கம்பனும் வால்மீகியும்: இராமாயண இலக்கிய ஒப்பீடு – 4

முந்தைய  பகுதிகள்:  பாகம் 1,   பாகம்  2 , பாகம் 3

சீதை அப்பழுக்கற்றவள் என்று அறிந்தும் இராமன் அவளை ஏன் தீக்குளிக்கும் நிலைக்குத் தள்ளினார் என்று இன்றுவரை பலவிதமான வாதங்கள், ஆராய்ச்சிகள், பாத்திரப் பகுப்புகள் (character analysis) செய்யப்பட்டுக் கொண்டுதான் வருகின்றன. இராமாயணம் இவ்வையகத்தில் உள்ளவரை இவை ஓயப்போவதில்லை. அதில் அதிக நேரம் செலவிடாது, அந்நிகழ்ச்சியைக் கவிமுனி வால்மீகியும், கவிச்சக்கரவர்த்தி கம்பனும் எப்படிக் கையாண்டிருக்கிறார்கள் என்பதைக் காண்போம்.

பள்ளி இறுதி ஆண்டில் நான் வடமொழி வகுப்பில் பயின்ற பகுதிதான் வால்மீகி இராமாயணத்தில் யுத்த காண்டத்தில் வரும் இராம-சீதை வாக்குவாதம். இதையே இராமாயணத்தில் மிகவும் சிறந்த பகுதியாக நான் எண்ணுகிறேன். சீதையின் வாதத் திறமையும், அவளது கற்பின் சீரிய மென்மையும் இங்குதான் புலப்படுத்தப் படுகிறது. என்னைப் பொறுத்தவரையில் இப்பகுதி சீதையின் பொற்பை, கற்பை, சிறப்பை, உலகுக்கு எடுத்துக் காட்டவே வடிவமைக்கப்பது என்றே தோன்றுகிறது.

…இராவணன் போரில் வீழ்ந்து படுகிறான். அனுமன் சீதாப்பிராட்டிக்கு இந்த நற்செய்தியைக் கூறி, அவளை, இராமன் இருக்குமிடம் அழைத்து வருகிறான். அண்ணலும், அன்னையும் மீண்டும் ஒன்று சேரும் நன்நிகழ்ச்சியைக் காண மன்னவரும், விண்ணவரும், தானவரும் ஒருசேர அங்கு குழுமி இருக்கின்றனர்…

வால்மீகியின் யுத்தகாண்டத்தின் 115வது சர்க்கத்தில் துவங்குவோம்:

இருபத்திமூன்று சுலோகங்களில் இராமன் சீதையிடம் சொன்ன வார்த்தைகளை மொழிமாற்றம் செய்யும் பொது என் விரல்கள் தடுமாறுகின்றன. என் கண்கள் குளமாகின்றன.  கற்பில் சிறந்த சீதைக்கா இந்நிலை ஏற்பட்டது என்று என் மனம் கலங்குகிறது. என் மனத்தைக் கல்லாக்கிக் கொண்டு தொடர்கிறேன்.

तां तु पार्श्वे स्थितां प्रह्वां रामः संप्रेक्ष्ये मैथिलीम् |

हृदयान्तर्गतं भावं व्याहर्तुमुपचक्रमे || ६-११५-१

एषासि निर्जिता भद्रे शत्रुं जित्वा रणाजिरे |
पौरुषाद्यदनुष्ठेयं मयैतदुपपादितम् || ६-११५-२

गतोऽस्म्यन्तममर्षस्य धर्षणा संप्रमार्जिता |

अवमानश्च शत्रश्च युगपन्निहतौ मया || ६-११५-३

अद्य मे पौरुषं दृष्टमद्य मे सफलः श्रमः |

अद्य तीर्णप्रतिज्ञोऽहं प्रभवाम्यद्य चात्मनः || ६-११५-४

தன் அருகில் தலை குனிந்து நின்ற மைதிலியை நன்றாகப் பார்த்த இராமனோவேன்றால், தன் இதயத்தினுள் சென்ற உணர்ச்சிகளைச் சொல்ல ஆரம்பித்தார்.

நல்லாளே! ஆண்மையால் எதைச் செய்யவேண்டுமோ, என்னால் அது போர்க்களத்தில் எதிரியை வென்று (வெல்வதன் மூலம்) செய்யப்பட்டதால், (நீ) மீட்கப்ப்பட்டு இருக்கிறாய். தாக்குதல் முடிந்து கோபத்தின் முடிவை அடைந்து இருக்கிறேன்.

என்னால் எதிரிகளும், அவச்சொல்லும் உடனே அழிக்கப்பட்டார்கள். இப்பொழுது என்னுடைய ஆண்மை (அனைவராலும்) பார்க்கப்பட்டது. இன்று என் முயற்சி வெற்றி அடைந்தது.

 இன்று நான் வாக்குறுதியைக் காப்பாற்றி உள்ளேன்.  இப்பொழுது என் ஆத்மாவுக்கே மன்னனாகி இருக்கிறேன். — 6.115.1-4

… இப்படிச் சொன்ன இராமன், அனுமன் முதல் விபீஷணன்வரை தனக்கு உதவி செய்த ஒவ்வொருவரையும் குறிப்பிட்டு, அவர்களின் முயற்சி பயனளித்தது, தன் மானத்தைக் காத்துக் கொள்ளவும், தனது குலத்திற்கு அவப் பெயர் ஏற்படாதவாறு காத்துக்கொள்ளவும், இராவணனை வதைத்து, உன்னை மீட்டேன் என்று சீதையிடம் சொல்லுகிறார்…

पश्यतस्तां तु रामस्य समीपे हृदयप्रियाम् |

जनवादभयाद्राज्ञो बभूव हृदयं द्विधा || ६-११५-११

அருகில் (இருந்த) நெஞ்சிற்கு இனியவளான அவளைப் பார்த்தும், மக்களின் தூற்றத்தால் (நேரும்) அச்சத்தால் அரசர் இராமனுடைய நெஞ்சம் உடைந்தது. – 6.115.11

यत्कर्तव्यं मनुष्येण धर्षणां प्रतिमार्जता |

तत्कृतं रावणं हत्वा मयेदं मानकाङ्क्क्षिणा || ६-११५-१३

இந்த மானக் கேட்டினால் (ஏற்பட்ட) இழிவைத் துடைக்க, மனிதனால் எக்கடமை (செய்யப்பட) வேண்டுமோ, அது இராவணனைக் கொன்று என்னால் செய்யப்பட்டது – 6.115.13

विदितश्चास्तु भद्रं ते योऽयं रणपरिश्रमः |

सुतीर्णः सुहृदां वीर्यान्न त्वदर्थं मया कृतः || ६-११५-१५

रक्षता तु मया वृत्तमपवादम् च सर्वतः |

प्रख्यातस्यात्मवंशस्य न्यङ्गं च परिमार्जता || ६-११५-१६

प्राप्तचारित्रसंदेह मम प्रतिमुखे स्थिता |

दीपो नेत्रातुरस्येव प्रतिकूलासि मे दृढम् || ६-११५-१७

तद्गच्छ त्वानुजानेऽद्य यथेष्टं जनकात्मजे |

एता दश दिशो भद्रे कार्यमस्ति न मे त्वया || ६-११५-१८

कः पुमांस्तु कुले जातह् स्त्रियं परगृहोषिताम् |

तेजस्वी पुनरादद्यात् सुहृल्लेख्येन चेतसा || ६-११५-१९

sita-enters-agniஎந்தப் போர் முயற்சி சிறப்பாக வீரமிக்க என் நண்பர்களின் உதவியுடன் என்னால் செய்யப்பட்டதோ, அது உன் பொருட்டு அல்ல என்று தெரிந்து கொள்).  நீ நன்றாக இருப்பாயாக!

நற்பெயருக்கு எல்லா இடத்திலிருந்தும் (வரும்) இழுக்கையும், புகழ்வாய்ந்த என் குலத்தின் (மீது ஏற்படும்) குற்றச்சாட்டையும் துடைத்தெறிய என்னால் காப்பாற்றிக் கொள்ளப்பட்டது.

நடத்தையில் சந்தேகம் அடைந்தவளாக  என் முன் நிற்கும் (நீ) கண் பார்வை அற்றவன் முன் இருக்கும் விளக்கைப் போல என் (மனதைப்) புண்படுத்துகிறாய்.

ஜனகரின் மகளே! நல்லாளே! எனக்கு உன்னால் ஒரு காரியமும் ஆக வேண்டியதில்லை. இப்பொழுது உன் விருப்பப்படி பத்துத் திசைகளில் எங்கும் செல்ல (உன்னை) அனுமதிக்கிறேன்.

அந்நியன் வீட்டில் இருந்த பெண்ணை நற்குலத்தில் பிறந்த உயர்ந்தவன் எவன் ஆவலுடன் திரும்ப ஏற்றுக்கொள்வான்? – 6.115.15-19.

இவ்வாறு சீதையைப் பார்த்துக் கடும் சொற்களை அள்ளி வீசிய இராமன், வெந்த புண்ணில் வேலைச் சொருகுவது போன்ற வார்த்தைகளைச் சொன்னார்….

तदद्य व्याहृतं भद्रे मयैतत् कृतबुद्धिना |

लक्ष्मणे वाथ भरते कुरु बुद्धिं यथासुखम् || ६-११५-२२

நல்லவளே! ஆகையால், தீர்மானமான நெஞ்சுடன் என்னால் இவ்விதம் விளக்கப்பட்டது.  எது நலம் அளிக்குமோ, (அவ்வாறு) இலக்குவனையோ, பரதனையோ, உன் மனதில் கொள்.  – 6.115.22

… அதோடு விடவில்லை. “சத்ருக்னனையோ, சுக்ரீவனையோ, அரக்கன் விபீஷணனையோ, உன் மனத்திற்கு இசைந்தவனையோ, நீ கொள்ளலாம்; மனதுக்கு இனியவளாகவும், மிகுந்த அழகுடனும் உள்ள உன்னைத் தன்னிடத்தில் சிறை வைத்திருந்த இராவணன் உன் பிரிவை அதிக நாள் பொறுத்து இருந்திருக்கமாட்டான்.” என்றும் கடும்சொற்களை அள்ளி வீசினார்…

ततः प्रियार्हश्रवणा तदप्रियं प्रियादुपश्रुत्य चिरस्य मैथिली |

मुमोच बाष्पं सुभृशं प्रवेपिता गजेन्द्रहस्ताभिहतेव वल्लरी || ६-११५-२५

தனக்குப் பிரியமானவரிடமிருந்து அன்பான சொற்களையே கேட்டுவந்த மைதிலி, இப்படிப்பட்ட நேசமற்ற சொற்களைக் (கேட்டு), நெடுநேரம் மிகவும் நடுங்கினாள். யானையின் துதிக்கையால் பிய்த்தெறியப்பட்ட கொடியைப்போல (ஆகி) கண்ணீரைச் சொரிந்தாள்.  – 6.115.25

இதற்கு அடுத்த சர்க்கம் முழுவதையும் சீதை, இராமனுக்கு அளிக்கும் பதிலாகப் பதிவு செய்திருக்கிறார் மாமுனி வால்மீகி. கொண்டவனால் எந்தவிதமான குற்றச்சாட்டைக் கேட்கக் கூடாதோ, அதையே பெருங்கூட்டத்திற்கு முன் கேட்டவுடன், அவமானத்தால் கூனிக் குறுகிய சீதை, கண்ணீரால் குளிப்பாட்டப்பட்ட தன் முகத்தை துடைத்துக்கொண்டு, தடுமாறும் குரலில் பதில் கூறினாள் என்று எழுதுகிறார்…

किं मामसदृशं वाक्यमीदृशं श्रोत्रदारुणम् |

रूक्षं श्रावयसे वीर प्राकृतः प्राकृताम् इव || ६-११६-५

पृथक्स्त्रीणां प्रचारेण जातिं त्वं परिशङ्कसे |

परित्यजेमां शङ्कां तु यदि तेऽहं परीक्षिता || ६-११६-७

यद्यहं गात्रसंस्पर्शं गतास्मि विवशा प्रभो |

कामकारो न मे तत्र दैवं तत्रापराध्यति || ६-११६-८

मदधीनं तु यत्तन्मे हृदयं त्वयि वर्तते |

पराधीनेषु गात्रेषु किं करिष्याम्यनीश्वरा || ६-११६-९

सहसंवृद्धभावाच्च संसर्गेण च मानद |

यद्यहं ते न विज्ञाता हता तेनास्मि शाश्वतम् || ६-११६-१०

வீரரே! இழிந்தவன் (ஒருவன்) இழிந்தவளிடம் (பேசுவதைப்) போல, கேட்பதற்குக் தகாத, இப்படிப்பட்ட கடும் சொற்களை ஏன் என்னைக் கேட்க வைக்கிறீர்?

தீநடத்தை கொண்ட பெண்களைப் பற்றிக் கேள்விப்பட்டு, பெண் குலத்தையே நீர் நம்ப மறுக்கிறீர்! உம்மால் நான் தேர்வு செய்யப்பட்ட என்னை ஒருவேளை நீர் சந்தேகப்பட்டால், (அதை) விட்டுவிடும்.

பிரபுவே! ஒருவேளை நான்  (இராவணனின்) உடலைத் தீண்டியிருந்தால் அது வேறுவழியில்லாமல் ஏற்பட்டது. என் விருப்பத்தினால் அல்ல. அங்கு விதிதான் குற்றவாளிவாகும்.

என்னுடையதான இதயம் என் வசமானது. அது உம்மிடமே உள்ளது. உதவியற்றவளும், அன்னியன் வசத்தில் இருந்த என் உடலை நான் என்ன செய்ய இயலும்?

கௌரவத்தை அளிப்பவரே! உடன் வளர்ந்தஉணர்வினாலும், உடன் பழகியும், நான் உம்மால் அறிந்து கொள்ள இயலாதவள் ஆனாது போனால் (என் நடத்தையைப் பற்றி உம்மால் அறிந்துகொள்ள இயலாது போனால்), அதனால் நிரந்தரமாக அழிந்துபோனேன். – 6.116.5-10

…என்னைத் தேடி இலங்கைக்கு அனுமனை அனுப்பினீரே, அப்பொழுதே என்னை விட்டுவிட்டதாக ஏன் தெரிவிக்கவில்லை. அப்படிச் செய்தி அனுப்பி இருந்தால், வானரர் தலைவனான அனுமனின் கண் எதிரே என் உயிரை விட்டிருப்பேனே, நீரும், உமது நண்பர்களும் உங்கள் உயிரைப் பணயம் வைத்து இந்த தேவையில்லாத போரை நடத்தி இருக்க வேண்டியதில்லையே என்று வாதிடுகிறாள்…

त्वया तु नरशार्दूल क्रोधमेवानुवर्तता |

लघुनेव मनुष्येण स्त्रीत्वमेव पुरस्कृतम् || ६-११६-१४

மாந்தரில் புலிக்கு நிகரானவரே!  வலிமையற்ற மனிதனைப்போல பெண்மைக்கே முக்கியத்துவம் அளித்து, உம்மால் கோபமே கைக்கொள்ளப்பட்டது. – 6.116.14

…ஜனகர் தன்னை வளர்த்தாலும், தான் நிலத்திலேயே பிறந்ததாகவும், அப்படிப்பட்ட சிறந்த பிறப்பையும் மதிக்கவில்லை, இளமையிலேயே தன்னைக் கைப்பிடித்ததையும், தனது பக்தியையும், கற்பையும் புறக்கணித்ததாக இராமனைக் குற்றம் சாட்டுகிறாள் சீதை.,.

चितां मे कुरु सौमित्रे व्यसनस्यास्य भेषजम् |

मिथ्यापवादोपहता नाहं जीवितुमुत्सहे || ६-११६-१८

अप्रीतेन गुणैर्भर्त्रा त्यक्ता या जनसंसदि |

या क्षमा मे गतिर्गन्तुं प्रवेक्ष्ये हव्यवाहनम् || ६-११६-१९

சுமித்திரையின் மகனே (இலக்குவா)! இந்த துயரத்திற்கான அருமருந்தான சிதையை எனக்காகச் செய். பொய்க்குற்றம் சாட்டப்பட்ட நான் வாழ விரும்பவில்லை. மக்கள் சபை முன்னால், என் குணங்களால் நிறைவு பெறாத கணவரால் கைவிடப்பட்ட நான் செல்லக்கூடிய (ஒரே) வழியான நெருப்பில் புகுவேன். – 6.116.18&19

 हि रामं तदा कश्चित्कालान्तकयमोपमम् |

अनुनेतुमथो वक्तुं द्रष्टुं वा प्यशकत्सुहृत् || ६-११६-२२

அப்பொழுது  காலனைப்போன்று (தோன்றிய) இராமனையோ அங்கு யாரும் சொல்லவோ, பார்க்கவோகூட திறனற்றவர் ஆயினர். – 6.116.22

यथा मे हृदयं नित्यं नापसर्पति राघवात् |

तथा लोकस्य साक्षी मां सर्वतः पातु पावकः || ६-११६-२५

எப்பொழுது என் இதயம் இராகவனிடமிருந்து அனுதினமும் நகர(பிரிய)வில்லையோ அப்பொழுது உலகத்தின் சாட்சியான அக்னி என்னைப் பாதுகாக்கட்டும்.  – 6.116.25

…எப்படிச் சொல்லிவிட்டு சீதை கொழுந்துவிட்டு எரியும் தீயில் புகுந்து விடுகிறாள்.  அதைக்கண்டு மனிதர், வானரர், வானவர், அரக்கர் அனைவரும் கூக்குரல் இடுகிறார்கள்…

ततो हि दुर्मना रामः श्रुत्वैवम् वदतां गिरः |

दध्यौ मुहूर्तं धर्मात्मा बाष्पव्याकुललोचनः || ६-११७-१

அப்பொழுது இப்படிப்பட்ட  கூக்குரலிட்ட சொற்களைக் கேட்டு, தர்மாத்மாவான இராமன் நீர் நிறைந்த கண்களுடன் கலங்கிய மனத்துடன் சற்று சிந்தித்தார். – 6.117.1

…சிதையைச் சிதற அடித்துக்கொண்டு, சீதையுடன் தீக்கடவுளான அக்னி தோன்றினான்…

नैव वाचा न मनसा नैव बुद्ध्या न चक्षुषा |

सुवृत्ता वृत्तशौण्डीर्यं न त्वामत्यचरच्छुभा || ६-११८-६

சொற்களாலோ, மனதாலோ, நடத்தையாலோ, கண்களாலோ, நன்னடத்தையுள்ள, நல்லொழுக்கமுள்ள (இந்த) மங்கலச் செல்வி (சீதை) உன்னை விட்டு விலகவில்லை. – 6.118.6

… சீதை அப்பழுக்கற்றவள் என்று அக்கினித் தேவன் ஏழு சுலோகங்களில் இராமனுக்கு எடுத்து இயம்புகிறான். அதைச் செவியுற்ற இராமன் தீக்கடவுளுக்கு பதில் அளிக்கிறார்…

अनन्यहृदयां भक्तां मचत्तपरिवर्तिनीम् |

अहमप्यवगच्छामि मैथिलीं जनकात्मजाम् || ६-११८-१५

इमामपि विशालाक्षीं रक्षितां स्वेन तेजसा |

रावणो नातिवर्तेत वेल मिव महोदधिः || ६-११८-१६

प्रत्ययार्थं तु लोकानां त्रयाणाम् सत्यसंश्रयः |

उपेक्षे चापि वैदेहीं प्रविशन्तीं हुताशनम् || ६-११८-१७

ஜனகரின் மகளான மைதிலியை மாற்றாரிடம் நெஞ்சத்தை (செல்ல விடாதவளும்), பக்தி உள்ளவளும், என் நினைவில் சுற்றிவருபளுமாக நானும் அறிகிறேன்.

பெருங்கடல் (தன் கரையை எப்படித்) தாண்டமுடியாதோ, (அதேபோல) இந்த அகண்ட கண்களை உடையவளும், தன் (கற்பின்) வலிமையால் (தன்னை) காத்துக்கொள்பவளுமான (சீதை), இராவணனால் பலவந்தப் படுத்த முடியாதவள்.

சத்தியத்தில் தஞ்சம் புகுந்த மூன்று உலகங்களையும் நம்பவைப்பதற்காகவே நெருப்பில் புகுந்த வைதேகியை அலட்சியம் செய்தேன். – 6.118.15-17

… பிரம்மாவும், சிவனும், மற்ற எல்லா தேவர்களும் இராமனுக்கு அவர் யார் என்பதைச் சொல்லி, சீதை இலக்குமி என்றும், அவளது கற்பு நிகரில்லாதது என்றும், அவளை ஏற்கவேண்டும் என்றும் உரைக்கிறார்கள்.  இராமனின் தந்தை தயரதனும் வந்து மகனுக்கும், மருமகளுக்கும் வாழ்த்துத் தெரிவிக்கிறார். புஷ்பக விமானத்தில் இராமன் சீதையுடன் அயோத்தியை அடைகிறார்…

கம்பராமாயணத்தில், யுத்தகாண்டத்தில், மீட்சிபடலத்தில் துவங்குவோம்:

… இராவணன் அழிந்ததும், சீதையை அலங்கரித்து அழைத்து வா என்று இராமன் ஆணையிடவே, அனுமன் அசோகவனத்தில் கற்புக்கரசி சீதையைக் கண்டு விவரம் தெரிவிக்கிறான். அசோகவனத்தில் எப்படி இருந்தேனோ, அதைத்தான் தன் கணவரும், விண்ணவரும், முனிவர்களும், மற்றவரும் காண வேண்டும், அலங்கரித்துக்கொண்டு செல்வது முறையாகாது என்று சீதை மறுக்கிறாள்.  விபீடணும் இது இராமபிரானின் கட்டளையாகும் என்று எடுத்துரைக்கவே, சீதை சம்மதிக்கிறாள். அரம்பை, திலோத்தமை முதலான தேவமங்கையர் சீதையை நன்கு அலங்கரிக்கின்றனர்.  வீடணனும், சீதையை இராமனிடம் அழைத்துச் செல்கிறான்…

சீலமும் காட்டி என் கணவன் சேவகக்

கோலமும் காட்டி என் குலமும் காட்டி இஞ்

ஞாலமும் காட்டிய கவிக்கு நாள் அறாக்

காலமும் காட்டும்கொல் என் கற்பு என்றாள்.  – 9.3948

நல் ஒழுக்கமும் காட்டி, என் கணவருக்கு (இராமனுக்கு) பணி செய்த விதத்தையும் தெரிவித்து, என் குலத்தையும் (வழக்கமான கற்பு நெறிப்படி நான் ஒழுகுவதையும் இராமனுக்குத்) எடுத்துச் சொல்லி, (சிறைப்பட்டிருந்த எனக்கு) இந்த (வெளி) உலகையும் காண்பித்த வானரப் பெருந்தகைக்கு (அனுமனுக்கு) எனது கற்பின் (வலிமை) நாள் இறுதி இல்லாத காலத்தையும் (சிரஞ்சீவித் தன்மையையும்) கொடுக்கும் என்றாள் (சீதை). 

… இவ்வாறு அனுமனைச் சிரஞ்சீவியாக இருக்கும்படி ஆசீர்வதித்த சீதை, சிறை நீங்கிய மகிழ்ச்சியுடனும், நெடுநாள் பிரிந்திருந்த கணவரைக் காணும் ஆவலுடனும் வந்து, இராமனை வணங்கி நின்றாள்…

அணங்குறு நெடுங் கண்ணீர் ஆறு வார்வுற

வணங்கு இயல்மயிலினை கற்பின் வாழ்வினை

பணம் கிளர் அரவு என எழுந்து பார்ப்புறா. – 9.3953

நீண்ட கண்ணீர் ஆறு பெருக, கற்பின் உறைவிடமான, மயிலுக்கு இணையான, (தன்னை) வணங்கும் பெண்ணை (சீதை) படம் எடுத்து எழுந்து நிற்கும் பாம்பைப் போல எழுந்து (சீற்றத்துடன்) பார்த்தான் (இராமன்).

ஊன் திறம் உவந்தனை ஒழுக்கம் பாழ்பட

மாண்டிலை முறை திறம்பரக்கன் மாநகர்

ஆண்டு உறைந்து அடங்கினை அச்சம்தீர்ந்து இவண்

மீண்டது என் நினைவு எனை விரும்பும் என்பதோ – 9.3954

இறைச்சியின் சுவையை விரும்பினாய். (உன்) கற்புநெறி கெட்டபின்பும் (நீ) இறக்க வில்லை. நீதிநெறி தவறி (வாழ்ந்த) அரக்கனின் (இராவணன்) பெரிய நகரமான (இலங்கையில், அவனுக்கு) அடங்கி வாழ்ந்து வந்தாய். (அவன் அழிந்ததால்) பயம் நீங்கி எந்த நினைப்பில் இங்கு மீண்டும் வந்தாய்? (நான்) உன்னை விரும்பி ஏற்றுக்கொள்வேன் என்பதாலோ?

agni-brings-sita-backஉன்னை மீட்பான் பொருட்டு உவரி தூர்த்து ஒளிர்

மின்னை மீட்டுறு படை அரக்கர் வேர் அற

பின்னை மீட்டு உறு பகை கடந்திலேன் பிழை

என்னை மீட்பான் பொருட்டு இலங்கை எய்தினேன். – 9.3955

“உன்னை மீட்டுச் செல்வதற்காக கடலின்மீது பாலம் கட்டி, மின்னலைப் போன்ற ஒளி பொருந்திய (வஜ்ராயுதத்தை உடைய இந்திரனை) தோற்கடித்த அரக்கனை (இந்திரஜித்தை) வேரோடு அழிக்கவில்லை. அப்படியானால் எதற்காக என்றால், என்மீது ஏற்பட்ட பழியைப் போக்குவதற்காகவே, இலங்கைக்கு வந்தேன்.

மருந்தினும் இனிய மன்னுயிரின் வான் தசை

அருந்தினையே நறவு அமைய உண்டியே

இருந்தனையே இனி எமக்கு என்பன

விருந்து உளவோ உரை வெறுமை நீங்கினாய் – 9.3956

“(என்பால் கொண்டிருந்த) அன்பை நீக்கினாய். சுவர்க்கத்தின் அமுதை விடச் சிறந்தது என்று இவ்வுலகத்து உயிர்களின் சதையை (இறைச்சியை) உண்டாயே. மது அருந்தினாயே. இனிமேல் எனக்கு என்ன விருந்து படைக்கப் போகிறாய்? சொல்.

பெண்மையும் பெருமையும் பிறப்பும் கற்பு எனும்

திண்மையும் ஒழுக்கமும் தெளிவும் சீர்மையும்

உண்மையும் நீ எனும் ஒருத்தி தோன்றலால்

வண்மை இல் மன்னவன் புகழின் மாய்ந்தவால். – 9.3958

“பெண்ணாகப் பிறப்பதனால் உள்ள பெருமையும், கற்பு என்ற வலிமையையும், ஒழுக்கமும், தெளிந்த குணமும், புகழும், உண்மையாக (நடந்து கொள்ளுதலும்) (சீதை) என்ற நீ ஒருத்தி பிறந்ததால், வலிமை இல்லாத மன்னவனின் புகழ் மறைத்து போவது போல மறைத்து போய்விட்டன.

அடைப்பர்  ஐம் புலன்களை ஒழுக்கம் ஆணியாச்

சடைப் பரம் தகைந்ததூர் தகையின் மாதவம்

படைப்பர் வந்து இடை ஒரு பழி வந்தால் அது

துடைப்பார் தம் உயிரோடும் குலத்தின் தோகையார். – 9.3959

“நற்குலத்தில் பிறந்த மங்கையர் தனது ஐந்து புலன்களையும் அடக்கி வாழ்வார். கற்பொழுக்கம் சிதையா வண்ணம், தலை முடியை வாராது, சடையைத் திரித்து பெரிய தவத்தில் ஈடுபடுவர். இடையில் ஒரு பழி வந்து நேர்ந்தால் தமது உயிரைக் கொடுத்தாவது அதைப் போக்கிக் கொள்வார்கள்.

யாது யான் இயம்புவது உணர்வை ஈடு அறச்

சேதியாநின்றது உன் ஒழுக்கச் செய்தியால்

சாதிஆல் அன்று எனின் தக்கது ஓர் நெறி

போதிஆல் என்றனன் புலவர் புந்தியான். – 9.3960

“இனி நான் சொல்ல என்ன இருக்கிறது? உன்னுடைய (தீய)ஒழுக்கச் செயல் (என்) உள்ளத்தை ஈடு கட்டமுடியாத அளவுக்கு அறுத்துத் தள்ளுகிறது.. (நீ) சாவாயாக!  இல்லாவிட்டால் உனக்கு எது நல்லது என்று படுகிறதோ, அங்கு போவாயாக!” என்று ஆன்றோர் நினைவில் (குடியிருக்கும் இராமன்) சொன்னான்.

அதைக்கேட்ட அனைவரும் கதறி அழுதனர். தன் கணவருடன் சேரப் போகிறோம் என்ற ஆவலுடனும், மகிழ்ச்சியுடன் ஓடோடியும் வந்த சீதையின் கண்களில் நீர் ஆறாகப் பெருகியது…

இற்றது போலும் யான் இருந்து பெற்ற பேறு

உற்றதால் இன்று அவம் என்றென்று ஓதுவாள். – 9.3964

எத் தவம் எந் நலம் என்ன கற்பு நான்

இத்தனை காலமும் உழந்த ஈது எலாம்

பித்து எனல் ஆய் அவம் பிழைத்ததாம் அன்றே

உத்தம நீ மனத்து உணர்ந்திலா மையால். – 9.3966

நான் (கற்புடன்) இருந்து பெற்ற பயன் இவ்வளவுதான். (அது) அழிந்தது போலும்.  இன்று எனக்கு பழி ஏற்பட்டது என்று (மேலும்) சொன்னாள்.

“உத்தமரே! இத்தனை காலமாக நான் மிகவும் வருத்தி எத்துணை தவம், எத்தனை நற்செயல்கள், சிறந்த கற்பறங்கள் செய்தும், உம மனம் அதை உணர்ந்து பார்க்க இயலாது போனதால், (அவை) பைத்தியக்கரச் செயல்கள் என்று ஆகிப் பயனின்றிப் போயினவே.

ஆதலின் புரத்தின் யாருக்காக என்

கோது அரு தவத்தினைக் கூறிக் காட்டுகேன்

சாதலின் சிறந்தது ஒன்று இல்லை தக்கதே

வேத நின் பணி அது விதியும் என்றானள். – 9.3969

இளையவன்தனை அழைத்து இடுதி தீயென

வளை ஒலி முன் கையாள் வாயின் கூறினாள்

உளைவறு மனத்தவன் உலகம் யாவுக்கும்

களைகணைத் தொழ அவன் கண்ணின் கூறினான். – 9.3970

“வேதத்தின் உருவே! எனவே, வெளியார் யாருக்காக எனது குற்றமற்ற சிறந்த தவத்தினை (கற்பு நெறியை) உரைத்துக் காட்டப் போகிறேன்? இறப்பை விடச் சிறந்தது ஒன்றும் இல்லை. உமது கட்டளையும் (எனக்குப்) பொருத்தமானதே! அது (என்) விதியும் (ஆகும்)” என்றாள்.

முன் கைகளில் (மணிக்கட்டில்) ஒலி எழுப்பும் வலைகளை அணிந்த (சீதை), இளையோனான (இலக்குவனை) அழைத்து, தீயை மூட்டு என்று (அனைவருக்கும் கேட்கும்படி) வாயால் சொன்னாள்.  (இதைக் கேட்டு) மன உளைச்சல் கொண்ட (இலக்குவன்), உலகம் அனைத்துக்கும் புகலிடம் அளிக்கும் (இராமனைத்) வணங்கி (நோக்க), அவனும் தன் கண்களாலேயே (பதில்) கூறினான்.

… எனவே, வீரம் மிகுந்த இலக்குவன், விம்மி வரும் அழுகையுடன், சாத்திரங்கள் சொல்லிய விதிப்படி சிதை அமைத்து நெருப்பை மூட்டினான்…

தீயிடை அருகுறச் செண்டு தேவர்க்கும்

தாய் தனிக் குருகலும் தரிக்கிலாமையால்

வாய் திறந்து அரற்றின மறைகள் நான்கொடும்

ஒய்வு இல் நல் அறமும் மற்று உயிர்கள் யாவையும். – 9.3972

(மன்னுயிர்கள் அனைத்துக்கும் மட்டுமல்லாது) விண்ணவர்களுக்கும் தாயான (சீதை) அந்த நெருப்பின் அருகில் தாயகச் சென்றதைக் தாங்க இயலாது நான்கு வேதங்களும், (என்றுமே) ஓய்ந்து போகாத நன்னெறிகளும், மற்ற உயிர்கள் எல்லாமும் தங்கள் வாயைத் திறந்து கதறின.

மனத்தினால் வாக்கினால் மறு உற்றேனெனின்

சினத்தினால் சுடுதிஆல் தீச் செல்வா என்றாள்

புனத் துழாய்க் கணவற்கும் வணக்கம் போக்கினாள். – 9.3976

நீந்த அரும் புனலிடை நிவந்த தாமரை

ஏய்ந்த தன் கோயிலே எய்துவா ளெனப்

பாய்ந்தனள் பாய்தலும்  பாலின் பஞ்சு எனத்

தீய்ந்தது அவ் எரி அவள் கற்பின் தீயினால். – 9.3977

“நெருப்புக் கடவுளான அக்னியே! உள்ளத்தினாலோ, சொல்லாலோ, நான் களங்கப் பட்டவள் என்றால், கோபம் கொண்டு (என்னைச்) சுட்டு எரிப்பாயாக!” என்று சொல்லி, துழாய் மாலையை அணிந்திருக்கும் தந்து கணவருக்கும் வணக்கம் செலுத்தினாள்.

நீந்திச் செல்லுவதற்கும் கடினமான நீரின் நடுவில் விழித்து மலர்ந்திருக்கும் தாமரை பொருந்திய தனது கோவிலை (இலக்குமியான சீதை) அடைவோம் என்று (நெருப்பில்) பாய்ந்தாள்.  அப்படிப் பாய்ந்தவுடன், அவளுடைய கற்புத் தீயினால் அந்த நெருப்பும் பாலின் (நிறத்தை ஒத்த) பஞ்சாகப் பற்றி எரிந்தது.

… சீதையின் கற்புக் கனலைத் தாங்க இயலாத கனல் தேவன், இரு கரங்களையும் கூப்பி, மாசற்ற சீதையைத் தன் கனல் பிழம்புகலான கையினால் தூக்கி வெளி வந்தான்.  சீதை மேல்தான் உனக்குச் சினம்.  என்மேல் உனக்கு என்ன கோபம்?  நான் உனக்கு என்ன செய்தேன்? இந்தக் கற்புக்கரசியின் கற்புக் கனலால் என்னை எரிக்க முற்படுகிறாயே?” என்று இராமனிடம் முறையிட்டான்.  “நீ யார்? தீய நெறி உள்ள இவளை எரிக்காது ஏன் பாது காத்தாய்?” என்று இராமன் கேட்டதும்,….

அங்கி யான் என்னை இவ் அன்னை கற்பு எனும்

பொங்கு வெந் தீச்சுடப் பொறுக்கிலாமையால்

இங்கு அணைந்தேன் உறும் இயற்கை நோக்கியும்

சங்கியா நிற்றியோ எவர்க்கும் சான்றுளாய். – 9.3983

ஐயுறு பொருள்களை ஆக இல் மாசு ஒரீஇக்

கையுறு நெல்லியம் கனியின் காட்டும் என்

மெய்யுறு கட்டுரை கேட்டும் மீட்டியோ

பொய் உறா மாருதி உறையும் போற்றலாய். – 9.3985

“அனைவருக்கும் சாட்சியானவனே! நான் அக்னி பகவான்.  இந்த அன்னையாம் (சீதையின்) கற்பு என்ற கொழுந்து விட்டு எரியும் கனல் என்னைச் சுட்டேரிக்கவே, அதைப் பொறுத்துக்கொள்ளும் தன்மை இல்லாததால், இங்கு நான் அணைந்து போன தன்மையைப் பார்த்த பின்னும், நீ (சீதாப் பிராட்டியிடம்) ஐயம் கொண்டு நிற்கலாமா?

சந்தேகம் கொண்ட பொருள்களின் (நிலையை) அறிந்து, (அந்த சந்தேகம்) என்னும் குற்றத்தை நீக்கி, உண்மை இது என்று (உள்ளங்)கையின் மீது இருக்கும் நெல்லிக்கனியைப் போலச் சுட்டிக்காட்டும் என் உரையைக் கேட்டும் (சீதையைத்) திரும்பப் பெற்றுக்கொள்ள மாட்டாயா? பொய்யே பேசாத அனுமனின் சொல்லையும் மதிக்க மாட்டாயா?

பெய்யுமே மழை புவி பிளப்பதன்றியே

செய்யுமே பொறை அறம் நெறியில் செல்லுமே

உய்யுமே உலகு இவள் உணர்வு சீறினால்

வய்யுமேல் மலர்மிசை அயனும் மாயுமே. – 9.3987

இந்த (கற்பிற் சிறந்த சீதை) மனதில் (துன்பமடைந்து) சீற்றத்தில் சபித்தால், மழை பெய்யுமா? இந்த பூமி பிளந்து (எல்லாவற்றையம் விழுகி விடுவதைத் தவிர) வேறு எதையும் செய்யுமா?  தர்மம் நன்னெறியில் செல்லுமா? உலகு உய்யுமா? தாமரை மலர்மேல் வீற்றிருக்கும் பிரம்மனும் இறந்துபடுவானே?

…சீதையின் பெருமைகளையும், அவளது கற்பையும் புகழ்ந்து அவளை ஏற்றுக்கொள்ளும்படி சொல்லி, அக்னி, அவளை இராமனின் அருகின் கொண்டு வந்து சேர்த்தான்…

அழிப்பு இல சான்று நீ உலகுக்கு ஆதலால்

இழிப்பு இல சொல்லி நீ இவளை யாது ஓர்

பழிப்பு இலள் என்றனை பழியும் இன்று இனிக்

கழிப்பிலள் என்றனன் கருணை உள்ளத்தான். – 9.3989

கருணை உள்ளம் கொண்டவன் (இராமன்), தீக் கடவுளைப் பார்த்து), “நீ உலகிற்கு அழிவே இல்லாத சாட்சியாக ஆனபடியால், அவதூறு இல்லாதா சொற்களைச் சொல்லி, நீ இவளை ஒரு குற்றமும் இல்லாதவள் என்று கூறினாய். (சீதை) இனிமேல் (என்னால்) நீக்க முடியாதவள் என்றான்.

…ஏனைய விண்ணவர்கள் அனைவரும், நான்முகனும், முக்கண்ணனும் இராமனிடம், அவன் பரம்பொருள் என்ற உண்மையை விளக்குகின்றனர்.

ஒப்பீடு:

வால்மீகி, கம்பர் இருவருமே, இராமன் சீதையின் மீது வீசிய கடும் சொற்களை விவரித்ததைப் கண்ணுறும் பொது நமக்கே, மேனி சிலிர்த்து, உள்ளம் நடுங்குகிறது என்றால், சீதாப்பிராட்டி எப்படிக் கலங்கி விதிவித்துப்போய் இருப்பாள் என்பதை அவர்கள் இருவருமே நமக்கு நன்கு படம் பிடித்துக் காட்டி இருக்கிறார்கள்.

sita_agniparikshaஇராமனின் நேர்மையையும், அறநெறியைக் காக்கத் தன் உயிருக்கு உயிரானவளையுமே துறக்க முடிவு செய்து, அவளை அப்பழுக்கு அற்றவள் என்று உலகுக்குக் காட்ட விழையும் அவர் உள்ளத்தையும் அறியாதவர்கள் மட்டுமே இராமனின் மீது காழ்ப்புணர்வு கொள்வார்கள்.  இரக்கமற்றவன் என்று தூற்றுவார்கள்.  பெண்ணடிமை செய்த பெரும்பாவி என்று ஏசுவார்கள்.

 அவர்கள் கண்ணற்ற குருடர்களே!  என்ன சொன்னால் சீதை தன்னைக் குற்றமற்றவள் என்று நிரூபிப்பாள், அவள் கற்புக்கரசி என்று உலகம் போற்றும் என்பதை நன்கு அறிந்துதான், தன் இதயத்தில் குருதி பொங்க அச் செயலைச் செய்தார்.

அதைக் கம்பர் எப்படி வெளிப்படுத்துகிறார்?  தானே, சீதையை நன்கு அலங்கரித்துக் கூட்டி வருமாறு அனுமனுக்கும் வீடனனுக்கும் கட்டளை இட்டுவிட்டு, விண்ணழகிககளால் அலங்கரிக்கப்பட்டு தன் எதிரில் நின்ற சீதையைப் பார்த்து, “கற்பொழுக்கம் சிதையா வண்ணம், தலை முடியை வாராது, சடையைத் திரித்து பெரிய தவத்தில் ஈடுபடுவர்”என்று இராமன் சாடுவதாக எழுதியுள்ளார்.

வால்மீகி, ”நெஞ்சிற்கு இனியவளான அவளைப் பார்த்ததும், மக்களின் தூற்றத்தால் நேரும் அச்சத்தால் இராமனுடைய நெஞ்சம் உடைந்தது.” என்கிறார். இராமனுக்கு சீதையைப் பற்றி என்ன நினைப்பு இருந்தது என்பதை உள்ளங்கை நெல்லிக்கனி ஆக்கி விட்டு, மாற்றான் இடத்தில் இருந்தவளை மீண்டும் ஏற்றால் உலகம் என்ன அவதூறு செய்யும் என்பதை நினைத்து உள்ளம் உடைந்தான் இராமன் என்று அவன் நெஞ்சத்துக் கிளர்ச்சியை விவரிக்கிறார்.

ஆக, இருவருமே, இராமனுக்கு சீதையின் மேல் உள்ள பாசத்தையும், அசையா நம்பிக்கையையுமே நமக்கு உணர்த்துகிறார்கள்.

இருப்பினும், எதைச் சொன்னால் சீதை உயிரைத் துறந்தாவது தனது தூய்மையை உணர்த்த முற்படுவாள் என்பதில் சிறிது வேறுபடுகிறார்கள்.

“இலக்குவனையோ, பரதனையோ, இன்னும் வேறு எவரை வேண்டுமானாலும் உன் மனதில் கொள் மனதுக்கு இனியவளாகவும், மிகுந்த அழகுடனும் உள்ள உன்னைத் தன்னிடத்தில் சிறை வைத்திருந்த இராவணன் உன் பிரிவை அதிக நாள் பொறுத்து இருந்திருக்கமாட்டான்.” என்று சொன்னதாக வால்மீகி கூறுகிறார். இப்படிச் சொன்னால் சீதை உயிரையும் ஒரு பொருட்டாகக் கருதமாட்டாள் என்று உணர்த்துகிறார்.

“நீ சாவாயாக!  இல்லாவிட்டால் உனக்கு எது நல்லது என்று படுகிறதோ, அங்கு போவாயாக!” சீதையைச் செத்து மடி என்று, சந்தேகத்திற்கு இடமில்லாமல் என்ன செய்யவேண்டும், என்ன செய்தால் அவளது கற்பு நிரூபணம் ஆகும் என்று தெரிவிப்பதாகக் கம்பர் கவி புனைகிறார்.

இதைக் கேட்டதும் சீதையின் எதிர்ச் செயல் எப்படி இருக்கிறது என்பதில் இருவரும் நன்றாகவே மாறுபடுகிறார்கள்.

சீதை மனம் சோர்வுற்று, நொந்துபோய், தனது கற்பும், பொற்பும், சீலமும், பித்துப்பிடித்த செயளுக்கு ஒப்பானதே என்று வருந்தி, “நான் உள்ளத்தினாலோ, சொல்லாலோ, நான் களங்கப் பட்டவள் என்றால், என்னைச் சுட்டு எரிப்பாயாக!” என்று தீப் புகுவதாக கம்பர் கசிந்து கவி நவின்றிருக்கிறார்.

வால்மீகியின் சீதை, தன்னைக் குளிப்பாட்டிய கண்ணீரைத் துடைத்துக்கொண்டு வீராங்கனையாகச் சீறி எழுகிறாள். அதை மிகவும் சிறப்பாக சீதையின் பதிலின் முதல் சுலோகத்திலேயே தந்திருக்கிறார் மாமுனி வால்மீகி. “வீரரே! இழிந்தவன் ஒருவன் இழிந்தவளிடம் பேசுவதைப் போல, கேட்பதற்குக்தகாத, இப்படிப்பட்ட கடும் சொற்களை ஏன் என்னைக் கேட்க வைக்கிறீர்? தீநடத்தை கொண்ட பெண்களைப் பற்றிக் கேள்விப்பட்டு, பெண் குலத்தையே நீர் ஏன் நம்ப மறுக்கிறீர்!”

ஆகா!  எப்படிப்பட்ட பதில் அது? கனவிலும், நினைவிலும், சதா சர்வகாலமும் தன் நினைப்பில் நீக்கமற நினைந்திருக்கும் தன் அன்புக் கணவரே, சொல்லத் தகாத சொற்களைக் சொல்லுகிறாயே என்று நிலை குலைந்து போகவில்லை, இழிந்தவன் ஒருவன், இழிந்தவள் ஒருத்தியிடம் பெசுவதைப்போலப் பேசுகிறாயே என்று சிலிர்த்து எழுகிறாள். இந்த நேரத்தில் இராமனின் வீரத்தையும் மீறிக்கொண்டு, சீதையின் கற்புச் செருக்கே சிறந்து மிளிர்கிறது.

அதுமட்டுமல்ல, “வலிமையற்ற மனிதனைப்போல பெண்மைக்கே முக்கியத்துவம் அளித்து, உம்மால் கோபமே கைக்கொள்ளப்பட்டது.” என்று சொல்லி, முப்பத்திமுக்கோடி தேவர்களையும் அடக்கி ஆண்ட இராவணனை அழித்த மாவீரனையே, தன் கற்பைச் சந்தேகித்த கணவனையே “வலிமையற்றவன், பெண் குணம் கொண்டவன்” என்று சொற்கணைகளால் துளைத்து எடுத்து விடுகிறாள். வீரலட்சுமியாகத் திகழ்கிறாள்.

கடைசியாக, தீப்புகும்போது, “என் இதயம் இராகவனிடமிருந்து என்றும் பிரியவில்லையோ, அப்பொழுது உலகத்தின் சாட்சியான அக்னி என்னைப் பாதுகாக்கட்டும்!”என்று தீக் கடவுளுக்கே சவால் விடுகிறாள்.

வால்மீகியின் இந்த சீதை உலகத்தின் எல்லாப் பெண்களுக்கும் இலக்கணமாக விளங்கி நிகற்கிறாள்.

இராமன் பெண்ணடிமை செய்தான் என்று பேசுபவர்களின் முகத்தில் கரியைப் பூசிவிடுகிறாள் வால்மீகியின் சீதை. புதுமைப் பெண்ணுக்கும் புதுமைப் பெண்ணாகவும், பழமையின் உயர்வைப் பறைசாற்றும்,, கற்பின் பொற்பை நிலைநாட்டும் வீரச் செல்வியாகவும் திகழ்கிறாள்.

இப்படிப்பட்ட வீரம் சிறு வயதிலிருந்து ஒன்றாகப் பழகிய இராமனிடமிருந்து பெற்றதுதானே?  எனவே, இராமன்தான் சீதைக்குத் தனது வீரத்தையும், தீரத்தையும், தர்மத்தை நிலைநாட்ட, தன்னைப் பழிக்கும் கணவனையே சாடும் திறனையும் கொடுத்தான் என்று கூறி, உலகம் உள்ளவரை நிலைத்து நிற்கும் இதிகாசமான, இராமன்-சீதையின் வரலாறும், அவர்கள் நமக்கு விட்டுச் சென்ற நீதியும், நம்மை வழி நடத்தும் என்று கூறி என் ஒப்பீட்டை நிறைவு செய்கிறேன்.

நீரை நீக்கிப் பாலை அருந்தும் அன்னப் பறவையைப் போல, என் முயற்சியில் எவ்வளவுதான் குறைகள் இருப்பினும், அதை நீக்கி, இருக்கும் ஒருசில நிறைவுகளை எடுத்துப் பருகுமாறு ஆன்றோர்களையும் சான்றோர்களையும், தாள் பணிந்து வேண்டிக் கொள்கிறேன்.

சிறுவயதிலிருந்து நான் பருகிய இராமாயணப் பாலை எனக்குப் புகட்டிய வால்மீகியும், கம்பனும், என் தாய் தந்தையர்கள். எனவே, இது மகன் பாடும் பெற்றோரின் புகழ்!

வாழிய வால்மீகி, வாழிய கம்பன், வாழிய அவர்தம் இராமகாதை!

வணக்கம்.

(முற்றும்).

10 Replies to “கம்பனும் வால்மீகியும்: இராமாயண இலக்கிய ஒப்பீடு – 4”

 1. அனைவருக்கும் இனிய மே தின நல்வாழ்த்துக்கள்.. ஹ்ம்ம் இன்னும் எத்தனை காலம் தான் ராமாயணத்தையும்,மகாபாரதத்தையும் வியந்தோதி கொண்டிருப்பார்களோ. வியாசரும், வால்மீகியும் மீண்டும் வந்தால் நீங்கள் 1000 ஆண்டுகளாக அவர்களின் இலக்கியத்திற்கு இன்னும் வியாக்கியானம் கொடுப்பதை கண்டால் நொந்து நூலாகி விடுவார்கள். நாட்டில் நடக்கும் ஊழல்,சுரண்டல்களை பற்றி எல்லாம் யாரும் ஒரு மூச்சு விடுவதில்லை. எல்லாம்,மோடி வந்து மாயம் செய்வார் என்கிற நம்பிக்கை போல.

 2. அரிசோனனுக்கு என் வாழ்த்துக்கள். நல்லதொரு முயற்சியில் ஈடுபட்டு இருந்தீர்கள். சாதாரணமாக இலக்கியம் படிப்பவர்கள் குறைந்து விட்டார்கள். அதில் இரண்டு மொழிகளிலும் படித்து, நல்ல முறையில் ஒப்பீடு தந்ததற்கு மிக்க நன்றி. படிப்பதற்கும், சிந்தித்துப் பார்ப்பதற்கும் மிகவும் சிறப்பாக இருந்தது. நிற்க. அரிசோனன் என்றால் “அரிசோனா”வில் இருப்பவனா? வணக்கம்.

 3. நல்ல அலசல்…. ஆனாலும் வால்மீகி சறுக்கிய சில இடங்களை கம்பன் செப்பனிட்டது போல் இந்த அக்னிபுகலினை கம்பன் கையாளவில்லையோ என்ற கவலை வருகின்றது…

  இரு கவிகளும் இராமனின் வரிகளாய்ச் சொல்வதைப் படிக்கும் போது நமக்கெல்லாம் கோபம் வரும்படி அமைத்துள்ளது கவிகளின் வெற்றி…

  ஆனால் ஏன் இப்படி? என்பதின் உங்கள் விளக்கம் ஒப்புக் கொள்ளும்படி உள்ளது…

  இன்னும் ஒப்பீடு தொடரலாம்.. என் போன்ற பாமரர்களுக்கு அது விருந்தாய் அமையுமே…. முடிக்க வேண்டாம்…தொடரவும்…ப்ளீஸ்…

 4. உயர்திரு ராமன் அவர்களுக்கு,
  //அரிசோனன் என்றால் “அரிசோனா”வில் இருப்பவனா? //
  உங்களது ஊகம் சரியே.

 5. நன்றாக இருந்தது ஒப்பிடு. கலை இலக்கியம் வேறு, ஆரசியல் வேறு.
  ராகுலன் அவர்கள் இதனை கலை ஒப்பிடாக பார்க்கவும்.

 6. ராகுலன் அவர்களே இது அரசியல் அல்ல ! மோடிக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம் ! ராமாயணம் மஹா பாரதம் காலத்தை வென்றவை . கம்பனும் வால்மீகியும் வந்தால் தங்கள் காவியங்கள் இன்னமும் பேசபடுவதை கண்டு , சந்தோசம் அடைவரே தவிர , நொந்து போகமாட்டார்கள் . என்ன செய்வது தேர்தல் ஜுரம் இன்னமும் போகவில்லை !

 7. உயர்திரு ராகுலன் அவர்களுக்கு,
  வணக்கம்.

  உங்களுக்குப் பதில் எழுதுவதா வேண்டாமா என்று சிந்தனை செய்துகொண்டு இருந்தேன். கடைசியில் எழுதுவோம் என்ற முடிவுக்கு வந்து எழுதுகிறேன்.

  காலம் சென்ற, ஒருங்கிணைந்திருந்த பொதுவுடைமைக் கட்சியின் தனிப்பெரும் தலைவர் தோழர் ஜீவானந்தத்தைப் பற்றி நீங்கள் அறிந்திருப்பீர்கள் என்றே நம்புகிறேன்.

  சிறுவனாக இருந்தபோது நான் கேட்ட அவரது கம்ப ராமாயணப் பேருரைகள் இன்றும் என் காதில் ஒலித்துக் கொண்டிருக்கின்றன. காரைக்குடியில் கம்பன் திருநாளில் அவர் கலந்து கொண்ட பட்டி மன்றந்தில் எப்படிக் களை கட்டி இருக்கும் என்பது அங்கு இருந்து அவரது பேச்சைக் கேட்திருந்தால்தான் அறிந்து கொள்ள இயலும்.

  நாத்திகரான அவரின் கம்ப இராமாயண விரிவுரையை முதல் வரிசையில் இருந்து கெட்ட, பரம ஆத்திகரான என் பாட்டனார், “இராமகாதையின் புகழை விளக்கும் இவருக்கு இராமனின் அருள் கிடைக்கட்டும், தோழர் ஜீவா நீண்ட நாட்கள் இனிது வாழட்டும்!” என்று வாழ்த்தியதை என் காதால் கேட்டிருக்கிறேன்.

  சிறுவனாக இருந்த நான் தோழர் ஜீவாவுடன், அப்பொழுது உரையாடியும் இருக்கிறேன். நான் கெட்ட கேள்விகளுக்கு இனிய புன்னகையுடன் விளக்கமும் கொடுத்திருக்கிறார் தோழர் ஜீவா.

  தோழர் ஜீவாவைக் கம்ப இராமாயணத்திற்கு ஈர்த்தது எது? ராம பக்தி அல்ல என்பதை நாம் நன்கு அறிவோம். அது கம்பனின் கவி நயம் என்று ஆணித்தரமாகக் கூட இயலும். தமிழின் இனிமை என்று நான் அறிவேன்.

  ஐயா ராகுலன் அவர்களே, ஒரு தமிழனாக, இலக்கியத்தில் விருப்பு உள்ளவனாக, கம்ப ரசத்தைப் பருகிப் பாருங்கள். அப்பொழுதான் அதன் இனிமை புலப்படும். எவ்வளவு அள்ளிப் பருகினாலும் தெவிட்டாத தீஞ்சுவை அது.

  Socialism, socialism என்று சொல்லிக் கொள்கிறோமே, அது இராம ராஜ்ஜியம்தான்! அனைவருக்கும் வேலை வாய்ப்பு, தொழிலாளிகளுக்கு நன்மதிப்பு, சுரண்டாமை, ஊழல் இவை இல்லாமல் நல்ல அமைதியான வாழ்வை அளித்தது இராம ராஜ்ஜியம்! அது சோஷலிசம் இல்லாது போனால் வேறு எது சோஷலிசம்?

  மக்கள் எண்ணமே மகேசனின் எண்ணம் என்று நினைத்து தன் ஆருயிர் மனைவியைக் கூடத் தியாகம் செய்ய முற்பட்டவனின் வரலாறு உங்கள் போதுவுடைக் கட்சிக்கு எவ்வாறு ஏற்புடையது இல்லாமல் போகும்?

  எந்த ஏழையின் உழைப்பை இராமன் சுரண்டினான்?

  நீங்கள் நாத்திகராகவே இருந்துவிட்டுப் போங்கள்! நல்லவை ஆத்திகரிடம் இருந்தால் அதை எடுத்துக் கொள்வதில் தவறென்ன இருக்கிறது?
  நீதி தவறாத அரசை நடத்திக் காட்டியது இராமன். அவன் வரலாற்றிலிருந்து நாம் அரச நீதியைக் கற்கலாமே.
  அருள் கூர்ந்து காலம் சென்ற தோழர் ஜீவா அவர்களின் கண்ணோட்டத்திலிருந்து பாருங்கள்!
  என் கட்டுரை இலக்கியத்தைப் பற்றியதே! நீங்கள் விரும்பும் சுரண்டல், ஊழல் பற்றி சேக்கிழான், ஜடாயு, போன்ற பலர் இந்த இணையதளத்திலேயே எழுதி வருகிறார்களே! அவர்கள் அளவுக்கு அரசியல் அறிவு இல்லாத நான் எழுதினால் அது நகைப்புக்கு இடமாகிவிடாதா?
  கடைசியாக ஒன்று. நீங்கள் கார்ல் மார்க்சைப் பற்றி இன்னும் பேசிக்கொண்டிருக்கும்போது, நான் கம்பனைப் பற்றியும், வால்மீகியைப் பற்றியும் எழுதினால் குறைந்தா போய்விடும்?

 8. ராகுலன் என்பவர் கம்பராமாயணத்தினையும் மஹாபாரத்தினையும் எத்துணை நாள் இன்னும் பேசிக்கொண்டிருப்பீர்கள் என்று கேட்கிறார்.
  ஐயா ராகுலரே வேறு எதைப்பேசவேண்டும் என்கிறீர்கள். ஊழலையும் சுரண்டலையும்பற்றி மட்டுமே புலம்பவேண்டுமா? இல்லை மார்க்ஸ் ஜென்னி மற்றும் அவர்களது வேலைக்காரியின் கதையைப்பற்றி பேசலாமா? லெனின், ஸ்டாலின், மாவோ இவர்கள் கதைகளை பேசலாமா? போல்பாட் என்று ஒரு சர்வாதிகாரி இருந்தான் அவன் கதையை கதைக்கலாமா?
  ஸ்ரீ மத் ராமாயணமும் ஸ்ரீ மஹாபாரதமும் பாரதம் முழுமையையும் இணைப்பவை. அவை படிக்கபடிக்க புதிது புதிதாய் இனிக்ககூடியவை. கருத்துக்களை வழங்ககூடியவை. ஆனால் இவையெல்லாம் இயந்திர கதியிலான, வறண்ட ஜடவாத மார்க்சியர்களால் உணரத்தக்கவையோ அல்லது புரிந்துகொள்ளக்கூடியவையோ அல்ல. காரணம் ஸ்ருதி, யுக்தி அனுபவம் இம்மூன்றில் ஸ்ருதி மாறிவிட்டது. உங்கள் ஸ்ருதி தாஸ்கேபிடல். உங்கள் புரிதலும், அனுபவமும் அப்படித்தான் இருக்கும்.

 9. கம்பனின் சீதை மீது நமக்கு கழிவிரக்கம் ஏற்படுகிறது. ஆனால் வால்மீகியின் சீதை கர்ப்பெனும் வீரம் பொருந்தியவள் ஆதலால் நெற்றிக்கண்ணை த்திறப்பினும் குற்றம் குற்றமே என்பது போல் தன எஇன்னுயிர்க் கணவனிடமே அவள் தன் எதிர்ப்பை வார்த்தைகளை துணிவாக வெளியிடுகிறாள்.விரிவான கண்ணோட்டம்.

 10. சீதையின் கற்பையும்,உள்ளத்தூய்மையும்,இராமரின் நேர்மையையும்,அறத்தையும் மகாகவிகளான கம்பரும்,வால்மீகி மும் இருவருமே ஆஹா…! என்ன அழகான ஒப்பீடு..அருமை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *