அவளைத்தான் மங்கையர் தொழுவார்கள். சீதையாகப் பிறந்திருக்கும் இலக்குமியை உமையாளைப் போன்ற மங்கையர்கள் தொழுதார்கள் என்று சொல்வது தகுமா? அப்படிக் கம்பர் எழுதுவார் என்று எண்ணவும் கூடுமோ? கம்பன் அறநிலைக் கழக விளக்கம் வேறாக இருக்கலாம். இது கம்பன் திருநாளில் (காரைக்குடியில்) கம்ப ராமாயணத்தைக் கரைத்துக் குடித்தவர் ஒருவர் கொடுத்த விளக்கத்தைக் கேட்டு நினைவில் கொண்டு எழுதியதே.
4. நான் தமிழ்ப் பண்பு என்று மூன்று தடவை எழுதி இருப்பதால் எனது கட்டுரை பிரிவினையைத் தூண்டுகிறது என்கிறீர்கள். அதுவே நீங்கள் கட்டும் சான்று. நீங்கள் சொல்வதைப் பார்த்தால் “தமிழ் ஹிந்து” என்று அழைக்கப் படுகின்ற இந்த இணைய தளமே பிரிவினையைத் தூண்டும் விதமாகப் பெயர்க் கொண்டிருக்கிறது என்று சொல்வது போலவும், “பாரத ஹிந்து” என்று பெயரை மாற்றவேண்டும் என்று சொல்லாமல் சொல்வது போல மற்றவர்கள் நினைக்க வழி வகுக்காதா? கண்ணாடிச் சுவருக்குள் இருந்துகொண்டு கல் எறியலாமா? ஒரு தமிழன் இந்து, புத்த, சமண, இஸ்லாம், கிறித்தவனாகவோ, நாத்திகனாகவோ இருக்கலாம். ஒரு இந்து தமிழனாகவோ, ஆங்கிலேயனாகவோ, ஆஸ்திரேலியனாகவோ, அமெரிக்கனாகவோ, பாகிசஸ்தானியாகவோ, இலங்கையைச் செர்ந்தவனாகவோ இருக்கலாம். அப்படிச் சொல்லிக்கொள்வது பிரிவினை அல்ல, இந்து சமயம் என்ற மலர் மாலையின் பல வண்ணப் பூக்கள் என்பதுதான்.
5. மாமுனி வால்மீகி இலக்குவன் வாயிலாகச் சொன்னதைக் (ஆரண்ய காண்டம், நாற்பந்த்தைந்தாம் சர்க்கம், 21ம் சுலோகம் கீழே காண்க.
वाक्यम् अप्रतिरूपम् तु न चित्रम् स्त्रीषु मैथिलि |स्वभावः तु एष नारीणाम् एषु लोकेषु दृश्यते || ३-४५-२९
அன்பின் திரு அரிசோனன் அவர்களே,
// பொதுவாக கருத்துத் தெரிவிப்பது என்றால் நிறை, குறை, இரண்டையும் குறிப்பிடுவதுதான் வழக்கம். உங்கள் கருத்துக்கலைப் படித்ததும், என் கட்டுரையில் ஒரு நிறை கூட இல்லை, குறையே உள்ளது என்ற மாதிரியான தொனியும் எனக்குப் படுகிறது. //
நிறைகள் இல்லை என்று நான் சொல்லவில்லை. ஆனால் என்ன செய்வது, இந்தக் காலத்தில் தவறான புரிதல்கள் மலிந்து கிடக்கின்றன. அவற்றைக் களைவதிலேயே என் முழு நேரம் தேவைப்படுகிறது.
// ஆகவே, கம்பர் தமிழ்நாட்டுப் பழக்க வழக்கத்தை, அதாவது பண்பாட்டை அனுசரித்தே இராமாயணத்தை எழுதினர் என்பதில் ஐயமே இல்லை. துளசிதாசும் மற்றம் செய்துதான் இராமயணத்தை அவதி மொழியில் வடித்தார். ருசிபேதம் என்பது சரியான வாதம் அல்ல.. //
அப்படி நீங்கள் “தமிழ்நாட்டுப் பழக்க வழக்கம்” என்று தனியாகச் சுட்டிக் காட்டியது “தமையன் தாரத்தைத் தாயாகக் கருதுவது” என்பதை. அது வட இந்தியாவில் இல்லாதது போல “வால்மீகி இப்படி எழுதியிருக்க, கம்பர் இப்படி எழுதியிருப்பது தமிழ்நாட்டுப் பழக்க வழக்கத்தினாலேயே” என்றும் எழுதியிருக்கிறீர்கள். “இது தவறு, வட இந்தியாவிலும் உண்டு” என்பதைக் காட்ட “நாஹம் ஜானாமி கேயூரே” எனும் சுலோகத்தையும் “மாம் வித்தி ஜனகாத்மஜாம்” என்ற சுலோகத்தையும் காட்டினேன்.
இவ்வண்ணம் முழுவதுமாக அவதானித்துத் தெளியாமல் ஒருசில வரிகளைத் தனியாக எடுத்து ஒப்பீடு செய்வது தவறான அர்த்தத்தில் தான் முடியும் என்பது மேற்கண்டதில் தெரியவில்லையா? யானையின் காதைத் தடவிப் பார்த்து “இது முறம்” என்றும், தும்பிக்கையைத் தடவிப் பார்த்து “இது மரம்” என்றும் சொல்வதைப் போலத் தான் இருக்கும் அத்தகைய “ஆராய்ச்சிகள்”. இதற்கு உங்களைச் சொல்லிக் குற்றமில்லை. சமீபகாலத்தில் பெரும்பான்மையான நவீனத் ‘தமிழறிஞர்கள்’ மற்றும் ‘புரட்சிக் கவிஞர்கள்’ கம்பரைப் பற்றி முழுவதும் தெளிந்து அறியாமல் தத்துப் பித்து என்று உளறியிருக்கிறார்கள். அதனால் வந்த மயக்கமே என்று எண்ணுகிறேன்.
ருசி பேதம் என்பது சரியான வாதமே. உதாரணமாக…
வால்மீகி முனிவர் வனத்தில் ஒரு ஆசிரமத்தில் இருந்து காவியம் படைத்தவர். அவருடைய இராமாயணத்தில் பலவிதமான மரம், செடி, கொடி, புள், விலங்குகளைப் பற்றிய வருணனைகள் வரும். அது தவிர, உவமை உருவாக அணிகளுக்கு அவர் எடுத்துக் கையாண்டவை இத்தகைய காடுவாழ் ஜீவராசிகளையே.
ஆனால் கம்பர் வாழ்ந்ததோ நகரத்தில். அவர் படைத்த காவியமோ அரசவையிலும் பெரியகோயிலிலும் அரங்கேறியது. அவரது வருணனைகளில் மாட மாளிகைகள் கோபுரங்கள் பற்றியும், அவற்றை வைத்தே உவமை-உருவகக் கட்டமைப்புகளை மலிந்து காண்கிறோம்.
இது வெறும் சூழ்நிலையால் விளைந்த ருசி பேதமேயன்றி, “கம்பருக்குக் காடு பிடிக்கவில்லை” என்றெல்லாம் கூற முடியாது. அப்படித் தான் பெண்கள் விஷயத்திலும். இது பற்றி மேலும் விசாரிக்க உங்களுடைய வரிக்கு பதிலாய் அமைக்கிறேன்:
// கோபத்தில்கூட தமிழ் நாட்டில், கம்பர் காலத்தில் அப்படி ஒரு சொல் சீதை வாயில் வருவதாக எழுவதை அவர் விரும்பவில்லை என்பதற்கு தமிழ்ப் பண்பாடுதான் காரணம் என்று எழுதினால், அது மற்ற பண்பாடுகளைவிட உயர்ந்தது என்று குறிப்பிடுவதாகத் தாங்கள் எண்ணுவது எனக்குச் சரியாகப் படவில்லை. //
சீதை இலட்சுமணனைக் கடுஞ்சொல்லால் வசவுவதாக வால்மீகி பாடியிருப்பதாகவும், கம்பர் அப்படிப் பாடவில்லை என்பதையும் ஒப்பீடு செய்துவிட்டு “தமிழர் பெண்களுக்கு கொடுத்துள்ள மரியாதையைக் காட்டுகிறது” என்று எழுதியிருக்கிறீர்களே… அப்படியானால் “தமிழ் நாட்டில் பெண்களுக்குத் தரப்படும் மரியாதை வடதேசத்துக் கலாச்சாரத்தில் இல்லை” என்று தானே அர்த்தமாகும்?
ஆம், கோபத்தில்கூட தமிழ் நாட்டில், கம்பர் காலத்தில் அப்படி ஒரு சொல் சீதை வாயில் வருவதாக எழுவதை அவர் விரும்பவில்லை. இதற்கான சமாதானம் இப்படியும் கொள்ளக் கூடுமே… அதாவது, “வால்மீகி ஆதி கவி, மகா ஞானி. ஆகையால் அவர் சீதை இலக்குவனைக் குறித்துக் கடுஞ்சொல் பேசியதை எழுதினால் குறையாகாது. நானோ ஓசை பெற்று உயர் பாற்கடல் உற்று, ஒரு பூசை என்று முன்பு நானே சொன்னது போல மிகவும் தாழ்ந்தவன். ஆகையால் நான் அந்த நிகழ்ச்சியை எழுதினால் விபரீத அர்த்தம் தான் விளையும்” என்று எண்ணியிருக்கலாமே! அல்லது, “இந்தக் கலியுகத்திலே மக்களுக்கு அத்தகைய நிகழ்ச்சியை நான் எடுத்துக் கூறினால், அவர்கள் விபரீதமாக அர்த்தம் பண்ணிக் கொள்ளுவார்கள்” என்றும் எண்ணியிருக்கலாமே!
// நான் ஆன்றோர் எழுதிய விளக்கத்தைப் படித்தேனா, படிக்கவில்லையா என்று எப்படி நீங்கள் அறிவீர்கள்? //
படித்திருக்கிறீர்கள் என்றால் நன்றே. ஆனால் யார் அந்த ஆன்றோர் எந்த நூலிலிருந்து படித்தீர்கள் என்று காண்பிக்கவும்.
// ஏனென்றால் உமையாள் சிவனின் பாதி. அவளைத்தான் மங்கையர் தொழுவார்கள். சீதையாகப் பிறந்திருக்கும் இலக்குமியை உமையாளைப் போன்ற மங்கையர்கள் தொழுதார்கள் என்று சொல்வது தகுமா //
இதற்கு ஏற்கனவே பதில் கூறிவிட்டேன். படித்துப் பார்க்கவும்.
// அவளைத்தான் மங்கையர் தொழுவார்கள். //
ஏன், இலக்குமியை மங்கையர் தொழ மாட்டார்களா? இதென்ன வேடிக்கை.
// “உமையாள் ஒக்கும் மங்கையர் உச்சிக் கரம் வைக்கும்” என்று எழுதியது யாப்பிலக்கணத்தை அனுசரித்ததே. உரைநடைக்கு மாற்றும்போது “மங்கையர் கரம் உச்சி வைக்கும் உமையாள் ஒக்கும்” //
பொருந்தாது. ஏன் என்று கேளுங்கள்:
நீங்கள் சொல் படியே, இடம் மாறி வரத் தகுதியுடைய சொற்கள் வேற்றுமை விகுதி சேர்க்கப்பட்ட சொற்கள் மட்டுமே. அவை இடம் மாறினால் பொருள் மாறாது என்பதனால். ஆனால், “உமையாள் ஒக்கும்” என்ற இரு சொற்களின் சேர்க்கையானது “வேற்றுமை விகுதி சேர்க்கப்பட்ட பெயர்ச்சொல்லும்” அல்ல, அதற்கு மேலாக இடம் மாறினால் பொருளும் மாறுகிறது. “ஒக்கும்” (வடமொழியில் “இவ”) போன்ற பதங்கள் அவ்யய (உருமாற்றம் பெறமுடியாத / indeclinable) பதங்கள் — அதாவது அவற்றுக்கு பால், எண், வேற்றுமை இவற்றைக் குறிக்கும் விகுதியைச் சேர்க்க முடியாது. ஆகையாலே அவை இடம் மாறாமல் அந்தந்த இடத்திலேயே வருவது அவசியம். இது காவியமானாலும் சரி, உரைனடையானாலும் சரி.
காரணமேயின்றி இப்படி வேற்றுமைவிதி சேர்க்கப்படாத பெயர்ச்சொற்கலல்லாத பதங்களை இடம் மாற்றி அர்த்தம் செய்வதற்கு “தூரான்வயம்” என்று பெயர். தொல்காப்பியரால் தோஷங்களாக வகுக்கப்பட்டவைகளில் ஒன்று இது. ஆகையால் இந்த “தூரான்வய” யுக்தி தவறான அர்த்தத்தில் தான் கொண்டு போய்ச் சேர்க்கும்.
மேலும்,
//“உமையாள் ஒக்கும் மங்கையர் உச்சிக் கரம் வைக்கும்” என்று எழுதியது யாப்பிலக்கணத்தை அனுசரித்ததே. உரைநடைக்கு மாற்றும்போது “மங்கையர் கரம் உச்சி வைக்கும் உமையாள் ஒக்கும்”, அதாவது மாதர்கள் கைகளை உச்சியில் வைத்துத் (தொழும்) உமையாளைப் போன்றவள் (சீதை) என்றே பொருள் கொள்ள வேண்டும் //
இப்படி மாற்றிப் பொருள் கொள்வதற்குத் தமிழிலக்கியத்தில் எந்த விதமான முன்னோடியும் இல்லை.
// அப்படிக் கம்பர் எழுதுவார் என்று எண்ணவும் கூடுமோ? //
தம்மால் பரம்பொருளாக மதிக்கப்படும் திருமாலும், அனவரதம் அவன் மார்பில் உறையும் திருமகளுமே பூமியில் இராமனாகவும் சீதையாகவும் அவதரித்தனர் என்று கம்பர் பல இடங்களில் கூறியிருப்பதால் அப்படி எழுதுவதில் எந்த தோஷமும் இல்லை.
“உமையாள் ஒக்கும் மங்கையர்” எனத் தொடங்கும் பாடலுக்கு முந்தைய பாட்டிலேயே,
செப்பும்காலை. செங்கம
லத்தோன் முதல் யாரும்.
எப் பெண்பாலும் கொண்டு
உவமிப்போர் உவமிக்கும்.
அப் பெண் தானே ஆயின
போது. இங்கு. அயல் வேறு ஓர்
ஒப்பு எங்கே கொண்டு. எவ் வகை
நாடி. உரை செய்வோம்?
என்று “சீதைக்கு ஒப்பாக எந்த உவமையையும் கூற முடியாது” என்று கூறி விட்டு, அடுத்த பாட்டில் “உமையைப் போன்ற சீதை” என்று கூறுவது முற்றிலும் பொருந்தாது.
மேலும், அவதாரக் காலத்திலிருந்த மங்கையரே சீதையை தெய்வமாக வணங்கினர் என்று பொருள் கொள்ள அவசியமில்லை.
“மங்கையரால் வணங்கத்தக்க சீதை” என்று பொருள்படத் தான் எழுதியிருக்கிறார். சீதை இலக்குமி அல்லவா? இன்றளவும் இலக்குமியை மங்கையர் வணங்கவில்லையா?
அல்லது, “கமையாள்” என்று சீதையைக் குறிக்கும் சொல்லுக்கு “உயர்குணங்களையும் பண்புகளையும் உடையவள்” என்ற பொருள் இருப்பதால் “உயர்குணங்களையும் பண்புகளையும் உடையவள்” என்ற காரணத்தாலேயே மங்கையரால் கரங்கூப்பி மதிக்கத்தக்க சீதை என்றும் பொருள் கொள்ளலாம். முன்பு கூறியவற்றை விடவும் இதுவே உத்தமமான அர்த்தமாகத் தெரிகிறது.
நீங்கள் கூறுவதுபடி பொருள் கொள்வது உத்தமம் அல்லல் என்பதற்கு வேறு சில காரணங்களும் உண்டு — “உமையவளை ஒத்த சீதை” என்ற உவமையைக் கூறவேண்டும் என்றால் “மங்கையர் கரங்கூப்பி வணங்கும் உமையவள்” என்று விசேஷித்துச் சொல்லத் தேவையில்லை. “சிவனில் பாதியாக விளங்கும் உமை”, “பொற்கொடி போன்ற இடையாளாகிய உமையாள்”, “திரிபுரமெரித்த செல்வன் விரும்பும் உமை” என்று பலவிதமாகச் சொல்லியிருக்க, “மங்கையர் கரங்கூப்பி வணங்கும் உமையவள்” என்பதைக் கம்பர் விரும்பித் தேர்ந்தெடுக்க அவசியம் இல்லை. அத்துடன், இவை எதுவுமே கூற வந்த விஷயத்திற்குச் சம்பந்தமில்லை. இக்காலக் கவிகளைப் போல “எதையாவது சொல்லி வரிகளை நிரப்புவோம்” என்னும் கருத்துடையவரல்லல் கம்பர். அவர் கவிச்சக்கரவர்த்தி.
மேலும் “உமையாள் ஒக்கும் மங்கையர்” என்ற பாடலுக்கு சைவர்களாகிய சுப்பிரமணிய முதலியார் கூட, நான் காட்டியபடி உ. வே. வை. மு. கோபால கிருஷ்ணமாச்சாரியாரும், கம்பன் அறநிலை விளக்க உரைக்குழுவும் இசைந்த பொருளைத் தான் கூறியுள்ளனர்.
இங்கு பார்க்கலாம் அப்பாடலுக்கு இந்த சைவப்பெருந்தகையர் இசைந்த பொருளை — https://www.dli.gov.in/data7/upload/0201/797/PTIFF/00000149.tif
அப் புத்தகத்தின் அட்டை — https://www.dli.gov.in/data7/upload/0201/797/PTIFF/00000004.tif
பதிப்பகத்தின் தகவல் — https://www.dli.gov.in/data7/upload/0201/797/PTIFF/00000005.tif
ஆசிரியரின் உரிமையுரை — https://www.dli.gov.in/data7/upload/0201/797/PTIFF/00000006.tif
// இது கம்பன் திருநாளில் (காரைக்குடியில்) கம்ப ராமாயணத்தைக் கரைத்துக் குடித்தவர் ஒருவர் கொடுத்த விளக்கத்தைக் கேட்டு நினைவில் கொண்டு எழுதியதே. //
இப்படி ஊர் பேர் விலாசம் தராமல் “கம்ப ராமாயணத்தைக் கரைத்துக் குடித்தவர்” என்று கூறினால் மட்டும் போதாது. அவர் யார், எப்படிப்பட்டவர், அவர் எழுத்துக்களில் எத்தகைய புலமையும் எத்தகைய நோக்கங்கள் வெளிப்படுகின்றன, அவர் அத்தகைய விளக்கம் கூறியதற்கு ஆதாரம்/நோக்கம் என்ன என்பதை எல்லாம் ஆராய்ந்துத் தான் ஒருவர் ஆப்தரா (நம்பத்தக்கவரா) இல்லையா என்று நிர்ணயிக்க முடியும்.
மன்னிக்கவும். என் முந்தைய மறுமொழியில் Copy paste செய்து வைத்திருந்த அரிசோனனின் பதிலிலிருந்து எடுக்கப்பட்ட பகுதியை நீக்காமல் அனுப்பிவிட்டேன்.
“அன்பின் திரு அரிசோனன் அவர்களே” என்று ஆரம்பிக்கும் வரியிலிருந்து தான் என்னுடைய கருத்துக்கள். அதற்கு முன்பிருப்பவை திரு அரிசோனன் அவர்களின் கருத்துக்கள்.
அன்பின் ஸ்ரீ அரிசோனன்
With all due respects to the efforts you have taken to present this article, the overwhelming perception which I got was what I had already articulated.
I have no indepth knowledge on Valmiki Ramayana or Kamba Ramayana per se. But widely heard from respected elders through vyakyanas which I already mentioned in my earlier article. Your interpretations differ from that.
I have not much to add but for a couple of points :-
\\ நான் வால்மீகி அவர்களைப்பற்றி மாற்றுக்குறைவாக எழுதி உள்ளேன் என்ற என்ற நினைப்பே \\
வெறும் நினைப்பு இல்லை. மிகக் குறிப்பான கருத்துக்கள். அவை ஏன் பிழையானவை என்பதனை ஸ்ரீ கந்தர்வன் மிகக் குறிப்பாகத் தெளிவு படுத்தியுள்ளார்.
\\ இலக்குவன் சீதையைத் தனது தாய்க்கும் மேலாகவே மதித்து வந்தான் என்பதை நீங்கள் வலியுறுத்தினீர்கள். நானும் அதையே தானே எழுதி இருக்கிறேன்? கோபத்தில்கூட தமிழ் நாட்டில், கம்பர் காலத்தில் அப்படி ஒரு சொல் சீதை வாயில் வருவதாக எழுவதை அவர் விரும்பவில்லை \\
விவாதாஸ்பத விஷயம் இளையபெருமாள் சீதாபிராட்டியை எப்படி மதித்தார் என்பது. வால்மீகி ஹ்ருதயத்தை உங்கள் கருத்துக்கள் வடிக்கவில்லை. ஸ்ரீ கந்தர்வன் அதை தெளிவாக்கியுள்ளார். விவாதாஸ்பத விஷயத்தை உங்கள் தரப்பிலிருந்து விளக்கும் கருத்துக்கள் மேற்கொண்டு இல்லை. தடம் புரண்டு வேறு பாதையில் செல்லும் விளக்கங்கள் சலிப்பைக் கொடுக்கின்றன.
\\ அகராதியைக் கைக்கொள்ளாமல் ஆன்றோர் எழுதிய விளக்கத்தைப் படிக்க வேண்டும் \\
அகராதி – Dictionery. அதை விடுத்து வேறு அர்த்தத்துக்குப் போக அவச்யம் இல்லை. அகராதி சொல்லும் அர்தங்களோ அல்லது பொதுவில் வைக்கப்படும் அர்த்தங்களோ மாற்றுக்குறைவான ஒரு விளக்கத்தை அளித்து சான்றோர்களின் விளக்கம் நிறைவான விளக்கத்தை அளித்தால் நிஸ்ஸம்சயமாக நான் சான்றோர்களின் விளக்கத்தை மட்டிலும் ஏற்பேன். இது என் நிலைப்பாடு.
\\ நான் தமிழ்ப் பண்பு என்று மூன்று தடவை எழுதி இருப்பதால் \\
தமிழ்ப்பண்பு என்ற உகப்பு உங்களுக்கு மட்டிலும் இல்லை. எனக்கும் ஸ்ரீ கந்தர்வனுக்கும் கூட உண்டு. தொல் தமிழ் நூற்களிலிருந்து வைஷ்ணவத்தை விளக்கும் அன்னாரது வ்யாசங்கள் தளத்தில் பார்க்கலாம்.
“நூபுரம் த்வபிஜானாமி நித்யம் பாதாபிவந்தனாத்” என்பது வால்மீகி பக்ஷம் என்று நிர்த்தாரணம் செய்த பின்பும்
\\ தமையனின் தாரம் தாய்க்கு நிகர் என்பது தமிழர் பண்பாடு. \\
என்று மட்டிலும் சொல்லிப்போவது வால்மீகி பக்ஷத்தை ஏறெடுத்தும் பார்க்க மாட்டேன் என்று ஆகும்.
\\ more off-the-track interpretations \\ this is nothing but hitting below the belt. \\
Nope. With all due respects to your own interpretations on many issues, your interpretations differed from what I heard from elders. Many are certainly Off-the-track and it is but natural to expect the flow to continue. If they are not, I would be happy and would be the first person to appreciate.
சான்றோர்களின் விளக்கத்தை *அபத்தம்* என்று ஒருவர் சொல்வதும் அதற்கு மேற்கொண்டு எந்த மொழி, இலக்கணம் சார்ந்த விளக்கங்கள் கொடுக்காது நீங்கள் ச்லாகிப்பதும் எனக்கு ஏற்புடையதல்ல.
\\ கம்ப ராமாயணத்தைக் கரைத்துக் குடித்தவர் \\
ஸ்ரீமான் கந்தர்வன் அவர்கள் தன் பக்ஷத்துக் கருத்துக்களுக்கு மொழி சார்ந்து மிகக் குறிப்பான இலக்கணக்குறிப்புகள் சார்ந்து மிகக் குறிப்பான உரல்களுடன் கருத்துப்பகிர்ந்துள்ளார்.
கம்பராமாயணத்தை மனதுக்கு ஹிதமாக ஸ்ரீமான் எம்.எம்.இஸ்மாயில் போன்ற சான்றோர்களும் விளக்கமளித்துள்ளனர் என அறிவேன். *கரைத்துக்குடித்தவர்* என்று நீங்கள் சொல்லும் வ்யக்தி விசேஷத்தையும் அவருடைய கருத்துப்பகிர்வுகளையும் தளத்தினருடன் பகிருமாறு விக்ஞாபித்துக்கொள்கிறேன்.
நான் பகிர்வதற்கு ஏதுமில்லை. தொடரும் விவாதங்களிலிருந்து விஷய ஞானம் பெற விழைவதே என் அபிலாஷை.
உயர்திரு கந்தர்வன் அவர்களே,
//இந்தக் காலத்தில் தவறான புரிதல்கள் மலிந்து கிடக்கின்றன. அவற்றைக் களைவதிலேயே என் முழு நேரம் தேவைப்படுகிறது.//
நிறைவென்று எண்ணுவதைப்பற்றி உவந்து ஒரு வரிகூட எழுத இயலாது, தவறென்று நினப்பதைப்பற்றிச் சாட நூறு வரிகள் எழுத என் நேரத்தை ஒதுக்குவேன் என்று இயம்பிவிட்டபிறகு சொல்வதற்கு ஏதும் இல்லை.
மிக்கநன்றி.
தூற்றுவார் தூற்றலும், தூற்றுவாரோடு இணைந்து தூற்றலும், போகட்டும் இராமனுக்கே! அவனறிவான் என் மனத்தை! ஈஸ்வரார்ப்பணம்!
// நிறைவென்று எண்ணுவதைப்பற்றி உவந்து ஒரு வரிகூட எழுத இயலாது, தவறென்று நினப்பதைப்பற்றிச் சாட நூறு வரிகள் எழுத என் நேரத்தை ஒதுக்குவேன் என்று இயம்பிவிட்டபிறகு சொல்வதற்கு ஏதும் இல்லை. //i
நிறைகளைச் சுட்டிக் காட்ட நிறைய பேர் இருப்பார்கள். “இடித்துரைப்பவன் நண்பன்” என்னும் பழமொழியைக் கேள்விப்பட்டதில்லையா நீங்கள்? (வியக்தி தூஷணம் செய்யாமல்) குறைகளை நியாயமாகச் சுட்டிக் காட்டுபவனுக்கு நன்றி சொல்ல வேண்டும் என்று கூடச் சொல்லவில்லை. தூற்றாமல் இருந்தாலே போதும். அல்லது, அவன் சுட்டிக் காட்டிய குறைகள் குறைகள் அல்ல என்று நடுநிலை நின்று விவாதிக்கலாம். அப்படியில்லாமல்…
“தவறென்று ‘நினப்பதைப்பற்றிச்’ ‘சாட’ நூறு வரிகள் எழுத என் நேரத்தை ஒதுக்குவேன் என்று இயம்பிவிட்டபிறகு” என்று நான் எழுதியதைத் திரித்துக் கூறி என்னைச் சாடுவது நீங்களே தங்களுடைய மரியாதையைக் குறைத்துக் கொள்ளும் செயல். இது சான்றோர்கள் செய்யும் செயல் அல்ல.
நண்பரே, தனிநபரைத் தாக்கும் வேலையில் நான் இறங்குவது அறவே இல்லை. நேற்று கூட சொல்லியிருந்தேன் இப்படி:
// இதற்கு உங்களைச் சொல்லிக் குற்றமில்லை. சமீபகாலத்தில் பெரும்பான்மையான நவீனத் ‘தமிழறிஞர்கள்’ மற்றும் ‘புரட்சிக் கவிஞர்கள்’ கம்பரைப் பற்றி முழுவதும் தெளிந்து அறியாமல் தத்துப் பித்து என்று உளறியிருக்கிறார்கள். அதனால் வந்த மயக்கமே என்று எண்ணுகிறேன். //
இதில் சிறிதளவேனும் வியக்தி தூஷணம் இருக்கிறதா என்று நடுநிலை நிற்கும் திரு க்ருஷ்ணகுமாரும் ஆசிரியர்க் குழுவும் சொல்லட்டுமே. எனது சமநிலைநிற்றலை சிலாகித்து முன்பு சொல்லியும் உள்ளனரே (ஜடாயு on August 11, 2011 at 12:52 pm )
“வால்மீகி பெண்களை மதிப்புடன் கருதவில்லை; ஆனால் கம்பர் அப்படி எழுதாமல் இருப்பதற்குக் காரணம் தமிழ்ப் பண்பாடு” என்று களங்கம் சிறிதுமில்லாத முனிவர் ஒருவரைத் தூற்றுவதும், பகுத்து அறியாமல் எவரோ ஒருவர் காரைக்குடியில் இலக்கண விதிகளையும், உரை கண்ட பெரியோர்களையும் தூக்கிக் குப்பையில் எறிந்து பேசியதை ஆராயாமல் ஏற்று, அதை இங்கு “ஆராய்ச்சி, ஒப்பீடு” என்று எழுதிவிட்டு “என்னை நீ சிலாகிக்கவில்லை” என்று புலம்புவதில் என்ன அர்த்தம்?
நமக்கு இப்பொழுது அவசரத் தேவை நமது ஆன்மீக நூல்களைப் பற்றியும், பண்பாட்டைப் பற்றியும் முறையான பிரச்சாரமும், தவறான கருத்துக்களின் விமர்சனமும். சோபாவில் உட்கார்ந்துக் கொண்டு வெறும் மொழிநடையை ரசித்து உச்சுக் கொட்டி ஆகா ஓகோ என்று சிலிர்ப்படைய நேரம் இல்லை. இது என் தாழ்மையான கருத்து.
இது நான் இங்கு எழுதும் கட்டுரைகளுக்கும் மறுமொழிகளுக்கும் 200% பொருந்தும். அவற்றில் தோஷமிருப்பதை மற்றவர்கள் சுட்டிக் காட்டினால் அவர்களுக்குத் தண்டம் சமர்ப்பிக்க சித்தமாக இருக்கிறேன்.
பகவானின் நற்குணக் கடலை முதன்முதலில் எடுத்தியம்பிய களங்கமில்லா வால்மீகி முனிகளைப் பற்றி சிறுமைப்படுத்திப் பேசியும், கண்மூடித் தனமான பற்றுதல் காரணமாக “உமையாள் ஒக்கும் மங்கையர்” எனும் கவியின் வாக்கையே மாற்றி உரைத்த ஒருவரை ஆராயாமல் வழிமொழிந்தும் இயற்றியிருக்கும் கட்டுரையில் சிலாகநீயமான ஒன்றும் கிடையாது. இப்படியெல்லாம் செய்துவிட்டு “நான் வால்மீகியைத் தூற்றவில்லை” என்றும், உண்மையை நான் எடுத்தியம்பியதற்கு என்மேல் சிந்து கொண்டு ஒருவர் எழுதியதை சிலாகித்தும் வேறு எழுத வேண்டும் போலும்…
நம் தாயையும் தந்தையையும் குருவையும் பற்றித் தூற்றி எழுதியும், அந்த எழுத்தில் கவிதை நயமும், சொல்லாட்சியும், மேலான மொழியறிவும் உள்ளது என்ற ஒரே காரணத்துக்காக “ஆகா, என்ன புலமை, என்ன கவிதை நயம்” என்று சிலாகித்துப் பொன்னாடை போர்த்தி மகிழ்விக்கும் கோஷ்டியில் நான் இல்லை.
எனது பெருமதிப்பிற்கு உரிய உயர்திரு கந்தர்வன் அவர்களுக்கு,
// “இடித்துரைப்பவன் நண்பன்” என்னும் பழமொழியைக் கேள்விப்பட்டதில்லையா நீங்கள்? //
நீங்கள் என்னை நண்பன் கருதி எழுதுவது நான் செய்த நற்செயலே. அதற்கு மிக்க நன்றி. நான் என்றும் உங்களுக்குக் கடமைப்பட்டவன் ஆகிறேன். நண்பன் என்று ஆகிவிட்டபடியால், நண்பன் என்ற உரிமையில் கீழ்கண்டவற்றை எழுதி உள்ளேன். தவறாக எண்ணவேண்டாம் என்று பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
என்னை நண்பன் என்று கருதிய நீங்கள் கீழ்க்கண்ட சொற்களை எழுதலாமா?
//ஆசிரியர் குழுவிற்கு –
ஆ சேது ஹிமாசலம் பாரதத்திலுள்ள இந்துக்களை ஒன்று சேர்க்க வெண்டிய இத்தருணத்தில் — ஒற்றுமை உணர்விலே சிரத்தையை உண்டுபண்ண வேண்டிய இத்தருணத்தில் — உங்கள் தரப்பிலிருந்து ஒரு disclaimer கூட இல்லாமல் இப்படிப்பட்ட பிரிவினைக் கருத்துக்களைத் தனக்குள்ளே அடக்கியிருக்கும் இந்தக் கட்டுரையை வெளியிட்டிருப்பது வருத்தத்தைத் தருகிறது.//
என் கட்டுரையில் குறையை மட்டுமா சுட்டிக் காட்டினீர்கள்? இக்கட்டுரை பிரிவினைக் கருத்தை உண்டு செய்கிறது என்றும், இதை வெளியிட்டதே தவறு என்று மறைமுகமாக அல்லவா குறிப்பிட்டிருந்தீர்கள்? உங்கள்மீது பெருமதிப்பு கொண்டிருக்கும் தமிழ் இந்து இணையம் உங்கள் நண்பனைப் பற்றி என்ன நினைக்கும்? இனி அவன் எழுதும் படைப்புகளைத் தொடுவதற்குமுன் பலமுறை சிந்தனை செய்யாதா? தூசு அளவு இருக்கும் குறைகளையும், இமயம் போல எண்ணாதா?
//அல்லது, அவன் சுட்டிக் காட்டிய குறைகள் குறைகள் அல்ல என்று நடுநிலை நின்று விவாதிக்கலாம்//
அதைத்தான் நானும் செய்தேன்.என் கட்டுரை பிரிவினைக் கட்டுரை என்று குற்றம் சாட்டிய போதும், உங்களை என் நண்பராகத் தான் எடுத்துக்கொண்டுதான் நடுநிலையில் நின்று விவாதித்தேன். என்பக்கத்து கருத்துக்களைச் சொன்னேன்.
எததனையோ முறை நான் எழுதியும், நீங்கள் திரும்பத் திரும்ப //“வால்மீகி பெண்களை மதிப்புடன் கருதவில்லை; ஆனால் கம்பர் அப்படி எழுதாமல் இருப்பதற்குக் காரணம் தமிழ்ப் பண்பாடு// என்று கூறுகிறீர்கள்.
எங்கே நான் அப்படி எழுதி இருக்கிறேன்? ///”கம்பர் சீதையைத் திருமகளின் அவதாரம் என்று காண்பிப்பதால், அத்தகைய தெய்வ மாதின் வாயில் தகாத சொற்கள் வரக்கூடாது என்று “இடக்கர் அடக்கி” இருக்கிறார். வால்மீகியோ, அப்படிச் சீதையைக் காண்பிக்காததால், மானிடப்பெண்ணின் இயல்புகளை அவள் மேல் போர்த்தி இருக்கிறார்.”/// என்றுதான் எழுதி இருக்கிறேன்.
இதில் மாமுனிவர் வால்மீகி பெண்களை மதிப்புடன் கருதவில்லை என்று எங்கு எழுதி இருக்கிறேன்?
கம்பர் துவக்கத்திலிருந்து இறுதிவரை இராமபிரானையும், சீதாப்பிராட்டியையும் திருமாலாகவும், இலக்குமியாககவும்தான் பார்த்தார், அதனாலேதான் கம்பர், வல்மிகியிடமிருந்து மாறுபடுகிறார். தவிரவும், கம்பர் காலம் வேறு, வால்மீகி காலம் வேறு. அதைத்தான் நான் சுட்டிக்காடினேனே, தவிர யாரையும் தாழ்த்தவில்லை. இதை நான் எத்தனை தடவை கூறியும் நீங்கள் காதுற மறுத்தால் நான் என்னதான் செய்ய இயலும்?
// இதற்கு உங்களைச் சொல்லிக் குற்றமில்லை. சமீபகாலத்தில் பெரும்பான்மையான நவீனத் ‘தமிழறிஞர்கள்’ மற்றும் ‘புரட்சிக் கவிஞர்கள்’ கம்பரைப் பற்றி முழுவதும் தெளிந்து அறியாமல் தத்துப் பித்து என்று உளறியிருக்கிறார்கள். அதனால் வந்த மயக்கமே என்று எண்ணுகிறேன். //
இதற்கு நான் என்ன பொருள் செய்து கொள்ளுவது? நவீனத் தமிழறிஞர்களாலும், புரட்சிக் கவிஞர்களாலும் எனக்கு வந்த மயக்கம் இக்கட்டுரை என்றுதானே பொருள் படுகிறது?
இது “வ்யக்தி”யான என்னைப் பற்றித்தானே சொல்லப்பட்டு இருக்கிறது?
காலம் சென்ற தமிழ்க்கடலான அறிஞர் ஒருவர் சொன்னதைக் கேட்டுத்தான் நான் உமையவளைப்பற்றை எழுதினேன். நீங்கள் //பகுத்து அறியாமல் எவரோ ஒருவர் காரைக்குடியில் இலக்கண விதிகளையும், உரை கண்ட பெரியோர்களையும் தூக்கிக் குப்பையில் எறிந்து பேசியதை ஆராயாமல் ஏற்று// என்று எழுதியது எனக்கு ஏற்புடையதாக இல்லை. இருப்பினும், மற்ற பேரறிஞர்களின் கூற்றுக்கு மாறாக நான் ஏன் எழுதினேன் என்பதைத் தெளிவு படுத்துகிறேன்.
‘முத்தேவிகள்’ என்று குறிப்பிடப்படும் கடவுளர்களான கலைமகள், திருமகள், மலைமகள் என்ற மூவரில், உமையவள் சிவபெருமானின் பாதியானவள். சிவனும் சக்தியும் இணை பிரியாதது என்பது ஆன்றோர் கூற்று. சிவன் potential energy என்றால், உமையவள் kinetic energy. சிவம் பெருக்கெடுக்கும்போது சக்தி வெளிப்படுகிறாள். அப்படிப்பட்ட உமையவளைத் திருமகளான சீதைக்கு ஒப்பிட இயலுமே தவிர, மண்ணிலோ, விண்ணிலோ தோன்றிய வேறு எந்த மங்கையருக்கும் ஒப்பிட இயலாது. எனவேதான் “மங்கையர் உச்சிக் கரம் வைக்கும் உமையாள் ஒக்கும்” என்று பொருள் கொண்டேன். இப்படிப் பொருள் கொள்ளவும் — இது தவறு என்று சொல்லி அதற்கு ஆதாரம் கட்டினால் — அது உங்கள் கருத்து என்று அதை ஏற்காமல் இருக்கவும் எனக்கு உரிமை உண்டு.
உங்களைப் பொறுத்தவரை அது பிழை, என்னைப் பொறுத்தவரை அது ஏற்பு. இதில் கம்பரைப் பற்றிய அவமதிப்போ, அவர் கவிதைக்கு விளக்கம் எழுதிய சான்றோர்களுக்கு நான் செய்யும் அவமதிப்போ அல்ல. கம்பரின் காவியத்தை என் சிற்றறிவுக்கு ஏற்ப ஏத்துகிறேன் என்றுதான் பொருள்.
// “சீதைக்கு ஒப்பாக எந்த உவமையையும் கூற முடியாது” என்று கூறி விட்டு, அடுத்த பாட்டில் “உமையைப் போன்ற சீதை” என்று கூறுவது முற்றிலும் பொருந்தாது.// , அப்படி கம்பர் என் செய்ய வேண்டும் என்று நீங்கள் கேட்டு இருக்கிறீர்கள். அதைக் கம்பர் மூலமாகவே மறுத்து, சான்றும் காட்டுகிறேன்.
யுத்த காண்டத்தில், சீதை அக்னிப் பிரவேசம் செய்த மீண்ட பின்னர், சிவபெருமான் இராமனுக்குச் செய்யும் உரை இது.
“என்னும் மாத்திரத்து ஏறு அமர் கடவுளும் இசைத்தான்
உன்னை நீ ஒன்றும் உணர்ந்திலை போலும்ஆல் உரவோய்
முன்னை ஆதியாம் மூர்த்தி நீ மூவகை உலகின்
அன்னை சீதை ஆம் மாது நின் மார்பின் வந்து அமைந்தாள்”. — 9.4004
இங்கு சிவபெருமான் இராமனை “ஆதியாம் மூர்த்தி” என்று உரைப்பதாகக் கம்ப நாட்டார் சொல்கின்றார். அதே கவிச் சக்கரவர்த்தி, இரண்டு பாக்கள் கழித்து,
“ஆதியான் பணியருள் பெற்ற அரசருக்கு அரசன்
காதல் மைந்தனைக் காணிய உவந்தது ஓர் கருத்தால்
பூதலத்திடைப் புக்கனன் புகுதலும் பொரு இல்
வேத வேந்தனும் அவன் மலர்த் தாள்மிசை விழுந்தான்.” — 9.4007
என்று சிவபெருமானை “ஆதியான்” என்று குறிப்பிடுகிறார். சிவன் வாயிலாக இராமனை “ஆதி மூர்த்தி” என்று குறிப்பிட்டதாகச் சொன்ன கையோடு, சிவபெருமானை “ஆதியான்” என்கிறார்.
இதிலிருந்து கம்பர் சிவபெருமானையும், திருமாலின் அவதாரமான இராமனையும் “ஆதியான்”, அதாவது, தொடக்கத்திலிருந்தே உள்ளவர்கள் என்று குறிப்பிடுகிறார்.
நீங்கள் கொடுத்த,
//செப்பும்காலை. செங்கமலத்தோன் முதல் யாரும்.
எப் பெண்பாலும் கொண்டுஉவமிப்போர் உவமிக்கும்.
அப் பெண் தானே ஆயினபோது. இங்கு. அயல் வேறு ஓர்
ஒப்பு எங்கே கொண்டு. எவ் வகைநாடி. உரை செய்வோம்? //- 1.508
என்ற விருத்தப்பாவை எடுத்துக் கொள்வோம். இதில் கம்பர், “மற்ற பெண்களை உவமிக்கும் பொழுது சீதைக்கு உவமையாகத்தான் சொல்ல இயலும், சீதையை விட உயர்வான பெண்ணை எங்கு தேடிச் செல்வோம்?” என்று சொல்வதாக இருக்கிறது.
இங்கு குறிக்கப்படுவது பெண்கள்தான். சிவபெருமானைப் பாதியாகக் கொண்ட உமையாள் அம்மையை, உலக நாயகியை அல்ல. எப்பொழுது கம்பர் திருமகளின் அம்சமான சீதையை வேறு எந்தப் பெண்களுக்கும் உவமையாகச் சொல்லக் கூடாது என்று முடிவு செய்தாரோ, அப்பொழுது அவர் உலகநாயகியான உமையவளை மற்ற எந்தப் பெண்களுக்கும் நிகராக எப்படிச் சொல்லியிருப்பார்? எனவே, சீதையாக அவதாரம் எடுத்த திருமகளை, மலைமகளான உமையாளுக்கு நிகர் என்று கம்பர் சொல்லியிருக்க வேண்டும் என்று ஏன் எடுத்துக் கொள்ளக் கூடாது?
இதைப் பெருந்தகையாரான நீங்களோ, மற்ற சான்றோர்களோ ஏற்றுக்கொள்ள வேண்டாம். ஆனால், இப்படியும் சொல்லலாம் என்று நான் எழுதினாலோ, இது நான் ஒரு பெரிய தமிழ் அறிஞர் சொல்லிக் கேட்டது என்றாலோ, அதற்குப் பதிலாக, //பகுத்து அறியாமல் எவரோ ஒருவர் காரைக்குடியில் இலக்கண விதிகளையும், உரை கண்ட பெரியோர்களையும் தூக்கிக் குப்பையில் எறிந்து பேசியதை ஆராயாமல் ஏற்று// என்று எழுதுவது “வ்யக்தி தூஷணமா”, இல்லையா என்பதை ஆன்றோர்கள்தான் முடிவு செய்ய வேண்டும்.
நீங்கள் விரும்பியவண்ணம் // குறைகள், குறைகள் அல்ல என்று நடுநிலை நின்று விவாதிக்கலாம்.// இங்கு நான் அதைத்தான் செய்திருக்கிறேன்.
இதுவரை நண்பன் என்ற முறையில், ஒரு நண்பனாகத்தான் என் கருத்துக்களை முன்வைத்திருக்கிறேன். அதில் ஏதாவது உங்கள் மனதை வருத்தம் கொள்ளச் செய்தால், நண்பன் என்ற முறையில், அதைப் பொறுத்துக்கொள்ளுமாறு வேண்டுகிறேன்.
ஒரு சில சமயம், சதுரங்க விளையாட்டில் stalemate என்ற நிலைமைக்கு வருவதுண்டு. அதுபோல, சிறியேனான நான் சொல்லும் எந்த விளக்கமும் உங்களது
கருத்துக்கு ஏற்புடையதாக இல்லை, நீங்கள் பரிந்துரைத்த சில விளக்கங்களும் என்னால் ஏற்றுக்கொள்ளும்படி என்றேதான் உணருகிறேன். அதில் எந்தத் தவறும் இல்லை, அதில் எனக்கு எந்த மன வருத்தமும் இல்லை.
எனவே, “Let us agree to disagree.” என்று சொல்லி நமது விவாதங்களை இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன்.
நீங்களே எப்பொழுது என்னை “நண்பர்” என்று சொல்லி விட்டீர்களோ, அதைவிடச் சிறந்த பாராட்டு வேறு எதுவும் இல்லை. நட்பு உணர்வுடன் இருப்பதையே நானும் விரும்புகிறேன். நண்பனை. இடித்துரைக்க நண்பனுக்கு எல்லாவிதமான உரிமையும் உண்டு.
ஒரு திருமால் அடியாரான உங்களை, உங்கள் அறிவுக்காகவும், இறை உணர்வுக்காகவும் வணங்குகிறேன். என் மற்ற படைப்புகளிலும் குறை இருந்தால், இதுபோன்று தயக்கமின்றி சுட்டிக் காட்டுங்கள். நான் கற்றுக் கொள்கிறேன். உங்களிடமிருந்து “நண்பன்” என்று கிடைத்த வெகுமதியே எனக்கு மிகவும் நிறைவாக உள்ளது.
நட்புடன்,
அன்பு நண்பன்,
ஒரு அரிசோனன்
பெருமதிப்பிற்குரிய உயர்திரு கந்தர்வன் அவர்களுக்கு,
உங்களுக்கு நான் எழுதிய பதிலில் //நீங்கள் பரிந்துரைத்த சில விளக்கங்களும் என்னால் ஏற்றுக்கொள்ளும்படி என்றேதான் உணருகிறேன்.// என்று எழுதியதில் “இல்லை” என்ற ஒரு சொல் விட்டுப்போய்விட்டது. எனவே அந்த வரியை “நீங்கள் பரிந்துரைத்த சில விளக்கங்களும் என்னால் ஏற்றுக்கொள்ளும்படி இல்லை என்றேதான் உணருகிறேன்.” என்று பொருள் செய்துகொள்ளுமாறு தாழ்மையுடன் வேண்டிக் கொள்கிறேன். நண்பராகக் பிழை பொறுப்பீராக!
அன்பு நண்பன்,
ஒரு அரிசோனன்
“கம்பர் துவக்கத்திலிருந்து இறுதிவரை இராமபிரானையும், சீதாப்பிராட்டியையும் திருமாலாகவும், இலக்குமியாககவும்தான் பார்த்தார், அதனாலேதான் கம்பர், வல்மிகியிடமிருந்து மாறுபடுகிறார்.”
அதாவது வால்மீகி முனிவர் ராமன் -சீதையை தெய்வமாக காணவில்லை ; கம்பரால் மட்டுமே ராமன்-சீதை தெய்வமாக/அவதாரமாக பார்க்கப்பட்டனர். இக்கருத்து இந்த கட்டுரையின் முதல் பகுதியிலும் உள்ளது,
இது தவறான கருத்து என்றும் இது பற்றி ஆதாரங்களோடு இதே தளத்தில் பல முறை பலர் விவாதம் செய்தாயிற்று.
வால்மீகி முனிவர் ராமனை அவதாரமாக காணவில்லை என்ற வாதத்திற்கு ஆதாரங்கள் இல்லை என்பதே உண்மை.
ஆயினும் இந்த வாதம் ஆதாரங்கள் ஏதுமின்றி மீண்டும் மீண்டும் இங்கே கருத்து சுதந்திரம் என்றச் பெயரில் முன் வைக்கப் படுகிறது.
நாட்டில் வேறெந்த விஷயதைபபற்றியும் ஆதாரங்கள் அளிக்காமல் ” என் கருத்து இது தான் “என்று வாதம் செய்ய முடியாது.
சாய்
நண்பர் திரு அரிசோனன் அவர்களே,
நீங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்றாலும் வாசகர்களுக்குப் பயன்படுமென்று கருதி எழுதுகிறேன்:
1)
// இக்கட்டுரை பிரிவினைக் கருத்தை உண்டு செய்கிறது என்றும், இதை வெளியிட்டதே தவறு என்று மறைமுகமாக அல்லவா குறிப்பிட்டிருந்தீர்கள்? உங்கள்மீது பெருமதிப்பு கொண்டிருக்கும் தமிழ் இந்து இணையம் உங்கள் நண்பனைப் பற்றி என்ன நினைக்கும்? இனி அவன் எழுதும் படைப்புகளைத் தொடுவதற்குமுன் பலமுறை சிந்தனை செய்யாதா? //
இல்லை. ஆசிரியர் குழு ஒரு Disclaimer விட்டிருக்கலாம் என்று தான் சொன்னேன். பொதுவாக எல்லாக் கட்டுரைகளுக்கும் இந்த disclaimer “அறிமுகம்” பக்கத்தில் இருந்தாலும், பிரதிவாதங்களை வைக்கும் கட்டுரைகளுக்குச் சிறப்பாகச் சில disclaimer-களை வெளியிட வேண்டும் என்பது தான் என் கருத்து.
// கம்பர் துவக்கத்திலிருந்து இறுதிவரை இராமபிரானையும், சீதாப்பிராட்டியையும் திருமாலாகவும், இலக்குமியாககவும்தான் பார்த்தார், அதனாலேதான் கம்பர், வல்மிகியிடமிருந்து மாறுபடுகிறார். தவிரவும், கம்பர் காலம் வேறு, வால்மீகி காலம் வேறு. அதைத்தான் நான் சுட்டிக்காடினேனே, தவிர யாரையும் தாழ்த்தவில்லை. //
முன்பே இப்படி எழுதியிருந்தால் சரி. ஆனால் கட்டுரையில் எங்குமே கால-ருசி வேறுபாடுகளினால் இந்த மாற்றங்கள் இருக்கலாம் என்பதை ஒரு சாத்தியக் கூறாகக் கூட அனுமதிக்க முடியாத வண்ணம்.
“கம்பரோ, பெண்களை உயர்வாகப் போற்றும் தமிழ் மரபுக்கு இவ்வாறு பெண்களைப் பற்றி விவரிப்பது உகந்ததல்ல என்று விட்டு விடுகிறார்.”
என்று எழுதியுள்ளீர்கள். இப்படி எழுதியதற்கு வேறு என்ன அர்த்தம் கொள்ள முடியும்? வால்மீகி பெண்களை உயர்வாகப் போற்றாத மரபிலிருந்து வந்தவர் என்பதைத் தான் அனுமாநிக்கச் சொல்லுகிறது அவ்வாக்கியம்.
பிறகு சங்கரநாராயணன் அவர்கள் கால வேறுபாட்டைப் பற்றிப் பேசியதுடன் இப்போது அந்த வாதத்தில் அடைக்கலம் அடைந்து விட்டீர்கள்.
நீங்கள் வால்மீகி முனிவரைக் குறைத்துப் பேசுவது உங்கள் நோக்கமல்ல என்று தெளிவுபடுத்தியதற்கு நன்று. நோக்கம் அப்படி அல்ல என்றால் நன்றே. ஆனால், நீங்கள் யாரோ சிலர் சொல்வதை (அல்லது) யாரோ சிலர் ஏற்படுத்தியிருக்கும் சொல்லாட்சியையும் பாணியையும் வழிமொழிகிரீர்கள் என்று தெரிகிறது. அப்படி மொழிவதன் எதிர்பாராத தீய விளைவுகள் என்ன என்பதை நீங்கள் அறியவில்லை என்றே தெரிகிறது.
இந்த விஷயத்தில் தான் நாம் கவனம் செலுத்த வேண்டும். யாரோ ஒரு தமிழறிஞர் சொல்வதைக் காய்தல் உவத்தலின்றி ஆராயாமல் அப்படியே ஏற்பதும், மற்ற தரப்பினரைப் படிக்காமல் அதையெல்லாம் அபத்தம் என்று கூறுபவரை சிலாகிப்பதும் தெளிவான ஞானத்திற்கு வழி வகுக்காது என்பது என் தாழ்மையான கருத்து.
கம்பரைக் கரைத்துக் குடித்தவர்கள் போல “கம்பரின் சமுதாய கலாச்சாரக் கண்ணோட்டம்” தலைப்பில் சிலர் மேடையில் இனிக்க இனிக்க, மயக்க மயக்கப் பேசுவார்கள். அவர்கள் பேசுவதை அப்படியே ஏற்க வேண்டாம். எல்லாத் தரப்புகளையும் critical-ஆக கடுமையாக நடுநிலையாக ஆராய்ந்துப் பார்த்தால் அவர்கள் பேச்சில் உள்ள ஓட்டைகள் தெளிவாகத் தெரியும்.
///”கம்பர் சீதையைத் திருமகளின் அவதாரம் என்று காண்பிப்பதால், அத்தகைய தெய்வ மாதின் வாயில் தகாத சொற்கள் வரக்கூடாது என்று “இடக்கர் அடக்கி” இருக்கிறார். வால்மீகியோ, அப்படிச் சீதையைக் காண்பிக்காததால், மானிடப்பெண்ணின் இயல்புகளை அவள் மேல் போர்த்தி இருக்கிறார்.”///
இது கூட அவ்வளவு சரியன்று. வால்மீகி சீதையைத் திருமகளின் அவதாரமென்று கருதவில்லையோ என்று ஐயம் எழுப்புவதற்கு இடமளிக்கிறது.
வால்மீகி மாத்திரம் சீதையைத் திருமகளின் அவதாரமாகக் காட்டவில்லையா? “सीता लक्ष्मीर्भवान् विष्णुर्देवः” (யுத்த. 117.28) என்ற இடத்தை நீங்கள் பார்க்கவில்லை போலும். அப்படி இருக்க,
“வால்மீகி முனிவர் தானும் சீதையைத் திருமகளின் அவதாரம் என்று காண்பித்திருந்தாலும், இந்த இடத்தில் மானுட அவதாரம் கொண்டிருப்பதால் மானுடத் தன்மையையே இங்கு வலியுறுத்துகிறார்”
என்று தான் எழுத வேண்டி வருமே.
2)
// இதிலிருந்து கம்பர் சிவபெருமானையும், திருமாலின் அவதாரமான இராமனையும் “ஆதியான்”, அதாவது, தொடக்கத்திலிருந்தே உள்ளவர்கள் என்று குறிப்பிடுகிறார். //
என்ன சொல்ல வருகிறீர்கள்? கம்பர் ஹரி-ஹர ஐக்கியத்துவத்தைச் சொல்லுவதாக நீங்கள் நம்புகிறீர்களா? புரியவில்லை.
எப்படி இருப்பினும், கம்பருடைய கடவுட்கொள்கைக்கும் விவாதாஸ்பதமான விஷயத்திற்கும் சம்பந்தம் இருப்பதாகத் தெரியவில்ல.
3)
// எப்பொழுது கம்பர் திருமகளின் அம்சமான சீதையை வேறு எந்தப் பெண்களுக்கும் உவமையாகச் சொல்லக் கூடாது என்று முடிவு செய்தாரோ, அப்பொழுது அவர் உலகநாயகியான உமையவளை மற்ற எந்தப் பெண்களுக்கும் நிகராக எப்படிச் சொல்லியிருப்பார்? //
// அப்படிப்பட்ட உமையவளைத் திருமகளான சீதைக்கு ஒப்பிட இயலுமே தவிர, மண்ணிலோ, விண்ணிலோ தோன்றிய வேறு எந்த மங்கையருக்கும் ஒப்பிட இயலாது. எனவேதான் “மங்கையர் உச்சிக் கரம் வைக்கும் உமையாள் ஒக்கும்” என்று பொருள் கொண்டேன். //
நீங்கள் இந்த விஷயத்தைத் தலைகீழாகப் புரிந்துகொண்டிருக்கிறீர்கள். இன்னும் சொல்லப் போனால் உவமை என்றால் என்ன, உவமானம் உவமேயம் இவற்றுக்குள்ள வித்தியாசம் முதலிய அடிப்படை விஷயங்களை அறியாதவர் எழுதுவது போல எழுதுகிறீர்கள்.
“மற்ற பெண்களைச் சீதைக்கு உவமையாகச் சொல்லக் கூடாது”
என்று தான் கம்பர் கூறியிருக்கிறாரே தவிர, நீங்கள் கூறுவது போல
“சீதையை வேறு எந்தப் பெண்களுக்கும் உவமையாகச் சொல்லக் கூடாது”
என்று அல்ல. கடவுளை எதற்கும் உவமையாகச் சொல்லக் கூடாது என்பது எனக்குத் தெரிந்து ஆபிரகாமிய மதங்களில் தான் சொல்லுவார்கள்.
இன்னும் சொல்லப் போனால், பண்புடைய பெண்களுக்கு உவமையாகத் திருமகளைக் கூறுவார்கள் என்று,
“எப் பெண்பாலும் கொண்டு உவமிப்போர் உவமிக்கும்.
அப் பெண்”
எனும் வரிகளில் கம்பரே கூறியிருக்கிறார் முற்பாட்டிலே. அதை நீங்கள் கண்டுக்கொள்ளவில்லை போலும். இதன் பொருளை இப்பக்கத்தில் முதலிரண்டு வரிகளில் காணலாம்: https://www.dli.gov.in/data7/upload/0201/797/PTIFF/00000149.டிப்
அந்த வரிகளுக்கு நீங்கள் இப்படியும் பொருந்தாத பொருளைக் கூறியிருக்கிறீர்கள்.
// இதில் கம்பர், “மற்ற பெண்களை உவமிக்கும் பொழுது சீதைக்கு உவமையாகத்தான் சொல்ல இயலும், சீதையை விட உயர்வான பெண்ணை எங்கு தேடிச் செல்வோம்?” என்று சொல்வதாக இருக்கிறது. //
மீண்டும் இது அவதானித்து ஆராய்வோர்கள் எழுதுவது போல காட்சியளிக்கவில்லை.
“ப்ரஹ்ம த்ருஷ்டிர் உத்கர்ஷாத்” என்னும் பிரம்ம சூத்திரம் முன் வைக்கும் நியாயம் ஒன்று இருக்கிறது. அதாவது, தாழ்ந்ததில் உயர்ந்ததைக் காண்பது சரியே, ஆனால், உயர்ந்ததில் தாழ்ந்ததைக் காண்பதே குற்றம்.
ஆகையால், “உமையாள் ஒக்கும் மங்கையர்” என்று கூறுவதிலே உவமானமாகிய உமை தெய்வமென்பதால் உவமேயமாகிய மங்கையரை விட உயர்ந்தவர். ஆதலால், இங்கு உமையாளுக்குச் சமமாக மங்கையர் சொல்லியிருப்பது உமையாளைக் குறைத்துக் கூறுவதாகாது. மாறாக அப்பெண்களை உயர்த்திக் கூறும் விஷயமே.
நட்புடன்,
கந்தர்வன்