மானக் கஞ்சாற நாயனார் மகள் (கைகொடுத்த காரிகை)

பெண்களின் கூந்தலை வருணிக் காத கவிஞர்களே இல்லை எனலாம்.மேகம் போன்ற கூந்தல், மயில் தோகை போன்ற கூந்தல், கடல் மணல் போன்ற கூந்தல். சுருண்டிருண்ட கூந்தல் என்றெல்லாம் வருணிப்பார் கள். ஆறடிக் கூந்தலை அள்ளி முடித்து என்றும் பாடுவார்கள்

பொதுவாகப் பெண்களுக்குத் தங்கள் கூந்தலை விதம் விதமாக அழகு படுத்திக் கொள்வ தில் விருப்பம் அதிகம். கூந்தலுக்கு இயற்கையில் நறுமணம் உண்டா? என்பது போன்ற போட்டிகளும் நடை பெற்றிருக் கின்றன. நக்கீரர் ஈசனின் பாடலிலேயே குற்றம் கண்டு பிடித்தார் என்பதையும் பார்க்கிறோம்.

சங்க காலத்திலேயே ஒரு மன்னனுக்கு இந்த சந்தேகம் ஏற்பட்டது. அதற்கு விடையை வண்டிடமே கேட்கிறான்.“வண்டே நீதான் எல்லாப்பூக்களிலும் சுற்றி வருகிறாய். என் மனைவியின் கூந்தல் வாசனையை விட அதிகமான வாசனையை உடைய பூவை நீ பார்த்திருக்கிறாயா?” என்று கேட்கிறான். பெண்கள் தன்கள் கூந்தலுக்கு மணம் ஊட்டுவதற்காகவும் குளிர்ச்சிக்காகவும் பலவிதமான பூக்களையும் வாசனை மிகுந்த தைலங்களையும்,பூசினார்கள் என்பதைப் பல இலக்கியங்களிலிருந்தும் அறிகிறோம். பெண் கள் தங்கள் கூந்தலுக்கு அகிற் புகை காட்டியதில் அந்த அகிற் புகை மேகம் வரை சென்று பரவியதாக உயர்வு நவிற்சி யாகப் பாடியிருப்பதையும் பார்க்கிறோம்.

அக்காலத்தில் மட்டுமல்ல இப் பொழுதும் தொலைக் காட்சிகளிலும், பத்திரிகைகளிலும் கூட கூந்தல் பராமரிப்பு பற்றிய விளம்பரங்கள் கண்ணைக் கவ ரும் விதத்தில் வெளிவருவதைக் காணலாம். பெண்கள் வித விதமாகக் கொண்டை போட்டு அதில் பூக்களை வைத்து அலங்காரம் செய்து கொள்கிறார்கள். தலை முடிக்குப் பல வித வண்ணச் சாயங்களையும் ஏற்றிக் கொள்கிறார்கள்.

மணப் பென்ணுக்குத் தலை அலங்காரம் செய்வதற்காகவே அழகு நிலையங்களும் வந்து விட்டன! அவர்கள் தான் எத்தனை விதமாக அலங்கரிக்கிறார் கள்! பூக்களாலும் மணிகளாலும், முத்துக்களாலும், ஜிகினா அலங்காரத்தாலும் அழகு செய்கிறார்கள். ஒவ்வொரு பெண் ணின் வாழ்விலும் திருமணம் என்பது முக்கியமான நாளல்லவா?

இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கும் தலை மயிரை இழப்பதை பெண்கள் அபசகுனமாகவே நினைப்பார்கள்.நோய்வாய்ப்பட்டு அதன் காரணமாக தலை முடியை இழக்க நேரும் போது கூட அவர்கள் மிகவும் உணர்ச்சி வசப்படுவார்கள் வருந்துவார்கள். கோவிலுக்குக் காணிக்கையாகக் கொடுப்பதைத் தவிர மற்ற நேரங்களில் தங்கள் கூந்தலை இழக்க மனம் ஒப்ப மாட்டார்கள்.

இந்த நிலையில் ஒரு பெண் தனது அலங்காரத்தோடு கூடிய கூந்தலை இழக்க நேரிட் டால்? அது எவ்வளவு கொடுமை! அதுவும் தன் திருமண நாளன்று? அந்தப் பெண்ணின் மனம் என்ன பாடு பட்டிருக் கும்? இப்படி ஒரு சம்பவம் நடப்பதை எந்தத் தாயால் பொறுக்க முடியும்? என்றாலும் ஒரு சிவனடியார் கேட்டார் என்பதற்காக, தந்தைக்காகத் தன் அலங்கரிக்கப் பட்ட கூந்த லையும் தியாகம் செய்கிறாள் ஒரு மகள். அவள் யாரென்று பார்ப்போம். இவள் பெயரும் நமக்குத் தெரியவில்லை.

mayiladuthuraiநீர்பாயும் வயல்களையும், கரும்புச் செடிகளையும் கொண்டு இயற்கை வளம் பொருந்த விளங் கியது கஞ்சாறூர். உயர்ந்த மதிலும் ஒளி பொருந்திய மாடங்களும் விளங்க அவற்றில் அழகான கொடிகளும், தோர ணங் களும் ஆடி அசைந்து கொண்டிருக்கும். மயிலைப் போன்ற பெண்கள் அழகாக நடனமாடும் ஒலியும், மத்தளம் ஒலிக்கும் ஒலியும் தெருக்களில் நிறைந்திருக்கும் சிறப்புடையது அவ்வூர்.  (கஞ்சாறூர் – இது பொழுது ஆனதாண்டவபுரம் என வழங்கி வருகிறது. இது ஆனந்த தாண்டவபுரம் என்பதன் மரூஉவாகும். மயிலாடுதுறைக்குக் கிழக்கே அமைந்துள்ளது).

இவ்வளவு சிறப்புக்கள் நிறைந்த ஊரில் மன்னரின் படைத் தளபதியாக இருந்த வேளாண் குடியில் மானக்கஞ்சாற நாயனார் திரு அவதாரம் செய்தார். இவர் மிகவும் பணிவோடு சிவனடியார்களுக்குத் தொண்டு செய்து வந்தார். தம் செல்வத்தையெல்லாம் சிவனடியார்கள் கேட்பதற்கு முன்பே குறிப்பறிந்து கொடுக்கும் வண்மையாள ராக விளங்கினார்.

பணிவுடைய வடிவுடையார்

பணியினொடும், பனி மதியின்

அணிவுடைய சடைமுடியார்க்கு

ஆளாகும் பதம் பெற்ற

தணிவில் பேறுடையார்,

தம் பெருமான் கழல் சார்ந்த

துணிவுடைய தொண்டர்க்கே

ஏவல் செய்யும் தொழில் பூண்டார்

என்று இவர் பெருமையைச் சேக்கிழார் பேசுவார்.

maanakanjarar_nayanar-2இவ்வளவு பெயரும் புகழும் பெற்ற மானக்கஞ்சாறர் வெகு காலம் பிள்ளைப் பேறில்லாமல் இருந் தார். தாம் வழிபடும் சிவபெருமானை வேண்டித் துதித்தார். பெருமான் அருளால் மானக்கஞ்சாறர் மனைவி மகப்பேறு வாய்க்கப் பெற்றார். அழகான ஒரு பெண் குழந்தைக்குத் தாயானாள்.

குழந்தை பிறந்த மகிழ்ச்சியில் மங்கல வாத்தியங்கள் முழக்கினார்கள். உற்றார் உறவினர் வாழ்த்தினார்கள். குழந்தை நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து வந்தாள். சுருண்ட கூந்தலும் பொன் குழைகளும் அணிந்து காலில் கிண்கிணி ஒலிக்கத் தளர் நடை பயில ஆரம்பித்தாள்.

தாதியர்களுக்கு நடுவே சிற்றில் கட்டி விளையாட ஆர்ம்பித்தாள் அப்பெண். கழற்கோடி முத லிய விளையாட்டுக்களையும் விளையாடினாள். பேதைப் பருவம் கடந்து பெதும்பைப் பருவம் அடைந்தாள். அவள் பற்கள் முத்துக்களைப் போல ஒளி வீச, பூங்கொடி போன்ற இடையையும் சுருள் சுருளான கூந்தலையும் பெற்று அழகுத் தேவதையாக விளங்கினாள். இவளுடைய அழகைக் கண்டு இவளுக்குத் திருமணம் செய்ய விரும்பினார்கள் பெற்றோர்.

திருமகளுக்கு மேல் விளங்கும்

செம்மணியின் தீபம் எனும்

ஒருமகளை, மண்ணுலகில்

ஓங்கு குல மரபினராய்க்

கருமிடற்று மறையவனார்

தமராய கழல் ஏயர்

பெருமாற்கு மகள்பேச

வந்தணைந்தார் பெருமுதியோர்.

மகாலக்ஷ்மிக்கும் மேலான அழகுடன் விளங்கும் அப்பெண்ணை சிவனடியாரான ஏயர்குலப் பெருமகனுக்கு மணம் பேசுவதற்காக வயது முதிர்ந்தவர்கள் வந்தார்கள்.

eyarkoonkalikaama_nayanarதம்முடைய திருமாளிகைக்கு வந்தவர்களை மானக்கஞ்சாற நாயனார் வரவேற்று உபசரித் தார். அவர்கள் கூறியதைக் கேட்டு மிக்க மகிழ்ச்சியடைந்து தம்முடைய சம்மதத்தைத் தெரிவித்தார்.  இதன்பின் இரு வீட்டாரும் சேர்ந்து முகூர்த்த நாளைக் குறித்தார்கள். மானக் கஞ்சாற நாயனாரும் திருமணத்திற்கு வேண்டிய ஏற்பாடு களைச் செய்ய ஆரம்பித்தார். உறவினர்கள் எல்லோரையும் அழைத்து பாலிகைகளை முளைக்கச் செய்தார் பொன்னாலான அணிகலன்களையும் தயார் செய்தார்.

சோலைகள் நிறைந்த கஞ்சாறூரில் திருமண ஏற்பாடுகளைச் செய்ய ஆரம்பித்தார். மணமக னான ஏயர்கோன் கலிக்காம நாயனார் தம்முடைய உறவினர் களுடன், மானக்கஞ்சாற நாயனாரின் திருமாளிகையை நோக்கி முரசுகளும் மங்கல வாத்தியங்களும் ஒலிக்க வந்து கொண்டிருந்தார்.

இங்கு கஞ்சாறூரில் திருமணப் பென்ணுக்கு அலங்காரம் செய்ய ஆரம்பித்தார்கள். பொன்னா லும் மணியாலும் அழகு செய்ய ஆரம்பித்தார்கள். கூந்தலையும் பூக்களால் அழகு செய்யத் தொடங்கினார்கள். பூக்களை பின்னலில் வைத்துத் தைத்து அலங்காரம் செய்தார்கள். இதே சமயம் திருமணப் பந்தலுக்கு ஒரு சிவனடியார் வந்தார் அவரைப் பார்ப்போம்.

முண்ட நிறை நெற்றியின் மேல்

முண்டித்த திருமுடியில்

கொண்ட சிகை முச்சியின்கண்

கோத்தணிந்த என்பு மணி

பண்டொருவன் உடல் அங்கம்

பரித்த நாள் அது கடைந்த

வெந்தரளம் எனக் காதின்

மிசை அசையும் குண்டலமும்

நெற்றியில் திரிபுண்டரமாக திருநீறு, திருமுடியின் உச்சியில் எலும்பினால் செய்யப்பட்ட மணிகள். முற்காலத்தில் திருமாலினுடைய திருமேனியில் உள்ள எலும்புகளைக் கடைந்து எடுத்த வெண்மையான முத்துக்கள் என்று சொல்லும்படியான குண்டலங்கள் காதில் அசைந்து கொண்டிருந்தன.

அந்த எலும்புகளின் ஒளி வீசும் மணிகளைக் கோவையாக்க் கோர்த்து அணிந்து கொண்ட அழகிய வடம் தொங்கிக் கொண்டிருந்தது. தோளில் யோகப் பட்டை, மையைப் போல கருமையான மயிரால் வடமாகச் செய்யப்பட்ட பூணூல். பிறப்பறுக்கும் திரு நீற்றுப்பை.

அவ்வெலும்பின் ஒளிமணி கோத்து அணிந்த திருத்தாழ் வடமும்

பை வன் பேரரவு ஒழியத் தோளில் இடும்பட்டிகையும்

மை வந்த நிறக் கேச வடப் பூணூலும் மனச்

செவ்வன்பர் பவம் மாற்றும் திரு நீற்றுப் பொக்கணமும்..

இது மட்டுமல்ல மாணிக்கத் தைக் கோவையாகக் கோத்து அணிந்துள்ள கயிறையும் அணிந்திருந்தார். வேதமாகிய சாத்திரமென்னும் கௌபீனத் தின் மேல் அசைகின்ற அழகிய ஆடை அணிந்திருந்தார்

திருவடிகளில் அழகிய பதுமம், சங்கம், மகரம், சக்கரம், தண்டம் என்னும் ஐந்து முத்திரைகளும் விளங்கின.

ஒரு முன்கைத்தனி மணி கோத்தணிந்த ஒளிர் சூத்திரமும்

அருமறை நூற் கோவணத்தின் மிசை அசையும் திரு உடையும்

இரு நிலத்தின் மிசை தோய்ந்த எழுதரிய திருவடியும்

திருவடியில் திருப்பஞ்ச முத்திரையும் திகழ்ந்திலங்க

இப்படி ஒரு விசித்திரக் கோலத் துடன் அந்த சிவனடியார் மானக் கஞ்சாற நாயனாரின் மகள்

திருமணம் நடக்கும் திருமாளிகைக்குள் வந்தார். சிவனடியா ரைக் கண்டவுடன் மானக்கஞ்சாற நாயனார் கைவேலையை யும் விட்டு விட்டு ஓடோடி வந்தார். “அடியேன் முற்பிறப் பில் செய்த தவத்தின் பயனாகத் தாங்கள் இங்கு வருகை தந்திருக்கிறீர். இதனால் என்னுடைய பாவங்கள் நீங்கின” என்று சிவனடியாரைப் பணிந்தார்.

அவரிடம் சிவனடியார், “இந்தத் திருமாளிகையில் நடக்கும் மங்கல காரியம் என்னவோ?” என்று நாயனாரிடம் கேட்டார். “என்னுடைய மகளின் திருமணம் நடக்கவிருக்கிறது.” என்று சொல்ல சிவனடியார்

“உமக்குச் சோபனம் உண்டாகட்டும்” என்று ஆசீர்வதித்தார்.

உடனே மாறக்கஞ்சாறர் மணக் கோலத்திலிருந்த தன் மகளை அழைத்து வந்து சிவனடியாரைப் பணியச் செய்தார்.

maana-kanjaara-nayanar-1தம்மைப் பணிந்த மணப் பெண் ணைப் பார்த்த சிவனடியார், நாயனாரிடம், “இவளுடைய கூந்தலில் அடர்ந்து வளர்ந்திருக்கும் மயிர்கள் எமக்குப் பஞ்ச வடிக்கு ஆகும்”என்றார். இதைக் கேட்ட மானக்கஞ்சார நாய னார் சிறிதும் தாமதிக்காமல் தம் மகளுடைய கூந்தலை அடி யோடு அறுத்து  எடுத்து அந்த சிவனடியாரிடம் கொடுத்து வணங்கி நின்றார். மானக்கஞ்சாற நாயனாரின் மகள் இதற் கேதும் மறுப்புத் தெரிவிக்கவில்லை. தந்தைக்காகத் தன் திருமணத்தன்றும் தன் கூந்தலை இழக்கத் தயங்கவில்லை. அப்பெண்! தந்தையின் அடியார் கைங்கரியத்திற்காகக்  கை கொடுக்கிறாள்!

ஆனால் என்ன நடந்தது? சிவனடியார் எங்கே? சிவனடியார் மறைந்து உமாதேவியாருடன் ரிஷப வாகனத்தில் சிவபெருமான் காட்சி யளித்தார். மலர் மாரி பொழிந்தனர் தேவர்கள். பெருமானைக் கண்ட மானக் கஞ்சாறரும் , மனைவியும் மகளும் பெருமானை விழுந்து வணங்கினார்கள்.

தமது அன்பனான மானக் கஞ்சாற நாயனாருக்கும் அவர் குடும்பத்தாருக்கும் தமது அருளை வழங்கி விட்டு ஈசன் மறைய மணப்பெண்ணைக் கைப்பிடிக்க மணக்கோலத்துடன் ஏயர்கோன் கலிக்காம நாயனார் வந்து சேர்ந்தார். மணப்பெண்ணும் முன்போல் தன் அலங்காரக் கூந்தலுடன் மணவறைக்கு வந்தாள்.

அப்பொழுது அங்கிருந்தவர்கள் சிவனடியார் வந்ததையும் மணப்பெண்ணின் கூந்தலைத் தரும்படி தந்தையிடம் கேட்டதையும் அவரும் அடியார் கேட்டபடியே நிறைவேற்றியதையும் எடுத்துரைத்தார்கள். இதைக் கேட்ட ஏயர்கோன் கலிக்காம நாயனார் இறைவன் திருவிளையாடலை எண்ணி அளவற்ற ஆச்சரியம் அடைந் தார். இறைவன் அருளால் மணப் பெண்ணின் கூந்தல் மீண் டும் முன்போல் அலங்கரிக்கப்பட்ட நிலையில் வந்ததையும் இறைவன் கருணையையும் எண்ணி வியந்தார்

இதன்பின் திருமணச் சடங்குகள் இனிதே நிறைவேறின. மணமகளை அழைத்துக் கொண்டு ஏயர்கோன் கலிக்காம நாயனார் தமது ஊராகிய பெரு மங்கலம் சென்றார்.

தனது திருமண நாளென்றும் பாராமல் தன் தந்தைக்காகத் தன் கூந்தலையும் கொடுத்து அவருடைய சிவனடியார் கைங்கரியத்திற்குக் கைகொடுக்கிறாள் ஒரு மகள் !

3 Replies to “மானக் கஞ்சாற நாயனார் மகள் (கைகொடுத்த காரிகை)”

  1. சிவ பக்தியில் பெண்கள் எப்படிச் சிறந்து விளங்கினார்கள் என்பதை நன்றாக விளக்கி இருக்கிறீர்கள். படித்து, ரசித்து வியந்தேன்.

  2. // (கஞ்சாறூர் – இது பொழுது ஆனதாண்டவபுரம் என வழங்கி வருகிறது. இது ஆனந்த தாண்டவபுரம் என்பதன் மரூஉவாகும். மயிலாடுதுறைக்குக் கிழக்கே அமைந்துள்ளது) //

    கட்டுரைக்கு மிக்க நன்றி.

    மயிலாடுதுறையிலிருந்து பூம்புகார் போகும் வழியில் கஞ்சாநகரம் என்னும் சிற்றூர் உள்ளது. இவ்வூரின் இயற்பெயர் கஞ்சாரர்நகரம் என்றும் மானக்கஞ்சார நாயனார் நினைவாக சூட்டப்பட்ட பெயர் என்றும் ஒருமுறை கேள்விப்பட்டதுண்டு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *