மூலம் : Islamic Jihad – A Legacy of Forced Convesion, Imperialism and Slavery BY M.A. Khan
தமிழில் : அ. ரூபன்
’அமைதி மார்க்கமென’ அறியப்படுகிற இஸ்லாம் பரவியது அமைதிவழியிலா அல்லது வாள் முனையிலா என்பது என்றும் நிலவும் ஒரு விவாதக் கருப்பொருள்.
சிறந்த இந்திய வரலாற்றாசிரியர் எம்.ஏ.கான் இஸ்லாம் பரவியது வாள் முனையிலேயே என்று தகுந்த ஆதாரங்களுடன் நிருபிக்கிறார். கலாச்சாரத்திலும் கல்வியிலும் செல்வத்திலும் மிக மிக முன்னேறி இருந்த இந்தியா போன்ற நாடுகள் எவ்வாறு இஸ்லாமியர்களால் சின்னாபின்னப் படுத்தப் பட்டன, படுத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றன என்பதையும் மிக விளக்கமாக அவரது புத்தகத்தில் எடுத்துரைக்கிறார்.
அந்தப் புத்தகத்திலிருந்து சில பகுதிகள் இங்கே எடுத்தாளப்பட்டுள்ளன.
முந்தைய பகுதிகளை இங்கு படிக்கலாம்.
தொடர்ச்சி..
இனி இந்திய-பாகிஸ்தான் பிரிவினையைக் குறித்துப் பார்க்கலாம்.
இந்திய-பாகிஸ்தான் பிரிவினை தென்னிந்தியாவைப் பாதிக்கவில்லை. எனவே விந்திய மலைக்குத் தெற்கே இந்தப் பிரிவினையின் கோரமுகம் தெரியாமல் போனதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை. சுதந்திரம் அடைந்து அறுபது ஆண்டுகள் கடந்த பின்னும் இதுவே இன்றைய நிலைமையும் கூட. நமது வரலாற்று பாடப் புத்தகங்கள் எதுவும் இதனைக் குறித்துப் பேசுவதில்லை. எனவே தென்னிந்தியர்கள், குறிப்பாக தென்னிந்திய இந்துக்கள், பிரிவினையின் போதும், பிரிவினைக்கு முன்னும், பின்னும் நிகழ்ந்த பயங்கரங்களைக் குறித்து அறியாமையுடனேயே இருக்கிறார்கள்.
ஒரு தேசத்தின் வரலாறு அதன் குடிமக்களிடமிருந்து முற்றிலும் வெற்றிகரமாக மறைக்கப்பட்ட அல்லது திரிக்கப்பட்ட அவலம் இந்தியாவில் மட்டுமே உண்டு. இஸ்லாமிய பயங்கரவாதம் நம்மைச் சூழ்ந்திருக்கும் இத்தருணத்தில் திரு. எம். ஏ. கான் அவர்களின் புத்தகத்தை மொழிபெயர்ப்பதின் மூலம் அந்தத் தகவல்களை உங்களுடன் பகிர்ந்து கொள்வது அவசியமான ஒன்றாக நான் நினைக்கிறேன். இது ஒரு சுருக்கமான மொழிபெயர்ப்பு என்பது நினைவிருக்கட்டும்.
இந்த மொழிபெயர்ப்பில் தவறிருக்குமானால் அது என்னுடைய தவறு மட்டுமே.
*
முஸ்லிம்களுக்கென தனி நாடு கோரிக்கையை இந்திய முஸ்லிம் லீக் 1906-ஆம் வருடம் முன்னெடுத்தது. இருப்பினும் அந்தக் கோரிக்கை அதிக உத்வேகத்துடன் செயல்படுத்தப்படவில்லை. ஆனால் தென்னிந்தியாவில் நிகழ்ந்த “கிலாஃபத்” (மாப்ளா கலகம்) இயக்கத்திற்குப் பிறகு இந்த எண்ணம் தீவிரமடைந்து, மீண்டும் முஸ்லிம்களினால் தனி நாடு கோரிக்கை முன்னெடுக்கப்பட்டது. இந்தியா சுதந்திரம் அடைந்த பின்னர், பெரும்பான்மையினராக இருக்கும் இந்துக்களே அதிகாரத்தைக் கைப்பற்றுவார்கள். எனவே அவர்களின் (இந்துக்களின்) அதிகாரத்தின் கீழ் வாழ வேண்டிய நிலைமை ஏற்படலாம் என அஞ்சியே தனி நாடு கோரிக்கையை முஸ்லிம்கள் முன் வைத்தார்கள்.
தனி நாடு கோரிக்கையை முதன் முதலில் முன் வைத்தவர்களில் ஒருவரான கவிஞர் அல்லாமா முகமது இக்பால் (‘சாரே ஜஹான்சே அச்சா, ஹிந்துஸ்தான் ஹமாரா’ எழுதிய அதே இக்பால்தான்), ஜனநாயக முறைப்படி ஆளப்படும் நாட்டில் “தலைகள் கணக்கிட மட்டுமே செய்யப்படும்; எடை பார்க்கப்படாது” என்று சுதந்திரத்திற்குப் பிறகு ஏற்படவிருக்கும் ஜனநாயக இந்தியாவை விமர்சித்தார். கவிஞர் இக்பாலின் பாட்டனார்கள் இந்துக்கள். இருப்பினும், இக்பால் ஒரு தீவிர இஸ்லாமிய மத அடிப்படைவாத எண்ணம் கொண்டவராக இருந்தார்.
“உலகின் எல்லா நிலங்களும் முஸ்லிம்களுக்கே சொந்தம்; ஏனென்றால் அவையெல்லாம் முஸ்லிம்களின் கடவுளுக்குச் சொந்தம்” என்றார் இக்பால். தலைசிறந்த இந்து சிந்தனையாளர்களும், நோபல் பரிசு பெற்ற இந்துக்களும் இருந்த நாட்டில், முஸ்லிம்களின் எண்ணிக்கை மட்டுமே இக்பாலுக்கு பெரிதாக இருந்ததில் ஆச்சரியம் ஒன்றுமில்லை. அவரது மதப்பற்று அத்தகையது.
இந்த இடத்தில் இன்னொன்றையும் குறிப்பிட வேண்டும். 1947-ஆம் வருடம், தேசப் பிரிவினையின் போது, இந்துக்களின் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட கண்மூடித்தனமான வன்முறை நிகழ்ந்து கொண்டிருக்கையில் முஸ்லிம் லீக் கட்சி முஸ்லிம்களிடையே வெளியிட்ட ஒரு சுற்றறிக்கையானது, “ஒவ்வொரு முஸல்மானும் ஐந்து இந்துக்களுக்கான உரிமையைப் பெற வேண்டும்; ஏனென்றால் ஒவ்வொரு முஸல்மானும் ஐந்து இந்துக்களுக்குச் சமமானவன்” என்றது. இந்துக்கள் பெரும்பான்மையினராக வசிக்கும் நாட்டில் முஸ்லிம்களின் அதிகாரம் செல்லுபடியாகாது என்பதினை நன்கு உணர்ந்திருந்த கவிஞர் இக்பால், டிசம்பர் 29, 1930-ஆம் வருடம் அலகாபாதில் கூடிய அனைத்திந்திய முஸ்லிம் லீக் மாநாட்டில், முஸ்லிம்களுக்கென தனியாக பாகிஸ்தான் பெற வேண்டியதன் அவசியம் பற்றி எடுத்துரைக்கும் இக்பால், இஸ்லாமிய மதத்திற்கும், மதச்சார்பற்ற ஜனநாயகத்திற்கும் ஒருபோதும் ஒத்துவராது என விளக்குகிறார்.
மதச் சார்பற்ற கொள்கைகளை ஏற்றுக் கொள்வது இஸ்லாமிற்கு எதிரானது என முழங்கும் இக்பால், “பஞ்சாபும், வட-மேற்குப் பிராந்தியமும், சிந்துவும், பலூசிஸ்தானும் ஒரு ஒன்றுபட்ட நாடாக நான் காண எண்ணுகிறேன். பிரிட்டிஷ் அரசாங்கத்தின் கீழ் அல்லது அது இல்லாமல் ஒரு முழுமையான வடமேற்கு இஸ்லாமிய நாடு ஒன்றே இந்திய முஸ்லிம்களுக்கு வேண்டும்” என்கிறார்.
ஆனால் அவர் கனவு கண்ட இஸ்லாமிய நாட்டினைக் காண கவிஞர் இக்பாலுக்குக் கொடுத்து வைக்கவில்லை. 1938-ஆம் வருடம் மரணமடைந்த இக்பால், அவரது மரணத்திற்கு முன்பு, முஸ்லிம்கள் அனைவரும் முகமதலி ஜின்னாவின் பின்னால் செல்ல வேண்டும் என வேண்டுகோள் விடுக்கிறார். இதனைத் தொடர்ந்து தனி பாகிஸ்தான் கோரிக்கையை முன்னெடுக்கும் முகமதலி ஜின்னா 1940-ஆம் வருடம் லாகூர் மாநாட்டில் அதனை (தனி நாடு கோரிக்கையை) வலியுறுத்துகிறார்.
இந்திய இந்துக்களின் மீது ஆயிரம் வருடங்களுக்கும் மேலாக அவர்களை கொடூரமாக அடக்கி ஆண்ட முஸ்லிம்கள், மதச்சார்பற்ற ஜனநாயக இந்தியாவில் சிறுபான்மையினராக, இந்துக்களால் ஆளப்படுபவர்களாக இருக்க விரும்பவில்லை என்பதே இந்தத் தனிநாட்டுக் கோரிக்கைக்கு அடிப்படையாகும். எனவே அதனை அடைய அவர்கள் இந்துக்கள் மீதான கொலைவெறித் தாக்குதல்களைத் தொடர்ந்து நடத்தினர்.
ஏற்கனவே சொன்னபடி, இஸ்லாமியர்கள் இந்தியாவின் மீது படையெடுத்து வந்த கொடூரமான ஆக்கிரமிப்பாளர்கள். இந்திய இந்துக்களை பல நூற்றாண்டு காலம் அடக்கி ஆண்டவர்கள். அவ்வாறு அவர்கள் ஆண்ட காலத்தில் இந்தியர்களின் மீது நடத்திய படுகொலைகளும், அடிமைப்படுத்துதல்களும், கொள்ளையடிக்கப்பட்ட அளவிடற்கரிய செல்வமும், இடித்துத் தகர்க்கப்பட்ட அவர்களின் வழிபாட்டிடங்களும் கணக்கிலடங்காதவை. அவர்களுக்குப் பின் வந்த பிரிட்டிஷ்காரர்கள் நாட்டைச் சுரண்டி கொள்ளையடிப்பதை நோக்கமாகக் கொண்டவர்கள் என்றாலும், அவர்களின் வருகை அப்பாவி இந்துக்களுக்கு ஒரு வரமாகவே அமைந்தது என்பதில் சந்தேகமில்லை. கண்மூடித்தனமாக அவர்கள் மீது நடத்தப்பட்ட இஸ்லாமியக் கொடூரங்கள் பிரிட்டிஷாரின் வருகையினால் ஒரு முடிவுக்கு வந்தன என்பது ஒரு மறுக்கவியலாத உண்மை.
இந்தியாவிற்குச் சுதந்திரம் வழங்கிவிட்டு பிரிட்டிஷ்காரர்கள் இந்தியாவை விட்டு அகலும் தருணம் வந்தவுடன், அதிகாரம் தங்களிடம் இத்தனை காலம் அடிமைப்பட்டுக் கிடந்த இந்துக்களிடம் செல்வது உறுதியானவுடன், முஸ்லிம்கள் தங்களுக்கென ஒரு தனிநாடு கோரிக்கையை தீவிரப்படுத்தினர். இந்திய முஸ்லிம்களில் பெரும்பாலானவர்கள் இஸ்லாமிய ஆக்கிரமிப்பாளர்களால் கட்டாய மதமாற்றம் செய்யப்பட்டவர்கள். இந்திய இஸ்லாம் அன்னியர்களால் திணிக்கப்பட்ட ஒன்று என்பதனை உணர்ந்த எந்த முஸ்லிமும் இந்தியாவைப் பிரிக்க சம்மதித்திருக்கமாட்டான். ஆனால் நிலைமை அவ்வாறு இருக்கவில்லை.
முஸ்லிம்களின் கொலைவெறித் தாக்குதல்களின் காரணமாக, மத ரீதியாக அதுவரை ஒன்றுபடாமல் இருந்த இந்துக்களின் மத்தியில் தேசியவாத எண்ணம் தலைதூக்க ஆரம்பித்தது. இந்து கலாச்சார, ஆன்மீக, அரசியல் குறித்த புதிய எண்ணங்கள், சிந்தனைகள் தோன்ற ஆரம்பித்தன. 1921-ஆம் வருட “மாப்ளா” கலவரங்களுக்குப் பின்னர் இந்துக்களின் நலன்களைப் பேணும் எண்ணத்துடன் “ராஷ்ட்ரீய ஸ்வயம் சங்க்” என்னும் RSS 1925-ஆம் வருடம் தோற்றுவிக்கப்பட்டது. இத்தனை நூற்றாண்டுகால வரலாற்று அநீதிக்கும், முஸ்லிம்களின் மதச் சகிப்புத்தன்மையற்ற வன்முறை மனோபாவத்திற்கு எதிர்ப்பாகவே இந்தியாவில் ஆர்.எஸ்.எஸ். தோன்றியது.
தேசப் பிரிவினையின் போது நடந்த வன்முறைக்கு பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள், இந்துக்கள் மற்றும் இந்திய தேசியவாதிகள், முஸ்லிம்கள் மற்றும் இஸ்லாமிய அடிப்படைவாதிகள் என மூன்று பகுதியனரும் விமரிசிக்கப்பட்டாலும், உண்மையில் நடந்தது என்ன என்பதினை ஆராய்வோம். அதன் பிறகு முடிவெடுப்பது உங்களிடம் இருக்கிறது.
முதலில் “மாப்ளா” கலவரம். அது குறித்து ஏற்கனவே பார்த்துவிட்டோம். மாப்ளா கலவரம் ஓய்ந்த பிறகு இஸ்லாமிய காலிஃபேட் இயக்கம் முடிவுக்கு வந்தது. எனவே இனி தேசப்பிரிவினையின்போது நிகழ்ந்த கலவரங்களைக் குறித்துப் பார்க்கலாம்.
தேசப்பிரிவினைக் கலகம் இந்தியா சுதந்திரமடைவதற்கு ஒரு வருடம் முன்னர், 1946-ஆம் ஆண்டு மத்தியில் துவங்கியது. 1946-ஆம் வருடம் இந்தியாவை ஆண்டு கொண்டிருந்த இடைக்கால அரசாங்கம், இந்தியாவை மத ரீதியாக இரண்டாகப் பிரிப்பதற்குச் சம்மதிக்காமல், இந்து-முஸ்லிம் இருவருக்குமே சம அந்தஸ்து கூடிய ஒரு நாட்டை முன் வைத்தது. ஆனால் காங்கிரஸ் கட்சி, மக்கள் தொகையில் முஸ்லிம்கள் 20 சதவீதமாகவும், இந்துக்கள் 75 சதவீதமாகவும் இருப்பதனைக் காரணம் காட்டி அந்த ஏற்பாட்டிற்கு மறுத்தது. அதற்குப் பதிலாக ஆறு இந்துக்களும், ஐந்து முஸ்லிம் உறுப்பினர்களும், பிற மதத்தைச் சேர்ந்த இன்னொரு உறுப்பினரும் கூடிய ஒரு கூட்டாட்சி அமைக்க வேண்டுமென கோரிக்கை விடுத்தது. ஆனால் முகமதலி ஜின்னா இந்த ஏற்பாட்டிற்கு உடன்படாமல் பேச்சுவார்த்தைகளில் இருந்து விலகினார்.
அதனைத் தொடர்ந்து ஜூலை 29, 1946 அன்று பம்பாயில் முஸ்லிம் லீக் கவுன்சில் கூட்டத்தைக் கூட்டிய முகமதலி ஜின்னா பின் வரும் அறிக்கையை வெளியிடுகிறார்,
“இந்திய முஸ்லிம்கள் தங்களுக்கென சுயாட்சி உரிமையுடைய தனி நாடான பாகிஸ்தானை அடைவதனைத் தவிர்த்து, வேறெந்தவொரு ஏற்பாட்டையும் ஏற்றுக் கொள்ளவே மாட்டார்கள் என்பது மிகத் தெளிவாக விளங்குகிறது…..எனவே இன்றைக்கு பிரிட்டிஷ்காரர்களின் அடிமைத்தளையில் இருந்து விடுபட்டு, எதிர்காலத்தில் இந்துக்களின் ஆளுகையின் கீழ் வாழாமல் இருக்க எண்ணும் முஸ்லிம்கள் தங்களின் நாட்டை அடைவதற்கு “நேரடியான போராட்டங்களில்” (Direct Action) ஈடுபட வேண்டுமென்று அனைத்திந்திய முஸ்லிம் லீக் உறுதிபட எண்ணுகிறது…..”
அது என்ன மாதிரியான “நேரடிப் போராட்டமாக” இருக்கும்? நேரடிப் போராட்டம் என்பது வன்முறையானதா அல்லது வன்முறையற்றதா எனக் கேட்கப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளிக்காமல் நழுவும் முகமதலி ஜின்னா, “நான் யாருக்கும் அறத்தைக் குறித்துப் போதிக்கப் போவதில்லை” என்று சொல்லுகிறார். பின்னாளில் பாகிஸ்தானிய பிரதம மந்திரியாக இருந்த நவாப்ஜாதா லியாகத் அலிகானிடம் அமெரிக்க அசோசியேட் ப்ரஸ் நிருபர் இதனைக் குறித்து கேட்கையில், “எந்த முறையையும் (வன்முறையோ அல்லது வன்முறையற்றதோ) நாங்கள் ஒதுக்கப் போவதில்லை. நேரடிப் போராட்டம் என்றால் சட்டத்திற்குப் புறம்பான போராட்டமாகவே அது இருக்கும்” என பதிலளிக்கிறார்.
பாகிஸ்தானின் தகவல் தொடர்பு அமைச்சராக பின்னாளில் பணிபுரிந்த சர்தார் அப்துர்-ராப்-நிஷ்டார் அந்தக் கேள்விக்கு நேரிடையாகவே பதிலளிக்கிறார், “இரத்தம் சிந்தி மட்டுமே பாகிஸ்தானை அடைய முடியும்; சந்தர்ப்பம் அமைந்தால் அது இஸ்லாமியர்களல்லாதவர்களின் (இந்துக்கள், சீக்கியர்கள்) ரத்தமும் நிச்சயமாக சிந்தப்படும். ஏனென்றால் முஸ்லிம்கள் அஹிம்சையை நம்பாதவர்கள்”.
எனவே “நேரடிப் போராட்டம்” என்ன மாதிரியான போராட்டமாக இருக்கப் போகிறது என்பது தெளிவாக அனைவருக்கும் புரிகிறது. இதனைக் குறித்து எழுதும் பிரிட்டிஷ் பத்திரிகையான நியூஸ் க்ரானிக்கிள், “வெறியைக் கிளப்பும் மோசமான வார்த்தைகளுக்கும், பேச்சு வார்த்தைகளில் இருந்து விலகிச் செல்வதற்கும் எந்தக் காரணமும் இல்லை….முகமதலி ஜின்னா புனிதப் போர் (ஜிகாத்) செய்ய மிகவும் ஆர்வமுடையவராகக் காணப்படுகிறார்….” எனச் சொல்கிறது.
(தொடரும்)
ஆங்கிலேயன் நம்மவர்களை காப்பாற்ற வில்லை, தங்கள் கருத்து சற்று தவறாகும்
மராட்டியர்கள் , சிவாஜி முதல் பேஷ்வாக்கள் வரை இந்தய நாட்டை தனது ஆளுமை கீழ் கொண்டுவந்தார்கள் .
ஆங்கிலேயன் பல போர்கள் மூலம் மராட்டிய இடங்களை கைப்பற்றி இந்தியாவை பிடித்தார்கள். வங்காளம், மைசூர், ஹைதராபாத், டெல்லி, ஆற்காடு அஒத் , ஆகிய இடங்களே முஸ்லிம் வசம் இருந்தது.
ஷா ஆலம் முதல் பாதூர் ஷா சபர் வரை உள்ள முகல் அரசர்கள் மராட்டியர்கள் பென்ஷன் வழங்கி உள்ளனர்
ஆங்கிலேயன் வருகையால் முஸ்லிம் அதிகம் வாழும் இந்தகளின் அவல நிலை குறைந்தது.
இஸ்லாமியர்கள், முதல் இந்திய புரட்டிசியின் போது இஸ்லாம் பற்று குறைந்தே இருந்தது
1857 பிறகு தோல்வின் காரணமாக இந்த பிரிவினைவாதம் லேசாக வந்து பிறகு வாஹபி மற்றும் காங்கிரஸின் கொள்கை காரணமாக வலு பெற்றது.
திரு சுவனபிரியன் பார்வைக்கு:——————————————————————————–
1. இஸ்லாம் மதத்தை உருட்டி மிரட்டி பயமுறுத்தி பரப்பவில்லை என்று சொல்கிறீர்கள். நைஜீரிய நாட்டில் இஸ்லாமிய தீவிரவாதிகளால் பிடித்து வைக்கப்பட்டுள்ள 200 இளம் பள்ளி மாணவர்களில் பலர் கிறிஸ்தவ மதத்தை சார்ந்தவர்கள். அவர்கள் அனைவரும் முஸ்லிம் மதத்திற்கு “”இப்போது”” மாறியுள்ளனர் (பயத்தின் காரணமாக).
2. இஸ்லாம் மதத்தில் சகோதரத்துவம் கொடிகட்டி பறக்கிறது என்று கூறுகிறீர்களே! இங்கே கீழே படிக்கவும். சென்ற செவ்வாய் கிழமை ஷியா முஸ்லிம்கள் நிறைந்த பகுதியான பாக்தாத்தில் (ஈராக் நாடு) குண்டு வைத்து 25 பேரை கொண்டிருக்கின்றனர். அதில் 80க்கு மேலானோர் காயமடைந்துள்ளனர். பாகிஸ்தானிலும் இதே கதைதான்.
3. ஆப்கன் நாட்டில் கோரக் மாவட்டத்தில் உள்ள மக்களுக்கு தலிபான்கள் food supply யை தடை செய்துள்ளனர் அதனால் அம்மக்கள் புல் (grass ) சாப்பிடவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. முஸ்லிம்களான தலிபான்கள் ஈவு இரக்கமற்றவர்களா?